JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episodes 21 & 22

JB

Administrator
Staff member
அத்தியாயம் 21


அவன் அருகில் சிதம்பரமும் சங்கீதாவும் நிற்க, அங்கு ஒரு அழகான மணமேடை அலங்கரிக்கப்பட்டு ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடாகியிருக்க, நடப்பதை, நடக்க போவதை ஒரு நொடியில் புரிந்து கொண்ட அனைவரும் கனிகாவை திரும்பி பார்க்க, ஸ்தம்பித்து இமைகளை கூட சிமிட்டாமல் நின்றிருந்தவளின் அருகில் அழுத்தமான காலடிகளுடன் வந்தான் ஹர்ஷா.


அவன் அருகில் வரவும் சட்டென்று திரும்பி நடக்க முயன்றவளின் வலக்கரத்தை இறுக்க பற்றியவன், "கனி, உன்னுடன் கொஞ்சம் தனியா பேசணும், வா..." என்றான்.


அவன் தன் கரத்தை இறுக்க பற்றியிருந்த விதத்திலேயே அவள் வராவிட்டால் நடப்பதே வேறு என்ற தொனி தெரிய வேறு வழியில்லாமல் படபடக்கும் இதயத்துடனும் அச்சத்துடனும் அவளை பின் தொடர்ந்தாள்.


அவளைப் பிடித்திருந்த அவளின் கரத்தின் நடுக்கத்தில் அவள் எந்த அளவிற்கு பயந்திருக்கிறாள் என்று உணர்ந்துக் கொண்டவன், 'உன்னோட இந்த பயம் தாண்டி என்னோட பலமே..' என்று மனதிற்கு நினைத்துக் கொண்டு புன்முறுவல் பூத்தவன் யாரும் இல்லாத அந்த வெற்றிடத்திற்கு வந்ததும் அவள் கையில் தான் வைத்திருந்த ஒரு பையை நீட்டினான்.


என்ன என்று விழித்தவளை கண்டு சிரித்தவன்,


"இதில் சில்க் ஸாரி, ஜ்வெல்ஸ் எல்லாம் இருக்கு... போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா..." என்றான்.


திடுக்கென்று இருக்க அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு எத்தனை எத்தனை முறை தன் இதயம் அடிபட்டு வலியால் துடிக்கிறது, அதன் வலியை இவர் உணரவே மாட்டாரா? அல்ல உணர்ந்தும் திருந்தவில்லையா? என்பது போல் இருக்க மனம் அதீத சோர்வடைந்தது.

.
இருந்தும் இத்திருமணத்தை நடத்த விடக்கூடாது என்று முடிவெடுத்தவள் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "எதற்கு?" என்றாள்.


"ம்ம்ம்ம், இன்னைக்கு நமக்கு கல்யாணம்... போ, எதுவும் கேள்வி கேட்டுட்டு இருக்காம போய் சொன்னதை செய்..."


"இல்லை, எனக்கு இதில் சம்மதம் இல்லை... நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன் இல்லை, நீங்க வேற ஒரு பொண்ண..." என்று முடிக்கவில்லை, அவளை பிடித்திருந்த கரத்தை சுண்டி இழுக்க அவன் மேல் மோதி தடுமாறியவள் அவன் சட்டையை பிடித்து தன்னை நிலைக்கு கொண்டு வந்தவள் அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தை பார்த்து குலை நடுங்கி போனாள்.



"கனி, இன்னொரு தடவை வேற பொண்ணு அப்படி இப்படின்னு பேசினா அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.... இங்க பாரு.. ஏற்கனவே உங்க அப்பாக்கிட்ட பேசியாச்சு, எல்லாரும் தெரிஞ்சு தான் இங்க வந்திருக்காங்க... இன்னக்கு நமக்கு கல்யாணம்... நான் உயிரோடு இருக்கும் வரை இனி நீ என் கூடத் தான் இருக்கணும்.. என்னோட மனைவியா... உன்னை முதன் முதலா பார்த்த அன்னைக்கே எனக்கு நானே சத்தியம் பண்ணிக்கிட்டேன், வாழ்ந்தால் உன் கூடத் தான் வாழணும்னு... இப்பவும் அந்த சத்தியத்தை காப்பாத்தத் தான் இவ்வளவு போராடிக்கிட்டு இருக்கேன்... எல்லோருக்கும் முன்னாடி என்னையும் நம் குடும்பத்தையும் அவமானப்படுத்திவிடாத...." என்றவன் அவளை மேலும் இறுக்கி,



"உனக்கு என்னோட பிடிவாதம் நல்லா தெரியும்... நீ இப்போ இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கலைன்னா இங்க என்ன நடக்கும்னு என்னால சொல்ல முடியாது..." என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கடித்து துப்பியவன் அவளின் கைகளில் பையை திணிக்க, ஏற்கனவே சிவந்த அவன் முகம் கோபத்தில் இன்னும் சிவந்திருப்பதைக் கண்டு நடுங்கியவள் சிலையாக நிற்க, எரிச்சல் அடைந்தவன் வேறு வழியில்லாமல் அகிலின் அலைபேசிக்கு அழைத்தான்.



அவர்களிடம் வந்த அகிலிற்கு அவர்கள் நின்றிருந்த விதமே சூழ்நிலையை விளக்கியது.




அவனுக்கு கனிகாவின் மன நிலையும் புரியும், ஹர்ஷாவின் நிலமையும் புரியும்... ஆனால் ஹர்ஷா இல்லை எனில் இவளுக்கு வாழ்க்கை இல்லை... நிச்சயம் ஹர்ஷாவை மறந்துவிட்டு இவளால் வாழ முடியாது.




அதனை இந்த மூன்று வருடங்களில் கண்கூடாகப் பார்த்தவனாயிற்றே.




அதே சமயம் ஹர்ஷாவின் பிடிவாத குணமும், ஆளுமையும் இன்னொரு ஏமாற்றத்தை தாங்கி கொள்ளாது... ஒரு வேளை இவள் சம்மதிக்காத கோபத்தில் இவளை விட்டு மீண்டும் தூர சென்று விட்டால் இவளின் நிலைமை.




அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் இன்று திருமணம் நடக்காவிட்டால் அது கனிகாவிற்கு ஒரு பெரும் இழப்பை கொண்டு வரும் என்று தவித்தான்.




இவர்களின் காதல் விளையாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு சிக்கலிலும் இவர்கள் அறியாமல் இவனையும் இழுத்து விட்டு விதி வேடிக்கை பார்க்கின்றதே.



இனியும் அவனால் கனிகா படும் துன்பத்தை பார்க்க முடியாது.. ஒரு முடிவோடும் அதே சமயம் கனிவுடன் கனிகாவை நோக்கிய அகில்.



"கனிகா, உனக்கு இது அதிர்ச்சியா தான் இருக்கும்னு எனக்கு தெரியும்... ஆனால் உன்னோட நிலைமையை மட்டும் நினைச்சுக்கிட்டு முடியாதுன்னு சொல்லிடாத... எங்களை எல்லாம் பாரு... உங்க அம்மா இருந்தவரை உன் அப்பா எப்படி இருந்தார்னு உனக்கு தெரியும், ஆனால் அவங்க இறந்த பிறகு அவரு தான் குடிக்கறதையே விட்டுட்டு நீ மட்டும் தான் உலகம்னு மாறிட்டார்... நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சப்ப அவரு எனக்கு தான் ஃபோன் பண்ணினாரு... அப்போ அவரு எவ்வளவு துடிச்சு போனாரு தெரியுமா..."



"உன் மனசில் என்ன இருக்குன்னே தெரிஞ்சுக்க முடியாம அவரு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்... இப்போ உனக்கும் ஹர்ஷாவிற்கும் கல்யாணம் அரேஞ்ச் பண்ணிருக்கோம்னு சொன்னவுடனே அவருக்கு அவ்வளவு நிம்மதி... ப்ளீஸ் கனிகா அவரையும் நினைச்சு பாரு... ஹர்ஷாவோட பேரெண்ட்ஸையும் நினைச்சு பாரு... அங்க எல்லோரும் உன் ஒருத்தியோட முடிவுக்காக ஆவலோடு காத்துட்டுருக்காங்க... ஏமாத்திடாத... ஹர்ஷா உன்னை நிச்சயம் நல்லா பார்த்துக்குவாரு... புரிஞ்சுக்கோ.... போய் ட்ரெஸ் மாத்திட்டு வா..." என்றான்.



அகிலின் ஒவ்வொரு சொல்லும் அவளை வேரோடு சாய்த்தது... மனதில் இருந்த ஏமாற்றம், ஏக்கம், தன் சுயமரியாதை தவிடு பொடியாகிறதே என்ற தவிப்பு, தன்னை இன்னும் ஒருவரும் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற கழிவிரக்கம், என்று அத்தனை வலிகளுக்கும் இலக்காகித் துடித்த தன் மனதின் ரணத்தை கண்களில் கொண்டு வந்தவள், கலங்கிய விழிகளோடு,



"நீங்களுமா அத்தான்?" என்றாள்.



பிரளயம் வந்தது போல் வெடிக்கும் இதயத்துடன், பொங்கிப் பெருகிய கண்ணீருடன், வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில், மிக மிக தாளாமாட்டாத சமயங்களில், தன்னால் இனி செய்ய கூடியது ஒன்றும் இல்லை என்பது போன்ற நேரங்களில், தோன்றுமே ஒரு பரிதவிப்பு.



அதே தவிப்புடன் ஹர்ஷாவை திரும்பி பார்த்தவள், நீங்கள் இன்னும் என்னை புரிந்துக் கொள்ளவில்லை என்பதுப் போல் அவன் கரத்திலிருந்த பையை வாங்கியவள் புடவை மாற்ற சென்றாள்.



அவளின் கலங்கிய தோற்றம் ஹர்ஷாவிற்கு அவள் மேல் கனிவை வர வழைத்தது என்றாலும் அவளை இதற்கு மேல் தனித்து விட அவன் விரும்பவில்லை.



