JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 13 & 14

Uthaya

Member


13



தங்கச்சாமியின் தாய் தகப்பன் இறந்தபின் அவனுக்கு ஆறுதலாய் இருந்தவர்கள் அவ்வூரில் ஒரு சிலரே. ஊரில் அவனைத் தூற்றி, தூசித்து, எள்ளி நகையாடி, சீண்டி அவன் துயரத்தில் இனிமை கண்டவர்களே அதிகம்பேர். தண்ணிக்காரி தன் மேல் பரிவு கொண்டு, தனக்காகத் தன் மனைவியிடம் வாதாடிவிட்டுப் போனது மட்டுமில்லாமல். ஊர் மாட்டை மேய்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது அவனுக்குப் பிரமிப்பை அளித்தது. அவனால் நம்பவே முடியவில்லை. தன்னையும் ஒரு மனிதனாக மதித்து, அன்பையும் பாசத்தையும் அள்ளித் தெளிக்க இந்த உலகில் ஓர் ஜீவன் இருப்பதை நினைத்து அவன் நெஞ்சு நெகிழ்ந்தது.

தெருவில் இறங்கி நடந்து செல்லும் தண்ணிக்காரியைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தன் தாய் தந்தையரோடு வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அதிலும் குறிப்பாக, தன் திருமண நாள் அவன் மனதில் ஓடியது.

‘பத்து வருசமிருக்குமா? இல்ல கூட இருக்குமா?’ என்று தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டே, நினைவுகளில் மிதக்கலானான்.

அப்போதெல்லாம் அவன் மாடு மேய்க்கவில்லை. அன்றொரு நாள், காளை மாடு பூட்டி, கமலை கட்டி கிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்தான். அக்கிணறு அவர்கள் குடும்பச் சொத்து, அவன் அய்யா ஆத்தா அப்போது உயிரோடு இருந்தார்கள். மாலை மயங்கி இருட்ட ஆரம்பித்து விட்டது. இருட்டிலும் காளைகள் இரண்டும் முன்னும் பின்னும் நடந்து கமலையை இழுத்து வேலை செய்து கொண்டிருந்தன. மாட்டுக்கு இருட்டில் ஓரளவு கண்தெரியும் என்பது உண்மையாக இருக்க வேண்டும், என நினைத்துக்கொண்ட தங்கச்சாமி, இரவில் மாடுகளின் கண்கள் மஞ்சளாய் ஜொலிப்பதைக் பலதடவை கண்டது ஞாபகம் வந்தது.

அவை கவலை இல்லா நாட்கள். இன்னும் கொஞ்ச நேரம்தான், கமலையை அவிழ்த்துவிட்டு மாடுகளைப் பத்திக்கொண்டு வீட்டில் கட்டிவிட்டுச் சாப்பிடலாம், பின் என்ன, உறக்கம்தான், என்று மகிழ்வோடு கமலையை ஓட்டினான்.

அப்போது அங்கு வந்த அவனுடைய அய்யா, “தங்கச்சாமி, கமலைய அவித்துட்டு, சட்டுபுட்டுண்ணு குளிச்சிட்டு வீட்டுக்கு வா, உனக்கு இன்னைக்கு கலியாணம்,” என்றார்.

“என்ன அய்யா சொல்லுதிக...,” என்று ஆச்சரியமாய்ப் பார்த்தான் தங்கச்சாமி.

“ஆமா, ஒனக்கு இண்ணைக்கு கலியாணம் நிச்சையம் பண்ணியிருக்கு. ஆகையால கமலைய அவுத்துட்டு குளிச்சிட்டு வா. வீட்டில புது வேட்டி துண்டு எடுத்தாந்து வச்சிருக்கேன், சாப்பிட்டுட்டு கெட்டிக்கோ. நடுச் சாமத்தில தாலிக்கட்டு,” என்றார் அவன் அய்யா.

“அய்யோவ்... பொண்ணு... யாருண்ணே... சொல்லலையே...” என்று வெட்கத்தோடு, விட்டு விட்டுச் பேசினான் தங்கச்சாமி.

“அதெல்லாம் பத்திப் பேச இப்பம் நேரமில்ல, குளிச்சிட்டு வீட்டுக்கு வா பாத்துக்கிடலாம். நான் இப்பம் சங்கரலிங்கத்தைப் பாக்கப் போகிர அவசரத்தில் இருக்கேன்,” என்று சொன்னவர் விடு விடுவென்று நடந்து இருட்டில் மறைந்து விட்டார்.

தங்கச்சாமியின் அய்யாவுக்கு கல்யாணமாகி இருபத்தைந்து வருடமிருக்கும், வயதாகிவிட்டது. இளங்காளையின் மனம் தெரியுமா? தெரிந்தால் அவனுக்குப் பார்த்திருக்கும் பொண்ணைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் போவாரா? அப்பன் ஆத்தாவ எதிர்த்துப் பேசாத காலம் அக்காலம். அதிலும் தங்கச்சாமி அய்யாவ ஏறெடுத்துக்கூடப் பார்த்ததில்லை, ஏன் என்று கேட்டதில்லை. வா என்றால் வருவான், இரு என்றால் இருப்பான். கட்டுடா தாலியை என்றால் யோசிக்காமல் கட்டுவான். இருந்தாலும் கட்டிக்கப்போற பொண்ணு யாருண்ணு தெரிஞ்சிக்க விருப்பம் இருக்காதா?

