JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் - அத்தியாயம் 5 & 6

Uthaya

Member
5

எஸ். ஐ. இளங்கோ அடுத்த கட்ட நடவடிக்கையாக ஊர்த்தலையாரி, நாட்டாண்மை, கிராமமுன்சீப், சங்கரலிங்கத்தின் மனைவி வேலம்மாள் மற்றும் சங்கரலிங்கத்தின் பக்கத்து வீட்டார்களை ஒவ்வொருவராக விசாரித்தார். அவர்களின் வாக்குமூலங்களைத் தொகுத்து சங்கரலிங்கத்தின் வரலாற்றையும் வாழ்க்கையையும் ஒரு ஓவியமாகத் தன் மனதிலேயே வரைந்துகொண்டார். அவ்வப்போது குறிப்புகளும் எடுத்துக்கொண்டார்.

சங்கரலிங்கம் ஊரிலேயே பெரும் பணக்காரன். அவனுக்கு வயது நாற்பதா ஐம்பதா என யாருக்கும் தெரியாது. வட்டிக்குக் காசு கொடுத்து ஏகமாய்ச் சம்பாதித்துவிட்டான். அவனுக்கு வீடு கிணறு தோட்டம் எல்லாம் ஏராளம். ஏன் ஊரில் அவனுக்குப் பல வீடுகளும் இருந்தன. கடன் வாங்கியவர்கள் வட்டியும் முதலும் குறிப்பிட்ட தேதியில் கட்டவில்லையென்றால் வீடு நிலம் ஏதாவது ஒன்றைப் பத்திரம் எழுதி வாங்கிவிடுவான். காலப்போக்கில் சில குடும்பங்களின் வீடு நிலம் தோட்டம் அடங்க அனைத்துச் சொத்துக்களையும் சங்கரலிங்கம் எழுதி வாங்கிவிட்டிருந்தான். இப்படியாக அவன் ஏராளமாகச் சம்பாதித்து விட்டான் என்றே சொல்லலாம்.

பண வசதி பெருகப் பெருக, ஊரில் தன்ன மிஞ்ச ஆள் இல்லை என்கிற எண்ணம் தலைக்கு ஏறிவிட்டது சங்கரலிங்கத்திற்கு. எல்லோரும் தன்னைக் கையெடுத்து கும்பிட வேண்டும் என எதிர் பார்க்கத் தொடங்கிவிட்டான். அவ்வாறே ஊர் மக்களும் கை கூப்ப ஆரம்பித்துவிட்டனர், ஒரு சிலரைத்தவிர.

அதுவரைக்கும் பரவாயில்லை, பணக்காரன் அதிகம் மரியாதையை எதிர்பார்க்கிறான், என்று மக்கள் பொறுத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் ஊரில் உள்ள பெண்கள் மேலேயே கைவைக்க துணிந்தான். ஆனால் இவன் எல்லோரையும் சமமாக நடத்தவில்லை. யார் இவன் குறியில் சிக்குவார்களோ, யார் வீட்டார், கணவன் உட்பட, இவனுக்குப் பயந்து போவார்களோ அவர்களையே தேர்ந்தெடுத்தான். ஒருத்திக்குச் சகோதரர்களோ, பெற்றோரோ எதிர்ப்பார்கள் என்றால் நிதானித்து நடந்துகொள்வான். ஊர் மக்களின் சொத்தை தனதாக்கிக்கொண்ட இவனுக்கு நண்பர்களைவிட விரோதிகள்தான் ஏராளம் என்றால் எவரும் ஆச்சர்யப் படமாட்டார்கள்.

இவனுடைய கடந்த காலம் ஒன்றும் தெள்ளந்தெளிர் நீரோடை அல்ல. இவனுடைய முன்னோர்கள் ஊரைவிட்டு வெளியேறி நூறு ஆண்டுகள் இருக்கலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் இவன் தன் பூர்வீகத்திற்கு வந்து குடியேறினான். அதன்பின் வீடு, காடு, கிணறு என்று வாங்கிப் பெரிய மனிதனாகவும் ஆகிவிட்டான். ஊரில் சிலரைச் சொந்தம் என்று இவன் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் அதை ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லை. இளமைக்காலத்தில் வியாபாரம் அது இது என்று பல ஊர்களில் சுற்றி அலைந்தவன். விபரம் புரிந்தவன். பணமும் பொருளும் ஏராளமாய் கொடுத்த இறைவன் சங்கரலிங்கத்திற்கு ஏனோ புத்திர பாக்கியத்தைத் தர மறுத்துவிட்டான். அவன் கெட்டு அலைந்ததால் அவனுக்கு கடவுள் தந்த தண்டணையா, அல்லது குழந்தை இல்லாததால்த்தான் அவன் அப்படி கெட்டு அலைந்தானா? யாருக்குத் தெரியும்.

