JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 15 & 16

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 15


அர்ஜூன் மறுக்காததால் (அவன் மறுத்தாலும் இந்த அம்மா விடப் போவதில்லை!) ஸ்ரீ மறுநாளே கலாவை அழைத்தவர் தாலி பெருக்கி கட்டுவதைப் பற்றிப் பேசி ஒரு நல்ல நாள் குறிக்கச் சொன்னார்....

"ஸ்ரீ..... இப்ப தான் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கார்னு சொல்ற.... அதுக்குள்ளேயுமாடி தாலி பெருக்கிக் கட்டறத செய்யனும்..." என்று கலா இழுக்க...

"கலா.... திவ்யா இன்னும் கயிறுதாண்டி போட்டிருக்கா.... கல்யாணம் பண்ணி இவ்வளவு நாளாச்சு.... எங்க முறைப்படி தாலிக் கொடி தான் போடனும்.... நீ ஒரு நல்ல நாள் பாரு.... விஷேஷத்தை எங்க வீட்டிலேயே வச்சுக்கலாம்" என்று முடித்தார் ஸ்ரீ...

அதற்கு மேல் கலாவால் ஒன்றும் பேச முடியவில்லை....

என்ன தான் ஸ்ரீ தன் தோழியாக இருந்தாலும் இப்பொழுது திவ்யாவின் மாமியார்... அவர் சொற்படி அவர்களின் முறைகளைக் கடைப் பிடித்துத் தான் ஆக வேண்டும்..

தன்னுடைய வீட்டிலேயே விஷேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பாலாவிடம் சொன்னவர் அர்ஜூனிடமும் சொல்ல உடனே ஒத்துக்கொண்டால் அவன் அர்ஜூன் இல்லையே...

"ஏன் மாம்? இப்போ தான் ரிஷப்ஷன் வச்சீங்க.... இப்போ இது எதுக்கு?"...

"அர்ஜூன்... ரிஷப்ஷன் வச்சு ரெண்டு மாசத்திற்கு மேல் ஆச்சு.... இதுக்கும் ரிஷப்ஷனுக்கும் என்ன சம்பந்தம்? அது மட்டுமில்லாமல் திவ்யா வெறும் கயிறு தான் போட்டிருக்கா? நம்ம முறையின் படி தாலியை செயின்ல மாட்டனும்... திவ்யாவின் அப்பாவிற்கும் வினோத்திற்கும் லீவுக் கிடைக்கிறத பொறுத்து கலா ஒரு நல்ல நாள் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கா.... தயவு செஞ்சு நீ வீட்டுல இருக்கிற மாதிரி பார்த்துக்க…"

திவ்யாவின் தாலியைப் பற்றிச் சொன்னதும் அர்ஜூனிற்கு அவர்களின் திருமண நாள் நியாபகத்தில் வந்தது.....

இரண்டு முடிச்சு போட்டவன் மூன்றாவது முடிச்சு போடுவதற்குள் திவ்யாவின் அருகில் இருந்து யாரோ மூன்றாவது முடிச்சை போட தாலிக் கயிறை வாங்க கையை நீட்ட, என்ன தான் அந்தத் திருமணத்தை அவன் அந்த நிமிடம் அறவே வெறுத்திருந்தாலும், ஆங்காரத்திலும் அவமானத்திலும் அப்பொழுது சுழன்று கொண்டு இருந்தாலும் மனதில் என்னவோ உந்த, தானே மூன்றாவது முடிச்சையும் போட்டு முடித்தான்....

மனதிற்குப் பிடிக்காவிட்டாலும் ஒரு வேளை அவள் தான் இனி நம் வாழ்க்கை என்று அப்பொழுதே அவனின் ஆழ் மனதில் பதிந்திருந்ததோ!!!!!

நினைத்துப் பார்த்தவனுக்கு இந்த நிமிடமே தன்னவளிடம் தன் காதலை சொல்லமாட்டாமோ என்று மனம் ஆர்ப்பரித்தது...

தாலிப் பெருக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கத் தன் மகனின் மனம் வேறு எதனையோ சிந்தித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஸ்ரீ...

"அர்ஜூன்..." என்றழைக்க...

சுயநினைவிற்கு வந்தவன் வழக்கம் போல் தன் அன்னையின் பேச்சிற்கு மறு பேச்சு பேச ஸ்ரீக்கு அவனை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று குழப்பமாக இருந்தது....

ஆனாலும் விடாப்பிடியாக....

"அர்ஜூன்... இதை நாம் செஞ்சு தான் ஆகனும்... கலாவிடமும் ஏற்கனவே பேசியாச்சு.... நான் சொல்ற நாள் நீ வீட்டில் இரு.... அது போதும்"

"மாம், இது லேடீஸ் விஷயம்..... இதுல என்னைய எதுக்கு எதிர்பார்க்கிறீங்கன்னே எனக்குப் புரியலை…." என்று அவன் மேலும் சலித்துக் கொள்ள,

"ம்ம்ம்.. ஏன்னா தாலி மாத்திக்கட்டப் போறது உன்னோட மனைவிக்கு…" என்றவர் அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்...

வெளியே தன் திருமணம் சம்பந்தமான, தன் மனைவிக்கு உசிதமான எந்த விஷயத்தையும் அவன் பிடிக்காதது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனுக்குமே இது பிடிக்கத் தான் செய்தது...

திருமணம் தான் எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது.... இது போன்ற விஷேஷங்களாவது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் காதலை சொல்லவும் அந்த நாளையே தேர்ந்தெடுத்தான்....

தாலி கட்டிய அன்றுதான் மனதில் காதல் இல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருந்தேன்....

தாலியை மாற்றும் அன்றாவது என் சித்தத்தில் கலந்திருக்கும் காதலை என் இதயத்தில் சுமந்திருக்கும் என்னவளுக்கு வெளிப்படுத்தி அவளை என்னவளாக முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும்.......

அந்த இனிமையான நாளிலேயே தன்னுடைய பரிசு பொருளையும் அவளுக்குக் கொடுக்க முடிவு செய்தான்...



நல்ல நாளை முடிவு செய்து நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்த ஸ்ரீ பாக்யத்தை மட்டும் அழைக்கவில்லை...

அவருக்கு நன்றாகத் தெரியும், அவள் வந்தால் தாலி பெருக்கி கட்டும் போது நிச்சயம் ஏதாவது அபசகுனமாகப் பேசுவாள் என்று.

நாள் குறித்து முடிந்ததும் அர்ஜூனிடம் அதனைப் பற்றிப் பேச...

ஆனால் அர்ஜூனின் நேரம் அன்று அவன் தங்களின் மிகப் பெரிய க்ளையண்டுகள் சிலரை சந்திக்க வேண்டி பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது....

"டாட்.... நான் சில க்ளையண்ட்ஸ மீட் பண்றதுக்காகப் பெங்களூர் போறேன்.... ஏற்கனவே ஷெடியூல் பண்ணியாச்சு.... நான் இந்த ஃபங்ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடியே கிளம்புகிறேன்.... அன்னைக்கு நான் எங்கிருப்பேன் என்று இப்போ என்னால கண்டிப்பா சொல்ல முடியாது…"

"என்ன அர்ஜூன்... எப்பவோ உன் கிட்ட இதைப் பற்றிப் பேசியாச்சு... திரும்பவும் இப்படிச் சொன்னால் எப்படி?

