JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் - அத்தியாயம் 7 & 8

Uthaya

Member
7

சங்கரலிங்கம் தன்னை எவனும் கொலை செய்வான் என்று ஒரு போதும் கனவில் கூட நினைத்ததில்லை. அது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. அவனுடைய தலையைக் கொய்தவனும் அன்று மதியம் வரை எங்கோ வெகு தொலைவில், தீவிரமாகத் தன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தான். அவனும், இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தான் ஒரு மனிதனின் தலையைச் சீவுவோம் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

ஐப்பசியில் மழை பெய்து குளம் நிரம்பி விட்டிருந்தது. ஊரை ஒட்டினாற்போல், கிழக்கே நஞ்சையில நெல் விதைத்து, நெற்பயிர் எங்கும் பச்சைக் கம்பளம் போல் தோன்றியது. மாலை வேளைகளில் லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. கொசுக்கடி வேறு மனிதனை வேதனைப்படுத்தியது. காட்டுவேலைகளை மட்டுமின்றி வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டிருந்த தங்கச்சாமி, கொசு குளிர் இரண்டிலிருந்தும் தப்ப, தன் கறுப்பு முழுக்கைச்சட்டையைப் போட்டுக்கொண்டு, அந்த முன் இரவு வேளையில் ஊருக்கு மேற்கே இருந்த ஒரு கிணற்றை நோக்கி வெளிக்குப் போவதற்காக நடந்தான். கிணறு தோண்டிய பாறைகளை ஒரு சிறு மலை போல் குவித்து வைத்திருந்த, சரள் குவியலுக்குத் தென்புறம் அவன் அமர்ந்தான். அப்போது நன்கு இருட்டி விட்டிருந்தது, தங்கச்சாமி போன்ற ஒரு சில ஆண்கள் தவிர எவரும் நடமாடவில்லை.

சரள் குவியலின் மேற்கு திசையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டது. அதே நேரம் சரள் குவியலின் வடக்கில் இருந்த மாமரத்திலிருந்து சிறிய சலசலப்புக் கேட்டது, அணில் ஓடி இருக்கும் என, தங்கச்சாமி கவலைப் படவில்லை. மேற்கிலிருந்து வந்த குரலை மட்டும் கூர்ந்து கவனித்தான்.

“அண்ணே, புது பழக்கம் எப்பிடிப் போய்க்கிட்டு இருக்கு,” என்றது ஒரு குரல்.

“தெரியல, போகப்போகத்தான் தெரியும்,” என்றது இரண்டாவது குரல்.

தங்கச்சாமிக்கு அந்தக் குரல்கள் கேள்விப்பட்டவை மாதிரி தோன்றின. யோசித்தான், இரண்டுமே பரிச்சயமான மனிதர்களின் குரல்கள்தான், சந்தேகமே இல்லை.

“சரி, சரி. அமையும் கவலப்படாதேக,” என்றது முதல் குரல்.

“நானும் அப்பிடித்தான் நெனக்கேன். ஆனா இந்தப் பய சரியா வரமாட்டங்கானே. அவன மாரி இல்ல இவன்,” என்றது இரண்டாம் குரல்.

அது, இரண்டாம் குரல், சங்கரலிங்கத்தின் குரல் என அறிந்து கொண்டான் தங்கச்சாமி.

“மாட்டுக்காரப் பயல் வேற, இவன் வேற. இவன நீங்க கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழிக்கு கொண்டாரணும்,” என்றது அருவாள் வெள்ளச்சாமியின் குரல், அறிந்து கொண்டான் தங்கச்சாமி.

தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என அறிந்ததும் அரவம் இல்லாமல் இருந்தான் தங்கச்சாமி.

“எவ்வளவு நாளுதான் காத்திருக்கிறது மனுசன். தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன்னால் எப்பிடி,” என்றான் சங்கரலிங்கம்.

சங்கரலிங்கத்தின் பேச்சுக்குச் சத்தமாகச் சிரித்த அருவாள் வெள்ளச்சாமி, “அண்ணே நல்ல தமாசு போங்க. மாட்டுக்காரன் எப்பிடி,” என்றான்.

“அவன் நல்ல பய, புத்தியுள்ள பய. துட்ட வாங்கிக்கிட்டு ஒதுங்கிக்கிட்டான்,” என்றான் சங்கரலிங்கம்.

