JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vetai - Episode 4

JB

Administrator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 4

மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் போன்ற பிரபலங்கள் குடியிருக்கும், ‘பாலிவுட்டின் பெவர்லி ஹில்ஸ்’ [Beverly Hills of Bollywood - Juhu] என்று அழைக்கப்படும், மேற்கில் அற்புதமான அரபிக்கடலும், வடக்கே வெர்சோவா, கிழக்கில் வைல் பார்லே மற்றும் தெற்கே சாண்டாக்ரூஸால் சூழப்பட்டுள்ள இடம் ஜுஹூ.

நீல நிறம் கொண்ட ஜெல்லி மீன்கள் (blue bottle jellyfish) அதிகளவில் கரை ஒதுங்கும் ஜுஹூ கடற்கரையோரத்தில் பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்து ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் சதுரடிகளில் கட்டப்பட்டிருந்த அந்த மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட வீட்டின் பூஜை அறையில் அமர்ந்திருந்த இளம் பெண்ணவளின் விழிகளில் நீர் மல்கிக் கிடந்தது.

தனக்கு முன் சட்டமாக மாற்றப்பட்டிருக்கும் கடவுள்களின் படங்களையும் தனது பிரிய தெய்வமான துர்கையம்மனின் படத்தையும் கண்களை இமைக்காது பார்த்திருந்தவளை பூஜை அறைக்கு வெளியே கேட்ட குரல் சிறிதும் தன்னிலைக்குக் கொண்டு வரவில்லை.

எத்தனை முறை அழைத்தும் அவள் அசையாது அமர்ந்திருப்பதைக் கண்டு பெருமூச்சுவிட்டவாறே பூஜை அறைக்குள் நுழைந்த அவ்வீட்டின் வேலைக்காரப் பெண்மணி ஜெயந்தி, "சீதாம்மா.. எவ்வளவு நேரமா இப்படியே உட்கார்ந்திருப்ப? வாம்மா வெளிய.." என்றார் அன்புருக.

தனது தோளை இலேசாகத் தொட்டு அழைக்கும் அவரின் குரலில் திடுக்கிட்டு விழிப்பவள் போன்று கண்களை அகல விரித்தவள் ஜெயந்தியை அண்ணாந்து நோக்கினாள்.

"நான் தான் அப்ப இருந்து சொல்லிட்டே இருக்கேன்ல, அய்யாவுக்கு ஒண்ணும் ஆகாதுன்னு. அவர் பார்க்காத பிரச்சனைகளா? இல்லை அரசியல் பொல்லாங்கா? எப்படியும் இன்னைக்குள்ளாறவே வீட்டுக்குத் திரும்பி வந்துடுவாருப் பாருன்னு சொல்லிட்டே இருக்கேன்ல.. இன்னமும் இப்படிக் கலங்கிப் போய் உட்கார்ந்திருந்தா என்னம்மா பண்றது?"

கண்களைக் கடந்து கன்னங்களைத் தீண்டி கழுத்து வரை வழிந்தக் கண்ணீரைக் கூடத் துடைக்க மனமில்லாதவளாய் தன் அன்பான வேலைக்காரம்மாவைப் பார்த்திருந்தாள் அப்பெண்.

“என்ன சீதாம்மா அப்படிப் பார்க்குற?”

"அவரு சந்திக்காத பிரச்சனைகளுன்னு எதுவுமே இல்லைன்னு எனக்கும் தெரியும் ஜெயாக்கா. ஆனா இது வரை கைது அப்படின்னு எல்லாம் போனதுல்ல. இப்ப திடீர்னு ஏதோ பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணி மோசடி செஞ்சிருக்காருன்னு அவர் மேல கேசு போட்டு அவரைக் கைதே பண்ணிட்டாங்களே. அதான்க்கா எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.."

"சரி, அதுக்காக இப்படியா பல மணி நேரமா சாமி ரூமுக்குள்ளேயே உட்கார்ந்திருப்ப.. குழந்தை பசிக்குதுன்னு கேட்டு, அதுக்குச் சாப்பாடு குடுத்து தூங்கவும் வச்சிட்டேன். ஆனால் நீதான் உன்னைச் சுத்தி நடக்கிற எதுவுமே தெரியாமல் சிலையாட்டம் உட்கார்ந்திருக்க.. முதல்ல வந்து சாப்பிடு. பிறகு மத்ததைப் பார்த்துக்கலாம்."

"ம்ப்ச். என்னக்கா நான் இப்ப இருக்கிற நிலையில சாப்புடுற மாதிரியா இருக்கேன்."

"அது சரி, முதல்ல நீ எழுந்து வெளிய வா.."

விடாது அவளை வற்புறுத்தியவராய் தோளைப்பற்றி எழச் செய்தவர் வெளியே அழைத்து வர, பூஜை அறையை விட்டு வெளியேறும் முன் நின்றவளாய் அதே பூஜை அறையின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தனது மாமியார், மற்றும் பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்ததில் மீண்டும் திரண்ட விழி நீர் திரும்பவும் கன்னத்தின் வழியே வழியத் துவங்கியது.

"உன் நல்ல மனசுக்கு கெட்டது எதுவும் நடக்காதும்மா. நீ கும்புடுற அந்தத் துர்கை அம்மனும், தெய்வமா போயிட்ட பெரியவங்களும் உன் கூடவே இருக்கும் போது எதுக்கு இவ்வளவு வேதனைப்படற? வா."

அழைத்தவராய் அவளை முன்னறைக்குக் கொண்டு வந்த நேரம் அவர்களது தலைமை வக்கீலிடம் இருந்து அழைப்பு வந்தது.

