JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episode 5 & 6

JLine

Moderator
Staff member
அத்தியாயம் - 5

கலங்கிய கண்களோடு நின்றிருந்த மருமகளைப் பார்த்த ஸ்ரீ அவள் அருகில் வந்து ஆறுதல் கூற ஆரம்பிக்க, அதைத் தடுத்த திவ்யா,

"அத்தை எனக்கு அவங்க மனசு நல்லா புரியுது.... அவங்க இடத்தில யாரா இருந்தாலும் இதை விட நிச்சயம் கோபப் பட்டிருப்பாங்க.... இனிமே அவங்க கீழே இருக்கும் போது நான் மாடியிலேயே மஹா அண்ணி ரூமிலியே இருக்கிறேன்..... அவங்க போன பின் நான் கீழே வருகிறேன்.... என்னால அவங்களுக்கு அவங்க வீட்டுலேயே சுதந்திரம் போன மாதிரி இருக்க வேண்டாம்..... ஆனால் என்னைய எங்க வீட்டிற்கு மட்டும் அனுப்பிடாதீங்க அத்தை...." என்றவள் தலை கவிழ்ந்தவாறே...

"ஏற்கனவே அந்த மாப்பிள்ளை கல்யாணத்தை நிறுத்தினதுல ஊர்ல என்னென்ன பேசி அம்மாவையும் அப்பாவையும் கேள்விக் கேட்டுட்டு இருக்காங்களோ தெரியலை... இப்போ நான் திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்னா என்னைய எல்லோரும் வாழா வெட்டின்னு கூப்புடறத கேட்டாங்கன்னா ரொம்ப உடைஞ்சு போயிருவாங்க அத்தை..... நான் இங்க உங்க வீட்டுல ஒரு வேலைக்காரியா இருந்துட்டு போயிடுறேன்.... எனக்கு அதுல ஒன்னும் வருத்தமும் இல்லை.... இன்னும் சொல்லப் போனால் நீங்க எனக்குச் செய்திருக்கிறதுக்கு நான் நிச்சயம் நன்றிக் கடன் பட்டவ..... அந்த நன்றிய இப்படித் தீர்த்துட்டு போறேன்" என்றாள்.

அவள் தலை கவிழ்ந்த வண்ணம் பேசிக் கொண்டு இருந்தாலும் அவளின் விழிகளில் வழியும் நீரை ஸ்ரீ உணர்ந்தே இருந்தார்...

இந்தச் சின்ன வயதில் எத்தனை மன பாரம்... இதற்கெல்லாம் நான் தானே காரணம்... நல்லது செய்வதாக நினைத்து பெரிய கேட்டை செய்துவிட்டேனோ!!

அவளின் வலியை தன் வலியாகச் சுமந்தவருக்கு அவள் பேசியதில் ஒன்று மட்டும் வியப்பாய் இருந்தது...

தான் அவளுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்திருக்கிறோம்..... ஆனால் அந்தச் சின்னப் பெண் நன்றி கடன் பட்டதாகச் சொல்கிறாள்.

"அர்ஜூன், இந்த மாதிரி பெண் உனக்கு எங்க தேடினாலும் கிடைக்கமாட்டாடா..... கையில இருக்கும் போது எந்த ஒரு பொருளோட அருமையும் தெரியாது.... அவ உன்ன விட்டு போறதுக்குள்ள நீ அவ அருமைய புரிஞ்சுக்கனும்.... அதான் என்னோட பிராத்தனைப்பா" என்று மனதுக்குள் எண்ணியவர் ஒன்றும் பேசாமல் திவ்யாவின் தலையைக் கோதிவிட்டபடியே,

"எனக்கு அப்படியே கலாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கு நீ பேசறத பார்த்தால்... உங்க அம்மா போலவே எவ்வளவு பொறுமை...." என்று பெருமூச்செறிந்தவர்....

"சரிடா வா.... உங்க அம்மா அப்பாவோட உன்னோட சொந்தக்காரர்கள் சில பேரும் வருவதாக உன் அம்மா காலையில் ஃபோன் செஞ்சு சொன்னாள்... அவங்களுக்குச் சாப்பாடு ஏற்பாடு பண்ணனும்" என்றவர்,

அவளை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் செல்ல, இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாலாவிற்குத் தன் மனைவி பெரிய பிரச்சனையை இழுத்துக் கொண்டு வந்து விட்டதாகவே தோன்றியது.

ஏனெனில் அவரின் மகன் அத்தனை விரைவில் ஒருவரையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.... அவனுக்கு நிச்சயம் திவ்யாவின் மீது காதலோ மனைவி என்ற பாசமோ வரப் போவதில்லை...

எதிரில் தன் முன் அமர்ந்து பேசுபவரிடமே அந்தஸ்து பார்ப்பவன்.... ஒருவரையும் அத்தனை எளிதில் நம்பாதவன் திவ்யாவையா, அதுவும் தன் மனைவியாகவா அங்கீகரிக்கப் போகிறான்....

என்ற ஆழ்ந்த யோசனையுடன் இருந்தவருக்கு இதற்குக் கடவுள் தான் ஒரு நல்ல முடிவாகச் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது......

சமையல் அறைக்குள் நுழைந்த ஸ்ரீக்கும் திவ்யாவிற்கும் வரப் போகும் விருந்தினர்களுக்குச் சமைப்பதற்கே நேரம் சரியாக இருந்தது....

அல்லியும் தெய்வானையும் அவர்களுக்கு உதவி செய்ய, ஒரு வழியாக அவர்களும் சமைத்து முடிக்கக் கலாவும் அவர் குடும்பத்தினர்களும் வந்து சேர்ந்தனர்....

வீட்டின் வாயிலில் வந்து இறங்கியதுமே ஆ என்று வாயை பிளந்துவிட்டார் கலா... இது என்ன வீடா அல்லது அரண்மனையா? என்று....

அவருக்கு ஸ்ரீயின் வசதியும் அந்தஸ்தும் தெரியும்... சிறிய வயதிலேயே கிராமத்தில் அவர்களின் வீட்டிற்குச் சென்றவராயிற்றே...

ஆனால் இருந்தும் இவ்வளவு பெரிய அரண்மனையை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை...

அவருக்கு எப்படித் தெரியும் ஏற்கனவே கோடீஸ்வரர்களாக இருந்த குடும்பத்தை இந்தியாவிலேயே பெயர் சொல்லும் அளவிற்கு உயர்த்தியது அவரின் மருமகன் அர்ஜூனின் சாமர்த்தியமும் அதிகாரமும் தான் என்று...

அவர் தான் சிலையாக நின்றுவிட்டார் என்றால் அவருடன் வந்த மற்ற சொந்தங்களும் மூக்கில் விரல் வைத்தவாறே அசந்து போய் நின்றிருந்தனர்..

அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு எண்ணம் தான்..... எப்படி இப்படி ஒரு வாழ்க்கை ஏழைப் பெண்ணான திவ்யாவிற்கு அமைந்தது என்று.

கலாவிற்குப் பெருமையாகவும் அதே சமயம் கலக்கமாகவும் இருந்தது.....

ஸ்ரீயின் பெருந்தன்மை அவரைப் பெருமைப் பட வைத்தது என்றால், அவர்களின் வசதியான வாழ்க்கைக்குத் திவ்யா எந்த அளவிற்கு ஏற்றவள் என்பது அச்சப்பட வைத்தது.....

வெளியே மலைத்து நின்றுக் கொண்டிருந்தவர்களை உள்ளே அழைத்து வந்த ஸ்ரீயும் பாலாவும், அவர்களை ஹாலில் இருந்த அந்தப் பெரிய அழகான ஸோஃபாவில் அமரச் செய்ய, கலாவோ ஸோஃபாவின் நுனியில் அமர, அவள் அருகே வந்தமர்ந்த ஸ்ரீ,

"கலா இப்போ நீ எனக்குச் சம்பந்தியா வரல.... என்னோட உயிர் தோழியா வந்திருக்க..... உன் மகள் என்னோட மகள்.... அப்புறம் எதுக்குடி இவ்வளவு தயக்கம்..... ஃப்ரீயா இரு..... நீயே இப்படி இருந்தா அப்புறம் சிவா அண்ணனும், மத்தவங்களும் எப்படி இருப்பாங்க?" என்று கூறியவர் உள்ளே திரும்பி,

"திவ்யா, எல்லோருக்கும் காபி கொண்டு வாம்மா" என்றார்.....

பின் வந்திருந்த அனைவருக்கும் தன் அருகில் நின்று கொண்டிருந்த அருணையும், மஹாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார்...

"இவன் தான் என்னோட இரண்டாவது மகன்..... இவன் பிறக்கிற சமயம் தான் நாங்க நார்த் ஸைட் போனது..... அப்புறம் சின்னவ மஹா பிறக்கும் சமயம் சென்னை வந்திட்டோம்.... இதுக்கிடையில் தான் நமக்குள்ள தொடர்பு விட்டுப் போச்சு..... அருண் கூடிய சீக்கிரம் காலேஜ் முடிக்கப் போறான்.... அதுக்குள்ள அவன் அர்ஜூனுக்கு அவன் பிஸினஸ்லேயும் உதவி செய்றான்..... மஹாவும் காலேஜ் போறா" என்றார் ஒரு அன்னையாகத் தன் பிள்ளைகளைப் பற்றிய பெருமிதத்தோடு.....

ஸ்ரீ அருணை அறிமுகப்படுத்தும் பொழுது அவன் கரத்தை பற்றிக் குலுக்கிய வினோத், மஹாவை அறிமுகப்படுத்தும் பொழுது அவளை நோக்கித் திரும்ப, அவளும் எதேச்சையாக அவனைப் பார்த்தவள் இயற்கையிலேயே அவன் கண்களில் தெரியும் குறும்பை கண்டவளின் மனதிற்குள் ஏதோ மொட்டு விரிந்து அரும்பச் செய்தது...

அவனைக் கண்ட அந்த விநாடியே அவன் விழிகளுடன் தன் விழிகளையும் உறவாடிக் கலக்கவிட்டவளின் விழிகளில் பிரதிபலித்த உணர்வுகளைக் கண்டவனின் மனமும் சந்தோஷத்திலும் அதே சமயம் சஞ்சலத்திலும் விழுந்து அவஸ்தைப் பட்டது...

வினோத்திற்கு ஸிட்டி பெண்கள் என்றாலே ஒரு அலர்ஜி..... அவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வித திமிர்த் தனத்தோடே இருப்பார்கள்... புடவை பக்கம் போகவே மாட்டார்கள்... அனைவருமே நவ நாகரிக மங்கைகள் தான் என்று எண்ணம்.....

அதனாலேயே தன்னுடைய கல்லூரியில் ஸிட்டியில் இருந்து மாற்றலாகி வந்திருக்கும் பெண்களிடம் அவன் அளவாகவே பழகுவான்.

மாநிறம் என்றாலும் தெளிந்த களையான முகம், ஆறு அடிக்கு மேல் வளர்ந்திருக்கும் அவன் உயரம், வசீகரிக்கும் சிரிப்பு, துறுதுறு கண்கள் என்று அவன் கல்லூரியில் பெண்களைக் கவர்ந்த போதும் அவர்களின் பின் திரும்பியும் பார்க்காமல் தன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துபவன்....