ஸ்ரீக்கு அர்ஜூன் இந்த விஷேஷத்தில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் வேண்டும் என்றே தான் பெங்களூர் போவதாகத் தோன்றியது....

ஆனால் அர்ஜூன் சொன்னது போல் உண்மையிலேயே இது அவன் தவிர்க்க முடியாத தொழில் சம்பந்தப்பட்ட மீட்டிங்...

இவர்கள் இதனைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, அவர்களின் விவாதங்களைக் கவனித்துக் கொண்டு இருந்த திவ்யாவின் மனம் மேலும் அடிப்பட்டுக் காயம் கண்டது....

வெளி நாட்டில் இருந்து வந்ததில் இருந்து அர்ஜூனை அவள் அடிக்கடி காணும் சந்தர்ப்பம் அமையாவிட்டாலும், அவனும் அவன் அலுவலகமே கதியென்று கிடந்திருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதி அவள் மனதில் உலவி கொண்டு தான் இருந்தது....

ஒரு வேளை இத்தனை நாட்கள் பிரிந்திருந்த கணவன் வீடு வந்து சேர்ந்ததில் வந்த நிம்மதியோ அல்லது அவ்வப்பொழுதாவது அவனைப் பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷமோ...

அப்படி இருக்க அத்தையும் மாமாவும் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை போல் என்று நினைத்தவளின் இதயத்தில் புதிதாக அரும்பிய மொட்டுத் தீயில் பட்டுக் கருகியது போல் இருந்தது..

"அவருக்குப் பிரியமில்லாத காரியத்தை ஏன் அத்தையும் இந்த அம்மாவும் செய்கிறார்கள்? இந்தச் சூழலில் அவசியம் தாலி மாற்றிக் கட்ட வேண்டுமா?" என்று மனதிற்குள் எண்ணியவள் தன் விழிநீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்ள, அது அவளருகில் இருந்த மஹாவின் கண்களிலிருந்து தப்பவில்லை...

"என் வயது ஒத்தவர் தான் திவ்யா அண்ணி... இன்னும் சொல்ல போனால் என்னை விடச் சின்னவர்.... இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரோ இல்லையோ ஆனால் பாவம் நிம்மதியாக இல்லை...."

என்று மனம் வெதும்பியவள் தன் ஒட்டு மொத்த தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு தன் அண்ணிக்காகப் பேச முதன் முறை அர்ஜூனின் அறைக் கதவை தட்டினாள்....

"கம் இன்…" என்று அவன் பணிக்கவும் உள்ளே சென்றவள் சில விநாடிகள் தயங்க அவளைக் கூர்ந்து பார்த்தவாறே....

"வாட் மஹா? எனி ப்ராப்ளம்?" என்றான்....

மஹா கலாட்டா பண்ணுவது, கதை அளப்பது எல்லாம் அருணிடம் மட்டும் தான்.... அர்ஜூனிடம் அதெல்லாம் செல்லுபடி ஆகாது....

ஏன்? என்ன? எதற்கு? அவ்வளவு தான்... கேள்விகளும் சரி பதில்களும் சரி அனைத்துமே ஒற்றை வரியிலேயே முடிந்துவிடும்...

அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் "வீராப்பாக வந்தாச்சு, இனி பேசாமல் போக முடியாது" என்று நினைத்தவள் மெதுவாக...

"அண்ணா.... நான் கொஞ்சம் உங்கள் கூடப் பேசனும்" என்றாள்...

அவளின் அருகில் வந்தவன் கதவை சாத்திவிட்டு அவளை நோக்கி புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் பார்க்க,

மனதிற்குள் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்த கேள்விகளைச் சடசடவெனக் கேட்டுவிட்டாள்....

"ஏன் அண்ணா இப்படி இருக்கிறீங்க? எதுக்கு ஒரு சின்னப் பெண்ணை இவ்வளவு ஹெர்ட் பண்றீங்க? அவங்க பாவமில்லை?"

அவள் திவ்யாவை பற்றித் தான் பேசுகிறாள் என்று புரிந்துக் கொண்டவன் மென்மையாகப் புன்னகைத்தவாறே....

"அவ உனக்குச் சின்னப் பெண்ணா?" என்று கேட்க..

"ஆமாம் என்னைய விட அண்ணி மூனு வயசு சின்னவங்க தானே…" என்றவள் இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற கலக்கத்துடனேயே தொடர்ந்தாள்...

"ஆனால் இதைப் பற்றிப் பேச எனக்கும் வயசில்ல தான்.... அதே சமயம் என்னால பேசாமலும் இருக்க முடியலைண்ணா..... உங்க ரெண்டு பேர் கல்யாணமும் நடந்த விதம் சரியில்லாமல் இருக்கலாம்..... இட்ஸ் நாட் ஃபேர் பார் போத் ஆஃப் யூ [Its not fair for both of you"] , உங்களோட மனநிலை எப்படி இருந்திருக்குமோ அப்படித் தான் அண்ணியோட மன நிலையும் இருந்திருக்கும்..... அதுக்காக நீங்களும் அண்ணியும் ஒன்னுன்னு நான் சொல்ல வரலை.... நீங்க வேற அண்ணி வேற தான்..... ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணா அவங்க என்ன மன நிலையோட அப்போ இருந்திருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும்..... ரெண்டு பேர் மேலேயும் தப்பு இல்லைங்கிற போது இப்படி அவங்கள எதுக்கெடுத்தாலும் ஹெர்ட் பண்றது சரியில்லைண்ணா..... அவங்க ரொம்ப இன்னசண்ட்...... பாவம்ண்ணா..... உங்களுக்கு அவங்கள பிடிக்கலைன்னா கூடப் பரவாயில்லை.... ஆனால் எனக்குத் தெரியும் உங்களுக்கு அவங்கள பிடிச்சிருக்குன்னு"

என்று அவள் கூறும் பொழுது அவளை உற்று நோக்கியவன் பதில் எதுவும் கூறாமல் அவளையே பார்த்திருக்க...

அவனின் கழுகு பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பேச்சு தொண்டையிலேயே சிக்கிக் கொள்ள விக்கித்துப் போய் நின்றாள்....

ஆனால் அவன் மேலே பேசு என்பது போல் தலையை அசைத்துச் சைகை செய்ய, வேறு வழியின்றி அவளே தொடர்ந்தாள்...

"இது எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கிறீங்களா? அவங்களுக்குச் சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கிறதும், நீங்க அண்ணிய பார்க்குற பார்வையுமே சொல்லுதே.." என்றவள் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குனிந்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்..

"அதனால ப்ளீஸ்.... இத இப்படியே இழுக்கறத விட்டுட்டு போய் உங்க லவ்வ சொல்லுங்க…" என்றவள் சொன்னதும் தான் புரிந்தது இது நாம ரிகர்ஸல் பார்த்த வார்த்தைகளே இல்லையே என்று....

ஏதோ ஒரு ஆர்வத்தில் கூறிவிட.... "ஐய்யய்யோ!! போச்சு, திட்டு விழப் போகுது" என்று அஞ்சிக் கொண்டு அவனையே பார்த்திருக்க, அவனோ...

