JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 4 & 5

JLine

Moderator
Staff member
அத்தியாயம் 4

அன்று கல்லூரியின் விழாவில் தன் நண்பிகளின் முன் ஹர்ஷாவின் புறக்கணிப்பு ரியாவின் மனதில் இன்னும் தீராத கோபத்தைத் தூண்ட, அவர்களின் கிண்டல் மேலும் எரியூட்ட, ஹர்ஷாவை தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவளுக்கு அது தானே அமைந்தது...

அவர்களின் கல்லூரியில் விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும், கூட்டங்களுக்கும் என்று தனித்தனியாக ஆடிட்டோரியங்கள் இருக்கும், அங்குத் தான் ஹர்ஷா தன் நண்பர்களுடனும், தேவை என்றால் பேராசிரியர்களுடனும் விழாக்களைப் பற்றியும் மற்ற கொண்டாட்டங்கள் பற்றியும் திட்டமிடுவதற்குக் கூடுவது...

அன்று மதியம் அதே போல் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டவன், மற்ற அனைவரும் சென்றதும் தான் மட்டும் தனியாக அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, ஹர்ஷாவைத் தேடி அங்கு வந்தவளுக்குப் பழம் தானாகப் பாலில் விழுந்தது போல் அவன் தன்னந்தனியாக அமர்ந்து இருக்க, சத்தம் இடாமல் அவன் அருகில் பூனை போல் நடந்து சென்றவள், சுருக்கிய புருவங்களுடன், முன் உச்சியில் சில முடிகள் முகத்தில் விழுந்து, அதுவும் அவன் அழகிற்கு அழகு சேர்க்க, உதடுகளைக் கடித்தபடி தீவிர சிந்தனையில் இருந்தவனைச் சில விநாடிகள் தன்னை மறந்து ரசித்துப் பார்த்தாள்.....

இவ்வளவு நெருங்கி நின்றும் அவளின் வருகையையோ வாசனையையோ உணராது இருந்தவனைப் பார்த்து செல்ல கோபம் எழுந்தாலும் அவன் கம்பீரமும், படர்ந்து விரிந்த தோள்களும், அரைக் கை டீ ஷர்ட்டில் தெரிந்த அவனின் வலிமையான தோள்களும் புஜங்களும் அவளின் ஒவ்வொரு அணுவிற்கும் அவன் தனக்கு வேண்டும் என்ற செய்தியை அனுப்ப, கண்களைச் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், தன்னைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அவனைச் சடாரென்று இழுத்துக் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் அதிர்ந்தவன், தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவளைப் பார்த்தவன், பார்த்த வேகத்தில் பளாரென்று அறைந்தான்.....

அவனுடன் சாதாரனமாகப் பேச மட்டுமே வந்தவளுக்கு அவனின் அபார அழகு தாபத்தைக் கூட்ட தன்னை அறியாமல் முத்தமிட்டவள் நிச்சயமாக அவன் இப்படி அறைந்து விடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. கோபத்திலும் ஆத்திரத்திலும் இருவர் முகமும் சிவந்து இருக்க, அவன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.

"ஏன்டி இப்படி அலையற?? நான் தான் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன் இல்லையா? பின் ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்கற.... உனக்கு ஆம்பளை வேண்டும் என்றால் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் போ...." என்று சத்தமாகக் கத்த, அவனுடைய வார்த்தைகள் இன்னும் அதிர்ச்சியைக் கூட்டியது ரியாவிற்கு.

கண்கள் கலங்க அறைபட்ட கன்னத்தைக் கையால் தேய்த்துக் கொண்டே,

"ஹர்ஷா, எனக்கு நீதான் வேண்டும், நீ மட்டும் தான்....உன்னை எப்படி அடைய வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்றவள் விருட்டென்று வெளியேற, தலையை அழுந்த கோதிவிட்டுக் கொண்டவன் "சே இப்படியும் பெண்களா?" என்று வாய்விட்டு கூறிவிட்டு, 'இதற்கு மேல் இங்கிருந்தால் அந்தப் பேய் மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது' என்று நினைத்தவன் மடி கணினியை எடுத்துக் கொண்டு தன் வகுப்பறையை நோக்கி வேகமாக நடந்தான்.

கனிகாவைப் பற்றிய நினைவுகள் மழைச்சாரலாக மனதில் வீசிக் கொண்டு இருந்தது என்றால் ரியாவைப் பற்றிய நினைப்பும், இதோ இப்பொழுது அவள் நடந்து கொண்ட விதமும் உள்ளுக்குள் எரிச்சல் ஊட்டியது...

அதே நினைவுடன் நடந்து வந்தவனை நண்பர்கள் பட்டாளம் சூழ்ந்து கொள்ள, அவனின் முகத்தில் மண்டிக் கிடக்கும் எரிச்சலைப் பார்த்தவர்கள் "என்ன, ஹர்ஷா, எனி ப்ராப்ளம்?" என்று விசாரிக்கவும் அவன் ரியாவைப் பற்றிச் சொல்ல கிட்டதட்ட மயங்கியே விழுந்தார்கள்.

"பாஸ், செம்ம சான்ஸை மிஸ் பண்ணிட்டியே?" எனவும், கடுப்பானவனுக்கு ஏன்டா இவர்களிடம் சொன்னோம் என்று ஆனது. மீண்டும், மீண்டும் இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று குழம்பியவன் முதலில் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க வேண்டும், விசாரித்துத் தன் மனதில் உள்ளதை அவளுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று யோசனையில் ஆழ, அவனின் முக மாற்றத்தை கவனித்தவர்கள் அவன் பிரச்சனை என்ன என்பது புரியாமல் பார்க்க,

"ஒகே டா, நான் க்ளாசிற்குப் போகிறேன், ஈவ்னிங் மீட் பண்ணலாம்,,," என்று சொன்னவன் வகுப்பறைக்குள் நுழைந்தான்..


*********************


இதோ கல்லூரியில் சேர்ந்து இதனோடு ஒரு வாரம் ஆகிவிட்டது கனிகாவிற்கு...

ஏதோ பிடித்த மாதிரி தான் இருந்தது இந்தச் சென்னை வாழ்க்கையும், கல்லூரி வாழ்க்கையும்...

நிறையப் பெரிய இடத்துப் பிள்ளைகள் படித்தாலும் யாரும், யாரையும் தொந்தரவு செய்யவது இல்லை... எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள்.

