JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 7

JLine

Moderator
Staff member

அத்தியாயம் 7

மதியம் கல்லூரியின் உணவு இடைவேளையில் தன் டிபார்ட்மெண்ட் கட்டிடத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தினடியில் அமர்ந்து வகுப்புக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தவள் தன் அருகில் நிழலாடவும் நிமிர்ந்தவள் அங்கு நின்றுக் கொண்டிருந்தவளின் அழகில் ஒரு நிமிடம் மதி மயங்கிப் போனாள்.

பிங் நிற டாப்ஸும், அடர் நீல நிற ஜீன்ஸும் அனிந்து தலை முடியை லூசாக விட்டு ஒயிலாக நின்றிருந்த ரியா, கனிகாவையே உறுத்துப் பார்த்திருக்க, 'யார் இவங்க? எதற்கு நம்மளையே இப்படிப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்?' என்று நினைத்தவள் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூக்க, "ஆர் யூ கனிகா?" என்றாள் ரியா.

'இவர்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்?' என்று யோசித்தவள் பதில் ஒன்றும் கூறாமல் 'ஆமாம்' என்பது போல் தலையை மட்டும் அசைக்க,

"உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றாள் ரியா.

அப்பொழுதும் ஒன்றும் பேசாமல் ரியாவையே பார்த்திருந்த கனிகாவின் அருகில் அமர்ந்தவள்,

"டு யூ நோ ஹர்ஷா? ஹேவ் யூ கைஸ் மெட் பிஃபோர் [Do you know Harsha? Have you guys met before?]" என்று ஆங்கிலத்தில் கேட்க, அவள் பேசியது அனைத்தும் புரியாவிட்டாலும் ஹர்ஷா என்ற அந்த மூன்றெழுத்து வார்த்தை மட்டும் நன்கு புரிய, திருதிருவென்று விழித்தவளைப் பார்த்த ரியாவிற்கு எரிச்சலாக இருந்தது.

"உனக்கு ஹர்ஷாவை ஏற்கனவே தெரியுமா?? உங்களுக்கு இதற்கு முன்னயே பழக்கமா?" என்று மீண்டும் தமிழில் கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை கனிகாவிற்கு..

'முன்னமே தெரியுமா என்றால் இந்தக் காலேஜில் சேர்வதற்கு முன்னரே தெரியுமா என்றா கேட்கிறார்' என்று யோசித்தவள் 'இல்லை' என்பது போல் மௌனமாகத் தலை அசைக்க, எரிச்சலின் உச்சத்திற்கே போன ரியா,

"ஹேய், என்ன வாய் திறந்து பதில் சொல்லமாட்டியா?" என்று அடிக்குரலில் கூற, திக்கென்றது கனிகாவிற்கு.

"இல்லைக்கா, எனக்கு அவரை முன்னமே தெரியாது..."

"என்னது அக்காவா?" என்றவள்,

"அவரை முன்னமே தெரியாது என்றால் இப்பொழுது தெரியுமா? " என்று வெடுக்கென்று கேட்க, இதற்குப் பதில் சொல்லாமல் பேசாமல் இருந்து விடுவதே நல்லது என்று தோன்றியது கனிகாவிற்கு.

மீண்டும் மௌனமானவளை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள்,

"சரி, அது இருக்கட்டும், எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும்" என்றாள்.

ஹர்ஷாவை பார்த்த நாள் முதல் ரியா அவனைக் கவனித்து வருகிறாள்.

அவனைக் கண்ட முதல் நாளே தன் மனதை அவனிடம் பறி கொடுத்தவள் அவன் எத்தனையோ தடவை அவளை எடுத்தெறிந்து பேசியும் அவமானப் படுத்தியும் விடாப்பிடியாக அவனைத் தொடர்ந்து கொண்டிருப்பவள்.

இப்படி இருக்க, தன் தோழர்கள் மூலம் ஹர்ஷா யாரோ ஒரு பெண்ணிடம் பேருந்தில் நெருங்கி அமர்ந்து பேசியதை கேள்விப்பட்டதில் இருந்து மனம் உலையாகக் கொதிக்க ஆரம்பித்து இருந்தது.

