JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள், அத்தியாயம் 29 & 30

Uthaya

Member
29

எஸ்.ஐ. தான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார், “அந்த விரால் வெள்ளிக்கிழமை நாலு மணிவரை வேலை செய்திருக்கான் சார். அதுக்கு எஸ்ட்டேட் மேனேஜர் ரெஜிஸ்ட்டர்ல ரெக்கார்டு இருக்கு. அடுத்த நாள் சனிக்கிழமை, அவன் ஒன்பது மணிக்கு தன் வீட்டில வேலை செய்ததாய் எஸ்ட்டேட் முதலாளி ராஜகோபால் சொல்லுரார். அவரோட பேச்சைப் பாத்தா அவர் வழக்கை நிரூபிக்க அவர் கம்பெனி வக்கீல வச்சு வாதாடுவார் போல இருக்கு. அதான் நாம எதுக்கும் வேற யாருக்காவது மோட்டிவ் இருக்காண்ணு நல்லா யோசனை பண்றது நல்லதுன்னு தோணுது,” என்றார்.

இன்ஸ்பெக்டர், “ஏன் நாலு மணிக்கு எஸ்ட்டேட்ட விட்டுக் கிளம்பி, ராத்திரி பன்னிரெண்டு மணிக்குக் கொலை செய்திட்டு, அடுத்த நாள் ஒம்பது மணிக்கு வேலைக்குப் போக முடியாதா?” என்றார்.

எஸ்.ஐ., “போகலாம். நல்ல அறிவாளி, படிச்சவன், கார், டாக்ஸிக்கு காசு வச்சிருக்கிறவன் செய்யலாம். அந்த விரால்ராசு மாதிரி ஆள் திட்டமிட்டுச் செய்தான்னு நிரூபிக்கிறது கஷ்டம். அவன் அவ்வளவு தூரத்துக்கு அப்பால இருந்திருக்கிறதால சொல்றேன். மேலும் அந்த முதலாளியோட ஜீப் போனபின் விசாரிச்சேன். அந்த விரால்ராசு மேல அந்த முதலாளிக்கு ரொம்ப பிரியமாம். அவரு மெட்ராஸ்ல இருந்து எஸ்ட்டேட்ல தங்க வந்திட்டார்ன்னா இவனைத்தான் வேலைக்கு அனுப்பனுமாம். சமையலத் தவிர எல்லா வேலையயும் செய்து முதலாளியை மட்டுமில்லாமல் அவர் வீட்டம்மா, அவங்க பிள்ளைங்க, பேரன், பேத்தி எல்லாத்தையும் அவ்வளவு நல்லாப் பாத்துக்கிடுவானாம்.

முதலாளிக்கு குளிக்க வென்னி வச்சிக்குடுக்கிறது, அவருக்கு ஒடம்பு பிடிச்சு விடுறது எல்லாம் அவன்தானாம். வேலைய சுத்தமாச் செய்வானாம். ஒரு பைசாத் தொடமாட்டானாம். பத்தாயிரம் ரூபாயக் கண்டாலும் ‘இந்தாங்க முதலாளின்னு, கையில குடுப்பானாம்,’ சம்பளம் போக நல்லா டிப்ஸ்சும் குடுப்பாராம் முதலாளி. அவன் மொதல்ல வேண்டாம்மின்னானாம். ‘அடி பிச்சிப்புடுவேன். நான் சொன்னா வேல செய்ர மாதிரி, நான் குடுத்தா மறுக்காம வாங்கிக்கிடனும்,’ன்னு அவர் சொன்னாராம்.

அவர் இந்த விரால்ராசு கொல செஞ்சிருப்பான்னு நம்பல. ஆகையினால, நாம அவன் மேல கேஸ் போட்டோம்ன்னால், முதலாளி அவர் கம்பெனி வக்கீல வச்சு வாதாடுவார்னு சொல்லுறாங்க அங்க உள்ள எல்லாரும். அதனாலதான் நாம வேற கோணத்தில இருந்து பாக்கறது நல்லதுன்னு தோணுது. இன்ஸ்பெக்டர் சார், நீங்க சொல்றபடி நான் செய்யத்தயார்,” என்று முடித்தார் எஸ்.ஐ.

