JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 27 & 28

Uthaya

Member


27

கொலையே விழாத ஊர் எனப் பெயரெடுத்த பெரியாண்டபுரத்தின் சரித்திரம் கூடிய சீக்கிரம் மாறப்போவதை ஊரார் அறியவில்லை. இதற்குமுன் வந்த கோடானு கோடி நாட்களைப் போல் அன்றும் ஒரு சாதாரண நாளாகவே தோன்றியது.

பனங்காட்டுக் கண்ணன் போல் மாட்டைத் தங்கச்சாமி மேய்த்துக்கொண்டிருந்தான். எப்போதும்போல் மாடுகள் அவசர அவசரமாகப் புல்லைக் கடித்துக் கடித்து விழுங்கின. ஒரு சில மாடுகள் அவ்வாறு விழுங்கிய புல்லை வயிற்றிலிருந்து வாய்க்குக் கவளம் கவளமாய்க் கொண்டுவந்து நன்றாக மென்று அசை போட்ட வண்ணம் இருந்தன. ஒரு பனையின் உச்சியில் காக்கை ஒன்று பதினிக் கலையத்தில் கிடந்த பதினியை வாயைவிட்டுக் குடித்துவிட்டு, தலையைத் தூக்கி கா கா எனக் கரைந்து, தன் சக காக்கைகளைக் கூப்பிட்டது. வானத்தில் கரிச்சான் ஒன்று தன்னைவிட நான்குமடங்கு பெரிதாய் இருந்த ஒரு காக்கையை பாய்ந்து பாய்ந்து தாக்கியது. காக்கை உயிருக்குப் பயந்து தப்பிச் சென்றது. உருவத்தில் சிறிதாய் இருப்பினும் கரிச்சானின் வீரம் வென்றதைக் கண்ட தங்கச்சாமி, நமக்குமட்டும் பெரியாண்டசாமி ஏன் வீரம் குறைவாகக் கொடுத்துவிட்டான் என எண்ணினான்.

அன்று தங்கச்சாமி வெகுவாய் மாறுபட்டிருந்தான். அதிர்ந்துபோயிருந்தான் என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். அதற்கு முன்தினம்தான் அவன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருந்தான். கடைசி நேரத்தில் அந்த தண்ணிக்காரி வராவிடில் முழு வெற்றியும் பெற்று இவ்வுலகைவிட்டே போயிருப்பான்.

யார் செய்த புண்ணியமோ, தண்ணிக்காரி வடிவில் வந்து தன் உயிரைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவள் காட்டிய பரிவும் அவன் நினைவுக்கு வந்தது. கூடவே அவள் தன் உடலை விற்றுப் பிழைக்கும் இழி நிலையும், அவளைத் தான் இதற்கு முன்தினம் வரை ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பது மட்டுமல்லாமல், தான் அவளை ஒரு பெண்ணாகக்கூட மதித்ததில்லை என்பதும் நினைவுக்கு வந்தது.

அப்போது தூரத்தில் யாரோ ஒரு பெண் தன் வழியே சென்று கொண்டிருந்தாள்.

முன் ஒரு நாள் அந்த அமலி அவன் முன் ஒண்ணுக்கு போய்க்கொண்டு அவனைப் பார்த்து, “யாராவது ஆம்பளை வந்தாச் சொல்லு,” என்று தன்னைக் கேலி செய்ததிலிருந்து, அவன் பெண்கள் என்றாலே தள்ளி நிற்பான். அதுவும் தனியே ஒரு பெண் வந்தால் ஏதோ ஒரு காரணம் கண்டுபிடித்து ஓடிவிடுவான். அந்தப் பெண் உருவம் அருகில் வர வர, அவன் மாட்டு மந்தையின் தென் எல்லையின் பனை நிழலை விட்டு வெயிலில் இறங்கி, வடக்குப் பக்கம் நின்ற மாட்டைத் திருப்பிவிடச் சென்றான்.