"செல்லுங்க பத்மநாபன் சார்."

"விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து ரொம்ப அதிர்ச்சியில் இருக்கன்னு ஜெயந்தி சொன்னாங்க. அதான் நானே உன்னைக் கூப்பிட்டு பேசலாம்னு நினைச்சேன். சாரைப் பத்தி நீ கவலைப்படாதே.. நாங்க எல்லாம் கூட இருக்கோம்ல, பார்த்துக்குவோம். கூடிய சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுவோம்.."

"எப்படி சார், ஒரு மத்திய அமைச்சரை இவ்வளவு ஈசியா கைதுப் பண்ண முடியும்?"

"முடியும்மா.. அது அவங்க மேல சுமத்தப்பட்டிருக்கக் குற்ற வழக்கைப் பொறுத்து இருக்கு.."

"அப்படின்னா நான் கேள்விப்பட்ட விஷயம் எல்லாமே நிஜமா?."

"நீ டிவியில் நியுஸா சொன்னதைச் சொல்றியா? ஒண்ணுன்னா ஆயிரமுன்னு கதைக்கட்டி சொல்றவங்க அவனுங்க. அதை ஏன் நீ பார்த்துட்டு இருக்க? சார் மேல எந்த வழக்குப் போட்டாலும் அவர் நிரபராதின்னு நிரூபிக்கிறதுக்கு அவரைச் சுற்றிலும் எத்தனை வழக்கறிஞர்கள் இருக்கோம். நாங்க பார்த்துக்கிறோம். நீ கவலைப் படாமல் இரு, அது போதும்."

"பத்மநாபன் சார், எனக்கு அவர்கிட்ட பேசணும்."

"கண்டிப்பா சீதாம்மா, ஆனால் இப்போ முடியாது.. அவரை அரெஸ்ட் செய்திருக்கிறது SSP ஷிவ நந்தன். அவனைப் பற்றித்தான் உனக்கு நல்லாத் தெரியுமே. எத்தனை நாளா அவன் சாரை கண்காணிச்சுட்டு வந்திருக்கான்னு தெரியலை. ஆனால் அவன் இங்க மும்பைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்ததே இதுக்குத் தான்னு புரியுது. சாரை அரெஸ்ட் செய்றதுக்கு வேண்டிய ஆதாரங்களையும் பெர்மிஷன்ஸையும் அவன் ஏற்கனவே தெளிவா சேகரிச்சுட்டு தான் அவரை அரெஸ்ட் பண்ணிருக்கான். கண்டிப்பா அவர்கிட்ட பேச யாரையும் அனுமதிக்கமாட்டான், குறிப்பா அவருடைய ஃபேமிலியை."

"ம்ப்ச்.. என்ன சார், நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி? எனக்கு அவரைப் பார்க்கணும், அவர்கிட்ட பேசணும்.. அதுக்கு முதல்ல ஏற்பாடு செய்துட்டு பிறகு என்னைக் கூப்பிடுங்க.."

அழுகையின் ஊடே கூறியவளாய் அலைபேசியைத் துண்டிக்க, இந்திய தேசம் முழுவதுமே மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷின் அந்நிய செலவாணி மோசடி மற்றும் அவன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் க்ரிமினல் வழக்குகளைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்து போன நாளாக அந்நாள் உருவாகிக் கொண்டிருந்தது.

அரசாங்கத்தையே கிடுகிடுக்கச் செய்திருக்கும் அவ்வழக்குகளினால் அவனது கட்சிச் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட, ஆர்ய விக்னேஷைக் கைது செய்திருக்கும் ஷிவ நந்தனைக் கண்டித்து அவனது கட்சி தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தத் துவங்கினர்.

தங்களது பிரியமான தலைவனை விடுதலை செய்யக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய, அதன் விளைவாக ஜுஹு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள அவனது வீட்டிற்கு முன்னும் பரபரப்பான சூழல் நிலவ ஆரம்பித்தது.

**********************************************

"ஹலோ ஷிவா, எங்க இருக்கீங்க? உங்களுக்காக ரிப்போர்ட்டர்ஸ், மீடியா பீப்பிள் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க."

"இன்னும் ஃப்யூ மினிட்ஸில் வந்துடுவேன் சார்.."

DGP நீரவ் பிரகாஷிற்குப் பதிலளித்த ஷிவா தான் செலுத்திக் கொண்டிருந்த ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் [Orange Force Gurkha Xtreme] எஸ்.யு.வியின் வேகத்தைக் கூட்டியவன் சில நிமிடங்களில் காவல்துறை தலைமையகத்திற்குள் நுழைந்ததுமே வளாகத்திற்குள் குழுமியிருந்த சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களின் மத்தியில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

அவர்களில் சிலரின் மீது மட்டும் தன் கூர்மையான பார்வையைப் பதித்தவாறே தனது எஸ்.வி.யூவை நிறுத்தியன் தலைமை அலுவலகத்தின் படிகளை நோக்கி நடக்க, சலசலவெனச் சத்தத்துடன் அவனைச் சூழ்ந்துக் கொண்டனர் நிருபர்கள்.

"மிஸ்டர் ஷிவ நந்தன். ஒரு கேபினெட் மினிஸ்டரையே அரெஸ்ட் செய்திருக்கீங்க.. அதுவும் எந்தவித முன்னறிவிப்பு இல்லாமலேயே. அதுக்கு உங்களின் விளக்கங்களைக் கொடுக்க முடியுமா?"

