JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சது(ரங்கம்) 1

Subageetha

Well-known member
இன்னுமொரு புது கதையை உங்களுக்கு பகரபோகிறேன். இந்த கதை தொடங்கும் இடம்
ஸ்ரீ ரங்கம்.

சதுரங்க ஆட்டத்தில் ராணியை இழத்தல் ராஜ்ஜியத்தின் முடிவு. இங்கோ, ராணி தன்னை இழந்துவிட்டால் எதிரிப் படையிடம் சிக்கியவள் தன்னை எவ்வாறு மீட்பாள்?
கடும் பாதையில் பயணம் செய்து, முட்பாதையில் கால்கள் பதித்து , குருதியை, பயிர் செய்யும் நீராக்கி, பயம் என்ற எதிரியை வீழ்த்தி,
ஜெயம்!ஜெயம்! என்று பூமித்தாய் பறையறிவிக்க, மகுடம் சூட்டிக்கொள்ள களம் இறங்கும் சாதுர்யா... ஆடும் சது(ரங்கம்)... இது சாதுர்யா ஆடும் களமா? இல்லை அவளை வைத்து சூழ இருப்போர் ஆடும் களமா? இரண்டுமின்றி விதி சமைக்கும் புது நாடகமா?
அவளால் தனித்து போரிட முடியுமா? அபலைக்கு உதவி செய்வார் யார்?
சாதுர்யா வாழ்வில் நடக்கும் விஷயங்களை உங்களுக்கு என் பார்வையில் சொல்கிறேன்...சஞ்சயன் பாரதப் போரை திருதராஷ்டிரனுக்கு சொன்னது போல!

"போர்க்களம் மாறலாம்!
போர்கள்தான் மாறுமா?"

சரி இந்த கதையை சொல்லும் நான் யாரென்று உங்களுக்கு தெரிய வேண்டாமா?

நான் சர்வ வல்லமை பெற்ற காலம். யுக யுகமாய் எத்தனையோ போர்களை நான் பார்த்துவிட்டேன். இத்தனை போர்களிலும் எத்தனையோ முறை தர்மம் வென்றிருக்கிறது. அதே அளவில் அதர்மமும் நின்றிருக்கிறது. இவ்வாறு நடக்கும் போது காலம் ஆகிய நான் சந்தோஷம் அடைவது இல்லை. நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.என்னால் எதையும் மாற்ற முடியாது.அதே போல் என்னை யாராலும் வெல்ல வும் முடியாது!

ஒவ்வொரு மனிதனின் அந்தரங்கத்துக்குள் ப்ரயாணம் செய்யும் என்னை விட ஒருவர் வாழ்வில் நடப்பது பற்றி பாரபட்சமின்றி தெளிவாக யாராலும் சொல்ல இயலும்?

வாருங்கள், சாதுர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோம்!


ஸ்ரீரங்கத்தில் சித்திரை வீதியில் இருக்கும் அந்த பெரிய வீட்டில் வாசல் நிறையும் பெரிய மாக்கோலமிட்டு செம்மண்ணும் பூசப்பட்ட தேர் கோலம் வருபவர்களை வா... வா என்று அழைப்பது போல் இருந்தது. வீட்டு வாசலை இரண்டு பக்கமும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, நடுவில் மாவிலைத் தோரணங்களும் அலங்கரிக்க,வீட்டு மனிதர்கள் எல்லோரும் சந்தோஷத்தை அணிந்துகொண்டு இங்குமங்குமாய் நடைபயின்று கொண்டிருந்தார்கள். வாசல் வராந்தாவில் தெரியும் பெரிய அகலமான ஊஞ்சல், அதில் அமர்ந்து ஆடுவதற்கு முண்டியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் சிறுவர் சிறுமியர். அவர்களது கீச்... கீச் சப்தம் வீட்டுக்கு புதியதோர் பரிமாணத்தை கொடுத்தது.

புதிதாய் மொட்டு விட்ட மலர் ஒன்றுக்கு ஒரு வருடம் பூர்த்தியான கொண்டாட்ட நாள் அது. குழந்தையின் தாய் தந்தை இருவர் வீட்டு உறவுகளும் புடைசூழ குழந்தைக்கு அன்று காலை தான் முடி இறக்கி காது குத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே பால் நிறத்தில் இருக்கும் குழந்தை வலியிலும் பயத்திலும் அழுவது கூட ஒரு விதத்தில் அழகுதான்.அதில் ரோஜா நிறத்தையும் கூட சேர்த்தால்... சொல்லவா வேண்டும்?