முதல் நாள் போல் தன்னை யாராவது கிண்டல் செய்வார்களோ என்று அஞ்சிக் கொண்டு கல்லூரிக்கு சென்றவளுக்குத் தெரியாது, ஹர்ஷாவிற்குக் கல்லூரியில் உள்ள ஆளுமையும் மதிப்பும்... அவன் எச்சரித்து வைத்திருந்தது காற்று போல் பரவியதால் யாருக்கும் அவளைக் கிண்டல் செய்யத் துணிவில்லை என்று.

அத்தையும், மாமாவும், அகிலும், நிகிலாவும் நல்ல பாசத்துடனும் தோழமையுடனும் பழக அவளுக்கு அவர்கள் வீட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அன்னையின் தாங்க முடியாத இழப்பை எங்கு இருந்தோ வந்த மாமனும் அத்தையும், அவர்களின் பிள்ளைகளும் மறக்க செய்தார்கள் என்பது என்னவோ உன்மை.

எப்படி இத்தனை நாட்கள் இவர்களைப் பார்க்காமல் போனோம், இத்தனை நல்லவர்களாக இருக்கும் மாமாவையும், அத்தையையும் எப்படித் தன் தந்தைக்குப் பிடிக்காமல் போனது என்று வருத்தப்பட்டவள் இப்பொழுது மட்டும் தன் அன்னை தன் கூட இருந்திருந்தால் உலகத்தில் உள்ள அத்தனை மகிழ்ச்சியும் தன்னிடம் தான் இருந்திருக்கும் என்று நினைத்தவளுக்குப் பெருமூச்சு தான் விட முடிந்தது.

அங்குக் கனிகாவை பார்த்த நாளில் இருந்து அவள் சிந்தனையாகவே இருந்த ஹர்ஷா, 'அப்படி என்னதான் இருக்கிறது அவளிடம். இவளை விடப் பேரழகிகள் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறோம், அவர்களாக வந்து நம்மிடம் தாங்கள் விரும்புவதாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்....அவர்களை எல்லாம் ஒரே விநாடியில் மறுக்க, மறக்க முடிந்த தன்னால் எப்படி இந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை. அதுவும் பார்த்தால் கிராமத்தில் இருந்து வந்த பெண் போல் தோன்றுகிறது. எது எப்படி இருந்தால் என்ன, எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது..' என்று நினைத்துக் கொண்டவன் அவளைப் பற்றிய நினைவுகளை மனதில் இருந்து அகற்ற முடியாமல் தவித்தான், இரவும் பகலும்.....

காலையில் கண் விழித்தவன் கனிகாவின் நினைவில் சரியாக உறங்காததால் கண்கள் சிவந்திருந்தாலும் முகத்தில் புன்னகையுடன் கீழே இறங்கி வர, டைனிங் டேபிளில் காலை உணவு உண்பதற்கு அமர்ந்திருந்த சிதம்பரத்திற்கு மகனின் முகத்தில் இருந்த குறுகுறுப்பும் புன்னைகையும் எதனையோ உனர்த்தியது.

"என்ன ஹர்ஷா, எனிதிங் ஸ்பெஷல் டுடே?"

என்று கண் சிமிட்டி கேட்க, தன் அன்னையையும், தந்தையையும் பார்த்துச் சிரித்தவன் ஒன்றும் பேசாமல் அவர்கள் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

சில விநாடிகள் அமைதியாக இருந்தவன் சட்டென்று,

"மாம், நீங்க எப்போ டாடியை ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணினீங்க?" என்றான்.

அவனை ஆச்சரியமாகச் சிதம்பரமும் சங்கீதாவும் பார்க்க,

"என்ன மாம், நான் கேட்கக் கூடாத எதையும் கேட்டுட்டேனா? உங்க இரண்டு பேர் மேரேஜும் லவ் மேரேஜ் தான, அதான் கேட்டேன்.." என்றான்.

ஹர்ஷா எப்பொழுதும் பார்ட்டி, பப், ஃப்ரெண்ட்ஸ், என்று ஊர் சுற்றுபவன், அவனுக்குத் தன் அன்னை தந்தையுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடவோ அல்லது மனம் விட்டு பேசவோ நேரம் கிடையாது.

வீட்டில் அவன் இருப்பதே அபூர்வம். இதில் இன்று ஒன்றாகச் சாப்பிட அமர்ந்தது மட்டும் இல்லாமல், அவர்களின் காதல் திருமணத்தைப் பற்றிக் கேட்டதும், கணவன் மனைவி இருவருக்குமே ஆச்சரியம்.

"என்ன ஹர்ஷா, அதிசயமா இருக்கு? எங்ககிட்ட பேச கூட உனக்கு நேரம் இருக்கா, என்ன?"

"டாட் உங்களுக்கே தெரியும் என் லைஃப் ஸ்டைல்…. காலேஜில் நடக்குற ப்ரோக்ராம்ஸ் எல்லாத்தையும் நான் தான் மேனேஜ் பண்றேன், இதில் பிரஸிடெண்ட் என்ற பதவியால வருகிற எக்ஸ்ட்ரா வொர்க்ஸ் வேற, ஈவ்னிங்ஸ் எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் கூட ரொம்பப் பிஸியா போய்விடுகிறது. எனக்கு 24 ஹவர்ஸ் பத்தலை டாட்....ஒகே நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க" எனவும்,

அவன் இப்படி மனம் விட்டுத் தங்களிடம் பேசுவதே பெரிது என்று தோன்ற தங்களின் காதல் கதையை, அது எப்படித் திருமணத்தில் முடிந்தது என்று கூற ஆரம்பித்தார் சங்கீதா.