இன்ஸ்பெக்டர், “அவன் இந்தக் கொலையச் செய்றதுக்கு மோட்டிவ் இருக்கு. அன்னைக்கு ராத்திரி, கொலை செய்யப்பட்ட சங்கரலிங்கம் இந்த விரால்ராசு பெண்டாட்டிய அந்தத் தொழுவுக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கான். அத அவளே அவள் வாயாலயே நாலுபேர் முன்னால சொல்லி இருக்காள். அப்போம் அவனுக்கு கோபம் வந்து கொலை செய்திருக்கலாமில்லையா?” என்றார்.

“சரி சார், ஆனா அதுக்கு முன்னாடி அவள்கூட சங்கரலிங்கத்துக்கு பழக்கம் இருந்ததா? அப்படி இருந்தா யாரோ எழுதிப்போட்டு வரவழைச்சிருக்கலாமின்னு சொல்லலாம். இது ரெண்டும் இங்க பழக்கம் பண்ணிக்கிட்டுகிடக்க, எஸ்ட்டேட்ல வேல செஞ்சுகிட்டு இருந்தவன் எப்படியோ தெரிஞ்சுகிட்டு ராவோடராவா வந்து கொலை செய்திட்டு போனான்ணு நிரூபிக்கணும்...” என்று இழுத்தார் எஸ்.ஐ.

இன்ஸ்பெக்டர், “நல்ல பாயிண்ட். ஆனால் அவ்வளவுதூரம் இருக்கிறவனுக்கு அவன் சொந்த ஊர்ல நடந்த கொலையப் பற்றித் தெரிஞ்சிருக்கு. நீங்க போறதுக்கு முன்னாடியே. எப்பிடி? விசாரிச்சீங்களா,” என்றார்.

“சார் நான் போறதுக்குள்ள கொலை நடந்து பத்து நாள் ஆகிப் போச்சு. அதுக்குள்ள அவன் பொண்டாட்டி கடிதம் எழுதியிருக்கா. அவள் எங்கிட்ட பேசினதுக்கு அப்புறம் எழுதி இருக்கலாம்மின்னு தோணுது. அந்தக் கடிதத்தையும் வாங்கிட்டு வந்திட்டேன்,” என்றார் எஸ்.ஐ.

“குட்,” என்ற இன்ஸ்பெக்டர் கடிதத்தை வாங்கிப் படித்தார். “அன்புள்ள அத்தானுக்கு ம்... ம்... இங்கு சங்கரலிங்கத்தை யாரோ கொலை செய்துவிட்டார்கள். மேலும் நிறையா வீடுகள் வேறு தீப்பட்டு எரிந்துவிட்டன. நீங்கள் இந்த சமையம் பார்த்து ஊருக்கு வரவேண்டாம். ஊரில் போலீசு நடமாடுகிறது. __டுக்குத் திருடன் இப்போது கொலையில் இறங்கி விட்டதாக ஊரில் எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள்...”




30

கடிதத்தை விட்டு நிமிர்ந்த இன்ஸ்பெக்டர், “அதென்ன டுக்குத் திருடன்?” என்றார்.

“அதுக்கு முன்னால ஒரு எழுத்துக்கு இடம் விட்டுருக்கு சார், பாத்தாத் தெரியும். அதுல ஒரு எழுத்தச் சேத்துகிடனும்,” என்றார் எஸ்.ஐ. சிரித்துக்கொண்டே.

“என்ன எழுத்து இளங்கோ, அது?” என்று வினவினார் இன்ஸ்பெக்டர்.

“பு” என்றார் எஸ்.ஐ.

சற்று மனதுக்குள்ளெயே சொல்லிப் பார்த்த்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், “அதென்ன கெட்ட வார்த்தையா?” என்றார்.

“அப்பிடின்னா சாமான்னு அர்த்தம் சார். சாரி சார்...” என்றார் எஸ்.ஐ.

“சரியான ஊர்ய்யா. ஆமா அந்த விரால் பொண்டாட்டிக்குக் கடிதமெல்லாம் எழுதத் தெரியுமா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“படிக்காத மக்கள் யாராவது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள வச்சு எழுதச்சொல்றது வழக்கம் சார்,” என்றார் எஸ்.ஐ.

“சரி, அது என்ன, பு... ம்.. சரி, அது என்ன டுக்குத்திருடன். நான் கேள்விபட்டதே இல்லையே,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“சார் நீங்க வந்து ஒரு நாள்கூட ஆகலயே. நீங்க வேற ரெம்ப நாளா வட ஆற்காடு, மெட்ராஸ்ன்னு இருந்திட்டு வர்ரீங்க. போகப்போக இங்க உள்ள விசித்திரமெல்லாம் புரியும்,” என்றார் எஸ்.ஐ.