ஒரு நிருபரின் கேள்விக்கு,

"பாராளுமன்றம் அமர்வில் இல்லாதபோது, ஒரு கேபினட் அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தால் அப்போது சட்ட அமலாக்க நிறுவனத்தால் [law enforcement] அவரைக் கைது செய்ய முடியுமுன்னு உங்களுக்குத் தெரியும். அது தெரியலைன்னா நீங்க என்ன விதமான ரிப்போர்ட்டர்னு எனக்குத் தெரியலை.." என்றான் கணீரென்ற குரலில் முகத்தில் பட்டென்று அடித்தார் போல்.

இது அவனது வழக்கமான பாணிதான் என்றாலும் இவ்வளவு நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தனது அனுபவத்தையும் தரத்தையும் இழிவுப்படுத்தியது போல் பேசிய ஷிவ நந்தனின் முகத்தை எரிச்சலுடன் பார்த்த அந்த நிருபர் அமைதியாகிவிட, அவரைத் தொடர்ந்து சமூக ஊடகத்தினைச் சார்ந்த ஒரு இளம் பெண் அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.

"கேபினெட் மினிஸ்டர் மிஸ்டர் ஆரிய விக்னேஷ் இப்போ எங்க இருக்கார்?"

அவளின் புறம் மெள்ளத் தலையைத் திருப்பியவன்,


“பிஸ்னஸ் காண்டக்ட் மற்றும் ரூல்ஸ் ஆஃ பிரொசீஜர் 22 ஏ- வின் படி [Section 22 A of the Rules of Procedure and Business Conduct] அமைச்சர் கைது செய்யப்பட்டதற்கான காரணமும், காவலில் வைக்கப்பட்ட இடம் ஆகியவற்றைப் பற்றி மாநிலங்களவை தலைவரிடம் மட்டும் தான் சமர்ப்பிக்க வேண்டும். நிருபர்களிடம் இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்ற அவனது அரங்கத்தனமான பதிலில் திகைத்து விழிக்கத் துவங்கினாள் அவ்விளம்பெண்.

“இவரிடம் கேள்விக் கேட்டு மூக்கறு படுறதுக்குப் பேசாமல் ஜனாதிபதி, பிரதமர் இவர்களிடமே கேள்விக் கேட்கலாம் போலருக்கே.”

இரகசியமாய்த் தனக்கு அருகில் நிற்பவரிடம் கிசுகிசுத்த அந்தப் பெண் கூட்டத்திற்குப் பின்னால் நழுவ, "அடுத்த ஸ்டெப் என்னன்னு சொல்றீங்களா மிஸ்டர் ஷிவ நந்தன்?" என்று பிற நிருபர்கள் ஒவ்வொருவராய் கேள்வியைக் கேட்கத் துவங்கினர்.

"மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார். அடுத்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இருக்கும். மேலும் அவர் மாநிலங்களவை எம்.பியாக இருப்பதால் அவருடைய கைது நடவடிக்கை குறித்து மாநிலங்களவை தலைவரிடம் தெரிவிக்கப்படும்."

அவர்களின் ஒவ்வொரு வினாக்களுக்கும் தெளிவாய் பதிலளித்தவன் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பது போல் தலைமையகத்தின் படிகளில் ஏறத் துவங்க,

"மினிஸ்டர் ஆர்ய விக்னேஷை அவருடைய இண்டஸ்ட்ரியில் வைத்தே அரெஸ்ட் பண்ணிருக்கீங்க. அப்போ இண்டஸ்ட்ரியலிஸ்ட் வருண் தேஸாயும் அங்க இருந்ததாகத் தகவல்கள் வெளி வர ஆரம்பிச்சிருக்கே. ஏற்கனவே வருண் தேஸாய்க்கும் மினிஸ்டருக்கும் இடையில் இருக்கும் நட்பு பற்றித் தெரியும். ஸோ இந்தக் கிரிமனல் வழக்குகளுக்கும் அந்நிய செலவாணி மோசடிக்கும் வருண் தேஸாய்க்கும் சம்பந்தம் எதுவும் இருக்கா? இருந்திருந்தால் அவரை ஏன் நீங்க கைது செய்யவில்லை?" என்ற வினாவில் ஷிவாவின் நடை சட்டென்று தடைப்பட்டது.

"மினிஸ்டரின் அரெஸ்ட் பற்றி நீங்க தெரிஞ்சுக்கத்தான இந்த இண்டெர்வியூ, அதனால் அவரைப் பற்றி மட்டும் கேள்விகள் இருந்தால் கேளுங்க.."

"யெஸ் சார், மினிஸ்டரின் அரெஸ்ட் பற்றியும் நீங்க தெளிவா பதில் கூறலை. கேட்டால் மாநிலங்களவை தலைவரிடம் கேட்டுக்கோங்க அப்படிங்கிற மாதிரி பேசுறீங்க. அட்லீஸ்ட் இதுக்கு மட்டுமாவது எங்களுக்குப் பதில் சொல்லிட்டுப் போங்க. வருண் தேஸாயின் வருங்கால மனைவி சிதாரா சௌஹானுக்கும் உங்களுடைய வருங்கால மனைவிக்கும் இடையில் ஏதோ நட்பு இருக்கிறதாவும், வருண் தேஸாயை நீங்க நெருங்காமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்னு பேசிக்கிறாங்களே. அது உண்மையா?"

வினாவைக் கேட்ட நிருபரைக் கண்டு ஷிவாவின் புருவங்கள் சற்று இடுங்கின.