மாடுகள் எட்டுவைக்கும் பொழுது பறக்கும் விட்டில், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காகவே பலவிதமான பறவைகள் மாட்டின் அருகே குதித்துக் குதித்து நடந்து வந்தன. கத்தரிபோல் வால் நீளமாய் இருந்த ஒரு பச்சைக் குருவி, ஒரு பசுவின் வாலின் நுனியில் கொத்தாக இருந்த முடியில் தொங்கியவாறே சவ்வாரி செய்தது. ‘இவ்வளவு பெரிய மிருகத்துமேல உக்காந்துக்கிட்டு வாரதுக்கு இந்தக் குருவிக்குப் பயமா இருக்காதா?’ என்று நினைத்துக்கொண்டான் தங்கச்சாமி. அப்போது அப்பசு ஒரு எட்டு வைக்க, புல்லிலிருந்து வெளியேறிய ஒரு பெரிய பூச்சியை அந்தப் பச்சைக்குருவி, பாய்ந்து சென்று, நொடியில் கவ்வி விழுங்கிவிட்டு, மீண்டும் வாலின் நுனியில் அமர்ந்தது. தங்கச்சாமிக்குப் புரிந்தது, வெகுமதி வேண்டுமானால் தைரியமாகச் செயல் படவேண்டும் என்று.

தங்கச்சாமி எப்படியும் திரும்பவும் பனை நிழலுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும் அப் பெண் புலி, பனை நிழலில் பதுங்கியது. தங்கச்சாமியோ வெயில் பழகிவிட்டதாலும், ஏதோ பெண் புலி ஒன்று பதுங்கி நிற்பது போல் தோன்றியதனாலும் வடக்குப் புறமே மாடுகளுக்கு இடையில் மறைந்து நின்றான். நின்றால் மாடுகளுக்கு மேல் தன் தலை தெரிந்துவிடும் என்று நினைத்து, புல் தரையில் உட்கார்ந்து கொண்டான்.

தங்கச்சாமி மாடுகளுக்கு இடையே ஒழிவதைக் கண்ட பெண் புலி, நிழலை விட்டு அவனை நோக்கி வரவே, அவன் கிழக்குப் புறம் சுற்றி, திரும்பவும் பனை நிழலுக்கே வந்து சேர்ந்தான்.

வடக்கே சுற்றியும் தங்கச்சாமியைக் காணாத பெண் புலி, திரும்பவும் பனைமரத்தை நோக்கி வர, தங்கச்சாமி மேற்புறம் ஒதுங்குவதைக் கண்ட புலி கூவியது, “என்னைய்யா, நான் ஒங்களத்தான் தேடி வந்திருக்கேன். நீங்க என்னண்ணா, சுத்திச் சுத்தி வந்து ஆட்டங்காட்டுதேகளே,” என்று.

அப்போதுதான் தங்கச்சாமிக்குப் புரிந்தது, அது புலியும் அல்ல கடுவாயும் அல்ல. ஊரில் உள்ள ஒரு நல்ல உள்ளம் கொண்ட, தண்ணிக்காரி என்று. இருப்பினும் அவனுக்கு அவளை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. நேற்றுக் கிணற்றில் மூழ்கிச் சாகும் தருவாயில் கிடந்த அவனை அவள் காப்பாற்றும் வரை, தண்ணிக்காரியைத் தங்கச்சாமி ஏறெடுத்தும் பார்த்ததில்லை, அவள் பெயரை உச்சரித்ததும் இல்லை.

அவள் தன் உயிரைக் காப்பாற்றியது மட்டுமின்றி, தன் மனைவியிடம் தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததை மறைத்துவிட்டதுமன்றி, அவனுக்காகப் பரிந்து பேசி அவன் பொருட்டு ஊர் மாட்டை வேறு மேய்த்தவள் என்பதால், தற்போது அவள் மேல் அவனுக்கு பெரும் மரியாதை ஏற்பட்டிருந்தது.

தொண்டையைச் செருமிக்கொண்டு, “வா, வா, தண்ணி...” என்று இழுத்தான் தங்கச்சாமி.

