JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episodes 23 & 24

JB

Administrator
Staff member
அத்தியாயம் 23


ஆனால் ஹர்ஷா எதிர்ப்பார்த்தது போல் அவன் மனைவி அவனைத் தேடி வரவில்லை.


இப்படியே இருந்தால் ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்தவன் அகிலை அழைத்து அதனைப் பற்றிப் பேச அகிலிற்கும் இத்தனை நாட்கள் மனம் மாறாமல் கனிகா பிடிவாதமாக இருப்பது மனதிற்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.


திருமணம் முடிந்து இத்தனை நாட்களில் எப்படியும் மனம் மாறிவிடுவாள் என்று அகிலும் எண்ணியிருக்க ஆனால் அவள் இறங்கி வருவதாய்த் தெரியவில்லை.


அதிலும் அவள் திவாகரைப் பற்றிச் சொன்னதில் இருந்து அவன் உள்ளத்திற்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்க, அவ்வப்பொழுது கனிகாவிடம், "அந்தத் திவாகர் அதற்குப் பிறகு ஏதாவது தொந்தரவு செய்தானா?" என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.


ஆனால் அவன் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிச் சென்றிருந்தது தெரியாமல்.


இப்பொழுது ஹர்ஷா கனிகாவைப் பற்றிப் பேசவும், கிராமத்தில் என்றாவது ஒரு நாள் திவாகரால் கனிகாவிற்கு ஏதேனும் ஆபத்து வரும் வாய்ப்பும் இருக்கிறது ஆகையால் இனியும் கனிகாவை அவள் கிராமத்தில் விட்டுவைப்பதில் விருப்பம் இல்லாமல் ஹர்ஷாவிடம் திவாகரைப் பற்றிக் கூற அங்கு இதனைக் கேட்டு ரௌத்திரத்தில் வெகுண்டெழுந்தான் ஹர்ஷா.


"ஏன் அகில் இதைப் பற்றி நீங்க இத்தனை நாள் எதுவும் சொல்லலை.... இனி நான் எப்படி அவளை அங்க தனியா விட்டுவைக்க முடியும்?" என்று கர்ஜித்தவன் அன்றே திவாகரைப் பற்றி விசாரிக்க,

ஆனால் கனிகாவின் தற்கொலை முயற்சி பற்றிக் கேள்விப்பட்டிருந்த திவாகர் அதற்குத் தான் தான் காரணம் என்று உணர்ந்து மறுநாளே அந்த ஊரை காலி செய்திருந்தான்.


கனிகாவின் பயமும், அமைதியும் அவள் தன்னைக் காட்டிக் கொடுக்க விடாது என்ற அளவுக் கடந்த நம்பிக்கை இருந்தது அவனுக்கு... இருந்தும் அவன் பிரச்சனைகளை விலைக்கு வாங்க விரும்பவில்லை.


ஆதலால் வேப்பங்குடியில் இருந்து வேலை மாற்றம் கேட்டுக் கொண்டு சென்னைக்கு வந்திருந்தான் எலி தானாகப் பொறியில் சிக்கியது போல்.


கனிகாவைப் பற்றித் தெரிந்திருந்தவனுக்கு ஹர்ஷாவைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லையே.


திவாகரைப் பற்றி விசாரித்த ஹர்ஷா அவன் சென்னையில் ஒரு கம்பெனியில் அதே மேலாளர் வேலையில் சேர்ந்திருப்பதாகக் கேள்விப் பட்டு அகிலையும் உடன் அழைத்துக் கொண்டு அவனைச் சந்திக்கச் சென்றான், அவன் தலைவிதியை மாற்றி எழுத.



***********************************************


தன்னுடைய அறையில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே தன்னுடைய புதுச் செயலாளரை ரசித்துக் கொண்டிருந்த திவாகர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளை உள்ளே அழைத்தவன் இளித்த முகத்துடன்.


"அம்பிகா... கொஞ்ச நாளிலேயே எல்லா வேலையும் சூப்பரா கத்துக்கிட்ட... எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.." என்றவாறு அவளின் அருகில் உரசுவது போல நிற்க, திவாகரின் செயலாளர் அம்பிகா இப்பொழுது தான் கல்லூரி முடித்து அவனிடம் வேலையில் சேர்ந்திருந்தாள்.


அவன் உரசவும் சட்டென்று வெளியே சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பும் வரை காத்திருந்துவிட்டு அவள் கிளம்பியதும் இன்று தன் வாழ்க்கையை முன் பின் அறியாத ஒருவன் மாற்றி அமைக்கப் போகிறான் என்பதை அறியாமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றான், தன்னுடைய அடுத்த வேட்டையைத் துவங்குவதற்கு.


அவள் தன் ஸ்கூட்டியில் முன் செல்ல, அவளைப் பூனைப் போல் தன் காரில் மெதுவாகப் பின் தொடர்ந்தவன் ஆள் அரவமற்ற ஒரு தெருவில் சட்டென்று அவள் வண்டியை முந்திச் சென்று அவள் முன் காரை நிறுத்த, தடுமாறி கீழே விழப் போனவள் தன்னைச் சமாளித்துக் கொண்டு பார்க்க, காரில் இருந்து வேட்டை நாயின் முகத்துடனும் ஒநாயின் கொடிய எண்ணத்துடன் கண்களில் காமம் வழிய இறங்கியவன் அவளின் கரம் பற்றி இழுத்தான்.


அவனிடம் இருந்து விடுப்படப் போராடிக் கொண்டிருந்தவளை வேட்கையுடன் இழுத்தவன் தன் காரில் ஏற்ற முயற்சிக்க,


"டு யூ நீட் எனி ஹெல்ப்? [Do you need any help?]" என்ற கம்பீரக் குரலில் வெடுக்கென்று நிமிர்ந்தவனைப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹர்ஷாவும், அகிலும்.


திவாகர் தன் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அந்த நிமிடமே அவனை அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து வந்திருந்தவர்கள் அவன் ஆள் அரவமற்ற ஒரு தெருவில் திரும்பியதுமே அவனைப் பின் தொடர்வதைச் சிறிதே நிறுத்தி பின் இடைவெளி விட்டு தொடர, அதற்குள் அந்தக் காமுகன் அம்பிகாவின் கைப் பிடித்துக் காருக்குள் திணிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.


ஹர்ஷாவின் உருவத்தையும், தோரணையையும், அவனின் பல கோடிகள் மதிப்புப்பெற்ற காரைப் பார்த்ததுமே திவாகருக்குத் திகில் படற துவங்கியது.


இருந்தும் அவர்கள் யாரென்று தெரியாததால் குழம்பியவன் அம்பிகாவின் கரத்தை விட்டுவிட்டு தன் காருக்குள் ஏற முற்பட,


தன் காரில் சாய்ந்து நின்ற ஹர்ஷா அம்பிகாவைப் பார்த்து, 'நீ போ' என்பது போல் தலையசைத்துச் செய்கை செய்ய, அவன் அருகில் வந்தவள்,


"தேங்ஸ் அண்ணா.." என்றவளுக்கு ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்தவன் அவள் சென்றதும்,


"அதுக்குள்ள என்ன அவசரம் திவாகர்?" என்று புன்னகைக்கத் திடுக்கிட்டுத் திரும்பினான் திவாகர்.


என்னை எப்படி இவருக்குத் தெரியும் என்று யோசனையுடன் ஹர்ஷாவைப் பார்த்திருக்க, சிரித்த ஹர்ஷா திரும்பி பார்க்க, அங்கு வாட்டசாட்டமாக நின்று கொண்டிருந்தார்கள் திவாகரின் தலை எழுத்தை மாற்றி அமைக்கப் போகும் ஹர்ஷாவின் ஆட்கள்.


திவாகரின் அருகில் வந்த ஹர்ஷா,


"இது இனி நீ எந்தப் பெண்ணிடமும் தப்பா நடந்துக்கக் கூடாதுங்கறதுக்கு...." என்றவன் மேலும் புன்னகைத்து,


"இல்லை... இல்லை... நீயே நினைச்சாலும் இனி உன்னால அப்படி நடந்துக்க முடியாம போறதுக்கு.." என்றவன் அகிலை பார்த்து தலை அசைக்க இருவரும் காரில் ஏறிச் சென்றுவிட்டார்கள்.


ஹர்ஷா வேண்டும் என்றேதான் தான் யாரென்றோ, அல்லது கனிகாவைப் பற்றியோ திவாகரிடம் சொல்லவில்லை.


சிறிது நேரத்தில் கனிகாவை தொடத் துடித்த, மற்ற எத்தனையோ பெண்களைத் தொட்ட திவாகரின் கரம் அவன் உடலை விட்டுப் பிரிந்தது மட்டுமன்று, அவனின் ஆண்மையும் சிதைக்கப்பட்டது.


வலியால் அவன் சத்தம் போட கூடாது என்று அவன் வாயைக் கட்டியிருந்தவர்கள் அவனைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அவன் காரில் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து ஆம்புலன்ஸிற்கும் சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்கள் ஹர்ஷாவின் ஆட்கள்.


அவன் தன் வாழ்நாளில் இனி எந்தப் பெண்ணிடமும் தன் ஆண்மையைக் காட்டக் கூடாது (திருமணம் என்பதும் திவாகருக்கு இனி வெறும் கனவே) என்ற திட்டமே ஒழிய திவாகரை கொல்வது ஹர்ஷாவின் நோக்கம் அல்ல.


ஆகையால் தன் ஆட்களிடம் அவர்களுக்குக் கட்டளையிட்டதை அவர்கள் செய்து முடித்ததும் அவனை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடும் செய்யச் சொல்லி இருந்தான்.


காரை செலுத்திக் கொண்டிருந்த ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த ரௌத்திரமும் அதே சமயம் அவன் கண்களில் தெரிந்த வேதனையும் அகிலின் மனதையும் கரைத்தது.


"ஹர்ஷா... ஆர் யூ ஆல் ரைட் [Harsha, are you alright?] " என்றவனைத் திரும்பி பார்த்த ஹர்ஷாவின் முகத்தில் அத்தனை கலக்கம்.


"என்னால எவ்வளவு கஷ்டப்பட்டுட்டா அகில் என் கனி.... இங்க இத்தனை நடந்திருக்கு... ஆனால் இது தெரியாமல் நானும் அவளை விட்டு அவ்வளவு தூரத்தில் அதுவும் என் மனசு முழுவதும் அவ மேல் வெறுப்பைச் சுமந்திட்டு.... சே... ஐ அம் அஷேம்ட் ஆஃப் மைஸெல்ஃப் அகில்... [I am ashamed of myself Akil]" என்றவனை ஆறுதலாகப் பார்த்த அகில்,


"கனிகா எப்படியும் சீக்கிரம் உங்களிடம் வந்துருவா ஹர்ஷா..." என்றான்.


அவன் வாய் முகூர்த்தம் வெகு விரைவிலேயே பலிக்கப் போவது தெரியாமல்.



