JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 25 & 26

Uthaya

Member


25

மைதிலி சங்கரலிங்கம் இருவரின் அடுத்த சந்திப்பில், “என்ன தங்கச்சாமி கையெழுத்து போடுதேம்மிண்ணானா?” என வினவினான் சங்கரலிங்கம்.

“பிடிவாதமா மாட்டேன்னு சொல்லிருச்சு, ஏதோ கிறுக்குப் பிடிச்ச மாதிரி. எனக்கென்னமோ அந்த மனுசன்கிட்ட கையெழுத்த வாங்கமிடியுமிண்ணு தோணல,” என்றாள் மைதிலி வருத்தமாக.

“அப்பம் மாட்டுத்தொழுவிலயே கெடண்ணு விட்டுர வேண்டியதான்.”

“அவருக்கு வேண்டாம்மிண்ணா? எனக்கு வேணுமே. நான் இந்த குடுசையில, அதும் மாட்டுத்தொழுவில இருக்க மாட்டேன்..” என்றாள் மைதிலி சீற்றத்துடன்.

“அவனோ கையெழுத்து போட மாட்டங்கான். நான் என்ன செய்யணுமிங்க?” என்றான் சங்கரலிங்கம்.

“அது அப்பிடித்தான் பேசும். அதுக்கு என்ன நட்டம்? ஒங்களுக்கு நான் வேணுமிண்ணா ஏதாவது வழி இருக்காண்ணு யோசிச்சிப் பாருங்க,” என்றாள் வெடுக்கென்று.

“இதுக்கு நான் என்ன பண்ண மைதிலி,” என்று அணைக்கப் பார்த்த சங்கரலிங்கத்தை விட்டு விலகி நின்றாள் மைதிலி.

“நல்ல ஆம்பிளயா இருந்தா புத்திய உபயோகிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க. இல்ல இங்க வராதேக. எம் புருசனோட நீங்க புத்திசாலிண்ணா, நிருபிச்சுக் காட்டுங்க. நான் என்ன செய்ய.. ண்ணு சொல்ல புத்தி தேவ இல்ல. எனக்கு இங்க இருக்க பிடிக்கல, இருக்க முடியாது. ஒங்களால முடிஞ்சா என்ன நல்ல வீட்டுல குடி வைங்க. அத நம்பிதான் நான் ஒங்களுக்கு ..... நீரும் எம் புருசனோட கேவலம்மிண்ணா வராதேயரும்,” என்று இரைந்தாள்.

அடுத்த நாள் சங்கரலிங்கம் வந்தான். வந்தவன் மைதிலியை அணைக்கப் பார்த்தான். “என்னத் தொடப்பிடாது,” என்றாள் மைதிலி.

“நான் நல்ல செய்தியோடதான் வந்திருக்கேன். அதான் நம்ம பழய வழக்கப்படி...” என்று மைதிலியை இழுத்தான் சங்கரலிங்கம்.

“அப்பிடியா. சரி சரி. நல்லது. முதல்ல சொல்லுங்க.”

“நான் ஒரு வழி வச்சிருக்கேன். அந்த தங்கச்சாமியோட அய்யா எழுதிகுடுத்த பத்தரம் ஏங்கிட்டத்தான் இருக்கு. அத நான் ஓங்கிட்ட குடுத்திருதேன்,” என்றான் சங்கரலிங்கம்.

“சரி...” என்று புரியாமல் பார்த்தாள் மைதிலி.

“நீ அந்த வீட்டுல இருந்துக்கோ. பத்தரத்தையும் நீயே வச்சிரு. வீடு உனக்கே சொந்தமானது மாதிரி, இப்பம் சந்தோசம்தானே,” என்று மைதியிலின் கையைத் தொட்டுப் பேசினான் சங்கரலிங்கம்.

“இது ஆம்பள,” என்று அவனைப் பாராட்டினாள் மைதிலி. பின், “எனக்குத்தெரியும் ஒங்கள நான் கேள்வி கேட்டாத்தான் நீங்க சிந்திப்பீகண்ணு. வைரத்த அறுத்து பாலிஸ் போட்டாத்தான் மின்னும்பாங்க,” என்று சங்கரலிங்கத்தை அன்போடு பார்த்தாள்.