அவளை மருத்துவமனையில் பார்த்த அந்த நிமிடங்கள் மீண்டும் அலை அலையாக மனக்கண்களின் முன் வந்து போனது... வேரொடிந்த கிளை போல் அவனின் கனி கிடந்த நிலை இன்னும் அவன் இதயத்தில் இரத்தத்தை கசிய வைத்துக் கொண்டிருந்தது.



அவள் வரவிற்காக முழுக்க முழுக்க காதலை மட்டுமே சுமந்த உள்ளத்துடன் காத்திருந்தான் அந்த இளம் காதலன்.



அருகில் இருந்த அறைக்கு சென்று புடவை மாற்ற ஆரம்பித்தவளின் மனம் முழுக்க குழப்பமும் கலக்கமும்... தான் என்ன நினைக்கின்றோம்? என்ன செய்கின்றோம்? என்று கூட அவளுக்கு புரியவில்லை.



'எப்பவும் அவர் விருப்பம் தான் நிறைவேற வேண்டுமா? எனக்கென்று ஒரு மனம் இல்லையா?' என்று மனம் கலங்கினாலும் கை அதன் போக்கில் தன் வேலையை செய்தது.



பட்டு புடவையைக் கட்டியவள் அவன் கொடுத்த நகைகளை அணியாமல் வெளியே வர, அது வரை அவள் மீண்டும் ஏதாவது பிரச்சனை செய்தால் என்ன செய்வது என்ற கலக்கத்துடன் காத்திருந்த ஹர்ஷாவின் இதயம், சிலை போல் வெளியில் வந்த தன்னவளை கண்டதும் தடுமாற ஆரம்பித்தது.



அவளின் அருகில் வேகமாக வந்தவன் அவள் நகைகளை அணியாமல் இருப்பதை பார்த்து நகை பெட்டகத்தை தன் கையில் வாங்கியவன் அதில் இருந்த வைர நெக்லஸை எடுத்து அணிவிக்க முயற்சிக்க, "எ..எ...எனக்கு இதெல்லாம் வே....வேண்டாம்..." என்று தடுமாறியவாறே மறுத்தாள்.



"உனக்கு பிடிக்கலைன்னாலும் எனக்காக நீ போட்டு தான் ஆகணும்..."



"அப்போ எனக்குன்னு எதுவும் விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா?....உங்களுக்கு பிடிச்ச மாதிரி, நீங்க சொல்ற மாதிரி தான் எல்லாம் நடக்கணுமா?"



கண்களில் நீர் சூழ்ந்திருக்க கேட்டவளின் முகத்தை உற்று நோக்கியவன் ஒன்றும் பேசாமல் அழகாக பின்னி மல்லிகை சரத்தை சூடியிருந்த சடையை முன் விட்டு நெக்லஸை போட ஆரம்பித்தான்.



மீதம் இருந்த நகைகளை கைகளில் கொடுத்தவன் "சீக்கிரம் போட்டுட்டு வா... முகூர்த்த நேரம் தாண்டிட போகுது..." என்றவன் அவள் நகைகளை போட்டு முடிக்கும் வரை அங்கிருந்து நகரவில்லை.



ஒரு வழியாக அவள் தயாரானதும் கரம் பற்றி அழைத்து வந்தான் மணமேடையை நோக்கி.



மௌனமாக தலை கவிழ்ந்து நடந்து வந்தவளுக்கு தன் நிலை புரிந்து கொள்ள இயலவில்லை... முழு மனதோடு இந்த திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர் அழைத்ததும் எதிர்ப்பை தெரிவிக்காமல் அவருடன் சேர்ந்து இதோ மணவறை வரை வந்துவிட்டேன்.



எத்தனை முறை வலிக்க வலிக்க தன் இதயம் அடிபட்டும், இத்தனை கசப்பான நிகழ்ச்சிகள் நடந்ததற்கு பிறகும், காந்தத்தைக் கண்ட இரும்பு துண்டு போல் மனம் தன்னை அறியாமல் இவரிடமே தஞ்சம் அடைய விரும்புகிறதே என்று தன் மேலேயே கோபம் வந்தது.



பொங்கி பெருகிய கண்ணீருடன், மருண்டு கலங்கிய மனதுடன், மனம் குமுற தலை குனிந்து நடந்து வந்துக் கொண்டு இருந்தவளுக்கு தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து இருந்த ஹர்ஷாவின் மீதான காதல் "அவன் தனக்கு வேண்டும்" என்று அரற்றி கொண்டு இருந்த போதிலும், தன் மானத்தை சந்தேகித்தவரிடம் தன் வாழ்க்கையை பணயம் வைப்பதில் பெருத்த தடுமாற்றமும் இருந்தது.



அவளை மணவறையில் அமர சொன்ன ஐய்யர் மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்க, அதன் பின் காரியங்கள் மளமளவென்று நடந்தேறியது.



"கெட்டி மேளம்...கெட்டி மேளம்..." என்று ஐய்யர் குரல் கொடுக்க, நாதஸ்வரம் மங்கள இசையை முழங்க, ஹர்ஷா மங்கல நாணை தன்னவளின் கழுத்தில் அணிவித்து அவளுக்கும் தனக்கும் பிரிக்க முடியாத பந்ததை உறுதி செய்தவன் அவள் காதிற்கருகில் குனிந்து,


"நான் மூணு வருஷத்திற்கு முன்னாடி சொன்ன மாதிரி நீ எனக்கு தான்....எனக்கு மட்டும் தான்....அது உனக்கு பிடிச்சாலும் சரி பிடிக்கவில்லை என்றாலும் சரி..." என்றான் அக்கறையும் பெருமையும் நிறைந்த குரலில்.



சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளை பார்த்து கண்ணடித்தவன் அகிலை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, அன்று கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் தன்னிடம் அவன் சொன்ன வார்த்தைகள் அலை போல் மனதில் அடித்து ஓய்ந்தது கனிகாவிற்கு.



"ஃப்ரம் டுடே....அதாவது இன்றையில் இருந்து, நீ, நான் சொல்றத மட்டும் தான் கேட்கணும்.. நான் சொல்றத மட்டும் தான் செய்யணும்.. மத்தவங்க சொல்றத இல்லை..." என்ற வார்த்தைகள்.... தலை கவிழ்ந்து பார்த்தவளின் கண்களில் பளீரென்று பட்டது புத்தம் புது மஞ்சள் கயிறில் கோர்க்க பட்டிருந்த தாலி.



சடங்குகள் முடிந்ததும் மணமக்கள் ஹர்ஷாவின் பெற்றோரிடமும், சுந்தரத்திடமும், கணேசன் மாலதியிடமும் ஆசிர்வாதம் பெற ஹர்ஷாவைக் கட்டி அணைத்துக் கொண்டான் அகில்.



அவனுக்கு கனிகாவின் இன்றைய மன நிலை புரியும், ஆனால் இனியும் கனிகாவின் வாழ்கையில் காயங்கள் வரக் கூடாது... அந்த ஒரே நினைவில் ஹர்ஷாவின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.



நிகிலா கனிகாவின் அருகிலேயே நின்றவள் "கனிகா, ஏன்டி, இத்தனை அழகானவரையே நீ வேண்டாம் என்று சொன்ன?" என்று விழி அகல கிசுகிசுப்பாக கேட்க, அகிலிடம் மனதில் உள்ளவற்றை பகிர்ந்துக் கொள்வது போல் நிகிலாவிடம் அவ்வளவாக எதுவும் கனிகா சொல்ல விரும்பியது கிடையாது.



ஏனெனில் நிகிலாவால் மனதிற்குள் எதையும் வைத்துக் கொள்ள முடியாது.... லொடலொடவென்று எல்லாவற்றையும் மாலதியிடம் சொல்லிவிடுபவள்.... ஆதலால் நடந்த சம்பவங்கள் எதுவுமே அவளுக்கு தெரியாது... அதனால் தான் ஹர்ஷாவை பற்றி புரிந்துக் கொள்ளாமல் பேசுகிறாள் என்று நினைத்த கனிகா அவளை பார்த்து ஒரு புன்னகை மட்டும் சிந்தினாள்.



பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்த ஹர்ஷா தன் மனையாளை திரும்பி பார்த்தவன் அவளை நோக்கி நடந்து வர, அவர்களுக்கு தனிமை கொடுத்து நிகிலா நகர்ந்தாள்.



அகலக் கரையிட்ட அரக்கு நிற தங்க சரிகையிட்ட காஞ்சிபுரத்து பட்டு புடவையில், கால் விரல்களில் வெள்ளி மெட்டியும், கழுத்தில் ரோஜாப்பூ மாலையும், வைர நகைகளுடன் மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட தங்க தாலி மின்ன, தலை நிறைய மல்லிகைப் பூவும், நெற்றியில் வட்டக் குங்குமப் பொட்டும், உச்சி வகிட்டில் ஹர்ஷா இட்ட குங்குமமும் மிளிர, தேவதையென தெரிந்த தன் மனையாளின் மேல் காதல் பெருக அவள் அருகில் சென்றவன் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்தான்.



அவனின் திடீர் செய்கையால் நிலை குலைந்தவள் அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ள போராட ஆனால் அவன் விட்டால் தானே.



மேலும் விரல்களில் அழுத்தத்தை கூட்ட வலியினால் முகம் சுண்டியவள் அவன் முகத்தை அண்ணாந்து பார்க்க, அவளை நோக்கியவன் குனிந்து.



"இனி எப்போதும் என் கைக்குள்ள தான் நீ இருக்கணும்..." என்றான், சிரித்த முகத்துடன் ஆனால் கைகளில் உடும்பின் பிடியுடன்.



அவனின் பிடியில் இருந்து விலக முடியாமல் பலி ஆடு போல் நின்றிருந்தவள் அவனை மருண்ட மானின் மிரட்சியுடன் பார்க்க, கண்களை இமைக்காது அவளின் விழிகளுக்கு ஊடுருவது போல் பார்த்தவனின் பார்வையில் தெரிந்த ஒளி இனி அவனிடம் இருந்த தான் விலகுவது சாத்தியமற்றது என்பதை அவளுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.



