JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 21 & 22

Uthaya

Member


21

போலீஸ் ஜீப் இருட்டைக் கிழித்துக்கொண்டு பறந்தது. அவர்கள் போன வேகம் ஏனோ அவர்கள் முக்கிய வேலையாய்த்தான் பறக்கிறார்கள் என்பதைப் பறைசாற்றியது.

போலீஸ் ஜீப் சென்று சில மணி நேரங்களில் ஊர் உண்டு உறங்கிற்று. தங்கச்சாமியும் சாப்பிட்டுவிட்டு உறங்கினான். இல்லை அவன் மனைவி மைதிலி உறங்கும் வரை பாசாங்கு செய்தான் என்று சொல்வதுதான் சரி. ஆனால் மைதிலி உறங்குவதாய் இல்லை. பாவம் அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அவள் உறங்கும் சத்தம் எப்படி இருக்கும் என்பது தங்கச்சாமிக்குத் தெரியும். அவனுக்கு இரவின் சப்தங்கள் பழக்கமானவை, அன்றும் அவை கேட்டுக்கொண்டே இருந்தன.

ஒரு நாய் ஏனோ ஊளையிட்டது. பின்னர் ஊர் நாய்கள் அனைத்தும் மாறி, மாறி ஊளையிட்டன. ஏதோ ஓர் உயிர் பிரியப் போகின்றதோ எனப் பயந்தான் தங்கச்சாமி. அன்று நடந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஊர் உறங்க ஆரம்பித்தது. ஒரு குழந்தை எங்கோ அழுதது. சற்று நேரம் கழித்து ஓர் ஆந்தை கிரீச்சிட்டது. அவ்வப்போது ஆண் பூனைகள் பெண் பூனைக்காகச் சண்டை போட்டுக் கூக்குரல் எழுப்பின. விரைவில் விடியலை அறிவிக்கும் சேவல் கூவிவிடும் என எண்ணினான் தங்கச்சாமி. எனினும் பொறுமையாய்க் காத்திருந்தான்.

மைதிலியின் மூச்சு சீராகக் கேட்க ஆரம்பித்தவுடன் மெல்ல எழுந்து வேட்டியை உயரத்தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டு தயாராக வைத்திருந்த கருப்புச் சட்டையை மாட்டிக்கொண்டான். நீளமான அதன் அடிப்பாகங்கள் வேட்டியை மறைக்குமாறு கீழே இழுத்துக்கொண்டான். பின் சப்தமின்றி வீட்டைவிட்டு வெளியேறினான்.

பின் வாசல் கதவுவழியாக எப்படி அவன் மனைவி மைதிலி சங்கரலிங்கத்தை தேடிச் செல்வாளோ, அதேபோல் பின் வாசல்வழி வெளியேறினான். பின் அவசரமாய் ஏதோ தோட்ட வேலைக்குச் செல்பவன் போல் நடந்து, தண்ணிக்காரியின் வீட்டுக்கு வந்ததும் சுற்று முற்றும் பார்த்தான். எவரும் அருகில் இல்லை என்று உறுதி செய்து கொண்டான். தண்ணிக்காரியே அவனை வீட்டுக்கு வருமாறு அழைத்ததால் வீட்டினுள் எவரும் இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் தங்கச்சாமி கதவைத் தட்டினான்.

உடனே கதவு திறந்து அவனை உள்ளே இழுத்துக்கொண்டது. கதவை உட்புறம் தாழிட்டபின் அவள் அவனை அந்த மங்கிய வெளிச்சத்தில் ஆசையோடு பார்த்தாள். அவன் கையைப்பிடித்து உள் அறைக்கு இழுத்துச் சென்றாள்.

“அடிச்சாங்களா,” என்றாள் கொஞ்சலாக.

“இல்லை.”

“நெசமா?”

“நெசமா.”

“ம்ம்ம்ம்.. ங்ங்ங்ங்ங். ஓவ் வாசன பிடிச்சிருக்கிய்யா,” என்று அவனை அணைத்து மோந்தாள். அவனும் அவளைத் தழுவிக்கொண்டான். பின் அவன் மார்பில் முத்தமிட்டாள். அவன் அவள் கழுத்தில் முத்தமாரி பொழிந்தான். அவள் அவன் மார்பிலிருந்து மேல் எழும்பி அவனின் காய்ந்த உதடுகளுக்கு தன் இதழ்களால் மருந்திட்டாள்.

தங்கச்சாமி ஞாபகம் வந்தவனாக, “ஏதோ முக்கியமா விசயம் சொல்லணும்மிண்ணு சொன்னயே, அது இதுதானா?” என்றான்.

தண்ணிக்காரி தன் செய்கையை நிறுத்திவிட்டுச் சிரித்தாள். “வரச்சொன்ன காரியத்தை மறந்திட்டு தொழில்ல எறங்கிட்டோமில்லோ. ரொம்ம நாள் கழிச்சு என்ன ஒரு மனுசியாப் பாக்கிர மனுசன் நீங்கதான். உங்க மேல எனக்கு ஒருவித அன்பு வந்தது தப்பா. ஆம்பளைக்குத்தான் ஆசை இருக்குமா? பொம்பளைக்கு ஆசை இருக்காதா? சரி சரி, மொதல்ல காரியம், பின்ன சல்லாபம். சரியா?” என்றாள்.

