JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episode 4

JLine

Moderator
Staff member
அத்தியாயம் - 4


"அர்ஜுன்" என்று பாலாவும் ஸ்ரீயும் அழைத்தும் அவன் நிற்கவில்லை...

புயலென வீட்டிற்கு நுழைந்தவன் நேரே தன்னுடைய அறைக்குச் சென்று கதவை வேகமாகச் சாத்தியதிலேயே தெரிந்தது அவனை யாரும் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என்று.

வாயிலில் நின்றிருந்த திவ்யாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவளின் சிந்திக்கும் திறனை ஒட்டு மொத்தமாக அழித்திருந்தது...

இன்றிலிருந்து தன் வாழ்க்கையில் பெரும் துன்பம் தொடரும் என்பதனை உணர்ந்தது போல் அவள் இதயம் சுக்கல் சுக்கலாக உடையும் நிலையில் இருக்கக் கண்களில் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது...

அவளின் நிலைக் கண்ட ஸ்ரீ ஆறுதல் அளிப்பது போல் அவளின் தோளைப் பிடித்து அழுத்தியவர் அல்லியிடம் இன்னொரு தட்டில் ஆரத்தி கரைத்து எடுத்து வர சொல்ல, பின் அவர்கள் திவ்யாவிற்கு மட்டும் ஆரத்தி சுற்ற ஆரம்பித்தார்கள்.

மனமுழுவதும் திகிலும் வருத்தமும் சூழ்ந்திருக்க, மற்றவர்களுக்குத் தெரியாமல் தன் அழுகையை உள்ளிழுத்தவள் தன் உணர்வுகளை மறைத்து மிகுந்த சிரமப்பட்டு முகத்தில் ஒரு சிறு புன்னகையைத் தவழ விட்டுக் கொண்டே எல்லோரையும் பார்க்க,

"திவ்யா, வலது கால எடுத்து வச்சு வாம்மா.... உள்ளே போய் உனக்கு எல்லோரையும் அறிமுகப் படுத்துறேன்" என்று ஸ்ரீ சொல்ல,

தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து அஞ்சிக் கொண்டே வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் அந்தச் சின்னப் பெண்.

"இவர் தாம்மா உன் மாமனார்... இவன் உன் கொழுந்தனார் அருண்... இவ தான் உன் நாத்தனார் மஹா" என்று ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்க, அவளோ அனைவரையும் பார்த்துச் சின்னதாகப் புன்னகைக்க, பாலாவிற்கு என்னவோ மருமகளைப் பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது..

"ஸ்ரீ, முதல்ல திவ்யாவ பூஜை ரூமுக்கு கூட்டிட்டுப் போய் விளக்கு ஏத்த சொல்லு... அதற்கு அப்புறம் அது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.... பின் எல்லாத்தையும் பேசிக்கலாம்" என்றார்...

ஸ்ரீ திவ்யாவை பூஜை அறைக்குள் அழைத்துச் செல்ல, அங்கு இருந்த தெய்வங்களின் படங்களை எல்லாம் பார்த்துக் கண்களை இறுக்க மூடிக் கொண்டு தன் வாழ்க்கை பாதையின் விசித்திரத்தை நினைத்து மனதிற்குள் மருகியவாறே வேண்டினாள்...

பின் அவளைச் சமையல் அறைக்குள் அழைத்துச் சென்ற ஸ்ரீ பாலும் பழமும் கொடுத்தவர் ஏதோ யோசனையில் திவ்யாவைப் பார்க்க, மீதி பாலை தன் கணவனுக்கு எடுத்து செல்ல சொல்வார்களோ என்று நினைத்து அரண்டு போனாள் திவ்யா....


அவள் அரண்டு போய் நிற்பதைப் பார்த்த ஸ்ரீ மஹாவை அழைத்து, "மஹாம்மா, நீ போய் அண்ணனுக்கு இந்தப் பாலை குடுத்துவிட்டு வாம்மா" என்றார்...

"உன் மகன் பால் பழம் சாப்பிடும் நிலையிலா இருக்கிறான்??? இருந்தும் உனக்கு இத்தனை அழுத்தமும் தைரியமும் ஆகாது ஸ்ரீ" என்று இடித்துரைத்த மனசாட்சியைக் கண்டு கொள்ளாமல் தன் பிடியை விடாமல் தொடர்ந்தார் ஸ்ரீ...

அதிர்ந்த மஹா...

"ஓ மை காட்! மாம், என்ன விளையாடுறீங்களா? அண்ணா இப்போ இருக்கிற நிலைமையில என்னைய கடிச்சே குதறி விடுவாங்க... நான் போகலை மாம்" எனக் கூற,

மஹாவின் அச்சத்தைக் கண்ட திவ்யாவிற்கு இன்னமும் பதட்டம் தொற்றிக் கொண்டது...

வீட்டில் இருக்கும் அனைவருமே அவருக்குப் பயப்படுவார்கள் போல் என்று...

உடனே ஸ்ரீ "சரி, நானே போகிறேன்" என்றவர் மெதுவே மாடியில் இருந்த அவன் அறையின் கதவை மெல்ல தட்ட, சத்தம் வராததைக் கண்டு மீண்டும் தட்ட அப்பொழுதும் கதவைக் திறக்காததால் குளியல் அறையில் இருப்பானோ என்று நினைத்தவர் அவனுக்காகக் காத்திருந்தார்...

அங்குக் குளியலறையில் தண்ணீருக்குக் கீழ் நின்று கொண்டிருந்த அர்ஜூனிற்கு வாய் விட்டு கத்த வேண்டும் போலிருந்தது....