"ஹர்ஷா, நான் உன் அப்பாவை முதல் முதல பார்த்தது அப்ராட்ல எங்க காலேஜில் நடந்த ஒரு ஃபங்ஷனில் தான். வெரி ஸ்மார்ட் அன்ட் ஹான்ஸம் மேன். பார்த்த முதல் தடவையே ஐ ஃபெல் இன் லவ் வித் ஹிம். ஆனால் உங்க அப்பாவிற்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.. என்னைய நானே இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கிட்டேன். அப்புறம் ஒரு வழியா கஷ்டப்பட்டு அவரோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளுக்கு உள்ள நுழைந்தேன். கொஞ்ச நாளிலேயே அவர் கூட நெருங்கி பழகுற ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர்ந்திட்டேன். ஆனால் அப்ப கூட அவர்கிட்ட என்னோட லவ்வ ப்ரொபோஸ் பண்ண எனக்குத் தைரியம் வரவில்லை. அதுக்குக் காரணம் எங்கே என்னோட லவ்வ அவர் மறுத்துடுவாரோன்னு பயம் தான். மறுத்திட்டால் ஃப்ரெண்ட்ஷிப்பும் கெட்டுப் போய்விடுமே. ஆனால் அவர் பின்னாடி அலைந்த பெண்கள் நிறையப் பேர்..... எங்கே எனக்கு முன் யாராவது அவரைத் தூக்கிட்டு போய்விடுவார்களோ என்று பயந்து ஒரு வழியாக அவரிடம் என் லவ்வை சொன்னேன். நான் எதிர்பார்த்த மாதிரி அவர் என் லவ்வை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று சிரித்தபடியே கூறி கணவனைக் காதலுடன் பார்க்க, சிதம்பரம் தொடர்ந்தார்....

"ஹர்ஷா, என்ன தான் நான் பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட் வீட்டுப் பையனா இருந்தாலும், நல்லா படிக்கணும், படித்து எங்க அப்பாவின் பிஸினஸ் எல்லாவற்றையும் நல்லா பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குப் பெரிய லட்சியமே இருந்தது. இதில் லவ் எல்லாம் அன்னஸெஸரி என்று நினைத்திருந்தேன். பட் இன் ட்யூ கோர்ஸ் உன் அம்மாவோட காதல் என்னைய அசைச்சிருச்சு. இவளும் எவ்வளவு பெரிய கோடீஸ்வரி வீட்டுப் பொண்ணுன்னு தெரியும். ஆனால் அதற்கான பந்தா எதுவும் இல்லாமல் வெரி ஸிம்பிள் பெர்ஸன். அது என்னைய அட்ராக்ட் பண்ணிடுச்சு. தென் ஐ அக்ஸெப்டட் ஹெர் லவ்"

"அப்புறம் எப்பொழுது மேரேஜ் பண்ணிக்கீட்டீங்க?"

"என்ன, சார் இன்னைக்கு என்னமோ ஒரு மூடில் இருப்பது போல் தெரியுது?" என்று சங்கீதா கிண்டல் செய்தார்.

"நோ மாம், ஐ ஜஸ்ட் வாண்ட் டு நோ அபௌட் யுவர் லவ் அன்ட் மேரேஜ் [No Mom, i just want to know about your love and marriage]....நீங்க மேலே சொல்லுங்க டாட்..."

"காலேஜ் படிக்கும் பொழுதே எங்களோட லவ் பற்றி எங்கள் வீட்டில் சொல்ல, அதற்குப் பயங்கர எதிர்ப்பு... சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு மும்பையைச் சேர்ந்த உன் அம்மாவை கல்யாணம் செய்வதில் எங்க வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லை…. ஆனால் என்னால் உங்க அம்மாவை தவிர வேற எந்தப் பொண்ணையும் நினைச்சு கூடப் பார்க்க முடியாது. அதனால எல்லோர் எதிர்ப்பையும் மீறி நாங்க காலேஜில் படிக்கும் பொழுதே மேரேஜ் பண்ணிக் கொண்டோம்…. சில மாதங்களில் உன் தாத்தா, அதாவது, உன் அம்மாவோட அப்பா உடல் நலம் இல்லாமல் இறந்து போய்விட எங்களது திருமணத்தினால் தான் அவர் உடம்பு முடியாமல் போய்ப் பின் இறந்துவிட்டதா எங்களுக்குக் குற்ற உணர்ச்சி வர, காலேஜ் முடிந்தவுடன் மும்பையிலேயே செட்டில் ஆக முடிவெடுத்தோம்."

"இது என் பேரண்ட்ஸுக்கு பிடிக்கலை... அதனால் எனக்கும் அவங்களுக்கும் கொஞ்ச நாள் பேச்சு வார்த்தையே இல்லை. மும்பையில் சங்கீதாவின் பேரண்ட்ஸோட பிஸினஸ் மட்டும் இல்லாமல், நானும் தனியே பிஸினஸ் தொடங்கி ரொம்ப நல்லா போய்க் கொண்டிருந்தது. எல்லாச் சந்தோஷமும் இருந்தாலும், இரண்டு கவலைகள் மட்டும் தான் எங்களுக்கு. ஒன்று என் பேரண்டஸ் எங்கள் கூடப் பேசாதது, இரண்டு திருமணம் ஆகி அத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு குழந்தை இல்லாதது. ஆனால் இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்ப்பது போல் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து நீ பிறந்தாய். நீ பிறந்த சந்தோஷத்தில் என் பேரண்ட்ஸும் எங்களுடன் சமாதானம் ஆகிவிட்டார்கள்…. அப்புறம் தான் உனக்குத் தெரியுமே உன் தாத்தா, அதாவது என் அப்பாவும் இறந்து விட இங்கே சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டோம்" என்று முடித்தார்.

தங்களின் காதல் கதையைப் பற்றிக் கேட்கும் பொழுது ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த ஒரு வெட்கப் புன்னகையும், மகிழ்ச்சியும் எதனையோ உணர்த்திட,

"என்ன ஹர்ஷா, திடீர்னு, லவ் பற்றி எல்லாம் கேட்கிறாய்?" என்று சங்கீதா கேட்க,

சத்தமாகச் சிரித்தவன்,

"நோ மாம், ஐ வாஸ் ஜஸ்ட் கியூரியஸ் [I was just curious] அவ்வளவு தான்.." என்றான்.

"ஹர்ஷா, லவ் அப்படிங்கறது ஒரு வொண்டர்ஃபுல் ஃபீலிங். எஸ்பெஷலி வென் இட் கம்ஸ் ஆன் எ ரைட் பெர்ஸன் [especially when it comes on a right person]. நான் உங்க அப்பாவ பார்த்த அந்த விநாடியே தெரிந்து போனது, அவர் எனக்கானவர் என்று. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், அப்புறம் அவர்களையே திருமணம் செய்வது ஒரு ப்ளஸிங்" இதனை அவர் சொல்லும் பொழுது ஹர்ஷாவின் முகம் சிவந்ததைப் பார்த்தவர், ஆண்களுக்கும் வெட்கம் வருவது ஒரு அழகு தான்....

