JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 19 & 20

Uthaya

Member


19

காவல் நிலையத்தில் ஜீப் நிற்கவும், எஸ்.ஐ. இறங்கினார். “ஏட்டு, அந்த அம்மாவ உள்ள கூட்டிக்கிட்டு வாங்க,” என்று உத்தரவு இட்டுவிட்டு, அருகே நின்ற கான்ஸ்டபிள் 210 ஐப் பார்த்து, “ரெண்டு டீ வாங்கிட்டு வாங்க,” என்று சொல்லிவிட்டு, காவல் நிலையத்தினுள் நுழைந்தார்.

ஏட்டும் 107 ம் இறங்கிய பின்னும், வெள்ளச்சாமியின் மனைவி பச்சையம்மாள் இறங்காமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஏட்டு, “சீக்கிறம் இறங்கும்மா,” என்று விறைப்பாகச் சொன்னார்.

பச்சையம்மாளின் கைகள் அசைந்தன, கண்கள் அசைந்தன ஆனால் கால்கள் அசையவில்லை.

“என்னம்மா, உனக்கு வெத்தல பாக்கு வச்சு அழைச்சாத்தான் வருவயா?” என்று ஏட்டு காரமாகக் கேட்டார்.

பச்சையம்மாளின் கண்கள் மிரண்டன. ஏட்டின் சத்தத்திலிருந்த மிரட்டல் அவளுக்குப் புரியாமல் இல்லை. அவள் வெகு பிரையாசப் பட்டு உடலை ஜீப்பின் பின் நோக்கி நகர்த்தினாள். அவள் கழுத்தும் தலையும் எங்கோ கோணிப் போயின.

107, “என்னம்மா, இது போலீஸ் ஸ்டேசன், தெரியும்மில்ல. இறங்குண்ணா, என்னமோ பிரசவத்தில பிள்ள பெக்கிற மாதிரி பாவலா காட்டுற,” என்று அதட்டினார். ஏட்டு முன் தான் அப்படி அதட்டியதில் அவருக்கு ஒரு திருப்தி. ‘சே, எஸ்.ஐ. பாக்கலையே,’ என்று நினைத்துக்கொண்டார். பச்சையம்மாளின் கண்களில் கண்ணீர் கொட்டியது. உடனே ஏட்டு, “யோவ் 107 மெல்லய்யா. பாவம் பயத்தில கை கால் ஓடலையோ என்னமோ,” என்றார்.

107 க்கு தான் தப்பான ஆளைப் பார்த்து அதட்டுப் போட்டுவிட்டதில் பெருத்த ஏமாற்றம்.

ஏட்டு பச்சையம்மாளை நோக்கி, “என்னம்மா, இறங்கும்மா. என்ன பிரச்சன,” என்றார் சற்று அமைதியாக.

அதன் பின் வாயைத்திறந்து பேசினாள் பச்சையம்மாள், “எனக்கு மூட்டுவாதம் அய்யா. என்னால சட்டு புட்டுண்ணு எந்திரிக்க உக்கார முடியாது. வீட்டுல ஒங்க ஜீப்ப பாத்த பயத்தில எந்திரிச்சு வண்டியில ஏறிட்டேன். வீட்ல கட்டில் ஓரம் கயறு கெட்டி வச்சிருக்கும், அத பிடிச்சித்தான் என்னால எழுந்திருக்க மிடியும். எல்லா வேலையும் எங்க வீட்டய்யாதான் செய்வாக,” என்றாள் பச்சையம்மாள்.

“இத ஏம்மா அங்கயே சொல்லல. அங்கேயே விசாரணைய முடிச்சிருப்பார்ல்ல எஸ்.ஐ.,” என்றார் ஏட்டு, முன்தினம் பச்சையம்மாள் சொன்னதை எல்லாம் மறந்தவராக.

பின் ஏட்டு, 107 ஐ நோக்கி, “ஒரு கை குடும், நாம ரெண்டு பேரும் சேந்து இந்த அம்மாவ கைத்தாங்கலா வண்டியில இருந்து இறக்கி உள்ள கூட்டிட்டுப் போயிருவோம்,” என்றார். அவ்வாறே கான்ஸ்டபிள் 107 ம் ஏட்டும் பச்சையம்மாளைக் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று எஸ்.ஐ. யின் மேசை எதிரில் கிடந்த நாற்காலியில் அமரவைத்தனர்.

