JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 17 & 18

Uthaya

Member


17

தன் அய்யா ஆத்தாவையும் தன் திருமண நாளையும் மட்டுமின்றி, தன் பெற்றோர்கள் இறந்ததையும், அடுத்தடுத்து அவர்கள் போனபின், தன் சொத்து பத்து அத்தனையும் தொலைத்துவிட்டு, தன் பெரியப்பா மகன் சிங்கராசுவின் தொழுவில், எருமை மாடுகளுக்கு அருகில் சிறு அறையில், குடியேறியதையெல்லாம் நினைத்து, சிலை போல் நின்றவனை உலுக்கி உசுப்பியது, ‘போலீஸ்’ என்ற வார்த்தை.

“போலீஸ் இன்னும் ஊருக்குள்ளதான் இருக்கு. அது போனதும் போய் மாட்டைப் பத்திக்கிட்டு வாங்க. தண்ணிக்காரி நாள் முழுவதும் மேச்சிருக்கா, பாவம்,” என்று முதல் முறையாக தண்ணிக்காரியின் மேல் கரிசனம் காட்டினாள் மைதிலி.

மைதிலி தண்ணிக்காரியின் மேல் கரிசனம் காட்டினாலும், அவள் உடல் அவ்வப்போது பதறியது. அப்போது பார்த்து, தெற்கே இருந்து போலீஸ் ஜீப் திரும்ப வந்தது. அது வருவதைக் கண்ட மைதிலியின் உடம்பு உதறல் எடுத்தது. ஒரு வேளை நேற்று மாதிரி பேச வந்து விடுவானோ அந்த ஏட்டு என அவள் நெஞ்சம் பதைபதைத்தது. ஆனால் போலீஸ் ஜீப் அவர்கள் வீட்டு முன் நிற்கவே இல்லை. விர் என்று விரைந்து சென்று விட்டது.

கொலை செய்யப் பயன் படுத்தப் பட்ட ஆயுதமான அருவாளைக் கைப்பற்றியபின், அருவாளுக்குச் சொந்தக்காரனான வெள்ளச்சாமி அகப்படாததால், அவன் மனைவி பச்சையம்மாளை போலீஸ் பிடித்துக்கொண்டு சென்றுவிட்டதாக ஊரில் பேச்சு அடிபட்டது.

மைதிலி போலீஸ் ஜீப் தன் வீட்டைக் கடந்து செல்வதைச் சன்னல் வழியாகப் பார்த்தாள். ஜீப் ஊர் எல்கையைக் கடந்து ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது. அது வரை வீட்டுக்குள்ளேயே ஒளிந்துகொண்டிருந்த ஆண்களும், பெண்களும் வீட்டைவிட்டு வெளியே வந்து கூட்டம் கூட்டமாகக் கூடிப் பேச ஆரம்பித்தனர்.

மைதிலியும் மெல்ல வீட்டை விட்டு வெளியேறி கூட்டத்தை அணுகினாள். “கேட்டயா சேதி, வெள்ளச்சாமியோட பெண்டாட்டி, பச்சயம்மாள ஜீப்புல ஏத்திக்கிட்டு போயிருச்சாம், போலீஸ்,” என்றாள் மூன்றாம் வீட்டுப் பாக்கியத்தாய்.

அதிர்ந்தாள் மைதிலி. தன்னையும் ஒருவேளை கூட்டிக்கொண்டு போக வந்தாலும் வரலாம் என்ற எண்ணமே அவள் உடலின் அண்ட ஆகாசத்திற்கெல்லாம் சென்று அவளைச் சுட்டு எரித்தது. மயக்கம் வருவதுபோல் இருந்ததால், சட்டென்று பாக்கியத்தாய் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் மைதிலி.

நினைக்கையில் மைதிலியின் கண்களில் நீர் மல்க, உலகம் இருண்டு தலைகீழாகத் தெரிந்தது. அந்தக் கோணல் மாணலான பிரதிபலிப்பிலும் தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்தாள் மைதிலி. கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்த போது தங்கச்சாமி நின்று கொண்டிருந்தான்.

மைதிலியின் முகத்தை உற்றுப்பார்த்த வண்ணம், “என்ன மைதிலி ஒரு வடியா இருக்க?” என்று அன்பாய் வினவினான்.

தான் இத்தனை செய்திருந்தும், ஊரில் கொலை விழும் அளவுக்குப் போய் விட்ட பின்பும், தன் கணவன் இன்னும் தன் மீது பரிவு காட்டியது மைதிலியைக் கூனிக் குறுக வைத்தது. சட்டென்று தாவி அவனைக் கட்டி அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கண்ணீர் சிந்தியவள், “என்ன விட்டுட்டுப் போயிராதிக...” என்று தீனக் குரலில் கெஞ்சவும் செய்தாள்.

