JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 35 & 36

Uthaya

Member


35



மறு நாள் காலையில் எஸ்.ஐ. இளங்கோ, ஏட்டு, கான்ஸ்டபிள் சகிதம் பெரியாண்டபுரத்திற்குச் சென்றார். பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடம் முன் ஜீப்பை நிறுத்தச்சொன்னார். அந்தக் கட்டிடம், ஒரு பெரிய அறையும், அதன்முன் ஒரு சிறு காம்பவுண்டுச் சுவரால் வளைக்கப்பட்ட இடமும்தான். உள்ளே சில பீரோக்கள் இருந்தன. அவற்றில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மற்றப்படி சில நாற்காலிகள், இரு மேசைகள் மற்றும் சில பெஞ்சுகள் கிடந்தன.

மாலை வேளைகளில் அந்த அறையில் யாராவது உட்கார்ந்து பேசுவது வழக்கம். அன்று அந்த அறையில் யாரும் இல்லை. எஸ்.ஐ. வந்திருப்பது தெரிந்தோ என்னவோ, பஞ்சாயத்து தலைவர் ஜெயஜோதி வந்து எஸ்.ஐ.யைச் சந்தித்தார்.

பஞ்சாயத்து தலைவரைப் பார்த்த எஸ்.ஐ., “சார், சில நபர்களை விசாரிக்க வேண்டியதிருக்கிறது. ஒங்க ஆபீசை கொஞ்சம் உபயோகப் படுத்திக்கிடலாமா?” என்றார்.

“தாராளமாக உபயோகிச்சுக்கோங்க சார்,” என்றார் பஞ்சாயத்து தலைவர் ஜெயஜோதி. “குடிக்க தண்ணீர் வேணுமா சார்? வேற ஏதாவது வேணுமா சார்,” என்றார் தொடர்ந்து.

“தண்ணி மட்டும் கொடுத்து அனுப்புனீங்கண்ணா நல்லாயிருக்கும்,” என்றார் எஸ்.ஐ.

அதற்குள் வெட்டியான், தலையாரி இருவரும் வந்து சேர்ந்தார்கள். எஸ்.ஐ., மேஜைமுன் நாற்காலியில் அமர்ந்துகொண்டார். முந்தின நாள் ஏட்டு கொடுத்த லிஸ்ட்டில் முதியவர்கள், படித்து வேலைபார்ப்பவர்கள் தவிர மற்ற நாலு பெண்கள் பெயரையும் சொன்னார். “இந்த நாலு பொம்பளைங்ககிட்ட கொஞ்சம் கேள்வி கேக்கணும். கூட்டிக்கிட்டு வர முடியுமா?” என்றார், வெட்டியான், தலையாரி இருவரையும் பார்த்து.

உடனே தலையாரி, “சரி சார், நாலு பேர்தான. வெட்டியானும் நானும் ஆளுக்கு ரெண்டு பேராய் பிரிச்சுக்கிடுதோம்,” என்றார்.

கிளம்புமுன் வெட்டியான், தலையாரி இருவரும் ஒரு நிமிடம் கூடிப் பேசி யார் எந்த இருவரை அழைத்து வருவது என்று முடிவு செய்து கொண்டனர். பின் வெட்டியான் எஸ்.ஐ. யை நோக்கி, “சார், என் கூட ஒரு போலீச அனுப்பினீங்கண்னா விசயம் லகுவா முடிஞ்சிரும்,” என்றார்.

எஸ்.ஐ. கான்ஸ்டபிள் 107 ஐப் பார்த்துத் தலையசைக்க, 107 வெட்டியானோடு சென்றார். தலையாரி அவருக்கு நியமிக்கப்பட்ட இருவரையும் தனியாகவே போய் அழைத்து வரச் சென்றார்.

சென்ற பத்தே நிமிடத்தில் தலையாரி ஒரு பெண்ணைக் கூட்டிவந்தார். முதலில் வந்தது இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க செல்லத்தாய், பயந்துகொண்டே வந்தாள். கூட அவளுடைய கணவனும் வந்தான். அவர்கள் இருவரின் உடம்பும் வேர்வையில் குளித்திருந்தது, கைகாலெல்லாம் மண். இருவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்திருக்க வேண்டும். செல்லத்தாயைத் தொடர்ந்து அவள் கணவனும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழையப் பார்த்தான்.