ஒரு வேளை அந்தப் பெண் தன்னை விடப் பேரழகியோ என்று தடுமாறியவள், அவள் பெயர் கனிகா என்றும், முதலாம் ஆண்டுப் படிக்கிறாள் என்றும் தன் தோழர்கள் மூலம் விசாரித்துத் தெரிந்துக் கொண்டவள் கனிகாவை சந்திக்கக் காத்துக் கொண்டு இருக்க, முதல் நாள் மாலையில் ஹர்ஷாவை நண்பர்களுடன் பார்த்தவள் ஆவலுடன் மீண்டும் அவனிடம் பேச அவனை நோக்கி வர, அப்பொழுது தான் கவனித்தாள்..

என்றும் இல்லாமல் முதன் முறையாக ஹர்ஷா ஒரு பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதை..

பார்த்த விநாடி ஆச்சரியப்பட்டுப் போனாள்.

'அப்படி என்ன இருக்கிறது இவளிடம்? பார்க்க சின்னப் பெண்ணாக இருக்கிறாள், சரியான பட்டிக்காட்டுப் பெண், ரொம்பப் பெரிய அழகியும் கூட இல்லை, அதுவும் ஹர்ஷாவின் அருகில் நிற்க கூடத் தகுதியற்றவள், இவளைப் போய் ஹர்ஷாவிற்குப் பிடித்திருப்பதாக அந்தக் கடவுளே கூறினால் கூட நம்ப முடியாது' என்று இறுமாப்புடன் இருந்தவளுக்கு எப்படிப் புரியும் கனிகாவின் அழகு.

இயற்கையிலேயே அமைந்திருந்த வில் போன்ற புருவமும், சிறிய நெற்றியும், அதில் எப்பொழுதும் விழுந்திருக்கும் முன்னுச்சி முடியும், வட்டமான முகத்தில் அகன்ற மருண்ட மான் போன்ற விழிகளும், செயற்கையான எந்த வண்ண சாயமும் பூசாத செதுக்கிய இதழ்களும், அந்த அம்பாளே நேரில் வந்தது போன்று இருக்கும் அத்தனை களையான முகமும்..

பார்த்த அந்த ஒரே விநாடியில் ஹர்ஷாவை வீழ்த்தியது இந்த அமைதியான, அடக்கமான, குழந்தைத் தனமான அழகு தான் என்று.

நவநாகரிக மங்கையான ரியாவிற்கு, மாடர்ன் உடைகளும், விரித்து விட்ட கூந்தலும், மேக்கப்பில் ஒளிரும் முகமும் தான் அழகு தருவதாக நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு, ஆண்களுக்குக் கனிகாவைப் போன்ற குடும்பப் பாங்கான பெண்களைத் தான் மிகவும் பிடிக்கும் என்று எப்படித் தெரியும்?

இது புரியாமல் முட்டாள்தனமாகக் கனிகாவை வைத்தே தன் காரியத்தைச் சாதிக்க நினைத்தவள், கனிகா சென்றால் நிச்சயம் ஹர்ஷா பொறுமையாக நடந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் கனிகாவிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள்.

என்ன இது என்பது போல் விழித்தவளிடம்,

"இதைப் போய் ஹர்ஷாவிடம் கொடு.." என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கி அந்தச் சின்னப் பெண்ணின் தலையில் போட்டாள்.

ஹர்ஷாவின் நிழலைக் கண்டாலே பயந்துப் போகிறவள் கனிகா, அவனைத் தானாகச் சென்று நேராகச் சந்தித்துப் பின் இந்தக் கடிதத்தைக் கொடுப்பதா, 'ஐயோ! இதென்ன இது, என் நேரமே சரியில்லை போல' என்று கலங்கியவள்

"எ....எ....எனக்கு ப...ப....பயமாயிருக்கு..." என்றாள் திக்கித் திணறி...

"என்னது பயமாக இருக்கா? நீயா லெட்டர் எழுதினே, நான் தானே எழுதியிருக்கேன், நீ ஜஸ்ட் போய்க் கொடுத்துவிட்டு வந்து அவன் என்ன சொன்னான் என்று மட்டும் சொல்லு,,,,போதும்..போ.." என்றவள் அவளின் கையில் கடிதத்தைத் திணிக்க, கனிகாவிற்குத் தலை சுற்றி கீழே விழுந்துவிடுவது போல் இருந்தது.

