JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episode 8 & 9

JLine

Moderator
Staff member



அத்தியாயம் - 8

கோவிலுக்குச் சென்று இருந்த ஸ்ரீயும் மஹாவும் வீட்டிற்குத் திரும்புவதற்கு நீண்ட நேரம் பிடித்திருந்தது..

வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஸ்ரீ,

"சாரிடா திவ்யா, இன்னைக்கு ரொம்ப நேரம் ஆச்சு.. பாவம் நீ எவ்வளவு வேலை பண்ணியிருக்க" என்றார்......

"இல்லை அத்தை, ஒன்னும் பெரிசா பண்ணலை... அவங்க ரொம்பத் தலை வலியோட வந்திருந்தாங்க.... அதனால தான் சீக்கிரம் சாப்பிட்டுட்டு படுக்கட்டுமேன்னு சப்பாத்தியும் குருமாவும் பண்ணினேன்"

"யாருடா, அருணா?"

"இல்லத்த, அவங்க, மும்பாய்ல இருந்து வந்துட்டாங்க..."

அவள் சொல்லும் போதே அவளின் குரலும் நடுங்கியது...

அர்ஜூன் திவ்யாவின் கையால் சாப்பிட்டானா?... ஸ்ரீயால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை...

வியந்தவர் மஹாவை திரும்பி பார்க்க, மஹாவின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்திருந்தது... ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டவர்கள் திவ்யா அறியாமல் சிரித்துக் கொண்டார்கள்......

பின் இப்பொழுது தான் ஸ்ரீ மனம் உருக தன் மகனும் மருமகளும் ஒன்று சேர வேண்டும் என்று கோவிலில் வேண்டிக் கொண்டார்......

ஆனால் தன் வேண்டுதல் இத்தனை விரைவில் நிறைவேற ஆரம்பித்துவிட்டதை அவரால் நம்ப முடியவில்லை....

ஸ்ரீயின் மனமும் முகமும் அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த..

"சரிடா... அர்ஜூன் நல்லா சாப்பிட்டானா?" என்றார்......

"ஆமாம் அத்த, ரொம்பப் பசி போல... அதுவும் இல்லாம அங்க மும்பைல என்ன சாப்பிட்டாங்களோ?" என்றாள்.

கணவன் மேல் தன் மருமகளின் கரிசனத்தைப் பார்த்தவருக்கு உள்ளம் பூரித்தது...

திருமணம் முடிந்து வந்த இரண்டு நாட்களிலும் அவனின் உதாசீனம் திவ்யாவிற்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருந்தது என்பதை மற்றவர்களை விட அவர் தானே அதிகம் உணர்ந்திருந்தார்...

என்ன தான் தன் மகனின் மனம் மாற்றத்திற்காக ஒவ்வொரு நிமிடமும் அவர் காத்திருந்தாலும், அவரின் ஆழ் மனதில் அது நடக்க இன்னும் பல காலம் திவ்யா காத்து இருக்க வேண்டும் என்றே தோன்றியிருந்தது...

அதற்குக் காரணம் அவர் தன் மகனை பற்றி நன்கு புரிந்து இருந்ததே...

ஆனால் அர்ஜூனின் மனம் திருமணத்தன்று தன் திருமணத்தையே வெறுத்தது தான்... இல்லை என்று சொல்வதற்கு இல்லை...

ஆனால் அந்த வெறுப்பு ஒரு நாள் தான் நீடித்தது...

அவனுக்கே தெரியாமல் அவன் மனையாளின் முகம் அவனின் இதயத்தில் படிந்து அவன் ஆத்மாவை ஊடுருவியிருக்கிறது என்பதை அவன் தான் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை...

காதல் சில நேரங்களில் கண்டதும் வரும்...

சில நேரங்களில் பரிதாபத்தினால் வரும்....

சில நேரங்களில் திருமணத்திற்குப் பிறகு வரும்... பெற்றோர் நிச்சயத்த திருமணங்களில் வருவது போல்!

சில நேரங்களில் உரிமையில் வரும்...

ஆனால் சில நேரங்களில் ஏன்? எதற்கு? எப்படி? என்றே தெரியாமலே ஒருவரின் மேல் வரும்...

இங்கு அர்ஜூனின் காதலும் அப்படித் தானோ????

மற்ற அனைவரும் உணவு அருந்தி முடித்தவுடன் ஸ்ரீயும் திவ்யாவும் டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்...

"திவ்யா, அர்ஜூனுக்குத் தலைவலின்னு சொன்னல்ல, அவனா சொன்னானா?"

"இல்லத்த, அவங்க தலைய பிடிச்சுட்டு உக்கார்ந்து இருந்தாங்க.... நான் தான் தலைவலியாத் தான் இருக்கும்ன்னு மாத்திரை குடுத்தேன்"

திவ்யாவின் அன்பும் பொறுமையும் கரிசனமும் நிச்சயம் அர்ஜூனை அவள் பால் விரைவில் இழுத்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது ஸ்ரீக்கு...

ஆனால் அவர் மகன் ஏற்கனவே அவளிடம் விழுந்துவிட்டான் என்பது அவனுக்கே தெரியாத போது பாவம் இவருக்கு எப்படித் தெரியும்???

"கடவுளே, இந்தச் சின்னஞ் சிறுசுகள் சேருவதற்கு ரொம்ப நாள் இல்லன்னு நினைக்கிறேன்.... அத எப்படியும் நிறைவேற்றி வைப்பா, சீக்கிரம் குலதெய்வ கோவிலுக்கு வந்து பொங்கல் வைக்கிறேன்" என்று மனதிற்குள்ளே வேண்டிக் கொண்டார் ஸ்ரீ...

மறுநாள் காலையில் வழக்கம் போல் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு மற்ற வேலைகலையும் முடித்துவிட்டு காலை டிபனை செய்ய ஆரம்பித்தாள் திவ்யா.....

ஸ்ரீயும் தெய்வானையும் அவளுக்கு உதவி செய்து கொண்டு இருக்க, அர்ஜூன் சமையல் அறைக்குள் நுழைந்தான்.

"மாம்... எனக்கு இன்னக்கு நிறைய வேலைகள் இருக்கு... வீட்டிற்கு வர லேட்டாகும்" என்றவன் வெளியே கிளம்ப எத்தனிக்க,

"அர்ஜூன்... சாப்பிட்டுவிட்டு போப்பா" என்றார் ஸ்ரீ.....

"நோ மாம்... த்ரீ வீக்ஸ் இங்க இல்லாததால நிறைய மீட்டிங்ஸ் பெண்டிங்கல இருக்கு..... சில காண்ட்ராக்ட்ஸ் வேற சைன் பண்றதுக்கு முன்னாடி டீட்டெய்ல்ஸ் பார்க்கனும்.... எனக்கு மூச்சு விடறதுக்குக் கூட நேரம் இருக்காது... சாப்பாட வெளியே பார்த்துக்கிறேன்" என்றவன் திரும்பி சென்றான்.....

சமையல் அறையின் வாயில் தாண்டி செல்லும் பொழுது ஒரு விநாடி தாமதித்தவன் திரும்பி திவ்யாவை ஒரு பார்வைப் பார்க்க, தன் கணவனின் இந்தத் திடீர் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குச் சத்தியமாக விளங்கவில்லை.....

ஆனால் வழக்கம் போல் ஒரு பய உருண்டை வயிற்றில் உருளவே செய்தது...

அலுவலகம் சென்ற அர்ஜூனும் என்றும் போல் அன்றும், அதற்கு அடுத்து வந்த நாட்களும் வேலை பழு அதிகமாகி தொழிற்சாலைகளைச் சந்திப்பது, தொழிற்கூட்டங்களில் பங்கேற்பது, அலுவலக வேலைகள் என்று மூழ்கி போக, காலையில் வெகு சீக்கிரம் வெளியே செல்வதும் இரவில் வெகு நேரம் கழித்துத் திரும்பி வருவதுமாக இருந்தான்..

ஒரே வீட்டில் இருந்தும் திவ்யாவின் கண்களில் அவன் படுவது அபூர்வமாகி போனது...

ஒரு விதத்தில் அவனின் எதிரில் தான் இல்லாமல் இருப்பது நல்லது தான் என்று தோன்றினாலும் ஏனோ தன்னால் தான் தன் கணவன் வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறானோ என்றும் தோன்ற ஆரம்பித்தது....

மனதிற்குள் உழன்று கொண்டே இருந்த திவ்யா ஒரு நாள் ஸ்ரீயிடம் கலங்கிய முகத்துடன்....

"அத்த என் மனசுக்கு இது சரின்னு படல அத்த.... அவங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு இப்போ எனக்கு நல்லா புரியுது... அம்மா எப்பவும் சொல்வாங்க... ஆம்பளைங்க வெளியில எவ்வளவோ பிரச்சனைகளைச் சந்திச்சுட்டு வீட்டுக்கு வருவாங்க... அதனால வீட்டுல அவங்களுக்கு ஒரு நிம்மதியான சூழ்நிலை இருக்கனும்... வீட்டுல இருக்கிற பொம்பளைங்க அவங்க மனச புரிஞ்சிகிட்டு அவங்கள சந்தோஷமா வச்சிக்கனும்... இல்லாட்டி அவங்களால் வெளியில நிம்மதியா வேலைப் பார்க்க முடியாதுன்னு சொல்வாங்க.... இப்போ அவருக்கு என்னால இந்த வீட்டுல நிம்மதி இல்ல... அவங்க உங்க கூட உக்கார்ந்து பேசறதோ, சாப்பிடறதோ இல்லை..... எல்லாத்துக்கும் நான் தான் காரணம்... அதனால நான் என் வீட்டுக்கு போயிடறேன்" என்றாள் விழிகளில் நீர் கோர்த்து இருக்க....

அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்த ஸ்ரீக்கு மனம் கனக்க...

"திவ்யா, வெளியில் போற ஆம்பளைங்களுக்கு மட்டும் இல்லை... வேலைக்குப் போற பொம்பளைங்களுக்கும் நீ சொல்றது சரி... வீட்டில் அவங்களுக்கு உகந்த சூழ்நிலை இல்லைன்னா எல்லாருக்கும் கஷ்டம் தான்... அது ஆண்களுக்கும் பொருந்தும், பெண்களுக்கும் பொருந்தும்... ஆனால் நீ நினைக்கிற மாதிரி எப்பவும் அர்ஜூன் நிறைய நேரம் வீட்டுல இருக்க மாட்டான்... அவனுக்கு அவங்க தாத்தாவை போல் எப்பவும் ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கனும்.... அவன் பிஸியா இல்லன்னா தான் அவனுக்குப் பிரச்சனை... அதனால அவன் இப்போ இப்படி இருக்கிறதுக்கு நீ தான் காரணம்னு நினைச்சிக்காத, என்ன?" என்றார்....

ஆனாலும் திவ்யாவின் மனதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை... திவ்யாவின் தந்தை சிவசுப்ரமணியத்திற்கு வீட்டில் எப்பொழுதும் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தே ஆக வேண்டும்...

என்ன தான் கலாவும் வெளியில் வேலைப் பார்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினாலும் தன் அசதியைக் காட்டாது தன் கணவனுக்காகப் பொறுமையைக் கடைப்பிடிப்பார்... இன்னும் சில ஆண்கள் அப்படித் தான் இருக்கிறார்கள்...

அவர்களையே பார்த்து வளர்ந்து வந்தவளுக்கு இன்னும் அர்ஜூன் வீட்டில் அதிக நேரம் செலவிடாதது தன்னால் தான் என்று எண்ணி தன்னையே வருத்திக் கொண்டாள்..

ஆனால் திருமணம் ஆன மறு நாளும் அதற்கு அடுத்து வந்த அவன் மும்பையில் கழித்த சில நாட்களும் அவனுக்கும் அதே போன்று எண்ணங்கள் இருந்தது என்னவோ உண்மை தான்...

ஆனால் இப்பொழுது அவன் வெளியில் அதிக நேரம் தங்குவதற்குக் காரணம் வழக்கம் போல் அவனின் தொழிற்களும் வேலை பழுவும் தான்...

திவ்யாவிற்குத் தான் அது புரியவில்லை... புரியவைப்பது அவள் கணவனின் கடமை அல்லவா????




அன்று மஹாவின் கல்லூரியில் அவர்களின் துறைகளுக்குள் நடக்கும் ஒரு சின்ன விழா....

