JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episode 14

JB

Administrator
Staff member

அத்தியாயம் - 14

அர்ஜூனின் வெளிநாட்டுப் பயணத்தைக் கேட்டதும் ஒரே கலக்கமாக இருந்தது ஸ்ரீக்கு....

சட்டென்று ஒரு யோசனை வர,

"அர்ஜூன்! ஏன் திவ்யாவையும் உன் கூட அழைச்சிட்டுப் போகக் கூடாது? கல்யாணமாகி நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் வெளியே போகலை... இந்த ட்ரிப் நிச்சயமா உங்க இரண்டு பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் கொண்டு வரும்...." என்றார்...

அவருக்கு நன்றாகத் தெரியும்... இதைக் கொஞ்ச நாட்களுக்கு முன் சொல்லியிருந்தால் தன் மகன் தாம் தூம் என்று குதித்திருப்பான் என்று.....

இப்பொழுது அவனுக்குத் தன் மனைவியைப் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது... அவன் கண்கள் அவளைத் தன் மனைவியாகக் காண ஆரம்பித்து இருக்கிறது...

நிச்சயம் தான் எதிர்பார்த்தது போல் இந்தப் பயணம் அவர்களுக்கு இடையில் ஒரு புரிதலைக் கொடுக்கும் என்று.... அவரும் எத்தனை தான் முயற்சி எடுப்பார்....

இளையவர்கள் தங்களின் நிலையில் இருந்து இறங்கி வர மறுக்கிறார்களே....

அவர் மகன் தன்னிடத்தை விட்டு, தன் ஆணவத்தை விட்டுக் கீழ் இறங்கி வந்தால் அவர் மருமகளிற்கு அது புரியவில்லை.....

அவளின் அளவிற்கு இறங்கி வந்து தன்னைத் தெளிவு படுத்தும் பொறுமை அவர் மகனிற்கு இல்லை.... யாரைக் குறை சொல்வது?

இருந்தும் அவர் தன் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.... திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.....

அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்ற கூற்றிற்கேற்ப திவ்யா அர்ஜூன் திருமணம் பெரியோர்கள் பார்த்து நடக்கவில்லையே....

உண்மையில் இவர்கள் திருமணம் தானே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது...

இப்பேற்பட்ட திருமணத்தைத் தோல்வி அடைய அவர் விடுவதாக இல்லை..... இவர்கள் இருவரும் இணையும் வரை இந்தத் தாயுள்ளம் தவித்துத் தான் கிடக்கும்....

"நோ மாம், இது ஒரு பிஸினஸ் ட்ரிப்.... நான் எப்போ எந்த ஊரில் இருப்பேன் என்று எனக்கே தெரியாது..... இதுல அவளுக்கு முதல்ல பாஸ்போர்ட் எடுக்கனும், அப்புறம் விசா வாங்கனும், அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை..... சோ ப்ளீஸ் இத பற்றிப் பேசாதீங்க" என்றவன் அழைப்பை துண்டித்துக் கொண்டான்...

அவனுக்குமே திவ்யா தன்னுடன் வந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே மனதிற்குள் ஒரு இனிய சிலிர்ப்பை தந்தது தான்...

"ஆனால் என்னுடைய ரூமிற்கே வருவதற்கு இத்தனை தயங்குபவள் என்னுடன் யு.எஸ்.ஸிற்கா வரப் போகிறாள்?" என்று எண்ணியவன் அத்துடன் அந்த நினைப்பை உதறிவிட்டு உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு ஜிம்மில் இருந்த குளியல் அறைக்குள் நுழைந்தான்.

சொந்தங்கள் அனைவரும் அவரவரின் காரில் கிளம்ப, கலாவும் சிவசுப்ரமணியமும், வினோத்தும் இரயில் நிலையத்திற்குக் கிளம்பத் திவ்யாவிற்குத் தன் பெற்றோர் தன் அருகில் இருந்ததால் இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் அவளிடம் இருந்து விடை பெற்றதில் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது...

உள்ளத்தில் என்ன தான் சஞ்சலமும், மனதில் பாரமும் அழுத்திக் கொண்டு இருந்திருந்தாலும் அவள் அன்னை அவளுடன் இருந்த இந்த இரண்டு நாட்களில் சிறிது தைரியமாக இருந்தது....

தன் கணவன் இன்று வீட்டிற்குத் திரும்பியதும் தன் மொத்த சுயரூபத்தைக் காட்ட போகிறான் என்று கலங்கி போயிருந்தவளுக்கு இப்பொழுது இவர்களும் கிளம்பவும் ஒட்டு மொத்த துணிவும் தன்னை விட்டு செல்வது போல இருக்கவும் மனம் சோர்வுற்றது...

விழிகளில் நீர் உடைப்பெடுக்கத் தங்களையே பார்த்திருந்த திவ்யாவின் அருகில் வந்த கலா அவள் கரங்களைத் தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு கனிவுடன்....

"திவ்யா... அம்மா சொல்றத கொஞ்சம் கேளும்மா.... நீ இன்னும் சின்னப் பொண்ணில்லை.... உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு.... உன் வீட்டுக்காரர் மனசப் புரிஞ்சு நடந்துக்கம்மா" என்றவர் பெருமூச்சுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்...

ஏனெனில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த ஒரு தாயாக, தன் கணவனுடன் இருபத்தி ஆறு வருடங்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு மனைவியாக அவருக்கும் தெரிந்தது தன் மருமகனின் மன மாற்றமும், தேவையும்....

அதே சமயம் தன் மகளின் அச்சத்தையும் தடுமாற்றத்தையும் ஒரு அன்னையாக அவர் புரிந்து கொண்டு தான் இருந்தார்....