குழந்தையின் அழுகை ஒலி அங்கு ஒலித்துக் கொண்டிருந்த நாக ஸ்வரத்தை மிஞ்சி இருந்தது. குழந்தை அழுவதை பார்த்து சிலருக்கு சிரிப்பும் சிலருக்கு வருத்தமுமாக கலவையான உணர்வு . வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் குழந்தையின் பெற்றோர், நான்கு வயது ரங்கராஜன்.
இங்கு விசேஷத்திற்கு வந்த நிமிடத்திலிருந்து ரங்கராஜன் குழந்தையை விட்டு அங்கிருந்து நகரவில்லை. குழந்தையின் ஒவ்வொரு அசைவும் அவனுள் தேன் சொட்டாய் இனித்தது. குழந்தை பிறந்த பொழுது குட்டி குட்டி கைகால்களுடன், பொக்கை வாயில் எச்சில் வழிய பார்த்தது. இன்று கொஞ்சம் வளர்ந்து தளிர் நடையிட்டு, விளையாட கற்றுக்கொண்டுள்ள இந்த குழந்தை அவனுக்கு புதியது.குழந்தை சாதுர்யா ரங்கராஜனின் மாமன் வெங்கடேசனின் மகள். சாதுர்யா தொடர்ந்து அழும் நேரங்களில் ரங்கனை கண்ட நொடியில் அழுகையை நிறுத்தி விடுகிறாள். பால் பற்கள் சாதுர்யாவுக்கு முளைத்திருக்கிறது. அதைவைத்து எல்லோரையும் கடிக்கவும் தொடங்கிவிட்டாள். இதற்கு ரங்கனும் விதிவிலக்கல்ல. சாதுர்யா கடித்ததில் ரங்கானுக்கு கையில் லேசாக ரத்தம் வந்தபோதும் குழந்தை கடித்ததற்காக புகார் சொல்லாமல் குழந்தையை விட்டு நகர மாட்டேன் என்று அங்கேயே தவம் இருக்கிறான் ரங்கன்.குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு விளையாடுவேன் என்று வேறு அடம். ஒரு சிறு குழந்தையை எப்படி இன்னோர் சிறு குழந்தை கையில் கையில் கொடுக்க முடியும்? அவனை சமாளிப்பதே ஒரு பெரிய சாதனையாக இருக்கிறது கடந்த இரு நாட்களாக. சாதுர்யாவுக்கு காது குத்தும் சமயம் அங்கு இரு அழுகை குரல்கள். ஒன்று சாதுர்யா... இன்னொரு குரல் ரங்கனுடையது. குழந்தை அழுவதை காண இயலாது பயத்தில் அவனுக்கும் அழுகை வருது. மற்ற குழந்தைகளுடன் விளையாட செல்லாமல் அவன் படுத்தும் பாடு... சொல்லி மாளாது.

சாதுர்யா - ரங்கராஜன் இருவரின் குடும்ப பின்னணி பற்றி நான் இன்னும் சொல்லவில்லையே?