என்ன மாதிரியான கேள்வி இது என்று எரிச்சல் அடைந்தவன் அவருக்குப் பதிலளிக்காது படிகளில் விடுவிடுவென்று ஏறத் துவங்க, அவனை விடாது அதே கேள்வி திரும்பத் திரும்பப் பல விதமான வார்த்தைகளைக் கொண்டு துரத்தியது.

"இந்த வழக்கினால் தான் நீங்க உங்க திருமணத்தைக் கூடத் தள்ளிப் போட்டுருக்கீங்கன்னு வேறு சொல்றாங்களே. அதைப் பற்றி என்ன சொல்றீங்க?”

மீண்டும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேள்விக் கேட்டுக் குடையும் பத்திரிக்கையாளரை எரித்துவிடுவது போல் பார்த்தவன், “மினிஸ்டர் ஆர்ய விக்னேஷிற்கும் என் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?” என்றான்.

கூரிய கத்தி போல் தன்னைப் பார்த்தவாறே வினவுபவனின் கோபத்தை அசட்டை செய்தவராய்,

“மினிஸ்டர் ஆர்ய விக்னேஷிற்கும் உங்க கல்யாணத்திற்கும் சம்பந்தம் இல்லைன்னா, அப்போ கண்டிப்பா உங்களுடைய திருமணத்துக்கும் வருண் தேஸாய்க்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருக்குதுன்னு நாங்க முடிவு செய்துக்கலாமா? இதற்கான பதிலை ஏன் நீங்க தெளிவா சொல்லவே மாட்டேங்குறீங்க? அப்படின்னா அதில் ஏதோ உண்மை இருக்குன்னு தானே அர்த்தம்.." என்றார் நக்கலாய்.

அவரது பேச்சினில் ஆத்திரம் தலைக்கேற தனது வலதுக் கை முஷ்டியை இரத்தம் கட்டும் அளவிற்கு இறுக்கி முறுக்கியவன் நிற்காது படிகளில் கடகடவென்று ஏறி அலுவலகத்திற்குள் நுழைய, அவனது பேட்டியை தனது அலைபேசியில் நேரிடை ஒளிப்பரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த வருண் தேஸாயின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

"இந்தக் கேஸ்க்கும் உன் மேரேஜிற்கும் சம்பந்தமா இருக்குதான்னுத் தெரியலை ஷிவா, ஆனால் எனக்கும் உன்னுடைய மேரேஜிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரியே என் உள்ளுணர்வு [instinct] சொல்லுது.. இல்லைன்னா என்னைப் பிடிக்கிறதுக்காக உன் மேரேஜையே தள்ளி வைப்பியா? இது வரை என் இன்ஸ்டின்க்ட் எதுவுமே தப்பா போனதே இல்லை ஷிவா. பார்ப்போம் அது சரியா தவறான்னு."

புன்னகையுடன் கூறியவனின் வார்த்தைகள் எதிரொலியாய் செவிகளில் ஒலித்ததோ என்னவோ DGP-யின் அறைக்குள் நுழைய எத்தனித்த ஷிவா ஒரு விநாடி நின்றவன் சுற்றும் முற்றும் கண்களால் துலாவிவிட்டுப் பின் நீரவ் பிரகாஷின் அறைக்குள் நுழைந்தான்.

**********************************************

"அண்ணா, இப்படித் திடுதிப்புன்னு கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னா எப்படிண்ணா?"

"ஏம்மா, கல்யாணத்தை நிறுத்துன்னு யாரும்மா சொன்னது? கொஞ்சம் தள்ளிப் போடுங்கன்னு தான மாமா சொல்லிருக்காங்க.."

அண்ணன் தேவேந்திரனிடம் தான் கேட்ட கேள்விக்கு அருகில் நிற்கும் மகள் பதிலளிக்க, "துர்கா, பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது நீ ஏன் குறுக்காலப் பேசுற?" என்று கடுகடுத்தார் ஸ்ரீமதி.

"ஸ்ரீமதிம்மா, துர்கா சொன்னதில தப்பு இல்லையே, அப்படித்தான ஷிவாவும் சொல்லிருக்கான். அவன் சென்னை வந்ததும் கூடிய சீக்கிரமே கல்யாணத் தேதியை முடிவு செய்யலாம்னு சொல்லிட்டானே, பிறகு என்ன?"

"அண்ணா, அதுக்கில்ல அண்ணா.. தேதிக் குறிச்சு மண்டபமும் பேசி பத்திரிக்கையும் குடுக்க ஆரம்பிஞ்சிருந்தோம். இப்போ போய்க் கல்யாணத்தை நிறுத்துங்க, தேதியைத் தள்ளிப் போடுங்கன்னு சொன்னால் அங்க சென்னையில் இருக்கிறவங்க கூடப் பரவாயில்லை, நம்ம மாப்பிள்ளையைப் பற்றித் தெரிஞ்சு வைச்சிருக்கிறதுல ஓரளவுக்குப் புரிஞ்சுப்பாங்க. ஆனால் இங்க மல்லியக்குறிச்சிக் கிராமத்தை நினைச்சுப் பாருங்க.. இங்க இருக்க எல்லாரும் என்ன அண்ணா நினைப்பாங்க? ஏதோ கல்யாணத்துல தடை இருக்குதுன்னு நினைச்சிடுவாங்களோன்னு எனக்குப் பயமா இருக்குண்ணா?"

ஸ்ரீமதியின் வருத்தமும் வேதனையும் ஷிவ நந்தனின் பெற்றோர் தேவேந்திரனுக்கும் சாவித்திரிக்கும் புரியத்தான் செய்தது.