*****************************************


மறுநாள் ஹர்ஷா கனிகாவை அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எப்படியும் அழைத்து வரவேண்டும் என்று எண்ணியவாறே அவளை வரவழைக்கும் வழி பற்றி யோசித்தவாறே அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைய அங்கு எதிர்பாராதவிதமாக அகிலின் பெற்றோர் அவனுக்காகக் காத்திருந்தனர்.


ஹாலில் இருந்த விலை உயர்ந்த சோஃபாவில் அமர்ந்திருந்தவர்கள் அவனைக் கண்டதும் எழுந்து கைகூப்ப, அவர்களைப் பார்த்து புன்னகைத்தவன் தான் குளித்துவிட்டு வருவதாகச் சொன்னவன் தன் அறைக்குச் சென்றான்....


அவன் சென்றதும் சங்கீதா அவர்களுக்குக் காஃபி எடுத்து வர சமையல் அறைக்குள் நுழைய, மாலதியும் கணேசனும் வீட்டை சுற்றி கண்களால் துழாவினர்.


அதனை வீடு என்றே சொல்வது தவறு.... மிகப் பெரிய அளவில் வெள்ளையும் சிவப்பும் அதனூடே தங்க நிறத்திலும் அழகான சிற்பங்களுடன் கம்பீரமாக நிமிர்ந்து நின்று இருந்தது அந்த அரண்மனை போன்ற மாளிகை.


ராட்சஷ அளவில் பளிங்கு தூண்களில் தங்க நிற சிற்ப வேலைப்பாடுகள், மிக உயரமான வீட்டின் கூரையிலும் அழகான சித்திரங்கள், இரண்டாகப் பிரிந்து சென்று மேலே ஒன்றாக இணைந்த படிகள், அதில் சிகப்புக் கம்பளம் விரித்துக் கைப்பிடிகள் அனைத்திலும் கண்களைக் கவரும் வேலைப்பாடுகள் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அதன் கம்பீர தோற்றம்.


அதன் அழகை ஒன்று விடாமல் ரசித்து இருந்தவர்கள் ஒருவொருக்கொருவர் பார்க்க மாலதி, "கனிகா கூடிய சீக்கிரம் மனசு மாறி இங்க வந்து வாழணுங்க..." என்றார்.


அதற்குள் ஒரு ட்ரேயில் காபியும், சில இனிப்பு, கார பலகாரங்களையும் வைத்து சங்கீதா அவர்கள் அருகில் வர, "இதெல்லாம் எதுக்குங்க, அதுவும் நீங்க எதுக்குங்க எடுத்துட்டு வருகிறீர்கள்?" என்று கேட்டார் மாலதி.


"எங்க வீட்டிற்கு யாரு வந்தாலும் என் கையால் காஃபி பலகாரம் பறிமாறுவது தான் என்னோட பழக்கம்..." என்றவர் அவர்களின் நலம் விசாரிக்க, அதற்குள் குளித்து முடித்துக் கீழ் இறங்கி வந்தான் ஹர்ஷா.


அவன் வருகையை உணர்ந்து திரும்பி பார்த்தவர்கள் அவனின் கம்பீர அழகை பார்த்து மனம் மயங்க, 'இந்தக் கனிகாவிற்குக் கொஞ்சம் கூட விவரம் புரியவில்லை.... இவரைக் கல்யாணம் பண்ணிக்க எத்தனை பெண்கள் காத்திருப்பாங்க, நம்ம வீட்டு பொண்ணு என்னடான்னு இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது..' என்று பெருமூச்சை விட்டவர்கள் அவன் அவர்கள் அருகில் வந்ததும் தட்டில் வைத்து திருமண அழைப்பிதழை நீட்டினர்.


யோசனையுடன் புருவம் சுருக்கி அதனை வாங்கிப் பார்த்தவன் அது அகிலின் தங்கை நிகிலாவின் திருமண அழைப்பிதழ் என்றதும் புன்னகையுடன் அவர்களைச் சேரில் அமர செய்து உரையாட ஆரம்பித்தான்.


பேச்சின் ஊடே, "மேரேஜிற்குக் கனி வருவாளா?" என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்க, பெரியவர்களுக்கும் அவன் மனம் புரிந்து வருத்தமாக இருந்தது.


"நிச்சயம் வருவா மாப்பிள்ளை.... அவள் வராமலா?" என்றார் கணேசன்.


மனதிற்குள் படீரென்று யோசனை தோன்ற தன் அன்னையை நோக்கியவனின் இதழ்கள் அர்த்தத்துடன் விரிந்தது.


அவனின் நோக்கம் சங்கீதாவிற்கும் புரிய அவரது விழிகள் அதிர்ச்சியுடன், 'ஐயோ! இப்போ என்ன பிரச்சனை பண்ண காத்திருக்கானோ!!' என்று விரிந்தது.


மாலதியும் கணேசனும் விடை பெற்றுச் சென்றதும் தன் மகன் அருகே வந்தவர்,

"ஹர்ஷா, பொறுமையா இருப்பா.... கல்யாணத்தை அரேஞ்ச் பண்ண மாதிரி இப்பவும் எதுவும் செஞ்சு பிரச்சனைய பெரிசா ஆக்கிராத..." என்றார்.


"நோ மாம், யூ டோண்ட் வொர்ரி, ஐ வில் டே கேர் ஆஃப் இட் [No Mom, you dont worry, i will take care of it]" என்றவன் இளம் புன்னைகையுடன் தன் அறைக்குள் சென்றான்.


கட்டிலில் அமர்ந்தவன்,

"கனி, என்னால் இனி வெய்ட் பண்ண முடியாது.... மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது... நானாகத் தான் இறக பிய்க்க வேண்டும்..." என்று வாய்விட்டு கூறியவன் அவளை எப்படி அழைத்து வருவது என்று யோசனையில் ஆழ்ந்தான்.


திருமணத்திற்கு அழைக்க வந்த கணேசன் தன்னுடன் கனிகாவை சென்னைக்கு அழைக்க, மறுத்தவள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தான் தன் தந்தையுடன் வருவதாக வாக்களித்தாள்.


திருமண நாளும் வந்தது...


அதிகாலையில் கண் விழித்தவள் நிகிலாவுடன் அழகு நிலையத்திற்குச் செல்ல அவள் வற்புறுத்தியதால் மிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டவள் தன்னைக் கண்ணாடியில் பார்க்க தன்னை அறியாமலே தன் கணவனின் முகம் நிழலாக அவள் கண்முன் தோன்றியது.


'அவர்கள் வீட்டிற்கும் சென்று மாமா பத்திரிக்கை வைத்ததாகச் சொன்னாரே... அப்படி என்றால் அவர் வருவாரா?' என்று ஏக்கத்துடன் நினைத்தவளுக்குத் தன் மனம் போன போக்கை நினைத்து விசித்திரமாக இருந்தது.


இதயம் முழுவதும் தன் கணவன் தனக்கு வேண்டும் என்று நிறைந்து இருந்தாலும், மூளை என்னவோ அவனை விட்டு விலகியிருப்பதே நல்லது என்று உணர்த்த திரிசங்கு சொர்க்கம் போலவும் அவள் மனம் இரண்டு பக்கமும் பெண்டுலத்தைப் போலவும் ஆடிக் கொண்டு இருந்தது.


கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துச் சிலையாக நின்றுக் கொண்டிருந்தவளை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது நிகிலாவின் அழைப்பு.


மணப்பெண் அலங்காரம் முடித்துத் திருமண மண்டபத்தை அடைந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்ற மாலதி,


"கனிகா ரொம்ப அழகா இருக்கடா... நீ ரிஷப்ஷனில் நிற்கிறியா? என்றார்.


"சரி அத்தை" என்றவள் திருமண மண்டபத்தின் ரிஷப்ஷனில் நின்று விருந்தினர்களையும், உறவினர்களையும் வரவேற்க சிறிது நேரத்தில் வந்தார்கள் சங்கீதாவும் சிதம்பரமும்.


அவர்களைக் கண்டவள் குற்ற உணர்வில் தலை கவிழ்ந்து நிற்க, அவள் அருகில் வந்த சங்கீதா, "கனிகா, நல்லா இருக்கியாடா? " என்றார்.


அவரின் பாசக்குரலில் கண்களில் நீர் கோர்க்க, "நீங்க எப்படி இருக்கீங்க அத்தை? மாமா, நீங்க எப்படி இருக்கீங்க?" என்றாள்.


அவளை நெருங்கி வந்த சங்கீதா, "ஏதோ இருக்கோம்டா, ஹர்ஷாவும் நீயும் ஒண்ணு சேரும் நாளை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கோம்" என்றார்.


அவர்களின் பின் சிறிது தலையை நீட்டி எட்டி தன் பார்வையை ஓடவிட்டவள் மெல்லிய குரலில், "அவர் வரலையா அத்தை?" என்றாள்.


அவளின் தவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, இத்தனை ஆசை இருந்தும் ஏன் இப்படி வறட்டுப் பிடிவாதம் என்று நினைத்தவர், "இன்னக்கு ரொம்பப் பிஸி, அதனால் முடிந்தால் வருவேன்னு சொல்லியிருக்காண்டா..." என்றார்.


அவளுக்கு அவள் கணவனின் பிடிவாதம் பிடிக்கவில்லை, கோபம் பிடிக்கவில்லை, கர்வம் பிடிக்கவில்லை... ஆனால் அவனை மொத்தமாகப் பிடித்திருக்கிறது.


காதல் கொண்ட மனம் அவன் வேண்டும் வேண்டும் என்று மத்தளமாகச் சத்தம் இட்டுக் கொண்டே இருக்கிறது... ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் நடந்து கொள்ளும் விதம் அவளை அழ வைக்கிறது... அவனை விட்டு தள்ளி போக வைக்கிறது.


இருந்தும் அவனில்லாமல் அவள் இல்லை! என்று இதயம் தாளம் தப்பாமல் கூவி கொண்டிருக்கிறது.


அவரின் பதிலில் ஏமாற்றம் அடைந்தவள் சில விநாடிகளில் தன்னைச் சமன்படுத்திக்கொண்டு அவர்களைத் திருமண மண்டபத்தின் உள்ளே அழைத்துச் சென்றவள் மணமேடைக்கு அருகில் இரண்டாவது வரிசையில் அமர வைத்து, தான் சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லி மீண்டும் ரிசப்ஷனில் வந்து நின்று கொண்டாள்.


நேரம் செல்ல செல்ல விருந்தினர்கள் குவிய, ஹர்ஷா வருவது போல் தெரியவில்லை... முகூர்த்த நேரம் வேறு நெருங்க மண்டபத்தின் உள்ளே செல்ல எத்தனித்த கால்கள் சட்டென்று உள்ளுணர்வு ஏதோ சொல்ல, நின்று திரும்பி பார்த்தவளுக்குச் சிலிர்த்தது தன் கணவனின் காரைக் கண்டதும்.


இதயம் தடதடக்க அவனை வரவேற்க தயாராக நின்றவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகத் தோன்றியது.