அவளின் கலக்கத்தை உணர்ந்தவன் போல் மீண்டும் அவள் முகத்தின் அருகே குனிந்தவன், மென் குரலில் மெல்லிய சிரிப்புடன் "கனி, இந்த ஜென்மம் மட்டும் இல்லை இனி நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு தான், எனக்கு மட்டும் தான்" என்றவனின் பார்வை அவளை அடைந்துவிட்ட இறுமாப்புடன் மனைவி என்ற உரிமையில் அவள் மேல் மேய, அவன் கிறக்கமான குரலிலும், தாபம் வழியும் பார்வையிலும் சட்டென் முகம் கறுத்தவள் அவனிடம் இருந்து திரும்பி வேறு புறம் பார்த்தாள்.



அவளின் செய்கையில் சிரித்துக் கொண்டவனின் பிடி மேலும் இறுகியது.. இரும்புப்பிடியாக.



திருமணம் முடிந்ததும் அருகில் இருந்த ஹோட்டலில் உணவு அருந்துவது என்றும், மதிய உணவு முடிந்ததும் மணமக்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது என்றும் முடிவெடுத்த போது தான் அது வரை அமைதியாக அவனின் பிடியில் இருந்த கனிகா மெதுவாக பேச்சை எடுத்தாள்.



"அப்பா, நாம நம்ம வீட்டிற்கு போலாம்பா.."



அதிர்ந்த ஹர்ஷா திடுக்கிட்டு அவளை திரும்பி பார்த்திருக்க "என்ன கண்ணம்மா, இப்போ தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு போவது தானே முறை" என்றார் சுந்தரம்.



"இல்லைப்பா, ப்ளீஸ் பா, நம்ம வீட்டிற்கு போலாம்பா.... என்னோட கல்யாணத்தை தான் யாரும் என் கிட்ட பேசாம நடத்திட்டீங்க, இதுவாவது என் இஷ்டம் போல் செய்ங்க அப்பா...." என்றவள் கணவனின் விரல்களில் இருந்து மெல்ல தன் விரல்களை பிரித்தெடுத்தவள் அவனை விட்டு நன்றாகவே நகர்ந்து நிற்க, சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் தங்கள் மேல் இருந்ததால் ஹர்ஷாவால் அவள் விலகலை தடுக்க முடியவில்லை.



அவளின் அருகில் வந்த சங்கீதா அவள் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு,


"கனிகா, உனக்கு எங்க எல்லார் மேலேயும் கோபம் இருக்குதுன்னு தெரியுது... எங்க மேல் எந்த தப்பு இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்... ஆனால் இப்போ கல்யாணம் ஆச்சுடா... இனி நீ ஹர்ஷாவோடு இருக்கறது தான் முறை..." என்றார்.



அவர் மன்னிப்பு என்றதும் அவரை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்து நிற்காமல் நீர் அலை கடலென வழிந்தோடியது...


இருந்தும் தவிப்புடன், "இல்லை, நான் வரலை... நான் எங்க வீட்டிற்கு போறேன்..." என்று மீண்டும் கிளிப்பிள்ளை சொல்வது போல் சொல்ல, ஹர்ஷாவின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.



"சை" என்று சலித்துக் கொண்டவன் அவள் அருகில் வந்து,


"என்னை ஏன்டி இப்படி பழிவாங்கிற? இன்னமும் ஏன் இந்த பிடிவாதம்? உங்க வீட்டிற்கு நீ தனியா போறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சேன்..." என்று கத்த ஆரம்பிக்க சூழ்நிலை புரிந்து சிதம்பரம் முன் வந்தார்.



"ஹர்ஷா, ப்ளீஸ் பீ கொயட்.... கனிகாவோட மனச எனக்கு நல்ல புரிஞ்சுக்க முடியுது... நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பா... உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.... இனி அதை யாரும் மாத்த முடியாது... லெட் ஹர் டேக் ஹெர் ஓன் டைம் [Let her take her own time] அவங்க வீட்டிற்கு போகட்டும்... கொஞ்ச நாளில எல்லாம் சரியாகிவிடும்....".



அவரை கண்களில் வலியோடு பார்த்தவன் கனிகாவை திரும்பியும் பார்க்காமல் தங்கள் கார் நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி ஆக்ரோஷமாக விருட்டென்று செல்ல, பெரியவர்களுக்கும், அகிலிற்கும் இவர்களை எப்படி சேர்த்து வைப்பது என்று மலைப்பாக இருந்தது.



ஹர்ஷா அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுமே அவன் கொடுத்த வைர நகைகளை கழட்டியவள் சங்கீதாவிடம் கொடுத்து,



"அத்தை, எங்க வீட்டில் இவ்வளவு விலை உயர்ந்த நகைகளை வைத்திருக்க முடியாது... இத தயவு செஞ்சு நீங்களே எடுத்து போங்க..." என்றாள்.



அவள் நகைகளை கழட்டும் பொழுதே சங்கீதாவின் முகம் சுருங்கியது, இருந்தும் ஒன்றும் சொல்லாமல் எப்படியும் தங்கள் மகன் அவன் மனைவியின் மனதை மாற்றி அவளை தன் வழிக்கு கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் நகைகளை வாங்கியவர்,



"நீ கூடிய சீக்கிரம் எங்க வீட்டிற்கு வரனும் கனிகா... நாங்க அந்த நாளை ஆவலாக எதிர்பார்த்திட்டு இருப்போம்..." என்றவர் மனம் கனக்க அவ்விடத்தில் இருந்து கிளம்பினார்.



அவரை தொடர்ந்து வந்த சிதம்பரம், சங்கீதாவிடம் கனிகா நகைகளை திருப்பி கொடுத்ததை ஹர்ஷாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.



ஏற்கனவே கோபத்தில் வெடித்துக் கொண்டு இருப்பவன் இப்பொழுது இது வேறு தெரிந்தால் ஆத்திரத்தில் என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது.... அது நிச்சயம் கனிகாவின் மீது தான் பாயும்.



அவர்கள் கிளம்பியதும் கணேசனிடம் வந்த கனிகா,

"மாமா, நீங்க எல்லோரும் கிளம்புங்க, நானும் அப்பாவும் பஸ் பிடிச்சு எங்க ஊருக்கு போறோம்..." என்றாள்.



அவளின் பேச்சில் கொந்தளித்து போனார் கணேசன்.



"என்ன கனிகா, இவ்வளவு பிடிவாதம் எதற்கு? அவங்க முன்னாடி உன்னை ஒண்ணும் பேசக் கூடாதுன்னு தான் பேசாமல் இருந்துட்டேன்.... நீ பண்றது ரொம்ப தப்பும்மா, மாப்பிள்ளை எவ்வளவு கோபத்தில் போயிருக்கிறார் பார்த்தியா? உன் மாமியார் எவ்வளவு நல்லவங்க பாத்தியா? உன் கிட்ட வயசு வித்தியாசம் பார்க்காம மன்னிப்பு கேட்கிறாங்க.... ஆனால் நீ அதைக்கூட கொஞ்சமும் பொருட்படுத்தாம சொன்னதையே சொல்லிட்டு இருக்கிற.... இப்ப என்னடான்னா எங்களையும் அனுப்ப பார்க்கிற.... நீ ரொம்ப சின்ன பொண்ணும்மா, உங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெளிவா தெரியாது.... ஆனால் என்னமோ அவங்களை பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியாது... எது செஞ்சாலும் யோசிச்சு செய்மா... இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு எல்லாத்தையும் நீயே முடிவு செய்யாத...." என்று முடித்துக் கொண்டார்.



ஏனெனில் அன்று மருத்துவமனையில் ஹர்ஷா தன் பெற்றோருடன் வந்த பொழுது மாலதியும், கணேசனும் மருத்துவமனை கேண்டினுக்கு சென்று இருந்தனர்... அகிலும், கணேசனிடம் இலைமறைவு காயாகத் தான் ஹர்ஷாவிற்கும் கனிகாவிற்கும் இடையில் நடந்ததை சொல்லியிருந்தான்.



அகில் அவரை சமாதானப்படுத்தும் விதமாக,


"அப்பா, நீங்க எல்லோரும் நம்ம காரில் ஊருக்கு போங்க, நான் கனிகாவோடும் மாமாவோடும் அவங்க ஊருக்கு போய் அவங்களை விட்டுவிட்டு வந்திடறேன்..."



"ஏன் அகில், எல்லோரும் ஒண்ணா நம்ம வீட்டிற்கு போகலாம், அப்புறம் அவங்க இரண்டு பேரும் ஒரு இரண்டு நாள் கழிச்சு வேப்பங்குடிக்கு போகட்டும்..."



கணேசனுக்கு இந்த இரண்டு நாட்களில் எப்படியும் கனிகாவின் மனதை மாற்ற முடியாதா என்று இருந்தது...


ஆனால் கனிகாவிற்கு சென்னையில் இருப்பதற்கே மனம் ஒப்பவில்லை.



"இல்லை மாமா, ப்ளீஸ், நாங்க வேப்பங்குடிக்கு போறோம்..." என்று கனிகா சொல்ல, அவருக்கு இதற்கு மேல் அவள் தலை விதி என்றே தோன்றியது.



கணேசனும் மாலதியும் நிகிலாவுடன் கிளம்ப, அகில் கனிகாவையும் சுந்தரத்தையும் வாடகை டாக்சியில் அழைத்துக் கொண்டு வேப்பங்குடிக்கு புறப்பட்டான்.



பயணம் அமைதியாகக் கழிய ஒரு இடத்தில் காபி அருந்துவதற்காக காரை நிறுத்தினர்.... ஓட்டுனர் அந்தப் பக்கம் சென்றதும் அது வரை பொறுத்திருந்த அகில் அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் கனிகாவிடம் பொரிய ஆரம்பித்தான்.



