JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள். அத்தியாயம் 9 & 10

Uthaya

Member
9

சங்கரலிங்கம் தலை துண்டிக்கப்பட்டு, போலீஸ் வந்து பலரை விசாரித்து விட்டு, முக்கியமாக தங்கச்சாமியின் மனைவி மைதிலியின் மார்பைப் பார்த்து ஏட்டு வடிவேல் பேசிவிட்டுப் போனதற்கு அடுத்த நாள், சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனான் தங்கச்சாமி.

படி ஏறி திண்ணை போல் இருந்த மேட்டில் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கான்ஸ்டபிள் 107 ஐ நோக்கி, “ஐயா,” என்றான் தங்கச்சாமி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

சற்றே திடுக்கிட்டு விழித்த கான்ஸ்டபிள் 107, “என்ன, என்ன வேணும் சார்... ஏய் நீயா? என்னய்யா வேணும்? என்ன வேணும்மிண்ணேன்,” என்று அவரால் முடிந்தவரை அதட்டினார்.

நம்மை விட பயந்தாங்கொள்ளியா இருப்பான் போல இவன், என்று தைரியம் அடைந்த தங்கச்சாமி, “ஐயா வந்து பாத்திட்டுப் போகச் சொன்னாகளாம்,” என்று உள்பக்கம் பார்த்தான்.

“ஏன் நான் வரச்சொல்லி இருக்கக் கூடாதா?” என்றார் 107 விறைப்பாக.

தலை அசைத்த தங்கச்சாமி, “சரிய்யா. என்னண்ணு சொல்லுங்க,” எனறான்.

“ம்... அது எஸ்.ஐ. க்குத்தான் தெரியிம். எங்கிட்ட கேட்டா?” என்றார் 107.

உள்ளிருந்து எஸ்.ஐ., “ஏவ் 107, அந்த ஆளும் என்னத்தான் கேட்டாரு. நீர்தான் நந்தி மாதிரி குறுக்க பாய்ஞ்சு கலாட்டா பண்ற மாதிரி தெரியிது,” என்றார்.

“இல்ல சார், இல்ல. போங்க சார் உள்ள. இல்ல போப்பா. போ உள்ள,” கடைசி சொற்கள் மட்டும் விறைப்பாக வந்தன.

ஏட்டு வாய் விட்டுச் சிரித்து விட்டு, “ஏவ் 107, உம்ம காவலுக்கு வச்சா போலீஸ் ஸ்டேசனையே கொள்ள அடிச்சிட்டுப் போய்றுவான்யா. போகும் போது உம்ம தொப்பியவும் தூக்கிட்டுப் போயிருவான்யா,” என்றார்.

“தொப்பியா? தொப்பி எங்கிட்டதான் இருக்கு. என் வேலைய எல்லாம் பறிச்சிருராதைங்க சார்,” என்று பதறினார் 107.

“யோவ், உமக்கெல்லாம் எவன்யா டிப்பாட்மென்ட்ல வேல குடுத்தான்? கிராமத்தானுங்க சும்மா தெரியாம பேசுதானுகண்ணு நீரும் பேசுரெரே. சரியான கூத்தய்யா ஒம்மோட,” என்றார் ஏட்டு.

“சரி சரி வந்த ஆள உள்ள அனுப்புயா,” என்றார் எஸ்.ஐ.

ஏட்டு சிரித்துக்கொண்டே, “அவன அனுப்பும் ஓய்,” என்றார்.

தங்கச்சாமி வெடித்து அப்பளமாய் ஒட்டிக்கொண்டிருந்த உதட்டுப் பொருக்கை பிய்த்துக்கொண்டு நின்றவன், எஸ்.ஐ. சொன்ன உடன் ஸ்டேசன் உள் நுழைந்தான்.

“எங்க இருந்து வார நீ,” - எஸ்.ஐ.