அப்போது டீயுடன் நுழைந்தார் 210. “ஒரு டீய அந்த அம்மாகிட்ட குடுங்க,” என்றார் எஸ்.ஐ. அவ்வாறே பணிந்த 210, இன்னொரு டீயை எஸ்.ஐ. முன் வைத்தார்.

“டீயக் குடிம்மா. குடிச்சிட்டு, கேக்கிற கேள்விக்குச் சட்டுண்ணு பதில் சொல்லிட்டண்ணா ஒன்ன சீக்கிரம் வீட்டில கொண்டு போய் விட்டுறச் சொல்றேன். ஒனக்குத் தெரிஞ்ச உண்மைய மறைக்காமச் சொல்லனும், சரியா? மறைச்சண்ணு தெரிஞ்சது, எனக்குப் பொல்லாத கோவம் வரும், சொல்லிட்டேன்,” என்று ஒரு சின்ன அதட்டல் போட்டு விட்டு, தன் முன்னால் வைக்கப்பட்ட டீயை எடுத்து உறிஞ்சினார். டீயை ரசித்தவாறே ‘நீயும் டீ குடிக்கலாம்’ என்பது போல் கையை அசைத்தார்.

தலையை மிக லேசாக அசைத்தாள் பச்சையம்மாள்.




20

சங்கரலிங்கம் கொல நடந்த அன்னைக்கு ஒம் புருசன் எங்க இருந்தான்? அவன் எப்பம் வீட்டுக்கு வந்தான்?” என்று கேள்வியை எஸ்.ஐ. ஆரம்பித்தார்.

அப்போதுதான் ஒரு மடக்கு டீயை உறிஞ்சிய பச்சையம்மாள் கண்களை மூடிமூடி விழித்தாள், எச்சிலை சிரமப்பட்டு விழுங்கினாள்.

“உண்மையச் சொன்னால் போயிரலாம்,” என்றார் எஸ்.ஐ., மெல்லிய குரலில்.

பச்சையம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டுச் சொட்டாய் வடிந்தது, “அந்த கெட்ட மனுசன் சகவாசம் வேண்டாமிண்ணேன் கேக்கமாட்டண்ணுட்டாரு அய்யா. இப்பிடி அடிச்சிப் போட்ட ஒடம்பாக் கெடக்கென, என்ன ஒரு நாள் வஞ்சிருப்பாரா, அடிச்சிருப்பாரா. இல்ல, என் பிள்ளைகள் மேலதான் கை நீட்டியிருப்பாரா, ஒருநாளும் கிடையாது. அவருக்கு அந்தச் சங்கரலிங்கம் கூட சுத்துறது பிடிச்சிப் போச்சு, அவ்வளவுதான். அவன் கூட சாராயம் குடிக்கிறது, ஊரு சுத்திறது, அதுக்கு அவன் சம்பளம் வேற குடுத்தான், அதான் அவன் கூடவே திரிஞ்சாரு. மத்தபடிக்கு அவரு ஒரு தப்பு தண்டாவுக்கு போகமாட்டாரு,” என்றாள்.

“சரிம்மா, அண்ணைக்கு ஒம் புருசன எப்பம் பாத்த, அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டார் எஸ்.ஐ.

“வாரன் அய்யா, வாரன். என்ன பேச விடுங்க,” என்று சொல்லி ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள்.

பச்சையம்மாள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதனால்தான் அப்படிச் சொல்கிறாள் என்று புரிந்துகொண்டார் எஸ்.ஐ. பொறுமையாய்க் காத்திருந்தார், எவ்வளவு நேரமானாலும் ஆகட்டும் என்று.