இருவரின் தாத்தா திரு.தாமோதரன் அவர்கள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றி பெற்று பணி செய்தவர். அவர்களது பூர்வீகம் திருச்சி மாநகரில் உள்ள ஸ்ரீரங்கம். பூர்வீக வீடு நிலபுலன்கள் எல்லாம் திருச்சியை சுற்றித்தான். அவரது புர்வீகர்கள் நில சுவன்தாரர்கள்.
திரு. தாமோதரன்
பணி நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றி ஆயிற்று. விருப்ப ஓய்வு பெற்று திருச்சிக்கே வந்துவிட்டார்.அவர் இந்தியா முழுவதும் சுற்றினாலும் அவருடன் அவர் மனைவி மட்டும் தான் பிரயாண படுவார். குழந்தைகள் மூவரும் வளர்ந்தது தாமோதரனின் பெற்றோரிடம்தான். விடுப்பு சமயங்களில் குழந்தைகள் பெற்றோரிடமும், தாய்வழி பாட்டி தாத்தா விடமும் சென்று வருவார்கள்.
தாமோதரனின் மனைவி லக்ஷ்மிஅம்மாள். அவர்களுக்கு மொத்தம் மூன்று மக்கள். மூத்தவர் வெங்கடேசன். அடுத்தவர் சுரேஷ். கடைசியாக ரேணுகா. வெங்கடேசன் தந்தை வழியில் தானும் ஐஏஎஸ் அதிகாரி ஆகிவிட்டார். அடுத்தவர் சுரேஷ் மத்திய அரசு வேலை. ரேணுகாவின் கணவர் வயலூரை சேர்ந்தவர். அவர் குடும்பத்திற்கு சொந்தமாக அங்கு நில புலன்கள் உண்டு. அதைத் தவிர தஞ்சை சுற்றி உள்ள கிராமங்களிலும் அவர்களுக்கு சொத்துக்கள் உண்டு.விவசாயம் அதை சார்ந்த தொழில்களை அவர்கள் கவனித்து வருகிறார்கள்.அதைத் தவிர இந்தியாவில் இயங்கும் பல்வேறு முன்னணி தொழிற்சாலைகளிலும் அவர்களின் முதலீடு உண்டுதான். வளர்ந்து வரும் ஆர்கானிக் சந்தையில் இவர்களின் பங்களிப்பு இந்தியாவில் முழுவதும் இருக்கிறது.
வெங்கடேசனின் மகள் சாதுர்யா.திருமணம் முடிந்து ஐந்து வருஷம் கழித்து பிறந்தவள்.அவளுக்கு இன்று முதல் பிறந்தநாள். சுரேஷுக்கு திருமணம் ஆகி மூன்று வருஷங்கள் ஆகிறது. குழந்தைபேறு இன்னும் இல்லை.
ரேணுகாவின் மகன் ரங்கராஜன்.
நான் ரங்கராஜனை முக்கிய படுத்தி சொல்வதால் அவன் தான் கதையின் நாயகன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. ஏனெனில் இந்த கதை முழுக்க முழுக்க 'சாதுர்யா' எனும் ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை. ஆனால் அவள் வாழ்க்கையில் ரங்கராஜனின் பங்கு அதிகம். அவன் இந்த கதையின் நாயகனா என்பதை சாதுர்யாதான் தீர்மானிக்க வேண்டும். நான் அல்ல.
சரி மீண்டும் நாம் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நுழைவோம்!

எப்படியோ ரங்கராஜன் எல்லோரிடமும் கெஞ்சி அழுது, சாதுர்யாவை தன் மடியில் அமரச் செய்து விட்டான். அவன் பாட்டி லட்சுமி அம்மாள் அங்கு இங்கு நகராமல் பேரனையும், பேத்தியை யும் கண்காணித்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். அவர் முகத்தில் அவ்வளவு பெருமை. பாட்டி ஆகி விட்டோம் என்ற கர்வம் அதில். தாத்தா தாமோதரன் லட்சுமி அம்மாள் அருகில் தானும் மனைவியை விட்டு நகராது அவர் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு லட்சுமி அம்மாளை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். நிச்சயமா பாட்டியம்மா ஆகுறது எனக்கு சந்தோஷம்தான், என்று பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறார் லட்சுமி அம்மாள். காலத்திற்கு ஏற்றவாறு தலைக்கு கருப்புச் சாயம் பூசுவது அவருக்கு பிடிக்கவில்லை. வயசாகுதுன்னு சொல்ல தலை முடி வெள்ளையா இருந்தா தான் அழகு என்பார் லக்ஷ்மி அம்மாள். லட்சுமிக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டது. கணவர் கேலி செய்தாலும் அதை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டார் லட்சுமி. மனைவியை நினைத்து தாமோதரனுக்கு என்றுமே பெருமை தான். குழந்தைகளை வேறு ஒரு இடத்தில் மாமியார் மாமனாரிடம் வளர்க்க சம்மதித்து, கணவனுக்காக கூடவே வந்து இருக்கும் மனைவியை நினைத்து தாமோதரன் சந்தோஷமும் பெருமையும் கொள்ளாத நாளே இல்லை. எத்தனை பேருக்கு குழந்தைகளைப் பிரிந்து இருக்க மனது வரும்? கணவன் வகிக்கும் பதவி அது கொடுக்கும் அதிக அழுத்தமும் ஊர்ஊராக மாற வேண்டியது வரும் என்ற நிலையையும் இத்தனை வருஷங்களாக முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொண்டவர் லட்சுமி அம்மாள். தன் கணவர் வகிக்கும் பதவியின் கணம் தெரிந்தவர்.தன் குழந்தைகளை வளர்க்கும் ஏக்கம் ஒரு தாயாக அவருக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால் தாமோதரனின் பெற்றோர் 'நாங்கள் வளர்க்கிறோம்' நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்ற பிறகு தனது ஏக்கத்தை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டுவிட்டார். அவர் கண்முன் கணவனும் குழந்தைகளும் அவர்கள் நலமும் மட்டும்தான். என்றுமே தன்னை பற்றிய கவலை லட்சுமிக்கு கிடையாது.தாமோதரன் லக்ஷ்மி அம்மாள் இருவருக்கும் சிறுவயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது. லக்ஷ்மி அம்மாள் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். ஆனால் உலகம் தெரியாதவர் இல்லை. தினமும் ஆங்கில நாளிதழ்களை ஒரு வார்த்தை விடாமல் படித்துவிடுவார். லட்சுமியின் ஞாயங்கள் புரட்சியானவை. அவரின் ஆளுமை மகாராணிக்கு ஓத்தது.மனைவியை படிக்க அனுப்பி இருக்கலாம் எனும் எண்ணம் தாமுவிக்கு இன்று வரை உண்டு.
தாமோதரன் பட்டம் பெற்று,மேலே எம் .எஸ்.ஸி முடித்து பிறகு ஐஏஎஸ் தேர்வும் எழுதி வேலைக்கு செல்லும்போது ரேணுகா விற்கு ஒரு வயது. லஷ்மி அம்மாள் இருபத்து ஆறு வயதான பெண். லட்சுமிக்கும் தாமோதரனுக்கும் எட்டு வருஷ வித்யாசம். இப்போதெல்லாம் யாரும் இவ்வளவு வயது வித்யாசத்தை ஒப்புக் கொள்வதில்லை.ஆனால், தாம்பத்தியத்தில் வயது வித்யாசம் மட்டும் பேசுவதில்லை. மனம் ஒன்றோடு ஒன்று இறுக்கிக் கொள்ள வேணும்.