“அதான் அவனுக்கு வாராவாரம் கருவாட்டுக்குழம்பு கிடைக்கில்ல, சும்மாவா வரும். ஆமா அவளுக்கு என்ன குறைண்ண? கோவிச்சிகிடாதிக, ஆள் இன்னும் பள பளண்ணு சோக்காத்தான இருக்கா,” என்றான் அருவாள்.

“பழகப் பழக பாலும் புளிக்கும்ங்கிற மாதிரிண்ணு வச்சுக்கோயேன். ஒரு மாறுதல் வேணுமில்லோ,” என்றான் சங்கரலிங்கம்.

“அது சரி, அது சரி. ஆனா அரசன நம்பி புருசனைக் கை விட்டுறப்பிடாதில்ல,” என்ற அருவாள், தொடர்ந்து, “என் பழ மொழி மாறிப்போயிருச்சுண்ணு நினைக்கேன். அண்ணே நீங்க என்ன நெனைக்கீக,” என்றான்.

“ஆமா, இவ அமையிற வரைக்கும் அவள விட்டுறப்பிடாது. அது கேவலம் இல்ல,” என்றான் சங்கரலிங்கம். அவன் சிரித்தது இருட்டில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அருவாளுக்குத் தெரிந்து இருக்க வேண்டும், அவனும் சிரித்தான். மேலும், “ஆமா அவளுக்குக் குடுத்த வீட்ட எப்பிடி வாங்கப்போறேக,” என்றான்.

“மாட்டுக்காரன் முட்டாப் பய. ஆனா அவ புத்திசாலி. அவ மாமனார் எழுதிக்குடுத்த பத்தரத்தை வாங்கி வச்சுக்கிட்டா. இல்லையிண்ணா வராதிகண்ணுட்டா. உறவு முறிஞ்சு போச்சுண்ணா எப்பிடியும் வாங்கிர வேண்டியதுதான்,” என்றான் சங்கரலிங்கம்.

“அவ பிள்ள குட்டிக்காரி. வேற வழியில்ல...,” இழுத்தான் அருவாள்.

“அதெல்லாம் பாக்கமுடியுமா? நம்ம லாபத்தைதான் நாம பாக்கணும். மாட்டுல பால் வத்திப்போச்சுண்ணா வித்திர வேண்டியதுதான். எவனும் தீவனம் போட்டு வளக்கணும்கிறவன் வாங்கிட்டுப்போறான்,” என்றான் சங்கரலிங்கம். அங்கு ஒருசில வினாடிகள் அமைதி நிலவியது. தொடர்ந்து, “இவன் என்னடாண்ணா மலைக்குப் போய்ச் சம்பாதிச்சிட்டு வாரெங்கான். என் துட்டு மட்டும் என்ன கசக்கவா செய்யிது? மனுசருக்கு மனுசர் ஒரு ஒத்தாசதான,” என்றான் சங்கரலிங்கம்.

அருவாள் சிரித்துக்கொண்டே, “சரி, அவன் மலைக்கிப் போய் சம்பாதிச்சிக்கிட்டு வரட்டும். அது வரைக்கும் அவளுக்கு ஒரு தொண வேணும்மில்லண்ணே. இன்னைக்கிக் கேட்டுப் பாத்திரட்டுமா?” என்றான்.

தங்கச்சாமிக்கு நெஞ்சு படபடத்தது. உடம்பு ஆடியது. குதுங்காலிட்டு வெளிக்குப் போய்கொண்டிருந்தவன் எங்கே விழுந்துவிடுவோமோ என்று தரையில் கையை ஊன்றிக்கொண்டான்.

அந்த நேரத்தில் யாரோ வரும் ஓசை கேட்கவே வெள்ளச்சாமியும் சங்கரலிங்கமும் எழுந்து அருகிலிருந்த குட்டையை நோக்கிப் போய்விட்டார்கள்.