அனைத்துத் துறை மாணவர்களுக்கும் இடையில் விளையாட்டுப் போட்டிகள், நடன நாடக போட்டிகள் மற்றும் இன்னும் சில திறமை சார்ந்த போட்டிகளும் நடக்கும் நாள்...

அன்று முதன் முறையாக மஹாவிற்குப் புடவை அணிந்து செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது....

அதுவும் திவ்யா வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளைப் புடவையில் பார்த்தவள், நம்மை விடச் சின்னப் பெண் எத்தனை அழகாகப் புடவை உடுத்துகிறார் என்று நினைத்தவள் தானும் அணிய வேண்டும் என்று சொல்ல, திவ்யா அவளுக்கு உதவி செய்வதாகச் சொன்னாள்....

மஹாவிற்குக் காலையில் எழுந்ததில் இருந்து "புடவை கட்டினால் தனக்கு நன்றாக இருக்குமா? நடக்கும் பொழுது தடுத்து கீழே விழுந்து விடுவோமா? உடம்பை நன்றாக மூடியிருக்குமா?" என்று ஒரே கவலை....

ஏனெனில் அவளுக்கு இப்பொழுது கொஞ்ச நாட்களாக அவளின் சீனியர் கோகுலின் எண்ணம் புரிய ஆரம்பித்து இருந்தது....

அன்று ராகிங் நாளன்று பேசியவன் தான்... அதற்குப் பிறகு இத்தனை நாளும் அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறானே ஒழிய அவளிடம் பேச முயற்சிக்கவில்லை....

ஆனால் அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்த்திக் கொண்டே இருந்தது.

முதல் நாள் மஹாவைப் பார்த்த கோகுல் அவளின் அழகில் மயங்கி இருந்தாலும் அதற்குப் பின் அவள் அருணுடன் வர துவங்க அருணின் பணக்காரத் தோரணையிலும், அவன் ஓட்டி வந்த காரில் இருந்தும் அவர்களின் வசதி புரிபட விசாரிக்க ஆரம்பித்தவன், அர்ஜூனைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த விநாடியே சப்த நாடியும் அடங்கி ஒடுங்க அமைதியாகி போனான்...

அர்ஜூனின் செல்வாக்கு இந்தியா முழுவதும் பிரபலம்... தொழில்வட்டாரத்தில் அவனை எதிர்ப்பவர்களை அவர்களுக்கே தெரியாமல் அழிப்பதில் கில்லாடி....

அவனின் ஒரே விரல் அசைவில் அரசியலே அடியோடு மாறக்கூடும் என்பதனை அறிந்திருந்த அரசியல்வாதிகளுக்குள் அவனின் அதிகாரத்தை நினைத்து எத்தனை பயம்?

அவனை அணுகுவது சிங்கத்தின் குகைக்குள் தனித்துச் செல்வது போல் என்று அவனைப் பற்றிப் பல விதமாகக் கேள்விப் பட்டவன் இருந்தும் மஹாவின் மேல் படிந்திருந்த தன் மனதை அகற்ற முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் காய் நகர்த்த வேண்டும் என்று முடிவு செய்தான்.

அதன் படி அதிரடியாக மஹாவை நெருங்க முயற்சிக்காமல் அவளைத் தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தான்....

சிங்கத்தின் பாதுகாப்பில் இருந்த புள்ளி மானை சிங்கமும் அறியாமல் புள்ளி மானும் அறியாமல் வேட்டையாடும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான் அந்தக் குள்ள நரி....

ஒரு வழியாக மஹாவிற்குப் புடவைக் கட்டி முடித்த திவ்யா அதற்கேற்றார் போல் சடைப் பின்னி, மல்லிகைச் சரத்தை சூட்டியவள்,

"மஹா அண்ணி... என்னமோ உங்கள பொண்ணு பார்க்க வராங்க போல் இருக்கு உங்கள பார்த்தா... ஒரு வேளை மாப்பிள்ளை யாராவது வந்தா உடனே உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு போய்டுவாங்க" என்று வெள்ளந்தியாகச் சிரித்தவாறே சொல்ல,

அவளின் வெள்ளை மனம் பார்த்த மஹாவிற்கு "ஏன் அண்ணனுக்கு இவங்களைப் பிடிக்கவில்லை? இவங்கள மாதிரி குழந்தை தனம் உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்தக் காலத்தில்?" என்றே தோன்றியது....

அவளின் யோசனையைப் பார்த்த திவ்யா...

"அண்ணி... இப்பவே கணவு காண ஆரம்பித்துவிட்டீர்களா?" என்ற கேட்க,

சட்டென்று வினோத்தின் முகம் மஹாவின் கண் முன்னே தோன்றியது...

ஒரே ஒரு முறை தான் அவள் அவனைப் பார்த்திருந்தது...

அதன் பின் அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.... இருந்தும் அவனின் முகம் கல்வெட்டு போல் அவளின் பூ மனதில் பதிந்திருந்தது....

அவனின் நினைவும் திவ்யாவின் பேச்சையும் கேட்டவளுக்கு நாணமும் சேர்ந்து கொள்ள, "போங்க அண்ணி" என்றவள் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டவள்..

"கடவுளே, நான் பத்திரமா இந்தப் புடவையை இப்போ கட்டியிருக்கிற மாதிரியே திரும்பி வீட்டிற்கு வந்து சேர வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள்....

கீழே ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த ஸ்ரீயும் பாலாவும் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க, பெற்றவர்களின் கண்கள் ஆசையுடன் தழுவியது தங்கள் இளவரசியின் அழகிய தோற்றத்தை...

பெருமை வழியும் பார்வை பார்த்திருந்தவர்களைக் கண்ட மஹாவிற்கு வெட்கம் வர புடவையை அள்ளி பிடித்தவள் தன் அன்னையை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.....

அரக்கு நிறத்தில் நெய்யப்பட்ட சிறிய சரிகை போடப்பட்ட புடவையை அணிந்து சொர்ண விக்கிரகத்தைப் போல் இருந்த அவர்களின் செல்ல மகள் புடவையில் அத்தனை பாந்தமாக இருந்தாள்...

அடர்ந்த வண்ண புடவை அவளது சந்தன நிற மேனியில் ஒட்டி இருக்கப் பளிங்கு கல்லில் செய்த தேகம் போல் ஓவிய வடிவத்தில் இருந்தவளின் லட்ஷணம் பெற்றோராய் அவர்களின் உள்ளத்தைப் பூரிக்கச் செய்தது...

ஸ்ரீயை அணைத்த படி நின்று இருந்தவளை தன் அறையில் இருந்து வெளி வந்த அருண் பார்க்க, பார்த்தவனிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை...

எப்பொழுதும் டாப்ஸ், ஜீன்ஸ் என்று அணிந்து வலம் வரும் தங்கையை முதன் முதலில் புடவையில் பார்க்கவும் அவளின் அழகு பன் மடங்காக அதிகரித்ததாகவே தோன்றியது அவனுக்கு...

"மாம், யாரு மாம் இவங்க? செம்மையாக இருக்காங்க?" என்று அழகாய் சிரிக்க...

"டேய் தங்கையை ஸைட் அடிப்பவன் உலகத்திலேயே நீ ஒருத்தன் தாண்டா" என்று ஸ்ரீ கிண்டலடிக்க, அங்கே கலகலப்புக் கூடியது....

"யூ லுக் வெரி ப்ரெட்டி ப்ரின்ஸஸ் [You look very pretty princess]" என்று கன்னத்தில் தட்டியபடியே அருண் கூற வெட்கத்தில் அவள் தலை குனிய,

"அச்சச்சோ இப்படி வெட்கம் எல்லாம் படாதம்மா.... காலேஜில் பசங்க தாங்க மாட்டாங்க" என்று மேலும் கிண்டல் அடிக்க முகம் சிவந்தவள் ஓடிப் போய்க் காரில் ஏறினாள்.

வழக்கம் போல் அருண் கல்லூரியில் அவளை இறக்கி விடத் தனியாக நடந்து வந்தவள் தன் தோழிகளைப் பார்த்து வேக அடியெடுத்து வைக்க...

சொல்லி வைத்தார் போல் எங்கிருந்தோ பைக்கில் வந்த அந்த மாணவன் அவள் மேல் இடிப்பது போல் வர சட்டென்று நகர்ந்தவள் புடவை தடுக்கி கீழே விழுந்தாள்....

முதல் முறையாகத் தன் கனவுக் கன்னியை புடவையில் பார்த்த கோகுல் அவளின் அழகில் கிறங்கியவன் தன் நண்பனை அழைத்து அவள் கீழே விழ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யச் சொன்னான்...

மனம் முழுவதும் அழுக்கு நிறைந்து இருந்த காமுகனுக்கு இதனை விட வேறு என்ன எண்ணங்கள் வரும்???

அவன் நினைத்தது போல் மஹாவும் கீழே விழ அவளின் தோழிகள் அவளை நோக்கி ஓடி வருவதற்குள் அவள் விழுந்திருந்த இடத்தை அடைந்த கோகுல் அவளுக்கு முன் தன் கரத்தை நீட்டினான்....

கீழே விழுந்த அதிர்ச்சியில் புடவை எங்கு விலகி இருக்குமோ என்ற கலக்கத்தில் இருந்தவளுக்குக் கை நீட்டியவன் யாரென்று கூடப் பார்க்கத் தோன்றாமல் அவனின் கையைப் பிடித்து எழுந்தவளை நெருங்கியவன் ஆறுதல் சொல்வது போல் அவளின் இடைப் பிடிக்க, சட்டென்று சுதாரித்தவள் அவனைத் தள்ளி விட்டாள்....

"ஹே.. மஹா.. ரிலாக்ஸ்... நீ மேலும் விழுந்து விடாம இருக்கத் தான் நான் உன்னைப் பிடிச்சது" என்று கூற,

அவனின் முகம் என்னவோ அவள் விழுந்ததை நினைத்துக் கலங்கியது போல் தான் தெரிந்தது....

ஆனால் அவனின் கண்களில் ஏறிய பளபளப்பும், அதில் தெரிந்த அந்த வித்தியாசமான மாற்றத்தையும் கண்டவள் அருவருப்புடன் முகம் சுளித்து விருட்டென்று தன் தோழிகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்....

இவ்வளவு நாட்கள் தூரத்தில் இருந்து அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு இத்தனை நெருக்கத்துடன், அதுவும் அவளின் இடையை முதன் முறையாகப் பற்றியிருந்தது அவனின் அடங்காத மோகத்தை இன்னும் தூண்டிவிட்டது...

கண்களில் இருந்து அவள் மறையும் வரை அவளின் பின்னழகை ரசித்து வேடனின் வேட்கையோடு பார்த்திருந்தவன் அவளை அடையும் நாளை எண்ணி கனவு காண ஆரம்பித்தான்.

ஆனால் அந்த நாள் எத்தனை விதமான ஆபத்தான அசந்தர்ப்பமான மணித் துளிகளை எத்தனை பேருக்குக் கொண்டு வரப் போகிறது என்பதை அவன் அறியவில்லை.... அவனின் காமக் கண்கள் அதனை மறைந்திருந்தது...


அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.... அதிசயமாக வீட்டில் இருந்த அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்...

எப்பொழுதும் தொழிற்களிலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் அர்ஜூனிற்குச் சனி ஞாயிறு என்றெல்லாம் கிடையாது...

அதே போல் தான் அருணும்...

மற்ற நாட்களில் கல்லூரிக்கு சென்று விடுபவன் விடுமுறை நாட்களில் அர்ஜூனிற்கு உதவி செய்வதற்காகவும், தொழிலை கற்று கொள்வதற்காகவும் அர்ஜூனுடனோ அல்லது தன் தந்தையுடனோ சென்று விடுவான்...

ஆக இன்று போல் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்திருப்பது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு எதிர்பாராத ஆச்சரியம்...

தந்தையுடனும் அருணுடனும் தீவிரமாக எதனைப் பற்றியோ ஆலோசித்துக் கொண்டு இருந்த அர்ஜூனை ஸ்ரீயின் தொண்டை கனைப்பு அவரை நோக்கி திசை திருப்பியது...

ஏனெனில் மும்பையில் இருந்து அர்ஜூன் திரும்பி வந்து இன்றோடு கிட்டத்தட்ட இருவாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது...