லட்சுமிஅம்மாளை பற்றி இவ்வளவு தூரம் நான் சொல்ல நிச்சயம் காரணம் உண்டு.

பெண்கள் சிறந்தவர்களாக இருந்து வம்சம் அவர்கள் வழியில் வளரும் எனில் அது மானிட குலத்துக்கு பெரும் பேறு. பெண் தனக்குள் இருக்கும் நம்பிக்கை, மனோதிடம், ஆளுமை, தியாகம் என்று எல்லா பண்புநலன்களையும் கருவிலேயே அடுத்த தலைமுறைக்கு பாய்ச்சுகிறாள்.இந்த கதையின் போக்கு உங்களுக்கு பெண்ணின் மனோதைரியம், சாதுர்யம் பற்றி சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். கதையின் போக்கு அழுத்தமாக கருத்தை பதிவு செய்ய வேணும்!

குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து மதிய உணவிற்கு பிறகு வந்திருந்த உறவினர் கிளம்பிவிட மிக நெருங்கிய உறவினர் மட்டும் வீட்டில்.

மாலை கிளம்பலாம் என்று ரேணுகாவின் மாமனார் சொல்ல,பாப்பாவை விட்டு வரமாட்டேன் என்று திரும்ப வும் ரங்கனின் சுருதி எழும்பலாயிற்று.

ஒருவழியாக வீட்டின் விழா விழா முடிந்தது. இரண்டு நாட்களில் ரேணுகா
ரங்கனை கூட்டிக்கொண்டு வயலூர் சென்றுவிட்டாள். விடுப்பு முடிந்தது என்று வெங்கடேசனும் சுரேஷும் கூட தங்கள் குடும்பத்தினருடன் கிளம்பி விட்டார்கள். வீடு பழையபடி நிசப்தம் ஆகிவிட்டது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களை தங்கள் உடனே இருத்திக்கொள்ள வேண்டும் என்பது நடக்காத காரியம்.