"அடிப்பாவி! என்ன பேச்சு பேசுகிறாள்?" என்பது போல் மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை....

இதற்கு மேல் என்ன பேசுவது என்று மஹாவிற்கும் தெரியாமல் சலிப்புடன் தன் அறைக்குத் திரும்பினாள்...

காரை ஓட்டிக்கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த அர்ஜூனிற்கு மனமெல்லாம் மஹா சொன்னதிலேயே நிலைத்து இருந்தது...

திவ்யாவை தான் திருமணம் செய்த நாளை நினைத்தவன், தன் அன்னை திவ்யாவிடம் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்ட பொழுது தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காது கலாவைப் பார்த்தது...

பின் திருமணச் சடங்கின் போது மிகுந்த அச்சத்தோடு தலை குனிந்தவாறே தன் அருகில் அமர்ந்து இருந்தது... சென்னைக்கு வந்ததற்குப் பிறகு தன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஓடி ஒளிந்தது..... அந்த மழை நாளில் தன்னைக் கிண்டல் செய்த வாலிபர்களைப் பார்த்து பயந்து தன்னிடம் ஒண்டிக் கொண்டது...... உடை மாற்றும் பொழுது தன்னைப் பார்த்து பயந்து நடுங்கியது.....

பின் தான் யூ.எஸ் செல்ல கிளம்பிய பொழுது கலங்கிய முகத்துடனும் அழுத விழிகளுடனும் தன்னை மௌனமாக வழி அனுப்பியது என்று ஒன்றன் பின் ஒன்றாக மனதிற்குள் ஓட அந்தக் கணம் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை உணர்ந்தவன் எப்பொழுதோ தன் இதயத்தில் அழுத்தமாகக் காலடியை எடுத்து வைத்திருந்த காதலை தன் மனம் கவர்ந்த மனையாளிடம் சொல்வதற்குத் தயாரானான்...

"எப்படியும் திவ்யாவின் தாலிப் பெருக்கிற்குள் திரும்பி வந்துவிட வேண்டும்" என்று முடிவெடுத்தவன் விஷேஷத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பெங்களூருக்கு கிளம்ப இத்தனை சொல்லியும் கிளம்புகிறாரே என்று நினைத்த திவ்யாவிற்குத் தான் மனம் தவித்துப் போனது...

ஆனால் அவள் கணவன் தன் உள்ளத்திற்குள் புதைத்து வைத்து இருந்த தன்னவளின் மீது இருந்த அளவுக்கடந்த காதல் அவளுக்குப் புரிய வாய்ப்பில்லையே..


கலா குறித்திருந்த தேதியிலே தாலி பெருக்கிற்கு ஏற்பாடு செய்ய, தாலி பெருக்கு அன்று நெருங்கிய சொந்தங்கள் வர ஆரம்பிக்க வீடு களை கட்டியது.

திருமணப் பட்டு புடவையில் அழகுற தேவதைப் போன்று நின்று இருந்த தன் மகளின் அருகே வந்த கலாவிற்கு அவள் கண்களில் தெரிந்த சோகம் எதனையோ உணர்த்த நெருங்கி வந்தவர்,

"எங்கம்மா, மாப்பிள்ளைய காணோம்?" என்றார்..

"இல்லம்மா, அவங்க திடீர்னு பெங்களூருக்கு போற வேலை வந்திடுச்சு.... பிஸினஸ் விஷயமா போயிருக்காங்க... அவங்களுக்குப் பிஸினஸ் தான் முதல் மனைவி…" என்று சிரித்தபடியே கூற,

அவளின் உயிரோட்டமில்லாத புன்னகையைப் பார்த்த கலாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது..... ஆக இன்னும் இவர்களுக்குள் ஒரு இணக்கம் வரவில்லை....

மனம் கனக்க....

"நீ சந்தோஷமா இருக்கியா திவ்யா?"

"எனக்கு என்னம்மா குறைச்சல்? அத்த, மாமா, மஹா அண்ணி, அருண் அத்தான் எல்லோரும் என்கிட்ட பாசமா இருக்காங்க..... நான் என்றால் இவங்க அத்தனை பேருக்கும் அவ்வளவு பிரியம்" என்றவள் மறந்தும் கூடத் தன் கணவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை....

பெற்றவளுக்குப் புரிந்து போனது.... மற்ற அனைவரையும் கூறியவள் வேண்டும் என்றே தான் தன் கணவனைப் பற்றிச் சொல்லவில்லை என்று...

சந்தோஷமாக விஷேஷத்திற்கு வந்தவருக்கு மகளின் கலங்கிய முகமும் பேச்சும் மனதிற்குள் பாரமாக இருக்க அவளின் தலையைத் தடவிவிட்டவர் ஒன்றும் பேசாமல் மௌனமாகவே இருக்க, அதற்குள் கீழே இருந்து ஸ்ரீ அழைத்தார்....

திவ்யாவின் அருகில் வந்த ஸ்ரீ....

"கலா, பார்த்தியா? என் மருமகளை.... எவ்வளவு அழகா இருக்கான்னு?" என்றவரின் முகம் பெருமையில் வழிந்தாலும் இந்த அழகினை அனுபவிக்க வேண்டிய தன் மகன் இவ்வாறு தள்ளி இருக்கிறானே என்று உள்ளுக்குள் வருந்தவும் தவறவில்லை....

இதனைப் பார்த்தவாறே வந்த வினோத் திவ்யாவிடம் வந்தவன் அர்ஜூனைப் பற்றிக் கேட்க, திவ்யா சொன்ன பதிலை கலா அவனிடம் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் சட்டென்று மாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த மஹாவின் மேல் நிலைத்தது...

அழகு தேவதை என மெல்ல அசைந்து படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்தவள் அதே நேரம் அவனைப் பார்க்க அவனின் விழுங்கிவிடும் பார்வையில் தன் விழிகளைத் தாழ்த்தியவள்....

"பார்க்கிறதுக்குத் தான் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருக்கு... ஆனா பார்வை மட்டும் கரெக்டா நம்ம மேல விழுது" என்று நினைத்துக் கொண்டு கலாவின் அருகில் வந்தவள், தான் அணிந்திருந்த புடவையைக் காண்பித்தவள்.....

"எப்படி இருக்கு அத்தை?" என்றாள்...

பார்வை என்னவோ கலாவைப் பார்த்து தான் ஆனால் கேள்வி தன் மனம் கவர்ந்தவனுக்கே என்பது போல் இருந்தது அவள் கேட்ட விதமும் முகப் பாவனையும்...

ஒரு முறை பேச்சு வாக்காகத் திவ்யா அவளிடம் சொல்லி இருக்கிறாள் வினோத்திற்குச் சிட்டி பெண்களின் நாகரிக உடைகள் சுத்தமாகப் பிடிக்காது என்று...

அதனாலேயே அவள் திவ்யாவிடம் நாசுக்காக வினோத்திற்கு என்ன நிறம் பிடிக்கும் என்று விசாரித்து ஏகப்பட்ட கடைகளில் ஏறி இறங்கி அலைந்து திரிந்து இந்தப் புடவையை வாங்கி இருந்தாள்.....