ஆகத் தன் மகன் காதிலில் விழுந்து விட்டான் போல் என்று நினைத்தவர்,

"ஹூ இஸ் ஷி ஹர்ஷா?” என்றார்.

அவரின் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்தவன், தன் அன்னையின் கண்களில் தெரிந்த குறும்பை கவனித்தவன் சிரிப்புடன், "பை மாம்....." என்று சொல்லியவாறே வெளியில் ஓடினான்...

"சாப்பிட்டு விட்டு போ ஹர்ஷா..." என்ற அவனின் அன்னையின் வார்த்தைகள் அவன் காதுகளுக்கு எட்டும் முன் பறந்து விட்டிருந்தான்.

மகனின் மனதில் காதல் பிறந்துவிட்டதோ என்று நினைத்து அதனையே யோசித்துக் கொண்டிருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது சிதம்பரத்தின் எச்சிலுடன் கூடிய முத்தம். தன் கன்னத்தில் சட்டென்று தன் கணவன் முத்தம் இட அந்த வயதிலும் அவருக்கு வெட்கம் வந்தது.

"என்னது இது? வேலைக்காரங்க யாராவது பார்க்க போறாங்க.." என்று சிவந்த முகத்துடன் கூறிய தன் மனையாளின் அழகிய முகத்தைப் பார்த்தவர், இன்னும் அருகில் வந்து,

"கல்யாணம் ஆகி ட்வெண்டி நைன் இயர்ஸ் ஆகிவிட்டது, ஆனால் நான் தொட்டதும் வரும் வெட்கம் மட்டும் இன்னும் உன்னைய விட்டுப் போகவில்லை, என்று கூறியவாறே, அவரைக் கட்டி அணைக்க,

"ஐயோ இன்னைக்கு என்ன ரொம்ப ரொமான்ஸா இருக்கு அய்யாவிற்கு..." என்று மெலிதாக அலறினாலும் தன் கணவரின் அணைப்பில் இருந்து விலகவில்லை.

"ஹர்ஷாகிட்ட நம்ம லவ் பற்றிச் சொல்லிட்டு இருக்கும் பொழுது உன் முகத்தைப் பார்த்தேன்….அதில் முதன் முதலாக உன் லவ்வை நான் அக்ஸெப்ட் பண்ணின பொழுது தெரிந்த காதல் இன்றும் தெரிந்தது… இத்தனை வருடங்கள் ஆகியும் உனக்கு என் மேல் காதல் குறையவில்லை என்று நினைக்கும் பொழுது ரொம்பப் பெருமையாக இருக்கு சங்கீ.."

"நம்மைப் போலவே நம்ம பையனுக்கும் லைஃபில் காதலும் திருமணமும் அமையணும்ங்க, அதான் என்னோட பிராத்தனை.." என்றவர்,

தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டார்.

கல்லூரிக்கு வந்த ஹர்ஷாவிற்கு அந்த நாள் மிகவும் பிஸியாகச் செல்ல, கனிகாவைப் பற்றி விசாரிக்கக் கூட நேரம் இல்லாமல் போனது.

அவளை முதல் நாள் பார்த்தது தான், அதற்குப் பிறகு ஏனோ அவளைப் பார்க்கவும் சந்தர்ப்பம் அமையவில்லை.

***************************

நாட்கள் அதன் போக்கில் நகர, ஒரு நாள் மதியம் அவனின் அலைபேசிக்கு அழைத்தார் அவன் அன்னை.

அழைப்பை எடுத்தவன் "என்ன மாம்?" என்று வினவ,

"ஹர்ஷா, இன்றைக்கு நானும் அப்பாவும் கோவிலுக்குப் போகலாம் என்று இருக்கிறோம். நீயும் எங்க கூட வர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, வருகிறாயா?” என்று கேட்க, அன்னையின் குரலில் இருந்த ஏக்கம் அவனுக்குப் புரிய, "சரி" என்றான்.

மகன் தங்களுடன் கோவிலுக்கு வருவதெல்லாம் நடக்காத காரியம் என்று நினைத்திருந்தவருக்கு அவன் சட்டென்று சரி என்றது ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

"ரொம்பச் சந்தோஷம் ஹர்ஷா, சீக்கிரம் காலேஜ் முடிந்தவுடன் வீட்டிற்கு வா. எல்லோரும் ஒன்றாகப் போகலாம்.." என்றார்.

விரைவாக வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து வெளிர் நீல டீ ஷர்ட்டும் கருப்பு நிற ஜீன்ஸும் அனிந்து கீழே வர, ஆண்களே பொறாமைப்படும் தன் மகனின் கம்பீர அழகைப் பார்த்துக் கர்வம் கொண்ட சங்கீதா வைத்த கண் எடுக்காமல் மகனை பார்த்துக் கொண்டு இருந்தார்.

"மாம், பார்த்து, நீங்களே திருஷ்டி போட்டுருவீங்க போல இருக்கு.." என்று புன்னகைத்தவனை,

"ஆமாம் ஹர்ஷா, என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு, வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் உனக்குத் திருஷ்டி சுத்திப் போடணும்" என்றார்...

அவரின் தோளில் கை வைத்து அணைத்தவன், "எங்கே உங்க லவ் மேட்?" என்றான்..

முதுகில் சின்னதாக அடி போட்ட சிதம்பரம் "படவா, வா கிளம்பலாம்" என்க, அவர்களுடன் கோவிலுக்குச் சென்றவனுக்கு மனதை சிலிர்க்க வைக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கு அம்பாளின் சந்நிதானத்தில, கண்களை இறுக்க மூடி மனம் உருக வேண்டிக் கொண்டு இருந்தாள் அவனின் மனம் கவர்ந்தவள்.

அடர்ந்த பச்சை நிறத்தில் மெல்லிய சருகைப் போட்ட பட்டுப் புடவையில், நீண்ட கூந்தலில் அடுக்கடுக்காக இறுக்கி தொடுத்த மல்லிகை சூடி, நெற்றியில் சிறியதும் அல்லாமல் பெரியதும் அல்லாமல் சிகப்பு பொட்டு வைத்து, அந்த அம்பாளே நேரில் வந்தது போல் பாந்தமாக நின்று இருந்தவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் திகட்டவில்லை....