ஊரார் பார்க்கின்றனர் என்று அறிந்தும், அவளை ஒரு குழந்தையை அணைப்பது போல் அணைத்து, “நான் எங்க போகப் போறேன்..,” என்ற தங்கச்சாமி. “சரி சரி வா, வீட்டுக்கு,” என்று மைதிலியை அணைத்தவாறே அழைத்துச் சென்றான்.

அந்தச் சிறு கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த அமலியும் லெச்சியும் ஆச்சரியமாகப் பார்த்தனர், தங்கச்சாமி மைதிலியை அணைத்துச் செல்வதை. அமலிக்கு தீப் பட்ட காயம் மோசமில்லை. அவள் இன்னும் மைதிலி கொடுத்த சேலையைத்தான் கட்டிக் கொண்டிருந்தாள். அவள் சேலை துணிமணி எல்லாம்தான் அவள் வீட்டோடு எரிந்து சாம்பல் ஆகிவிட்டதே.

அமலிக்கு, தற்போது வீடு இல்லாததால், முன்பு மைதிலியும் தங்கச்சாமியும் தங்கியிருந்த மாட்டுத் தொழுவத்தின் ஓரமாக இருந்த அறையில் தங்கி இருந்தாள். அதற்காக, தான் ஒரு காலம் தங்கச்சாமியை ஏளனம் செய்தது நினைவில் தோன்றியது. “ஊர் மாட்ட மேக்கிது சரி. அதுவும் ஒரு வேலதான.

மத்த ஆம்பள மாதிரி கெணறு வெட்ட, நெலத்த உழ, பாத்தி கட்ட முடியல, சரி. படுத்துத் தூங்கிறதுமா எரும மாட்டுத் தொழுவுல தூங்கணும், தூ..,” என்று தான் காரி உமிழ்ந்ததை தங்கச்சாமி மறந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா, என்று நினைத்துப் பார்த்தாள் அமலி. ஒரே நாளில் தன் நிலைமை எப்படித் தலைகீழாக மாறிவிட்டது என்பதை உணர்ந்தாள்.

அமலி தங்களைப் பார்ப்பதை எப்படி அறிந்தானோ, “ஏ.. அமலி, வயிறு பசிச்சா எங்க வீட்டுக்கு வா. வந்து இருக்கதை சாப்பிட்டுட்டுப் போ. பட்டினி கெடக்காத,” என்று தங்கச்சாமி சொல்லிவிட்டு வீட்டுக்குள் மைதிலியை அழைத்துச் சென்றான்.

தான் தங்கச்சாமியை பல முறை எள்ளி நகையாடி இருந்தாலும், அவன் அவ்வாறு தன்னிடம் அன்பாகச் சொல்லிவிட்டுச் சென்றதை நினைத்து, அமலி கண்ணீர் விட்டாள்.




18



மைதிலியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று சமாதானப் படுத்தி, இருக்க வைத்துவிட்டு. “நேரமாச்சு, போனமனுசன் நேரத்தில வரலயேண்ணு நெனைக்கப் போறா, தண்ணிக்காரி. நான் போயி மாட்ட பத்திக்கிட்டு வந்திருதேன்,” என்று மைதிலியிடம் சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

நேராக வடக்கு நோக்கி நடந்து கிறிஸ்தவ ஆலயத்தைக் கடந்து, பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருந்த நொண்டிப் புளியமரத்தையும், அடுத்திருந்த காளியம்மாகோவில் வளாகத்தில் உயராமாய் வளர்ந்து நின்ற வேப்பமரங்களையும் ஏறிட்டான். அவற்றின் கிளைகளில், வெள்ளைவெளேரென்ற கொக்குகள், காளியம்மாகோவிலுக்கு வடக்கே பச்சைப் பசேலென்று பறந்து கிடந்த வயல்காட்டில் தவளை, நண்டு போன்றவற்றைத் தின்றுவிட்டு, ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. ‘எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான்,’ எனத் தங்கச்சாமி மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டான். அவனுக்குத் தெரியும், கிராம்ஸ் சித்தப்பா என்று அவன் அழைக்கும், கிராமமுன்சீப், இன்னும் சற்று நேரத்தில் தன் ரெட்டைக்குழாய் துப்பாக்கியோடு வந்து அந்தக் கொக்குகளில் இரண்டைச் சுட்டு இரவுச் சாப்பாட்டுக்கு கொண்டுபோய்விடுவார் என்று.