ஏட்டு சிரித்தார். “சார் பாத்தாத் தெரியல, மாட்டுக்காரன்னு,” என்று சொன்னவர். தங்கச்சாமியைப் பார்த்து, “உம் பெண்டாட்டி எப்பிடி இருக்கா?” என்றார்.

“அவளுக்கென்ன, சுகமாத்தான் இருக்கா,” என்றான் தங்கச்சாமி. எப்பிடி தைரியம் வந்ததோ, தொடர்ந்து, “உங்க பெண்டாட்டி எப்பிடி சார்,” என்றான் ஏட்டைப் பார்த்து.

ஏட்டு திகைத்து விட்டார்.

107 கல கல என சிரித்தார்.

“போதும் போதும்,” என அதட்டினார் எஸ்.ஐ. மேலும் தங்கச்சாமியை பார்த்து, “வாங்க இந்தப்பக்கம்.” என்று அதட்டினார்.

எஸ்.ஐ முன் போய் நின்றான் தங்கச்சாமி.

தொண்டையைக் கனைத்துக்கொண்டு எஸ்.ஐ. கேட்டார், “முந்தா நேத்து ஒங்க ஊருல தீவச்சது யார் தெரியுமாய்யா?”

“தெரியாது ஐய்யா,” பவ்வியமாகச் சொன்னான் தங்கச்சாமி.

“வெட்டுப்பட்ட சங்கரலிங்கத்தை ஒனக்குத்தெரியுமா,” எஸ்.ஐ.

“தெரியும் சார்.”

“உனக்குப் பழக்கமா?” எஸ்.ஐ.

“தெரியும், பழக்கமில்ல.”

“சார் அவன் பெண்டாட்டிக்குத்தான் பழக்கம்,” என்றார் ஏட்டு.

“ஒங்க பெண்டாட்டிக்கு யார் சார் பழக்கம்,” என்று வாயில் வந்ததை சொல்லி விட்டான் தங்கச்சாமி. ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்று நினைத்தானோ? அல்லது தண்ணீக்காரி கொடுத்த தைரியமோ? ஆனால் சொல்லி விட்டான்.

ஏட்டு எழுந்து வேகமாய் தங்கச்சாமியைப் பார்த்து ஓடி வந்தார். தங்கச்சாமி அசைய வில்லை. “ஏட்டு,” என்று அதட்டினார் எஸ்.ஐ. பின், “கேள்வி கேக்க விடுங்கையா, நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டெ இருந்தீங்கண்ணா எப்பம் வேலைய முடிக்கிறது” என்றார்.

எஸ்.ஐ. தனக்குச் சாதகமாகப் பேச வில்லை என்றவுடன் ஏட்டு மௌனமானார்.

“என்னய்யா? நம்ம ஏரியாவுல ஒரு கொல மட்டுமில்ல, இருபத்தியோரு வீடுகளும் எரிஞ்சிருக்கு. பேப்பருல செய்தி வந்தாச்சு. இன்னைக்கே இன்ஸ்பெக்டர் வருவாரு. நாளைக்கு டிஎஸ்பி வருவார். ஏன் கலைக்டரே வந்து பார்வையிட வந்தால்கூட ஆச்சரியமில்லை. இது வரைக்கும் என்ன பண்ணுனீங்கண்ணு கேட்டா என்னய்யா சொல்றது? நாங்க ஒரு மாட்டுக்காரன அடிச்சு ஒடிக்கிட்டோம்ண்ணு சொன்னால் நம்மளப் பத்தி என்ன நெனைப்பாங்க,” என்றார்.

தங்கச்சாமியை பார்த்து, “உம்ம பேர் என்ன?’ என்று கேட்டார் எஸ்.ஐ.

“தங்கச்சாமி.”

“சரி இண்ணைக்கு வேலைக்குப் போகலையா?” என்றார் எஸ்.ஐ.

ஏட்டு, “வேல...” என்று தங்கச்சாமியைக் கேலி செய்ய ஆரம்பித்தவர், தான் சொல்ல வந்ததை அப்படியே நிறுத்திவிட்டார்.