பச்சையம்மாள் தொடர்ந்தாள், “இவரு அந்த மனுசன் கூட சேராத வரைக்கும் என் உடம்பு நல்லாத்தாம் இருந்தது. அந்த மனுசங்கூடச் சேந்து எண்ணி ஆறாம் மாசம் என் இடுப்பு விளங்காமப் போச்சு. ‘அந்த மனுசன் சகவாசம் வேண்டாம். கெட்ட சனி குடியக் கெடுத்துரும்,’ மிண்ணு சொல்லி மையம்பிறந்தேன் (மன்றாடினேன்), கேக்கலயே. போகப் போக என் உடம்புல எல்லா முட்டும் விளங்கல. ஒரு பல் விளக்கணுமிண்ணாலும் ரணமா வலிக்கும். எந்த மருந்தும் கேக்கல. நோய்ண்ணா மருந்துல கேக்கும். இது கெட்ட சகவாசத்தில வந்த வினையில்லோ. எத்தனை குடும்பம் அந்த மனுசனால விளங்காம போயிருக்கும். எத்தன பொம்பள சாபம் விட்டுருப்பா? அப்பிடி வந்த துட்டச் சாப்பிட்டா இப்பிடித்தான ஆகும். சரி நாந்தான் பாழாப்போனேன் என் பிள்ளைக்கும் ஏதும் வந்திரக்கூடாதுண்ணு எனக்கு ஒரே பயம். அந்த கெட்ட வழியில வந்த சோத்தை சாப்பிட்ட உடம்பு கெட்டுத்தான் போகும். அதான் அந்தத் தொழில அறவே விட்டுறச் சொல்லி இவரு கால்ல விழுந்தேன். வேல செய்ய மிடியாட்ட வீட்டுல இருங்க, இருக்கிற சொத்த கட்டுக்குத்தகைக்கு விட்டுட்டு அதுல இருந்து வார வருமானத்த வச்சி அரை வயித்தக் கழுவினாலும் போதுமிண்ணேன். கேக்கல...,” என்று அங்கலாய்த்த பச்சையம்மாள், ஆறிக்கொண்டிருந்த டீயை வாயை எடுக்காமல் மடமடவென்று குடித்துவிட்டுத் தொடர்ந்தாள்.

“இப்பம் எங்க போயி விட்டுருச்சு, எனக்கு வந்தது போதாதுண்ணு அவருக்கு கொலப் பழி வேற. இது வேணுமா?” என்ற பச்சையம்மாள், நிறுத்தி ஒரு மாபெரும் மூச்சை இழுத்து விட்டாள்.

தொண்டையைப் பலமாகக் கனைத்தார் ஏட்டு. அவரைப் பார்த்து, அமைதி, பொறுமை என்பதுபோல் சைகை செய்தார் எஸ்.ஐ.

பச்சையம்மாள் தொடர்ந்தாள், “சரி குடும்பத்துக்கு வந்தது இத்தோட போவட்டுமிண்ணு முடிவு எடுத்துட்டேன். அவரு செய்தது அவரோட நிக்கட்டும். எம் பிள்ளக என்ன செஞ்சது. நான் எதயும் மறைக்காம சொல்லிப்புடுதேன். நீங்க என்ன செய்யணுமோ செய்ங்க அய்யா,” என்று சொல்லி நிறுத்தினாள்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட எஸ்.ஐ. அவ்வப்போது குறிப்பும் எடுத்துக்கொண்டார்.

பச்சையம்மாள் மீண்டும் தொடர்ந்தாள், “அன்னைக்கு ராத்திரி ஊர் அமளிதுமளியா இருக்க, அவசர அவசரமா எம் புருசன் வீட்டுக்கு ஓடியாந்தாரு. ஒடம்பெல்லாம் ஒரே ரத்தம். முன்புறம் வெள்ளச் சட்ட வேட்டி எல்லாம் ஒரே செவப்பு. முகம் கையெல்லாம் ஒரே ரத்தம்,” என்றாள்.

எஸ்.ஐ. இடைமறித்து, “கையில ஏதும் இருந்ததா?” என்றார்.

“இல்ல.”

“கையில அருவாள் வச்சிருந்தாரா?” என்று எஸ்.ஐ. மீண்டும் கேட்டார்.

பச்சையம்மாள் அன்று பார்த்ததை விவரிக்கத் தொடங்கினாள், “இல்ல. ரெண்டு கையையும் சேத்து கும்பிட்டுகிட்டே பேசினாரு.