தனது மணவாழ்க்கை தான் கனவிலும் நினையாத வகையில் முளைத்த சில வருடங்களிலேயே கருகி சருகாய்ப் போனது.

தன் ஒரே மகளின் திருமணமாவது நல்ல முறையில் நடந்து, அவளது இல்லற வாழ்க்கை சிறப்புற்று நீடித்து இருக்க வேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் அஞ்சி வந்த ஸ்ரீமதிக்கு, திடீரென்று திருமணத்தை நிறுத்த சொல்லி ஷிவ நந்தன் கூறியதும் அடிவயிறு கலங்கிப் போயிருந்தது.

எல்லாம் கூடி வந்த நேரம் என்ன நினைத்து அவன் திருமணத்தைத் தள்ளிப் போட சொன்னானோ என்ற கேள்வி அவரைக் குடைந்து கொண்டு இருக்க, இன்று காலையில் தேசத்தையே அதிரச் செய்யும் வகையில் மத்திய அமைச்சரை அவன் துணிகரமாகக் கைது செய்த விஷயத்தைக் கேள்விப்பட்டதில் இருந்து ஒரு நிலையில் இல்லாது தவித்துப் போனார் கணவனை இழந்த அந்தத்தாய்.

ஒரு வேளை அந்த மினிஸ்டரால் மாப்பிள்ளைக்கு ஆபத்து எதுவும் வருமுன்னு நினைச்சு தான் கல்யாணத்தை இப்போதைக்கு வேண்டாம்னு தள்ளிப் போட சொன்னாரோ?

தனக்குத்தானே பல முறைக் கேட்டுக் கொண்டவருக்கு ஏனோ தனது தமையனிடம் இதைப் பற்றிப் பேச மட்டும் துணிவு வரவில்லை.

*********************************************

கடிகார முட்கள் நகர, விநாடிகள் நிமிடங்களாக மாற, ஆர்ய விக்னேஷ் கைதாகி ஏறக்குறைய பதினான்கு மணி நேரங்கள் கடந்திருந்தது.

அன்று காலை ஷிவ நந்தனால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தவன் ஆர்யன், பின்னர்ச் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான்.

நள்ளிரவு விசாரணைக்குப் பிறகு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, தான் குறிப்பிடும் நாளில் அவன் மீண்டும் நீதிமன்றத்திற்குள் ஆஜராக வேண்டும் என்றும், அவனுக்கு எதிராகக் காவல்துறையினர் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் ஆதாரங்களைச் சிதைக்காது இருக்க வேண்டும் என்றும், இந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட சாட்சிகளை அவன் எவ்வகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தியவர் அவனைப் பெயிலில் விடுதலை செய்தார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்தவன் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தனது கருப்பு நிற லெக்ஸஸில் [Lexus LX] ஏறுவதற்குக் காலைப் பதிக்க, அதே நேரம் சற்றுத் தொலைவில் துணைக்காவலர்களிடம் பேசிக் கொண்டிருந்த ஷிவாவின் பார்வை ஆர்யனின் புறம் திரும்பியது.

வாகனத்திற்குள் காலை வைத்தவன் ஷிவாவின் கண்களைச் சந்திக்க, விநாடி நேரம் நின்றவன் என்ன நினைத்தானோ இலேசான புன்முறுவல் புரிந்தவாறே வாகனத்திற்குள் ஏறி அமர்ந்ததுமே குர்கா சிகாரைப் பற்ற வைத்தவனாய் மீண்டும் பார்வையை ஷிவாவின் புறம் திருப்பினான்.

இருவரின் பார்வைகளும் ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொண்டன.

ஷிவாவின் கண்கள் தீவிரத்தில் இடுங்கின என்றால் பிடித்திருந்த சிகாரின் புகையை ஆழ இழுத்து வெளியில் விட்டவனாய் சிகாரின் நெருப்புத் துண்டை வெளியில் சுண்டியிட்டவாறே மீண்டும் ஆர்யன் புன்னகைக்க, அவனது சிரிப்பிற்கான அர்த்தம் ஷிவாவிற்கு விளங்கியது.

'உன்னை மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன் ஆர்யன். உன்னால என் தலைமுடியைக் கூடத் தொட முடியாது.'

ஷிவாவின் எண்ணத்தை அவன் கூறாமலேயே புரிந்து கொண்டது போல், 'ஆனால் நான் வேற ஷிவா. நீயே எதிர்பார்க்காத தருணத்தில் உன்னை அடிக்கிறேனா இல்லையான்னு பாரு. நீ வாழ்க்கையில் பார்க்காத அடியா அது இருக்கும்.. திரும்பவும் நீயே நினைச்சாலும் எழுந்திருக்க முடியாத பலமான அடியா அது நிச்சயமா இருக்கும்.’ என்று நினைத்துக் கொண்டது ஆர்யனின் உக்கிர மனம்.

தனது வழக்கமான மேனரிசமாகக் கண்களை மூடி அணிந்திருக்கும் சட்டையின் இடப்பக்க காலரை இலேசாக இழுத்துவிட்டவாறே கழுத்தை வலது பக்கமாகச் சாய்த்துப் பின் நிமிர்ந்த ஷிவாவின் தோரணையில் அவனது உள்ள உணர்வுகளைப் புரிந்துக் கொண்டதில் மீண்டும் புன்னகைத்த ஆர்யன் ஓட்டுநரைக் கண்டு தலையசைக்க, சில மணித்துளிகளில் அவனது வாகனம் சீறிட்டு கிளம்பியதுமே வளாகத்தை விட்டு வெளியேறிய நேரம் தனது தந்தையை அழைத்தான் ஷிவா.

