JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 13

JB

Administrator
Staff member

அத்தியாயம் 13


மாடியை நோக்கி பார்த்தவள் அங்கு அகில் தான் நிற்கிறான் என்று தெரிந்ததும் சிறிது மூச்சுவிட்டு, "அத்தான் சாரி அத்தான், விழா இப்போ தான் முடிந்தது" என்க, அவள் புடவையையும், அதன் ஆடம்பரத்தையும் பார்த்தவனுக்குத் தெரிந்து போனது, இது கனிகாவின் புடவையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று.

அவள் தன் அருகில் வந்ததும் தணிவான குரலில்,

"கனிகா, நீ போறது எனக்கு என்னமோ தப்பான வழியா தெரியுது...ஹர்ஷா உன்னைக் கை விட மாட்டார் தான்....ஆனால் நீங்க ரொம்ப ஃபாஸ்டா போகிற மாதிரி இருக்கு கனிகா..." என்றவன் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் விருட்டென்று சென்று விட, தன் அறைக்குள் சென்றவள் அப்பொழுது தான் கவனித்தாள் தான் ஹர்ஷா கொடுத்த புடவையை இன்னும் அணிந்திருக்கிறோம் என்று.

"அச்சச்சோ..." என்று தன்னை அறியாமல் வாய் விட்டு கத்தியவளுக்கு அகில் அத்தான் ஏன் அப்படிச் சொன்னார் என்று இப்பொழுது புரிந்தது... சரி காலையில் அவரைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தவள் புடவையை மாற்றிப் பீரோவில் யாருக்கும் தெரியாமல் உள்ளடங்க வைத்துக் கட்டிலில் வந்து படுத்தாள்.

படுத்தவளின் நினைவெல்லாம் காலையில் ஆரம்பித்து ஹர்ஷா தன்னை வீடு வரை வந்து விட்டுப் போனது ஒன்றன் பின் ஒன்றாக வர, நெற்றியில் அவன் பதித்த முதல் முத்தம் உடல், உள்ளம் அத்தனையும் சிலிர்க்க வைக்க அளவில்லாத சந்தோஷ நினைவுகளில் நிம்மதியாக உறங்கினாள்...

ஆனால் அங்குத் தன் அறையின் படுக்கையில் உறக்கம் வராமல் தவித்து இருந்தான் ஹர்ஷா..

ஒரு விநாடி கூட அவளைப் பிரிந்து இருக்க முடியவில்லை..

அழகு, பண்பு, நாணம், அச்சம் என்று அத்தனையும் கலந்து இருந்த தன்னவளை நினைக்க நினைக்க அவனுக்குத் திகட்டவில்லை..

எப்பொழுது விடியும், எப்பொழுது அவளை மறுபடியும் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, தான் மறு நாளில் இருந்து ஒரு ட்ரெயினிங்கிற்காக ஒரு வாரம் வேறு ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று..

எப்படி மறந்தேன் என்று யோசித்தவன் அவள் அருகில் இருக்கும் பொழுது வேறு என்ன ஞாபகத்தில் இருக்கு? என்று எண்ணியவன் அவளுக்கு மறக்காமல் குறுந்தகவல் அனுப்ப, ஆனால் அதற்குள் அங்கு அவள் தூங்கியிருந்தாள்..


*************************************************


மறு நாள் கல்லூரிக்கு வந்தவளுக்கு ஹர்ஷாவைக் காண வேண்டும் என்று தோன்ற அவனின் அலைபேசிக்கு அழைக்க எடுத்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவனின் தகவலை.

ஒரு வாரமா என்று ஏக்கமாக இருந்தது.

அவனுக்கும் அங்கு ட்ரெயினிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை...

பட்டுப்புடவையில் அழகு மிளிர தன் வெகு அருகாமையில் அவளைப் பார்த்தில் இருந்து, அவளை அணைத்த அந்த நிமிடத்தில் இருந்து உடலின் அணுக்கள் அத்தனையும் ஒவ்வொரு விநாடியும் அவளின் மென்மையான ஸ்பரிசத்தைத் தேட, எப்பொழுது அவளைப் பார்க்க போகிறோம்? என்று ஏங்கியிருந்தவன் மறு வாரம் கல்லூரிக்கு திரும்பியவுடன் அவளைக் காண வாசலில் காத்து இருந்தான்.

அவனை ஒரு வாரம் கழித்துப் பார்க்க போவதால் தன்னிடம் இருந்த அழகான நிறத்தில் அடர்ந்த அரக்கு கரைப் போட்ட பாவாடை தாவணியை அணிந்தவள் அங்குக் கல்லூரிக்குள் நுழைந்த விநாடியே ஹர்ஷாவை தேட ஆரம்பிக்க, அங்குக் காரில் சாய்ந்து நின்றிருந்தவாறு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டவளுக்கு மனமெல்லாம் பூரிப்பு.

அதே நேரம் அவனும் லேசாகத் தலையைத் திருப்பிப் பார்த்தவன் அவளைக் கண்டவுடன் காரில் சாய்ந்திருந்தவன் நிமிர்ந்து நிற்க, அவன் கண்கள் அவளை மொய்த்தது.

தன்னை ஊசி போல் துளைத்தெடுக்கும் பார்வையைப் பார்த்தவள் வெட்கத்தில் முகம் விசிக்க, வைத்த கண்ணை வாங்காமல் பார்த்திருந்த ஹர்ஷாவிற்கு இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த ஏக்கம் தலை தூக்க, அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்..