நேற்று தான் இளாவும், ஆஷாவும் அவ்வளவு அறிவுரைக் கூறியிருந்தார்கள், அது முதல் அவனைப் பார்க்க கூடாது என்று எத்தனை பிரயாசைப் பட்டு மனதினை கட்டுப்படுத்தி வைத்திருந்தால், இவர்கள் யார்? திடீரென்று நீ கொடுத்தால் அவன் ஒன்றும் சொல்லமாட்டான் என்று சொல்லி ஒரு லெட்டரை இப்படித் தன் கையில் திணிக்கிறார்கள் என்று பீதி அடைந்து அந்த இடத்தை விட்டு நகராமல் இருக்க, கனிகாவின் தோளில் கை வைத்து தள்ளிய ரியா,

"இன்னும் என்ன யோசனை...போ.." என்று பிடித்துத் தள்ளினாள்.

"அ...அ...அவங்க எ...எ...எங்க இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது..." என்று தடுமாறிய கனிகாவை வெறுப்புடன் பார்த்தவள் 'அவங்களாம் அவங்க..' என்று மனதிற்குள் உறுமியவள்,

"அவன் ஃப்ரெண்ட்ஸோடு AKV ஆடிட்டோரியத்தில் தான் இருக்கிறான்...போ..." என்றாள் பற்களைக் கடித்தவாறே.

"அது எங்கு இருக்கு?" என்று மீண்டும் சன்னமான குரலில் கனிகா வினவ, கிழிந்தது என்று நினைத்தவள்,

"கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட் பக்கத்தில் இருக்கும் பில்டிங்தான்.... போ.." என்றாள்.

சரி வேறு வழியில்லை என்று நினைத்த கனிகா வழியில் வந்த மாணவியிடம் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட் எங்கிருக்கு, AKV ஆடிட்டோரியம் எங்கு இருக்கு என்று விசாரித்தவாறே ஒரு வழியாக ஆடிட்டோரியத்தை அடைந்தாள்.

வாசல் வரை வந்தவளுக்கு உள்ளே செல்லும் தைரியம் வர இல்லை, குழம்பிய முகத்துடனும், கலக்கத்துடனும் ஆடிட்டோரியத்தின் வாசல் கதவைப் பார்த்த படியே நின்றிருந்தவளை, ஆடிட்டோரியத்தின் வெளியே வந்த ஹர்ஷாவின் தோழன்..

"ஹே, நீயா....நீங்களா?" என்று தடுமாறியவன், "என்ன வேண்டும்?" என்றான்.

"நா...நா...நான் அவரைப் பார்க்கணும்.." என்று குரல் நடுங்க கூறியவளை உற்றுப் பார்த்தவன்,

"யாரை? என்றான்.

"அவரை.." என்றாள் திரும்பவும்...

அவள் யாரை சொல்கிறாள் என்று தெரிந்து இருந்தும் மறுபடியும்..

"அவர் என்றால், அவருக்குப் பெயர் இல்லையா?" என்று சற்றுச் சத்தமான குரலில் கேட்க, கனிகாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தவளை இன்னும் அதட்டினால் நிச்சயம் அழுதுவிடுவாள், அப்புறம் ஹர்ஷா நம்மைத் தொலைத்தான் என்று எண்ணியவன், கதவை நன்றாகத் திறந்து, "உள்ள இருக்கான்...போங்க.." என்றான்.

சரி என்று தலை அசைத்தவள் மெதுவாக உள்ளே நுழைய, அங்கே ஒரு சிறு குழுவாக அமர்ந்து நண்பர்களுடன் எதனைப் பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த ஹர்ஷா கண்களில் பட்டான்.

அவன் நடுநாயகமாக அமர்ந்து அமர்த்தலான குரலில், ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு நாம் என்ன தைரியத்தில் இவரைப் பார்க்க இங்க வந்திருக்கிறோம் என்றே தோன்றியது, ஆனால் அதே சமயம் லெட்டரை அவரிடம் கொடுக்கவில்லை என்றால், அந்த ரியா நம்மைத் தொலைத்துவிடுவாள் என்று தோன்ற வேறு வழியில்லாமல் உள்ளே நுழைந்தாள்.

வந்தவள் ஒன்றும் பேசாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருக்க, ஹர்ஷாவின் இன்னொரு தோழன் அவளைப் பார்த்தவன், ஹர்ஷாவை தொட்டு கனிகா நின்ற திசையைக் காண்பிக்க, என்னவோ என்று திரும்பி பார்த்த ஹர்ஷாவின் கண்களில் அமைதியாகத் தலை குனிந்து நிற்கும் கனிகா பட, தன்னைத் தானாகத் தேடி வந்திருக்கும் தன்னவளை நினைத்து மனம் கரும்பாய் இனித்தது....