காரில் அமர்ந்து யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் ஒரு வழியாகக் காரை விட்டு இறங்க, "ஹே! அங்க பாருங்கடி, செம்ம ஹாண்ட்ஸமாக ஒருத்தன் வர்றான்..." என்று அலறினார்கள் அவள் அருகில் ரிஷப்ஷனில் நின்று கொண்டிருந்த நிகிலாவின் கல்லூரி தோழிகள்.


அவர்கள் ஹர்ஷாவை பார்த்து தான் அலறுகிறார்கள் என்று புரிந்து கொண்டவளுக்கு அவன் தன் கணவன் என்ற கர்வமும், அவனை அவர்கள் ரசிப்பது பொறாமையையும் தூண்ட, அங்கு நிற்க முடியாமல் உள்ளே செல்ல எத்தனித்தவளை தடுத்து நிறுத்தியது அவனின் கம்பீர குரல்.


"ஹாய், ப்ரிட்டி கேர்ள்ஸ் [Hi, Pretty girls]" என்று சிரித்தவன் அவர்களின் அருகில் இருந்த மேஜையில் இருந்து ரோஜாப் பூவை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தவனின் கண்கள் தன் மனையாளின் மீது அங்குலம் அங்குலமாகப் படிந்து மீண்டது.


அவனின் கழுகுப் பார்வையைக் கண்டதும் பயத்தில் அகன்ற விழிகளுடன் மருட்சியோடு நின்றாள்.


அழகான வடிவான இதழ்களுடன், வில் போன்ற புருவங்களுடன் கூடிய விழிகளுடன், அடர்ந்த மயில் கழுத்து நிறத்தில் தங்க ஜரிகையிட்ட பட்டுப் புடவையில் மிதமான அலங்காரத்துடன் சிலை போல் தேவதையாகக் காட்சி தந்த மனையாளைப் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.


அவன் இதழ்கள் விரிந்து வெளிக் காட்டிய வெண் பற்களுடன் கூடிய புன்னகையைக் கண்டவளுக்கு அந்த நொடி உடல் சிலிர்த்து ஏதோ ஒரு பரவசம் உடல் முழுவதும் ஓட மேலும் தடுமாறிப் போனாள்.


கல்லூரி நாட்களில் ஹர்ஷாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயம் தோன்றும்...... அவன் ஏதேனும் கேள்வி கேட்டால் படபடப்பு வரும்... அவன் விழிகளைச் சந்திக்காமல் தலை குனிந்து கொண்டே பதில் அளிப்பாள்...... முகத்திற்கு வெகு அருகில் நேருக்கு நேர் பார்க்க நேர்ந்துவிட்டால் மனம் படபடவென அடித்துக் கொண்டு வியர்த்தே வழிந்து விடும்..... அவனின் விழிகளுக்கு உள்ளே ஊடுருவும் அழுத்த பார்வை பார்க்கும் பொழுது அதன் வீரியம் தாங்காது மயக்கமே வரும்..... அவனைக் காதலிக்கும் பொழுதே இத்தனை வித உணர்வுகள் என்றால், இன்றோ கணவனாகத் தன்னுடன் ஈருடல் ஓருயிராக இணைந்தும் விட்டான்.


அவளின் விழிகளில் வழிந்த காதலைக் கண்டவன் அவள் காதிற்கருகில் குனிந்து,


"நீ இல்லைன்னு சொன்னாலும், உன் கண்கள் உன் காதலை அப்பட்டமாகக் காட்டுதுடி... அப்புறம் இன்னும் எத்தனை நாளுக்கு இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு?" என்றான்.


அதற்குள் அவனைக் கண்கள் வழியாக உள்ளிழுத்துக் கொண்டிருந்த நிகிலாவின் தோழிகளில் ஒருத்தி அவன் மேல் பன்னீரைத் தெளிக்கப் போக விருட்டென்று அவள் கையைப் பற்றியவள்,

"வேண்டாம்.... அவங்களுக்குத் தண்ணீர் மேல பட்டா பிடிக்காது..." என்றாள் மெல்லிய குரலில்.


ஹர்ஷாவிற்கு மழையில் நனைவதோ, இல்லை தன் மீது தண்ணீர் படுவதோ சிறிதும் பிடிக்காது.... அப்படியே திடீரேன்று மழை பெய்து தான் நனைய நேர்ந்தாலும் வேறு ஒரு சட்டை வாங்கியாவது தான் போட்டிருக்கும் சட்டையை மாற்றிவிடுவான்.


இத்தனை வருடங்கள் கழிந்தும் அதனை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் மனைவியைக் கண் சிமிட்டாமல் பார்த்திருந்தவன் உதட்டில் நெளிந்த இளம் புன்னைகையுடன் மண்டபத்திற்குள் நுழைந்தான்.


"அவரை உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு சூப்பரா ஹாண்ட்ஸமா ஒரு ரிலேட்டிவ் இருக்காருன்னு நிகி இது வரை எங்கிக்கிட்ட சொன்னதே இல்லையே.... அவ மட்டும் சைட் அடிச்சிட்டு இருந்திருப்பாளோ... செல்ஃபிஷ்...." என்று பெருமூச்சுவிட்டு தங்களின் ஏமாற்றத்தை தெரிவித்துக் கொண்டார்கள் நிகிலாவின் தோழிகள்.


புன்முறுவல் பூத்தவள் அவனைப் பின் தொடர்ந்து செல்ல, அதற்குள் அகிலும், சுந்தரமும் கணேசனும் அவனைக் கண்டு கொண்டார்கள்.


அவனை ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றவர்கள் அவன் பெற்றோருக்கு அருகில் அமர வைக்க, கனிகாவின் அருகில் வந்த அகில்,


"கனிகா நீயும் போய் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிரு.... அவங்களுக்கு உன்னைவிட்டால் இங்க யாரையும் தெரியாது.." என்று வற்புறுத்த வேறு வழியில்லாமல் ஹர்ஷாவின் அருகில் சென்று நின்றாள்.


ஹர்ஷாவின் வலப்பக்கத்தில் சங்கீதாவும் சிதம்பரமும் அமர்ந்திருக்க, ஹர்ஷாவின் இடப்பக்கம் இருந்த நாற்காலியில் அவளை அமரச் செய்தார் சங்கீதா....


தயக்கத்துடன் அவன் அருகில் அமர்ந்தவளை கண்டும் காணாதது போல் மணமேடையில் அமர்ந்திருந்த மணமக்களையே பார்த்திருந்தான் ஹர்ஷா.


சிதம்பரம் எதுவோ கேட்க, மணமண்டபத்தில் இருந்த சத்தத்தில் அவர் கேட்டது சரியாகக் கனிகாவின் காதுகளில் விழவில்லை.... அவருக்கும் அவளுக்கும் நடுவே சங்கீதாவும் ஹர்ஷாவும் அமர்ந்திருக்க அவன் முன் குனிந்து தான் அவள் தன் மாமானாரிடம் பேச வேண்டும்.


அப்படிக் குனியும் பட்சத்தில் அவன் மேல் தன் உடல் நிச்சயமாக உரச நேரிடும்.... அதற்காக அவர் பேசும் பொழுது அவரை அலட்சியப்படுத்தவும் முடியாது.


வேறு வழியில்லாமல் அவன் முன் சரிந்து கேட்க முனைந்தவளின் உடல் ஹர்ஷாவின் மீது உரச, அவனின் ஸ்பரிஸத்தில் மனமும் உடலும் சிலிர்க்க, திணறிய மனையாளை கண்டு வெகுவாக ரசித்தான் முகத்தில் படர்ந்திருந்த இளம் புன்முறுவலுடன்.


தன் அருகாமையில் அவளுக்கு ஏற்படும் தடுமாற்றத்தையும் தவிப்பையும் அனுபவித்து ரசித்தவன் அவள் தன் முன் குனிந்ததும் அவள் புடவை சற்றே விலகி அவள் இளமை பட்டும் படாமலும் தெரிய இப்பொழுது மனம் தடுமாறுவது அவன் முறையானது.


தன்னை அடக்க வெகுவாக முயற்சி செய்தவன் கட்டுக்கடங்காத தாபத்தினால் அவள் இடையை இடது கையினால் பிடிக்க, திக்கென்று இருந்தது அவளுக்கு.


ஆனால் தன் மாமியார் மாமனார் முன் எதுவும் செய்ய இயலாதவளாக அமைதியாகச் சிதம்பரத்துடன் பேசிக் கொண்டே அவன் கரத்தை விலக்க முயற்சிக்க, அதை உணர்ந்தவன் உதட்டில் நெளிந்த சிரிப்புடன் விடாமல் அவளின் இடையை மூடியிருந்த புடவையைச் சிறிதே தன் விரல்களால் விலக்கி வெற்று இடையைப் பற்றியவன் மெதுவாக வருட, அவளுக்குத் தன் மனம் கவர்ந்தவனின் ஸ்பரிசமும் தொடுகையும் அழகான இம்சையாகி போனது.


அதற்குள் அங்கு அய்யர், "கெட்டி மேளம்....கெட்டி மேளம்..." என்று கூற நாதஸ்வரம் இசையில் சுதாரித்தவள் சட்டென்று எழ, சிரித்துக் கொண்டே அவளுடன் எழுந்தவன் அட்சதையைத் தூவ இது தான் சமயம் என்று அவனை விட்டு நகர்ந்தாள்.


அவள் போவதை வெறித்துப் பார்த்தவன் 'எங்க போயிறப் போற?' என்று நினைத்துக் கொண்டே அமர, அதற்குள் அவனின் அலைபேசி அழைத்தது.


சிறிது நேரம் பேசியவன் தன் அன்னையிடம் திரும்பி,

"மாம், ஒரு முக்கிய வேலை வந்திருச்சு நான் போகணும், நீங்க இருந்து சாப்பிட்டுட்டு வாங்க" என்றவன் அவர் பதிலுக்குக் கூட நிற்காமல் கிளம்பி அகில் இருந்த இடத்திற்குச் சென்றான்.


"அகில், ஐ ஹாவ் டு கோ. இன்னொரு நாள் வந்து உங்களைப் பார்க்கிறேன்..."


"என்ன ஹர்ஷா அதற்குள் கிளம்பிட்டீங்க, சாப்பிட கூட இல்லை.."


"இட்ஸ் ஓகே அகில், ஒரு முக்கிய வேலை வந்திருச்சு நான் போகணும்... இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன், போறதுக்கு முன்னாடி கனியிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..." என்றவனின் கண்கள் மனைவியைத் தேட அவன் எண்ணம் புரிந்த அகில் கனிகாவை அழைத்து,


"கனிகா, ஹர்ஷா கிளம்புறாரு, கொஞ்சம் கவனி..." என்றவன் அவர்களுக்குத் தனிமை கொடுத்து விலகி சென்றான்.