“நீ வெளிய நில்லுய்யா,” என்று அதட்டுப் போட்டார் ஏட்டு.

செல்லத்தாயின் கணவன், பயந்தாலும், “பொம்பளப் பிள்ளய ஆம்பளைக மட்டும் இருக்க எடத்துல தனியா கொண்டுபோயி வச்சிக்கிடுதது சரியா?” என்றான்.

எஸ்.ஐ. அவனைப் பார்த்து, “பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்லய்யா. நாங்க சந்தேகப்படுற நபர்கிட்ட கேள்வி கேட்டுட்டு விட்டுருவோம். நீங்க வெளிய நில்லுங்க முடிஞ்சதும் கூட்டிட்டுப் போங்க,” என்றார்.

தலையாரி அந்த மனிதனிடம் கிசிகிசுக்க, அவன் வெளியே நின்றுகொண்டான். அறைக் கதவை மூடுமுன் ஓடி வந்த செல்லத்தாயின் தகப்பன், தலையாரியோ ஏட்டோ அவனை நிறுத்துவதற்குள் அறையின் உள்ளே நுழைந்துவிட்டான். செல்லத்தாயின் தகப்பனும் மகளைப்போல் உயரமாய் இருந்தான், சுமார் ஆறடி இருப்பான். கூறிய மூக்கும், தாடி மீசையுமாக ஒரு சேனைத்தலைவனைப் போல் கம்பீரமாய் இருந்தான்.

நுழைந்தவன், “பொம்பள பிள்ளய ஆம்பளக...,” என்று ஆரம்பித்தவனை, ஏட்டு நிறுத்தி, “யோவ், நீ பாட்டுக்குத் தொறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையிற மாதிரி வார,” என்றார்.

செல்லத்தாயின் தகப்பன் சற்று திகைத்துவிட்டாலும், விடாமல், “அது ஏம் மகா. நான் அவ தகப்பன். நான் இங்க நிப்பேன்,” என்றான்.

தலையாரி, “மாப்ளே இங்க வாங்க,” என்று கூறி தனியாக அவர் காதில் கிசுகிசுத்தார். பின், “நாம இங்க நிக்கையில என்ன நடந்திரும்?” என்றார் சத்தமாக.

எஸ்.ஐ., “ஒரு நாலு கேள்வி கேக்க வேண்டியிருக்கு. அத இங்கவச்சு கேட்டால் சீக்கிரம் முடிஞ்சுடும். இல்லைன்னா ஸ்டேசனுக்குக் கூட்டிட்டுப் போய்க் கேக்க வேண்டியதிருக்கும். பொம்பளப் பிள்ளய ஏன் அலைய வைக்கணுமேன்னுதான்,” என்றார் செல்லத்தாயின் தகப்பனைப் பார்த்து.

செல்லத்தாயின் தகப்பனும் அமைதியாய் வெளியே நின்றுகொண்டான். அறையினுள் எஸ்.ஐ., ஏட்டு இருவரும். வெளியே, தலையாரி, மற்றும் செல்லத்தாயின் கணவனும், தகப்பனும் நின்றுகொண்டிருந்தார்கள். கதவு மூடப் பட்டது.

அந்தப் பெண்ணைப் பார்த்தார் எஸ்.ஐ., “பயப்படாதேம்மா. நாலே நாலு கேள்வி. அவ்வளவுதான், என்ன, முதல்ல உக்காரு,” என்றார்.

அவள் பயந்துகொண்டே, நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தாள். அவளை பார்த்து, “ஒம் பேர் என்னம்மா?” என்றார், குரலில் முடிந்தவரை சாந்தத்தைக் குழைத்துக்கொண்டு.

அவளுக்குப் பேச்சே வரவில்லை. எஸ்.ஐ., ஊக்குவிக்கும் வகையில், “சரி, ஒம் பேரு செல்லத்தாயா?” என்றார்.

செல்லத்தாய், தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள். அவள் முகத்தில் அப்பாடா இனி மூணு கேள்விதான் என்பதைப்போல் நிம்மதி படர ஆரம்பித்தது.

“இந்தக் கொலைய யார் செஞ்சிருப்பான்னு ஒனக்குத் தெரியுமா?” என்றார் எஸ்.ஐ.

இல்லை என்பதுபோல் தலை அசைத்தாள் செல்லத்தாய்.

