JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 12 & 13

JLine

Moderator
Staff member
அத்தியாயம் - 12


இதற்கு மேல் தன் கணவனை எதிர்த்து பேசும் தைரியம் திவ்யாவிற்கு இல்லை....

ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்தவளுக்கு ஒரே குழப்பம் "இப்போ எங்க போகிறோம்? பழைய கடைக்கா? அல்லது வீட்டிற்கா? என்று..

ஏனெனில் என்ன தான் அவள் சென்னைக்குப் புதிது என்றாலும் தன் கணவன் தான் வந்த வழியில் திரும்பி காரை செலுத்தவில்லை என்பது நன்றாகப் புரிந்தது....

"வீட்டிற்கு என்றால் நிச்சயம் அத்தையும் யாரும் வந்திருக்கப் போவதில்லை..... அங்குப் போய் எப்படி இவருடன் தனியாக இருப்பது? ஒரு வேளை சமையல் அறையில் தெய்வானை அக்காவும் அல்லியும் இருந்தால் அவர்களுடன் இருந்து விட வேண்டியது தான்... ஆனால் கார் போகும் வழியைப் பார்த்தால் வீட்டிற்குப் போவது போலும் தெரியவில்லை..... அவர்கள் முன்னர்ச் சென்ற கடைக்குச் செல்வது மாதிரியும் தெரியவில்லை....."

அவளின் முகம் தெளிவில்லாமல் ஏதோ சிந்தனையில் இருப்பதைக் கண்டவனுக்கு அவள் மனதில் ஓடிய எண்ணங்கள் புரிந்து இருந்தது.... இருந்தும் தான் எங்குச் செல்கிறோம் என்று அவன் சொல்லவில்லை...

அவளின் குழப்பத்திற்கு விடை அளிப்பது போலவே அவன் ஒரு புதுச் சாலையில் காரை செலுத்தியவன் சிறிது நேரத்தில் வழியில் மற்றொரு கடை வாயிலில் நிறுத்தினான்.....

அவன் காரை நிறுத்தவும் இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டே அவனைத் திரும்பி பார்க்க....

சாலையில் கண்களைப் பதித்துக் கொண்டே....

"ஐ ஹாவ் டு கெட் சம்திங்.... பட் ஐ கெனாட் பார்க் தி கார் ஹியர்.... ஐ வி ட்ராப் யூ... கேன் யூ வெயிட் ஃபார் மி அக்ராஸ் தி ரோட்? [I have to get something.... But I cannot park the car here... I will drop you...Can you wait for me across the road?]" என்றவன் அவளைத் திரும்பி பார்க்க, அவன் ஆங்கிலம் புரியாததால் திருதிருவென்று விழித்திருந்தாள் அவனின் அழகிய மனைவி.....

தான் மும்பையில் இருந்து திரும்பி வந்த அன்று ஆங்கிலம் தெரியுமா என்று கேட்க அவள் பட்டென்று தன் படிப்பைப் பற்றிச் சொன்ன நிமிடங்கள் அழகாக விழிகளின் முன் படர....

உதட்டில் வளைந்த சிரிப்பை மிகவும் சிரமப்பட்டுத் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி அடக்கியவன் மீண்டும் அவள் புறம் திரும்பி....

"எனக்குக் கொஞ்சம் திங்ஸ் வாங்கனும்... ஆனால் இங்க கார் பார்க் பண்ண முடியாது.... நான் பார்க்கிங் லாட்ல கார பார்க் பண்ணிட்டு வரேன்.... அதனால நீ ரோட்ட கிராஸ் பண்ணி அந்தக் கடையில் போய் நில்லு.... நான் வந்திடுறேன்" என்றான்.

"ம்ம்ம்" என்றவள் இறங்க, அவன் காரை நிறுத்தும் இடத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்...

அவன் சொன்ன கடை சாலைக்கு மறு பக்கம் இருந்தது... அதற்குச் சிறிது தூரம் நடக்க வேண்டும்....

அது மட்டும் அல்லாமல் அது பெரிய பிரதான சாலை என்பதால் கூட்டமாக வேறு இருக்க, இரு பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றவளுக்கு எப்படி இதைக் கடக்கப் போகிறோம் என்றே கவலையாக இருந்தது...

சில நிமிடங்கள் அப்படியே நிற்க திடீரேன்று மழை வேறு தூர ஆரம்பித்தது....

பேசாமல் இந்தப் பக்கமே ஒரு கடையில் நின்றுக் கொள்வோமா என்று யோசித்தவளுக்கு எதிரே இருக்கும் அந்தக் கடையில் தானே நின்று இருக்கச் சொன்னார்... திரும்பி வந்து நாம் அங்கு இல்லையென்றால் வேறு வினையே வேண்டாம்.....

யோசித்தவள் வேறு வழியில்லாமல் மற்றவர்களுடன் சேர்ந்து சாலையைக் கடக்க அதற்குள் மழை வலுவாகப் பிடிக்க ஆரம்பிக்க விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்...

என்ன தான் வேகமாக நடந்தாலும் சென்னையின் கூட்டத்தில் அவளால் மழை வலுப்பதற்குள் கடையை அடைய முடியவில்லை..

மழையில் முழுவதுமாக நனைந்து விட எதிரே இருந்த கடைக்குள் நுழைந்துக் கொள்ளலாமா என்று நினைத்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் தான் இருந்த நிலையை....

சட்டென்று அடித்த மழையில் அவள் கட்டியிருந்த வெளிர் ரோஜா நிற ஷிஃபான் புடவை ஒட்டுமொத்தமாக நனைந்திருக்க, மெலிதான புடவை அவளின் உடலோடு ஒட்டி அவள் உடலின் அங்கங்களைத் தெளிவாக எடுத்துக்காட்ட அவளுக்கு அந்த நிலமையில் கடைக்குள் செல்வதற்குக் கூச்சமாக இருந்தது...

ஆனால் அதே சமயம் அர்ஜூன் சென்ற திசையும் அவளுக்குப் புலப்படவில்லை....

வேறு வழியில்லாமல் புடவை முந்தானையை எடுத்து தன் மேல் போர்த்திக் கொண்டவள் அந்தக் கடையின் வாசலில் இருந்த கூடாரத்திற்குக் கீழ் மேலும் மழையில் நனையாதபடி நின்றுக் கொண்டாள்....

நின்றவள் சிறிது நேரம் சென்றே கவனித்தாள் அவள் அருகில் கூட்டத்திற்கிடையில் மூன்று வாலிபர்கள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதை.....

என்ன தான் தான் புடவையை இழுத்து மூடியிருந்தாலும் மழையில் நனைந்திருந்த மெலிதான ஷிஃபான் புடவை அவளின் இளமையை, அழகிய உடலின் நெளிவு சுளிவுகளை அப்பட்டமாக வெளிக் காட்டத் தவறவில்லை..

திவ்யாவை சாலையில் இறக்கிவிட்ட அர்ஜூன் கார் நிறுத்தும் இடத்திற்குச் செல்ல, பாதி வழியில் மழை வருவதைப் பார்த்து வீட்டிற்குத் திரும்ப நினைத்தவன் காரை திருப்ப எத்தனிக்க அப்பொழுது தான் கவனித்தான் அது ஒரு வழி சாலை என்று..

இப்பொழுது காரை சுற்றி எடுத்து சென்றால் திவ்யா இருக்கும் கடையை அடைய சிறிது நேரம் பிடிக்கும்....

அது வரை அவள் கடையில் தனியே இருக்க வேண்டும் என்று நினைத்தவன் காரை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பிக்க அவன் நல்ல நேரம் மழை நின்றிருந்தது...

சிறிது நேரத்திலேயே திவ்யா இருந்த கடையை அடைந்தவன் அவள் கடைக்குள் செல்லாமல் வாயிலிலேயே நிற்பதைப் பார்த்துக் குழப்பமாக "கடைக்குள் போவது தானே? எதுக்கு இங்கு நிற்கிறாள்"? என்று எண்ணிக் கொண்டே அவளை நோக்கி நடந்தான்...

அர்ஜூன் எந்த வழியில் வருவான் என்று தெரியாமல் திவ்யா அவனைத் தேடி அங்கும் இங்கும் பார்க்க,

அதற்குள் அவளையே வைத்த கண் வாங்காமல் அவளைக் கண்களாலேயே விழுங்கிவிடுவது போல் பார்த்திருந்த அந்த வாலிபர்கள்...

"டேய், அந்தப் பொண்ணு தனியா வரலைப் போல.... யாரையோ தேடுதுடா" என்றார்கள்....

ஏற்கனவே மழையில் நனைந்தது கூச்சமாக இருக்க, இதில் அந்த வாலிபர்களின் கிண்டல் வேறு.....

இதில் தன் கணவன் தன்னை இந்த நிலையில் பார்த்தால் என்ன செய்வது? என்று நினைத்தவளுக்கு அங்கு நின்றுக் கொண்டிருப்பதே நெருப்பில் இருப்பது போல் இருந்தது...

அவளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் அங்கு வந்த அர்ஜூன் அவளின் நிலையைச் சற்றும் கவனியாமல் "ஏன் உள்ளே போகலை?" என்று கூறியவன் அவள் அருகில் வந்ததும் தான் அவளைக் கவனித்தான்...

"ஷிட்.... அதுக்குள்ள இவ்வளவு நனைஞ்சிட்டியா?" என்றவன்,

"ஓகே... நீ இங்கேயே ஒரே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு.... நான் இப்போ வந்திடுறேன்" என்று கூறியவன் கடைக்குள் சென்றான்.....

வெகு விரைவிலேயே திரும்பி வந்தவன் மழை மீண்டும் வலுக்க ஆரம்பிக்க,

"மழை திரும்பப் பிடிச்சிட்டது..... நீ ஏற்கனவே ரொம்ப நனைஞ்சிட்ட.... அதனால நீ இங்கேயே இரு,... நான் காரை எடுத்திட்டு வந்திடுறேன்" என்று நகர நினைக்க,

திவ்யா அவளையும் அறியாமல் சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து இழுத்தாள்...

நகர்ந்தவன் வெடுக்கென்று தன் கை இழுக்கப் பட என்னவென்று அவளைப் திரும்பிப் பார்த்தவன் அவள் பதட்டத்துடன் அவனைப் பார்த்திருக்க,

"என்ன?" என்று புருவத்தை உயர்த்திக் கேட்க அவளுக்கு எவ்வாறு தன் நிலையை எடுத்து சொல்வது என்று தவிப்பாக இருந்தது.....

அவன் அருகில் வந்தவள் கலக்கத்தைச் சுமந்திருந்த முகத்துடன் "நானும் உங்களோடேயே வரேனே" என்றாள்.....