பொருளாதாரத்தில் மிகுந்த சிரமத்தில் இருக்கும் தன் பெற்றோரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே தன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்று பெண்களின் பக்கமும், மது, புகை என்று எந்தக் கெட்ட பழக்கங்களின் பக்கமும் திரும்பியும் பார்க்காதவன்.....

ஆனால் மஹாவை ஸ்ரீ அறிமுகப்படுத்திய பொழுது அவளைத் திரும்பி பார்த்தவனுக்கு அந்த விநாடி ஏனோ மனதில் ஒரு இன்பம் ஊடுருவி சென்றது போல் இருந்தது...

சிவந்த நிறத்தில் வெண்மதி போன்ற முகத்துடனும் தேவதைப் போல் இதயத்தைக் கலங்க வைக்கும் எழிலுடனும் மயக்கம் தரும் விழிகளுடனும் தன் முன் நின்று வசீகரிக்கும் அழகில் தன்னை அறியாமல் சிக்கிக் கொண்டவனின் பார்வையில் தெரிந்த குறும்புத்தனத்தைக் கண்டவளுக்கு நாணம் வந்தது....

அவளின் வெட்கமும் இளமுறுவலுடன் தோன்றிய இதழின் அழகும் அவனைத் தடுமாறச் செய்ய, அலை மோதிய உள்ளத்துடன் அவனின் விழிகள் அவளைத் தன்னுள்ளே மூழ்கடித்துக் கொள்ளும் அளவிற்குப் பார்க்க, அவளை அள்ளிப் பருக துடிக்கக் காத்திருப்பது போல் பார்த்த அவன் பார்வை அவளை நெளிய வைத்தது...

அவனின் ஆழ்ந்த, அதே சமயம் துறுதுறு பார்வையைச் சந்திக்க முடியாமல் அவள் சட்டென்று தலை குனிந்தது வேறு அவனின் வாலிப வயதிற்குத் தூபம் போட்டது போல் இருந்தது...

மனதின் ஒரு மூலையில் ஒரு வேளை இவள் நமக்கானவளோ என்று கூடத் தோன்றியது.....

நல்ல வேளை இவர்களின் பார்வை பறிமாற்றத்தை அங்கு இருந்தவர்கள் ஒருவரும் கவனிக்கவில்லை...

ஏற்கனவே ஒரு திருமணத்தை முடித்துவிட்டு படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்... இதில் இவர்கள் வேறா..

தொடர்ந்த கலா...

"ஸ்ரீ, இவன் என்னோட பையன் வினோத்.... கல்யாணத்தில் பார்த்திருப்ப, 24 வயசாகுது... எம் ஸி எ படிக்கிறான்... உனக்குத் தெரியுமே, நம்ம ஊர்ல நல்லசிவம் தாத்தா இருந்தார்ல... அவங்க பையன் தான் இவன் காலேஜ் படிப்புக்குப் பொறுப்பெடுத்திருக்கார்..... இவன் ப்ளஸ் டூவில ஸ்கூலிலேயே முதல் மதிப்பெண் எடுத்ததால அவர் தான் இவன காலேஜ் சேர்த்துவிட்டு இப்போ எல்லாத்தையும் பார்த்துக்கிறார்..... திவ்யாவும் நல்லா படிப்பா... ஆனால் அவளை எங்களால காலேஜ் அனுப்ப முடியல..... ப்ளஸ் டூவோட படிப்ப நிறுத்திட்டோம்.... பதினெட்டு வயதிலேயே அவளுக்கு வரன்கள் வர ஆரம்பிச்சுடுச்சு... இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்னு இருந்தோம், ஆனால் அந்தப் பையன் வந்தவுடன் என்னமோ கல்யாணத்திற்குச் சம்மதிச்சுட்டோம்....."

என்றவர் சிறிது வருத்தத்துடனே...

"திவ்யா கூடப் பத்தொன்பது வயதிலேயே கல்யாணமா அம்மான்னு கேட்டா? ஆனால் வயசுப் பொண்ண எத்தனை நாள் வீட்டுல வச்சிக்கிறதுன்னு தான் கல்யாணத்திற்குச் சரின்னோம்..." எனவும்,

அப்பொழுது தான் திவ்யாவுக்கு வெறும் பத்தொன்பது வயது என்றும் அதுவும் கல்லூரிக்கு கூட அவள் போனதில்லை என்ற விஷயமே அருணுக்கும் மஹாவிற்கும் தெரிந்தது.

திகைப்புடன் ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.....

"போச்சு, எல்லாம் போச்சு... இது வேறையா? அர்ஜூன் அண்ணனுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்" என்பது போல் இருந்தது அவர்கள் பார்வை.

மெதுவாக அருணை நெருங்கிய மஹா அவன் கரத்தைப் பற்றி இழுக்க, குனிந்தவனிடம்..

"அர்ஜூன் அண்ணாவோட டேஸ்டுக்கு எப்படிண்ணா அண்ணி ஒத்து வருவாங்க? அவரோட ஸ்டேட்டஸ்க்கு அவர் எப்படிப் பொண்ணு எதிர்ப்பார்த்து இருந்திருப்பாரு.... ஆனால் இப்போ நடக்கிறது என்ன? இது எங்க போய் முடியப் போகுதோ தெரியலை" என்று கிசுகிசுத்தவள் தொடர்ந்து...

"ஆனால் எனக்கு என்னவோ திவ்யா அண்ணியை ரொம்பப் பிடிச்சிருக்கு.....வீட்டிற்கு வந்தவுடனே சமையல் செய்யும் பொறுப்பை எடுத்துக்கிட்டாங்க... காலையில் சீக்கிரம் எழுந்து வாசலில் கோலம் போடறது, பூஜை அறையில் இருந்து வர ஊதுபத்தி, சாம்பிராணி வாசம் வீடு முழுவதும் பரவி வீட்டையே ஒரு கோயில் மாதிரி மாற்றியதுன்னு ஒரே நாளில் ஐ ஃபெல் இன் லவ் வித் ஹர் [I fell in love with her]" என்றாள் முக மலர்ச்சியுடன்...

அவள் முகம் நோக்கி மேலும் குனிந்த அருண்....

"இது எல்லாத்தையும் விட அர்ஜூன் அண்ணா காலையில் அவங்க காலடியில் சாப்பாடு தட்டை விசிறி அடிக்க, எதுவுமே பேசாமல் அதைச் சுத்தம் பண்ணியது எனக்கு ரொம்பப் பிடிச்சுச்சு மஹா... எவ்வளவு பொறுமை இல்ல? நிச்சயம் ஸிட்டி பெண்களிடம் இவ்வளவு பொறுமை இருக்கிறதா இப்பொழுதுன்னு தெரியலை" எனவும்

"நிச்சயம் எனக்கு இல்லை" என்று முடித்தாள் மஹா...

ஒரே நாளில் திவ்யா எல்லோர் மனதிலும், வீட்டில் வேலை செய்பவர்கள் உட்பட இடம் பிடித்துவிட்டாள்....

ஆனால் தன் மணாளனின் மனதில் இடம் பிடிப்பது எப்பொழுதோ?????

கலாவிற்கு வீட்டை சுற்றிக் காண்பித்த ஸ்ரீ கடைசியில் அர்ஜூனின் அறைக்கு வர, கலா அவனுடைய அறையைப் பார்த்தவர் அசந்துவிட்டார்.

"இங்குத் தான் நம் மகள் இருக்கப் போகிறாளா? எவ்வளவு பெரிசா அழகாக இருக்கு.... திவ்யா ரொம்பக் கொடுத்துவச்சவ தான்... அம்மா தாயே! என் மகளுக்குத் திருஷ்டி எதுவும் பட்டுடக்கூடாது தாயி... அவள் அவ புருஷனோட சந்தோஷமா இருக்கனும் அம்மா" என்று மனதார வேண்டிக் கொண்டார்.

அது திவ்யாவின் மனதை எட்டியதோ என்னவோ தன் அன்னையைத் திரும்பி பார்த்தவள் மனதுக்குள்,

"ஐயோ! அம்மா, நீங்க ரொம்பக் கற்பனையெல்லாம் பண்ணாதீங்க... நானே இப்போ தான் அவரோட ரூம பார்க்கிறேன்..... அதுவும் இப்போ நாம் வெளிய தான் நின்னு பார்க்கிறோம்... இன்னும் உள்ளுக்குள் கூடப் போகலை... இதுக்கப்புறம் எப்போ இந்த அறையைப் பார்ப்பேன்னே எனக்குத் தெரியலை" என்று குமைய, கலா தன் மகளின் அருகில் வந்தவர்,

"திவ்யாம்மா, நீ நேத்து மாப்பிள்ளையோட இந்த அறையில தான் படுத்திருந்தியா?" என்று மெதுவாக அவள் காதிற்கருகில் வந்து கேட்க, திவ்யாவிற்குத் தன் அன்னையுடைய வெள்ளை மனதை நினைத்துப் பாவமாக இருந்ததது.....

"அம்மா நீங்க கொஞ்சம் கீழ வரீங்களா? நான் உங்க கூடப் பேசனும்" எனவும், கலாவும் ஸ்ரீயிடம் சொல்லிவிட்டு திவ்யாவின் பின் சென்றார்.

திவ்யாவும், கலாவும் மஹாவின் அறைக்குள் நுழைய ஸ்ரீக்கோ பக்கென்றிருந்தது.....

தன் மகனுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை என்பதையோ, அல்லது காலையில் நடந்ததையோ திவ்யா சொன்னால் கலாவின் மனது என்ன பாடுபடும் என்று யோசித்தவர் அவர்கள் வருகையே எதிர்பார்த்திருக்க, சிறிது நேரத்திலேயே கலா புன்னகை முகத்தோடு வெளியே வந்தார்.....

ஸ்ரீ அருகில் வந்த கலா,

"ஸ்ரீ, நீ ஒன்னும் கவலைப் படாதடி... திவ்யா என்னை மாதிரி ரொம்பப் பொறுமைசாலி... என் மகன் தான் அவங்க அப்பா மாதிரி கோபக்காரன்..... திவ்யா எல்லாத்தையும் சமாளிச்சுக்குவா... ஆனால் அவ ஏதாவது தப்பு பண்ணினா அவ கிட்ட எடுத்துச் சொன்னால் புரிஞ்சுப்பா... இதை உன் கிட்ட நான் சொல்ல வேண்டியதே இல்லை.... எனக்குத் தெரியும் நீ எப்படி அவளைப் பார்த்துகுவன்னு... ஆனால் ஒரு அம்மாவா இத சொல்றதும் என்னோட கடமையில்லையா?" என்றார்.....

ஸ்ரீயோ நன்றியோடு திவ்யாவைப் பார்க்க, அவள் விழிகளில் ஏக்கத்துடன் தன் கணவனின் அறையையே பார்த்திருக்க,

"அப்பா முருகா, சீக்கிரம் சிறுசுகள் இரண்டையும் சேர்த்து வைப்பா... நான் நடந்தே உன் கோயிலுக்கு வருகிறேன்" என்று மனதிற்குள் பிராத்தனை செய்து கொண்டார்.