"ஏன் கனிகா, இன்னும் மனசுக்குள்ள இவ்வளவு கோபத்தை வச்சிருக்க... ஹர்ஷா எவ்வளவோ ட்ரை பண்றாரு உன் மனசை மாத்த, ஆனால் நீ கொஞ்சம் கூட பிடி கொடுக்காமல் இருக்க, இது தப்பு கனிகா...."



"எது தப்பு அத்தான்? அத்தான் உங்களுக்கு தெரியும் அவரோட குணம் பத்தி... அது மட்டும் இல்லை... நான் அவரோட ஒரு வருஷம்...." என்று தயங்கியவள் தந்தையைப் பார்க்க அவரும் யோசனையுடன் அவளையே பார்த்திருந்தார்.... இருந்தும் தான் பேச வேண்டியது அவசியம் என்று தொடர்ந்தாள்.



"அவரோட கிட்டதட்ட ஒரு வருஷம் பழகியிருக்கேன்.... அவரைப் பார்த்தால் எனக்கு பயமாத் தான் அத்தான் இருக்கும்... அவருக்கு என் மேல ரொம்ப பிரியம் தான், இல்லைன்னு சொல்லலை... ஆனால் அதே சமயம் என் கூட அத்தனை நாட்கள் பழகியும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும் ஒரு சின்ன விஷயத்திற்காக அவர் என் மேல் கோபப்பட்டு வெளிநாட்டிற்கு போய் ஆறு மாசம் வரை பேசாமல் இருந்தார்... சரி எப்படியும் அவர் கோபம் தணியும்னு நினைச்சிட்டு இருந்த சமயம் யாரோ ஏதோ ஒரு ஃபோட்டோவை அனுப்பியதை பார்த்து என்னை கொஞ்சம் கூட நம்பாம என்னைக் கேட்கக்கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டு என் இதயத்தையே மரத்து போக வச்சிட்டார்....."



"எப்படி அவ்வளவு நாள் பழகியும் ஒரு பொண்ணு மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வராமல் அப்படி சந்தேகம் பட முடியும்? சரி பேசிட்டார், அது போகட்டும்... ஆனால் அதுக்கப்புறமாவது என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கலாம் இல்லையா? ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமா தரக்குறைவா பேசிட்டோமேன்னு அவருக்கு கொஞ்சமாவது வருத்தம் இருந்திருந்தா என்கிட்ட ஒரு வார்த்தையாவது அதுக்கப்புறம் பேசியிருக்கலா மில்லையா?? இரண்டு வருஷம் நான் எப்படி இருக்கேன், இருக்கேனா? செத்துட்டேனான்னு கூட தெரிஞ்சுக்க விரும்பலை...".



பொங்கி வந்த கேவலை தொண்டைக்குள்ளே அடக்கியவள் "நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டேன்னு தெரிஞ்சவுடனே ஓடி வந்தாரே.... ஏன்? அப்ப புரிஞ்சிருக்கும்... இவ தப்பானவ இல்லைன்னு... ஒரு வேளை நான் தற்கொலை முயற்சி செய்யாம இப்படியே இருந்திருந்தா அவர் என்னை எட்டி கூட பார்த்திருக்க மாட்டாரு அத்தான்.... ஆக என்னை நிரூபிக்க நான் தற்கொலை செய்யணுமா? கொஞ்ச நாள் பழகினாலே ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்க முடியாதா?" என்று கதறியவள்,



"வேண்டாம் அத்தான்.... எனக்கு அவரு வேண்டாம்... நீங்க எல்லாம் அவரு திருந்திட்டாருன்னு சொல்றீங்க... ஆனால் எனக்கு என்னமோ இன்னும் அவரு மேலே நம்பிக்கை வரவில்லை... இப்ப சரின்னு அவரு கூட போய்ட்டேன்னா, அப்புறம் வேற யாராவது, எதையாவது சொன்னால் அதையும் நம்பி என்னை திருப்பி அனுப்பிச்சிருவாரு... அதுக்கு நான் இப்படியே எங்க வீட்டிலேயே இருந்துட்டு போறேன்.... யாரும் என்னை வற்புறுத்தாதீங்க..." என்று ஒரு பெரிய கேவலுடன் முடித்தாள்.



அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்தது...


ஆனால் அதே சமயம் ஹர்ஷா அந்த புகைப்படங்களை கனிகாவிடம் காட்டியதில்லை.


அது எப்படி தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது என்று அவளுக்கு தெரியாது.



அது மட்டும் அல்ல, தான் கனிகாவை காதலிப்பதாக ஒரு காலத்தில் சொன்னதும் ஹர்ஷாவின் மனதில் ஆழ புதைந்து இருக்கிறது, ஆக யாரைக் குறை சொல்வது என்று அகிலுக்கு புரியவில்லை.



அதற்கு பிறகு வீட்டிற்கு வந்து சேரும் வரை சுந்தரமோ அகிலோ அவளிடம் ஹர்ஷாவைப் பற்றி வாய் திறக்காமல் வர, வீட்டை அடைந்தவுடன் தன் அறைக்கு சென்று கதவைச் சாத்தியவளின் அழுகையும் கேவலுமே கேட்டுக் கொண்டிருக்க, அகிலின் மனது தாங்கவில்லை.



அவளின் அறைக் கதவை தட்டியவன் காத்திருக்க தன்னை திடப்படுத்திக் கொண்டு கதவை திறந்தவளின் முகத்தைப் பார்த்து அவளிடம் நெருங்கியவன் கனிவோடு,



"கனிகா, மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காத... உன் மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்... இப்படி அழுது உடம்பை கெடுத்துக்காத...."


"நல்லதாகவே நடக்குமா? எப்படி அத்தான்... முதல்ல அம்மா என்னை விட்டு போனாங்க.... அப்புறம் லவ் பண்றேன்னு மனசில ஆசையும் நம்பிக்கையும் வளர்த்துட்டு கடைசியில அம்போன்னு நட்டாத்துல விட்டுட்டு போனாங்க அவங்க... திரும்ப சந்தேகப் பட்டு நரகத்தில் தள்ளினாங்க... சரி காதலும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு வேலைக்கு போனால் அந்த ஓநாய் என்னை வே...." என்றவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டு தலை குனிய,



அதிர்ந்த அகில் அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவள் கண்களைக் கூர்ந்துப் பார்த்தவன்,


"கனிகா... யாரந்த ஓநாய்? என்ன நடந்தது" என்று சீற்றத்துடன் ஆனால் சன்னமான குரலில் கேட்க,


கலங்கியவள் திக்கி திணறி நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்...


கேட்டுக் கொண்டிருந்த அகிலின் முக மாறுதல்களை கவனித்தவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.



"அத்தான்... ப்ளீஸ்... தயவு செஞ்சு இதப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதீங்க... என்னால என்னைய அவன்கிட்ட இருந்து அன்னைக்கு காப்பாத்திக்க முடிஞ்சது... ஆனால் எப்பவும் என்னால முடியுமாங்கிற பயத்தில தான் நான் தற்கொலை முடிவுக்கே போனேன்... அது மட்டுமில்ல... என்னால அவரை...." என்று சிறிதே தயங்கியவள் தலை கவிழ்ந்தவாறே மிகவும் மெல்லிய குரலில்,



"என்னால அவரில்லாமல் இருக்க முடியலை..." என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,



"அப்போ இப்போ மட்டும் ஏன் ஹர்ஷாவை விட்டு வந்த?" என்றான்.


அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தெரிந்த வலியைத் தன் வலி போல் உணர்ந்தவன் அவளின் தலையைத் தடவி,



"சரி, எதைப் பத்தியும் யோசிக்காத... இதுவரை எப்படியோ... ஆனால் இனி உன் வாழ்க்கை நல்லபடியா தான் இருக்கும்... எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவன் கனிகாவிற்கு தெரியாமல் சுந்தரத்திடமும் சீக்கிரம் அவளின் மனம் மாறிவிடும்.. அவள் கழுத்தில் புத்தம் புதிதாக தொங்குகிறதே தாலி, அது நிச்சயம் தன்னுடைய மாயத்தை செய்துவிடும் என்ற நம்பிக்கையில் விட்டுப்பிடிப்பதே சிறந்தது என்று எடுத்துரைத்தவன் விடை பெற்றான்.



வழியெல்லாம் கனிகா சொன்ன விஷயங்களிலேயே மனம் அலை மோதியது.



திவாகரை அப்படியே விட்டுவைக்க கூடாது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இதை ஹர்ஷாவிடம் சொல்லிவிடுவோமா என்று கூட தோன்றியது.



'ஆனால் இன்றைய நிலையில் ஹர்ஷா கனிகாவின் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கிறார்.... இப்பொழுது இதைப் பற்றி சொன்னோம் நிச்சயம் அவர் அடுத்த நிமிடமே இங்க இருப்பார்... முதலில் அவர்களுக்குள் பிரச்சனை சரியாகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்'என்று எண்ணியவன்.



'அந்த திவாகர் கொஞ்சம் பெரிய கைப் போல் தெரிகிறது.... நிச்சயம் போலீஸ் என்று போனால் அது கனிகாவிற்கும் நல்லதல்ல... ஹர்ஷாவிடம் சொல்லி அவனுக்கு ஒரு வழி செய்ய வேண்டும் ஆனால் அதற்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லை...' என்று முடிவெடுத்தான்.



சிதம்பரமும் சங்கீதாவும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வேகத்தை குறைக்காமல் தன் கோபம் முழுவதையும் காரை ஓட்டுவதில் காட்டிய ஹர்ஷா புயல் போல் அதனை செலுத்தினான்.... அவர்கள் இருவருக்கும் தங்கள் மகனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்றே தெரியவில்லை.



வீட்டிற்கு வந்தவன் மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறியவன் படீரென்று தன் அறைக் கதவை சாத்தி பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான்.



