JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episodes 8 & 9

JLine

Moderator
Staff member
அத்தியாயம் 8



சுய நினைவுக்கு வந்தவள் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று உணர்ந்து ஓட, அது வரை நடந்திருந்தவை அனைத்தையும் ஆடிட்டோரியத்தில் இருந்த ஜன்னல் வழியே பார்த்திருந்த ஹர்ஷாவிற்குக் குழப்பமாக இருந்தது...

எப்படியாவது ரியாவிடம் இருந்து கனிகாவை கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது...

வகுப்பிற்குள் நுழைந்தவளின் முகத்தைப் பார்த்த ஆஷாவிற்கும் இளாவிற்கும் அவள் முகத்தின் சிகப்பிற்கும், அதில் தென்பட்ட வெட்கத்திற்கும் அர்த்தம் புரியவில்லை..

"என்னடி கனிகா, ஏதோ கனவுலகத்தில் இருக்கிற மாதிரி இருக்க... முகமெல்லாம் சிவந்து இருக்கு, என்னாச்சு?" என்று கேட்க,

'அவர்களிடம் நடந்தவற்றைச் சொல்லலாமா வேண்டாமா..' என்று யோசித்தவள் ஏற்கனவே ஹர்ஷா அப்படி.... இப்படி... அவன் வசதிக்கு நீ தகுதியில்லாதவள் என்றெல்லாம் சொன்னவர்கள், இப்பொழுது நடந்ததைச் சொன்னால், வேண்டாம்டி என்று ஏதாவது அறிவுரை கூற ஆரம்பித்து விடுவார்கள் என்று தோன்ற சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.

"இல்லை இவ்வளவு நேரம் வெயில்ல உட்கார்ந்து நோட்ஸ் எடுத்திட்டு இருந்தேன்ல... அதில முகம் சிவந்திருக்கும்..." என்று சமாளித்தவள் வகுப்பில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள். ஆனால் எத்தனை முயற்சித்தும் அவளால் முடியவில்லை.

வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் நாம் இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா?? நமக்கு நடப்பது எல்லாம் நிஜமா?? இல்லை கனவா?? இது எப்படிச் சாத்தியம்?? நம்மை ஒருவர் காதலிக்கிறாரா?? அதுவும் ஹர்ஷாவா? என்ற நினைவுகளில் உழன்றவளுக்குத் தூக்கம் கூட வர மறுத்தது.

மறு நாள் வழக்கத்தை விட வெகு சீக்கிரத்தில் எழுந்தவள் வாசலில் கோலம் போட்டு, மாலதிக்கு காலை உணவு தயாரிப்பதற்குக் கூட மாட இருந்து உதவி புரிந்தவள் எப்பொழுதும் செல்வதை விட இன்று சீக்கிரம் கல்லூரிக்கு கிளம்ப, அவள் அறைக்குள் நுழைந்த நிகிலாவிற்கு எல்லாம் வித்தியாசமாகப் பட்டது.

"என்ன கனிகா, ரொம்ப உற்சாகமா இருக்க, இவ்வளவு சீக்கிரம் காலோஜிற்குக் கிளம்பற..." என்றதும் தான் தன்னிடம் உள்ள வித்தியாசம் மற்றவர்கள் கண்ணிற்குப் பட்டுவிட்டது புரிந்து போனது.

'ஐயோ! இவர்களுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான், நம்மை மூட்டைக் கட்டி ஊருக்கே அனுப்பி வைத்து விடுவார்கள்' என்று தோன்ற,

"இல்லை நிகி, இன்னைக்கு எனக்குக் காலேஜில் கொஞ்சம் வேலை இருக்கு, அதான் சீக்கிரமே போகலாம் என்று நினைத்தேன்..." என்றாள்.

காதல் வந்தால் பொய்யுரைப்பதும் கூடவே தொற்றிக் கொள்ளும் போல்.

*****************************

கல்லூரிக்குள் நுழைந்தவளின் கண்கள் தானாகவே ஹர்ஷாவை தேட, அன்றிலிருந்து மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் ஒரு முகாமிற்குக் கல்லூரியின் சார்பாக ஹர்ஷா சென்றிருந்தது தெரியவில்லை...

அங்கு முகாமிலோ கனிகாவிடம் சொல்லாமல் சென்றது வருத்தமாக இருக்க, 'அவளிடம் முதலில் அவள் செல்ஃபோன் நம்பர் வாங்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான்.

ஹர்ஷாவைக் காணாமல் கண்கள் பனிக்க, இத்தனை பெரிய காலோஜில் எங்கே என்று அவரைத் தேடுவது? எப்படி அவரைப் பார்ப்பது? என்று ஆயாசமாக இருந்தது கனிகாவிற்கு..

கலக்கம் முகத்திலும் தெரிய, வகுப்பறைக்குள் நுழைந்தவள் அமைதியாக வந்து அமர, இளா,

"என்ன கனிகா, மறுபடியும் உடம்பு சரியில்லையா?" என்றாள்.

'அச்சச்சோ முகத்தில் இந்த மாதிரி உணர்ச்சிகளைக் காட்டுவதை முதல்ல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவள்,

"அதெல்லாம் ஒன்றும் இல்லை இளா, நேற்று நைட் சரியா தூக்கம் இல்லை, அதான்..." எனவும்,

"ஏன்டி சரியா தூங்கலை? நேற்றில் இருந்து என்னமோ நீ சரியே இல்லை, என் கிட்ட வெளிப்படையா எதுவும் பேசவும் மாட்டேங்கிற, என்னமோ போ..." என்றவள் அதற்கு மேல் கனிகாவை தொந்தரவு செய்யவில்லை.

**********************

அடுத்தடுத்து இரண்டு நாட்களும் ஹர்ஷாவைக் காணாததால் கனிகாவிற்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது...

'ஒரு வேளை அன்று நடந்தது எல்லாம் கனவா? இல்லை, அவர் ரியாவை, தான் காதலிக்கவில்லை என்று மட்டும் தான் சொல்லியிருப்பாரா? நாம் தான் ஏதேதோ நினைத்துக்கொண்டோமோ?' என்று நினைத்தவளுக்கு மனதினில் ஏதோ பாரமாக இருக்க, மூன்று நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லாதது வேறு தலை வலியைக் கொண்டு வந்தது. தலை வலி மாத்திரையைச் சாப்பிட்டவள் ஏனோ தானோ என்று இரவு டிபனைக் கொரித்துவிட்டுப் படுக்கச் சென்றாள்.

ஆனால் தூக்கம் வந்தால் தானே, அவரைப் பார்க்கும் வரை எனக்கு இனி எங்குத் தூக்கம் என்று அயர்ந்து போனவள் விடியற்காலையில் தன்னையும் அறியாமல் தூங்கி போனாள்.

அங்கு முகாமில் இருந்து திரும்பி வந்த ஹர்ஷா, கனிகாவைப் பார்க்கும் ஆசையில் காலையில் அவசரமாகக் கிளம்பியவன், கல்லூரிக்கு வர, இன்னும் நண்பர்கள் பட்டாளம் வாராது போகவே, கல்லூரியின் நுழை வாயிலிலேயே கனிகாவிற்காகக் காத்து நின்றான்.

மூன்று நாட்கள் அவனை எதிர்ப்பார்த்து ஏமாந்து போனதாலோ என்னவோ இன்று கனிகாவிற்குக் கல்லூரிக்குச் செல்வதற்கு விருப்பமே இல்லை.

ஏற்கனவே நேற்றில் இருந்து படுத்தும் தலைவலி வேறு.. கீழே இறங்கி வந்தவள் மாலதியிடம் "அத்தை ரொம்பத் தலை வலியா இருக்கு.. இன்னைக்கு நான் காலேஜிற்கு லீவு எடுத்துக் கொள்ளட்டுமா?" என்று வினவா நெற்றியில் கை வைத்து பார்த்து,

"ஏண்டா, காய்ச்சல் மாதிரி இருக்கா?

"இல்லை அத்தை, தலை வலி மட்டும் தான், இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன், நாளைக்குச் சரியாகிவிடும்" என்றவள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் தன் அறைக்குச் செல்ல, மாலதிக்கு "இந்தப் பெண்ணுக்கு சென்னையும் இந்தக் காலேஜும் பிடிக்கவில்லை போல” என்று தனக்குள் நினைத்துக் கொண்டவர் தன் வேலைகளைத் தொடர்ந்தார்.

அங்குக் கல்லூரி வாயிலில் அவளுக்காகக் காத்திருந்தவன் பொறுமை இழந்து கொண்டிருந்தான்...

எப்படியாவது இன்று அவளைப் பார்த்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தவனின் உறுதி நேரம் ஆக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாகக் குலைய ஆரம்பிக்க, அவள் தோழிகளிடம் சென்று விசாரிக்கலாமா என்று நினைத்தவனை வழக்கம் போல், நானாவது அவர்களிடம் போய்ப் பேசுவதாவது என்று ஆணவம் தலை தூக்க வேறு வழியில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து வகுப்பறைக்குச் சென்றான்.

அன்று முழுவதும் அவளைக் காணாமல் மனம் என்னவோ வலிப்பது போல் இருந்தது..