வெட்கப்பட்டுக் கொண்டு தலை கவிழ்ந்தவள் தன் வகுப்பிற்குச் செல்ல, சரியாகப் பதினொரு மணி போல் அவனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது..

"கனி, உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்... அன்னைக்கு மீட் பண்ணினோமே அதே ஆடிட்டோரிய ஹாலிற்கு உடனே வா.."

"எதற்கு?" என்று பதில் தகவல் அனுப்ப,

"ஏன்னு சொன்ன தான் வருவியா, வான்னா வா..." என்று அதிகாரமாகப் பதில் அனுப்பினான்.

"இப்பொழுது எப்படி வர முடியும்? க்ளாஸ் நடந்துகிட்டு இருக்கு.." என்று பதில் தகவல் அனுப்ப.

"கனி, ஐ வான்ட் யூ டு கம் நவ் [Kani, i want you to come now] " என்று அனுப்பினான்.

அவன் எதிர்பார்த்தது அவனுக்கு உடனே கிடைத்தே ஆக வேண்டும், யாரும் அவன் பேச்சிற்கு மறு பேச்சுப் பேசக்கூடாது என்று இருப்பவன் ஆயிற்றே.

அவன் பிடிவாதம் தெரிந்தவள் "சரி" என்று பதில் அனுப்பியவளுக்குக் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக வகுப்பறையை விட்டு வெளியே செல்ல முடியவில்லை...

அதற்குள் அவன் ஒரு இருபது தடவையாவது "வருகிறாயா? இல்லையா?" என்று குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தான்..

ஒரு வழியாகத் தோழிகளிடம் சொல்லிவிட்டு ஆடிட்டோரியத்தை நோக்கி நடக்க, அங்கு ஆடிட்டோரியத்தின் வாசலில் ஹர்ஷாவின் நண்பர்கள் குழுமியிருக்க,

"ஹர்ஷா உள்ள தான் இருக்கான்...நீ... நீங்க போங்க.." என்று தடுமாறினான் ஹர்ஷாவின் நண்பன் ராஜேஷ்...

அவள் உள்ளே சென்றதும்,

"சின்னப் பொண்ணுடா, அதனால டக்குன்னு நீ, வா, போ-ன்னு வந்திடுது.." என்று தன் தடுமாற்றத்திற்கு விளக்கம் கொடுக்க,

"அவங்க சின்ன வயசாக இருந்தாலும் ஹர்ஷாவிற்கு மனைவியாகப் போறவங்க, சோ நாம் அவங்களை மரியாதையா கூப்பிடறது தான் நல்லது ராஜேஷ்..." என்றான் இன்னொரு நண்பன்..

ராஜேஷ், "என்னால இன்னும் நம்ப முடியவில்லை...இந்த சிக்ஸ் இயர்ஸா ஹர்ஷாவிற்கு எந்தப் பெண்ணின் மீதும் ஈர்ப்பு வரவில்லை. பட் ஃபைனலி ஹி ஃபௌண்ட் ஹிஸ் லவ் [but finally he found his love] ...கனிகா ஹர்ஷாவிற்கு ஏற்ற பெண்.... அவனுடைய பிடிவாத கோப குணத்திற்கும் இந்தப் பெண்ணின் அமைதியான ஸாஃப்ட் நேச்சருக்கும் நிச்சயம் பொருத்தமாக இருக்கும்... கண்டிப்பா ஹர்ஷாவை நல்ல பார்த்துக்குவாங்க.." என்றவன்,

"நானும் தான் தேடிப் பார்க்கிறேன், இவங்களை மாதிரி ஒரு பொண்ணும் கண்ணுல மாட்டமாட்டேங்குதுங்க..." என்று அங்கலாய்க்க,

"ம்ம்ம், நீ அதுக்குப் பொண்ணுங்களைப் பார்க்கிற பார்வையை மாத்திக்கணும், எப்பப் பார்த்தாலும் சைட் அடிக்கிற நினைப்பிலயே பார்த்தா லைஃ பார்ட்னர் கிடைக்க மாட்டாங்க, டேட்ஸ் தான் கிடைப்பாங்க..." என்றான்.

அங்கு நண்பர்கள் அனைவரையும் வெளியே நிற்க வைத்து விட்டு தான் மட்டும் கனிகாவின் வரவிற்காகக் காத்திருந்த ஹர்ஷா, கனிகாவின் வரவை அறியாமல் தன் மடி கணினியில் கவனமாக இருக்க, உள்ளே நுழைந்தவளுக்கு அங்குத் தனியே இருந்த ஹர்ஷாவை பார்க்கவும் ஏதோ ஒரு உணர்வு தாக்க, ஏற்கனவே ஆண்டு விழா அன்று அவன் சிறிதாக எல்லை மீறி நடக்க இருந்தது ஞாபகத்திற்கு வந்தது...

தயங்கியவள் கதவு அருகிலே நின்றுவிட்டாள்..

கதவு திறந்த சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தவன் மஞ்சள் சிகப்புப் பாவாடை தாவணியில் பூச்செண்டு போல் அழகாக நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு உள்ளத்தில் உவகையோடு மனமும் தடுமாற வேகமாக அருகில் வந்தவன்,

"ஏன் இவ்வளவு லேட்?" என்றான்...

வேகமாக வந்தவன் சடுதியில் அவளின் வெகு அருகில் வந்துவிட, சட்டென்று பின்னால் நகர இரண்டு அடி எடுத்தவள் கதவில் இடித்துக் கொள்ள, எட்டி கதவை சாத்தியவன் அவளைப் பிடித்துக் கதவில் சாய்த்தான்..

