JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episode 7

JLine

Moderator
Staff member


அத்தியாயம் - 7


முக நூலில் மஹாவும், திவ்யாவும் ஒன்றாக இருக்கும் புகைப் படங்களைப் பார்த்து ரசித்தது அர்ஜூன் மட்டும் இல்லை, இன்னொருவனும் கூட...

மஹாவின் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவளின் சீனியர், கோகுல்....

அவனுடைய தந்தை ஒரு பிரபல சினிமா படத் தயாரிப்பாளர்.... ஒரு சில படங்களே தயாரித்து இருந்தாலும் அத்தனையும் வெற்றி படங்கள், அதனால் திடீர் கோடீஸ்வரர் ஆனவர்.....

பெரிய இடத்து பையன் என்கிற திமிராலும் தைரியத்தாலும் கல்லூரியில் அவனின் செயல்கள் வரம்பு மீறியதாகவே இருந்தாலும் அவனின் எந்த அத்து மீறிய செயலும் மேலிடத்திற்குப் போகாமல் பார்த்துக் கொள்வதில் பலே கெட்டிக்காரன்.....

அப்படியே அவனை மீறிச் சென்றாலும் அவனுக்குப் பதில் பழியைச் சுமக்கவும் அவனைச் சுற்றி காக்காய் கூட்டம் போல் எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் இருந்தது.....

அந்த திமிரில் பெண்களிடம் வரம்பு மீறுவதை அவன் ஒரு பொழுது போக்காகவே வைத்துக் கொள்ள, கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே மஹா அவன் கண்களில் பட்டுத் தொலைத்தாள்.....

நல்ல சந்தன நிறம், அழகான முகம் என்று சாதாரண அலங்காரத்திலும் தேவதைப் போல் பேரழகியாகக் கல்லூரிக்குள் நுழைந்தவளை வைத்த கண் எடுக்காமல் பார்க்க, அவனின் பார்வை போகும் இடத்தைப் பார்த்திருந்த அவனின் நண்பர்கள் மஹாவை பார்த்ததும் அவளின் அழகில் மயங்கி..

"பாஸ், யாரு பாஸ் இது? செம்ம கட்டை பாஸ்" எனவும், கூறியவனின் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது.....

பொறி கலங்க அவன் மலங்க மலங்க விழிக்க,

"யாரை பாத்துடா செம்ம கட்டைங்கிற? அவ உனக்கு அண்ணியா வரப் போறவ, புரியலை? எனக்கு மனைவியா வரப் போறவ.... இனி அவளைப் பற்றிப் பேசும் போது அண்ணின்னு தான் சொல்லனும், என்ன புரிஞ்சுதா?" என்று கத்தினான்.....

"பாஸ், உங்களுக்கு எப்போ பாஸ் நிச்சயம் ஆச்சு, சொல்லவே இல்லையே?" என்று ஆச்சரியத்துடனும், இத்தனை அழகான பொண்ணு இவனுக்கா? என்ற பொறாமையுடனும் கேட்க,

"இப்போ தான்... நிஜத்தில் சீக்கிரம்" என்றான்.....

ஆக இப்பொழுது தான் அந்தப் பெண்ணை இவன் பார்க்கிறான்....

அதற்குள் மனைவி என்றே முடிவு செய்துவிட்டான் என்று புரிந்துக் கொண்டவர்கள் பெரிய இடத்துச் சமாச்சாரம் நமக்கு எதுக்கு....

ஏதோ அப்பப்ப பார்டிகளுக்கும், பப்புக்கும் கூட்டிட்டு போறானா, வேண்டியதை வாங்கித் தருகிறானா, அத மட்டும் பார்த்துக்கிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான் என்று நினைத்து அதனை அதோடு மறந்தும் விட்டார்கள்.....

ஆனால் கோகுலால் அப்படி இருக்க முடியவில்லை...

அன்று முழுவதும் அவளின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவன், அவளைச் சில மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து ராகிங் பண்ணிக் கொண்டிருக்க இது தான் சமயம் என்று அந்த இடத்திற்குச் சென்றான்.

அவன் வருவதைக் கண்ட ஒருவன் தன் நண்பர்களிடம் காதை கடிக்க, அவர்கள் அவனைக் கண்டவுடன் எழப் போக வேண்டாம் என்று கண்களாலேயே சைகை செய்தவன் ஒன்றும் அறியாதவன் போல் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.....

ஏற்கனவே இத்தனை பேர், இதில் இன்னும் ஒருவனா? என்று கலங்கிய மஹா பேசாமல் அருண் அண்ணாவைக் கூட வரச் சொல்லியிருக்கலாம் என்று யோசிக்க, அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்து ரசித்த கோகுல்....

"என்ன மச்சி, என்ன நடக்குது இங்க? ரொம்பப் பயந்திருக்காங்க போல இருக்கு..... ராகிங்கும் ஒரு லிமிட்டோட தான் நடக்கனும்னு சொல்லியிருக்கேன், இல்லையா?" என்றான்.....

என்னடா இவன் "சேம் சைட் கோல் போடுறான்" என்பது போல் பார்த்தவர்கள் அவனிடம் வாயைக் கொடுத்து பிரச்சனைகளை விலைக்கு வாங்காமல் இருக்க முடிவு செய்தார்கள்...