எந்த விஷேஷத்திற்கும் சுடிதார், டாப்ஸ், ஜீன்ஸ் என்று அணியும் மகள் திடீரென்று இன்று புடவை அணிந்திருப்பதைக் கண்ட ஸ்ரீக்கு கூட மிகுந்த ஆச்சரியம்.

அவளின் நிறத்திற்கு அவள் அணிந்திருந்த பச்சை நிற பட்டுப் புடவையும் அதில் அடர்ந்த பிங்க் நிற கரையும் அத்தனை எடுப்பாக இருந்தது.

"மாம், நான் எப்படி இருக்கேன்?" என்று சிறிது சத்தமாகவே கூறவே,

வேறு எங்கோ பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த வினோத் சட்டென்று இவளை திரும்பி பார்க்க, அவனைப் பார்க்காதது போல் சென்றவளைப் பார்த்தவன்,

"ராட்சஷி, என்னம்மா கத்தறா" என்று நினைத்துக் கொண்டவன் அவளின் அழகில் மயங்கவும் தவறவில்லை.

அர்ஜுனைப் போன்று நல்ல சிவந்த நிறம்.... வரைந்து வைத்த ஓவியம் போன்று அபாரமான அழகு.... சிலைப் போன்ற உடல்வாகு... அழகான புருவங்களுடன் கூடிய விழிகள், அழகான வடிவான இதழ்கள் என்று சர்வ லட்ஷணமாய் இருந்தவளைப் பார்க்க பார்க்க அவனுக்குத் திகட்டவில்லை....

சுவற்றுக்கு முதுகு கொடுத்து சாய்ந்தவாறு நின்று அவனைப் பார்த்தவளை கண்டவனுக்கு அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் யாரும் அறியாத வண்ணம் அவளின் அருகில் நெருங்கி நின்றவன் அவளின் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்க்க, அவன் தன் அருகில் வருவதைக் கண்டவுடனே இதயம் பலமாகத் துடிக்க ஆரம்பித்ததை உணர்ந்து இருந்தவளுக்கு அவன் தன் விரல்களைப் பிடிக்கவும் உதறல் எடுக்க ஆரம்பித்தது....

"என்ன தைரியத்தில் இத்தனை பேர் இருக்கும் பொழுது இவர் இப்படி என் கையைப் பிடிக்கிறார்? திவ்யா அண்ணி போல் இவர் பயந்த சுபாவம் இல்லை போல்... நான் சத்தம் போட மாட்டேன் என்கிற தைரியமோ???" என்று நினைத்துக் கொண்டவள் அவன் விரல்களில் இருந்து தன் விரல்களைப் பிரித்துக் கொள்ளப் போராட அவன் பிடியோ உடும்பு பிடியாக இருந்தது....

அவனது அகலமான வலுவான கரத்திற்குள் அவளின் பஞ்சு விரல்களை அனைத்தையும் அழுத்தி கோர்த்துக் கொண்டவன் அவளின் பக்கம் திரும்பாமலே புன்னகைத்துக் கொண்டு இருக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெல்லிய குரலில்...

"ப்ளீஸ் விடுங்க... யாராவது பார்த்திறப் போறாங்க…" என்று கெஞ்ச...

அவளின் முகப் பாவனையில் தன்னைத் தொலைத்தவன் ஒரு முறை கரத்தை அழுத்திப் பிடித்துப் பின் விடுவிக்க, விட்டால் போதும் என்று ஓடிச் சென்று திவ்யாவின் அருகே நின்றுக் கொண்டாள் வினோத்திற்கு மட்டுமே உரிய அவனின் அழகிய ராட்ஷசி....

திவ்யாவை அங்குப் போடப்பட்டிருந்த மனையில் அமர செய்தவர்கள் நல்ல நேரம் பார்த்து தாலி மாற்றும் சடங்கை துவங்கினர்....

நேரம் ஆக ஆக அவளின் மெல்லிய மனம் அங்குத் தன் கணவனின் இல்லாமையை நினைத்து வருந்த எத்தனை முயற்சித்தும் அவளால் தன் உள்ளத்தில் ஓடும் சிந்தனைகளை அகற்ற முடியாமல் அவளின் அழகிய முகம் அவள் உணர்வுகளை அப்பட்டமாக வெளிக் கொண்டு வந்திருந்தது....

அவளின் புன்முறுவலில் கூட ஏதோ ஒரு வலி தெரிவது போல் இருக்க, அவள் அருகில் வந்த ஸ்ரீ அவளின் பட்டுக் கன்னத்தில் சந்தனம் பூசிவிட்டவர்,

"திவ்யா... மனசுக்குள்ள எதையாவது போட்டு குழம்பிக்காதடா.... எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்றவாறே உச்சி வகிட்டில் குங்குமம் வைத்தவர் சுமங்கலிப் பெண்களைத் தாலிக் கயிறை மாற்ற அழைக்கத் திவ்யாவின் இதயத்தை மகிழ்ச்சியில் பூரிக்கச் செய்வது போல் சரியாக வீட்டிற்குள் நுழைந்தான் அர்ஜூன்..

மனையில் அமர்ந்திருந்தவள் அர்ஜூன் உள்ளே நுழைந்ததும் எதிர்பாராதவிதமாகத் தன் கணவனை அங்குக் கண்டவளுக்கு மனதிற்குள் சில்லென்று ஒரு இனிமையான உணர்வு தாக்கி உடலில் மயிற்கால்கள் சிலிர்க்க தன்னையும் அறியாமல் எழ முற்பட, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் வேண்டாம் என்று சைகை மட்டும் செய்துவிட்டு அவளைப் பார்த்தவாறே மாடி ஏறினான்...

மருமகனின் வருகை கலாவிற்கு நிம்மதியாகவும் பாலாவிற்கும் ஸ்ரீக்கும் ஆச்சரியமாகவும் இருந்தது...

அன்று அவ்வளவு எடுத்து சொல்லியும் முடியாது என்று போனவன், இன்று சொல்லாமலே வந்திருக்கிறான்...

"ஒரு வேளை அவன் சென்ற வேலை முடிந்ததோ?" என்று யோசித்துக் கொண்டு இருந்த ஸ்ரீ திவ்யாவை பார்க்க, உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிய தன் கணவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்தச் சின்னப் பெண்...

கடவுளே இந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்காகவாவது தன் மகன் இந்த விஷேஷத்திற்குத் தான் வந்தேன் என்று கூற வேண்டுமே என்று மனதார வேண்டிக் கொண்டார் ஸ்ரீ...

தன் அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் குளித்து முடித்து வெள்ளை நிற முழுக்கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸும் அணிந்து, முழுக்கை சட்டையை முழங்கை வரை மேலே ஏற்றி மடித்துக் கொண்டே சிறு புன்சிரிப்புடன் மாடிப் படிகளில் விடுவிடுவென்று இறங்கிக் கொண்டிருந்த மகனை பெருமிதத்துடன் அவன் அன்னை பார்த்தார் என்றால், அவனின் அழகில் மதி மயங்கி அவனை அள்ளி பருகுவதைப் போல் அவனின் மனையாள் பார்த்துக் கொண்டிருந்தாள்.....