எதுவும் பேசாமல் சில விநாடிகள் அவன் அமைதியாக இருக்க, அந்த அறையில் நிலவிய நிசப்தம் கனிகாவிற்கு மேலும் அச்சத்தைக் கூட்ட, நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தெரிந்த பயமும், அவனைப் பார்த்தவுடன் செய்வதறியாது கையில் இருந்த கடிதத்தை மீண்டும் குனிந்து பார்த்தவளின் படபடப்பும் புரிந்தவன், 'வா' என்று தலையை மட்டும் அசைத்தான்.

அவனை நோக்கி மெதுவாக நடந்து வந்தவள் அவன் அருகில் வந்ததும் கையில் இருந்த கடிதத்தை நீட்ட, ஒன்றும் புரியாமல் குழம்பியவன், "என்ன இது?" என்று வினவ,

"அ...அ...அந்தக்கா கொ....கொ...கொடுக்கச் சொன்னார்கள்.." என்று தாழ்குரலில் கூற,

குழப்பத்துடன் அவளைப் பார்த்து விட்டு, "என் பின்னாடி வா" என்று மட்டும் கூறியவன் அவர்கள் இருந்த ஆடிட்டோரியத்தின் பின்னால் இருந்த அறையை நோக்கி நடந்தான்.

ஒன்றும் பேசாமல் அவன் பின் அமைதியாக அவள் போவதை பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவின் நண்பர்கள் தங்களுக்குள் களுக்கென்று சிரித்துக் கொண்டார்கள்.

அறையை அடைந்தவன் அவள் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்த, இதனை எதிர்பார்க்காததால் இதயம் தடதடக்க ஆரம்பித்தது கனிகாவிற்கு...

கதவை சாத்தியவன் அவளுக்கு வெகு அருகில் வந்து நிற்க, அவனின் பருகிவிடும் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று அவளது உடலில் ஒரு வித நடுக்கத்தைக் கொடுக்க, இதோ வந்து விடுகிறேன் என்று மிரட்டிய கண்ணீரை உதட்டை கடித்து அடக்க முற்பட்டும் தோற்றுப் போய்ப் பொல பொலெவென்று கண்ணீர் வழிந்தது.

அவள் நடுங்குவதையும், தான் நெருங்கி வந்ததும் உதடு கடித்து அழுகையை அடக்க முற்பட்டு தோற்று அழுததையும் பார்த்தவனுக்கு அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் ஒரு உணர்வு தோன்ற, இன்னும் நெருங்கி நின்றவன்,

"இப்போ சொல்லு, யார்? எந்த அக்கா? என்ன கொடுக்கச் சொன்னார்கள்?" என்றான்.

தன்னை நெருங்கி நின்றிருந்தவனின் அருகாமை, அவனின் வாசம், இறுகிப் படர்ந்திருந்த தோள்கள், அசாத்திய உயரம், மயக்கும் கூர்மையான பார்வை, ஆண்மையின் கம்பீரம் என்று எல்லாம் சேர்ந்து அவள் வாயைப் பூட்டியிருக்க, அவளின் உள்ளுணர்வுகளைப் படித்தவன் போல் இன்னும் அவளை நெருங்கியவன் அவள் கையில் இருந்த கடிதத்தை வாங்கினான்.

வாங்கும் பொழுது அவன் விரல்கள் அவளின் விரல்களை உரச, முதன் முதலாக அந்நிய ஆணின் இந்த மென்மையான தொட்டும் தொடாமல் பட்ட ஸ்பரிஸம் மனதிற்குள் தீ மூட்ட, அவளுக்குள் எழுந்த இது போன்ற உணர்வை அவள் இது வரை உணர்ந்தது இல்லை.

அவள் முகத்தைப் பார்த்தவாறே கடிதத்தை வாங்கியவன் தன் விரல் பட்டதும் அவளிடம் தென்பட்ட தடுமாற்றத்தையும், செந்தணலாக மாறிய முகத்தில் தோன்றிய வெட்கத்தையும் தன் ஆழ் மனதில் சேர்த்து வைத்தவன் அவளை இரசித்தபடியே கடிதத்தைப் பிரித்தான்.