அன்னையும் தந்தையும் வேறு ஒரு சந்நிதானத்திற்குச் செல்ல அது தான் சமயம் என்று கனிகாவின் மிக அருகில் நின்று கொண்டான்.

கோவில் குருக்கள் திருநீறு, குங்குமத்தை கொடுக்க அவளை அழைக்க, மனதில் அம்பாளுடன் ஒன்றிவிட்டவளுக்கு அவரின் அழைப்பு கேட்கவில்லை.

அவளையே பார்த்திருந்தவன் புன் சிரிப்புடன் குருக்களிடமிருந்து குங்குமத்தையும் திருநீறையும் வாங்கிக் கொண்டான்.

அவர் அந்த இடத்தில் இருந்து அகன்றவுடன், குனிந்து அவளின் காதில்…

"அப்படி என்ன வேண்டுதல்?? இப்போ நீ இந்த உலகத்திலேயே இல்லை போல???" என்று கிசுகிசுக்க,

இத்தனை அருகில் ஒரு ஆணின் குரல், அதுவும் மூச்சுக் காற்று வேறு முகத்தில் பட, தூக்கி வாரிப் போட கண் விழித்தாள்.

வெகு அருகில் ஹர்ஷாவைப் பார்த்தவளுக்கு உடல் முழுவதும் பதட்டம் வந்து தொற்றிக் கொண்டது.

அவனை முதல் நாள் பார்த்தது தான், இதோடு கல்லூரியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த இரண்டு மாதங்களில் அவன் அவளின் கண்களில் படவில்லை, ஆனாலும் அவன் முகம் அவளுக்கு மறக்கவில்லை. மறக்க கூடிய முகமா அவனது??

அவள் தன்னைப் பார்த்ததும் அச்சத்தில் விழித்ததைப் பார்த்தவனுக்கு அவள் தன்னை மறந்துவிட்டாள் போல் தோன்ற…

"என்னைய தெரியலையா?" என்க,

விழிகளை அகல விரித்தவள், எதுவும் பேசாமல் தலை குனிய ஒரு வேளை தன்னைப் பற்றிய நினைப்பே அவளுக்கு இல்லை போலும், தன் முகம் கூட அவளுக்கு ஞாபகத்தில் இல்லை என்ற நினைப்பு அவனுடைய அகங்காரத்தைக் கிளறிவிட்டது.

தன் தந்தையையும், மாமனையும், அகிலையும் தவிர வேறு எந்த ஆண்மகனையும் நிமிர்ந்துக் கூடப் பார்த்திராதவள், ஆண்களைக் கண்டாலே அச்சத்தில் தலை குனிபவள், வாழ்க்கையில் இரண்டே முறை பார்த்து இருந்தவனை எப்படிக் கண்டதும் பேசி விடமுடியும்?

அது புரியாதவனுக்குக் கோபம் வர, இன்னும் அதிகமாக நெருங்கியவன்,

"நிச்சயமா ஞாபகம் இல்லையா?" என்று கேட்டான்.

அடக்கப்பட்ட கோபத்துடன் அழுத்தமான குரலில்..

தனக்கு வெகு அருகில் அவன் நெருங்கி வர இரண்டு அடி பின்னால் நகர்ந்தவளுக்கு முதல் நாள் அவன் அவளிடம் கரம் நீட்டியது ஏனோ மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால் அவனிடம் அதனைச் சொல்ல தைரியம் இல்லாமல் மீண்டும் தலை குனிந்தவள், அவன், அவளை உறுத்துப் பார்த்திருப்பதை உணர்ந்து உள்ளுக்குள் உதறலெடுக்க, குருக்களை நோக்கி திரும்பினாள்.

அவளின் நோக்கம் அறிந்தவன் தன் கையில் உள்ள திருநீறையும் குங்குமத்தையும் நீட்டினான்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணிற்குக் கணவனைத் தவிர வேற எந்த ஆண்மகனிடமும் குங்குமம் பெறுவது முறையல்ல என்று தோன்ற மறுபடியும் எக்கி குருக்களைப் பார்க்க,

"அவர் போய் விட்டார், இந்தா இதை எடுத்துக்க.." என்றான்.

அவனின் வார்த்தையில் தெரிந்த கோபம் அவளுக்கு இன்னும் பதட்டத்தை ஏற்படுத்த, கோபத்தில் முகம் சிவந்து அவன் நிற்பதை பார்த்தவளுக்குக் கைகள் நடுங்க ஆரம்பித்தது.

அவளின் பயந்த தோற்றம் மனதில் ஒரு ஈர்ப்பை உண்டாக்கினாலும், அவளின் தயக்கம் அவனுக்கு எரிச்சலை கொடுத்தது. இதுவரை அவன் தான் பெண்களை உதாசீனப்படுத்தி இருக்கிறானே தவிரப் பெண்கள் யாரும் அவனைத் தவிர்த்தது இல்லை. அவன் பார்வை தங்கள் மேல் படாதா என்கிற ஏக்கமே அவர்களின் கண்களில் தெரியுமே ஒழிய, உதாசீனம் தெரிந்தது இல்லை.

'வேண்டாம்..' என்று தலை அசைத்தவள் அவனிடம் இருந்து விலக நினைக்க, சட்டென்று அவளின் கரம் பற்றி இழுத்தவன், ஒரு கையால் அவளின் தாடையை இறுக பற்றி, மறு கையால் குங்குமத்தை அவளின் நெற்றியில் அழுத்தி வைத்து விட்டு விருட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அதிர்ச்சியில் உறைந்தவள் உடல் முழுவதும் நடுக்கம் எடுக்க மெதுவாக நடந்து வந்தவள் அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தாள்.

ஹர்ஷாவின் அழகும் கம்பீரமும் அவளை மயங்க வைத்தது என்னவோ உன்மைதான், ஆனால் யார் அவன்? எதற்குத் தன் நெற்றியில் அதுவும் இவ்வளவு உரிமையுடன் குங்கும் வைத்தான்? என்று குழம்பியவளுக்கு மறுநாளே விடை கிடைத்தது.

தொடரும்..
 