இரண்டு கைகளாலும் தலையை தாங்கி பிடித்தவனுக்கு தன் மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.... இதற்கு மேல் என்ன செய்வது? அவளைக் கைவிடாமல் கல்யாணம் வரை வந்தாகிவிட்டது... இன்னமும் என்ன தான் எதிர்பார்க்கிறாள்? என்று குழும்பியவன் அப்படியே கட்டிலில் சரிந்தான்.



தொடரும்...
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் 22

இரவு வெகு நேரமாகியும் அவன் கீழ் இறங்கி வராததைக் கண்ட சங்கீதாவிற்குக் கலக்கமாக இருக்க அவன் அறையை நோக்கி நடந்தவரை தடுத்த சிதம்பரம் அவனைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என்று சமாதானப் படுத்தினார்.


நாட்கள் அதன் போக்கில் நகரச் சுந்தரத்திற்குக் கனிகாவின் மனம் மாறும் என்ற நம்பிக்கை குறைய ஆம்பித்தது.....


அகிலுக்கும் அந்த உணர்வே வர யாரும் எதுவும் செய்ய இயலாத நிலையில் திகைத்திருந்தனர்.


வெளிநாட்டில் இருந்து வந்த உடனேயே தந்தையுடன் சேர்ந்து தங்கள் தொழில்களில் காலூன்ற ஆரம்பித்து இருந்த ஹர்ஷாவும் இதற்குள் தன்னுடைய அபாரமான திறமையாலும், தொழில் சாமார்த்தியத்தாலும், கடும் உழைப்பாலும், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி எட்டாயிரம் அடி பாய்கிறது என்ற பெருமையைத் தொழில் வட்டாரத்தில் பெற்றிருந்தான்.


இந்தச் சில மாதங்களிலேயே அவனுடைய திறமையைப் பார்த்து வியந்திருந்த சிதம்பரமும் சங்கீதாவும் அவன் கனிகாவின் நினைவில், அவளைப் பிரிந்திருந்த ஏக்கத்தில், தன்னை இன்னும் முழுமையாகத் தொழில் என்ற கடலுக்குள் மூழ்கி தன்னைத் தொலைத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தவர்களுக்கு வருத்தமே மேலோங்கியிருந்தது.


திருமணம் ஆகி கிட்டதட்ட இரண்டு மாதங்கள் நெருங்கியும் கனிகா ஹர்ஷாவை தேடி வரவில்லை.


இது வரை தங்கள் பிரச்சனைகளில் தலையிடாது இருந்த தன் தந்தை முதன் முறை தன்னைப் பொறுமையாக இருக்கச் சொன்னதால் மனதிற்குக் கடிவாளம் இட்டு தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஹர்ஷாவும், எப்படியோ திருமணம் ஆகிவிட்டது, இனி அவளாக மனம் மாறும் வரை தானும் அவளைத் தேடி போகக் கூடாது என்ற பிடிவாதத்துடன் இருந்தான்.


சிறியவர்களை எப்படி ஒன்று இணைப்பது என்று பெரியவர்கள் குழம்பிப் போய் இருந்தனர்.


அன்றும் அதனையே யோசித்தவாறே தன் அறையில் இருந்த பீரோவில் இருந்து துணிமணிகளையும் நகைகளையும் வெளியில் எடுத்து வைத்து அதனைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சங்கீதா ஹர்ஷா தன்னை அழைத்ததைக் கவனிக்கவில்லை.


மூன்று நான்கு முறை அழைத்தும் தன் அன்னை வெளியில் வராததைக் கண்டவன் அவர் அறைக்குச் செல்ல, அங்கு அவர் பீரோவை சுத்தம் செய்து கொண்டிருக்க,


"வாட் மாம்? இத்தனை தடவை கூப்பிட்டு இருக்கேன்.... சத்தமே போடாம இருக்கீங்க?" என்றான்.


"ஸாரி ஹர்ஷா.... நான் கவனிக்கலை... ஏதோ சிந்தனையில் இருந்தேன்..." என்றவாறே மகனை திரும்பி பார்க்க, வெளிர் நீல நிற முழுக்கை சட்டையும், அடர் நீல நிற பேண்டும் அணிந்து ஏதோ மீட்டிங் கிளம்பியிருப்பான் போல், கழுத்தில் டையுடனும் கையில் கோட்டை வைத்துக் கொண்டு நல்ல நிறத்துடனும், உயரத்துடனும், ஆஜானுபாகுவான தோற்றத்துடனும், கம்பீரமாக நின்றிருந்த மகனைப் பார்த்தவருக்குப் பெருமை வழிந்தது.


எதிரில் தென்படும் எந்தப் பெண்களின் மனதிலும் இவனைப் பார்த்து ஆசை அலைப்புறுதல் வராமல் இருக்காது, அப்படி இருக்க இவன் மனைவி மட்டும் ஏன் இப்படி?


தன் கணவன் எப்படி இருக்கிறான்? கோபத்தில் சென்றவன் சமாதானம் ஆனானா? இல்லை இன்னும் கோபத்தில் தான் இருக்கிறானா? என்று கூடக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாளே என்று வருந்தியவர் ஏக்க பெருமூச்சு விட, அவரின் வருத்தத்தை அவர் முகம் சட்டென்று மாறியதில் இருந்தே கண்டு கொண்டான்.


அதற்கு மேல் எதுவும் பேச தோன்றாமல் "ஓகே மாம், பை..." என்று கதவை நோக்கி திரும்பியவனின் கண்களில் அது பட்டது....


பட்டதும் பளாரென்று யாரோ முகத்தில் அறைந்தது போன்ற ஒரு உணர்வு வந்தது.


திருமணத்திற்கு முதல் நாள் ஆசை ஆசையாகத் தன் மனைவியாகப் போகிற தன் காதலிக்கென்றே அவன் வாங்கிய வைர நகைகள் அத்தனையும் அங்கு இருந்தது.... கனிகா நகைகளைச் சங்கீதாவிடம் கொடுத்து சென்றிருந்ததை அவன் இன்று வரை அறிந்திருக்கவில்லை.


வேகமாக டேபிளை அடைந்தவன் நகைகளைக் கைகளில் எடுத்து பார்த்தவன் தன் அன்னையை நிமிர்ந்து பார்க்க, அவன் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்ததைப் பார்த்த சங்கீதாவிற்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.


'கடவுளே! ஏற்கனவே அவள் மேல் பயங்கரக் கோபத்தில் இருக்கின்றான்.... இப்பொழுது இது வேற நேரம் காலம் தெரியாமல் அவன் கண்களில் பட்டுவிட்டதே' என்று குழப்பத்துடன் அவன் முகத்தையே பார்க்க,


"வாட் மாம்... இத கூட உங்க கிட்ட கழட்டி கொடுத்து விட்டு போய்ட்டாளா அவ......அப்படி நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்னு அவ இந்த அளவிற்கு ரியாக்ட் பண்றா? அவள் என்ன அவ்வளவு பெரிய ஆளா.... இவளை எல்லாம் லவ் பண்ணி கழட்டிவிட்டுட்டு போயிருக்கணும்.... தற்கொலை வரை போய்ட்டாளேன்னு பதறி ஒடி வந்து, அவ வீடு வரை போய்ப் பொண்ணு கேட்டு அவமானப்பட்டு, இதோ இப்போ இவ்வளவு ஏற்பாடு பண்ணி கல்யாணம் செஞ்சா, பெரிய இது மாதிரி எல்லாத்தையும் கழட்டிக் கொடுத்துட்டு போயிருக்கா....." என்று வெடித்தான்.


"ஹர்ஷா...ப்ளீஸ்ப்பா....பி காம் [Be calm] ...கோபப்படாத..."


"மாம்... ஹவ் கேன் ஐ பீ காம்? [Mom...How can i be calm?] எவ்வளவு திமிரு இருந்தா, நீங்க எனக்காக எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்டும் அவ ஜ்வெல்ஸை கூடக் கழட்டி கொடுத்துட்டு போயிருக்கா?" என்றவன் அவரைக் கூர்ந்து பார்த்து அழுத்தமான குரலில்.


"மாம்... ஜ்வெல்ஸை மட்டும் தான் கழட்டி கொடுத்தாளா? இல்லை தாலியையுமா?" என்றான்.


குரலில் அளவுக்கு மீறிய கோபத்தையும் வெறுப்பையும் தேக்கி வைத்து கேட்ட மகனை பார்த்தவருக்குப் பகீரென்றது.


"ஹர்ஷா, அப்படி எல்லாம் அபசகுனமா பேசாதாப்பா.... உன் மேல் அவளுக்குக் கோபம் இருக்கலாம்... ஆனால் அதற்காகத் தாலியக் கழட்டுற அளவிற்கு அவள் மோசமான பெண்ணில்லைப்பா.... நீ கொஞ்சம் கோபப்படாம இரு... பெரியவங்க நாங்க பேசி சரி பண்ணுறோம்... கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்...."


"நோ மாம்.... இனி எனக்குப் பொறுமை இல்லை.... எப்ப இவ்வளவு பிடிவாதமும் அழுத்தமும் அவளுக்கு வந்திருச்சோ அப்பவே இந்த ஹர்ஷா யாருன்னு அவளுக்குக் காண்பிக்கணும்..." என்றவன் விருட்டென்று வெளியேற கதி கலங்கிப் போய் நின்றார் சங்கீதா.


வெளியில் வந்தவன் காரில் அமர்ந்து கனிகாவின் அலை பேசிக்கு அழைக்க, அவன் வெளிநாடு சென்றதில் இருந்து இது நாள் வரை அவளுக்கு அழைத்தது இல்லை.


உடல் நலம் சரியில்லாத போதும் அகிலை அழைத்தே அவளைப் பற்றி விசாரித்து இருந்தான்.... இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று அவளை அழைக்க, தந்தையைத் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தவள் வீட்டின் பின் கட்டில் பாத்திரங்களைக் கழுவி கொண்டிருக்க, அலை பேசியின் அழைப்புச் சத்தம் அவள் காதுகளுக்கு எட்டவில்லை.