முதல் வரியைப் படித்தவுடனே தெரிந்து போனது அது காதல் கடிதம் என்று, அதற்கு மேல் கடிதத்தைப் படிக்காமல் கீழே போட்டிருந்த கையெழுத்தை மட்டும் பார்த்தவன்,

"இது என்ன லெட்டர் தெரியுமா?" என்றான்.

ஒன்றும் பேசாமல் தலை குனிந்தவளின் முன் குனிந்தவன், ஒற்றை விரலால் அவள் தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவன்,

"இது லவ் லெட்டர்.. யார் என்ன கொடுத்தாலும் வாங்கிட்டு வந்திடுவியா?" எனவும், 'இல்லை' என்பது போல் தலை அசைத்தவளின் கண்களை ஊடுருவிப் பார்த்தவன், அழுத்தமான குரலில், "நான் அவளை லவ் பண்ணட்டுமா?" என்றான்.

இரு கண்களிலும் கண்ணீர் துளிகள் பவழங்களாய் பளபளக்க இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவனையே பார்த்திருந்தவள் அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் தலையைக் குனிய முயற்சிக்க, ஏற்கனவே தன் ஒற்றை விரலால் அவளின் தாடையைப் பிடித்திருந்தவன் அவள் குனியாமல் இருக்க இன்னும் முகத்தை அழுத்தி நிமிர்த்த, அத்தனை நெருக்கத்தில் அவன் முகத்தைப் பார்த்ததும், அழகும் கம்பீரமுமாய் இருந்த அவனின் உருவம் அவளது நெஞ்சை ஊடுருவி இதயத்தில் அழுத்தமாகப் பசை போட்டது போல் ஒட்டி கொண்டது.

அவளது தடுமாற்றத்தையும் தவிப்பையும் கண்டவனுக்கு அவளின் மனமும் புரிபட,

"ஏன்டி அன்னைக்குப் பஸ்டாண்டுக்கு வர சொன்னப்போ வரலை?" என்று ஒரு வழியாக இத்தனை நாள் அவள் எதிர்பார்த்திருந்த கேள்வியை அவன் கேட்க, திக்கென்றது அவளுக்கு....

முகம் கசங்க, கண்களில் திரையிட்டிருந்த நீரோடு கலவரத்துடன் அவனையே பார்த்திருக்க, அவளின் அகன்ற விழிகள் தன்னை அடியோடு வீழ்த்துவதைச் சுகமாய் உணர்ந்தவன் அவளை நோக்கி குனிந்து,

"இந்தக் கண்ணு தான்டி என்னை இழுக்குது.." என்றான் ரகசிய குரலில்.

"சரி, சொல்லு.. ஏன் அன்னைக்கு நான் அத்தனை சொல்லியும் வரவில்லை? உனக்குத் தெரியும் இல்ல, நான் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன் என்று. ஏன் என்னைய ஏமாத்தின?" என்று மறுபடியும் வினவ, என்ன பதில் சொல்வாள்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், 'ஐயோ... கடவுளே.... இவர் இப்படிக் கேட்பார் என்று தெரிந்து தான் இத்தனை நாட்களாக என்ன பதில் சொல்வது என்று பல காரணங்களை நினைத்திருந்தேன். ஆனால் இவர் இத்தனை நெருக்கத்தில் நின்று இப்படிக் கேட்டால் என்ன சொல்வது? அவர் கண்களைப் பார்த்தாலே, எனக்கு இந்த உலகமே மறந்து போகிறது..... இதில் நான் எப்படிப் பேசுவேன்?' என்று நாக்கு உலர்ந்து போய், மூளை மரத்துப் போய் நின்றவளின் உணர்வுகளைப் படித்தவனின் மனசாட்சி 'அவள் வராததற்குக் காரணம் அவள் பயந்த சுபாவம் தான் என்று உனக்குத் தான் ஏற்கனவே தெரியுமே, திரும்ப அதையே கேட்டு ஏன் அவளை இன்னும் கஷ்டப்படுத்துகிறாய்..' என்று எடுத்துரைக்க,

"சரி, அதை விடு, ஆனால் ஃப்ரம் டுடே....அதாவது இன்றையில் இருந்து, நீ, நான் சொல்றத மட்டும் தான் கேட்கணும்.. நான் சொல்றத மட்டும் தான் செய்யணும்..மத்தவங்க சொல்றத இல்லை.." என்று சொல்லும் பொழுதே 'மட்டும்' என்ற வார்த்தையில் அழுத்தத்தைக் கூட்டி சொல்ல, 'சரி' என்பது போல் தலை அசைத்தாள்.