“வேற ஒரு மாட்டுக்காரன் கிட்ட பாக்கச்சொல்லிருக்கன் சார்,” என்றான் தங்கச்சாமி.

“ஒனக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் எஸ்.ஐ.

“இல்லை சார்.”

“ஒனக்கும் ஒங்க ஊர்ல ஏற்பட்ட தீ விபத்துக்கும் என்ன தொடர்பு இருக்கு?” எஸ்.ஐ.

“ஒரு தொடர்பும் இல்லை சார்.”

“சார், அவனை இப்பிடி கேட்டாச் சொல்ல மாட்டான் சார். அவந்தான் கொலகாரன் சார்,” என்றார் ஏட்டு.

Òயோவ் ஏட்டு. ஒம்ம இது வரைக்கும் புத்திசாலி. ஆனா கொஞ்சம் பொம்பள பொறுக்கிண்ணு நினைச்சேன். இன்னையில இருந்து அந்த எண்ணத்த மாத்திக்கிடணுமிண்ணு நினைக்கிறேன்,” என்றார் எஸ்.ஐ.

ஏட்டு, பதறி அடித்துக்கொண்டு, “சரி சார். நீங்க சொல்லுற படி செய்யிறேன்,” என்றார்.

சற்று சாந்தப்பட்ட எஸ்.ஐ., “இவனால அருவாளத் தூக்கி ஒரு மனுசன் தலைய துண்டாக்க முடியுமாய்யா?” என்றார்.

ஏட்டு மௌனம் சாதித்தார். எஸ்.ஐ. தங்கச்சாமியைப் பார்த்து, “வேணும்மிண்ணா சொல்லி அனுப்புவோம், வரணும். இப்பொம் நீர் போகலாம்,” என்றார்.

“சரிய்யா,” என்று சொல்லி விட்டு, தங்கச்சாமி வெளியேறினான். ஏட்டோ, 107 ஓ, வாய் திறக்கவில்லை.

10

தங்கச்சாமி காவல் நிலையத்திலிருந்து வெளியேறி பஸ்சுக்காகக் காத்திருந்து, ஊர் வந்து சேர, மணி மாலை மூன்றரை ஆகிவிட்டது. காலையில் சாப்பிட்டது, மதியம் பச்சத் தண்ணீர்கூட வாயில் படவில்லை. போலீஸ் தன்னை அடிக்காமல் விட்டதே போதும், ‘அதுவே வயிறாறப் பாலும் பழமும் சாப்பிட்டது போல் இருக்குது,’ என, தனக்குத் தானே சொல்லிக்கொண்டான் தங்கச்சாமி.

இருந்தாலும் வயிறு பசிக்கத்தான் செய்தது. பொருட்படுத்தாது மாட்டை மேய்க்கும் பொறுப்பைத் தண்ணிக்காரியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அல்லது, வீட்டுக்குச்சென்று ஒரு வாய் கஞ்சியைக் குடித்து விட்டுச் செல்லலாமே என வயிறு ரகசியம் பேசிற்று.

பஸ்சை விட்டு புளியமரத்தடியில் இறங்கி நின்றவன், குளத்தங்கரையில் ஏறி கிழக்குநோக்கிப் பார்த்தான். கீழக்கம்மாய் போய் மாடுகளை மேய்க்கும் பொறுப்பைத் தண்ணிக்காரியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதா, வயிற்றுக்குப் பதில் சொல்வதா. ஒரு நிமிடம் சிந்தித்தான். கடைசியில் வயிறு வென்றது. தங்கச்சாமி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

வீட்டை நெருங்கியவன், தெருவில் அவன் வீட்டு முன் ஒரு சிறு கூட்டம் கூடியிருப்பதைக்கண்டான். வீட்டை நெருங்க நெருங்க அக்கூட்டம் அவனையே ஆவலுடன் எதிர் பார்த்து நிற்பதாக அவனுக்குப் பட்டது. அவர்கள் அவனுடைய வருகைக்காக ஆவலுடன் இது வரை காத்திருந்திருக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டான். கூட்டத்தில் அவன் சித்தி செண்பகமும் அவன் மனைவி மைதிலியும்கூட இருந்தனர்.