ஆண்மகனுக்கே உரிய வாசனையிலும், அவனின் பிரத்யேக வாசனை திரவியத்தின் நறுமணத்திலும் ஏற்கனவே மதி மயங்கியிருந்தவள் அவன் வேகமாகக் கதவில் சாய்த்ததால் தடுமாறி அவனை இறுக்கி பிடித்துக் கொள்ள, அவள் தன்னைக் கொழுகொம்பாகப் பிடித்திருப்பதும், தன்னை அச்சத்துடன் பார்த்திருப்பதையும் கண்டவனுக்கு ஆணாய் கர்வம் தலை தூக்க..... இது நாள் வரை காதலை மட்டும் அறிந்தவனின் மனம் இன்று காமத்தையும் அறிய முற்பட்டது..

அவளின் விழிகளை நோக்கியவன் உணர்ச்சிகள் பொங்கி எழ, இவள் உன்னுடையவள், உனக்கு முழு உரிமை உள்ளவள் என்று இதயம் உணர்த்த தன் தலையை லேசாகச் சாய்த்து தாவணிக்கும் பாவாடைக்கும் இடையில் சிறிதாகத் தெரிந்த பளீர் இடையைப் பார்த்தவன்,

"என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றடி..." என்று கூறியவனின் பார்வை இடைக்கும் மேல் சென்று அவள் மார்பில் உரிமையாக மேய, முதலில் புரியாது பார்த்தவளுக்குப் புரிந்த பின் கலக்கம் எல்லையைக் கடந்தது...

நாக்கு உலர, இதயம் தடதடக்க அதற்கு மேல் அங்கு என்ன நடக்கும் என்று புரிந்தவளாய்,

"எ...எதுக்கு வர சொன்னீங்க? எனக்குக் கிளாஸ் ஆரம்பிச்சுடும்...அதுக்குள்ள நான் போ...போகணும்..." என்றாள்..

கதவில் சாய்ந்திருந்தவளின் மேனியில் தன் உடல் முழுவதும் படருமாறு தானும் சாய்ந்தவன் அவள் இடையை வளைத்து பிடிக்க, ஸ்தம்பித்துப் போனவள் மூச்சு விடக் கூட மறந்து தன்னையே மறந்து நின்றாள்...

தன் தொடுகையில் அவள் மேனி முழுவதும் ஓடிய சிலிர்ப்பை உணர்ந்தவன், அவளின் சிலிர்ப்பே அவனுக்கு முன்னேற அழைப்பு விடுப்பதைப் போல் உணர்ந்து அவள் முகம் நோக்கி குனிந்து நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்...

நெற்றியில் ஆரம்பித்த அவன் முத்த ஊர்வலம், கண்கள், கன்னங்கள் என்று ஊர்ந்து இறுதியாக இதழில் இளைப்பாற இறங்க, பெண்களுக்கே உரித்தான இயற்கையான நாணமும் அச்சமும் அவளைப் பிடித்திருந்த உணர்வுகளில் இருந்து அவளைத் தட்டி எழுப்ப, சுதாரித்தவள் அவனை விட்டு விலக முயற்சித்தாள்...

அவளின் விலகல் அவனின் ஆண்மையை மேலும் தூண்ட, இது நாள் வரை காதலில், தொடலில் மென்மையைக் காட்டியவன் முதல் முறை காமத்தில் வண்மையைக் காட்ட துணிய, அவளின் இடையில் அழுந்த பதிந்திருந்த அவன் கரமே உணர்த்தியது அவனின் அடங்காத தாபத்தை...

முரண்டு பிடித்தவளை அணு கூட அசைய முடியாத வகையில் அவளின் உடல் முழுவதையும் தனக்குள் அடக்கியவன் அவளது இதழ்களை முரட்டுத் தனமாகச் சிறை செய்தான்..

ஆண்மகனின் வலுவான பலத்திற்கு முன் ஒன்றும் செய்ய இயலாமல் அடங்கியவளை மேலும் இறுக்கியவன் அவன் இதழ் யுத்தத்தில் வண்மையைக் கூட்ட, அவளை விடுவிக்கும் எண்ணமே இல்லை என்பது போல் ஒன்றி போக, மூச்சுக் காற்றிற்குத் திணறியவள் தன்னால் முடிந்த மட்டும் போராடி தன் இதழ்களை அவனிடம் இருந்து விடுவித்தாள்..

அது வரை மோகத்திலும் தாபத்திலும் கட்டுப்பட்டு இருந்த தன் உணர்வுகளில் இருந்து வெளி வந்தவன் அவள் முகத்தைப் பார்க்க, விழிகளில் நீர் கோர்த்து அவன் இறுக கவ்வியிருந்ததால் இதழ்கள் சிவந்திருக்க, மூச்சு திணறியவாறே அவனைத் தள்ளியவள் கதவை திறக்க முற்பட, அவளைப் போக விடாமல் இடையைப் பிடித்து இழுத்தவன்,

"கனி, ப்ளீஸ் டி,,, என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைடி..." என்றான்.

விழவா வேண்டாமா என்பது போல் விழிகளில் கோர்த்திருந்த நீர் அணை போல் கொட்ட ஆரம்பிக்க, தன் வலுவனைத்தையும் சேர்த்து அவனைத் தள்ளியவள் வேகமாகக் கதவை திறந்து ஒட முற்பட, அவன் நண்பர்கள் அங்கு அவளைப் பார்த்திருந்த விதத்தைக் கண்டவளுக்கு அவமானமாக இருந்தது..