அவன் திரும்பி வந்ததில் இருந்து தன் திருமணத்தைப் பற்றியோ அல்லது திவ்யாவை அவள் வீட்டிற்கு அனுப்புவதைப் பற்றியோ பேசி இருக்கவில்லை...

ஆதலால் இது போல் இனி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று தோன்ற...

"அர்ஜூன்... நானும் அப்பாவும் ஒரு முடிவு எடுத்திருக்கிறோம்பா... உன் கல்யாணம் தான் யாருக்கும் தெரியாம நடந்திடுச்சு.... பட் இன்னும் நம்ம சொந்தக்காரர்களுக்கு எல்லாம் நாம தெரியப் படுத்தல.... அப்புறம் திவ்யாவ யாருக்கும் தெரியாது... அதனால ஒரு கெட் டு கெதர் மாதிரி அரேன்ச் பண்ணி உங்க கல்யாணத்தை நம்ம சொந்தக்காரங்களுக்கு அறிவிக்கலாம்னு இருக்கோம்... உனக்கு எப்போ ஒத்து வரும்னு சொல்லுப்பா" என்றார்....

இந்த விஷயம் யாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்குமோ இல்லையோ ஆனால் திவ்யாவிற்குப் பேரதிர்ச்சியாக இருந்தது...

தன் கணவன் அவளுடன் அதே வீட்டில் எப்பொழுதும் இருக்கிறானோ இல்லையோ ஆனால் இந்த இரு வாரங்களாக அவன் அமைதியாக இருக்கிறான்... அதுவே அந்தச் சின்னப் பெண்ணிற்குப் பெருத்த நிம்மதி...

இதில் இது வேறையா என்றே இருந்தது அவளுக்கு...

தன் மாமியார் பேசி முடித்ததும் சட்டென்று தன்னை அறியாமல் அர்ஜுனைத் திரும்பி பார்க்க, அவனும் அதே சமயம் அவளைப் பார்க்க சரேலென்று தலையைக் குனிந்துக் கொண்டாள்.

"எல்லாத்தையும் செய்து விட்டு ஆவுனா தலைய குனிஞ்சுக்கறா" என்று நினைத்தவன்,

"மாம்... வாட் டு யு மீன் [Mom.. What do you mean?] நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா? இப்போ இது தேவையா? என்றான் அழுத்தமான குரலில்...

கேள்வி என்னவோ தன் அன்னையிடம் தான்... ஆனால் பார்வை இன்னும் தரையிலேயே புதைந்து விடும் அளவிற்குத் தலை கவிழ்ந்து இருந்த தன் மனையாளின் மீது தான் இருந்தது....

"அர்ஜூன்... யெஸ்.. இப்போ இது தேவை தான்.... கிட்ட தட்ட ஒன்றறை மாசம் ஆகப் போகுது உங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு.... நாம கண்டிப்பா உங்க கல்யாணத்தைப் பற்றி அனௌன்ஸ் பண்ணியே ஆகனும்.... இல்லைன்னா திவ்யாவ வெளியே அழைச்சுட்டு போகும் போது பார்க்கிறவங்க யாருக்கும் அவ யாருன்னு தெரியாது.... அது எப்பொழுதும் ஒரு கேள்வியாவே இருக்கும்... அவள எல்லோர்கிட்டையும் முறைப் படி அறிமுகப் படுத்தறது தான் சரி" என்றார் தன் மகனை விட அதிகாரமான குரலில்...

பின், ருத்ரமூர்த்தியின் பேரனுக்கே இத்தனை அதிகாரமும் கம்பீரமும் இருந்தால் அவரின் மகளிற்கு எத்தனை ஆளுமை இருக்கும்...

அவரின் கண்களைக் கூர்ந்து பார்த்தவன் சில நிமிடங்கள் மௌனமாக இருக்க, அந்த அறையில் தன் மாமியாரின் அருகில் அமர்ந்திருந்த திவ்யாவிற்கு ஒவ்வொரு நொடியும் ஏதோ ஆழ்கடலில் மூழ்கடித்துக் கொண்டு இருப்பது போல் மூச்சு திணறியது...

அவளைத் திரும்பியும் பார்க்காதவன் என்ன நினைத்தானோ வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்...

"நோ மாம்... நான் டைவர்ஸ்க்கு லாயர் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கிறேன்.... அதனால ப்ளீஸ் நீங்க இந்த மாதிரி அவசர முடிவு எதுவும் இனிமேலாவது எடுக்காதீங்க" என்று திவ்யாவின் தலையில் மட்டும் அல்ல, அங்குக் கூடியிருந்த அனைவரின் தலையிலும் அலுங்காமல் குலுங்காமல் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்....

"அவளை அவளுக்குத் தெரியாமல் பார்க்கறதும், தனியா படுக்கை அறையில் அவளை நினைத்துக் கனவு கண்டுக்கிட்டும் இருந்துட்டு இப்போ இப்படிப் பேசுனா எப்படி அர்ஜூன்?" என்று மனசாட்சி கேள்விக் கேட்க,

"அது எப்படி? இவங்களே முடிவு பண்ணி கல்யாணத்தை நடத்திடுவாங்களாம்.... அத நாம எதுவும் சொல்லாம ஏத்துக்கனுமாம்... இதுல இப்போ எல்லோருக்கும் அனௌன்ஸ் வேற பண்ணனுமாம்.... இது எப்படி இருக்கு?"

என்று அவனுடைய ஈகோ அவன் மனசாட்சிக்கு எதிராகப் பதில் கொடுக்க,

அவ்வளவு பெரிய இடியை எல்லோர் தலையிலும் போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்த மகனைப் பார்க்க ஸ்ரீக்கே கோபம் கோபமாக வந்தது என்றால் திவ்யாவிற்கோ இதயமே நின்று விடும் போல இருந்தது.

தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தன் அன்னையின் ஆளுமை அவரின் அதிகாரம் அர்ஜூனிற்குப் பிடிக்கவில்லை...

ஆனால் அதற்காக அவரைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு தன் ஆழ் மனதை அறியாமலே தன் மனம் கவர்ந்தவளின் மலர் போன்ற மனதை பொசுக்கிக் கொண்டு இருந்தான்....

மலரினும் மெல்லியவளின் மிருதுவான மனதை கருக்கிக் கொண்டு இருந்தான் அவளின் கணவன்...

இத்தனை நாட்கள் அவன் அரவம் எதுவும் இல்லாமல் திருமணத்தைப் பற்றி விவாதிக்காமல் இருக்கச் சிறிதே தெளிந்து இருந்தவளுக்கு அவனின் விவாகரத்து என்ற வார்த்தை மீண்டும் உணர்த்தியது...

நிலை இல்லாத தன் இல்லற வாழ்க்கையின் போக்கை...

ஹாலில் இருந்த ஒருவரையும் பார்க்காமல் சட்டென்று எழுந்தவள் விடுவிடுவென்று மாடியேறி தன் அறைக்குள் நுழைந்தவள் சத்தம் வராமல் வாயை மூடிக் கொண்டு கதறினாள்....

அவள் அவ்வாறு செல்லவும் வலிக்க வலிக்கத் தன் மகன் தன் மனையாளை வார்த்தைகளால் அடிப்பதை பார்த்த ஸ்ரீ,

"அர்ஜூன்... நீ என்ன பேசுறேன்னு தெரியுதா? வேணும்னா வச்சுக்கிறதுக்கும் வேண்டாம்னா வெட்டிவிடறதுக்கும் கல்யாணம் என்கிறது விளையாட்டு இல்ல அர்ஜூன்... நீ சொல்றது கொஞ்சம் கூட மனதாபிமானமே இல்லாத ஒரு விஷயம்... ஒரு சின்னப் பொண்ணுக்கு நாம செய்ற பாவம்... உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு.. அவளுக்கு இந்த மாதிரி நிலைமை வந்தா என்ன பண்ணுவ?" என்றார் முகம் சிவக்க ஆத்திரத்தில்...

"மாம் இன்னும் பழைய காலத்து அம்மா மாதிரி பேசாதீங்க.... மாப்பிள்ளை ஓடிப் போய்ட்டா கல்யாணத்திற்கு வந்த யாரோ ஒருத்தன என் தங்கைக்கு நான் கல்யாணம் பண்ண அவ ஒன்னும் சீப் இல்ல.."

வார்த்தைகளில் மேலும் விஷத்தை கக்கினான் அவர் மகன்...

ஆனால் நல்ல வேளை அதற்குள் அவன் மனைவி அவளின் அறையை அடைந்து கதவை சாத்தியிருந்தாள்...

"அர்ஜூன்... வார்த்தைய அளந்துப் பேசுப்பா... திவ்யா மட்டும் என்ன சீப்பா? உங்க அம்மா அவ அம்மாவோட க்ளோஸ் ஃப்ரெண்டுங்கிற ஒரே காரணத்தில் தான் அவள் உன் கையால தாலி வாங்க சம்மதிச்சிருக்கா.... அம்மா சொல்லலை, அப்படியும் அவள் அந்தப் பையன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவுடனே தற்கொலை தான் பண்ண போயிருக்கா.... யாராவது கல்யாணத்திற்கு வந்தவன் நம்மளை கல்யாணம் பண்ணிக்குவான்னு அவ மணமேடையிலையே உட்கார்ந்து இருக்கலை" என்று தன் கோபத்தை அடக்கியவாறே கூறினார் பாலா....

"நோ டாட்... இதுக்கு மேலே என்னைய கம்பெல் பண்ணாதீங்க" என்று கூறியவன் விருட்டென்று எழுந்து இரண்டு இரண்டு படிகளாகத் தாவி தன் அறைக்குச் சென்று படீரென்று வேகமாகக் கதவை அடைக்க, அந்தச் சத்தம் மூடியிருந்த கதவின் வழியே திவ்யாவிற்கு நன்றாகக் கேட்டது....

"இவ்வளவு கோபம் என் மேலே ஏன்? அப்படி நான் என்ன பாவம் செஞ்சேன்?" என்று அவள் மௌனமாக அழுது கரைய, அங்கே அர்ஜூனோ குறுக்கும் நெடுக்குமாகத் தன் அறைய அளக்க, அவன் மனசாட்சியோ மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டது....

"அர்ஜூன்... நீ அந்தப் பொண்ணோட ஃபோட்டோவை தினம் ஒரு தடவையாவது பார்த்து ரசிக்கிற... வெளியில போகும் போழுது அவளுக்கே தெரியாமல் அவளைக் கண்களாலேயே முழுங்கிவிடுவது போல் பார்க்கிற.... அப்போ அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எங்கிருந்துடா வந்தாங்க லாயர்? எப்போ அவங்ககிட்ட நீ டைவர்ஸ் பற்றிப் பேசின? எனவும்,

இரு கரங்களாலும் தன் தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவனின் இதயத்திற்கும் மூளைக்கும் அங்கு ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டு இருந்தது...

திவ்யாவை அவனுக்குப் பிடித்திருந்தது... அவளை அவளுக்குத் தெரியாமல் ரசிக்கப் பிடித்து இருந்தது... தன் மனதில் அவளின் உருவம் பதிந்து போனதையும் அவன் உணர்ந்தே இருந்தான்...

ஆனால் இன்னும் ஏன் என் மனது அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது?

"மாமை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவளைப் பழி வாங்குகிறேனா???"

ஏற்கனவே குழம்பி தத்தளித்து தடுமாறி இருந்த அவனது மனது இன்று அவன் அன்னையின் பேச்சில் மேலும் குழம்பியது.

ஒரு முடிவும் எடுக்க முடியாமல் மனக்குழப்பத்தில் திகைத்து போய் அப்படியே கட்டிலில் அமர்ந்து தன் தலையைப் பிடித்து இருந்தவன் வெகு நேரம் யோசித்தும் ஒரு முடிவு எடுக்க முடியாமல தடுமாறினான்...

எந்த நிலையிலும் நிதானமாகவும் அதே சமயம் துரிதமாகவும், சில நேரங்களில் தயவு தாட்சண்யம் ஏதுமின்றியும், பதட்டங்கள் ஏதுமின்றியும் சர்வ சாதாரணமாகவே முடிவுகளைத் தீர்மானித்து இருந்தவன் இன்று சங்கடத்தில் அகப்பட்டது போல் தத்தளித்து இருந்தான்...

புத்திக்கும் மனதிற்கும் இடையில் கிடந்து தவித்தது அவனது இதயம்....

மறுநாள் கீழே இறங்கியவனுக்குத் தன் அன்னை யாரிடமோ தொலை பேசியில் பேசியது கேட்டது...

