JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episode 2 & 3

JLine

Moderator
Staff member
அத்தியாயம் - 2


அந்த அதிகாலை வேளையில் சென்னை கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டு பாய்ந்தது அந்தச் சிகப்பு நிற மாசராட்டி க்வாட்ரெபோர்ட் கார்...

திருமணம் கடலூருக்கு அருகில் உள்ள ஒரு சிறு குக்கிராமத்தில்.... காரில் அமர்ந்திருந்த அர்ஜுன் அலை பேசியில் கோபமாகப் பேசியபடியே அருகிலிருந்த தன் அன்னையை முறைத்துக் கொண்டே தன்னுடைய காரை செலுத்தினான்.

ஏதோ ஒரு நினைவில் நொடி கூட யோசிக்காமல் தன் அன்னையின் விருப்பத்திற்கு ஒப்புக் கொண்டு விட, அன்றைய அலுவலக மற்றும் தொழில் சம்பந்தமான மீட்டிங்குகள் எல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டுத் தன் அன்னைக்காக இந்த வேண்டாத வேலையைப் பார்க்க போகிறோமே என்று நொந்துக் கொண்டு வர, தன் மகனின் கோபம் அறிந்து ஸ்ரீயும் எதுவும் பேசாமல் வர மூன்று மணி நேரம் பயணம் வெகு அமைதியாகக் கழிந்தது.

எப்பொழுதும் தொழில் தொழில் என்று உழன்று கொண்டு இருக்கும், மனதளவில் தன் பெற்றோரை விட்டு தன் தம்பி தங்கையை விட்டுத் தூரப் போயிருக்கும் தன் மூத்த மகனிடம் இன்று ஒரு நாளாவது மனம் விட்டு பேசிக் கொண்டு செல்லலாம் என்று ஆசையோடு வந்தவருக்கு அவனுடைய உர்ரென்று இருந்த முகத்தைப் பார்த்ததுமே எதுவுமே பேசாமல் போவதே மேல் என்றிருந்தது.


அர்ஜூன் இது வரை யோசிக்காமல் ஒரு இடத்திற்குச் செல்ல மாட்டான்... அது தொழில் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, தன் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி...

அவனுக்கு அன்றைய நாளுக்கு உரிய கால அட்டவணைகள், மீட்டிங்குகள் சம்பந்தமான பட்டியல்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே அவனின் மேஜையில் இருக்க வேண்டும்...

அதனை முதல் நாள் மாலையிலும், முதல் வேலையாக அன்றைய காலையிலும் மீண்டும் வாசித்துக் காட்டுவது தான் கதிரின் முதன்மை பணி...

அதற்கு அவன் கதிரைத் தவிர வேறு ஒருவரையும் பொறுப்பேற்றுக் கொள்ளவிட்டதில்லை...

அதில் எதிர்பாராதவிதமாக ஏதேனும் மாற்றம் செய்யப் பட வேண்டி வந்தது என்றாலும் அல்ல அர்ஜூனை சந்திக்க வேண்டியவர்கள் அவனுடன் ஒத்துக் கொண்டு இருந்த மீட்டிங்கை முன்னறிவிப்பு இல்லாமல் தள்ளிப் போட்டார்களோ அல்லது இரத்து செய்திருந்தார்களோ அதனை அர்ஜூனிற்குத் தெரியப்படுத்துவதற்குள் கதிருக்குக் காய்ச்சலே வந்து விடும்...

அர்ஜூனிற்கு வாழ்க்கையில் எதிர்பாராத ஆச்சரியம் [Surprise] என்பது சுத்தமாகப் பிடிக்காத விஷயம்.... எதையும் திட்டமிட்டே செம்மையாகச் செய்து முடிப்பவன்...

அப்படிப்பட்டவனுக்கு வாழ்க்கை ஒரு பெரிய ஆச்சரியத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தது...


இன்னும் சில மணித்துளிகளில் அந்த ஆச்சரியத்தில் தான் மூழ்கடிக்கப் படப் போவதை உணராமல் அதை நோக்கி தன்னையும் அறியாமல் விரைவாகக் காரைச் செலுத்திக் கொண்டு இருந்தான்...

எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்தோடு அதி விரைவாகக் காரை ஓட்டிக் கொண்டு வந்த மகனைப் பார்த்த ஸ்ரீ ஏதாவது பாடல்களையாவது கேட்கலாமே என்று காரின் மியூஸிக் சிஸ்டத்தை நோக்கி கையைக் கொண்டு செல்ல, அவரை நிதானமாகத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவனைக் கண்டவருக்குப் பேசாமல் மனதிற்குள்ளே கந்த சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு செல்வதே மேல் என்று தோன்றியது...

மெல்ல கையை விலக்கி கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவர் அதற்குப் பின் அவன் புறம் திரும்பவில்லை...

வேறு வினையே வேண்டாம்... அவன் திடீரென்று ஒரு பெரிய யூ டர்ன் போட்டு திரும்பி சென்னைக்கே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.... ஏனெனில் அதை அவன் செய்யக் கூடியவன் தான்....

அவனுக்கு விருப்பம் இல்லையெனில் அவன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படமாட்டான்... அது தன் குடும்பத்தினர் ஆகட்டும் அல்லது தொழில்வட்டாரத்தில் ஆகட்டும்.... அதுவும் அவனின் குணங்களில் ஒன்று...

இரு பக்கங்களிலும் தென்னை மரங்களும் நடுவில் ஒரு சிறு பாதையுமாகப் பிரிந்த அந்த ஒற்றையடி பாதையில் காரைச் செலுத்துவதற்கு அர்ஜுனுக்குச் சிறு சிரம்மமாக இருக்க அவனுடைய கோபம் இன்னும் அதிகமாகி அவனுக்கு எப்போதடா திரும்பிச் செல்வோம் என்று இருந்தது.

ஒரு வேளை வழி தவறி விட்டால் இன்னும் கோபப்படுவானே என்று ஸ்ரீ தன்னுடைய தோழியின் அலை பேசியில் அழைத்து மண்டபத்தின் வழியை விசாரிக்க ஆரம்பித்தார்.

திருமண மண்டபத்தைக் கிட்டத்தட்ட நெருங்கி விட்ட சந்தோஷத்தில் மகனைப் பார்க்க, இந்தக் குக்கிராமத்தில் அப்படி என்ன பெரிய கல்யாணம் நடந்து விடப் போகிறது என்று தன் மனதில் கணக்கிட்டவாறே அர்ஜுனும் தன் தாயை நோக்க அந்த மண்டபமும் வந்தது....


திருமண மண்டபம் இருந்த அந்தச் சிறு தெருவில் காரை நிறுத்த இடம் தெரியாமல் அர்ஜுன் சுற்றும் முற்றும் பார்க்கவும், அதற்குள்ளாகவே ஸ்ரீ காரை விட்டு இறங்க முயற்சிக்கவும், ஸ்ரீயின் தோழி கலா மண்டபத்தை விட்டு வெளியில் வரவும் நேரம் சரியாக இருந்தது.

ஒரு சில சிறு சாதாரண கார்களையே பார்த்திருந்த அந்த ஊர் மக்கள் இவ்வளவு பெரிய விலை உயர்ந்த காரைப் பார்த்ததும் மலைத்துப் போய்த் தாமாக அர்ஜுனுக்கு உதவ ஆரம்பித்தார்கள்.

ஒரு வழியாக ஸ்ரீ இறங்கி தன்னுடைய தோழி கலாவை நோக்கி வெகு வேகமாக நடக்க ஆரம்பித்தார்...

மகிழ்ச்சியில் அர்ஜுன் தன்னுடன் வராததை அவர் கவனிக்கவில்லை.

தோழியிடம் நலம் விசாரித்த பிறகே மகனைத் திரும்பி பார்க்க, அவனோ காரிலேயே அமர்ந்து கொண்டு தன்னுடைய அலை பேசியை ஆராய்ந்து கொண்டு இருந்தான்.

சலிப்புடன் திரும்பி வந்தவர்..

"என்ன அர்ஜுன் இவ்வளவு தூரம் வந்துட்டு இப்படிக் கார்லையே உட்காந்து இருந்தா நல்லாவா இருக்கும்? என்று கேட்க,

அது வரையிலும் அடக்கி வைத்திருந்த அர்ஜூனின் கோபம் தெறிக்க ஆரம்பித்தது.

"ஏன் மாம் இப்படிக் கொல்றீங்க? என்ன பத்தி நல்லா தெரியும்... பின்ன எதுக்கு இந்த மாதிரி இடத்துக்கு என்ன கூட்டிட்டு வரீங்க?
திஸ் இஸ் சோ அனாயிங் மாம்... லுக் அட் திஸ் ப்ளேஸ் அண்ட் பீப்பில்.... ஐ ஹேவ் டன்ஸ் ஆஃப் திங்ஸ் டு டு அட் ஆஃபிஸ் ஆண்ட் யூ ஹேவ் ம ட்ரோவ் ஆல் தி வேய் ஹியர் டு திஸ் க்ராப்பி வில்லேஜ்.. [This is so annoying mom. Look at this place and people. I have tons of things to do at office and you have me drove all the way here to this crappy village] இதுல மண்டபத்துக்குள்ள வேற நான் வரணுமா?" என்று வெடித்தான்.

அவன் கத்தலில் அதிர்ந்தாலும் அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால் ஸ்ரீயும் ஒன்றும் பேசாமல் மண்டபத்தின் வாயிலில் இவர்களின் உரையாடல்களைப் பார்த்திருந்த கலாவிடம் சென்றவர் அவருடன் மண்டபத்திற்குள்ளே செல்ல, அர்ஜூன் மறுபடியும் தன் அலை பேசியை நோண்ட ஆரம்பித்தான்.

மண்டபத்திற்குள்ளே சென்ற ஸ்ரீ தன்னுடைய இளம் வயது தோழியை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பார்த்த சந்தோஷத்தில் அர்ஜுனை மறந்துவிட்டுத் திருமணத்தில் மனதை செலுத்த ஆரம்பித்தார்.