“சங்கரலிங்கத்த எவனோ வெட்டிக் கொல பண்ணிட்டான். சத்தியமா நான் இல்ல. ஆனா எம்மேலதான் பழி விழும். எம் பிள்ள மேல சத்தியமா நானில்ல” ண்ணு சொல்லி அழுதாரு.

நான் பதறிப் போனேன். என்ன நடந்திச்சு ஏன் இப்பிடி வந்து நிக்கேகண்ணு கேட்டேன். அதுக்கு எம் புருசன் சொன்னதச் சொல்லுதேன்: “கெட்ட தொழில்ல ஈடுபடாதேண்ணு நீ தெய்வம்போல சொன்ன, நான் கேக்கல. சங்கரலிங்கம் அந்த விரால்ராசு பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வரச் சொன்னான்னு, போனேன். அவ முன் வாசல்லயே என்ன வஞ்சு வெரட்டிட்டா. அவ வீட்டு காம்பவுண்டு தொழுவவிட்டு வெளிய வரதுக்குள்ள எவனோ எம் மண்டையில ஓங்கி அடுச்சுப் போட்டுட்டுப் போய்ட்டான். ரெண்டு நிமிசம் மயங்கி விழுந்து கிடந்தேன். எந்திரிச்சு பாத்தா எங்கையில இருந்த அருவாளக் காணோம். நெஞ்சுல பயம் கவ்விருச்சு. சங்கரலிங்கம் இருந்த ரூமுக்கு ஓடுனேன். தொழுவுக்குள்ள இருந்த ரூமுக்கு வெளிய எவனோ ஒருத்தன் இன்னொருத்தன ஓங்கி வெட்டுனான். ஒரே வெட்டுல தல துண்டாப் போய் விழுந்திருச்சு. என்னைய அறியாமலெ ‘அய்யோ’ ண்ணு சத்தம் போட்டுட்டேன். ஏம் பக்கம் திரும்பி அருவாள ஓங்கிட்டே வந்தான். இருட்டு, முகம் தெரியல. ஒரு மனுசன் நம்மள கொல்ல வாரான்னு மட்டும்தான் புரிஞ்சது. உயிருக்குப் பயந்து சங்கரலிங்கம் இருந்த அதே ரூமுகுள்ள ஓடி ஒளிஞ்சுக்கிட்டேன். வெளிய நின்னவன் யாருன்னு தெரியல. ரூமுகுள்ள ஒரே இருட்டுக் கசம். அவன் உள்ள வரல. ஆனா ஒரு நிமிசம் கூட இருக்காது, கூரை தீ பிடிச்சுக்கிடுச்சு. சரி உள்ள இருந்தா வெந்து சாக வேண்டியதுதான்னு, ஒரே ஓட்டமா ஓடி தப்பிச்சிரலாமுண்ணு நினைச்சு வெளிய ஓடியாந்தேன். கூரையில தீ எரிய ஆரம்பிச்சிருந்தாலும் கீழ கிடக்கிறது தெரியல. ஓடுன வேகத்தில கீழ கிடந்த ஏதோ ஒண்ணு தட்டி விழுந்திட்டேன். தொட்டுப் பாத்தா நான் தலையில்லா முண்டத்து மேல கெடந்தேன். பயந்து அடிச்சு எழுந்து ஓடியாந்தேன்ன்னு” சொன்னாரு என்று சொல்லி நிறுத்தினாள் பச்சையம்மாள்.

“அப்புறம் என்ன செய்தார்,” என்றார் எஸ்.ஐ.

பச்சையம்மாள் தொடர்ந்தாள், “அவருக்கு உடலு ஆடிச்சு, ‘அவன் வெட்டுன அருவாள் நிச்சயம் என்னோட அருவாதான். நான் வேற இப்பிடி ரத்தக்கறையா நிக்கனா, போலீஸ் என்னத்தான் உள்ள தள்ளப்போவுதுன்னு’ சொல்லி, கண்ணீர்விட்டுக் கூப்பாடு போட்டு அழுதாரு. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. ஆனா அந்த வேகத்துல என் வலி மறந்து போச்சு. டக்குன்னு எழுந்து, பின்பக்கம் தண்ணி தூக்கி வச்சு, ‘எல்லாத்தயும் அவுத்து போட்டுட்டு மொதல்ல ஒங்க உடம்ப அலசுங்க. நான் வீட்ட துடைக்கம்ணு’ சொல்லி ரத்தத்தை தொடைச்சேன். அவரு குளிச்சிட்டு வேற வேட்டி சட்ட போட்டுக்கிட்டாரு,” என்று சொல்லி, பெருமூச்சு விட்டாள்.