தங்கச்சாமிக்கு சல்லாபம் என்றால் என்னவென்று புரியவில்லையானாலும் யூகித்துக்கொண்டான். அவனுக்கும் அவளைப் பிடித்திருந்தது. அவன் அய்யா ஆத்தா இறந்தபின் அவனிடம் பரிவுகாட்டிய ஒரு சிலரில் தண்ணிக்காரியும் ஒருத்தி. மைதிலிதான் அவனை ஒதுக்கித் தள்ளி வைத்துவிட்டாளே. அவனும் மனிதன்தானே. ஆசைகள் பிறப்பது இயற்கைதானே. தங்கச்சாமி சிரித்துக்கொண்டே, “சரி முதல்ல எதுக்குக் கூப்பிட்டண்ணு சொல், பிறகு...,” என்றான்.

தண்ணிக்காரி உள் அறைக்குச் சென்று ஒரு துண்டை எடுத்து வந்தாள். அத் துண்டை தங்கச்சாமியிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள். அவன் இது என்ன என்பதுபோல் விழித்தான். தண்ணிக்காரி அந்தத் துண்டை விரித்து அதன் ஒரு முக்கில் இருந்த எழுத்தை தங்கச்சாமிக்குக் காண்பித்தாள். தங்கச்சாமிக்கு அவள் ஏன் அதைத் தன்னிடம் காட்டுகிறாள் எனப் புரியவில்லை. தண்ணிக்காரி அவன் காதருகில் வந்து கிசுகிசுத்தாள்.

ஆச்சர்யம் தாங்காமல், “அப்படியா?” என்றான் தங்கச்சாமி.

தண்ணிக்காரி தலை அசைத்து, “யாருக்கும் சொல்ல வேண்டாம். நம்ம ரெண்டுபேருக்குள்ள இருக்கட்டும். ஒங்களுக்கு பிரச்சனை வந்துச்சுண்ணா மட்டும் சரியான சமையத்தில சொல்லிக்கிடலாம்,” என்றாள்.

தங்கச்சாமி, “இது சரியா?” என்றான்.

தண்ணிக்காரி, “போகப் போகப் பாப்போம். நீங்க ஒண்ணும் கவலப் படவேண்டாம். நாமளா இந்த உலகத்தில காரியங்களை நடத்திறோம்? கிருஷ்ணன் கீதையில சொன்ன மாதிரி, அவந்தான் நடத்துகிறான். நாம வெறும் காய்கள். காய உருட்டுறவன் மேல இருக்கான்,” என்றாள்.

தங்கச்சாமி, “நீ சொல்லறது சரிதான்,” என்றான்.

தண்ணிக்காரி, “நான் ஒங்கள எதுக்குக் கூப்பிட்டேன்னா நீங்க ஒண்ணும் கவலைப் படாதேக. என்ன பிரச்சனையிண்ணாலும் எங்கிட்ட வாங்க,” என்றாள்.

“சரி,” என்ற தங்கச்சாமி கிளம்ப எழுந்தான்.

தண்ணிக்காரி, “சரி பேசி முடிச்சிட்டோம். அதுக்காக ஒடனே கிளம்பணும்மிண்ணா இருக்கு? இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க,” என்றாள்.

தங்கச்சாமி சிரித்துக்கொண்டே, “இப்பந்தான சாப்பிட்டேன்,” என்றான்.

தண்ணிக்காரி, “சரி கொஞ்சம் கழிச்சுச் சாப்பிடுங்க. ஒங்களுக்காக கருவாட்டுக் கொழம்பு செய்திருக்கேன். அதுவரைக்கும் பேசிக்கிட்டு இருப்போம்,” என்றாள்.

தங்கச்சாமிக்கு கூச்சம் ஏற்படவே, தலையைக் குனிந்துகொண்டே சரி என்பதுபோல் தலையை அசைத்தான். தண்ணிக்காரி உள்ளே சென்று வெளிநாட்டுச் சரக்கைக் கொண்டுவந்து கொடுத்தாள். முன் அனுபவம் பெற்றவனாகையால் முறுக்கைக் கடித்துக் கொண்டு குடித்தான்.

சிறிதுநேரம் கழித்து போதை ஏறியபின் சிரித்தான். அவளுக்குப் புரிந்தது. அவர்கள்தான் காதலர்களாயிற்றே. காதலர்கள் காதல் விளையாட்டுக்களில் ஈடுபடாமலா இருப்பார்கள். சற்று நேரத்தில் இருவரும் அருகருகே உறங்கிப் போனார்கள்.

திடீர் என் விழித்தெழுந்த தண்ணிக்காரி அவனை எழுப்பி, அவனுக்காக ஆக்கி வைத்திருந்த கருவாட்டுக் குழம்பையும் சோறையும் பரிமாறினாள். அகோரப் பசியில் இருந்தவன்போல் அள்ளி அள்ளி உண்டான். அவளும் மேலும் மேலும் தட்டில் சோற்றை இட்டுக் குழம்பையும் ஊற்றினாள். வயிறார உண்டு தண்ணீர் குடித்து ஏப்பம் விட்டான்.

“முதச் சேவல் கூப்பிட்டுவிடப் போவுது சீக்கிரம் போய்ட்டு வாங்க,” என்று அவனை வழியனுப்பி வைத்தாள்.

பூனை போல் பதுங்கி வீட்டுக்குள் நுழைந்தவனை, “எங்க இவ்வளவு நேரம் காணும்,” என்று வரவேற்றாள் மைதிலி,

அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக்கொண்டு, “வெளிய போயிருந்தேன்,” என்றான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் அன்பு திரண்டு வந்ததுபோல் ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டாள் மைதிலி.