தோழியையும், திருமண மண்டபத்தையும், அங்கு வந்திருந்த விருந்தினர்களையும், தோழியின் உறவினர்களையும் பார்த்தவுடனேயே தெரிந்துப் போனது ஸ்ரீக்கு...

தன்னுடைய தோழி வசதிப் படைத்தவளாயில்லை என்று... குக்கிராமம், அதிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் போல் தோன்றினார்கள் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள்.

ஸ்ரீக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்க, அப்பொழுது தான் மணமேடையிலிருந்த மணமக்களைப் பார்த்தார்.....

மணமகன் சுமாராக இருந்தாலும்,

மணமகள் திவ்யா... 19 வயது.... வட்டமான நல்ல களையான முகம், சிறிய நெற்றி, கூர்மையான மூக்கு... அதில் பளபளக்கும் ஒற்றைக் கல் மூக்குத்தி, குழி விழும் கன்னம், செப்பு இதழ்கள் என்று மாநிறத்தில் மிகவும் லட்ஷணமாக இருந்தாள்.

பார்த்த உடனேயே திவ்யாவை பிடித்து விட, அவளின் முகம் மனதில் ஆழ பதிந்து போக அவளை வைத்த கண் வாங்காமலே பார்த்துக் கொண்டு இருந்தார் ஸ்ரீ.

கலாவும் மற்றவர்களும் மணமேடைக்கு அருகில் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்க, தனியாக அமர்ந்திருந்த ஸ்ரீக்கு திவ்யாவை ரசிப்பதே சுகமாக இருந்தது....

திவ்யாவின் அமைதியான முகம் நிச்சயம் அவள் கலாவைப் போன்று மென்மையானவள் என்றே சொல்லியது..... மலரினும் மெல்லியவள்!

"கெட்டி மேளம்! கெட்டி மேளம்!" என்று சொன்ன ஐய்யர் மந்திரத்தை கூறிக் கொண்டே தாலியை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிய மணமகன் ஏதோ யோசனையில் இருந்தவன் சடாரென்று எழுந்தான்.

"என்னைய மன்னிச்சிடு திவ்யா... இதை நான் முன்னமே சொல்லிருக்கணும்... ஆனால் என்னால அப்போ சொல்ல முடியலை.... எவ்வளவோ எங்க அப்பா அம்மாக்கிட்ட எடுத்து சொல்லியும் அவங்களும் கேட்கல.... அவங்களை எதிர்த்து பேசவும் எனக்குத் தைரியம் இல்லை... ஆனால் என் மனசாட்சி என்னையை குத்துது... என்னையே நம்பிட்டு இருக்கிற அவள ஏமாத்திட்டு உன் கழுத்துல என்னால தாலிக் கட்ட முடியாது" என்று கூறிவிட்டு மண மேடையை விட்டு இறங்கி சென்று விட்டான்.


திவ்யாவிற்கும் சரி, திவ்யாவின் தாய் தந்தையருக்கும் சரி, மண்டபத்தில் கூடி இருந்த அனைவருக்கும் சரி, என்ன நடந்தது என்று புரிபடவே சில நிமிடங்கள் ஆனது...

"ஐய்யய்யோ!!! என்னங்க இது? இப்போ என்ன பண்றதுங்க?" என்று கலா கதற ஆரம்பிக்கும் போது தான் திவ்யா இவ்வுலகத்திற்கே வந்தாள்...

ஏழை பெற்றோர் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தைத் தங்கள் மகள் திருமணத்திற்கு என்று செலவு செய்து இன்று சல்லி காசு கூட அவர்களின் கையில் மிச்சம் இல்லை... எத்தனை கனவு, ஆசை அவர்களின் மனதில்....

தங்கள் செல்ல மகளின் திருமணத்தைக் கண் கொண்டு பார்ப்பதற்கு அவள் பிறந்த நாள் முதலே தவம் இருப்பவர்கள் இல்லையா அவளின் பெற்றோர்கள்....

அனைத்தையும் ஒரே நிமிடத்தில் உடைத்து சிதறிவிட்டு சென்று விட்டான் யாரோ ஒருவன்....அந்நியன்..... தன் சுயநிலத்திற்காக...

சின்னப் பெண்.... அவளுக்குத் தெரிந்தது எல்லாம் ஒரு முறை திருமணம் நின்று விட்டால் அது அவளின், அவள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும்... அவளால் இனி அவள் பெற்றோருக்கு நிம்மதி என்பதே இல்லை....

இனி என்ன இருக்கிறது தன் வாழ்வில்... முடிந்தது!!! எல்லாம் முடிந்தது!!!

சில நிமிடங்கள் அப்படியே ஆணி அடித்தது போல் ஒரே இடத்தில் மணவறையில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து இருந்தவள் திடீரென்று அனைவரையும் தள்ளி விட்டு எழுந்து ஓட, அவள் பின்னரே திவ்யாவின் தந்தை சிவசுப்ரமணியமும், திவ்யாவின் அண்ணன் வினோத்தும் ஒட, அதற்குள்ளாகவே திவ்யா மணமகள் அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டாள்.

ஏற்கனவே மணமகன் திருமணத்தை நிறுத்தி வெளியே சென்றது அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றால் திவ்யாவின் செயல் அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது....

சுதாரித்து அவள் பின்னரே அனைவரும் ஓடியவர்கள் கதவை படபடவென்று தட்ட, மண்டபமே பெரும் அமர்க்களமாக ஆனது..

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ, திவ்யா ஓடியது கூட மூளையில் உரைக்காமல் மணமேடையில் இன்னும் அரற்றிக் கொண்டிருந்த கலாவிடம் சென்று அவளை அணைத்துக் கொண்டு சமாதனப்படுத்த முயல, சட்டென்று சுய நினைவிற்கு வந்த கலா திவ்யாவைத் தேட அங்கு அனைவரும் மணமகள் அறைக் கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டு இருப்பதைக் கண்டவருக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்தது....

சடாரென்று எழுந்தவர் மணமகள் அறையை நோக்கி ஒட ஆரம்பித்தார்.

அதற்குள்ளாகவே மணமகள் அறையின் கதவை எல்லோரும் சேர்ந்து உடைத்திருந்தார்கள்....

அங்குத் திவ்யா தூக்கு மாட்ட முயற்சித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த திவ்யாவின் பெற்றோருக்கும், ஸ்ரீக்கும் உயிரே போய் விட்டது போல் இருந்தது.

"ஐயோ! என்னடி திவ்யா இப்படிப் பண்ணிட்ட?????" என்று கலா அரற்ற, அதற்குள்ளாகவே திவ்யாவை எல்லோரும் சேர்ந்து கயிற்றில் இருந்து இறக்கவும், கலா திவ்யாவை கட்டி அணைத்துக் கொண்டார்.

"ஏண்டி! அவன் தான் புத்திக் கெட்டதனமா போய்ட்டானா, அதுக்குன்னு நீ ஏண்டி இப்படி ஒரு முடிவ எடுத்த?? நாங்கல்லாம் இங்க இல்ல... எங்கள விட்டுட்டு போக எப்படி டி உனக்கு மனசு வந்துச்சு??" என்று கதறியத் தாயை பார்க்க திவ்யாவிற்கும் மனது தாளவில்லை.

ஏனெனில் அந்த மாப்பிள்ளை வீட்டினர் இரண்டு மாதங்களுக்கு முன்னர்த் தான் திவ்யாவைப் பெண் கேட்டு வந்தனர்... திவ்யா அவனின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்த்திருக்கவில்லை.... ஆனால் மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த நம்பிக்கையில், அவசரத்தில் இந்தத் திருமணத்தைச் சிவசுப்ரமணியம் ஒத்துக் கொண்டுவிட்டார்....

மாப்பிள்ளை பையன் வேறு ஜாதிப் பெண்ணைக் காதலிப்பதை விரும்பாத அவனின் பெற்றோர் அவனை கையைக் கட்டி வாயைக் கட்டி மிரட்டி தான் இந்தத் திருமணத்திற்கே சம்மதிக்க வைத்திருந்தனர்....

இதனாலேயே அவன் திருமணத்திற்கு முன் திவ்யாவிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசியிருக்கவில்லை.... நிச்சயத்தன்று அவன் சிறிது நேரமே அவர்களின் வீட்டில் இருந்தான்... அன்றும் திவ்யா அவனைப் பார்த்திருக்கவில்லை....

முகம் கூட மனதில் பதியாமல், யாரென்றே தெரியாத, பெற்றோரை எதிர்க்க துணிவில்லாத, திருமணம் வரை அமைதியாக இருந்துவிட்டு மணமேடையில் தாலிக் கட்டும் நேரம் வேறு ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பதற்காக இன்னொரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி வீசிவிட்டு போன ஒரு கோழைக்காகத் தன் மகள் உயிரை விடுவதா? என்பது தான் கலாவின் கதறலே!!!

சிவசுப்ரமணியமும் அழுது கரையும் மகளின் அருகில் வந்து அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூற ஆரம்பித்தார்.

அது ஒரு கிராமம்... அதுவும் மிகச் சிறிய குக்கிராமம்... கிட்டதட்ட இன்னும் மூட நம்பிக்கைகளில் உழன்று கொண்டு இருக்கும் அடிமட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் இந்தக் கிராமமும் ஒன்று...

ஆதலால் இது போல் மணவறை வரை வந்து திருமணம் நின்றுவிட்டால் அது அப்பெண்ணிற்கு எவ்வளவு பெரிய கஷ்டம் என்று அனைவருக்கும் தெரியும்.

அது அவளை மட்டும் அல்ல.... அவளுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையே பாதிக்கும்....

அந்தப் பெண் இராசியில்லாதவள் என்ற பட்டத்தைச் சூட்டி, அவளுக்கு அடுத்தடுத்து வரும் வரன்களைக் கூடக் கெடுக்க நினைக்கும் மக்களும் இருக்கத் தான் செய்வார்கள்...

இதெல்லாம் கலாவின் மனதில் ஓட, தன் தோளில் சாய்ந்து கதறிய தன் தோழிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை ஸ்ரீக்கு...