அவர்தான் இருட்டில் நடந்து மறைந்து போய் விட்டாரே. அவருக்கென்ன வேலையோ? என்ன அவசரமோ? அன்று மதியம் வரை வீட்டில் கல்யாணப் பேச்சையே கேட்கவில்லை, அதற்குள் கல்யாணம் என்றால் எத்தனை ஏற்பாடுகள் நடந்திருக்க வேண்டும், இன்னும் எத்தனை வேலை பாக்கி கிடக்கும். காசு பணத்திற்கு என்ன செய்தாரோ. கடன் கிடன் வாங்கினாரோ என்னவோ. அதுதான் அந்த இருட்டிலும் அவ்வளவு வேகமாக நடந்தாரோ?

தங்கச்சாமி கமலையை நிறுத்திவிட்டு, காளைகளை அவிழ்க்கவும், அவன் பெரியப்பா மகன் சிங்கராசு வரவும் சரியாக இருந்தது. “தங்கச்சாமி சீக்கிரம் குளிச்சிட்டு நீ வீட்டுக்குப் போ, நான் கமலைய அவுத்திட்டு, காளைய வீட்டுக்குப் பத்திகிட்டு வாரென். ஒனக்கு கல்யாணம் நிச்சையம் பண்ணிருக்கு இன்னைக்கு,” என்றான் சிங்கராசு.

“ஏண்ண பொண்ணு யாருண்ணு தெரியுமா?” என்று கேட்டான் தங்கச்சாமி. அவன் முகத்தில் மலர்ந்த இள நகை சிங்கராசுக்கு இருட்டில் தெரியவில்லை.

“எல்லாம் சொந்தத்திலதான் தம்பி. மாயமாங்குறிச்சி அத்தைக்குச் சொந்தம். அவுக கொழுந்தன் பொண்டாட்டிக்கு அக்கா மகள்,” என்றான் சிங்கராசு.

“என்னண்ணெ பொண்ணு நல்லாருக்குமா?” என்று கேட்டான் தங்கச்சாமி.

“நான் ஒருதடவதான் பாத்திருக்கேன். கிளி மாதிரி இருப்பா. நீ குடுத்து வச்சவன்,” என்ற சிங்கராசு, “சரி தம்பி. தேரம் போவுது சீக்கிரமா குளிச்சிட்டு வா,” என்று அவசரப்படுத்தினான்.

கரண்டும் தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டாரும் வராத காலம் அது. பூமியில் நீர்மட்டம் மேலோட்டமாகக் கிடந்த காலம். ஒரு ஜோடி காளை மாட்டை வைத்து இறைத்தால் என்ன, ஏன் நாலு ஜோடி காளைகளைத்தான் வைத்து இறைத்தால்தான் என்ன, வந்து பார் என்று அசையாமல் கிடக்கும் கிணத்து நீர் மட்டம். மனிதனும் மிருகமும் எவ்வளவுதான் பாடுபட்டால் என்ன, இயற்கையை மிஞ்ச முடியுமா என்ற காலம். அன்று கிணற்றில் நீர் தரை மட்டத்திலிருந்து பத்து அடிதான் கீழே கிடந்தது. இருப்பினும் மற்றவர்களைப்போல் கிணற்றில் இறங்கி, அதன் குளிராமலும் சுடாமலும் உடம்புக்கு இதமான, அதன் வெது வெது நீரில் ஆனந்தமாய்க் குளிக்க தங்கச்சாமியால் இயலாது. அவனுக்கு நீந்தத் தெரியாது.

ஆகவே தொட்டியில் நிறைந்து கிடந்த நீரை, மதியம் சாப்பிட்டுவிட்டுக் கவிழ்த்து வைத்திருந்த, தூக்கினால் கோரிக் கோரி தலை வழியாக ஊற்றிக் குளித்தான். சோப்போ, சீகய்க்காயோ கூட இல்லை. இன்னும் சில மணி நேரத்தில் மாப்பிள்ளை ஆகப் போகிற தங்கச்சாமி வெரும் கிணற்று நீரால் மட்டும் குளித்தான். இன்று போல் அன்றில்லை. ஒரு மாப்பிள்ளைக்கு ஏற்ப தனக்கு சோப்பு, தலையை அலசிக்கொள்ள சாம்பு, வாசனைத்திரவியங்கள் ஏதுமே இல்லாதது பற்றி அவன் கவலைப்படவில்லை. அன்று அவனது பழைய வேட்டியும் பழைய துண்டும்தான் அவனது குளியலுக்கு உதவின, அவைகூட அவனுக்கு அவன் அய்யா கட்டியபின் கொடுத்ததுதான்.

இயற்கை கொடுத்த கைகளால் உடம்பைத் தேய்த்து, அழுக்கை உருட்டி உருட்டி நீர் ஊற்றி அலசினான். இன்று அவன் திருமண நாள் என நினைவு வரவே மீண்டும் ஒரு முறை தேய்த்து அழுக்கை உருட்டி தண்ணீரால் கழுவினான். இவ்வாறு மீண்டும் மீண்டும் தன் உடலை சுத்திகரித்தபின், தன் பழைய அழுக்குத் துண்டை நீரில் முக்கிப் பிழிந்து அத்துண்டால் தன்னைத் துவட்டிக்கொண்டான். ஈரத் துண்டை மீண்டும் அலசிப் பிழிந்து இடையில் கட்டிக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

வீட்டில் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும் ஒரு சில உறவினர்கள் திண்ணையில் அமர்ந்திருந்தனர். அவன் வீட்டுக்குமுன் ஒரு பந்தல் போடப்பட்டிருந்தது. பத்துப் பதினைந்து மைல் தூரத்திலிருந்து குடும்பத்தோடு மாட்டுவண்டி கட்டி, சொக்கலிங்கபுரத்திலிருந்து வந்திருந்த அவனுடைய கோமதிப் பெரியம்மா மகள் சுந்தரி அக்கா அவனைப் பார்த்ததும், “என்ன தம்பி சௌக்கியமா? புது மாப்பிள ஆய்ட்டா அக்காள அடையாளந் தெரியலையா?” எனறு தம்பியைச் செல்லமாய்க் கேலி செய்தாள்.