அவர்களுக்குத் தெரியாமல் தலையைக் கவிழ்ந்தவாறே கண்களைத் துடைத்தவள் நிமிர்ந்து பார்க்காமல் அந்த இடத்தை விட்டு அகல, ஒட்டமும் நடையுமாகச் சென்றடைந்தாள் தன் வகுப்பிற்கு..

அவளின் திடீர் நிராகரிப்பாலும் விலக்குதலாலும் அதிர்ச்சி அடைந்தவனின் அகங்காரம் தலைக்கு ஏற தலை முடியை அழுந்த கோதியவாறே வெளியில் வர,

"என்னாச்சு ஹர்ஷா?... ஏன் கனிகா அழுதுக்கிட்டே ஓடுறாங்க? எதுனாச்சும் உங்களுக்குள்ள பிரச்சனையா?" என்று கனிவுடன் கேட்டான் ராஜேஷ்..

'ஏன்? என்னுடைய காதலி தானே? எதிர்காலத்தில் என்னுடைய மனைவியாகப் போகிறவள் தானே? ஏன் எனக்கு அவளைக் கிஸ் பண்ண உரிமை இல்லையா என்ன? எதுக்கு இவ்வளவு ஆவேசம்?' என்ற கேள்விகளே மனதை குடைந்து கொண்டு இருக்க ராஜேஷின் கேள்விகள் ஹர்ஷாவை கோபத்தின் உச்சாணிக்குக் கொண்டு சென்றது...

"ராஜேஷ், மைண்ட் யுவர் ஓன் பிஸ்னஸ்.." என்று அடக்கப்பட்ட கோபத்தில் கூறியவன் விருட்டென்று தன் கார் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி நடக்க நண்பர்கள் அதிர்ச்சியுடன் அவன் நடவடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஹர்ஷாவைப் பற்றி அவனைச் சந்தித்த நாளில் இருந்தே அவர்களுக்கு நன்கு தெரியும்..

அவனின் பிடிவாதம், தான் என்ற அகங்காரம், திமிர், கர்வம் என்று அவன் எல்லாம் சேர்ந்த ஒரு கலவை...

ஆனால் அதே சமயம் தன் குடும்பத்திற்கோ அல்லது தன் நண்பர்களுக்கோ ஏதாவது நேர்ந்தாலோ அல்லது யாரும் பிரச்சனை செய்தார்கள் என்றாலோ அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான். இத்தகைய நல்ல குணங்களும் இருக்கத்தான் செய்தது...

ஆனால் சில சமயம் அவனுடைய கோபமும் அகங்காரமும் அவனுடைய நல்ல குணங்களை மீறி விடுவது உண்டு...

அந்தச் சமயங்களில் அவன் இந்த மாதிரி எடுத்தெறிந்து பேசிவிடுவான்... ஏற்கனவே இதனைப் போல் சம்பவங்களில் அடிப்பட்டிருப்பதால் நண்பர்களுக்கு இப்பொழுது அவன் பேசியது பெரிய விஷயமாகப் படவில்லை...

'ஆனால் ஏன் கனிகா அழுது கொண்டே சென்றாள்? நிச்சயம் தவறு இவன் மீது தான் இருக்க வாய்ப்பிருக்கிறது... இப்பொழுது தானே பேசிக் கொண்டிருந்தோம்... ஹர்ஷாவிற்கு ஏற்ற பெண் கனிகா தான் என்று... இவன் ஏதாவது ஏடாகூடாமாகச் செய்து அவளை மேலும் புண்படுத்திப் பிரிவு எதனையும் உண்டாக்கிக் கொள்ளப் போகிறானோ..' என்று வேறு கவலையாக இருந்தது அவர்களுக்கு...

நல்ல நண்பர்கள், கனிகாவை போன்று நல்ல அருமையான, அன்பான, பணிவான துணையாள் இவர்கள் கிடைப்பதற்கு ஹர்ஷா மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...

ஆனால் அவன் அதைப் புரிந்துக் கொள்வானா? புரிந்துக்கொள்ளும் வரை காலம் அவனுக்காகக் காத்திருக்குமா? அல்லது காலம் கடந்து புரிந்து கொள்வானா? அதையும் காலம் தான் சொல்ல வேண்டும்!

**************************

வகுப்பிற்குள் நுழைந்தவளுக்கு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை...

மாறாக, 'ஏன் இப்படி நடந்து கொண்டார்? திருமணம் ஆவதற்கு முன்னரே இது என்ன செயல்... என்ன தான் அவருக்கு என் மேல் முழு உரிமை இருந்தாலும் அதற்குத் திருமணம் வரை காத்திருக்க வேண்டாமா?' என்று மனதிற்குள் புழுங்கியவளின் முகம் அதிர்ச்சியில் உறைந்திருக்க ஆஷாவும் இளாவும் எத்தனையோ முறைகள் கேட்டும் அவள் பதில் சொல்லவில்லை.

அவர்களும் காதலர்களுக்குள் நடக்கும் சிறு பிரச்சனையாக இருக்கும் என்று விட்டு விட்டனர்...

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் தனக்குப் பசியில்லை என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

படுக்கையில் படுத்தவளின் மனமெல்லாம் தன் அன்னை சொன்ன வாழ்க்கை பாடங்களிலேயே பதிந்து இருந்தது..

எத்தனை முறை எடுத்துச் சொன்னார்கள்... காதல் தன் வாழ்க்கையில் எப்படி விளையாடியது..... தன் படிப்பு அதனால பாதிக்கப்பட்டது... வாழ்க்கையே அதனால் வீணானது என்று எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகள்.... அவ்வளவும் கேட்டும் தான் காதலில் விழுந்ததை நம்ப முடியவில்லை....