மனம் கலங்கிய நிலையில் சுற்றுப் புறம் மறந்து அதிர்ந்து நிற்கும் மணப் பெண் திவ்யா....

தன் மகளின் நிலை குறித்துக் கதறித் துடித்துக் கொண்டிருக்கும் தன் ஆருயிர் தோழி கலா....

என்ன செய்வது என்றே புரியாமல் கலக்கம் அடைந்திருக்கும் தந்தையாகச் சிவசுப்ரமணியம்....

தன் தங்கையின் வாழ்வை, எதிர்காலத்தை நினைத்து விழிகள் கலங்கி நிற்கும் அண்ணன் வினோத்....

இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ எதையோ யோசித்தவராக உடனே மண்டபத்தை விட்டு வெளியே வர, அங்கு இது எதனையுமே அறியாமல் மிகுந்த யோசனையுடன் கணினியை நோண்டிக் கொண்டிருந்த மகனைப் பார்க்கவும் அவரையும் அறியாமல் மிகுந்த கோபம் வந்தது அவன் மேல்.

"உள்ள ஒரு பிரளயமே வெடிச்சிட்டு இருக்கு... இவன் என்னடான்னா இது எதுவுமே தெரியாமல் இப்படி உட்கார்ந்திருக்கானே" என்று அர்ஜூனை கோபமாகப் பார்க்க, அதே சமயம் அர்ஜுனும் தன் அன்னையைப் பார்க்க சரியாக இருந்தது.

விரைவிலேயே வந்து விட்ட தன் அன்னையைப் பார்த்ததும் ஏதே தோன்ற காரிலிருந்து இறங்கி தன் அன்னையை நோக்கி நடந்து வந்தான்.

"வாட் ஹேப்பண்ட் மாம்? [What happened mom?] இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க... இது தானே நீங்க வர வேண்டிய மண்டபம், ஏன் சீக்கிரம் வந்துட்டீங்க?"

அவனுக்கு உள்ளே நடந்து கொண்டிருக்கும் அமர்க்களம் தெரிந்து இருந்தால் தானே.... மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவர்...

"இல்ல அர்ஜுன், கல்யாணம் நின்னிருச்சுப்பா... மாப்பிள்ளை பையன் யாரையோ லவ் பண்ணினாம் போலிருக்கு... அவங்க வீட்டுல ஒத்துக்கலை போல... அதனால அமைதியா இத்தனை நாள் இருந்துட்டு, இப்போ கல்யாணம் வரைக்கும் வந்துட்டு, திடீர்னு மணமேடை விட்டு எழுந்து போயிட்டான்பா"

"இடியட், சரியான பொட்டை பயன் போல.... சரி அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நீங்க உங்க ஃப்ரெண்ட் கிட்ட சொல்லிட்டு வந்திட்டீங்க இல்ல.... நாம கெளம்பலாமா?" என்ற மகனைப் பார்த்த ஸ்ரீக்கு அவன் குணம் ஏற்கனவே நன்கு தெரிந்து இருந்தாலும் இன்று அவன் ஒரு திருமணம் நின்று போனதையே கண்டு கொள்ளாமல் இத்தனை எளிதாகப் போகலாமா என்று கேட்டது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.

"இங்க ஒரு பொண்ணு வாழ்க்கையே கேள்விக் குறியா இருக்கு.... இவன் என்னாடான்னா சரி நாம கெளம்பலாமாங்கறான்" என்று அவனை ஆயாசமாகப் பார்த்தார்.

ஆனால் அது தான் அர்ஜூன்... அத்தனை எளிதில் அவனுக்கு யார் மேலும் இரக்கம் வந்துவிடாது... அதுவும் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் திருமணம் நின்றால் அவனுக்கென்ன??

அர்ஜுனுக்குத் தான் என்ன சொல்லிவிட்டோம், எதற்குத் தன் அன்னை தன்னை இப்படி அதிர்ச்சியுடன் பார்க்கிறார் என்று புரியவில்லை.

தன் மகனிடம் இதற்கு மேல் என்ன பேசுவதென்று ஸ்ரீக்கும் தெரியவில்லை....

அவன் கேள்விக்கு மறு பேச்சு எதுவுமே பேசாமல் திரும்பி மண்டபத்தை நோக்கி செல்ல, பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி செல்லும் அன்னையைப் பார்த்தவனுக்குக் கோபம் எகிற ஆரம்பித்தது....

"மாம், மாம்" என்று காட்டு கத்தல் கத்த, தன்னுடைய சத்தம் காதிலே விழாதது போல் சென்றவரை வேறு வழியில்லாமல் எரிச்சலுடன் பின் தொடர்ந்தான்.

அன்னையைத் தொடர்ந்து மண்டபத்தின் உள்ளே ஒரு அடி எடுத்து வைத்தவன் சட்டென்று நின்றான்.... அவன் வீட்டின் ஒரு சிறு பகுதியில் அந்தத் திருமண மண்டபத்தையே வைத்து விடலாம்... அது தான் அந்த மண்டபத்தின் மொத்த பரப்பளவு....

இவ்வளவு சிறிய அளவுக் கூடத் திருமண மண்டபம் இருக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.

தான் நின்றும் தன்னைக் கவனியாமல் தன் போக்கிற்கு நிற்காமல் சென்று கொண்டிருந்த தன் அன்னையைப் பார்த்தவன் சலிப்புடன்...

"மாம், ப்ளீஸ், நில்லுங்க... இப்போ எங்க போறீங்க? நீங்க போய் என்ன செய்யப் போறீங்க" என்று அடக்கப்பட்ட கோபத்தில் கத்த,

அழைத்த மகனை திரும்பிப் பார்க்காமலே சென்ற அன்னையைத் தொடர்வதைத் தவிர அவனுக்கும் வேறு வழியில்லை.

மண்டபத்திற்குள்ளே சென்ற ஸ்ரீ நேரே மணமகள் அறையை நோக்கிச் சென்றார்...

ஒரு நிமிடம் அறை வாயிலில் நின்று திரும்பி அர்ஜூனைப் பார்த்தவர் ஒரு முடிவுடன் அங்குக் குழுமியிருந்த அனைவரையும் விலகச் சொல்லி நேரே திவ்யாவிடம் சென்றார்...

அவளின் தலையில் கை வைத்து அவள் முடியை வருடிக் கொண்டே,

"இங்க பாரும்மா... சின்ன வயசிலேருந்தே நானும் உங்க அம்மாவும் இணை பிரியா தோழிகள்... கலாவுக்கு ஒரு கஷ்டம்ன்னா அது எனக்கும் போலத் தான்... அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்... அதுல உனக்குச் சம்மதம்னா நிச்சயம் கலாவுக்கும் சம்மதமாகத் தான் இருக்கும், என்னமா சொல்ற?" எனவும்,

அவரை ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கொண்டு இருந்த விழி நீரோடு நிமிர்ந்து பார்த்த திவ்யா குழப்பத்துடன் அவரையே நோக்க....

இந்தக் களேபரத்தில் இவர் என்ன புதிதாகச் சொல்ல வருகிறார் என்று புரியாமல் அனைவரும் ஸ்ரீயவே பார்த்தது பார்த்தபடியே இருந்தனர்...

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தவர் தொடர்ந்து சொன்ன வார்த்தைகள் அங்கு இருந்த அனைவர் முகத்திலும் அவர் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப விதம் விதமான உணர்வுகளைக் கொண்டு வந்தது...

ஒரு முறை தன் தொண்டையைச் செறுமியவர்....

"இது தான் என் பையன்... அர்ஜூன்.... 27 வயசாகுது... எங்களோட எல்லாப் பிசினஸ்ஸையும் இவன் தான் பார்த்துகிறான்.... உனக்கு என் பையன கல்யாணம் செய்துக்க இஷ்டமா?" என்றார்....

இது யாருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்குமோ இல்லையோ, ஆனால் அர்ஜுனுக்குப் பேரிடியாக இருந்தது....

தன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.... 10000 வாட்ஸ் மின்சாரத்தைத் தன் உடம்பில் பாய்ச்சியது போல் இருந்தது.

"உண்மையில் நான் கேட்டது சரியா? இல்ல மாம் வேற ஏதாவது சொன்னது தான் எனக்கு அப்படிக் கேட்டுச்சா?" என்று குழம்பிப் போய்த் தன் அன்னையைப் பார்க்க, அவர் என்னவோ தெளிவாகத் தான் இருந்தார்.

ஸ்ரீயே தன் பேச்சை தொடர்ந்தார்...

"கலா, அவ சின்னப் பொண்ணு, நீ... நீ என்னடி சொல்ற?" என்றவர் நேரே கலாவின் கணவரிடம் சென்று..

"அண்ணா, உங்களுக்கு எங்க குடும்பத்தைப் பத்தி தெரியுமா தெரியாதான்னு எனக்குத் தெரியலை... ஆனால் நிச்சயம் கலா என்னைப் பத்தி உங்களுக்குச் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்... திவ்யாவை என் மகள் போல் பாத்துக்கிறேன்... நீங்க சொல்லுங்க, உங்களுக்குச் சம்மதமா?" என்றார்.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்குப் பேசுவது தன் அன்னையா என்று சந்தேகமே வந்துவிட்டது....

சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயம் ஏதோ கனவில் நடப்பது போலவே தோன்றும்...

மூளை உறைந்து, உணர்வுகள் மரத்து, மனம் கூடத் தளர்ந்து, ஒட்டு மொத்த உடலும் தன் இயக்கத்தை நிறுத்தியது போன்ற ஒரு நிலை வரும்...

அப்பேற்பட்ட ஒரு நிலையில் தான் இருந்தான் அர்ஜூன்...

அவனுக்குத் தன் அன்னையின் மேல் தீராத பாசம் இருக்கிறது... அவனைப் பார்த்து மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்றால் அர்ஜூனுக்கோ தன் அன்னையின் மேல் ஒரு தனி மதிப்பு உண்டு...