'ஒரு வேளை அன்று தான் பேசியதில் எதுவும் பிடிக்கவில்லையோ?? தப்பாக எடுத்துக் கொண்டாளோ?? இல்லை அந்த ரியா நான் இல்லாத பொழுது எதுவும் பிரச்சனை பண்ணிவிட்டாளா..' என்று கலங்க, நாளை எப்படியும் அவளைப் பார்த்து விட வேண்டும், அவள் வரவில்லை என்றால் அவள் ஃபோன் நம்பரையாவது வாங்கி விட வேண்டும் என்று முடிவெடுத்தவன் மறு நாளும் விரைவாகக் கிளம்பினான்.

இன்றும் விடுப்பு எடுக்க முடியாது, நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்த கனிகா, கல்லூரிக்கு கிளம்பியவள், பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதே ஆஷாவும், இளாவும் கல்லூரிக்குள் நுழைவது தெரிய, அவர்களிடம் ஓடினாள்.

"ஏன்டி, கூப்பிடறேன் இல்ல, காதில் விழவில்லை, நீங்க பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கிறீங்க?"

"இப்பொழுது எப்படி டீ இருக்கு தலைவலி?"

"ஆங், அது இப்போ பரவாயில்லை.." என்று கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே வாயிலில் நண்பர்களுடன் காரில் சாய்ந்தவாறே பேசிக் கொண்டிருந்த ஹர்ஷா கண்ணில் பட்டான்.

மனம் தடதடக்க, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க அவனைப் பார்த்தவள் அவன் சட்டென்று தன் பக்கம் திரும்பியதும் முகம் சிவக்க தலை குனிய, அது வரை அவளைக் காணாமல் நேற்றைப் போல் இன்றும் வராமல் போய் விடுவாளோ என்று ஏங்கியிருந்தவன் அவளைக் கண்டதும் கடல் அலை போல் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் மனதுடன் அவளை நோக்கி நடந்து வந்தான்.

தலை குனிந்தவாறே நடந்து கொண்டிருந்ததால் அவன் வருவதைக் கவனிக்காமல் இருந்தவளின் கையை இளா அழுத்தமாக பற்றிய பொழுது நிமிர்ந்தவள் அவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து இளாவையும் ஆஷாவையும் பார்க்க, அவள் திருதிருவென்று விழிப்பதிலேயே ‘நமக்குத் தெரியாமல் இங்கு ஒரு டிராமா நடக்கிறது’ என்று புரிந்துக் கொண்டவர்கள் கனிகாவின் முகத்தையும் ஹர்ஷாவையும் மாறி மாறி பார்க்க, அவர்கள் அருகில் வந்தவன் "கனி, உன்னுடன் கொஞ்சம் தனியா பேசணும்..வா" என்றான்.

அவன் அவர்களை நோக்கி நடந்து வருவதையே நம்ப முடியாமல் நின்றிருந்த தோழிகள் இருவருக்கும், அவன் கனிகாவை தனியே பேசுவதற்கு அழைத்தது வேறு இன்னும் அதிர்ச்சியைக் கொடுக்க, தலை சுற்றி மயக்கம் வரும் போல் இருந்தது.

நான்கு நாட்கள் அவனைக் காணாமல் ஏங்கியிருந்தவளுக்கு, ஒரு வேளை அவன் தன்னைக் காதலிக்கவில்லையோ? நாம் தான் தப்பு தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறோமோ? என்று குழம்பியிருந்தவளுக்கு அவன் தனியே பேச வேண்டும் என்று அழைத்ததில் மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் அவன் பின்னால் சென்றாள்.

"என்னடி நடக்குது இங்க? அப்போ அவள் சொன்னது எல்லாம் உன்மை தானா?" என்று இளா ஆஷாவிடம் கேட்க,

எதிர்பாராத அதிர்ச்சியில் மலைத்துப் போய் நின்றிருந்த ஆஷாவை உற்று நோக்கியவள் அவளின் தோள் பற்றி உலுக்கி,

"ஏன்டி, நீ எங்கடி போய்ட்ட அதுக்குள்ள?" என்று கேட்கவும் தான் இவ்வுலகத்திற்கு வந்தாள் ஆஷா...

அவன் பின்னால் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு, திரும்பி தன் தோழிகளையும் பார்த்துக் கொண்டே சென்ற கனிகா அவன் சட்டென்று நின்றதும் நிலை தடுமாறி அவன் மேல் மோத, அவளைக் கீழே விழாமல் கையை இறுக்கப் பற்றியவன் ஜன சந்தடியற்ற ஒரு மரத்தின் கீழ் கொண்டு போய் நிறுத்தினான்.

அருகில் நெருங்க முடியாத பிம்பம் அவன் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, தன் அருகில் தன் கையை இன்னமும் விடாது பிடித்திருந்த அவனின் அருகாமையும், அழுத்திப் பிடித்திருந்ததினால் அவன் கையில் இருந்த சூடும் கனிகாவிற்குச் சில்லென்ற ஒரு உணர்வை உச்சி முதல் உள்ளங்கால் வரை பாய்ச்ச, அதற்கு மேல் அவன் முகத்தைப் பார்க்க தைரியம் இல்லாமல் தரையில் புதைந்து விடுவது போல் தலை குனிந்து நின்றாள்.

தன் முகம் காண முடியாமல் அவள் தலை குனிந்து நின்றது சிரிப்பை வரவழைக்க,

"எதுவும் கீழே விழுந்திருச்சா, என்ன?" என்று அவன் கேட்டதும் ஒன்றும் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் சிரித்துக் கொண்டு நின்றதை ரசித்துப் பார்க்க, அப்பொழுது தான் அவர்கள் நிற்பது தங்கள் கல்லூரியில் என்று உரைக்க, அவன் கையிலிருந்த தன் கையை மெதுவாக விடுவித்துக் கொண்டவள், "எ..எ..என்ன, கேட்டீங்க?" என்றாள்.

அவள் தடுமாற்றத்தைப் பார்த்தவன் அவள் பயந்திருப்பதை உணர்ந்து அருகில் வராமல் கொஞ்சம் தள்ளியே நின்றவன்,

"நேற்று ஏன் வரவில்லை?" என்றான்.

"இவர் நேற்று கல்லூரிக்கு வந்திருந்தாரா? அச்சச்சோ இது தெரியாமல் நான் தான் முட்டாள் மாதிரி லீவ் போட்டு விட்டேனோ" என்று நினைத்தவள் ஒன்றும் பேசாமல் நிற்க, "சரி, உன் செல் நம்பர் சொல்லு.." என்றான்.

"எதுக்கு?" என்று தயக்கத்துடன் கேட்க, "ஏன்? கூப்பிடத்தான்..." என்றான்.

"ஐயோ! வேண்டாங்க" என்று அவள் தயங்க "எது வேண்டாம்? உன்ன கூப்பிட வேண்டாமா? இல்லை நானே வேண்டாமா?" என்று புருவத்தைச் சுருக்கியாவாறே கோபத்தோடு கேட்க,

அவன் குரலில் இருந்த கடுமையைக் கண்டதும் சட்டென்று தன் அலைபேசியின் எண்ணைச் சொல்ல, அவன் தன் அலைபேசியில் இருந்து அவள் எண்ணிற்கு அழைத்தான்.

தன் கைப்பையில் இருந்த அலை பேசி சிணுங்க, அதனை வெளியில் எடுப்பதற்குக் கூச்சமாக இருந்தது கனிகாவிற்கு, அது ஒரு பழைய மாடல் அலை பேசி... அகில் கூட வேறு வாங்கித் தருவதாகக் கூறிய பொழுது எதற்கு வீண் செலவு என்று மறுத்து விட்டாள்.

அவர்கள் அவளை வீட்டில் தங்க வைத்து படிப்பிற்குச் செலவு செய்வதே மிக அதிகம், இதில் செல்ஃபோன் வேறா என்று.

ஆனால் இப்பொழுது அந்த ஃபோனை வெளியில் எடுத்தோம் இவர் நிச்சயம் சிரிப்பார், அல்லது இத்தனை ஏழ்மையானவளா என்று கூட நினைக்கலாம் என்று அலைபேசியை வெளியில் எடுக்காமல் நின்றவளைப் பார்த்தவன்,

"எடு ஃபோனை, என் நம்பரை சேவ் பண்ணு" எனவும், வேறு வழயில்லாமல் அலைபேசியை எடுத்தவள் தயக்கத்துடன் அவன் எண்ணை சேமித்து வைத்தாள்.

அவள் அலைபேசியைப் பார்த்த பொழுது தான் அவள் அதனை வெளியில் எடுக்கத் தயங்கிய காரணம் புரிந்தது..

"ஹே, இது என்ன இவ்வளவு பழைய மாடல் ஃபோனை வச்சிருக்க.." என்று தன் இயற்கையான திமிர் தனத்தால் தன்னை அறியாமல் கிண்டல் செய்து விடச் சட்டென்று விழிகளில் நீர் கோர்க்க,

"என் கிட்ட இது தான் இருக்கு.." என்றாள்.

அவள் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்தவனுக்கு அப்பொழுது தான் தன் தவறு உரைக்க, அவள் அருகில் வந்து அவள் கரத்தைப் பற்றியவன்,

"ஸாரி கனி, பழக்க தோஷம் என்னை அறியாமல் சொல்லி விட்டேன், சரி நாளைக்கே உனக்கு ஒரு ஐஃபோன் வாங்கித் தருகிறேன், இதைத் தூக்கி எறிந்துவிடு..." எனக் கூறினான்.