"ஒன்னும் பெரிசா பண்ணலை மச்சி, சும்மா, தோ இவன லவ் பண்ற மாதிரி ஒரு டயலாக் பேச சொன்னோம்... அதுக்கே பொண்ணு இந்த மாதிரி பயப்படுது"

"டேய் இவன பாத்து லவ்வ சொல்ல சொன்னா யாரா இருந்தாலும் பயப்படத் தான் செய்வாங்க" என்றவன்,

"என்ன பார்த்து வேண்டுமானால் சொல்லு" என்றான்.

ஏற்கனவே உள்ளுக்குள் நடுங்க, அதனை வெளியில் காட்டாமல் முடிந்தவரை நின்று கொண்டிருந்த மஹாவிற்கு இன்னும் அழுகை வர, "இவன் ஏதோ காலேஜிலேயே பெரிய ஆள் போல், அதான் ராகிங்கு இவன் ரூல்ஸ் செட் பண்றான்" என்று நினைத்தவள்..

"க்ளாஸ்ஸுக்கு போகனும்... டைம் ஆயிடுச்சு" என்று கண்கள் கலங்கியபடியே சொல்ல,

அவள் அருகில் வந்த கோகுல்,

"ஹே, இதுக்குப் போய் எல்லாமா அழறது? இது ஜஸ்ட் சும்மா ஃபன்னுக்குதான்.... முதல்ல கண்ண தொடைங்க" என்றவன்,

"இட்ஸ் ஓகே மச்சி, லெட் ஹெர் கோ [Let her go]" என்றான்.....

விட்டால் போதும் என்று ஓடியவள் நாளையில் இருந்து அருண் அண்ணாவ கூடக் கூட்டிட்டு வரனும் என்று நினைத்துக் கொண்டாள்.....

மஹா தைரியசாலி தான், ஆனால் எல்லாம் வீட்டில் தான்... வீட்டில் தான் வாயடிப்பது, சண்டைப் போடுவது எல்லாம்... வெளியில் வந்தால் படு அமைதி.....

அவளைப் பார்த்தால் கோடீஸ்வர வீட்டுப் பெண் போல் தெரியாது... அவள் அன்னையைப் போல் ஏழை பணக்காரர் வித்தியாசம் பார்க்காதவள்... எளிமையான வாழ்க்கையில் ஆர்வம் கொண்டு இருப்பவள்...

யாரிடமும் தானாகத் தன் வசதியைப் பற்றியோ தங்கள் அந்தஸ்தைப் பற்றியோ கூற மாட்டாள்...

அதிலும் அர்ஜூனை பற்றி வாயே திறக்க மாட்டாள்...

ஒரு வேளை அர்ஜூன் அண்ணாவைப் பற்றிச் சொல்லி அதன் மூலம் தன் அந்தஸ்தும் வசதியையும் தன்னுடன் படிக்கும் தோழிகள் தெரிந்து கொண்டார்களானால் தன்னுடன் பழகும் விதமே மாறலாம் என்ற எண்ணமே அதன் காரணம்......

ஏனெனில் எந்தப் பந்தாவும் இல்லாமல் சாதாரணமாகப் பழகுவதே அவளின் விருப்பம்...

ஆனால் கல்லூரியில் அவளை முதன் முதலாகப் பார்த்த அன்றில் இருந்து கோகுலின் கண்கள் அவளின் மீது தான் இருந்தது...

எந்த பெண்ணிடமும் தன் ஆசையை உடனே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் கோகுல் கூட அவளிடம் வம்பளக்கவில்லை என்றால் அது அவளை உடனே பறிக்காமல் தட்டி கனிய வைக்க வேண்டும் என்ற ஆசையே.

ஆனால் பாவம் அது மஹாவுக்குத் தான் தெரியாமல் போனது....

தெரிந்து இருந்தால் பின்னால் தனக்கு மட்டும் அல்ல, தன் அண்ணி திவ்யாவிற்கும் இவனால் நடக்க இருக்கும் விபரீதத்தைத் தடுத்து இருப்பாளோ?

ஆனால் விதி யாரை விட்டது???

நல்லவர்கள் பொல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் விளையாடுவது தான் அதன் பொழுது போக்கு போல....


இன்றோடு அர்ஜூன் மும்பை சென்று மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி இருந்தது....

அன்று ஒரு வெள்ளிக்கிழமை...

கோவிலுக்குச் செல்லலாம் என்று தலைக் குளித்த திவ்யா, தனக்கு நிரம்பப் பிடித்த சின்னக் கரைப் போட்ட அடர்ந்த வைலட் நிற பட்டு புடவையை அணிந்தவள், தலையைப் பின்னி மிதமான அலங்காரத்துடன் இறுக்கித் தொடுத்த மல்லிகைப் பூச் சரத்தை சூடியவள், கீழே இறங்கும் பொழுது வயிற்றில் லேசாக வலித் தோன்றியது....

தேதியை நினைத்தவள் "சே! எப்படித் தேதியை மறந்தேன்?" என்ற சிறு பிள்ளை போல் தன் தலையில் கொட்டிக் கொண்டு தன் மாமியாரின் அறை கதவை தட்டினாள்.