ஸ்ரீயின் தாத்தாவின் அதாவது ருத்ரமூர்த்தியின் தந்தையின் பெயர் அனந்த கிருஷ்ணன்... அவர் தான் எ.கே (அனந்த கிருஷ்ணன்) இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர்....

அவரின் நியாபகத்தில் தான் தன் மகனிற்கு அர்ஜூன் கிருஷ்ணா என்று பெயரிட்டார் ஸ்ரீ...

வாழ்கையில் சில நிகழ்வுகளுக்கு ஆதியையும் கண்டறிய முடியாது அந்தத்தையும் கண்டறிய முடியாது...

கொள்ளு தாத்தாவின் பெயரும் தன் பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதினாலே எ.கே (அர்ஜூன் கிருஷ்ணா) க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் மொத்த அதிகாரமும் தன்னிடம் வந்ததோ என்று அர்ஜூனே நினைத்து வியந்திருக்கிறான்...

தன் தந்தை ருத்ரமூர்த்தியின் இறப்பிற்குப் பிறகு அர்ஜூன் தொழிற்களைக் கையில் எடுக்கும் வரை தன் கணவர் பாலாவை விட அந்தத் தொழில் சாம்ராஜ்யத்தில் அதிகப்படியான பொறுப்புகளை வகுத்து வந்தவர் ஸ்ரீ.....

தந்தைக்குப் பிறகு மகன் வரும் வரை ஸ்ரீயே எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சேர்மன்... அர்ஜூன் முழுப் பொறுப்புகளை எடுத்துக் கொள்ளும் வரை திறம் பட அத்தனை தொழிற்களையும் செம்மையாக நடத்தியவர்....

அதனாலே அர்ஜூனிற்குத் தன் அன்னையின் மீது அத்தனை மரியாதை இருந்தது...

ஆனால் அவை அனைத்தையும் ஒரே நிமிடத்தில் குலைத்து விடுவார் போல் தோன்றியது, தான் அவர் அருகில் இருந்தும் தன்னைக் கொஞ்சம் கூடக் கலக்காமல் அவர் இன்று எடுத்த அவனின் திருமணம் பற்றிய முடிவு....

அதிர்ச்சி விலகாமல் திகைத்து இருந்தவன் தன்னை ஒரு நிலைப்படுத்தி இன்னமும் இங்கிருந்தால் இது வேறு எங்கேயாவது போய் முடிந்து விடும் என்று உணர்ந்து அந்த இடத்தை விட்டு செல்ல முடிவெடுத்தான்.

அவன் திரும்பி செல்ல எத்தனித்த அந்த விநாடியே அதைக் கண்டு கொண்ட ஸ்ரீ,

"அர்ஜுன், ஒரு நிமிஷம் நில்லுப்பா... திவ்யாவோட முடிவ தெரிஞ்சுட்டுப் போகலாம்" என்றார் கொஞ்சம் கூடக் கலக்கம் இல்லாமல்...

ஆனால் கலக்கம் அவரின் முகத்தில் தான் தெரியவில்லை.... உள்ளம் முழுவதும் கலங்கி திகிலாகத் தான் இருந்தது...

அவருக்கு நன்றாகவே தெரியும் தன் மகனை பற்றி....

அவன் உள்ளுக்குள் ஒரு எரிமலையாகப் பொங்கி கொண்டு இருக்கிறான் என்று.... அது எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நிமிடம் வேண்டுமானாலும் வெடித்துச் சிதறக் காத்திருக்கிறது...

"ஐயோ! அதற்குள்ளாகவே இந்தப் பெண் சம்மதம் சொல்லிவிட மாட்டாளா?? இவன் எந்த நிமிஷத்திலேயும் வெடித்து விடுவானே" என்று பயந்து கொண்டே இருக்க, திவ்யாவோ எந்த ஒரு வார்த்தையும் சொல்ல வருவதாய்த் தெரியவில்லை.

அதற்கு மேல் பொறுமையற்றவனாய் தன் அன்னையின் அருகில் வந்தவன் அவர் காதுக்கு அருகில் குனிந்து பல்லைக் கடித்துக் கொண்டு,

"மாம், போதும்! என்னைய ஏலம் போட்டது... திஸ் இஸ் தி லிமிட் [this is the limit]... இப்போ நீங்க இங்க இருந்து கெளம்பப் போறீங்களா, இல்லையா?" என்றான்...

ஆனால் அதற்கு எல்லாம் அசந்து விடுவதாக இல்லை ஸ்ரீ...

"ஒரு நிமிஷம் இருப்பா" என்று கூறி விட்டு திவ்யாவின் அருகில் சென்றவர்....

"திவ்யா, என்னடா... இப்படித் திடீர்னு கேட்கறாங்களேன்னு நினைக்காதடா... நிச்சயம் உனக்கு நல்லது செய்றதுக்குத் தான் இந்த முடிவ எடுத்திருக்கேன்.... நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலிய கட்டணும்..." என்றவர் தன் தோழியின் பக்கம் திரும்பி...

"கலா, நீயும் சொல்லுடி... இப்போ நான் எடுத்திருக்குற முடிவு நிச்சயம் நல்லா யோசிச்சு தான் எடுத்தது... உன் மகள நான் நல்லா பார்த்துக்குவேன்னு உனக்கு நம்பிக்கை இருந்தா திவ்யாவ மண மேடைக்கு அழைச்சுட்டுவா... இல்லைன்னா இப்பவே சொல்லிடு" எனவும்,

அப்பொழுது தான் பேச ஆரம்பித்தார் கலா....

"ஸ்ரீ, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைடி... இது சாதாரண விஷயம் இல்லை... கல்யாணம்... முதல்ல உன் மகனிடமும் பேசு... இது அவசரத்துல எடுக்க வேண்டிய முடிவு இல்ல... இரண்டு பேரும் மனமுவந்து இதுக்குச் சம்மதிக்கணும்.... அவர் கிட்ட பேசுடி... அப்புறம் நாம முடிவெடுக்கலாம்" என்றார்.

ஏனெனில் திருமண மண்டபத்தின் வாயிலில் அர்ஜூன் தன் அன்னையிடம் பொறிந்து கொண்டு இருந்ததைப் பார்த்தவராயிற்றே...

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடிய விஷயம் இல்லை.... இரண்டு சின்னஞ் சிறு ஜீவன்களின் வாழ்க்கை... ஒரு சின்னத் தவறு கூட இருவரின் வாழ்க்கையும் சிதறடித்து விடும்...

பெண்ணின் அன்னை தனக்குச் சாதகமாகப் பேசவும் இது தான் சமயம் என்று அர்ஜுன் வாய் திறக்கும் முன்னரே சுதாரித்த ஸ்ரீ,

"கலா, என் பையனப் பத்தி எனக்குத் தெரியும்... அவன் என் பேச்ச தட்ட மாட்டான்... என்ன தான் அவன் பெரிய பிஸ்னஸ்மேனா இருந்தாலும் அவனுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்... நான் எடுக்கிற எந்த முடிவும் நிச்சயம் அவனுக்கும் நல்லதாவே இருக்கும்னு" என்றார் தெளிவாகவும் திடமாகவும்....

அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த அர்ஜுனோ கண்களாலேயே தன் தாயை எரித்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீக்கு நன்றாகத் தெரியும்.... அர்ஜுன் எவ்வளவு அந்தஸ்து பார்ப்பவன் என்று....

கண்டிப்பாக அவன் திவ்யாவைப் போல் ஒரு ஏழை பெண்ணைத் திருமணம் செய்யச் சம்மதிக்கவே மாட்டான்...

ஆனால் அவன் விருப்பப்படி அவனுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்றால் அவன் நிச்சயம் தங்கள் அந்தஸ்துக்குத் தகுந்தது போல் இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடிஸ்வரர்களில் ஒருவரின் பெண்ணைத் தான் மணக்க முன் வருவான்....

அது போன்ற பெண்ணை ஏனோ ஸ்ரீக்கு தனக்கு மருமகளாகக் கொண்டு வர விருப்பம் இல்லை...

விதியே இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை வலுவில் தன் காலடியில் போட்டு இருப்பதாகவே ஸ்ரீ எண்ணினார்....

இல்லை எனில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு தன் உயிர்த் தோழி எப்படித் தன்னைக் கண்டு பிடித்திருக்க முடியும்???

அதுவும் சரியாகத் தன் மகளின் திருமணத்திற்கு முன்...

எப்பொழுதும் தன் கணவருடனே திருமணம் போன்ற விஷேஷங்களுக்குச் சென்று வந்தவருக்கு எப்படி இன்று அர்ஜூனோடு செல்ல சந்தர்ப்பம் அமைந்தது...

திருமண மேடை வரை வந்த மணமகன் ஏன் திருமணத்தை நிறுத்த வேண்டும்?? அவன் ஒரு வேளை திருமண நாளுக்கு முன்னதாகவே சொல்லியிருந்தால் கூட இத்தகைய ஒரு சூழல் உருவாகியிருக்க வாய்ப்பில்லையே....

தெரிந்தே இது போன்ற ஒரு நல்ல சந்தர்ப்பத்தைத் தவற விட ஸ்ரீக்கு மனதில்லை.

அதே சமயம் அவருக்குத் தன் தோழியைப் பற்றியும் தெரியும்...

நிச்சயம் கலாவின் மகள் தன் வீட்டிற்கு ஏற்ற மருமகளாகவும், தன் மகனை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் மனைவியாகவும் இருப்பாள் என்று....

அந்த நம்பிக்கையில் தான் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்....

ஆனால் அவர் ஒன்றை அந்த நேரத்தில் மறந்து போனார்... மறந்து போனாரா அல்லது அதை வேண்டுமென்றே நினைக்க விரும்பவில்லையா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்....

அது அவர் மகன் அத்தனை விரைவில் அவர் செய்யப் போகும் ஒரு காரியத்தை ஏற்கவோ அல்லது விரும்பவோ போவது இல்லை என்று.