"அண்ணி பார்த்து, அண்ணனை சைட் அடிச்சதுப் போதும்....." என்று மஹா காதுக்கருகில் நெருங்கி கிசுகிசுப்பாகச் சொன்னவுடன் தான் சுய உணர்வுக்கு வந்த திவ்யா, அர்ஜூன் அவளின் எதிரில் போட்டிருந்த சேரில் அமர, சடக்கென்று வழக்கம் போல் தலையைக் குனிந்துக் கொண்டாள்.

அவள் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டவன், இப்பொழுது அவள் எதிரில் அமர்ந்ததும் முகத்தில் வெட்கமும் கூச்சமும் அதே சமயம் வழக்கம் போல் அவனைக் கண்டதும் வரும் அச்சமும் கலந்து தலை கவிழ்ந்து இருப்பதையும் கண்டவனுக்கு அத்தனை கர்வமாக இருந்தது தன்னவளின் அழகும் தன்னைக் கண்டதும் தோன்றிய அவளின் நாணமும்...

வெளிநாட்டில் இருந்து அவன் திரும்பி வந்ததற்குப் பிறகு இந்தச் சில நாட்களாக அவளுடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் அமையாது போக அவனுக்கு எதிரே வர அவளும் அஞ்சி ஓடி ஒளிந்து இருக்க, அவளின் அழகிய முகத்தை உரிமையுடன் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக இன்று அவளுக்கு நேருக்கு நேர் அமர்ந்து இருப்பது அத்தனை இன்பமாக இருந்தது அர்ஜூனிற்கு...

அவளின் உச்சி வகிட்டில் அதிகமாகக் குங்கும் வைக்கப் பட்டிருந்ததால் அது சிறிதே சிதறி அவளின் முகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பட்டிருக்க, தன் கணவன் தன் எதிரே அமர்ந்து தன்னை ஊடுருவும் பார்வைப் பார்த்திருப்பதை அவளின் உள்ளுணர்வு எடுத்துச் சொல்லியிருந்ததால் முகத்தில் சிதறி இருக்கும் குங்குமத்தின் நிறத்திற்குப் போட்டி போடுவது போல் அவளின் குழைந்த முகம் சிவந்திருக்க....

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த அர்ஜூனோ மேனகையிடம் தோற்ற விசுவாமித்ரன் நிலையில் இருந்தான்.....

வாழ்க்கையில் பயம் என்பதையே அறியாதவன்.... ஒற்றை வார்த்தையிலேயே தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஆட்டிப் படைப்பவன்...

ஆனால் இன்றோ இந்தச் சின்னப் பெண்ணிடம் எப்படித் தன் காதலை சொல்லுவது என்று மனதிற்குள் ஆயிரமாவது தடவையாக ஒத்திகைப் பார்த்துக் கொண்டான்...

அனைவரும் சடங்குகளை முடித்தவுடன், வந்திருந்த விருந்தினர்களில் ஒரு வயதான சுமங்கலி பெண் அர்ஜூனைப் பார்த்து,

"நீ வாப்பா, வந்து தாலியில் மஞ்சளும் குங்குமமும் வைத்துவிடு" என்று கூற, இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத திவ்யாவிற்குத் திக்கென்றதில் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது....

"ஏற்கனவே அத்தையும் மாமாவும் அத்தனை எடுத்து சொல்லியும் முக்கிய வேலை இருக்கிறது என்று வெளியூருக்கு போனவர், சென்ற வேலை முடிந்ததோ என்னவோ அதிசயமாக இன்றே வந்திருக்கிறார்...."

"வந்தவர் வேறு எங்கும் செல்லாமல் இப்படி அமைதியாக மற்றவர்களுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதே பெரிசு... இதில் இது வேறையா?" என்று கலங்கியவளுக்குத் தன் கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்று திகிலாக இருந்தது.....

ஆனால் திவ்யாவும் அவன் பெற்றோரும் உடன் பிறப்புகளும் வியப்பில் மூக்கில் விரல் வைப்பது போல் அவன் இளம் முறுவலுடன் எழவும், அதனைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத திவ்யாவிற்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்ததில் கை கால் உதறல் எடுக்கத் துவங்கியது.....

மெதுவாக எழுந்தவன் அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி நடந்து வர, அவள் இதயம் படபடவென்று வேகமாகத் துடிக்க ஆரம்பித்ததில் எங்கே இதயமே வெளியே வந்து விழுந்து விடுமோ என்பது போல் இருக்க அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்த விஷம சிரிப்பு அவளை நாணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது...

அவளின் அருகே வந்தவன் அவளுக்கு அருகில் ஒரு காலை மடித்து மண்டியிட்டவாறு தன்னை மஞ்சள் குங்குமம் வைக்கச் சொன்ன பெண்மணியைத் திரும்பி பார்க்க, அவர் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்...

முதலில் சந்தனத்தை எடுத்து அவளின் கன்னங்களில் பூச சொல்ல, தன் மனையாளை பார்வையிலேயே பருகியவாறு கிண்ணத்தில் இருந்து சந்தனத்தைக் கையில் எடுத்தவன் குனிந்து அவளுக்கு வலிக்குமோ என்பது போல் மென்மையாக அவளின் பட்டுக் கன்னத்தில் தடவ....

அவளுக்குக் கணவனின் தொடுகையில் அதுவும் கன்னத்தில் அவனின் மென்மையான தடவலில் சங்கடமும் சிலிர்ப்பும் மாற்றி மாற்றித் தோன்ற சித்தத்தின் சுழற்சியில் ஆட்கொண்டிருந்தவள் அவன் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் விழிகளைத் தாழ்த்தினாள்....

அவளின் நாணத்தை ரசித்தவாறே அவளை இறுக்கி அணைத்துக் கொள்ளத் தூண்டிய உணர்வுகளை மிகுந்த சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அடுத்து அவர்கள் செய்யச் சொன்னதில் அவன் கட்டுப்பாடுக்களைத் தகர்த்து எறிந்தான்....

திவ்யாவின் தாலியில் மஞ்சளையும் குங்குமத்தையும் அந்தப் பெண்மணி பூச சொல்ல, திவ்யாவை மீண்டும் கூர்ந்து பார்த்தவன் வேண்டும் என்றே தன் இடது கையை அவளின் மார்பில் வைத்து அழுத்தி லேசாகத் தாலியை தூக்கி, மெல்ல தன் வலது கையில் மஞ்சளை எடுத்து பூச, மார்பில் ஆழ அழுத்தி புதைந்திருந்த அவன் கையினால் ஏற்கனவே திக்திக் என்று இருந்தவளுக்கு இப்பொழுது மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது....

அவனின் இந்த அழுத்தமான தொடுதல் அதிர்ச்சியையும் கூச்சத்தையும் கொடுக்க, சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவளின் இதயத்தைத் தன்னுடைய காதல் சொட்டும் பார்வையில் தடம் புரளச் செய்த அந்தக் காதல் கயவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவளின் முகம் நாணத்தில் அதிகாலை சூரியனைப் போல் அத்தனை இரத்த சிகப்பாய் மாறியது...