அப்பொழுதுதான் சுந்தரியைப் பார்த்த தங்கச்சாமி, “சௌக்கியமா அக்கா? இருட்டுல தெரியலக்கா. எப்பம் வந்திக? எல்லாரும் சௌக்கியமா? சாப்பிட்டகளா?” என்றான்.

சுந்தரி, வாய் திறந்து புன்னகையுடன், “அடிச் சக்கணாண. என்ன தம்பி புது மாப்பிள, ஒன்ன நாங்க பேணவா, நீ எங்களப் பேணவா? மருவாதையா அக்கா சொல்லுதபடி செய்யி. நான் கூட இருந்து எல்லாத்தையும் கவனிச்சிக்கிடுதேன். முதல்ல உள்ள போய்யா. போயி வேட்டிய மாத்திக்கோ. பிறவு சாப்பிட வா, என்ன, நான் ஒனக்கு பருமாருதேன், என்ன. கடசியா அக்கா கையில சாப்பிடு. ஏண்ணா நாளக்கி ஒம் பெண்டாட்டி என்ன பக்கத்தில வரவிடமாட்டா,” என்று களுக் என்று சிரித்தாள்.

தங்கச்சாமி வேறொரு பழைய வேட்டியைக் கட்டிக்கொண்டு வந்து நிற்கவும். “வா தம்பி வா, உக்காரு,” என்று சுந்தரி அக்கா அவனுக்காகத் தனி அறையில் போட்டு வைத்திருந்த பாயில் உட்கார வைத்து இலை போட்டாள். பின் கணிசமாய்ச் சோறும் பரிமாறினாள். அதன் மேல் பூசணிக்காய்ச் சாம்பாரை ஊற்றினாள், அதன் மேல் தம்பிக்கு மட்டும் என்று வைத்திருந்த நெய்யை ஊற்றினாள். அவன் பிசைந்து சாப்பிடும் அழகை ஒரு நிமிடம் ரசித்து விட்டு. ஓடிப்போய் அவரைக்காய்ப் பொரியல், பீர்க்கங்காய்க் கூட்டு, தேங்காய்த் துவையல் எல்லாம் அவன் இலையில் பரிமாறினாள். பின் எங்கோ நுழைந்து அவனுக்கென அவித்து வைத்திருந்த முட்டைகள் இரண்டையும் உரித்து அவன் இலையில் வைத்தாள்.

“தம்பி, ஒனக்கிண்ணு ஊர்ல இருந்து ரெண்டு முட்டை கொண்டாந்தேன். அதை ஒடயாம கொண்டாந்து சேக்கிரதுதான் பிரயாசமாப் போச்சு. நல்லாச் சாப்பிடணும். என்ன தம்பி,” என்றாள் சுந்தரி, அன்பாய்ச் சிரித்துக்கொண்டே.

தங்கச்சாமி அக்காவைப் பார்த்து பல்லெல்லாம் தெரிய சிரித்து, தலையசைவாலேயே நன்றி சொன்னான். பின் கவனத்தை வேறெங்கும் செலுத்தாமல், இலையின் மேல் செலுத்தி, ஒரு பருக்கை விடாமல், அவித்த முட்டை, காய், கூட்டு, துவையல் எல்லாவற்றையும் சாப்பிட்டான். சுந்தரி அவனை அத்தோடு விடவில்லை.

“சாப்பிடு தம்பி, சாப்பிடு. ரசஞ்சோறு சாப்பிடு,” என்று சோறு போட்டு, ரசம் ஊற்றி, காய் கூட்டு எல்லாம் வைத்துத் தம்பியைச் சாப்பிட்ட வைத்தாள். அதன்பின், மேலும் சாதம் போட்டு மோர் ஊற்றி, சாப்பிட்டபின்தான் விட்டாள்.

“அக்கா போட்ட சாப்பாடு யாபகம் இருக்கட்டும் என்ன?” என்று ஏதோ ஒரு பந்தையத்தில் பங்கேற்பவள்போல் பேசினாள். உண்மையிலேயே தங்கச்சாமியின் வாழ்வில் அது ஒரு முக்கியமான நாள். அந்தச்சாப்பாட்டுக்குப் பின் அவன் வாழ்க்கை எவ்வளவு மாற இருக்கிறது என்று தங்கச்சாமியும் அறியவில்லை, சுந்தரியும் நினைக்கவில்லை.

அவன் சாப்பிட்டுவிட்டு வெளியே வரவும் அவனுடைய அய்யா வீட்டு முத்தத்திற்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வாடியிருந்த அவர் முகம் மகனைக்கண்டதும் பிரகாசித்தது. அவருடைய ஒரே மகனல்லவா, அருந்தவப் புதல்வனல்லவா? அன்று அவருடைய அருமை மகனின் திருமண நாள் அல்லவா? மகனைக் கண்ட சின்னச்சாமி, அதுதான் அவர் பெயர், பூரித்துப்போனார்.

“தங்கச்சாமி இங்க வாய்யா,” என்று தன் மகனின் பெயரை வாய் நிறையச்சொல்லி அழைத்தார்,

அருகில் வந்த மகனை ஆரத்தழுவி இன்புற்றார். அவன் தோள்களைப் பற்றி அவனைத் தன் முன் நிறுத்தி ஒருமுறை அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டார். தன் வாரிசு, தன் மகன், இனி அடுத்த தலைமுறைக்கு ஏற்பாடு செய்தாயிற்று. அதற்காக எத்தனை பளுவை வேண்டுமானாலும் இழுப்பார் சின்னச்சாமி. ஏன் ஆயிரம் குண்டாலைக்கூட தூக்குவார். ‘இந்த ஐயாயிரம் எம்மாத்திரம்? இந்த கூழப்பய சங்கரலிங்கம் எம்மாத்திரம்? வெள்ளாமை நல்லா வெளைஞ்சா ஒரே வருசத்தில அடச்சுப்பிடலாம் இந்தக்கடன,’ என்று எண்ணி கவலையை ஒரு நொடியில் ஒதுக்கித்தள்ளிவிட்டு உவகை பூந்தார்.