"அச்சச்சோ, வேற வம்பே வேண்டாம், ஏது இந்தப் புது ஃபோன், அதுவும் இவ்வளவு விலை உயர்ந்த ஃபோன் என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்டால் நான் என்ன சொல்வது? எனக்கு இதுவே போதும்.." என்று அவள் பதற, புரிந்துக் கொண்டவன்,

"சரி நம்ம மேரேஜ் முடிந்ததும் உனக்கு என்னோட ஃபர்ஸ்ட் ப்ரெசண்ட் லேட்டஸ்ட் மாடல் செல் ஃபோன் தான்..." என்று கூறியதும் அவளின் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டதைப் பிடித்திருந்த அவள் கரத்தின் மூலம் உணர்ந்தவன் சற்று குனிந்து அவள் கண்களை ஊடுருவதைப் போல் பார்க்க, அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாத சின்னப் பெண், அவன் கரத்தை உதறிவிட்டு ஓடினாள்.

ஹர்ஷா கனிகாவைத் தனியே பேச அழைத்தது, பின் அவள் கரத்தைப் பற்றியது, பின் இருவரும் தனியாக மரத்தடியில் பேசிக் கொண்டிருந்தது, அவனும் அவளும் அலைபேசியைப் பார்த்து பேசியதிலேயே தெரிந்து போனது, அவர்கள் எண்ணை பரிமாறிக் கொள்கிறார்கள் என்று, பின் அவளின் கரத்தை மறுபடியும் பற்றி, அவள் முகம் நோக்கி குனிந்தது வரை அனைத்தையும் பார்த்திருந்த இளாவும் ஆஷாவும் திறந்த வாயை மூட வில்லை.

அவர்கள் அருகில் ஒடி வந்தவள் முகம் செந்தணலாக மாறியிருக்க, இன்னமும் தன் தோழிகள் அதிர்ச்சி கலையாத முகத்தோடு இருப்பதைப் பார்த்தவளுக்குப் புரிந்து போனது செத்தோம் நாம் என்று.

"ஏய், ஆஷா, இளா, வாங்கடி க்ளாஸிற்குப் போகலாம்.. டைம் ஆகிடுச்சு.." என்று கூற,

சுய நினைவிற்கு வந்தவர்கள் கனிகாவின் கையை இழுத்துச் சென்று வகுப்பறைக்குள் நுழைந்தவர்கள் தங்கள் இடத்தில் அமரும் வரை வாயை திறக்கவில்லை.

ஒரு நிலைக்கு வருவதற்கே அவர்களுக்குச் சில நிமிடங்கள் பிடித்தது.

"கனிகா, நாங்க பார்ப்பது எல்லாம் நெஜமாவாடி....எப்படி டீ? இது எப்போ எப்படி நடந்தது?..தயவு செய்து எங்களுக்கு விளக்கமாகச் சொல்லு, இல்லை, எங்கள் தலையே வெடிச்சிடும்..." என்று அங்கலாய்க்க, இளம் புன்னகையை உதிர்த்தவள், முதன் முதலாக ஹர்ஷா அவளைத் தூக்கி விடக் கரம் நீட்டியதில் இருந்து, கோவிலில் குங்குமம் வைத்தது, பின் ரியா கொடுத்த கடிதத்தைக் கிழித்து எறிந்தது வரை சொல்லியவள்,

"என்னோட செல்ஃபோன் நம்பர் கூட வாங்கிக் கொண்டார்" என்று சொல்லி முடிக்க, இளாவிற்கும் ஆஷவிற்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

"கனிகா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைடி, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப வெகுளியான பொண்ணு, நல்ல மனசு உள்ளவள், உனக்கு எதுவும் தப்பாக நடந்து விடக் கூடாதுன்னு தான் இதைச் சொல்றேன், என்னைத் தப்பாக எடுத்துக்காத டி, ஹர்ஷா உனக்குச் சரிப்பட்டு வருவாரா?? உனக்கே தெரியும், அவர் அழகு, வசதி எல்லாம். நீயும் அழகு தான், ஆனால் அவர் கோடீஸ்வரர், அவருக்கு உன்னைய பிடிச்சிருக்கு, ஆனால் அவர் வீட்டில் இருப்பவர்கள் உன்னைய ஏற்றுக் கொள்வார்களா?" என்று ஒரு இடியைத் தூக்கி அவள் தலையில் போட்டாள் இளா.

ஹர்ஷாவைப் பற்றி மட்டுமே நினைத்திருந்த கனிகா, அவன் குடும்பத்தைப் பற்றியோ அவர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்பது பற்றியோ இது வரை சிறிதும் சிந்திக்கவில்லை.

கனிகாவின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த ஆஷா,

"கனிகா, இளா சொல்றதும் கரெக்ட் டி, அடுத்தத் தடவை ஹர்ஷாவிடம் பேசும் பொழுது இதைப் பற்றிப் பேசு..." என்றார்கள்.

சரி என்பது போல் மௌனமாகத் தலை ஆட்டிய தங்கள் தோழியைப் பார்ப்பதற்கு அவர்களுக்கே பாவமாக இருந்தது.

ஹர்ஷாவிடம் எப்படியும் இது பற்றிப் பேசி விட வேண்டும் என்று கனிகா காத்திருக்க, ஆனால் அதன் பின் ஹர்ஷாவைத் தனியே சந்திக்கச் சரியான சந்தர்ப்பம் வராமலே இருந்தது.

அவன் அத்தனை பிஸியாகப் படிப்பிலும், கல்லூரி சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களிலும் ஈடுபட்டிருக்க, அலைபேசியில் அவன் அவ்வப்பொழுது அனுப்பும் குறுந்தகவலைகளைத் தவிர அவனைப் பார்ப்பது அரிதாகப் போனது.

இதற்குள் எப்படியும் ஹர்ஷாவிடம் இருந்து கனிகாவின் நினைவை சுத்தமாக அகற்றி விட வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்திருந்த ரியா அதற்கு முதலில் கனிகாவை தங்கள் பாதையில் இருந்து விலக்க வேண்டும், என்ன செய்து அவளை அவள் கிராமத்திற்கே திருப்பி அனுப்புவது என்று வஞ்சகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் தானாக அமைந்தது.

**********************

அன்றும் ஹர்ஷாவைக் காணாமல் கனிகாவின் மனம் தவித்துக் கொண்டிருக்கக் கல்லூரிக்கு வெளியே ஏதோ கலவரம் நடப்பது போல் சத்தம் வர ஆரம்பித்தது.

ஒரு அரசியல் தலைவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்ததற்காகச் சென்னையில் பெரும் கலவரம் ஆரம்பிக்க, கலவரக்காரர்கள் பேருந்துக்களில் கற்கள் விட்டெறிய, கல்லூரிக்கு வெளியே ஒரே களேபரமாக இருந்தது.

கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விடுமுறை அறிவித்த நிர்வாகம் அவசரமாக மாணவர்களைப் பத்திரமாக வீட்டிற்குச் செல்லப் பணிக்க, இத்தனை கலவரத்தில் எப்படி வீடு போய்ச் சேர்வது என்று மாணவர்களிடமும் பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

அன்று ஆஷா கல்லூரிக்கு வராததால் இளாவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்த கனிகாவிற்கு வெளியே இருந்த பதட்டத்தைப் பார்த்துப் பயம் அப்பிக் கொள்ள,

"இளா, என்னடி இது, இப்படிக் கூட நடக்குமா? இப்பொழுது நாம் எப்படி வீடு போய்ச் சேரப் போகிறோம்? ஐயோ! அவர் இப்போ எங்கிருக்கிறார் என்று கூடத் தெரியவில்லையே?" என்று புலம்பினாள்.

ஏனெனில் அன்றும் ஹர்ஷா அவள் கண்ணில் படவில்லை, அது மட்டும் இல்லாமல் ஆஷாவின் வீடு கிட்டத்தட்ட கனிகாவின் மாமா வீட்டிற்கு அருகில் இருப்பதால் இருவரும் சேர்ந்தே வீட்டிற்குச் செல்பவர்கள். ஆனால் இளாவின் வீடோ கனிகா செல்லும் வழிக்கு நேரெதிர்.

அத்தனை கலவரத்திலும் கனிகாவைத் தனியாக விட மனம் இல்லாத இளா பதற்றத்தோடு அவளோடு கூட இருக்க, மற்ற மாணவர்களும் பேருந்து நிலையத்தில் கூட்டமாகக் கூடியிருக்க,

"இளா, எனக்காக நீ வெயிட் பண்ணாத, இன்னும் எத்தனை நேரம் எல்லாப் பஸ்ஸும் ஓடும்னு தெரியலை, அதனால நீயாவது சீக்கிரம் வீடு போய்ச் சேருடி, நான் அவருக்கோ அல்லது அகில் அத்தானுக்கோ ஃபோன் செய்து என்னை இங்க வந்து பிக்கப் செய்யச் சொல்லிக் கொள்கிறேன்.." என்றாள்.

"என்ன விளையாடுறியா? நான் போய்ட்டா நீ தனியா என்ன பண்ணுவ? நீ முதல்ல அவருக்கு ஃபோன் போடு.."

ஹர்ஷாவிற்கு அழைத்தவள் அவன் அழப்பை எடுக்காததால் அகிலுக்கு அழைத்தவள் விஷயத்தைக் கூற, பதறியவன் அவளை அந்த இடத்திலேயே காத்திருக்கச் சொன்னவன், எக்காரணத்தைக் கொண்டும் தனியாக எங்கேயும் போய் விட வேண்டாம் என்று எச்சரித்து இருந்தான்..