JLine

Moderator
Staff member
அத்தியாயம் 5


மறுநாள் கல்லூரியில் நுழைந்தவளை அவளுக்காகவே காத்திருந் தவனைப் போல் எதிர் கொண்டான் ஹர்ஷா, முகத்தில் ஒரு இனம் புரியா எதிர்பார்ப்புடன். அவனைக் கண்டவுடன் என்னவோ பேயைக் கண்டது போல் ஓட முயன்றவளை,

"என்ன பார்த்தால் அவ்வளவு பயமா இருக்கா?" என்று வினவியபடியே அவளை நெருங்கியவன் அவளை உரசியபடியே அவளுடன் சேர்ந்து நடக்க,
"நான் க்ளாஸிற்குப் போகணும்" என்றவள் விடுவிடுவென்று நடந்து சென்று விட்டாள்.

மறுபடியும் அவளின் உதாசீனம் வெறுப்பேற்ற, தன் நண்பர்கள் இருக்கும் இடம் நோக்கி நடந்தவன், அவளைத் திரும்பி பார்த்துக் கொண்டே நடக்க, வியந்தவர்கள்…

"ஹர்ஷா, கேட்கிறோம்னு தப்பா நினைச்சுக்காதே, உனக்கு அவளை முன்னரே தெரியுமா?" என்றார்கள்.

அவனின் நடவடிக்கையில் குழம்பித்தான் போயிருந்தார்கள் அவர்கள்.

எதுவும் பேசாமல் அவர்களின் அருகில் அமர்ந்தவன் சில நிமிடங்கள் கழித்து வேறு விஷயம் பேச, அவன் அவளைப் பற்று எதுவும் பேச விரும்பவில்லை என்று புரிந்து போனது.

அது தான் ஹர்ஷா….

அவனாக விரும்பினால்தான் தன் மனதில் உள்ளதை வெளியிடுவான்….அவன் முகத்தையோ அல்லது நடவடிக்கையை வைத்தோ அவனின் எண்ணத்தில் இருப்பதைக் கணிக்க யாராலும் முடியாது…

கடினமான தன் இதயத்தை இதுவரை தன் பெற்றோரிடம் கூடத் திறந்து காட்டியது கிடையாது...

முதன் முறை யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் தானாக வலிய நெருங்கியும் அவள் தன்னைத் தவிர்ப்பது அவனுடைய அகங்காரத்தையும் ஆத்திரத்தையும் கிளறிவிட்டுக் கொண்டே இருந்தது..

தன் வகுப்பறைக்குள் நுழைந்த கனிகாவிற்கு இன்னமும் வியர்த்து விறுவிறுத்தது.

'யார் அவன், ஏன் நம் பின்னாடியே வருகிறான்?? ஒரு வேளை நேற்றும் நாம் தனியாகக் கோவிலுக்குப் போவது தெரிந்து நம்மைப் பின் தொடர்ந்து வந்திருப்பானோ? பார்த்தால் பணக்காரப் பையன் போல் தெரிகிறது. அவன் அழகிற்கு நாம் கால் தூசி பெறமாட்டோம், பின் ஏன் என்னிடம் வந்து பேசுகிறான்? அதுவும் நேற்று நெற்றியில் குங்குமம் வைக்கும் அளவிற்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?' என்று குழம்பியவளாகத் தன் இருக்கையில் சென்று அமர, அவள் நினைவு அங்கு இல்லை என்று புரிந்து போனது ஆஷாவிற்கும், இளாவிற்கும்.

"என்னடி, ஏதாவது பிரச்சனையா?" என்று அவர்கள் கேட்க, சட்டென்று இந்த உலகத்திற்கு வந்தவள்,

"ஆஷா, இளா, என்னைய ஒரு பையன் பின் தொடர்ந்து வருகிற மாதிரி தெரிகிறது. ஆனால் பார்த்தால் பணக்கார பையன் போல் இருக்கான்…. ஒரு வேளை நான் தான் தவறுதலாக நினைத்துக் கொள்கிறேனோ என்று கூடத் தோன்றுகிறது…. ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருக்குடி" என்று கூறினாள்.

"என்னடி, காலேஜில் சேர்ந்து இரண்டு மாசம் தான் ஆகிறது, அதற்குள்ள பாய் ஃப்ரெண்டா?" என்று ஆஷா கிண்டல் செய்ய, கண்கள் கலங்க அவளை ஏறெடுத்தவள், ஒன்றும் பேசாமல் தலை குனிய, அவளின் அமைதியான அடக்கமான குணம் தெரிந்தவள்..

"அச்சச்சோ! சும்மா கிண்டல் பண்ணினேன்டி, சரி அவனை மறுபடியும் பார்த்தால் யாரென்று காட்டு... பார்ப்போம் அந்த ரோமியோ யாரென்று" என்றார்கள்...

ஆனால் அவன் யார் என்று அறியும் பொழுது மயங்கி விழப்போவது அவர்கள் தான் என்பதை அறியாமல்.

**************************************8

மாலையில் வகுப்புகள் முடிந்தவுடன் ஒரு அச்சத்துடன் தோழிகள் இருவரும் இரு பக்கமும் நடக்க வெளியில் வந்தவளின் கண்கள் தானாக ஹர்ஷாவைத் தேட, சிரித்த தோழிகள்,

"என்னடி, அவன் யாரென்றே தெரியவில்லை என்று சொன்னாய், ஆனால் வெளியில் வந்ததில் இருந்து அவனை இத்தனை ஆர்வத்துடன் தேடுகிறாய்..." என்று கூற,

மனதில் இருந்த அச்சத்தை முகத்திலும் வெளிப்படுத்தியவள்,

"நான் உள்ளுக்குள் எவ்வளவு பயந்துப் போயிருக்கிறேன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றாள்.

அவன் பின் தொடர்வதாகத் தான் கூறி இருந்தாளே ஒழிய, அவன் அவளைக் கோவிலில் சந்தித்ததையோ அல்லது அவளின் நெற்றியில் உரிமையோடு குங்குமம் வைத்ததையோ அவள் சொல்லவில்லை….