சங்கரலிங்கம் மைதிலியை அணைத்துக்கொண்டான். அவளும் இணைந்தாள்.

பிரச்சனை தீர்ந்துவிட்டாலும் அன்றிலிருந்து சங்கரலிங்கத்தின் மனதில் ஒரு நெருடல் தோன்றியது. மைதிலியின் மனதிலும், அந்த வீட்டுப் பிரச்சனை அவர்களுக்கிடையில் ஒரு திரையாக வளர்ந்து விடுமோ என்ற ஐயம் எழுந்தது.

சங்கரலிங்கம் மைதிலியிடம் கொடுத்த அந்தப் பத்திரம் தங்கச்சாமியின் அய்யா எழுதிக்கொடுத்த பத்திரம். தங்கச்சாமியின் திருமணச் செலவுகளுக்காக மட்டுமின்றி, மைதிலியின் நகைகளை வாங்குவதற்காகப் பட்ட கடனுக்காவும் எழுதிக்கொடுத்த பத்திரம்.

எப்படியோ மைதிலி தங்கச்சாமி குடும்பம் பழையபடி அவர்களின் பூர்வீக வீட்டிலேயே குடியேறிவிட்டது. தங்கச்சாமியின் அய்யா எழுதிக்கொடுத்த பத்திரம் இப்போது மைதிலியின் வீட்டுப் பெட்டியில் உறங்கியது. அப்பெட்டியும் சங்கரலிங்கம் வாங்கித்தந்ததுதான்.

பூர்வீக வீட்டில் ஒரே ஒரு பிரச்சனைதான். மைதிலி தொழுவில் இருந்தவரை சங்கரலிங்கத்தின் வரத்து ஓரளவுக்கு ரகசியமாக இருந்தது. புதிய வீடு நடுத்தெருவில் இருந்ததால் அவன் வந்து போவது அவ்வளவு லெகுவாக இல்லை. ஆகவே அவர்கள் சில சமயம் இரவில் ஒரு தொழுவில் இருந்த அறையிலும் சந்தித்துக்கொண்டார்கள்.




26

தக்கச்சாமி ஒன்றும் கண்கெட்ட குருடன் அல்ல. ஆனால் அவன் மற்றவர்களைப் போன்றவனும் அல்ல. கள்ளம் கபடம் மட்டும் அல்ல, வெறுப்பு, வெறி, கோபம் எல்லாம் கூட அறியாதவன். அவனுக்குக் கொடுத்த வேலையைச் செவ்வனே செய்வதைத் தவிர வேறு ஏதும் தெரியாதவன்.

தங்கச்சாமி தன் வாழ்நாளில் ஒருதடவைகூட எவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எவரையும் இகழ்ந்து பேசியதுமில்லை. ஏன், மற்றவர்கள் அவனை ஏமாற்றி இகழ்ந்து பேசினால் கூட அவன் அவர்களை அன்பாகவே நடத்தினான். ஏனென்றால் அவனுக்கு வேறெதுவும் தெரியாது. அவன் கிறிஸ்து ஏசுவைப் பற்றி அறியாதவன். ஆனாலும், கெடுதல் செய்தவருக்குக்கூட நன்மை செய்பவன் அவன். அந்த விதத்தில் ஏறக்குறைய அவனும் கிறிஸ்துவே.

மைதிலியும் சங்கரலிங்கமும் விளையாடிய விளையாட்டு அவனுக்குத் தெரியாமலில்லை. ஊர் அறிந்த உண்மையென்றாலும் அவனுக்கு மெல்ல மெல்லத்தான் புரிந்தது. மைதிலி அழகழகாய் உடுத்திக்கொள்வதும், வளையல் சங்கிலி என வளைய வருவதும். வீட்டில் அடிக்கடி கருவாட்டுக் குழம்பு மட்டுமல்லாமல், கோழிக்கறி, ஆட்டுக்கறிகூட நடமாடுவதும் அவனுக்குப் புரியாதா என்ன?