தங்கச்சாமி ஐம்பது அடி தூரத்தில் நடந்து வரும் பொழுதே, கோபால் அவனை நோக்கி நடந்துகொண்டே, “தங்கச்சாமி, போலீஸ் டேசன்ல என்ன கேட்டாங்க?” என்றான்.

“சும்மா, நடந்த கொலைக்கும், தீக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையாண்ணு கேட்டுட்டு, போகச்சொல்லீட்டான்,” எனறு சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டே நடந்து வந்தான் தங்கச்சாமி.

அதற்குள் தங்கச்சாமி அவர்கள் அருகில் வந்துவிடவே, கூட்டத்தில் இருந்த ஆண்கள் சிலர் தங்கச்சாமியின் கை கால்களை, ஏதோ கனிந்த பழத்தைத் தொட்டுப் பார்ப்பதுபோல், தொட்டுப் பார்த்தனர். பின் அவனைச் சுற்றி வந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை நோட்டம் விட்டனர்.

“ரெம்ப ஒண்ணும் அடிக்கலயே,” என்றான் கோபால்.

“அதெல்லாமில்ல, நம்மள எதுக்கு அடிக்கான்? கொல செஞ்சிருக்கா, கன்னமிட்டிருக்கா?” என்று உசாராய்ப் பதில் அளித்தான் தங்கச்சாமி.

“போலீஸ்காரன் சும்மா விடமாட்டாம்பாக, அதான்...” என்று இழுத்தான் கோபால்.

வீட்டுக்கு உள்ளே போக எத்தனித்த தங்கச்சாமியின் கையைப் பிடித்து நிறுத்தி, “கொல அருவாள் கெடெச்சிட்டது பத்தி என்ன பேசிக்கிட்டாங்க?” என்றான் சின்னராசு.

“அருவாள் கிடைச்சிருச்சா...?” என ஆச்சரியமாகப் பார்த்தான் தங்கச்சாமி.

“ஒனக்கு இன்னம் தெரியாதா? நீ போயி அரை மணி நேரத்தில அருவாளக் கண்டு பிடுச்சுட்டாங்க. அருவாள் வெள்ளச்சாமிதான் கொலயச் செய்திட்டு, அருவாள கந்தசாமி வீட்டுத் தொழுவில உள்ள மாட்டுத்தொட்டியில போட்டுட்டுப் போய்ட்டான். நேத்து மாடு தண்ணி குடிச்சிருக்கு, ஆனா தண்ணி கொஞ்சம் மிச்சம் கெடந்திருக்கு. அந்தக் கஞ்சி மண்டியில அருவாள் கிடந்தது தெரியல. இன்னைக்கு முழுக்க குடிச்ச பிறகுதான் தெரியுது, அடியில அருவாள் கெடக்கிறது. அது கூட மாடு தொட்டிய நக்கினதுல நாக்கு லேசா கோரைப்பட்டு ரெத்தம் வரப் போய்த்தான் கந்தசாமி பெண்டாட்டி நொண்டிக்கை பார்வதி பாத்திருக்காள். தொட்டிய எட்டிப் பாத்தா அருவாள். ஒடனே அலறி அடிச்சு புருசனக் கூப்பிட்டுருக்கா. அவன் அய்யோ ஆத்தாண்ணு பதறி அடிச்சுக்கிட்டு ஓட்டமா ஓடி தலையாரிகிட்டயும் விட்டியாங்கிட்டயும் சொல்லிருக்கான். தலையாரி வேகுவேகுண்ணு வந்து அருவாளக் கண்டதுதான் தாமதம், ஒடனே போலீசுல சொல்லிப்புடணும்ன்னு அந்தாக்கில கிளம்பிப் போய்ட்டார். வெட்டியான காவலுக்கு வச்சிட்டுப் போயிருக்காரு. வெட்டியான், இன்னைக்கு முழுச்சும் ஆள் அந்த இடத்தை விட்டு நகரல. சாப்பிடக்கூடப் போகல. ஏன் ஒண்ணுக்கு ரெண்டுக்குக்கூட போகலண்ணாப் பாத்துக்கோ. போலீஸ் வந்து பாத்தபின்னதான் எடத்தவிட்டு நகரமுடியும்,” என்று சற்று விளக்கமாகவே சொன்னான் கோபால்.