"ஆமாம் வனிதா... இது ஒரு சின்னக் கெட் டூ கெதர் தான்... நம்ம குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் தான் இன்வைட் பண்றேன்.... கண்டிப்பா குடும்பத்தோட வந்துடனும்... இன்னும் இடம் முடிவு ஆகலை.... முடிவு செஞ்சோனே மறுபடியும் கூப்பிடுறேன்" என்றார்....

அர்ஜூனுக்கோ என்ன பேசுவதென்றே தெரியவில்லை....

தான் அவ்வளவு சொல்லியும் இவர் தன்னிஷ்டம் போல் தான் செய்கிறார் என்று நினைத்தவன் எதுவும் பேசாமல் யோசனையுடன் டைனிங் டேபிளில் அமர, அவனைப் பார்த்த திவ்யா வேகமாக ஸ்ரீயிடம் சென்றவள் அர்ஜூன் சாப்பிட அமர்ந்திருப்பதைத் தெரிவித்தாள்....

"திவ்யா... நான் பிஸியா இருக்கேன்.... நீயே அவனுக்குச் சாப்பாடு எடுத்து வை" என்று அர்ஜூனைப் பார்த்தவாறே ஸ்ரீ சொல்ல...

அதனைக் கேட்ட அர்ஜுன் அடங்காத ஆத்திரத்தில் விருட்டென்று எழுந்தான்....

அங்கு அவனுக்கும் அவன் அன்னைக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது...

அவனின் கோபத்தைக் கண்ட திவ்யாவிற்கு அவன் உணவு வேறு அருந்தாமல் வெளியே செல்ல எத்தனிப்பதைக் கண்டு மனம் பதற தன் அச்சத்தை ஒதுக்கி வைத்து அவன் அருகில் வந்தாள்...

இது வரை அவன் வீட்டினுள் நுழையும் பொழுது அவள் சமையல் அறையில் பதுங்கி கொள்வாள்...

அவன் ஹாலில் அமர்ந்திருந்தாலோ அல்லது வீட்டில் வேறு எங்கும் இருந்தாலோ மஹாவின் அறையே கதி என்று கிடப்பாள்...

ஆனால் இன்று தன் கணவனின் பசி அறிந்து தன் பயத்தைத் தன்னிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் அகற்றி வைத்தவள் தன்னால் முடிந்த அளவு தைரியத்தைத் திரட்டி முதல் முறையாக அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து..

"உ... உங்களுக்கு என்ன விருப்பமோ அதை நீங்க செய்யுங்க.... நான் உங்க எந்த முடிவுலையும் தலையிட மாட்டேன்.... ஆனால் கோபத்தைச் சாப்பாட்டில் காட்டாதீங்க... உ... உட்காருங்க" பதட்டத்துடன் தடுமாறியவாறே கூறியவள்...

அவனுக்குத் தட்டையும் எடுத்து வைத்து காலை உணவான இட்லியையும் தக்காளி சட்னியையும் எடுத்து வைத்தாள்.....

அவன் உள்ளம் முழுவதும் தன் அன்னையின் அலட்சியத்தால் அடி பட்டுச் சினம் சூழ்ந்து இருந்தாலும் தன் வாழ்க்கையில் முதல் தரம் தன் மனைவி தன்னிடம் யாசிப்பது போல் கேட்டிருந்ததைக் கண்டவன் தன் கூரிய பார்வையை அவளை விட்டு ஒரு நொடி கூட அகற்றாமல் அவளின் சொற்களுக்கு அடி பணிந்தான்...

தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன் கணவன் தன் பேச்சிற்கு மறு பேச்சுப் பேசாமல் மௌனமாக உணவு அருந்த அமர திவ்யாவிற்குத் தான் அப்பாடி என்றிருந்தது....

அவன் உண்ட பின் கை கழுவியவன் வழக்கம் போல் அவளுக்குத் தெரியாமல் அவளைத் திரும்பி பார்க்க, அதே சமயம் அவன் தட்டை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தவள் எதேச்சையாக அவனைப் பார்க்க கண்ணும் கண்ணும் நோக்கியது....

அவனின் அம்பு போன்ற பார்வையின் கூர்மையில் பெரிதும் நெளிந்தவளின் உடலெங்கும் அச்சம் ஆட் கொண்டது....

அவனது அழுத்தமான பார்வை அவளுக்கு எதனையோ சொல்லாமல் சொல்லியது...

அதன் விளைவாக அவளது சிந்தனை ஓட்டமும் தடைப் பட்டது...

அதன் பலன்?? அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்கு இன்றும் விளங்கவில்லை...

தன் கணவனின் பெயரைக் கேட்டாலே மனம் பதற உடலில் உதறல் எடுக்க எழுந்து நிற்பவளுக்கு அவனின் ஆழ்ந்த பார்வையின் அர்த்தம் எங்கனம் புரியும்....

ஆனால் அவன் இன்னும் அவள் மீது படிந்து இருந்த விழிகளின் போக்கை மாற்றவில்லை... அதில் விஷமமே நிறைந்து இருந்தது...

தன் கணவனின் விபரீத பார்வையில் அவள் இதயம் படு வேகத்தில் அடித்துக் கொள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததால் பெரிதும் சங்கடத்தில் அகப்பட்டுத் தத்தளிக்கவே செய்தவள் மித மிஞ்சிய கட்டுப்படுத்த முடியாத சங்கடத்தால் அகப்பட்டுத் தன் பார்வையை அவனை விட்டு அகற்றினாள்..

தன் மனையாளின் உணர்வுகளை அவளின் மனதிலோடிய எண்ணங்களைப் புரிந்துக் கொன்டவன் போல் கண்களில் வழியும் சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றான்...

இவற்றை எல்லாம் தொலைப் பேசியில் பேசியபடியே பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீ...

"அர்ஜூன்... உன்னைப் பெத்தவ டா நான்.... எனக்குத் தெரியாதா உனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காதுன்னு" என்று நினைத்தவர் தன்னுடைய பட்டியலில் மீதம் இருந்தவர்களை அழைக்க ஆரம்பித்தார்.

தொடரும்..

 

JLine

Moderator
Staff member








அத்தியாயம் - 9

மளமளவென்று ரிஷப்ஷனிற்கு வேண்டிய அனைத்தையும் ஸ்ரீயும், அருணும், பாலாவும் ஏற்பாடு செய்ய, அவர்களை அர்ஜூன் தடுக்கவுமில்லை.... எதிர்த்து பேசவும் இல்லை....

அதுவே ஸ்ரீயை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது...

"அன்று தான் என்னமோ டைவர்ஸுக்கு அரேஞ் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னான்.... இப்போ என்னாடான்னா ஒன்னுமே பேசாம இருக்கான்.... நிச்சயம் அவனுக்குத் திவ்யா மேலே ஒரு ஆர்வம் வந்திருக்கு" என்று நினைத்தவர் அவர்கள் இருவரையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்....

தன் மகன் திவ்யாவை அவ்வப்பொழுது பார்ப்பதும், அவள் அவனைப் பார்த்ததும் அவன் தன் பார்வையை மாற்றுவதும் அவர் கண்ணிலும் பட்டுக் கொண்டு தான் இருந்தது.

தன் மகனிற்கு அவன் மனைவியின் மீது ஒரு ஈர்ப்பு வந்திருப்பது போல் தோன்ற மனதிற்குச் சிறு அமைதி உண்டாக அந்த நிம்மதியுடனே அவர் ரிஷப்ஷனிற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தார்....

ரிஷப்ஷனிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மஹாவும் திவ்யாவை அழகு நிலையத்திற்கு அழைத்துச் செல்வது, அவளுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்ற புடவைகள் எடுப்பது, எடுத்த புடவைகளுக்குப் பொருத்தமான அணிகலன்கள் வாங்குவது என்று நாட்களும் வேகமாக ஓடியது.

அர்ஜூனையும் திவ்யாவையும் தவிர ஸ்ரீயும் மற்றவர்களும் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த அந்த அழகான நாளும் வந்தது....

ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் ரிஷப்ஷனிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்....

பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே பாலாவும் அருணும் விழாவின் ஏற்பாடுகளைக் கண்காணிக்கச் சென்று இருக்க, திவ்யாவிற்காகவும் மஹாவிற்காகவும் காத்து இருந்த ஸ்ரீக்கே பொறுமை குறைய ஆரம்பித்து இருந்தது என்றால் அர்ஜூனின் நிலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன?

அம்மாவும் பிள்ளையும் கீழே ஹாலில் இருந்த ஸோஃபாவில் கிளம்பி தயாராக அமர்ந்து இருக்க இன்னும் திவ்யாவும் மஹாவும் தங்கள் அறையை விட்டு வெளியே வந்தபாடு இல்லை...

"மஹா.... என்னம்மா பண்றீங்க? கெஸ்ட் எல்லாரும் வந்ததற்கு அப்புறம் போலாம்னு சொல்றீங்களா? சீக்கிரம் வாங்க" என்று கீழிருந்து ஸ்ரீ சத்தம் போட,

ஏற்கனவே பல விதமான எண்ணங்களில் சிந்தனைகளில் உழன்று கொண்டு இருந்த அர்ஜூனின் டென்ஷன் இன்னும் அதிகமாகனதே தவிரக் குறையவில்லை.... முகம் கடுகடுத்து அமர்ந்திருந்தான் அவன்...

அதனைப் பார்த்த ஸ்ரீக்கோ...

"கடவுளே! இவன் இந்த ஃப்ங்ஷனுக்குச் சம்மதிச்சதே பெரிசு... டைவர்ஸ் கிவர்ஸ்ன்னு சொன்னவன், அதற்கப்புறம் அதைப் பற்றியே வாயத் திறக்காமல் இப்போது அமைதியாகக் கிளம்பி வேறு உட்கார்ந்து இருக்கிறான்... இப்போ இந்தப் பொண்ணுங்க வேற என்னன்னா நிலைமை தெரியாம... சே" என்று மனதிற்குள் அஞ்சி இருக்க.....


தொழில் சம்பந்தமான கூட்டங்கள் ஆகட்டும், அரசியல்வாதிகளைச் சந்திப்பது ஆகட்டும் அல்லது மற்ற நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களின் சந்திப்பாகட்டும்.... அனைவரும் அர்ஜூனிற்காக அவர்கள் தான் முன்னரே வந்து காத்திருப்பார்கள்...

அவனுக்கு யாரையும் எதிர்பார்த்திருப்பதோ அல்லது அவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்து இருப்பதோ கொஞ்சமும் பிடிக்காது...

ஆனால் அதே சமயம் நேரத்தின் அருமை நன்கு தெரிந்தவன்... காலந் தவறாமையில் அவனை மிஞ்சுபவர்கள் எவரும் இல்லை...

அப்படி இருக்க அதுவும் இப்பொழுது இந்த விழாவிற்குச் செல்வதற்கே அவனுக்கு விருப்பம் இல்லாத போது இதில் திவ்யாவிற்காக நான் காத்து இருப்பதா என்று கொந்தளித்துக் கொண்டிருந்தான் கோபத்தில்....

ஸ்ரீ சொல்லியும் அவர்கள் வருவதைப் போல் தெரியாததால் பொறுமை இழந்தவன் கத்த ஆரம்பித்தான்....

"மாம்... பேசாம நீங்க எல்லாரும் ஒன்னா வாங்க... நான் கிளம்புகிறேன்" என்றவனின் முகம் முழுவதும் எரிச்சல் மண்டியிருந்தது....

"கிழிஞ்சுது போ" என்று மானசீகமாக ஸ்ரீ தலையில் கை வைக்கவும் மஹாவின் அறைக் கதவு திறக்கவும் நேரம் சரியாக இருக்கக் கதவு திறந்த சத்தத்தில் எதேச்சையாக மாடியை நோக்கியவனின் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன என்றால் அவன் கண்களிலும் வியப்பு ஊடுருவி நின்றது... அவை சிமிட்டவும் மறந்து போனது.....

அங்கு மயில் கழுத்தின் நிறத்தில் பட்டுப் புடவையும் அதில் அகல கரையிட்ட தங்க ஜரிகையும், மயில் கழுத்தின் நிறத்திலும் அதனுடன் தங்க கம்பிகள் பின்னி பிணைந்திருந்த விதத்தில் செய்யப்பட்ட நகைகளையும் அணிந்து மஹாவின் கை வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு வானில் இருந்து இறங்கி வரும் தேவதைப் போல் மாடிப் படிகளில் வந்து கொண்டு இருந்தாள் அவனின் மனையாள்...