சிரித்துக்கொண்டே, “இந்த விசித்திரமான திருடன் பத்தி சொல்லுங்க பார்ப்போம்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

எஸ்.ஐ. இளங்கோ சிரித்துக்கொண்டே, “அந்த ஏரியாவில ஒரு வித்தியாசமான திருடன் அலையிறான் சார். ராத்திரி நேரத்தில தனியாப்போற ஆம்பிளைங்ககிட்ட மெரட்டி கிடச்சத தூக்கிட்டு போயிடுவான் சார்,” என்றார்.

“சரி, எல்லாத் திருடனும் ராத்திரி நேரம் மெரட்டிக் கிடச்சதைச் சுருட்டிக்கிட்டுத்தான் போறான். இந்தத் திருடனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ஆங்.. ஸ்பெஷல்ன்னு சொன்ன ஒடனேதான் மனசுக்கு வருது. இவன் மேல ஒரு பனியன் மட்டும் போட்டுருப்பான். ஆனால் இடுப்புக்கு கீழ ஒண்ணும் போட்டிருக்க மாட்டான். வேட்டிய அவுத்து தலையில தலைப்பா கட்டிக்கிடுவான் சார். அவனோட சாமான் ஒரு அடி நீளத்துக்கு ஆடிக்கிட்டு கிடக்குமாம் சார். அதனாலதான் அவனுக்கு அந்தப் பேரு,” என்றார் எஸ்.ஐ.

“இன்ட்ரஸ்டிங், ஆமா அவனைப் பத்தி வேற என்ன தெரியும்?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அவன் இதுவரைக்கும் இருட்டுல மட்டும்தான் திருடியிருக்கான் சார்,” என்றார் எஸ்.ஐ.

“திருடன் இருட்டிலதான் வருவான். கிராமங்கள்ல பகல்ல வந்தால் பிடி பட்டுக்கிடுவான்ல்ல,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அவன் ஆம்பிளைங்ககிட்ட மட்டும்தான் திருடியிருக்கான் சார்,” என்றார் எஸ்.ஐ.

“ராத்திரி நேரத்தில காட்டில அலையிறதும் ஆம்பிளைங்கதான. அதுனாலகூட இருக்கலாம். ஆமா அவன் ஏன் இப்படி அம்மணமா அலையிறான். அவன் செய்த பெரிய திருட்டு என்ன?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அவன் ஏன் அம்மணமா அலையிறான்ணு அவனுக்குத்தான் சார் வெளிச்சம். ஒரு வேளை இடுப்பிலே வேட்டி இருக்கிறதைவிட தலையில இருக்கிறது முக்கியமுன்னு நெனைக்கிறானோ என்னவோ. இல்ல பெரிய சாமான்னு காமிக்கவோ என்னவோ, அல்லது அப்படி பெயர் எடுத்திட்டதாலயோ என்னவோ. ஆனா ஆச்சரியம் என்னன்னா அவன் பெரிசா ஒன்னும் திருடல. இதுவரைக்கும் சாப்பாட்டுப் பாத்திரத்தைத்தான் மெரட்டி வாங்கியிருக்கான். மேலும், வேட்டி துண்டு மாதிரி ஆம்பளைங்க துணிய புடிங்கியிருக்கான் சார்,” என்றார் எஸ்.ஐ.

இன்ஸ்பெக்டர் சிரித்துக்கொண்டே, “அவனுக்கு ஒரு வேட்டியே அதிகம், அதையே அவன் தலையில கட்டிக்கிறான். அதுக்கு மேல இன்னொரு வேட்டி வேறயா,” என்றார்.

“அப்பிடித் திருடுன பொருள் எல்லாத்தையும் அடுத்த நாள் காலையில அங்கயிருந்து ஒரு மைல் தூரத்துக்குள்ள கண்டு பிடிச்சிருக்காங்க சார். ஆனா சாப்பாட்டுப் பாத்திரத்தில சாப்பாடு இருந்தா சாப்பிட்டுருவான். உண்மையிலே சாப்பாடு ஒண்ணைத்தான் அவன் திருடியிருக்கான் சார்,” என்றார் எஸ்.ஐ.

“சரியான திண்ணிப் பண்டாரமா இருப்பான் போல இருக்கு... ம்ம... ராத்திரியில எங்க மக்கள் சாப்பாடு கொண்டு போறாங்க?” என்று கேட்டார்.

