JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 33 & 34

Uthaya

Member


33

முன்தினம் சொன்னதுபோலவே இன்ஸ்பெக்டர் ராஜா அடுத்த நாள் காலை சத்திரம் காவல் நிலையத்திற்கு வந்தார். கொஞ்ச நேரம் எஸ்.ஐ.யுடன் பேசிவிட்டு, “டீ.எஸ்.பி. கூப்பிட்டிருக்கார், திருநெல்வேலி போய்ட்டு முடிஞ்சா திரும்பிப் போறப்ப வாரேன், இல்லாட்டி நாளைக்கு வாரேன்,” என்று சொன்னார்.

இன்ஸ்பெக்டர் எழுந்த உடன் எஸ்.ஐ. மட்டும்மில்லாமல் வெளி அறையில் உட்கார்ந்திருந்த ஏட்டு கான்ஸ்டபிள் எல்லோரும் எழுந்து நின்றனர். இன்ஸ்பெக்டர் முன் நடக்க, எஸ்.ஐ. பின் தொடர்ந்தார், மற்றவர்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடர்ந்தனர். இன்ஸ்பெக்டர் வெளியே வந்து ரோட்டில் நின்று இரண்டு பக்கமும் முறைத்துப் பார்த்தார். மரத்தடியில் நின்ற ஜீப் கிளம்பி இன்ஸ்பெக்டர் பக்கத்தில் வந்து நின்றது. இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஏறப்போனார். அப்பொழுது பார்த்து ரோட்டில் ஒருவன் சைக்கிளில் புடலங்காய் மாதிரி ஏதோ ஒன்றை கட்டாய்க் கட்டி ஏற்றிச்சென்றான். அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், ஜீப்பில் ஏறாமல் நின்றார்.

“அவனை இங்க கூப்பிடு,” என்றார் ஏட்டைப் பார்த்து.

ஏட்டு வேகமாய் ஓடி, சைக்கிள்காரனை நிறுத்தி, “சைக்கிள நிறுத்துய்யா. இங்க வாய்யா. ஐயா கூப்பிடுதாக,” என்றார்.

பயந்தே போனான் சைக்கிள்காரன். என்னமோ ஏதோவென்று சைக்கிளில் இருந்து இறங்கி மடித்துக் கட்டியிருந்த வேட்டியை இறக்கிவிட்டுக்கொண்டு சைக்கிளைத் தள்ளியவாறே வந்தான்.

அவன் அருகில் வந்தவுடன், “இது என்னய்யா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

அதற்குள் எஸ்.ஐ., ஏட்டு எல்லோரும் அருகில் வந்தனர். சைக்கிள்காரன் முழித்தான்.

“இது என்ன காய்ன்னு கேட்டன்ல?” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஒரு வினோதமான வகைக் காய்களைக் கட்டாகக் கட்டி சைக்கிள் காரியரில் வைத்துக் கட்டியிருந்தது. அவை நீண்டு உருண்டையாய் பச்சை நிறத்தில் இருந்தன. அவற்றின் தடிமன் ஒரு அங்குலம் இருக்கும், நீளம் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை இருக்கும்.

இன்ஸ்பெக்டர் தன்னைத்தான் கேள்வி கேட்கிறார் என்று புரிந்தாலும், ஏன் இப்படி ஒரு கேள்வி என்று சைக்கிள்காரன் நினைத்திருக்க வேண்டும். ஒரு வேளை காவல்துறை அதிகாரி தன்னைச் சோதிக்கிறாரோ என்றும் நினைத்திருக்கலாம். அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தன் சைக்கிள் காரியர் மேல கட்டியிருந்த கட்டையும் இன்ஸ்பெக்டரையும் மாறி மாறிப் பார்த்தவாறே பேந்தப்பேந்த முழித்தான்.

ஏட்டு முன்வந்து, “அது காய் இல்ல சார். பனங்கதிர். பனை மரத்தில இருந்து வளர்ரது சார் இது. ஆண் பனையில நுங்கு வராது சார், அதுக்கு பதில் இந்த கதிர்தான் வரும். இப்பிடி பச்சையாக இருக்கையில் சிறு துண்டா வெட்டி வெள்ளாட்டுக்கு தீனியாப் போடலாம். காஞ்சா வெறகாத்தான் பயன்படும்,” என்று விளக்கினார்.

“ஒரு கதிரை எடுத்துக் காட்டு,” என்றார் இன்ஸ்பெக்டர்.

தான் ஏதும் தப்புச் செய்யவில்லை, போலீசிடம் மாட்டிக்கொள்ளவும் இல்லை எனப் புரிந்ததும் சைக்கிள்காரனுக்கு உயிர் வந்தது. சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி, கட்டியிருந்த கயிற்றை லேசாக அவிழ்த்து ஒரு பனங்கதிரை விடுவித்தான். பின் அதை இன்ஸ்பெக்டரிடம் பவ்வியமாகக் கொடுத்தான்.

