JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 3

JLine

Moderator
Staff member


அத்தியாயம் 3

ஞாயிறு இரவு முழுவதும் கல்லூரியைப் பற்றிய அச்சத்தில் தூங்காமல் இருந்தவள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வாசலில் கோலம் போட்டவள் எல்லோருக்கும் காபியைப் போட அங்கு வந்த மாலதி,

"ஏம்மா நீ போய்க் காலேஜிற்குக் கிளம்பு, நான் இதை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்" என்க, சரி என்றவள் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்...

கல்லூரியின் வாசலில் காரில் இறக்கிவிட்ட கணேசன்,

"கனிகா, தைரியமா போ.. உங்கம்மா உன் கூட எப்பொழுதும் இருப்பாள்.." என்று தைரியமூட்டிச் செல்ல, உலகில் உள்ள எல்லாக் கடவுள்களையும் மனதில் பிராத்தித்தவள் மெதுவாகக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தாள், இந்தக் கல்லூரி தன் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட போகிறது என்பதை அறியாமலே..

கல்லூரிக்குள் நுழைந்தவளுக்கு உள்ளுக்குள் உதறலெடுக்க நிகிலா சொன்னது போல் அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் இருக்கப் பெருமுயற்சி எடுத்து தன்னுடைய டிபார்ட்மெண்ட் என்று அவளுடைய அஸிஸ்டெண்ட் பிரின்ஸிபல் காண்பித்த கட்டிடத்தை நோக்கி நடக்க, அவள் பயந்தது போலவே நடந்தது அந்த நால்வரும் அவளைக் கவனித்த பொழுது....

கல்லூரியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தவர்கள் பாவாடை தாவணியில் பட்டுப்பூச்சி போல் அழகாக வெளிறிய முகத்துடன் மெதுவாக அவள் நடந்து வந்ததிலேயே தெரிந்தது அவள் கல்லூரிக்கு புதிது என்று...

கல்லூரி ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆனாலும் இன்னமும் புதிதாக மாணவர்கள் வந்து கொண்டு தான் இருந்தார்கள்...

அவளைக் கண்டவுடன் அவர்கள் அவளை அழைக்க, பார்த்தவுடனே தெரிந்தது அவர்கள் சீனியர் மாணவர்கள் என்று....

'ஐயோ ராகிங் ஆக இருக்குமோ? இப்பொழுது ராகிங் செய்யக் கூடாது என்று சட்டமெல்லாம் வந்து விட்டதே, இன்னமும் என்ன?' என்று யோசித்தவள் அவர்களிடம் போகத் தயங்க, அவளின் அருகே வேகமாக நடந்து வந்த அந்த நால்வரில் ஒருவன்,

"ஏன்? நாங்க கூப்பிட்டது கேட்கவில்லையா? இடிச்ச பிள்ளையார் மாதிரி நிற்கிற?" என்று கேட்க,

வெடவெடத்தவள் "இ... இ... இல்லை, அண்ணா" என்றாளே பார்க்கலாம்.

"ஏ, என்ன? வந்தவுடனேயே அண்ணன் என்கிற, வா என் கூட.." என்றவன் அவள் வருகிறாளா என்று கூடப் பார்க்காமல் நடந்து செல்ல, வேறு வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்....
கால்கள் இரண்டும் பின்ன, ஒரு வழியாக அவர்களைச் சென்று அடைந்தவள் தலைக் குனிந்து நிற்க,

"டேய் அதுக்குள்ள என்னை அண்ணன்னு சொல்லிடுச்சுடா" என்று அவன் அங்கலாய்க்க, சத்தமாகச் சிரித்த மற்ற மூவரும், அவளை அருகில் அழைத்து,

"புதுசா? இல்லை வேறு கல்லூரியில் இருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி வருகிறாயா? எந்தக் காலேஜில் இருந்து வர்ற?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார்கள்.