மீண்டும் மீண்டும் அழைத்தவன் ஏதோ முடிவு செய்தவனாகக் காரை சீறிக் கிளப்பினான்.


வழக்கத்தை விட அதி வேகத்தில் காரை செலுத்திக் கொண்டு வந்ததால் விரைவில் கனிகாவின் ஊரை அடைந்தவன் அவள் வீடு இருக்கும் தெருவில் காரை நிறுத்தி, சில நிமிடங்கள் அவள் வீட்டையே வெறித்துப் பார்த்தபடியே இருந்துவிட்டு, பின்னர்த் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு காரை விட்டு இறங்கினான்.


அவன் காரை அங்கு நிறுத்தியதுமே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திண்ணையிலும் தெருவிலும் இருந்தவர்கள் பளபளவென விலை உயர்ந்த வெளி நாட்டுக் கார் இந்தக் கிராமத்திலா! என்று வியந்து காரையே பார்க்க, அவன் காரை விட்டு இறங்கியதும் அவனின் கம்பீரத்தையும், அழகையும், பணக்கார தோற்றத்தையும் பார்த்தவர்கள் மூக்கில் விரல் வைக்க, அவர்களைச் சட்டை செய்யால் கனிகாவின் வீட்டு கதவை தட்டினான்.


காலையிலே தலை குளித்து முடித்துக் கரு நீல நிற ஷிஃபான் புடவை உடுத்தி, தலை முடியை தளர பின்னி, இன்னும் மங்காத மஞ்சள் தாலி கயிறு மின்ன கதவை திறந்தவளின் பளீர் அழகில் மயங்கியவனின் ஊடுருவும் பார்வையில் நெஞ்சுக் கூட்டில் குளிர் ஏறிட, சில்லிட்டு போனவள் நடுங்கிய மனதுடன் ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.


"என்னை எதிர்பார்த்திருக்க மாட்டியே? அதான... என் நினைப்பு உனக்கு இருந்தால் தானே?" என்று மெல்ல நிதானாமாக ஆனால் அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க, அங்கு ஏற்கனவே அவனை எதிர்பாராமல் சந்தித்ததில் சகலமும் நடுங்கி நின்றவளின் தலையில் கூடை நெருப்பை அள்ளிக் கொட்டினார் போன்று இருந்தது அவனின் வார்த்தைகள்


அவளை விலக்கி வீட்டின் உள்ளே நுழைந்தவன் அணிந்திருந்த டையைக் கழற்றி, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து, பேண்டின் உள்ளே சொருகியிருந்த சட்டையை வெளியில் எடுத்துவிட்டு, அலட்சியமாய் வீட்டை சுற்றி பார்த்தவன்,


"வீட்டில் வேறு யாரும் இல்லையே? தனியாத்தான இருக்க?" என்றான்.


அவன் பார்வை தன் உடல் முழுவதும் ஒரு இடம் விடாமல் மெல்ல பரவுவதைப் பார்த்தவளின் தண்டுவடம் சில்லிட, காதலனாய் உயிர் அடி வரை கலந்திருந்தவனின் பார்வை கணவனாய் வேட்கையுடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து அவளுக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்தது.


திகிலும் கலக்கமுமாய் அவனைப் பார்த்தவளின் பார்வையில் அவனது மூன்று வருட காத்திருந்த காதல் ஆழி பெருவெள்ளமாய்க் கரைப் புரண்டு ஓடி கட்டுப்பாடுகளைக் கடக்கப் பேராவல் கொண்டது.


தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளை நெருங்க, செய்வதறியாது விழித்து நிற்கும் மனைவியைக் கண்டவன் இளம் புன்னகையுடன் "என்னடி பொண்டாட்டி, இப்படி வில்லனைப் பார்க்கிற மாதிரி பார்க்கிற.... என்னைப் பார்த்தா அவ்வளவு பயமாவா இருக்கு???" என்று அவளை நோக்கி நடக்க,


"அ...அ...அப்பா ஃபேக்டரிக்கு போயிருக்கிறாரு.... ப்ளீஸ் வெ..வெ....வெளியில் போங்க... யாராவது தப்பா நினைக்கப் போறாங்க.." என்றாள் நடுங்கும் குரலில்.


என்ன தான் அவள் தன்னை வெறுப்பது போல் நடித்தாலும் தன் மீது அவளுக்கு அளவுக் கடந்த காதல் இருக்கிறது என்று நம்பியிருந்தவனுக்கு அவள் தன்னை வெளியே போகச் சொன்னது சீற்றத்தை கிளப்பிவிட, ஆழ்ந்து அவள் கண்களைப் பார்த்தவன் சட்டென்று கனிவின்றி அவளைத் தன்னுடன் இழுத்து நெருக்கியவன் சிறிதும் கருணையின்றி அவளை ஆரத் தழுவினான்.


அவனின் இந்தத் திடீர் அணைப்பில் மூச்சு திணறியவள் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பெரும்பாடுப்பட்டுக் கொண்டே "தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க.... வெளியில யாராவது பார்த்திருந்தா அசிங்கமா நினைப்பாங்க... ப்ளீஸ் விடுங்க" என்று உதடுகள் துடிக்க, வார்த்தைகள் நடுங்கக் கூற, அவளை இறுக்கி அணைத்த பிடியை கொஞ்சமும் தளர்த்தாமல் ஒரு கையால் அவளது முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தியவன்,


"அடியே, நான் உனக்குத் தாலிக் கட்டின புருஷன்டி.." என்றான்.


விழிகளில் நீர் கோர்த்து நிற்க அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவள்,

"அது இந்த ஊரில இருக்கறவங்களுக்குத் தெரியாது..." என்றாள்.


"அப்ப தெரிய வச்சுருவேம்..." என்றவன் அவள் முகம் நோக்கி குனிய, தன் கணவன் இன்று ஒரு முடிவோடு தான் வந்து இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் மனம் நடுங்க அவனை விலக்கி வீட்டில் உள்ள அறைக்குள் ஓட நினைக்க, எட்டி அவள் புடவை முந்தானையைப் பிடித்தான்.


அந்த நேரம் அவனுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை... அவளை, தன் மனைவியை, தன்னவளாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.. இத்தனை வருட காத்திருப்புக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே அவனது ஒரே குறிக்கோள்.


அவளது புடவையை உருவி தூரயெறிந்தவனின் வேகத்தில் அதிர்ந்தவள் நெஞ்சம் படபடக்கத் தன் மார்பினை மூட, அவர்கள் நின்றிருந்து இடத்திற்கு அருகில் ஒரு கதவு இருப்பதைக் கண்டவன் காலால் அதனை எட்டி திறக்க, அது கட்டிலோ மெத்தையோ இல்லாத அவளது எளிமையான படுக்கை அறை.


அவனிடம் இருந்து விடுபடத் துடித்து அவள் செய்த முயற்சிகள் அனைத்தையும் அலட்சியமாகத் தன் பலத்தால் அடக்கியவன் அவளை இரு கைகளில் அள்ளி அறைக்குள் நுழைய முற்பட, அடுத்து நடக்கவிருப்பது புரிந்து இளம் தளிர் மேனியவளின் உடல் வெளிப்படையாக நடுங்க, அவனை இறுக பற்றியவள்.


"என்னங்க... வேண்டாங்க.... ஐயோ! தயவு செய்து இப்படி வேண்டாங்க... என்னை விட்டுறுங்க..." என்று மெல்லிய குரலில் பரிதவிப்புடன் இறைஞ்சினாள்.


அவளின் இறைஞ்சலைக் கேட்டவனின் முகம் ஒரு கணம் இளகியது... அவனின் முக மாற்றத்தைக் கண்டு கொண்டவள் அவன் கன்னத்தைத் தொட்டு,

"எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்ங்க.... நீங்க தான் என்னோட உயிர்... நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்... ஆனால் இந்த மாதிரி வேண்டாம்... தயவு செஞ்சு என்னை விடுங்க..." என்று மன்றாடினாள்.


ஆனால் அவனது இளக்கம் ஒரு விநாடி தான்.

அவள் கழட்டிக் கொடுத்து சென்ற நகைகள் மீண்டும் கண்கள் முன் தோன்ற அவன் விழிகளில் பளபளப்பு ஏறியது.


சிறு குழந்தையைத் தூக்கியிருப்பதைப் போல் மனைவியை அள்ளியிருந்தவன் அறைக்குள் நுழைய, படுக்கை எதுவும் இல்லாதைக் கண்டு நொடி நேரம் தாமதித்தவன் அவளை இறுக்கி அணைத்தவாறே கட்டாந்தரையில் அவளைப் படுக்க வைத்து அவள் என்ன ஏது என்று யோசிக்கும் முன் அவள் மீது படர்ந்தான்.


அவன் முகத்தைத் தனக்கு வெகு அருகில் பார்த்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்தது காதலா? காமமா? அல்லது இரண்டும் கலந்த வெறியா? என்று புரிந்து கொள்ள முடியாமல் அதன் கூர்மையைத் தாங்க இயலாதவளாய் தன் கண்களை இறுக்க மூடிக்கொள்ள.


அதற்கு மேலும் பொறுமை இல்லாதவனாய் அவள் முகம் நோக்கி குனிய, மென்மையான பெண்ணவள் தன்னைக் கண்டு அச்சத்தில் விழி மூடி உதடுகள் துடிக்கப் படுத்திருந்த விதம் அவனின் தாபத்தை மேலும் தட்டி எழுப்ப, அவளின் தலையைத் தன்னை நோக்கி ஏந்தியவன் தன் கடினமான இதழால் அவளின் மெல்லிய இதழை வன்மையாக மூடினான்.


அவளது இடையில் பதிந்திருந்த கரத்தின் அழுத்தம் அவனது காட்டாற்று வெள்ளமாக அடித்துக் கொண்டிருந்த வேட்கையை உணர்த்த, இதழை பருக துவங்கியவன் அவளை விடுவிக்கும் எண்ணமே இல்லாது அவள் மூச்சு திணறும் வரை முத்தத்தில் மூழ்கியிருந்தான்.