கதவு திறக்கவும் ஸ்ரீயிடம் எப்படிச் சொல்வது என்று தயங்க "என்னடா, கிளம்பிட்டியா? இதோ ஒரு நிமிஷம், நானும் கிளம்பிட்டேன்" எனவும்,

சிறிது தயக்கத்துடனேயே "அத்தை எனக்குப் பீரியட்ஸ் ஆகிடுச்சு... அதனால நீங்களும் மஹா அண்ணியும் கோயிலுக்குப் போறீங்களா?" என்றாள்.....

'ஏண்டா, இத சொல்றதுக்குத் தான் இவ்வளவு தயக்கமா? நானும் பொண்ணு தான் " என்று சிரித்தவர்,

"சரி நீ ரெஸ்ட் எடு, நாங்க போய்ட்டு வரோம்" என்றார்......

பின் மஹாவும் கிளம்பியவுடன்,

"சரி திவ்யா, அருணும், மாமாவும் வர நேரமாகும்னு சொன்னாங்க. நீ கதவை நல்லா சாத்திக்கோ...... நாங்களும் வர நேரம் ஆகும்" என்றவர் கிளம்பி சென்றார்......

திவ்யாவிற்குக் கோவிலுக்குச் செல்வது என்பது சிறு வயது முதலே மிகவும் பிடித்தமான ஒன்று... தெய்வத்தின் சந்நிதானத்தில் கண்களை மூடி, சுற்றி நடக்கும் எதனைப் பற்றியும் நினைக்காமல் மனமுருக வேண்டும் பொழுது மனம் எவ்வளவு அமைதி அடைகிறது......

அதுவும் திருமணத்திற்குப் பிறகு என்ன தான் அவளுக்குத் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அன்பாகவும் ஆறுதலாகவும் இருந்தாலும், தன் கணவனின் கோபமும் வெறுப்பும் அவளின் இதயத்தில் ஒரு திகிலான சூழலையே உருவாக்கி இருந்தது...

திருமணம் முடிந்த அன்றே விவாகரத்தை பற்றிப் பேசியவன்.... தான் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவே வெளியூர் சென்று இருப்பவன்...

அவன் எப்பொழுது வேண்டுமானாலும் மும்பையில் இருந்து திரும்பி வரலாம்... வந்த நிமிடமே தன்னை வீட்டை விட்டு வெளியேற்றலாம்... இத்தகைய இறுக்கமான நிலையில் அவளுக்குக் கடவுளின் பாதத்தில் சரணடைவதைத் தவிர வேறு நிம்மதி இல்லை....

ஆனால் இந்த மாதாந்திர தொல்லையால் இன்று அந்தச் சுகத்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என்றெண்ணியவள் வேறு வேலை எதுவும் இல்லாதிற்கவே புடவை மாற்ற கூட எண்ணமில்லாமல் சமையலறையில் ஏதாவது சமைக்கலாம் என்று புகுந்தாள்......

சில நிமிடங்களிலேயே வீட்டின் அழைப்பு மணி அடிக்க "இப்போ தான் அத்தை போனாங்க, எதுனாச்சி மறந்திட்டாங்களா?" என்று நினைத்துக் கொண்டே சமையலைறையில் இருந்து வெளியே வர, யாரோ மறுபடியும் விடாமல் அழைப்பு மணி அடிக்க, வேகமாகக் கிட்டத்தட்ட ஓடியே வர வேண்டியதாய் இருந்தது.

"அப்பா, ஏற்கனவே வயிறு வலி, இதுல இவ்வளவு பெரிய வீட்ட கட்டிவிட்டு இங்கைக்கும் அங்கைக்கும் நடக்கவே தனித் தெம்பு வேணும் போல இருக்கு" என்றெண்ணிக் கொண்டே கதவை திறக்க, அங்கு அவள் கண்ட காட்சி அவளை அப்படியே உறைய வைத்தது...

இத்தனை தடவை அழைப்பு மணி அடித்தும் யாரும் வராமல் இருந்ததை எண்ணி முகத்தில் எரிச்சல் மண்டியிருக்க எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தான் அர்ஜூன்.

அவன் சென்ற வேலை முடிந்துவிட்டதால், இங்கே சென்னையிலும் ஏகப்பட்ட வேலைகள், வாடிக்கையாளர் மீட்டிங்குகள் என்று காத்து கிடந்ததால் தன் அன்னைக்குக் கூடத் தெரியப்படுத்தாமல் அவன் கிளம்பி வந்துவிட்டான்...

அர்ஜூன் மும்பை சென்றிருந்த இந்த மூன்று வாரங்களில் மாமியாரும், மாமனாரும், மஹாவும் தங்கள் பாசத்தினால் அவள் எங்கு இருக்கிறாள் என்பதனையே மறக்க செய்திருக்க,

அருணோ வருவதும் தெரியாது, போவதும் தெரியாதது போல் தான் இருப்பான்..... வீட்டில் இருந்தாலும் அவனும் திவ்யாவிடம் சகஜமாகவே பழகியிருந்தான்...

இத்தனை நாட்களுக்குள் அவள் இந்த வீட்டினரோடு ஒரு ஆளாக மாறி இருக்க அதில் அர்ஜூனைக் கொஞ்சம் மறந்திருந்தாள் என்றே சொல்லலாம்.