குளிர்ந்த நீரில் அசையாமல் நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தவனுக்கு ஒரு வேளை இந்தக் குளிர் நீர் தன் மனதில் உள்ள சூட்டை தணிக்காதா? என்று ஆயாசமாக இருந்தது...

ஒரு வழியாகத் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து குளித்து விட்டு வெளியே வரவும் மறுபடியும் ஸ்ரீ கதவை தட்டவும் நேரம் சரியாக இருந்தது....

கதவு திறக்கப்படவும் அடைத்து வைக்கப்பட்ட கூண்டு சிறுத்தையைப் போன்று கோபத்தோடு நின்று கொண்டிருந்த மகனைப் பார்த்த ஸ்ரீக்கு நெஞ்சுக் கூட்டில் சிலிர்ப்பு எடுத்தது...

என்ன தான் அர்ஜூனிற்குத் தன் அன்னையின் மேல் மிகுந்த மரியாதை இருந்தாலும் ஸ்ரீக்கு அவன் மேல் மற்றவர்களைப் போல் அச்சமே இருந்தது... அதற்குக் காரணம் அவரின் தந்தையின் ஆளுமையையும் ஆவேசத்தையும் அவன் உரித்து வைத்தது போல் பிறந்து இருந்தது...

ஆனாலும் அவர் தன் அச்சத்தை என்றுமே அர்ஜூனிடம் வெளிக்காட்டியதில்லை...

அவனுக்குத் தன் மேல் அளவுக்கதிகமான மரியாதை இருப்பதை உணர்ந்திருந்தவர் அதனையே பகடையாக உபயோகித்து இந்தத் திருமணத்தையே நடத்தி முடித்திருந்தாரே....

சில விநாடிகள் தயங்கியவர் "அர்ஜூன்.. இந்தப் பாலை குடிப்பா" என்றார் சன்னமான குரலில்....

பாலை பார்த்தவன் அது என்ன பால்? எதுக்கு அந்நேரத்தில் பாலை கொடுக்கிறார்கள்? என்று ஒரு நிமிடம் குழம்பியவன் எதுவும் பேசாமல் தன் அன்னையைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே பாலை வாங்கியவன் மீண்டும் படீரென்று கதவை சாத்தினான்...

அவன் தன் அறைக் கதவை சாத்தவும் இழுத்திருந்த மூச்சை விட்டவர்...

"அப்பாடி!! என்னமோ சிங்கத்தோட குகைக்குப் போற மாதிரியில்ல இருக்கு... சொந்த மகனைப் பார்த்து இப்படிப் பயப்படுற ஒரே அம்மா நானாத் தான் இருப்பேன்.... அப்போ அப்பாவப் பார்த்துப் பயந்தேன்... இப்போ அவரைப் போலவே பொறந்திருக்கிற இவன் கிட்ட பயப்படுறேன்.... புருஷன்கிட்ட கூட இப்படிப் பயப்படலை" என்று நினைத்துக் கொண்டே கீழிறங்க,

அவருடைய மனசாட்சியோ "இப்படிப்பட்ட மகனோட வாழ்க்கையிலேயே நீ என்னமா விளையாடுறியே" என்று ஏளனமாகக் குரல் கொடுக்க, இதுவும் கடந்து போகும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவர் கீழ் இறங்கி வந்தார்...

கீழே வந்த ஸ்ரீ திவ்யாவிற்கு வீட்டை சுற்றிக் காட்ட அச்சத்துடனும் வியப்புடனும் வீட்டின் ஒவ்வொரு அறையையும், அங்கு இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் விழிகள் ஆச்சரியத்தில் விரிய பார்த்துக் கொண்டு வந்த திவ்யாவை ஸ்ரீக்கு நிரம்பப் பிடித்துப் போனது...

அவள் அருகில் வந்து அவள் தலையைத் தடவியவர் பின் மஹாவிடம் திவ்யாவை அவளுடைய அறைக்கு அழைத்துச் செல்ல சொல்லி விட்டு அருணிடமும் பாலாவிடம் நடந்ததை அனைத்தையும் ஆரம்பம் முதல் சொல்ல ஆரம்பித்தார்...

"ஆனா மாம், நீங்க எவ்வளவு பெரிய விஷயத்தைச் செஞ்சுருக்கீங்கன்னு தெரியுமா? அண்ணாவ பற்றி நல்லா தெரிஞ்சும் எப்படி இப்படியொரு தைரியமான முடிவ எடுத்தீங்க?? அதுவும் அண்ணா எப்படி இதுக்கு ஒத்துக் கொண்டாங்க? ஆச்சரியமா இருக்கு அதே சமயம் அண்ணிய நினைச்சா பாவமாவும் இருக்கு"

"ஆமாம் அருண்... அவ ஓடிப் போய்த் தூக்கு போட ட்ரை பண்றத பார்த்தவுடனேயே எனக்குப் பதறிப் போயிடுச்சு.... சின்னப் பொண்ணுடா... இப்ப நாம ஒன்னும் செய்யலைன்னா அவள் வீட்டுக்கு போன பின்னாடி இது மாதிரி ஏதாவது செஞ்சுக்கிட்டா என்ன பண்றதுன்னு கலங்கி போய்ட்டேன்..." என்றவர் பெருமூச்செறிந்து தொடர்ந்தார்...

