JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 1

JLine

Moderator
Staff member
அத்தியாயம் 1

ஒரு பொன்மாலைப் பொழுதில் சென்னையில் உள்ள அந்தப் பிரபலமான இரு பாலரும் படிக்கும் கல்லூரி, மின் விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப் பட்டு ஜெகஜ்ஜோதியாய்க் காட்சியளித்தது.

கல்லூரியின் உள்ளே நவநாகரிகமான உடைகளில் ஆரம்பித்து, நம் நாட்டின் பாரம்பரியமான புடவை வரை அணிந்து, இளஞ்சிட்டுக் குருவிகள் போல் இளம்பெண்கள் "இன்றைய நாள் எனதே, எனக்கு மட்டுமே" என்பது போல் உள்ள பூரிப்போடு வளைய வருவதைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.

அவர்களுக்கு இணையாக இளைஞர்கள் டீஷர்ட், ஜீன்ஸிலும், ஆங்காங்கே பாந்தமான வேஷ்டி, சட்டையிலும் வலம் வந்து கொண்டிருந்தனர்..

வெகு கலகலப்பாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஒருவொருக்கு ஒருவர் தெரிந்தும், தெரியாமலும் இரசித்துக் கொண்டும் இருப்பதனைக் காண்பதற்கு அத்தனை இனிமையாக இருந்தது..

பள்ளி கல்லூரி நாட்கள் என்பது ஒவ்வொருவர் மனதிலும் இணையில்லாத, நினைக்க நினைக்கத் திகட்டாத இனிமையான நிகழ்வுகளின் நினைவுகளைக் கொண்டு வரும். நண்பர்கள் பட்டாளத்துடன் அடித்த லூட்டிகள், ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டு விழித்த சம்பவங்கள், இடைவேளை நேரங்களில் அடித்த அரட்டைகள் என்று ஒவ்வொருவருக்கும் வித்தியசமான அனுபவங்கள்.

ஒலிவாங்கியில் அனைவரையும் விளையாட்டு அரங்கத்திற்கு வர அழைப்பு விடுத்ததை ஒட்டி எல்லோரும் அங்கு விரைந்தனர்.

கூடிய அனைவரும் ஒருவழியாக அவரவர்களுக்குக் கொடுத்திருந்த இடத்தில் அமர்ந்த பின், நிகழ்ச்சிகள் துவங்க, ஆர்ப்பாட்டமும் கலகலப்புமாக நடந்து கொண்டிருந்த விழாவில் அங்கு இருந்த மாணவிகள் அனைவரின் கண்களும், துறுதுறுவென அங்கும் இங்கும் வளைய வந்து கொண்டு இருந்த அந்த இளைஞனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

மிகவும் துடிப்பாக ஆறு அடிக்கும் மேல் வளர்ந்து, கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் இருந்த அவனே நம் கதையின் நாயகன்... கல்லூரியின் மிகச் சிறந்த அழகி முதல் சுமாரான பெண்கள் வரை எல்லோரையும் தன்னை நினைத்துக் கனவு காண வைத்திருக்கும் 24 வயது பேரழகன் ஹர்ஷ வர்தன், அந்தக் கல்லூரியின் பிரசிடண்ட், இறுதி ஆண்டு MCA படித்துக் கொண்டிருப்பவன்.

விழாவின் இறுதியில் பேசுவதற்கு மேடையேறிய அவனைக் கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் ஒருவொருக்கொருவர் திரும்பி ஏக்கமாகப் பார்த்துக் கொள்ளவும் தவறவில்லை.

அவனது பெயரை சொல்லி மேடைக்கு அழைக்கும் பொழுது கீழே அமர்ந்திருந்த இளம் பெண்களிடம் இருந்து "ஓஓஓஓஹோ..." என்று சத்தம் வர, அவர்களைப் புன்னகையுடன் பார்த்தபடியே ஸ்டைலாக மேடை ஏறினான் ஹர்ஷா.

ஹர்ஷா என்றழைக்கப்படும் ஹர்ஷ வர்தன், மும்பை மற்றும் சென்னை மாநகரங்களில் பெயர் சொல்லக்கூடிய பல கோடிகள் மதிப்புமிக்கத் தொழிற்சாலைகள், கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனிகள் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிதம்பரம்-சங்கீதாவின் ஒரே செல்ல மகன்...CS Group of Companies-ன் வருங்காலச் சேர்மன்..."பார்ன் வித் சில்வர் ஸ்பூன்" என்பது போல் இவனை "பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்" என்றே சொல்ல வெண்டும்.

சிதம்பரம் சென்னையில் பிறந்து வளர்ந்தவர், மேற்படிப்புக்காக வெளிநாடு சென்ற போது தன்னுடன் படித்த மும்பையைச் சேர்ந்த சங்கீதாவை காதலித்து, படிக்கும் பொழுதே மணந்து கொண்டவர், அன்னியோன்யமான தம்பதியினர்...
படித்து முடித்தவுடன் இந்தியா திரும்பிய சிதம்பரம், அவர் தந்தை எவ்வளவோ எடுத்து சொல்லியும் சென்னையில் தங்காமல் மும்பையில் தன்னுடைய தொழில்களைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவர், அங்கேயே தன் மனைவியுடன் குடியேறி விட்டார்..

இதில் சிதம்பரத்தின் பெற்றோருக்கு வருத்தம் இருந்தாலும் தங்கள் பேரன் ஹர்ஷாவின் பிறப்பால் மகனையும், மருமகளையும் மனதார ஏற்றுக் கொண்டார்கள்.