“புது வேட்டி துண்டு வாங்கியாந்திருக்கேன். கெட்டிக்கிட்டு வந்து நில்லுய்யா,” என்று மகனுக்குக் கட்டளையிட்டார் சின்னச்சாமி.

தங்கச்சாமியின் நினைவு தெரிந்த நாள் முதல் அவனுடைய அய்யா அவனைக் கட்டித் தழுவியதில்லை. அவர் இதுவரை தங்கச்சாமியைக் கை நீட்டி அடித்ததும் இல்லை. அவர்கள் உறவு தகப்பன் மகன் உறவு, அதில் கட்டித்தழுவுதல் இல்லை, மிக மிக உன்னதமான தருணங்களைத் தவிர. அந்த உன்னதமான தருணம் வந்துவிட்டதை தங்கச்சாமி உணர்ந்தான்.

“சரிய்யா,” என்று பணிவாய்த் தன் தந்தைக்குப் பதிலுரைத்த தங்கச்சாமி, தான் சாப்பிட்ட அந்தச் சிறு அறையில் புகுந்து அங்கு தகரப் பெட்டியின் மேல் வைத்திருந்த புது வெள்ளை வேட்டியைக் எடுத்துக் கட்டிக்கொண்டு பழைய வேட்டியை அவிழ்த்தெறிந்தான். அவன் இது வரை புது வேட்டி கட்டியதாக ஞாபகம் இல்லை. ஒரு வேளை இரண்டு மூன்று வருடத்திற்கு முன் ஒரே ஒரு தடவை புது வேட்டி கட்டியிருக்க வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் அவன் அவனுடைய அய்யாவுடைய பழைய வேட்டியைத்தான் உடுத்திக்கொள்வான்.

“ஏம் பிள்ளைக்குத் தீவாளிக்கு தீவாளியாது ஒரு புது வேட்டி துண்டு வாங்கிக் குடுக்கப்பிடாது,” என்று அவன் ஆத்தாள் புலம்பினால், “அய்யா வேட்டி போதாது? என்ன ஆத்தா, நான் என்ன மாப்பிளைக்கா இருக்கப் போரேன்?” என்று பதில் சொல்வான் தங்கச்சாமி. ஆனால் இன்று அவன் உண்மையிலேயே மாப்பிள்ளைக்கு இருக்கப் போகிறான்.

மின்சாரம் வராத காலம். இரண்டு பெட்ரமாக்ஸ் லைட்டுகள் மட்டும் வீட்டிற்கு வெளியே பந்தலுக்கு அடியில் ஓரளவு வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது. குத்து விளக்குக்கும், மண்ணெண்ணை விளக்குக்கும் பழகிப்போன அம் மக்களுக்கு பெட்ரமாக்ஸ்ஸின் வெளிச்சமே மிதமிஞ்சியதாய்த் தோன்றியது. “இதென்ன, கண் கூச்சமெடுக்குத அளவுக்கு வெளிச்சம் போட்டிருக்கான் சின்னச்சாமி?” என்று குறைபட்டுக்கொண்டார், சின்னச்சாமியை விட பத்து வயது மூத்தவரும் அவருடைய பெரியப்பா மகனுமான, ராமையா.

கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடியது. அனேகமாக எல்லோரும் உள்ளூர்க்காரர்கள்தான். பக்கத்துக் கிராமங்களிலிருந்து பத்து இருபது சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள். உள்ளூர்க் கூட்டம் சுமார் ஐநூறு பேர் வந்திருப்பார்கள்.

பந்தல் போடப்பட்டு, விளக்கொளியில் பிரகாசித்த, தங்கச்சாமியின் வீட்டு முற்றத்தில் பந்தி பரிமாறப் பட்டது. மேசை நாற்காலிக்கு எல்லாம் எங்கே போவார்கள்? முற்றத்தில், மண் தரையில், பாய் விரித்து, பாய்கள் இல்லையெனில், முரப்பாய் இருந்த சேலைகளை விரித்து, அவற்றில் அமர்ந்துகொண்டு தரையில் வாழை இலை போட்டு உணவு பரிமாறினர்.

பெரிய கொப்பரைகளில் சோறு சமைத்து, பூசணிக்காய்ச் சாம்பார் வைத்து, வெண்டைக்காய்க் கூட்டும் பூசணிக்காய்க் கூட்டும் வைத்து சாப்பிட்ட விருந்தினர், விருந்து பிரமாதம் என்றனர். ஒரு சிலர் மட்டுமே ரசம் கேட்டுச் சாப்பிட்டனர். வாத்தியார், கிராமமுன்சீப், போன்ற ஊர்ப் பெரியவர்கள் யாரேனும் கேட்டால் வேண்டும் என்று ஒரு பெரிய செம்பில் யாக்கோபுபாண்டியன் வீட்டிலிருந்து மோர் வாங்கிவைத்திருந்தனர். ஆனால் யாரும் மோர் கேட்கவில்லை.