ஆனால் இருந்தும் அவர் தன் பிடியை தளர்த்துவதாக இல்லை... அவரின் பிடிவாதத்தைக் கண்ட அர்ஜூனிற்குத் திகைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை...

இதற்கு மேல் அத்தனை பேர் சுற்றி இருக்கும் பொழுது தன் அன்னையை எதிர்த்து பேச அர்ஜூனும் விரும்பவில்லை... ஏனோ தன் கரங்களையும் கால்களையும் யாரோ, எதுவோ கட்டிப் போட்டது போலவே உணர்ந்தான்...

அதுவும் விதியின் செயலோ.... அதற்குத் தேவையான நேரத்தில் மனிதனை, தன் உணர்வுகளை இழக்கச் செய்து தன் வழிக்குக் கொண்டு வருவது....

சிறு சலசலப்பிற்குப் பின் அங்கிருந்தவர்கள் அனைவரும் மன மகழ்ச்சியோடு ஸ்ரீயின் முடிவே சரி என்று முடிவெடுத்தனர்....

மண வாழ்க்கையில் நுழையப் போகும் இருவரைத் தவிர அனைவர் முகத்திலும் திருப்தியும் நிம்மதியும் பரவ ஆரம்பித்தது.

அர்ஜுன் அருகில் வந்த சிவசுப்ரமணியம் கண்கள் கலங்க நன்றியுணர்ச்சியோடு அவன் காலில் விழப் போக, அர்ஜுனோ தன் தாயை முறைத்துக் கொண்டே அவரைப் பிடித்துத் தூக்கினான்.

பின் அனைவரும் மணமகளின் அறையை விட்டு வெளியே செல்ல, ஸ்ரீ மகனின் முகத்தைத் திரும்பி கூடப் பார்க்காமல் திவ்யாவை அழைத்துக் கொண்டு மண மேடைக்குச் செல்ல, அர்ஜூனோ என்ன செய்வதன்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த கலா,

"வாங்க மாப்பிள்ளை...." என்று அழைக்க,

"மாப்பிள்ளை" என்ற அழைப்பே அவனுக்குக் கசப்பாக இருந்தது...

மனம் முழுவதும் எரிச்சலும் கோபமும் மண்டியிருக்க, இருந்தும் ஒன்றும் செய்ய வழியில்லாது அவரைப் பின் தொடர்ந்தான்.

மீண்டும் திருமண மண்டபம் களைக் கட்ட ஆரம்பித்தது...

மணமேடையில் மணமகளை அமரச் செய்துவிட்டு ஸ்ரீ திரும்பி அர்ஜுனைப் பார்க்க, அவன் கலாவின் பின் அமைதியாக வருவதைக் கண்டு ஆச்சரியமாகவும் யோசனையாகவும் இருந்தது.

"புலி எதுக்குப் பதுங்குதோ??" என்று எண்ணியவர்,

"முதல்ல கல்யாணம் முடியட்டும்... அப்புறம் மத்ததெல்லாம் யோசிக்கலாம்" என்று விட்டுவிட்டார்.

ஐய்யர் "மாப்பிள்ளையை மணமேடையில உக்கார வைங்கோ. முகூர்த்தம் முடியப் போகுது" எனவும்,

அர்ஜுன் மணமேடையில் அமர்த்தப்பட்டான்.

அதன் பின் சுப காரியங்கள் மளமளவென்று நடந்தது...

கலா, ஸ்ரீ, சிவசுப்ரமணியம், வினோத் மற்றும் அனைவரும் சுற்றி நிற்க,

ஐய்யர் "கெட்டி மேளம்! "கெட்டி மேளம்! என்று குரல் கொடுக்க, நாதஸ்வரம் மங்கள இசையை முழங்க,

தி க்ரேட் அர்ஜுன் [The great Arjun].....

பள்ளி கல்லூரி வாழ்க்கையில் கூடத் தன்னருகில் அமர்வோரிடம் அந்தஸ்து பார்த்தவன்..... தொழில்வட்டாரத்திலும் வெளியிடங்களிலும் தனக்கு நிகர் இல்லாதவர்களைக் கால் தூசிக்கு மதிக்காதவன்..... எந்தச் சூழ்நிலையிலும் தனக்குக் கீழ் இருப்பவர்களைத் தன் ஒற்றைப் பார்வையிலேயே தள்ளி வைப்பவன்...

நேற்று வரை யாரென்று அறியாத ஒரு கிராமத்து ஏழைப் பெண்ணின் கழுத்திற்கு அருகில் மங்கள நாணை கொண்டு போனவன் முடிச்சுப் போடாமல் மனம் தடுமாறினான்.

கழுத்து வரை மாங்கலயத்தைக் கொண்டு போனவன் தயங்கி நிற்க, திவ்யாவின் அருகில் குனிந்து நின்று இருந்த கலாவிற்கும் ஸ்ரீக்கும் பகீரென்று இருந்தது....

ஒரு வேளை அவனைப் போல் இந்த மாப்பிள்ளையும் எழுந்து சென்று விடுவாரோ என்று கலா திகிலோடு காத்திருந்தார் என்றால், ஏற்கனவே நொந்து போயிருக்கும் தன் தோழியையும் அவள் மகளையும் மீண்டும் துன்பத்தில் ஆழ்த்திவிடுவானோ நம் மகன் என்று கதி கலங்கி போய்க் காத்திருந்தார் ஸ்ரீ....

ஆனால் அர்ஜூன் தயங்கியது சில விநாடிகள் தான்....

சட்டென்று தன் அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்தே தீரும் என்று ஒரு பெருமூச்சை விட்டவன் திரு மாங்கல்யத்தின் இரண்டு முடிச்சுகளையும் போட, மூன்றாவது முடிச்சை போட பின்னால் இருந்து யாரோ கையை நீட்ட அவர்களையும் நிமிர்ந்து பார்த்தவன் என்ன நினைத்தானோ தானே மூன்று முடிச்சுகளையும் போட்டு, உணர்ந்தோ உணராமலோ தன் வாழ்க்கைப் பயணத்தில் திவ்யா என்ற ஒரு ஜீவனையும் இணைத்துக் கொண்டான்....

அங்கே பிரிக்க முடியாத ஒரு அழகான பந்தம் உருவானது....

கடவுள் இணைத்ததை மனிதன் (அர்ஜூன்) பிரிக்காதிருக்கட்டும்!!!!!!

தொடரும்
 

JLine

Moderator
Staff member

அத்தியாயம் - 3

மற்ற திருமணச் சடங்குகள் நடக்க ஆரம்பிக்க, ஏதோ ஒரு நினைவில் கடமைக்கு என்று அர்ஜூன் ஐய்யர் சொல்லிக் கொண்டு இருந்ததைச் செய்தான் என்றால் திவ்யாவின் நிலைமையோ சொல்ல முடியாத வகையில் இருந்தது...

மனம் கனக்க கண்களில் நீர் குளமாகத் தேங்கி இருக்கத் தலை நிமிராமலே ஐய்யர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தவளுக்கு இது வரை அறிந்திராத, சில நிமிடங்களுக்கு முன் வரை அந்நியனாக இருந்து இப்பொழுது முழு உரிமையுள்ள கணவனாகத் தன்னருகில் அமர்ந்து இருந்தவனை நினைத்து உள்ளம் கலங்கியது...

"யார் இவர்? எங்கு இருந்து வந்தவர்? எப்படிப் பட்டவர்? இவருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமா இல்லை அவர் அம்மா சொன்னதற்காக இதற்கு ஒத்துக் கொண்டாரா?" என்று அந்தச் சித்த பிரம்மை பிடித்த நிலையிலும் அவளின் அடி மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள்....

"கல்யாணத்திற்குத் தன் அன்னை அழைக்கும் போதே வராமல் இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்கையில் நடந்து இருக்க வாய்ப்பே இல்லை... நான் எப்படி இதற்குச் சம்மதித்தேன்? எது என்னை மறு பேச்சுப் பேசாமல் மண மேடையில் அமரச் செய்தது? யார் இந்தப் பெண்? எப்படி நான் அவளின் கழுத்தில் தாலி கட்டினேன்? எப்படி அவளை நான் ஏற்றுக் கொண்டேன்?" என்று அர்ஜூன் நினைக்க,

எதை நினைப்பது எதை நினைக்காமல் இருப்பது என்று குழம்பிய மனதுடன் அவன் அருகில் அமர்ந்திருந்தாள் திவ்யா.

நேற்று வரை ஒருவருக்கொருவர் புதிய முகமாக அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தவர்கள்....

இன்று வாழ்க்கையின் பாதையில் ஒருங்கே பயணிக்கப் போகும் விந்தையை நினைத்து விதியைக் குறை சொல்வதா அல்லது யாரைக் குறை கூறுவது என்று குழம்பிக் கொண்டிருக்கும் போது ஐய்யர் அழைக்க, இந்த உலகத்திற்கு வந்தனர் இருவரும்.

பெண் வீட்டாரின் சம்பிரதாயப்படி மண மேடையிலேயே மாப்பிள்ளை மணப் பெண்ணின் காலில் மெட்டி அணிவிக்க வேண்டும்...

ஐய்யர் அர்ஜூனை அழைத்துத் திவ்யாவின் காலில் மெட்டி அணிவிக்கச் சொல்ல,

ஸ்ரீக்கு "ஐயோ! இவன் இவ்வளவு நேரம் பொறுமையா இருந்ததே பெரிசு, இதுல இது வேறையா?" என்றிருந்தது....

முதலில் இந்த இடத்தில் இருந்து இவனைக் கூட்டி செல்ல வேண்டும் பின் மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சட்டென்று முடிவெடுத்தவர் ஐய்யரிடம்,

"எங்க வழக்கப்படி பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு உள்ளே அழைத்துப் போகும் முன் வாசலில் வைத்து தான் மெட்டி போடணும்... அதனால நாங்க இப்போ பெண்ணை அழைச்சுட்டு போறோம்.... அங்க போய் மற்ற எல்லாச் சடங்குகளையும் செஞ்சுக்கிறோம்" என்று கூறி விட்டு கலாவை அழைத்து,

"கலா, நாம கிளம்பலாமா?" என்றார்.....