ஆனால் இன்று முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இப்படித் திடுமென்று எதிரே வந்து நின்றவனைக் கண்டவள் மிதமிஞ்சிய அச்சத்தால் உடல் முழுவதும் மரத்துப் போனது போல் திக் பிரம்மை பிடித்து நின்றாள்...

அழைப்பு மணி அடித்ததும் தன் அன்னையோ அல்லது தங்கையோ ஒருவர் தான் கதவை திறப்பார்கள் என்று எண்ணியிருக்கத் திடீர் என்று கதவை திறந்த திவ்யாவை கண்டதும் உடலெங்கும் ஒரு வித சிலிர்ப்பு படரவே இத்தனை நாட்கள் தன் மனக் கண்ணில் வந்து போன அவள் மதி முகத்தை மீண்டும் எழாதவாறு தட்டி வைத்திருக்க, அவன் ஆழ் மனதில் புதையுண்டு இருந்த உணர்வுகள் திமிறிக் கொண்டு மெல்ல தலை நீட்டி எட்டி பார்த்தது...

வயலட் நிற பட்டுப் புடவையில் தலையில் மல்லிகைப் பூ சூடி எளிமையான அலங்காரத்தில் அந்த நிலவையும் தோற்கடிக்கும் விதத்தில் எந்தக் களங்கமும் இல்லாமல் ஆனால் அச்சத்தில் விழி விரிய நின்றிருந்த மனையாளைக் கண்டவனுக்கு மேஹா சொன்னது நியாபகத்தில் வந்தது...

"செம்ம ஹோம்லியா அழகா இருக்காங்க"

ஒரு வேளை இந்த ஒரு மாத தன் இல்ல வாசம் அவளின் அழகை மெருகேற்றி இருக்குமோ என்று கர்வத்தோடு எண்ணியவாறே சில விநாடிகள் நின்று இருந்தவன் சட்டென்று சுய நினைவிற்கு வர அசைவற்று நின்று இருந்தவளைக் கண்டவனுக்கு அவள் நகர்வது போலத் தெரியவில்லை...

அவள் முன் சொடக்கிட்டவன் அவளை ஆழ்ந்து பார்க்க, அவனின் சொடக்கில் சிந்தனை கலைந்து தன் உணர்வுக்கு வந்தவள் அச்சம் அகலா முதத்துடன் விலகி நிற்க அவளைத் தாண்டி உள்ளே சென்றான்......

அவன் வீட்டினுள்ளே சென்றும் இன்னும் திகிலில் உறைந்திருந்தவள் போல் கதவின் அருகிலேயே நிற்க அதனைக் கண்டும் காணாதது போல் ஹாலில் அமர்ந்தவன் தலையை அழுந்த பிடித்துக் கொண்டே "மாம்" என்று கத்த,

அவனுடைய அந்தக் கத்தல் சத்தம் திவ்யாவை இந்த உலகிற்குக் கூட்டி வந்தது......

அவனின் கத்தலில் திடுக்கிட்டவள் "ஐயோ!, இந்த நேரம் பார்த்து வீட்டில் யாருமே இல்லையே.... ஏற்கனவே ஏதோ கோபத்தில் இருப்பார் போல் இருக்கிறது... இப்பொழுது நான் ஏதாவது பேசினால் அவ்வளவு தான் தொலைந்தேன்" என்று கலங்கியவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

அவன் மீண்டும் சத்தமாக "மாம்" என்று அழைத்தான்..

அவன் கத்தலில் பயந்தவள் வேறு வழியில்லாமல் மிக மெதுவான குரலில் தன் ஒட்டு மொத்த தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு....

"அத்தையும், அண்ணியும் கோவிலுக்குப் போயிருக்காங்க, வர கொஞ்ச நேரம் ஆகும்.... டீ கொண்டு வரட்டுமா?" என்றாள்......

அவள் பேசியது அவள் காதிற்கே கேட்காதப் பொழுது அவனுக்கு எங்குக் கேட்டிருக்கும்...

"என்ன?" என்று அவன் மேலும் குரலை உயர்த்திக் கேட்டப் பொழுது தான் "ஐயோ! நான் பேசியது இவருக்குக் கேட்கவில்லை போலிருக்கே" என்றெண்ணியவள், தடுமாற்றத்துடன் ஒவ்வொரு வார்த்தையாக,

"இ.. இ... இல்ல அத்தையும் அண்ணியும் கோ... கோ... கோவிலுக்குப் போயிருக்காங்க, வர கொஞ்ச நேரம் ஆகும். டி...டி கொண்டு வரட்டுமா??" என்றாள்......

"மாம்மும் மஹாவும் கோவிலுக்குப் போய் இருக்காங்கன்னா இவ என்ன பண்றா இங்க?" என்று நினைத்தவன் எதுவுமே பேசாமல் மீண்டும் தலையை அழுத்திக் கொண்டு இருக்க, என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் அந்த இடத்திலேயே கொஞ்ச நேரம் நின்று இருந்தவள்,

"நான் இருக்கும் இடத்தில் இருக்கவே பிடிக்காமல் வெளியூருக்கு போனவர் இப்பொழுது தான் வந்திருக்கிறார்.... இப்பொழுது இங்கேயே நின்று கொண்டிருந்தோம் என்றால் நிச்சயம் கோபம் தான் வரும், திரும்பியும் வேறு எங்காவது போய் விடப் போகிறார்" என்று நினைத்தவள், உள்ளே செல்ல திரும்ப, அவள் போவதை அறிந்தவன்.....