“ஆமா, ஒங்களப் பாத்து எப்பிடி இருக்கீகண்ணு கேட்டுட்டு போகத்தான் வந்தேன். உடம்பு சரியா ஆயிருச்சா அய்யா?” என்று அன்புடன் விசாரித்தாள் தண்ணிக்காரி.

“ஆமா, ஒண்ணுமில்ல, நல்லாயிருக்கேன்,” என்றான் தங்கச்சாமி.

“சாப்பிட்டேகளா?”

“ஆமா.., சாப்பிட்டேன்.”

தண்ணிக்காரி தன் மடியிலிருந்து இரண்டு பனங்கிழங்கை எடுத்து நீட்டினாள், தங்கச்சாமியை நோக்கி. பனங்கிழங்குத் தோலை உரித்தால், நாரையின் கூரிய வாய் போல மஞ்சள் நிறத்தில் இருக்கும், என்று செல்லையா வாத்தியார் எங்கோ பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்தி

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே

என்ற பாட்டு நினைவுக்கு வந்தது தங்கச்சாமிக்கு. அவனுக்குப் பனங்கிழங்கு எப்படி இருக்கும் என்பது அதற்கு முன்பே தெரியும், அவன் பனங்காட்டில் பிறந்தவன்தானே. இருப்பினும் புலவர் இப்படியெல்லாம் பாட்டு எழுதினார் என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் தண்ணிக்காரி நீட்டிய பனங்கிழங்கை வாங்கிக்கொள்ள சற்று யோசித்தான்.

தண்ணிக்காரி, “நான் ஒரு மாரிப் பட்டவதான். ஆனால் நானா எந்த ஆம்பளயயும் தேடிப் போகல. எந்தக் குடியயும் கெடுக்கவுமில்ல. என்னத் தேடி ஆளுக வருது, அது ஏம் பெழப்பு. இப்பம் நான் உங்களத்தேடி வந்தது, பாவம் ஒங்களுக்குப் போயி இப்பிடி ஆயிருச்சேண்ணுதான். ஏம்மனசு கேக்கல. கிழங்கு வேண்டாமிண்ணா பரவாயில்ல,” என்று நீட்டிய கைகளை இழுத்துக்கொண்டாள்.

தங்கச்சாமிக்கு ஏனோ அந்த செங்கால் நாரை பாட்டை எழுதிய புலவன் தான்தானோ எனத்தோன்றியது. அப்புலவனைப் போல், கையது கொண்டு மெய்யது பொத்தி, காலதுகொண்டு மேலது தழுவி இருப்பது போல் உணர்ந்தான் தங்கச்சாமி. தங்கச்சாமி, “இல்ல இல்ல, தெய்வமா வந்து என் உயிர காப்பாத்தின, இல்லையிண்ணா எம் பெண்டாட்டி பிள்ளைகளோட நெலமை என்ன ஆயிருக்கும். நாந்தான் ஒனக்குக் கிழங்கும் காய்கனியும் தரணும். இப்பொம் அந்தக் கிழங்க குடு. எனக்கு வயிரு பசிக்குது,” என்றான்.

அவனைப் பார்த்து அன்பாகச் சிரித்தாள் தண்ணிக்காரி. தங்கச்சாமியும் சிரித்தான். அவன் ஆத்தா இறந்தபின் தன்னைப் பார்த்துக் கேலி செய்யாமல் சிரித்த முதல் பெண் அவள்தான் என்று அவனுக்குத் தோன்றியது.

“ஏய்யா, இனிமேலும் தப்பான முடிவு ஒண்ணும் எடுத்திரப்பிடாது. நம்ம ஊர் பெரியாண்டசாமி சத்தியமாச் சொல்லுதேன், நீங்க அப்பிடியெல்லாம் செய்யவே கூடாது இனிமே,” என்றாள் தண்ணிக்காரி கண்ணீர் வழிய.

தங்கச்சாமிக்கும் கண்ணீர் சொட்டியது, ‘சரி,’ என்று தலை அசைத்தான்.