"இந்த மழையிலையா? வேண்டாம்... நான் போய்க் கார எடுத்திட்டு வந்து வந்துடறேன்"

"இல்லைங்க.... அதான் ஏற்கனவே நனைஞ்சிட்டேனே.... அதனால உங்க கூடவே வரேன்"

அர்ஜூனிற்கு இதென்ன பிடிவாதம் என்று சலிப்பாக இருக்க "ம்ப்ச்" என்றவன் அவளின் முகத்தை உற்று நோக்கியவன் அப்பொழுது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்....

திவ்யா தன்னருகில் அஞ்சி நடுங்கிக் கொண்டு கோழிக் குஞ்சு போல் ஒன்றிக் கொண்டு இருப்பதை......

அர்ஜுனைக் கண்டாலே பயந்து ஒளிபவள்.... அவனின் கூரிய பார்வையின் வீரியத்தைத் தாங்க இயலாமல் தரையில் தலை புதையும் அளவிற்குக் குனிந்துக் கொள்பவள்...

அவன் அவளருகில் சிறிது நெருங்கினாலே கை கால் என உடல் முழுவதும் உதறல் எடுக்க வெளிப்படையாக நடுங்கி நிற்பவள்...

ஆனால் இன்று அவனுடன் வெகு அருகில் அவன் உடலோடு உடல் உரசும் அளவிற்கு ஒன்றிக் கொண்டு இருப்பது எதனால் என்று குழம்பியவன் அவளைப் பார்க்க, அவளோ தன்னை அறியாமல் லேசாகத் திரும்பி அந்த வாலிபர்களைப் பார்த்தவள் சட்டென்று தலையைக் குனிந்துக் கொண்டாள்...

முதலில் அவள் தனிமையில் சாலையைக் கடந்து வரவும் அவள் தனியாகத் தான் வந்திருப்பாள் என்று நினைத்து அவளைக் கிண்டல் பண்ணிய அந்த வாலிபர்கள் அவள் யாரையோ தேடுவதைப் பார்த்து அவள் யார் கூடவோ வந்திருப்பாள் போல என்று ஊகித்து இருந்தாலும் அவர்களின் வயது அவர்களின் கிண்டலைத் தொடர் செய்தது...

ஆனால் அர்ஜூன் வந்த பிறகு அவன் அவளிடம் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்த பிறகு அவனையும், அவன் உருவத்தையும், அவன் பணக்காரத் தோரணையையும் கண்டவர்கள் சட்டென்று அடங்கித் தான் போனார்கள்..

ஆனால் திவ்யாவிற்கோ எங்கே மீண்டும் தன் கணவன் தன்னைத் தனியே விட்டு சென்றுவிட்டால் அவர்கள் அவளை மறுபடியும் வம்பிழுப்பார்களே என்று பயமாக இருந்தது...

திவ்யா அவனின் கரத்தை இறுக்கி பிடித்தவாறு கலங்கிப் போய் இருக்க, அவளின் தவிப்பையும் கலக்கத்தையும் பார்த்த அர்ஜூன் அப்பொழுது தான் அந்தச் செயலை செய்தான்....

சட்டென்று அவளின் வெற்று இடையில் கை வைத்து அவளைத் தன்னருகில் இழுத்தவன் அவளை இறுக்க அணைத்தவாறே அவள் காதிற்கு அருகில் குனிந்து....

"அவங்களைப் பார்த்தா பயப்படுற... சின்னப் பசங்க... ஜஸ்ட் ஃபார் ஃபன்னுக்குத்தான் செய்றாங்க" என்றவன் அவர்களைத் திரும்பி பார்த்து தன் கூரிய ஈட்டி போன்ற பார்வையை அவர்கள் மேல் வீசவும் தவறவில்லை...

அதில் நடுநடுங்கி போன அந்த வாலிபர்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த மழையிலும் விட்டால் போதும் என்று அடித்துப் பிடித்துச் சாலையின் மறு பக்கத்தை ஓட்டமும் நடையுமாகக் கடந்து சென்று இருந்தார்கள்...

இங்குத் திவ்யாவின் நிலைமையோ சொற்களுக்கு அப்பார்பட்டதாக இருந்தது....

அது வரை மழையில் நனைந்ததினால் தான் இருந்த நிலைமையினாலும் அந்த வாலிபர்களின் கிண்டலினால் ஏற்பட்ட கூச்சத்தினாலும் தத்தளித்துத் தவித்து இருந்தவளுக்கு அர்ஜுன் அவளை அவ்வாறு இடைப் பிடித்து இழுத்தது வெட்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

வெற்று இடுப்பில் அவனது கரம் அழுந்த பட்டதும் திக்கென்று அதிர்ந்து தடுமாறியவளின் இதயம் தடதடக்க, கூச்சத்தில் மெல்ல நெளிந்தவள் அவன் கையைத் தன் இடையில் இருந்து விலக்க முயற்சிக்க அதை உணர்ந்தவன் அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து கையை எடுத்து "சரி வா" என்றான்...

என்ன தான் அந்த வாலிபர்கள் அவன் முறைத்த நிமிடமே அந்த இடத்தைக் காலி செய்திருந்தாலும் இனி அவளை, அதுவும் அந்தக் கோலத்தில் தனித்து விட அவனுக்கு மனம் இல்லை...

இருவரும் வேகமாக நடந்து கார் நிறுத்திய இடத்திற்குச் செல்வதற்குள் அர்ஜூனும் நன்றாக நனைந்து விட்டிருந்தான்..

காரில் ஏறியவன் தன் அன்னையின் அலை பேசிக்கு அழைத்து...

"மாம், இங்க ரொம்ப மழைப் பெய்யுது.... நாங்க இரண்டு பேரும் நனைஞ்சிட்டோம்... அதனால நாங்க வீட்டிற்குப் போகிறோம்" என்றான்...

அவர் சரி என்றவுடன் காரை செலுத்தும் முன் திரும்பி திவ்யாவைப் பார்க்க அவளோ குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.....

அதைக் கவனித்தவன் காரின் ஏஸியை குறைக்க, அதைக் கண்டவள் தன் கணவன் முதல் முறை தன் மேல் கரிசனம் காட்டியதால் பாகாய் உருகியவள் கனிவாய் அவனை நிமிர்ந்து பார்க்க, அதே சமயம் அவனும் திரும்பி பார்க்க, ஏற்கனவே அவனின் தொடுகையில் கரைந்து இருந்தவள் அதற்கு மேலும் தாங்க மாட்டாதவளாய் பார்வையை வெளிப்புறம் திருப்பினாள்....

தன் கணவன் தன்னுடன் இத்தனை நேரம் தனிமையில் இருந்திருக்கிறான்.... முதல் முறையாக அவளிடம் இந்த அளவிற்கு அதுவும் பொறுமையாக, நிதானமாகப் பேசியிருக்கிறான்..

இப்பொழுது அவளுக்காக அவளின் குளிர் அறிந்து பரிவுடன் நடந்து கொள்கிறான் என்று நினைத்தவளுக்கு அவன் அவளை அவனாக முதல் முறை தொட்டிருப்பது நினைவில் வர,

இத்தனை நாள் அவளின் அடி மனதில் அவளையும் அறியாமல் அடங்கி இருந்த காதல் கட்டவிழ்ந்து ஆர்ப்பரித்து மேல் எழும்ப, மதிமயங்கிய உள்ளத்தோடு உணர்ச்சிகள் ஊஞ்சலாட உன்மத்த நிலையில் இருந்த இதயம் தன் தாளத்தை அதிகரித்தது....

அர்ஜூனும் காரை செலுத்திக் கொண்டே அவளைப் பார்க்க, அவள் வெட்கத்தில் செந்தனலாய்ச் சிவந்திருந்த தன் முகத்தை அவனிடம் இருந்து மறைக்க மெல்ல கதவோரமாக ஒண்டி அமர்ந்தவள் ஒன்றும் பேசாது வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர, அவனுக்கு அந்த நேரம் தன்னவளை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருந்தது...

மழையில் நனைந்திருந்ததால் மெலிதான வெளிர் நிற ஷிஃபான் புடவை அவளின் இளமை அங்கங்களை வெட்டவெளிச்சமாகக் காட்ட, நீண்ட கூந்தலில் மல்லிகைச் சூடி அதனை அழகாக முன் புறமாக விட்டிருக்க மல்லிகையின் நறுமணம் வேறு அங்கு ஒரு அசாதாரணச் சூழ்நிலையை உருவாக்கியது....

பூவைப் போலவே மிருதுவான கன்னங்கள், கூர்மையான மூக்கில் சிறு ஒற்றைக் கல் மூக்குத்தி, சங்கு கழுத்து, அதற்கும் கீழ் அளவோடு எழுந்திருந்த அவளின் பெண்மையும், மெல்லிய மேலாடை அவள் பெண்மையை மறைக்க முயன்று முடியாமல் அதுவே அவளின் எழில்களின் அழகினை உச்சத்திற்குக் கொண்டு போய் அலங்கரிக்க, அதற்குக் கீழ் குறுகிய இடையும் என்று அவள் உடல் முழுவதும் பருவத்தின் யவனம் விரவி கிடந்தது....

தன்னவளின் உச்சியில் இருந்து இடை வரை அங்குலம் அங்குலமாக ரசிக்க ஆரம்பித்தவன் அவளின் மோகனத்தில் தன்னையும் அறியாமல் தன்னைத் தொலைத்து போக இடை வரை ஊர்ந்த பார்வை அதற்கும் கீழ் என்று இறங்க தன்னிலையை இழுத்து பிடித்து வைத்தவன் "அர்ஜூன் கன்ட்ரோல் யுவர் செல்ஃப் [Arjun, control your self]" என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு தலையை அழுத்தமாகக் கோதி பார்வையை அவளிடமிருந்து வெகு பிரயாசை பட்டே திருப்பினான்...

அவள் தன் மனைவி... அவள் உள்ளத்தில் தன் மீது முதலில் காதல் வர வேண்டும்.... அதற்குப் பின் தான் மனைவி என்ற உரிமையை அவளிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவனின் உறுதி சுக்கு நூறாக உடைய ஆரம்பித்து இருந்தது....

அவனது மனதிற்குள் பெரும் குழப்பம் விளைந்தது... அந்தக் குழப்பம் எதனால் விளைந்தது?

அவளைச் சில நிமிடங்களுக்கு முன் தீண்டியதால் வந்த இன்பத்தினாலா? அல்லது அவள் காதலைச் சொல்லாத பொழுது அவளை எடுத்துக் கொள்ள நினைத்து தறிகெட்டு அலையும் மனதினை அடக்க முடியாமல் வந்த சங்கடத்தினாலா?

தன் அருகில் தன் தேவதை அழகெல்லாம் திரண்டு தனித்து அமர்ந்திருக்க, செயலெதிலும் இறங்காத அவன் சிந்தை வேறு பல விஷயங்களைச் சிந்திக்க ஆரம்பித்தது....