ஆனால் இவர்கள் இருவருக்குள் ஒரு புரிதல் வர யாராவது ஒருவர் இறங்கி வந்து தான் ஆக வேண்டும் என்று உணர்ந்து கொண்டு தான் அவர் திவ்யாவிற்கு அப்படி ஒரு அறிவுரையைக் கூறினார்....

தன் அன்னையின் பேச்சிற்குத் தலை கவிழ்ந்து செவி மடுத்திருந்தவளுக்குப் பின் அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கண்களில் இருந்து ஆறாக வழியும் நீர் மட்டும் நின்றபாடில்லை....

திவ்யாவின் தோள் பற்றி அணைத்துக் கன்னத்தைத் தட்டி விடைப் பெற்ற வினோ திரும்பி மஹாவைப் பார்க்க, அவளின் கண்களிலும் நீர் நிரம்பியிருந்ததைப் பார்த்தவனுக்கு வருத்தத்திற்குப் பதில் மகிழ்ச்சியே இருந்தது...

தன்னவளுக்குத் தன் பிரிவு வருத்தத்தைத் தருவதை எந்தக் காதலனும் கர்வத்துடனேயே விரும்புவான்... அவனுக்கு மட்டுமே தெரியும் அது தன் காதலியின் அங்கீகரித்த காதலின் அடையாளம் என்று..

யாருக்கும் தெரியாமல் வருகிறேன் என்று தலை அசைக்க, சிறு புன்னகையுடன் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சரி என்று தலை அசைத்தவளை அப்பொழுதே அந்த நொடியே அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.....

ஆனால் அவளின் வசதியும் அழகும், தன்னுடைய ஏழ்மையும் சடுதியில் அவன் மனதில் தோன்ற, அவனைச் சட்டென்று திரும்பி செல்ல வைத்தது.....

ஆனாலும் தன்னவள் தன்னுடைய காதலை வாய் விட்டு சொல்லாமலே புரிந்து கொண்டது அவனைச் சிறகில்லாமல் பறக்கவே வைத்தது....



அன்று இரவு உணவு உண்ட பின் மஹாவின் அறைக்குத் திவ்யா செல்ல, ஒரு பெரு மூச்சோடு அவளைப் பார்த்த ஸ்ரீ ஒன்றும் பேசாமல் படுக்கச் சென்றார்.....

அவரின் களைத்த முகத்தைப் பார்த்த பாலாவிற்கு எதுவோ நடந்திருக்கிறது என்று புரிந்தது....

மனைவியின் அருகில் வந்தவர்...

"என்னமா ரொம்ப வேலையா? ரொம்ப டயர்டா இருக்க?" எனவும்,

நடந்ததை விவரித்த ஸ்ரீ,

"எனக்கு என்னமோ அர்ஜூன் திவ்யாவ விரும்ப ஆரம்பிச்சிட்டானோன்னு தோனுதுங்க.... ஆனால் இந்தப் பெண்ணுக்கு அது புரியலை.... நேற்று அவன் வாய் விட்டு தான் சொல்லல, ஆனால் அவனோட செயல் எல்லாம் அத தெளிவா வெளிப்படுத்திருச்சு..... நாங்க ஷாப்பிங் போலாம்னு கூப்பிட்டாலே அவனுக்கு அவ்வளவு கோபம் வரும்... அந்த நேரத்தில நான் எவ்வளவு சம்பாதிச்சிடுவேன் தெரியுமான்னு எரிஞ்சி விழுவான்.... ஆனால் நேற்று என்னன்னா நான் கடையில் சொன்னவுடனயே எந்த மறு பேச்சில்லாமல் அவளைத் தன் கூடக் கூட்டிட்டுப் போனான்..... அவளுக்கு முதல் தடவையா பட்டு புடவை வேறு எடுத்துக் கொடுத்திருக்கான்...... அது மட்டும் இல்லாமல் அவன் நேற்று இரவு தூங்கப் போற முன்னாடி திவ்யாவைப் பார்த்த பார்வையில ஒரு ஏக்கம் தெரிஞ்சிச்சுங்க..... இத்தனையும் எனக்குப் புரியுது..... ஆனால் புரிஞ்சுக்க வேண்டியவளுக்குப் புரியலையே..... அந்தக் கோபத்தில் தான் இப்போ யுஎஸ் ஜெர்மனின்னு கிளம்பறான்"

"என்னது யூஎஸ், ஜெர்மனி போறானா? எப்போ? எதுக்கு?"

தனக்கும் அர்ஜூனுக்கும் நடந்த விவாதத்தை ஸ்ரீ சொல்ல.

"ஸ்ரீ, அவங்க இரண்டு பேரும் சின்னப் பிள்ளைங்க இல்லை... கல்யாணம் அப்படின்னா என்னான்னு தெரிஞ்ச வயது தான்... அதனால அவங்க ரெண்டு பேரையும் அவங்க போக்குல விடு.... எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும்" என்றார்.

என்ன தான் கணவரின் ஆறுதல் வார்த்தைகள் ஸ்ரீயின் உள்ளத்தில் சிறிதே நம்பிக்கையை வார்த்திருந்தாலும் அர்ஜூனின் வெளிநாட்டுப் பயணம் அவர் மனதை குடையவே செய்தது...

இந்த ஒரு மாதத்தில் அவன் மனம் மாறிவிட்டால்? திவ்யாவை அவன் மீண்டும் வெறுக்க ஆரம்பித்துவிட்டால்?