"கொஞ்சம் ஸ்ராங்கா டி போட்டுக் கொடுங்க" என்றான்......

முதல் முறை இன்று தான் அவள் கணவன் அவளிடம் நேரிடையாகப் பேசி இருக்கிறான்......

அதில் சிறிதே மகிழ்ந்து இருந்தாலும், அவனின் "கொடுங்க" என்ற வார்த்தை மறுபடியும் மனதை குத்திக் கிழிக்க, எங்கிருந்தோ திடீரென்று அவனுடன் புகைப்படம் எடுத்த பெண் முகமும் நியாபகம் வர, கண்களில் நீர் கோர்ப்பதைத் தடுக்க முடியாமல் குனிந்த தலையை நிமிராமலே சமையலறைக்குச் சென்றவள் அவனுக்குத் தேநீர் போட ஆரம்பித்தாள்......

சிறிது நேரத்தில் இஞ்சி ஏலக்காய் தட்டி போட்ட தேநீரை சுட சுட எடுத்து வந்தவள் அதனோடே தலை வலி மாத்திரையும் எடுத்து வந்திருந்தாள்......

இன்னும் தன் கரங்களால் தலையை அழுந்து பிடித்தவாறே குனிந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு,

"தலையைக் குனிந்தே அமர்ந்திருப்பவரை என்ன சொல்லி கூப்பிட?" (திவ்யாவின் கிராமத்தில் கணவனை மாமா என்றோ அல்லது அத்தான் என்றோ தான் அழைப்பார்கள்) "இவருக்கு இருக்கிற கோபத்துக்கும், என் மேல் இருக்கும் வெறுப்பிற்கும் நான் மட்டும் மாமான்னோ அத்தான்னோ கூப்பிட்டேன் டீயை என் தலையிலேயே கொட்டினாலும் ஆச்சரியம் இல்லை" என்று நினைத்தவள்,

தயக்கத்துடன் "என்னங்க" என்றழைத்தாள்......

அவளுடைய அழைப்பில் நிமிர்ந்துப் பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் கொடுத்த தேநீரை வாங்கும் பொழுது அவனின் முரட்டு விரல்கள் அவளின் மென்மையான விரல்களுடன் உரச பாவையவளின் உடல் சிலிர்த்து மனம் அடியோடு நிலைக் குலைந்தது.

முதல் முறை திருமணமான இரண்டாவது நாள் மாடியில் இருந்து இறங்கும் பொழுது அவள் கீழே விழாமல் இருக்க அவள் இடையைப் பிடிக்கும் பொழுது ஏற்பட்ட அதே சிலிர்ப்பு...

உயிரின் வேர் வரை சென்று உடல் முழுவதும் உணர்ச்சி பிரவாகத்தில் சிக்க வைத்தது..

ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் இல்லை போல்... அமைதியாகத் தேநீரை பருகியவனின் தலை வலிக்கு அது மிகவும் இதமாகவே இருந்தது......

தேநீரை அருந்திக் கொண்டிருக்கும் பொழுதே அவன் முகம் இலகுவாக மாற, அவன் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவள் அது தந்த சிறிய தைரியத்தில் "இந்த மாத்திரையும் போட்டுக்கோங்க" என்று மாத்திரையும் அவனிடம் நீட்டினாள்.

அவளையே சில நொடிகள் பார்த்தவன் மாத்திரைக்குக் கை நீட்ட, எங்கே மீண்டும் அவன் விரல்கள் தன் கையில் பட்டுவிடுமோ என்று அச்சத்துடன் மாத்திரையை அவன் விரல் படாமல் போட, ஏற்கனவே தலை வலியில் இருந்ததவனுக்கு அவள் செயல் சீற்றத்தையே கிளப்பியது......

அவளையே பார்த்திருந்தவனின் பார்வை கூர்மையாக மாற, தன் ஆழ் மனதையே ஊடுருவி பார்ப்பது போல் இருந்த அவன் பார்வையின் வீரியத்தில் அவளுக்குச் சப்த நாடியும் ஒடுங்கி போனது...

"அப்படியே நாங்க இந்தம்மாவ தொடுறதுக்குத் தான் காத்திருக்கோம்" என்று நினைத்தவன் ஒன்றும் பேசாமல் மாத்திரையைத் தேநீரோடு உண்டவன் தேநீர் கப்பை அவளிடம் கொடுக்க முற்பட, அவள் கை நீட்டியதும் அவளைப் பார்த்தவாறே ஒன்றும் பேசாமல் தன் அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு மாடி ஏறினான்.

அவன் கோபம் அவளுக்குப் புரிந்தது... ஆனால் அவளின் நிலை தான் அவனுக்குப் புரியவில்லை...

அவன் அங்கிருந்து அகன்றதும் சமயலறைக்கு ஓடிய திவ்யா அது வரை பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டவள்.

"அப்பாடி, அவங்களோட இரண்டு நிமிஷம் தனியா இருக்கவே மூச்சு முட்டுதே... இதுல இந்த அத்தை எதை மனசுல நினைச்சுட்டு அவரை நம்ம கழுத்துல தாலிக் கட்ட சொன்னாங்க?" என்று வியர்த்து விதிர்த்து போனாள்......