“அப்பிடியா சங்கதி? நான் கிளம்பிற வரைக்கும் டேசன்ல இதைப் பத்திப் பேச்சே இல்ல. தலையாரி தலயவும் காங்கல,” தங்கச்சாமி சொல்லி முடித்து வீட்டு உள்ளே செல்ல அடி எடுத்து வைத்த சமையம் பார்த்து, பெரிய சத்தம் கேட்கவே எல்லோரும் திரும்பிப்பார்த்தனர். தெருவில் போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது. பின் சீட்டில் தலையாரி உட்கார்ந்திருந்தார். கூட்டம் ஜீப்பிற்கு, வழிவிட்டு அதைப் பின் தொடர்ந்தது. தங்கச்சாமியும் மைதிலியும் அவர்கள் வீட்டுக்குள்ளே சென்றனர்.

போலீஸ் ஜீப் கந்தசாமியின் தொழுவத்திற்கு வெளியே நின்றது. எஸ்.ஐ., ஏட்டு, 107 மூவரையும் தொடர்ந்து தலையாரியும் இறங்கித் தொழுவத்திற்குள் சென்றார். வெட்டியான் வாசலில் நின்று கொண்டு வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. மக்கள் வெளியே நின்று கொண்டு வாசல் வழியே உள்ளே என்ன நடக்கின்றது என முண்டி அடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

உள்ளே நுழைந்ததும், “எங்கையா?” என்றார் எஸ்.ஐ.

“இங்க இந்த தொட்டியிலதான் கிடக்கு சார்,” என்றார் தலையாரி.

மாட்டுக்கு நீர் காட்டும் தொட்டியில், அடியில் அரை அங்குலம் கலங்கிய கழுனீர்த் தண்ணீர் மண்டியாகக் கிடந்தது. தண்ணீருக்குள் கையை விட்டு மெள்ளத் துழாவி ஒரு நீண்ட அருவாளை எடுத்தார் ஏட்டு.

கொலைக்கு உபயோகிக்கப்பட்ட ஆயுதம் என்று கருதப்பட்ட அந்த அருவாள் சுமார் இரண்டரை அடி நீளத்தில் பளபளத்தது. தலையாரியிடமிருந்து அவருடைய துண்டை வாங்கி அருவாளைத்துடைத்தார் ஏட்டு. மாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட அருவாளின் கைப்பிடி அழகான கைவேலைப்பாடுகளோடு காணப்பட்டது.

பிடியின் இரு பக்கங்களிலும் நட்சத்திர வடிவில் ஆணி பதிக்கப்ப்ட்டிருந்தது. அந்தப் பிடியின் பின்னாலிருந்து முன்னோக்கிச் சென்ற கொக்கி ட வடிவில் இருந்தது. அருவாளைப் பிடிக்கும் போது கொக்கி விரலுக்குக் கீழே வந்தது. கம்பி போல் இருந்த அந்தக் கொக்கி நேராக இல்லாமல் அலை போல் வளைந்து வளைந்து அழகாக இருந்தது.

அத்தனை வேலைப்பாடுகள் அமைந்த அந்த அருவாளில் ஒரு குறையும் இருந்தது. பளபள என்று கூர்மையாக இருந்த அதன் வெட்டும் பகுதியில் ஒரு சின்ன கொருவாய் இருந்தது.