கொக்குக்கறி கவிச்சை அடிக்குமாமே என்று நினைத்தவாறே, வடக்கு நோக்கிச் சாலையில் நடந்து குளத்தங்கரையில் நின்ற பெரிய புளியமரத்தின் அருகே வந்து கரையில் ஏறினான். குளத்தின் நடுவில் நின்ற குத்துக் கல் நீருக்கு மேல் அரை அடிகூடத் தெரியவில்லை, அப்படி இருந்தால் குளம் முக்கால்வாசி நிறைந்துள்ளது என்று, தங்கச்சாமிக்கு அவன் அய்யா சொன்னது நினைவுக்கு வந்தது. மேற்கே காக்கை கரையும் சப்தம் கேட்கவே, குளத்தங்கரை அம்மன் கோவில் அருகில் நின்ற வில்வ மரத்தை நோக்கினான், அம்மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த காக்கை ஒன்று தரையை நோக்கிப் பாய்ந்து எதையோ ஒன்றைக் கவ்விச் சென்றது.

மரத்தில் இருந்த மற்றொரு காக்கை தன் பங்குக்காக அதைத் துரத்திச் சென்றது. அவன் பார்வை மீண்டும் வில்வமரத்தின் மீது விழ, மரத்தில் காய்கள் சொரிந்து கிடப்பதைக் கண்டான். பந்துபோல் இருக்கும் அக்காயை உடைத்து, அதில் வடியும் பிசினைக் கோந்தாக காகிதங்களை ஒட்டத் தன் பள்ளி நாட்களில் உபயோகித்தது ஞாபகம் வந்தது, தங்கச்சாமிக்கு. நேரம் கிடைத்தால் கல்லை எறிந்து, ஒரு காயைப் பறித்து, பள்ளியில் படிக்கும் தன் மகன் வீரபாண்டிக்குக் கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான்.

ஒரு சில வினாடிகளில் தண்ணிக்காரி தன் மாட்டை மேக்கப் பத்திக்கொண்டு போய் இருப்பது ஞாபகம் வர குளத்தங்ககரையில் நின்றவாறே கிழக்கே பார்த்தான், தூரத்தில் ஊர்மாடு வருவது தெரிந்தது. மேகம் போல் புழுதியை எழுப்பிக்கொண்டு சிறிதும் பெரிதுமாக வெள்ளை, கருப்பு, செவலை என்று பல வண்ணங்களில் பசுக்களும், கருப்பான எருமைகளும், மெல்ல குளக்கரையின் கீழே சாலையில் நடந்து வந்தன. ஒரு சில திமிர் பிடித்த காளைகள் பசுக்களைத் துரத்தின. கன்றுகள் கரையில் ஏறி நடந்தன,

அவைகளுக்கு வீட்டுக்குப் போக விருப்பம் இல்லையோ என்னவோ. இருப்பினும் எல்லா மாடுகளும் ஊரை நோக்கி ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டு நடப்பதுபோல் சாலை வளைந்தபோது சாலையை விட்டு இறங்காமலும், சாலைக்குத் தென்புறம் பத்தே அடியில் பச்சைப் பசேலென்று சாலையோரம் வளர்த்து இருந்த நெல்பயிரை மேயாமலும், ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவைகளுக்குப் பின்னால் தண்ணிக்காரி நடந்து வந்தாள். அவள் கையில் ஒரு கம்பை ஊன்றிக்கோண்டு மெல்ல மெல்ல, புழுதி மேகத்தினூடே நடந்து வருவது, தங்கச்சாமிக்கு ஒரு தேவதையே வருவது போலத் தோன்றியது.

தங்கச்சாமி வேகமாக நடந்து சென்று தண்ணிக்காரி அருகே சென்றடைந்தான். நன்றி சொல்ல இயலவில்லை அவனால், நாக்கு தழுதழுத்தது. முகம் மலர தலையை அசைத்துச் சிரித்தான்.

தண்ணிக்காரியும் சிரித்தாள். பின் அவன் அருகே வந்து, “என்ன அய்யா, போலீசு டேசன்ல ஒண்ணும் பிரச்சனை இல்லயே?” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. மாட்ட பாத்துக்கிட்டது ரெம்ப நல்லது. நல்லா இருப்ப.” என்று சொன்னான்.

“இருக்கட்டும், அவசரத்துக்கு ஒதவி செய்யாம மனுசர் இருந்து எதுக்கு,” என்றாள். பின் ரகசியமாக, “ஊர் உறங்கின விட்டு வாங்க,” என்றாள். அவன் மெல்லத் தலை அசைத்தான்.