கணவனின் மனதில் தான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற தடுமாற்றத்தை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அறியாமல் அவனை விட்டு முடிந்தவரை தள்ளி அமர்ந்து கொண்டு வந்தவள் ஒரு வேளை தன் கணவன் தான் இருந்த நிலையில் மயங்கி தன்னை ஒவ்வொரு பாகமாக ரசித்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்திருந்தால் பின்னாளில் வரக் கூடிய பிரச்சனைகளை அவர்கள் தவிர்த்திருப்பார்களோ????

அவர்களுக்கு வரப் போகும் அந்தப் பிரிவும் வராமல் இருந்திருக்குமோ???

வெகு பிரயாசைப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு வந்த அர்ஜூன் அதற்கு மேலும் காரில் இருந்த அந்த நிசப்தத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் மியூஸிக் ஸிஸ்டத்தை உயிர்பித்தவனின் புருவங்கள் தன்னை அறியாமல் ஆச்சரியத்தில் உயர்ந்தது...

சொல்லி வைத்தார் போன்று அவனின் மனதில் மண்டிக்கிடந்த ஆசைகளை, தன் மனைவியிடம் தான் சொல்ல விரும்பும் தன் ஏக்கங்களை அப்படியே எடுத்துரைத்தது போல் இருந்தது அந்தப் பாடல்....



சட்டெனத் தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி


இதயம் என்பது எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே உன்னால் தான்
எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமை மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே
இப்படியும் நான் ஆவேனா
மொத்தமும் மாறி போவேனா
கற்பனையும் நான் செய்வேனா
கண்டபடி பொய் சொல்வேனா
யாரை கேட்க, கைகள் கோர்க்க
நீ இல்லாமல் வாழ்வேனா

சட்டெனத் தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி

உனது புன்னகை உரசிச் செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள் தொட்டதும்
நிகழுகின்றதே மாயங்கள்
எதைக் கண்டும் பயந்ததில்லை
இதற்கு முன்பு நானுமே
உனை கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே
எத்தனை பெண்கள் நின்றாலும்
என் விழி உன்னைத் தேடுதடி
தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி
அடியே எந்தன் ஆயுள் ரேகை
உந்தன் கைகளில் ஓடுதடி


நீண்ட நேரம் அந்தப் பாடலிலேயே மனம் லயித்து இருந்ததாலும், புத்தியும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாலும், இருவரும் அவரவர் மன நிலைகளுக்கு ஏற்ப குழப்பத்தில் உழன்று கொண்டு இருந்ததாலும் அவர்களின் வீட்டை வெகு விரைவிலேயே அடைந்திருந்தனர்...

முதலில் வீட்டிற்குள் நுழைந்தவனிற்கு வீட்டில் வேலைக்காரர்கள் முதல் யாரும் இல்லை என்று தெரிய, எதுவும் பேசாமல் சமையல் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டவள் வியந்து போய் அவனிடம் தயங்கிவாறே...

"காபி போட்டுத் தரட்டுமா?" என்றாள்.....

அவளின் மென்மையான குரலில் அவளைத் திரும்பி பார்த்தவனுக்கு அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒரு நொடி மின்னி மறைய தன்னைக் கட்டுப்படுத்தியவன்...

"இல்ல... நீ போய் முதல்ல ட்ரெஸ்ஸ மாத்து" என்றான்.....

ஏனெனில் அவன் உணர்ச்சிகள் முற்றிவிட்டதால் தன் சுயநிலையை இழந்திருந்தவனுக்கு அடக்கமாட்டாத கிளர்ச்சி இதயத்தில் பாய அவனால் இன்னும் அவளின் அழகிய உடலை ஆசையுடன் சுற்றிக் கிடந்த தன் கண்களை அகற்ற முடியவில்லை... அதைத் தவிர்க்கவே அவன் சமையல் அறைக்குள் நுழைந்தது....


"நீங்களும் உங்க ட்ரெஸ் மாத்துங்க... ஈரமா இருக்கு... சளிப் பிடிச்சுக்கப் போகுது" என்றவளை திரும்பி பார்க்க, அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்காதவள் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மெதுவே மாடி ஏற ஆரம்பித்தாள்.....

அறையை அடைந்தவள் "ஈரமா இருக்கு சளிப் பிடிச்சுக்கப் போகுதுன்னு சொன்னா அதற்கெதுக்கு இந்த முறைப்பு? அப்படி என்ன நான் சொல்லிட்டேன்?" என்று நினைத்தவளுக்கு அவன் பார்வையில் தெரிந்தது கோபம் அல்ல, தாபம் என்று புரிந்திருக்க வேண்டும்.....

புரியாதது அவளின் கெட்ட நேரமோ? அல்லது அவனின் பரிதாப நேரமோ???

அதே சிந்தனையில் அறையின் கதவை தாள் போட மறந்தவள் உள்ளே நுழைந்து கட்டில் மேல் தன் பெட்டியை வைத்து அதிலிருந்து ஒரு புடவையையும், அதற்குண்டான ப்ளவுசையும் எடுத்தவள் புடவையைக் கட்டிலின் மேலே போட்டு விட்டு ப்ளவுசை அணிய முற்பட்டாள்....

அங்குக் கீழே சமையல் அறைக்குள் நுழைந்த அர்ஜூனின் நிலைமையோ பரிதாபத்தின் எல்லையைக் கடந்திருந்தது.... இன்னமும் தன் மனதை ஒரு நிலைப் படுத்த முடியாமல் தடுமாறியிருந்தது...

இதயம் கன்னாபின்னாவென்று துடிக்க அவளைப் பின் தொடர முற்பட்ட மனதை அடக்க வழி தெரியாமல் சில நிமிடங்கள் தவித்தவன் தனக்குத் தெரிந்தவரை காபியைப் போட்டு எடுத்துக் கொண்டு மாடி ஏற, சரியாக அவனது அலை பேசியில் கதிர் ஏதோ குறுந்தகவல் அனுப்பினான்.....

அதனைப் படித்துக் கொண்டே படிகளில் ஏறியவன் அவள் அறைக்குள் இருப்பதை மறந்து அறையின் கதவை தட்டாமல் திறக்க காலையில் தன் மனைவி தன்னைப் பார்த்த கிட்டத்தட்ட அதே கோலத்தில் இப்பொழுது அவன் அவளைப் பார்த்திருந்தான்...

ப்ளவுசை அணிந்து கொண்டு இருந்தவள் சற்றும் எதிர்பாராதவிதமாகக் கதவு திறந்து கொள்ள அங்கே தன் கணவனைக் கண்டவள் "ஐயோ!" என்ற ஒரு சின்ன அலறலுடன் கட்டிலில் இருந்த புடவை எடுக்க முற்படும் போது புடவையைத் தவற விட்டுவிட்டுப் பின் தரையில் கிடந்த புடவையைக் கொத்தாக அள்ளி அவசரமாய்த் தன் மார்பினை மூட, அங்கு அவன் கண்ட காட்சியில் அர்ஜூனின் உடலில் தாபத் தீ கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.....

சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள்.....

"அவசரத்தில கதவை தாள் போட மறந்திட்டேன்... கொஞ்சம் வெளியில் இருக்கிறீங்களா?" என்று நடுங்கும் குரலில் அவள் கூற,

அவளை அந்தக் கோலத்தில் கண்டு தடுமாறி சிந்தனை ஓட்டம் தடைப் பட்டு நின்றவனிற்கு அத்தனை விரைவில் தன் உணர்வுகளின் வீச்சுகளில் இருந்து வெளிவர இயலவில்லை...

அவன் இன்னமும் அதே இடத்தில் அசையாமல் நிற்பதையும் அவனின் விழிகள் தன் உடலில் எல்லை தாண்டி பிரயாணிக்கும் இடங்களை தன் அருகில் இருந்த கண்ணாடியில் அவனின் பிம்பத்தில் கண்டவளுக்குக் காதலை விட அச்சமே மேலோங்க அவளின் விழிகள் பீதியும் கலக்கமும் நிறைந்த பார்வையை வெளியிட கெஞ்சும் குரலில்....

"ப்ளீஸ்.... கொஞ்சம் வெளியில் நில்லுங்க" என்றாள்....

அவளின் கெஞ்சலில் தன் மனதை கண நேரத்தில் சமாளித்துக் கொண்டவன் அவளுக்கு எதிர்புறமாகத் திரும்பி "சாரி" என்று மட்டும் சொன்னவன் சட்டென்று அறையை விட்டு வெளியே வர, அவளுக்கு இதயம் தடதடத்ததில் மயக்கமே வருவது போல் இருந்தது....

"கதவைக் கூடத் தாள் போடாமல் அவர் ரூமிலேயே சாவகாசமாக ட்ரெஸ் மாற்றிக் கொண்டு... என்ன திவ்யா? அந்தக் கோலத்தில் அவர் முன்னாடி நின்னுட்டியே... சீசீ, உன்ன பத்தி என்ன நினைச்சிருப்பார்?" என்று எண்ணியவள் மறக்காமல் அவன் வெளியே சென்றவுடன் விருவிருவென்று அவன் பின் சென்று கதவை தாள் போட்டாள்.

வெளியே வந்த அர்ஜூனுக்கு அவள் அவனைத் தொடர்ந்து வேகமாக வந்து கதவை அடைத்தது குழப்பத்தைத் தான் வர வழைத்தது.....

அவள் அவனுடைய மனைவி..... அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும் உரிமை உள்ளவன் அவன் ஒருவனே...

வழக்கமாக அச்சத்தையும் கலக்கத்தையும் விரித்துக் காட்டும் அவளின் விழிகள் இன்று காலை காதலை வெளிப்படுத்தியிருந்ததே.....அப்படி இருக்க ஏன் இந்த ஒதுக்கம்?

அவனுக்கு அவள் நிலை புரியவில்லை... தன் நிலைப் புரியவில்லை... இறுதியில் மனம் கனக்கும் அளவிற்குத் திகைப்பு தான் மிஞ்சியது....

அவனும் ஈர உடையில் இருப்பதால் திவ்யா அவசரம் அவசரமாகப் புடவையை அணிந்தவள் வேகமாகக் கதவை திறக்க, அங்கு அவன் ஒரு கையில் காபியை பருகிக் கொண்டே அலை பேசியில் நோண்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிந்தனை அங்கு இல்லை என்பது அவன் அவளை நிமிர்ந்தும் பார்க்காததில் இருந்து புரிந்து போனது.....

அதற்கு மேல் அவன் முன் நிற்க கூச்சம் இடந்தராமல் தயங்கியவளாக...

"நீங்க ட்ரெஸ் மாத்துங்க" எனவும்...