மறுநாளே ஜெர்மனிக்கு கிளம்பிய அர்ஜூன் தன் அன்னையிடமும் தந்தையிடமும் மட்டும் சொல்லிவிட்டு கிளம்ப அங்கே வந்த திவ்யாவிற்கு அவனது பிரிவை தாங்க முடியாமல் அவளின் மனம் தன் உறுதியை இழந்து தளர ஆரம்பிக்கத் துடிதுடித்துப் போனாள்...

கடந்த முறை அவன் மும்பை போனது தன்னை விட்டு தள்ளி இருக்கத்தான் என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.... அப்பொழுதே அவளது மனம் அந்தப் பாடுப்பட்டது.....

ஆனால் இன்று? இன்றைய பயணம்?

அர்ஜூனின் பிடிவாதமும், கோபமும் ஆளுமையும் திவ்யாவின் மனதில் அவன் அவளைக் காதலிப்பான் என்ற நினைப்பை உருவாக்கவில்லையோ என்னவோ ஆனால் கடந்த சில நாட்களாக அவன் அவளை எதிர்பார்ப்பதைப் போல் பார்ப்பதும், அவளின் அருகாமையை விரும்புவது போல் அவளிடம் நெருங்கி நெருங்கி வருவதும் அவளுக்கு அவன் மனமாற்றத்தை உணர்த்தத் தான் செய்தது....

ஆனால் பாவம் அவளால் தான் தன் அச்சத்தை விட்டு, அவனை நினைத்து தான் கலங்கி போய் இருக்கும் நிலையை விட்டு அவனிடம் நெருங்க இயலவில்லை.....

அவனுடன் தனித்து ஒரே அறையில் இருப்பது என்பது, அதுவும் அவனுடன் தாம்பத்ய உறவு என்பது அவள் இருக்கும் இப்போதைய மனநிலையில் நடக்கும் காரியமே இல்லை....

இருந்தும் அவனைப் பிரிவது தனக்குப் பிடித்த ஒன்றை தன்னிடம் இருந்து யாரோ வலிய பிடுங்கினால் வரும் துக்கத்தையே கொடுத்தது.....

இதயமே இரண்டாகப் பிளந்தது போல் வலித்தது.....

அவனுக்கும் அதே உணர்வோ என்னவோ வாசல் வரை வந்தவன் எதனையோ யோசித்தவனாக ஒரு விநாடி நின்றவன் பின் திரும்பியும் பார்க்காமல் விறுவிறுவென்று காரை நோக்கி நடக்க, அவளின் பூ மனம் உள்ளுக்குள் நொறுங்கி போனது.....

"என்னிடம் சொல்லிவிட்டுப் போகக் கூட மனம் இல்லையென்றால் என் மேல் இவ்வளவு வெறுப்பா? ஏன் என் மனதை புரிந்து கொள்ள அவர் முயலவில்லை..... அப்படி என்றால் அவரின் இதயத்தில் துளி அளவுக் கூட என் பிரிவு வலி ஏற்படுத்தவில்லையா?" என்று தனக்குள்ளே மருகியவள் வாயிலைத் தாண்டி வெளியே வருவதா வேண்டாமா என்று தனக்குள்ளே யோசித்தவாறே நிற்க,

அவளின் உணர்வுகள் அவனையும் தாக்கியதோ காரில் ஏறப் போனவன் சட்டென்று தன் மனையாளை திரும்பிப் பார்த்தான்....

அவனின் பார்வை தன் மீது அழுத்தமாகப் படிந்திருப்பதை உணர்ந்த திவ்யாவின் நெஞ்சு குளிர்ந்து போனது....

அவள் இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை....அவன் பார்வையை எதிர் நோக்கியவளின் ஆழ் மனதில் இருந்த காதல் மௌனமாகக் கூச்சலிட்டது...

"நானும் உங்க கூட வரேன்.... என்னையும் உங்க கூடக் கூட்டிட்டு போங்க" என்று...

சுற்றி இருப்பவர்கள் ஒருவருக்கும் தெரியாமல் தலைக் கவிழ்ந்து தன் கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்தவள் அவனைப் நிமிர்ந்து பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்க்க, அவனுக்குத் தன்னவளின் கண்ணீரும் புன்னகையும் உணர்த்தியது தன் பிரிவு அவளின் ஆழ் மனதில் ஏற்படுத்தும் காயத்தை...

இருந்தும் அவன் தன் பயணத்தை நிறுத்தவில்லை.....

அவளின் உருவத்தைக் கண்கள் வழியே தன் இதயத்திற்குள் கொண்டு சென்று பத்திரமாகச் சேமித்து வைத்துக் கொண்டவன் எதுவும் சொல்லாமல் காரில் ஏறினான்...

மற்றவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்றுவிட அர்ஜுனின் கார் கண்களில் இருந்து மறையும் வரை வாசலிலே நின்றவளை அவனும் தன்னுடைய ரியர் வியூ கண்ணாடியில் பார்த்துக் கொண்டே காரை ஓட்டியவன் பாரமான மனதை திட்டி தீர்த்தான்...

"ஆண், நீயே உன் மனதை அவளிடம் தைரியமாகச் சொல்லாத பொழுது, பெண், அதுவும் உன்னைக் கண்டாலே சிங்கத்தைப் பார்ப்பதைப் போல் பயப்படுபவள், எப்படி உன்னிடம் தன் உள்ளத்தைத் திறப்பாள்? என்று.

அவளின் கலங்கிய கண்களும் கலக்கத்தைச் சுமந்திருந்த முகமும் உனக்கு உணர்த்தவில்லை உன் மீது அவள் வைத்திருக்கும் ஆழமான காதலை....