இவர்கள் இருவரும் பதற்றத்தோடு பேசிக் கொண்டிருந்ததும், கனிகா அகிலிடம் பேசியதையும் அருகில் இருந்த காரில் இருந்து கேட்ட ரியாவிற்குச் சட்டென்று ஒரு விகாரமான யோசனை தோன்றியது....

தனக்குத் தெரிந்த ஒருவனுக்கு அலைபேசியில் அழைத்தவள் தன்னுடைய திட்டத்தைச் சொல்ல எதிர் முனையில் இருந்தவன் சொன்ன தகவல் கனிகாவிற்கு நடக்கப் போகும் கேட்டை விவரிக்க, அவள் முகத்தில் அப்படி ஒரு குரூரமான மகிழ்ச்சி நிலவியது.

நேரம் ஆக ஆகப் பேருந்துகளும் வருவது நின்று போய் விட, கல்லூரிக்குக் காரில் வரும் மாணவர்கள் ஒன்று கூடி பேருந்திற்காகக் காத்திருக்கும் மாணவ மாணவிகளைத் தங்கள் காரில் ஏறிக் கொள்ளச் சொல்ல, இளாவின் அருகில் வந்த மாணவன்,

"இளா, நம்ம ஹரனோட காரில் நாம் போவோம், அவன் வீடு நாம் இரண்டு பேரோட வீட்டிற்குப் போற வழியில் தான் இருக்கு வா..." என்றான்.

குழப்பத்தோடு இளா திரும்பி கனிகாவைப் பார்க்க,

"இளா நீ கிளம்புடி, எங்க அகில் அத்தான் இப்போ வந்து விடுவார்கள். நான் அவரோடு போய்க் கொள்கிறேன். நீ வீட்டிற்குப் பத்திரமா போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணு..." என்றவள் இளாவை சமாதானப்படுத்தி அந்த மாணவனோடு அனுப்பி வைத்தாள்.

நேரம் செல்ல செல்ல ஒவ்வொரு மாணவனாகக் கலைந்து செல்ல, கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட கனிகாவின் மனதில் திகில் சூழ, 'ஏன் அவர் ஃபோனை எடுக்கலை? அகில் அத்தானையும் இன்னும் காணவில்லை, ஒரு வேளை வழியில் ஏதாவது பிரச்சனையோ?' என்று கலங்கியவள் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருக்க அவளின் வெகு அருகில் இடித்து விடுவது போல் நின்றது ஒரு ஆட்டோ.

ஆட்டோ ஓட்டுனர் அவளைப் பார்த்து "நீங்க கனிகாவா?" என்க, இவருக்கு எப்படி நம் பெயர் தெரியும் என்று குழம்பியவள் ஆம் என்பது போல் தலை அசைக்க,

"அகில் சார் அனுப்பிவிட்டாங்கம்மா, அவர் வரும் வழி எல்லாம் ஸ்ட்ரைக்கினால் ரோடு அடைக்கப்பட்டு விட்டதாம். அதனால உங்களை வீட்டில் விடச் சொல்லி என்னைய அனுப்பிவிட்டார்மா..." என்றார்.

அவர் கொஞ்சம் வயதானவர் போல் தெரியவும், அகிலின் பெயரையும் சொல்லவும் நம்பியவள் எதுவும் யோசிக்காமல் ஆட்டோவில் ஏறிவிட்டாள்.

கூட்டமாக இல்லாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில மாணவ மாணவிகள் இருந்தும் சரியாகத் தன்னிடம் மட்டும் வந்து தன்னைத் தான் கனிகா என்று எப்படிக் கனித்தார் என்று அவள் இருந்த பதட்டத்தில் அவளாக யோசிக்க மறந்தாள்..

ஆட்டோவில் ஏறியவள் "அகில் அத்தான் எங்க வீட்டின் அட்ரெஸ் சொன்னார்களா?" என்று கேட்க, "ம்ம்ம், சொன்னார்கள்.." என்ற ஓட்டுனர் அதற்குப் பின் எதுவும் பேசவில்லை.

எதற்கும் அகில் அத்தானுக்கு அழைத்துத் தான் பத்திரமாக ஆட்டோவில் ஏறியதைச் சொல்லலாம் என்று நினைத்தவள் அவனின் அலைபேசிக்கு அழைக்க அவளின் கெட்ட நேரம் சிக்னல் கிடைக்கவில்லை.

ஹர்ஷாவும் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லையே என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவள் அலைபேசியில் அழைத்தான் ஹர்ஷா.

அவள் அழைப்பை எடுத்தவுடன் அவன், "கனி" எனவும், இத்தனை நாட்கள் அவனைப் பார்க்காமல் இருந்த தவிப்பில் அவன் குரலை கேட்டதும் கண்கள் கலங்க,

"ஏங்க, எங்க இருக்கீங்க? இத்தனை நாளா எங்க போனீங்க?" என்றாள்.

அவன் படபடப்பாக,

"கொஞ்சம் பிஸி கனி...சரி அது இருக்கட்டும், நான் இப்போ காலேஜில் இல்லை, ஒரு ப்ரோகிராம் விஷயமா டிஸ்கஸ் பண்ணுவதற்காக வெளியில் வந்திருக்கோம். இப்போ தான் உன்னுடைய மிஸ்ட் காலைப் பார்த்தேன்... இப்போ நீ எங்க இருக்க? சிட்டி முழுவதும் ஒரே கலவரமாக இருக்கு? நீ வீட்டிற்குப் போய் விட்டாயா?" என்றான்.

இளா சென்றதும், தான் முதலில் அவனை அழைத்ததையும், அவன் எடுக்காததால், பின் அகிலை அழைத்ததையும், அவனால் வர முடியாமல் போகவும் அவளை அழைத்து வர ஆட்டோ அனுப்பியிருப்பதையும், இப்பொழுது அவன் அனுப்பிய ஆட்டோவில் தான் சென்று கொண்டிருப்பதையும் அவள் சொல்ல, ஹர்ஷாவிற்கு எதுவோ சரியில்லை என்று மனதில் பட்டது.

"உன் கூட யாராவது இருக்கிறார்களா?"

"இல்லைங்க நான் மட்டும் தான் போறேன்.."

"கனி, இப்படிக் கலவரத்தில் நீ மட்டும் தனியா ஆட்டோவில் போறது சரியில்லை, ஆட்டோ இப்போ எந்த இடத்தில் இருக்குன்னு சொல்லு, நான் உடனே வருகிறேன்.." எனவும், அவனைப் பார்க்கும் ஆவலில் ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து,

"அண்ணா, நாம் இப்போ எந்த இடத்தில் இருக்கிறோம்?" என்றாள்.

ஏனெனில் கல்லூரிக்கு எப்பொழுதும் பேருந்தில் வருவதால் அவளுக்கு இன்னும் சென்னை புதிது. அவள் கேட்டும் ஒன்றும் சொல்லாமல் வந்த ஆட்டோ ஓட்டுனர் சட்டென்று வண்டியின் வேகத்தை அதிகரிக்க, கனிகாவிற்குப் பயம் தொற்றிக் கொண்டது.

"அண்ணா, ஏன் இப்படி வேகமாகப் போறீங்க? நாம் எங்கே இருக்கிறோம்னு சொல்லுங்க? ப்ளீஸ்.." என்று மறுபடியும் கேட்க, அவள் இரண்டு தடவை கேட்டும் அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் திடீரென்று வேகமாகச் செல்வதைக் கேட்ட ஹர்ஷாவிற்குக் கிலி படர்ந்தது...

"கனி, நான் கொஞ்சம் சொல்றத அமைதியா கேளு. முதல்ல நீங்க எங்க போய்கிட்டு இருக்கீங்கன்னு வெளியில் இருக்கிற கடைகள் நேம் போர்ட்ஸ்ல பாரு, அதில் கண்டிப்பா இடம் போட்டிருக்கும். அத சத்தமாக என்னிடம் சொல்லாமல் ஜஸ்ட் டெக்ஸ்ட் பண்ணு, நான் உடனே வரேன். செல்ஃபோன ஆன்-லேயே இருக்கட்டும், ஆஃ பண்ணிடாத.." என்றான்.

அவனின் பதட்டத்திலும், ஆட்டோ ஓட்டுனரின் அலட்சியத்திலும் திடீரென்று ஆட்டோவின் வேகம் அதிகரித்ததிலும் ஏதோ தவறு நடப்பதை உணர்ந்தவளுக்கு உடல் நடுங்க, உதறல் எடுக்க ஆரம்பித்தது.

ஹர்ஷா சொன்னது போல் வெளியில் பார்த்தவள் தாங்கள் போய்க் கொண்டிருக்கும் இடத்தை அலைபேசியில் குறுந்தகவலாக அனுப்ப, அவளின் அமைதியும் அவள் அலைபேசியில் ஏதோ தகவல் அனுப்புவதையும் கண்ணாடியில் பார்த்த ஓட்டுனர் இன்னும் வேகத்தை அதிகரிக்க, கனிகாவிற்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது...