"சரி வா, இவ்வளவு நேரம் இங்கிருந்ததற்கே பசங்க கிண்டல் பண்ணுவாங்க.." என்று கூறியவாறே முன் நடந்தவன் கதவை திறந்து வெளியில் செல்ல, அவனைப் பின் தொடர்ந்தவளை திரும்பிப் பார்த்தவன், "சரி நீ க்ளாஸிற்குப் போ.." என்றான்.

அவள் ஆடிட்டோரியத்தின் வாசலை நோக்கி நடக்க, தன் நண்பர்களிடம் சென்றவன் அவர்களைப் பார்த்துக் கண் சிமிட்ட, அங்கு நடப்பதை வாயைப் பிளந்து கொண்டு பார்த்தவாறே அமர்ந்து இருந்தார்கள் அவன் நண்பர்கள்.

எதனையோ யோசித்தவன் திடீரென்று திரும்பி, "கனி, நில்லு" என்றவன், அவள் அருகில் சென்று,

"அந்த ரியா கேட்டால் என்ன சொல்வ?" என்க,

திருதிருவென்று முழித்தவளைப் பார்த்தவன், அவள் கையில் இருந்த கடிதத்தை வாங்கிக் கிழித்து,

"இதைப் போய் அவள் கிட்ட கொடுத்துட்டு அப்புறம் க்ளாஸிற்குப் போ..." என்றான்.

'போச்சு, இப்போ அந்த ரியா தாம் தூம் என்று குதிக்கப் போகிறாள்' என்று நினைத்தவளுக்குப் பயம் கவ்வி கொள்ள மெதுவே,

"எ...எ....எனக்கு பயமா இருக்குங்க..." என்றாள்.

"ஏன்? ரியாவைப் பார்த்தா?" என்று கேட்க, ஆம் என்று தலை அசைத்தவளின் அருகில் நெருங்கியவன், அவள் நெற்றியில் புரண்டிருந்த முன்னுச்சி முடியை மெல்ல விரலால் சுருட்டியவன், அதனை அவள் காதில் பின் பகுதியில் சொறுகிக் கொண்டே, "பயப்படாதே, நான் இருக்கேன்" என்றவனை இன்னும் அகன்ற விழிகளில் பார்க்க,

"இங்க பாரு கனி.. நான் உனக்கு, உனக்கு மட்டும் தான்.. அதனால ரியாவோ அல்லது வேற யாரோ எது சொன்னாலும், அல்லது இது மாதிரி எது கொடுத்தாலும் வாங்காத.." என்றவன் அவள் கன்னத்தைத் தட்ட, மெலிதாகப் புன்னகை உதிர்த்தவள் சரி என்பது போல் தலை அசைத்து வெளியில் சென்றாள். அவள் வெளியில் செல்லும் வரை அவளையே பார்த்திருந்தவனுக்குக் குழப்பமாக இருந்தது.

'ஏன் ரியா கனிகாவிடம் லெட்டர் கொடுத்து விட்டாள்? அவளுக்குக் கனிகாவைப் பற்றி என்ன தெரியும், கனிகாவிற்கு அவளால் ஏதும் ஆபத்து வருமோ..' என்று குழம்பியாவாறே நண்பர்களிடம் வர, அவர்கள் "ஓஓஓஒ ஹோஓஓஓ" என்று கத்தினார்கள்.

சிரித்தவனிடம், "ஹர்ஷா, என்ன இது?" எனவும்,

"ஐ ஹேவ் ஆல் ரெடி டோல்ட் யூ கைஸ், ரைட்? ஐ வில் ஷோ யூ ஆல் வென் ஐ மீட் மை லவ்...திஸ் இஸ் ஷி...ஷி பிலாங்ஸ் டு மீ [I have already told you guys, right? I will show you all when i meet my love..this is she...she belongs to me]" என்றான்.

அவர்கள் ஒருவொருக்கொருவர் திரும்பி பார்த்துக் கொண்டவர்கள்,

"ஹர்ஷா, ஷி இஸ் ப்ரிட்டி, சாமி சிலை மாதிரி தான் இருக்காங்க, அதுல ஒண்ணும் டவுட் இல்லை, பட், உன்னோட வசதிக்கு கம்பேர் பண்ணும் போது...." என்று இழுக்க,

"ஷி இஸ் மை லவ்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எப்போ அவளைப் பார்த்தேனோ அப்பொழுதே அவள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன், அவ எனக்குத் தான், நான் அவளுக்குத் தான், ஸோ, எனக்கு அவ வசதியப் பத்தி கவலை இல்லை..." என்று அழுத்தமாகக் கூறினான்.