மனசாட்சியின் கேள்விகளுக்கு விடை அளிக்கத் தெரியாமல், தன் மனதில் அரும்பியிருந்த காதலையும் வெளிப்படுத்தாமல் தன் பயணத்தைத் தொடர்ந்தான் அந்த இளம் கணவன்!!!!

நாட்கள் அதன் போக்கில் செல்ல திவ்யா தன் கணவனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்க அர்ஜூனோ தன்னவளிடம் சிக்கிய தன் மனதை அங்கு வெளிநாட்டில் தன் தொழிற்கள் சம்பந்தமான வேலைகளில் திசை திருப்ப முயற்சித்து, பகலில் வென்று இரவில் தோற்றுப் போய்க் கொண்டிருந்தான்.

"முன் பின் அறியாத இன்னாரென்றே தெரியாத ஒரு சின்னப் பெண், தாலியைக் கட்டும் பொழுது கூட அவளின் முகம் பார்க்கவில்லை.... அவளிடம் எனக்கு எப்படி இப்படி ஒரு ஆழமான காதல் வந்தது? எங்கிருந்து எப்பொழுது வந்தது?" என்று ஒவ்வொரு நாளும் தன்னைத் தானே கேள்விகள் கேட்டு துவண்டு போயிருந்தான்....

பெரிய கல்லை தூக்கி தன் இதயத்தில் வைத்தது போல் அழுத்திக்கொண்டு இருந்தது அர்ஜூனிற்கு அவன் மனைவியின் பிரிவு....

ஒரு நாள் வேலை பளுவின் காரணமாக இரவு வெகு நேரம் சென்று தன்னுடைய ஹோட்டலின் அறைக்கு வந்தவன் அவ்வளவு அசதியிலும் தூக்கம் வராமல் இருக்க, திவ்யாவின் புகைப்படத்தைப் பார்க்க நினைத்து அலை பேசியை உயிர்ப்பிக்க, அங்கு மஹா அவர்களின் ரிஷப்ஷன் புகைப்படங்களை முக நூலில் பதிவு செய்திருந்தாள்....

தனக்கு இருந்த குழப்பத்தில் ரிஷப்ஷனைப் பற்றியோ, அல்லது புகைப்படங்களைப் பற்றியோ இது வரை நினைத்திராதவன் இப்பொழுது தான் இத்தனை நாட்கள் சென்று முக நூல் பார்க்க,

அங்கு அவனின் மனையாள் பட்டுப் புடவையில் குழந்தைத்தன்மை மாறாத முகத்துடனும் அழகுடனும் தேவதைப் போல் அவனருகில் நின்றிருந்தாள்...

அவளின் சிறு கீற்று போன்ற புன்னகை அவனது இதயத்தில் சில்லென்று ஊடுருவி சென்று அவளது அருகாமையைத் தேடச் சொல்ல கண்ணிமைக்க மறந்து அவளது புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதோ ஒரு வித உணர்வு உடல் முழுவதும் பரவ அது காதலா, காதல் என்றால் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத ஒரு பெண்ணிடம் எப்படித் தனக்குக் காதல் வந்திருக்கக் கூடும்??

அல்லது ஒரு வேளை காமமா? காமம் என்றால் அன்று அவளை அந்த மழை நாளில் அந்தக் கோலத்தில் பார்த்ததால் அவளின் மேல் தாபம் வந்திருக்கக் கூடுமா?

ஆனால் அதற்கு முன்னரே அவளை என் மனமும் கண்களும் தேடியதே... அப்பொழுது இது வெறும் காமம் இல்லை....

அப்படி என்றால் காதல் தானா? என்று தெளிவாகக் குழம்பிப் போய் ஒவ்வொரு இரவும் தன் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டு இருந்தான்...

இங்கே திவ்யாவிற்கோ தன் கணவனின் ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கடல் அலைகள் போல் ஆர்ப்பரித்து அலை மோதி அவளைக் கொல்லாமல் கொல்ல, அவளின் காயம் பட்ட மனதை மேலும் மேலும் வலிக்கச் செய்திருந்தது...

துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால் விம்மல் வெடித்துக் கிளம்பத் தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டவள் அழுது கரைந்தாள்...

"ஏன் அவரைத் தேடுகிறேன்? அவர் இல்லாமல் இருப்பது ஏன் இத்தனை கஷ்டமாக இருக்கிறது? அவர் மனதில் நான் இருக்கிறேனா என்று கூடத் தெரியவில்லை.... வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் பொழுது அவர் என்ன மனதுடன் வருவாரோ அதுவும் தெரியவில்லை..... பின் நான் எதைப் பார்த்து அவருக்காகக் காத்திருக்கிறேன்? அவர் என்னை ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.... ஆனால் என் மனதில் அவரின் மீது கடலின் ஆழத்தை போல் காதல் இருக்கிறது.... ஆனால் வெளிப்படுத்தத் தெரியாமல் தவிக்கிறேனே..." என்று குமைந்தவள் தன்னையும் அறியாமல் தன் தாலியை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

இப்படி ஒவ்வொரு நாளும் வலியோடும் வேதனையோடும் கழிய நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பித்தது.....

மற்றவர்களுக்கு அர்ஜூன் சென்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது என்றால் அர்ஜூனிற்கும் திவ்யாவிற்கும் ஏதோ இரு யுகங்கள் போல் தெரிந்தது அந்த இரு மாதங்களும்....


தான் இந்தியா திரும்பும் நாள் நெருங்கிவிட்டதால் தன் அன்னைக்கு அழைத்தவன் தன் வருகையைப் பற்றிச் சொல்ல.... ஸ்ரீயோ...