அவர்களின் பகட்டை பார்த்தவள் நிச்சயம் பெரிய இடத்துப் பசங்கதான், பேசாமல் பதிலை சொல்லி விடுவோம் என்று நினைத்தவள் தன் கல்லூரியின் பெயரைச் சொல்லிவிட்டு வேறு ஒன்றும் பேசாமல் மறுபடியும் தலை குனிய,

"ஏன், அங்கிருந்து இங்க மாத்திட்டு வர்ற?" எனவும், தன் அன்னை இறந்ததைச் சொல்ல விரும்பாமல் அமைதியாக இருந்தாள்....

"கேட்டால் பதில் சொல்ல தெரியாதா?” என்று கூறிக் கொண்டே ஒருவன் விருட்டென்று அவள் அருகில் வேகமாக வர, அதிர்ச்சியில் கண்களில் ஏற்கனவே விழவா, வேண்டாமா என்று இருந்த நீர் கொட்ட, திரும்பி வேகமாக ஓட ஆரம்பித்தாள்....

அவளின் கெட்ட நேரமோ என்னமோ கீழே இருந்த கல்லில் தடுக்கி தரையில் விழுந்தாள்....

விழுந்ததினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க, வலக்கையின் முழங்கையில் கற்கள் பதிந்ததினால் காயம் ஏற்பட்டிருக்க, எழுந்திருக்கும் உணர்வு கூட இல்லாமல் இருந்தவளின் முன் நீண்டது ஒரு கரம்...

மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் அது ஒரு ஆணின் கரம் என்றதும், அவர்களில் ஒருவன் தான் கரம் நீட்டுகிறானோ என்று எண்ணியவள் "வேண்டாம்" என்பது போல் கைப் பிடிக்காமல் எழுந்திருக்க,
"ஆர் யூ ஆல் ரைட்?" என்ற கணீர் குரலில் நிமிர்ந்தாள்...

நிமிர்ந்தவள் அங்கு நின்ற ஹர்ஷாவைப் பார்த்ததும் அவனைக் கல்லூரியில் சேர்வதற்கு வந்த அன்று பார்த்தது ஞாபகம் வர சட்டென்று தலை குனிந்தவள் ஒன்றும் பேசாமல் தானே எழுந்திருக்க, அவளின் அச்சமும் திகிலுமாக இருந்த தோற்றமும், ஒரு விநாடி தான் அவள் தன்னை நோக்கியது என்றாலும் பயத்தில் மலங்க விழித்த அகன்ற மருண்ட விழிகளும், தன்னைப் பார்த்தவுடன் தலை குனிந்த நாணமும் ஹர்ஷாவின் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது....

எந்தப் பெண்ணிடமும் மயங்காத கற்பாறை போல் இருந்த அவன் மனதில் ஏற்பட்ட ஒரு சிறு அதிர்வை அதிர்ச்சியுடனும் வியப்புடனும் அவன் உணர, அப்பொழுது தான் கவனித்தான் அவள் முழங்கையில் வழியும் இரத்தத்தை...

"ஹே, யூ ர் ப்ளீடிங்...." என்றவன் அவள் அருகில் நெருங்கி வந்து அவளைப் பிடிக்கப் போக, அவன் கைக்கு எட்டாமல் தள்ளி நிற்க முயன்றவள், அவனிடம் இருந்து அகல பின் நகர்ந்தவள் தடுமாறி மீண்டும் விழப் போனாள்....

அவள் மீண்டும் விழுந்து விடாமல் இருக்க அவளைப் பிடிக்க அவன் முயற்சிக்க, அவன் கரம் தன்னைத் தீண்டாமல் இருக்க, "வே.....வேண்டாம்" என்றவள் தானாகச் சமாளித்து நின்று திரும்பி செல்ல எத்தனிக்க, அவள் முன் வழியை மறைத்தவாறு அவன் நின்றிருப்பதை அறிந்தவள்,

"நா...நா....நான் போ....போகணும். நகருங்க.." என்றாள்.