“ஏன் நானே இவருக்கு ரெண்டாம் தாரந்தான். மொத பெண்டாட்டிய குழியில தள்ளி இருவது வருசமிருக்கும், கூடயும் இருக்கும்,” என்றாள் வேலம்மாள்.

இவன் வீட்டுக்கு குறித்த நேரத்திற்கெல்லாம் வரவேமாட்டான். ஆனால் நித்தம் வந்து மனைவியிடம் என்ன வேண்டும் என்று கேட்டுக் காசு கொடுத்துவிட்டு, தேவையான எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விடுவான். அனேகமாய் வீட்டில் தூங்கமாட்டான். சாப்பாடுகூட அங்கே இங்கே, கடை என்று சாப்பிட்டுவிட்டு, எங்கும் கிடைக்கவில்லை என்றால் வீட்டுக்கு வருவான். வேலம்மாள் சாப்பாடு தயாரில்லை என்றால், சமைத்து வை வருகிறேன் என்று பொறுமையாய் சொல்லிவிட்டு போவான். சொன்னதுபோல் வருவான் என்பது நிச்சயம் அல்ல. ஆனால் சொன்னதுபோல் வேலம்மாள் சமைத்து வைக்காமல் இருந்ததும் இல்லை. வேலம்மாளுக்கு கணவன் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்கூட ஒரு நாளும் வந்ததில்லை. அவள் சமைத்து முடிக்குமுன் வேறு எங்கோ அவனுக்குச் சாப்பாடு கிடைத்து விட்டது என்றுதான் அர்த்தம் என அவள் அறிந்து வைத்திருந்தாள். மேலும் சங்கரலிங்கம் தன்னை ஒரு நாளும் அடித்ததில்லை, ஏன் திட்டியது கூடக் கிடையாது. வெளியில் எப்படியிருந்தாலும், வீட்டைப் பொறுத்தவரை சங்கரலிங்கம் மோசமில்லை என்றே வேலம்மாள் சொன்னாள்.

குறிப்பாக “நேற்று எப்போழுது சங்கரலிங்கம் வீட்டுக்கு வந்தான்?” என்ற கேள்விக்கு, “நேத்து சாயங்காலம் ஒரு நாலு மணிவாக்கில வந்திட்டு அஞ்சு நிமிசத்தில போய்ட்டாக,” என்று பதில் அளித்தாள்.

கொலைக்குக் காரணம் என்ன? சந்தேகமான நபர்கள் யார் யார்? தான் தாக்கப் படலாம் என சங்கரலிங்கம் சிறிதேனும் ஐயமுற்றானா போன்ற முக்கியமான கேள்விகளுக்கு, வேலம்மாளால் உபயோகமான பதில் ஒன்றையும் தர இயலவில்லை.




6

அடுத்த கட்ட நடவடிக்கையாக தங்கச்சாமியின் வீட்டுக்கு விரைந்தது காவல்துறை வாகனம். கொலை, கொள்ளை, தீ, போலீஸ் என ஊரில் என்ன நடந்தாலும் வாயில்லா சீவன்கள் என்ன செய்யும்? ஊர் மாடுகள் அனைத்தையும் வீட்டில் கட்டிப்போட்டால் அவைகளுக்குத் தீனி போடுவது யார்? குடிக்க தண்ணீர் ஊற்றுவது யார்? இவற்றையெல்லாம் நன்கு அறிந்த தங்கச்சாமி, என்றும்போல் மாடு மேய்க்கப் போய்விட்டான்.

தங்கச்சாமியின் வீட்டு வாசல்படி ஏறும் பொழுது, ஏட்டு வடிவேலின் வாயெல்லாம் பல். அவருடைய வாய் தபால்ப் பெட்டி போல் திறந்தே கிடந்தது. ஏதோ குதுகூலக் கண்காட்சி காணப்போவதுபோல் உற்சாகமாகக் காணப்பட்டார். மைதிலியோ தன் வீட்டுக் கதவைப்பூட்டி உள்ளே அடைந்து கிடந்தாள்.

கான்ஸ்டபிள் 107 கதவத் தட்ட, கதவைத்திறந்தாள் மைதிலி. அவள் முகத்தில் பீதி தாண்டவமாடியது. அவள் அழுததற்கான அறிகுறிகள் முகத்தில் தெரிந்தன. அவளின் உடை அவ்வளவாக கசங்கவில்லை. சிவப்பாய் மூக்கும் முளியுமாய் அழகாய்த்தான் இருந்தாள். சிவப்புச் சேலை, சிவப்பு ரவிக்கை, கழுத்தில் தங்கச் சங்கிலி என, தன் இயற்கை அழகுக்கு மெருகேற்றி இருந்தாள் மைதிலி.