"எங்க போறீங்க? நீங்க போறது எங்க வீட்டிற்குச் சரியான வழியில்லை" என்று அவள் கத்த, அவளின் கதறலை பொருட்படுத்தாத ஓட்டுனர் யாருக்கோ தன் அலைபேசியில் அழைத்தவன் "எங்க இருக்கீங்க? பேசியபடியே அவளைக் கூட்டிக் கொண்டு வருகிறேன், சீக்கிரம் பேசின இடத்திற்கு வந்துவிடுங்கள்..." என்று கூறவும், தான் கடத்தப்பட்டிருப்பது உறுதியானது கனிகாவிற்கு.

"கனி, நான், நீங்க போய்க் கிட்டு இருக்கிற இடத்திற்கு ரொம்பப் பக்கத்தில் தான் இருக்கே, பயப்படாத.. நான் வந்து கொண்டிருக்கிறேன்.." என்ற ஹர்ஷா அலற, அவள் பயத்தில் சத்தம் போட வாய் திறப்பதற்குள் ஆட்டோ ஒரு வளைவில் திரும்ப, தெரு முனையில் அடியாட்கள் போல் இருந்த இருவர் அவளுக்கு இரு புறமும் ஏறியவர்கள் அவளின் வாயைப் பொத்தினார்கள்.

அவர்களிடம் இருந்து திமிறியவள் சிறிது சிறிதாக மூச்சடைத்து மயக்கத்தைத் தழுவ, அது வரை அவளின் அலைபேசியில் ஓட்டுனர் பேசியதில் இருந்து அவள் வாய் அடைக்கப்பட்டது வரை கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷாவிற்குக் காலடியில் பூமி நழுவதைப் போல் இருந்தது.

ஏற்கனவே கலவரக்காரர்கள் செல்லும் வழியெல்லாம் பிரச்சனைகளாக இருக்க, இருந்தும் புயல் போல் காரை செலுத்தியவன் பத்து நிமிடங்களில் அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

ஆட்டோ எங்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று அவள் சொன்ன நேரத்தைக் கணக்கிட்டவன் அவர்கள் திரும்பிய தெருவை யூகிக்க முயற்சி செய்ய யாருமற்ற இருளடைந்த ஒரு தெரு அவன் கண்ணில் பட்டது.

நிச்சயம் இங்குத் தான் அவர்கள் திரும்பியிருக்க வேண்டும் என்ற யூகித்தவன்,

"ஐயோ! எங்க போய்த் தேடுவது. இப்படி மாட்டிக் கொண்டாளே.." என்று வாய் விட்டு புலம்பியவன் அவள் அலைபேசிக்கு அழைக்க அவன் வெகு அருகில் சாலையில் கிடந்த அவள் அலைபேசி சிணுங்கியது.

அவள் மயக்கத்தைத் தழுவியதும் அவர்கள் அவளின் அலைபேசியைப் பிடுங்கி தூக்கி எறிந்திருந்தார்கள். சாலையில் அலைபேசியைக் கண்டு எடுத்தவனுக்கு இந்தத் தெரு தான் என்று உறுதி படத் தெரிந்தாலும் எங்குச் சென்று தேடுவது என்று கலங்கியவன் வேகமாக இரு பக்கமும் தேடியவாறே நடக்கத் துவங்க, வீலென்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது.

தொடரும்
 

JLine

Moderator
Staff member

அத்தியாயம் 9


அது நிச்சயம் கனிகாவின் குரல் தான் என்று தெரிந்ததும் உடல் முழுவதும் தூக்கி வாரிப் போட பயம் கவ்வி கொள்ள "கனீ......" என்று அலறியவன் குரல் வந்த திசையை நோக்கி ஓட, இருட்டில் யாரோ ஓடி வருவது போல் தெரிந்தது.

அது ஒரு பெண் தான் என்று கண்டு கொண்டவன் அவளை நோக்கி வேகமாக ஓட, அவனை எதிர்பாராதவிதமாக அங்கே கண்டவள் அலறி அடித்து அவனருகில் ஓடி வந்து இறுக்கக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

"கனி, பயப்படாத, ஒண்ணும் இல்லை, அதான் நான் வந்துட்டேன் இல்லை" என்று அவன் சொன்ன எந்தச் சமாதானத்தையும் அவள் கேட்கும் நிலையில் இல்லை. கதறியவளை இன்னும் இறுக்க அணைத்தவன், "கனி என்னாச்சு? யார் அவனுங்க?" என்று கேட்கும் பொழுதே ஆட்டோ ஓட்டுனருடன் சேர்ந்து இன்னும் மூவரும் அவர்களை நோக்கி ஓடி வர சட்டென்று சுதாரித்தவள்,

"என்னங்க நாம் இனி இங்க இருக்கக் கூடாது, வாங்க போகலாம்.." என்றாள்.

"இல்லை கனி, அவனுங்கள சும்மா விடக்கூடாது, இரு வருகிறேன்" என்று ஆவேசமாகக் கூறியவன் அவர்களை நோக்கி நடக்கக் காலடி எடுத்து வைக்க, அவர்கள் நான்கு பேர், அதுவும் ரௌடிகள் மாதிரி இருக்கிறார்கள், ஹர்ஷா ஒருவன், என்ன தான் அவன் தைரியமானவனாக இருந்தாலும் அவன் தனித்து அவர்களுடன் போராடுவது புத்திசாலித்தனம் இல்லை...

நிச்சயம் அவன் உயிருக்கு கூட ஆபத்து வரலாம் என்று உணர்ந்தவள் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு வேகமாகத் திரும்பி ஒடினாள்.

அவள் தன்னை இழுத்துக் கொண்டு ஓட முற்படுவதைப் பார்த்தவன்,

"வாட் ஆர் யூ டூயிங், இப்படியே அவனுங்களை விட்டுவிட்டு வரச் சொல்கிறாயா?" என்று கத்த,

ஏற்கனவே அரண்டு போய் இருந்தவள் அவன் கத்திய சத்தத்தில் உடல் நடுக்கம் அதிகரிக்க அவனைப் பயந்த விழிகளோடு நோக்க, அவளின் அச்சம் புரிந்தவன் விறுவிறுவென்று காருக்கு அழைத்துச் சென்று காருக்குள் அவளை ஏற்றினான்.

அவள் அமர்ந்ததும் ஓட்டுனர் இருக்கைக்கு வந்து அமர்ந்தவன், அவர்களை உற்று நோக்கிக் கொண்டே காரை கிளப்ப. அவர்கள் இவர்களிடம் வருவதற்கும் அவன் கார் சீறிப் பாய்ந்து கிளம்புவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

அவர்களைப் பார்த்துக் கொண்டே புயலெனக் காரை செலுத்தியவன் அச்சத்தில் கதறி அழுதுக் கொண்டிருந்தவளை தன் புறம் இழுத்து ஒரு கையால் இறுக்கி அணைத்தவாறே காரை செலுத்த,

அவளின் உடலின் நடுக்கம் அதிகரித்துக் கொண்டு சென்றதே தவிரக் குறைந்த பாடில்லை என்று உணர்ந்தவன் சிறிது தூரம் சென்ற பின் காரை சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினான்.

"கனி, இனி பயமில்லை, அதான் நான் வந்துவிட்டேன் இல்லை.." என்று ஆறுதல் கூறியவாறே அவள் முகம் நோக்கி திரும்பியவன் அப்பொழுது தான் கவனித்தான் அவள் தாவணி இல்லாமல் இருப்பதை.

அதிர்ச்சியில் உறைந்தவன் அவளைத் தன் அருகில் வேகமாக இழுக்க, அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறியவள் காற்று கூட இருவர் நடுவிலும் புக முடியாதபடி அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"கனி, அவனுங்க ஏதாவது செஞ்சானுங்களா?" என்று பதட்டத்துடன் அவன் வினவ அவளால் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாததால் தன்னுடைய கதறலை இன்னும் நிறுத்தவில்லை.

அவள் உடல் நடுக்கத்தைப் போக்க நினைத்தவன் அவளை எலும்பு முறியும் அளவிற்குக் கட்டிக் கொண்டு, "ம்ப்ச், கனி, அதான் நான் வந்திட்டே இல்லை, இங்க என்னைய பாரு" என்று முகத்தைத் தன் முகம் நோக்கி தூக்க, அவனைப் பார்த்தவள்,

"நீங்க மட்டும் வரலைன்னா நிச்சயம் நான் இந்நேரம் செத்து இருப்பேங்க" என்று கதறினாள்.

"சே, அதான் நான் வந்துட்டேன் இல்லை, சரி என்ன நடந்தது? யார் அவனுங்க? சொல்லு..."

"உங்க கிட்ட மெசேஜ் அனுப்பினேன் இல்லையா? அப்பவே அந்த ட்ரைவர் யார் கிட்டயோ பேசினான். கொஞ்ச நேரத்தில் இரண்டு ரௌடிங்க மாதிரி இருந்தவங்க ஆட்டோவில் ஏறி என் வாயைப் பொத்தினார்கள். அதில் மூச்சு திணர்ற மாதிரி இருந்தது. அப்புறம் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மெக்கானிக் ஷாப் மாதிரி இருந்த இடத்திற்குத் தூக்கிட்டு போனாங்க.. அப்போ ஒருத்தன் வேறு யாரோ ஒருத்தருக்கு ஃபோன் பேசினான். மேடம் நீங்க சொன்னது போல் அந்தப் பெண்ணைத் தூக்கிட்டோம் என்ன செய்றது இப்போன்னு கேட்டான். அதுக்கு அவங்க என்ன சொன்னாங்களோ தெரியலை, இவன் என்னையப்பார்த்து சிரிச்சுக்கிட்டே வந்தவன் என் தாவணியைப் பிடிச்சு இழுத்தான்...."