"அர்ஜூன்.... ஒரு மாசம் ஆகும்னு சொன்ன ட்ரிப் உனக்கு இரண்டு மாசம் பிடிச்சிடுச்சுப்பா.... கல்யாணமாகி இத்தனை மாசம் வேற ஆகிடுச்சு... ஆனால் இன்னும் தாலி பெருக்கி கட்டலை..... வழக்கமா நம்ம பக்கத்தில கல்யாணம் ஆகி மூன்று மாதத்தில தாலி மாத்திறது வழக்கம்..... இப்போ நீ இங்க இல்லாததால் நம்மால அதைச் செய்ய முடியல..... நீ எப்போ வரன்னு சரியா சொன்னீன்னா அதுக்கேத்த மாதிரி நானும் நல்ல நாள் பார்த்து திவ்யா வீட்டிற்கும் சொல்லிடுவேன்" என்றார்......

திவ்யாவின் பெயரை கேட்டதும் மனதிற்குள் எழுந்த இனிமையான உணர்வலைகளில் ஒரு சில நொடிகள் சுகமாய் லயித்து இருந்தவன், இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல்.....

"மாம், ஏன் மாம் என்னவோ நீங்க எல்லாரும் ஏற்கனவே பார்த்து பேசி முடிச்ச மேரேஜ் மாதிரி எல்லாத்தையும் பண்ணனும்னு நினைக்கிறீங்க? எதுக்கு மாம் இதுக்கெல்லாம்??" என்றான் தன்னிடத்தில் இருந்து இறங்கி வராமல் பிடிவாதமாக...

"அர்ஜூன் கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் கல்யாணம் கல்யாணம் தான்.... நான் கண்டிப்பா இத செய்யனும்... நீ எப்போ வரன்னு மட்டும் சொல்லு" என்று ஸ்ரீ பிடிவாதமாகக் கூற,

"இந்த வாரத்திற்குள் எல்லா வேலையையும் முடிக்கப் பார்க்கிறேன்" என்றவன் கதிருக்கு அழைத்துத் திரும்புவதற்கான பயணத் தேதியை இந்த வார இறுதிக்குள் உறுதிபடுத்தச் சொன்னான்...

சரியாக ஒரு வாரத்திற்குள் மிச்சம் இருந்த வேலைகள் அனைத்தையும் முழு மூச்சாக முடித்தவன் ஒரு வழியாக ஷாப்பிங் செய்யக் கிளம்பினான்...

ஏனெனில் அவன் எங்கு வெளிநாடு சென்றாலும், யாருக்கு என்ன வாங்கினாலும் வாங்காவிட்டாலும், அந்த அழகான ராட்ஷசிக்கு ஏதாவது வாங்கி வந்துவிடுவான்...

இல்லை என்றால் அவள் குறைந்தது ஒரு வாரத்திற்காவது மூஞ்சியை உர்ரென்று வைத்திருப்பாள்...

ஷாப்பிங் சென்றவன் எல்லோருக்கும் வேண்டிய பொருட்களை வாங்கும் பொழுது திவ்யாவின் நினைவு வர அவளுக்கும் ஏதாவது வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவன் என்ன வாங்குவது என்று தெரியாமல் குழம்பினான்......

அவளிடம் இதுவரை பேசியிருந்தால் தானே அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று தெரியும்.... அர்ஜூன் அவள் அருகில் சென்றாலே சகலமும் நடுங்கி போய் நிற்பவளுக்கு அவன் பேசும் வார்த்தைகள் எங்குக் கேட்கப் போகிறது....

ஆனால் தன்னவளுக்கு அவளுக்குப் பிடிக்கும் விதத்தில் ஏதாவது வாங்கியே தீர வேண்டும் என்று உறுதியோடு இருந்தவனுக்கு அதைக் கண்டறிவதற்கு உகந்த ஒரே ஆள் மஹா தான் என்று தோன்ற மஹாவிற்கு அழைத்தவன்,

"மஹா.... ஐ ஆம் லீவிங் இன் டூ டேஸ்..... டு யூ வாண்ட் மீ டு கெட் எனித்திங்க் ஃபார் யூ [I am leaving in two days...Do you want me to get anything for you?] " என்றான்.

வழக்கமாக அவனாக அவளுக்குப் பிடித்தது போல் பொருட்களை வாங்கி வருவான்.... அவளிடம் என்ன வேண்டும் என்றெல்லாம் கேட்க அவனுக்கு நேரம் இல்லை...... அதற்கெல்லாம் அவனுக்குப் பொறுமையும் இல்லை....

ஆனால் முதல் முறையாகத் தன்னிடம் என்ன வேண்டும் என்று கேட்கும் அண்ணனை வித்தியாசமாக உணர்ந்த மஹா, இருந்தால் என்ன கேட்டு விட வேண்டியது தான் என்று பட்டியலிட ஆரம்பிக்க அவனுக்கு "ஏண்டா கேட்டோம்" என்பது போல் ஆனது...

ஒரு வழியாக அவளின் பட்டியல் முடிவு பெற மெதுவாக ஆரம்பித்தவன்...

"மஹா, நீ கேட்டது எல்லாம் வாங்க ட்ரை பண்ணுறேன்.... பட் ஐ ரியலி டோண்ட் ஹாவ் தட் மச் டைம்..... [But i really don't have that much time] சோ முடிந்தவரை வாங்கி வர முயற்சிக்கிறேன்...... தென் வேற யாருக்காவது ஏதாவது வேண்டுமா?" எனவும்,

இப்பொழுது அவளுக்குப் புரிந்து போனது.....