ஒருவருக்கொருவர் வெகு அருகில் இருந்த பொழுதும், இத்தனை காதலை இதயம் முழுவதும் சுமந்திருந்த பொழுதும் தன் கணவனின் மீது இருந்த அதிகப்பட்ச அச்சத்தால் அவள் விலகியிருக்க, தன் காதலை சொல்ல தடுமாறி அவன் தவித்து இருக்க, இவர்களின் மனங்கள் மட்டும் மௌனமாக ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு இருந்தது....

தனது தொடுகையும், தான் கண் சிமிட்டியதால் அவளின் முகம் சிவந்ததையும், அகல விரிந்த கண்களில் தெரிந்த அவளின் காதலையும் பார்த்தவன், அடி வயிற்றில் இருந்து இதயத்திற்கு ஊடுருவி சென்ற இந்த உணர்வு அவனின் சித்தத்தைத் தடுமாறச் செய்ய, உணர்ச்சி கொந்தளிப்பின் சுழலில் சிக்கியவனுக்குத் தன் கரத்தை அவளின் மார்பில் இருந்து எடுக்க முடியாமல் போனது....

சுற்றி இருந்தவர்களின் களுக்கென்ற சிரிப்புச் சத்தம் தன் நிலையை உணர்த்த இவ்வுலத்திற்குத் திரும்பி வந்தவனின் முகத்தில் தோன்றிய நாணம் ஆண்களுக்குக் கூட வெட்கம் வருமோ என்பது போல் அத்தனை அழகாக அம்சமாக இருந்தது....

சூழ்நிலை புரிந்த அடுத்த நொடி சட்டென்று அங்கிருந்து எழுந்தவன் புன் சிரிப்புடன் மற்றவர்களை நோக்கி விட்டு தன் இடத்தில் சென்று அமர திவ்யா தலை குனிந்தவள் குனிந்தவள் தான்....

விஷேஷம் முடியும் வரை அவள் தன் கணவனை நிமிர்ந்து பார்க்கவில்லை....

இவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கவனித்திருந்த மஹா தன்னிச்சையாகத் தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனும் அவளின் எண்ணம் புரிந்து அவளைப் பார்த்துக் கண் சிமிட்ட,

"அடப்பாவி, அவங்க இரண்டு பேரும் கல்யாணம் ஆனவங்க... அதனால் அண்ணா அண்ணியைப் பார்த்து கண்ணடிக்கிறாரு... இவருக்கு என்ன இத்தனை துணிச்சல்? அதுவும் இத்தனை பேரு இருக்கும் போது.... இது தான் கிராமத்துத் தைரியம் என்பதா?" என்று நினைத்தவள் சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொள்ள அவனுக்குத் தான் மனம் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்தது...

அந்த விநாடி மஹாவின் வசதி அவன் கண்களுக்குத் தெரியவில்லை.... தன்னுடைய நிலை அவன் கண்களுக்குத் தெரியவில்லை..... தெரிந்தது எல்லாம் தன்னவளின் காதல் கொண்ட விழிகளும், வெட்கத்தில் சிவந்திருக்கும் முகமுமே....

அவளின் வெட்கத்தைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்த வினோத் இன்றே அவளைத் தனிமையில் சந்திக்க முடிவு செய்தான்...

ஒரே வீட்டில் இரு ஆண்கள் தங்களின் இணையிடம் தங்கள் காதலை, உள்ளத்தை வெளிப்படுத்த தக்க நேரம், சூழ்நிலை பார்த்து காத்திருந்தனர்......

அர்ஜூன், வினோத்..... இருவரும் தங்கள் மனம் கவர்ந்த பெண்களிடம் தங்கள் இதயத்தைத் திறப்பார்களா?
 

JB

Administrator
Staff member



அத்தியாயம் - 16

அன்று விஷேஷம் முடிந்ததுமே விருந்தினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க ஸ்ரீ வற்புறுத்தியதால் கலாவின் குடும்பத்தினர் மட்டும் அன்று இரவு அங்குத் தங்கிவிட்டுக் காலையில் புறப்பட முடிவெடுத்தனர்....

மஹாவை காலையில் சந்தித்ததில் இருந்து, அவள் மென்மையான விரல்களுடன் தன் முரட்டு விரல்களைக் கோர்த்ததில் இருந்து அவளைத் தனிமையில் சந்திக்கத் தவித்துக் காத்து இருந்த வினோத்திற்குத் தன் அன்னை அன்று இரவு அவர்களின் வீட்டிலேயே தங்க சம்மதித்தது கரும்பு தின்ன கூலியா என்பது போல் இருந்தது...

மனம் முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கத் தன்னவளின் அருகில் இன்னும் ஒரு நாள் இருக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனது இல்லாது சந்தோஷத்தில் திளைத்திருந்தவனின் பார்வை தன்னவளை விட்டு அகலவில்லை....

அவளின் பின்னையே சென்ற பார்வையைத் தடுக்க முடியாமல் அவன் தவித்து இருக்க, உடலை அங்குலம் அங்குலமாகத் தீண்டிச் செல்லும் அவனின் பார்வையை உணர்ந்திருந்தவள் எங்கு அர்ஜூன் அண்ணாவின் கண்களில் இது பட்டுவிடுமோ என்று அஞ்சி அவன் முன் வருவதைக் கூடுமானவரை தவிர்த்திருந்தாள்.....

அவள் மற்றவர்களுக்கு அஞ்சி தான் தன் முன் வராது ஆட்டம் காட்டுகிறாள் என்று அவனுக்குப் புரிந்திருந்தது.... இருந்தும் அவன் பார்வையின் தேடல் குறையவில்லை...

மாலை மறைந்து இரவு நெருங்க மொட்டை மாடிக்கு செல்ல நினைத்தவள் படிகளில் ஏற, ஹாலில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த வினோத்தின் கண்களில் இது தவறாமல் பட, அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாது அவளைப் பின் தொடர்ந்தவனை மஹா அறியவில்லை...

அவளைப் போன்ற அழகி தனக்கு, அதுவும் தனக்கு மட்டுமே உரியவளாக வருவாள் என்று வினோத் கனவிலும் நினைத்திருக்கவில்லை....

சொக்க வைக்கும் அழகுடன் புடவையில் அப்ஸரஸ் போல் பேரழகுடன் இருந்தவளைக் கண்டு அவனது இதயம் தாறுமாறாகத் துடித்திருக்க இதில் புள்ளி மான் போல் அவள் மாடிப் படிகளில் வேகமாக ஏறுவதைப் பார்த்தபடியே பின் தொடர்ந்தவன் அவளின் பின்னழகை கண்டு கண் இமைக்க மறந்து போனான்...

அவள் பின்னால் அவளைத் தொடர்ந்து படி ஏறிக் கொண்டிருந்தவனுக்கு நீளமாகவும் இல்லாமல் குட்டையாகவும் இல்லாமல் அழகாக வெட்டிவிடப்பட்டிருந்த அவள் சிகையும் அதில் சூடியிருந்த இருவாச்சிப் பூச்சரங்களும், வெள்ளை பளிங்கு போல் பளிச்சென்று இருந்த அழகு முதுகும், ப்ளவுஸிற்கும் புடவைக்கும் இடையில் தெரிந்த அவளின் செந்நிற சிற்றிடையும் கண்ட வினோத்திற்கு உணர்ச்சிகள் பெரிதும் திரண்டெழுந்து வேட்கை வெறியைத் தூண்டியது...