அதை அவள் சொல்லும் பொழுது தான் ஏதோ தோன்ற சட்டென்று குனிந்து தன் தாவணியைப் பார்க்க, அது அங்கு இல்லை...

வெறும் ப்ளவுஸோடும் பாவாடையோடும் ஹர்ஷாவைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது புத்தியில் உரைக்கச் சட்டென்று அவனை விட்டு விலகியவள் தன் இரு கைகளால் மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தலை குனிந்து அமர்ந்து மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

"கனி...." என்றவன் அவளை இழுத்து மறுபடியும் இறுக்க அணைத்துக் கொண்டு, "சரி மேலே சொல்லு" எனவும் தொடர்ந்தவள்,

"அவன் தாவணியப் பிடிச்சு இழுக்கவும் தாவணி அவன் கையோடேயே போய்டுச்சு. எப்படியோ சுதாரிச்ச நான் என்னோட பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட்டுட்டு வெளியில் ஓடி வந்தேன். அப்போதான் உங்க குரல் எனக்குக் கேட்டுச்சு.. நீங்க மட்டும் அப்ப வரலைன்னா..." என்றவள் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு திரும்பவும் கதற,

"அழாத, அதான் ஒன்றும் நடக்கவில்லை இல்லையா..." என்றவன் அவர்கள் யாராக இருக்கும், யாருக்கு அவன் ஃபோன் பண்ணியிருப்பான், மேடம் என்று சொன்னான் என்றால் கனியை கடத்தும் நோக்கம் எந்தப் பெண்ணிற்கு இருக்கும் என்று யோசித்தவனுக்குச் சட்டென்று பொறித் தட்டியது.

ஆனால் அதைப் பற்றி இப்பொழுது கனிகாவிடம் பேசுவது சரியில்லை என்று உணர்ந்தவன்,

"கனி, அழறதை நிறுத்து, ப்ளீஸ், நான் உன் பக்கத்தில் தான் இருக்கேன். அழாத.." என்றவன் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அவள் தலையில் தன் தாடையை வைத்தவன் அமைதியாக இருக்க, அவளுக்கும் அவனின் அணைப்பு தேவைப்பட்டதால் மௌனமாக இருந்தாள்.

அந்த அமைதியை கிழிப்பது போல் கனியின் அலைபேசி அழைத்தது.

எடுத்து பார்த்த ஹர்ஷா, அதில் 'அகில் அத்தான்' என்று ஒளிர்வதைப் பார்த்தவன் கனிகாவிடம் அலைபேசியைக் கொடுக்க,

"ஐயோ! அகில் அத்தான்.." என்றவள், "நான் எங்கே போனேன் என்று கேட்டால் நான் என்ன சொல்வது?" என்று அவனைப் பரிதாபமாகப் பார்த்து கேட்க, "கொடு நான் பேசுகிறேன்.." என்றான்.

திடுக்கிட்டவள்,

"நீங்களா, நீங்க யாருன்னு கேட்டால் என்ன சொல்வீங்க..." என்று விழிகளில் அச்சத்தைத் தேக்கி வைத்து கேட்க அந்த நொடி கூட அவளை ரசித்தவன் புன்னகைத்த படியே,

"இங்க கொடு ஃபோனை.." என்று வாங்கியவன் "ஹலோ.." என்றான்.

இதோடு எட்டாவது தடவையாகக் கனிகாவை அழைத்திருந்த அகில், அவள் அழைப்பை எடுக்காததால் பதட்டத்தில் இருந்தவன் இந்த முறை அழைப்பை எடுக்கவும் கனிகாவின் குரலை கேட்க பதற்றத்துடன் காத்திருக்க எதிரே ஆணின் குரல் கேட்கவும் திடுக்கிட்டவன்,

"யாரது, இது கனிகாவோட ஃபோன் தானே?" என்றான்..

"யெஸ் இது கனியோட ஃபோன் தான், நான் அவ...அவங்களோட ஃப்ரெண்ட் தான். பஸ்டாண்டில் தனியாக நின்றிருந்தாங்க, ஏதாவது ப்ராப்ளம்ஸ் வந்திருமோன்னு பயந்து நான் தான் அவங்களைப் பிக்கப் பண்ணிட்டு வருகிறேன்.." என்று பொய் கூறுபவனை ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாள் கனிகா.

யாரிவன் கனிகாவை இவ்வளவு உரிமையாகக் கனி என்கிறான் என்று அதிர்ந்தவன்,

"நான் அவளைப் பஸ்டாண்டில் தானே நிக்கச் சொன்னேன், அட் லீஸ்ட் எனக்கு ஒரு ஃபோன் பண்ணியாவது சொல்லி இருக்கலாம் இல்லையா, நான் இத்தனை தடவை அழைத்தும் ஏன் அவள் ஃபோனை அட்டெண்ட் பண்ணவில்லை?" என்றான் திகைப்பு மாறாத குரலில்.

"இல்லை, உங்களுக்காக வெயிட் செய்கிறேன் என்று தான் சொன்னாள்... சொன்னார்கள், ஆனால் அப்பொழுது அங்கு இருந்த நிலைமை சரியில்லை, அதனால் நான் தான் என்னுடன் வரச் சொன்னேன். அப்பொழுது காரில் ஏறும் பொழுது பதட்டத்தில் செல்ஃபோனை தவற விட்டு விட்டாள். அவளுக்குத் தெரிந்தவர்கள் நம்பர்ஸ் நிறைய அதில் இருக்கிறதாம், அதனால் ஃபோன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அதனால் இப்பொழுது மீண்டும் அங்குச் சென்று ஃபோனை எடுத்துக் கொண்டு வருகிறோம்" என்று பொய் உரைக்க,

ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிய அவனையே பார்த்திருந்தவளை தன்னுடன் இழுத்துக் கொண்டவன் என்ன என்பது போல் புருவம் உயர்த்த, இல்லை என்று தலை அசைத்தவள் 'ஃபோனை என்கிட்ட கொடுங்க..' என்று சைகை செய்தாள்.

ஹர்ஷா பேசும் பொழுது கனிகாவை உரிமையுடன் அழைத்ததையும், அவள் என்றும் அவர்கள் என்றும் மாற்றி மாற்றிக் கூறியதையும் கவனித்த அகிலுக்கு எதுவோ சரியில்லை என்று புத்தியில் உரைக்க,

"நான் கனிகாவிடம் பேச வேண்டும், ஃபோனைக் கொடுங்கள்..." என்றான்.

அலைபேசியின் ஸ்பீக்கரை ஆன் செய்தவன் அவளிடம் கொடுக்க,

"அத்தான், ஸாரி அத்தான், நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவோம்.." என்றாள்.

அந்தச் சூழ்நிலையிலும் அவளின் "அத்தான்" என்று அழைப்பு ஹர்ஷாவின் மனதில் பொறாமையைத் தூண்ட, புருவங்களைச் சுருக்கியவன் அவளை அணைத்திருந்த கையை இன்னும் இறுக்க,

"இப்பொழுது எங்கிருக்கிறீர்கள்?" என்ற அகிலின் கேள்விக்கு, கனிகாவிற்குப் பதிலாக, ஹர்ஷாவே அவர்களின் வீட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு இடத்தைச் சொன்னவன், "இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் வந்து விடுவோம்" என்று கூறிவிட்டு சட்டென்று அலைபேசியை அணைத்துவிட்டு "யாரவன்?" என்றான்.

அவன் அழைப்பை அவ்வாறு துண்டித்ததையும் அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தையும் கவனித்தவளுக்கு அவன் கோபம் புரியாமல், "என் அத்தான்.." என்றாள்.

"அத்தானா?"

"என் மாமாவின் பையன்.." என்று விகல்பம் இல்லாமல் அவள் சொல்ல,

"அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிக்குமோ?" என்றான்.

அப்பொழுது தான் அவன் கோபத்தின் காரணம் புரிந்தவள்,

"ஐயோ! இல்லை, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.." என்று பதறினாள்.


ஒன்றும் பேசாமல் அவன் அவளை விட்டு விலக அது வரை அவனின் இறுக்கிய அணைப்பில் இருந்தவள் சட்டென்று அவன் விலகியதும் பதறி இரு கைகளால் தன் மார்பை மீண்டும் மூட, அவளின் பதற்றத்தை பார்த்தவன்,

"ஏன்? நான் தானே... இப்போ எதுக்கு இந்தப் பதட்டம்.." என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்.

அவள் ஒன்றும் பேசாமல் தலை குனிய, அவள் மார்பில் இருந்த அவளின் கைகளை வலிய பிரித்தெடுத்தவன், மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொள்ளப் பெண்ணவளின் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கியது.

இது வரை பயத்திலும், கலக்கத்திலும் இருந்தவளுக்கு அவனின் அணைப்புத் தேவையாக இருந்தது, ஆனால் இப்பொழுது அவன் அணைத்திருக்கும் விதத்தில் வித்தியாசம் தெரிய உள்ளுக்குள் படபடக்க அவனை விலக்க முயற்சித்தவளை ஒரு நொடியில் அடக்கியவன், அவளை இன்னும் இறுக்க, தாவணி இல்லாத உடலில் வெற்று இடங்களில் அவன் ஸ்பரிஸம் தீண்ட அவளின் உடலில் ஒரு வித நடுக்கம் ஓடியது.