கட்டுப்பாடு தவறாத எஸ்.ஐ. கூட மிக மெல்ல மேலும் கீழும் தலையை அசைத்து விட்டு, ‘ஓகோ, சங்கரலிங்கம் சரியாத்தான் பிடிச்சிருக்கான்,’ என்று, தடம் புரண்டு ஓடும் தன் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒரு சில நொடிகள் ஆயின.

அதற்குள் ஏட்டு, “ஒம் பேரென்ன?” என்று தனக்கு அவளை ஒருமையில் அழைக்க உரிமையிருக்கிறது என நிரூபித்தார். அவரின் பார்வை அவளின் முகத்திலிருந்து கீழிறங்கி அவளின் அழகான மார்பில் நிலைத்துவிட்டது.

“மைதிலி,” என்றாள் தயங்கிகொண்டே. தனக்கு இன்று என்ன ஆகுமோ என எண்ணி மாய்ந்து போயிருந்தாள் அவள். தன்னைப் போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிக்கொண்டு போய் விடுவார்களோ. அங்கே இரவு தங்க வைப்பார்களோ, என்ன ஆகுமோ. தன்னைத் தன் கணவனால் காப்பாற்ற இயலுமா, இயன்றாலும் முயலுவானா என்று எண்ணி எண்ணி குமைந்து போயிருந்தாள். இதுவரை வேண்டாத தெய்வத்தை எல்லாம் சேர்த்து வேண்டிக்கொண்டே இருந்தாள். தன் தவற்றுக்கெல்லாம் தன் கணவனிடம் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். தெய்வமே, இந்த ஒரு தடவை மட்டும் காப்பாத்து, இனி ஜென்மத்துக்கும் தப்பே செய்ய மாட்டேன், என அன்றிலிருந்து தன் கணவனையே கண்கண்ட தெய்வமாய் வழி படப்போவதாகத் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள் அந்தப் பசலை.

ஏட்டு, “பேருக்கு ஏத்தமாரி லச்சணமாத்தான் இருக்க,” என்று முணுமுணுத்தார்.

“உன் புருசன் இருக்கானா?” என்று கேட்டார் 107.

“வேலைக்குப் போய்ட்டாகய்யா,” என ஈனஸ்வரத்தில் பதில் வந்தது. இன்னும் சற்று நேரத்தில் அழுது விடுவாள் எனத் தோன்றியது.

“என்ன பெரிய வேல, மாடு மேய்க்கிற வேலதான?” என்றார் ஏட்டு, வாய்விட்டுச் சிரித்துக்கொண்டு.

தொண்டையைக் கனைத்தவாரே, “சங்கரலிங்கத்தைத் தெரியுமா?” எஸ்.ஐ. கேட்டார்.

மைதிலி பதில் பேசாமல் தலையைச் சற்றுக் குனிந்துகொண்டாள்.

ஏட்டு, “அவ எப்பிடி சார் சொல்வா. அதான் ஊரே சிரிக்குதுல்லோ,” என்றார், அவருக்குத் தேன் குடித்தது போல் இருந்தது.

“உன் வீட்டைச் சோதனை போடனும்,” என்றார் எஸ். ஐ.

பாவம் மைதிலி, அவளுக்கென்ன சட்டம் தெரியுமா, என் வீட்டுக்குள் வர உங்களுக்கு வாரண்ட் இருக்கிறதா எனக் கேட்க. வீட்டைத் திறந்து வைத்து விட்டு ஒதுங்கி நின்றாள்.

உள்ளே நுழைந்த எஸ்.ஐ., சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “பெட்டி கிட்டி ஏதாவது இருக்கா?” எனக்கேட்டவாறே திரும்பியவர், அப்போதுதான் அந்த பெட்டியைப் பார்த்தார்.

“பூட்டு வேறயா, சாவிய எங்க?” என அவசரப்படுத்தினார் எஸ்.ஐ.

முந்தானையில் முடிந்து வைத்திருந்த சாவியை அவிழ்த்துக் கொடுக்கும்போது அவள் கை நடுங்கியது, நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

‘அய்யய்யோ பத்திரம் உள்ளே இருக்கே, பாத்திர போறானே,’ என்ற நினைப்பில் அவளுக்கு, மூச்சு அடைத்துவிடுமோ என பயத்தில் சுவர் ஓரம் ஒட்டிச் சாய்ந்து கொண்டாள்.