"அதனால் தான் நான் அப்படி ஒரு முடிவ எடுத்தேன்.... எனக்குத் தெரியும் இது எவ்வளவு பெரிய விவகாரமான முடிவுன்னு... இன்னும் சொல்லப் போனால் அர்ஜூன் இதுக்குச் சம்மதிக்க மாட்டான்னு தான் நினைச்சு பயந்திட்டு இருந்தேன்... ஆனால் அதிசயமா அவன் ஒன்னும் சொல்லாமல் தாலியைக் கட்டிட்டான்" என்றவர் மனதிற்குள்...

"புலி எதுக்குப் பதுங்குச்சுன்னு இப்ப புரியுதே.... அங்க அமைதியா இருந்திட்டு வெளியே வந்தவுடனேயே டிவோர்ஸ் பத்தி பேசறானே!!" என்று நினைத்தவர் அதனைப் பற்றி விவாதிக்காமல் மேலும் தொடர்ந்தார்....

"அருண்... அதே சமயம் இப்போ அர்ஜுனுக்குத் திவ்யாவைப் பிடிக்காம இருக்கலாம்.... ஆனால் நிச்சயம் அவனுக்கு அவளைப் பிடிக்கத் தான் போகுது.... பார்த்திட்டே இருங்க.... நான் சொல்றது ஒரு நாள் நடக்கத் தான் போகுது" என்று கூறியவர் மீண்டும் தனக்குள்ளே...

"அதற்குள் அவன் அந்தச் சின்னப் பெண்ணை என்ன பாடுப்படுத்த போறானோ தெரியலையே" என்று மனம் கலங்கித் தான் போனார்.


அங்குக் கிராமத்திலோ மண்டபத்திலிருந்த அனைவரும் விருந்து உண்ட பின் ஸ்ரீ வீட்டிற்குச் செல்வதாயிருந்த கலாவிற்கு அவர்கள் அனைவரையும் கவனித்துவிட்டு மண்டபத்தைக் காலி செய்யவே நீண்ட நேரம் பிடித்தது.

அதனால் ஸ்ரீக்கு அழைத்தவர் தாங்கள் மறு நாள் வருவதாகக் கூறிவிட்டார்.....

தன் பெற்றோர் வந்தார்கள் என்றாலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று அவர்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திவ்யா இதைக் கேள்விப்பட்டவுடன் கதி கலங்கி போனாள்...

திவ்யா அர்ஜூனோடும் ஸ்ரீயோடும் அவர்கள் இல்லத்திற்கு வரும் பொழுதே கிட்டத்தட்ட மாலை ஆகியிருந்தது...

இந்தச் சிறிய நேரத்திற்குள்ளாகவே அவளுக்கு இங்குத் தனியாக இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்கத் தன் குடும்பத்தினரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவளுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது அவர்கள் வரவில்லை என்றதும்...


அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்த ஸ்ரீ அவளின் அருகில் வந்தவர்...

"திவ்யா, அம்மா அப்பா எல்லாரும் நாளைக்கு வந்துருவாங்கடா... அதான் நான் இருக்கேன்ல... அப்புறம் ஏன் இந்தக் கலக்கம்... வா" என்றவர் அவளைச் சமாதானப் படுத்தி இரவு உணவைத் தயாரிக்கச் சமையலறைக்குள் செல்ல, அவரைத் தொடர்ந்து திவ்யாவும் சமையல் அறைக்குள் நுழைந்தாள்...

எத்தனை தான் வேலை செய்பவர்கள் இருந்தாலும் ஸ்ரீக்கு சமையல் தன் கைகளாலேயே செய்ய வேண்டும்.

அது திருமணமான புதிதில் பாலாவின் ஆசை... திருமணமாகி இருபத்தி ஒன்பது வருடங்களானாலும் ஸ்ரீ அந்தப் பழக்கத்தைக் கை விடவில்லை....

உள்ளே வந்த திவ்யாவிடம் ஸ்ரீ யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் என்றும் முக்கியமாக அர்ஜூனுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று கூறிக் கொண்டே அன்றைய இரவு உணவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

"அத்தை, நான் வேணா இன்னைக்குச் சமைக்கட்டுமா?" என்று திவ்யா கேட்க,

எவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் திவ்யா அவ்வாறு கேட்டது ஸ்ரீக்கு இதமாக இருந்தது...

கலாவும் இப்படித் தான்.... எப்பொழுது ஸ்ரீ வீட்டிற்கு வந்தாலும் ஸ்ரீக்கு என்னென்ன பிடிக்குமோ அதை அனைத்தையும் சமைத்துக் கொடுப்பார்.

"இல்லடா.. இப்பத் தானே வந்திருக்க... கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கலாம்..."

"இல்லை அத்தை, எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற ஒரு கடையில கணக்கு எழுதுற வேலைக்கு அம்மா போறாங்க.... அதனால எங்க வீட்டுலயும் எப்பொழுதும் நான் தான் சமைப்பேன்" என்று திவ்யா கூற,

ஸ்ரீக்கோ மனம் பழைய நியாபகத்தில் உழன்றது....

தான் கல்லூரியில் சேரும் பொழுது வசதி இல்லாத காரணத்தால் கலாவால் அவருடன் இணைந்து கல்லூரியில் படிக்க முடியவில்லை...

ஸ்ரீயும் தன் தந்தையிடம் கல்லூரி கட்டணப் பணம் வாங்கித் தருவதாகக் கலாவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கலா கேட்கவில்லை...

ஒரு வேளை கலாவும் தன்னுடன் மேற்ப்படிப்பு படித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருப்பாளே என்று மனம் வருந்தியது...