ஏற்கனவே அன்று அவனின் அடாவடி கூடலில் அதிர்ந்து போய் இருந்தவள், இப்பொழுது அவனின் ஸ்பரிசத்தில் தடுமாறி இருந்தவளுக்கு அச்சமாக இருக்க, அவளை நெருங்கி நின்றவன்,

"உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்... இங்கு எதாவது ப்ரைவேட் ரூம் இருக்கா?" என்றான் கிசுகிசுப்பான குரலில்.


தனி அறையா? என்று வாய் பிளந்து திகைத்தவளை பார்த்தவன் அவள் கரம் பற்றி அழைத்துச் சென்றான் மாடியை நோக்கி.


அது இரண்டு தளங்கள் கொண்ட திருமண மண்டபம், நிச்சயம் மேல் தளத்தில் ஏதாவது தனி அறை என்று இருக்கும் என்று அனுமானித்தவன் அவளை அழைத்துச் செல்ல, சற்று தடுமாறியவள் கூட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.


மாடியை அடைந்தவன் ஒவ்வொரு அறையாகப் பார்க்க அவனுக்கு ஏதுவாக ஆள் அரவமற்ற ஒரு தனி அறை இருந்தது.


அவளை உள்ளிழுத்து சென்றவன் அவளின் கையைப் பற்றிச் சுண்டி இழுக்கப் பொத்தென்று அவன் மார்பில் விழுந்தாள் அவனின் மனம் கவர்ந்த அவன் மனையாள்.... அவள் சூடியிருந்த பிச்சிப்பூவின் வாசமும், அவன் அறிந்த அவளின் மேனியின் ஸ்பரிசமும் அவனுக்கு அன்றைய கூடலை நினைவுப்படுத்த இரு கைகளாலும் அவள் முகத்தை மலர் போல் ஏந்தியவன்,


"என்னை ரொம்பச் சோதிக்காதடி கனி.... நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியும், இருந்தும் ஏன் இந்தப் பிடிவாதம்? ப்ளீஸ்டி, இனி என்னால் நீ இல்லாமல் இருக்கவே முடியாது... என் கூட வந்து விடுடி..." என்றான்.


அவனின் ஆழ்ந்த குரலில் அவளின் உடலில் நடுக்கம் எடுக்கப் பாவையவள் இதழ்கள் இரண்டும் மூச்சடைத்தது போல் துடித்தது... இதழ்களின் துடிப்பை கண்டவனின் தாபம் பொங்கி எழ அதற்கு மேல் பொறுமை இல்லாதவனாய் அவளின் இதழை இறுக்க மூடினான் தன் இதழால்.


அவளின் பிஞ்சு விரல்களின் விலக்கல்களை எளிதாகச் சமாளித்தவனின் நீண்ட நேரம் நீடித்த முத்தத்தில் மூச்சு வாங்கியவள் அவனிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்டவள் அவனின் மார்பில் கை வைத்து தள்ளி வெளியே போக எத்தனிக்க, அவளின் இடையை எட்டிப் பிடித்தவன், "ஏன்டி" என்று தாபத்தோடு கேட்க மூச்சு வாங்கியபடி பார்த்தவள் அவனை மீண்டும் தள்ளினாள்.


அவளின் இரு கைகளையும் தன் வலிய கரங்களால் இறுக்கி பிடித்தவனின் மனதில் மெல்ல சினம் தூக்க கோபத்துடன்,


"இன்னும் எத்தனை நாள் தான் இப்படி என்னை விட்டுட்டு தனியா இருப்ப?" என்று வெடித்தான்.


"ஐயோ! சத்தம் போடாதீங்க, யார் காதுலையாவது விழுந்திடப் போகுது..." என்று மென்குரலில் அவள் கெஞ்ச,


"கனி, இப்போ நான் ஆபீஸ் போறேன்... நான் திரும்பி வரும்போது நீ எங்க வீட்டில் இருக்கணும்...." என்றான் ஒவ்வொரு வார்த்தைகளாகக் கோபம் கொழுந்துவிட்டு எரிய.


அவனின் கோபத்தில் அரண்டவள் தலை கவிழ்ந்தவாறே,


"நீங்க போன்னு சொன்னா போகணும்... வான்னு சொன்ன வரணுமா.... எனக்கும் மனசு இருக்கு, தன்மானம் இருக்கு..." என்று சத்தமே வராத குரலில் கூற அவளின் முகத்தைத் தன் ஒற்றை விரலால் நிமிர்த்தியவன்,


"இன்னக்கு நான் வரும் போது நீ எங்க வீட்டில் இல்லைன்னா எனக்கு இருக்கிற ஆத்திரத்தில் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..." என்றவன் அவளைச் சட்டென்று விடுத்து கதவை திறந்து வெளியேறினான்.


கலைந்திருந்த தன் புடவையைச் சரி செய்தவள் வேகமாக அவன் பின் செல்ல, அதற்குள் அவன் தன் கார் நிறுத்துமிடம் சென்றிருந்தான்.


அவனை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தவளை கண்டவன் ஒன்றும் கூறாமல் புயல் போல் வேகமாகத் தன் காரை சீறிக் கிளப்பியவன் அவளைக் கடந்து செல்லும் போது மீண்டும் ஒரு முறை அவளை ஆழ்ந்து பார்த்தது அவள் அடி வயிற்றைக் கலக்கியது.


திருமணம் நன்றாக நடந்தேற வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் மற்ற உறவினர்களும் கலைந்து செல்ல, நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தனித்து இருந்தனர்.


கனிகாவின் அருகில் அமர்ந்த சுந்தரம், "மாப்பிள்ளை, சாப்பிடாம கூடப் போய்ட்டாரு போல, உன்னிடம் எதுவும் சொன்னாராம்மா?" என்றார்.


தந்தையை நோக்கியவளின் கண்களில் இன்னும் ஹர்ஷாவின் பார்வையில் தெரிந்த ஆத்திரம் வெளிப்பட அச்சத்தில் சிலிர்த்தவள், "ஒண்ணும் சொல்லலைப்பா...." என்று பொய் உரைத்தாள்.


அவள் உண்மையை மறைக்கிறாள் என்று தெரிந்தது, ஆனால் தங்களைச் சுற்றி மற்றவர்களும் அமர்ந்திருக்க இதற்கு மேல் வயது வந்த பெண்ணிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி போனார் சுந்தரம்.


நிகிலா தன் கணவனுடன் மாமியார் வீட்டிற்குக் கிளம்ப, வெளியூரிலிருந்து வந்திருந்த சில விருந்தினர்களும் உறவினர்களும் அகிலின் வீட்டில் தங்க ஏற்பாடாகியிருக்க, கனிகாவிற்கும் மாலதியுடன் சேர்ந்து அவர்களுக்குக் காஃபி டிஃபன் இரவு உணவு தயாரிப்பது என்று பிஸியாகச் செல்ல, ஹர்ஷாவைப் பற்றிச் சற்று மறந்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும், அல்லது வேண்டும் என்றே மறக்க முயற்சி செய்தாளா, அது அவளுக்குத் தான் தெரியும்.


மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவுடனே சங்கீதா ஹர்ஷாவை அழைத்து விசாரிக்கவும், கனிகா அன்று மாலை திருமணம் முடிந்து தங்கள் வீட்டிற்கு வருவாள் என்றே சொல்லியிருந்தான்.... எப்படியும் தன்னை நாடி அவள் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த ஹர்ஷாவிற்கு நேரம் ஆக ஆக அந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்திருந்தது.


வெகு நேரம் காத்திருந்தவன் கனிகாவிற்கு அழைக்க அவள் சமையலில் மும்முரமாக இருந்ததால் அலைபேசியின் சத்தத்தைக் கவனிக்கவில்லை.


ஹர்ஷாவிற்கு ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் போல இருந்தது அவளின் நிராகரிப்பு.


வெகுண்டவன் அகிலுக்கு அழைக்க, நிகிலாவுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்திருப்பதாகச் சொன்னவன் இரவு தங்கள் வீட்டிற்குத் திரும்பியதும் முதல் வேலையாகக் கனிகாவிடம் அவனை அழைக்கச் சொல்வதாகச் சொல்லியிருந்தான்.


அவனைத் தொந்தரவு பண்ண விரும்பாத ஹர்ஷா தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னவன் வெகு நேரம் வரை விழித்திருந்தான்.


அவனின் அறையில் விடிய விடிய லைட் அணைக்கப்படாது இருக்கவே அச்சம் கொண்ட சங்கீதா சிதம்பரத்தை எழுப்பி,


"என்னங்க, எனக்கு எதுவோ சரியில்லைன்னு தோணுதுங்க.... கனிகா இன்னைக்கு நம்ம வீட்டிற்கு வருவான்னு சொன்னான், ஆனால் அவள் வரவேயில்லை... அவன் தன்னோடு ரூமிலிருந்து கீழே சாப்பிடவும் வரலை... எத்தனையோ முறை போய்க் கூப்பிட்டுப் பார்த்திட்டேன்... பிஸியாக இருப்பதாகத் தான் சொன்னானே ஒழிய கதவை திறக்கவே இல்லை, இதில் இவ்வளவு நேரம் ஆகியும் லைட் வேற எரிஞ்சுக்கிட்டு இருக்கு.... அவனை நினைச்சா எனக்கு ரொம்பப் பயமா இருக்குங்க.... அந்தப் பொண்ணு ஏன் தான் இப்படிப் பண்றாளோ தெரியலை.... அவனோட கோபம் அவளுக்கு நல்லா தெரியும், இருந்தும் அவனை மேற்கொண்டு கோபப்படுத்திக்கிட்டே இருக்காளோன்னு தோணுது, நீங்களாவது கொஞ்சம் போய் என்னன்னு பாருங்களேன்.." என்றார்.


"சங்கீதா, உனக்கு எத்தனை தடவை சொல்றது.... அவன் ஒண்ணும் சின்னப் பையன் இல்லை, அது மட்டும் இல்லாமல் இப்ப பிஸினஸ்ல வேற அவன் இறங்கிட்டான்... அவன் பிஸியா இருக்கேன்னு சொன்னால், பிஸியாகத் தான் இருக்கான்னு அர்த்தம்.... எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற... பயப்படாம தூங்கும்மா..." என்றாவர் திரும்பி தூக்கத்தைத் தொடர்ந்தார்.


ஆனால் சங்கீதாவிற்குத் தான் தூக்கம் தூரப்போனது.


அங்குத் தன் அறைக்குள் அடிப்பட்ட சிறுத்தையைப் போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை... தான் காதலித்த கனிகா அவனை இந்த அளவிற்கு ஒதுக்க மாட்டாள்... நிராகரிக்க மாட்டாள்.


தானும் தவறு செய்தவன் தான், ஆனால் தான் இவ்வளவு இறங்கி வந்தும் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள் என்றால் அவள் மனதில் இருப்பது என்ன என்று குழம்பியவனுக்கு மன்னிப்பு மட்டும் மனதில் பட்ட காயங்களை ஆற்றிவிடாது என்று புரியவில்லை.