தன்னுடைய மென்மையான பெண்ணிடத்தில் வலிய ஆணவன் தன் வன்மையைக் காட்ட, அந்தக் கட்டாந்தரையில் அவனைச் சுமந்தவளுக்கு அவனின் முரட்டு தனமும் சேர்ந்து மிகுந்த வலியைக் கொடுக்க, ஆனால் அவனுக்கோ, எங்கே அவள் தன்னை விட்டு தூர போய் விடுவோளோ என்று பயம் கவ்வியிருக்க அவளின் வலியோ, வலியில் அவளின் முனகலோ அவன் செவிகளுக்கு எட்டவில்லை.


"வலிக்குதுங்க" என்று அவள் மெல்லிய குரலில் கதற, கோபத்தின் பிடியிலும் காமத்தின் பிடியிலும் சிக்குண்டு இருந்தவனுக்கு அந்தச் சின்னப் பெண்ணின் கதறல் கேட்கவில்லை.


தன் ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைவேறிய பின்பே அவளை விடுவித்தவன், மெல்ல எழ, அப்பொழுது தான் கவனித்தான் அவளின் கலைந்த தோற்றத்தை.


அந்த நொடியில் தன் தவறு உரைக்கவும், அவள் எழுந்திருக்கக் கரம் நீட்ட, அவளுக்கு அவனைத் தான் சந்தித்த முதல் நாள் ஞாபகத்திற்கு வந்தது.


அன்றும் இதே போல் தான் அவளைத் தூக்கி விடக் கரம் நீட்டினான்.... அன்று எவ்வாறு அவனைப் பார்த்து பயந்தாளோ அதே பயம் இன்றும் அவள் கண்களில் தெரிய, அவனுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது.


அவளின் பயந்த சுபாவம் தெரியும், தெரிந்தும் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டோமே என்று வருந்தியவன், அவளை மெதுவாக எழுப்ப, எழுந்தவள் அவனுக்கு முன் தான் இருந்த கோலத்தைக் கண்டு அவமானத்தில் முழங்காலில் காலை மடித்து அழ ஆரம்பிக்க, அருகில் இருந்த புடவையை எடுத்து அவள் மீது போர்த்தியவன், அவள் முன் முழங்கால் இட்டு மண்டியிட்டு,


"கனி, எதுக்கு இப்படி அழற? இப்போ என்ன நடந்திருச்சுன்னு இப்படி அழற... நான் உன் ஹஸ்பண்ட் டி, தாலி கட்டிய புருஷன்... ப்ளீஸ் அழாத..." என்றான்.


"நீங்க புருஷன் மாதிரியா நடந்துக்கிட்டீங்க? பலவந்தப்படுத்தற மாதிரி இருந்துச்சுங்க..." என்று கதறியவளின் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொள்ள, அதற்குள் அவன் கார் வீட்டிற்கு வெளியில் நிற்பது சுந்தரம் வேலைப் பார்க்கும் தொழிற்சாலை வரை விஷயம் போக, அது நிச்சயம் ஹர்ஷாவின் காராகத் தான் இருக்கும் என்று யூகித்தவர் வீட்டிற்கு ஓடி வந்தார்.


வீடு பூட்டியிருக்க, கதவை தட்டுவதா வேண்டாமா என்று குழம்பியவர், மகளுக்கும் மருமகனிற்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகள் தெரியுமாதாலால் மகள் ஒரு வேளை ஹர்ஷாவை எதுவும் சொல்லிவிடப் போகிறாளோ என்று எண்ணியவர் கதவை தயங்கியபடியே தட்ட, வீட்டில் கணவனின் தோளில் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்தவளுக்குத் தீடீரென்று கதவு தட்டப்பட்ட சத்தத்தில் தூக்கி வாரிப்போட்டது.


அவளை இறுக்க அணைத்துக் கொண்டவன், "யாரையாவது எதிர்ப்பார்த்தியா?" என்க, இல்லை என்று தலை அசைத்தாள்.


அவளை விட்டு அவன் எழப் போக, தான் இருந்த நிலையில் எங்கு அவன் கதவை திறந்துவிடப் போகிறானோ என்று பயந்தவள், "நான் ட்ரெஸ் பண்ணணும்.." என்றாள் அவனை இறுக்கி பிடித்தபடியே.


சரி என்றவன் அவள் கரம் பற்றி எழ உதவி செய்ய, எழுந்தவள் புடவையை இறுக்கப் பிடித்துக் கொண்டு நிற்க, அவள் நின்ற தோற்றம் மீண்டும் ஹர்ஷாவின் மனதில் அடங்காத தாபத்தைக் கூட்டியது.


அவன் கண்களில் தெரிந்த வேட்கையும், அவன் பார்வைப் போகும் இடங்களும் அவளுக்கும் கூச்சத்தைக் கொடுக்க, சட்டென்று அருகில் இருந்த சின்ன அலமாரிக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டாள்.


அது வரை அவளைத் தாபத்தோடு பார்த்திருந்தவன் கதவு மீண்டும் தட்டப்பட 'இனி நான் உன்னை விடறதா இல்லை..' என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தவன் அவளுக்குச் சில நிமிடங்கள் தனிமை கொடுத்துப் பின் கதவை திறக்க, அங்குச் சுந்தரத்தை எதிர்பார்க்காதவனுக்குத் தர்ம சங்கடமாகி போனது.


மருமகனின் கலைந்த தோற்றத்தை கண்டவர் நொடியில் நடப்பதை உணர்ந்து சிவ பூஜையில் கரடி போல் நுழைந்துவிட்டோமோ என்று மானசீகமாகத் தன் தலையில் தட்டியவர் தன்னைச் சமாளித்து ,


"வாங்க மாப்பிள்ளை....நீங்க வருகிறீர்கள் என்று கனிகா சொல்லவேயில்லை..." என்று தயங்கியவாறே வீட்டின் உள்ளே நுழைந்தார்.


அவரின் கண்கள் தன்னிச்சையாகத் தன் மகளைத் தேடியது.... அதற்குள் விரைவாகத் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டவள் தன் அறையில் இருந்து வெளியே வர அவளைத் திரும்பி பார்த்தவாறே.


"இல்லை அங்கிள்... கனிகாவுக்கு நான் வரது தெரியாது.... அவளை என் கூடக் கூட்டிட்டுப் போகத் தான் நான் வந்தேன்..." என்றான்.


அவனின் குரலில் இருந்த அழுத்தத்தைக் கண்டவளுக்குச் சற்று நேரத்திற்கு முன் நடந்தது நிழலாகக் கண்முன் தோன்ற,


"இ...இல்லை...நான் உ...உ...உங்க கூட வரலை.." என்றாள்.


இத்தனை நடந்ததற்கு அப்புறமும் என்ன பிடிவாதம் என்று விரக்தி அடைந்தவன் சுந்தரம் இருப்பதையும் சட்டை செய்யாமல் அவள் அருகில் நெருங்கி நிமிர்ந்து நின்றவன் "வரலைன்னா... என்ன அர்த்தம்? காலம் முழுக்க இப்படியே இங்கேயே இருந்துடப் போறியா? என்றான்.


மௌனமாகத் தலை குனிந்தவளின் கண்களில் இருந்த நீர் கீழே விழ அவளின் முகத்தை நிமிர்த்தியவன் கண்களைக் கூர்ந்து பார்த்து,


"இன்னும் எத்தனை நாள் என்னைப் பழிவாங்க போறதா உத்தேசம் கனி?" என்றான்.


அவன் தன்னை நெருங்கி வந்ததும் தன் தந்தைக்கு முன் அவன் எதுவும் செய்து விடக் கூடாது என்று உள்ளுக்குள் பதறி இருந்தவள் அவன் தன் முகத்தை நிமிர்த்திப் பார்க்கவும், அப்பொழுது தான் கவனித்தாள்.


முதன் முறை அவன் கண்கள் கலங்கி இருப்பதை.


எதற்கும் கலங்காத ஹர்ஷா தன்னவளின் பிடிவாதத்தை நினைத்து, இன்னும் தன்னை விட்டு அவள் விலகி இருக்க விரும்புவதை நினைத்து மனதிற்குள் இடிந்து போக, இதயத்தில் பட்ட அடி கண்களில் பூத்தது நீராக.


கண்களில் கோர்த்திருந்த அவன் விழி நீரும், வலிகளைத் தாங்கிய அவனின் வார்த்தைகளும் குறி பார்த்து அவளின் பூப்போன்ற மனதை அடித்து வீழ்த்தியது.


அவன் தன் ஈகோ, ஆணவம், திமிர் என்று அனைத்தையும் விட்டு இறங்கி வந்து கெஞ்சிக் கேட்கும் விதத்தில் தன்னைத் தொலைத்தவள் இருந்தும் மன உறுதி குலையாமல்,


"எனக்கு உங்க கேள்வி புரியலை... யாரையும் நான் பழிவாங்க நினைக்கலை... அதுக்கு என் மனசிலும் சக்தியில்லை, உடம்பிலும் தெம்பில்லை..." என்று கூறும் பொழுதே சற்று முன் தன் பலத்தின் முன் அவள் தோற்றுப் போனதைத் தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.


தலை குனிந்து கண்களைத் துடைத்து, தன் தலை முடியை அழுந்த கோதி தன்னைச் சமன் படுத்திக் கொண்டு நிமிர்ந்தவனின் முகத்தில் பொறுமை தூர போய்ச் சீற்றம் தலை தூக்க ஆரம்பித்தது.


பொறுமையாக ஆனால் அழுத்தமாக,


"இப்போ நீ என் கூட வரப் போறியா? இல்லையா?" என்று குரலை உயர்த்தி அவன் கேட்க, அவனை விட்டுப் பின் நகர்ந்தவள் தலை கவிழ்ந்தவாறே, 'இல்லை' என்பது போல் தலை அசைத்தாள்.