“இது யார் அருவாள்ன்னு தெரியுமா?” என்று எஸ்.ஐ. கேட்டார்.

“இதப் பாத்தா வெள்ளச்சாமி அருவாள் மாதிரி இருக்கு,” என்றார் தலையாரி.

“நீர் என்னய்யா சொல்றேர்,” என்று வெட்டியானைப் பார்த்துக் கேட்டார் எஸ்.ஐ.

“பாத்தா வெள்ளச்சாமியோட அருவாள் மாதிரிதான் சார் இருக்கு,” என்றார் வெட்டியான்.

“எப்பிடி அவ்வளவு திட்டமா சொல்ல முடியுது உங்களால?” என்றார் எஸ்.ஐ.

“அருவாளோட வாய்ப்பு, நீளம், கைப்பிடி எல்லாத்தையும் வச்சுப் பாத்தா வெள்ளச்சாமியோட அருவாள் மாதிரிதான் சார் தெரியுது,” என்றார் தலையாரி.

அதற்குள் வாசலில் முந்திக்கொண்டு நின்ற கோபால், “சந்தேகமே இல்லாமல் வெள்ளச்சாமியோட அருவாதான் சார்,” என்றார்.

“நீர் உள்ள வாரும்,” என்றார் எஸ்.ஐ.

பெருமிதத்தோடு உள்ளே நுழைந்தார் கோபால். எஸ்.ஐ. கேட்குமுன்பே, “சார் ஏம் பேரு கோபால். நீங்க எங்க வந்து சொல்லச்சொன்னாலும் சொல்லுதேன் சார், இது அருவாள் வெள்ளச்சாமியோட அருவாள்தான்,” என்றார்.

“அது எப்பிடிய்யா அவ்வளவு திட்டமா சொல்ல முடியுது உங்களால?” என்று மீண்டும் கேட்ட கேள்வியையே கேட்டார் எஸ்.ஐ.

அருவாளைப் பிடித்திருந்த ஏட்டை நெருங்கின கோபால், எஸ்.ஐ.யிடம் சொன்னார், “எனக்கு இந்த ஊர்ல மட்டுமில்ல, சுத்துப் பட்டியில அம்பது கிராமத்திலேயும் நல்ல அழகான அருவா வச்சிருக்க ஆளையும் அவங்க அருவாளையும் தெரியும். அதமாதிரி ஆள்கள் அனேகம் பேரிட்ட எனக்குப் பழக்கம்கூட உண்டு. நானும் அருவா வச்சிருக்கேன். சும்மா அது ஒரு கிறுக்கு, அருவாக் கிறுக்கு. வேற என்ன வெட்டவா போறோம்,” என்ற கோபாலை, எஸ்.ஐ. இடை மறித்து, “காரணத்தைச் சொல்லும். காத்துக்கிட்டு இருக்கோம்ல்லோ,” என்றார்.

“சரிசார்,” என்று எஸ்.ஐ. யைப் பார்த்துத் தலை அசைத்த கோபால். ஏட்டு இடமிருந்து அருவாளைக் கேட்டு வாங்கியபின் தொடர்ந்தார், “அருவாள் வெள்ளச்சாமியோட அருவாப்பிடியில இந்த வெள்ளி மாதிரி ஆணித்தலை இருக்கும்,” என்று பிடியைக் காட்டி அதிலிருந்த நட்சத்திர வடிவ ஆணிகளின் தலைப்புக்களைக் காட்டினார்.