அவளின் குரலை கேட்டவன் அவளை நிமிர்ந்துப் பார்க்க சற்று முன் நடந்ததை நினைத்தவளுக்கு முகம் செவ்வானமாகச் சிவக்க அதற்கு மேல் அவனைப் பார்க்கும் தைரியமில்லாமல் விருவிருவென்று கீழே இறங்கியவள் நேரே சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்குப் புரியாத ஒரு உணர்வு உடல் முழுவதும் மெல்லியதாகப் பரவ ஆரம்பித்தது...

சற்று நேரமே என்றாலும் தன் கணவன் தன்னைப் பார்த்திருந்ததைக் கண்டவளுக்கு அவன் பார்வையும், விழிகளின் போக்கும் இன்னமும் உடலில் நடுக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்க மௌனமாகச் சமையல் அறையில் இருந்த மேஜையில் அமர்ந்தவளுக்குத் தன் இதயம் துடிக்கும் சத்தம் வெளியில் கேட்பது போல் இருந்தது....

அதற்கு மேல் தன் கணவனைக் காணும் தைரியம் அவளுக்கு இல்லையாதலால் மற்றவர்கள் வீட்டிற்குத் திரும்பி வரும் வரை சமையல் அறையை விட்டு வெளியில் வருவது இல்லை என்று முடிவெடுத்தவள் நேரத்தை போக்கவும், தடுமாறி இருந்த தன் மனதினை திடப்படுத்தவும் சமைக்க ஆரம்பித்தாள்...

இந்த மழை நேரத்தில் சாப்பிட ஆப்பமும் சொதியும் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள் அதையே செய்யத் துவங்க நேரம் போனதே தெரியவில்லை.....

அவள் சமையலை முடிக்கவும் அனைவரும் திரும்பி வரவும் அவர்கள் சத்தம் கேட்டு அர்ஜுன் கீழே இறங்கி வரவும் நேரம் சரியாக இருந்தது.....

அவர்களின் அரவம் கேட்டு சமையல் அறையை விட்டு வெளி வந்தவள் அங்கு அர்ஜூனைக் காண தலைக் குனிந்தவள் குனிந்தவளே... கிட்டத்தட்ட தரை பூமியில் புதைந்துவிடும் அளவிற்குக் குனிந்திருந்தவளை ஸ்ரீயின் கேள்வியே நிமிரச் செய்தது...

"என்னம்மா, அதே சுடிதார் கிடைச்சிச்சா?"

"இல்லத்த... ஆனா கிட்டத்தட்ட அதே மாதிரி வேற இருந்தது.... அத எடுத்து கொடுத்தாங்க" என்றவள் தப்பித் தவறியும் அர்ஜூனை பார்க்கவில்லை....

"வேறு ஏதாவது வாங்கினீங்களா?" என்று ஸ்ரீ கேட்க,

அவள் மனம் முழுவதும் சற்று முன் நடந்திருந்த சம்பவத்திலேயே நிலைக் கொண்டு இருந்ததால் அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் திருதிருவென்று முழித்திருந்தவளைக் கண்டவன் அவளைக் கூர்ந்து பார்த்து...

"யெஸ் மாம்...." என்றவன் அவளின் புறம் திரும்பி "ஸாரி (Saree) வாங்கினோம்" என்றான்...

"ஙே" என்று விழித்தவளுக்குத் தான் ஆடை மாற்றும் முன் அவன் வந்ததையே நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் புடவை என்றதும் சட்டென்று அந்த நினைப்பே வர,

"ஐயோ! இப்போ எதுக்கு எல்லோர் முன்னிலும் இவர் அதைப் பற்றிக் கேட்கிறார்” என்று குழம்ப அவள் முகம் நொடிக்கு ஒரு தரம் மாறுவதைக் கண்டவனுக்குப் புரிந்து போனது....

அவள் இன்னும் அந்த நிமிடங்களில் இருந்து வெளி வரவில்லை என்று... அவளின் தடுமாற்றம் புரிந்தவனாக....

"அதே ஸ்டோரில் ஒரு ஸாரி எடுத்தோமே..... அதைச் சொன்னேன்" என்றான்...

"அப்பாடி" என்றிருந்தது அவளுக்கு......

"சே, அவர் தெரியாமல் ரூமிற்குள் வந்துவிட்டார்.... அதற்காக அதனையேவா நினைத்துக் கொண்டு இருப்பது" என்று நாணியவாறே புடவையை எடுத்து வர எழுந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவர்கள் காரிலேயே வாங்கி வந்த பொருட்களை வைத்துவிட்டு வந்துவிட்டதை......

அவனை நோக்கி "அது கார்லேயே இருக்கு" என்று மெல்லிய குரலில் கூற,

சட்டென்று எழுந்தவன் தன் அறைக்குச் சென்று கார் சாவியை எடுத்து வந்தவன் அவளிடம் கொடுக்க....

"எனக்குக் கார திறக்க தெரியாது" என்றாள் கலக்கத்துடன்.....

அங்கு நடக்கும் அதிசயத்தை உலக அதிசயம் போலப் பார்த்திருந்தது எட்டு ஜோடி கண்கள்.... ஸ்ரீ, பாலா, மஹா, அருணின் கண்களே அவை....

"தி கிரேட் அர்ஜூன் புடவை எடுத்துக் கொடுத்திருக்கிறான்.... மனைவியைத் தனியே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான்.... வீட்டிற்கு வரும் வழியில் காரில் என்ன நடந்ததோ வாங்கிய பொருட்களைக் கூடக் காரிலேயே மறந்து விட்டிருக்கிறார்கள்.... இப்பொழுது மனைவி சொன்னவுடனே மாடிக்கு சென்று தன் கார் சாவியை, அதுவும் தன் கார் அருகில் கூட யாரையும் அனுமதிக்காதவன் மனைவியிடம் சாவியைக் கொடுத்துப் பொருட்களை எடுத்து வரச் சொல்கிறான்"

அவர்களின் ஆச்சரியப் பார்வையைப் பார்த்தும் கண்டு கொள்ளாதவன் திவ்யாவின் அருகில் நெருங்கி வந்து அவளிடம் காரின் ரிமோட்டை கொடுத்து காரை எப்படித் திறப்பது என்று சொல்லிக் கொடுத்தான்.....

அவன் சொல்ல சொல்ல அவள் தலையை ஆம் என்றும், இல்லை என்றும் மாற்றி மாற்றி ஆட்ட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்று உணர்ந்தவன் மெல்லிய புன்னகை உதிர்த்து சரி வா என்று அழைத்து விட்டு வெளியே செல்ல, அவன் பின்னரே ஓடினாள்..

காருக்கு சென்றவன் திரும்பி பார்க்க, அங்குச் சிறு பெண் போல் ஓடி வரும் மனைவியைக் கண்டவன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டவனாக அவள் வரும் வரை காத்திருந்து பின் தன்னுடைய காரின் ரிமோட்டை அவளிடம் கொடுத்து எப்படி அதை உபயோகப்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அவளுக்கு அது மண்டையில் ஏறினால் தானே...

அவன் அவள் வெகு அருகில் நெருங்கி நிற்பதில் சகலமும் அடங்கி ஒடுங்க தன்னை மறந்து நின்று கொண்டிருந்தவளுக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் மற்ற விஷயங்கள் எல்லாம் எங்குத் தெரியப் போகுது?

அதை உணர்ந்தவன் போல்,

"திவ்யா" என்று அழைக்க,

"ஙே" என்று முழித்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க...

"இது தான் காரை அன்லாக் செய்வது... இதை அழுத்தினால் காரின் ட்ரன்க் தானாகத் திறந்து கொள்ளும்" என்று அவளின் விரல் மேலேயே தன்னுடைய விரலை வைத்து அழுத்த அவனின் தொடுகையில் சங்கடத்தில் நெளிந்தவளுக்கு நெஞ்சத்தில் அதிகப்படியான சஞ்சலமும் சலனமும் தோன்றியது....

மெல்லிய விகசிப்பு அவளது பூ முகம் முழுவதும் படர அவன் தீண்டலில் உடல் முழுவதும் நடுக்கம் பரவ, சட்டென்று கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் தலை கவிழ்ந்து நிற்க, தன் ஸ்பரிசத்தால் தடுமாறி நிற்கும் தன் மனையாளை ரசித்தவன் காரில் இருந்து அவர்கள் வாங்கிய ஆடைகள் இருந்த பைகளைத் தானே எடுத்தான்...

அவள் இன்னமும் நடுக்கம் குறையாமல் தடுமாறி தவித்துக் காரின் ரிமோட்டையே பார்ப்பதை பார்த்தவன்....

"இங்கேயே நிற்க போறியா?? இல்லை வீட்டிற்குள் வரப் போறியா??" என்று கேட்டுக் கொண்டே நடக்க,

அவன் கேள்வியில் சுய உணர்வுக்கு வந்தவள் அவனைப் பின் தொடர, அவர்கள் வருகையை ஆவலுடன் பார்த்திருந்த ஸ்ரீ

"பைகளை இங்க கொடு அர்ஜூன்.... புடவையைப் பார்ப்போம்" என்றார்...

அவருக்குத் தன் மகன், அவன் மனைவிக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுத்த புடவையைப் பார்க்க வேண்டும் என்ற மகா ஆவல்.

புடவையைக் கொடுத்தவன் ஒரு நொடி திரும்பி திவ்யாவை பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் மாடிக்கு செல்ல, புடவையைப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்....

அனைவரின் கண்களையும் கவர்வதாக இருந்தது அந்த அழகிய பட்டுப் புடவை.

கலாவிற்கோ அதனின் விலையைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.....

"எதுக்குத் திவ்யா இவ்வளவு விலையில புடவை வாங்கியிருக்க? மாப்பிள்ளை என்ன நினைச்சிருப்பாரு?"

"இல்லம்மா... நான் புடவை எடுக்கும் போது விலையைப் பார்க்கல.... ஆனால் பில் போடும் போது பார்த்திட்டு புடவை வேண்டாம்னு தான் சொன்னேன்... அவங்க தான் கேட்கலை"

இவர்களின் உரையாடல்களைக் கவனித்த ஸ்ரீ....

"கலா.... அவனோட வைஃபுக்கு அவன் புடவை எடுத்துக் கொடுக்கிறான்... அது அவனோட இஷ்டம்.... நாம இதில் எல்லாம் ஒன்னும் சொல்லக் கூடாது" என்று கூறியவரின் மனதிலும் பூரிப்பே நிரம்பி வழிந்தது.....

தன் மகன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனைவியிடம் நெருங்குவதை நினைக்கும் பொழுது.....

ஆனால் தன் கணவனின் மனதை, அது தன்னிடம் தன் உரிமையை நிலைநாட்ட தத்தளித்துக் கொண்டு இருப்பதை, இதயத்தால் தன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டவனின் உள்ளம் உடலாலும் தன்னை ஏற்றுக்கொள்ளத் தவிப்பதை பெண்ணவள் புரிந்துக் கொள்வாளா????