தங்கச்சாமியோ, ‘இது என்னடா எப்பவும் இல்லாம,’ என்று நினைத்து நின்றான். அவனை இறுகத்தழுவி அவன் இதழில் முத்தமிட்டாள் மைதிலி. அவன் வாயிலிருந்து வந்த கருவாட்டுக்குழம்பின் வாசனை அவளின் மூக்கைத்துளைத்தது. தான் அன்று கருவாடு சமைக்கவில்லையே என நினைத்தவளுக்கு, தன் கணவனும் தன்னைப்போல் வெளியேறி எங்கோ ராச்சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வருகிறான் என்பது புரிந்தது.

மைதிலி அவனை அணைத்த கைகளை விடுவித்து, தன் குழந்தைகளுக்கு இடையே படுத்துக்கொண்டாள். அவளுக்கு உறக்கம் விடைபெற்றுப் பறந்து போய்விட்டது. விடியும் வரை தன் சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக்கோண்டே இருந்தாள். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் தான் செய்ததை விட அவன் செய்தது ஒன்றும் பெரிய தப்பில்லையே என தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள். அழுது அழுது அவள் கண்கள் வீங்கி, இரவின் சப்தங்களைக்கூட கேட்காமல் துவண்டு, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். மைதிலிக்கு தான் தன் கணவனை உதாசீனப் படுத்தியதோடல்லாமல், நாலு பேர்முன் அவனை ஒரு ஆம்பிளை இல்லை என்பதுபோல் நடத்தியதும், மேலும் படிப்படியாக தான் அந்தச் சங்கரலிங்கத்தின் வலையில் விழுந்து கணவனுக்குப் பெரும் துரோகம் செய்ததும், அவள் முன் படமாக ஓடின. இனி அவள் எப்படி உறங்குவாள்? பாவம்!




22



தங்கச்சாமி வீட்டைவிட்டு வெளியேறி ராச்சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வீடுதிரும்பி நீண்ட நித்திரையில் ஆழ்ந்துவிட்டான். ஆனால் மைதிலிக்கு தானும் தன் கணவனும் எவ்வாறு இந்நிலைக்கு வந்தோம் என எண்ணி எண்ணி உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். அவள் கண்முன் சில வருடங்களுக்கு முன் நடந்தவை சினிமாப் படம் போல் ஓடின. அவளுடைய மாமனார் இறந்தபின், சங்கரலிங்கம் அவள் குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிட்டான், பத்திரங்களைக்காட்டி. அதைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளுடைய மாமியாரும் தலையைச் சாய்த்துவிட்டாள்.

இனி எங்கு குடி இருப்பது என்று தவிக்கையில் தங்கச்சாமியின் பெரியப்பா மகன் அவர்கள் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் ஓர் அறை இருக்கிறது, அதன் வெளியே சிறு சமையல் அறையும் இருக்கிறது, ஏன் பக்கத்தில் பெண்கள் குளிக்க ஒரு பனை ஓலைத்தடுப்புக்கூட இருக்கிறது. அவசரத்திற்கு வேண்டுமென்றால் உபயோகித்துக்கொள்ளலாம் என்று சொன்னார். வேறு எந்த வழியும் இல்லாமல் இருந்தவர்கள் அந்த உதவியை ஏற்றுக்கொண்டார்கள்.

அவ்வாறு இழிநிலையில் மாட்டுத்தொழுவத்தில் குடும்பம் நடத்துகையிலும் கூட அவள் தன் தங்கத் தாலியையும் ஜிமிக்கி, வளையல் போன்ற நகைகளையும் அணிந்து கொண்டுதான் இருந்தாள். அவைகளைக் கழற்றிக் கொடுத்தால் வீட்டைமட்டும் தருவதாகச் சங்கரலிங்கம் சொன்னான். ஏன் செல்லையா வாத்தியார் கூடச் சொல்லிப் பார்த்தார், பயனில்லை.

அன்று அவள் தங்கச்சாமியைப் பார்த்து சுடு சொற்களால் பொசுக்கியது நினைவுக்கு வந்தது, “ஒம்ம நம்பி கழுத்த நீட்டினதுக்குப் பதிலா ஒரு எருமைக்கெடாவுக்கு வாக்கப்பட்டு இருக்கலாம். கூடரெண்டு கண்ணுக்குட்டியாவது ஈணியிருக்கலாம். ஒனக்குச் சொத்தும் இல்ல, படிப்பும் இல்ல, வேலையுமில்ல. ஏன் குடியிருக்க வீடுகூட இல்ல. நீயெல்லாம் ஒரு ஆம்பிளயா? ஒங்கூட குடுத்தனம் பண்ணி என்ன லாவம்? இதுக்கும் மேல் ஏங்கிட்ட இருக்க ஒண்ணு ரெண்டு நகையையும் பறிக்கப் பாக்கையாக்கும்? நான் தர மாட்டேன். இதுக்கு மேல ஏதும் சொன்னையிண்ணா எம் பிள்ளைகள கூட்டிக்கிட்டு எங்க அய்யா ஆத்தா வீட்டுக்கு போயிருவேன்” என்று மிரட்டினாள்.