அர்ஜூன் தன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்... அவர்களைக் கடந்தும் வந்திருக்கிறான்... ஆனால் ஒருவரிடமும் அவன் தன் மனதை பறிக்கொடுத்திருந்தது இல்லை....

ஆனால் இன்றோ?

எளிமையான முக அலங்காரத்தில், இதழ்களில் லேசான உதட்டுச்சாயம் பூசியிருக்க, தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடி, உச்சி வகிட்டில் சிறியதான நெற்றி சுட்டியை அணிந்து அதில் விளக்கின் (light) வெளிச்சம் பட்டதால் கற்கள் மின்ன, முன் நெற்றியில் ஒட்டிக் கொண்டு இருந்த அவளின் முடி அவளுக்குத் தனி அழகைக் கொடுக்க அன்னமென நடந்து வந்தவளின் அழகில் கிறங்கி போனவனின் கண்கள் நிலைத்தது நிலைத்தப்படி நின்றுவிட்டன...

தன்னவளைக் கண்டதும் அவன் முகத்தில் விரிந்த விரிப்பையும் பிரமிப்பையும் ஸ்ரீ கவனிக்கத் தவறவில்லை அதனால் அவரின் உதட்டிலும் விஷமச் சிரிப்பு உதிர்க்கவே செய்தது...

மாடியில் இருந்து இறங்கி கொண்டு இருந்தவள் தன் மாமியாரைப் பார்த்து புன்னகைத்தவள் பின் தன் கணவனைப் பார்க்க, தன்னைக் கண்களால் பருகியபடியே நிற்கும் கணவனைக் கண்டவளின் முகத்தில் அளவு மிகுந்த நாணமும் அதனால் வெட்கச் சிவப்பும் மண்டிவிட அவளின் முக மாற்றத்தில் தன்னைத் தொலைத்தான் அர்ஜூன்...

அவனின் ஆளை விழுங்கும் பார்வையைக் கண்டவள் நிலைக்குலைந்து தனது அடி இதழை மடித்து லேசாகக் கடித்துக் கொள்ள அதில் அவளின் அபரிதமான அழகும் இன்னும் ஆழமான கன்னக் குழியும் அவனுக்குள் தன் பணியை விபரீதமாகச் செய்து கொண்டு இருந்ததால் அர்ஜூனின் இதயத்தை அப்படியே அபகரித்துக் கொண்டன.

மெல்ல அவர்களை நெருங்கியவள் சன்னமான குரலில்...

"மன்னிச்சுக்கங்க அத்தை... கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு" எனவும்...

அதில் அவள் உதடுகள் விரிந்து உதிர்த்த வார்த்தையிலும் அவன் உள்ளம் சிக்கி கவிழ்ந்தது...

தன் மகனின் ஒவ்வொரு அசைவையும் சில நாட்களாகக் கூர்ந்து கவனித்து வந்த ஸ்ரீ இன்று அவன் தன் மனைவியைத் தன்னையும் அறியாமல் இரசித்துச் சிலையாக நின்று பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டவருக்கு இவர்கள் இணையும் நாள் அதிகத் தூரத்தில் இல்லை என்றே தோன்றியது...

உணர்ச்சி ததும்ப நின்று கொண்டு இருந்தவனை நோக்கி "என்னப்பா அர்ஜூன் போகலாமா?" என்று குறும்பு சிரிப்பு சிரிக்க, அவரின் வார்த்தைகளில் சடுதியில் சுய நினைவிற்கு வந்தவன் திரும்ப எத்தனிக்க....

"சாரிம்மா... கொஞ்சம் லேட்டாகிடுச்சு.... அண்ணி தான் இந்த மேக்கப் வேண்டாம், அந்த மேக்கப் வேண்டாம், இது ரொம்ப ஓவரா இருக்குன்னு படுத்திட்டாங்க.... எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டால் போட்டோஸ்ல இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது" என்றாள் மஹா....

"இல்ல... இதே நல்லா இருக்கு... போதும்" என்று சட்டென்று அர்ஜூன் சொல்லவும் ஸ்ரீயின் கண்களும் மஹாவின் கண்களும் அவனைச் சடாரென்று மயங்கி விழுந்து விடும் அளவிற்கு ஆச்சரியமாக நோக்கியதென்றால் திவ்யாவோ தலை கவிழ்ந்தவள் நிமிரவே இல்லை...

சிர்த்துக் கொண்டவர்....

"ஆமாம் மஹா... இந்த லைட் மேக்கப்பே ரொம்ப அழகா எடுப்பா இருக்கு திவ்யாவுக்கு.... சரி கிளம்பலாம்.... சீக்கிரம் காரில ஏறுங்க" என்று சொல்லிவிட்டு முன்னர் நடக்க, அவரைத் தொடர்ந்து மஹாவும் திவ்யாவும் நடக்க, அவர்களின் பின்னால் தன் மனைவியை ரசித்தவாறே வந்து கொண்டு இருந்தான் அர்ஜூன்.....

அவர்கள் வீட்டின் வாயிலை தாண்டி காரை நோக்கி நடக்க, திடீரென்று வீசிய காற்றில் தன்னவளின் தலையில் அவள் சூடியிருந்த மல்லிகைச் சரத்திலிருந்து மலர்கள் சில உதிர...

அவளைத் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தவன் மலர்கள் உதிர்ந்துவிடவே எதிர்பாராமல் அந்த மலர்களின் மீது தன் கால்கள் பட நடக்கப் போனவன் தன்னிச்சையாகத் தன் பாதங்களைச் சில அடி தாவி தள்ளி வைத்து நடந்தான்...

மலரினும் மெல்லிய தன்னவளின் சிகையில் சில மணி துளிகளே உறவாடி இருந்தாலும் இப்பொழுது தரையில் உதிர்ந்து கிடக்கும் மலர்களைக் கூட அவன் கசக்க விரும்பவில்லை!!!!! அவள் சூடிய மலர்களையே கசக்க விரும்பாதவன் அவளையா கசக்க போகிறான்.....


அந்த நட்சத்திர ஹோட்டல் அலங்கார விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது.....


Welcome to the Wedding Reception of

Arjun & Dhivya

Warm welcome by

A.K Group of Companies

ரிஷப்ஷன் வரவேற்பு பலகை பார்ப்பவர்களின் கண்களைப் பறிக்கும் விதத்தில் அழகாக மலர்களால் அலங்கரிக்கப் பட்டு ஹோட்டலின் வாயிலில் வைக்கப் பட்டிருந்தது....

அர்ஜூனின் திருமணம் தான் எதிர் பாராமல் அவன் அன்னையைத் தவிர மற்ற குடும்பத்தினர் ஒருவரும் அருகில் இல்லாமல் நடந்தேறியது ஆதலால் திருமண வரவேற்பாவது மிகவும் பிரம்மாண்டமாக நடக்க வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீயும், பாலாவும் பணத்தைத் தண்ணீர் போன்று வாரி இறைத்திருந்தனர்....

நெருங்கிய சொந்தத்தினரை மட்டும் தான் அழைக்க வேண்டும் என்று முதலில் ஸ்ரீ முடிவு செய்திருந்தார்...

ஆனால் வரவேற்பு விழாவே வேண்டாம் என்று எதிர்ப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்த அர்ஜூனே ஒன்றும் சொல்லவில்லை என்பதாலும் ஒருவரை விட்டு ஒருவரை அழைக்க முடியாது என்பதாலும் அவரின் விருந்தினர்கள் பட்டியல் அதிகரித்து இருந்தது...

ஆதலால் அவர் முன் குறித்து இருந்ததை விட உறவினர்கள் நிறையப் பேரை அழைத்திருந்தார்.... அது மட்டும் இல்லாமல் திவ்யாவின் குடும்பத்தையும், கலாவிற்கும் சிவசுப்ரமணியத்திற்கும் வேண்டிய நெருங்கிய சொந்த பந்தங்களையும் அழைத்திருந்தார்....

ஆகையால் அந்த நட்சத்திர ஹோட்டலே விருந்தினர்களாலும், சிறுவர், சிறுமியர்களாலும் இளையவர்களாலும் நிரம்பி வழிந்து களை கட்டியது....

திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியிருக்க, திருமணத்திற்கு மறு நாள் திவ்யாவை பார்த்தது தான் திவ்யாவின் பெற்றோரும், தமையனும்... அதற்குப் பின் தொலைப் பேசியில் அவ்வப்பொழுது பேசி நலம் விசாரித்துக் கொள்வார்கள்.... அவ்வளவே....

இரண்டு மாதங்கள் கழித்துத் தங்கள் மகளைக் காணப் போகும் சந்தோஷத்தில் கலாவும் சிவசுப்ரமணியமும் இருந்தார்கள் என்றால் தன் பிரியமான தங்கையைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தான் வினோத்....

ஒரு பக்கம் அவனின் அன்பு தங்கை மறுபுறம் பார்த்த முதல் நாளே அச்சாணி போல் தன் இதயத்தில் பதிந்திருந்த தன்னவள்... அவனின் சந்தோஷத்தின் அளவைப் பற்றிச் சொல்லவா வேண்டும்....

கலாவிற்கும் சிவசுப்ரமணியத்திற்கும் திவ்யாவை திருமணத்திற்கு மறுநாள் ஸ்ரீயின் வீட்டில் பார்த்ததில் இருந்து, அவர்கள் வசதியை கண்கூடாகக் கண்டதில் இருந்து ஒரு வித கலக்கம் இருந்து கொண்டே இருந்தது....

என்ன தான் திவ்யா தான் சந்தோஷமாக இருப்பதாகத் தொலை பேசியில் சொல்லியிருந்தாலும் அவள் கஷ்டமோ நஷ்டமோ தன் சோகங்களைத் தனக்குள் எப்பொழுதும் புதைத்துக் கொள்ளும் பெண் ஆதலால் நேரில் அவளைக் காணும் வரை அவர்களுக்கு நிம்மதி இல்லை...

தங்கள் ஊரில் இருந்து நேரே ஹோட்டலுக்கு வந்திருந்தவர்கள் வரவேற்பறையில் அவர்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்...

ஒரு வழியாக அவர்கள் நெடுநேரம் எதிர்பார்த்திருந்த அர்ஜூனின் கார் ஹோட்டலின் உள்ளே நுழைந்தது...

காரைப் பார்த்ததுமே தன் மகளைப் பார்க்க போகும் ஆர்வத்தில் கலாவின் கண்கள் பனிக்க, காரில் இருந்து அர்ஜூன் இறங்க, ஸ்ரீயும் அவர்கள் பின்னையே திவ்யாவும் மஹாவும் இறங்க கலாவிற்குத் தன் மகளைப் பார்த்ததும் கண்களின் ஆனந்த கண்ணீர் வர ஆரம்பித்தது.

இந்த இரண்டு மாதங்களில் நன்றாக நிறம் கூடி, சிறிது சதை கூடப் பிடித்து அழகாகப் பட்டுப் புடவையில் தேவதைப் போல இறங்கி வந்த மகளைப் பார்க்க பார்க்க அவர் தாய் உள்ளம் பெருமையில் பூரித்தது...

அவர்களின் அருகில் சென்ற கலா, அர்ஜுனைப் பார்த்து "மாப்பிள்ளை, நல்லா இருக்கீங்களா?" எனவும்,

"ம்" என்று மட்டும் சொன்னவன், வேறு எதையும் பேசவில்லை....

ஸ்ரீயிடம் சென்றவர் முகமெல்லாம் பூரிப்புடன்...

"எப்படிடி ஸ்ரீ இருக்க? ஃபங்ஷன் ரொம்பப் பிரம்மாண்டமா அரேஞ்ச் பண்ணிருக்க... ரொம்பச் சந்தோஷமா இருக்குடி" என்றார்....

அவரின் கரத்தை பற்றிய ஸ்ரீ,

"இது நம்ம பிள்ளைங்க விஷேஷம் கலா... நாம கனவு கண்ட மாதிரி உன் பெண்ணை என் பையனுக்கு எடுத்து இருக்கோம்... இந்த அளவிற்குக் கூட க்ராண்டா பண்ணலைன்ன எப்படி டி? எனவும்...