ஹர்ஷாவின் பிடிவாதமும் அழுத்தமும் எல்லோரும் அறிந்ததே, ஆகையால் அவன் பேச்சிற்கு மறுபேச்சு அங்கு எழவில்லை.

***************************

வெளியில் வந்த கனிகாவிற்கு நடப்பது எல்லாம் கனவுகளுக்கும் அப்பாற்பட்டதாகவே தோன்றியது. ஹர்ஷா தன்னிடம் பேசியது நிஜமா? அவர் தன்னைத் தொட்டது நிஜமா? நான் அவருக்குத் தான், அவர் எனக்குத் தான் என்று சொன்னது நிஜமா? ஏதோ கனவு போல் இருக்கிறதே....

பிறந்ததில் இருந்து வறுமையை மட்டுமே பார்த்திருந்தவளுக்கு, தன் அன்னை இறந்ததும், பின் சென்னைக்கு வந்ததும், வந்த இடத்தில் ஹர்ஷாவைப் போல் ஒரு பேரழகனைப் பார்த்ததும், அவன், அவள் மேல் காதல் கொண்டிருப்பதும் ஆச்சர்யத்திலும் ஆச்சரியமாக இருந்தது.

இவ்வளவு பிரபலமாக இருப்பவர், கல்லூரி முழுக்க அழகிகளும் பேரழகிகளும் அவர் ஒரு பார்வைக்காக வருடக்கணக்காகக் காத்திருக்க, எது அவரைத் தன்பால் ஈர்த்தது, தன்னிடம் உள்ள எது அவரைப் பார்த்தவுடன் தன்னைக் காதலிக்க வைத்தது என்று யோசித்துக் கொண்டே வந்தவளுக்கு அவன் முதன் முதலில் அவளைப் பார்த்த நாள் ஞாபகம் வந்தது.

கீழே தரையில் விழுந்திருக்க, கண்களில் கண்ணீரோடு அழுத முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க, சரியான உடை கூட அன்று அணியவில்லையே என்று யோசித்தவள் குனிந்து தன்னைப் பார்க்க, ஏன் இன்று கூடத் தான் நல்ல உடை அணியவில்லை, என்றைக்குத் தான் நல்லதாக அணிந்து இருக்கிறோம்? என்னிடம் இருப்பதே கொஞ்சம் தானே....அப்படி இருந்தும் எப்படி அவருக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது...அதுவும் நீ எனக்குத் தான்...நான் உனக்கு மட்டும் தான் என்று சொன்னாரே...என்று மனம் முழுக்க அவனையே நினைத்திருந்தவளுக்கு அவள் அன்னை சொன்னது மறந்து போனது, அவள் தோழிகள் சொன்னது மறந்து போனது...அவள் உடல் பொருள் ஆவி என்று அனைத்திலும் நிறைந்திருந்தது ஹர்ஷாவைப் பற்றிய நினைவுகளே...

பலத்த யோசனையில் நடந்து வந்தவள் தன்னை அறியாமல் ரியா இருந்த இடத்திற்கு வர "கனிகா!" என்ற ரியாவின் குரல் அவளைப் பூமிக்கு அழைத்து வந்தது.

அதற்குள் அவள் கைகளில் இருந்த கிழிந்த காகித துண்டுகள் ரியாவின் கண்களில் பட, அவளுக்குப் புரிந்து போனது ஆடிட்டோரியத்தில் என்ன நடந்திருக்கும் என்று.

கனிகாவின் முகத்தில் அவளையும் அறியாமல் தெரிந்த பூரிப்பை பார்த்தவள்,

"ரொம்பக் கனவுல மிதக்கிற போல, இனி நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கிறது நல்லது.." என்றவள் அவள் கைகளில் இருந்து காகித துண்டுகளை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவள் எச்சரிப்பது போல் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று கனிகாவிற்குப் புரியவில்லை..

ஒரு வேளை புரிந்திருந்தால் பின்னாளில் நடக்க இருந்த அந்த அசம்பாவிதம் நடக்காமல் எச்சரிக்கையாக இருந்திருப்பாளோ என்னவோ!

தொடரும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top