அவள் புரிந்து கொள்ளும் வரை காலம் காத்திருக்குமா? அவள் கணவன் காத்திருப்பானா?

தொடரும்..
 

JLine

Moderator
Staff member


அத்தியாயம் - 13

இரவு உணவு அருந்தும் நேரம் ஆக அனைவரையும் அழைத்த ஸ்ரீ அர்ஜூனையும் அழைக்க, கீழ் இறங்கி வந்தவனின் கண்கள் தன்னவளையே ஆவலுடன் தேடியது...

அவன் அமர்ந்ததும் பரிமாற அருகில் வந்தவளை அவன் நிமிர்ந்து பார்க்க தன் கணவனின் கண்கள் தன்னை ஊடுருவதைப் போல் பார்க்கவும் வேறு பக்கம் தன் விழிகளைத் திருப்பியவள் அவனுக்குப் பரிமாறத் துவங்க அர்ஜூனிற்குத் தன் மனையாளின் மனம் போகும் போக்கு புரிபடவில்லை...

அவள் புடவை காற்றில் அசைந்ததால் அவன் மீது மெல்ல உராய்ந்து அவன் உணர்ச்சிகளை மேலும் கொந்தளிக்கச் செய்ய அவளின் அழகை அள்ளி பருகிய கண்களை நிதானமாக அவள் மேல் ஓடவிட்டவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களைச் சிறிதும் அசட்டை செய்யவில்லை.....

அவன் இன்னும் தன் பார்வையைத் தன்னிடம் இருந்து அகற்றவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டவளின் மனம் திண்டாட்டத்தில் சிக்க, வேறு எதுவும் செய்யும் வகையேதும் அறியாது தடுமாறியவள் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதற்காகச் சமையல் அறைக்குள் புகுந்தாள்....

அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் அவன் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறான்.... அவள் தன்னைத் தேடுவது போலவும் தெரிகிறது.... தன்னைத் தவிர்ப்பது போலவும் தெரிகிறது....

அவளின் இரண்டு கெட்டான் நிலைமையில் இருந்து அவளின் மனதை, அவளின் எதிர்பார்ப்பை, விருப்பத்தை அவனால் ஊகிக்க முடியவில்லை... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....

இன்று அர்ஜூனிற்கு அவன் மனைவியின் அருகாமை வேண்டும்.... அவனுக்கு அவளின் அணைப்பு வேண்டும்... அவன் உடலெங்கும் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் மின்னல் வேகத்தில் பாய்ந்து கொண்டு திணறி இருந்தவனுக்கு அவன் மனைவியின் நெருக்கம் வேண்டும்....

அந்த நினைவுகளில் லயித்து இருந்த அர்ஜூனிற்கு இன்று இரவு எப்படியும் தன்னுடையவளை முழுமையாகத் தன்னவளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி தோன்ற அதற்கு அவள் இணைந்து இழைவாளா என்ற பெரும் கேள்வியும் தோன்றியது......

நிதானமற்ற புத்தியுடன் தவித்திருந்தவனுக்கு, சில நிமிடங்களே ஆனாலும் தன் மனைவியை, அவளின் அழகிய உடலழகை அந்தக் கோலத்தில் கண்டிருந்தவனுக்கு உடலுணர்வு நிலைக் கொள்ளாது துடித்திருந்தது....

அனைவரும் உணவு உண்ட பின் விருந்தினர்களோடு ஸ்ரீயும் மற்றவர்களும் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பிக்க, மாடிக்கு ஏற ஆரம்பித்த அர்ஜூன் திரும்பி திவ்யாவைப் பார்த்தான்...

ஆனால் அவன் மனையாளோ தன் அன்னைக்கு அருகில் அமர்ந்தவள் அவன் பார்வையை வேண்டுமென்றே தவிர்த்தவள் அவன் தன் அறையை அடையும் வரை மறந்தும் திரும்பி பார்க்கவில்லை......

வீட்டிற்கு வந்ததிலிருந்து அர்ஜூனையும் திவ்யாவையும் கவனித்துக் கொண்டே இருந்த ஸ்ரீக்கு என்றும் இல்லாமல் இன்று தன் மகனின் கண்களில் தெரிந்த ஆர்வம் ஒரு அன்னையாய் தன் மகனின் தேடலை உணர்த்த அவன் தன்னுடைய மனைவியாகத் திவ்யாவை ஏற்றுக் கொண்டது உறுதியானது.....

அவன் தன் மனைவியைத் தேட ஆரம்பித்திருக்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்டவர் வயிற்றில் பால் வார்க்க மகிழ்ச்சியில் திக்கு முக்காடியவருக்கு அடுத்தக் கவலை இப்போழுது இந்தச் சின்னப் பெண் தன் கணவனின் மனதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நடந்து கொள்ள வேண்டுமே என்பது தான்.....

அவனே ஒரு பிடிவாதக்காரன்..... இத்தனை நாட்களுக்குப் பிறகு தான் திவ்யாவை ஏற்றுக் கொண்டிருக்கிறான்.... ஆனால் கண்டிப்பாக அவனாகத் திவ்யாவிடம் இதனை வாய் விட்டு சொல்லப் போவதில்லை..... ஏனெனில் பெற்றவளுக்குத் தெரியாதா தன் பிள்ளைகளைப் பற்றி..... ஆனால் திவ்யாவோ அவனைக் கண்டாலே பயந்து நடுங்குகிறாள்...

இவர்கள் இரண்டு பேரையும் எப்படிச் சேர்த்து வைப்பது என்று யோசித்தவர் நேற்று போல் இன்றும் அதே உத்தியைக் கையாள வேண்டியது தான் என்று யூகித்துக் கொண்டவர் திவ்யாவிடம் சிறிதே சத்தமாக.....

"திவ்யா நீ மாடிக்கு போம்மா.... ரொம்ப நேரம் ஆகிடுச்சு" என்றார்...

"ஐயோ! ஏற்கனவே அவர் பார்வையே சரியில்ல..... இதில் இன்னைக்கு நைட்டுமா????" என்று கலங்கியவள்...

"இ.... இல்ல அத்த.... அம்மா நாளைக்கு ஊருக்கு போறாங்க இல்ல... அதனால நான் இன்னைக்கு அவங்க கூடவே படுத்துக்கிறேனே" என்றாள்.

மனதால் நன்கு புரிந்து கொண்டு காதல் மொழி பேசி இதயத்தால் கலந்து இருப்பவர்களுக்கே முதன் முறை தாம்பத்யம் என்பது விடையறியாத விடுகதையைப் போன்றது....

இதில் சின்னப் பெண், அவன் பார்வையில் வழியும் தாபம் சொல்லுகிறது அவன் வேட்கையை... ஆனால் அவளின் மனமுழுவதும் சூழ்ந்திருப்பதோ அவனைப் பற்றிய திகில்..... இதில் அவரோடு தாம்பத்தியமா????

கதி கலங்கி போயிருந்தாள் திவ்யா......

ஆனால் ஸ்ரீக்கோ திவ்யாவின் பதில் சங்கடத்தையும் கலக்கத்தையும் ஒருங்கே கொடுத்தது.....

கிழிஞ்சது போ, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டாரு போல... எந்த ஒரு காரியத்தையும் அர்ஜூன் தன் விருப்பம் இருந்தால் மட்டுமே செய்வான்.....

இல்லை என்றால் எக்காரணம் கொண்டும் அவனைச் செய்ய வைக்க முடியாது..... அது அவன் போடும் உடைகள் ஆகட்டும், படித்த படிப்பாகட்டும், செய்யும் தொழிற்கள் ஆகட்டும்...

எதிலும் அவனாக விரும்பி ஈடுபட்டால் மட்டுமே உண்டு..... அவ்வளவு பிடிவாதமும் அழுத்தமும் நிறைந்தவன்....

அப்படி இருக்கும் பொழுது நானே இந்தக் கல்யாணத்தை அவன் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறானோ என்று அரண்டுப் போய் இருந்த சமயம் கடவுளின் புண்ணியம் அவனுக்குத் தன் மனைவியின் மேல் இவ்வளவு சீக்கிரம் ஒரு ஈடுபாடு வந்திருக்கிறது...

அதை இந்தச் சின்னப் பெண் புரிந்து கொள்ளாமல் இப்படி முரண்டு பிடிக்கிறாளே என்று வருந்தியவர் கலாவை பார்க்க, தன் தோழியின் எண்ணம் புரிந்தவராக,

"திவ்யா, நீ போய் உன் ரூமில படு.... நானும் ஸ்ரீயும் பேச நிறைய விஷயம் இருக்கு.... நாங்க தூங்க எப்படியும் ரொம்ப நேரம் ஆகும்" என்றார்....

ஆனால் திவ்யா அதைக் காது கொடுத்து கேட்டால் தானே...

"இல்லை மா.... நான் உங்க ரூமில படுத்துக்கிறேனே..... நீங்க ஆசுவாசமா வாங்க... நீங்க வரும் வரை முழிச்சிட்டு இருக்கேன்.... நாம் இரண்டு பேரும் பேசி ரொம்ப நாள் ஆகிடுச்சு" எனவும்,

அங்கு மஹா, அருண், வினோத் என்று இளவட்டங்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து இருக்க, இதற்கு மேல் அவளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்ட ஸ்ரீயும் கலாவும் அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாமல் அத்தோடு நிறுத்திக் கொண்டனர்...

ஆனால் ஸ்ரீக்கு தான் "வெண்ணைத் திரண்டு வரும் பொழுது தாழியை உடைத்த கதையாக விட்டதே" என்றிருந்தது....

திருமணத்தன்று தான் சொன்னதும் மனம் முழுவதும் வெறுப்பிலும், அடங்காத சீற்றத்திலும், அவமானத்திலும் கொந்தளித்துக் கொண்டு இருந்தாலும் அவர் மகன் அவரின் சொல்லைத் தட்டவில்லை....

இன்னார் என்றே தெரியாது அவனைப் பொறுத்தவரை அவனின் அந்தஸ்திற்குத் தகுதியில்லாத ஒரு பெண்ணை மணமுடிக்க ஒத்துக் கொண்டான்....

ஸ்ரீ தான் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடோ, வித்தியாசமோ பார்க்காதவர்....

ஆனால் அர்ஜூன் அப்படி இல்லையே....

அப்படி இருக்க அவள் படிப்பையோ, வயதையோ அல்லது வசதியைப் பற்றியோ கவலைப்படாமல் தாய் சொல்லை மறுக்காமல் தாலி கட்டியவனாயிற்றே!!!!

என்ன தான் அதற்குப் பிறகு அவன் விவாகரத்து என்று பேச்சை எடுத்திருந்தாலும் இதோ இப்பொழுது, இந்த நிமிடம் தன் மனைவியாய் அவளை ஏற்றுக்கொண்டு அவளின் துணையைத் தேட ஆரம்பித்து இருக்கிறான்....