அதற்குச் சங்கீதாவின் இனிமையான குணமும் ஒரு காரணம். திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் சிதம்பரமும், சங்கீதாவும் ஏக்கத்துடன் தங்களுக்குத் தெரிந்த கோவில்களுக்குச் சென்று வர, அவர்களின் வேண்டுதல்களுக்குப் பதில் கூறுவது போல் சங்கீதாவின் பொன் வயிற்றில் உதித்தான் அழகான ஹர்ஷா..

தங்களின் காதலுக்கு விடையாகவும், இத்தனை வருடங்கள் கழித்துக் கிடைத்த பரிசாகவும், குடும்பத்தில் காணாமல் போக இருந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்த செல்வமாகவும் அவன் இருந்ததால் "மகிழ்ச்சியைக் கொண்டு வருபவன்" என்று அர்த்தம் கொண்ட "ஹர்ஷா" என்ற பெயருடன், "வர்தன்" என்பதையும் இணைத்து, "ஹர்ஷவர்தன்.." என்ற பெயரை அவனுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் சிதம்பரம் சங்கீதா தம்பதியினர்....

ஹர்ஷாவின் சிறு வயது முதலே சிதம்பரம் அவனுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார்... அவன் பிறந்து வளர்ந்தது மும்பையாக இருந்தாலும், தந்தை தமிழ் பேசுவதால் அவன் தமிழையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற பிடிவாதத்தில் அவனுக்கு என்று தனியாக ஆசிரியை வைத்துப் பயிற்சி கொடுத்தார்... அதனால் தமிழ், மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் என்று மொழிகளில் தேர்ச்சி பெற்றவன்...

ஹர்ஷா பள்ளி இறுதி ஆண்டுப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சிதம்பரத்தின் தந்தை இறந்து விட, தன் அன்னையையும், தந்தை வழி தொழில்களையும் கவனித்துக் கொள்ளச் சென்னைக்குக் குடி பெயர்ந்தனர் சிதம்பரம் சங்கீதா தம்பதியினர்....

தாயின் வழியிலும், தந்தையின் வழியிலும் பிறந்த ஒரே வாரிசு, பேரன் ஹர்ஷா ஆதலால் மிகவும் அழுத்தமும், திமிரும், கர்வமும் அதனுடன் ஏகப்பட்ட பிடிவாதமும் என்று ஒருங்கே கொண்டவன்.... அதனாலேயே தான் விரும்பியதை செய்து பழகியவன், யாரிடமும் பணிந்து போக விரும்பாதவன்.

கல்லூரியில் விழா முடிந்ததும் எல்லோரும் கலைய ஆரம்பிக்க, கல்லூரி பிரின்சிபாலிடம் சிறிது உரையாடிவிட்டு திரும்பிய ஹர்ஷாவை எதிர் கொண்டாள் ரியா.... பெயருக்கு ஏற்ற மாதிரி மிகவும் அழகான இளம்பெண், சென்னையின் பெரும் பணக்காரர் ஒருவரின் ஒரே வாரிசு... இறுதி ஆண்டு B.Sc. கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறாள்...

கல்லூரியின் துவக்க நாளில் நடந்த முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழாவில் பிரசிடெண்ட் என்ற முறையில் ஹர்ஷாவை சந்தித்தவள் அன்றே அவன்பால் விழுந்துவிட்டாள்...

அன்று முதல் அவனைத் தன் வலைக்குள் வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தும் வெற்றி பெற முடியாமல், கஜினி முகமது போல் மீண்டும் மீண்டும் விடாமுயற்சியாக அவனைப் பின் தொடர்ந்து கொண்டே இருப்பவள்... ஆனால் ஹர்ஷாவிற்கு என்னமோ இவளிடம் மட்டும் இல்லை, வேறு எந்தப் பெண்களிடமும் ஒரு ஈர்ப்போ, ஆர்வமோ இது வரை வந்ததில்லை...

அவனைப் பொறுத்தவரையில் எந்தப் பெண்ணையும் முதன் முறையாகப் பார்க்கும் பொழுது அவள் தனக்காவே பிறந்தவள் என்று தன் மனம் உணர்ந்து, உடலும் உள்ளமும் சிலிர்க்கிறதோ அவளே தன்னுடையவள் என்று முடிவெடுத்திருப்பவன்...

அவனை நெருங்கிய ரியா "ஹாய் ஹர்ஷா, உங்க ஸ்பீச் ரொம்ப நல்லா இருந்தது" என்று கண்களில் காதலுடன் கூற அவளைத் திரும்பி பார்த்தவன் ஒன்றும் பேசாமல் விருட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டான்....

அவனுடைய அந்த அவசர விலகல் மனதை வருத்த, இருந்தும் "இதென்ன முதல் தடவையா?" என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது அவள் அருகில் வந்த தோழிகள்..