“இந்தச் சங்கரலிங்கத்தைக் கொண்ணது அந்த ம்..டுக்குத் திருடனாய் இருக்குமா?” என்றார் எஸ்.ஐ.

“தெரியாது” என்று முனங்கியவளுக்கு, பயத்தில் கை கால் ஆட்டம் எடுத்தது.

“பயப்படாதேம்மா, நான் ஓன்ன ஒண்ணும் செய்ய மாட்டேன். நீ உண்மையச் சொன்னாப் போதும், சரியா,” என்று சமாதானம் செய்தார் எஸ்.ஐ.

பின், “ஏட்டு,” என்றார்,

ஏட்டு முன் வந்து, அவர்கள் முன் மேசைமேல் கிடந்த துண்டை எடுத்தார். மேசைமேல் நான்கு காய்கள் வரிசையாய்க் கிடந்தன. ஒரு வாழைக்காய், ஒரு பீர்க்கங்காய், ஒரு புடலங்காய். நான்காவது காய்க்குப் பதில் ஆண்பனையின் கதிர் ஒன்று கிடந்தது.

“இதுல ஒனக்கு எந்தக் காய் பிடிக்கும்?” என்றார் எஸ்.ஐ.

செல்லத்தாய் பதில் பேசவில்லை, மிரண்டுபோய் விழித்தாள்.

எஸ்.ஐ. புடலங்காயை எடுத்து, “இது என்ன,” என்றார்.

“புடலங்கா,” என்றாள்.

பனையின் கதிரை எடுத்து, “இது எதுக்கு உபயோகப்படும்?”

“வெள்ளாட்டுக்குத் தீனி,”

“வேற எதுக்கு,”

“காஞ்சா வெறகு எரிக்க,”

“வேற எதுக்கு,”

செல்லத்தாய் முழித்தாள்.

“அந்தத் திருடனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா?”

‘இல்ல,’ என்பதுபோல் மெல்லத் தலை அசைத்தாள்.

“கடைசியா ஒண்ணு கேக்கேன். நீ உண்மையாப் பதில் சொல்லு, போயிரலாம். நீ பொய் சொன்னேண்ணு பின்னால நான் கண்டுபிடிச்சேன், ரொம்ப பொல்லாதவனா ஆயிடுவேன்,” என்றார் சற்று காரமாய்.

“அந்தத் திருடன ஒனக்குத் தெரியுமா?”

“தெரியாது,”

“அந்தத் திருடந்தான் இந்தக் கொலைய செய்திருப்பான் அப்பிடிண்ணு ஒரு புரணி அடிபடுதே. அவனா கொல செஞ்சான்?”

“தெரியாது,”

“ஒனக்கு நிச்சயமா அந்தத் திருடன தெரியாது?” எஸ்.ஐ.

“தெரியாது,” என்று அவசரமாய்த் தலையசைத்தாள்.

“சரி. நீ போறதுக்கு முன்னால ஒண்ணே ஒண்ணு. இங்க கேட்ட கேள்விகளப் பத்தி யார்கிட்டையும் மூச்சு விடக்கூடாது. சரியா?” எஸ்.ஐ.

செல்லத்தாய் தலை அசைத்தாள். “சரி நீ போகலாம்,” என்றார் எஸ்.ஐ.

அவள் போன பின் ஏட்டு எஸ்.ஐ. யைப் பார்த்தார். எஸ்.ஐ. உதட்டைப் பிதுக்கி மெல்ல தலையைப் பக்கவாட்டில் அசைத்தார்.




36

இரண்டாவது வந்த பெண் மருது, ஐம்பது வயதிருக்கும். அவளும் விவசாய வேலை செய்துவிட்டுத்தான் வந்திருக்கவேண்டும், அவள் சேலை கசங்கிக்கிடந்தது மட்டுமில்லாமல், நெற்றி கழுத்தெல்லம் இன்னும் வியர்வை முத்துமுத்தாய் நின்றது. கைகால்களில் அவசர அவசரமாகக் கழுவிய மண் இன்னும் கொஞ்சம் ஒட்டி இருந்தது. முகத்தில் வயதின் அனுபவம் தெரிந்தது, கொஞ்சம் தைரியமாகப் பதில் சொன்னாள். இருப்பினும் பயம் கண்களில் தெரியத்தான் செய்தது.