ஹர்ஷா தன்னைத் தீண்டியது தன் உணர்வுகளை எவ்வாறு தட்டி எழுப்பியது...

அவனின் வண்மையான இதழ் ஒற்றலில் தான் எவ்வாறு நாடி நரம்புகள் எல்லாம் அடங்கி ஒடுங்கியிருந்தது...

இது போல் நாளையும், நாளை மறு நாளும், தினம் தினமும் நடந்தால் தன் மனம் படிப்பில் இருந்து சிதறுவது நிச்சயம் என்று உணர்ந்தவளுக்கு ஹர்ஷாவை விட்டு விலகுவதும் முடியாத காரியம் என்ற உண்மை சுட்டது..

மனம் படும் பாட்டை உணர்ந்தவள் கண்களில் நீர் வழிய நீண்ட நேரம் உறங்காமல் படுத்து இருக்க அதிகாலை சூரியன் தன் வேலையைச் செவ்வனே செய்தது....

*************************************

இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் கண்கள் எரிய, இருந்தும் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தவள் சமையல் அறையில் மாலதியைக் கண்டு,

"அத்தை நான் இன்னக்கு காலேஜிற்குப் போகவில்லை..." என்றாள்.

"ஏன்டா?"

"ஒன்றும் இல்லை அத்தை, இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் லீவ் எடுத்துக்கிறேன்..." என்றவள் அதற்கு மேல் பேசாமல் சமையலில் ஈடுபட மாலதிக்கு தான் கவலையாகப் போனது, இந்த பெண்ணிற்கு இன்னும் சிட்டி லைஃப் ஒத்து வரவில்லை போல என்று...

அங்குக் கனிகாவின் புறக்கணிப்பால், அவள் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக நினைத்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த ஹர்ஷா, 'அவள் எப்படியும் இன்று காலேஜிற்கு வந்து தானே ஆக வேண்டும்..... தான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது... அவளைத் தொடுவதற்கோ அல்லது கிஸ் பண்ணுவதற்கோ ஏன் தனக்கு உரிமை இல்லையா?' என்று கேட்க வேண்டும் என்று மனதிற்குள் உறும அவன் கோபத்தை மேலும் கிளறுவது போல் அவள் அன்று காலேஜிற்கு வரவில்லை என்ற செய்தி கிடைத்தது..

'ஏன்?' என்று குழம்பியவன் மாலை வரை காத்திருந்து ஆஷாவை அழைத்தான்...

ஹர்ஷா கனிகாவை காதலிப்பது தெரியும், இருந்தும் அவன் தன்னை அழைப்பதை பார்த்த ஆஷாவிற்குப் பெருமை தாங்கவில்லை...முகமெல்லாம பூரிப்புடன் அவனிடம் சென்றவள் என்ன என்று விசாரிக்க,

"கனி இன்னைக்குக் காலேஜிற்கு ஏன் வரவில்லை?" என்றான்..

"அவளுக்கு உடம்பு சரியில்லை என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்.."

ஆஷாவின் பதிலில் அதிர்ந்தவன், "கேன் யூ டு மீ எ ஃபேவர்? [Can you do me a favor?]" எனவும்,

"கண்டிப்பா..." என்றாள்.

"கனி வீட்டிற்குப் போக முடியுமா? ஏன் வரவில்லை, எப்படி இருக்கிறாள் என்று பார்க்க முடியுமா?"

சரி என்றவள் திரும்ப எத்தனிக்க,

"ஆஷா, கனி வீட்டிற்குப் போனதும் உன் செல் ஃபோனில் இருந்து எனக்குக் கால் பண்ணு, ஆனால் போன ஆஃ பண்ணாத...ஐ வாண்ட் டு லிஸன் வாட் இஸ் ஷீ சேயிங் [I want to listen what is she saying]..." என்றான்..

இது என்ன விபரீத விளையாட்டு என்று அதிர்ந்தவள் ஆனால் ஹர்ஷா சொல்லி செய்யவில்லை என்றால் வேறு யாரையாவது வைத்துச் செய்து விடுவார்... ஆனால் இது கனிகா சம்பந்தப்பட்ட விஷயம்...

நாம் சென்றாலாவது அவள் ஏதாவது ஏடாகூடாமாகப் பேசுவதற்கு முன் அவளைத் தடுத்து விடலாம்.... வேறு யாராவது என்றால் பிரச்சனை சிக்கலில் தான் முடியும் என்று நினைத்து அதற்கு நாமே போகலாம்... என்று முடிவெடுத்தவள் சரி என்று தலை அசைத்து விடை பெற்றாள்.

அங்குக் கனிகாவின் இல்லத்தை அடைந்தவள் அவள் இருந்த தோற்றத்தைப் பார்த்து திகைத்து போனாள்..

"என்னடி கனிகா? என்னாச்சு? ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்? உடம்பு எப்படி இருக்குது? ஃபீவரா?"

சொல்லும்போதே அலைபேசியைக் கனிகாவிற்குத் தெரியாமல் உயிர்ப்பித்தவள் செய்தவள் பேச்சை தொடர, அங்குக் கனிகா ஆஷா உரையாடல்களைக் கவனமாகக் கேட்க ஆரம்பித்து இருந்தான் ஹர்ஷா..

"இல்லைடி, தலைவலி அவ்வளவு தான்.."

"ஏன்டி திடீர்னு? நீ நேத்தே சரியில்லை...கேட்டால் சரியா பதில் சொல்லவில்லை.... உனக்கும் ஹர்ஷாவிற்கும் ஏதாவது பிரச்சனையா?"