"சரிம்மா.. நீயே செய்" என்று முதல் முறையாகத் தன்னுடைய பல வருட பழக்கத்தை விட்டுக் கொடுத்தார்.

சமையலறை என்பது ஒரு பெண்ணிற்கு எத்தனை முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும்...

எத்தனையோ வீட்டில் மருமகளிடம் சமையலறையை விட்டுக் கொடுக்காத மாமியார்கள் இன்னும் எவ்வளவோ பேர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

சமையலறையைத் தன்னுடைய இராஜ்யமாகக் கருதிக் கொண்டு தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து தொடங்கி வீட்டில் ஒவ்வொரு விஷயத்திலேயும் தன் முடிவே தலையாய முடிவு என்று இருக்கும் மாமியார்கள் இன்னும் உண்டு...

எப்பொழுது மருமகள் வந்து சமையல் செய்யத் துவங்குகிறாளோ அப்பொழுதே தன் சாம்ராஜ்யம் கவிழ்ந்ததாக நினைப்பவர்கள் அவர்கள்.

ஆனால் அவற்றுக்கெல்லாம் ஸ்ரீ ஒரு விதி விலக்கு....

ஏற்கனவே நொந்து போயிருக்கும் தன் மருமகளைத் தன்னால் ஆன மட்டும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் படைத்தவர் அவர்.

திவ்யாவிற்குத் தன்னால் முடிந்த வரை சின்னச் சின்னச் சந்தோஷத்தை ஆறுதலைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர்...

"சரிடா, நீயே செய்" என்றார்.

அன்று இரவுக்குச் சப்பாத்தியும், காய்கறிகள் போட்ட குருமாவும் திவ்யா செய்ய முதல் முறை மருமகள் கையால் சமைத்ததைச் சாப்பிட்ட ஸ்ரீக்கும் பாலாவிற்கும் மனது நிறைந்து இருந்தது...

வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் ரசித்து உண்டார்கள்... அர்ஜூனைத் தவிர....

ஸ்ரீயிடம் பாலை வாங்கி விட்டு கதவை அறைந்து சாத்திய அர்ஜூன் குளியல் அறையில் சென்று பாலை ஊற்றியவன்,

"அவளப் பாத்தாலே எரியுது.... இதுல அவ குடிச்சு வச்ச மிச்ச பால வேற குடிக்கணுமா" என்று வாய் விட்டு கூறியவன் அந்த நேரத்திலும் சடுதியில் கிளம்பி தன்னுடைய அலுவலகத்தை நோக்கி சென்றுவிட்டான்.

முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராதவிதமாகத் தன் அன்னை அழைத்திருந்ததால் திருமணத்திற்குக் கிளம்பி போயிருக்க, அவனுக்கு அலுவலகத்தில் நிறைய வேலைகள் காத்திருந்தது...

அது மட்டும் அல்ல காரணம்....

எவ்வளவு விரைவாக அவளிடமிருந்து விவாகரத்து வாங்குகிறோமோ அது நல்லது... அது வரை அவள் முகத்தைப் பார்ப்பதைக் கூட முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றெண்ணத்திலே தான் அவன் அந்த நேரத்திலும் அலுவலகத்திற்குச் சென்றது...

ஆனால் பின்னாளில் அவள் முகத்தைப் பார்க்காமல் தான் எத்தனை அவஸ்தை படப் போகிறோம் என்றும், அவளைத் தேடி அவளின் பின்னே தான் செல்லப் போகிறோம் என்றும் அவன் இப்பொழுது அறிந்திருக்கவில்லை...




அனைவரும் உணவு உண்டு முடித்தவுடன் ஸ்ரீ, திவ்யாவை அழைத்து...

"திவ்யாம்மா, இன்னைக்கு நீ மஹாவோட படுத்துக்கோ... நாளைக்குக் காலையில எல்லாத்தையும் பேசிக்கலாம்" என்று கூற,

"சரி அத்தை" என்று கூறிவிட்டு திவ்யாவும் மஹாவுடனேயே அவள் அறைக்குச் சென்றாள்.

திவ்யா தன் அறைக்குள் நுழைந்தவுடன் அவள் தன்னுடைய படுக்கையிலேயே படுப்பதற்கு மஹா ஏற்பாடு செய்ய அதை மறுத்த திவ்யா தயக்கத்துடன்..

"இல்லைங்க, நான் கீழேயே படுத்துக்கிறேன்" என்றாள் மெல்லிய குரலில்....

"அண்ணி, என்னோட நீங்க கொஞ்சம் சின்னப் பொண்ணு தான்... ஆனால் அதுக்காக ப்ளீஸ் இந்த நீங்க, வாங்க, போங்க எல்லாம் வேண்டாமே..... இன்ஃபாக்ட் சொல்லப் போனால் எங்க அர்ஜூன் அண்ணனுக்கு உங்கள பிடிக்குதோ இல்லையோ எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு... யூ ஆர் வெரி ஸ்வீட் அண்ட் க்யூட்.... [You are very sweet and cute]... நிச்சயம் அண்ணனுக்கு உங்கள கூடிய சீக்கிரமே பிடிக்கும்.... அப்போ உங்கள இத்தனை நாள் தரையில படுக்க வச்சிருந்தேன்னு தெரிஞ்சுது அவ்வளவு தான்.... நான் தொலைஞ்சேன்" என்று கூறிவிட்டு அவளுக்குப் படுக்க உதவியவள்,

"அண்ணி, இனி நீங்களும் நானும் ஃப்ரெண்ட்ஸ், என்ன?" என்று வினவ,

எதார்த்தமாக மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் பேசும் மஹாவை திவ்யாவிற்கு மிகவும் பிடித்துப் போனது...