அர்ஜூன் வந்து கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகியிருந்தது...

நேரம் ஆக ஆக ஸ்ரீயும் மஹாவும் வருவதாகவே தெரியவில்லை...

திருமணம் ஆன இந்த ஒரு மாதத்தில் முதன் முறை தன் கணவனுடன் ஒரே வீட்டில் தனித்து இருப்பதை நினைத்து மனம் படபடத்து திக் திக் என்று இருக்க,

"ஐயோ! இந்த அத்தை சீக்கிரம் வரக் கூடாது? இப்போ அவங்க சாப்பிட வந்தா நான் என்ன பண்றது?" என்று எண்ணிக் கொண்டே சப்பாத்திக்கு மாவைப் பிசைந்துக் கொண்டிருந்தாள்......

ஒரு வழியாகச் சப்பாத்தியை செய்து முடித்தவள் அதனை ஹாட்பாக்ஸில் வைத்துவிட்டு, குருமாவையும் இறக்கி வைத்து விட்டுத் தட்டுக்களை எடுத்து வைக்கலாம் என்று எட்டி தட்டை எடுக்கும் பொழுது,

"இன்னும் மாம் வரலையா?" என்ற கணீர் குரலில் தூக்கி வாரிப் போட கைகளில் இருந்த தட்டை நழுவ விட்டாள்......

அவனைக் கண்டு ஏற்கனவே பயந்திருந்தவளுக்குத் தட்டு விழுந்த சத்தம் மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கச் சட்டென்று விழிகளில் நீர் கோர்த்தது...

வேகமாகத் தட்டை தரையில் இருந்து எடுக்க, தட்டு கீழே விழுந்த எரிச்சலில் இருந்தவன்,

"ஒரு கேள்விக் கேட்டா உடனே பதில் சொல்ல தெரியாதா?" என்றான் படீரென்று......

திருமணம் ஆன நாளில் இருந்து தன் முகம் நோக்கி பார்க்காதவன், முதன் முறை தன்னிடம் நேரிடையாகப் பேசிக் கொண்டிருப்பதில் உள்ளம் முழுவதும் திகில் சூழ்ந்திருக்கத் தலையைக் குனிந்து கொண்டே..

"அ... அவங்க சித்தி விநாயகர் கோவிலுக்குப் போயிருக்காங்க... அது இங்க இருந்து ரொம்பத் தூரம்னு சொன்னாங்க.... வ… வர லேட்டா ஆகும்னும் சொன்னாங்க" என்று ஒரு வழியாகத் திக்கி திணறி சொல்லி முடித்தவள்,

"நீங்க சாப்பிடுறீங்களா?" என்றாள் நடுங்கும் குரலில்...

அவன் எதுவும் சொல்லாமல் அலை பேசியில் தன் அன்னையை அழைக்க, விடாமல் அழைப்புப் போய்க் கொண்டே இருந்தது...

என்ன நினைத்தானோ அழைப்பை துண்டித்தவன்,

"இல்ல, இப்போ வேண்டாம்.... மாம் வரட்டும்" என்று சொல்லிவிட்டு திரும்ப,

பட்டென்று "இல்ல, சப்பாத்தி இப்போ தான் செஞ்சேன்... நல்லா சூடா இருக்கு" என்றாள்......

எங்கிருந்தோ வந்த தைரியத்தில் சொல்லிவிட்டாள்.... சொன்னவுடன் தான் தெரிந்தது சொன்னதன் அர்த்தம்....

ஒரு வேளை சரி என்று அவர் சாப்பிட அமர்ந்துவிட்டால்????

இதயம் படப்படக்க அவனையே பார்த்திருக்க....

அவனுக்கோ ஏற்கனவே அசதி... இதில் மூன்று வாரங்களாக ஹோட்டல் சாப்பாடு... சரியான பசி வேறு அவனுக்கு......

எதுவும் பேசாமல் கை கழுவியவன் டைனிங் டேபிளில் அமர, அவளுக்குப் பயத்தில் குளிரெடுக்க ஆரம்பித்தது......

"இது தேவையா??? அவரே பேசாமல் போயிருப்பார்... பெரிய இது மாதிரி சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு, இப்ப என்ன பண்றது?" என்று மானசீகமாகத் தலையில் கொட்டியவள்,

உள்ளும் புறமும் நடுங்க வேறு வழியில்லாமல் "அவரைச் சாப்பிட சொல்லிட்ட, அப்புறம் இப்படிப் பயந்தா என்னா ஆவது? எப்படிப் பரிமாறுவது?" என்று நினைத்துக் கொண்டு உணவை எடுத்து மேஜையில் வைக்க,

அப்பொழுதும் தலையை அவன் பிடித்தபடியே அமர்ந்திருக்கவும் மாத்திரை சரியாக வேலை செய்யவில்லை போல என்று நினைத்துக் கொண்டே பரிமாறினாள்......

தன் கணவனுக்கு இத்தனை அருகில் நிற்பது மேலும் பதட்டத்தையே கொடுக்கப் பரிமாறும் பொழுது அவள் கை விரல்கள் அனைத்தும் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டு இருப்பதைக் கவனித்தவன் லேசாக நிமிர்ந்துப் பார்க்க, அவன் கண்களில் முதலில் பட்டது அவளது இடையே......