சாவியை வாங்கி பெட்டியைத்திறந்து முதலில் மேலோட்டமாகப் பார்த்த எஸ்.ஐ., பின் அதை குப்புறக் கவிழ்த்தி, உள்ளிருந்து வெளிப்பட்ட பொருட்களைக் கிளறினார். அவர் எதிர் பார்த்ததுபோல் எதுவும் அகப்படவில்லை.

“பத்திரம் கித்திரம் ஏதாவது இருக்காம்மா. அதான் அந்த சங்கரலிங்கம் ஒனக்கு ஏதும் எழுதி குடுத்தானா,” என்றார் எஸ்.ஐ.

நாக்கு எழவில்லை, இல்லையென்று தலையசைத்தாள்.

எதிர் பார்த்தது போல் சாட்சியங்கள் ஒன்றும் சிக்காது போகவே சலிப்படைந்த எஸ்.ஐ., “சரி சரி, அப்புறம் வாரோம்.” என்றவர், “ஆமா உன் புருசன் எங்க போயிருக்கான்னு சொன்ன?” என்று கேட்டார்.

“மாடு மேய்க்க...” என்றாள்.

“அப்பிடிச் சொல்லு. வேல கீலண்ணு ஏதோ உத்தியோகம் பாக்கிற, மாதிரி பேசாத,” என்ற ஏட்டு பல்லெல்லாம் தெரியச் சிரித்தார். தொடர்ந்து, “சரி, சரி அந்த ஆள் இறந்து போய்ட்டான்னு நெனச்சுக் கவலப்படாத. நாங்க இருக்கோம்,” என்று மைதிலியின் மார்பைப் பார்த்து, ஆறுதல் சொல்லிவிட்டு, படி இறங்கினார் ஏட்டு.

“ஒம்புருசனை நாளைக்கு ஸ்டேசனுக்கு வரச்சொல்,” என்று சொல்லிக்கொண்டே எஸ்.ஐ. வெளியேறினார்.

“அவனோட நீயும் வா என்ன,” என்றார் ஏட்டு தெருவில் நின்றவாறே.

“நீ வரவேண்டாம். அவனை மட்டும் வரச்சொல்லு போதும்,” என்று கட்டளை இட்டார் எஸ்.ஐ.

அவர்கள் போனதும் மூச்சு மெல்ல பழைய நிலைக்குத் திரும்பவே, சுய நினைவு பெற்றவளாக, ‘எங்க போச்சு அந்தப் பத்திரம்,’ எனத் தன்னையே கேட்டுக்கொண்டாள். பெட்டியை நிமிர்த்தி அதன் ஓரங்களைத் தடவிப்பார்த்தாள். கண்ணாடிக்குப்பின் எங்காவது செறுகி இருக்கிறதா என்று தடவி, தட்டிப் பார்த்தாள். அந்தப் பத்திரம் அகப்படவில்லை. வீட்டைத் தலைகீழாக்கிப் பார்த்துவிட்டாள், எங்கும் இல்லை. பத்திரம் போலீஸ் கையில் அகப்படாதது பற்றி பெரும் திருப்தி அடைந்த மைதிலி, தற்போது தேடக்காரணம் பத்திரத்தின் மேல் உள்ள அக்கறையில் அல்ல. போலீஸ் திரும்ப வரும்பொழுது அவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என்பதால்தான்.

பத்திரம் மட்டும் போலீஸ் கையில் கிடைத்தால் தானும் குளோஸ் தன் புருசனும் குளோஸ். ‘வீட்டை கைப்பற்ற, கள்ளப் புருசனைக் கொலை செய்த பெண் கைது,’ எனப் பேப்பரில் செய்தி வரும், எனக் கற்பனை செய்து பார்த்தாள். கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

அந்தப் பத்திரம் எங்கு போயிருக்கும்? ஒருவேளை சங்கரலிங்கம் திருடி இருப்பானோ? அய்யய்யோ, யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாதே என, திரும்பவும் சாமியை வேண்டிக்கொண்டாள்.

வீட்டுப் பத்திரம் தொடர்பாக முந்திய இரவு நடந்த சில காரியங்களைப் பற்றி மைதிலிக்குத் தெறிய வாய்ப்பில்லை. அது போன்ற செயல்களுக்கும், அப்பாவியான தன் கணவனுக்கும் கொஞ்சமேனும் தொடர்பு இருக்கலாம் என அவள் ஒரு போதும் நினைத்ததில்லை.
 