"என்ன ஷிவா? அந்த அமைச்சர் ஆர்ய விக்னேஷை பெயிலில் ரிலீஸ் பண்ணிட்டாங்களாமே?"

"ம்ம்ம், இப்பத்தான் போறான்.."

"அவனைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை ஷிவா. மற்ற அரசியல்வாதிகள் மாதிரி குர்தாவும் நேரு ஜாக்கெட்டும் [Nehru jackets] போட்டுக்கிற அரசியல்வாதி இல்லை அவன். என்னவோ விளம்பர மாடல் மாதிரியும் சினிமா நடிகர்கள் மாதிரியும் தினுசு தினுசா கோட்டும் சூட்டும் போட்டுட்டு அலையற வித்தியாசமான அரசியல்வாதி.. அவன் நிச்சயமா மத்தவங்களைப் போல இல்ல. பார்ப்பதற்குத் தான் டீஸண்டா தெரியறான், ஆனால் பக்காப் பொறுக்கி அரசியல்வாதின்னு நிறையத் தடவைக் கேள்விப்பட்டிருக்கேன். இதுல அவனுடைய மறுபக்கம் அரக்கர்கள் வாழும் உலகமுன்னு உனக்கும் தெரியும்.. அதனால் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிர.."

தந்தையின் அச்சம் புரிந்தது. ஆயினும் அவரை முடிக்க விடாது, "கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க, முடிஞ்சவரை அடுத்து வர முகூர்த்தத்திலேயே எங்கக் கல்யாணம் நடக்கணும்.." என்று மகன் கூறியதில் இலேசாகத் துணுக்குற்றார் தேவேந்திரன்.

"ஷிவா, இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போடலாமே?"

"ஏன், அவன் என்னை எதுவும் செஞ்சிடுவான்னு நினைக்கிறீங்களா? அப்புறம் உங்க தங்கச்சி பொண்ணு வாழ்க்கை வீணாகிடுமோன்னு பயமோ?"

"சே, என்ன ஷிவா? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை.. சரி, நீ சொல்ற படியே நாளைக்கே முகூர்த்த நாளை குறிக்கப் பார்க்குறேன்.."

முடித்துக் கொண்டவராய் அலைபேசியை அணைக்க, சென்னைக்குக் கிளம்பும் எண்ணத்துடன் தனக்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் காவலர் குடியிருப்பை நோக்கி ஷிவா விரைந்து கொண்டிருக்கும் வேளை, அசுரகதியில் பறந்து கொண்டிருந்த ஆர்யனின் கருப்பு லெக்ஸஸும் அவனது பெரும் மாளிகையை அடைந்தது.

வெளியே கேட்ட அரவத்தில் அமர்ந்திருந்த ஸோஃபாவில் இருந்து வேகமாய் எழுந்த சீதாலெட்சுமி வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்ல, அதற்குள் வீட்டிற்குள் நுழைந்த ஆர்யனின் முகம் அதுவரை இருந்து வந்த கடினத்தை மறைத்து மலர்ச்சியைத் தழுவி கொண்டது.

"அதான் வந்துட்டே இருக்கேன்ல, இப்ப எதுக்கு இப்படி ஓடி வர?"

"என்னங்க, ரொம்பப் பயந்துட்டேங்க.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித் தான் லாயர் பத்மநாபன் சார் ஃபோன் செஞ்சார். உங்கக்கிட்ட பேசனும்னு உங்க செல்ஃபோன்ல நிறைய தடவை நான் ட்ரை பண்ணினேன். ஆனால் பிஸியா இருக்கிறதாவே மெசேஜ் வந்துட்டே இருந்தது."

"சரி, வா உள்ள.."

கூறியவன் தன் அறையை நோக்கி நடக்க, அவனை நெருங்கி நடந்தவளாக அவனது கரத்தைப் பற்றுவதற்கு முனைந்த மனைவியை விட்டு சற்று ஒதுங்கியவன்,

"மற்றவங்களை மாதிரி என்னை ஜெயிலில் [ prison cell ] வைக்கலன்னாலும், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வரைக்கும் போயிட்டு வந்திருக்கேன்.. அதனால் முதலில் குளிக்கிறேன், அப்புறமா என்னைத் தொடு.." என்றவாறே அறைக்குள் சென்றவனின் பரந்த முதுகைப் பார்த்தவளாய் நின்றவளின் முகம் நிமிடத்தில் அச்சத்தினால் வெளிரிப்போனது.

காரணம் அவனது புன்னகையும் மலர்ந்த முகமும்.

எப்பொழுதுமே ஒரு வித இறுக்கத்துடன் இருப்பனின் வதனம் இன்று அநியாயத்திற்கு மலர்ந்திருந்தது.

அதனிலும் காவல்துறையினரின் சந்தேகப்பார்வைகள், பத்திரிக்கையாளர்களின் அபத்தமான கேள்விகள், ஊடகங்களின் கேமராக்கள், தொண்டர்களின் ஆக்ரோஷக் கூச்சல்கள் என்று பலவற்றையும் சந்தித்திருந்தவனின் உதடுகளில் சிரிப்பா?

'ஐயோ என்ன செய்யக் காத்திருக்காரோ?? கடவுளே ஷிவாவிற்கு ஒண்ணும் ஆகக் கூடாது."

அந்நிமிடம் வரை கணவனிற்காக வேண்டிக் கொண்டிருந்தவளின் மனம் இப்பொழுது SSP ஷிவ நந்தனிற்காகப் பதற ஆரம்பித்தது.