பின் அனைவரும் உணவு அருந்த அமர, ஸ்ரீயிடம் வந்த திவ்யா தன் அன்னைக்கோ மற்றவர்களுக்கோ கேட்காத வண்ணம் மெல்லிய குரலில்,

"அத்தை, எப்போ அவர் கையால நான் தாலிய வாங்கிட்டோனோ அப்பவே இது என் குடும்பம்..... இங்க என்னால சந்தோஷம் மட்டும் தான் வரனும்... என்னால எந்தக் கஷ்டமும் வராது, வரவும் விடமாட்டேன்..... நீங்க, நானும் அம்மாவும் தனிய ரூமுக்குள்ளே போகிறத கலக்கத்தோட பார்த்திட்டு இருந்தப்பவே எனக்குப் புரிஞ்சுடுச்சு... நிச்சயம் இங்க நடக்கிற எதையும் அம்மாவிடம் நான் சொல்லலை..... அவங்க கிட்டதட்ட ஒரு சின்னக் குழந்தை மாதிரி.... என்னமோ இது ஏற்கனவே பெரியவங்க பாத்து வச்ச கல்யாணம் மாதிரி என்னென்னெமோ நினைச்சுக்கிட்டாங்க..... அவங்ககிட்ட உங்க மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் டைம் குடுங்க.... அதுக்குள்ள என்னென்னெமோ கற்பனை பண்ணாதீங்கன்னு சொன்னேன்.... அவங்களும் புரிஞ்சிக்கிட்டாங்க" என்றாள்.

இவளே ஒரு சிறு குழந்தை... இவளுக்கு இவள் தாய் சிறு குழந்தையாகத் தெரியும் அந்த அப்பழுக்கற்ற மனதை என்னவென்று சொல்வது என்று பிரமித்துப் போனார் ஸ்ரீ.

உணவு உண்டு முடிந்ததும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த கலா, நேரே விஷயதுக்கு வந்தார்.

"ஸ்ரீ, திவ்யாவிற்குன்னு நாங்க சீர் வாங்கி வச்சிருக்கோம்.. நிச்சயம் உங்க வசதிக்கு அது ஒன்னுமே இல்ல... ஆனால் கொண்டு வந்தத கொடுத்து தான் ஆகனும்..... எல்லாமே வெளியிலே வண்டியில இருக்கு... நாங்களே இறக்கி வச்சிடுறோம்... எங்க வைக்கனும்னு மட்டும் சொல்லுப்பா" என்றார் தயக்கத்துடன்...

"என்னடி கலா, என்னமோ வெளி ஆளு மாதிரி பேசுற... அவ எங்க வீட்டு பொண்ணுடி... ஆனால் நிச்சயம் நான் சொல்ற படி நீ கேட்கப் போறதில்ல... அதனால உன் விருப்பப்படியே செய்" என்றவர்,

மஹாவை அழைத்து "மஹா அவங்களுக்கு அந்தக் கார்னர் ரூம காட்டும்மா... அவங்க அங்க திங்ஸ வைக்கட்டும்" என்றார்.....

கலா வினோத்தை பார்த்து, "வினோத் நீ போய் எல்லாத்தையும் எடுத்து வைப்பா" எனவும்,

மஹா அவன் பக்கம் திரும்ப, அது வரை எல்லையில்லா பிரமிப்புடன் அவளையே விழுங்கி விடுவது போல் கூர்ந்து நோக்கிக் கொண்டு இருந்தவன் அவள் சட்டென்று தன் முகம் நோக்கி திரும்பவும் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்...

பெண்களுக்கே உரிய இயற்கையான எச்சரிக்கை உணர்வு அவளுக்கு அவன் தன்னையே பார்த்திருப்பதை உணர்த்தி இருந்தாலும் அவன் பார்வையின் பொருளையும் புரிந்து இருந்தாலும், அவன் இப்பொழுது தன்னைக் கண்டவுடன் மறு பக்கம் திரும்பியதும் தன்னை அறியாமல் மெல்ல களுக்கெனச் சிரித்தாள்...

அதுவரை அவளையே விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் தன்னைப் பார்ப்பது தெரிந்ததும் சட்டென்று தன் விழிகளின் போக்கை மாற்றியவன் அவள் சிரிப்பது தெரிந்ததும் மீண்டும் ஒரு முறை அவளை ஊடுருவும் பார்வை பார்த்துவிட்டு "சரிம்மா" என்றவாறே வெளியே சென்றான்.....

அவனின் ஆழ்ந்த பார்வையில் திகைத்தவள் "இன்னைக்குத் தான் முதல் முறை என்ன பார்க்கிறாங்க... அதுக்குள்ள இப்படிப் பார்த்தா" என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.

ஆனால் என்னவோ அவளுக்கும் அவனைக் கண்டவுடனேயே பிடித்துத் தான் இருந்தது....

அவன் திவ்யாவைப் போல அமைதியானவனாகத் தெரியவில்லை... ஆனால் அவளைப் போல் நல்ல களையான முகம்.... பார்த்தவுடன் பிடித்துவிடும் இரகத்தில் சேர்ந்த அழகனே அவன்...

வினோத்துடன் சேர்ந்து அருணும் மற்றவர்களும் சீர் சாமான்களை இறக்க துவங்க, சிறிதே இருந்தாலும் கலா மகளுக்கு நல்லதாகவே பாத்திரங்களும், மற்றும் "அந்த மாப்பிள்ளை" வீட்டில் கேட்டிருந்தது போலப் பொருட்களும் வாங்கி இருந்தார்.

அனைத்தையும் எடுத்து வைத்த பிறகு கலா..

"சரி ஸ்ரீ, நாங்க கெளம்புகிறோம்.... மற்ற விஷயங்களைப் பிறகு பேசிக் கொள்ளலாம்" என்றார்...

அவருக்குத் திவ்யா தன்னிடம் அறையில் சொன்னது நியாபகத்தில் வந்தது.

"அம்மா, என்ன தான் அத்தை உங்க ஃப்ரெண்டா இருந்தாலும் இப்போ அவங்க உங்களோட சம்பந்தி..... அது மட்டும் இல்ல, இவங்க குடும்பத்த பார்க்கும் பொழுது ரொம்ப ரொம்ப வசதியான குடும்பமா தெரியுதும்மா..." என்றவள் தலை தாழ்த்தி தயங்கியவாறே...

"அதுவும் அவர பார்த்தாலேயே எனக்கு உள்ளுக்குள்ள எல்லாம் நடுங்குது... அவரு ரொம்பப் பெரிய ஆளு போல... நிறையப் படிச்சிருக்காரு, ரொம்பப் பெரிய பிஸினஸ் எல்லாம் பண்றாருப் போலம்மா.... நிச்சயம் அவருக்குப் பெரிய இடத்துல இருந்து, அவருடைய அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி தான் பொண்ணு பார்த்திருப்பாங்க.... இப்போ அத்தை சொன்னதால அந்த நிமிஷத்தில என்ன பண்றதுன்னு தெரியாம வேற வழியில்லாம அவர் என்னோட கழுத்துல தாலி கட்டிட்டாரு.... தாலி கட்டிட்டதுனால அவர உடனேயே என்னைய ஏத்துக்கங்கன்னு சொன்னா எப்படிம்மா? அவருக்கு என்ன பிடிக்குமா, இல்லை பிடிக்காதான்னு தெரியலை.... அதனால நீங்க இப்பவே ரொம்ப எல்லாம் எதிர்பார்க்காதீங்க..... ப்லீஸ்மா புரிஞ்சிக்கங்கமா" என்ற மகளைப் பெருமையோடு பார்த்தார் கலா...

இந்தச் சின்ன வயசிலேயே எவ்வளவு பக்குவம் என்று நினைத்தவர் மறு வீட்டு அழைப்பு, தாலி மாற்றிக் கட்டுவது என்று எதனையும் பேசாமல் கிளம்பினார்...

பின் அந்தக் காலத்திலேயே ஸ்ரீயின் அண்ணன் சுந்தரேசன் தன்னை விரும்புவது தெரிந்தும், அவனின் வசதி தெரிந்தும் தங்கள் நட்பு கெட்டு போய் விடக் கூடாது என்று தன் தோழியிடம் தெரியப்படுத்தி அதனை முளையிலேயே கிள்ளி எறிந்தவராயிற்றே...

அவருக்குப் பிறந்த மகள் எப்படி இருப்பாள்??

ஸ்ரீக்கும் கலாவை இன்னும் கொஞ்ச நாள் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை தான்...

ஆனால் தன் மகனின் கோபமும், அவன் திவ்யாவை புறக்கணிப்பதும் தெரிந்தால் கலாவையும் அவள் குடும்பத்தையும் அது பாதிக்கும் என்று தான் ஒன்றும் பேசாமல் அவரை அனுப்பி வைத்தார்.

வீட்டில் இருந்து விடைப் பெற்றுத் தாங்கள் வந்த காருக்கு அருகில் சென்ற வினோ தன் தங்கையைப் பார்த்து தலையாட்டியவன், எதேச்சையாகப் பார்ப்பது போல் மஹாவையும் பார்த்து வைக்க, படப்படப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் இதழ்களில் தவழ்ந்த புன்னகையும், விழிகள் அள்ளி வீசிய அழைப்பும் அவனைத் திணற அடித்தது...

நிலை குலைந்த தன்னைச் சீர்படுத்திக் கொள்ள அவன் முனையவும் அதில் வெற்றி பெற முடியாமல் அவன் தடுமாறவும், அவனின் தடுமாற்றம் புரிந்தவள் தலை தாழ்த்திக் கொண்டாள்...

கண்டதும் காதலா?.....[லவ் அட் ஃப்ர்ஸ்ட் ஸைட்] [Love at first sight] !!!!



அன்று இரவு மற்ற அனைவரும் உணவு அருந்தி முடிந்தவுடன், திவ்யா எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் தான் மட்டும் உண்ணவில்லை.

இதைக் கவனித்த ஸ்ரீ அவளின் எண்ணம் புரிந்தவராக அவள் அருகில் வந்தவர்,

"திவ்யா, அர்ஜுன் எப்பொழுது வருவான் எப்பொழுது வெளியில் போவான்னு சொல்ல முடியாதுடா... அவன் பிஸ்னஸஸ் அப்படி... அதனால நைட்டு அவன எதிர்பார்க்காதடா... நீ சாப்பிடு.... அவன் பத்து மணிக்கு மேல வந்தால் கண்டிப்பா வெளியில சாப்பிட்டுட்டு தான் வருவான்..... நான் சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருந்தாலே அவனுக்கு ரொம்பக் கோபம் வரும்.... அதனால நீ சாப்பிடு" என்றார்.

அவருக்கும் மனதிற்குக் கஷ்டமாகத் தான் இருந்தது...

திருமணமான நாளில் இருந்து ஸ்ரீ பாலாவை விட்டு காலையிலும், இரவிலும் தனித்து உணவு அருந்தியதில்லை.....

எத்தனை நேரம் ஆனாலும் அவர் தன் கணவனிற்காகக் காத்திருந்து அவர் வந்தவுடன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள்...

எத்தனையோ முறை பாலாவும் சொல்லி பார்த்தும் ஸ்ரீ கேட்டதில்லை...