இன்ஸ்பெக்டர் அதைக் கையில் வாங்கிக் கூர்மையாக உற்றுப் பார்த்தார். ஒரு காம்பில் இருந்து மூன்று கதிர்கள் முளைத்திருந்தன. ஒவ்வொன்றும் பச்சையாக உருண்டையாக ஒரு அடி நீளத்தில் ஒரு அங்குலம் பருமனுடன் இருந்தது. ஒவ்வோரு கதிரும் காம்பில் சேரும் இடத்தை நெருங்க நெருங்க சற்று வளைந்து காணப்பட்டது. சைக்கிளில் கட்டப்பட்டிருந்த மற்றக் கதிர்களைப் பார்த்தார், சில காம்பில் நான்கு கதிர்கள் இருந்தன, சிலவற்றில் இரண்டு கதிர்கள் இருந்தன. தன் கையில் இருந்த ஒரு கதிரை இரண்டு கைகளாலும் பிடித்து உடைத்தார், எளிதில் பிட்டுக்கொண்டது. கதிரின் நடுவில்தான் தண்டு இருந்தது, அந்தத் தண்டைச் சுற்றி பூ மாதிரி வட்ட வட்டத் தகடுகள் அடுக்கு அடுக்காய் வரிசையாய் இருந்தன, அவைதான் அந்த கதிருக்கு அதன் பருமனை அளித்தது. கதிருக்கு மேலே இருந்த காம்பை ஒடித்துப் பார்த்தார், அதை உடைக்க முடியவில்லை.

இன்ஸ்பெக்டரின் செய்கைகளைக் கூர்ந்து கவனித்தார் எஸ்.ஐ. ஒருவர் மனதில் ஓடிய எண்ணங்கள் அடுத்தவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இன்ஸ்பெக்டர் கதிரை எஸ்.ஐ.யிடம் கொடுத்துவிட்டு ஜீப்பில் ஏறி அமர்ந்தார். எஸ்.ஐ., ஏட்டு, மற்றும் கான்ஸ்டபிள்கள் சலுயூட் செய்ய ஜீப் டுர்ர்ர் என்று பறந்தது.

சைக்கிள்காரன் நான் போகலாமா என்பது மாதிரி பார்த்தான். எஸ்.ஐ., “இந்த ஒரு கதிரை மட்டும் நான் வச்சுக்கிடலாமா?” என்றார் சைக்கிள்காரனைப் பார்த்து.

“வச்சிக்கோங்க சார். வெறும் வெள்ளாட்டுத்தீனி சார், வச்சிக்கோங்க சார்,” என்றான் சைக்கிள்காரன்.

“நீ போப்பா,” என்றார் எஸ்.ஐ.

சைக்கிள்காரன் நிம்மதியோடு அங்கிருந்து அகன்றான். எஸ்.ஐ.க்கு ஏதோ ஒன்று மனதை உறுத்தியது. யோசித்தவாறே தன் அறைக்கு வந்து தன் மேசைமுன் அமர்ந்தார். அந்த கதிரின் அமைப்பையும், அது காம்பில் சேறுமுன் மெள்ள வளைந்திருப்பதையும் உற்றுப் பார்த்தவண்ணம் யோசித்தார். பின் தலையை நிமிர்த்தி எதிர்ச் சுவரைப் பார்த்த வண்ணம் யோசித்தார்.

ஒரு வருடமாகிவிட்டது அந்த ஸ்டேசனுக்கு மின்சார விளக்கு வந்து. அது ஒரு மிக பிரமாண்டமான புதுமை என்பது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது எஸ்.ஐ. க்கு. யோசித்த வண்ணம் எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த மின் விளக்கைப் பார்த்தார். சுவரிலிருந்து கீழ் நோக்கி வந்த ஒரு சிறு குழாயின் நுனியில் பல்பு பொருத்தப்பட்டிருந்தது. பல்புக்கு மேல், வெளிச்சத்தைக் கீழே குவிக்க வட்டவடிவிலான கூம்பு ஒன்று பொருத்தப் பட்டிருந்தது. ஆனால் எஸ்.ஐ.யின் கண்கள் சுவரிலிருந்து வந்த சிறு குழாயையே கூர்ந்து பார்த்த வண்ணமிருந்தன.

தன் முன் கிடந்த பனையின் கதிரும் அந்தக் குழாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை உணர்ந்தார். அந்தக் குழாய் கொஞ்சம் பெரிதாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். அக்குழாயின் நுனியில் இருந்த பல்பு கூம்பு எல்லாவற்றையும் கழற்றிவிட்டால் குழாய் எப்படி இருக்கும் என்று நினைத்தார். தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டார்.