ஹர்ஷாவிற்கும் தனக்கும் ஏதாவது பிரச்சனையா என்று ஆஷா கேட்டதிலேயே உடைந்து போனவள் தன் மனதில் இருந்தது அனைத்தையும் கொட்ட ஆரம்பித்தாள் மறுமுனையில் ஹர்ஷா தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்..

"ஆஷா, உனக்கு நல்லா தெரியும் என்னோட குடும்பச் சூழல்... என்னோட அம்மாவை இந்த வயசிலேயே பறி கொடுத்துட்டு இப்படிப் புது ஊரில் அத்தை மாமாவை அண்டி படிச்சுட்டு இருக்கேன்... உங்க எல்லோருக்கும் என்னோட அம்மாவோட கதை தெரியாது" என்று ஆரம்பித்தவள் தன் அன்னை காதலில் விழுந்தது முதல் இறந்தது வரை சொன்னவள் "ஆஷா, இப்போ சொல்லுடி, எனக்கு இந்தக் காதல் தேவையா?" என்று முடித்தாள்...

ஏற்கனவே அவளின் செய்கையால் உள்ளம் முழுவதும் அவமானத்தில் குமைந்து கொண்டிருக்க, இப்பொழுது தன் காதலையே அவள் சந்தேகிப்பதை கேட்டவனின் மனம் எரிமலையாக வெடித்தது.

"ஆஷா, எனக்கு அவர ரொம்பப் பிடிக்கும்... இன்னும் சொல்ல போனால் அவர் தான் என்னோட உயிர்... அவர் இல்லைன்னா நான் இல்லை... ஆனால் எனக்கு என் படிப்பும் முக்கியம் டி... அவர் நிச்சயம் எங்க அப்பா மாதிரி என்னைய ஏமாத்திட மாட்டார்.... ஆனால் அதே சமயம் அவரோட பிடிவாதம், அவரோட கோபம், அவரோட அவசரம், எல்லாத்தையும் பார்த்தா ரொம்பப் பயமா இருக்குடி..." என்று சொல்லும் போதே நேற்று அவன் அவளின் உடல் முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்ததை நினைத்தவளுக்குத் தன்னையும் அறியாமல் உடல் பயத்தில் உதறியது..

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் மீண்டும் தொடர்ந்தாள்....

"அவர் என் கூட இருக்கும் பொழுது என் மனசு அவர் பின்னாலேயே சுத்துது... நிச்சயம் இது என் படிப்புக்குத் தடையாகத்தான் இருக்கும்... நீங்க எல்லாம் சொன்ன போது நான் கேட்கலை... ஆனால் இப்போ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைடி... ரொம்பக் குழப்பமாக இருக்கு.. இதில் எங்க அகில் அத்தானுக்கு வேற அவரைக் கண்டாலே பிடிக்கலை... அவர் என்னைய கைவிட்டு விடுவார்னு சொல்றார்டி.... எங்க, அவர் மேல் உள்ள கோபத்தில் அகில் அத்தான் மாமாகிட்ட எங்க விஷயத்தைப் பத்தி சொல்லிடுவாரோன்னு பயமா வேற இருக்கு..." என்றவள் ஏற்கனவே எரிமலையாக வெடித்துக் கொண்டிருந்தவனின் மனதில் மேற்கொண்டு நெருப்பை அள்ளிப் போட்டாள்.

தோழி சொல்வதைத் தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத் தன் அலைபேசி ஆன் செய்திருந்தது கூட மறந்து போனது.

"சரி, இப்போ என்ன பண்ணப் போற?"

"தெரியலைடி....என்னமோ மனசே சரியில்லை டி... இது தேவையான்னு கூடத் தோணுது.... ஆனால் அதே சமயம் நிச்சயம் அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லடி.... அது மட்டும் உறுதி.." என்றவளை சமாதானப்படுத்திய ஆஷா மறுக்காமல் நாளை கல்லூரிக்கு வருமாறு சொல்லிவிட்டு சென்றாள்...

வீட்டை விட்டு வெளியில் வந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் தன் அலைபேசி இன்னமும் ஆனிலேயே இருப்பதை... ஐயோ! போச்சு, எல்லாம் போச்சு என்று தலையில் அடித்துக் கொண்டவள் ,"ஹலோ" என்க, அவன் அதற்குள் அழைப்பை துண்டித்து இருந்தான்...

என்னோட காதல் அவளுக்கு அத்தனை சாதாரணமாகப் போய்விட்டதா??

எத்தனையோ பெண்கள் நான் ஒரு முறையாவது பார்க்க மாட்டேனா என்று உருகி கொண்டிருக்கும் போது இவளுக்கு எத்தனை திமிர் என்று உறுமியவன் கட்டிலில் அமர்ந்து தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டான்..

இருந்தும் அவளை விட மனமில்லை அவனுக்கு....

ஆனால் அவள் தன் அன்னையின் வாழ்கையைப் பாதித்த காதல் தான் தனக்கு வேண்டாம் என்று சொன்னாளே தவிர, ஹர்ஷா இல்லாத வாழ்கையை நினைத்து கூடப் பார்க்க முடியாது என்று சொன்னதை மறந்து போனான்...

"எனக்கு அவள் வேண்டும், அவள் எனக்கு மட்டும் தான்....அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு அவள் வேண்டும்.." என்று சிங்கம் போல் கர்ஜித்தவன் காலை விடியும் வரை உறங்கவில்லை...