மாடுகள் குளத்துக் கரையில் சிமெண்டினால் கட்டப் பட்ட மடையின் அருகே வந்து விட்டன. தங்கச்சாமியைப் பார்த்து, “எத்தன மாடு இருக்கும்?” என்று கேட்டாள் தண்ணிக்காரி.

“கிட்டத்தட்ட இருநூறு இருக்கும். கணக்கில 210 எல்லா நாளும் எல்லா மாடும் வராது,” என்றான் தங்கச்சாமி.

“ஒங்களுக்கு எல்லா மாடும் தெரியுமா.”

“ஆமா. ஒவ்வொரு மாட்டையும் எனக்கு நல்லாத் தெரியும். யார் மாடு அது. பால் மாடா, பால் வத்தின மாடா. கண்ணு போட்டு எத்தன மாசம் ஆச்சு. பாய்த (முட்டுகின்ற) மாடு எது, பாயாத மாடு எதுண்ணு, எனக்கு எம் மாட்டைப் பத்தி எல்லாம் தெரியும்,” என்றான் தங்கச்சாமி.

பேசிக்கொண்டே குளத்தங்கரைப் புளியமரத்தருகே வந்துவிட்டார்கள். சாலை மேற்கு நோக்கி நேராகச் சென்றது அதிலிருந்து ஒரு கிளைச் சாலை தெற்காகப் பிரிந்து சென்று கால் மைல் தூரத்தில் ஊரைத் தொட்டு நொண்டிப் புளியமரத்தோடு முடிந்தது. மனிதர்கள் எவரும் சொல்லாமலேயே மாடுகள் தெற்கு நோக்கித் திரும்பி நடந்தன.

அதைக் கவனித்த தண்ணிக்காரி ஆச்சரியத்தோடு, தங்கச்சாமியை நோக்கி, “இந்த மாடுகளுக்குச் சாயங்காலம் ஆனால் ஊருக்குப் போனும்மிண்ணு தெரியிது. யாரும் சொல்லாமலே இந்த ரோட்டில தெக்க திரும்பண்ணும்மிண்ணும் தெரியுது. ஆமா ஊருக்குள்ள போன ஒடனெ இத்தனை மாடுகளையும் அது அது வீட்டுக்கு ஒவ்வொண்ணா பத்திவிடணுமா?” என்று கேட்டாள்.

“இல்ல இல்ல, அது அது வீட்டுக்கு அதே போயிரும். நான் ஊர் வடக்கு எல்லையில இருந்து தெக்கு எல்ல வரைக்கும் மாடுக பின்னாலயே போவேன். மாடுக அது அது வீட்டுக்குப் போயிரும்,” என்று விளக்கம் கொடுத்தான்.

மேலும் தங்கச்சாமி தொடர்ந்து, “பால் மாடு வச்சிருக்க மனுசர் தாய் மாடு வீட்டுக்குப் போன உடனே கெட்டிப் போடலண்ணா கண்ணுக்குட்டிகிட்ட போயிரும். அது பால் எல்லாத்தையும் குடிச்சிரும். அது மாட்டுக்குச் சொந்தக்காரங்க பொறுப்பு,” என்று தன் தொழிலைப் பற்றி விவரித்தான்.

தங்கச்சாமியும் தண்ணிக்காரியும் ஊருக்குள் நுழைந்து விட்டனர், மாடுகள் அவற்றின் வீடுகள் வர வர வீட்டை நோக்கி மேற்கும் கிழக்குமாகத் திரும்பிச் சென்றன. மற்ற மாடுகள் இது வரை தங்களுக்கு முன் சென்ற மாட்டைத் தொடர்ந்து வந்தாலும் அதைப் பார்த்து இடமோ வலமோ திரும்பாமல் நேராக தங்கள் வீட்டை நோக்கித் தெற்கே சென்றன.

தங்கச்சாமியும் தண்ணிக்காரியும் ஊரின் தெற்கு எல்லையை அடையு முன்பே கடைசி மாடும் அதன் வீட்டைப் பார்த்துத் திரும்பிச் சென்று விட்டது.

ஊர் மக்களும் தங்கள் மாடுகள் வந்தவுடன் மாடுகளைத் தும்பினால் அதன் அதன் இடங்களில் கட்டிப் போட்டனர். கறக்க வேண்டிய மாடுகளில் பால் கறந்தனர். இருட்ட ஆரம்பிக்க, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பால் ஊட்டினர். காட்டுக்குச் சென்றவர்கள் வீடு திரும்பியபின், எல்லோரும் உண்டனர். பின் ஒவ்வொருவராக உறங்கச் சென்றனர். சற்று நேரத்தில் ஊர் உறங்கி விடும்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top