அன்றிலிருந்து செல்லையா வாத்தியார் அவளைக் கண்டால் ஒதுங்கிக்கொள்வார். தங்கச்சாமிகூட பேச்சை நிறுத்திவிட்டான். அவன் ஊர்மாட்டை மேய்த்துவிட்டு வருவான், அவள் வேண்டா வெறுப்பாகக் கூழ் கஞ்சி எதையாவது ஊற்றி வைத்துவிட்டுப் போய்விடுவாள். அவனும் கஞ்சியைக் குடித்துவிட்டுப் படுத்துக்கொள்வான். அவன் அவனுடைய இரு குழந்தைகளுக்காக வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு இரவும் சொல்லிக்கொண்டே உறங்குவான்.

அவர்கள் தொழுவத்தில் தங்க ஆரம்பித்து மூன்று மாதமிருக்கும். ஏழை வீட்டில் கஞ்சியில்லை என்றால் சூரியன் கிழக்கே உதிக்காதா என்ன. எப்படியோ நாட்கள் உருண்டன. ஒருவகையில் அவர்கள் அந்த தொழுவத்து அறையில் குடி இருக்கப் பழகிவிட்டார்கள். ஏன் தொழுவதிற்குள் வந்த பின் அவளைச் சந்திக்கவேண்டிய கூடுதல் தூரத்திற்காகவோ என்னவோ அவளைத்தேடி வம்பிழுக்க வரும் பெண்களின் வரவு வெகுவாகக் குறைந்து விட்டது. அது அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தது.

அவளிடம் சொல்லிக் கொள்வதைப்போல இருந்த ஒரே சொத்து அவளுடைய தங்க நகைகள். ஊரில் அவளைவிட அதிகம் நகை வைத்திருந்தவர்கள் அதிகம் பேர் இல்லை. அதுவும் அவளிடம் இருந்த எல்லா நகைகளையும், உள்ளங்கழுத்துச் சங்கிலி உட்பட, போட்டுக் கொண்டு ஊரில் திருமணம் போன்ற விசேசங்களுக்கு அவள் சென்றால், இன்றும் அவளைப் பொறாமைக் கண்களோடு பார்க்காத பெண்கள் இல்லை. அவள் அழகை ரசிக்காத வாலிபன் இல்லை அவ்வூரில்.

இதுவாவது இருக்கின்றதே என்று அவள் தன் நகைகளைத் துடைத்துச் சுத்தமாக வைத்துக்கொண்டாள். வாராவாரம் எண்ணை தேய்த்துக் குளிக்கும் பழக்கம் போய்விட்டிருந்தாலும், எப்போதாவது தன் பிள்ளைகளை எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுவாள்.

அவளுடன் இன்றும் கனிவாய்ப் பேசும் செல்லையா வாத்தியாரின் மனைவி, தெய்வானை, “நல்ல நாளும் பொழுதுமா நீயும் எண்ண தேச்சுக் குளி. இந்தா எண்ண,” என்று ஒரு சிறு பாட்டில் நிறைய நல்லெண்ணை தந்தாள். செல்லையா வாத்தியார் தங்கச்சாமிக்கு ஒன்றுவிட்ட மாமா. வாத்தியாரின் மனைவி தெய்வானையும் மைதிலியும் அகிலாண்டபுரத்திலிருந்து பெரியாண்டபுரத்திற்கு வெவ்வேறு காலங்களில் வாழ்க்கைப்பட்டு வந்தவர்கள். அத்தோடில்லாமல், மைதிலியின் தாயின் பாட்டியும் தெய்வானையின் பாட்டியும் உடன்பிறந்தவர்கள். இக்காரணங்களால் அவர்கள் இருவரும் மிக்க நெருக்கமானவர்களாய் ஆகிவிட்டனர். வயதில் பெரியவளும், படித்து அனுபவம் பெற்றவளுமான தெய்வானை, தன் ஊர்க்காரியும் உறவுக்காரியுமான மைதிலியை அன்பாகப் பார்த்துக்கொண்டாள். செல்லையா வாத்தியாரைப்போல் தெய்வானையும் உள்ளூர் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்வதால் அவளுடைய நட்புக் கிடைத்ததில் மைதிலிக்குப் பெருமை. சித்தி என்று அன்பாகவும் பெருமையாகவும் பேசிக்கொள்வாள் மைதிலி.

தெய்வானை கொடுத்த எண்ணையை முதலில் தன் பிள்ளைகளுக்குத் தேய்த்துவிட்டு, பின் அவளும் தேய்த்துக்கொண்டாள். குழந்தைகளைக் குளிப்பாட்டிவிட்டு, அவள் தொழுவுக்குக் குடிபெயருமுன் வாழ்ந்த பழைய வீட்டுக்கு எதிரே இருக்கும் செண்பகம் அத்தை வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு மைதிலி தன் அழகிய உடலில் மேலும் எண்ணை தேய்த்துக் குளிக்கத் திட்டமிட்டாள். தங்க நகையில் எண்ணை ஏறிவிடும் என்று, தாலி முதற்கொண்டு எல்லா நகைகளையும் கழற்றி, ஒரு துணியில் முடிந்து பானைக்குள் ஒளித்து வைத்துவிட்டு, நன்றாக ஆசைதீர வென்னீரில் குளித்தாள்.