சிலிர்த்தவர் திரும்பி மகளைப் பார்க்க, தன் அன்னையையே வைத்த கண்கள் வாங்காமல் பார்த்திருந்த திவ்யாவை பார்த்தவர் "திவ்யா" என்று அவளைக் கட்டி அணைத்துக் கொண்டார்....

"ஐயோ! அண்ணியோட புடவை கசங்கப் போகுது... ரொம்ப நேரம் ஆச்சு எனக்கு அவங்கள ரெடி பண்றதுக்கு.... நீங்களே கலைச்சி விட்டிருவீங்க போல" என்று மஹா அலற...

சுற்றி இருந்த அனைவரும் சிரிக்கவும் அவர்களைக் கண்டு நாணமுற்றவள் உள்ளுணர்வு உணர்த்த திரும்பி பார்க்க அங்கு வினோத்தின் கண்கள் அவளையே வண்டு போல் மொய்த்திருந்தது...

தன்னை ஊசி போல் துளைக்கும் பார்வையைப் பார்த்தவள் நிலைக் குலைந்து தவிக்க, அவளின் முக மாறுதல்களைச் சடுதியில் தன் மனதில் குறித்துக் கொண்டவன் ஆனந்தத்தில் திளைத்திருந்தான்...

தன்னவளைக் கண்டு கொண்டதில்...

அதில் அவன் உதடுகள் சில்மிஷமாய் விரிய தன் எண்ணங்களை அவன் கண்டு கொண்டதில் சங்கடத்தில் நெளிந்தவள் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டு ஹோட்டலிற்குள் நுழைய முற்பட, ஸ்ரீ....

"மஹா, நீ போய் ரிஷப்ஷனில் நின்று வர கெஸ்டுகளைக் கவனிம்மா" என்றார்....

அது தான் அவளுக்கு நிரம்பப் பிடிச்ச விஷயமாச்சே....

உடனே சரி என்றவள் துள்ளி குதித்து ஓட, வினோத்தைப் பார்த்த ஸ்ரீ..

"தம்பி... அவளுக்கு உங்க சொந்தக்காரர்களைத் தெரியாது... அதனால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நீங்களும் அவளுடன் போய் நிக்கிறீங்களா?" என்று கேட்க,

"ஆஹா, கரும்பு தின்ன கூலியா" என்று மனதுக்குள் எழுந்த குதூகலத்தை மறைத்துக் கொண்டு ஒன்றுமே தெரியாத நல்லவன் போல்...

"இதுல ஆட்சேபணை என்ன ஆண்டி... தோ போறேன்" என்றான்... இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போல்...

ஸ்ரீ சொன்னதுமே வேகமாக ஓடியவள் வினோத் தன் பின்னால் வருவது தெரியாமல் ரிஷப்ஷன் மேஜைக்கு அருகில் சென்றவள் சட்டென்று நின்று விட, அவளின் பின்னையே ஓடியவன் அவள் நின்றதும் தன்னைச் சமன்படுத்த முடியாமல் படீரென்று மோத, மோதியது என்னவோ அவன்.... ஆனால் விழப் போனவள் அவள்....

ஏற்கனவே அவளைப் பார்த்த அன்றே தன்னை இழந்திருந்தவன் இன்று அவள் பின்னால் மோதியதால் நிலைக் குலைந்து அவளின் பின் புறமாக நின்றவாறே அவளின் இடையை வளைத்துப் பிடித்திருக்க, தங்களைச் சீர் படுத்திக் கொள்ள முனைந்த இருவருமே திணறித் தான் போனார்கள்...

ஆனால் முனைந்தது முழுப் பலனை அளிக்கவில்லை...

அவனின் இடது கரம் அவளது இடது தோளை அழுந்திப் பிடித்திருக்க அவனின் வலது கரம் இடையோடு அவளை இறுக்கி தன்னோடு சேர்த்து அணைத்திருக்க அவளது தேகத்தில் இன்ப நெருப்புகள் அள்ளிக் கொட்டியது...

வினோத்தின் நிலைமையோ சொல்லுவதற்கில்லை...

பின் புறமாக நின்றவாறே அவளைப் பிடித்திருந்ததால் மல்லிகைச் சரங்களைச் சூடியிருந்த அவள் தலை அவன் மார்பில் புதைந்து இருக்க, அவளைக் குனிந்து பார்த்தவன் உணர்ச்சிகளிருந்து விடுபடமுடியாமல் திண்டாடினான்...

அவர்கள் இருந்தது ஹோட்டலின் வரவேற்பறை... ஒரு வேளை அவர்கள் தனித்து இருக்கும் சூழலில் இத்தகைய அழகிய தருணத்தை அவர்கள் சந்தித்து இருந்தால் வினோத்தின் வேகத்திற்கு அவனின் இயற்கையான துணிவிற்கு மஹா திணறியிருப்பாள்...

அதனால் அவர்கள் இருவரும் அந்த மோன நிலையில் இருந்தது சில விநாடிகள் தான்...

அவளின் பூப் போன்ற மென்மையான மேனியின் ஸ்பரிசம் ஆண்மகனான அவனின் உடலில் ஒரு அதிர்வை உண்டாக்கி இருந்ததினால் அந்த அதிர்வில் இருந்து வெளி வர முடியாமல் அவளைப் பிடித்தவாறே அவன் ஸ்தம்பித்து நிற்க, அவள் தான் தங்கள் சூழ்நிலையை உணர்ந்து சட்டென்று அவனை விட்டு விலகினாள்....

அவனின் இதயத்தைத் துளைக்கும் பார்வையில் செந்தனலாய் சிவந்திருந்தவள் கூச்சத்தில் நிலம் நோக்கி தலை கவிழ உடலால் விலகினாலும் மனதால் விலக முடியாமல் இருவரும் ஒரே மனநிலையுடன் இருக்க, காதல் என்ற இனிய ராட்ஷசன் அவர்களின் இதயத்திற்குள் ஆர்ப்பாட்டமாகப் புகுந்தான்...

ஆனாலும் தன்னவன் தன் இதயத்திற்குள் நுழைந்துவிட்டதை அவ்வளவு எளிதில் ஒத்துக் கொண்டால் அவள் அர்ஜூனின் தங்கை அல்லவே???

கர்வம் தலைக்கேற ஆணவத்துடன்...

"ஏன் இப்படி அடிச்சு பிடிச்சு ஓடி வர்றீங்க? அதான் நான் முன்னால போறேன் தெரியுதுல்ல... கொஞ்சம் தள்ளியே வரது... " என்று கத்த,

அவளின் அருகே வந்த வினோத்...

"ஏய், பொம்பளை ரவுடி... ஏண்டி இப்படிக் காது கிழியற மாதிரி அலர்ற? தெரியாம இடிச்சுட்டேன்... அதுக்கு என்னமோ வேணும்னே இடிச்சுட்ட மாதிரி கத்துற" என்றான் பதிலுக்கு...

"என்னது, பொம்பளை ரவுடியா? யாரைப் பார்த்து ரவுடிங்கிற?" என்று எகிறினாள் அவனின் மனம் கவர்ந்தவள்....

இருவரின் மனங்களிலும் இருவரும் அறிந்தே காதல் என்ற நுண்ணுணர்வு துளிர்விட ஆரம்பித்துவிட்டது.... ஒருவரின் இதயத்தை மற்றவரின் இதயம் கவர்ந்து இருந்தது...

இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சண்டை கோழிகள் போல் சிலிர்த்து எழுந்து மோதிக் கொண்டிருந்தனர்.....

"ஹே, இந்த வா போங்கிற வேலையெல்லாம் இங்க வேண்டாம்.... உங்க ஊரில வேணா இது சாதாரணமா இருக்கலாம்..... ஆனால் வயசுக்கு மரியாதைக் கொடுக்கனும்.... ஒழுங்கா போங்க வாங்கன்னு கூப்பிடு"

அவன் விடாமல் அவளை இழுக்க...

"இங்க பாருடா... நான் என்னமோ இவன் கூடவே எப்பொழுதும் இருக்கப் போற மாதிரி இவன வாங்க போங்கன்னு கூப்பிடனுமாமே" என்று உள்ளுக்குள் நினைத்தவள்...

"அதுக்கு வேற ஆளப்பாருங்க" என்றாள்....

ஆனால் தன்னையும் அறியாமல் அவன் சொன்னது போல அவனை 'ங்க' போட்டு அழைத்ததை உணராமல்....

அதனைக் கேட்டவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்....

இவர்களின் சண்டையை ஹோட்டலின் வரவேற்பு அறையில் இருப்பவர்கள் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்க, திகைத்தவர்கள் சுய உணர்வுக்கு வந்து ரிஷப்ஷன் மேஜைக்கு அருகில் நின்று விருந்தினர்களை வரவேற்க தயாரானார்கள்.....

சில நிமிடங்களில் விருந்தினர்களும் உறவினர்களும் வர துவங்க, வந்திருந்தவர்களை மஹாவும் வினோத்தும் புன் சிரிப்புடன் வரவேற்க ஹோட்டலின் உள்ளே நுழைந்தார் அர்ஜூனின் அத்தை பாக்யம்....

தன் இரு பிள்ளைகளுடன் வாயெல்லாம் பல்லாக ஆனால் மனம் முழுவதும் அழுக்காக....

அந்தக் காலத்தில் பாலாவிற்கு ஸ்ரீயை மணம் முடிக்கக் கேட்ட பொழுதே தன் அண்ணனின் அதிர்ஷ்டத்தை நினைத்து பொறாமைப்பட்டவள் பாக்யம்....

தனக்கும் அப்படி வசதியான இடத்தில் இருந்து மாப்பிள்ளை வரும் என்று பகல் கனவு கண்டு கொண்டு பெண் பார்க்க வந்தவர்களை எல்லாம் விரட்டி அடித்தவள்....

இறுதியாக அவளை வற்புறுத்தி ரேஷன் கடையில் வேலை பார்க்கும் கணேசனுக்கு மணம் முடித்தனர்....

எப்படியும் தன் அண்ணன் அண்ணியிடம் சொல்லி நிறைய நகைகள் போட்டுத் தன்னை யாரேனும் பணக்காரனுக்குத் தான் திருமணம் செய்து கொடுப்பார் என்றெண்ணி கொண்டு இருந்தவளுக்குக் கணேசனை கொண்டு வந்து அண்ணன் நிறுத்தியது பெருத்த ஏமாற்றம் ஆக இருந்தது....

ஸ்ரீயோ கூட எவ்வளவோ எடுத்து சொல்லியும் பாலா கேட்கவில்லை....

தன்னுடைய நகைகளைக் கூடக் கொடுக்க ஸ்ரீ முன் வந்தும் தன் தந்தையின் வசதிக்கு ஏற்ப தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் பாலா...

இதில் ஸ்ரீக்கும் மனம் வருத்தம் தான்.... தன் கணவன் தன்னைத் தன் குடும்பத்தாரிடமிருந்து வேறு படுத்திப்பார்ப்பதாக...

ஆனால் தன் மனைவியிடம் இருந்து எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து விட்டார் பாலா.

பாக்யத்திற்கு மாறுபட்ட குணம் உடையவர் அவளின் கணவன் கணேசன்....

தன்னுடைய வசதிக்கேற்ப தன் மனைவியை மகிழ்ச்சியாகவே வைக்க அவர் முயல மகிழ்ச்சி மனதில் இருந்து தான் வர வேண்டும் வசதியினால் அல்ல என்று புரியாத பாக்யத்திற்கு எத்தகைய மகிழ்ச்சியை இழக்கிறோம் என்று தெரியாமலே தன் அண்ணனின் வாழ்வை, வசதியை பார்த்துப் பொறாமை படுவதிலேயே வாழ்க்கையும் கழிந்தது....

இத்தனை வருடங்கள் கழிந்தாலும் அவளின் பொறாமை படும் குணம் மட்டும் மாறவே இல்லை....

தனக்குத் தான் நல்ல வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லை...

தன்னுடைய மகன் மகளுக்காகவது நல்ல வசதியான இடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்தவளுக்கு அர்ஜூனின் வசதியும் கம்பீரமும் ஆளுமையும், அவனுக்கு வெளி வட்டாரத்தில் இருக்கும் பெரிய பெயரும் தன்னுடைய மகளை அர்ஜூனிற்கு எப்படியாவது திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கியிருந்தது....

பாக்யத்தைப் போன்று பணத்தாசை பிடித்திருந்தவளே அவள் மகளும்....