எஸ்.ஐ. எழுந்து ஒரு பனங்கதிரை, அது காம்பில் சேரும் இடத்தில் ஒடித்தார். அதைச் சுவரில் கீழ் நோக்கித் தொங்குமாறு வைத்தார். பின் வினோதமான ஒரு செயலைச் செய்தார். அக்கதிரை, தன் பெல்ட் பக்கிளிளுக்கு இரண்டு அங்குலம் கீழே வைத்து கீழ் நோக்கி தொங்க விட்டார். அவருக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. தன் நாற்காலியில் அமர்ந்து மேஜைமேல் தலையைக் கவிழ்த்து, வேண்டியமட்டும் சிரித்தார்.




34



எஸ்.ஐ. இளங்கோ வாய்வலிக்கச் சிரித்து முடித்துவிட்டுப் பல நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். சிந்தனையின் முடிவில் ஏதோ முடிவு செய்தவர் போல், “ஏட்டு,” என்று கூவினார்.

“எஸ் சார்,” என்று விரைத்து நின்று சல்யூட் அடித்த ஏட்டு, எஸ்.ஐ. ஆரம்பிக்குமுன்னரே, “சார் அந்த -டுக்குத்திருடனை பத்தி என்ன நினைக்கிறீங்க,” என்றார்.

எஸ்.ஐ. சிரித்தார். பின், “மொதல்ல அவன் திருடனான்னு நம்பமுடியலை. ஏன் அவன் ஒரு ஆம்பளையா பொம்பளையான்னு கூட நமக்குத் தெரியாது,” என்றார்.எஸ்.ஐ. சொன்ன ‘ஆம்பளையா பொம்பளையா,’ என்ற வார்த்தைகள் ஏட்டை சுரீர் என்று தாக்கின.

ஏட்டு யோசித்துக்கொண்டே, “சரி சார், நம்மோட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன,” என்றார்,

எஸ்.ஐ. “அந்த -டுக்குத் திருடன் அலையிற ஏரியாவில அவன் மாதிரி உயரம், பருமன் உள்ள ஆம்பிளைங்கள விட்டுட்டு, பொம்பளைங்க எத்தனை பேர் இருப்பாங்க,” என்றார்.

“அதிகம் பேர் இருக்க மாட்டாங்க சார். ஆறடி உயரத்தில ரெண்டு பொம்பளைக இருக்கலாம், மிஞ்சிப்போனா நாலு பேர் இருப்பாங்க,” என்றார்.

“எனக்கு அப்படி எத்தனை பொம்பளைங்க இருக்காங்க, அவங்க யார் யார்ன்ற லிஸ்ட் வேணும்,” என்றார் எஸ்.ஐ.

“இன்னைக்கே லிஸ்ட் எடுத்திரலாம் சார்,” என்றார் ஏட்டு.

“ஜீப்ப எடுத்திட்டி போகாதீங்க. மாட்டுக்காரன் வீட்டுக்குப் போகாதீங்க,” என்றார் எஸ்.ஐ.

“சரி சார்,” என்ற ஏட்டு, சில நிமிடங்களில் தன் சைக்கிளில் ஏறிப் பறந்தார்.

அன்று சாயங்காலம் இருட்டுவதற்குள் ஏட்டு பெரியாண்டபுரத்தில் சுமார் ஆறடி உயரத்தில் இருந்த பெண்களின் பட்டியலோடு திரும்பி வந்து எஸ்.ஐ. யிடம் நீட்டினார்.

“வெரி குட், மொதல்ல உக்காருங்க. அப்புறம் சொல்லுங்க,” என்றார் எஸ்.ஐ. முகம் மலர.

“சார், என் மொதல் கணிப்பு தப்பு. ஐந்தே முக்கால், ஆறு அடி உயரத்தில அந்த ஊர்ல பத்துப் பொம்பளைங்க இருக்காங்க,” என்றவர் சிரித்துகொண்டே, “ஒருத்தருக்கும் தாடி மீசை இல்ல. நாம ஆம்பிளைங்கள தேடுனபோது ஊர்ல தாடி மீசை இல்லாத ஆம்பிளைங்களே கம்மி, அதுவும் ஆறடி உயரத்தில இருந்த ஆம்பிளைங்க எல்லாரும் தாடி மீசை வச்சிருந்தான். இப்போம் அந்தப் பிரச்சனை இல்ல. நாம அந்த ஒயரத்தில் இருக்கிற எல்லாப் பொம்பளைங்களையும் விசாரிக்கலாம்,” என்றார்.

“சரி, சொல்லுங்க,” என்றார் எஸ்.ஐ., பொறுமையிழந்தவராய்.

“அந்தப் பத்துப் பேர்ல நாலு பேர் கூனி கம்பு ஊனிட்டாங்க சார். மிச்ச ஆறு பேர்ல ஒரு அம்மா டீச்சர், ஒரு அம்மா நர்ஸ். மித்த நாலுபேர் விவசாயம், கூலி வேலை செய்றவங்க,” என்றார் ஏட்டு.

“குட், நாளைக்கே அந்த ஊருக்குப் போய் விசாரிப்போம்,” என்றார் எஸ்.ஐ.

“சரி சார்,” என்றார் ஏட்டு.
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top