அடர்ந்த வைலட் நிற புடவைக்கு இடையில் பளீரென்று தெரிந்த குறுகி சிறுத்த அழகான வழவழப்பான தன்னவளின் இடையை முதல் முதலாக அதுவும் இத்தனை அருகில் பார்த்தவனின் மனம் தடுமாறி துடிக்க ஆரம்பித்தது....

அதன் அழகையும் தன்னை ஈர்க்கும் அதன் சக்தியையும் தவிர்க்க முடியாமல் பார்த்திருந்தவனின் உடலெங்கும் உணர்ச்சி பிரவாகம் ஊற்றெடுத்து இருக்க,

தன் கணவன் தன் இடையைப் பார்ப்பதை கவனியாமல் பரிமாறுவதிலேயே குறியாக இருந்தவள் தன்னிச்சையாகப் புடவையை இழுத்து இடுப்பை மூட,

"பெரிய இவ, நாங்க அப்படியே பார்த்து இரசிக்கப் போறோமாக்கும்" என்று நினைத்தவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்......

ஆனால் தன்னை மறந்து தன் விழிகள் தன்னவளின் அழகில் கணவனின் உரிமையோடு மேய்ந்ததை ஒத்துக் கொள்ளத் தான் அவனுக்கு மனதில்லை... உடனே ஒத்துக் கொண்டால் அவன் அர்ஜூன் இல்லையே!!!!

ஏதோ உள்ளுணர்வு உறுத்த நிமிர்ந்து பார்த்தவள் தன் கணவன் தன்னையே பார்த்திருப்பதைக் கண்டதும் அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல்,

"ஐயோ! இதுக்கு மேலே நாம் இங்கிருந்தோம் அவ்வளவு தான், நிச்சயம் சின்னப் பிள்ளை மாதிரி அழுதுவிடுவோம்" என்று எண்ணியவள் தண்ணீர் எடுக்கும் சாக்கில் அவனிடம் இருந்து நகர்ந்தாள்......

மிகுந்த பசியில் இருந்தவனுக்கு அவள் செய்த சப்பாத்தியும் குருமாவும் அமிர்தம் போலவே இருக்க, சற்று அதிகமாகவே உண்டவன் எழுந்து கை கழுவ சென்றான்......

தண்ணீரை அவன் அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவள் அடுப்பில் ஏதோ வேலை செய்பவள் போலே எதையோ செய்து கொண்டிருக்க, கை கழுவியவன்

"ஐ ஆம் கோயிங் டூ ஸ்லீப்... ஐ வில் ஸீ மாம் டுமாரோ [I am going to sleep. I will see mom tomorrow]" என்றான்.


அவன் கூறிய ஆங்கில வார்த்தைகள் சட்டென்று புரியாமல் அவள் திருதிருவென்று விழிக்க "இது கூடப் புரியாதா? அப்போ இங்கிலீஷ் நாலேட்ஜ் சுத்தம். ஐயோ! மாம், என்ன மாம் இது? அப்படி நான் என்ன பாவம் மாம் செய்தேன்?" என்று மனதிற்குள்ளே புலம்பியவன்,

"எனக்குத் தூக்கம் வருது, நான் காலையில் மாம்கிட்ட பேசிக்கிறேன்" என்றவன் திரும்பி செல்ல எத்தனிக்க, எதையோ நினைத்தவன் மறுபடியும் திரும்பி,

"மாம்ன்னா என்னன்னு புரியும்ல" என்றவனின் தொனியில் அத்தனை குறும்பு தெரிந்தது......

அவன் தன்னைக் கிண்டல் செய்கிறான் என்று அவளுக்குப் புரியவே சில விநாடிகள் பிடித்தது.... புரிந்ததும் மிகுந்த அவமானமாக இருக்கச் சட்டென்று......

"நான் ப்ளஸ்டூ வரைக்கும் படிச்சிருக்கேன்" என்றாள்......

அப்பா, அப்படியே ஐ ஏ எஸ் படிப்பு என்று எண்ணியவன் "ஐ ஏ எஸ் ஏதும் படிச்சிரலேயே " என்று சொல்லியும் காண்பித்துவிட்டு அவள் முக மாற்றத்தை கவனித்து இரசித்தவன், அடக்கமாட்டாமல் மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்றான்......

அவன் சென்றுவிட்டான் என்பது மூளையில் உறைக்கவே சில நொடிகள் பிடித்தது....

அவன் தன்னருகில் இருந்த வரை ஏதோ அழுந்தி பிடித்திருந்தது போல் உடலும் மனமும் இறுகி இருக்க, அவன் சென்றதும் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டவளுக்கு "இப்படி எத்தனை நாட்கள் தான் இருக்க முடியும்? பேசாமல் திரும்பி ஊருக்கு போய்டலாமா?" என்று கூடத் தோன்றியது...

ஆனால் தன் தாயையும் தந்தையையும் நினைத்தவள் வேறு வழியின்றித் தன் மனதை அடக்கிக் கொண்டாள்......

அங்கு தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்தவனுக்கோ திவ்யாவின் நினைப்பே மீண்டும் மீண்டும் வந்து எழுந்தது...