சிறு வயது முதலே அர்ஜூனைக் கண்டு காதல் வயப்பட்டிருந்தவளை ஏனோ அர்ஜூன் திரும்பியும் பார்த்ததில்லை....

அர்ஜூனைப் பொறுத்தவரை அவன் திரும்பி பார்க்கும் தகுதி கூட அவளுக்குக் கிடையாது என்று நினைத்து இருப்பவன்....

ஆனால் எப்படியும் அவனைத் தன் வலையில் வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவளுக்கு இந்தத் திருமணம் பெரும் அதிர்ச்சியையே தந்தது.

மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண "கெட் டு கெதர்" என்று சொல்லியிருந்தாலும் பாலா தன் தங்கையிடம் தன் மகன் அர்ஜூனிற்கு எதிர்பாராதவிதமாகத் திருமணம் நடந்ததைப் பற்றிச் சொல்லியிருந்தார்...

இதனைக் கொஞ்சம் எதிர்பார்க்காதிருந்த பாக்யத்திற்குப் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது அர்ஜூனின் திருமணம்...

அவளுக்கு இந்த வரவேற்புக்கு வருவதே பிடித்தம் இல்லாத பொழுதும் அர்ஜுனின் மனைவியைப் பார்க்க வேண்டும்.... நிச்சயம் அவள் ஸ்ரீயின் அளவிற்கு வசதியாக இருக்க வாய்ப்பில்லை....

ஏனெனில் அவள் வசதியானவளாக இருந்திருந்தால் இப்படித் திடீர் திருமணம் செய்திருக்க அவசியம் இல்லை என்று மனதில் வன்மமாக நினைத்தவள் வரவேற்ப்பில் திவ்யாவின் வரவை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருந்தாள்....

ஆனால் ஹோட்டலுக்கு வந்தவருக்கு அங்கு மஹாவும் வினோத்தும் நெருங்கி நின்று விருந்தினர்களை வரவேற்றது மேலும் ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்தது...

பின்னே மகளைத் தான் அர்ஜூனிற்கு மணம் முடிக்க முடியவில்லை... தன்னுடய மகனிற்காகவாவது மஹாவை எடுக்கலாம் என்று இருந்தவருக்கு இது பேரிடி அல்லவா....

மனதிற்குள் குமைந்தவள் முகத்தில் அதிர்ச்சியைக் காட்டாமல் ஸ்ரீயிடம் திவ்யாவின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்க ஸ்ரீயோ தன் நாத்தனாரிடம் "ரிஷப்ஷனுக்கு அப்புறம் பேசிக் கொள்ளலாம்" என்று கூறி நழுவிவிட்டார்.

குடும்பத்தினர் அனைவரும் வந்ததும் ஹோட்டலின் விஷேஷ ஹாலிற்குள் நுழைய மிகவும் பிரம்மாண்டமாக அமைத்திருந்த மேடையைப் பார்த்த கலாவிற்குப் பெருமிதம் தாங்கவில்லை....

முகமேல்லாம் மலர்ச்சியாகத் தன் மகளின் அருகில் வந்தவர் அவள் கரத்தைப் பற்றி ஸ்ரீயுடன் இணைந்து மணமக்களை மேடையில் அமரச் செய்தார்.

மயில் தோகையை விரித்தது போல் மேடை அலங்காரம் செய்யப்பட்டிருக்க, மயில் கழுத்து நிறத்தில் புடவை உடுத்தியிருந்த திவ்யா அங்கிருந்த அனைவரின் கண்களையும் அத்தனை கவர்ந்தாள்.

அவளுடைய முகம் வெட்கத்தினாலேயும் அர்ஜூனுக்கு வெகு அருகில் அமர்ந்திருக்கும் சஞ்சலத்தினாலேயும் அவளை மிகவும் அழகாகவே காட்டியதாக ஸ்ரீக்குப் பட்டது...

அருகில் வந்தவர்...

"திவ்யா, ரொம்ப அழகா இருக்கடா... என் கண்ணே பட்டிரும் போல இருக்கு.... வீட்டிற்குப் போனவுடனே உனக்குச் சுத்திப் போடுறேன்" என்றார்....

இதனைக் கேட்ட அர்ஜூன் சட்டென்று திரும்பி திவ்யாவை பார்க்க,

"உனக்கும் சுத்தி போடுறேண்டா... அதுக்கு எதுக்கு எங்கள இப்படி முறைச்சுப்பார்க்கிற" எனவும்,

அவன் "ம்ப்ச்" என்று சலித்துக் கொண்டு திரும்பினான்....

விருந்தினர்கள் அனைவரும் வந்து சேர்ந்து இருக்க வந்திருந்தவர்களை வரவேற்கும் பொருட்டு மேடையில் ஏறிய பாலா...

"இங்க வந்திருக்கும் எல்லோருக்கும் ஆச்சர்யமா இருக்கும்.... ஏதோ கெட் டு கெதர்ன்னு சொல்லி இன்வைட் பண்ணிட்டு இப்போ கல்யாணம் ரிஷப்ஷனாக இருக்கேன்னு.... எப்போ அர்ஜூனுக்குக் கல்யாணம் ஆச்சு? உங்களுக்கெல்லாம் ஏன் சொல்லலையான்னும் இருக்கும்... உண்மை தான்... ஒரு முக்கியமான தருணத்தில் அர்ஜூனுக்கும் திவ்யாவிற்கும் கல்யாணம் ஆகிடுச்சு.... அதனால் அந்தக் கல்யாணத்தை உங்க எல்லோருக்கும் தெரியப்படுத்தனும் தான் இந்த ரிஷப்ஷனை நாங்க அரேஞ்ச் பண்ணியிருக்கோம்... இது தான் என்னோட மருமகள் திவ்யா... மிசஸ் திவ்யா அர்ஜூன்" எனவும்,

அங்கு வந்திருந்த விருந்தினர்களிடேயே பெருத்த சலசலப்பு ஏற்பட்டது.....

ஸ்ரீ, அர்ஜுனையு திவ்யாவையும் மண மேடைக்கு அழைத்து வரும் பொழுதே அனைவரும் கிசுகிசுத்துக்கொள்ள, இப்பொழுது பாலா அவர்கள் திருமணத்தைப் பற்றிச் சொல்லவும் ஆர்வம் மேலிட ஒருவருக்கு ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டார்கள்...

இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் இருப்பவன் அர்ஜூன்....

அவனுடைய தொழில் சாம்ராஜ்யம் உலக அளவில் பரந்து விரிந்து இருந்திருந்தது... அதுவும் அழகான இளம் தொழிலதிபன்....

அவனுக்குப் பெண் கொடுக்க எத்தனையோ தொழிலதிபர்கள், குழுமங்களின் நிறுவனர்கள் போட்டிக் போட்டுக் கொண்டு இருக்க, அவனின் இந்தத் திடீர் திருமணம் அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்து இருந்ததென்றால்,

தங்கள் பெண்களை அவனுக்கு மணமுடிக்கக் கனவுக் கண்டு கொண்டு இருந்த சொந்தங்களுக்குப் பொறாமையை உண்டு பண்ணியிருந்தது....

பின் ஆறு அடி மூன்று அங்குலத்திற்கு நெடு நெடுவென உயரத்துடன் செக்கச் சிவந்த நிறத்துடன் பேரழகனாகத் தங்கள் கண் முன் இருப்பவனை யாருக்கு விட்டுக் கொடுக்க மனம் வரும்...

அதிலும் இன்று அவன் கரு நீல நிற ப்ரையோனி வேன்க்யுஷ் ப்ளேசரும் [Brioni Vanquish blazer], உள்ளே பளீர் வெள்ளையில் காலர் இல்லாத டி ஷெர்ட்டும், கரு நீல நிற பேண்டும் அணிந்து கம்பீரமாக ஆணழகின் சுயரூபமாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவர்களால் பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது...

பாலா திவ்யாவை அத்தனை சொந்தங்களுக்கு முன் அறிமுகப்படுத்த தன் மாமனார் தன்னை "மிஸஸ் திவ்யா அர்ஜூன்" என்று கூறியது வேறு வெட்கத்தை அள்ளித் தர முகம் சிவந்து திவ்யா தலையைக் குனிந்து கொள்ள, அர்ஜுனிற்கோ சங்கோஜமாக இருந்தது...

அவனுக்கு இப்படித் தன்னை அழைத்து வந்தது ஏதோ பொம்மலாட்டம் போலவும் அதில் தன்னை ஒரு பொம்மையாகவும் அமர வைத்திருந்ததைப் போலவே உணர்ந்தவன் ஏனோ ஒட்டாத மனதுடனே அங்கு மேடையில் அமர்ந்து இருந்தான்....

அர்ஜூனின் முக மாற்றத்தையும் அதில் தெரிந்த வாட்டத்தையும் பார்த்த கலா உடனேயே பாலாவின் கையிலிலிருந்த ஒலிப் பெருக்கியை வாங்கியவர்,

"நான் ஒரு விஷயம் பேசலாமா அண்ணா?" என்று கேட்க அவரும் சம்மதம் என்று தலையசைத்தார்....

"நான் தான் திவ்யாவோட அம்மா... எங்க மாப்பிள்ளை அர்ஜூனோட அம்மாவும், நானும் சின்ன வயசில இருந்தே நெருங்கிய தோழிகள்.... ஒரு இக்கட்டான சூழ்நிலையில திவ்யாவோட கல்யாணம் நிற்க இருந்த சமயத்தில ஸ்ரீ, தன்னோட மகன் அர்ஜூன எங்க மாப்பிள்ளையா ஆக்கினா.... இதுக்கு நான் கடவுளுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை... இப்போ நான் பேசுறது மாப்பிள்ளைக்குக் கூடப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும்... ஆனால் அவங்க நல்ல மனச நான் எடுத்து சொல்லியே ஆகனும்... நாளைக்கு நீங்க யாரும் இந்தக் கல்யாணத்தைப் பற்றித் தப்பா பேசிடக்கூடாது.... அதுக்குத் தான் இதைச் சொல்றேன்" என்றவர்,

அர்ஜூனிடம் திரும்பி, "என்னைய மன்னிச்சிக்கங்க மாப்பிள்ளை... இத நான் இப்போ சொல்லிட்டதனால பின்னாடி ஒரு பேச்சும் வராது... அதனால தான் நான் பேசினேன்" என்றவர்,

கண்களிலேயே அவனிடம் மன்னிப்பு வேண்ட அவன் ஒரு சிறு புன்னகையையே உதிர்த்தான்....

அதுவே கலாவின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது....

ஏனெனில் அவன் இது வரை கலாவை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை... அவரைப் பார்ப்பதனையே தவிர்ப்பதை போல் இருந்தது அவன் செயல்கள்...

திருமணம் ஆன அன்றோ, அல்லது மறு நாளோ தன் மருமகன் தன்னைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை...

ஆனால் இன்று ஹோட்டலின் வாயிலில் ஸ்ரீக்காகவும் தன் மகள் மருமகனிற்காகவும் ஆவலோடு காத்திருந்தவர் அவனிடம் நலம் விசாரிக்கும் பொழுதும் அவன் ஒரு சிறு புன்னகையைக் கூட உதிர்க்கவில்லை...

தன் சித்தம், சிந்தனை, இதயம் அனைத்திலும் நிறைந்திருக்கும் தன் மனையாளிடமே அவன் இன்னும் நெருங்கி இருக்கவில்லை... தன்னை வெளிப்படுத்தி இருக்கவில்லை...

அப்படி இருக்க அவனுக்கு மற்றவர்களைப் பற்றி நினைக்க எங்கு நேரம் இருக்கிறது??

ஆனால் இன்று தான் பேசியதும் அதற்கு எதிர்ப்பு எதுவும் காட்டாமல் தன்னைக் கண்டு புன்னகைக்கும் மருமகனைக் கண்டவருக்கு அத்தனை நிறைவாக இருந்தது...

மேடையில் இருந்த மணமக்களுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் கூறத் துவங்க பிடித்ததோ பிடிக்கவில்லையோ மற்றவர்களுக்காகவாவது ஒவ்வொருவரையும் திவ்யாவிடம் அறிமுகப்படுத்தினான் அர்ஜூன்....

அவன் அருகில் நெருங்கி அதுவும் இத்தனை பெரிய கூட்டத்திற்கு முன் நிற்பதற்கே அவள் பெரு முயற்சி எடுத்துத் தன்னைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது....