“தோட்டத்தில வேலை செய்றவங்க, மற்றும் காவல் இருக்கிறவங்களுக்கு சாப்பாடு கொண்டுபோவாங்க சார். மேலும் அவன் வேற ஒரு காரியமும் பண்ணியிருக்கான். அவனிடம் மாட்டிக்கிட்டவங்களைப் பயமுறுத்தி இருக்கான். அவங்கள கேவலமாக்கூட நடத்தியிருக்கான். ஒரு ஆளை அம்மணமா ஓட விட்டிருக்கான். இன்னொரு ஆளை அவரோட மூத்திரத்தையே குடிக்க வச்சிருக்கான். ஒரு ஆள் பெரிய மீசை வச்சிருந்திருக்கார், அவரோட ஒரு பக்கத்து மீசைய கத்திவச்சு வெட்டிவிட்டுட்டான். ஒருத்தனோட தலை முடிய வெட்டிவிட்டுருக்கான். சேத்தில உருளச்சொல்லியிருக்கான். இப்படி ஒவ்வொருத்தரையும் கேவலமாத்தான் நடத்தி இருக்கான். பெரிசா ஒண்ணும் திருடல. இப்ப அவனைப் பற்றி சுற்று வட்டாரத்தில சிரிப்பா பேசிக்கிடுறாங்க. அவன்ட்ட மாட்டின மக்கள் பயப்படுறதில்லை. ஏன்னா அவந்தான் சாப்பாடு தவிர வேற எதையும் திருடிறது இல்லையே. கொஞ்சம் அவமானம் அவ்வளவுதான். ஆகையினால இப்பம் ஊர் மக்கள் நம்மகிட்ட கம்பிளைண்ட்டு குடுக்க வர்ரதில்லை,” என்றார் எஸ்.ஐ. இளங்கோ.

“ஆச்சரியமா இருக்குய்யா, இந்த பக்கத்தில இப்படி ஒரு திருடன் இருக்கிறது. ஆமா நீங்க என்குயரி நடத்தினீங்களா, அந்தத் திருடன் பற்றி,” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“நாங்க முதல்ல விசாரிச்சோம் சார். அவங்க சொல்ற உயரம் பருமன், திருட்டு நடந்த இடங்கள் எல்லாத்தையும் வச்சுப் பாத்தா அப்படி ஒரு ஆம்பளயே அந்தப் பக்கம் இல்ல சார். அவன் ஆறு அடி உயரம்மின்னு சொல்றாங்க சார். அப்படி ஆள் ரொம்ப கம்மி சார். அந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர் இருந்தாலும் மீசை தாடி வச்சிருக்காங்க. ஆனா நம்ம திருடன் மீசை இல்லாதவன்னு திட்டவட்டமாச் சொல்லுறாங்க. பல்லுப் போனவங்க சிலர் இருக்காங்க, ஆனா அவங்கள அவங்க பேச்சே காட்டிக்கொடுத்திரும். ஒருத்தருமே ‘பிட் ஆகலை சார்,” என்றார் எஸ்.ஐ.

“சரி இந்த டுக்குத்திருடன் இந்த கொலைய செய்திருப்பான்னு நினைக்கிறீங்களா,” என்றார் இன்ஸ்பெக்டர்.

“நோ சார். டுக்குத்திருடன் இதுவரைக்கும் இப்படிச் செய்யவே இல்ல சார். ரத்தம் வர்ற மாதிரி அடிக்கக்கூட இல்லை சார். அவன் ஒரு கோமாளி சார், கிண்டல் பேர்வழி சார். அவன் திருடன்னுகூடச் சொல்ல முடியாது சார். அவன் திருடின பொருளை எல்லாம் திருடின இடத்துக்கு கொஞ்சம் தள்ளிப் போய் போட்டுட்டு போய்ட்டான் சார், சாப்பாடு தவற. அவனுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கும்மின்னு நான் நம்பலை சார்,” என்றார் எஸ்.ஐ.

“சரி நாம அந்த கோமாளித் திருடனையும் ஒரு பக்கம் தேடுவோம். அவனைக் கண்டுபிடிச்சு அவனுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்கா இல்லையான்னு முடிவுசெய்தால் நல்லது. வேறு யார் மேலேயும் சந்தேகம் வந்தாச் சொல்லுங்க. நல்லா யோசிச்சு சொல்லுங்க,” என்றார் இன்ஸ்பெக்டர்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top