சொல்லியிருந்தால் இன்னும் கிண்டல் செய்திருப்பார்கள் போல. தோழியின் முகம் மாறுவதைக் கண்டவர்கள்,

"சே சும்மா விளையாடுறோம்டி, சரி அவனைப் பார்த்தால் எங்களிடம் சொல்லு.." என்றவர்கள் தங்கள் பாதையில் வந்த ஒவ்வொரு மாணவனையும் காண்பித்து "இவனா?? இவனா??" என்று நச்சரிக்க,

"அடியே, அவனைப் பார்த்தால் நானே காண்பிக்கிறேன், நீங்க என்னைய படுத்தாதீங்க.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, ஹர்ஷாவின் குரல் கேட்க திரும்பி பார்த்தவள் அவன் ஒரு பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

"அதோ, அவன் தாண்டி..." என்று அவள் அவனைச் சுட்டிக் காட்டிய அந்த விநாடியே கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு வந்திருந்தார்கள் இளாவும், ஆஷாவும்.
"என்னதூஊஊஊ.." என்று அலறியவர்களின் தோளில் தட்டியவள் அவனின் அழகைப் பார்த்து தான் அவர்கள் கத்துகிறார்கள் என்று நினைத்து,

"ஏன்டி இப்படிக் கத்துறீங்க? அவன் காதில் விழுந்துடப் போகுது" என்றாள்.

தாங்கள் காண்பது கனவா அல்லது நினைவா என்று சந்தேகம் வர,

"அடியே ஆஷா, என்னைய கொஞ்சம் கிள்ளி விடுடி" என்றாள் இளா.

ஒரு வேளை கனிகா தவறாகக் கணித்து இருக்கிறாளோ என்று எண்ணிய ஆஷா,

"கனிகா, நீ தப்பா நினைச்சுக்கிட்டன்னு நினைக்கிறேன்டி, இவராவது உன்னைய பார்க்கிறதாவது..." என்றாள்.

"கரெக்ட் தான் ஆஷா நீ சொல்றது, எனக்கும் தெரியும், அவன் அழகுக்கு நிச்சயம் கோடீஸ்வர வீட்டு அழகிகள் வந்து லைன்ல நிப்பாங்கன்னு, ஆனால் ஏன் என்கிட்ட பேச முயற்சிக்கிறான்னு தான் தெரியலை" என்க, அவளின் முதுகில் ஓங்கி அடித்தவர்கள்,

"ஏன்டி, நாங்க என்ன கேனமா, நீ சொல்றதை எல்லாம் நம்பறதுக்கு" என்றார்கள். அவர்களின் குழம்பிய முகத்தைப் பார்த்தவள்,

"சரி, நீங்க ஒண்ணும் நான் சொல்றத நம்ப வேண்டாம், ஆனால் அவன் யாரு, உங்களுக்குத் தெரியுமா?”

"அடியே, அவர் ஹர்ஷா டீ" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.

"அது யாரது ஹர்ஷா?” என்று சிறு பெண் போல் ஆச்சரியத்துடன் கண்களை அகல விழித்துக் கேட்பவளிடம் ஹர்ஷாவின் பெருமையை எடுத்துரைக்க, இப்பொழுது மயக்க நிலைக்குப் போவது கனிகாவின் முறை ஆனது.

"என்னங்கடி சொல்றீங்க, அவன் காலேஜ் பிரசிடண்டா?"

"அடியே கனிகா, முதல்ல ஹர்ஷாவை அவன் இவன்னு சொல்றத நிறுத்து. இங்குக் காலேஜில் அவருக்கு ஃபேன்ஸ்ங்க நிறையப் பேரு இருக்குங்க, யாருடையா காதிலையாவது விழுந்துவிடப் போகுது… அது மட்டும் இல்லை, இந்தக் காலேஜில் நிறையப் பெண்களுக்கு அவர் மேல் ஒரு கண்ணு. அவர் கண்ணு தன் மேல் விழாதான்னு ஒவ்வொருத்தியும் தவம் கிடக்கிறாளுங்க. அதனால நீ இந்த மாதிரி அவர் உன்னைய ஃபாலோ பண்ணுகிறார்னு பினாத்தாம வா.." என்று கூற,
ஏற்கனவே குழம்பியவளின் மூளை மேலும் குழம்பியது.

தான் கண்டது பொய் இல்லையே, கல்லூரிக்கு வந்த முதல் நாள் தன்னைத் தரையில் இருந்து தூக்கி விடக் கரம் நீட்டியவர் இவர் தானே, சரி அது கூட ஏதோ கீழே விழுந்த பெண்ணிற்கு உதவி செய்வதற்காக இருக்கட்டும், ஆனால் நேற்று கோவிலில் உரிமையுடன் குங்குமம் வைத்துவிட்டது, இன்று தன்னிடம் பேச முயற்சி செய்தது என்று கலங்கியவள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் நடந்தாள்.

வீட்டை வந்து அடைந்தவளுக்கு மீண்டும் மீண்டும் ஹர்ஷாவின் முகமே ஞாபகத்தில் வந்தது.

தன் மனதினை ஒரு முகப் படுத்த முடியாமல் தவித்தவள் மொட்டை மாடிக்கு வர, அங்கு யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அகில் அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்தவன் அருகில் வந்தான்.

அவள் வெகு அருகில் நிற்கவும் மனம் தடுமாறியவன் கடும் முயற்சி செய்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

"என்ன கனிகா? ஏதாவது பிரச்சனையா?" என்றான்...

"இல்லை அத்தான்.." என்று சட்டென்று பதில் சொன்னதில் இருந்தே அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று ஊகித்தவன்,

"இல்லையே, உன் வாய் தான் அப்படிச் சொல்கிறது, ஆனால் முகம் அப்படிச் சொல்லவில்லையே.." என்றான் சந்தேகக் கண்களுடன்.

"அப்படி ஒன்றும் இல்லை அத்தான், எனக்கு அம்மா ஞாபகம் வந்து விட்டது" என்று பொய் கூறியவள், மானசீகமாகத் தன் அன்னையிடம் மன்னிப்பும் வேண்டிக்கொண்டாள் பொய் சொன்னதற்காக.

அவளின் மன நிலை புரிந்தவனாக அவளின் கை பற்றியவன்,

"உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குப் புரிகிறது கனிகா. என் அம்மா கோவிலுக்குப் போய் விட்டுக் கொஞ்சம் லேட்டா வந்தாலே நாங்க பயந்துவிடுவோம், நீ இந்தச் சின்ன வயசில் இப்படி அத்தையை இழந்து நிற்கிறது எங்களுக்கும் கஷ்டமாகத் தான் இருக்கு, ஆனால் உனக்கு நாங்க எல்லாம் இருக்கிறோம். அதனால எதற்கும் கவலை படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து.." என்று கூறியவன், "கீழே வருகிறாயா?" என்றான்....

"இல்லை அத்தான் நீங்க போங்க, நான் கொஞ்சம் நேரம் சென்று வருகிறேன்.." என்று கூறினாள்.