மணப்பெண்ணையும் அவள் கூட வந்த அவள் குடும்பத்துப் பெண்களையும் தங்கச்சாமியின் பெரியப்பா வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். பெண்வீட்டு ஆண்கள் மற்ற ஆண்களோடு கலந்து கொண்டார்கள். வெளியூர்க்காரர்களாக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் உறவினர்கள் மட்டுமல்ல, திருமணம், சடங்கு, இறப்பு என்று ஏதாவது ஒரு இடத்தில் கூடி அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்பவர்கள்தான். வெளியூர்ப் பெண்களுக்குத் தங்கப் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும், அவர்கள் சாப்பாட்டுக்குத் தங்கச்சாமியின் வீட்டுக்குத்தான் வந்தார்கள். மணப்பெண்ணுக்கும் அவளுக்குத் துணை இருந்த அவள் சித்தி மகள் செண்பகத்துக்கும் அதே பந்திச் சாப்பாட்டை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் பரிமாறினர்.

சாப்பாடு முடியப் பத்துப் பதினோரு மணி ஆகிவிட்டது. அதன்பின் இளவட்டங்கள் பெட்ரமாக்ஸ் விளக்கடியில் ஒரு பாயை விரித்துச் சீட்டு ஆடினார்கள். பெரியவர்கள் வெற்றிலையை மென்றுகொண்டு ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தார்கள். பெண்கள் சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்வதும், வெற்றிலை பாக்குத்தட்டை நிரப்புவதுமாக அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் கல்யாண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

தங்கச்சாமியின் அய்யா வந்தார். “ஏய் ராசா, செல்லையா ரெண்டு பேரும் வாங்க. கல்யாணத்துக்கு மேடை போடனுமுல்லோ. ஏற்பாடு செய்ங்கய்யா,” என்றார்.

ராசா, செல்லையா இரண்டுபேரும் எழுந்து முன் வந்தனர். “சீட்டு விளையாடுத இளவட்டங்களா, இங்க வந்து ஒரு கை குடுங்க,” என்று சத்தமாக அழைத்தார் செல்லையா.

சீட்டாடிக்கொண்டிருந்த இளவட்டங்கள் சீட்டை அப்படியே போட்டுவிட்டு வந்தனர். ஏற்கனவே இரவல் வாங்கிவைத்திருந்த மூன்று கனத்த பெஞ்சுகளைப் அருகருகே போட்டு மேடை அமைத்து, அதன் மேல் சமுக்காளத்தை விரித்தனர்.

மணி பன்னிரெண்டை நெருங்க பெரியவர்கள் எல்லோரும் தயாராயினர். தங்கச்சாமி புது வேட்டி துண்டோடு வந்தான். மேல் உடம்பில் சட்டை இல்லை. ஆண் மகனுக்கு எதற்குச் சட்டையெல்லாம், வேட்டியும் துண்டும் போதும் என்ற காலம். தலையில் சொட்டச் சொட்டத் தேங்காய் எண்ணையைத் தேய்த்து அதுவரை காடாய்க் கிடந்த அவன் முடியை யாரோ பின் நோக்கி வாரி விட்டிருந்தார்கள். எண்ணை கொஞ்சம் அதிகம்தான். எண்ணை நல்லதுதான் என்று எவரும் அதைப்பற்றிச் சட்டை செய்யவில்லை.

தங்கச்சாமியை மேடையின் இடது புறம் கிழக்கு நோக்கி உட்கார வைத்தனர். ஒரு பெரியவர் தங்கச்சாமியின் வேட்டி துண்டைச் சரிசெய்தார். அடுத்த சில நிமிடங்களில் பெண்ணை அழைத்து வந்தனர். மைதிலி தலையைக் கவிழ்த்து தன் கால் விரல்களைப் பார்த்தவாறே நடந்தாள். சிவப்புச் பட்டுச்சேலை உடுத்தி, சிவப்பு ரவிக்கை அணிந்திருந்தாள். காதுகளில் பெரிய தங்கக் கம்மல்கள் போட்டிருந்தாள். கழுத்தில் தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்கள் என்று ஒரு பெரிய இடத்துப் பெண் போன்று காட்சியளித்தாள். இதற்கெல்லாம் மேலாக, அவள் மேனி எழில் எல்லோரையும் அசரவைத்தது. பிரமாண்டமான சிவப்பு என்று சொல்லமுடியாது எனினும், ஓரளவுக்கு சிவப்புத்தான். மாநிறத்தைவிட எவவளவோ மேல் எனலாம். குட்டையும் அல்லாமல் நெட்டையும் அல்லாமல் அளவான உயரத்தோடு மிக்க வனப்போடு இருந்தாள். ஆண்கள் எல்லோரும் ஒரு கணம் மூச்சுவிட மறந்து நின்றனர்.

“தங்கச்சாமி குடுத்து வச்சவந்தான், பொண்ணு ரதிமாதிரி இருக்கு,” என்று வெளிப்படையாகவே பாராட்டினார் மேலத்தெரு குருசாமி.

இத்தனைக்கும் அவள் தலை கவிழ்ந்திருந்ததால் அவள் முகத்தை முழுவதுமாகப் பார்க்க இயலவில்லை. பார்த்தவர்கள் அவள் அழகைப் புகழ மறந்து நின்றனர்.

தங்கச்சாமியின் அய்யாவுக்கு மகா திருப்தி. பெரு மகிழ்ச்சியோடு, பூரித்து நின்றார். தங்கச்சாமியின் ஆத்தாள் தன் மருமகளின் மேல் வைத்த கண்ணை எடுக்கவே இல்லை.

“தாலியக் கொண்டாங்க, தாலியக் கொண்டாங்க. நேரம் ஆகுது,” என்று வாத்தியார் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சொல்ல, தங்கச்சாமியின் பெரியம்மா மகள் சுந்தரி, ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சைக்கு இடையே தங்கத்தாலிச் சங்கிலியை வைத்துக் கொண்டு வந்தாள். அவள் வரிசையாக நின்றிருந்த பெரிய மனிதர்களின் முன் தாம்பாளத்தை நீட்டினாள. அவர்கள் அத்தாலியைத் தொட்டு வணங்கி வாழ்த்தினர்.