தேனி மாவட்டத்தின் பெரியக்குள தாலுக்காவைச் சார்ந்த தாமரைக்குளத்தில் இருக்கும் தந்தை வழி பாட்டியின் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம், விடுமுறை காலங்களில் அதே கிராமத்திற்கு வருகைத் தரும் ஷிவ நந்தனையும், துர்க ரூபினியையும் பல முறை சந்தித்திருப்பவள் சீதாலெட்சுமி.

தேவேந்திரனின் பெற்றோர் வீடும், சீதாலெட்சுமியின் பாட்டி வீடும் இருந்தது ஒரே தெருவில் தான்.

ஆகச் சிறு வயதிலேயே ஷிவ நந்தனும் சீதாலெட்சுமியும் பரிச்சயமாயிருந்தனர்.

தன்னை விட இரு வயதே மூத்தவனாக இருந்தாலும், அந்தப்பருவத்திலேயே அவனுடைய மிடுக்கையும் அதிகாரத்தையும், அளாதியான துணிவையும், நெடுநெடுவென்று பனை மரம் போல் வளர்ந்திருந்தவனின் கடிய தேகத்தையும் பார்த்திருந்தவளுக்குக் கிட்டத்தட்ட அவன் மீது ஒரு ஈர்ப்பு என்றே சொல்லலாம்.

ஆனால் அந்த இளம் பருவத்திலேயே அவனது அத்தை மகள் துர்க ரூபினியை அவனுக்கு மணமுடிக்க விரும்புவதாக அவர்கள் வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தன் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள்.

அப்பொழுது இருந்து வெறும் நட்புடன் மட்டுமே அவனுடன் பழகியிருந்தவளுக்குத் திருமணம் முடிந்ததுமே தாமரைக்குளமும் ஷிவ நந்தனும் வெகு தூரமாகிப் போயிருந்தனர்.

ஆனால் காலங்கள் கடந்திருந்த வேளையில் ஏறக்குறைய ஷிவ நந்தனைப் பற்றி அறவே மறந்திருந்தாள் என்றே கூறலாம்.

அப்படியான சூழலில் ஷிவ நந்தன் மும்பைக்கு அவனாக விரும்பியே மாற்றல் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டதில் இருந்தே உள்ளத்தில் ஒரு வித வித்தியாசமான உணர்வு நெருட, இப்பொழுது அவன் தன் கணவனைக் கைது செய்திருப்பதில் நெஞ்சம் முழுக்கப் பயம் கவ்வியிருந்தது.

நிச்சயமாக இத்துடன் ஷிவாவும் நிறுத்த போவதில்லை, இவரும் அவனைச் சும்மா விட்டு வைக்கப் போவதில்லை.

கணவரையும் ஸ்நேகிதனையும் நினைத்துப் பெண்ணுள்ளம் கலங்கித் தவித்துப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஆர்யனின் அலைபேசி சிணுங்கியது.

"யெஸ் வருண்.."

"என்ன செய்யணும்னு சொல்லுங்க ஆர்யன்.. செஞ்சு முடிச்சிடலாம்."

"அவனுடைய Nick name என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. ரைட்?”

“யெஸ்.”

“அப்போ அதை வைத்தே அவனை முடிச்சிடணும் வருண்.."

"Ok Aryan, You take rest. மற்றதை நான் பார்த்துக்கிறேன்.."

"நோ வருண். ஏற்கனவே நான் ப்ளான் செய்து முடிச்சிட்டேன். நாளைக்கே என் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துட்டேன்.”

ஆர்யனின் பலத்தையும் சாதுரியத்தையும் பல முறைக் கண்கூடாக கண்டிருந்தவன் வருண்.

ஒரு வேளை பசியாறலுக்குக் கூட அடுத்தவரின் கையை எதிர்நோக்கும் அடிமட்டத்தில் இருந்து சுனாமி போல் ஆக்ரோஷமாக மேலெழுந்து, இன்று தேசத்தின் தலையெழுத்தையே தான் விரும்பினால் மாற்றக் கூடிய அதிகாரத்திற்கு விஸ்வரூபமாய் உயர்ந்திருப்பவனின் பராக்கிரமத்தையும் நன்றாக அறிந்திருந்தவன்.

அந்த ஒரே காரணத்திற்காகத்தானே ஆர்யனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டான்.

அப்படிப்பட்ட ஆர்ய விக்னேஷ் இன்று நாடு முழுவதும் அவனை இகழ்ச்சியாகப் பார்க்கவும் பேசவும் விட்டுவிடுவானா என்ன?

"Good then.. I believe you Aaryan.. All the best!"

மறுமுனையில் இளம் நகைப்புடன் அலைபேசியை வருண் அணைக்க, ஷிவாவின் தலையெழுத்தை மாற்றப் போகும் திட்டத்தின் முதல் அடியை அன்றிரவே செயல்படுத்த ஆரம்பித்த ஆர்ய விக்னேஷின் அலைபேசி இப்பொழுது நூறாவது முறையாக அவனை அழைத்தது.

கேட்பவர்களுக்கு அந்நொடியே மோகத்தைத் தூண்டும் கிறக்கமான குரல், போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளாமலேயே மயக்கத்தில் ஆழ்த்தும் பெண்ணின் செக்ஸியான [husky and sexy] சாரீரம்.

“ஆர்யன்.. ஆர் யு ஒகே?”

பிறந்தது பஞ்சாப் மாநிலம். தற்பொழுது வசிப்பது மும்பையில். தொழில் மாடலிங் துறையில்.