"ஏன்டி, அவன் தான் உன்னை இந்த அளவுக்கு இக்னோர் பண்றான் இல்ல? பின் ஏன் அவனையே தொங்கிக்கிட்டு இருக்க? உனக்கு இருக்கும் வசதிக்கும், அழகுக்கும் எத்தனையோ பசங்க வந்து க்யூவில் நிற்பாங்க, பின் எதற்கு இவன் பின்னாடியே இத்தனை வருஷமா அலைஞ்சிக்கிட்டு இருக்க?" என்க, ரியாவிற்குத் தெரியும், அவளின் தோழிகளுக்கும் ஹர்ஷாவின் மேல் ஒரு கண், இருந்தும் அவளுக்காகப் பரிதாபப்படுவது போல் நடிக்கின்றனர் என்று... ஒரு வேளை ரியாவிற்கு அவன் கிடைக்காவிட்டால் தங்களில் ஒருவருக்காவது அவன் கிடைப்பானே என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருப்பது அவளுக்குப் புரியும்...

இத்தனை அழகோடு ஒரு கோடீஸ்வரன் கிடைக்க வேண்டுமே என்ற அவர்களின் ஆவல் தெரியாதவள் அல்ல அவள்... தலையைச் சிலுப்பிவிட்டுக் கொண்ட ரியா, ஹர்ஷா சென்ற பாதையைப் பார்த்துக் கொண்டே....

"எனக்கு இவன், இவன் மட்டும் தான் வேண்டும், அதற்கு என்ன செய்யணும்னும் எனக்குத் தெரியும்" என்று அழுத்தி கூறும் பொழுதே அவள் கண்களில் காதல் அல்லாத "அவனை எப்படியும் அடைந்தே தீருவேன்" என்ற வெறித் தெரிந்தது.....

அவளிடம் இருந்து அகன்றவன் ஒரு வித எரிச்சலுடன் தன் தோழர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடக்க...

"ஹர்ஷா, ரியா செம ஃபிகர்டா... அவ பின்னாடி எத்தனை பசங்க கிறுக்கனுங்க மாதிரி அலையறானுங்கன்னு தெரியும் இல்லை?? கையில் கிடைச்சத சான்ஸ் கிடைக்கும் பொழுது என்ஜாய் பண்ணிடலாம் இல்ல?....." என்று சில்மிஷமாகக் கூற, அவர்களை முறைத்தவன் ஒன்றும் பேசாமல் இருந்தான்...

"டேய், ஹர்ஷாவை பற்றி நல்லா தெரியும். இருந்தும் இது என்ன பேச்சுடா?” என்றான் ஹர்ஷாவின் நண்பர்களின் ஒருவன்...

“ஹர்ஷா, சான்ஸே இல்லைடா, எங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சான்ஸ் கிடைச்சா அல்வா கிடைச்ச மாதிரி, ஆனா நீ என்னன்னா சாமியார் மாதிரியே இருக்க?"

"நான் ஏற்கனவே பல தடவை சொல்லியிருக்கேன். என் லைஃப்ல நிச்சயம் ஒருத்திக்கு மட்டும் தான் இடம் இருக்கு, ஆனா அது நிச்சயம் இவளுங்க யாரும் இல்லை, அதுவும் இந்த ரியா கிடையவே கிடையாது... எனக்குன்னு ஒருத்தி வரும் பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அந்த நிமிஷமே என் மனசு சொல்ல வேண்டும்.... இவள் தான் என்னவள் என்று... அதே மாதிரி, நான் எப்படி அவள் எனக்கு மட்டும் தான் என்று நினைத்திருக்கிறேனோ, அதே மாதிரி, அவளுக்காக மட்டும் தான் நான் என்று மனதில் ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறேன்....அதனால ப்ளீஸ் இனி இது மாதிரி கமெண்ட்ஸ் எல்லாம் வேண்டாம்...." என்று அழுத்தமாகக் கூறினான்..

"அப்போ நீ உன்னவளை சந்திக்கும் பொழுது எங்களை மறந்திடாத, நாங்களும் அவளைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறோம்" என்று சிரித்தபடியே கூறினார்கள். அவர்களுக்கும் தெரியும், அவன் ரியா மட்டும் இல்லை, எந்தப் பெண்களிடமும் இது வரை மயங்கவில்லை என்று, சும்மா கிண்டலுக்குச் சொன்னதற்கே அவனுக்கு இத்தனை கோபம்...

அவர்களின் கேள்விக்குச் சிரித்தபடியே தன் காரில் ஏறியவன், "எனக்கென்று பிறந்தவளை கூடிய சீக்கிரமே பார்ப்பேன் என்று கூடத் தோணுது.... அப்பொழுது கண்டிப்பா உங்களிடம் சொல்கிறேன்..." என்றவன் காரை கிளப்ப,
"வி ஆர் வெய்ட்டிங்ங்ங்ங்ங்ங்" என்று சத்தமாகக் கத்தினார்கள்.

சிரித்துக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருந்த ஹர்ஷாவிற்குத் தன் நண்பர்கள் கூறிய வார்த்தைகளும் அதற்குத் தன் பதிலும் நினைவில் வந்து கொண்டே இருந்தது...

'எப்பொழுது தன்னவளை பார்க்கப் போகிறோம்? அவளாக என்னைத் தேடி வருவாளா? அல்லது நாம் அவளைத் தேடி போகப் போகிறோமா???'

எப்படி என்றாலும் அவனுக்குப் பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை... தன்னுடன் வாழ்க்கை முழுவதும் பயணிக்கப் போகும் ஒருத்தியைத்தான் தான் தேர்ந்து எடுக்க வேண்டும்...

பெற்றோர் பார்த்து, பின் மணமக்கள் பார்த்து நடக்கும் திருமணங்களில் காதல் என்பது நிச்சயம் இல்லை, அது வேறு வழியில்லாமல் வரும் ஒரு வித கவர்ச்சி என்றே நினைத்தான்...