அவள் தயங்கி தயங்கி பேசியது, தேநீர் கொடுத்தது, அவன் தலை வலியை சட்டென்று உணர்ந்து மாத்திரைக் கொடுத்தது, திடீரென்று அவன் குரலை கேட்டதும் அதிர்ந்து தட்டை நழுவ விட்டது, சுவையான டிபனை கை நடுங்கிக் கொண்டே பரிமாறியது, பின் ஆங்கிலம் தெரியாதா என்ற அவன் கேள்விக்கு வெடுக்கென்று தன் படிப்பை பற்றிச் சொன்னது...

எல்லாமாக ஒன்றன் பின் ஒன்றாக அவன் மனதில் வலம் வந்து அவன் சித்தத்தைச் சிதைத்தது....

இவற்றை எல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தவனின் மனம் இறுதியில் அவளின் இடையில் வந்து நின்றது......

அதுவும் அவன் பார்ப்பது தெரியாவிட்டாலும், அவள் தன்னிச்சையாகச் சட்டென்று புடவையை இழுத்து இடையை மறைத்தது நியாபகத்தில் வர அவனை அறியாமல் ஒரு மெல்லிய புன்சிரிப்பு அவன் முகத்தில் படர்ந்தது.

பிறந்தது முதல் நகர வாழ்க்கையிலேயே வாழ்ந்தவன்...... மேற்படிப்பை லண்டனில் படித்தவன், எப்போழுதும் தன்னைச் சுற்றி பணக்காரர்கள் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடனேயே வாழ்ந்து வந்தவன்......

அவன் இப்படி ஒரு கிராமத்துப் பெண்ணை வாழ்நாளில், அதுவும் இத்தனை அருகில் இருந்து பார்த்ததில்லை, பழகியதில்லை......

திருமணம் ஆன நாளன்று அவளைத் தன் வாழ்க்கையில் இருந்து எத்தனை விரைவில் தூக்கி எறிய முடியுமோ அத்தனை சீக்கிரம் அவளை விரட்ட வேண்டும் என்று நினைத்தது என்னவோ உண்மை தான்...

ஆனால் மறு நாள் அதிகாலையில் படிகளில் தான் மோதியதும் அவள் விழுந்து விடாமல் இருக்கத் தான் தன் ஒரு கரத்தால் அவளின் தளிர் மேனியை இறுக்கப் பற்றியிருக்க, மற்றொரு கரம் அவளின் மிருதுவான வெற்றிடையை வளைத்து பிடித்து இருக்க, தடுமாற்றத்தில் அவளின் பூக்கரங்கள் தன்னை இறுக்கப் பற்றியதும் அச்சத்தால் விழி விரிய தன்னைப் பார்த்திருந்த அவளின் மலர் முகமும் அவன் உள்ளத்தை வேர் போல் ஊடுருவி சென்று ஆழ புதைந்திருந்தது...

தான் மும்பை கிளம்பிய அன்று வாயிலில் நீர் கோர்க்க தன்னையே பார்த்திருந்தவளின் விழிகளுக்குள் அவன் அவனையும் அறியாமல் தொலைத்திருந்தான்...

தன் அலை பேசியில் அவளின் புகைப்படத்தைச் சுயநிலையை அடியோடு இழந்து பார்த்திருந்த பொழுது உணர்வுகளின் சுழற்ச்சியால் உணர்ச்சிகள் அத்து மீறி தெறிக்கும் நிலையில் இருந்ததை அவன் உணரவில்லையோ??

வேற்றுப் பெண்கள் மீது வராத இந்த உரிமை, உணர்ச்சி பிரவாகம் இவளின் மேல் மட்டும் வந்ததற்குக் காரணம் என்ன?

இவை அத்தனையும் அவள் தன்னவள்... தனக்கு முழு உரிமை உள்ள மனைவி என்று ஆழ்மனதில் புதைந்திருந்த எண்ணத்தினால் தானே...

எப்பொழுது என் மனதில் நுழைந்தாள் அவள்?? இதோ இப்பொழுதும் என் மனம் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பது வியப்பாக இருக்கிறது...

எது அவளைப் பற்றி நினைக்கத் தூண்டுகிறது.... அது அவளின் அமைதியான அழகா? இல்லை வெகுளித்தனமா? இல்லை அவளது பயமா??

எவ்வளவு ஆழ்ந்து யோசித்தும் அவனுக்குக் குழப்பம் தான் மிஞ்சியது..

ஆனால் என்னவோ அவனின் நினைப்பு இப்பொழுது இந்த நிமிடம் அவளிடம் தான்... அதனை நினைத்தவன் அவனாலேயே அவனின் மனம் போன போக்கை நம்ப முடியவில்லை......

ஒரு பக்கம் அவனது அந்தஸ்து, கௌரவம், தன்னை ஒரு சூழ்நிலை கைதியாக மாற்றி வஞ்சித்துவிட்டார்களே என்ற கோபம்.... மறு பக்கம் அவன் மனம் அறியாமலே அவன் மனதிற்குள் நுழைந்துவிட்ட காதல்...

வெகு நேரம் வரை அவளையே நினைத்திருந்தவனின் மனம் நிரம்பியிருக்க முதன் முறை தன் மனைவியின் கையால் உணவு பரிமாறியதால் வயிறும் நிரம்பியிருக்க நன்கு உறங்கிப் போனான் திவ்யாவின் கணவன்.

தொடரும்..




 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top