எஸ்.ஐ. குறிப்பு எடுத்துக்கொண்டார்.

சற்று மூச்சை இழுத்து விட்டு விட்டுத் தொடர்ந்தாள் பச்சையம்மாள், “அடுத்து என்ன செய்யண்ணு எனக்கு தெரியல, அவருக்கும் தெரியல. ஆனால் அதுக்குள்ள தீ பரவி பல வீடுகள் எரியுதுன்னு மட்டும் தெரிஞ்சது. ‘ஒரு கொல பத்தாதுன்னு இப்பம் தீ வேற. போலீஸ் நிச்சயம் என்னத்தான் தேடி வரும். நான் மொதல்ல ஊர விட்டு வெளியேறனும்ன்னு’ சொன்னார். நான் வீட்டுச் செலவுக்கு வச்சிருந்த இருபது ரூபாய எடுத்துக் குடுத்தேன். வாங்கிக்கிட்டு ஓட்டமும் நடையுமா வெளியேறுனவருதான். எங்க இருக்காரு, சாப்பிட்டாரா, தூங்குனாரான்னு இது நாளுக்கும் தெரியாது,” என்று சொல்லி நிறுத்தினாள்.

“அந்த ரத்தக் கறை படிஞ்ச வேட்டி சட்டய என்ன செய்த,” என்று எஸ்.ஐ. கேட்டார்.

“ஒரு காலிப்பானைக்குள்ள போட்டு மூடிவச்சேன். அதைப்பத்தி யோசிக்க எனக்கு எங்க நேரம்,” என்றாள் பச்சையம்மாள்.

குறித்துக்கொண்ட எஸ்.ஐ., “சரி ஒம் புருசன் சங்கரலிங்கத்திட்ட இருந்து இதுவரைக்கும் எவ்வளவு ரூபாய் கடன் வாங்கியிருக்காரு,” என்றார்.

“எனக்கு ஒடம்பு சுகமில்லாமப்போய் இப்பம் நாலு வருசம் இருக்கும். என்னால வேல ஏதும் செய்ய முடியாது. பக்கத்து வீடு, சொந்தம் பந்தம் ஒதவி செய்யும்மின்னாலும், முக்கியமா எம்புருசந்தான் எல்லாம் செய்வாரு. எப்பிடியோ சடபுடன்னு வேலய முடிச்சிட்டு சங்கரலிங்கம்கூட போயிருவாரு. வாரா வாரம் வைத்தியருட்ட கூட்டிட்டுப் போவாரு. அந்தச் செலவுக்கு வேற வழியில்லாம சங்கரலிங்கதிட்ட கடன் வாங்கினாரு,” என்றாள் பச்சை.

குறிப்பெடுத்துக்கொண்டே, “எவ்வளவு கடன் வாங்கியிருப்பார்,” என்றார்.

“இது வரைக்கும் வாங்கினது, வட்டியும் முதலும் சேத்து, அஞ்சாயிரம் இருக்குமுன்னு நெனைக்கேன்,” என்றாள் பச்சையம்மாள்.

“சரி சங்கரலிங்கம் உம் புருசங்கிட்ட குடுத்த காச எப்பவாது திருப்பிக் கேட்டானா?” என்றார் எஸ்.ஐ.

“ஒரு தடவ எம் புருசன் எங்கிட்ட சொன்னார், ‘இப்பம்போயி எங்கிட்ட துட்டுக் கேக்கானே நான் என்ன செய்வேன்னார். நான் சொன்னேன் நிலத்த எழுதி குடுத்திருங்க. இல்லாட்ட வித்து துட்ட திருப்பி குடுத்துருங்க அவன் சங்காத்தம் வேண்டாம்ன்னு சொன்னேன்.”