***********************

அதிகாலையில் கட்டிலில் இருந்து எழுந்தவனின் முகம் இன்னமும் கோபத்தில் அனலாய் கொதிக்க அவளை இப்பொழுதே சந்திக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் வெகு சீக்கிரம் கல்லூரிக்குக் கிளம்பினான்.

கல்லூரியின் நுழைவாயிலில் அவளுக்காகக் காத்திருந்தவன் கனிகா பேருந்தில் இருந்து இறங்கியதும் புலி போல் அவளிடம் விரைந்து சென்றவன் கரத்தை பற்றித் தன் காருக்கு இழுத்துச் சென்றான்..

அவன் திடீரென்று தன் முன் தோன்றி இப்படித் தன்னை இழுத்து செல்வதைப் புரிந்துக் கொள்ளவே அவளுக்குச் சில நிமிடங்கள் பிடித்தது..

அவனின் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறியவள் அவன் நின்றவுடன் அவன் மேல் மோத, அவளை இடையைப் பிடித்து நிறுத்தியவன், "ஏறு" என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு..

காலையில், அதுவும் கல்லூரியில், இதென்ன இப்படி அடாவடித்தனமாகக் கையைப் பிடித்து இழுத்து வருகிறார் என்று கலங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க கல்லூரியில் அன்று அவ்வளவாகக் கூட்டம் இல்லை.

இருந்தாலும் அவனுடைய முரட்டுத் தனம் வயிற்றில் புளியைக் கரைக்க வேறு வழியில்லாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.... அவன் விருட்டென்று காரை கிளப்பிய வேகத்திலேயே தெரிந்தது அவன் எத்தனை கோபத்தில் இருக்கிறான் என்று... அவனாகப் பேசட்டும் என்று அமைதியாக இருந்தவள் அவன் பேசும் வழியைக் காணாது தானாகப் பேச ஆரம்பித்தாள்..

"எ...எ...என்னங்க...ஏன் இவ்வளவு கோபம்?"

அவளைத் திரும்பி பார்த்தவன் ஒன்றும் பேசாமல் சாலையில் கவனத்தைச் செலுத்த, அவனின் ஆத்திரம் அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது...

அரை மணி நேரம் சென்றதும் வெறும் மரங்கள் அண்டியிருந்த இடத்திற்கு வந்தவன் காரை நிறுத்தி அவள் புறம் திரும்ப, அச்சத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது கனிகாவிற்கு..

நாக்கு உலர பேச திராணியற்று அமர்ந்திருந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் கூட இல்லாமல் தலை கவிழ்ந்து இருக்க, "காதலிக்கறதுக்கு இப்படிப் பயப்படுறவ ஏன்டி நான் என் லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போதே சொல்லலை... என்னைப் பிடிக்கலைன்னு..." என்றான்...

ப்ரொபோஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் திருதிருவென்று விழிக்க,

"நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணினேனா என்னை லவ் பண்ண சொல்லி.... அன்னைக்கே என்னைப் பிடிக்கலைன்னு சொல்லியிருக்க வேண்டியது தானே..." என்றான்.

ஆனால், தான் என்றும் அவளிடம் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டதில்லை என்பதை மறந்து போனான்.... மறந்து போனானா அல்லது அவன் கோபம் அவன் புத்தியை மறக்க செய்ததா?

அவன் கேள்வியில் கலங்கிப் போனவள் சட்டென்று விழிகளில் நீர் கோர்க்க நான் எப்போ சொன்னேன் இவங்களைப் பிடிக்கலைன்னு என்று குழம்பியவள், "நீங்க எ..என்ன பேசுறீங்கன்னு பு..புரியலை" என்றாள்.

நேற்று ஆஷாவிடம் அவள் பேசியதை தான் கேட்டதைச் சொல்ல விரும்பாமல், "கனி, உனக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றான்.

அவனின் கேள்வியும் அவன் கேட்ட விதமும் இதயத்தில் யாரோ ஆழமாகக் கத்தியை சொருகுவது போல் வலிக்கக் கண்களும் இதயத்தின் வலியை காட்டிக் கொடுத்தது...

அவள் அருகில் நெருங்கியவன் அவள் இரு கரங்களின் விரல்களிலும் தன் விரல்களை நுழைத்தவன்,

"ப்ளீஸ் பேசாமல் இருக்காதடி...உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? இல்லை பிடிக்கலையா?" என்றான்..

"ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க?" என்று தவிப்புடன் கேட்க,

"பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? அத மட்டும் சொல்லு.." என்று மீண்டும் கேட்க, தலை குனிந்தவள் மெதுவாக, "பிடிச்சிருக்கு..." என்றாள்.

"பிடிச்சிருக்குன்னா?" என்று மீண்டும் கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.. "அதான் பிடிச்சிருக்கு" என்று மீண்டும் சொல்ல,

"அப்புறம் ஏன்டி நான் உங்க அப்பா மாதிரி உன்னை ஏமாத்திட்டு போய்டுவேன்னு சொன்ன?" என்றான்.

சுரீரென்றிருந்தது கனிகாவிற்கு!

தன் தந்தையைப் பற்றி இவருக்கு எப்படித் தெரியும் என்று அஞ்சியவளின் முகமும் அச்சத்தை வெளிப்படையாகக் காட்ட.,

"நீ நேத்து ஆஷாவிடம் பேசியதை நான் கேட்டேன்..." என்றவன் ஆஷாவிடம் தான் அலைபேசியை ஆன் செய்து வைத்திருக்கச் சொன்னதைச் சொன்னான்..