ஒரு நல்ல காரியம் என்னவென்றால், ஊரார் அவனைக் கிண்டல் செய்தாலும் கூட, அவனிடம் எவரும் நேரில் வந்து, ‘நீ இல்லாத போது ஒன் வீட்டுல நடக்கது தெரியுமா,’ என்று கேட்கவில்லை. ஆகவே தங்கச்சாமியும் எப்போதும் போல் போய்க்கொண்டிருந்தான்.

மனிதன் வேண்டுமானால் நேற்றுச் செய்ததையே இன்றும், நாளையும், அடுத்த நாளும் செய்யலாம்; ஏன் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் ஒரு காரியத்தையே செய்யலாம். ஆனால் இயற்கை ஒரு நாள் சீறும் ஒரு நாள் தணியும். அன்றொரு நாள் இயற்கை மாறிற்று.

ஒரு கோடையில், வெயில் அக்கினியாய்ச் சுட்ட அதே நாளில், அசுரப்புயல் ஒன்று வீசி, வானம் கருத்து, இருட்டாகிக் கோடை மழை ஒன்று கொட்டும் முரசுபோல் இடி இடித்துப் பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நின்றது.

கோடை மழை நின்றபின்னும், மாடுகள் ஏனோ மேய மறுத்தன. ஒருவேளை பகல் முடிந்து அந்தி சாயும் நேரம் அருகில் நெருங்கிவிட்டதென்று நினைத்தனவோ என்னவோ, அவை வீடு நோக்கி நடையைக் கட்டின. மாடுகளை நிறுத்தி மேலும் நான்கு நாழிகைகள் மேய்க்க முயன்று தோற்று, ‘சரி மாடு நிக்கலையிண்ணா என்ன செய்ய முடியும்,’ என்று மாடுகளோடு வீடு திரும்பினான் தங்கச்சாமி.

மாடுகள் அதனதன் வீடுகளுக்குச் செல்ல, தங்கச்சாமி நேராக வீட்டுக்குச் சென்றான். கதவு சாத்தியிருந்தது. தன் இடுப்புச் சாவியை எடுத்து உள்ளே நுழைந்தான் தங்கச்சாமி. சங்கரலிங்கம் அவசர அவசரமாக உள் அறையிலிருந்து வந்தான், வந்தவன் கையோடு அந்த அறைக் கதவைச் சாத்தினான்.

தங்கச்சாமியைப் பார்த்துத் திடுக்கிட்ட சங்கரலிங்கம் நொடிக்குள் சுதாரித்துக்கோண்டு, “இடுப்பு வலி, ஒரு நாலு நாளா. அதான் லேசா நீவி விடச்சொன்னேன்,” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வெளியேறிவிட்டான்.

ஒரு சில வினாடிகளில் மைதிலியும் வந்தாள். அவள் தலை கலைந்திருந்தது. அவளும் இடுப்பு வலிப் புராணத்தையே பாடினாள். “மாட்டுத்தொழுவில கெடந்த நம்மள நடு வீட்டில வச்ச மனுசனுக்கு, இடுப்பு வலிண்ணா உதவி செய்யாம இருக்க முடியுமா? அதான்,” என்றாள்.

வளையலும் சங்கிலியும், கருவாட்டுக் குழம்பும், ஆட்டுக்கறியும் சும்மா வரவில்லை, பெரிய விலையில்தான் வந்திருக்கிறது என்று புரிந்துகொண்டான் தங்கச்சாமி. ஏன் வீடு கூடக் கிடைத்திருக்கிறது என்றும் அறிந்துகொண்டான்.

‘மனைவி துரோகம் செய்துவிட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும்,’ என்று திருவள்ளுவர்கூட எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. அப்படி எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தாலும் தங்கச்சாமிக்குப் படிப்பறிவு கிடையாது. அப்படியே யாரேனும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாலும் அவனுக்கு அவளை எதிர்த்துச் செயல்படத் தைரியமும் இல்லை, அடிதடியில் இறங்க அவனுக்கு மனமும் இல்லை. மற்ற ஆண்களைப்போல் மனைவியை அடிக்கவோ திட்டவோ அவனால் நினைத்துப் பார்க்கக்கூட இயலாது. ஆனால் அன்றிலிருந்து, தான் முற்றிலும் நம்பிவந்த தன் குலதெய்வம் தன்னைக் கைவிட்டுவிட்டதுபோல் உணர்ந்து, உள்ளம் தவித்து, உறக்கம்கெட்டு, நாளுக்கு நாள் மெலிந்து, ஏங்கிப் பரிதவித்தான்.