பின் தலையை நன்கு துவட்டி, எப்போதோ முடிந்து வைத்திருந்த சாம்பிராணியைப் புகை போட்டு, தன் கூந்தலைக் காயவைத்தாள் மைதிலி. அதன்பின் அவளிடம் இருந்த நல்ல சேலைகளில் ஒன்றை உடுத்திக்கொண்டு, தன் நகைகளை அணிந்துகொள்ள எண்ணி பானைக்குள் கைவிட்டாள். உள்ளே விட்ட கையில் ஒன்றும் தட்டுப்படாததால் திடுக்கிட்டாள். நன்றாகத் தடவிப் பார்த்தாள். காலிப் பானையின் அடிப் பகுதிதான் கையில் பட்டது.

பானையை வெளியே எடுத்து வந்து வெளிச்சத்தில் பார்த்தாள். பானை காலியாகக் கிடந்தது. ஒரு வேளை மறந்துபோய் வேறு பானையில் வைத்து இருப்போமோ என்று எண்ணி, மற்றப் பானைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகத் தேடினாள். எதிலும் அவள் நகை இல்லை. அப்படியே சோர்ந்து படியிலேயே உட்கார்ந்துவிட்டாள். ஏதோ யோசித்தவள் உள்ளே சென்று அந்த அறையை முற்றிலும், ஒரு சிறு இடை கூட விடாமல் துளாவினாள். அவளை அழகு படுத்திய அவளின் தங்க நகைகள் போயே போய் விட்டன. அப்படியே தரையில் படுத்து உருண்டாள்.

அப்படி மயங்கிய நிலையில் அவள் பல மணி நேரம் கிடந்திருக்க வேண்டும். குளித்துவிட்டு தன் பிள்ளைகளை அழைக்க வருவாள் என்று எதிர்பார்த்த செண்பகம், குழந்தைகளை அவள் வீட்டிலேயே விளையாட விட்டுவிட்டு மைதிலியைத் தேடி வந்தாள்.

மைதிலியைத் தேடி வந்த செண்பகம், “என்ன மைதிலி, பிள்ளைகள் பசிக்கிண்ணது, ஒன்னகாணும். சரிண்ணு எங்க வீட்டில இருந்ததைப் போட்டேன், சாப்பிட்டுட்டு விளையாடிச்சு. ஆனா ரெம்ப நேரமாக் காணுமேண்ணு ஒரு எட்டு பாத்திட்டு வருவோமேண்ணு வந்தேன்,” என்று அறையின் உள்ளே பார்த்தவள் திடுக்கிட்டாள்.

அறையின் உள்ளே ஓடி மைதிலிக்கு இன்னும் மூச்சு இருக்கிறதா என தொட்டுப் பார்த்து உறுதி செய்தபின்தான் செண்பகத்துக்கு உயிர் வந்தது.

“என்ன மைதிலி உறங்கிட்டயா?” என்று தட்டி எழுப்பினாள்.

“அத்த போச்சே, என் நகையெல்லாம் போச்சு அத்த போச்சு. அது ஒண்ணுதான் இருந்தது, அதுவும் போச்சு. கதவ தாழ்பாள் போடுத வசதி இருக்கித வீடா இருந்தா இப்பிடி நடந்திருக்குமா? பாவிப்பய வீட்டுக்கு என்னைக்கி குடி வந்தேனோ அண்ணையில இருந்து சனியன் பிடிச்சிருச்சு. இப்பம் நான் எப்பிடி வெளிய தலகாட்டுவேன். எல்லாம் போச்சே, போச்சே,” என்று தலையிலும் மார்பிலும் ஆக்ரோசத்தோடு அறைந்துகொண்டாள் மைதிலி.

செண்பகத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கிருந்து அகன்றால் ஒரு வேளை மைதிலி தற்கொலை செய்துகொண்டாலும் செய்துகொள்வாள், எனப் பயந்து அங்கேயே இருந்தாள்.

மைதிலி அவ்வாறு அழுது பிதற்றிக்கொண்டு இருக்கையில், ஆளில்லாமல் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவள் குழந்தைகள் இரண்டையும் அழைத்துக்கொண்டு செல்லையா வாத்தியார் அங்கு வந்து சேர்ந்தார்.

அச்சமயம் பார்த்து, ஊர்மாட்டை மேய்த்து விட்டுத் தங்கச்சாமியும் வீடு வந்து சேர்ந்தான். அவன் மீது பாய்ந்தாள் மைதிலி, “ஒன்னாலதான் எல்லாம்,” என்றாள். “நான் இப்பவே போறேன், எங்க அய்யா வீட்டுக்கு,” என்றாள். ஆனால் அவள் அறிவாள் அவள் பிறந்தவீடு ஒன்றும் செல்வாக்கோடு இல்லை என்று. அவள் தாய் தந்தை இருவரும் நோய்வாய்ப்பட்டுக் கிடந்ததோடு மட்டுமல்லாது, அவர்களும் வறுமையில் வாடி ஏதோ வயிற்றைக் கழுவிக்கொண்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் மைதிலி அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தபோது, தன் கணவன் வீட்டு வாழ்க்கை வெறுத்து விட்டது என மைதிலி சொல்ல, அவள் தாய் சொன்னாள், “இங்க வந்து எங்களையும் கேவலப்படுதிராத. இங்கேயும் ஒண்ணும் இல்ல. வாழ்வோ சாவோ அங்கேயே கிட. மானமாவது மிஞ்சும்” என்றாள். அதிலிருந்து மைதிலி அங்கு போவதைத் தவிர்த்தாள்.