Subageetha

Well-known member
வீட்டு தபால் பெட்டி போல் திறந்தே கிடந்தது. நல்ல உவமை
 

kaalnadaivelanmai

New member
டாக்டர் உதயகுமார் எழுதிய ஆலமரத்துப் பறவைகள் என்ற நாவலைப் படித்தேன். நாவால் நாவல் சுவைத்தால் கிடைக்கும் இன்பம் இந்த நாவல் படித்தால் கிடைக்கிறது.

பக்கத்திற்குப் பக்கம் கதைப்பின்னலும் விறுவிறுப்பும் நிறைந்து நம்மைப் படிக்கத் தூண்டுகிறது. இயற்கை வருணனைகள், சூழல் வர்ணனைகள், பொருத்தமாக ஆங்காங்கே விரிந்துகிடக்கின்றன.

கிராமத்து சூழலில் விவசாய குடும்பத்தை மையப்படுத்தி, சமூக சிக்கள்களைப் பின்னிப்பின்னி இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. ஒரு சமூக விரோதியின் கொலையை மையப்படுத்தி, கதைக் கருவாகக் கொண்டு கதை வளர்ந்தாலும் கிராமிய எதார்த்தங்கள் இயல்பு குன்றாமல் இடம்பெற்றுள்ளன.

தங்கச்சாமி, மைதிலி, தண்ணிக்காரி, சங்கரலிங்கம், விரால்ராசு, வெள்ளைச்சாமி, செல்லைய்யா போன்ற பாத்திரப் படைப்புகள் மூலம் நெல்லை நாட்டு வழக்கங்களும், மானுட இயல்புகளும் விளக்கப்படுகின்றன.

ஆண் ஆதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடாகவும், ஆண்டைத் தணத்தின் ஆனவத்திற்கு அடங்கிக்கிடைக்காமல் பெண்ணிய அடக்குமுறைக்கான அதிர்ப்தியை வெளிப்படுத்தும் ‘அம்மணத் திருடன்’ பாத்திரம் நகைச்சுவையோடு படைக்கப்பட்டிருந்தாலும் ஆழமான சமூகச் சிந்தனையை மென்மையாக வெளிப்படுத்துகிற பாங்கு அருமை.

சண்முகையா மூலம் நாவலின் தலைப்புக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இன்னொன்றும் தலைப்புக்குப் பொருந்தும். ஆம்! பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டுப் போனவர்கள், வேலை காரணமாக புலம்பெயர்ந்து போனவர்கள் இப்படி வெளியூர் போனவர்கள் எல்லோரும் பெரியாண்டவசாமி கோவில் மாசிப் படைப்புக்கு ஊர் வந்து சேர்வது கூட ஆலமரத்துப் பறவைகள் என்ற இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமாக இருக்கிறது.

“அடியாத மாடு பணியாதும்பாங்க” (ப.82)
“மோர்க்கடன் முகடு முட்டும்” (ப.85)
“தீப்பட்ட காயம் மோசமில்லை” (ப.94)

போன்ற ஒரு வரி இலக்கியங்கள் (பழமொழிகள்) இந்த நாவலை மெருகேற்றுகின்றன.

ஊர் நாவிதர் அழுபவர்களின் கைகளைத் தொட்டு விலக்கிவிட அவர்கள் அழும் கடமை முடியவே கைகளை விலக்கிப் பிரிந்தனர் (ப.86) என்பது இழவு வீட்டில் ஆண்களும் கட்டிப்பிடித்து அழும் வழக்கம் தென்தமிழ்நாட்டில் சமூக வழக்கமாக இருப்பதும், அழுது முடிக்க நாவிதர் அவர்களை விலக்கி விடுவதும் புதிய தகவல்.

பனங்கிழங்குத் தோலை உரித்தால் “நாரையின் கூரிய வாய் போல மஞ்சள் நிறத்தில்”
(ப.139) என்றும், “சின்ன பறும்பும் பெரிய பறும்பும் மருது சகோதரர்கள் போல்
கிழக்கும் மேற்குமாய் நின்ன” (ப.63) என்றும் எழுத்தாளர் உதயகுமார் படைத்துள்ள
உவமைத்தொடர்கள் அருமை.

எளிய நடை, இனிய வழக்குச் சொற்கள், பண்பாட்டுச் செழுமை,
செரிவான கதைக்களம் என இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
இவர் மேலும் பல நாவல்களை எழுதி தமிழுக்கு அணி சேர்க்க வாழ்த்துகிறேன்.

டாக்டர். பெரு. மதியழகன்
சிறப்பாசிரியர்
கால்நடை வேளாண்மை
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top