அவளின் அச்சத்தை உணர்ந்தவன் போல் அவளை விலக்காமல் முகத்தை நிமிர்த்திப் பார்த்தவன்,

"ஐ லவ் யூ கனி.." என்றான்..

அத்தனை நெருக்கத்தில் அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு அவனின் வார்த்தைகள் சிலிர்ப்பை கொடுத்தது என்றால் அவளை அணுவணுவாக விழுங்கி விடுவது போல் பார்த்தவனின் பார்வையில் தெரிந்த காதலும் தாபமும் உதறலைக் கொடுக்க, செய்வதறியாது பயத்தில் உதடுகளைக் கடித்தபடி அவனை விட்டு முடிந்த அளவு விலக முயற்சிக்க அவளின் அச்சத்தை உணர்ந்தவன்,

"கிளம்பலாம், உன் அத்த்த்தான் உன்னை எதிர்பார்த்திட்டு இருப்பான்" என்றான்.

அவன் "அத்தான்" என்ற சொல்லில் கொடுத்த அழுத்தத்தைப் பார்த்தவள் அவனின் பொறாமையில் கர்வம் கொண்டவள் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொள்ள,

"போகலாமா? இல்லை இப்படியே இருந்து விடுவோமோ?" என்று கேட்க,

அவன் குரலில் தொனித்த கிண்டலில் அவனை விட்டு நகர முயன்றவள், "ஐயோ! தாவணி இல்லாம எப்படி வீட்டுக்கு போறது?" என்றாள்.

"போகிற வழியில் ஏதாவது ஸ்டோர் திறந்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.." என்று சொல்ல, ஆனால் அது வரை எப்படி அவனுடன் தனியாகக் காரில் அமர்ந்து வருவது என்று கூச்சத்தில் நெளிந்தாள்..

அவளின் தயக்கம் புரிந்தவன் சட்டென்று தன் டி ஷர்ட்டைக் கழட்டிக் கொடுக்க, ஏற்கனவே மனமும் உடலும் அவனின் நெருக்கத்தால் தகிக்க இப்பொழுது அவனைச் சட்டை இல்லாத வெற்றுடம்பில் பார்க்கவும் தலை குனிந்துக் கொண்டவளைப் பார்த்து புன்னகைத்தவன் டீ ஷர்ட்டை அவனே அவள் மேல் போர்த்தினான்.

இறுக்கச் சட்டையைப் பிடித்துக் கொண்டு அவனை விட்டு நகர்ந்தவள் ஒன்றும் பேசாமல் மௌனமாக வர அவனும் அமைதியாகக் காரை செலுத்தினான். வழியெல்லாம் கலவரத்தினால் கடைகள் மூடியிருக்க அவளுக்குப் பீதி கிளம்பியது.


'ஒரு வேளை தாவணிக் கிடைக்கவில்லை என்றால்!!!!' என்று கலங்கியவள் ஒவ்வொரு கடையாக உற்று பார்த்துக் கொண்டு வர அவளின் கலக்கம் புரிந்தவன் அவள் கரம் பற்றி அழுத்தி,

"பயப்பாடாதே, எப்படியும் ஏதாவது ஒரு ஸ்டோர் ஓபன் ஆகியிருக்கும். கண்டிப்பாக வாங்கி விடுவோம்.." என்றான்.

சிறிது தூரத்தில் ஒரு துணிக்கடைத் திறந்திருக்க,

"கனி, என் ஷர்ட்டைக் கொடு, நான் போய்த் தாவணி வாங்கி வருகிறேன்" என்றான்.

சரி என்றவள் எச்சரிக்கையாகத் தன்னை மறைத்துக் கொண்டு அவன் சட்டையைக் கொடுக்க, சிரித்துக் கொண்டவன், சட்டையைப் போட்டுக் கொன்டு வெளியேறினான்.

காரில் இருந்து இறங்கியவன் சட்டென்று திரும்பி,

"கனி என்ன கலர் தாவணி?" எனவும், நல்ல வேளை அவள் அன்று வெள்ளை நிறத்தில் தாவணி அனிந்திருந்ததாள்.

உள்ளே சென்றவன் சிறிது நேரத்திலேயே தாவணியுடன் திரும்பி வந்தான்.

தாவணியுடன் வந்தவனைப் பார்த்தவளுக்கு அப்பாடா என்று இருந்தது.

அவன் காரின் உள்ளே அமர்ந்து தாவணியைக் கொடுக்க அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள் ஏனோ தானோ என்று தாவணியைக் கட்ட,

"ஏன் இத்தனை அவசரம்? மெதுவாகவே கட்டு" என்றான்.

அவன் அருகில் அமர்ந்திருக்க எப்படி மெதுவாகக் கட்டுவது என்று நினைத்தவள், "இல்லை, இதே போதும்" என்றாள்.

"நீ சரியா கட்டலை, உன் அத்தான் உன்னை நான் எதுவோ செய்துவிட்டேன் என்று நினைக்கப் போகிறான்.." என்றான்.

அவனுக்கு அகிலை பிடிக்கவில்லை என்று அவன் குரலிலேயே கண்டவளுக்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து நாணம் வர தலை குனிந்தவளின் அருகில் நெருங்கியவன்,

"நான் வேண்டுமானால் நல்லா கட்டிவிடட்டுமா???" என்று கண் சிமிட்டி கூற, திகில் அடைந்தவள் படப்படப்புடன், "இல்லை பரவாயில்லை, நாம் போகலாம்.." என்றாள்.

சிரித்துக் கொண்டவன் காரைக் கிளப்ப சிறிது நேரத்திலேயே அகில் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

காரில் இருந்து இறங்க பயந்தவள் அவனைப் பரிதாமாகப் பார்க்க, "நான் வேண்டுமானால் அவனிடம் பேசட்டுமா?" என்றான்.

"இல்லை இல்லை வேண்டாம்.." என்று அவள் பதற அவளின் நிலைப் புரிந்தவன், "சரி, அவனிடம் போ, நாளைக்குக் கால் பண்ணு..." என்றான்.

கனிகாவிற்காக மனம் பதற காத்திருந்த அகிலிற்கு அவள் அலைபேசியில் பேசிய ஆணின் குரல் தன்னை அறியாமல் ஏதோ ஒரு அச்சத்தைக் கொடுத்தது..

'யாராக இருக்கும்? நான் தான் வருகிறேன் வெயிட் பண்ணு என்று சொன்னேனே அப்புறம் யாருடன் சென்றாள்..' என்று குழம்ப ஏனோ அவளை இழந்துவிடுவோமோ என்று திடீரென்று மனதிற்குள் தோன்ற, 'சே சே அப்படி எல்லாம் இருக்காது...அவன் சொன்னது போல் நிச்சயம் அவளோட க்ளாஸ் மேட் யாராவது இருக்கும்..' என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டிருக்கும் பொழுதே அந்த விலை உயர்ந்த வெளி நாட்டுக் கார் வந்து நின்றது.

காரில் இருந்து இறங்கியவள் அச்சத்துடன் அகிலின் அருகில் செல்ல, அந்த இருட்டிலும் ஹர்ஷாவின் காரைப் பார்த்த அகிலுக்குத் திடுக்கிட்டது.

இத்தனை விலை உயர்ந்த காரை வைத்திருப்பவனை எப்படிக் கனிகாவிற்குத் தெரியும்? அவளோட கூடப் படிக்கும் பையன் என்றானே? காலேஜில் படிக்கும் பையனுக்குக் கோடி ரூபாய் விலை பெறும் கார் எதற்கு? என்று குழம்ப, மெதுவாக அவன் அருகில் வந்தவளை ஏற இறங்க பார்த்தவன் இப்பொழுது சாலையில் வைத்து எதுவும் பேசுவது நல்லதல்ல என்று தோன்ற, ஒன்றும் பேசாமல், "வண்டியில் ஏறு.." என்றான்.

சரி என்றவள் திரும்பி ஹர்ஷாவைப் பார்க்க இருட்டில் அவன் முகம் தெரியவில்லை, ஆனால் ஹர்ஷாவிற்கு அவளின் பயந்த முகம் தெரிந்தது.

இந்நேரம் அகிலிற்கு எப்படியும் சந்தேகம் வந்து இருக்கும், அவன் எதுவும் பிரச்சனை செய்வதற்குள் அவனிடம் தனியாகப் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவன் அகிலின் பைக் கிளம்பும் வரை இருந்தவன் அவர்கள் கிளம்பிய பின்னே சென்றான்.

இந்நேரம் வரை கனிகா வீட்டிற்கு வராததால் அச்சத்தில் இருந்த மாலதிக்கும் கணேசனுக்கும் அகில், "கனிகாவிடம் பேசிவிட்டேன், அவள் வந்து கொண்டு இருக்கிறாள்..." என்று கூறியிருந்தாலும், இன்னும் வந்து சேராததால் கலக்கத்தில் இருந்தவர்கள் அவள் அகிலுடன் ஒரு வழியாக விட்டிற்கு வந்து சேர, பைக்கில் இருந்து இறங்கியளின் அருகில் ஓடிய மாலதி,

"எங்க கனிகா போனே? நாங்கெல்லாம் ரொம்பப் பயந்துட்டோம்" என்றார்.