அவளின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு, அவதூறாகப் பேசி, நடைபிணமாக இரண்டு வருடங்கள் தவியாய்த் தவிக்க விட்டவன், அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று கூட அறிய முற்படாதவன், அவளின் இதயத்தில் ஏற்பட்ட வடுக்களை ஆற்றாமல் அவள் விருப்பம் இல்லாமல் அவளை மணந்தவன், எல்லாவற்றுக்கும் மேல் அந்தச் சின்னப் பெண்ணை மூர்க்கத்தனமாக ஆட்கொண்டவன்.


அவன் மனதில் இது எதுவும் தவறாகத் தெரியவில்லை.


தான் மன்னிப்பு கேட்டவுடன் தன்னைத் தேடி அவள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருப்பவன்... இதோ அவள் வரவில்லை என்றதும் கொந்தளித்துக் கொண்டிருப்பவன்.


விடிய விடிய தூங்காமல் ஆத்திரத்திலும் எரிச்சலிலும் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தவன், விடிந்ததும் அவளைக் காண கிளம்ப எதிர்ப்பட்ட சங்கீதா அவனைத் தடுத்துவிட்டார்.


"ஹர்ஷா... கோபத்தில் எடுக்கிற எந்த முடிவும் சரியா வராதுப்பா.."


"மாம், ப்ளீஸ் என்னைய போக விடுங்க... இதுக்கு மேலும் பேசாம இருக்க எனக்குப் பொறுமை இல்லை.... அவளுக்கு நான் யாருன்னு காட்டணும்....ஒண்ணு, அவ என் கூடச் சேர்ந்து வாழணும் இல்லை, டிவோர்ஸ் பண்ணிட்டு என்னை விட்டு தூரப் போயிடணும்...."


ஹர்ஷாவின் பதிலில் அதிர்ந்தவர்,


"ஹர்ஷா, என்ன பேச்சுப்பா இது.... டிவோர்ஸ் கிவோர்ஸ் அப்படின்னுட்டு.... அது கல்யாண வீடு... நீ போய் எதாவது பெரிய பிரச்சனை பண்ணிடாத... புரிஞ்சுக்க... இன்னும் ஒரு இரண்டு வாரம் பொறு... அதுக்குள்ள நானும் உங்கப்பாவும் கனிகாவோட அப்பாக்கிட்ட பேசி இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு பண்றோம்.."


"அவளாவது உங்க எல்லோரோட பேச்சையும் கேட்பதாவது... அப்படிக் கேட்பதாக இருந்த எங்க மேரேஜ் அன்னைக்கு நீங்க பேசினப்போ கேட்டுட்டு இங்க வந்திருக்கணும்... ஆனால் அவ திமிரா நான் போட்ட ஜ்வெல்ஸைக் கூடத் தயங்காம கழட்டிக் கொடுத்துட்டு போய்ட்டா..." என்றவன் விருட்டென்று வெளியே சென்றான்.


என்ன பிரச்சனையை இழுத்துட்டு வரப் போகிறானோ? அதுவும் கல்யாண வீட்டில் என்று சங்கீதா அஞ்சிக் கொண்டு இருக்க, நேரே அகிலின் வீட்டிற்குக் காரை செலுத்தியவனை அலைபேசி அழைத்தது... அகில் தான் அழைத்திருந்தான்.



இன்று தங்கள் வீட்டினருடன் கனிகாவும் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்ல போவதாகவும், திரும்ப வருவதற்கு எப்படியும் மதியம் ஆகிவிடும் என்று கூறினான்.



அதனால் தன் அலுவலகத்திற்குக் காரை திருப்பியவன் இன்று மாலை வரை காத்திருந்து பின் அவளைச் சந்திப்பது என்று முடிவு செய்தவனை வேலைகள் தன்னுள் ஆழப் புதைத்துக் கொள்ள மாலை வரை அவனால் நகரவும் முடியவில்லை.



அறையில் இருந்த கடிகாரம் மணி ஐந்து என்பதைக் காட்ட அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வெளியில் வந்தவன் அகிலின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.



கனிகா தன்னுடன் வர மறுத்தாலும் அவளை எப்படியும் அழைத்து வந்து விட வேண்டும் என்று கறுவிக் கொண்டவன் விரைவாகக் காரை செலுத்தி அகிலின் வீட்டின் முன் நிறுத்தினான்.


குருக்ஷேத்திரம் படித்தவர்களுக்கு அர்ஜூனின் "Like Father Like Son.." என்ற வாக்கியங்கள் நியாபகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.. அதுவும் கண்டிப்பாக ஆதித்யா ஆர்மி இதனை மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.. அவர்களில் காதலா கர்வமா படிக்காதவர்களுக்கு, அர்ஜூன் திவ்யாவிடம் ஆதித்யாவைப் பார்த்து ஏன் எவ்வாறு கூறினான் என்பதற்குப் பதில் அடுத்த அத்தியாயத்தில் இருக்கின்றது? ;-) ;-)

தொடரும்
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் 24


தன் கணவனின் வரவை எதிர்ப்பார்க்காத கனிகா வீட்டின் முன் அறையில் அமர்ந்து மாலதி கணேசனுடனும் சுந்தரம் மற்றும் சில உறவினர்களுடனும் பேசிக் கொண்டிருக்க அழைப்பு மணி அடிக்கவும் கதவை திறந்த அகில் ஹர்ஷாவை கண்டதும் வியந்து நிற்க,


"ஹாய் அகில், மே ஐ கம் இன்?" [Hi Akil, May i come in?] " என்றான்.


"வாங்க ஹர்ஷா, இது என்ன கேள்வி, உள்ள வாங்க" என்ற அகில் திரும்பி கனிகாவைப் பார்க்க, அங்குக் கொஞ்சமும் ஹர்ஷாவை எதிர்பார்க்காதவளுக்குத் திக்கென்று இருந்தது தன் கணவனைக் கண்டதும்.


கலங்கி போய் விறுவிறுவென்று சமையல் அறைக்குள் நுழைந்தவள் காஃபி போடும் சாக்கில் வெளியில் தலை காட்டவில்லை.


தன்னைக் கண்டதும் ஓடியவளை பார்த்திருந்தவன் "எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான்" என்று எண்ணிக் கொண்டு சோஃபாவில் அமர, அவன் எதிரில் அமர்ந்தார்கள் சுந்தரமும் கணேசனும் அகிலும்.


அவனுக்கு இடப்புறம் போடப்பட்டிருந்த மற்றுமொரு சோஃபாவில் மாலதியின் சகோதரர்கள் அமர்ந்திருக்க மாலதியும் சமையல் அறைக்குள் நுழைந்தார்.


அங்குக் கனிகாவை பார்த்தவர் "என்னடா காஃபி போட்டுட்டு இருக்கியா?" என்க,


"ஆமாம் அத்தை, இதோ போட்டு முடிக்கப் போறேன்.... நீங்க கொண்டு போய்க் கொடுக்கிறீங்களா?"


"ஆஹா வந்திருக்கிறது, உன் வீட்டுக்காரர், நீ தான் போய்க் கொடுக்கணும்.."


"அத்தை, எனக்கு அவர பார்த்தாலே கை கால் எல்லாம் உதறுது... ப்ளீஸ் அத்தை.. நீங்க போய்க் கொடுங்க.."


"இவ்வளவு பயம் இருக்கும் போதே நீ அவரை மேற்கொண்டு கோபப்படுத்திட்டே இருக்கக் கனிகா... அவரோட முகத்தைப் பார்த்தா ரொம்பக் கோபமா இருக்கிற மாதிரி தெரியுது.. எனக்கே அவர பார்த்தா பயமா இருக்கு... இப்போ நீ வெளியில் போகலை அது நிச்சயம் பிரச்னையை இன்னும் பெரிசா தான் பண்ணும்... போ... நீயே போய்க் கொடு..."


சரி என்றவள் வேறு வழியில்லாமல் வெளிப்படையாக நடுங்கும் கைகளில் காஃபி கப்புகளை வைத்திருந்த ட்ரேயை ஏந்தி ஹாலிற்கு வர, அங்கு அவன் அடிபட்ட சிங்கம் போன்று தன்னைப் பார்த்திருந்த விதத்தில், முறைத்த முறைப்பில் சகலமும் ஆட ஏற்கனவே கைகள் நடுங்கி கொண்டிருக்க அவன் மேல் காஃபியை கொட்டப் போவது நிச்சயம் என்றே தோன்றியது.


மெதுவாக அவனை நோக்கி நடந்து வந்தவள் மற்றவர்களுக்குக் காஃபியைக் கொடுத்துவிட்டுக் கடைசியாக அவனிடம் வர அங்குக் கால் மேல் கால் போட்டுச் சட்டமாக அவன் அமர்ந்திருந்த தோரணையில் மனம் கன்னாபின்னாவென்று ஆட்டம் காண, அவளை மெதுவாக நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில் தெரிந்த வெறி அவளின் இதயத் துடிப்பை பல மடங்கு அதிகரித்தது.


காஃபி கப்பை அவள் நீட்ட, "வேண்டாம்" என்று மறுத்தவன் சுந்தரத்தை பார்த்து,


"அங்கிள், உங்களிடம் சில விஷயங்கள் பேசணும்னு தான் வந்தேன்... பேசலாமா?" என்றான்.


கேள்வி தன் மாமனாரைப் பார்த்து தான் கேட்டான், இறுதியில் பார்வை என்னவோ கனிகாவிடம் வந்து நிலைத்தது.


அதிர்ந்தவள் அதே அதிர்ச்சியுடன் காஃபி ட்ரேயை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு மாலதியின் அருகில் வந்து நின்று கொண்டவள், 'மாலதி அத்தையின் உறவுக்காரர்கள் வேறு இருக்கிறார்களே... என்ன கேட்கப் போகிறாரோ?' என்று அச்சத்துடன் அவனைப் பார்க்க .


"அங்கிள், கனி என்னோட வாழ வரப் போகிறாளா? இல்லையா?" என்றான் அதிகாரமான குரலில்.


அவன் பட்டென்று கேட்டதும் சுந்தரத்தால் பதில் ஒன்றும் கூற முடியவில்லை.


அது மட்டும் இல்லாமல் அங்கு அவர்களைத் தவிர மற்ற சொந்தங்களும் அமர்ந்திருக்க, அவருக்குத் தன் மருமகனின் கேள்வியும் அவன் முகத்தில் தெரிந்த கோபமும் கலக்கத்தைக் கொண்டு வந்தது.


ஏனெனில் அவனுடைய அதிரடி ஆட்டங்களை அவன் இந்தியா வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறாரே!


ஹர்ஷாவின் கேள்விக்குக் கனிகா தான் பதில் சொல்ல முடியும் என்பது போல் தன் மகளைத் திரும்பி பார்க்க, அவளோ உள்ளும் புறமும் நடுங்கி கொண்டு இருந்தவள் தந்தையைப் பார்க்கவும் முடியாமல் தலை கவிழ.