அவன் நகராமல், "டிஸ்பென்ஸரி இங்க தான் இருக்கு, வா" எனவும்,

"நான் போகணும். நகருங்க" என்று கூறியதையே மீண்டும் கூற, புருவத்தைச் சுருக்கியவன் "எங்கே போகணும்?" என்றான்...

அப்பொழுதும் "நான் போகணும்.." என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல, அவளின் குழந்தை முகப் பாவத்திலும், சிணுங்கிய விதத்திலேயும் தன் இதயத்தை அவளிடம் இடம் பெயர்த்தவன் "எங்க போகணும்னு முதல்ல சொல்லு" என்றான் சிரிப்பில் வளைந்த உதட்டை கடினப்பட்டு மறைத்து....

அவனை நிமிர்ந்து பார்த்தவள், "என்னோட க்ளாஸுக்கு, தயவு செஞ்சு வழி விடுங்க.." என்று கெஞ்ச,

அவளின் பயத்தினால் அகன்ற விழிகளிலும், உதடுகள் குவித்துக் கெஞ்சும் தோரணையிலும் தன்னை அறியாமலேயே அவளிடம் தன்னைத் தொலைத்துப் போனான் ஹர்ஷா...

எதுவும் பேசாமல் மௌனமாக வழி விட, விட்டால் போதும் என்று வேகமாக நகர்ந்தவள் மறந்தும் அவனைத் திரும்பி பார்க்கவில்லை...

அவளின் கலங்கிய விழிகளும், அச்சத்தினால் சிவந்த முகமும், அழகு சாதனங்களின் உதவி இல்லாமலேயே பார்த்தவுடனேயே மனதில் பதியக்கூடிய பளீரென்ற களையான முகமும் தன் கண் முன்னே தோன்ற, தன் தலையை அழுந்த கோதி விட்டுக் கொண்டவன் இளம் புன்னைகையுடன் திரும்பி தன் நண்பர்களைப் பார்க்க, அதுவரை நடந்திருந்ததை எட்டாவது உலக அதியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவன் அருகில் வந்து,

"ஹர்ஷா, வாட் இஸ் திஸ்? இஸ் தட் யூ [What is this? Is that you?]" என்றார்கள்.....

சிரித்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் தன் வகுப்பறையை நோக்கி நடக்க விழிகளில் ஆச்சரியம் வழிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

இந்த ஆறு வருடங்களில் முதன் முறை ஹர்ஷா தானாக வலியச் சென்று ஒரு பெண்ணிடம் பேசுகிறான், அதுவும் பார்த்த முதல் நாளே... எத்தனையோ வசதி படைத்த அழகான பெண்கள் அவனிடம் வலிய சென்று பேசிய பொழுதெல்லாம், அவர்களைக் கேவலமான ஒரு பார்வை மட்டும் பார்ப்பானே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தைக் கூடப் பேசமாட்டான், கேட்டால் தான் பேசுவதற்குக் கூட அவர்கள் தகுதியற்றவர்கள் என்று திமிராகப் பதில் அளிப்பான்...

அப்படிப் பட்டவன் இன்று கனிகாவைப் பார்த்து பேசியது மட்டும் இல்லாமல், அவளைத் தூக்கி விட முயற்சித்தது, மற்றும் அவளை டிஸ்பென்ஸரிக்கு அழைத்தது என்று அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தான்.


*********************

ஒரு வழியாக வகுப்பறையை அடைந்த கனிகாவிற்கு அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் மீண்டும் பயம் வந்துவிட, காலியாக இருந்த ஒரு இடத்தில் அமர்ந்தாள்... அருகில் அமர்ந்திருந்த இளம் பெண்,

"ஐ ஆம் ஆஷா ஃப்ரம் டெல்லி" எனவும், 'ஐயோ இங்கேயும் ஆங்கிலமா??' என்று இருந்தது கனிகாவிற்கு...