"தன்னவள், தன்னுடன் வாழ்நாள் முழுவதும் வரப் போகிறவள் எப்படி இருப்பாள்? எங்கு இருப்பாள்?" என்று நினைக்கும் பொழுதே அவன் உள்ளத்தில் அவன் வயதிற்கு ஏற்ற சிலிர்ப்பு உண்டானது.

**********************************

சென்னைக்குக் கிட்டதட்ட 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வேப்பங்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சின்னக் கிராமம்.... அங்கு ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போட்டிருந்த பந்தலின் கீழ் பெரியவர்களும் சிறியவர்களுமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்த எழுந்த கணேசன் தன் மனைவி மாலதியுடன் வீட்டின் உள்ளே சென்றார்....

அங்குக் கால்களை மடித்து முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தன் அன்னையின் புகைப்படத்திற்குக் கீழ் அமர்ந்து இருந்த கனிகாவை பார்த்தவருக்குக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

தன் ஒரே செல்ல தமக்கையின் மகள், தாயை பறிக்கொடுத்து இப்பொழுது தனியாக அமர்ந்து இருப்பதைப் பார்த்தவருக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது....

கனிகாவின் அன்னை காமாட்சி, கணேசனின் ஒரே தங்கை. ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த அண்ணன் தங்கை இருவருக்கும் படிப்பில் மிகுந்த ஆர்வம், போட்டி போட்டுக் கொண்டு படித்தவர்கள் அவர்கள் பிறந்த ஊரிலேயே கணேசன் பன்னிரெண்டாம் வகுப்பிலும், காமாட்சி பத்தாவது வகுப்பிலும் முதல் மதிப்பெண்கள் எடுக்க, அவர்களின் பெற்றோர் கணேசனை வெளியூரில் இருந்த கல்லூரிக்கு படிக்க அனுப்பினர்...

தன் அண்ணன் கணேசனுடனேயே எப்பொழுதும் பள்ளிக்கு சென்ற காமாட்சிக்கு இப்பொழுது தனியே பள்ளிக்கு செல்வது கடினமாக இருப்பினும், படிப்பின் மேல் இருந்த அளவு கடந்த காதல் அவளைப் பள்ளிக்கு இட்டு சென்றது....பதினோராவது வகுப்பு முடித்துப் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முன்னேறிய பொழுது தான் விதி அவளின் வாழ்க்கையில் சுந்தரத்தின் மூலம் காலடி எடுத்து வைத்து விளையாட ஆரம்பித்தது....

அதே ஊரில் இருந்த ஒரு தொழிற்சாலையில் மிஷின் ஆப்பரேட்டராக வேலைப் பார்த்து வந்த சுந்தரம் பெயருக்கேற்ற மாதிரியே அழகானவன்... மாநிறத்தில், வாட்டசாட்டமாக நல்ல உயரத்துடன் இருந்த சுந்தரத்தின் கண்களில் காமாட்சி விழ, தினமும் அவளைப் பின் தொடர்ந்தவன் நாளடைவில் அவளைத் தன் வசப்படுத்தினான்...

அது வரை நன்கு படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தவளின் நினைவில் என்று சுந்தரம் நுழைந்தானோ அன்றே அவள் வாழ்க்கை தடம் புரள ஆரம்பித்தது....அண்ணனும், பெற்றோரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேளாமல் தன் பள்ளி படிப்பைக் கூட முடிக்காமல் அவனுடன் திருமணம் முடித்துக் கொண்டு வந்தவளை பார்த்தவர்களுக்கு அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை....

திருமணம் முடிந்து கணவனுடன் காதலுடன் கூடிய நாட்கள் காமாட்சியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் பல வருடங்கள் வாரிசு என்பது இல்லாதது பெரிய குறையாக இருக்க, காமாட்சியின் விரதங்களின் பயனாகக் குறிஞ்சிப்பூ போல் பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகே கனிகா பிறந்தாள்....

வாரிசு இல்லாத காரணத்தால் காமாட்சியை விட்டு விலக ஆரம்பித்து இருந்த சுந்தரம் எங்கிருந்தோ வந்த அந்தப் பாழாய் போன குடிப்பழக்கத்தைக் கற்றுக் கொண்டான்...

நாட்கள் செல்லச் செல்ல, சுந்தரத்தின் போக்கிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்து இருந்தது.. முதலில் எப்பொழுதாவது குடித்து விட்டு வந்தவன் பின் எப்பொழுதும் குடி என்றே இருந்தான்...

சுந்தரத்தால் தினம் ஒரு பிரச்சனை, அடி உதை... தங்கள் ஒரே மகள் மருமகனால் படும் அவஸ்தையைப் பார்த்து வேதனையில் உழன்ற காமாட்சியின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகத்தை விட்டுச் செல்ல, கல்லூரி வாழ்க்கை முடிந்து சென்னையில் நல்ல வேலையில் மனைவி இரு பிள்ளைகள் என்று மகிழ்ச்சியான குடும்பமாக இருந்த கணேசனிடம் கடைசி ஆசையாக "உன் தங்கையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுத்து விடாதே கணேசா" என்று சத்தியம் வாங்கி மறைந்தார்கள்....

தன் பெற்றோரின் இறுதி ஆசையை நிறைவேற்ற கணேசன் பட்ட பாடு அவருக்கு மட்டும் தான் தெரியும்...