கனிகாவை உறுத்து பார்த்தவன், "கனி, என்னைப் பாரு..." என்றான் குரலில் அழுத்தத்தைக் கூட்டி.


மெல்ல தலை நிமிர்ந்தவள் அவள் கணவனை இப்போ இங்க பேச வேண்டாம் என்பது போல் கெஞ்சும் தோரணையில் கண்களைச் சுருக்கி இறைஞ்ச.


"என்ன கனி? உன் முடிவு என்ன?" என்றான் மிரட்டலாய்.


அவன் பார்வையில் அவளைச் சுட்டுப் பொசுக்காதது ஒன்றே குறையாக இருக்க மிக மிகக் கடினத்தொனியில் கேட்ட கணவனை ஏறெடுத்து பார்த்தவளின் விழிகளில் விழி நீர் கோர்க்க அவளின் திகில் ஒவ்வொரு அங்கத்திலும் பிரதிபலித்தது.


அவன் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.


அவனுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் வீச்சை அவளும் உணர்ந்திருந்தாள்.

எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேள்விக் கேட்ட கணவனைப் பார்க்க தைரியம் இல்லாமல் மீண்டும் தலை கவிழ்ந்தவளை கண்டவன் அதற்கு மேல் பொறுமை இல்லாமல்,


"ம்ம், என் கண்ணைப் பார்த்துப் பதில் சொல்லு.." என்று கத்தினான்.


அவனின் கத்தலில் மற்ற அனைவருக்கும் திக்கென்றது என்றால் அவளுக்கோ அவளது சப்த நாடியும் ஒடுங்கியது... அவனை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.... அத்தனை கோபம் அவன் கண்களில்.


அப்பொழுதும் பதில் சொல்லாமல் நிற்பவளை கண்டு விருட்டென்று சேரில் இருந்து எழுந்தவன் அத்தனை பேர் சுற்றி இருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாது தன் மனதில் இருந்தவற்றைப் பொரிய ஆரம்பித்தான்.


"ஏன்டி? உன்னைய அப்படி என்ன ஏமாத்திட்டேன்?? நான் அமெரிக்காவிற்குப் போகும் முன் என்னோட விருப்பத்தைச் சொன்னேன்... ஆனால் அதுக்கு நீ சம்மதிக்கலை.. அதுக்குக் காரணம் என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லை... என் மேல் நம்பிக்கை இல்லாதவளை காதலிச்சது தப்புன்னு உன் மேல் எனக்குக் கோபம்... பிறக்கும் போதே வசதியான குடும்பத்தில் பிறந்தவன், இயற்கையிலேயே எனக்குப் பிடிவாதம் ஜாஸ்தி, அதனால நீ என்னைய அவமானப்படுத்திட்டதா நினைச்சு உன் கிட்ட பேசாம இருந்தேன்.... அதற்கு அப்புறம்..." என்று அங்கு இருந்தவர்களைப் பார்த்து ஒரு நொடி தயங்கியவன் பின் தன் மனைவியைப் பார்த்துத் தொடர்ந்தான்.


"அப்புறம் நடந்தது உனக்கும் அகிலுக்கும் தெரியும்... இதில் என் தப்பு என்ன இருக்கு..... அப்படியும் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணின உடனே அத கேள்விப்பட்டு நான் ஓடி வரலை.... தொலைஞ்சான்னு சந்தோஷமாவ இருந்தேன்?? ஏன் என்னால வேற பொண்ண லவ் பண்ண முடியாதா? இல்ல உலகத்தில உன்னை விட்டா வேற பொண்ணே இல்லையா? இருந்தும் உன்னைத் தேடித் தானடி ஓடி வந்தேன்.... அப்பவும் நீ என்னைய ஒதுக்கின, இருந்தும் உன்னைய கைவிடாம கல்யாணம் பண்ணிக்கலையா..... கல்யாணம் ஆகி இத்தனை மாசமாகியும் நீயா வரணும்னு எதிர்ப்பார்த்திட்டு இருக்கேன்... ஆனால் நீ மனசு மாறதா தெரியலை..."


"எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்லை... இப்போ சொல்லு, உன் முடிவு என்ன? என் கூட வாழப் போறியா? இல்லை, உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு போய்ட்டே இருக்கட்டுமா?" என்று அலுங்காமல் குலுங்காமல் ஒரு பெரிய குண்டை அங்கு இருந்த அனைவர் தலையிலும் போட்டான்.


விவாகரத்து என்று வார்த்தையைக் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் தன் பிடிவாதத்தைத் தளர்த்தாமல் ஒட்டு மொத்த தைரியத்தையும் வர வழைத்துக் கொண்டு,


"சரி, உங்க இஷ்டம்.... அது தான் உங்க விருப்பம் என்றால் அதே செய்யுங்க, நீங்களாவது நல்லா இருங்க..." என்று சொல்லி முடிக்கவில்லை, காற்றை விட வேகமாக அவள் அருகில் நெருங்கியவன்.


"ஓங்கி அறைஞ்சேன்னா பாரு.. கொஞ்சம் கூடப் பிடி கொடுக்காம எப்ப பாரு இதேயே சொல்லிக்கிட்டு... இப்போ நீ என் கூட வரப் போகிறாயா, இல்லை நான் தூக்கிட்டு போகட்டுமா??" என்று மிரட்ட, மாலதியிடம் ஒன்றியவள் மெல்லிய குரலில், "நான் வரலை..." என்றாள்.


இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்று முடிவு செய்தவன் சுந்தரத்தையும் கணேசனையும் திரும்பி பார்த்து,


"ஸாரி அங்கிள், I have no choice, எனக்கு இத தவிர வேறு வழி தெரியலை" என்றவன் அவர்கள் என்ன ஏது என்று யோசிக்கும் முன் அவள் கரம் பற்றி இழுக்க மல்லிகை பொதி போல் அவன் மேல் விழுந்தவளை அலேக்காக இரண்டு கைகளிலும் தூக்கியவன் அகிலை பார்த்து, "பை அகில்" என்று விட்டு வாசல் நோக்கி நடந்தான்.


நடப்பது அனைத்தையும் கண்டு கொண்டு இருந்த பெரியவர்களுக்கு அவனின் இந்தத் திடீர் செயல் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால் அங்கு இருந்த இளையவர்களுக்குச் சினிமாக்களில் வரும் காதல் காட்சி போல் தெரிய ஒருவொருக்கொருவர் திரும்பி பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.


நொடி நேரத்தில் அவன் சட்டென்று தன்னைத் தூக்கியது அவள் மூளையில் உரைக்கச் சில விநாடிகள் பிடித்தது.


அவன் தன்னை இழுத்த வேகத்தில் தடுமாறியிருந்தவள் பிடிமானத்திற்காக அவன் சட்டையின் பின் பக்க காலரை இறுக்கமாக பற்றிக் கொள்ள, அவள் காதிற்கருகில் குனிந்தவன் கிசுகிசுப்பான குரலில்,

"இப்ப என்னடி பண்ணுவ என் பொண்டாட்டி?" என்றான்.


அவன் தோள் வழியே பின்னால் நின்ற பெரியவர்களையும் சிறியவர்களையும் பார்த்தவள் கூச்சத்தில்,

"ஐயோ! என்ன இது? எல்லார் முன்னாடியும், ப்ளீஸ் இறக்கிவிடுங்க..." என்றாள் சன்னமான குரலில்.


"கீழே இறக்கிவிட்டால் நீ உடனே என் கூட வந்துவிடுவியா?" என்று சிரிக்க,


"ப்ளீஸ், முதல்ல இறக்கிவிடுங்க... நான் வருகிறேன்.." என்றாள்.


"ப்ராமிஸ்"


"ப்ராமிஸ்" என்றவளை மெல்ல கீழே இறக்கி விட, அவனுடன் செல்லாமல் இறக்கி விட்ட இடத்திலேயே அவள் தயங்கி நிற்க, தயங்கியவளின் இடையை இறுக்கப் பற்றியவன் "வா" என்றான் அழுத்தமாக.


"இல்லை, என் ட்ரெஸ் எல்லாம் எடுக்கணும்.." என்று இழுக்க,


"வேற வாங்கிக்கலாம், இப்போ உன்னை விட்டால் நீ ஏதாவது ரூமுக்குள்ள போய்க் கதவச் சாத்திக்கிட்டாலும் சாத்திக்குவ.." என்றவன் இடையில் பதிந்திருந்த கையில் அழுத்தத்தைக் கொடுக்க, அதற்கு மேல் அவனோடு போராடுவது நல்லதற்கு அல்ல என்று முடிவு செய்தவள் அச்சத்துடன் அவனுடன் நடந்தாள்.


அவளைக் காரில் அமரச் செய்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் வெளியே பார்க்க அவர்களைச் சிரித்த முகத்துடன் பார்த்திருந்தான் அகில்.


அவனை நோக்கி கையை ஆட்டிய ஹர்ஷா காரை கிளப்ப, அவர்களின் கார் கிளம்பும் வரை வீட்டின் வாயிலில் நின்றிருந்த அகில் இனி கனிகாவின் வாழ்கையை ஹர்ஷா பார்த்துக் கொள்வான் என்ற மன நிம்மதியில் வீட்டிற்குள் செல்ல திரும்ப எத்தனிக்க, சர்ரென்று வாயிலில் வந்து நின்றது ஒரு மஹிந்திரா ஸைலோ.


காரின் சத்தத்தில் ஹர்ஷா தான் திரும்பி வந்துவிட்டானோ என்று பதறிய அகில் திரும்பி பார்க்க, காரில் இருந்து இறங்கினர் நிகிலாவும் அவள் கணவனும்.


நேற்று தான் திருமணம் முடிந்திருந்தாலும், நிகிலாவால் தன் பெற்றோரையும் அண்ணனையும் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை என்று கணவனை நச்சரித்து அவர்களைச் சந்திக்க வந்திருந்தாள்... தன் கணவனுடன்.


அவளைக் கண்டதும் ஒரு பக்கம் அது ஹர்ஷா இல்லை என்ற நிம்மதியிலும் மறு பக்கம் திருமணம் முடிந்த தங்கை என்ற மகிழ்ச்சியிலும் அவர்களை ஆர்வத்துடன் வரவேற்றவன் அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல முற்படும் பொழுது நிகிலாவிற்கும் அவள் கணவனுக்கும் பின் உள்ளே சென்று கொண்டு இருந்தவனின் முகத்தை மழைச் சாரல் போல் வீசி மறைத்தது மெல்லிய துப்பட்டா.


முகத்தை மறைக்கவும் மெதுவாகத் துப்பட்டாவை விலக்கியவன் திரும்பி பார்க்க, அங்கு அழகு மயில் என நின்று கொண்டிருந்தாள் நிகிலாவின் நாத்தனார்.... சௌமியா.


நிகிலாவை விட ஒரு வயது சிறியவள்... இருபத்தி ஓரு வயதே ஆன சின்னஞ்சிறு சிட்டு.. கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறாள்.