அவர் பிரசவத்திற்குத் தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற போது பாலாவிற்குத் தன் மனைவி இல்லாமல் உணவு இறங்கவே இல்லை.....

அதை இப்பொழுது நினைத்துப் பார்த்த ஸ்ரீக்கு திவ்யாவின் மனது நன்கு புரிந்தது...

ஸ்ரீ சொன்னதினால் ஏதோ என்று ஒரு சப்பாத்தியை சிரமப்பட்டுக் கொறித்துவிட்டு ஹாலுக்கு வந்த திவ்யா...

"அத்தை நான் அவர் வந்தவுடன் படுக்கப் போகிறேன்" என்றாள்.....

"ஐயோ! இந்தப் பெண்ணோட எந்த ஆசையும் நிறைவேறாதே இப்போதைக்கு" என்று நினைத்தவர் இதனையும் மறுக்க விருப்பமில்லாமல்,

"சரிடா, அவன் எப்போ வருவான்னு தெரியல... அதனால கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு..... அவன் வர லேட் ஆனால் நீ போய்ப் படு" என்றவர், மன பாரத்துடன் அவர் ரூமிற்குச் சொன்றார்.

அங்கு அவரை எதிர்பார்த்திருந்த பாலா ஸ்ரீயின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைப் பார்த்து,

"என்னம்மா, ரொம்ப டல்லா இருக்க" எனவும்,

கணவனின் தோளில் சாய்ந்தவாறே நடந்ததைச் சொன்னார்...

"பாவங்க ரொம்பச் சின்னப் பொண்ணு... கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகிருக்கு... எனக்குத் தெரியும்... அர்ஜூனுக்கு அவள் மனசுப் புரிய கண்டிப்பா கொஞ்ச நாள் எடுக்கும்.... ஆனால் அதுக்குள்ள இந்தப் பொண்ணு மனசு எவ்வளவு காயப்படுமோன்னு பயமா இருக்கு... என்னமோ மனசு ரொம்ப உறுத்துதுங்க" என்றார்.....

மனைவியின் மனதை நன்கு புரிந்து கொண்ட கணவனாக,

"ஸ்ரீ, நடந்தது எல்லாம் நல்லதுக்குன்னு நீ தான் அடிக்கடி சொல்வ..... இப்போ மட்டும் என்ன. நம்ம இரண்டு பேரையுமே எடுத்துக்க... உன்ன எனக்குக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணினப்ப எனக்கு எவ்வளவு பயம் இருந்ததுன்னு தெரியும்... உங்க அப்பாவப் பார்த்தாலே ஊரே பயப்படும்... திடீர்னு வந்து உன்னைய பொண்ணு பார்க்கலாம் வான்னு எங்க வீட்டுல கூப்பிட்டப்ப இது எப்படி நடக்கும்? அவங்க எவ்வளவு பெரிய இடம்? நமக்கு ஒத்து வருமான்னு நான் கேட்டதுக்கு அவங்க வீட்டுல தான் கூப்பிட்டு அனுப்பினாங்கன்னு நீ பேசாம வான்னு சொன்னவுடனேயே ஏதோ ஒரு தயக்கதுல தான் நான் உங்க வீட்டுக்கே வந்தேன்....."

"ஆரம்பத்துல நான் கூட உன் கிட்ட அந்த அளவுக்குப் பழகல... நீ தான் என் கூட எவ்வளவோ இறங்கி வந்து உன்னோட மனச புரிய வச்ச... அதற்குப் பிறகு தான் நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டான்டிங் வந்தது.... இப்போ எப்படி இருக்கோம் பாரு? அதனால எல்லாத்துக்கும் ஒரு டைம் இருக்கு... நாம தான் பொறுமையா இருக்கனும்..... நிச்சயம் திவ்யாவுக்கும் அந்தப் பொறுமை இருக்குன்னு பார்த்தாலே தெரியுது... அதனால மிச்சத்தை எல்லாம் அந்தக் கடவுளோட பாதத்தில போட்டுட்டு தூங்கும்மா" என்றார்.

கணவனின் ஆறுதலான வார்த்தைகளோ, இல்லை மனதின் அசதியோ, தூக்கமும் அவரைத் தழுவியது.

மறுநாள் அலுவலகத்திற்கு வந்த அர்ஜூன் யாருக்கும் விஷ் பண்ணாமலும் யாரையும் பார்க்காமலும் வெகு வேகமாகத் தன் அறைக்குச் செல்ல, இது ஒன்றும் அவன் குணத்திற்கு மாறானது அல்ல என்றாலும் அவனின் இன்றைய வேகம் அனைவருக்கும் கொஞ்சம் அச்சத்தையே கொடுத்தது.....

அவன் பின்னையே வந்த கதிர் கதவைத் தட்ட, அவனை உள்ளே வர பணித்த அர்ஜூன் அவன் வந்தவுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, அலுவலக விஷயமாகப் பேச வந்தவன் அர்ஜுனின் கோப முகத்தைப் பார்த்தவுடன் எல்லாம் மறந்து போக ஒன்றும் பேசாமல் இருந்தான்.....

"வாட்ஸ் அப் கதிர்? [what's up Kathir] முக்கியமான விஷயமா?"

"இல்ல சார், நீங்க நேற்று ஃபோனில் ஏதோ லாயரைப் பார்க்க சொன்னீங்க, எதுவும் பிரச்சனையா?"

சிறிது நேரம் மௌனமாக இருந்த அர்ஜூன் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டு கதிரைப் பார்த்தான்...

"கதிர், எத்தனையோ ப்ராப்ளம்ஸ என்னோட லைஃப்ல ஃபேஸ் பண்ணிருக்கேன்..... நான் ஜஸ்ட் ஒரே ஒரு பிஸினஸ் மட்டும் பண்ணலைன்னும் உங்களுக்கும் தெரியும்... நீங்க என்னோட ஒரு பிஸினஸ்க்கு மட்டும் பெர்ஸ்னல் அசிஸ்டண்ட் இல்லைன்னும் உங்களுக்குத் தெரியும்... அதனால உங்ககிட்ட மனம் விட்டு பேச எனக்கு நிச்சயம் எந்தத் தயக்கமும் இல்லை... எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு நிறையப் பேர் இருந்தாலும் நான் என்னோட பெர்ஸ்னல் விஷயங்களை யார்கிட்டேயும் ஷேர் பண்றதில்லை..... ஆனால் உங்க கிட்ட மட்டும் ஐ ஆல்வேஸ் ஃபீல் க்ளோஸ்... மே பி பிக்காஸ் ஐ ட்ர்ஸ்ட் யூ அ லாட் [i always feel close... May be because i trust you a lot]" என்றவன் கதிரின் முகத்தை உற்று நோக்கி...

"அதனால உங்ககிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்றது ஒன்னும் தப்பு இல்லைன்னு நினைக்கிறேன்" என்றவன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி ஒரு பெருமூச்சு விட்டு,

"இதுல என்னால ஒரு முடிவ உடனே எடுக்க முடியும்னு தோனலை... அவ எங்க அம்மாவோட வெரி க்லோஸ் ஃப்ரெண்டோட பொண்ணு.... இப்போ நான் என்ன முடிவ எடுத்தாலும் அது நிச்சயம் பெரிய பிரச்சனையாக வெடிக்கும்... எல்லோருடைய மனசையும் காயப்படுத்தும்.... பார்க்கத் தான் என்னோட மாம் ரொம்ப ஸாஃப்ட், ஆனால் அவங்க ஒரு முடிவ எடுத்துட்டா யாராலையும் அத மாத்த முடியாது"

"அதனால இப்போ எனக்கு என்ன பண்றதுன்னு புரியலை கதிர்... ரொம்பக் குழப்பமா இருக்கு... ஆனால் அதுக்காக அந்தப் பொண்ணு தான் என்னோட வைஃப்ன்னு என்னால ஏத்துக்கவும் முடியாது.... நிச்சயம் ஐ கெனாட் அக்ஸப்ட் ஹெர் அஸ் மை வைஃப்.... ஐ கெனாட் ஈவன் திங்க் அபௌ இட் [i cannot accept her as my wife. I cannot even think about it ] " என்றவனின் முகம் இது வரைக்கும் கதிர் பார்க்காத முகமாக இருந்தது.

நேற்று அர்ஜூன் அவனிடம் ஒரு டிவோர்ஸ் லாயர் வேண்டும் என்ற போது அது நிச்சயம் வேறு யாருக்காகத் தான் இருக்கும் என்று நினைத்திருந்தவன், இன்று அர்ஜூன் அவனுக்குத் திருமணம் முடிந்ததைப் பற்றிக் கூறியதும் அதிர்ந்தான்..

அப்படி என்றால் வக்கீல் இவருக்குத் தானா??

ஆனால் இதனை என்னுடன் பகிர்ந்துக் கொள்கிறாரே... இதைப் பற்றி நான என்ன சொல்வது?

இது திருமண வாழ்க்கையைப் பற்றியது....

அவருடைய தனிப்பட்ட விஷயம்..... எப்படி இதைப் பற்றி அவரிடம் கலந்து ஆலோசிப்பது? என்று தயங்கினான்.

இருந்தும் அவனுக்கு அர்ஜூன் மேல் எப்பொழுதும் ஒரு தனி மரியாதையும் பாசமும் உண்டு....

அதனால் தான் சொல்ல வந்ததைச் சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவன்,

"சார், எனக்கு உங்களோட பெர்சனல் விஷயத்தில தலையிட உரிமையில்லை... எனக்கு அது நல்லா தெரியும்.... பட் இஃப் யூ வான்ட் டு டாக், ஐ ஆம் ஹியர்...ப்ளீஸ் டோண்ட் ஹெஸிட்டேட் சர்...[but if you want to talk, i am here. Please dont hestitate sir]" என்றான்."

ஒவ்வொரு பிரச்சனையிலும் அர்ஜூன் முடிவெடுக்கும் விதம் மிகவும் தெளிவாகவும் கம்பீரமாகவும், புத்திசாலித் தனமாகவும், நிறையச் சந்தர்பங்களில் அச்சமாகவும் இருக்கும்.

அரசியல்வாதிகள் ஈடுபடும் பொழுது கதிரே அர்ஜுனை பார்த்து...

"சார் கொஞ்சம் யோசிச்சு செய்ங்க.... அவங்களால எந்த ஸைடிலிருந்து பிரச்சனை வரும்னு தெரியாது... அதனால கொஞ்சம் பார்த்து செய்ங்க" எனும் பொழுதெல்லாம்,

"கதிர், பிரச்சனை என்று வரும் பொழுது அது அரசியல்வாதிங்களால வருதா? இல்லை வொர்கர்ஸால வருதா? அல்லது நம்மோட காம்பட்டீட்டர்ஸ்னால வருதான்னு பார்க்கிறதை விட அத எப்படிச் சால்வ் பண்றதுன்னு திங்க் பண்ணுறதுக்குத் தான் நாம டைம் ஸ்பென்ட் பண்ணனும்..... சில சமயத்தில அரசியல்வாதிங்களோட பிரச்சனைய கூடச் சமாளிச்சரலாம்... ஆனால் இவங்களால நம்மளை ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்சிட்டு இருக்குற சாதாரண ஒரு தொழிலாளியால கூடச் சமாளிக்க முடியாத பிரச்சனை வரும்... அதனால் பிரச்சனையோட அளவு தான் முக்கியம்.. அதனால நமக்கு வர நஷ்டம் தான் முக்கியம்... அதுல தான் நம்ம கவனம் இருக்கனுமே தவிர வேற எதிலயும் கவனம் சிதறக் கூடாது" என்று அதிரடியாகக் கூறுவான்.