கோபால் தொடர்ந்து, “மத்த ஆள்களோட அருவாள்ல ஆணித்தல வட்டமாத்தான் இருக்கும். வெள்ளித்தலை ஆணி கட்டின அருவாளுக்குப் பெருமை அதிகம். அது லேசில கிடைக்காது, துட்டும் அதிகம் ஆகும். அருவாள் வெள்ளச்சாமியோட அருவாளுக்கு இன்னொரு முக்கியமான பெருமை என்னண்ணா, இந்த கொக்கி. இந்த கொக்கி மத்த அருவாள்ள எல்லாம் ஒரு கம்பி மாதிரி நேரா இருக்கும். அருவாள் வெள்ளச்சாமியோட அருவாள்ள மட்டும்தான் இப்பிடி அல அலயா வளைஞ்சு வளைஞ்சு அழகா இருக்கும். சந்தேகமே இல்லாம இது அவரோட அருவாள்தான். இன்னும் இருக்கு,” என்று பேசிக்கொண்டே போன கோபாலை நிறுத்திய எஸ்.ஐ., அந்த அருவாளைத் தன் கையில் வாங்கிப் பார்த்தார்.

“சரி. நீர் சொல்ரத இப்போதைக்கு ஏத்துக்கிடுவோம். அடுத்துச் சொல்லும்,” என்ற எஸ்.ஐ. கோபாலைப் பார்த்தார்.

ஒரு காக்கிச்சட்ட போட்ட எஸ்.ஐ.யே தன்னைப் பார்த்து சரின்னு சொன்னதக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த கோபால், முகம் மலரத் தொடர்ந்தார், “எல்லாத்துக்கும் மேலா, இங்க பாருங்க,” என்று அருவாளின் கூர்மையான பக்கத்தில், முனையில் இருந்து இரண்டு அங்குலம் உள்ளே இருந்த ஒரு சில் போன இடத்தைக் காட்டி, “இது ஒரு வருசத்துக்கு முன்ன ஒரு கம்ப வெட்டும் போது நடந்தது. அந்தக் கம்புல ஏதோ ஒரு ஆணி இருந்திருக்கணும், அத வெட்டும்போது சில்லு பட்டுருச்சு.

ஐயோ..., அவரு பட்ட வருத்தம், கொஞ்ச நஞ்சமா? ஏன், ஊரே வருத்தப்பட்டது. ஊர்ல அருவா வச்சிருந்தவனெல்லாம் வருத்தப்பட்டான். ஒரு சில பொறாமைக்காரப் பயக வேணும்மிண்ணா சந்தோசப்பட்டுருப்பானுக,” என்று இழுப்பதைப் பார்த்த எஸ்.ஐ. ‘ம்ம்ம்...’ என்று தொண்டையைக் கமறவே, புரிந்துகொண்டார் கோபால்.

“சரி சார். எம்மனசு எங்கேயோ போயிருச்சு. என்னண்ணா, இந்த இடத்தில கொருவா விளுந்த அருவா, இந்த சுத்து வட்டாரத்தில அருவாள் வெள்ளச்சாமியோட அருவாதான்னு அடிச்சுச் சொல்லுவேன். ஆக மொத்தத்தில அருவாளோட அழகு, வெள்ளித்தல ஆணிகட்டின கைப்பிடி, வளஞ்சு வளஞ்சு உள்ள கைப்பிடிக் கொக்கி, ரெம்ப முக்கியமா சரியான இடத்தில அருவாள்ள உள்ள கொருவாய். எல்லாம் பாத்தா இந்த அருவாள் வேற யாரோடதாயும் இருக்கச் சாத்தியமே இல்லை. இத இங்க மட்டுமில்ல நீங்க எங்க கூப்பிட்டாலும் வந்து சொல்வேன். ஹைக்கோட்டுல கேட்டாலும் சொல்லுவேன். என் பேரு கோபாலு,” என்று ஒரு சிறிய சொற்ப்பொழிவே நடத்தினார், கோபால்.

எஸ்.ஐ. தலை அசைத்தார். இப்படியும் நமக்கு ஒரு ஆள் தேவைதான். நாளைக்குச் சாட்சி தேவைப் படலாம் அல்லவா என்று நினைத்தவர், விடாமல், கோபாலைக் கேட்டார், “உங்களுக்கும் இந்த அருவாள் வெள்ளச்சாமிக்கும் பகை, குடும்பப் பகை ஏதும் கிடையாதே,” என்றார்.