இவ்வளவு கொடுமைகளுக்கு இடையிலும் பிறந்த தன் ஆசை மகள் கனிகாவை எப்படியும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று தன் தங்கை படும் பாட்டைப் பார்த்தவர், சுந்தரம் தன்னை எத்தனையோ தடவை அவமானப்படுத்தியும் தங்கைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு காமாட்சிக்கு தேவையானவைகளைச் செய்து கொண்டு தான் இருந்தார்....சுந்தரத்தின் அட்டகாசம் ஒரு எல்லையைத் தாண்டும் வரை....

சுந்தரத்தின் குடிப் பழக்கத்தால் அவன் வேலை பார்த்த தொழிற்சாலையில் ஒரு பெரிய விபத்து நேர, அவனை அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கணேசன் பெரும் தொகை செலவு செய்ய நேர்ந்தது....

அத்தனை உதவிகள் அவர் செய்தும் அதனை எல்லாம் மறந்து போனவன், அவரை எப்பொழுதும் உதாசீனப் படுத்துவதிலேயே குறியாக இருக்க, அண்ணன் படும் அவமானங்களைத் தாங்கி கொள்ள முடியாமல் அவரை இனி தன் வீட்டிற்கு வருவதோ, இல்லை தன்னிடம் பேசுவதோ வேண்டாம் என்று கூறிவிட்டார் காமாட்சி.....

தங்கையின் பிடிவாதமான வேண்டுகோளை மீற முடியாமல் கணேசனும், காமாட்சியின் வீட்டிற்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார்.... ஆனால் காமாட்சி மறுபடியும் தன் அண்ணனின் உதவியை நாடியது, தனக்காக அல்ல, தன் ஒரே செல்ல மகளை அவரின் பொறுப்பில் விடுவதற்கு.... அப்போழுது காமாட்சியின் புற்று நோய் இறுதி கட்டத்தை அடைந்திருந்தது.

தன் அன்னையைப் போல் கனிகாவிற்கும் படிக்கும் கனவு ஏராளம்.... எப்படியும் தன் அன்னையின் ஆசையை நிறைவேற்றி விடவேண்டும் என்று தீராத ஆவல் கொண்டவள், பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரிக்குப் போவதற்குப் போராடி தன் தந்தையிடம் அனுமதி வாங்கினாள்...

தங்கள் சொந்த கிராமத்தில் கல்லூரிகள் எதுவும் இல்லாததால், பக்கத்தில் இருந்த ஒரு ஊரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தவளுக்குச் சேர்ந்த இரண்டாம் மாதமே இடியென வந்து சேர்ந்தது தன் அன்னைக்கு வந்திருந்த புற்று நோய் பற்றிய செய்தி....

இடிந்து போய் இருந்த காமாட்சிக்குக் கவலையெல்லாம் 'எப்படி இந்தக் குடிகாரனிடம் தன் செல்ல மகளைத் தனியே விட்டு செல்வது?' என்று தான்...

தன் முடிவு நாளை அறிவிக்கத் தன் அண்ணன் கணேசனை அழைத்தவர்,
"அண்ணா, இந்தக் குடிகாரனிடம் என் மகளை விட்டுட்டுப் போனால் நிச்சயம் என் கட்டை வேகாது... இது நாள் வரைக்கும் என்னால என் மகள் பட்ட கஷ்டம் போதும், இனியும் அவள் அவன் கிட்ட அடி உதை வாங்கக் கூடாது... தயவு செஞ்சு அவள உங்கக்கிட்ட கூட்டிட்டுப் போய் வச்சுக்கங்க" என்றார்...

அப்பொழுதுதான் கணேசனுக்குத் தன் தங்கை இறுதி நாளை எண்ணிக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தது... ஆனால் விதி கணேசன் வந்து கனிகாவை அழைத்துச் செல்லும் முன் காமாட்சியின் உயிரைப் பறித்திருந்தது....
இதோ அவர் தங்கை இறந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது... வீட்டின் உள்ளே நுழைந்தவர், மெதுவாகச் சுந்தரத்திடம் பேச்சை ஆரம்பித்தார்.

"மாப்பிள்ளை, நாங்க கிளம்பணும், போட்டது போட்ட படியே விட்டுட்டு வந்துட்டோம்... ஆனா போறதுக்கு முன்னாடி உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்"...

பதில் சொல்லாது அவரையே பார்த்திருந்த சுந்தரத்திடம் எப்படி இந்தப் பேச்சை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை கணேசனுக்கு...

காமாட்சி இருந்திருந்தால் அவளே பேசி ஒரு வழியாக இவன் சம்மதத்தை வாங்கியிருப்பாள்... இவன் சரியான கோபக்காரன், எப்படி இதை எடுத்துக் கொள்ளப் போகிறானோ என்று இருந்தது.... திரும்பி தன் மனைவியைப் பார்க்க, அவரோ 'பேசுங்க' என்று கண்களாலேயே தைரியம் கொடுக்க,

"இல்லை, நீங்க எப்பொழுதும் வேலைக்குன்னு போய் விடுவீர்கள்... இங்க தனியா கனிகா மட்டும் தான் வீட்டுல இருக்கணும். காலம் வேற கெட்டுக் கெடக்குது... வயசுப் பொண்ண தனியா எந்நேரமும் வீட்டுல விட்டுட்டு இருக்கிறது நல்லா இருக்காது மாப்பிள்ளை... அதனால உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நாங்க கனிகாவ எங்க வீட்டிற்குக் கூட்டிட்டு போறோம். அங்கேயே ஒரு நல்ல காலேஜில சேர்த்து படிக்க வைக்கிறோம்" என்று கூற,

ஒரு சிறு அதிர்ச்சியுடன் கனிகாவும் தன் மாமனை நிமிர்ந்து பார்த்தாள்... ஏனெனில் காமாட்சி கனிகாவிடம் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கவில்லை...