அடப்பாவமே இது புரியாமல் நாம் தான் அளவுக்கதிகமாக அளப்பறை விட்டுவிட்டோமோ என்று நினைத்தவள்,

"அண்ணா, நீங்க யாருக்கு கேட்குறீங்கன்னு தெரியுது... பட் எனக்கும் உண்மையிலேயே தெரியாது.... திவ்யா அண்ணிக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு அவங்க இது வரைக்கும் யார் கிட்டேயும் வாய் விட்டு சொன்னதில்லை அண்ணா..... நீங்களா உங்க மனசுக்கு பிடிச்சத வாங்கி வாங்க.... இன்ஃபாக்ட், நீங்க என்ன வாங்கி வர்றீங்கங்கறத விட உங்களோட இந்த எண்ணமே அவங்களுக்கு ரொம்பச் சந்தோஷத்த கொடுக்கும்" என்றாள்.....

அவன் உள்ளத்திற்குள் அவளின் வார்த்தைகள் மகிழ்ச்சி அலைகளை உருவாக்கவே செய்து இருந்தது..... இருந்தாலும் தங்கையிடம் அதனை வெளிப்படுத்த விரும்பாதவன்.....

"மஹா, நீ அவ கிட்ட ஒன்னும் சொல்லிக்காத.... லெட் இட் பீ ஸர்ப்ரைஸ் ஃபார் ஹெர் [Let it be surprise for her] " என்றான்...

என்ன தான் தங்கை மீது பாசம் இருந்தாலும் அர்ஜூன் வாழ் நாளில் இவ்வளவு நேரம், அதுவும் பொறுமையாக, கனிவாக மஹாவிடம் பேசுவது இதுவே முதல் முறை...

அண்ணனின் மனம் மாற்றத்தை உணர்ந்துக் கொண்டவள் எல்லாம் திவ்யா அண்ணியின் அமைதியான, அழகான அன்பு தான் காரணம் என்று புன்னகைத்துக் கொண்டாள்....



மாலையில் குளித்து முடித்து அழகிய பட்டுப் புடவை உடுத்தி கோவிலுக்குச் சென்றிருந்த திவ்யாவின் மனமுழுவதும் எப்பொழுதும் போல் கணவனே நிறைந்து இருந்தான்... அவன் வெளிநாடு சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனதால் அவனின் முகம் அவளின் கண்களின் முன் திரைப் போல் படிந்திருந்தது....

கண்களை இறுக்க மூடி தன் வாழ்க்கையின் போக்கு, பாதை தெரியாவிட்டாலும், தன் கணவனுக்காக மட்டும், அவனின் சந்தோஷத்திற்காக மட்டுமே வேண்டிக் கொண்டவள் வீட்டிற்குத் திரும்பி வர வீட்டிற்குள் நுழைந்தவளின் கால்கள் சட்டென்று தடுமாறியது....

அங்கு ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்த்தலாக, கால் மேல் கால் போட்டுக் கொண்டு புன்னகை முகத்தோடு அனைவருடனும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு இருந்த கணவனைப் பார்த்தவளின் விழிகள் நிலைக்குத்தி இருக்க, இதயம் தன் துடிப்பை பல மடங்கு அதிகரித்தது....

வியப்பும் பூரிப்பும் ஒன்று சேர்ந்து உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பரவ அசையாமல் சிலை போல் நின்றவளை திரும்பி பார்த்தவனின் ஆராயும் பார்வையில் நெளிந்தவள் தயங்கி நிற்க, ஸ்ரீயின் அழைப்பில் அவள் கால்கள் தானாக அவர்களிடம் அவளை இட்டுச் சென்றது...

ஆனால் முடிந்த வரை தன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் மறைத்தவள் ஸ்ரீயின் அருகில் சென்று அமராமல் நிற்க...

"உட்காருடா.... இப்ப தான் அர்ஜூன் வந்தான்" என்றார்...

"ஏன் அவர் வருவதை இவர்கள் யாரும் எனக்கு முன்னரே தெரியப்படுத்தவில்லை?? கோவிலுக்குக் கிளம்பிய பொழுது அத்தையும் மஹாவும் தாங்கள் வரவில்லை என்று அவளை மட்டும் ஏன் போகச் சொன்னார்கள்?? என்று யோசித்தவளுக்குத் தான் வருவது அவளுக்கு ஸர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்று அர்ஜுன் கேட்டுக் கொண்டது எப்படித் தெரியப் போகிறது?

மாமியார் சொன்னதும் வேறு வழியில்லாமல் தயக்கத்துடனே அவர்களின் அருகில் அமர்ந்தவள் அர்ஜூனை நிமிர்ந்து பார்க்க அவனின் விழிகள் இன்னமும் தன் மீதே படிந்திருப்பதைக் கண்டதும் அது வரை இருந்து வந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் வெகு தூரம் பறந்து போனது....

அவனுக்கு நேரெதிரில் அமர்ந்து இருப்பதால் அவனின் ஆழமான தன் இதயத்தையே ஊடுருவும் பார்வையைப் பார்த்தவளின் கால்கள் நடுங்க, கைகள் உதற, நெஞ்சு திக்திக்கென்று இருக்க மூச்சு திணறியே நின்று விடும் போல் இருந்தது...

அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அங்கு அமர்ந்திருக்க முடியாமல் மெல்லிய குரலில் தயங்கியாவாறே....

"அத்த, நீங்க பேசிட்டு இருங்க.... நான் போய்க் காபி போட்டு எடுத்து வரேன்" என்று நகரப் போனவளை,

"இல்லைடா.... இப்ப தான வந்த..... கொஞ்சம் நேரம் இங்க உட்காரு…." என்றார் அவளின் கலக்கம் புரியாமல்.....