"இந்த வீட்டில் எல்லோரும் நல்லவர்களாகத் தான் இருக்கிறார்கள்... அவரைத் தவிர" என்று மனதிற்குள் எண்ணியவள்,

"அவரும் நல்லவராகத் தான் இருக்கனும்.... திடீர்னு இப்படி ஒரு கல்யாணம் நடந்தால் யாராக இருந்தாலும் இப்படித் தான் நடந்து கொள்வார்கள்" என்று வெள்ளை மனதுடன் நினைத்தவள் மஹாவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கத் தூக்கம் கண்ணைக் கட்டியது....

இன்று நடந்த மொத்த கலவரத்தில் வந்த மன அசதியாலும், உடல் அசதியாலும் தன்னையும் அறியாமல் தூங்கியும் போனாள் அந்தப் பேதை....

அதிகாலை சூரியன் அறையின் சாரளத்தின் வழியே தன் கதிர்களைச் செவ்வனே செலுத்த எப்பொழுதும் விடியற்காலையிலேயே எழுந்து பழகியவளாதலால் இன்றும் அதைப் போலவே விழிப்பு வர, விழித்தவளுக்குத் தான் எங்கு இருக்கிறோம் என்று புரியவே சில விநாடிகள் பிடித்தது....

புரிந்ததும் உதறல் எடுக்க ஆரம்பிக்கப் படபடத்தவளுக்குக் கீழே செல்வதா வேண்டாமா என்று குழப்பமாக இருக்க, ஒரு அரை மணி நேரம் வரை படுத்திருந்தவளுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை...

திருமணம் ஆன மறு நாளே இப்படித் தாமதமாக எழுந்தால் அத்தையும் மாமாவும் என்ன நினைப்பார்கள் என்று தோன்ற மெதுவாக எழுந்தவள் தனது பெட்டியைத் திறந்து ஒரு புதுப் புடவையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள்.

உள்ளே சென்றவளுக்குக் குளியல் அறை கூட இத்தனை பெரிதாகவும், அழகாகவும் இருக்குமா என்று ஒரே ஆச்சர்யம்...

மனிதனுக்குப் பணமும் இரசனையும் இருந்தால் எந்த இடத்தையும் அழகாக வைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டவள் குழாயை திறந்து பச்சை தண்ணீரில் குளிக்க ஆரம்பித்தாள்.

என்ன குளிராக இருந்தாலும் பச்சை தண்ணீரில் குளித்துத் தான் அவளுக்குப் பழக்கம்.... அது பனிப் பொழியும் காலமாக இருந்தாலும் சரி...

சிறிது நேரத்தில் குளித்து முடித்து வந்தவள் இன்னமும் மஹா தூங்குவதைக் கண்டு "இதுவும் பணக்கார வீட்டில் சகஜம் போல லேட்டா எழுந்திருப்பது" என்று எண்ணிக் கொண்டு வெளியே வர,

அப்பொழுது தான் ஜாகிங் போய்விட்டு வந்திருந்த அர்ஜூனும் அலை பேசியை நோண்டிக் கொண்டே வேகமாக மாடிப் படி ஏறினான்.....

ஏற்கனவே எந்த நிமிஷத்திலும் எதுவும் நேர்ந்து விடுமோ என்கிற திகிலில் ஆழ்ந்திருந்தவளின் எண்ணம் முழுவதும் தன்னிலை குறித்துக் குழம்பியிருக்க, தலை வேறு குளித்திருந்ததால் குனிந்து ஈரத் தலை முடியை விரல் விட்டு கோதிக் கொண்டே யோசனயுடன் மெல்ல படியில் இறங்கி வந்து கொண்டிருக்க, அவளும் அர்ஜுனைக் கவனிக்கவில்லை....

அதிகாலை நேரம் ஆதலால் பாதி இருட்டும் பாதி மங்கலான வெளிச்சமும் சேர்ந்து படிகளில் ஒரு நிழலான சூழ்நிலையை உருவாக்கியிருக்கக் குனிந்து அலைப் பேசியிலேயே கண்களைப் பதித்து வேகமாக வந்து கொண்டிருந்த அர்ஜூனும் அவளைக் கவனிக்கவில்லை....

வேகமாகப் படி ஏறியவன் அதே வேகத்துடன் நேருக்கு நேர் அவள் மீது மோத, தளிர் மேனியவள் அவனுடைய வாளிப்பான வாட்டசாட்டமான உருவத்தின் வேகத்தைத் தாங்க இயலாது தடுமாறி கீழே விழப் போனாள்.....

"ஏ ஏ" என்று கத்தியவன் பூங்கொத்தாய் தன் மீது மோதியவளின் பிஞ்சு உடலை இறுக்கி பிடிக்க, அதில் தன்னிச்சையாக அவனின் வலுவான கரம் அவளின் வெற்றிடையில் அழுந்த படிய, அவளோ இன்னும் அதிர்ச்சியில் கிழே விழாமல் இருக்க அவனுடைய டி ஷர்ட்டையே இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்...

எதிர்பாராத இந்தத் திடீர் மோதலினாலும் அவனின் இறுக்கிய அணைப்பினாலும் இதயம் பயத்தால் படபடவென அவள் உடலே அதிரும்படி அடித்துக் கொண்டு இருந்ததோடு உள்ளத்தின் போக்கிற்கு ஏற்ப முகத்தில் வியர்வை துளிகளும் அரும்ப, அதிக நேரம் அவர்கள் நிற்கும் விதத்திலேயே நின்றிருந்தால் அவள் நிச்சயம் பயத்தில் உயிரே விட்டிருப்பாள்...