“நீங்க இல்லாட்ட உங்க குடும்பம் என்ன ஆகும்? ஒங்க பெண்டாட்டி என்னத்துக்கு ஆவா? நான்மட்டும் என்ன விரும்பியா இந்தத் தொழிலுக்கு வந்தேன்? பத்து வருசத்துக்கு மிந்தி எம் புருசன் திடீர்ன்னு செத்துப் போய்ட்டாக. ஆதரவு காட்ட நாதியில்ல,” கண்ணைத் துடைத்துக் கொண்டாள் தண்ணிக்காரி. மீண்டும் தொடர்ந்தாள், “வவுறு கேக்கமாட்டெங்குதே. நானாது பொறுத்துக்கிடுவேன். ஏம் ஒத்தப் பிள்ளையும் நோயில செத்தே போயிருமோண்ணு பயமா இருந்தது. அதான் இப்பிடிக் கெட்டுக் குட்டிச் சுவராப் போனேன். என்ன செய்ய? அந்தப் பெரியாண்டவந்தான் இந்தப் பாவிய மன்னிக்கணும்,” என்று மூக்கை உறிஞ்சினாள்.

மேலும் தொடர்ந்து, “சரி, சரி, எங்கதையப் பேசிக்கிட்டு... ஒங்க குடும்பமும் கெட்டுப் போயிறக்கூடாதுன்னு சொல்லுதேன்,” என்று முடித்தவள், தொடர்ந்து அவனை ஆதரவோடு பார்த்து, “என்ன பிரச்சனையின்னாலும் எங்கிட்ட வாங்க. தவறான முடிவு ஏதும் எடுத்திராதிகய்யா. என்னய்யா, சரிதானா?” என்று தலையை அசைத்தாள்.

சரி என்று பலமாகத் தலையசைத்தான் தங்கச்சாமி. தண்ணிக்காரி காட்டிய அன்பிலும் பரிவிலும் மிதந்து கண்ணீர் சிந்தினான். தான் ஒரு அனாதை இல்லை, தன்னையும் பேண ஓர் உயிர் இவ்வுலகில் இருக்கிறது என்ற எண்ணமே அவனைப் பெரிதும் உற்சாகப் படுத்தியது.

அன்றிலிருந்து அவனில் ஒரு மாறுதல் தோன்றியது. தன்னை, தன் மனைவி, அமலி, லெச்சி, ஏன் செல்லையா வாத்தியார்கூட மதிக்காவிட்டாலும் என்ன, தான் ஏன் கவலைப்படவேண்டும் என எண்ணினான். ஏன் தனக்கு நெடுநாளாய் பெரும் உதவியாய் இருந்த தன் பெரியப்பா மகன் சிங்கராசுகூட சமீபகாலமாக, சங்கரலிங்கத்தை தான் தட்டிக்கேட்கவில்லை என்ற வருத்தத்தில், பேச்சைக் குறைத்துக்கொண்டான் என்பதற்காக ஏன் கவலைப் படவேண்டும் என நினைத்துக்கொண்டான்.

எவர் மதிக்காவிட்டால் என்ன, எவர் பேசாவிட்டால் என்ன, தன்னையும் அன்போடும் பரிவோடும் பார்த்துப் பேச ஒரு ஜீவன் இருக்கிறது என்று உணர்ந்ததும் தங்கச்சாமி நெஞ்சம் குளிர்ந்தான். உணவை ருசித்து உண்டான். இரவில் இனி அவன் உறங்குவான்.

முக்கியமாக, “என்ன பிரச்சனையின்னாலும் எங்கிட்ட வாங்க,” என்ற தண்ணிக்காரியின் சொல்லைத் தங்கச்சாமி மறக்கவில்லை. அவள் அன்று கொடுத்த ஊக்கம்தான் சில நாட்கள் கழித்து வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு இரவில் அவள் வீட்டுக்கதவைத் தட்டும் அளவுக்கு அவனுக்குத் தைரியம் கொடுத்தது.