ஒரு சில நாட்கள் தங்கச்சாமி தன்னை ஏதாவது செய்துவிடுவானோ என்று பயந்த மைதிலி தனி அறையில் தன் பிள்ளைகளோடு தாளிட்டுக்கொண்டு உறங்கினாள். அன்றிலிருந்து ஒருவாரம் ஒவ்வொரு நாளும் அவனுக்குக் கருவாட்டுக் குழம்பும் நெல்லுச்சோறும் சமைத்துப் போட்டாள். தங்கச்சாமி என்றும்போல் அவசர அவசரமாய் உண்டாலும் அதன் மணத்தையோ ருசியையோ அவன் உணரவில்லை.

இரு வாரங்களில் மைதிலி உள்கதவைத் தாளிட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டாள். மெல்ல மெல்ல, கருவாட்டுக் குழம்பும் நெல்லுச்சோறும் விழுந்த தட்டில், கேப்பைக் கூழும் மிளகாய்வத்தலும் முன்போலவே திரும்பிவிட்டன. இருப்பினும் ஒரு சில மாற்றங்கள் நிரந்தரமாய்த் தங்கிவிட்டன.

கஞ்சிக்குத் திண்டாடும் தன் வீட்டில் கருவாட்டுக் குழம்புக்கும் நெல்லுச்சோற்றுக்கும் எப்படி துட்டு வந்தது என அவன் கேட்கவில்லை. எப்போதாவது மைதிலி கோடிச் (புது) சேலை உடுத்தினால் எப்படி வந்தது என அவன் கேட்கவில்லை. தன் குழந்தைகள் வளர வளரச் சட்டைத் துணி மாறியது எப்படி எனக் கேட்கவில்லை. விசேச நாட்களில் எல்லோர் வீட்டிலும் போல் ஆட்டுக்கறி, நெல்லுச்சோறு, தோசை, வடை எப்படி வந்தன எனக் கேட்கவில்லை.

இவ்வாறு ஒரு சில மாற்றங்கள் தோன்றினாலும் முக்கியமான பல பழக்க வழக்கங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. எப்பொழுதும்போல் அவன் அதிகாலையில் எழுந்து இடுப்பில் குடம் இடுக்கி, தண்ணீர் எடுத்து வருவான். வீடு, முற்றம் பெருக்கிக் கூட்டி அள்ளி, அடுப்புச் சாம்பலையும் சேர்த்து அள்ளி ஊருக்குத் தெற்கே இருந்த அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான குப்பைக்குழியில் போட்டுவிட்டு வருவான். ஒரு பெரிய வாளியில் தண்ணீரை ஊற்றி பசுஞ்சாணியைக் கரைத்து முற்றத்தைத் தெளிப்பான். வீட்டுவேலை எல்லாம் முடித்தபின், கஞ்சியைக் குடித்துவிட்டு ஊர் மாட்டைப் பத்திக்கொண்டு போய்க் காடெல்லாம் மேய்ப்பான். அவன் அவ்வேளைகளில் அம்மாடுகளுடன் பேசுவதும் விளையாடுவதும் பார்ப்பவர்களுக்கு அந்த மாயக்கண்ணனை நினைவு படுத்தும். மாலையில் வீடு திரும்பி மீண்டும் அவள் சொல்படி அடுப்பு எரித்து, பானை கழுவி, தண்ணீர் சுமந்து, உண்டபின், மைதிலிக்கும் குழந்தைகளுக்கும் உள் அறையில் பாய் விரித்து வைத்துவிட்டு, வெளி அறையில் படுத்துத் தூங்குவதுபோல் பாசாங்கு செய்வான்.




 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top