வழக்கம் போல் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு பூஜையை முடித்து அறையை விட்டு வெளி வந்த ஸ்ரீயின் கண்கள் இக் கண்கொள்ளா காட்சியை உள் வாங்கிக் கொண்டதில் அவரின் முகத்தில் ஒரு சிறு அரும்பு போல் புன்னகை பூத்தது....

படிகளில் தடுமாறி தன்னையே கொலுக் கொம்பாக இறுக்கப் பற்றியிருந்த மனைவியின் மதி முகத்தை முதன் முறையாக அதுவும் அத்தனை நெருக்கத்தில் பார்த்திருந்த அர்ஜூனிற்கோ ஒரு விநாடி இதயம் தடுமாறி தன் துடிப்பை அதிகரித்து மூளையையும் உறையச் செய்திருக்க....

திக்கித்திணறி தவிப்புடன் "நா... நா... நான் உங்களைக் கவனிக்கலை.... தெ... தெ... தெரியாம...." என்று அவளின் வாயிலிருந்து உதிர்ந்த இனிமையான குரலில் வெளி வந்த சொற்கள் அவன் மயக்கத்தைக் கலைக்கவே தன்னைச் சுதாரித்தவன் அவளை ஆழ்ந்து நோக்கியவாறே...

"ஐய்ஸ் [Eyes] என்ன ப்ரெண்ட்ல [Front] இருக்கா? இல்ல பேக்ல [back] இருக்கா? பாத்து வரத் தெரியாது, இடியட்" என்று கூறிக் கொண்டே அவளை விட்டுவிட்டு மாடியேறினான்...

அவள் பிறந்து வளர்ந்த அந்தக் குக்கிராமத்தில் தந்தையாகட்டும், கூடப் பிறந்தவர்களாகட்டும் அல்லது எந்த ஆண்மகன்களாகட்டும் பெண்களிடம் சற்று தள்ளியே இருந்து பழகுவார்கள்... அது எழுத படாத சட்டம் அங்கே... அதிலும் வயதுக்கு வந்து விட்டால் சொல்லவே வேண்டாம்...

அப்படி எந்த ஆண்களிடமும் நெருங்கி பழகாமல் இது வரை இருந்து வந்தவளுக்கு முதல் முறையாக அறிந்த ஆணின் உடலின் ஸ்பரிசத்தையும், இடையைச் சுற்றியிருந்த அவன் கைகளின் வலுவையும், மோதிய வேகத்தில் அவளின் முகம் அவன் மார்பில் பதிய அதில் உணர்ந்த அவனின் பிரத்தியேக வாசனையும் அவளின் அடி வயிற்றில் சில்லென்று ஒரு உணர்வை கிளப்பி அவளின் எண்ணங்களை எங்கெங்கோ கொண்டு சென்றது...

ஆனால் அவனது "இடியட்" என்ற வார்த்தையைக் கேட்டதும் அவன் எண்ணங்கள் தன் எண்ணங்களுக்கு விரோதமான திக்கில் பயணித்துக் கொண்டு இருந்ததை அறிந்து புயலில் அடிப்பட்டதைப் போல் தவித்த மனதில் வேதனை நிரம்பி வழிய, அவளது மெல்லிய மனதை காயப்படுத்தி அவளை இவ்வுலகிற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தான் அவளின் கணவன்...

அதையும் கவனித்த ஸ்ரீ அவளை நோக்கி நடக்க ஆரம்பிக்க அதைக் கவனித்த திவ்யா கலங்கிய கண்களை ஸ்ரீக்குக் காட்டாமல், கண்ணீரை கவனமாகத் துடைத்துக் கொண்டவள் ஸ்ரீயை நோக்கி புன்னகைத்துக் கொண்டே வந்தாள்.

"என்னடாம்மா, அதுக்குள்ள எழுந்திருச்சிட்ட"

"இல்லத்த, எங்க வீட்டுல ஐஞ்சு மணிக்கே எழுந்திருச்சுப் பழக்கம், அதான்" என்றவள்,

"அத்த நான் கோலம் போடட்டா" எனவும்,

ஸ்ரீ "கண்டிப்பாம்மா... அல்லி தான் எப்பாவாச்சும் கோலம் போடுவாள்... எனக்கு முதுகு வலி வந்ததில் இருந்து என்னால போட முடியல.... மஹாவுக்கும் கோலத்திற்கும் ரொம்பத் தூரம்... நீயாச்சும் போடு" என்றவர் கையோடு கோலப் பொடி எடுத்துக் கொடுக்கத் திவ்யா வாசலில் தண்ணீர் தெளித்துப் பெருக்கி கோலம் போட ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திலேயே மிகவும் அழகாகப் பெரிய கோலம் போட்ட மருமகளைப் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தவர் அவள் அருகில் வந்து,

"திவ்யா.. அர்ஜூன் எதாவது சொன்னா கொஞ்சம் பொறுத்துக் கொள்ளடா.... அவன் எப்பவுமே இப்படித் தான்... சட்டுனு கோபம் வந்துடும்... யாருன்னு கூடப் பார்க்காமல் அவங்க மேல் தன் முழுக் கோபத்தையும் காட்டிடுவான்... ஆனால் கண்டிப்பா உன்னோட அன்பும் பொறுமையும் அவனை மாத்திடும்..." என்றவர் சில விநாடிகள் தயங்கி...