ஒருபுறம் அவமானம் நெஞ்சை அறுக்க, மறுபுறம் தானும் தன் குடும்பமும் மீண்டும் தெருவுக்குகே போக நேரிடலாமோ என்ற எண்ணம் தீராத பிரச்சனையாய்த் தங்கச்சாமியின் மனதை அரித்தது. தன் கேவல நிலைமையும் தன் எண்ண ஓட்டமுமே அவனைச் சுக்கு நூறாய் உடைத்தது. கொஞ்சமேனும் மானம் இருந்தால், அவனைக் கொன்றிருக்க வேண்டாம்? இல்லை நாலு வார்த்தை கேட்டிருக்கலாம். அதுவும் முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை, அவன் கொடுத்த வீடு போய்விடும் என்றல்லவா நாம் பயப்படுகிறோம் என்ற எண்ணம் தோன்றவே, தன்னைத் தன் மனைவி மைதிலி கேவலப்படுத்தியதில் என்ன தவறு இருக்கிறது, என்று எண்ணி எண்ணி, தன் நிலைமை எப்படி இவ்வளவு கீழ் இறங்கியது என்று நினைத்துக் குமைந்து போனான். நாம் எப்படி இதை அனுமதித்தோம் என்று எண்ணியவன், தான் ஒரு கீழ்த் தரமானவன்தானோ என்று தன்னையே சந்தேகித்தான்.

வீட்டில் மைதிலியிடம், தான் சரளுக்கு அந்தப்புறம், கேட்டதை எப்படிச் சொல்வது, ஒரு கணவன் தன் மனைவியிடம் பேசும் பேச்சா இது, என்று எண்ணித் தங்கச்சாமி வேதனைப் பட்டான். அன்று அவனுக்குச் சாப்பாடு செல்லவில்லை. தூக்கமும் வரவில்லை. ஆனால் உறங்குவது போல் பாசாங்கு செய்தான். அதுதான் அவனுக்குக் கை வந்த கலையாயிற்றே.






8

அன்று இருட்டில் சங்கரலிங்கமும் அருவாள் வெள்ளச்சாமியும் பேசிய பேச்சைக் கேட்டபின் தங்கச்சாமியால் தூங்க இயலவில்லை. தானும் தன் குடும்பமும் மீண்டும் தெருவுக்கு வந்துவிடுவோமோ என்ற கவலை அவனை அரித்தது. தங்கச்சாமி புரண்டு புரண்டு படுத்தான்.

எங்கோ பூனைகள் இரண்டு, ஒன்றை ஒன்று கடித்துக் கட்டிப்புரண்டு சீரிக் கூப்பாடு போட்டது கேட்டது. ஆணும் ஆணும் பெண் பூனைக்காகச் சண்டை போட்டனவா, அல்லது ஆணும் பெண்ணும் செய்த காதல் கச்சேரிதான் அவ்வாறு கேட்டதா என தங்கச்சாமிக்குத் தெரியாது. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. பாயில் உட்கார்ந்தான். மெல்லிய வெளிச்சத்தில் தன் மனைவி ஆழ்ந்த நித்திரையில் நிலைப்பதைக் கண்டான். அவள் அன்று ஏனோ சீக்கிரமே உறங்கிவிட்டாள். என்ன கனவு கண்டாளோ, தூக்கத்தில் மெல்லச் சிரித்தாள்.

அவனுக்கு ஒர் எண்ணம் தோன்றியது. அரவம் இன்றி எழுந்தான். உள் அறையில் இருந்த பெட்டியின் அருகில் சென்றான். பெட்டி பூட்டுப்போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. சாவியை மைதிலி தன் முந்தானையில் முடிந்து இடுப்பில் செருகிக் கொள்வாள் என அவன் அறிவான். மெல்ல ஊர்ந்து அவள் அருகில் சென்று உற்றுப்பார்த்தான். ‘ரெண்டு வருசத்திற்கு முன்ன மருதப்பாபுரத்தில் ஒருத்தன் தூங்கிக்கொண்டிருந்த தன் பெண்டாட்டியைக் கழுத்தை நெரித்துக் கொண்ணது மாதிரி இவள் கழுத்த நெரிச்சிட்டா என்ன,’ என்ற எண்ணம் பளிச்சென்று அவன் மனதில் தோன்றியது. அவளும் இவள மாதிரி புருசனை ஏமாத்தினவள்தானாம். ஒரு நிமிடம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளோ தூக்கத்தில் இன்னும் சிரித்துக்கொண்டிருந்தாள்.

‘சே அப்பிடியெல்லாம் செய்யப்பிடாது,’ என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவன், இருட்டில் தாயின் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் இரண்டு பிள்ளைகளையும் பார்த்தான். பின் தன் மனைவியின் இடுப்பில் செருகியிருந்த சாவிமுடிச்சைத் தேடித் துழாவினான்.

அவள் தூக்கத்தில் அவன் கையைத்தட்டி விட்டுச் சிரித்தாள். சிலவினாடிகள் கழித்து மீண்டும் மெல்லத் தொட்டான். அவள் மீண்டும் சிரித்தாள் ஆனால் கையைத் தட்டவில்லை. ஒரு வழியாக சாவிமுடிச்சு அகப்பட்டது.