விரும்புவது இந்தித் திரைப்படங்களில் நாயகி கதாப்பாத்திரம்!

பொழுதுபோக்கு மாலையில் பப், பார் என்றால், இரவில் டேன்ஸ் க்ளப்ஸ், கேளிக்கைக் கொண்டாட்டங்கள், பார்ட்டிகள்.

சிறப்புத் திறன், நிபுணத்துவம் - ஆர்ய விக்னேஷைப் போன்ற பெருந்தலைகளையும் பிரபலங்களையும் தொழிலதிபர்களையும் கைகளுக்குள் போட்டுக்கொண்டு வேண்டியவற்றை ஆசை தீற நிறைவேற்றிக் கொள்வது.

தோற்றம்.. பார்ப்பவர்களின் கண்களை மட்டும் அல்ல அவர்கள் உடல் பொருள் ஆவி என்றனைத்தையும் சுண்டி தனக்குள் சரணைடைத்துக் கொள்ளும் கவர்ச்சியான தேகம்!

முதன் முறை அவளை ஒரு நடன விருந்தில் பார்த்த ஆர்யனின் உதடுகள் முணுமுணுத்த வார்த்தைகள், “Wow! An erotic, voluptuous body and alluring physique” என்பது தான்.

தேவைப்படும் இடம் எல்லாம் மேலெழுந்து இறங்கி இருக்க, இருக்கும் இடமே தெரியாதவண்ணம் வளைந்து நெளிந்திருக்கும் மெல்லிய இடையுடன் செக்கச்சிவந்து ஜொலிக்கும் இருபது வயது வடநாட்டு கவர்ச்சி பாவை!

சஹானா பாக்ஷி!

"ம்ம்ம்.. சொல்லு சஹானா."

"எனக்கு இப்பவே உங்களைப் பார்க்கணும்..”

“இங்க நடந்துட்டு இருக்கிறது என்னன்னு உனக்குத் தெரியாதா?”

“தெரியும்.”

“அப்படின்னா இப்போ ஏன் என்னைக் கூப்பிடுற?”

“அதான் சொன்னேனே, எனக்கு இப்பவே உங்களைப் பார்க்கணும்னு..”

“சஹானா, எனக்கு இப்போ உன்னைப் பார்க்க நேரமும் இல்லை, அதற்கான சூழ்நிலையும் இல்லை..”

முகத்தில் அடித்தாற் போன்றுக் கூறியவன் அலைபேசியை அணைக்கப் பேரழகியான அந்தச் சஹானாவின் அருகில் ஏறக்குறைய நிர்வாணத் தோற்றத்தில் படுத்திருந்தவனின் முகத்தில் சிறு ஏமாற்றம் படர்ந்தது.

“என்ன வரலைன்னு சொல்லிட்டானா?”

“ம்ம்ம்”

“சேன்ஸே இல்லை சஹி.. உன் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மயங்காதவர்களே கிடையாது. இதோ என்னையவே எடுத்துக்க, என் அண்ணன் எத்தனையோ தடவை சொல்லியும் உன்னை மறக்க என்னால் முடியலை. ஆனால் அந்த ஆர்ய விக்னேஷ், படு கில்லாடி. அவனுக்குத் தேவைப்படும் போது உன்னை யூஸ் பண்ணிட்டு மத்த நேரங்களில் அழகா தூக்கிப் போட்டுடுறான். அவனால் மட்டும் தான் இந்த உலகத்தில் நினைச்ச நேரத்திற்கு மனசை மாற்றவும் முடியும், உன்னை மாதிரி செக்ஸியான அழகிகள் அவர்களாவே வான்னு கூப்பிட்டும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கவும் முடியும்..”

கூறியவன் கட்டிலிற்குக் கீழே கிடந்த தன் ஆடைகளை எடுத்து உடுத்தியவாறே வீட்டை விட்டு செல்ல, அவனது வார்த்தைகள் சஹானா பாக்ஷியின் அழகிய முகத்தை அவமானத்தில் மென்மேலும் சிவக்கச் செய்தது.

தொடரும்..
 
Last edited:

Vidhushini

New member
வருண் உள்ளுணர்வு சொல்ற மாதிரி, துர்கரூபிணி - அவள் அம்மா சஞ்சலப்படுற மாதிரி, ஷிவ நந்தன் மனம் துணுக்குற்ற மாதிரி கல்யாணத்தில ஏதோ மிகப்பெரிய திருப்பம் வரப்போகுது போல....🤔

ஆர்யன் விக்னேஷ் இவ்ளோ மோசமான நடத்தை உள்ளவனா? இவனைப் போன்றவனுக்கு சீதா மனைவியாய் அமைந்தது, இவளது வினைப்பயனோ?

இன்ட்ரெஸ்ட்டிங் @JB sis👌
 

Ithenna pudhu twist u…
Sithara and DurgaRoobini friends ah??? Aaryan wife Seethalakshmi kum Durga and Shivavai therinji irukke..

Adei Aarya… unakku azhagana pondatti irukkum podhe model kooda enna link da… 😏😏😏

Sahana Pakshi… ava enna impact panna poralo ivanga life la…

Shiv ku onnum aagathu 🫤🫤🫤
 

saru

Member
Lovely update dear
Paara seethalakshmi sivu natpu
Ivala Arya epdi
Adeiii Arya unaku Ella pazhakamum irukum pola ye paavam seetha
Varum katika pora ponnu
Durga ku friend ahhh
Varun nee nenaikradu matume nadakuma enna
Enga siva nenacha nadakatha
Parkalam innoda illusion ah siva voda adiradi ah nu
Inda pakshi enna pannumo
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top