காலை மணமகன் திருமணத்தை நிறுத்தியதில் அதிர்ந்து இருந்தவருக்கு, பின் கனவிலும் நினைத்திராத அளவில் தன் உயிர் தோழியை இத்தனை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்து அவளின் மகனுக்கே தன் மகளை மண முடித்து வைத்ததை நினைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தவருக்கு ஸ்ரீயின் குரல் நிதர்சனத்தை உணர்த்தியது...

தங்கள் செல்ல மகள் திவ்யாவின் நிலைமை!

தவிப்புடன் திரும்பி தன் கணவரைப் பார்க்க, சில நொடிகள் யோசித்த சிவசுப்ரமணியம் ஏதோ முடிவு செய்தவராய் ஸ்ரீயை நோக்கி...

"நீங்க மாப்பிள்ளையும் பெண்ணையும் அழைச்சுட்டு போங்க... நாங்க கல்யாணத்திற்கு வந்தவங்களைக் கவனிச்சுட்டு, சாப்பாடு வேலை எல்லாம் முடிச்சிட்டு பின்னாடியே வரோம்" என்றார்.

ஆனால் கலாவிற்கோ திவ்யா இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லை...

சின்னப் பெண் வேறு... சாதாரணமாகக் கோவிலுக்குச் செல்வதென்றால் கூடத் தனக்குத் துணைத் தேடுபவள்....

தோழிகள் ஒருவரும் அகப்படவில்லை என்றால் தன் அண்ணன் வினோத்தின் காலில் விழுந்து கெஞ்சியாவது அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்வாள்...

ஆனால் இன்றோ யாரென்றே தெரியாதவர்களுடன் தனியே செல் என்றால் அவள் மனம் என்ன பாடுபடும்...

அதே சமயம் அவர் கணவர் சொல்வது போல் மண்டபத்தில் இருக்கும் விருந்தினர்களை அப்படியே விட்டுவிட்டு செல்வதும் முறையல்ல... அவரால் ஸ்ரீயையும் அர்ஜூனையும் தங்களுடன் தங்குவதற்குக் கேட்பதற்கும் அச்சமாக இருந்தது...

ஏனெனில் தன் தோழியையாவது சமாளித்துக் கொள்ளலாம்...

ஆனால் மாப்பிள்ளை?

ஏற்கனவே அவர் முகத்தில் தெளிவு என்பதே இல்லை... அவரின் குழம்பிய முகமே சொல்கிறது நிச்சயம் அவருக்கு இந்தத் திருமணம் பிடித்திருக்க வாய்ப்பில்லை என்று... அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிப்பது அத்தனை கடினமான விஷயமா என்ன?

அவரின் தோற்றமும் தோரணையுமே சொல்கிறதே அவரது வசதியையும் செல்வாக்கையும் பற்றி... அதுவும் ஸ்ரீயே தன் வாயால் சொல்லிவிட்டாள்... இவர் தான் அவர்களின் அத்தனை தொழில்களையும் கவனித்துக் கொள்கிறார் என்று...

இப்பேற்பட்டவர் தன் மகளின் கழுத்தில் தாலி கட்டியதே பெரிது... இதில் இதற்கு மேல் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது? அதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

இதே யோசனையுடன் கணவரையே பார்த்திருக்க... சிவசுப்ரமணியமோ..

"கலா, திவ்யாவைப் பத்தி கவலைப்படாத.... நாம் இங்க இருக்கவங்களை இப்படியே விட்டுட்டு வர முடியாது... அவங்க கெளம்பட்டும்... நைட்டுக்குள்ள நாம் அவங்க வீட்டிற்குப் போய்விடலாம்" என்றார்.

கலங்கிய விழிகளுடன் சரி என்று தலை அசைத்தார் கலா....

ஸ்ரீக்கும் அதுவே சரி என்று பட்டது...

ஏனெனில் இந்த மண்டபத்தை விட்டுக் கிளம்பிய பின் தான் தன் மகன் ருத்ர தாண்டவம் ஆடப் போகிறான்....

"அதற்கு இவங்க நம்ம கூட வராம இருக்கிறது தான் நல்லது" என்று மனசுக்குள்ளயே கணக்கு போட்டவர்,

"சரி கலா, அப்போ நாங்க கெளம்புறோம்" என்றார்.

திவ்யாவிற்கோ ஏற்கனவே தன் தந்தை தன்னைத் தனியாக அனுப்ப முடிவு செய்ததைக் கேட்டு பகீரென்று இருக்க, இப்பொழுது ஸ்ரீ "நாங்க கிளம்புகிறோம்" என்றதும் அடி வயிறு கலங்கியது...

காலையில் மாப்பிள்ளை தாலியைக் கட்டமாட்டேன் என்று சொன்னதில் இருந்து, இதோ யாரென்றே அறியாத ஒருவருடன் தனியாகப் போ என்று தன் தந்தை சொல்வது வரை நினைத்தவளுக்கு ஏதோ கண்களைக் கட்டி நடுக் காட்டில் விட்டது போல் தோன்றியது.

"இது வரை வாழ்க்கையில் அறிந்திராத ஒருவருடன் எப்படி நம்மை நம்ம அப்பா அம்மா அனுப்பறாங்க? மாப்பிள்ளையின் முகத்தைக் கூட நிமிர்ந்து பாக்கலை... அவர் எப்படிப் பட்டவரோ? அவங்க வீட்டுல யார் யார் இருக்காங்களோ? இன்னும் சொல்லப் போனால் அவர் என் முகத்தைப் பார்த்தாரா இல்லையான்னு கூடத் தெரியலை? அதுக்குள்ள நம்மை அவர் கூடப் போகச் சொல்றாங்களே" என்று தனக்குத் தானே மனதிற்குள் கேள்விகள் கேட்டு கேட்டு களைத்துப் போனாள் அந்தச் சின்னப் பெண்.

அர்ஜூனின் நிலைமையோ அதை விட மோசமாக இருந்தது...

அவனுக்குத் தன் அன்னையின் மேல் அளவுக்கதிகமான பாசம் உண்டு... அவன் எதிரில் நின்று பேச அனைவரும் பயப்படும் பொழுது, தன் எண்ணத்தைத் தைரியமாக வெளிப்படுத்தும் ஒரே ஜீவன் அவன் அன்னை தான்...

அவன் தந்தை கூட அவனுடைய முடிவுகளில் தலையிடத் தயங்கும் நேரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவனுக்கு எடுத்துக் கூற ஸ்ரீ என்றுமே யோசித்ததில்லை... அதனாலேயே அவனுக்கு ஸ்ரீயிடம் ஒரு தனி மரியாதை உண்டு...

கிட்டத்தட்ட தன் அன்னையை அவன் ஒரு குரு ஸ்தானத்தில் வைத்திருந்தான் என்றே சொல்லலாம்...

ஆனால் இன்றோ அதைத் தன் அன்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டாரோ என்றே அவனுக்குத் தோன்றியது... முதன் முறை அவரின் மேல் வெறுப்பு வந்தது...

இளையவர்களின் நிலையை உணர்ந்த ஸ்ரீ,

"சரி, அர்ஜூன், வா நாம கெளம்பலாம்" என்று கூறிவிட்டு, கலாவிடமும் சிவ சுப்ரமண்யத்திடமும் தன் வீட்டு விலாசத்தைக் கொடுத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியேற, கலங்கிய விழிகளுடனும் திகில் நிறைந்த முகத்துடனும் திவ்யா தன் அன்னையைத் திரும்பி பார்த்தாள்.

ஒரு தாயாகத் தன் மகளின் தவிப்பை உணர்ந்த கலா மகளின் அருகில் சென்றவர்,

"திவ்யாம்மா, இப்போ நீ என்ன நினைக்கிறன்னு எனக்குத் தெரியும்... அம்மா என்னடா யாரோடவோ திடீர்னு போகச் சொல்றாள்னு நினைக்கிற இல்ல? தைரியமா போடாம்மா... நீ போறது என் ஸ்ரீயோட வீட்டுக்கு.... நானே தேடி இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு மாமியார உனக்குப் பார்த்திருக்க முடியாது... ஸ்ரீ உனக்கு அம்மாவா இருப்பா... அவ என்ன விட உன்ன நல்லா பார்த்துக்குவா... போடா... நாங்க சீக்கிரம் அங்க வரோம்... வந்து எல்லாத்தையும் பேசிக்கலாம்.... தைரியமா போடா" என்றார்.

அதையே தன் தந்தையும் சொல்ல, வேறு வழி இன்றி ஸ்ரீயின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

இவர்களுக்கு முன்னரே காரை அடைந்த அர்ஜூன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, திவ்யா ஸ்ரீயுடன் பின்னால் அமரப் போக, ஸ்ரீயோ,

"திவ்யா, நீ முன்னாடி ஏறுமா" என்றார்....

"ஸ்ரீ - நீ அடங்க மாட்ட?" என்றது அவரது மனசாட்சி... இருந்தாலும் அதற்கெல்லாம் பயப்படுபவரா அவர்?

ஆனால் அவருக்கு விழி நீர் வழிய, கலங்கிய முகத்துடன் தன் மகளேயே பார்த்திருக்கும் தன் தோழி, தன் மகள் அவள் கணவனுடன் அமர்ந்து செல்வதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை...

அதற்கும் நேரம் காலம் வர வேண்டாமா????

ஏற்கனவே நடந்து முடிந்த அனைத்தையும் நினைத்துப் புருவம் நெறிக்க, மூக்கு விடைக்க, முகம் சிவக்க ஆத்திரத்திலும் ஆங்காரத்திலும் அமர்ந்திருந்த அர்ஜூனுக்கு இது இன்னொரு அடியாக இருந்தது...

உண்மையில் அவனுக்குத் தன் அன்னையின் செயல்கள் எதுவுமே விளங்கவில்லை...

ஸ்ரீ எப்பொழுதுமே இப்படி இல்லை... எதைச் செய்தாலும் ஒரு முறைக்குப் பல முறை ஆழ்ந்து யோசித்தே முடிவு எடுப்பார்....