சாவியை அவிழ்த்து எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குத் தவழ்ந்தே சென்று பெட்டியைத் திறந்தான். பெட்டியைச் சன்னல் அருகில் வைத்து, நட்சத்திர வெளிச்சத்தில் தேடினான். நீளவட்டத்தில் மடித்து வைத்திருந்த முரட்டுக் காகிதத்தைக் கண்டுபிடிக்க நேரம் ஆகவில்லை. அதுதான் பத்திரம் என்று அவன் அறிவான்.

அவசரமாக மற்றச் சாமான்களைப் பெட்டியில் போட்டுப் பூட்டைப் பூட்டி, சாவியை மைதிலியின் முந்தானையில் முடிந்துவிட்டு, சப்தமில்லாமல் கதவைத் திறந்து வெளியே வந்து கதவை மெல்லச் சாத்தினான். பின் வேட்டியை மடித்துக்கட்டி, போட்டிருந்த நீளமான கறுப்புச்சட்டையை அதன்மேல் இழுத்து விட்டு வெள்ளை வேட்டியை மறைத்துக்கொண்டான்.

ஒரு முறை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, தெருவில் இறங்கி நடந்து, ஊர் ஓரம் இருந்த தண்ணிக்காரி வீட்டுமுன் நின்றான். எவரேனும் உள்ளே இருந்தால் என்ன செய்வது என நினைத்தான். சட்டைக்குள் இருந்த பத்திரத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

பல நிமிடம் காத்து நின்றவன், ஒரு சத்தமும் கேட்காததால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, கதவைத் தட்டினான். சில வினாடிகளில் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தான், கதவு பூட்டப்பட்டது.

பூட்டிய வீட்டுக்குள் தண்ணிக்காரி தங்கச்சாமியை அரவணைத்து விசாரித்தாள். மற்ற ஆண்களைப்போல் அல்ல அவன் என அறிந்தவள். ஆகவே அவன் வந்த நோக்கம் என்ன என அறிந்துகொள்வதற்காக அவனை, “சொல்லுங்க,” என ஊக்கம் கொடுத்தாள். அவன் சட்டைக்குள் வைத்திருந்த பத்திரத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவள் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவள், நன்கு எழுதப் படிக்கத்தெரிந்தவள். பத்திரத்தை வாசிப்பது அவளுக்குச் சிரமமாக இல்லை. ஒரு முறை மனதுக்குள் வாசித்துவிட்டு, பின் வாய்விட்டுத் தங்கச்சாமிக்குப் படித்துக்காட்டினாள். அப்புறம் அந்தப் பத்திரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

“இதுல ரெசிஸ்தார் ஆபீஸ் சீல் குத்தலயே,” என்றாள்.

“அப்படிண்ணா,” என்றான் தங்கச்சாமி.

“பத்தரம் எழுதி ஆபீஸ்ல பதிவு செய்யணும். இல்லைண்ணா இது தொலைஞ்சு போச்சிண்ணு வச்சிகிடுவமே. கடன் வாங்கினதுக்கு அத்தாச்சியே இல்லை,” என்றாள் தண்ணிக்காரி.

“சரி...” என்றான் தங்கச்சாமி.

“இதைக் கிழிச்சுப் போட்டுட்டா நீங்க கடன் வாங்கினத நிரூபிக்க முடியாது,” என்றாள் தண்ணிக்காரி.

ஏதோ புரிந்தது மாதிரி இருந்தது தங்கச்சாமிக்கு.

“இதக் காட்டத்தான் வந்தேகளா, வேற ஏதும் சொல்ல வந்தேகளா? முதக்காரியம், இந்தப் பத்திரம் எப்பிடி உங்க கைக்கு வந்தது,” என கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் தண்ணி.

தங்கச்சாமி சில மணி நேரம் முன்பு இருட்டில் சரள் குவியலுக்குப் பின்னால் கேட்ட சம்பாசனைகள் முழுவதையும் ஒப்பித்தான். பின் தான் பெட்டியிலிருந்து பத்திரத்தை எடுத்து வந்ததைப் பற்றியும் விளக்கினான்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் தண்ணி. பின் ஏதோ முடிவுக்கு வந்தவள்போல், “நான் சொல்லுத படி செய்வீகளா?” என்றாள் தண்ணி.