அவன் தன் பின்னால் வருவதை அறியாமல் மொட்டை மாடியை அடைந்தவள் தன் முடியை முன் விட்டு கோதிக் கொண்டே வானைப் பார்த்திருக்க, இரவு முற்றிவிட்ட அந்த நேரத்தில் எங்கும் வெண்ணிலவு பரந்து அவள் எழில் முகத்தின் அழகு பன்மடங்காக அதிகரித்தது போல் தெரிந்தது அவனுக்கு......

அவளின் அருகில் பின்புறமாக நெருங்கி நின்றவன் அவளது காதுக்கருகில் குனிந்து கிசுகிசுப்பாக....

"தனியா இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" எனவும்....

அவனின் குரலில் திடுக்கென்று தூக்கி வாரிப் போட திரும்பியவளுக்கு அவனை அந்த இரவில் அத்தனை அருகில் கண்டதும் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, அவன் விழிகளில் அலைப்பாய்ந்த காதலைக் கண்டவள் அச்சத்துடன் அவனை விலக்கி கீழ் இறங்க முயற்சித்தாள்...

அவள் நகர எத்தனித்ததும் அவள் கரத்தைப் பற்றியவன் இழுத்த இழுப்பில் அவன் மார்பில் மோதி தடுமாறி நிற்க, சட்டென்று அவளின் இடையைப் இறுக்கப் பற்றியவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்க்க, அவனின் எண்ணத்தின் ஓட்டத்தைக் கண்டு கொண்டவளுக்கு இதயம் பதற ஆரம்பித்தது...

"வேண்டாங்க.... யாராவது வந்தா பெரிய பிரச்சனையாகிடும்…" என்று கெஞ்சியவள் அவனை முடிந்த அளவு தள்ளிவிட்டு ஓட முயற்சிக்க, அவளுக்கு முன் சென்றவன் வேகமாக மொட்டை மாடி கதவை சாத்தினான்.....

அவனின் செய்கையில் அதிர்ந்தவளின் கால்கள் தடுமாற உணர்ச்சிகள் பெரிதும் திரண்டிருந்தாலும் அச்சமே தலை தூக்கி நிற்க விருட்டென்று இரண்டு அடி எடுத்துப் பின்னால் நகர்ந்தவளை இறுக்கி பற்றியவன் சுவரில் சாய்த்து நிறுத்தினான்....

உடல் முழுவதும் நடுங்க, அச்சத்துடன் விழி விரிய தன்னைப் பார்த்தவாறே சுவற்றில் சாய்ந்து நிற்பவளைப் பார்த்தவன் அவளை நெருங்கி அவள் இரு பக்கமும் கையை அணைவாய் ஊன்றி, தன் உடல் அவள் மேல் உரச நின்றவன் அவளை அணு அணுவாக ரசித்து விழுங்கி விடுவது போல் பார்க்க, முதல் முறையாக ஒரு ஆணின் நெருக்கம் அவளின் தேகத்தைத் தடதடக்கச் செய்தது...

அவனின் அசுர வேகத்தில் இருந்தும், கண்களில் வழியும் தாபத்தில் இருந்தும் விடுபட முயன்று அசைந்தவளின் தேகம் அவன் மீது மேலும் நன்றாகப் பட்டதில் அவள் மார்பு அவன் நெஞ்சில் அழுந்தி பதிய, அதில் அவன் உணர்வுகள் கட்டவிழ்ந்து தலை விரித்து ஆட, அவன் கைகள் அவளின் இடையில் ஆழ பதிந்தது...

அவனின் ஸ்பரிசமும் இடைப் பிடித்திருந்த கரத்தில் காட்டிய அழுத்தமும் இதயத்தைத் தடுமாறச் செய்ய, இருந்தும் தன் தடுமாற்றத்தை மறைத்தவாறே அவன் நெஞ்சில் கை வைத்து அவள் தள்ள, அவளது விழிகளில் நிலைத்திருந்த அவன் பார்வை சற்றே இறங்கி இதழில் படிந்து, அவன் அடுத்த விநாடி செய்யப் போவதை சொல்லாமல் சொல்லியது...

பெண்களுக்கே உரிய இயற்கையான அச்சம் அவன் எண்ணத்தின் போக்கை உணர்த்த, உணர்ந்தவள் நெஞ்சில் வைத்திருந்த கரத்தில் அழுத்தத்தைக் கூட்டி அவனை மீண்டும் தள்ள, அவளின் எதிர்ப்பை மீறி அவளை நோக்கி குனிந்தவன் அவளின் இதழை அழுத்தமாகச் சிறை செய்து தனது முதல் முத்திரையைப் பதித்தான்...

இந்த எதிர்பாராத இதழ் முற்றுகையில் முதன் முறையாக ஒரு ஆண்மகனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளின் பூ மேனி உணர்ச்சி வேகத்தில் மேலும் நடுங்க, அவனிடம் இருந்து விடுபடப் போராட, அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளின் இதழை விடுதலை செய்ய, அப்பொழுது தான் கவனித்தான் வெளிப்படையாக நடுங்கும் அவளின் உடலை......

தன் தவறை உணர்ந்தவன் சட்டென்று அவளை விட்டு விலக, கண்களில் நீரோடு அவனை நிமிர்ந்துப் பார்க்க கூட அச்சப்பட்டு அவள் கீழே இறங்க முற்பட அவள் கரத்தை பற்றி இழுத்தவன் அவள் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்த முயற்சி செய்ய ஆனால் அவள் நிமிர்ந்தால் தானே...

அவளின் படபடப்பை உணர்ந்தவன் நிதானமாகத் தன்னுடைய காதலை எடுத்துக் கூற ஆரம்பித்தான் கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் போல்...

"மஹா... ப்ளீஸ்.... நான் சொல்லறத கொஞ்சம் கேளு.... காலையில உன்னை முதன் முதல்ல புடவையில் பார்த்ததில் இருந்து என் மனசு என் கிட்ட இல்லை... அதில் இருந்து உன் கூடப் பேசனும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்..... இந்தக் கூட்டத்தில அந்தச் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவே இல்லை..... நீயும் வேணும்னே என் கண்ணில் படாமலே ஒளிஞ்சுகிட்டு இருந்த.... உன்னிடம் என் மனச சொல்லனும்னு நேரம் பார்த்திட்டு இருக்கும் போது தான் நீ தனியா மாடிக்கு வருவதைப் பார்த்தேன்....." என்றவன் சில விநாடிகள் தயங்கி மீண்டும் தொடர்ந்தான்....

"உன்னைய எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்லத் தான் உன்னைய பின் தொடர்ந்து வந்தேன்..... ஆனால் ஐ ஆம் ஸோ ஸாரி மஹா.... என்னால உன்னை இவ்வளவு நெருக்கதில பார்த்ததும் ரெஸிஸ்ட் பண்ண முடியலை...... நீ எனக்கு மட்டும் தான்னு அந்த உரிமையை எடுத்துக்கிட்டேன்.... ஆனால் உன் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம அவசரப்பட்டுட்டேன்.... ஸாரி டா.... ஐ ஆம் ரியலி ரியலி ரியலி ஸாரி... ப்ளீஸ் தயவு செய்து புரிஞ்சிக்க.... ஐ லவ் யூ ஸோ மச் மஹா [I love you so much Maha]" என்றான்.