"பெண்ணைப் பெத்தவனுக்கு அவள எப்படிப் பாதுகாக்கனும்னும் தெரியும், படிக்க வைக்கணுமா வேண்டாமான்னும் தெரியும்... நீங்க உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போங்க" என்று அவன் அதிரடியாகக் கூற, "கடவுளே இவனை எப்படிச் சம்மதிக்க வச்சு இந்தச் சின்னப் பெண்ணை இவன் கிட்ட இருந்து காப்பாற்றிக் கூட்டிட்டுப் போகப் போறேன்னு தெரியலையே" என்று உள்ளுக்குள் மருகியவர் வேறு வழியில்லாமல் கெஞ்சும் குரலில் ..

"மாப்பிள்ளை, நீங்க நல்லா பாத்துக்குவீங்கன்னு எங்களுக்கும் தெரியும், ஆனால் இது காமாட்சியோட கடைசி ஆசை. அவள் பொண்ணைச் சிட்டில இருக்கிற நல்ல காலேஜில சேர்த்து படிக்க வைக்கணும்னு", என்று கூற, அது சுந்தரத்திடம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது...

என்ன தான் குடிகாரனாக இருந்தாலும் மனதார விரும்பி திருமணம் செய்த பெண்ணாச்சே காமாட்சி, இன்று வரை அவன் மனதின் ஓரத்தில் அவர்களின் கடந்த காலக் காதல் நினைவுகள் இருக்கத்தான் செய்தது...

அதுவும் காமாட்சி இறந்த பிறகு இந்த மூன்று நாட்களுக்கு உள்ளாகவே அவள் இல்லாத வாழ்க்கை ஒரு சூனியத்தைக் காட்டியிருந்தது அவனுக்கு... "நிச்சயம் தன்னால் இனி குடிக்காமல் இருக்க முடியாது... தன் மனைவி இல்லாத உலகை மறப்பதற்காக வேண்டி முன்னை விடத் தான் கேவலமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை... இதில் இந்தச் சின்னஞ்சிறு பெண் வேறு எதற்கு அவஸ்தை பட வேண்டும்" என்று முதன் முறையாக ஒரு நல்ல தகப்பனாகச் சுந்தரம் அந்த முடிவை எடுத்தான்.

"சரி மச்சான், கூட்டிட்டுப் போங்க....போடா கண்ணம்மா...", என்று அவன் சொன்னவுடன் கனிகா ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க, அவள் தந்தை அவளை முதன் முறையாகக் கனிவுடன் பார்த்திருந்ததை அவளால் நம்ப முடியவில்லை....

"சரி மாப்பிள்ளை, அப்போ நாங்க இன்று மதியமே கிளம்புகிறோம்", என்றவர் கனிகாவையும் கிளம்பச் சொன்னார்...

என்ன தான் சரி என்று தலை ஆட்டினாலும், திடீரென்று தன் மேல் அக்கறை காட்டிய தந்தையை விட்டு வரவும் மனதில்லை...'என்ன ஆனாலும் அப்பா ஆயிற்றே. இத்தனை கொடுமையிலும் அம்மா அப்பாவை விட்டு போகவில்லையே, இப்பொழுது அம்மாவும் இல்லாமல் தனியாக அவர் எப்படி இருப்பார்? யார் அவருக்குச் சமைப்பார்கள்?' என்று யோசனை ஓட, திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள்...

அவளின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவர்,

"கண்ணம்மா... நான் உன் அம்மாவின் படிப்பையும் கெடுத்து, அவளைக் கடைசி வரை சந்தோஷமாகவும் வச்சிருக்கவில்லை... ஆனால் நீயாவது நல்லா படித்துப் பெரியா ஆளா வா... என்னைப் பற்றிக் கவலை படாதே... நீ இங்கு இருந்தால் நிச்சயம் உன் அம்மாவோட ஆசை நிறைவேறாது", என்று கூற, கண்ணீருடன் சரி என்று தலையை ஆட்டினாள்.

வீட்டை விட்டு கிளம்பும் முன் கரித்துக் கொண்டு வந்தது கனிகாவிற்கு...

பிறந்த நாள் முதல் தன் அன்னையுடன் வளர்ந்த இடமாச்சே....என்ன தான் தந்தையால், தானும் தன் அன்னையும் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகியிருந்தாலும், தன் அன்னையின் நினைவுகள் அந்தச் சின்ன ஓட்டு வீட்டில், ஒவ்வொரு ஓட்டிலும், செங்கற்களிலும் நிறைந்தே இருந்திருந்தது.. இனி இங்குத் திரும்பி வருவோமா? என்று ஆற்றாமையுடன் வீட்டில் இருந்து கிளம்பினாள்.

அன்று இரவே மூவரும் சென்னை வந்து சேர, கனிகாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் கணேசனின் மகன் அகிலும், மகள் நிகிலாவும்... அகிலும், நிகிலாவும் சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது கணேசன் தன் மனைவி மக்களுடன் காமாட்சியின் வீட்டிற்குச் சென்றது உண்டு...