“சொல்லு,” என்றான் தங்கச்சாமி.

“சரி,” என்று சொன்னவள், “முதல்ல ஒரு காரியம் பண்ண வேண்டியிருக்கு,” என்று எழுந்து அடுப்பில் அனேகமாய் சாம்பலாய் விட்டிருந்த தீக்கங்குகளைக் கிளறி, கொஞ்சம் சுள்ளியும் பழைய காகிதமும் வைத்து ஊதி சாகக்கிடந்த நெருப்புக்கு உயிர் ஊட்டிளாள். நிமிடத்தில் குபீர் என்று தீ பற்றி எரிந்தது. மெல்ல சுள்ளி எரியுமாறு குச்சுக்களை அசைத்து காற்று இடையில் செல்ல உதவி செய்தாள், சுள்ளி பற்றிக்கொண்டது.

“இங்க வாங்க,” என்றாள்.

பத்திரத்தோடு வந்தவனை, “அந்த பத்திரத்தை இந்த அக்கினியில போடுங்க,” என்றாள்.

யோசித்தான்.

“யோசிக்காதிக. அந்த ராமன் வீட்டம்மா சீதை மாதிரி இந்த பத்திரம் முழுக்க சுத்தமாய் இருந்தா எந்த நெருப்பும் இதை அழிக்கவோ எரிக்கவோ மிடியாது. ஆகையினால நீங்க அதை இந்த நெருப்பில போட்டு சோதிக்கிறதுல தப்பு ஒண்ணும் இல்ல,” என்றாள்.

முன்னொரு நாள் பெரியாண்டசாமி கோவிலில் வில்லுப்பாட்டுப் படிக்க வந்த பெண் இந்த ராமன் கதையப் பாட்டுப்பாடி, வில்லடித்துச் சொன்னதைக் கேட்டது நினைவுக்கு வரவே தலை அசைத்தான். குனிந்து அந்தப் பத்திரத்தை எரியும் நெருப்பில் போட்டான்.

தீயின் நாக்குகள் அந்தப் பத்திரத்தைச் சில நொடியில் பொசுக்கிக் தின்றன.

அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் சோகமயமாய்த் தரையில் அமர்ந்தான்.

“இங்க வாங்க,” என்று அவன் கையை இழுத்து அனைத்தவாறு உள் அறைக்குக் கூட்டிச்சென்றாள்.

பின், “இதைக் குடிங்க, கொஞ்சம் கசக்கும். டக்குண்ணு முழுங்கிருங்க, கொஞ்சம்தான். கடிச்சிக்கிட முறுக்கு தரட்டுமா ராசா,” என்று அன்பாய்க் கேட்ட தண்ணி, பேசிக்கொண்டே ஒரு பாட்டிலில் இருந்து திரவத்தை ஒரு டம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.

பாட்டிலையும் டம்ளரையும் மாறி மாறி பார்த்தவனை, “உறக்கம் வரும், நல்லா காட்டில அலஞ்சிட்டு வந்திருக்கிக, வீட்டுக் கவல தூங்க விடமாட்டங்குது. பாட்டில் அத சரி பண்ணிரும்,” என்றாள்.

“சாராயமா?”

“அது மத்தவுகளுக்கு. ஒங்களுக்கு வெளி நாட்டுச் சரக்கு,” என்றவள் பேசிக்கொண்டே, குறைந்த விலை முறுக்கைத் தவிர்த்து, அரிசி முறுக்கை எடுத்து நீட்டினாள்.

பாயில் அமர்ந்து அந்த வெளி நாட்டுச்சரக்கைக் குடித்தான். அவன் இருந்த நிலையில் முறுக்கு தேவைப் படவில்லை.

சில நிமிடங்கள் அவள் அவனிடம் பேச்சுக்கொடுத்தாள். தங்கச்சாமி, “நான் ஒரு மனுசரோட வாழ்க்கயயும் கெடுக்கல. ஒருத்தருக்கும் தும்பம் குடுக்கல. களவாண்டிருக்கனா, கன்னமிட்டுருக்கனா, ஒருத்தர்ட்ட வம்புக்குப் போயிருக்கனா? எனக்கா வரணும் இப்பிடி? நான் கும்பிடாத தெய்வமில்ல, கோயில் இல்ல,” என்று தன் வாழ்வில் முதல் முறையாக வாய் விட்டு குறைபட்டுக்கொண்டான், அந்தத் தெய்வங்களையும் விட்டு வைக்கவில்லை அவன்.