அகில் சொன்னதில் எது மனதில் நின்றதோ இல்லையோ, படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்ற வார்த்தை நன்றாக ஏறியது.

நான் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும் என்பது தானே தன் அன்னையின் விருப்பம், அது தானே அவரின் கடைசி ஆசையும் கூட. அப்படி இருக்கும் பொழுது யாரென்றே தெரியாத ஒருவனைப் பற்றி நான் நினைத்து குழம்பிக் கொண்டிருப்பது தவறு என்று தோன்ற பெருமூச்சை வெளியிட்டவள் கீழே இறங்கி சென்றாள்.

இனி அவனைப் பற்றிய நினைப்பே கூடாது என்று எண்ணிக் கொண்டவளுக்குத் தெரியவில்லை, தன் வாழ்க்கை முழுவதும் அவனைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவள் நினைக்க அந்தக் கள்வன் விடப் போவதில்லை என்று.

மனதில் இருந்து அவனின் நினைப்பை சிரமப்பட்டு அகற்றியவள் கீழே எல்லோரிடமும் சகஜமாக இருக்க முயற்சி செய்ய, ஆனால் ஏதோ ஒன்று மீண்டும் மீண்டும் அவன் நினைப்பை அவளுக்குள் விதைத்தது...

அது வாழ்க்கையில் தான் இதுவரை கண்டிராத அவனின் கம்பீர அழகா? கல்லூரியில் அவனுக்கிருந்த மதிப்பும் பெருமையுமா? இல்லை அவனாக அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டதா? எது என்று தெரியவில்லை.

தலை வலிக்கும் அளவிற்கு யோசித்தவளுக்கு ஒரு நாள் தன் அன்னை சொன்னது ஞாபகம் வந்தது. தன்னுடைய லட்சியம் எவ்வாறு தன் கணவன் சுந்தரத்தின் அழகினால், அவனின் காதலினால் மாறிப்போனது என்று காமாட்சி கனிகாவிடம் அவ்வப் பொழுது சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒவ்வொரு முறை அவர் தன் கடந்தகால வாழ்க்கையையும் அதனால் நிகழ்காலத்தில் தான் அனுபவிக்கும் கொடுமையையும் பற்றி விளக்கும் பொழுதும் அவர் குறிப்பிட்டு கூறுவது, காமாட்சியின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்பிலும் வளர்ச்சியிலும் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்று.

தங்களின் வசதிக்கு மீறி கூடத் தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு என்று சேர்த்து வைக்க ஆரம்பித்து இருந்தார்கள், ஆனால் தன்னுடைய பாழாய்ப் போன காதலினால் அத்தனையும் மறந்து போய்ச் சுந்தரத்தின் பின் வந்தது, அதனால் தன் பெற்றோருக்கு எத்தனை அவமானம், ஏமாற்றம்...

அவர்களின் சாபமோ எதுவோ, தன் வாழ்க்கை பெரிய பாதாளத்தில் விழுந்தது போல் ஒவ்வொரு நாளும் அழுகையும் கொடுமையுமாகக் கழிந்தது என்று கூறிக் கூறியே காதல் எத்தனை ஆபத்தானது என்றும், படிப்பு எத்தனை முக்கியம் என்றும் அறிவுரை கூறி வளர்த்து வந்தார், கனிகாவை.
அது இப்பொழுது ஞாபகம் வர, மானசீகமாகத் தன் அன்னையிடம் மன்னிப்பு கேட்டவள், முடிந்தவரை தன் மனதினை ஒருமுகப்படுத்திக் கொண்டு தூங்கப் போனாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாது நாளையில் இருந்து ஹர்ஷா அவளைத் தூங்க விடப்போவது இல்லை என்று.

***********************************

மறு நாள் எழுந்தவள் ஏதோ படபடப்பாக இருக்க, மனதிற்குள் தன் அன்னையிடம், 'நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய மன உறுதியை கொடுங்கள் அம்மா' என்று வேண்டிக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்துத் தனக்குப் பிடித்த அடர்ந்த அரக்கு நிறத்தில் சந்தன நிற கரை போட்ட பாவடையும் சந்தன நிறத்தில் தாவணியையும் அணிந்தவள் ஈரக் கூந்தலை உளர்த்தி இரு பக்கமும் சிறிது முடியை எடுத்து நடுவில் சின்னப் பின்னல் போட்டு, அதில் நிகிலா கொண்டு வந்து கொடுத்த மல்லிகைச் சரத்தை சூடியவள், வழக்கம் போல் அரக்கு நிறத்தில் பொட்டு வைத்து அதன் கீழ் குங்குமத்தில் சிறு கோடு இழுக்கும் பொழுது அவளையும் அறியாமல் ஹர்ஷா அவளின் நெற்றியில் குங்குமம் வைத்தது நினைவிற்கு வந்து இம்சித்தது.

இனி வாழ் நாள் முழுமையும் அவனைப் பார்க்கக் கூடாது, அப்படியே பார்த்தாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகியே இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க, அங்கு ஹர்ஷாவோ அதற்கு நேர் எதிராக நினைத்துக் கொண்டிருந்தான்.

காலையில் எழுந்ததில் இருந்து கனிகாவைப் பார்க்க வேண்டும் போல் ஆவல் மனதை அரிக்க, வேகமாகக் குளித்து முடித்தவன், அரக்கு நிறத்தில் டி ஷெர்ட்டும் சந்தன நிறத்தில் ஜீன்ஸும் அணிந்து, ஸ்டெயிலாக வெட்டியிருந்த முடியை தூக்கி சீவியவன்,

'இன்று எப்படியும் தன் மனதில் உள்ளதை அவளிடம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும், என்னை வேண்டாம் என்று எந்தப் பெண்ணாவது சொல்வாளா' என்று இறுமாப்புடன் நினைத்தவன்,

'எப்பொழுது நான் உன்னைக் கண்டேனோ அப்பொழுதே நீ என்னவள், இனி வாழ் நாள் முழுவதும் நீ என்னை மட்டும் தான் நினைத்துக் கொண்டு எனக்காகவே வாழ வேண்டும்' என்று நினைத்துக் கொண்டவன் தன் அன்னை சாப்பிட அழைத்ததைக் கூடக் காதில் வாங்காது தன் காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தான்.

தொடரும்...
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top