அங்கே ஒரு புறம் புதுப் பணக்காரனான சங்கரலிங்கமும் நின்றிருந்தான். அவனும் தாலியைத் தொட்டு வாழ்த்தினான். அவன் முகத்தில் ஒரு இள நகை தவழ்ந்தது. அவனுக்குத் தெரியும், அந்தத் தங்கத்தாலி மட்டுமல்ல அன்று மணப்பெண் அணிந்திருந்த அத்தனை நகை நட்டுக்களும், ஏன் அவள் கட்டியிருந்த பட்டும், ரவிக்கையும், உள்ளாடைகளும்கூட அவன் கொடுத்த கடனில்தான் வாங்கியவை என்று. நகையும் பட்டும் தனக்கு வரவேண்டியவை, இன்றில்லாவிடில் இன்னொரு நாள் வட்டியும் முதலுமாய் வரும் எனக் கணக்குப் போட்டான் சங்கரலிங்கம். அவன் அதற்குமேல் அன்று எதிர்பார்க்கவில்லை.

பெண்ணின் தாய் சொர்ணம், “எங்க பெண்ணோட அழக அறிஞ்சு அவளப் பெண் எடுக்க ஏராளம் பேர் வாராங்க. இருபது பவுன், முப்பது பவுன் போட்டு, பெண்ணை எடுத்துக்கிடுதேன் எங்காங்க. ஆனால் நாங்கதான் சொந்தத்துக்குள்ளதான் குடுக்கணுமிண்ணு முடிவு செய்திருக்கோம். அதுக்காக நீங்க நகை போடாட்ட நாங்க குடுக்க மாட்டோம்,” என்று சொல்லிவிட்டாளாம்.

தங்கச்சாமியின் தகப்பன் சின்னச்சாமிக்கு ஒரு காரியத்தை எடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை முடித்து விடவேண்டும். அதனால்தான் கடன் பட்டாலும் பரவாயில்லை தன் மகனுக்கு மைதிலியை மணம் முடித்துவிட வேண்டும் என்று ஒரே முடிவாய் இருந்துவிட்டார். யாரும் புகுந்து எதையாவது சொல்லிக் கெடுத்து விடக்கூடாது என்பதற்காக அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. தன் மனைவியிடம் கூட, தான் கடன் பட்டிருப்பதை அவர் இன்னும் சொல்லவில்லை.

தாலி முழு வட்டம் சுற்றி வர, வாழ்த்த வேண்டியவர்கள் எல்லோரும் வாழ்த்தி அனுப்ப மேடைக்கு அருகே வந்தாள் தாலியைத் தாம்பாளத்தில் ஏந்தி வந்த சுந்தரி. ஊர்ப் பெண்களிலேயே வயதானவளும் பல குழந்தைகளைப் பெற்று நல்வாழ்வு வாழ்பவளுமான தமையந்தியம்மாள் தாலியை எடுத்துக் கொடுக்க, தங்கச்சாமி மைதிலியின் கழுத்தில் தாலியைக் கட்டினான். உண்மையில் அவனை ஒரு முடிச்சுத்தான் போட விட்டார்கள், அதற்குள் அவன் பெரியம்மா மகள் சுந்தரி வாங்கி மீதி இரண்டு முடிச்சைப் போட்டாள். குல குல என்று பெண்கள் குலவை போட, பொது மக்கள் முன் நடத்தப்பட வேண்டிய திருமணச் சடங்குகள் சுமூகமாக நடந்து முடிந்தன. அதன்பின் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் கூட்டிச் சென்று விட்டனர்.

உள்ளே சிறு விளக்குகள் இருந்தாலும் பெரும்பாலும் இருட்டடைந்த பகுதிகளே அதிகமாகக் காணப்பட்டன. அவன் உண்ட உள் அறையில் உட்கார வைத்து இரவு முழுவதும் பல சடங்குகள் நடத்தினர். இடையிடையே பாலும் பழமும் கொடுத்தனர். அன்று விடியுமுன் சடங்குகள் முடிய, வெளியே போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிடுச் சென்றான் தங்கச்சாமி.

தோட்டத்திறகுச் சென்று ஒரு மரத்தடியில் படுத்து சற்று நேரம் உறங்கிவிட்டு. அதிகாலையிலேயே கமலையைப் பூட்டி நீர் இரைத்துக்கொண்டிருந்த ஒரு கிணற்று வாய்க்காலில் உட்கார்ந்து குளித்துவிட்டு வீட்டுக்குச் சென்றான் தங்கச்சாமி.

பகல் முழுவதும் தங்கச்சாமியால் அவனுடைய புது மனைவியுடன் பேச வாய்ப்பே இல்லை. அவள் அங்கும் இங்கும் மற்றப் பெண்களுடன் வேலை செய்யும் பொழுதும், ஊர்க் கிணற்றில் நீர் இறைத்து குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வரும் பொழுதும் அவளைப் பார்த்துக்கொண்டான், அவ்வளவுதான். பேச வாய்ப்புக் கிடைத்தாலும் என்ன பேசியிருக்கப் போகின்றான். ஆனால் மூன்று வேளையும் பெண் மாப்பிளை இருவரையும் ஒன்றாக உட்கார வைத்துச் சாப்பாடு போட்டார்கள். புதுமணத் தம்பதியினர் ஒருவருடன் ஒருவர் பேசாமல் சாப்பிட்டனர்.