இதனை அந்தப் பெண் புரிந்து கொள்ள வேண்டுமே.... நான் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க என் மகனின் வெறுப்பை எந்த அளவிற்குச் சம்பாதித்து இருக்கிறேன்...

இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்? என்று அவரின் மனம் கனக்கத் துவங்கியது.....

ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாது திவ்யாவின் அடி மனதில் ஏற்பட்டிருந்த, அவளைப் பதட்டத்தில் ஆழ்த்தி இருந்த அவளின் அச்சத்தினால் விளைந்திருந்த மனப் போராட்டம்....

அன்று அவள் கணவன் அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததில் இருந்து அவனை நிமிர்ந்துக் கூடப் பார்க்க திராணி இல்லாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.....

அவன் அவளின் இடைப்பிடித்துத் தன் வலியக் கரங்களால் அணைக்கவும் தன் கணவனின் ஸ்பரிசத்தில் நிலைக் குலைந்து இன்ப உணர்ச்சிகள் கிளறிவிடப்பட்டிருந்தாலும், கணவனின் அணைப்பில் பாதுகாப்பாக உணர்ந்திருந்தாலும், அந்த ஸ்பரிசத்தில், பாதுகாப்பில் அவள் மனம் அமைதியடையவில்லை....

மாறாக ஒரு இனம் புரியாத பயமும், பயத்தில் தடுமாறியிருந்த இதயமும் அவளின் உள் மனதில் ஏற்பட்டிருந்த நடுக்கத்தை இன்னும் குறைக்கவில்லை....

கணவன் மனைவி இருவரும் இருவேறு நிலையில் சிக்கித் தவித்ததால் தங்கள் இணையின் நிலையை அடியோடு மறந்தனர்......

அர்ஜூனிற்குத் தன் மனையாளின் அருகாமையினாலும், மென்மையான அவள் தளிர் மேனியின் ஸ்பரிசத்தினாலும் அவனுடைய உடலெங்கும் திமிறிக் கொண்டு இருக்கும் உணர்ச்சிகளின் நெகிழ்ச்சிகளுக்கு வடிகாலாக அவளுடைய நெருக்கத்தை, உறவை தேடிக் கொண்டு இருக்கிறது அவன் மனமும் உடலும்....

திவ்யாவிற்கோ தன் கணவனின் தேடலாலும் அவன் பார்வையில் வழியும் வேட்கையாலும் மனதில் ஏதேதோ எண்ணங்கள் உலாவி அவளை அதிர்ச்சியிலும் அச்சத்திலுமே துவண்டு போகச் செய்திருக்கிறது....

இந்த நிலையில் எப்படி அவருடன் ஒரே அறையில் தங்குவது என்று கலங்கியே அவன் அறைக்குச் செல்லாமல் தவிர்க்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள்....

ஆனால் ஸ்ரீ நினைத்தது சரி என்பது போல் அங்குத் திவ்யாவின் வரவிற்காகக் காத்திருந்த அர்ஜூனிற்கு அவள் நீண்ட நேரமாகியும் வராதது கண்டு மனதில் மிதமிஞ்சிய குழப்பமே சூழ்ந்திருந்தது...

இன்று காலையில் அவன் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் பொழுது அறைக்குள் நுழைந்தவள் அவனை எதிர்பாராதவிதமாக வெற்று மார்புடன் பார்த்திருக்க, அவளின் விழிகள் அவனை ஒரு மனைவியாக ரசித்ததை அவன் பார்த்திருந்தானே.....

மழையில் நனைந்து நடுநடுங்கிக் கொண்டிருந்தவள் அந்த வாலிபர்களின் கிண்டலுக்குப் பயந்து ஒரு கணவனாக உரிமையுடன் அவனை நெருங்கி பாதுகாப்பிற்காக இறைஞ்சி நின்ற பொழுது ஒரு மனைவியின் உரிமையை அவளிடம் கண்டிருந்தானே...

பின் அவளைத் தனிமையில் ஒரு கணவன் மட்டும் பார்க்கக் கூடிய அழகிய கோலத்தில் அவன் பார்த்திருக்கும் பொழுது அவளின் முகத்தில் படர்ந்திருந்த நாணத்தையும் அதனால் அவளின் உடலில் ஏற்பட்ட தடுமாற்றத்தையும் கவனித்திருந்தானே....

"என்னைக் கண்டவுடன் எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தவள், அச்சத்தில் என் கண்முன்னே தோன்றாது மறைந்தே இருந்தவள் இப்பொழுதெல்லாம் என்னைப் பார்த்தவுடன் தலை கவிழ்ந்து கொள்வது என்ன? என் விழிகளின் போக்கை உணர்ந்து முகம் செந்தனலாய்ச் சிவப்பது என்ன?"

"என் காதலை, என் தேடலை, என் தவிப்பை அவள் உணரவில்லையா? இல்லை உணர்ந்தும் என்னிடம் நெருங்க விருப்பம் இல்லையா" என்று இதயம் வெடிக்கும் அளவிற்கு வினவிக் கொண்டிருந்தவனின் உள்ளம் நிலைகொள்ளாமல் தவித்திருந்தது....

நேரம் ஆக ஆக அவள் வரும் சுவடே இல்லாது இருக்க, ஆங்காரமாக அங்கும் இங்கும் நடந்தவனின் முகத்தில் அத்தனை ருத்திரகரமான கோபம் உதயமாயிற்று....

அவள் தன்னைத் தேடி வராததற்குக் காரணம் அவளின் உதாசீனம். புறக்கணிப்பு தான் என்று தவறுதலாக நினைத்திருந்தவனுடைய வெறுப்பு அதிகமாகிற்று...

அவளின் அருகாமையும், தன் அறையில் மறைத்தும் மறையாமலும் தான் கண்ட அவளின் பெண்மையும் அவனின் உள்ளத்தில் மோகத்தைத் தூண்டி அக்கினியை அவன் உடலில் விசிறிவிட்டதால் உணர்ச்சி அலைகளின் சுழற்சியில் சிக்கி கிடந்தவனின் மனம் தாறுமாறாகச் சிந்திக்கத் துவங்கியது....

நேற்று இரவு அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அறையை விட்டு சென்று இருந்தவனுக்கு இன்று இரவு அவன் சித்தம் கோபத்தின் சீற்றத்தில் விபரீதமாக நினைக்கத் தோன்றியது.....

ஆனால் அதே சமயம் அவளை வலுக்கட்டாயமாகத் தன் வசப்படுத்துவதோ அல்லது தன் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் அவளைப் பலவந்தப்படுத்துவதோ அர்ஜூனால் முடியாது....

அது அவனின் குணத்திற்கு அப்பாற்பட்டது....

அவனாக இதுவரை ஒருவர் பின்னும் சென்றதில்லை.... மற்றவர்கள் தான் அவனைத் தேடி அவனது காலடியில் வந்து விழுந்திருக்கிறார்கள்...

அதிலும் பெண்களின் விஷயத்தில் அவன் தன்னுடைய கடினமான பக்கத்தையே காட்டியிருக்கிறானே ஒழிய அவர்களை அவன் ஒரு அளவிற்கு மேல் தன்னை நெருங்கவிட்டதில்லை....

இப்பொழுது மனைவியே ஆனாலும் அவளைத் தேடி நான் செல்ல மாட்டேன்.... நான் வேண்டும் என்றால் அவள் தான் இனி என்னைத் தேடி வரவேண்டும் என்று இறுமாப்புடன் நினைத்திருந்தவனின் மனம் அக்னி மலையாய்க் கொதித்திருந்தது....

சட்டென்று கட்டிலில் படுத்தவன் கோபத்தில் ஒவ்வொரு அலைவரிசையாகத் தொலைக்காட்சியில் [TV Channels] மாற்றிக் கடைசியில் ரிமோட்டை தரையில் தூக்கி எறிந்துவிட்டு தன் ஆத்திரத்தை அடக்க வழி தெரியாமல் உள்ளுக்குள் புகைந்து வெகு நேரம் வரை உறக்கமற்றுக் கிடந்தான்....

அடிபட்ட சிறுத்தையைப் போல் மனம் புழுங்கிக் கொண்டிருந்தவன் இரவு வேகு நேரம் வீட்டின் கூரையைப் பார்த்தவாறே படுத்து இருக்க, கீழே தன் அன்னையுடன் படுத்திருந்த திவ்யாவிற்கோ கணவனின் எதிர்பார்ப்புப் புரிந்திருந்தாலும் அவனை நெருங்குவதற்கு இன்னும் அவளின் மனதில் தைரியம் வரவில்லை...

திருமணத்தன்றிலிருந்து அவனின் சினத்தையும் வெறுப்பையும் மட்டுமே பார்த்திருந்தவளுக்கு இந்தச் சில நாட்களாக அவன் தன்னிடம் விரும்பி நெருங்கி வருவதை உணர்ந்து இருந்தாலும் அவன் வாய்விட்டு சொல்லாத காதலை அவள் மென்மையான மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது....

அவனின் காதலையே புரிந்து கொள்ள மறுத்த மனது அவனோடு தாம்பத்தியத்தை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்ளும்....

ஒரு வேளை அவளின் அச்சத்திற்கு மன சஞ்சலத்திற்கு அவன் பதில் கொடுத்திருந்தாலோ அல்லது தன் உணர்வுகளை அவளுக்குத் தெளிவு படுத்தியிருந்தாலோ அவன் கனவு இன்று பூர்த்தியாகி இருக்குமோ???

தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கணவனின் மனநிலையை முழுவதுமாக அறிந்துக் கொள்ளாமல் தூர இருந்தே அவனின் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள் தன்னுடைய அறியா புறக்கணிப்பால்....

இந்த இருவரில் யாரைக் குறைச் சொல்வது?

தன் கணவனின் மனமாற்றத்தை உணராமல் இன்னமும் அவனுக்கு அஞ்சிக் கொண்டு இருக்கும் திவ்யாவையா?

அல்லது வார்த்தைகளால் சொன்னால் தான் காதலா? என் அருகாமை, அதனால் உனக்குள் ஏற்படும் தகிப்பு, என் பார்வையில் தெரியும் தேடல் சொல்லவில்லையா என் காதலை? என்று சீற்றத்தில் தன் சித்தத்தைத் தொலைத்திருக்கும் அர்ஜூனையா?


பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்த ஸ்ரீக்கு, படிகளில் வேகமாகத் தட தட வென்று யாரோ இறங்கும் சத்தம் கேட்க, வெளியே வந்தவர் அங்கு அதிகாலையிலேயே விரைவாக அலுவலகத்திற்குக் கிளம்பி வந்து கொண்டிருந்த அர்ஜூனின் களைத்த முகத்தைக் கண்டவருக்குப் புரிந்து போனது அவன் நேற்று இரவு சரியாக உறங்க வில்லை என்று.....