மனமும் உடலும் சோர்வடையத் தளர்ந்தவள்,

"நீங்க என்னைச் சந்தேகப்படுறீங்களா?" என்றாள் தன் வலி முழுவதையும் குரலில் தேக்கி வைத்து..

நிச்சயம் அவனுக்கு அவள் மேல் சந்தேகம் இல்லை, ஆனால் அவள் எங்குத் தன்னை, தன் காதலை வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்ற பயமே அவனின் இந்தக் கோபத்திற்குக் காரணம்... அதுக்கு அவளுடைய புறக்கணிப்பு மட்டும் காரணம் இல்லை, அகிலின் வெளிப்படுத்தாத காதலும் கூட...

ஆனால் அதைச் சொல்ல தயங்கியவன்,

"இல்லை கனி, நான் சந்தேகப் படலை... பட் நேற்று நீ நடந்து கொண்ட விதம் எனக்குப் பயத்தைக் கொடுத்திருச்சு.... ஏன் எனக்கு உரிமை இல்லையா உன்னைத் தொடுவதற்கு.... உன்னை மேரேஜ் பண்ணிக்கப் போறவன் தானே... அப்புறம் ஏன் உனக்கு அப்படிக் கோபம் வந்தது... இந்தக் காலத்தில் லவ்வர்ஸ் கிஸ் பண்ணிகிறது இல்லையா என்ன?" என்றான்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாலோ, அல்லது அன்னை இறக்கும் வரை கழுகு தன் குஞ்சை காப்பது போல் தன்னைக் காத்திருந்ததாலோ, அல்லது பிறந்தது முதல் தந்தையிடம் தன் அன்னை வாங்கிய அடி உதைகளைப் பார்த்திருந்ததாலோ என்னவோ, இயற்கையிலேயே மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவளாக இருந்தாள் கனிகா..

யாரையும் எதிர்த்து பேசி பழக்கமில்லை, எல்லோரிடமும் அடங்கியே பழகியிருந்தாள்....

ஸிட்டி வாழ்க்கை, பெரிய கல்லூரி, அதிலும் காதல் என்பதெல்லாம் அவளது கனவுகளுக்கு அப்பாற்பட்டது என்ற போது, ஹர்ஷா போல் பெரிய கோடீஸ்வரன் தன்னை வலிய வந்து காதலிப்பது என்பது அதிசயத்திலும் பேரதிசயம்...

இதில் முத்தம் என்பதை அவள் நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது... இளம் பெண்களுக்குச் சாதாரணமாக வரும் அவர்களின் வயதுக்கே உரிய ஆசைகளைக் கூட அவள் தள்ளித் தான் வைத்திருந்தாள் தன் நிலைமையை எண்ணி....

இவை அனைத்தையும் ஒரு வேளை வெளிப்படையாக அவனிடம் சொல்லியிருந்தால் அவனும் புரிந்துக் கொண்டிருப்பானோ என்னவோ? ஆனால் எதிரில் இருப்பவர்கள் நூறு வார்த்தைகள் பேசினால், அவள் ஒரு வார்த்தை பேசுவதற்கே தயங்குபவள்.... எப்படித் தன் உள்ள உணர்வுகளை அவனிடம் கூறுவாள்?

அவள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பது தெரியவே,

"கனி....ஐ ஆம் ஸாரிடி....நான் உன்னை ஹர்ட் பண்ணணும்னு நினைச்சு இத செய்யலை....உன மனசுல இருக்கிறத தெரிஞ்சுக்கணும் என்று தான் செஞ்சேன்" என்றவன், அவள் முகத்தைத் தன் இரு கரங்களால் மென்மையாகப் பிடித்து "ப்ளீஸ் உண்மைய சொல்லுடி... உனக்கு என்னைய உண்மையிலேயே பிடிச்சுருக்கு தான?" என்றான்..

எத்தனை பெரிய கோபக்காரன், திமிருக்கும் அகங்காரத்திற்கும் கல்லூரி முழுக்கப் பெயர் பெற்றவன்..... இன்று தன்மையாக இறங்கி வந்து அவளிடம் யாசிப்பது போல் தன் விருப்பத்தைக் கேட்பதை கண்டவளுக்கு எப்படித் தன் ஆழ்ந்த காதலை அவனுக்கு உணர்த்துவது என்று தெரியவில்லை.

ஒன்றும் பேசாமல் ஒரு விநாடி இருந்தவள் சட்டென்று அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.... அவளால் வார்த்தைகளால் தன் காதலை நிருபிக்க முடியாது.... செயலால் நிருபித்து விட்டாள்...

நேற்று, தான் முத்தமிட்ட போது தன்னைப் புறந்தள்ளியதிலிருந்தும், இரவில் அவள் காதலில் விழுந்தது தவறோ என்று ஆஷாவிடம் பேசியதை கேட்டதில் இருந்தும், புயலின் போது ஆர்ப்பரிக்கும் அலை கடல் போல் மனம் அலைபாய இரவு முழுவதும் உறங்கா இதயத்திற்கு அவளின் இந்தச் சிறு செயல் அமைதியை தந்தது..

பெரு மூச்சு விட்டவன்,

"கனி, இது போதும் டி....இனி உன் விருப்பம் இல்லாமல் என்னோட ஃபிங்கர் டிப்ஸ்....என்னோட விரல் நுனி கூட உன் மீது படாது...ஐ ப்ராமிஸ்..." என்றவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்....

ஆனால் அவனுக்குத் தெரியாது தன் சத்தியத்தை அவன் ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் மீற போகிறான் என்றும், இதுவே அவர்களின் பிரிவிற்கும் காரணமாகப் போகிறது என்றும்..

தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top