கோபம் ஆறாமல், தங்கச்சாமியை அடிக்க மைதிலி கையை ஓங்கினாள், செண்பகம் கையைப் பிடித்துக்கொண்டாள்.

செல்லையா வாத்தியார், “தங்கச்சாமி நாள் முழுக்க மாட்ட மேச்சிட்டு இப்பந்தான் வீட்டுக்கு வந்திருக்கான். அவனைப் போய் அடிக்கப் போறது நல்லது இல்லை,” என்று சற்றுக் கோபத்துடன் சொல்ல, மைதிலி வீட்டுக்குள் போய் அழுதாள்.

தங்கச்சாமி, மைதிலி, செண்பகம் மூவரையும் பார்த்து, “பொருள் போனது போச்சு. இப்போதைக்கு இந்தச் செய்தியை வெளிய விடாம இருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்,” என்று செல்லையா வாத்தியார் சொன்னார்.

அதை அங்கு இருந்த எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி மைதிலியின் நகை தொலைந்து போனதை எவரும் வெளியே சொல்லவில்லை.

ஆனால் அதன் பின் மைதிலி வீட்டைவிட்டு வெளியே போவதையே தவிர்த்தாள். வெளியில் சென்றால் எல்லோரும் தன் வெறுங்கழுத்தையே உற்றுப் பார்ப்பதுபோல் அவளுக்குப் பட்டது. எனவே அவள் அனேகமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

அவளுடைய பிள்ளைகளை அவ்வப்போது செண்பகம் அத்தையோ தெய்வானைச் சித்தியோ வந்து அழைத்துச் சென்றால் போய்வரச் சொல்வாள். அவர்கள் வரவில்லையென்றால்கூட, அவளுடைய குழந்தைகள் கேட்டால் பத்திரமாகப் போய் அவர்கள் வீட்டில் விளையாடிவிட்டு வரச்சொல்வாள்.

ஒரு திங்கள் கிழமை மதிய நேரம், அவள் தன் வீட்டுவாசல் படியில் தனியே அமர்ந்திருந்தாள்.

சங்கரலிங்கம் தனியே வந்தான். நெருங்கிய உறவினனைப் போல் அன்பொழுகச் சிரித்தான். “என்னம்மா, எப்பிடி இருக்க?” என்றான்.

“இருக்கேன். இருந்து என்ன பலன்? பிள்ளைக கிடக்கே, இல்லாட்ட செத்துத் தொலைக்கலாம்,” என்றாள் மைதிலி.

“சேச்சே, ஒன்னமாதிரி அழகு ராணி அப்பிடியெல்லாம் பேசலாமா? இப்பம் ஒனக்கு என்ன குறை? இன்னைக்கி வரைக்கும் நீதான் ஊர்லயே அழகு. நகை போகும் வரும், என்ன பெரிய நகை?” என்றான் சங்கரலிங்கம்.

“என்ன இருக்கு மொதல்ல...,” என்று இழுத்தவள், இவனுடன் என்ன பேச்சு என்று நினைத்தாளோ என்னவோ வீட்டுக்குள் நுழையப் பார்த்தாள்.

“நீ ஒண்ணும் தப்பா நினைக்கலயிண்ணா.. ஒன் வெறுங்கழுத்தைப் பாக்கையில எனக்கு ஒன்னு தோணுது,” என்றான்.

அவள் வாசல் படியிலேயே நின்றாள். சங்கரலிங்கம், “ஒங்கழுத்துக்குக் கச்சிதமா எங்கிட்ட ஒரு சங்கிலி இருக்கு. சிவப்புக் கல்லு பதிச்சது, ஒங்கழுத்தில போட்டா அழகா இருக்கும். நீ ஒண்ணும் அடகோ கிடகோ வாங்க வேண்டாம். கழுத பெட்டிக்குள்ள கெடக்கதுல யாருக்கு லாபம், ஒங்கழுத்தில கெடந்திட்டுப் போவுது. ஒன் நகை வந்தபின்ன திருப்பிக் குடுத்திட்டாப் போச்சு. காலம் மாறாமலா போகும்,” என்றான்.

அவள் படியிலேயே நின்று யோசித்தாள். சங்கரலிங்கம், “ஒனக்கு பிடிச்சாத்தான். இல்லாட்ட பெட்டிக்குள்ளயே கெடக்கட்டும்,” என்றான்.

அவள் பேசவே இல்லை. சங்கரலிங்கம், “நீ இரு. வீட்டுக்கு போய்ட்டு சுருக்க வந்துருவேன். நகையப் பாத்திட்டுச் சொல்லு,” என்றவன் தொழுவைவிட்டு விரைந்து வெளியேறினான்.

அவள் படியிலேயே உட்கார்ந்திருந்தாள். சங்கரலிங்கம் சொன்ன மாதிரியே போன கையிலேயே திரும்பினான். கையில் ஒரு சுருக்குப்பை. அதை அப்படியே அவளிடம் கொடுத்து, “பாரும்மா, பார்,” என்றான்.

கைகள் லேசாக நடுங்க அவள் அந்தச் சுருக்குப் பையின் சுருக்கை விரித்து, தன் மெல்லிய விரல்களை உள்ளே விட்டு அதனுள் இருந்த நகையை வெளியே எடுத்தாள். தன் கைகளில் தூக்கிப் பார்த்தவள், கண்கள் விரிய நீண்ட நேரம் அதையே பார்த்தவண்ணம் இருந்தாள். அவளுக்குத் தெரியும் சங்கரலிங்கம் அவள் முன் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று. ஒரு வழியாய் கண்களை சங்கரலிங்கத்தை நோக்கி உயர்த்தினாள்.