ஆனால் நாட்கள் செல்ல செல்ல சுந்தரத்தின் போக்கில் குடியினால் மாற்றம் தெரிய கணேசன் வேப்பங்குடிக்கு செல்வதை அறவே நிறுத்திவிட்டார்.... அகிலும், நிகிலாவும் அப்பொழுது பார்த்தது கனிகாவை... அகிலுக்கு ஐந்து வயது இளையவள் நிகிலா. கனிகாவும் நிகிலாவும் ஒரே வயது...

கனிகாவை அகிலுக்கும், நிகிலாவிற்கும் கணேசன் அறிமுகப்படுத்த, நெடுந்தூரம் பயணம் செய்திருந்தாலும், அந்தக் கலைப்பிலும் களையாக அழகாகத் தெரிந்த கனிகாவின் உருவம், சொல்லாமல் கொள்ளாமல் மெதுவாக அகிலின் மனதில் ஒட்டிக் கொண்டது...

சின்ன வயதில் அவளுடன் விளையாடி இருந்தவன் தான், ஆனால் அவளை இப்பொழுது இளம் பெண்ணாகப் பார்ப்பது அவனின் இளமையைத் தட்டி எழுப்ப, வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவன் மனதிற்குள் அவளின் அனுமதி இல்லாமலேயே தன் அத்தை மகளைத் தன்னவளாக இணைத்துக் கொண்டான்....

தன் சிறு வயது தோழியைச் சந்தித்த சந்தோஷத்தில் நிகிலாவும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள்... சிறுவர்களின் ஒற்றுமையைப் பார்த்த கணேசனுக்கும் மாலதிக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியுமாக இருந்தது... இனி கனிகாவைப் பற்றிக் கவலை பட வேண்டாம்... நாளைக்கே அவளுக்குத் தன் நண்பருக்கு தெரிந்த ஒரு கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்துவிட்டால் அப்புறம் வேறு கவலை இல்லை என்று நினைத்த கணேசன்,

"நிகிலா, கனிகாவிற்கு உன் அறைக்குப் பக்கத்து அறையை ஒதுக்கி கொடுத்துவிடு" என்றார்.

வெகு நேரம் நிகிலாவுடன் பேசிக் கொண்டிருந்த கனிகாவிற்குக் கூட, வரும் வழியெல்லாம் எப்படிப் புது இடத்தில் இருக்கப் போகிறோமோ, மாமனின் பிள்ளைகள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்று இருந்து வந்த கவலை அகன்றது.
மறு நாள் காலை வெகு சீக்கிரத்தில் எழுந்தவள் வழக்கம் போல் தலை குளித்து மாடியில் இருந்து கீழ் இறங்கி வர, அப்பொழுது தான் ஜாகிங் போய்த் திரும்பி வந்த அகில் கனிகாவை பார்த்து மனம் சிலிர்த்து புன்னைகைக்க, அவனைப் பார்த்தவுடன் தலை குனிந்தவள், மெதுவாக மாடியில் இருந்து இறங்கினாள்...

"என்னை ஞாபகம் இருக்க, கனிகா?" என்று அவன் கேட்க, "ம்ம்ம்ம்" என்று தலையை மட்டும் அசைத்தவள், அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை...

"சின்ன வயசுல எப்படி என் கூட விளையாடுவ, இப்போ என்ன ஆச்சு? ஏன் இந்தத் தயக்கம்?" என்று அவன் கேட்க, நிமிர்ந்து பார்த்தவள், மறுபடியும் தலை குனிய, அவள் அருகே வந்தவன் "கனிகா, சின்ன வயசில் எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம், என்ன??" என்றவன், கை குலுக்கத் தன் கரத்தை நீட்ட, கிராமத்திலேயே வளர்ந்து வந்தவளுக்கு ஒரு ஆணின் கரத்தைப் பற்றுவது நாணத்தைக் கொடுக்க, அவளின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவன் சிரித்துக் கொண்டே மாடி ஏறினான்...

**************************

அன்றே அவளைச் சென்னையிலேயே அந்தப் பிரபலமான பெரிய கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்கள் கணேசனும், அகிலும்... கிராமத்தில் வளர்ந்து வந்தவளுக்குச் சென்னை நகரமே பிரமிப்பைக் கொடுத்திருந்தது என்றால், இத்தனை பெரிய கல்லூரி அச்சத்தைக் கொடுத்தது...

அவளின் நடுக்கத்தைப் பார்த்த அகில் அவளின் அருகில் வந்தவன் கையைப் பற்றி, "என்ன கனிகா பயமா இருக்கா?" என்க, கண்களில் அச்சத்தைத் தேக்கி வைத்திருந்தவள் அதனுடன் தலையை ஆம் என்பது போல் ஆட்டினாள்....

"இங்க அப்பாவோட க்ளோஸ் ஃப்ரெண்டு தான் அஸிஸ்டெண்ட் பிரின்ஸிபலாக இருக்கிறார்... அதனால் உனக்கு ஈஸியா இடம் கிடைத்துவிடும்... உனக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் தாராளமாக அவரைப் போய்ப் பார்க்கலாம்... இல்லை என்றால் என்னிடம் சொல்லு" என்றான்....