அவ்வாறு எந்தப் பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவன் இன்று குழம்பி நின்றான்...

இது அவனுடைய மண வாழ்க்கை..... நிச்சயம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது.... அதனால் தான் இந்தத் தடுமாற்றம்..... இதனை உணர்ந்த கதிர்,

"சார், இப்படிச் செஞ்சா எப்படி? பேசாம இத நீங்க கொஞ்சம் ஆறப் போடுங்க..... கூடிய சீக்கிரம் நல்லா யோசிச்சு இதுக்கு ஒரு முடிவ கொண்டு வரலாம்... ஏன்னா இதுல ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சனையும் அடங்கி இருக்கு" எனவும்,

சட்டென்று நிமிர்ந்த அர்ஜூன்,

"கதிர், ஐ டோண்ட் ஈவன் ஹேவ் டைம் டு திங் அபௌட் மௌ லைஃப்... [I don't even have time to think about my life] இதில் இன்னொரு பெண்ணோட வாழ்க்கையைப் பற்றி நினைப்பதா? ஒரு வேளை நான் அவ கழுதுல தாலி கட்டலைன்னா அவ இந்நேரம் அவ வீட்டுல தான இருந்திருப்பா.... இப்போ மட்டும் என்ன... அதனால அவ திரும்ப அவங்க ஊருக்கு போயே ஆகனும்" என்றான்.

அவனின் பதிலில் அதிர்ந்த கதிர் அவனை நிமிர்ந்து பார்க்க அர்ஜூனின் முகத்தில் சிறிதும் வருத்தமோ இல்லை குழப்பமோ தெரியவில்லை.... அவனைப் பொறுத்தவரை அவனுக்கு அவனுடைய தொழிற்கள் தான் முக்கியம்...

பெற்றோரோ கூடப் பிறந்தவர்களோ அதற்குப் பிறகு தான்... அப்படி இருப்பவனுக்கு யாரென்றே அறியாத ஒரு பெண்ணைப் பற்றி என்ன கவலை?????

தொடரும்..
 

JLine

Moderator
Staff member


அத்தியாயம் - 6


அர்ஜூனைப் போல் கதிரால் நினைக்க முடியவில்லை...

கிராமத்தில் பிறந்து நன்றாகப் படித்ததினால் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து, தன்னுடைய திறமையினால் மட்டுமே முன்னேறி இன்று "தி க்ரேட்" அர்ஜூனுக்கே பி ஏவாக வேலை செய்பவன்.....

அர்ஜூனைப் போல் மற்றவர்களின் வாழ்க்கையை அதுவும் பெண்களின் வாழ்க்கையை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள அவனால் முடியாது...

இன்னும் சொல்லப் போனால் அர்ஜூனைப் போன்ற கோடீஸ்வரர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரண விஷயமாக இருக்கலாம்.....

ஆனால் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அர்ஜூனின் மனைவி போல் பெண்களுக்கு இந்த மாதிரியான முடிவு அவர்கள் வாழ்க்கையையே சடுதியில் அதல பாதாளத்தில் தள்ளி விடும்.....

அதனால் இரு பக்கமும் நன்கு யோசித்துத் தன் மனதில் தோன்றியதை மறைக்காமல் சொன்னான்...

"சார், நான் அதுக்குச் சொல்லலை.... இப்போ நீங்க எடுக்கிற எந்த முடிவுலயும் கண்டிப்பாக யாரோ ஒருவருக்குப் பாதிப்பு இருக்கும்.... அது உங்களுக்கோ, அல்லது நம்ம ஸ்ரீ மேடத்திற்கோ, அல்லது உங்க மனைவிக்கோ.."

அவன் மனைவி என்று சொன்ன பொழுது அர்ஜூன் அவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்த பார்வையில் தெரிந்த மாற்றத்தை தாங்க முடியாமல் ஒரு வினாடி நேரம் பேச்சை நிறுத்தியவன், முகம் தெரியாத தன் முதலாளியின் மனைவிக்காகத் தன் தயக்கத்தை உதறி தள்ளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்....

"அதனால இப்போ கொஞ்ச நாளைக்கு இத ஆறப் போடலாம்.... நம்ம மும்பை பிராஞ்சில் கொஞ்சம் வேலைகள் இருக்கு.... நானே நேர்ல போய்ப் பார்க்கனும்னு இருந்தேன்.... ஏன் நீங்க அங்க போகக்கூடாது?" என்று சொல்லும் பொழுதே கதிருக்கு கதி கலங்கியது....

ஏதோ ஒரு வேகத்தில் இவனிடம் அறிவுரைக் கேட்டால் இவன் ஊரை விட்டே போகச் சொல்கிறானே என்று தன் MD தன்னுடைய சீட்டை கிழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மனதிற்குள் நினைத்தவன் சற்றே தயங்க மேலே பேசுங்க என்று தலை அசைத்து அனுமதி அளித்தான் அர்ஜூன்...

உள்ளுக்குள் கலங்கி இருந்தவனுக்கு அர்ஜூன் இத்தனை நேரம் பொறுமையாகத் தான் பேசுவதைக் கேட்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது... தொடர்ந்தவன்..

"என்னடா பிரச்சனைக்குப் பயந்து உங்கள ஊர விட்டுப் போகச் சொல்றேன்னு நினைக்காதீங்க சார்..... சில சமயம் பிரச்சனைகளை உடனே சரி பண்ணுறத விட அதைக் கொஞ்ச காலத்திற்கு ஆறப் போடுறது கூட நல்ல முடிவெடுக்க உதவும்... அப்போ யார் மனசையும் புண்படுத்தாம உங்களாலேயும் ஒரு நல்ல முடிவு எடுக்க முடியும்".....

தன்னுடைய முடிவு நிச்சயம் தனக்குச் சாதகமாகத் தான் இருக்க வேண்டும் என்று அடி மனதில் உறுதி எடுத்துக் கொண்ட அர்ஜூனிற்குக் கதிர் சொன்னதும் நல்லதாகவே பட மும்பை செல்ல முடிவெடுத்தவன்.....

"ஓகே கதிர், நீங்க டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க.... இன்னைக்கு ஈவினிங்குள்ள இங்க நான் அட்டெண்ட் பண்ண வேண்டிய மீட்டிங்ஸ அரேஞ் பண்ணுங்க.... நாளைக்குக் காலையில மும்பாய் போகனும்" என்றான்.


நீண்ட நேரம் உறங்காமல் இருந்த திவ்யாவிற்கு நேற்று இரவு உறக்கம் இல்லாதது, இன்று காலையில் இருந்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது என்று அவளையும் அறியாமல் தூக்கம் தழுவ, ஹாலில் இருந்த ஸோஃபாவிலிலேயே படுத்து உறங்கியும் விட்டாள்.....

அலுவலகத்தில் அர்ஜூனிற்கும் வேலைகள் நெட்டி முறிக்க அதுவும் வசதியாகப் போனது அவனுக்கு...

இரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டிற்குத் திரும்பியவன் வேகமாக மாடியில் ஏறும் பொழுது கீழே பார்க்கவும், முன் அறையில் இருக்கும் டிவியில் ஏதோ படம் ஓடிக் கொண்டு இருக்க, கீழே ஸோஃபாவில் அருகில் நின்று இருந்த திவ்யாவை பார்த்தவனுக்குக் கட்டுக்கடங்காத கோபமே வந்தது.....

"இந்த மாம்க்கு யாரை எங்க வைக்கனுமோ அங்க வைக்கத் தெரியாது" என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல, அவன் நடக்கும் பொழுது வந்த அழுத்தமான காலடியிலேயே வாரி சுருட்டிக் கொண்டு எழுந்திருந்த திவ்யா அவன் வார்த்தையில் மிகவும் அடிபட்டுப் போனாள்.....

இருந்தும் தன்னுடைய இயற்கையான பொறுமை குணத்தினால் சில விநாடிகளில் தன்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவள் "சாப்பிட்டீங்களா?" என்று அவள் காதுக்கே கேட்டதோ என்று தெரியாத சன்னமான குரலில் கேட்க,

அவளின் கேள்வியில் சட்டென்று திரும்பியவன் அவளை ஒரு வினாடியே பார்க்க, அந்தக் கூர்மையான பார்வையை எதிர்க்கொள்ளத் தைரியம் இல்லாமல் வெடுக்கெனத் தலையைக் குனிந்தவள் அவன் அவனுடைய அறைக்குப் போய்க் கதவை சாத்தும் வரை தலையை நிமிர்த்தவே இல்லை.....


வார்த்தைகளிலேயே விஷத்தைக் கக்கும் கணவனைக் கண்டவளின் சிந்தனை சிதைந்து மனதை பிளந்தது போல் வலித்தது...

ஆனால அவள் பெருமூச்செறியவுமில்லை, வேறு உணர்ச்சி எதையும் காட்டவுமில்லை...

சித்தம் சிந்திக்கும் சக்தியை அறவே அழித்திருந்தது....

உடல் தளர்ந்து நிதானத்தை இழந்து ஸோஃபாவில் அமர, அவளுக்கே புலப்படாத தன் எதிர்காலத்தை நினைத்து மனம் வலிக்க இதயத்தில் வேதனை விளைந்ததால் பொலபொலவெனக் கண்ணீரை உகுத்தவள் சில நிமிடங்களில் தன் மனதினை திடப்படுத்திக் கண்ணீரை உள்ளே இழுத்தாள்..


"இன்னும் எவ்வளவோ இருக்கு... இப்பொழுதே அழுதுவிட்டால் அப்புறம் மற்றதை எல்லாம் தாங்கிக்கிற சக்தி இருக்காது..... பெண்களுக்கே இந்த அழற சக்தி மட்டும் இல்லைன்னா அவ்வளவு தான்" என்று மனதிற்குள் நினைத்தவள் ஒன்றும் பேசாமல் எழுந்து மஹாவின் அறைக்குச் சென்று வராத தூக்கத்தை வர வழைக்கும் முயற்சியில் தோல்வியையே தழுவியவள் விடியும் முன்னரே எழுந்து குளிக்கச் சென்றாள்.....

இன்று என்னென்ன விவகாரங்கள் வேதனைகள் தனக்காகக் காத்திருக்கிறதோ என்று மனதிற்குள் எண்ணியவாறே குளித்து முடித்தவள் எங்கே நேற்று போல் இன்றும் தன் கணவன் தன்னை இடித்து விடுவானோ என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கீழிறங்கினாள்.

வாயிலில் நீர் தெளித்துக் கோலம் போட்டவள் பூஜை அறைக்குச் சென்று கண்களை மூடி...

"முருகா, எனக்குப் பொறுமையும், எதையும் தாங்கிக்கிற சக்தியையும் தாப்பா" என்று மனதுருக வேண்டியவள், சமையலறையில் தெய்வானையும் அல்லியும் இன்னும் வரவில்லை என்று தெரிந்து தானே காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.....