ஒரு பெரிய சிரிப்பை பாசத்துடன் உதிர்த்துவிட்டு, தலையைத் தஞ்சாவூர் பொம்மை மாதிரி இந்தப் பக்கத்துக்கும் அந்தப்பக்கத்துக்கும் ஆட்டிவிட்டு, “ஒனக்கு எப்பம் வேண்டாம்மிண்ணு தோணுதோ அப்பம் திருப்பிக்குடுத்தாப் போதும். அதுவரைக்கும் ஒங்கழுத்தில கிடக்கட்டும்,” என்று சொன்னவன், விருட்டென்று வெளியேறினான்.

சங்கரலிங்கம் போன பின், பிரமாண்டமாகச் ஜொலிக்கும் அந்தச் சங்கிலியை உடனே அணிந்து பார்க்க மிக்க ஆவலோடு இருந்தாள், மைதிலி. அவள் இருந்த அந்த சன்னல் இல்லாத அறையில் வெளிச்சம் கொஞ்சம்கூட இல்லையென்பதால் வெளிச்சம் நிறைந்த இடமும், கண்ணாடியைச் சாய்த்து வைத்துத் தன் முகத்தைப் பார்த்துக்கொள்ளப் பொறுத்தமான இடமும், எது என்று ஓரு நிமிடம் யோசித்தாள். மனதில் சரியான யோசனை உதிக்கவே, மைதிலி தன் வீட்டுக்குள் நுழைந்து மங்கிப்போன தன் பழைய சிறிய முகம்பார்க்கும் கண்ணாடியை இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் சங்கரலிங்கம் கொடுத்த சங்கிலியைப் பொத்தி வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

ஆள் அதிகம் நடமாடாத, ஓலைக்கூரை வேய்ந்த தொழுவின் உட்புறம் பல வீட்டுக் குருவிகள் கூடு கட்டிக் குடும்பம் நடத்தின. ஆகவே எப்போதும் குருவிகள் பறந்து வந்தவண்ணமும் போனவண்ணமுமாய் இருக்கும் இடம் அது. பொழுது அடையும் வரை கீச் கீச் என்ற இறைச்சலும் கேட்டுக்கொண்டே இருக்கும் அந்தத் தொழுவத்தில். அவற்றைப் பொருட்படுத்தாது மைதிலி தான் யோசித்துத் தேர்ந்தெடுத்த தொட்டியைப் பார்த்து நடந்தாள்.

மாட்டுக்கு நீர் காட்ட சுவர் ஓரம் போட்டிருந்த கல் தொட்டியில் அவளுடைய கண்ணாடியை வைத்து சுவரில் சாய்த்தால் அவள் உயரத்திற்குச் சரியாக இருக்கும். கண்ணாடியைச் சாய்த்து வைத்துவிட்டு, சரியான தூரத்தில் நின்றுகொண்டு அந்த அழகுமிகுந்த சிவப்புக்கல் பதித்த சங்கிலியைத் தன் கழுத்தில் வைத்துப் பார்த்தாள் மைதிலி. அவளால் நம்பவே முடியவில்லை, அது தன் கழுத்துதானா என்று. அவசரமாக தலைமுடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டு அந்தச் சங்கிலியைத் தன் அழகுக் கழுத்தில் மாட்டிக்கொண்டாள். கண்ணாடியில் தன் கழுத்தைப் பார்த்தவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

தன் கண்ணே தன்மீது பட்டுவிடுமோ எனப் பயந்தாள். பல நாட்களுக்குப் பின் பெரு மகிழ்ச்சியுடன் முகம் மலரக் கண்ணாடியின் முன் நின்று சிரித்தாள். அவளின் சிரிப்பில் அவள் உடல் லேசாக நடுங்குவதை உணர்ந்தாலும் அந்தத் தொழுவத்திற்குள் யாரும் வரமாட்டார்கள் என அவள் அறிவாள். அவ்வேளையில் அவள் எதிர் பார்த்தது போல் எவரும் வராதது அவளுக்கு மிகச் சாதகமாய்ப் போயிற்று. ஆகவே அவள் தன் ஆனந்தத்திற்குத் தடைபோடவில்லை. அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே விர்ரென்று பறந்து வந்த ஒரு ஆண் குருவி அந்தக் கண்ணாடியின் முன் அமர்ந்து மைதிலியின் பிம்பத்தப் பார்த்தது. மைதிலிக்கு அக்குருவியும் தன் அழகைப் பார்த்து ரசிப்பாதாய்த் தோன்றியது. ஒரு சில வினாடிகளுக்குப் பின், “ஆசயப் பாரு ஆசைய,” என்று சிரித்துக்கொண்டே அக்குருவியை தன் வலது கையைவீசி விரட்டினாள்.

அதன்பின் மைதிலி வேண்டியமட்டும் அந்தக் கண்ணாடியில் தன் அழகிய கழுத்தைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனாள். ஒரே ஒரு குறைதான். அந்தச் சின்னக் கண்ணாடியில் அவள் முகம் அல்லது கழுத்து ஏதாவது ஒன்றைத்தான் பார்க்க முடிந்தது. முகம் கழுத்து இரண்டையும் ஒருசேரப் பார்க்கவேண்டும் என்றால் அவள் தெய்வானைச் சித்தி வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். அங்குதான் அவள் முகம் கழுத்து எல்லாம் பார்க்கும் அளவுக்குப் பெரிய கண்ணாடி இருக்கிறது.