"நான் சொல்றது தப்புன்னும் எனக்குத் தெரியும்... பெத்தவங்களால பிள்ளைங்கள திருத்த முடியாம ஒரு கல்யாணம் ஆனால் அவங்க திருந்திடுவாங்கன்னு சொல்றது ரொம்பத் தப்பு... நீயும் உன் வீட்டுல செல்லமாத் தான் வளர்ந்திருப்ப... இப்போ கல்யாணம் ஆனவுடனேயே இவ்வளவு கஷ்டமான பொறுப்புக் கொடுக்கறது தப்பு தான்.... ஆனால் கண்டிப்பா அவன் நீ சொல்றபடி ஒரு நாள் கேட்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்குடா" என்றார்.

அவரின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கோ சற்று முன் அவன் அவள் மேல் எரிந்து விழுந்தது நியாபகத்தில் வர,

"அவராவது நான் சொல்றது கேட்கிறதாவது... இன்னும் எத்தனை நாள் என்னைய இந்த வீட்டில வச்சுக்க அனுமதிக்கப் போறார்னே தெரியலை... இதில் இந்த அத்தை வேறா ஏதேதோ கற்பனை பண்றாங்க" என்று உள்ளுக்குள் குமைந்தவள் எதுவும் பேசாமல் ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தினாள்...

இத்தனை நடந்தும் துக்கத்தைத் தனக்குள்ளே ஆழப் புதைத்துக் கொண்டு வெளியில் சிரிக்கும் அந்தச் சின்ன மலரை பார்த்தவருக்கு வலிக்கத் தான் செய்தது... ஆனால் திவ்யாவோ தன்னுடைய வருத்தத்தை வெளியில் காட்டாமல்,

"அத்தை, இன்னைக்கு என்ன டிபன் பண்ணனும்னு சொன்னீங்கன்னா செய்திடுறேன்" என்றாள்...

அவளின் பொறுமையில், சிரிப்பில் தன் தோழி கலாவையே பார்த்தவர் இவளின் அன்பும் அமைதியும் நிச்சயம் தன் மகனின் இரும்பு மனதையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் ஒரு பெருமூச்சை ஆழ விட்டவர் அவளுக்கு அன்றைய உணவின் பட்டியலைத் தர,

அவர் சொன்னது போலேயே திவ்யாவும் சமையலை செய்ய ஆரம்பிக்க, நேரம் போனதே தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டே சமைத்தது திவ்யாவின் மனதிற்குச் சற்று ஆறுதலாக இருந்தது.

மணி ஏழு ஆக ஒருவர் பின் ஒருவராக உணவு அருந்த வர, அவர்களைத் தொடர்ந்து அர்ஜூனும் வந்தவன் டைனிங் டேபிளில் அமர, ஸ்ரீ எல்லோருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தார்...

தன் தட்டில் இருந்த பூரியை வாயில் வைத்தவன் நிமிர்ந்து பார்க்க அதே சமயம் திவ்யாவும் எதேச்சையாக அவனைப் பார்க்க அடிபட்ட சிங்கமாக மாறியது அவன் முகம்....

அவனைப் பொறுத்த வரை திவ்யாவைப் போன்ற பெண்கள் வீட்டில் வேலைக்காரிகளாக இருக்கத் தான் லாயக்கு... அவளை வீட்டுக்காரியாக, அதுவும் தன் மனைவியாக அவனால் எப்பொழுதும் கற்பனைக் கூடப் பண்ண முடியாது...

"அப்படி இருக்க அவள் எந்த உரிமையுடன் அவர்கள் டைனிங் டேபிள் வரைக்கும் வந்திருக்கிறாள்? எல்லாம் இந்த மாம் கொடுக்கும் இடம் தான்" என்று எண்ணிக் கொண்டு இருக்கையில் ஏற்கனவே உலையாகக் கொதித்துக் கொண்டு இருந்தவனின் மனதில் மேலும் நெருப்பை அள்ளிப் போட்டது போல்....

"திவ்யா, இன்னும் ரெண்டு பூரி கொண்டு வந்து அர்ஜூன் தட்டில் வைம்மா" என்றார் ஸ்ரீ...

படீர் என்று தன்னுடைய நாற்காலியில் இருந்து எழுந்தவன் அவனுக்கு முன் இருந்த தட்டை வேகமாகத் தள்ள, அது உணவு பொருட்களுடன் சிதறி திவ்யாவின் காலிற்குக் கீழ் வந்து விழுந்ததில் அவளுக்குச் சப்தனாடியும் அடங்கி ஒடுங்கியது.

திக் பிரமை பிடித்தது போல் நின்ற மருமகளைப் பார்த்த ஸ்ரீ வேகமாக அவள் அருகில் வந்தவர் அவள் தோள் தொட்டு....

"திவ்யா" என்றழைக்க,

அர்ஜூனின் அரக்கத் தனத்தில் ஏற்கனவே அரண்டு போய் இருந்தவளுக்கு அவரின் தொடுகை உடல் முழுவதும் தூக்கி வாரிப் போட செய்தது,,,

அவளை ஆறுதலாக ஒரு நொடி அணைத்து விடுவித்தவர் கலக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டே அர்ஜூன் பின்னால் சென்றவர்...

"அர்ஜூன், என்னப்பா இது? உன் கோபம் எனக்குப் புரியுது.... ஆனால் நீ இவ்வளவு இண்டீசன்டா நடந்துக்கனும்னு அவசியமில்லை" எனவும்,

அது வரை அவரிடம் எதுவும் பேசாமல் இருந்திருந்தவன் பீரங்கி போல் வெடிக்க ஆரம்பித்தான்...