ஒருவர் பின் ஒருவராக எழுந்து வர அவர்களுக்குக் காபி கலந்து கொடுத்தவள் மனதில் தன் கணவன் கீழே வருவதற்கு முன் மஹாவின் அறைக்குள் சென்று விட வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.....

அவளுடைய பரபரப்பை பார்த்த ஸ்ரீ என்னவென்று கேட்க,

"இல்ல அத்த, அவங்க வரதுக்கு முன்னமே எல்லா வேலையும் முடிக்கனும்னு முடிச்சிட்டேன்.... நான் மேலே போறேன், நீங்க மத்தது எல்லாம் பாத்துக்கிறீங்களா??" என்றாள்.....

ஆழ்ந்து அவளைப் பார்த்தவர்,

"சரிடா, நீ போ நான் பார்த்துக்கிறேன்... ஆனால் இந்த நிலைமை கூடிய சீக்கிரம் மாறும்" என்று கூற, ஒரு சிறு புன்னகையுடன் மாடிப் படிகளில் காலை வைத்தவள் மேலே பார்க்கவும் வெலவெலத்துப் போனாள்..

அங்கு மாடியில் இருந்து அர்ஜூன் வந்து கொண்டிருந்தான்.....

எந்தத் திக்கில் செல்வது என்று தீர்மானிக்க இயலாத நிலையில் விருட்டென்று ஸ்ரீயின் பின் மறைந்த திவ்யாவை பார்த்தும் பார்க்காதது போல் தன் அன்னையின் அருகில் வந்தவன்,

"மாம், பிஸினஸ் விஷயமா இன்னைக்கு நான் மும்பை போறேன்.... வர எவ்வளவு நாள் ஆகும்னு தெரியாது.... ஒரு கப்பிள் ஆஃப் டேஸ் [Couple of days] கழிச்சு ஃபோன் பண்ணி எப்போ திரும்பி வரேன்னு கன்ஃபேர்ம் பன்றேன்" என்றவன் அவர் எதுவும் கூறும் முன்னரே வெளியில் சென்றிருந்தான்.

தன் கணவன் தான் இருக்குமிடத்தில் இருக்க விரும்பவில்லை....

அதனால் தான் இந்த மும்பை பயணமோ என்று உள்ளூர சந்தேகம் வர தன் கணவனைப் பின் தொடர்ந்து செல்லும் ஸ்ரீயின் பின் நீர் தேங்கியிருந்த விழிகளுடன் ஓட்டமும் நடையுமாகச் சென்றவள் அவரை நெருங்கி...

"அத்தை நான் வேண்டுமானால் எங்க வீட்டுக்கு போயிடுறேன்... அவங்கள எங்கயும் போக வேண்டாம்னு சொல்லுங்க" என்றாள்.....

வேகமாகச் சென்று கொண்டு இருந்தவன் காருக்கு அருகில் செல்லும் பொழுது திவ்யாவின் குரல் சன்னமாகக் கேட்க கூர்ந்து கேட்டவன் அவள் ஊருக்குப் போகிறேன் என்று சொன்னது அவன் மனதிற்கு மகிழ்ச்சியே தந்தது.....

ஒரு வேளை அவளே போய் விட்டால் பிரச்சனை எளிதாக முடிந்துவிடுமே என்று எண்ணியவனின் உள்ளுணர்வு எதனையோ உறுத்தவும் திரும்பி பார்க்க, அங்குத் திவ்யா கண்கள் கலங்க அவனையே பார்த்திருக்க,

அவளின் நீர் ததும்பும் கண்களுடன் தன் ஈட்டி போன்ற கண்களைச் சில விநாடிகள் தன்னுணர்வின்றி உறவாடவிட்டவனுக்கு அவள் கலங்கிய விழிகளில் தெரிவது கலவரமா? கலக்கமா? காதலா? ஏக்கமா? எதிர்பார்ப்பா? என்ன என்பது புரியவில்லை...

அவளின் உணர்ச்சிகள் ததும்பி அசைவற்று நிற்கும் தோற்றம் அவனையும் அறியாமல் புகைப்படம் போல் அவனின் ஆழ் மனதில் பதிந்து போனது...

சட்டென்று காரை நோக்கி திரும்பியவன் தன்னிச்சையாய் ஒரு விநாடி தயங்கி நின்று பிறகு ஒன்றும் பேசாமல் தன் காரில் ஏறி அவன் அதனைக் கிளப்பிய வேகத்திலேயே தெரிந்தது அவன் விரைவில் திரும்பி வர மாட்டான் என்று.....

அவன் காரை சீறிக் கிளப்பிய வேகத்தில் அவன் சீற்றம் தெரிந்தாலும், ஒரு கணம் என்றாலும் அவனின் கூரிய விழிகள் தன் இதயத்தை ஆராய்ந்துவிடுவது போல் உறுத்து பார்த்ததில் திவ்யாவின் மனதில் விவரிக்க இயலாத மயக்கத்தை ஏற்படுத்த இதயம் பெரு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது...

அவனின் ஒரே பார்வையில் நிலை குலைந்தவள் ஒரு வேளை அவன் மனம் மாறி அவளைத் தேடி அடைய வந்துவிட்டால்???? மிருதுவான அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்வானா அவள் கணவன்????

இங்கு வீட்டில் திவ்யா கலங்கி துடித்துக் கொண்டு இருந்த அதே நேரம் அங்கு விமானத்தில் ஏறி அமர்ந்தவனின் எண்ணங்களும் தன் திருமணத்தைப் பற்றியே சுற்றி சுற்றி வந்தது...

என்ன நினைத்து அவன் திவ்யாவின் கழுத்தில் தாலி கட்டினானோ அவனுக்குத் தெரியவில்லை....

எந்த இக்கட்டான சூழ்நிலைகளையும் எளிதில் தன் சாமார்த்தியத்தால் சமாளிக்க முடியும் என்ற மன தைரியமோ?? அல்லது காதல், திருமணம், மனைவி என்ற பந்தங்களுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததினால் இந்தத் திருமணத்தில் இருந்து எளிதில் தன்னால் வெளி வர முடியும் என்று நினைத்திருந்ததாலோ என்னவோ?? அவன் திருமணத்தன்று பெரிய எதிர்ப்பு எதுவும் காட்டவில்லை போல...

தன்னிலை குறிந்து, தன் வாழ்க்கையின் பாதையில் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்ற இந்தத் தடுமாற்றத்தை நினைத்து ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டு இருந்தவனின் மனம் தன்னையும் அறியாமல் திருமணம் ஆன மறுநாள் அவளைப் படிகளில் விழாது இருக்கத் தான் இறுக்கி பிடித்திருந்ததைத் தன் கண்முண் கொண்டு வந்தது....

அவனின் ஸ்பரிசம் தீண்டியதும் பெண்களுக்கே உரிய இயற்கையான நாணமும், அவனை எதிர்பாராதவிதமாக அத்தனை அருகில் பார்த்திருந்ததால் அதிகப்படியான அச்சமும், அதே சமயம் அவனின் வலுவான கரங்கள் இறுக்கி அணைத்திருந்ததால் ஏற்பட்ட சலனமும் கலந்து அவனைப் பார்த்திருந்த விழிகளும்,

அவன் மார்பில் முகம் புதைந்து நிமிர்ந்ததினால் அவள் கன்னங்களில் ஏறிய குங்குமச் சிவப்பும், அவன் எங்குத் தன்னைக் கீழே விட்டுவிட்டுவானோ என்ற திகிலில் படபடத்துச் சிறிதாகத் திறந்து இருந்த இதழ்களும் சில நிமிடங்கள் தான் என்றாலும் அவன் இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்தது என்னவோ உண்மை தானே....

அவனின் இதயம் தடம் மாறிக் கொண்டு இருப்பதை அவன் புலன்கள் இன்னும் அவனுக்கு உணர்த்தவில்லை... உணர்ந்த நொடி அதிர்ந்தவன் ஆழ்ந்து பெருமூச்சு விட்டுக் கண் மூடினான்...

மூடிய விழிகளிலும் தன் வீட்டு வாயிலில் கலங்கிய விழிகளுடன் தன் கண்களின் வழியாகக் கலந்திருந்த அவனின் மனையாளே படர்ந்திருந்தாள்…


திவ்யாவின் அமைதியான குணமோ, எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பதோ, அனைத்து வேலைகளையும் தன் தலை மேல் போட்டுக் கொண்டு செய்ததுவோ எதுவோ அவளை அவள் கணவனின் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கச் செய்தது.

வெகு விரைவிலேயே அனைவருடைய மனதிலேயும் இடம் பிடித்துவிட்டாள்...

ஸ்ரீக்கோ ஒரு படி மேலே போய்த் தன்னுடைய உயிர் தோழி கலாவே திரும்பவும் தன்னைத் தேடி வந்து விட்டதாகத் தோன்றியது.....

மஹாவை விட மூன்று வயது சிறியவளாதலால் மஹாவை அண்ணி என்றழைக்க, மஹாவும் என்ன தான் வயதில் சிறியவளானாலும் முறையில் அண்ணி ஆதலால் திவ்யாவை அண்ணி என்றே அழைத்தாள்...

அண்ணி என்றழைத்துக் கொண்டாலும், இருவருக்கும் கிட்டதட்ட ஒரே பருவம் என்பதால் இருவரும் விரைவிலேயே நெருங்கிய தோழிகள் போலானார்கள்.

அர்ஜூன் மும்பை சென்று ஒரு வாரம் ஆகியிருக்க ஒரு நாள் தன் அன்னையை அலை பேசியில் அழைத்தவன்,

"மாம், நான் வந்த வேலை இன்னும் கொஞ்ச நாள் இழுக்கும் போலருக்கு.... அதனால் வர இன்னும் சில நாட்கள் ஆகும்" என்றான்.....

உண்மையில் அவன் சொன்னதில் சிறு உண்மையும் கலந்து இருந்தது...

அவன் எதிர்பார்த்ததைப் போல அவன் வந்த தொழில் காரியம் அவ்வளவு சீக்கிரமாக முடியவில்லை.....அதுவும் அவனுக்கு நல்லதாகவே பட்டது.

கதிர் சொல்லியிருந்ததைப் போல் முடிந்தளவு தன் திருமணத்தைப் பற்றிய முடிவை ஆறப் போடவே விரும்பினான்...

ஒரு வாரம் முடிந்த நிலையில் தொழில் விஷயமாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஒரு மீட்டிங்கிற்கு வந்தவன் மீட்டிங் முடிந்து வெளியே செல்ல முற்பட அவன் பின்னர் ஒரு குரல் கேட்டது.....

திரும்பியவனுக்கு அவனுடன் கல்லூரியில் படித்த மேஹா புன் சிரிப்போடு நின்று கொண்டிருப்பதைக் கண்டவுடன் ஒரு சின்னச் சந்தோஷம்....

"வாட் அ ஸ்ர்ப்ரைஸ் அர்ஜூன்! ரியலி கெனாட் ப்ளீவ் [What a surprise Arjun? Really cannot believe] மும்பாய் எப்போ வந்த?"