அதிலும் அர்ஜூனை நன்கு புரிந்துக் கொண்டவர் அவர் ஒருவரே... அவரா இன்று இப்படி நடந்து கொள்கிறார்?? என்று குழம்பிப் போனான்...

ஆனால் தன் மகனை நன்கு புரிந்து கொண்டதினால் தான் அவர் இந்தத் திருமணத்தையே நடத்தினாரென்று அவனுக்குத் தான் புரியவில்லை..... இருந்தும் அவனால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலை...

ஏனெனில் மண்டபத்தில் இருந்திருந்த அனைவரும் இவர்களைத் தான் பார்த்திருந்தார்கள்...

ஆனால் திவ்யாவிற்கோ காரில் முன் இருக்கையில் அர்ஜூனின் அருகில் அமர அச்சமாக இருந்தது.

அவள் ஸ்ரீயிடம் தயங்கியவாறே, "நான் பின்னாடியே உட்கார்ந்திக்கிறேன்" எனவும், அவளின் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்த ஸ்ரீ புன்முறுவலுடன் அவளைத் தன் அருகில் அமர்த்திக் கொள்ள, அர்ஜூனுக்கு "அப்பாடி" என்றிருந்தது.

மண்டபத்தின் வாயிலில் ஒரு வித கலக்கத்துடன் இருந்த கலாவைப் பார்த்து ஸ்ரீ ஆறுதலாகக் கண்களை மூடித் திறக்க, திவ்யா தன் தாய் தந்தையையும், அண்ணனையும் பார்த்து தலை அசைக்க, இவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் காரை சீறிக் கிளப்பினான் அர்ஜூன்.

வாழ்க்கையைத் தன்னுடன் சரி பாதியாகப் பகிர்ந்து கொள்ளப் போகிறவளையே அவன் இது வரை திரும்பி கூடப் பார்க்கவில்லை, மற்றவர்களைப் பற்றியா அவன் நினைக்கப் போகிறான்.

கார் மீண்டும் கடலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரேஸ் கார் வேகத்தில் பறந்தது...

அவனுடைய வேகத்திலேயே தெரிந்தது அவன் எந்நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கிறான் என்று.

அவனுடைய வேகமும், அதீத மௌனமும் ஒரு வித திகிலான சூழ்நிலையை அங்குக் கொண்டு வர, மிக மிக மௌனமாகவே இருந்த அந்தப் பயணம் ஸ்ரீக்கு அதிகப் பட்ச அச்சத்தைக் கொடுக்க, உண்மையில் அவன் வாய் திறந்து பேசினால் தேவலாம் போல் இருந்தது.

ஆனால் அர்ஜூனைப் பற்றி நன்றாகத் தெரியும்... அவன் எதைப் பேசினாலும் பேசுவதற்கு முன் நிறைய யோசிப்பவன்....

அதுவும் தான் செய்திருக்கும் காரியம் சின்னதா என்ன? அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு இருக்கிறாரே.... எதற்கும் தயாராகவே இருந்தார் ஸ்ரீ....

ஒரு மனி நேரம் சென்றவுடன் காரின் வேகத்தைக் குறைத்துப் பின் காரை ஒரு ஒரமாக நிதானமாக நிறுத்திய மகனைப் பார்க்க அவருக்கே உள்ளுக்குள் குளிரெடுத்தது என்றால் திவ்யாவை பற்றிச் சொல்லவா வேண்டும்???

தன் இஷ்ட தெய்வமான முருகனை மனதிற்குள் நினைத்து...

"முருகா, இன்னைக்கு நடந்தது எதுவும் என் இஷ்டப்படி நடக்கலை... இதுல என் தப்பும் எதுவும் இல்லை... இதுக்கு மேலயும் அதிர்ச்சிய தாங்குற சக்தியும் எனக்கு இல்ல... என்னைக் கை விட்டுறாதப்பா....." என்று திவ்யா வேண்ட,

முருகனோ, "என்னை மன்னித்து விடு மகளே... இதற்கு மேல் தான் அதிர்ச்சிகள் உனக்கு இருக்கு.... ஆனால் அத தாங்கிக்கிற சக்திய நிச்சயம் நான் உனக்குத் தருவேன்" என்று கூறி சிரித்தார்.

காரை ஓரமாக நிறுத்திய அர்ஜூன் "ஷிட்" என்று ஸ்டியரிங் வீலை ஓங்கி குத்த திவ்யாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது...

அதிர்ந்து போய்த் தன் கணவனின் முதுகையே வெறித்துப் பார்க்க, அவன் தன் தலையை அழுந்த கோதிவிட்டுக் கொண்டு காரை விட்டு இறங்கினான்...

அவன் பின்னால் இறங்க நினைத்த ஸ்ரீக்கு நிச்சயம் அவன் தன்னைக் கண்டதும் காட்டு கத்தல் கத்துவான், அது திவ்யாவிற்கு இன்னும் அதிர்ச்சியைத் தான் கொடுக்கும் என்று எண்ணியவர் காரிலையே அமர்ந்திருக்க,

காரிலிருந்து இறங்கி அடிப்பட்ட புலி போல் அங்கும் இங்கும் நடந்த அர்ஜூனை அப்பொழுது தான் முதன் முறையாகக் கவனித்தாள் திவ்யா...


காலையிலிருந்து தன் வாழ்க்கை பந்தாடப்படுவதிலேயே குறியாக இருக்க, அவளுக்கு இந்த ஒரு நாளிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்ளப் போகிறோம் என்று பாடாய் இருக்க அவளுக்கு அர்ஜூனைப் பார்க்க எங்கு நேரம் இருந்தது?

ஆனால் அவன் காரின் அருகில் இங்குமங்கும் நடக்கும் பொழுது தான் அவன் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தான்....

ஒரு சின்னக் கிராமத்தில் பிறந்து அதைச் சுற்றிய ஊர்களிலேயே படித்து வெளி உலகமே தெரியாமல் வளர்ந்தவள்...

ஆறு அடி மூன்று அங்குலத்திற்கு நெடு நெடுவென வளர்ந்து, நல்ல சிவந்த நிறத்தோடு, வட நாட்டு கதாநாயகன் போல் கம்பீரமாக, ஆளை அசரடிக்கும் ஆளுமையோடு மொத்தத்தில் ஆணழகனாய் இருந்தவனைக் கண்ணிமைக்கவும் மறந்து பார்த்தாள்.

நிச்சயமாகக் கனவில் கூட அவள் இவ்வளவு அழகான கணவனை எதிர்பார்த்து இருக்கவில்லை....

ஏனெனில் திருமணத்தை மணமேடையில் நிறுத்தி சென்ற அந்தக் கோழையை அவள் ஒரு முறை கூடப் பார்த்ததில்லையாதலால் அவன் முகம் கூடத் தன் மனதிலோ அல்லது இதயத்திலோ பதியவில்லையாதலால், இதோ தன் அன்னை சொன்னார் என்றவுடன் தன் வசதி, அந்தஸ்து எதுவும் பார்க்காமல் தன் கழுத்தில் தாலிக் கட்டியிருக்கும் இவனே என் கணவன் என்று, அன்று அந்த நிமிடமே அவள் மனதில் அர்ஜூன் ஆழமாகப் புகுந்துவிட்டான்.....

ஆனால் அதே சமயம் அவனின் முகத்தை இப்பொழுது முதன் முறை பார்க்கவும், இவ்வளவு அழகானவன் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்வானா? என்று நினைக்கும் போதே "உனக்கே இது பேராசையாகத் தெரியவில்லையா?" என்று அவளின் மனசாட்சி அவளை இடித்துரைத்தது.

இதில் அவன் வேங்கை போல் ஆங்காரத்துடன் நடந்து கொண்டும், தலையை அழுந்த கோதிக் கொண்டும், வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டும் இருப்பதைப் பார்த்தால் மிகப் பெரிய விபரீதம் உருவாகப் போகிறது என்பதைப் புரிந்துக் கொண்டாள்...

கதி கலங்க புடவை முந்தானையின் முடிச்சுக்களை இறுக்கப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, அடிபட்ட சிங்கம் போல் சீற்றத்துடன் மகன் இருப்பதைப் பார்த்த ஸ்ரீக்கோ இதற்கு மேலும் காரில் அமர்ந்திருப்பது நல்லதல்ல என்பது புரிந்து மெல்ல காரை விட்டு இறங்கினார்...

அவர் இறங்கியதும் அவரைத் தீப் பார்த்த அர்ஜூன் காரின் முன் பக்க கதவை ஓங்கி சாத்த ஸ்ரீக்கே ஒரு விநாடி உடல் தூக்கி போட்டது.

"அர்ஜூன்" என்று அவன் அருகில் வர, தன் கையை அவர் முகத்திற்கு நேரே நீட்டி பேசாதீர்கள் என்று சைகை மட்டும் காட்டி விட்டுத் தன்னுடைய அலை பேசியை எடுத்தான்.

ஸ்ரீக்கு நன்றாகத் தெரியும் அவன் யாரை அழைக்கப் போகிறான் என்று....

தன் தந்தையை அலை பேசியில் அழைத்த அர்ஜூன் தன் அன்னையிடம் அலை பேசியைக் கொடுத்து "நீங்களே நடந்ததை டாட்க்கு சொல்லுங்க" என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்.

ஸ்ரீக்கு மயக்கமே வரும் போல இருந்தது....

இதை எல்லாம் எதிர்பார்த்தவர் தான்... ஆனால் அது நிஜத்தில் நடக்கும் பொழுது தான் மனிதர்களுக்கு ஒட்டு மொத்த தைரியமும் போய்விடுகிறது.

அர்ஜூனிடமிருந்து அலை பேசியை வாங்கியவர் தன் கணவரின் எண்ணைப் பார்க்க மறுமுனையில் அழைப்பை எடுத்தவுடன்,

"பாலா, நான் ஸ்ரீ பேசுறேன்" என்றார்...