"மாம், இங்க எனக்கு என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க முடியலை... இது வரைக்கும் எல்லோரும் என்னைய பாத்து பயந்து தான் பார்த்திருக்கேன்... நம்ம வீடும், நம்ம பிஸினஸும் என்னோட கண்ட்ரோல்ல தான் இருந்தது..."

"பிஸினஸுல இந்த அளவு சாதிக்க முடிந்த என்னால, என் லைஃப்ல தோத்துப் போய்ட்டேனோன்னு தோனுது..... ஊரே என்னப் பார்த்து பயப்படுது.... ஆனால் என் வீடு என்னோட கண்ட்ரோல்ல இல்லை.... என்னோட சொந்த வாழ்க்கையில என் கண்ட்ரோல் இல்லை.... இன்ஃபாக்ட் சொல்லப் போனால் என் வாழ்க்கையே என் கிட்ட இல்லைங்கிற மாதிரி தெரியுது.... யூ ரூயின்ட் மை லைஃப் [You ruined my life]."

"இதுக்கு மேலே நான் இந்த வீட்டுல என்ன பன்றேன்? எதுக்கு இருக்கிறேன்னு கூடத் தெரியலை? ப்ளீஸ் என்னைய கொஞ்ச நாள் தனியா விடுங்க"

தன் மகனின் இன்றைய கோபமும் ஆற்றாமையும் தன்னால் தான் என்று நன்கு புரிந்த ஸ்ரீயும் அவனின் வலியை உணரவே செய்தார்...

தொழில் சாம்ராஜ்யத்தில் அவன் ஒரு முடி சூடா மன்னன்... அரசியலிலும் சரி வெளி வட்டாரங்களிலும் சரி அவன் விரல் அசைத்தால் நடக்காதது எதுவுமே இல்லை... அவனின் செல்வமும் செல்வாக்கும் அதி பிரபலம்... எவரையும் அஞ்சா நெஞ்சத்தோடும் அதிகாரத்துடன் வீழ்த்தும் சாமர்த்தியசாலி...

ஆனால் இன்று தன் அன்னையின் ஒரே வார்த்தை அவன் வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது....

நான் எப்படி இதற்குச் சம்மதித்தேன்?? ஏன் அவரை உதறித் தள்ளி அந்த இடத்தை விட்டு வெளியே வர என்னால் முடியவில்லை?? எது என்னை அப்படிக் கட்டிப் போட்டது??

பல ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தில் கூட இயல்பாக எதுவும் பேச, செய்ய முடிந்த என்னால் ஒரு நூறு பேர் இருந்த திருமணம் மண்டபத்தில் ஏன் எதிர்த்து ஒரு வார்த்தை பேச இயலவில்லை....

தன் அன்னையின் மீது இருந்த மரியாதையா அல்லது வேறு ஏதோ ஒன்று என்னைப் பேச விடாமல் செய்து விட்டதா?

என மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டு களைத்துப் போயிருந்தவனுக்கு இன்று அவரின் பேச்சு அவனின் கோபத்திற்குத் தூர்வாரியது பொல் இருந்தது...

மனதில் இருந்ததைக் கொட்டிவிட்டான்... ஒவ்வொரு வார்த்தைகளாக அளந்து பேசுபவன் இன்று அள்ளி தெளித்துவிட்டான்...

இதற்கு என்ன பதில் சொல்வது என்று ஸ்ரீக்கும் தெரியவில்லை....மனதிற்குள் சுருக்கென்று இருந்தது.

"அர்ஜூன், ப்ளீஸ் நான் செஞ்சது உனக்கு இப்போ தப்பாத் தான் தெரியும், ஆனால்....." என்று கூறி முடிக்கவில்லை அவரின் முகத்திற்கு முன் தன் கரத்தை உயர்த்தியவன்...

"மாம்... இத இன்னும் காம்பிளிக்கேட் [complicate] ஆக்காதீங்க.... நீங்க நினக்கிற மாதிரி என் மனசு மாறாது.... இஃப் யூ வாண்ட் டு ஹெல்ப் மி, ப்ளீஸ் [If you want to help me, please] அவங்கள அவங்க வீட்டுக்கு அனுப்பிருங்க... ஐ டு நாட் வாண்ட் டு ஸி ஹெர் எனி மோர் [I do not want to see her anymore] " என்றவன்,

ஷூவை மாட்டிக் கொண்டு வேகமாகத் தன்னுடைய காரை கிளப்பிச் சென்று விட்டான்...

அவர்கள் பின்னேயே வந்து அவர்களின் வாதங்களைக் கவனித்துக் கொண்டு இருந்த திவ்யாவிற்கு அவர்களின் மற்ற பேச்சுக்கள் எதுவுமே மனதில் ஏறவில்லை... இரண்டே இரண்டு விஷயங்களையே தவிர...

ஒன்று... தன் கணவன் "அவங்க" என்று தன்னை இன்னும் வெளியாளாக நினைத்து அழைத்தது...

இரண்டு.... தான் இருக்கும் இடத்தில் தன் கணவன் இருக்க விரும்பவில்லை என்று அவளைத் திருப்பி அனுப்ப சொன்னது....

இதற்கு மேலே ஒரு பெண்ணிற்குத் தன் கணவனால் புகுந்த வீட்டில் என்ன அவமானம், அதுவும் திருமணமான மறு நாளே வந்துவிடப் போகுது..... துடிதுடித்துப் போனாள் அந்தப் பேதை....

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top