"என்ன அர்ஜூன், இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட? இன்னும் டிபன் செய்யலைப்பா.... கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு.... இதோ முடிச்சிடுறேன்"

"நோ மாம்... எனக்கு அவசரமாக ஒரு வேலை இருக்கு" என்றவன் நகர,

அவனின் முகத்தைப் பார்த்தே அவன் உள்ளத்தில் இருக்கும் கோபம் குறையவில்லை என்பதனை உணர்ந்தவர் ஒன்றும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்து இருக்க, விடு விடுவென்று நடந்தவன் சட்டென்று திரும்பி...

"மாம்... அவங்க எல்லோரும் எப்போ கிளம்புறாங்க?" என்றான்...

"கலாவும் அவங்க சொந்தக்காரர்களும் இன்னைக்கு மத்தியானம் டிரெயினுல்ல போறாங்க அர்ஜூன்"

"ஓகே மாம்... அவங்க போனப்புறம் அவள மஹா ரூமுக்கு திரும்பவும் மூவ் பண்ண சொல்லிடுங்க" என்றவன் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான்....

"போச்சு... வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சுடுச்சே" என்று நினைத்தவர்,

"திவ்யா நேற்று கலாவுடன் கெஸ்ட் பெட்ரூமில் தூங்கியது இவனுக்குத் தெரியவில்லை போலிருக்கு... அவள் மஹாவின் அறையில் தூங்கியதாக நினைத்துக் கொண்டு இருக்கிறான்..... சே, இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணிடுச்சே??? என்ன தான் சின்னப் பெண் என்றாலும் புருஷன் மனசக் கூடவா புரிஞ்சுக்கத் தெரியாது.... அவன் கண்ண பார்த்தாலே தெரியல? அவன் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறானென்று" என்று மனதிற்குள் மருகியவர் தன் மகனையும் மனதிற்குள் திட்ட தவறவில்லை...

"கல்யாணம் ஆகி இத்தனை நாட்கள்ல அவன் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட ஒரு கணவனா பேசியதில்லை.... அவளிடம் கணவனாக என்றுமே நடந்து கொள்ளவில்லை.... இப்போ திடீரென்று அவன் அவளை எதிர்பார்த்தால் அவளும் சின்னப் பெண் தானே? எப்படி அவளுக்குப் புரியும்" என்று நினைத்தவர்...

"ஆக நான் தான் இங்க குழம்பிப் போய் நிற்கின்றேன்.... சேர வேண்டிய இரண்டும் அதுங்க பாட்டுக்கு அதுங்க வேலைய செய்து கொண்டு இருக்குதுங்க... என்னமோ போ" என்று சலித்துக் கொண்டவர் கடவுளின் பாதத்தில் தான் பாரத்தை இறக்கி வைத்தவாறே தன் பூஜையைத் தொடர ஆரம்பித்தார்.

நேரே அலுவலகத்திற்கு வந்த அர்ஜூனின் மனதிற்குள் இருந்த புகைச்சல் இன்னும் அடங்கவில்லை.....

அர்ஜூனின் அலுவலகத்தில் அவன் வீட்டில் இருப்பது போல் ஒரு ஜிம் இருக்கிறது.... வீட்டில் உடற்பயிற்சி செய்ய நேரங்களோ சூழ்நிலைகளோ இல்லையெனில் அவன் அலுவலகத்தில் செய்வது உண்டு...

நேரே தன் ஜிம்மிற்குள் நுழைந்தவன் உடை மாற்றி டிரெட்மில் ஏறி ஓட துவங்க, அவனின் ஓட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப மனதின் ஓட்டமும் அதிகரித்தது....

எத்தனை காதலுடன் நேற்று தன் மனைவியின் வருகையை ஆவலாக எதிர்பார்த்திருந்தான்.....

திருமணமான நாள் அன்று அவளை வெறுத்தது உண்மை தான்... அவளைத் தன் வாழ்க்கையை விட்டு அகற்ற வேண்டும் என்று எண்ணியதென்னவோ உண்மை தான்....

ஆனால் தான் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லையே.... தன் அன்னையைப் பழிவாங்குவதற்குத் தான் அதற்குப் பிறகும் அவன் அவளைக் கடிந்து கொள்வது போல் நடந்து கொண்டது....

ஆனால் எந்த நிமிடம் அவள் மேல் காதல் பிறந்ததோ, எந்த நிமிடம் அவளின் அருகாமையை, அவளின் அழகை ரசிக்க ஆரம்பித்து இருந்தானோ அந்த நிமிடத்தில் இருந்து அவன் விழிகள் அவளை ஆசையோடு தழுவ துவங்கிவிட்டதே.....

அதனை அவளும் தானே உணர்ந்திருந்தாள்...

திருமணம் ஆனால் என்ன நடக்கும் என்று தெரியாத அளவிற்குச் சின்னப் பெண்ணா அவள்???

அதுவும் நேற்று மழையில் நனைந்ததில் ஈர உடையுடன் நின்றவள் தன்னைப் பார்த்ததும் அடைந்த வெட்கம் தான் என்ன!

மறுபடியும் அவன் அவளை அறையில் பார்த்ததில் இருந்து அவனைக் காண அச்சப்பட்டுக் கொண்டு ஓடி ஒளிந்தது என்ன!

இதில் இருந்து புரியவில்லை? அவளுக்குத் தன் கணவனின் பார்வை சொல்லும் அர்த்தங்கள்?

அவள் அம்மா தன்னைத் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்று என் அறையில் தங்கியவள் நேற்று அவரையும் மீறி மஹாவின் அறையில் தங்கியிருந்தாள் என்றால்??

என் அருகாமையை அந்த அளவிற்கு வெறுக்கிறாளா? என்று புத்தி தாறுமாறாக எண்ணியது......

அவன் மனம் அதன் போக்கில் நிலைகொள்ளாமல் தவித்தது....

தன் நிலையை அடியோடு மறக்கும் கட்டத்திற்குத் தன்னைத் தானே தள்ளிக் கொண்டு இருந்தான் தறிகெட்டு அலையும் சிந்தனைகளால்....

தன் MD -ஐ தேடி அவன் அறைக்குப் போன கதிர் அங்கு அர்ஜூனைக் காணாமல் தேடி இறுதியில் ஜிம்மிற்கு வந்தவன் வாயிலில் நின்றே அர்ஜுனை அழைத்தான்...

ஏனெனில் தான் ஜிம்மில் இருக்கும் பொழுது அர்ஜூன் யாரிடமும் பேசுவதோ அல்லது அவர்களை ஜிம்மிற்குள் அனுமதிப்பதோ இல்லை... ஜிம்மிற்குள் இருக்கும் குளியல் அறையில் குளித்துவிட்டு வெளி வரும் போது தான் அவனைச் சந்திக்க முடியும்...

ஆனால் இன்று கதிரின் "மே ஐ கம் இன் சார்?" என்ற அழைப்புக்கு அவனை உள்ளே வர பணிக்க, கோபத்தில் சிவந்திருந்த அர்ஜூனின் முகத்தையும், தன் சீற்றத்தை தணிக்க அவன் அதிவேகமாகப் பயற்சி செய்து கொண்டிருந்ததால் அவனின் உடலில் வடிந்து கொண்டு இருந்த வேர்வையும் கதிருக்குச் சொல்லாமல் சொல்லியது தன் MD-யின் மனதை.....

இரு வேறு விதமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த மனதையும், புதிதாக உள்ளத்தில் மலர்ந்திருந்த மனைவியின் மேலான தாபத்தையும் எப்படி அடக்குவது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த அர்ஜூனை கதிரின் அழைப்பு இந்த உலகிற்குக் கொண்டு வந்தது.

உள்ளே வந்த கதிர் எப்படித் துவங்குவது என்று தெரியாமல் தாமதித்தவன் தயங்கியவாறே...

"ஹவ் வாஸ் தி ரிஷப்ஷன் சார்?" என்றான்....

ஏற்கனவே கொதித்துக் கொண்டு இருக்கும் எரிமலையை ஒத்த மனதைக் கொண்டு இருந்த அர்ஜூனிற்கு ரிஷப்ஷன் என்ற வார்த்தை அந்த எரிமலையை வெடிக்கும் நிலைக்குக் கொண்டு செல்ல, தன் கோபத்தை டிரெட்மில்லில் தன் ஓட்டத்தை இன்னும் அதிகரித்து அடக்கிக் கொண்டவன்....

"கதிர்.... அந்த எல்டன் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் காண்டிராக்ட் என்னாச்சு?" என்றான் தன் ஓட்டத்தை நிறுத்தாமல்.

"சார்... பால் இஸ் இன் அவர் கோர்ட் சர் [Ball is in our court sir].... அவங்க கோட்ஸ் எல்லாம் வந்தாச்சு.... நீங்க தான் முடிவு எடுக்கனும்? நம்ம வாங்க போற பார்ட்ஸ் எல்லாம் எப்படி மேனுஃபேக்சர் பண்ணுறாங்க? நம்பி வாங்கலாமான்னு நீங்க தான் அங்க போய்ப் பார்த்திட்டு டிஸைட் பண்ணனும்..... ஏன்னா உங்களுக்கே தெரியும் எவ்வளவு எக்ஸ்பன்ஸீவ் பார்ட்ஸ் அதுன்னு.... சோ என்னுடய சஜ்ஜஷன் என்னன்னா, நீங்க ஒரு ட்ரிப் யு.எஸ் அண்ட் ஜெர்மனிக்கு போய்ட்டு வந்தால் சரியாக இருக்கும்..... அப்புறம் முடிவெடுக்கலாம்" என்றான்...

புத்தி தன் மனைவியின் உதாசீனத்தால் அவமானப்பட்டிருந்தாலும் மனம் அவளின் அருகாமையை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் இதுவே உசிதமான வழி என்று அர்ஜுனிற்கும் பட்டதால் அவளைவிட்டு சில நாட்கள் தள்ளி இருக்க முடிவு செய்தான்....

"ஓகே கதிர் நீங்களே ட்ரிப்புக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.... யாரையாவது வீட்டிற்கு அனுப்பிப் பாஸ்போர்ட்ட எடுத்துட்டு வரச் சொல்லுங்க.... நான் மாம்கிட்ட போன் பண்ணி சொல்லிடுறேன்... நீங்க அதுக்குள்ள அவங்க சேல்ஸ் மேனஜரிடும் பேசிடுங்க.... ரிமம்பர் ஒன் திங் கதிர்... ஆஸ் யூஷ்வல் எல்லா மீட்டிங்சும், அரேஞ்மெண்டுஸும் பக்காவா இருக்கனும்.... என்னுடைய ட்ரிப் ப்ளானையும், ஃப்ளைட் ஐட்டினெரியையும் எனக்கு ஈமெயில் பண்ணிடுங்க" என்றவன் கதிருக்கு விடைக் கொடுத்தான்.