28



பெரியாண்டபுரத்தின் சரித்திரத்திலேயே முதன்முதலாய்க் கொலை நடந்த பன்னிரெண்டாம் நாள் இன்ஸ்பெக்டர் ராஜா, சங்கரங்கோவில் காவல் நிலையத்திலிருந்து, சங்கரலிங்கம் கொலை வழக்கைப் பற்றி விசாரிக்க சத்திரம் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து மாறுதல் பெற்று சங்கரங்கோவிலில் வந்து சேர்ந்து, சில மணி நேரங்களே ஆகி இருந்தன. சத்திரம் காவல் நிலைய எஸ்.ஐ. இளங்கோ அவரை வரவேற்று உட்காரவைத்தார். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டீ வர, டீயைக் குடித்தவாறே பேச்சைத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜா.

“அந்தச் சங்கரலிங்கம் கொலை வழக்கு விசயமா விசாரிக்கிறதுக்காக குமுளிக்கு மேல அந்த எஸ்ட்டேட்டுக்குப் போய்ட்டு விசாரிச்சிட்டு வந்தீங்களே, ஏதாவது தடையம் கிடச்சதா? உங்க அபிப்பிராயம் என்ன?” என்றார் இன்ஸ்பெக்டர் ராஜா.

முன்னேற்பாடாக எஸ்.ஐ. தன் கையில் ஒரு கடிதம் வைத்திருந்தார். அவர், “சார், நான் அந்த விரால்ராசு வேலை செய்ற நீலாம்பரி எஸ்ட்டேட்டுக்குப் போயி விசாரிச்சதுல எனக்கு என்னமோ நாம அவனைத் தண்டிக்க முடியும்ன்னு தோணலை சார்,” என்றார் எஸ்.ஐ.

இன்ஸ்பெக்டர் ராஜா, “என்ன இளங்கோ, எஸ்.ஐ.களிலேயே ரொம்பப் புத்திசாலி, நினைச்சா யாருக்கும் கன்விக்சன் வாங்கி குடுத்திருவார்ன்னு பேர் வாங்கிய நீங்களே இப்பிடிச் சொல்றீங்க,” என்றார்.

“அந்த விரால்ராசு எஸ்ட்டேட்டில இருந்து ஊருக்கு வந்து ஒரு மாசத்துக்கு மேல் இருக்கும் சார். கொல நடந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் நாலு மணி வரைக்கும் தோட்டத்தில வேலை செய்திருக்கான். அதுக்கு ரெக்கார்டும் இருக்கு. அடுத்த நாள் சனிக்கிழமை காலையில ஒன்பது மணிக்கு எஸ்ட்டேட் ஓனர் வீட்டில வேலைக்குப் போயிருக்கான்,” என்றார் எஸ்.ஐ.

“அவன் ஒரு முக்கியமான சஸ்பெக்ட். ஏன் வெள்ளிக்கிழமை நாலு மணியில இருந்து சனிக்கிழமை காலை ஒன்பது மணி வரை எங்க இருந்தாங்கிறதுக்குச் சாட்சி இருக்கா? அவன் எஸ்ட்டேட் ஓனர் வீட்டுல என்ன வேலை பாத்தான்? அதுக்கு சாட்சி இருக்கா?” என்றார் இன்ஸ்பெக்டர் ராஜா.

“அதத்தான் சொல்ல வந்தேன் சார். நான் அவனைக் கண்டுபிடிச்சி விசாரிச்சிக்கிட்டு இருந்தேன் சார். அந்த நேரம் பாத்து அந்த வழியா ஒரு ஜீப் வந்தது. இந்த விரால்ராசுப் பய ஓடிப்போயி அந்த ஜீப் முன்னால விழுந்தான். என்னடா இது தற்கொல பண்ணிக்கப் பாக்கிறானான்னு யோசிக்கயில ஜீப் நின்னது.”

முதலாளி இறங்கி வந்து, “என்ன விராலு என்ன விசயம்? வண்டி முன்னால ஏன் விழுர”?ன்னு கேட்டார்.

அவன், “ஐயா என்னக் காப்பாத்துங்கையா. என்ன கொலக்கேசுல கைது பண்ண பாக்காங்கையா. பொய்க் கேசுல தூக்குல போடப் பாக்காங்கையா,” என்று அவர் கால்ல நெடுஞ்சாண்கிடையா விழுந்தான்.