அகிலை திரும்பி பார்த்தவள்,

"ஒரு பஸ்ஸும் வரலை அத்தை, அதனால என்னோட கூடப் படிக்கறவங்க கொண்டு வந்து விட்டாங்க..." எனவும்,

அகிலை பார்த்த மாலதியிடம், 'அப்புறம் பேசிக்கலாம்' என்பது போல் சைகை செய்தான் அகில்.

சரி என்றவர் வீட்டிற்குள் செல்ல,

"அத்தை எனக்குப் பசிக்கலை, நான் ரூமிற்குப் போகிறேன்.." என்றவள் அவர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்து அமைதியாகத் தன் அறைக்குச் சென்றாள்.

"அகில் எதுவோ சரியில்லைப்பா, அவள் முகத்தைப் பார்த்தாலே என்னமோ சரியில்லைன்னு தோணுது.." என்று கலவரத்துடன் கூற,

"அம்மா, ஸ்ட்ரைக்கினால் நடந்த கலவரத்தில் பயந்திருக்கா, அவங்க கிராமத்தில் எல்லாம் இந்த மாதிரி எதையும் அவ பார்த்திருக்க மாட்டாள். அதான் இந்தப் பயம். வேற ஒன்றும் இல்லை, நாம் காலையில் பேசிக்கலாம்.." என்றவன் நேராகத் தன் அறைக்குள் செல்ல, 'கனிகா என்னிடம் இருந்து என்ன மறைக்கிறாய்?' என்று யோசித்தவன் காலையில் நேராகவே கேட்டு விட வேண்டியது தான் என்று முடிவெடுத்தான்.

******************************

மறு நாளும் ஸ்ட்ரைக் தொடர்ந்ததால் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து இருந்ததால் வீட்டில் இருந்தவளிடம், "உன் கிட்ட கொஞ்சம் பேசனும், மாடிக்கு வா..." என்றான் அகில்...

யோசனையுடனும் அச்சத்துடனும் அவன் பின்னால் சென்றவள் மாடியை அடைய, அங்கு இருந்த ஒரு சிறு கதவை சாத்தியவன்,

"சரி சொல்லு, யாரு அவன்? நேற்று என்ன நடந்தது?" என்றான்.

அவன் தன் கோபத்தைக் கடினப்பட்டு அடக்கிக் கொண்டு கேட்கிறான் என்பதை அவன் முகத்தில் இருந்தே தெரிந்துக் கொண்டவள் ஒன்றும் பேசாமல் தலை குனிய,

"உன்னைத் தான் கேட்கிறேன்..." என்று அவன் கத்த, பக்கென்றது அவளுக்கு.

கண்கள் கலங்க அவனிடம் மறைக்க வழியில்லாமல், நேற்று ஆட்டோவில் தான் கடத்தப் பட்டதையும் பின் ஹர்ஷா வந்து காப்பாற்றியதையும் அழுதபடியே சொல்ல, அதிர்ச்சியில் உரைந்தவன்,

"கனிகா, யார் அவனுங்க?" என்றான்.

சொல்லும் பொழுதே அவன் குரலில் நடுக்கத்தைக் கண்டவள்,

"எனக்குத் தெரியாது அத்தான். நீங்க தான் ஆட்டோ அனுப்பினீங்கன்னு நினைச்சுதான் நான் அதில் ஏறினேன்..." என்றாள்.

அவள் சொன்னதில் நிறையக் குளறுபடி இருப்பதை உணர்ந்தவன்,

"சரி, எப்படி அந்த ஆட்டோ ட்ரைவருக்கு நீ தான் கனிகான்னு தெரிந்தது? என் பெயரை எப்படிச் சரியாகச் சொன்னான்? எப்படிச் சரியாக அந்த நேரத்தில் உன் க்ளாஸ் மேட் ஹர்ஷா அங்கு வந்தான்?" என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டவனின் சந்தேகம் எல்லாம் ஹர்ஷாவின் மேலேயே இருந்தது.

நடந்த அனைத்தையும் பார்க்கும் பொழுது இது ஹர்ஷாவின் திட்டம் போல் தான் தெரிகிறது என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கையில் அகிலின் அலைபேசி அழைத்தது.

எடுத்துப் பார்த்தவன் புது எண்ணாக இருக்க அழைப்பை எடுத்தவன் அதிர்ந்தான், எதிர் முனையில் ஹர்ஷா.

என் நம்பர் அவனுக்கு எப்படித் தெரியும் என்று குழம்பியவன் யோசனையில் இருக்க, அவனின் அமைதியில் நடப்பதைப் புரிந்து கொண்ட ஹர்ஷா, "அகில், கனியை அழைத்தேன், அவள் எடுக்கவில்லை, அதனால் கண்டிப்பாக நீங்கள் அவளைக் கேள்விகளால் துழைத்து எடுத்திருப்பீர்கள் என்று நினைத்து தான் உங்களிடமே நேரில் பேசிவிடுவது என்று முடிவு செய்தேன், உங்கள் நம்பர் எப்படி எனக்குத் தெரியும் என்றெல்லாம் ரொம்பக் குழப்பிக்காதீங்க ப்ளீஸ்..." என்றான்.

இவ்வளவு உரிமையாகக் கனி என்கிறானே, யார் அவன் என்று மீண்டும் குழம்பப் பயம் உள்ளத்தில் சூழ, ஹர்ஷாவின் சொற்களிலும் பேசிய விதத்திலும் தெரிந்த கிண்டல் தொனியை அறவே வெறுத்த அகில்,

"நேரில் பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்றான்.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரை சொன்னவன் இன்று மாலை ஆறு மனிக்கு. தான் அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல,

"இல்லை நான்...எனக்கு வேறு வேலை..." என்று அகில் இழுக்க, "அகில், வி வில் மீட் அட் 6 டுடே [Akil, we will meet at 6 today]" என்றவன் அலைபேசியைத் துண்டிக்க அதிர்ந்தான் அகில்.

எத்தனை ஆணவம், பணக்காரன் என்று திமிரோ என்று நினைத்தவன் கனிகாவை முறைக்க, ஹர்ஷா அகிலை சந்திக்க வேண்டும் என்று சொன்னது புரிந்து என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறதோ என்று அரண்டவள் மலங்க விழிக்க,

"கனிகா, இன்னொரு தடவை கேட்கிறேன், மறைக்காமல் பதில் சொல்லு, யார் இந்த ஹர்ஷா?" என்றான்.

"அத்தான்.." என்று அழைத்தவளின் கண்களில் இருந்து நீர் பொல பொலவென்று கொட்ட, அதில் மனம் தடுமாறியவன்,

"சரி, நீ ஒன்றும் சொல்ல வேண்டாம், நானே அவனிடம் பேசிக் கொள்கிறேன்" என்றவனின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.

**************************

மாலை ஹோட்டலுக்கு வந்தவன் ஹர்ஷா அழைத்த என்ணிற்கு அழைக்க, ஹர்ஷா தான் அமர்ந்திருக்கும் இடத்தைச் சொல்லவும் அவனை நோக்கி நடந்தவன் அங்குக் கம்பீரமாக, பணக்கார தோரணையுடன், அழகனாக, சேரில் ஸ்டைலாகக் கால் மேல் கால் போட்டு, ஒரு கையால் தன் ஸன்கிளாஸைச் சுழற்றியபடியே அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த ஹர்ஷாவைப் பார்த்து அதிர்ந்தான்.

அகில் அருகில் சென்றதும், "ஹர்ஷா?" எனவும் "யெஸ்.." என்றவன் எழாமல் அமர்ந்திருந்தபடியே தன் முன் இருந்த இருக்கையைக் காண்பித்து அமரச் சொல்ல,

அவனின் திமிர்தனத்தால் தன் பொறுமையை இழக்கும் தருவாயில் இருந்தவன் சுற்றம் பார்த்து அமைதியை கடைப்பிடித்தான்.

அகிலை பார்த்த ஹர்ஷாவிற்கோ மனம் ஒரு இடத்தில் இல்லாது தவித்தது, ஏனெனில் அகிலும் பார்ப்பதற்கு மாநிறத்தில் நல்ல உயரமாக, கனிகாவைப் போல் லட்சணமாகவும் இருந்தான்.

அகில் அமரவும் அலைபேசியை அணைத்தவன் தன் கரத்தை நீட்ட அவன் கரத்தைப் பற்றிக் குலுக்கிய அகில்,

"நைஸ் டு மீட் யூ.." என்றான்.

ஆனால் அவன் உள் மனது ஹர்ஷாவை அறவே வெறுத்தது. நேரத்தை வீணடிக்காமல் "கனிகாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று சட்டென்று அகில் கேட்க,

"டு யு வாண்ட் டு ஹாவ் சம்திங்?" என்றான் ஹர்ஷா அமர்த்தலாக.

நாம் என்ன கேட்கிறோம், இவன் என்ன பேசுகிறான் என்று நினைத்த அகில், "காப்பச்சீனோ" என்று சொல்ல, வெயிட்டரை அழைத்தவன் ஆர்டர் செய்ய, "உங்களுக்கு" என்று அகில் கேட்க, அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வெயிட்டரைப் பார்த்து "தட்ஸ் ஆல்..." என்ற ஹர்ஷாவை மனம் குமுற ஆனால் முடிந்தவரை வெளியில் காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அகில்.

அவனின் உள்ள குமுறலை மனதிற்குள் ரசித்துக் கொண்டிருந்த ஹர்ஷா,

"ஐ லவ் கனி" என்றான் பட்டென்று...


தொடரும்...
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top