“தெரியாமலா சொல்லுதாக, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்ணு. இனிமே போகப் போக உங்களுக்கு நல்லதே நடக்கும். நான் சொல்றதைக் கேளுங்க,” என்று சொல்லி அவனை அன்பொழுகப் பார்த்தாள்.

அவள் பேசப் பேச, சரக்கு தலைக்கு ஏற ஏற, அவன் முகம் தளர்ந்து அவனும் சிரிக்கத் தொடங்கினான். பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் முந்தானை சரிந்து கிடந்ததை அவள் கவனிக்கவில்லை. அவளின் இளமை, ரவிக்கையை முட்டிக் கிழிக்க எத்தனிப்பதை அவன் கண்கள் கண்டுகொண்டன. அன்று வரை வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காதவன் அவன். தன் மனைவியைக்கூட அவன் பார்த்துப் பல வருடங்கள் இருக்கும். அந்த இரவுப்பொழுது அவன் கண்கள் இமைக்க மறுத்தன.

அவன் கண்கள் செல்லும் திக்கை, தண்ணிக்காரி அறிந்தாலும் தெரியாதது போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். மெல்ல அவன் அருகில் நகண்டு நகண்டு மிக அருகில் அவன் கைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்தாள். அவன் சிரித்தான், உளறினான், ஏனோ அவளைத் தொடத் தயங்கினான். அவள் அவன் கையை எடுத்து அவன் கண்கள் சென்ற இடத்தில் விட்டாள். அவன் சிரித்துக்கொண்டே தான் ஒரு ஆண் மகன்தான் என நிரூபிக்கத்தயாரானான். அவள் விளக்கை இறக்கி மரப்பெட்டிக்குப் பின் மறைத்து வைத்தாள். அங்கு இருட்டு நிலவியது. மெல்லிய சிரிப்பொலி அவ்வப்போது அமைதியைச் சற்றே குலைத்தது.

சற்று நேரம் கழித்து, தண்ணிக்காரி, “சரி வீட்டுக்குப் போங்க. எனக்கு மனசுல் ஏனோ திக்குணு இருக்கு,” என்றாள்.

“நாளைக்குப் பத்திரத்தைக் காணும்மிண்ணு குதிக்கப்போறா,” என்று தன் மனைவியை நினைவுக்கூர்ந்தான் தங்கச்சாமி.

“நாளையப் பொழுது எப்பிடி விடியும்ண்ணு யாருக்குத் தெரியும்? நமக்கு நல்லாத்தான் விடியும்ண்ணு நம்புங்க,” என்று உரிமையுடன் அவனை அணைத்து, வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தாள் தண்ணிக்காரி.

தங்கச்சாமி வீட்டிலிருந்து கிளம்பி, சுமார் ஒரு மணி நேரத்திற்குள் திரும்பவும் வீடு வந்து சேர்ந்துவிட்டான். மைதிலி இன்னும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். பொழுது விடிய இன்னும் இரண்டு சாமங்கள்தான் கிடந்தன என ஊகித்துக்கொண்ட தங்கச்சாமி அரவம் இன்றி வீட்டுக்குள் நுழைந்து, தன் மனைவி அறியாமல் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
 

Rajendran. S

New member
Dr உதயகுமார் அவர்கள் எழுதிய ஆலமரத்துப் பறவைகள் நாவலின் அத்தியாயம் 7 மற்றும் 8 ஆகியவற்றை படித்துப் பார்த்தேன். கதை விறுவிறுப்பாகவும் மர்மம் நீடித்துக் கொண்டும் போகிறது.
கிளுகிளுப்பான விஷயங்கள் இலைமறை காய்மறையாக கூப்பட்டிருப்பது அழகு! அருமை!!
 

Rajendran. S

New member
Dr உதயகுமார் அவர்கள் எழுதிய ஆலமரத்துப் பறவைகள் நாவலின் அத்தியாயம் 7 மற்றும் 8 ஆகியவற்றை படித்துப் பார்த்தேன். கதை விறுவிறுப்பாகவும் மர்மம் நீடித்துக் கொண்டும் போகிறது.
கிளுகிளுப்பான விஷயங்கள் இலைமறை காய்மறையாக கூப்பட்டிருப்பது அழகு! அருமை!!
சிறு திருத்தம்:
கூப்பட்டிருப்பது என்பதை கூறப்பட்டுள்ளது என்று திருத்தி வாசிக்கவும்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top