மேஹாவிற்கு அர்ஜூனின் மேல் எப்பொழுதும் ஒரு தனி ஈடுபாடு உண்டு... ஆசை என்றும் கூடச் சொல்லலாம்.....

அவனுடைய கம்பீரமான ஆண்மையோடு கூடிய பேரழகு, அவனது பணம் மற்றும் யாருக்கும் எதற்கும் அடி பணியாத குணம்.....

அதற்காகவே கல்லூரி நாட்களில் அவன் பின்னையே சுற்றி திரிந்தவள்....

ஆனால் அவனோ அவளுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுக்காதவன்..... இறுதியில் இந்தப் பழம் புளிக்கும் என்று அவனை விட்டு விட்டு இன்னொரு பணக்காரனைத் தேடிப் போய்விட்டவள்.

"ஹாய் மேஹா, பிஸினஸ் விஷயமா வந்தேன்... அதுக்காக இங்க ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணியிருந்தேன்..... மீட்டிங் இப்போ தான் முடிந்தது"

"வா அர்ஜூன், ரொம்ப வருஷத்திற்கு அப்புறமா மீட் பண்றோம்..... பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கு" என்றவள் வழக்கம் போல் அவன் கையைப் பிடித்துக் கொண்டு அழைக்க அவனும் மறுக்க முடியாமல் அவளுடன் சென்றான்.....

வெகு நேரம் வரை அந்த நட்சத்திர ஹோட்டலின் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.....

"சரி மேஹா நீ கிளம்பு... ரொம்ப நேரம் ஆச்சு... நான் வேண்டும் ஆனால் உன்னை ட்ராப் பண்ணவா"

"நோ அர்ஜூன், என் கார் இருக்கு... நான் போய்க்கிறேன்... கடைசியாக ஒரு செல்ஃபி எடுக்கலாமா?"

சரி என்றவனின் அருகில் வழக்கம் போல மிகவும் நெருங்கி அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தவள், அதனை மறக்காமல் தன் முக நூலில் (ஃபேஸ்புக்கில்) போட்டு அர்ஜூனின் பெயரையும் அதில் இணைக்க அது மஹாவின் கண்களுக்குத் தப்பாமல் சென்றடைந்தது.

"மாம்... இந்த அண்ணனைப் பார்த்தீங்களா? பிஸினஸ் விஷயமா மும்பைக்குப் போய்ட்டு இப்போ ஒரு பொண்ணோட செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்கிறதை" என்றவள் கையோடு அந்தப் புகைப் படத்தையும் காட்ட, யார் அதைப் பார்க்க கூடாதோ அவள் தன் அன்னையின் பின் நிற்பதை அறியாமல் தானாக ஒரு புதுப் பிரச்சனையை விலைக்கு வாங்கிக் கொண்டாள்.

மஹாவின் "அண்ணன் மும்பை" என்ற வார்த்தைகளில் தன்னையும் அறியாமல் அவள் அருகில் வந்திருந்த திவ்யாவிற்குஅவள் காட்டிய புகைப்படத்தில் தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி அமர்ந்திருப்பது பளிச்சென்று தெரிய அது வரை எதிர்பாராமல் திடீரென்று நடந்தேறிய திருமணம் தான் தன் கணவனுக்குப் பிடிக்கவில்லையோ என்று எண்ணியிருந்தவளுக்கு இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் தன் இதயத்தை யாரோ வாள் கொண்டு அறுப்பது போல் இரத்தம் கசிந்தது...

ஒரு வேளை அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருக்குமோ?

சட்டென்று உதித்த என்ணத்தில் அதிர்ந்தவளின் உள்ளம் கண வேகத்தில் தன் வாழ்க்கை பாதை முடிந்ததைப் போல் உணர வேதனையுடன் மனம் பதறி துக்கம் தொண்டையை அடைக்கத் தன் மாமியாரை நோக்கினாள்...

அவளுடைய அதிர்ந்த முகத்தைப் பார்த்த ஸ்ரீக்கு தன் மருமகளின் எண்ணமும் அதனால ஏற்பட்ட கலக்கமும் புரிந்தது...

அக்கம் பக்கம் பார்க்காமல் வார்த்தைகளை விட்ட தன் மகளைக் கண்டு கண்களாலேயே அவளை எரிப்பதைப் போல் பார்த்தவர் திவ்யாவிடம் திரும்பி....

"திவ்யா, நீ ஒன்னும் பெருசா எடுத்துக்காதடா.... அர்ஜூனுக்கு அந்த மாதிரி பழக்கம் எல்லாம் இல்லை.... அவனுக்குக் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்னு ஒருத்தரும் கிடையாது.... அது ஏதாவது பழைய ஃப்ரண்டாக இருக்கும்.... திடீர்னு மும்பையில எங்கேயாவது மீட் பண்ணியிருப்பாங்க.... ஃபோட்டோ எடுத்திருப்பாங்க.... அத நினைச்சு மனசப் போட்டு குழப்பிக்காதடா....." என்றவர் அவளை மேலும் நெருங்கி...

"ஒரு வேளை அர்ஜூன் யாரையாவது லவ் பண்ணியிருந்தானா கண்டிப்பா நான் சொன்னதுக்காக உன் கழுத்தில் தாலிக் கட்டியிருக்கமாட்டான்.... என் மகனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.... அவனுக்கு அப்படி யார் மேலாவது ஈடுபாடு இருந்திருந்தால் நான் இல்லை, யார் சொன்னாலும் அவன் மனசை மாத்தியிருக்க முடியாது.... அதனால நீ மனசப் போட்டுக் குழப்பிக்காதடா" என்றார்.

ஆனாலும் அத்தனை எடுத்து சொல்லியும் திவ்யாவின் முகத்தில் தெளிவில்லாததைப் பார்த்தவருக்கு இதற்கு மேல் எப்படி அவளுக்குப் புரிய வைப்பது என்றும் தெரியவில்லை...

மனம் முழுவதும் சஞ்சலத்துடன் விதி தன் கரத்தை இன்னும் தன் வாழ்க்கையில் இருந்து விலக்கவில்லை என்று உணர்ந்தவள் தன் மனதினில் எழும் பூகம்பத்தை மறைத்து தன் மாமியாருக்காகப் புன்னகைத்து வைத்தாள்...

அந்தச் சிறு பெண்ணின் புன்னகையின் பின் இருக்கும் வலியை உணராதவரா அவள் மாமியார்!!!



அங்கு அர்ஜூனிற்கு மும்பையில் இன்னும் ஒரு சில வாரங்களாவது எடுக்கும் என்று நினைத்திருந்த வேலைகள் எதிர்பாராதவிதமாகச் சுலபமாக முடிந்தது...

"என்ன செய்வது? இப்போ இந்தச் சூழ்நிலையில் சென்னைக்கும் திரும்பப் போக விருப்பம் இல்லை.... யாரையாவது மீட் பண்ணலாமா?" என்று அர்ஜூன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே ஸ்பீக் ஆஃப் தி டெவில் [speak of the devil] என்பார்களே அது போல் மேஹாவே அவனை அலை பேசியில் அழைத்தாள்.....

"அர்ஜூன், நான் இன்னைக்குக் கொஞ்சம் ஃப்ரீ... இப்போ நீ பிஸியா இல்லன்னா எங்காவது வெளியில் போகலாமா?"

அவனுக்கு அவளுடன் போக ஈடுபாடு இல்லை... ஆனால் அதே சமயம் இப்பொழுது தான் இருக்கும் மன நிலையில் தனித்து இருப்பதிலும் விருப்பம் இல்லை...

ஒவ்வொரு நிமிடமும் திவ்யாவுடனான திருமண நாளும், தான் கிளம்பிய அன்று தன்னைப் பார்த்திருந்த அவளின் கலங்கிய முகமும் அவ்வப் பொழுது அவன் மனதில் தலைக் காட்ட துவங்கின....

அதனைத் தவிர்ப்பதற்காக மேஹாவுடன் செல்ல அவன் சரி என்றதும் அதற்காகவே காத்திருந்தது போல் சிறிது நேரத்திலயே அவன் தங்கி இருந்த ஹோட்டலை அடைந்திருந்தாள் மேஹா.

இரவு வரை வெளியே சுற்றிய இருவரும் வெகு நேரம் சென்று அர்ஜூனின் ஹோட்டலுக்குத் திரும்ப...

"அர்ஜூன், நாம ஏதாவது ஃபுட் ஆர்டர் பண்ணி இங்கேயே சாப்பிடுவோமா? நான் இப்போ கிளம்பினாலும் போற வழியில ஏதாவது வாங்கிட்டு தான் போகனும்... அதுக்கு இங்க உன் கூடயே சாப்பிடுறனே"

கேட்கும் பொழுதே அவன் எங்கு வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்ற கலக்கம் அவளுக்கு...

நொடி நேரம் கூடத் தாமதிக்காமல் சரி என்றவன் அவளுக்குப் பிடித்தது போல் உணவுகளைக் கொண்டு வர பணித்தவன் குளிக்கச் சென்றான்.

அர்ஜூனை அத்தனை எளிதில் எதற்கும் சம்மதிக்க வைக்க முடியாது... கல்லூரி நாட்களிலேயே அவளின் குணம் அறிந்து அவளைத் தள்ளி வைத்தவன்...

ஆனால் இன்று அவள் விரும்பிய விதத்தில் வளையும் அர்ஜூனை கண்டவளுக்கு இத்தனை நாட்களுக்குப் பிறகு பலிக்கப் போகும் கனவினை நினைத்து மனம் குதூகலித்தது...

சிறிது நேரத்திலேயே குளித்து முடித்து வெளியே வந்தவன் அறையில் இருந்த கண்ணாடியில் தன் தலை கோதியவாறே தன் கட்டிலில் படுத்து தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த மேஹாவை கண்டவனுக்கு அவளின் கிறக்கமான பார்வை உணர்த்தியது...

அவளின் எண்ணத்தை... வேட்கையை...

அவள் போட்டிருந்த ஆடை வேறு அபாயகரமாகக் கழுத்துக்குக் கீழே இறங்கி அவளின் கீழ் தரமான ஆசையை அப்பட்டமாக வெளிப்படுத்த, சட்டென்று அறையில் இருந்த தொலை பேசியை எடுத்தவன் தான் ஆர்டர் செய்த உணவு என்னானது என்று ரிஷப்ஷனிஸ்டிடம் விசாரித்தான்...

அவனின் எண்ணம் புரிந்தவளாகக் குழையும் குரலில்...

"என்ன அர்ஜூன்? இப்போ என்ன அவசரம்? அவங்க கொண்டு வரும் போது கொண்டு வரட்டும்.... உங்களுக்குப் போர் அடிக்காம நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.....

அவளின் விரசமான பேச்சிலும் வழியும் குரலிலும் எரிச்சலடைந்தவனுக்குப் பேசாமல் சென்னைக்கே திரும்பி சென்று இருக்கலாம் என்று தோன்றியது.....

தேவையில்லாமல் வினையை வாங்கிக் கொண்டோமே என்று சலிப்படைந்தவன்,

"மேஹா, இட்ஸ் ஆல்ரெடி டூ லேட், யூ ஹேவ் டு ட்ரைவ் பேக் டு யுவர் ஹோம், வொய் டோண்ட் யூ பேக் யுவர் ஃபுட் அன்ட் கோ? [Its already too late. you have to drive back to your home. Why dont you pack your food and go?] " என்றான்.....