அதற்குள்ளாகவேவா திருமணம் முடிந்தது என்று யோசித்த பாலா,

"என்னடா, அர்ஜூன் உடனேயே கிளம்பணும்னு சொல்லிட்டானா?" என்று வினவ,

இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று உணர்ந்த ஸ்ரீ,

"பாலா, நான் உங்களிடம் சொல்லாமல் ஒரு பெரிய விஷயம் செய்துட்டேன்... முதல என்ன மன்னிக்கணும்... உங்களுக்கே நல்லா தெரியும்.... நான் எதையும் ரொம்ப யோசிக்காம செய்யமாட்டேன் என்று" என்றார்.

"ஸ்ரீ, என்ன சொல்ல வர? எதுவும் பிரச்சனையா? அர்ஜூன் எதுவும் பிரச்சனை செஞ்சானா?"

"இல்லங்க, அவன் எதுவும் பிரச்சனை செய்யலை... நான் தான் செஞ்சுட்டேன்...."

ஸ்ரீ இப்படிச் சொல்லும் பொழுதே ஏதோ மிகப் பெரிய விஷயம் நடந்திருக்கு என்று யூகித்துக் கொண்டவர்,

"நீங்க இப்போ எங்க இருந்து பேசுறீங்க?" என்றார் யோசனையுடன்...

"நாங்க கடலூரிலிருந்து கெளம்பிட்டோம்.. வர வழியில இருந்து தான் பேசுறோம்.."

"என்னம்மா, வர வழியில ஏதுவும் பிரச்சனையா?"

மீண்டும் பாலா கேட்க, இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று நினைத்த ஸ்ரீ உடனேயே விஷயத்துக்கு வந்தார்....

"நம்ம அர்ஜூனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுங்க"

அவ்வளவு தான்.... பாலா பதற்றத்துடன் "என்ன ஸ்ரீ, என்ன சொல்ற? விளக்கமா சொல்லு" எனவும்

ஸ்ரீ நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டிக் கொண்டிருந்தவர்,

"ஸ்ரீ, நீ என்ன செஞ்சிருக்கன்னு உனக்குப் புரியுதா?" என்றார் தவிப்புடன்...

"தெரியுதுங்க, ஆனா கலாவோட நிலைமையும் நினைச்சுப்பாருங்க... எனக்கு இப்படியொரு நிலைமை வந்தா அவளும் இதையே தான் செஞ்சுருப்பா"

"ஸ்ரீ, அது வேற யாருக்கு வேணா பொருந்தும்... ஆனா நீ பேசுறது அர்ஜூனைப் பத்தி... அவனப் பத்தி எல்லோரையும் விட உனக்குத் தான் நல்லா தெரியும்... இப்போ இதுல ஒரு பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு..." என்று பெருமூச்சுவிட்டவர் சில விநாடிகள் தாமதித்து...

"சரி, நீ அர்ஜூனிடம் ஃபோனைக் குடு" என்றார்....

இத்தனையும் சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூன், ஸ்ரீ அவனிடம் அலை பேசியை நீட்ட தன் அன்னையிடமிருந்து வெடுக்கென அலை பேசியைப் பிடுங்கியவன்,

"டாட், நாங்க அங்க வந்து சேரதுக்குள்ள, எனக்கு ஒரு லாயரைப் பார்த்து வைங்க" என்றான்.

குழம்பிய முகத்துடன் ஸ்ரீ அவன் முகத்தைப் பார்க்க, தன் அன்னையைப் பார்த்துக் கொண்டே,

"ஐ நீட் டு டாக் அபௌட் டிவோர்ஸ் [i need to talk about divorce]" என்றான் ஒவ்வொரு வார்த்தையாக ஆனால் அழுத்தம் திருத்தமாக...


இது வரை நடந்த அனைத்தையும் திறந்திருந்த கார் கதவின் வழியாகக் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவிற்கு எது காதில் விழுந்ததோ இல்லையோ டிவோர்ஸ் என்ற வார்த்தை நன்றாகவே விழுந்தது.

இனி எந்த ஒரு அதிர்ச்சியும் வரக் கூடாது முருகா என்று வேண்டிக் கொண்டவளுக்கு வந்த முதல் அதிர்ச்சியே அவளின் உயிர் வரை சென்று அவளை வேரோடு பிடுங்கி சாய்த்தது.

அதிகம் படிப்பறிவில்லாத மக்கள் வாழும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவளுக்கு, இறக்கும் வரை கணவனே தெய்வம் என்று போதிக்கப் பட்டிருந்தவளுக்கு, விவாகரத்து என்பது ஒரு பெண்ணின் வாழ்வின் முடிவிற்குச் சமானம்...

ஏற்கனவே முதல் மாப்பிள்ளை நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்த, கழுத்தில் தாலியைக் கட்டிய கணவனோ திருமணம் முடிந்து மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே விவாகரத்து பற்றிப் பேச, இதற்குத் தான் மண்டபத்திலேயே தூக்கு போட்டு செத்தே இருக்கலாம் என்று தோன்றியது.

உணர்ச்சிகள் கொந்தெளித்தெழுந்து சுழன்று அவளை ஆட்கொள்ளவே நெஞ்சத்தில் விவரிக்க இயலாதப் பயம் பிடித்துக் கொள்ளத் தன்னையும் அறியாமல் நடுங்கும் விரல்களுடன் தன் கழுத்தில் தொங்கிய தாலியை தன் கையால் இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

"அர்ஜூன், நீங்க முதல்ல வீட்டிற்கு வாங்க.... எல்லாத்தையும் நடு ரோட்டில் வச்சு பேச முடியாது" என்று பாலா கூற,

"ஓகே டாட்" என்று அலை பேசியைத் துண்டித்து விட்டு யாரையும் பார்க்காமல் தன் காரில் ஏறினான்.

காரில் ஏறியதிலிருந்து அவன் ஸ்ரீயின் பக்கம் திரும்பி கூடப் பார்க்கவில்லை...

தன் உதவியாளரான கதிரை அலை பேசியில் அழைத்துத் தன் தொழில் விஷயமாகவே பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று...

"கதிர், ஃபைண்ட் மி எ டிவோர்ஸ் லாயர்... ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் யூ லேட்டர் [Find me a divorce lawyer, i will explain you later]" என்றான்.

காரில் அமர்ந்திருந்த திவ்யாவிற்கோ அவன் ஆங்கிலம் புரியவில்லை என்றாலும் அவன் தங்கள் திருமணத்தைப் பற்றித் தான் நிச்சயம் பேசிக் கொண்டிருப்பான் என்று அவனையே கூர்ந்து கவனித்து இருக்க, அவன் மீண்டும் டிவோர்ஸ் என்ற வார்த்தையை உபயோகித்ததும் தன் மாமியார் முகத்தைப் பரிதாபமாகப் பார்க்க, ஸ்ரீ அவளுடைய கரத்தைப் பிடித்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கண்களாலேயே சைகை செய்தார்,

ஆனால் இதற்கு எல்லாம் சமாதானம் அடையும் நிலையில் இல்லை திவ்யாவின் மனம்...

அர்ஜூன் எப்பொழுது விவாகரத்தை பற்றிப் பேசினானோ அந்த விநாடியில் இருந்து அவன் சொன்ன விவாகரத்து என்ற வார்த்தையிலேயே அது சுழன்று கொண்டிருந்தது.

எங்கிருந்தோ வந்தவன் தன் வாழ்க்கையைச் சுழற்ற போவதை நினைத்து அரண்டு போய் அமர்ந்திருந்தாள் அந்தப் பேதை...


கலவரத்தினால் கனத்த மனதினாலோ என்னவோ நீண்ட பயணமாகத் தெரிந்த அந்தப் பயணமும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது...

ஏற்கனவே தன் வாழ்வுப் பாதை மாறியதைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டே வந்தவளுக்குக் கார் நிற்கவும் எட்டி பார்க்க ஆடிப் போனாள் அந்தப் பேதை...

நீலாங்கரையில் இருந்த அந்த அரண்மனையைப் போன்ற பெரிய பங்களா இன்னும் நடுக்கத்தைக் கொடுக்க, அந்தப் பங்களாவை பார்த்தவள் அவள் கணவன் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை என்றே நினைத்தாள்.

"இவ்வளவு பெரிய பணக்காரர் எப்படி நம்மள மாதிரி ஒரு ஏழைப் பொண்ண கல்யாணம் செய்துக்கொள்வார்? ஐயோ! இந்த அத்தை ஏன் இப்படி ஒரு முடிவ எடுத்தாங்க? ஒரு வேளை நாம தற்கொலை செஞ்சுப்போம்னு பயந்து தான் இப்படி ஒரு முடிவ எடுத்தாங்களா?" என்று சிந்திச்சுக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீ அவளை அழைக்க மெதுவாகக் காரை விட்டு இறங்கினாள்.

பங்களாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து இருந்தவளுக்குப் பங்களாவின் வாயிலில் பார்த்தக் காட்சி ஆச்சர்யத்தைக் கொடுத்தது என்றால், அர்ஜூனுக்கோ தாங்க முடியாத எரிச்சலைக் கொடுத்தது.

அங்கு அவன் தந்தை, தங்கை, தம்பி என்று அனைவரும் வாயிலில் நின்றிருக்க, அருகில் அவர்களின் வீட்டில் நெடு நாள் வேலை செய்யும் தெய்வானையும், அல்லியும் கையில் ஆரத்தி தட்டை வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.

ஸ்ரீ திவ்யாவை அழைத்துக் கொண்டு வாசல் செல்ல அவரை முந்திக் கொண்டு வேகமாகச் சென்ற அர்ஜூன் படாரென்று ஆரத்தி தட்டை தட்டி விட்டு,

"இது ஒன்னு தான் இப்போ குறைச்சல்" என்றவன் மின்னல் வேகத்தில் உள்ளே செல்ல, இது அங்கு இருந்தவர்களையே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால் மலரைப் போன்ற மென்மையான மனம் கொண்ட அந்தச் சின்ன மலரின் நிலைமை????


தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top