கதிர் அறையை விட்டுச் சென்றதும் அவனது மனது மீண்டும் திவ்யாவிடமே சென்றது...

தான் இருக்கும் இந்தக் குழப்பமான சூழ்நிலையில் அவளை விட்டுத் தூரம் செல்வது ஒரு வழியில் நல்லது தான் என்று நினைத்தவன் தன் அன்னையின் அலை பேசிக்கு அழைக்க, ஆனால் அழைப்புப் போய்க் கொண்டே இருந்ததே ஒழிய அவன் அழைப்பை ஒருவரும் எடுக்கக் காணோம்...

எரிச்சல் அடைந்தவன் மீண்டும் மீண்டும் அழைக்க அங்கே வீட்டிலோ ஸ்ரீ அலை பேசியை ஹாலில் வைத்துவிட்டு பாலாவின் அறையில் அவரிடம் பேசிக் கொண்டு இருந்ததால் அலை பேசியின் அழைப்புச் சத்தம் அவர் காதுகளுக்கு எட்டவில்லை.....

ஆனால் சத்தம் கேட்டு ஓடி வந்த திவ்யா தன் கணவனின் எண்ணைப் பார்த்து எடுப்பதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டு இருந்தவள் அவன் விடாமல் அழைக்கவும் வேறு வழியில்லாமல் எடுக்க, எடுத்தது தன் அன்னை தான் என்று நினைத்துக் கொண்டு "மாம்" என்று அழைக்க, அவன் கம்பீரக் குரல் கேட்டவுடன் அவள் மனமுழுவதும் பயம் கவ்வி கொண்டது...

ஏனெனில் அவன் காலை உணவு அருந்த வராமல் இருக்கத் தன் மாமியாரிடம் அவனைப் பற்றி விசாரிக்க, அவன் எதுவும் வேண்டாம் என்று கோபமாகப் போய்விட்டான் என்று சொல்லியிருந்தார் ஸ்ரீ....

அதில் இருந்து ஏற்கனவே அவளின் மனதில் சுழன்று கொண்டு இருந்த அச்சமும் கலக்கமும் இன்னும் அதிகரித்திருந்தது....

ஆனால் இப்பொழுது வேறு வழியில்லாமல் அவன் அழைப்பை எடுக்க, அவன் ஸ்ரீ என்று நினைத்து பேச, திவ்யாவிற்குத் திக்கென்று இருக்க, இருந்தும் தடுமாறியவாறே.....

"அ.... அத்தை ரூமில் மாமாவோடு பேசிட்டு இருக்காங்க.... இ.... இருங்க போன போய்க் கொடுக்கிறேன்" என்று கூற எதிர்பாராமல் திவ்யாவின் குரலைக் கேட்டவனுக்கு மனதிற்குள் பற்றி எரிவது போல் இருந்தது....

"நேற்று ஏண்டி ரூமிற்கு வரவில்லை?" என்று பேசாமல் கேட்டுவிடலாமா என்று சடுதியில் தோன்றி மறைந்த எண்ணத்தைக் கைவிட்டவன் தானாக இறங்கி வர விரும்பவில்லை.....

கோபத்தைத் தன்னுள்ளே அடக்கியவன்...

"இட்ஸ் ஓகே.... என் ரூமில் என்னுடைய பாஸ்போர்ட் இருக்கு.... ஆஃபிஸிலில் இருந்து வருவாங்க.... எடுத்து கொடுத்து விடு" என்றான்...

சன்னமான கிட்டதட்ட நடுங்கும் குரலில்....

"எந்த இடத்தில் இருக்கு?" என்று அவள் கேட்க,

இப்படிப் பயந்து பயந்தே என்னைக் கொல்றடி என்று நினைத்தவன் அவனின் பீரோவை திறக்கும் குறியீட்டை சொல்லி...

"அதுல இருக்கு" என்றான்...

தன்னுடைய பள்ளி கல்லூரி காலங்களில் ஆகட்டும், இல்லை தொழிலில் ஆகட்டும் எப்பொழுதும் தைரியமான பெண்களுடனேயே பழகியவன்...

ஆனால் பெண்களின் அச்சமும் ஒரு தனி அழகு..... அவர்களின் வெள்ளை மனம் அதனை விடப் பேரழகு என்று அவனுக்கு இது நாள் வரை தெரிந்திருக்கவில்லை.....

திவ்யாவை சந்திக்கும் வரை....

அவள் அவனைக் கண்டால் பயந்து நடுங்கும் பொழுது, அவனைப் பார்த்தவுடன் தலை குனியும் பொழுது, அச்சத்தினால் அவளின் கண்களை அகல விரித்து மருண்டப் பார்க்கும் பொழுது அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருக்கிறது.

அதிலும் நேற்று அந்த வாலிபர்களுக்கு அஞ்சி தன் கணவன் எங்கே தன்னை மீண்டும் தனியே கடையின் வாயிலிலேயே விட்டுவிடுவானோ என்று கலங்கி அவன் கரத்தை பிடித்து இழுத்து தானும் அவனுடன் வருகிறேன் என்றாளே.....

அப்பொழுது அவளின் பயத்தை அவ்வளவு அழகாக விரித்துக் காட்டி அவனை மயக்கியதே அவளின் எழில் முகம்....

மனநிலை முழுவதும் சங்கடத்திலும் சஞ்சலத்திலும் ஆழ்ந்திருக்க முகம் கன்றி இன்னும் தன் ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக் கொண்டிருந்தவன் ஒன்றும் தெரியாதது போல் இருக்கும் மனைவியை நினைத்து கடுகடுத்து இருக்க அங்குச் சில நிமிடங்கள் பலத்த அமைதியே நிலவியது...

"என்ன அந்தப் பக்கம் சத்ததையே காணோம்.... ஒரு வேளை ஃபோன வச்சிட்டாரோ" என்று குழம்பியவள்....

"என்னங்க" என்று அழைக்கச் சட்டென்று சுதாரித்தவன்.....

"பாஸ்போர்ட்ட எடுத்துட்டு போன் பண்ணு" என்றான்.

"சரி" என்றவள் மாடியில் அவனின் அறைக்குள் சென்று அவன் சொன்னது போல் பீரோவை திறந்தவள் திறந்த விநாடி சட்டென்று தன் கணவனுக்கே உரித்தான அவனின் பிரத்யேகமான வாசனை முகத்தில் பளிச்சென்று வீச தன்னை மறந்து சிலையென நின்றாள் சில நிமிடங்கள்.....

அவளையும் அறியாமல் அவள் கண்களில் நீர் படர்ந்தது......

அதிலும் பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் அவனின் புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு அவன் தன்னருகிலேயே இருப்பது போல் ஒரு உணர்வு தோன்ற அத்தனை சிலிர்ப்பாக இருந்தது அவளது பூப் போன்ற இதயத்திற்கு....

இருவரும் தங்கள் இதயம் முழுவதிலும் காதலை சுமந்திருந்தாலும் ஒருவரின் மனதை ஒருவர் புரிந்து கொள்ளாமல் அன்று தேவையற்ற பிரிவினையை உண்டாக்கிக் கொண்டார்கள்....

புகைப்படத்தில் தன் கணவனின் அழகிய முகத்தின் மேல் மென்மையாக முத்தம் பதித்தவள் மீண்டும் அவன் படத்தைச் சில விநாடிகள் ஆழ்ந்து பார்த்து தன் கண்களுக்குள் புதைத்துக் கொண்டவள் வெளியே வர, தங்கள் அறையில் இருந்து ஸ்ரீயும் வெளியே வர திவ்யாவின் கையில் இருந்த பாஸ்போர்ட் அவரின் கண்களுக்குப் பட்டது...

"என்னம்மா, அர்ஜுன் பாஸ்போர்ட் கேட்டானா?"

"ஆமாம் அத்த.... இப்போ தான் ஃபோன் பண்ணினார்.... நீங்க மாமா கூடப் பேசிட்டிருந்தீங்க.... அதனால என்னைய எடுத்து வைக்கச் சொன்னாங்க.... யாரோ அவங்க ஆபிசிலிருந்து வருவாங்களாம்..... அவங்க கிட்ட கொடுக்கச் சொன்னாங்க" என்றாள்.

"இப்பொழுது எதுக்குப் பாஸ்போர்ட்? எங்கேயாவது வெளிநாடு போகப்போறானா? ஒரு வேளை நேற்று நடந்தது இதுக்குக் காரணமோ" என்று நினைத்தவர் திவ்யாவை கீழே அனுப்பிவிட்டு அர்ஜூனின் அலை பேசிக்கு அழைத்தார்...

"என்ன அர்ஜுன்? எதுக்குப் பாஸ்போர்ட்? அப்ராட் எங்கேயும் போகப் போறீயா?"

"யெஸ் மாம், யு.எஸ் அண்ட் ஜெர்மனி போறேன்.... பிஸினஸ் ட்ரிப்..... வர எப்படியும் ஒரு மாசம் ஆகும்"

கேட்டதும் அதிர்ந்த ஸ்ரீக்கு தன் மகனின் வருத்தம் புரிந்திருந்தாலும் அவனின் இயற்கையான குணத்திற்கு இந்தக் கோபம் ஒன்றும் புதிது இல்லை என்று தெரிந்திருந்தாலும் திவ்யாவின் மனதை நினைத்து மனம் கலங்கி போனார்....

அவளும் தன் கணவனைக் காதலோடு மனதிற்குள் பதியவைத்துக் கொண்டாள்... அவனும் அவளை மனைவியாக ரசிக்கத் துவங்கிவிட்டான்.....

ஆனால் தன் ஏழ்மையினாலும் இயற்கையிலே கொண்ட பயந்த சுபாவத்தாலும் அவளால் தன் இதயத்தை வெளிப்படையாக அவனிடம் திறந்து காட்ட முடியவில்லை....

ஆளுமை, பிடிவாதம், திமிர் என்று ஒருங்கே கொண்டிருந்த ஆணவம் பிடித்த அவனும் தன்னிலையில் இருந்து இறங்கி வந்து தானாக அவளிடம் தன் காதலை சொல்ல முயற்சி செய்யவில்லை....

காதலை வார்த்தைகளாக வடிக்காமல் பார்வையிலேயே பறிமாற்றம் செய்து கொண்டவர்களுக்கு அதனை ஏற்றுக் கொண்டு அதனைச் செயலில் வெளிப்படுத்த தெரியவில்லை.....

மனதால் ஒன்று சேர்ந்துவிட்ட இரு இளம் உள்ளங்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தாது உடலால் பிரிய முடிவெடுத்துவிட்டனர்....

இந்தப் பிரிவு தற்காலிக பிரிவா? அல்லது நிரந்தரப் பிரிவா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.....

தொடரும்...








 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top