தெய்வானைச் சித்தி வீட்டிற்கு விரைந்தாள் மைதிலி. சித்தி தன்னை எப்பொழுதும் அன்பாய் வரவேற்பாள் என்று அவளுக்குத் தெரியும். மேலும் தெய்வானை மைதிலியின் அழகை எப்போதும் புகழ்ந்து பேசுவாள் என்பதால் மைதிலிக்குச் சித்திமேல் மிகப்பிரியம். ஆனால் சித்தப்பா, செல்லையா வாத்தியார் அப்படி அல்ல. அவர் ஒரு ஆண் என்பதால் கொஞ்சம் தள்ளியே இருப்பார் என்பது மட்டுமல்ல, அவர் அவளைத் தவிர்த்ததற்குக் காரணம்.

தங்கச்சாமி தன் சொத்துச் சுகம் அத்தனையும் இழந்து நின்றபொழுது மைதிலி தன் நகையைக் கொடுக்க மறுத்தது முதல் அவர் அவளைத் தவிர்த்தார். மனதில் இவள் எல்லாம் ஒரு பெண்ணா, என்று ஒரு காழ்ப்புணர்ச்சி தோன்றினாலும், அவற்றை வெளிக்காட்டிக்கொள்வதில்லை அவர். அவளாக, “வாங்க சித்தப்பா,” என்றால். முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, “எப்பிடி இருக்க? பிள்ளைக எல்லாம் சுகந்தானா?” என்று கேட்டுவிட்டுப் போய்விடுவார். ஆனால் மைதிலி அவர் வீட்டுக்குப் போனால், “வாம்மா, வா,” என்று சிரித்துப் பேசி வரவேற்பார். அத்தோடு சரி தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார். இருப்பினும் சித்தப்பா இல்லாத நேரங்களில்தான் அவள் சித்தியைத்தேடிப் போவாள். அது அவள் சித்திக்கு மட்டுமல்ல சித்தப்பாவுக்கும் தெரியும்.

ஆனால் அன்று அவளால் காத்திருக்க முடியவில்லை. சித்தப்பா இருந்தால் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டே மைதிலி சித்தியின் வீட்டுக்கு ஓடினாள். ஒருவேளை சித்தப்பா தன் புது நகை எங்கே இருந்து வந்தது எனக்கேட்டு விடுவாரோ என்று எண்ணி தன் சேலைத்தலைப்பால் கழுத்தை மறைத்துக்கொண்டாள்.

முன்வாசலில் சித்தாப்பாவின் கனத்த தோல்செருப்பு இல்லை, அப்படி என்றால் சித்தப்பா வெளியெ போய் இருக்கிறார் என்று அர்த்தம். நல்ல வேளை, தெய்வானைச் சித்தி மட்டும்தான் வீட்டில் இருக்கிறாள், என மைதிலி நினைத்துக் கொண்டாள். திறந்திருந்த கதவுவழியாக உள்ளே நுழைந்ததும் நேராகக் கண்ணாடியை நோக்கி விரைந்தாள் மைதிலி. கண்ணாடியில் அவள் முகம், கழுத்து, அதில் பிரகாசித்த அந்த சிவப்புக் கல்பதித்த சங்கிலி எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. சங்கிலியின் ஜொலிப்பைக் கண்டு அவளுக்கு வந்த பூரிப்பை, சித்தி பார்த்துவிடப் போகிறாள் என்று, அடக்கிக்கொண்டாள்.

சமையல் அறையில் இருந்த சித்தியைப் பார்க்க விரைந்தாள். “பாருங்க சித்தி,” என்று தன் புது நகையைக் காட்டினாள்.

“ஏய் மைதிலி, ரொம்ப அழகா இருக்கே. என்ன..” என்று விலையைக் கேட்கப் போனவள் நிறுத்திக்கொண்டாள்.

“நல்லா இருக்கா சித்தி?” என்று தன் அழகிய பல் வரிசையைக் காட்டி பூரிப்போடு சிரித்த மைதிலி, சித்தி நன்றாகப் பார்க்கட்டும் என்று தன் நாடியைத் தூக்கி, சேலையை ஒதுக்கி, பக்கவாட்டில் நின்றாள், அதன்பின் நின்ற இடத்திலேயே ஒரு சுற்றுச் சுற்றி, ஒரு மாடலைப்போல் தன் அழகுச் சங்கிலியையும் தன்னையும் தன் சித்திக்குக் காட்டினாள் மைதிலி.

தெய்வானைச் சித்தியும் பெருமகிழ்ச்சியோடு சிரித்து தலையை ஆட்டி ஆட்டி, வெகுவாகப் பாராட்டினாள். “பிரமாண்டமா இருக்குண்ணு சொன்னாத்தான் பொறுத்தமா இருக்கும்,” என்று வாயாரப் பாராட்டவும் செய்தாள் சித்தி.

சிவப்புக்கல் நெக்லஸ் தன் கழுத்தில் ஏறியபின்தான் மைதிலி மீண்டும் தெருவில் நடமாட ஆரம்பித்தாள். மீன் தூண்டிலைக் கவ்வி விட்டது என்பதை அறிந்த சங்கரலிங்கம் தன் நாக்கைச் சப்பிக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி திட்டம் தீட்டினான்.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top