அவளைப் பார்த்ததும் சிறு புன்னகையை உதிர்த்தவன்,

"ஸாரி, நிகிலாவும், அத்தானும் மட்டும் தான் வந்திருக்காங்கன்னு நினைச்சேன், உங்களைக் கவனிக்கலை.. உள்ளே வாங்க.." என்று அழைக்க, அவனருகே வந்தவள் தலை கவிழ்ந்தவாறே மெல்லிய குரலில்,


"நீங்க எப்போ தான் என்னைக் கவனிச்சிருக்கீங்க.." என்றாள்.


நிகிலாவை பெண் பார்க்க வந்த அன்று சௌமியாவும் தன் அண்ணனுடன் வந்திருந்தாள்.. சௌமியாவின் அண்ணன் நிகிலாவை பார்த்து மயங்கினான் என்றால், சௌமியா அகிலை பார்த்து மனம் தடுமாறினாள்.


சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பணிவாக நடந்து கொண்டவனின் குணமும், ஆளை அசத்தும் உயரத்துடனும் இலட்சணமான முகத்துடனும் இருந்தவனின் அழகும் அவளை ஈர்த்தது.. பின் அன்றொரு நாள் ஹர்ஷாவே இவனைப் பார்த்து அச்சப்பட வைத்த அழகு அல்லவா!


உள்ளே வாங்க என்று மீண்டும் சொன்னவன் நகர முற்பட, "உங்களிடம் கொஞ்சம் பேசணும்..." என்றாள் தயங்கியவாறே.


"என்னிடமா?"


"ம்ம், உங்களிடம் தான்... தனியா..."


என்னிடம் பேச என்ன இருக்கிறது? அதுவும் தனியா என்று யோசித்தவன்,


"வீட்டில் எல்லாரும் இருக்கிறார்கள், நாம இரண்டு பேரும் இங்க வாசலிலேயே நிற்பது நல்லா இருக்காது... வாங்க உள்ள போவோம்..." என்றவன் வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க, சட்டென்று அவன் கரத்தை பற்றி இழுத்தாள்.


அவள் என்னவோ மெதுவாகத் தான் இழுத்தாள், ஆனால் அவன் அதனை எதிர்பார்த்திராததால், அவள் இழுத்த இழுப்பிற்கு அவள் மேல் மோத, தளிர் மேனியவள் தடுமாறி விழப் போனாள்.


அவளும் இவன் தன் மேல் மோதுவான் என்று எதிர்பார்க்கவில்லை, அவனும் தன்னைக் கரம் பற்றி அவள் இழுப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை... சடுதியில் இவை நடந்து விடத் தடுமாறி விழப் போனவளை சட்டென்று இடைப் பற்றி நிமிர்த்தினான்.


மாலை அந்தி சாயும் நேரம், வாயிலில் எரிந்து கொண்டு இருந்த மெல்லிய விளக்கு, சில்லென்று வீசிய காற்று, முதன் முறையாக, இது வரை அறிந்திராத ஒரு இளம் பெண்ணின் ஸ்பரிசம் என்று அகிலை திக்குமுக்காட வைத்தது என்றால், இது நாள் வரை அந்நியரின் கைப் படாத வெற்று இடையில் ஒரு ஆணின் தொடுகையும் அதன் அழுத்தமும் அவளின் இதயத் துடிப்பை ஆயிரம் மடங்கு அதிகரிக்க வைத்தது.


அவனிடம் தனியாக ஒன்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் சத்தியமாக இப்படியொரு சம்பவத்தைக் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.


தான் பேச வேண்டியதை சுத்தமாக மறந்து போனவள் பரிதவிப்புடன் அவனைப் பார்க்க, அவளின் பரிதவிப்பை கண்டவன் அவளை இமைக்காது ரசித்துப் பார்க்க, அவனின் பார்வை தன் உள்ளத்தை ஊடுருவுவதை உணர்ந்தவள் சட்டென்று தனது விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.


அவளின் பேச்சற்ற மௌன நிலையை ஆழ்ந்து இரசித்துப் பார்த்தவன் அவள் முகத்திற்கு வெகு அருகில் குனிந்து,

"என்னமோ பேசணும்னு சொன்னியே.. இப்படியே பேசுவோமா, இல்லை தள்ளி நின்னு பேசுவோமா" என்று கிசுகிசுக்க, தன்னிலை அறிந்த மெல்லியவள் கூச்சத்தில் முகம் செம்மையுற்று அவனை விட்டு விலக,


அவளின் நாணத்தையும் அவள் தன் வெட்கத்தை மறைக்கப் பற்களால் கீழுதட்டை கடித்துத் தன்னைச் சமன் படுத்திக்கொள்கிறாள் என்பதனையும் தன்னை அறியாமல் ரசித்துப் பார்த்தவன் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர பெரும் பாடுபட்டான்.


ஒரு வழியாக இந்த உலகத்திற்குத் திரும்பி வந்தவன் தாங்கள் இன்னும் வாயிலிலேயே இருப்பதை உணர்ந்து, "வா, யாராவது தப்பா நினைப்பாங்க.." என்று சொல்ல,


அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை மனதிற்குள் உள் வாங்கிக் கொண்டாள்.. ஆனால் அவனின் ஸ்ப்ரிசத்தில் சப்த நாடியும் ஒடுங்கி இருந்ததால் அவனிடம் இந்த நிமிடம் பேசுவதற்குத் தன்னால் நிச்சயமாக முடியாது என்பதை உணர்ந்து அவனுடன் வீட்டின் உள்ளே சென்றாள்.


நிகிலாவும், அவள் கணவனையும் கண்ட மாலதிக்கும் கணேசனுக்கும் அத்தனை சந்தோஷம்.. பின் ஆசை மகளைத் திருமணம் செய்து கொடுத்த பின் அவள் தன் கணவனுடன் தங்களைப் பார்க்க வருவது எத்தனை பெரிய பூரிப்பு பெற்றோருக்கு.


இரவு வரை பேசிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வீட்டிற்குச் செல்ல கிளம்ப, தன்னை அறியாமல் அகிலை நிமிர்ந்து பார்த்த சௌமியா அவன் தன்னைக் கண்டு கொள்ளாமல் தங்கையுடனும் அவள் கணவனிடமும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு முகம் வாடியது.


ஆனால் அவளுக்கு எங்குத் தெரியப் போகிறது?

அவன் வீட்டில் நுழைந்ததில் இருந்து அவளைத் தான் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று.


அவர்கள் விடைபெற்று கிளம்ப, சற்றுப் பின் தங்கியவள் யாரும் அறியாதவாறு அகிலை நெருங்கி,

"சன்னமான குரலில் "என்னைப் பிடிச்சிருக்கா?" என்றாள்... மனம் முழுவதும் அவன் என்ன சொல்ல போகிறானோ என்ற தவிப்பில்.


ஒன்றும் பேசாமல் அவளைத் திரும்பி பார்த்தவன், இத்தனை பேர் அருகில் இருக்கும் பொழுது என்ன பேசுவது என்று தயங்க, அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் வெளியே செல்வதைக் கண்டவளின் இதயம் வலித்தது.


வீட்டின் வாயிலில் அனைவரும் நின்று சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருக்க, மெதுவாக யாரும் அறியாவண்ணம் அவளை நெருங்கியவன், அவள் மீது உரசுமாறு நிற்க, சட்டென்று திரும்பியவளை உதடுகளில் புன்னகை நெளிய பார்த்தவன் அவள் தன்னை அண்ணாந்து பார்க்கும் பொழுது அவளைச் சீண்டுவதற்காக வேறு பக்கம் திரும்பினான்.


அதில் அந்தத் தளிரின் மனம் அடி பட்டுப் போனது.. அவன் தன்னை விரும்பவில்லையோ, நாம் தான் அவனை நினைத்துக் கனவுக் கண்டு கொண்டு இருக்கிறோமா என்று மனம் கசங்கியவள் அவனை விட்டுக் காரில் ஏறப் போனாள்.


அவளின் முகம் மாறுதலை கண்டு மனம் சிலிர்த்தவன் இதற்கு மேல் அவள் பொறுமையைச் சோதிக்காமல் மற்ற யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குறும்பாய் கண் சிமிட்டினான்.


அவள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.. முல்லைப் பூவாய் முகம் மலர்ந்தவள் முகம் செவ்வானமாய்ச் சிவக்க, போய் வருகிறேன் என்பது போல் தலை அசைத்தாள்.


அவள் நிகிலாவை பெண் பார்க்க வந்த அன்றே அகிலையும் அறியாமல் அவன் மனதிற்குள் நுழைந்துவிட்டாள்... ஆனால் இந்தத் திருமணம் நடக்கும் வரை அதுவும் அவளின் மனம் அறியாமல் தன் விருப்பத்தைச் சொல்ல கூடாது என்று இருந்தவனுக்கு, 'அவனுக்கு அவள், அவளுக்கு அவன்' என்று ஏற்கனவே விதி முடிவு செய்திருந்தது போல் இவை அத்தனையும் நடந்துவிட்டது.


மெல்லிய துப்பட்டா அங்கு ஒரு அழகான காதலுக்குக் கெட்டியான பாதையாகி போனது.. இன்னும் ஒரு காதல் சகாப்தம் துவங்கியது.


அகில்.... நல்ல மனம் கொண்டவன், தனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் தன் மாமன் மகள் வாழ்க்கை மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் இருக்க வேண்டும் என்று அவளுக்காக இறுதி வரை போராடி அவர்கள் ஒன்று சேர பாலமாக இருந்து வந்தவன்.


(இன்று அவன் வாழ்க்கையில் காதல் மீண்டும் ஒரு முறை அடி எடுத்து வைத்திருக்கிறது... மனம் போல் வாழ்க்கை என்பது போல் அவன் மனதிற்கு ஏற்ற பெண் சௌமியா.. இருவரும் ஒன்று இனைந்து செம்மையாக வாழ்க்கை நடத்துவார்கள் என்று மனமார வாழ்த்தி அகில் என்ற கதாபாத்திரத்திற்கு விடை கொடுப்போம்!)


*************************************************


அங்குக் காரில் தன்னவள் தன்னுடன் பல வருடங்களுக்குப் பிறகு இத்தனை அருகில் அமர்ந்திருப்பதைக் கண்ட ஹர்ஷாவிற்கு மனம் கிளர்ச்சியில் மகிழ்ந்திருந்தது.


கார் அகிலின் வீடு இருக்கும் தெருவில் இருந்து மறையும் வரை அமைதியாக இருந்த கனிகா அவனைத் திரும்பி பார்த்தவள் விழிகளில் தேங்கி இருந்த நீரோடு,


"இது உங்களுக்கே நல்லா இருக்கா?" என்றாள்.


"எது?" என்று அவளைப் பார்த்தவனின் பார்வை சத்தியமாகக் கண்ணியமான பார்வை இல்லை.