14

முதல் இரவு வந்தது. தங்கச்சாமி பெண் வாடை அறியாதவன். ஊரில் சில இளவட்டங்கள் பலவிதமாய் இருந்தாலும் தங்கச்சாமி அப்படிப் பட்டவன் இல்லை, கட்டுப்பாடோடு வளர்ந்தவன். முதலிரவன்று, ஆவலோடு அறைக்குள் தன் மனைவிக்காகக் காத்திருந்தவனுக்கு அவள் வந்ததும் பசி ஆறத் தெரியவில்லை. அன்றிலிருந்தே மைதிலி அவன் மேல் கோபித்துக்கொண்டாள். அவனும் ஏதோ தப்பைச் செய்துவிட்டவன் போல் நடந்துகொண்டான்.

உண்மையில் அவன் உடலில் குறையேதும் இல்லை. குறை மனதில்தான். முக்கியமாக அவனுக்குப் பயம்தான் அதிகம். அவன் அய்யா ஆத்தாதான் அவனுடைய நண்பர்கள். நெருங்கிய உறவினரில் ஒரு சிலரைத் தவிர எவரிடமும் அவன் பேசக்கூடத் தயங்குவான். அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பவன். அய்யா சொன்ன வேலையைச் செய்வதில் குறியாய் இருப்பான். அவனுக்கு அவனுடைய அய்யாவின் வாக்கு வேத வாக்கு.

அவனுக்குச் சந்தேகம் இருந்தால் அய்யாவைக் கேட்பான். அவர் இருக்கும் வரை அவனுக்குக் குறை இல்லை. யாரைக் கண்டும் பயமில்லை. அவனுடைய அய்யா ஒருவனைக் காட்டி அவன் தலையை வெட்டுடா என்றால்கூட அம் மனிதனைக் கொல்லும் முயற்சியில் இறங்கும் அளவுக்கு அவர் மேல் அவனுக்குப் பக்தி இருந்தது.

அவன் அய்யா சின்னச்சாமியும் தன் ஓரே மகனைக் கண்ணின் இமை போல் காத்து வந்தார். பள்ளி செல்லும் வயதில் தங்கச்சாமி ஒரு நாள் பாடத்தைப் படிக்காமல் வர அவனை செல்லையா வாத்தியார் கையில் கிள்ளி, “அடுத்த தடவை இதை விடப் பெரிய தண்டனை கிடைக்கும். ஒழுங்காப் படிச்சுட்டு வரணும்,” என்று சொல்லிவிட்டார். அவர் கிள்ளிய இடத்தில் லேசாக மேல் தோல் பெயர்ந்துவிட வெள்ளைக்கறி தெரிந்துவிட்டது.

அன்று பள்ளி முடிந்ததும் தங்கச்சாமி அவன் அய்யாவிடம் தன் கையில் தோல் பெயர்ந்திருப்பதைக் காட்ட. அவர் உடனே வாத்தியார் வீட்டுக்கே சென்று, “வாத்தியாரே உடனே வெளிய வாரும்,” என்று சத்தமாக இறைந்தார்.

அப்போதுதான் வீட்டிற்கு வந்து சட்டையைக் கழற்றியிருந்த செல்லையா வாத்தியார், திரும்பவும் சட்டையைப் போட்டவாறே வெளியே வந்தார்.

வாத்தியார் வெளியே வரவும் சின்னச்சாமி அவர் முன் நின்று, “ஏவ் வாத்தியாரே எதுக்குய்யா எம் பிள்ளைய அடிச்ச,” என்றார்.

சற்றுக் கோபமடைந்த செல்லையா வாத்தியார் பொறுத்துகொண்டார். “அத்தான், உங்க பிள்ளய நான் அடிக்கல. கையில கிள்ளினேன், வாஸ்தவந்தான். படிக்காம பள்ளிக்கு வந்த மாணவனைக் கண்டிக்க வேண்டியது எம் பொறுப்பு. அது ஒங்க பிள்ளையா இருந்தாலும் எம் பிள்ளயா இருந்தாலும் ஒண்ணுதான். படிக்காம பள்ளிக்கூடத்துக்குப் போனா, வாத்தியார் அடிப்பார்ண்ணு பயம் இருந்தாத்தான பிள்ள படிக்கும்,” என்றார்.

கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்ட சின்னச்சாமி, “யோவ், நீர் எனக்கு அத்தை மவன். அதனால பௌச்சிப் போரும். இனிமேல் என் பிள்ளய தொட்டீரோ...?” என்று உருமினார்.

“அப்பிடிண்ணா ஒங்க மகன் படிக்க வேண்டாமா?” என்றார் வாத்தியார்.

“எம் பிள்ள படிக்கவும் வேண்டாம். அடி படவும் வேண்டாம்,” என்றார் சின்னச்சாமி.

“சரி, ரெண்டொரு நாள் வீட்டில இருக்கட்டும். அதுக்குப் பிறகு பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க அத்தான்,” என்றார் வாத்தியார்.

“வந்தால் எம் பிள்ளைய அடிக்க மாட்டேன்ணு சத்தியம் பண்ணுவேரா?” என்றார் சின்னச்சாமி, ஏதோ வாத்தியாரை மன்னித்து விட்டவர் போல்.

சற்று யோசித்து விட்டு, நிதானமாக, “அத்தான் மருமகன் படிக்கனும்மின்னா கட்டுப்பாடு வேணும். சரி ஒங்க பையன அடிக்கல. ஆனால் அவன் படிப்பானா இல்லையாண்ணு சொல்ல முடியாது. அவனை அடிக்கல,” என்றார் தயங்கியவாறே.

“சரி, நான் வாரேன்,” என்று அங்கிருந்து அவசரமாக நடந்து சென்றார் சின்னச்சாமி.

ஒரு வாரம் கழித்தும் தங்கச்சாமி பள்ளிக்கு வராததால், செல்லையா வாத்தியார் தங்கச்சாமியின் அய்யா ஆத்தாளிடம் கேட்க அவனுடைய வீட்டுக்குச் சென்றார்.