ஆனால் அவளுக்கோ மனம் பேயாட்டம் ஆடி தடாலெனக் கீழே விழுந்து விடுவது போல் இருக்கத் தன்னைக் கட்டுபடுத்தத் தெரியாமல் அச்சத்துடன் எழுந்தவள்...

"இல்ல அத்தை.... இதோ ஒரு நிமிஷத்தில வந்திடுறேன்" என்றவள் அர்ஜுனை திரும்பியும் பாராமல் சமையல் அறைக்குள் புகுந்தாள்....

திவ்யா அர்ஜூனின் வரவை ஆசையுடன் எதிர்பார்த்திருந்தாள் தான்... அவன் வரும் நாளை நினைத்து உள்ளூர மகிழ்ந்து இருந்தாள் தான்... ஆனால் அவன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வருவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை....

அதுவும் வந்ததில் இருந்து தனது முகத்திற்கு நேரெதிர் அமர்ந்து தங்களைச் சுற்றிலும் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்தும் ஒருவரையும் அசட்டை செய்யாமல் அதே ஆழமான பார்வையோடு பார்த்திருப்பவனை எதிர்நோக்கும் சக்தி என்று தான் அவளுக்கு இருந்திருக்கிறது....

மனதிற்குள் பலவிதமான எண்ணங்கள் சிதறிக் கொண்டிருந்தாலும், கணவனைக் கண்டதும் உள்ளம் முழுவதும் அதே திகில் சூழ்ந்துக் கொண்டாலும், கை ஏனோ அதன் போக்கில் அவன் எப்பொழுதும் விரும்புவது போலவே காபியைக் கலந்தது...

கலந்து முடித்தவளுக்கு அடுத்தக் கலக்கம் இப்பொழுது காபியை அவரிடம் எப்படிக் கொடுப்பது என்று....

மீண்டும் ஒரு முறை அவரின் ஈட்டியைப் போன்ற பார்வையை, என்னை அலசி ஆராயும் அவர் விழிகளைச் சந்திக்க எனக்குத் தைரியம் இல்லை என்று யோசித்துக் கொண்டு இருந்தவளுக்குப் பேசாமல் அல்லியிடம் காபியைக் கொடுத்துவிடலாமா என்று கூடத் தோன்றியது....

ஆனால் இப்பொழுது தான் வந்திருக்கிறார்... அதற்குள் மீண்டும் அவர் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள மனமில்லாமல் வெளிப்படையாக நடுங்கும் கைகளுடனேயே காபி கோப்பைகளை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள்...

அனைவரும் காபியை எடுத்தவுடன் அர்ஜூனிடமும் நீட்ட, அவளின் நடுங்கும் கைகளைப் பார்த்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க,

"ஐயோ! மறுபடியும் அதே பார்வையா?" என்று மூச்சு முட்டியது அவளுக்கு.....

இவர்களின் பார்வை பரிமாற்றதை பார்த்திருந்த ஸ்ரீ "இதுங்க இப்படியே பார்த்துக் கொண்டே இருந்தா எப்போ ஒன்று சேர்வது? யார் முதல்ல தன் காதலை சொல்லப் போவது?" என்று மானசீகமாகத் தலையில் கைவைத்தவர் திவ்யாவின் கரத்தை வலுவில் பிடித்து இழுத்து தன் அருகில் அமர செய்தவர்.....

"வேலை செஞ்சது போதும்... கொஞ்சம் இப்படி உட்காரு…" எனவும் அதற்கு மேல் அவருக்கு மறுப்பு சொல்ல முடியாமல் வேறு வழியில்லாமல் தலை குனிந்தவாறே அவர் அருகில் அமர்ந்தவள் மறந்தும் அர்ஜுனை நிமிர்ந்து பார்க்கவில்லை....

மஹா அர்ஜுனிடம்...

"அண்ணா.... என்னோட லிஸ்டில் இருந்ததெல்லாம் வாங்கினீங்களா?" என்று கேட்க,

"உன்னோட லிஸ்டில் இருந்ததெல்லாம் வாங்கனும்னா நான் தனியா ஒரு ட்ரிப் போகனும்" என்று அவன் வழக்கம் போல் ஆங்கிலத்தில் உரையாட துவங்க ஒன்றும் புரியாதவளாக அமர்ந்திருந்தவளுக்கு எப்போழுது அந்த இடத்தை விட்டு அகல்வோம் என்று இருந்தது.

தன் பெட்டியை மஹாவிடம் காட்டிய அர்ஜூன்...

"அதில் நீ கேட்டது இருக்கிறது.... உன் ரூமுக்குப் போய்ச் செக் பண்ணிக்கோ" என்றவன்,

"ஓகே மாம்.... டாட்.... ஆம் வெரி டையர்ட்.... லெட் மீ ஹாவ் ஸம் ரெஸ்ட் [Ok Dad, I am very tired... Let me have some rest]" என்று கூறி விட்டு மாடி ஏறினான்...

அவன் அங்கு இருந்து நகர்ந்ததும் மெல்ல தலை நிமிர்ந்தவள் அவனின் பரந்த முதுகை வெறித்துப் பார்த்தவாறே அமர்ந்திருக்க, அவள் முகம் காணாமலே அவளின் விழிகளில் தெரிந்த ஏக்கத்தை, அவள் தன் முதுகையே கண்கள் இமைக்காமல் பார்த்திருப்பதை உணர்ந்துக் கொண்டவனின் முகத்திலோ அத்தனை புன்னகை.....

ஆனால் அவளின் ஏக்க பார்வையைப் பார்த்திருந்த மற்றவர்களுக்கோ தர்ம சங்கடம் ஆகிப் போனது...