மகனின் கனிவான பேச்சைக் கேட்ட கணேசனுக்கும் திருப்தியாக இருக்க, கனிகாவும் சரி என்று சின்னப் பிள்ளைப் போல் தலை ஆட்டினாள்....

மீட்டிங்கில் இருந்த அஸிஸ்டெண்ட் பிரின்ஸிபல் ஒரு வழியாக மீட்டிங் முடிந்து தன் அறைக்குத் திரும்ப அவரைப் போய்ப் பார்த்தவர்கள் கனிகாவை அன்றே கல்லூரியில் சேர்த்தார்கள்.... "இன்னைக்கே போகணுமா மாமா??" என்று அவள் பரிதாபமாகக் கேட்க, அஸிஸ்டெண்ட் பிரின்ஸிபலிற்கே அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது....

"ஏன் கணேசா, நேற்று தான் அவள் சென்னைக்கே வந்தாள் என்று சொன்னாய், எப்படியும் இன்று வியாழக்கிழமை ஆகிவிட்டது, பேசாம திங்கள் கிழமையில் இருந்தே அவளைக் காலேஜிற்கு வரச் சொல்லேன்" என்க, கனிகாவும் ஏக்கத்துடன் கணேசனைப் பார்க்க, அவரும் "சரி" என்றார்.

வெளியே வந்தவர்கள், கனிகாவைப் பார்த்து, "கனிகா, இப்படி எதற்கெடுத்தாலும் பயப்படக்கூடாது. உன் கிராமத்தை கம்பேர் பண்ணினா எந்தச் சிட்டியும் பெரிசா தான் தெரியும்... எந்தக் காலேஜும் ரொம்பப் பெரிசாதான் தெரியும், பட் நீ பயப்படாமா படிக்கறதுல மட்டும் கவனத்தைச் செலுத்தினால், எதுவும் பெரிசா தெரியாது" என்று அகில் அறிவுரை கூற,

"அகில், சின்னப் பொண்ணுப்பா, ஊருக்கு புதுசு வேற அதனால பயப்படுறா. எப்ப முடியுமோ அப்போ எல்லாம் நீ அவளை வந்து காலேஜில் ட்ராப் பண்ணினால் அவளுக்கும் கொஞ்சம் தைரியம் வரும்"

"அப்பா, வர திங்கட்கிழமை என்னால முடியாதுப்பா, கம்பெனியில் முக்கியமான மீட்டிங்ஸ் இருக்கு, பட் செவ்வாய் கிழமை வர முடியும்" எனவும், கனிகாவிற்குத் தான் தனியாகத் திங்களன்று கல்லூரிக்கு வரப் போவதை நினைத்து இப்பொழுதே அழுகை வரும் போல் இருந்தது....

மனதிற்குள் தன் அன்னையிடம் "அம்மா, என் கூடவே இருந்து நீங்க தான் எனக்குத் தைரியம் கொடுக்கணும்" என்று வேண்டிக் கொண்டு இருக்கும் பொழுதே வெளியே ஏதோ சத்தம் கேட்டது...

வெளியே சிறு இளைஞர்கள் கூட்டம் நின்று ஏதோ உரத்த குரலில் பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த பிரின்ஸிபல், நடுவில் நாயகமாக நின்று கொண்டிருந்த ஹர்ஷாவைப் பார்த்து,

"வாட்ஸ் ஹாப்பனிங் ஹர்ஷா? இஸ் தேர் எனி ப்ராப்ளம்? [What's happening Harsha? Is there any problem?]" என்க, அவர்கள் பேசிக் கொண்டிருந்தது ஆங்கிலத்தில் ஆதலால் கனிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் நடு நாயகமாக நின்றிருந்த ஹர்ஷா அவளின் கண்களுக்கு நன்கு பட்டான்....

சினிமா நடிகர்களையும், விளம்பர மாடல்களையும் அத்தனை அழகுடன் பார்த்திருந்தவளுக்கு நேரில் பேரழகுடன் கம்பீரமான ஆண்மையுடன் ஒருவனைப் பார்ப்பது வியப்பாக இருந்தது...

அதிலும் அவன் ஸ்டைலாகத் தலையைக் கோதி விட்டுக் கொண்டே பிரின்ஸிபலிடம் பயம் என்பதே இல்லாமல் ஆங்கிலத்தில் உரையாடியது, பிரமிப்பாக இருக்க, வியந்தபடியே அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள், அவன் பிரின்ஸிபலின் அறைக்குள் நுழையும் முன் அவளை எதேச்சையாகத் திரும்பி பார்க்க, அவள் சட்டென்று தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.....

'சே என்ன இது, இப்படியா ஒருத்தரை கண் கொட்டாமல் பார்ப்பது, என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவள் அகிலுக்கு அருகில் சென்று நிற்க, அவள் இன்னமும் கல்லூரியை நினைத்து பயந்து இருக்கிறாள் என்று நினைத்தவன் "சரி வா, நாம் போகலாம்" என்றவாறே அவளை அழைத்துச் சென்றான்...

பிரின்ஸிபலின் அழைப்பில் ஹர்ஷாவும் அவளைச் சரியாகப் பார்க்காமல் உள்ளே செல்ல, இரு துருவங்கள் ஒரே இடத்தில் சந்தித்தும், ஒருவொருக்கொருவர் தங்கள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்த போகிறார்கள் என்பதை அறியாமல் தங்கள் போக்கில் பிரிந்து சென்றனர்.

தொடரும்
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top