“விசயத்தச் சொல்லுடா நான் பாத்துக்குறேன்,” என்றார் முதலாளி.

நான் குறுக்கிட்டு, “சார் நான் எஸ்.ஐ. இளங்கோ, நான் ....” என்ன முடிக்க விடாம முதலாளி பேசினார், “விரால் சொல்லி முடிக்கட்டும், அப்புறம் வேணா நீங்க சொல்லுங்க,” என்றார். அவர் சொன்ன விதமே அவர் அந்த விரால்ராசு மேல அதிக நம்பிக்கை வச்சிருக்கிற மாதிரி தெரிஞ்சது.

விரால் தொடர்தான், “சார் போன வெள்ளிக்கிழமைக்கு முந்தின வெள்ளிக்கிழமை எங்க ஊர்ல யாரோ ஒரு கொல செஞ்சிட்டாங்களாம். போலீஸ்க்கு யாரும் கிடைக்கல போல இருக்கு. நான் சத்தியமாச் செய்யல சார். நாலுமணி வரைக்கும் தோட்டத்தில வேல செஞ்சேன். பெறகு வீட்டுக்கு போயி சாப்பிட்டுத் தூங்கி எந்திரிச்சு சனிக்கிழமை காலையில ஒங்க வீட்டுல வேல செய்தேன். அம்மாவ வேணுமின்னாலும் கேட்டுக்கோங்க அய்யா,” என்றான். மேலும் தொடர்ந்து, “நான் எப்படிய்யா ராத்திரியோட ராத்திரியா ஐநூறு மைலு போய்க் கொல செஞ்சிட்டு விடியகாலயில வேலைக்கி வந்திருப்பேன்.”

“ஐநூறு மைலு இல்ல, இருநூத்தம்பது மைல்தான் இருக்கும்,”ன்னு நான் குறுக்கிட்டு சொன்னேன் சார்.

அதுக்கு முதலாளி, “இது என்ன மதுரை மெட்ராஸ் தேசிய நெடுஞ்சாலையா. இந்த எஸ்ட்டேட்டுக்கு வருததுன்னா ஒவ்வொரு மைலும் நாலு மைலாத்தான் தெரியும்,” என்ற முதலாளி, பக்கத்தில் நின்ன மேனேஜரைக் கூப்பிட்டார். அந்த ஆள் ஒரு ரெஜிஸ்டரோட வந்தார்.

முதலாளி அவர் கையில இருந்து ரெஜிஸ்டர வாங்கி புரட்டிப் பார்த்தார். பின் என்னப் பாத்து, “நான் இந்த எஸ்ட்டேட் முதலாளி. இவன் நீங்க சொல்ற வெள்ளிக்கிழமை நாலு மணி வரை தோட்டத்தில வேல செஞ்சிருக்கான். அடுத்த நாள் சனிக்கிழமை ஒம்பது மணிக்கு என் வீட்டில வேல செய்ததுக்கு நான் சாட்சி. என் பெயர் ராஜகோபால். நான் எங்க வந்துன்னாலும் சொல்லுவேன். சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் வேணாலும் வருவேன்,” என்று சொன்னார்.’ என்று எஸ்.ஐ. அன்று எஸ்ட்டேட்டில் நடந்த நிகழ்ச்சிகளை விளக்கினார்.

அவரை இன்ஸ்பெக்டர் இடைமறித்து, “என்ன இது, ஊர்ல கோபால், அதான் அருவாள் கோபால், என்னண்ணா, எங்கன்னாலும் வந்து சொல்வேன், ஏன் ஹய் கோட்டுக்கே வேணுமின்னாலும் வந்து சொல்வேன்னான்னு சொல்றானு நீங்க சொன்னீங்க. இந்த ராஜகோபால் என்னண்ணா சுப்ரீம் கோட்டுக்கே வாரேன்ண்ணு சொல்லுறார். இந்த கோபாலுன்னு பேர் வச்சவங்களே இப்படித்தானோ,” என்றார்

இருவரும் சிரித்தனர்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top