காலங்கள் உருண்டோட ரங்கனுக்கு ஏழு வயது ஆகிறது. வருடத்திற்கு ஒருமுறை ரேணுகா குழந்தையை கூட்டிக்கொண்டு அப்பா அம்மா வீட்டுக்கு வருவதுடன் சரி. அதற்குமேல் அவளது மாமனார் மாமியார் அவள் அடிக்கடி பிறந்த வீட்டிற்கு சென்று வருவதை விரும்பவில்லை. அத்துடன் முன்பெல்லாம் வந்தால் பிள்ளையுடன் சேர்ந்து ரேணுகாவும் இரண்டு மாதங்கள் பெற்றோருடன் தங்கி விடுவாள். இப்போதெல்லாம் பிள்ளையை விட்டு இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு வயலூருக்குச் சென்று விடுகிறாள். தொழிலில் மேலும் மேலும் விருத்தி செய்து கொண்டிருந்ததால் அதிகமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ரேணுகாவின் கணவருக்கு . அதனால் ரேணுகாவுக்கு மாமியார் மாமனாருடன் இருக்கவேண்டியுள்ளது.
ரேணுகா கணவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் உண்டு. ஒரு மூத்த அண்ணனும் அக்காவும். அக்கா ஸ்பெயினுக்கு திருமணம் முடிந்து சென்றவள் தான். திருமணம் முடிந்து எட்டு வருடங்களில் இரண்டு முறை மட்டுமே வந்திருக்கிறாள். அண்ணனோ குடும்பத்துடன் சண்டையிட்டுக் கொண்டு காதல் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். வடக்கே எங்கோ இருப்பதாக வெறும் தகவல் தான். ஆகக்கூடி,முழு பொறுப்பும் ரேணுகாவும் ரேணுகாவின் கணவரையும் சார்ந்தது. ரேணுகாவின் பெற்றோர் நல்ல ஆரோக்கியமாக இருப்பதால் பார்க்க வேண்டும் போல் இருந்தால் மகன்கள் வீட்டுக்கோ மகளை காணவோ சென்றுவிட்டு வருவார்கள். மற்றபடி வளர்ந்த பிள்ளைகளை தொந்தரவு செய்வதற்கு அவர்கள் இருவருக்குமே விருப்பமில்லை. பூர்வீக சொத்துடன் சேர்ந்து தாமோதரன் அவர்களுக்கு மாதாமாதம் ஓய்வூதியமும் வருகிறது. பொருளாதாரத்திலும் சரி, உடல் அளவிலும் சரி தாமோதரனும் லக்ஷ்மி அம்மாவும் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. லக்ஷ்மி அம்மாவுக்கு ஐம்பதுகளில் தான் வயது. நிர்வாகத்திறமை, தைரியம் இரண்டுமே அதிகம். தாமோதரனின் வேலைக்கு ஏற்றவாறு, மாமனார் மாமியார் இறந்த பிறகு முழு நிர்வாகத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டார் லட்சுமி அம்மாள்.
சாதுர்யாவுக்கு இப்போது மூன்று வயதாகிறது. அதனால் வெங்கடேசன் குழந்தைக்கு ஸ்ரீரங்கம் மற்றும் தங்கள் பெற்றோருடன் நல்ல பரிச்சயம் வேண்டும் என்று எண்ணியதால் மனைவி மகளுடன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வருவதும் மனைவி மகளை பத்து நாட்கள் அங்கு தங்க செய்வதையும் வழக்கம் ஆக்கிகொண்டார். நாடு முழுவதும் சுற்றினாலும் தான் பிறந்து வளர்ந்த ஸ்ரீ ரங்கம் தனிதான் அந்த மனிதருக்கு.

சாதுர்யாவுடன் விளையாட ஆசை பட்டு அவள் வரும் நேரங்களில் ரங்கன் பள்ளி விடுமுறை நேரம் ஸ்ரீரங்கம் வந்து விடுகிறான். அவன் பள்ளி திருச்சியில். வீட்டில் உள்ள மகிழுந்தில் டிரைவருடன் பள்ளி சென்று வருகிறான். ஸ்ரீரங்கம் வருவதும் அப்படியே.

மாலை நேரங்களில் ரங்கநாதர் கோவில் பிரகாரத்தில் இன்னும் சில சிறுவர் புடை சூழ ரங்கனும் சாதுர்யாவும் விளையாடிக் கொண்டிருக்க தாமோதரன் துணைக்கு வருவதும் வழக்கம் ஆயிற்று.

சாதுர்யா வளர வளர அவள் வரும் சமயங்களும் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் ஆயிற்று. ஆனாலும், ரங்கன் சாதுர்யா நடுவில் இருக்கும் நட்பில் எந்த இடைவெளியும் இல்லை.

மீண்டும் அடுத்த பதிவுடன் வருகிறேன்.

சுகீ
 

Attachments

  • pexels-pixabay-139392.jpg
    pexels-pixabay-139392.jpg
    345.6 KB · Views: 0

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top