அவனின் கழுகு பார்வையில் தெரிந்த காதலுடன் கூடிய தாபத்தைக் கண்டவளுக்கு ஒரு நொடி உடல் சிலிர்த்தாலும் அன்று அவன் நடந்து கொண்ட விதம் கண்முன் தோன்ற, உதடு கடித்து அழுகையை அடக்கியவள் ஜன்னலின் வழியே வெளியே பார்க்க, அவள் கரத்தைப் பற்றித் தன்னருகில் இழுத்தவன் அவள் தோளின் மீது கரம் போட்டு இனி ஒரு நொடி கூட உன்னைப் பிரிய மாட்டேன் என்று உணர வைப்பது போல் இறுக்கி அணைத்துப் பின் விடுவித்தான்.


காரைச் செலுத்தியவாறே தன் அன்னையை அழைத்தவன் கனிகா தன்னுடன் வருவதாகச் சொல்ல சங்கீதாவால் தன் செவிகளையே நம்ப முடியவில்லை.


ஆனால் தன் மகனின் பிடிவாதமும் கோபமும் தெரிந்தவருக்கு எப்படியும் அவளை வற்புறுத்தித் தான் அழைத்து வந்திருப்பான் என்று புரிந்தது.


அவர்கள் வருவதற்குள் ஆரத்தி கரைத்து வைக்கச் சொன்னவர் தன் கணவரையும் அழைத்து விவரத்தை சொன்னார்.


வாயிலில் அனைவரும் காத்திருக்க ஹர்ஷாவின் கார் வேகமாக வந்து நின்றது அந்த அரண்மனை போன்ற வீட்டில்.


வீட்டின் வெளிப்புற தோற்றத்தையும், அதன் பிரமாண்டத்தையும் பார்த்து அதிர்ந்த கனிகா காரை விட்டு இறங்குவதற்குத் தயங்க, அவள் புறம் வந்தவன் காரின் கதவை திறக்க, தங்கள் மகனின் செயலில் ஒருவொருக்கொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர் சிதம்பரமும் சங்கீதாவும்.


திமிராய், கர்வமாய், சிங்கம் போல் வலம் வந்த மகன் காதலில் கட்டுண்டு, அவள் மீதான காதலினால் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, மனைவியின் அருகாமைக்குத் தவித்து, மிகப் பெரிய போராட்டதிற்குப் பின் இன்று அவளை அழைத்துக் கொண்டு வந்து இருக்கிறான்.... மனம் நிறைந்து இருந்தது அந்தத் தம்பதியினருக்கு.


கனிகா இறங்கியதும் அவள் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டவன் அன்னையைப் பார்த்து புன்னகைக்க, அவர்கள் அருகில் வந்தவர் ஆரத்தி சுற்றி எடுக்க, வலது காலை வைத்து கனிகா உள்ளே நுழைய, அந்த அரண்மனை போன்ற வீட்டின் உட்புறத் தோற்றத்தைக் கண்டவளுக்குக் கிட்டத்தட்ட மயக்கமே வந்தது.


தன்னை அறியாமல் தன் கணவனின் விரல்களை இறுக்கி பற்றிக் கொண்டவள் விழிகளை அகல விரித்துச் சுற்று முற்றும் மருண்ட பார்வை பார்க்க அவளின் அருகில் குனிந்தவன்,

"இந்த நாளுக்காக மூன்றரை வருடங்கள் காத்திருந்தேண்டி..." என்றான் காதல் வழியும் கிசுகிசுப்பான குரலில்.


அது வரை நடப்பதை எதோ கனவு போல் பார்த்திருந்தவளை இந்த உலகிற்குக் கொண்டு வந்தது மிக அருகில் கேட்ட கணவனின் குரல்... திடுக்கிட்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க, இளம் முறுவலுடன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.


முதலில் பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற சங்கீதா விளக்கு ஏற்ற சொல்ல, கண்களை மூடி மனமுருக பிராத்தித்தவள் அடுத்தடுத்து ஒவ்வொரு அறையாகப் பார்க்க அதற்குள் ஹர்ஷா,

"மாம், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.... நீங்க அவளைப் பார்த்துக்கங்க..." என்றவன் வெளியேறினான்.


என்ன தான் இதற்கு முன் ஒன்று இரண்டு தடவை தன் மாமனார் மாமியாரைப் பார்த்திருந்தாலும் அவளுக்குப் பழக்கப்பட்டவன் ஹர்ஷா மட்டுமே.


அவனும் சென்றவுடன் தனித்து விடப்பட்டதைப் போன்ற உணர்வு வர, காணாமல் போன கோழிக் குஞ்சைப் போல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த மருமகளைப் பார்க்க சங்கீதாவிற்கு மிகவும் பிடித்துப் போனது.


இறுதியாக ஹர்ஷாவின் அறைக்கு அழைத்துச் சென்றவர்,

"இது தான் கனிகா உங்க ரூம்.." என்க,

அந்த வீட்டின் ஆடம்பரமும், தன் கணவனின் அறையும் அவளுக்குக் கிலி ஏற்றியது.


இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஒரு ஓட்டு வீட்டில் பாய் விரித்துத் தரையில் படுத்து உறங்கி சாதாராண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தவளுக்கு இன்று அரண்மனை போன்ற வீட்டில் தன் கணவனுடன் இத்தனை ஆடம்பரமான பஞ்சு மெத்தையில் படுப்பதை நினைத்துக் கலவரமாக இருக்கத் திகைத்தவள் திரும்பி சங்கீதாவைப் பார்த்தவள் தயக்கத்துடன்,


"அத்தை எனக்கு இவ்வளவு பெரிய மெத்தையில் படுத்துப் பழக்கம் இல்லை... நான் வேணா வேற ஏதாவது ரூமில கீழேயே படுத்துக்கிறேனே..." என்றாள்.


அவளின் பேச்சில் சங்கீதாவிற்குப் புரிந்து போனது.

தங்கள் மகன் பிடிவாதமாய்த் தான் தன் மனைவியை அழைத்து வந்திருக்கிறான், அவள் விருப்பத்தோடு அல்ல என்று... ஒரு பெருமூச்சு விட்டவர்,


"கனிகா, உன்னோட மனசு ஒரு பெண்ணா எனக்குப் புரியுது..... எங்களுக்கே தெரியும்... ஹர்ஷா மேலே தான் எல்லாத் தப்பும் இருக்குதுன்னு... அதுக்கு ஒரு வழியில் நாங்களும் காரணம்... என்னோட பக்கத்திலேயும் சரி, ஹர்ஷாவோட அப்பா பக்கத்திலேயும் சரி, எங்களுக்குக் கூடப் பிறந்தவங்க யாரும் கிடையாது.... எங்களுக்கும் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் குழந்தை இல்லை... அஞ்சு வருஷம் கழிச்சு தான் ஹர்ஷா பிறந்தான்....... அதனால எல்லாப் பக்கமும் அவன் செல்லமா வளர்ந்தான்... இரண்டு குடும்பத்திற்கும் ஒரே வாரிசுங்கறதால அவன் மேல் ஒரு அடி கூடப் படாம அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்தோம்.... அதனால, அவன் கேட்டது அவனுக்குக் கிடைக்கணும், கிடைக்கலைன்னா அவனோட நடவடிக்கைகள் எல்லாமே மாறிடும்..."


"எத்தனையோ தடவை அதைப் பற்றி அவன் கிட்ட பேசியிருக்கிறேன், ஆனால் அவன் கேட்டதில்லை... அதனால வந்தது தான் இந்த எல்லாப் பிரச்சனைகளும்..... ஆனால் அவன் முதலாகவும் கடைசியாகவும் ஆசைப்பட்ட பொண்ணு நீ தான்.... உனக்கும் அவனுக்கும் பிரச்சனை வந்ததுக்குப் பிறகு நான் சில தடவை அமெரிக்கா போய் அவன் கூடத் தங்கியிருக்கேன்.... அப்பெல்லாம் அவன் கிட்டதட்ட நடைப் பிணமா தான் இருந்திருக்கிறான்... ஒரு தடவை கூட என்ன பிரச்சனைன்னு அவன் என் கிட்ட சொன்னதே இல்லை.. எத்தனையோ தடவை மனசு ஒடிஞ்சு அவன் பார் அது இதுன்னு போனப்போ எல்லாம் அவன் மனசுல என்ன இருக்குன்னு நான் கண்டு பிடிக்கிறதுக்குப் பெரும்பாடு பட்டிருக்கிறேன்... ஆனால் அவன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை கூட என்னால வாங்க முடியலை..."


"ஆனால் இப்போ நல்ல புரியுது.... அவனால உன்னை மறக்கவும் முடியாமல் அதே சமயம் உன்னை ஏத்துக்கவும் முடியாமல் தான் அவன் அந்தத் தவி தவிச்சுருக்கான்... ப்ளீஸ்மா, என் பிள்ளை இனியும் கஷ்டப்படறத பார்க்க என் மனசுல தெம்பில்லை... அவன் ஒரு அடங்காத பிள்ளை.. உன் கிட்ட நம்பி அவனை ஒப்படைக்கிறேன், நீ தான் அவனைத் திருத்தணும்.... அவன் உன் மேல் உயிரா இருக்கிறத பார்த்தால் நிச்சயம் அவன் உன் பேச்சை மட்டும் தான் கேட்பான்னு தோணுது... அவனை நீ தான் நல்லா பார்த்துக்கணும்.... கொஞ்சம் பொறுமையா இரும்மா.... எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகி விடும்..." என்று அறிவுரை கூறியவருக்கு உள்ளுணர்வு எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் என்று உணர்த்தியது.


அவரின் நீண்ட உரையைக் கேட்டவளுக்குத் தன் கணவனின் ஆழ்ந்த காதலின் உயிர்ப்புப் புரிந்தது என்றாலும் அவனுடன் ஒரே அறையில் எப்படித் தங்குவது என்ற நினைப்பே கதிகலக்கியது.


சரி என்றவள் அவருடன் கீழே இறங்கி வர ஒவ்வொரு வேலைக்காரர்களையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.


ஏனோ அங்கிருந்த அனைவருக்கும் அவளைக் கண்டமாத்திரத்தில் மிகவும் பிடித்துவிட்டது.


அது அவளின் அமைதியான தோற்றமா, இல்லை தங்களைப் போல் அவளும் பணக்கார வீட்டுப் பெண் ஆக இல்லாததாலா என்னவோ.


ஆனால் சங்கீதாவுடனும் சமையல்காரர்களுடனும் சேர்ந்து இரவு உணவு தயாரிக்க உதவி செய்தவளுக்கு நேரம் நெருங்க நெருங்க ஹர்ஷாவை நினைத்து பயத்தால் உதறல் எடுக்க ஆரம்பித்தது.


'அவரோடு இரவை தனியாகக் கழிப்பதா? அவள் மனதில் அவனைப் பற்றி நினைக்கவும் அவன் வீட்டிற்குத் திரும்பி வரவும் சரியாக இருந்தது.


தொடரும்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top