“வாங்கண்ணே,” என்று, மரியாதைக்கு வரவேற்ற தங்கச்சாமியின் ஆத்தாள், வாத்தியார் எதற்கு வந்திருக்கிறார் என்று தெரிந்திருந்தும் வேறு ஏதும் பேசவில்லை.

தங்கச்சாமி உள் அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அப்போதுதான் தங்கச்சாமியின் அய்யா உள்ளே நுழைந்தார். “வாங்க வாத்தியாரே. நீங்க நல்ல மனுசர்தான். நாங்கூட ஒங்ககிட்ட அப்பிடிப் பேசிருக்கப்பிடாது. ஒரு வேகத்தில பேசிட்டன். தப்பா நெனைக்கப் பிடாது. என்ன இருந்தாலும் பெத்த பாசம் விடமாட்டேங்குது. ஏன் நீங்களும் நானும் அத்த பிள்ள மாமா பிள்ள. அதான் நீங்க சொன்னத என் வீட்டுகாரிட்ட ஒரு ஆயிரம் தடவ சொல்லிட்டேன். அவ சம்மதிக்க மாட்டங்காளே, என்ன செய்ய மச்சாவி(மச்சான்),” என்றார்.

நிலைமை தலைக்கு மேல் போய் விட்டதை உணர்ந்த செல்லையா வாத்தியார், தங்கச்சாமி ஓடி ஒளிந்த அறையை நோக்கி, “தங்கம், தங்கம், இங்க வாப்பா. நான் ஒன்ன அடிக்கல. வா, வா வெளிய,” என்று அன்பாய் அழைத்தார். அவன் வரவில்லை.

தங்கச்சாமியின் ஆத்தாளைப் பார்த்து, “ஒங்க பிள்ள படிக்க வேண்டாமா? இப்பிடி ஒரு தடவ தண்டிச்சதுக்கே இப்பிடிண்ணா, அவன் வாழ்க்கையில எவ்வளவு சந்திக்க வேண்டியிருக்கு? அவனுக்குண்ணு ஒரு திரேகம் வேண்டாமா, ஒரு தைரியம் வேண்டாமா? எதுக்கு எடுத்தாலும் ஆத்தா சீலைக்குள்ள ஒளிஞ்சிகிட்டா காலம் ஓடிருமா? ஒங்களுக்குப் பின்னால அவன் சொந்தக் கால்ல நிக்க வேண்டாமா?” என்று ஒரு சிறு சொற்பொழிவே ஆற்றினார்.

மீண்டும் உள் அறையை நோக்கி, “தங்கம், தங்கம், இங்க வாய்யா, வா, நான் ஒன்ன அடிக்கல, நான் ஒனக்கு மாமா, வா, வா வெளிய,” என்று அன்பாய் அழைத்தார். அவன் வரவில்லை.

தங்கச்சாமியின் ஆத்தாவுக்குப் பெத்த பாசம் பொங்கி வழிந்தது. தங்கச்சாமிக்கு இதுதான் சரியான தருணம், வாத்தியாரை விட்டு இன்று தப்பித்து விட்டால் இனி வாழ்நாள் முழுவதும் நிம்மதி என நினைத்தான். அவன் வெளியே வரவே இல்லை.

“தங்கச்சி, நீங்க சொல்லுங்க,” என்றார் வாத்தியார்.

“எம் பிள்ள படிக்கவும் வேண்டாம், அடி படவும் வேண்டாம்,” எனத் தீர்ப்புச் சொல்லிவிட்டாள் தங்கச்சாமியின் ஆத்தாள்.

“அடியாத மாடு பணியாதும்பாங்க(பணிந்துபோகாது). வாழ்கையில எல்லாத்தையும் சந்திக்க தைரியம் வேணுமில்ல. நீங்க சொல்லுங்க அவன் வருவான். பய புத்திசாலி. என்ன கொஞ்சம் சோம்பேறித்தனம். எல்லாரையும் போலதான். அதான் அடிச்சுத் திருத்தினால் நல்லாப் படிப்பான், முன்னுக்கு வருவான்ணு கிள்ளிட்டேன். இனிமேல் அடிக்கல,” என்று கெஞ்சிப் பார்த்து விட்டார்.

“நீங்க சம்பளம் வாங்க எம் பிள்ள அடி வாங்கணுமாக்கும்? எம் பிள்ள இனிமே பள்ளிக்கூடத்து வாசப்படியக் கூட மிதிக்காது,” என்று தங்கச்சாமியின் ஆத்தா கூக்குரலிட்டாள்.

வாத்தியார், தங்கச்சாமியின் அய்யாவைப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டார். தங்கச்சாமியின் அய்யாவும் என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றார்.

செல்லையா வாத்தியார் தங்கச்சாமியின் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் தங்கச்சாமியை அவர் கோவிலில் பார்த்த பொழுது அவனுக்கு மூன்று வயது ஏரி இருந்தது. வாத்தியாருக்கு எதுவும் மறக்கவில்லை என்றாலும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், “என்ன தங்கம், எப்பிடிய்யா இருக்க?” என்று கேட்டார்.

தங்கச்சாமி கேட்காததுபோல் ஓடிவிட்டான். அதையும் அவர் பொருட் படுத்தவில்லை. அவனை எங்கே பார்த்தாலும், “என்ன தங்கம், எப்பிடிய்யா இருக்க?” என்று கேட்பார். நாட்கள் செல்லச் செல்ல, தங்கச்சாமி சன்னம் சன்னமாய் புரிந்து கொண்டான். வத்தியார் மாமா தன் நல்லதற்குத்தான் சொல்கின்றார் என்று. ஆனால் அவன் மீண்டும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வயதைத் தாண்டிவிட்டான்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top