மஹாவிற்கு இத்தனை வாங்கியிருந்தவன் திவ்யாவிற்கும் எதனையாவது வாங்கி வந்திருக்கக் கூடாது என்று ஸ்ரீ தவித்துப் போனார்....

மஹாவிற்கோ....

"அண்ணன் எனக்கு வேண்டிய பொருட்களின் லிஸ்டைக் கேட்டதே அண்ணிக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதற்குத் தான்.... ஒரு வேளை நாம் அண்ணிக்கு என்ன பிடிக்கும்னு தெரியாது என்று சொல்லிவிட்டதால் அவரும் ஒன்றும் வாங்காமல் வந்து விட்டாரோ?? ஆனால் இல்லையே... அவருக்கு ஏதோ சர்ப்ரைஸாக வாங்கப் போவதாகத் தானே சொன்னார்... ஆனால் இதுங்க இரண்டும் ஆடும் கண்ணாம் பூச்சி விளையாட்டுல சேர்ந்தோம், நாம செத்தோம்" என்றே தோன்றியது..

"மாம்.... நான் வேண்டுமானால் அண்ணன் எனக்கு வாங்கி வந்ததில் எதனையாவது திவ்யா அண்ணிக்கு கொடுத்துவிடட்டுமா" என்றாள் கிசுகிசுப்பாக..

"அதைப் பற்றி அப்புறம் பேசிக்கலாம்" என்று கூறிய ஸ்ரீ "மஹாவிற்கு இவ்வளவு வாங்கி வந்த அர்ஜூன் திவ்யாவிற்கும் எதையாவது வாங்கி வந்திருக்கலாம்... பாவம் அவளும் சின்னப் பெண் தானே.... ஏன் தான் இந்த அர்ஜூன் இப்படிக் கல் நெஞ்சம் உடையவனாகிருக்கிறானோ?" என்று எண்ணியவர்..

"அருண் நீ ஸூட்கேசைக் கொண்டு போய் ரூமில வை..." என்றார்...

அவருக்கு இதற்கு மேல் அங்குத் திவ்யாவை வைத்துக் கொண்டு பொருட்களைப் பற்றிப் பேச விருப்பம் இல்லை.

ஆனால் தன் அறைக்கு வந்த அர்ஜூனிற்கோ தன் மனைவியின் ஏக்கம் மிகுந்த கண்களே பறை சாற்றியது அவளின் மௌனத்தில் கரைந்திருக்கும் காதலை.....

தன் இதயம் முழுவதும் தன் கணவனின் மீது அளவுக் கடந்த காதலை சுமந்து கொண்டு ஆனால் அச்சத்தால் தன் மனதினை இறுக்க மூடியிருக்கும் தன்னவளை அவளின் கண்களே காட்டிக் கொடுக்கின்றதே...

அவளைப் பிரிந்திருந்த இந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு நிமிடமும் தன்னவளின் அழகிய முகமும், தன்னைக் கண்டதும் நாணத்துடன் அச்சமும் கலந்து கவிழும் விழிகளும் அவன் கண்களின் முன் தோன்றி அதனால் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு எடுத்துக்காட்டியிருந்தது இனி அவள் இல்லாமல் அவன் இல்லை என்பதை...

நான் எப்படி ஒரு சின்னப் பெண்ணிடம் காதலில் விழுந்துவிட்டேன் என்று தன்னைக் குறித்தே ஆச்சரியப் பட்டவனுக்குத் தெரியவில்லை வெறுப்புக்கும் விருப்புக்கும் ஒரு நூலளவு இடைவெளியே என்று....

அவனுக்கு அவளின் மீதான வெறுப்புக் காதலாகக் கனிந்தது எப்போது என்று தெரியவில்லை... ஆனால் இந்த நிமிடம் அவனின் மனம் முழுதும் அவளின் நினைவே காதலாகக் கசிந்துருகியது...

இரவு பகல் பாராது அவளின் நினைவுகளிலேயே உழன்று கொண்டு இருந்தவனுக்கு அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்குத் தெரிந்தது தனக்கு இருக்கும் அதே தவிப்பு தானே அவளுக்கும் இருக்கும் என்று...

அந்த நிமிடம் அவனுக்கும் புரிந்தது தன் மேல் இருந்த தவறு....

இதே சிந்தனைகளில் இரண்டு மாத காலப் பயணத்தை முடித்துத் திரும்பி வந்தவன் தேர்ந்தெடுத்து இருந்தான் தன் காதலை தன் மனைவியிடம் வெளிப்படுத்தும் அந்தப் பொக்கிஷமான தருணத்தை....

அந்த நிமிடம் இந்தக் கிஃப்டை அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவளுக்கேன்றே வாங்கி வந்திருந்தான் அந்த அழகிய பரிசினை....

அப்பொழுது அவளின் அழகிய முக மாற்றத்தை ரசிக்க வேண்டும்.... அப்பொழுதும் நிச்சயம் அதிர்ச்சியும் அச்சமும் வெட்கமும் கலந்த விழிகளைத் தான் என் மீது வீசுவாள்.....

அந்த விநாடி அவளை என் கைகளில் அள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கற்பனை செய்திருந்ததால் மற்றவர் முன்னிலையில் அவனுக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லை....

ஆனால் எதற்கும் படியாத இரும்பு போன்று இறுகியிருந்த தன் கணவனின் இதயத்தில் தன் மௌனத்தாலேயே இத்தனை மாற்றத்தை தான் உண்டு பண்ணியிருப்பதை அவன் மனைவி அறிவாளா?

தன் கணவன் தன் காதலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை, அவன் கனவு கண்டு கொண்டு இருக்கும் அந்த அழகிய தருணத்தை அவள் அவனுக்குக் கொடுப்பாளா?

தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top