எஸ்.ஐ., “உக்காரும்மா. சும்மா ஒரு அஞ்சு நிமிசம் கேள்வி கேட்டிட்டுப் போகச் சொல்லிருவோம். தெரிஞ்ச உண்மைய மறைக்காமச் சொல்லணும் சரியா?” என்றார்.

“சரிய்யா,” என்று தலை அசைத்தாள்.

“ஒம் பேர் என்னம்மா?” என்றார் எஸ்.ஐ.

“மருதுவெள்ளி. மருதுண்ணுதான் எல்லாரும் கூப்பிடுவாக. ஆனா ஏம் பேரு மருதுவெள்ளி,” என்றாள்.

“வயது?” என்றார் எஸ்.ஐ.

“அது கெடக்கும். செமாரா சொன்னா அம்பது இருக்கும். கரக்கட்டா தெரியாது. படிக்கலையில்லோ அய்யா?” என்றாள் மருது.

“ஒனக்கு இந்த கொலைய யார் செஞ்சிருப்பான்னு தெரியுமா?” என்றார் எஸ்.ஐ.

தயக்கத்தோடு, “தெரியாதைய்யா. உள்ளதச் சொல்லுதென். கண்ணான (கண்ணில் அடித்துச் சத்தியமாக) எனக்குத் தெரியாதுய்யா,” என்று கண்களில் தன் வலதுகையை வைத்துச் சத்தியம் செய்தாள் மருது.

“இந்த சங்கரலிங்கத்தைக் கொன்னது அந்தத் திருடனா இருக்குமா? அதான் அந்த அம்மணமா அலையிற திருடனாய் இருக்குமா?” என்றார் எஸ்.ஐ. இந்தமுறை டுக்குத் திருடன் என்ற சொல்லை ஒரு பெண்முன் சொல்வதை தவிர்த்ததற்காகத் தன்னையே பாராட்டிக்கொண்டார்.

மருதுவின் உதட்டுத் தசைகள் இழுக்க கன்னத்தில் குழிவிழுந்தது. பற்கள் தெரியாமல், மிக லேசாக சிரித்த மருது, பலமாகத் தலையைப் பக்கவாட்டில் ஆட்டியவாறே, “இந்தக் கொலைக்கும் அவனுக்கும் சம்மந்தமில்ல அய்யா,” என்றாள்.

எஸ்.ஐ., சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, சற்று முன் சரிந்து அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தவாறே, “எப்பிடிச் சொல்லுறேம்மா?” என்றார்.

தன் கருத்துக்கு மரியாதை கிடைப்பதாக நினைத்து, சற்று பெருமிதம் அடைந்த மருது, “அந்தத் திருடன் ஒரு போக்கிரிப் பய அய்யா. அவன் திருடனே இல்ல. அவன் யாரையும் அடிக்கல, பிடிக்கல. அவன் ஒரு கூத்தாடிப் பெய அய்யா. நாங்க பொம்பளைகளா அவன் செஞ்ச கோட்டிக்காரத்தனத்த பத்தி நல்லாப் பேசிக்கிடுவோம். அவன் செஞ்ச காரியமெல்லாம் ஒரு பொம்பளையால செய்ய முடிஞ்சா செஞ்சிருப்பான்னு, பேசிக்கிடுவோம். ஊரில எவளுக்கும் தயிரியம் காணாது, அப்பிடிச் செய்ய. இருந்தா எப்பமோ செஞ்சிருப்பா,” என்றாள் மருது.

“ஏம்மா அப்பிடிச் சொல்லுற?” என்றார் எஸ்.ஐ.

மருது சற்று நிறுத்தி யோசித்துவிட்டு, “அய்யா நான் சொல்லுதமிண்ணு கோவிச்சுக்கிடப்பிடாது. நான் இந்த ஊர் ஆம்பளகளைத்தான் சொல்லுதேன். இந்த ஆம்பளைக படுத்துத பாடு இருக்கே, அய்யா சொல்லிமாளாது. அதுவும் ஒவ்வொருத்தருக்கு (ஒரு சிலருக்கு) வேலைக்கி போய்ட்டா படாதபாடு படித்திருவாங்க பொம்பளைய. அப்பிடியாப் பட்ட ஆம்பளகளைத்தான் அந்தத் திருடன் கோமாளித்தனம் பண்ணிருக்கான். நான் ஒங்களச் சொல்லலைய்யா, கோவிச்சுக்கிடாதேக. நான் சொன்னதையும் வெளிய சொல்லிராதைக, நல்லா இருப்பேக,” என்றாள்.