ஆஷாவிற்கு அருகில் அமர்ந்திருந்த மற்றும் ஒரு இளம் பெண், "நீங்க க்ளாசிற்குப் புதுசா?" என்று வினவ அமைதியாகத் தலையை மட்டும் அசைத்து எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த கனிகாவை அவர்கள் இருவருக்குமே பார்த்த விநாடியே மிகவும் பிடித்துப் போனது....

"என் பெயர் இளவரசி, இளான்னு தான் கூப்பிடுவாங்க" என்று அவள் மறுபடியும் கூற, புன்னகைத்தவள் "என் பெயர் கனிகா...." என்றாள்.

"வாவ், ஸ்வீட் நேம்" என்று கூறிய ஆஷா,

"கனிகா, நான் டெல்லிதான், ஆனால் கொஞ்சம் தமிழும் தெரியும், ஃப்ரெண்ட்ஸ்" என்று கரம் நீட்ட, கனிகாவின் மனதிற்கு ஒரு ஆறதலாக இருந்தது அவர்களின் பேச்சு... கரம் நீட்டி குலுக்கியவள், சரி என்பது போல் தலை அசைத்தாள்....

ஒரு வழியாக அன்று ஒரு நாளை ஓட்டியவள் வீட்டிற்குக் கிளம்ப, வெளியே வந்தவளுக்குக் காலையில் நடந்தது ஞாபகம் வந்தது...

அந்த நால்வரும் மீண்டும் தன்னைக் கேலி செய்தால் என்ன செய்வது என்று நினைத்தவுடனே பயம் வந்துவிட இளவரசியின் கையைப் பற்றியவள் "நானும் உன் கூடவே வரட்டுமா?" என்றாள்.

“சரி” என்றவள் அவளின் பயந்த முகத்தைப் பார்த்து என்னவென்று கேட்க, காலையில் நடந்ததைச் சொன்னவள் ஹர்ஷாவைப் பற்றியும் சொன்னாள்...

அவள் பயந்தது போல் அதே இடத்தில் அந்த நால்வரும் மீண்டும் வந்து அமர அவர்களுடன் ஹர்ஷா இல்லாதைப் பார்த்தவள்,

"இளா, சட்டுன்னு பார்க்காத. அங்க அந்த மரத்துக்கு அடியில் உட்கார்ந்து இருக்கிறவங்க தான் காலையில் என்னைய கிண்டல் பண்ணினாங்க... ஆனால் என்ன கீழே இருந்து தூக்க வந்தவங்க அவங்க கூட இப்போ இல்லை..." என்றவள் இளாவின் கையை அழுத்தமாகப் பிடித்து "சீக்கிரம் வா, போய் விடலாம்" என்று கூறியவாறே விடு விடுவென்று நடக்கத் துவங்கினாள்...

அவளின் வேக நடையைப் பார்த்தவுடன் ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்ட அந்த நால்வரும் அவளைக் கிண்டல் ஏதும் செய்யவில்லை... மாறாக ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

கனிகா அவர்களைப் பார்க்காவிட்டாலும் அவர்களையே பார்த்திருந்த இளாவிற்கு அவர்களின் ஆச்சரியப் பார்வை அதிசயமாக இருந்தது... 'ஏன் இவர்கள் இப்படி வைத்த கண் வாங்காமல் கனிகாவையே பார்க்கிறார்கள்??' என்று.

ஹர்ஷாவிற்குக் காலையில் கனிகாவைப் பார்த்ததில் இருந்து மனம் ஒரு இடத்தில் நிலை கொள்ளவில்லை, வகுப்பிலும் கவனம் செல்லவில்லை.... மனம் திரும்பத் திரும்ப அவளையே நினைக்கத் தூண்டியது.