ஏற்கனவே அங்கு என்ன நடந்திருக்கும் என்று தன் கலைந்த தோற்றமே தன் மாமனாருக்கு உணர்த்தியிருக்கும் என்று உள்ளுக்குள் கூசிக் கொண்டிருந்தவன், அதற்கு மேல் அவரின் முன் நிற்க பிடிக்காமல்,


"நீ வருவடி.. உன்னை வர வைப்பேன்... பாப்போம் உன பிடிவாதம் பெரிசா... இல்லை என்னோட பிடிவாதம் பெரிசான்னு..." என்றவன் விருட்டென்று வெளியேறினான்.


ஆத்திரத்தில் சட்டென்று திரும்பி செல்லும் தன் கணவனின் அகன்ற முதுகை வெறித்துப் பார்த்தவளின் கண்ணில் நீர் குபுக்கென்று பொங்கி வழிந்தது... சில விநாடிகள் தான் என்றாலும் தன்னவனின் விழிகளில் கோர்த்திருந்த நீர் அவள் உள்ளத்தைப் பிசைந்தது.


அவனைப் பின்னோடு சென்று கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் உந்துதல் இருந்தாலும் மனதின் உந்துதலுக்கு மூளை எதிர்ப்புத் தெரிவிக்கக் கால்கள் தன்பாட்டில் தடுமாறியது.


தந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் அறைக்குத் திரும்பியவளை சுந்தரத்தின் குரல் தடுத்து நிறுத்தியது.


"கனிகா, ஏம்மா இப்படி நடந்துக்கிற?" என்றவர் கண்கள் கலங்க,


"உங்கம்மா என்னை விட்டு போனப்போ தான் நான் அவளோட அருமை தெரிஞ்சுக்கிட்டேன்... எதுவும் கிட்ட இருக்கும் போது அதனோட அருமை தெரியாது.... நமக்கு இனிமே கிடைக்கவே கிடைக்காதுன்னு புரியும் போது தான் அதனோட இழப்பபோட வலி தெரியும்... இப்போ தான் நான் காமாட்சி என் கூட இல்லைன்னு ரொம்பவும் உணருகிறேன்... அவ இருந்திருந்தால் இந்நேரம் உனக்கு எடுத்து சொல்லி புரிய வைச்சுருப்பா.... எனக்கு என்னமோ பயமா இருக்கும்மா... மாப்பிள்ளை ரொம்பக் கோபமா போறாரு... அவரோட பிடிவாதம் கோபம் தெரியும், இருந்தும் அவரு எத்தனை தடவை இறங்கி வர்றாரு... ஆனால் நீ திரும்பத் திரும்ப அவரை அவமானப் படுத்திட்டே இருக்கியோன்னு தோணுதுமா.... தயவு செய்து நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க... எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிக்கிற பிரச்சனை இல்லை இது..... வாழ்க்கை.... உங்க அம்மாவோட வாழ்க்கை தான் இந்தப் பாவியால வீணாப் போச்சு, நீயாவது கிடைச்ச நல்ல வாழ்க்கையைக் காப்பாத்திக்கம்மா..." என்க,


கனிகாவின் இதயத்தைக் கூறு போட்டது போல் இருந்தது அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும்.


"அப்பா, எனக்கும் அம்மா வேணும் பா... என் மனசில இருக்கிறத அவங்கக் கிட்ட சொல்லி அழணும்பா" என்றவள் அதற்கு மேல் தந்தையிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொள்ள, சுந்தரத்திற்குத் தன் மனைவியைத் தான் படுத்திய கொடுமைகளுக்கான தண்டனை தான் இப்பொழுது தான் அனுபவித்துக் கொண்டிருப்பதோ என்றே தோன்றியது.


ஒரு பெருமூச்சை விட்டவர் தொழிற்சாலைக்குச் செல்ல அவர் சென்றதை அறிந்ததும் வெளியில் வந்தவள் பின் கட்டில் இருந்த குளியல் அறைக்குள் சென்றாள்.


உடம்பு முழுவதும் ஒவ்வொரு அணுவாக வலி எடுக்க, கிணற்றில் இருந்து நீர் இறைத்தவளுக்கு உடம்பில் சிறிதும் தெம்பில்லை.


குளியல் அறைக்குள் சென்றவளுக்குத் தன் கணவனின் முகம் மனக்கண்ணில் தோன்ற அவனின் பிரிவு ஈட்டியாய் இதயத்தைக் குத்தி கிழித்தது என்றால், சிறிது நேரத்திற்கு முன்பு தன் விருப்பம் இல்லாது எத்தனை கதறியும் தன்னை அவன் ஆட்கொண்டது ஞாபகம் வந்து அவளையும் அறியாமல் கண்கள் உடைப்பெடுக்க அவளது மனம் தன் அன்னையிடம் சரண் அடைந்தது.


'அம்மா மட்டும் இப்போ கூட இருந்திருந்தால் அவர் மடியில் படுத்து மனசில உள்ளது எல்லாம் சொல்லி அழுது தீர்த்திருப்பேன்...' என்று மனம் அதன் போக்கில் யோசித்தாலும் கைகள் அதன் போக்கில் தண்ணீரை உடல் மேல் ஊற்றியது.


சில்லென்று நீர் பட்டதும் தன் கணவனின் வலிய கரத்தின் பிடியால் கன்றிப் போய் இருந்த இடங்களில் எரிச்சல் உண்டாக, 'எப்படிங்க உங்களால என்னிடம் இப்படி நடந்துக்க முடிந்தது?' என்று மனம் கதறியது.


குளித்து முடித்தவள் வீட்டிற்குள் நுழைய அங்கு அவன் கழட்டி எறிந்திருந்த டை கிடந்தது...


அதனை எடுத்து பார்த்தவளுக்கு எவ்வளவு தான் அவன் அவள் மனம் புண்படும்படி நடந்திருந்தாலும் அவன் மேல் இருந்த அளவிற்கடங்காத காதல் அவன் பிரிவை முகத்தில் அறைந்தால் போல் எடுத்துரைக்க, டையைத் தன் முகத்தில் அணைத்துக் கொண்டவளுக்கு அதில் இருந்து வந்த தன் கணவனின் பிரத்தியோக வாசனை காயம் பட்ட மனதிற்கு இதமாகவே இருந்தது.


அப்படியே டையை அணைத்தவாறே தரையில் மடித்து அமர்ந்தவள் முழங்காலில் முகம் புதைத்து அழுது கரைந்தாள்.


உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனால் ஏற்பட்ட வலி, தன்னை விட்டு பிரிந்து செல்லும் போது அவன் தன்னை ஆழ்ந்து பார்த்துச் சென்றதினால் ஏற்பட்ட அச்சம், புத்தி அவனை வேண்டாம் என்று மறுத்தாலும் இதயத்தில் அவன் மேல் அடங்காத காதலினால் ஏற்பட்ட தடுமாற்றம் என்று பல்வேறுப்பட்ட உள்ளுணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு அழுது கரைந்தாள் அந்தச் சின்னப் பெண்.



**************************************



கனிகாவின் வீட்டை விட்டு வெளியேறி வந்தவன் காரை சென்னை நோக்கி செலுத்த அவள் தன்னுடன் வராதது ஆத்திரத்தை கிளப்பியிருந்தாலும் அவளைத் தன்னவளாக ஆட்கொண்டதில் மனதில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது.... தன்னவள் முழுவதும் தன்னுடையவள் ஆகிவிட்டாள் என்ற நிம்மதி பெருகியது.


சினத்தினால் அவளுடன் கூடியிருந்தாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில் அவளுடன் கூடிய முதல் கூடலினால் மகிழ்ச்சி அலை மோதியது.

வழி முழுவதும் ஏகாந்த நிலையில் இருந்தவன் வீட்டிற்கு வந்ததும் தன் குளியல் அறைக்குள் நுழைந்து ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்றவனுக்கு மனைவியின் ஸ்பரிசமும் அவளின் அழகும் கண்முன் தோன்ற அதில் சுகமாய் நனைந்திருந்தவனுக்கு வெளியில் வரவே மனம் இல்லை.


ஒரு வழியாகக் குளித்து முடித்துக் கீழே வந்தவனை எதிர் கொண்ட சங்கீதாவிற்கு அவன் காலையில் சினத்துடன் கனிகாவை தேடிப் போனது ஞாபகம் வர,


"ஹர்ஷா... கனிகாவிடம் பேசினாயா? அவளிடம் ரொம்பக் கோபமா எதுவும் பேசிடலையே?" என்றார் பதற்றத்துடன்.


திருமணத்திற்குப் பிறகு கனிகாவைப் பற்றிய பேச்சை எடுத்ததும் ஹர்ஷாவின் முகத்தில் தோன்றும் இறுக்கத்திற்குப் பதிலாக இன்று அவனது உதட்டில் நெளிந்த புன்னகை அவரை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.


அவன் மனதில் அவள் இன்று தன்னுடன் வரவில்லை என்ற கலக்கம் இருந்தாலும் தன்னவளுடன் அவன் கொண்ட தாம்பத்தியம் அவன் உள்ளத்தைப் பரவசப்படுத்தியிருந்தது.


"கேட்கிறேன் இல்லை ஹர்ஷா.... பதில் சொல்லுப்பா.... கனிகாவிடம் பேசினாயா?"


"யெஸ் மாம்..."


"காலையில் அவ்வளவு கோபத்துடன் போன... ஆனால் இப்போ ஏதோ சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது... என்ன நடந்தது ஹர்ஷா? கனிகா நம்ம வீட்டிற்கு வருகிறேன்னு சொன்னாளா?"


"மாம்... இன்னும் கொஞ்ச நாளில் அவளே என்னைத் தேடி வருவா.... நீங்க அவளைப் பத்தி கவலைப்படாம இருங்க..." என்றவன் மனதிற்குள் அவள் வராமல் இருந்தாலும் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவேன் என்று கறுவிக் கொண்டவனுக்கு இனியும் அவளை விட்டுப் பிரிந்து இருப்பது சாத்தியமே இல்லை என்றே மனம் கூச்சல் இட்டுக் கொண்டு இருந்தது...


தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top