அது வரை தாபத்தின் பிடியில் சிக்கி இருந்தவளுக்கு அவன் உதாசீனம் எரிச்சல் தர, இருந்தும் அவனை விட மனசில்லை....

"இவன் திருந்தவே இல்லை" என்று நினைத்தவள் அவன் அருகில் நெருங்கி வர,

அவளுடைய நோக்கம் புரிந்தவன் "சே, இவ்வளவு வயசாகியும் இவள் திருந்தவே இல்லை... இவளை எப்படிச் சமாளிப்பது?" என்று குழம்பியவனுக்கு மின்னல் வெட்டியது போல் தோன்றியது அந்த யோசனை...

சட்டென்று "கமான் மேஹா, இது என்ன சின்னப் பெண் மாதிரி..... ஐ ஆம் மேரிட்.... என் கிட்ட நீ இப்படி நடந்துக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை" என்றான் வார்த்தைகளில் அடக்கப்பட்ட கோபத்துடன்....

ஆசையோடும் வேட்கையோடும் அவன் அருகில் நெருங்கி நின்றவளுக்கு அவன் சொன்ன அவனின் திருமணச் செய்தி நெருப்பை அள்ளி தெளித்தது போல் இருந்தது...

திருமணமானவனா?

அன்றும் அவளைச் சந்தித்த பொழுது அவன் தன் திருமணத்தைப் பற்றிச் சொல்லவில்லை...

இன்றும் காலை முதல் இரவு வரை அவளுடன் ஊர் சுற்றிய போதும் அவன் திருமணத்தைப் பற்றிப் பேசி இருக்கவில்லை....

அப்படி என்றால் இப்பொழுது மட்டும் எப்படி? என்று நினைத்தவள் சட்டென்று தன்னுடைய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு இதழ்களில் வேஷப் புன்னகை தவழ...

"வாவ்! நிஜமாகவா அர்ஜூன்.... ஏன் என்கிட்ட இத்தனை நேரம் இத பற்றிச் சொல்லவில்லை? யாரந்த லக்கியஸ்ட் கேர்ள்? நான் அவங்களை இப்பொழுதே பார்க்கனுமே... ஃபோட்டோ எதுவும் வச்சிருக்கியா?" என்றாள் அடுக்கடுக்காகத் தன் மனதில் மண்டியிருந்த புகைச்சலை சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு.....

மேஹாவைத் தவிர்க்கவே, தன்னை விட்டு தள்ளி வைக்கவே அவன் தன் திருமணத்தைப் பற்றிச் சொல்லியிருந்தான்.... ஆனால் அவள் தன் மனைவியின் புகைப்படத்தைக் கேட்பாள் என்று அவன் கொஞ்சம் கூட நினைத்திருக்க வில்லை....

அவள் சடாரென்று கேட்டதும் திகைத்தவன் "நானே எப்படி இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிச்சேன்னு குழம்பி போயிருக்கேன்... இதில் அவளோட ஃபோட்டோவை வேறு தூக்கிட்டு சுத்தனுமா?" என்று நினைத்தவன், இப்பொழுது இவளிடம் இருந்து எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அலை பேசி அழைத்தது...

கதிர் தான் அவனை அலுவலக விஷயமாக அழைத்திருந்தான்.

அது தான் சமயம் என்றெண்ணியவன்,

"இது பெர்ஸ்னல் கால்... நான் அட்டெண்ட் பண்ணியே ஆகனும்.... இஃப் யூ டோண்ட் மைண்ட் [If you don't mind]
நான் கொஞ்சம் வெளியே போய்ப் பேசிட்டு வரேன்" என்று வெளியேறினான்.....

அர்ஜுனின் எண்ணம் முழுவதும் விரைவில் மேஹாவை அனுப்பி விட வேண்டும் என்பதிலேயே இருந்ததால் கதிருடன் சில நிமிடங்களே பேசியவன் திவ்யாவின் புகைப்படத்தை எங்கு எடுப்பது என்று சிந்தித்துக் கொண்டு இருக்க மஹாவின் நியாபகம் வந்தது....

கதிருடன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, மஹாவின் முக நூலில் (ஃபேஸ் புக்கில்) திவ்யாவின் புகைப்படம் எதுவும் இருக்கிறதா என்று தோண்ட, அங்கு இதற்குள்ளாகவே நன்றாகத் தோழிகள் போல ஆகிவிட்ட மஹாவும் திவ்யாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தது.

"அடிப்பாவி, அதற்குள்ளாக இவ்வளவு ஃபோட்டஸா?" என்று வியந்தவன், அதனிடையே திவ்யா தங்களின் தோட்டத்தில் இருந்த ரோஜா மலர்களுக்கிடையில் மெலிதான ஒரு புன்னகையுடன் நின்று கொண்டு இருந்த புகைப்படம் அவனையும் அறியாமல் அவனைக் கவர, அதனைத் தன் அலை பேசியில் சேமித்து வைத்தவன் அலை பேசியில் இன்னமும் பேசிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்...

"சரி, நான் அப்புறம் பேசுகிறேன். நீ போய்த் தூங்கு"

அவனுடைய மனைவியுடன் பேசுகிறது போல் தெரிய வேண்டுமாம்!!!!

உள்ளே வந்தவன், "என்ன மேஹா கேட்ட? என் வைஃப் ஃபோட்டவைத் தான?" என்றவன், திவ்யாவின் புகைப்படத்தைக் காண்பிக்க, திவ்யாவின் அன்றலர்ந்த மலர் போல் அப்பழுக்கற்ற முகமும், குழந்தைத் தனமான சிரிப்பும் மேஹாவிற்குப் பொறாமையையே உண்டு பண்ணியது.

"வாவ்! செம்ம ஹோம்லியா அழகாக இருக்காங்க அர்ஜூன்" என்றவள், மீண்டும் இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாகிவிட இதற்கு மேல் இவனைப் பணிய வைக்க முடியாது என்று,

"சரி அர்ஜூன், ஃபுட் வந்தவுடன் நான் பேக் செய்து எடுத்திட்டு போறேன்" என்றாள்.....

அவர்கள் வரவழைத்திருந்த உணவும் வர ஒரு வழியாக அவளை அனுப்பியவன், கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவன் மனம் முழுவதிலும் சிறிது நேரத்திற்கு முன் பார்த்த திவ்யாவின் புகைப்படமே நிறைந்திருந்தது...

சில நிமிடங்கள் அவளைப் பற்றியே தன் நிலை மறந்து சிந்தித்துக் கொண்டு இருந்தவன் அலை பேசியைக் கையில் எடுத்து அதனையே உற்று நோக்க, மனதினில் பல நூறு எண்ணங்கள், சிந்தனைகள்...

தன் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டவன் தயக்கத்தை உதறி அலை பேசியை உயிர்ப்பிக்க, அதில் அவன் மனையாளின் அழகிய புகைப்படம் காட்சி அளித்தது...

திருமணத்தன்று தன் அருகில் அமர்ந்திருந்தாலும் அவன் மாங்கல்யத்தை அணிவிக்கும் பொழுது கூட அவள் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து இருந்தான்...

மறு நாள் தங்க பதுமையெனத் தன் மீது மோதி கொடியில் சிக்கிய பூங்கொடி போல் படர்ந்திருந்தவளின் பளிங்கு முகத்தை ஒரு சில நிமிடங்களே பார்த்திருந்தான்...

அதற்குப் பின் ஏனோ அவனின் பிடிவாதமும் திமிரும் ஓங்கி இருந்ததாலும், தான் ஏதோ வஞ்சிக்கப்பட்டது போல் கொதித்துக் கொண்டு இருந்ததாலும் அவளின் முகம் பார்க்க அவன் மனம் விரும்பவில்லை... இல்லை அவன் இதயம் விரும்பியதை அவன் உணரவில்லையோ...

ஆனால் இன்று எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மேஹாவிற்காகத் திவ்யாவின் புகைப்படத்தைப் பார்க்க வாய்ப்பு அமைய அவன் பார்த்தது என்னவோ ஒரு நொடி தான்...

ஆனால் அதற்குள் அவன் மனைவி அவனையும் அறியாமல் அவன் மனதில் பசை போல் ஒட்டிக் கொண்டாள்....
இரண்டாவது முறையாக...

புகைப் படத்தில் பச்சை பசேல் என்றிருந்த தோட்டத்தில் சூரியனின் மயக்க ஒளியும், அவற்றின் இடையே தேவதை போல் ஒரு ரோஜா செடியின் அருகில் அழகாகப் புன்னகைத்துக் கொண்டு நின்ற திவ்யாவும் இணைந்த காட்சி அத்தனை அற்புதமாக இருந்தது அவனின் கண்களுக்கு....

சின்னப் பிறைப் போல் நெற்றி, கூர்மையான மூக்கு, அதில் ஒற்றைச் சிவப்பு கல் மூக்குத்தி, செப்பு உதடுகள் அதில் மெலிதான புன்னகை, நீண்ட கூந்தலைப் பின்னி மல்லிகை சரம் சூடி சடையை முன் பக்கம் விட்டிருந்தாள்...

அவள் தனது ஒரு கையை லேசாக உயர தூக்கி சிறு பிள்ளை போல் செடியில் இருந்த ரோஜாப் பூவை பிடித்திருக்க, அடர் சிகப்பு நிறத்தில் அவள் புடவை கட்டியிருந்ததால் அதனிடையில் பளீரென்று தெரிந்த குறுகிய இடையைக் கண்டவனின் இதயம் தடுமாற ஆரம்பித்தது...

தன் மனையாளின் கள்ளம் கபடம் இல்லாது சிரிக்கும் குழந்தைத் தனமான முகத்தை இரசித்துக் கொண்டிருந்தவன் அவளின் அழகிய கண்களைப் பார்த்ததும் அவள் அவன் மும்பைக்குக் கிளம்பிய அன்று விழிகள் கலங்க அவனைப் பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது.....

மனம் அதன் போக்கில் மிதக்க, தன்னை அறியாமல் அர்ஜூனின் விரல்கள் திவ்யாவின் முகத்தில் கோடுகள் வரைந்தது...
நெற்றி, கண்கள், மூக்கு, இதழ்கள் என்று மென்மையாகத் தடவியவனின் விரல்கள் அவளின் கன்னக் குழிக்குள் வந்து சிக்கியது...

ஆனால் அவன் மனம் கிறங்கி இருந்தது சில நிமிடங்கள் தான்....

"அர்ஜூன், உன் நினைப்பு போற இடமே சரியில்லை... ஏணி வச்சு ஏறினால் கூட அவளுக்கு உன் இடத்தை அடைய முடியாது" என்று தேவையில்லாமல் அவன் மனம் உரைக்க, தன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு திடுக்கிட்டவன் சட்டென்று அலை பேசியை அணைத்துக் கட்டிலில் போட்டவன் தலையைச் சிலுப்பி விட்டுக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தான்...

அவனுக்கே அவன் மனம் போகும் பாதை புரி படவில்லை...

தொடரும்..
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top