இதில் விருந்தினர்களை அறிமுகப்படுத்தும் பொழுது அவளுக்காக அவளின் உயரத்திற்கு ஏற்றவாறு அவன் குனிந்து பேசியதில், அவன் உடல் அவளின் உடலில் அழுத்தமாகவே உரச உணர்ச்சிகள் மின்னல் போல் பாய்ந்து அவளின் பூ உடலைத் துவளச் செய்திருந்தது...

இதில் சில நேரங்களில் இசை நிகழ்ச்சிகளின் சத்தம் காதை கிழித்துக் கொண்டு இருக்க, அவன் மேலும் அவளின் காதோரம் குனிந்து பேசுவதற்கு உதடுகளைத் தாழ்த்திய போது அவன் மீசை லேசாக அவள் காதில் உரச, அவளின் தேகத்தில் தீ மூள உள்ளத்தில் கிளர்ச்சியும் உடலில் நடுக்கமும் சேர்ந்து எங்கே தளர்ந்து அவர் மேலேயே விழுந்துவிடுவோமோ என்று கதிகலங்கி போய் நின்று இருந்தாள்...

ரிஷப்ஷனுக்கு அர்ஜூனின் சொந்தங்களும் விருந்தினர்களுமே நிறைய வந்து இருந்தாலும் திவ்யாவின் வழியிலும் சிலர் வந்திருந்தனர்...

அவனுக்கு அவளிடம் ஒருவரையும் அறிமுகப்படுத்த தயக்கம் இல்லை... ஆனால் அவன் மேடையில் தங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது திவ்யாவின் சொந்தங்களும் மேடை ஏறி இருந்தார்களென்றால் அவர்களைத் தன் கணவனிற்கு அறிமுகப் படுத்துவது அவளின் கடமை அல்லவா...

இல்லை என்றால் அது அவர்களை அவமதிப்பது போல் ஆகிவிடும்....

ஆனால் அதே சமயம் மறு புறம் திரும்பி பேசிக் கொண்டு இருக்கும் கணவனை எவ்வாறு தன் புறம் திருப்புவது....

"என்னங்க" என்று அழைத்தால் மெல்லிய கீதம் போல் இருக்கும் அவளின் குரல் நிச்சயம் அவன் காதுகளுக்குப் போய்ச் சேராது...

வேறு வழி....

திகிலும் தடுமாற்றமும் போட்டி போட அவள் முகம், அதிகரித்து இருந்த இதயத் துடிப்பை அப்பட்டமாக வெளிக்காட்ட சங்கடத்தின் உச்ச நிலைக்கே சென்று இருந்தவள் முதன் முறையாகத் தன் கணவனின் முழங்கையைத் தொட்டு அழைக்க, அவளின் தொடுகையில் சட்டென்று திரும்பியவன் அவளை ஏறெடுத்து நோக்கி என்ன என்பது போல் மேலும் அவளை நோக்கி குனிய...

அவனின் முகத்தை வெகு அருகில் மூச்சு காத்துப் படும் அளவிற்குப் பார்த்ததால் ஏற்கனவே சிவந்து இருந்த அவளின் முகம் இன்னும் அதிகமாய்ச் சிவந்தது...

அவளின் உடலில், அவள் அன்று வரை அனுபவிக்காத உணர்ச்சிகள் ஊடுருவி செல்ல அதன் விளைவாக அவள் தன் கரத்தை அவனின் முழங்கையில் இருந்து வெடுக்கென்று இழுத்துக் கொள்ள, அச்சத்தின் சாயலும் தவிப்பின் பாவனையும் கலந்து அழகுற தன் முகத்தை நோக்கி அண்ணாந்து நின்ற அவள் பாணியில் அவளின் அழகு பன்முறை அதிகரித்தது போல் தெரிந்ததால் மீண்டும் இந்த உலகை மறந்தான் அர்ஜூன்...

சில நொடிகள் அவளையே பார்த்து இருந்தவன் அவளின் தவிப்பும் தடுமாற்றமும் புரிந்தவன் போல் சிறு இள முறுவலுடன் "என்னாச்சு?" என்றான்...

அவன் கேள்விக்குத் தான் பதில் சொல்லவில்லை என்றால் அவன் மீண்டும் அந்தப் புறம் திரும்பிவிட்டால் மீண்டும் அவனை அழைப்பதற்கு அவளுக்கு மனதில் தெம்பு இல்லை...

அதனால் திக்கித் திணறி... "இவங்க எங்க அத்தை மாமா... எங்க அப்பாவோடு கூடப் பிறந்தவங்க" என்று ஒரு வழியாக அவர்களை அறிமுகப்படுத்த, மனதிற்குள் அவளின் அச்சத்தை ரசித்துக் கொண்டவன் அவளின் மாமாவின் கரத்தை பற்றிக் குலுக்கினான்...

ஆக ஒரு வழியாக வாழ்த்துப் படலம் முடிய மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தவர்கள் ரிஷப்ஷன் ஹாலில் போட்டு இருந்த வட்ட மேஜையைச் சுற்றி இருந்த நாற்காலிகளில் அமர, திவ்யாவிற்குப் போன உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது...

ஆனால் அவளை ஒரு நிமிடம் கூட நிம்மதியாக மூச்சு விட மாட்டார் போல் இருந்தது உணவு அருந்த மண மக்களை ஸ்ரீ அழைத்த பொழுது.... இப்பொழுதைய நாகரிக வழக்கத்தின் படி பஃபே [buffet] அமைப்பில் உணவு பதார்த்தங்களை அங்கு வகைப்படுத்தி வைக்கவில்லை...

இந்த ரிஷப்ஷனே சொந்த பந்தங்களுக்கு மட்டும் தான் என்பதால் நமது கலாச்சாரப் படி வாழை இலை விருந்திற்கே ஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தார்...

மாமியார் உணவு அருந்த அழைத்ததும் வேறு வழியில்லாமல் கணவனைத் தொடர்ந்து நடந்து சென்றவளுக்கு அதிர்ச்சியில் கால்கள் தடுமாறியது அங்கு அத்தனை இளவட்டங்களும் இவர்களுடன் சேர்ந்து உணவு அருந்த அமர்ந்து இருந்ததைக் கண்டு...

ஏனெனில் அவளும் வந்ததில் இருந்து சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் அவர்கள் செய்யும் லூட்டியை, அட்டகாசத்தை...

இங்கும் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ என்று அஞ்சியவாறே அர்ஜூன் அருகே அமர அவள் எதிர்பார்த்தது போல அர்ஜூனை திவ்யாவிற்கு இனிப்பை ஊட்டச் சொல்லி கத்தினார்கள்...

"ஐயோ! இந்த ஒரு நாளில் இருந்து என்னை எப்படியாவது காப்பாத்துப்பா முருகா" என்று திவ்யா உள்ளுக்குள் கதறினாள் என்றால் அர்ஜூனோ ஒரு படி மேலே போய் வாய்விட்டே சலித்துக் கொண்டான்......

"மாம்... இது என்ன கல்யாணமா? ரிஷப்ஷன் தான... எதுக்கு மாம் இதெல்லாம் செய்யனும்"

ஆனால் சிறியவர்கள் அவர்களை விட்டால் தானே......

ஏற்கனவே உடல் நடுங்க, உள்ளுக்குள் உதறலெடுக்க அவனருகில் அமர்ந்திருந்து திவ்யாவிற்கோ இது தேவையா? என்று இருந்தது...

தயங்கியவாறே அவளருகில் அமர்ந்திருந்த ஸ்ரீயைப் பார்க்க, அவரோ "பரவாயில்லை, வாங்கிக்கோ" என்று கண்களாலேயே சைகை செய்ய, என்ன என்று விழித்துத் தன் கணவனை நோக்கி திரும்பியவள் அரண்டு போனாள்..

அங்கு முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் இனிப்பை வைத்துக் கொண்டு அர்ஜூன் தனக்காகக் காத்திருந்ததைக் கண்டவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை...

ஆனால் அவளுக்குள் இந்த எண்ணமே உழன்று கொண்டு இருந்தது....

"தன் கணவன் தன் மனம் விரும்பி இதைச் செய்யவில்லை.... ஊருக்காகத் தான் இதைச் செய்கிறான்" என்று...

எதுவும் பேசாமல் வாயை திறந்தவள் அவன் ஊட்டிய இனிப்பில் சிறிதே கடித்து விட்டு திரும்பிக் கொண்டாள்....

அர்ஜூனிற்குப் பொதுவில் அதுவும் இத்தனை பேர் சுற்றி இருக்க இது போன்ற காரியங்களைச் செய்வது அவனுடைய குணத்திற்கு ஒத்து வராத ஒன்று.....

ஆதலால் அவன் மற்றவர்களுக்காகத் தான் வேறு வழியில்லாமல் திவ்யாவிற்கு இனிப்பை ஊட்டினான்.....

ஆனால் திவ்யாவிற்கு இனிப்பை ஊட்டும் பொழுது அவளின் ரோஜா போன்ற மெல்லிய இதழில் தன் விரல் பட்டவுடன் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பை உடல் முழுவதும் உணர்ந்தவன் தன்னை மறந்து அவளைச் சில நொடிகள் பார்த்திருக்க, கூடியிருந்த இளசுகள் கூட்டமாகக் கத்தியதில் திவ்யா கதி கலங்கி போய்ச் சடக்கென்று தலை கவிழ்ந்தாள்...

மற்றவர்கள் அதனை அவள் வெட்கப்படுவதாக எடுத்துக் கொண்டாலும் அர்ஜூனுக்கு மட்டும் தெரியும் அவள் தன் மீது உள்ள பயத்தினாலேயே அப்படிச் செய்தாள் என்று....

சிறு கோடு போல் மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் விரிந்தது...

பின் திவ்யாவை அவனுக்கு ஊட்ட சொல்ல,

"கடவுளே! இவங்களுக்கு நான் ஊட்டனுமா?" என்று கலங்கிய முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து விழித்தவள் வேறு வழியில்லாமல் இனிப்பை எடுக்க அங்கு அவளையே கூர்ந்து பார்த்தவனின் பார்வையின் வீரியத்தைத் தாங்காதவளின் கை நடுக்கம் எடுத்தது.....

இவற்றையெல்லாம் ஆர்வத்துடன் கண்டு கொண்டிருந்த சிறியவர்கள் மீண்டும் கத்த, திக்கென்று இருக்க வேறு வழியில்லாமல் வெளிப்படையாக நடுங்கும் விரல்களோடு தன் கணவனுக்கு இனிப்பை ஊட்டினாள் திவ்யா...

இவை அனைத்தையும் மூன்றாம் வகுப்பில் சந்தித்து இன்று வரை ஆத்மார்த்தமான நட்புடன் இருக்கும் தோழிகள் இருவரும், இன்று தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் விசித்திரமான முறையில் ஏற்பட்ட பிணைப்பை விழிகளில் நீர் கோர்த்து இருக்க உணர்ந்து ரசித்துக் கொன்டு இருந்தார்கள்...

ஒரு வழியாக ரிஷப்ஷன் முடிந்தவுடன் அனைவரும் கிளம்பவும், திவ்யா அர்ஜுனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருக்க, மற்றவர்களை வேறு காரில் வர சொன்ன ஸ்ரீ சொன்ன அடுத்த வார்த்தைகளில்....

"இந்த அத்தை இன்னைக்கு என்னை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போல" என்றே தோன்றியது திவ்யாவிற்கு....

"அர்ஜூனும் திவ்யாவும் தனியா கார்ல வரட்டும்.... நாம எல்லோரும் வேற கார்ல போகலாம்" என்றார் ஸ்ரீ...

தன் அன்னையைத் திரும்பி பார்த்த அர்ஜூன் அமைதியாகக் காரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர, முன் பக்கம் ஏறுவதா? அல்லது பின் பக்கம் ஏறுவதா? என்று திவ்யா குழம்பி நிற்க,

தன்னவளின் பதட்டத்தை உணர்ந்த அர்ஜூனே எட்டி முன் பக்க கதவை திறந்து விட மூளை உறைந்து நின்றாள் திவ்யா என்றால் ஆச்சரியத்தில் விழி விரித்து நின்று இருந்தனர் அர்ஜூனின் பெற்றோரும், அவன் உடன் பிறந்தவர்களும்!

தொடரும்.
 

Wasee

New member
Irunthalum unakku intha ego aagathu arjun..
Already ava kitta vizhunthuttiyae appuram yenna?
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top