அருவாள் கிறுக்கில் இருந்து விழித்துக்கொண்ட கோபால், “ஐயோ, அப்பிடியெல்லாம் இல்ல சார். நான் இந்த அருவாள பத்தி எனக்குத் தெரிஞ்சத சொன்னேன், அவ்வளவுதான். கொலை செஞ்சது யார்ண்ணு எனக்கு ஒண்ணும் தெரியாது சார். உண்மையில எனக்கு வேற எதும் தெரியாது சார். நான் பிள்ளை குட்டிக்காரன் சார்,” என்று முந்தி இருந்த பந்தாவெல்லாம் விட்டு விட்டு சாதாரண மனிதர் ஆனார்.

“கோபால், வேற ஒண்ணும் இல்ல. நீங்க இந்த அருவாள் யாரோடதுண்ணு சொன்னா போதும். வேணும்மிண்ணால் கூப்பிடுவோம் வந்து பதில் சொல்லிட்டுப் போங்க,” என்றார் எஸ்.ஐ.

கோபால் மீண்டும் பெருமிதத்தோடு, “எங்க வந்துண்ணாலும் சொல்லுறேன் சார், நீங்க சொன்னா,” என்றார்.

எஸ்.ஐ. பொதுவாக, “அருவாள எதுக்கு இப்படி அழகு படுத்தி, அதைப் பேணணும். அருவாள்ணா வெட்டுரதுக்குத்தான, இல்லையா?” என்றார்.

கோபால், “நான் சொல்லலாமா சார்,” என்றார்.

எஸ்.ஐ. தலை அசைக்கவே, கோபால், “அது ஒரு போட்டி மாதிரி சார். ஊர்ல, பக்கத்துப் பட்டியில இன்னாரு அருவாளப் போல இல்ல, அப்பிடிண்ணா பெருமைதான சார். மத்தப்படி சும்மா ஒரு கை காவலுக்கும் உபயோகப்படும். வெறும் காவலுக்கு மட்டுமிண்ணா அருவாள இப்பிடிப் பேண மாட்டான் சார். அது ஒரு கிறுக்கு. ஒரு கலைக்சன் பண்ணுறது மாதிரி,” என்றார் கோபால்.

“சரி, அந்த அருவாள் வெள்ளச்சாமி எப்பிடி? சரியான கோபக்காரனா?” என்றார், எஸ்.ஐ.

மௌனமிருந்து அலுத்துப்போன வெட்டியான், “சரியான பயந்தாங்கொள்ளி சார். அருவாள்தான் நீளம், சுத்த தைரியம்கெட்ட மனுசன், சார். செத்த கோழியோட கழுத்தக்கூட அறுக்க மாட்டாரு,” என்றார்.

“சரி தேவைப்பட்டால் ஒம்மையும் கூப்பிடுவோம்,” என்ற எஸ்.ஐ., ஏட்டைப் பார்த்து, “ஏட்டு, அருவாள எங்கிட்ட குடுத்திட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க,” என்றார்.

உடனே எஸ்.ஐ. ஏட்டு இருவரும் ஜீப்பில் ஏறினர். 107 ஏற முனைகையில் “107” என்று எங்கோ ஒரு குரல் விண்ணை எட்டும் அளவுக்குச் சத்தமாக ஒலித்தது.

பதறிவிட்டார் 107, சுற்று முற்றும் பார்த்தார்.

“ஏவ் 107, ஏறுரேரா இல்ல வண்டிய எடுக்கச் சொல்லட்டுமா,” என எஸ்.ஐ. கத்தவே, 107 அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே வண்டியில் ஏறினார்.

போலீஸ் ஜீப் கிளம்பிப் போன உடன் மக்கள் புற்றீசல்கள் போல் புல புல எனத் தெருவில் உதிர்ந்தனர். ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய்க் கூடியும், இருவர் மூவர் நால்வர் என சிறு சிறு கூட்டங்களாகக் கூடியும், அன்று நடந்த முக்கியமான நிகழ்வுகளைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.




 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top