அவன் மும்பையில் பள்ளியில் படிக்கும் பொழுது எத்தனையோ அழகான பெண்கள் அவனின் அழகிலும் பணக்கார தோரணையிலும் மயங்கி அவனிடம் வலிய வந்து காதலைச் சொன்ன பொழுது துச்சமென அவர்களைத் தூக்கி எறிந்தவன்.

சென்னைக்குக் குடி பெயர்ந்து கல்லூரியில் சேர்ந்த காலத்தில் இருந்தும் அதே கதை தான்...

நேற்று வரை எந்தப் பெண்ணும் அவனை வசீகரிக்கவோ மயக்கவோ இல்லை.

ஆனால் இந்தச் சின்னப் பெண், அதுவும் கிராமத்தில் இருந்து வந்திருப்பாள் போல் இருக்கிறது.... எப்படி ஒரே நாளில் சட்டென்று என் மனதில் நுழைந்தாள் என்று நினைக்கையில் அவனுக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் சிலிர்ப்பாகவும் இருந்தது....

கனிகா மாநிறத்திற்கும் கொஞ்சம் மேலே கோதுமை நிறம் என்பார்களே அந்த நிறத்தவள், அகன்ற பெரிய கண்கள், விழிகள் மூடினால் கன்னம் வரை படும் நீண்ட இமை முடிகள், சிறிய நெற்றி, இயற்கையிலேயே அமைந்த வில் போன்ற புருவங்கள், செப்பு இதழ்கள் என்று நல்ல களையான முகம் தான்...

ஆனாலும் ஹர்ஷாவுடன் இணைத்துப் பார்க்கும் பொழுது அவள் இறங்கித் தான் தெரிந்தாள்... அது மட்டும் அல்லாது இவளை விட அழகிகளும் பேரழகிகளும் கூட ஹர்ஷாவை கவர்ந்தது இல்லை.

இது என்னவோ பூர்வ ஜென்மத்து தொடர்பு போல் அவளின் முகம் நெஞ்சிலே பதிந்து விட்டது. இனி வாழ்க்கை முழுவதும் அவளின் அருகிலே அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது, இதோ இந்த நொடி கூட அவளை உடனே பார்க்க வேண்டும் என்று உணர்வு உந்த அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்....

அவள் இன்று தான் முதன் முதலாகக் கல்லூரியில் சேர்ந்திருப்பதால் அவளைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் தன் தோழர்களிடமும் மற்ற சீனியர் மாணவர்களிடமும் அவளை இனி யாரும் கிண்டல் செய்யக் கூடாது என்று கூறிய பொழுது அவர்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார்கள்.

அவனுக்கு அவள் மேல் உள்ள இந்த ஈடுபாடு அவர்களுக்கு வித்தியாசமாகப் பட்டாலும் அவனிடம் எதிர் கேள்வி கேட்கும் தைரியம் ஒருவருக்கும் இல்லை.

அவனின் கோபமும் ஆளுமையும் எல்லோரும் அறிந்தது தானே... கல்லூரியில் நடக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் பிரசிடெண்ட் என்ற முறையில் அவனிடம் ஆலோசனை செய்யும் பிரின்ஸிபல், அவன் படிப்பிலும், கல்லூரி சம்பந்தபட்ட விஷயங்களிலும் கெட்டியாக இருப்பதால் அவனை மிகவும் மதிக்கும் பேராசிரியர்கள் என்று அவன் ஒரு முடிசூடா இளவரசனாகவே வலம் வந்தான் தன் கல்லூரியில்...

அதனால் அவனிடம் எதிர் கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை, ஆனால் ஒன்று மட்டும் அவர்களுக்குப் புரியவில்லை. "அவள் யார்???? அவள் மேல் அவனுக்கு ஏன் இத்தனை பிரியம்???" என்று.

ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவன் மனதில் அவள் எப்படியோ எதனாலோ இடம் பிடித்துவிட்டாள் என்று மட்டும் புரிந்தது.



தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top