எம் புருசன், ‘சரி நான் நிலத்தக் குடுத்துட்டேன்னா அவன் வேலைய விட்டு போகச்சொல்லிட்டான்னா. நாம என்ன செய்யன்னு’ கேட்டாரு.

“ஆக நிலத்த எழுதியும் குடுக்கல, வித்து காசையும் தரல. சரி வாங்கின கடனுக்குப் பத்திரம் ஏதாவது எழுதிக் குடுத்தாரா ஒம் புருசன்,” என்றார் எஸ்.ஐ. தொடர்ந்து குறிப்பு எடுத்துக்கொண்டே.

“இல்லய்யா. இந்தக் கடன் நூறும் இருநூறுமா வருசக்கணக்கா வாங்கினது. ஆகையினால ஒண்ணும் எழுதிக்குடுக்கல,” என்றாள் பச்சையம்மாள்.

“சங்கரலிங்கம் கடைசியா கடன திருப்பிக் கேட்டு எவ்வளவு நாள் இருக்கும்.” என்றார் எஸ்.ஐ.

“ஒரு மாசம் இருக்கும்.”

குறித்துக்கொண்ட எஸ்.ஐ., “சரி இப்பம் ஒம் புருசன் எங்க இருப்பாரு?” என்றார்.

“அவரு ஏங்கிட்ட சொல்லிட்டுப் போகல. ஆனா அவரு எங்க போவாருன்னு எனக்குத்தெரியும். ஒன்னு வீரசிகாமணியில அவரோட பெரியம்மா மகன் இருக்கு, அங்க போயிருக்கணும். இல்லாட்டா இலஞ்சிப் பக்கத்தில கீழப்பாறையில அவரோட சித்தப்பா வீடு இருக்கு, அங்க போயிருக்கணும். இதை ரெண்டையும் விட்டா வேற இடமில்ல. தெக்கூரு சுண்டங்குறிச்சியில அவுக மாமா வீடு இருக்கு, அங்க போயிருந்தா இதுக்குள்ள எனக்குத் தகவல் தெரிஞ்சிருக்கும்,” என்றாள் பச்சையம்மாள்.

மேலும் ஏதோ ஒரு உந்துதலுக்கு ஆளாகப்பட்டவள் போல் எஸ்.ஐ. கேட்காமலேயே, “ஓடி ஓழிஞ்சாச் சரியாயிருமா? மொதல்லயே கெட்ட பழக்கத்தை விட்டுருக்கணும்,” என்றாள் பச்சையம்மாள். பச்சையம்மாளைப் பொறுத்தவரை இந்தச் சனியன் தன் குழந்தைகளுக்கு ஒட்டிக்கொள்ளக் கூடாது என்ற ஆதங்கம்தான். அதற்காகத் தான் எதையும் செய்யவும் தயார் என்பது போல் பேசினாள்.

“சரி போதும்மா. ஒரு வேளை தேவப்பட்டா ஒங்க வீட்டுக்கே வாரம். ஒண்ணும் கவலப் படவேண்டாம்.” என்ற எஸ்.ஐ., ஏட்டையும் 107 ஐயும் பார்து, “இந்த அம்மாவ ஜீப்பில கொண்டு போய் விட்டுட்டு வந்திருவோம்,” என்றார்.

“சரி சார்,” என்று இரண்டு பேறும் ஒன்றாகக் கூவியவாறே எழுந்தனர். பச்சையம்மாவைக் கைத்தாங்கலாக ஜீப்புக்கு அழைத்துச் சென்றனர்.

ஜீப் ஊருக்குள் நுழையும் போது இருட்டிவிட்டது. மக்கள் கவலையோடு பார்த்தனர். செய்தி மைதிலியின் காதுகளுக்கும் எட்டியது. அவள் பதற ஆரம்பித்தாள். ஆனால், எஸ்.ஐ. யாருக்கும் பிரச்சினை கொடுக்கவில்லை. பச்சையம்மாளை இறக்கிவிட்டுவிட்டு, மறக்காமல் அந்த பானையினுள் பச்சையம்மாள் வைத்திருந்த ரத்தக்கறை படிந்த வெள்ளச்சாமியின் வேட்டி சட்டையைக் கைப் பற்றிக்கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top