எஸ்.ஐ. தலையைக் குனிந்து தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டே சிரித்தார்.

மீண்டும் ஏட்டைப் பார்த்தார். ஏட்டு வந்து முன்போலவே அவர்கள் முன் மேசைமேல் கிடந்த துண்டை எடுத்தார். மேசைமேல் முன்போலவே வாழைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் மற்றும் ஆண்பனையின் கதிர் ஒன்றும் இருந்தது.

“இதுல ஒனக்குப் பிடிச்ச காய் எது?” என்றார் எஸ்.ஐ.

பார்த்தவள் முகத்தைச் சுருக்கி, “இதென்ன ஆட்டுக்குத் தீனியாப் போடத மனுசர் சாப்பிடுத பொருளோட வச்சிருக்கு?” என்றாள் மருது.

எஸ்.ஐ. அவளின் முகத்தையே பார்த்தவாறு, “ஆட்டுக்குத்தீனியாப் போடலாம். வேற எதுக்கு உபயோகப் படும் அது?” என்றார்.

“காஞ்சா அடுப்பில போட்டு விறகா எரிக்கலாம். வேற என்னத்துக்கு ஆவும்?” என்று சற்றுப் பொறுமை இழந்தவள் போல் படபடவென்று பேசினாள்.

“சரி, அந்தத் திருடன ஒனக்குத் தெரியுமா?” எஸ்.ஐ.

“கண்ணான (சத்தியமாக), தெரியாதய்யா,” என்றாள் மருது.

“சங்கரலிங்கம் கொல சம்பந்தமா ஏதாவது தெரியுமா?” என்றார் எஸ்.ஐ.

“உம்மையச் சொல்லுதென், தெரியாது அய்யா,” என்றாள் மருது.

“ஏம்மா, இந்தக் கொலையப் பத்தியோ, அந்தத் திருடனப் பத்தியோ என்ன தகவல் கெடச்சாலும் எங்கிட்ட சொல்லணும், சரியா? நீங்க போகலாம்,” என்றார் எஸ்.ஐ.

எழுந்து போகவிருந்த மருதுவைப் பார்த்து, “ஒரு நிமிசம்,” என்றார் எஸ்.ஐ.

என்ன என்பது போல் பார்த்தாள் மருது. “வேற ஒண்ணும் இல்லம்மா ஒங்க பேரு வித்தியாசமா இருக்கே. அதென்ன மருதுவெள்ளி?” என்றார் எஸ்.ஐ.

முழுத்தன்னம்பிக்கையும் பெற்ற மருது, “எனக்கு எங்க பொன்னையா முத்தையா ரெண்டுபேர் பேரையும் சேத்து வச்சிருக்கு. எங்க பொன்னையா பேர் மருதையா, எங்க முத்தய்யா பேர் வெள்ளப்பாண்டி,” என்றாள்.

அழகாய்ச் சிரித்த எஸ்.ஐ., “எனக்குச் சொந்த ஊர் தர்மபுரி. இங்க ரெம்ப நாளா வேலை செய்றேன். எங்க ஊர்ல பொன்னையா முத்தைய்யாண்ணு எல்லாம் சொல்றது இல்ல. நான் திருநெல்வேலித் தமிழை ரசிக்கிறேன். பொன்னையா, முத்தைய்யா இது ரெண்டுக்கும் வௌக்கம் சொல்லிட்டு நீங்க போகலாம்,” என்றார்.

“அய்யா, நீங்க தாத்தா பாட்டிங்கதத்தான் நாங்க அப்பிடிச் சொல்லுதோம். அம்மாவோட அய்யா ஆத்தாவத்தான் பொன்னையா, பொன்னாத்தாம்போம். பொன் அய்யா, பொன் ஆத்தா. அதே மாதிரி அப்பாவோட அய்யா ஆத்தாவ நாங்க முத்தையா முத்தாத்தாள்ம்போம். முத்து அய்யா, முத்து ஆத்தா, இப்பம் விளங்குதா அய்யா?” என்றாள் முகம் மலர.

“விளங்குதும்மா. நன்றி, போய்ட்டு வாங்க,” என்றார் எஸ்.ஐ. இம்முறை ஏட்டு என்ன என்பதுபோல் எஸ்.ஐ. ஐப் பார்க்கவில்லை.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top