தலை குனிந்தவாறே அவன் பேசுவதைக் கேட்டிருந்தவள் அவனை நிமிர்ந்துப் பார்க்க நீர் திரையிட்டிருந்த அவளின் கண்களில் தெரிந்தது அதிர்ச்சியா? ஏமாற்றமா? குழப்பமா? என்று புரியவில்லை அவனுக்கு... ஆனால் அவளின் விழிநீர் அவன் மனதை அறுக்கத் தொடங்கியது...

அவன் கண்களை அதற்கு மேலும் சந்திக்க முடியாமல் இன்னும் அதிர்ச்சி விலகாத முகத்துடன் சில நொடிகள் சிலையென நின்று இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல், அவனின் பேச்சிற்குப் பதிலும் கூறாமல் அவன் கையை உதறிவிட்டு விறுவிறுவென்று படிகளில் இறங்கியவளை ஆற்றாமையுடன் பார்த்திருந்தவன் தன் தவறை உணர்ந்து தன் அவசர புத்தியை நினைத்து வருந்தி அவளைத் தடுக்க வழியில்லாது நின்றிருந்தான்....

அவள் மனதில் காதல் அரும்பி இருக்கிறது.... அவனைத் தன்னவனாக அவள் பார்த்த முதல் நாளே நினைக்கத் துவங்கிவிட்டாள்....

ஆனால் எதற்கும் நேரம் காலம் என்று இருக்கிறது.... மனம் விட்டு இருவரும் பேசிக் கொள்ளவில்லை... தங்கள் காதலை வாய் விட்டு சொல்லிக் கொள்ளவில்லை.... ஆனால் அதற்குள் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி இருக்கும் அவனை நினைத்து தான் அவளுக்கு மனது பிசைந்தது...

ஏன் இத்தனை அவசரம்? கிணற்று தண்ணீரை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போகப் போகுது????



இரவு நெடு நேரம் ஆகியிருக்க அனைவரையும் உணவு உண்ண அழைத்த ஸ்ரீ பரிமாறத் துவங்க அது வரை தன் அறையில் அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்த அர்ஜூன் ஸ்ரீயின் குரலில் மாடியில் இருந்து இறங்கி வர, வந்தவனின் விழிகள் திவ்யாவையே தேடியது...

காலையில் உடுத்திய திருமணப் புடவையை இன்னும் மாற்றாமல், புதிதாகப் பூத்த மல்லிகை சரங்களைச் சூடி, புத்தம் புதுத் தாலிக் கொடி அணிந்து தேவதையென நின்றவளைக் கண்டவனுக்குத் தன் காதலை சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றே தோன்றியது....

தன் கணவன் வருவதை அறியாமல் எல்லோரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டு தன் அன்னை, மற்றும் மாமியாருடன் சேர்ந்து மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தவள் தன் பின்னே நெருங்கி நின்றிருந்த கணவனை அறியவில்லை...

அவள் மேல் பட்டும் படாமலும் உரசி நின்றவனின் மூச்சுக்காற்று சூடாக உடலில் படச் சட்டென்று திரும்பி பார்த்தவளுக்கு அவன் அவளின் வெகு அருகாமையில் நின்று கொண்டிருப்பது அதீத கூச்சத்தையும் பயத்தையும் அளிக்க, விழிகளை அகல விரித்துப் பார்த்த மனைவியை ரசித்தவன் குறுநகைப் பூக்க, அவனின் புன் சிரிப்பில் மனம் தவித்தவள் அவனை விட்டு சட்டென்று நகர்ந்தாள்....

அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் ரசனையுடன் தன் மனதிற்குள் வாங்கிக் கொண்டவன் அவளின் மீது இருந்த பார்வையை இன்னும் விலக்காமல் அவளின் அருகில் இருந்த சேரில் அமர, தட்டை எடுத்து வைத்து பரிமாற ஆரம்பித்தவளுக்கு அவனின் விஷம பார்வையும் நகைக்கும் இதழ்களும் பெரிய இம்சையாக இருந்தது என்றால்....

அவள் அவனின் வெகு அருகில் நின்றதில், அவளின் மேல் இருந்த அவளுக்கே உரித்தான நறுமணமும், அவனது முகத்திற்கு அருகில் இருந்த அவளது இடை அவனது கண்களுக்கு விருந்தாகியும் போனதில் அவனது சித்தத்தைத் தடுமாற்றிப் பித்தனாக்கி இருந்தது....

பரிமாறிக் கொண்டே இருந்தவளுக்கு அவன் இன்னமும் உண்ணாது இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்குத் தன் கணவனின் அழுத்தமான பார்வை தன் இடையைத் தழுவி கொண்டு இருப்பதைக் கண்டு திக்கென்று இருக்க, இயற்கை பெண்களுக்குக் கொடுத்த வரமாக வெட்கமும் வந்து தழுவ, தன்னிச்சையாகச் சட்டென்று புடவையைக் கொண்டு தன் இடையை மறைத்தாள்....

தன் மனையாளின் அந்த அவசர செயலில் வாய் விட்டுச் சிரித்தான் அர்ஜூன்.....

முதல் முறை அர்ஜூன் அவ்வாறு சத்தமாகச் சிரிப்பது அவன் குடும்பத்திற்கே ஆச்சரியமாக இருந்தது என்றால் கலாவின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்...

"என்ன அர்ஜூன்? எங்களுக்குத் தெரியாம என்ன ஜோக்?" என்று ஸ்ரீ கேட்க,

"நத்திங் மாம் [Nothing mom]" என்றவன் ஒன்றும் பேசாமல் உணவு அருந்துவதில் தன் கவனத்தைச் செலுத்த, அனைவர் கண்களும் ஏதோ ஒரு அர்த்தத்துடன் திவ்யாவை நோக்கியதில் அவளுக்குத் தான் வெட்கம் பிடுங்கி தின்றது....

அவர்களின் கேலிப் பார்வையையும் குறும்பு சிரிப்பையும் தாங்க இயலாது நெளிந்தவள் "இன்னும் கொஞ்சம் இட்லி எடுத்து வருகிறேன்" என்று சமையல் அறைக்குள் சென்றவள் அதன் பின்னர் அவன் உண்டு முடிக்கும் வரை வெளியே வரவில்லை.

சாப்பிட்டுக் கொண்டே அவளின் வரவை எதிர்பார்த்து அவன் காத்திருக்க, உள்ளே சென்றவளோ இன்னமும் வெளியே வராது இருக்கவும் மற்றவர்களும் உணவு அருந்திக் கொண்டு பேசுவதில் கவனத்தைச் செலுத்தியிருக்க, உண்டு முடிந்ததும் கை கழுவும் சாக்கில் சமையல் அறைக்குள் நுழைந்தான்...

அங்கே அவனை எதிர்பார்க்காதவள் அடுப்பில் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்க, "புருஷன் மனச புரிஞ்சிக்கத் தெரியாம இங்க என்ன செய்து கொண்டிருக்கிறாள் பாரு" என்று எண்ணியவன் கை கழுவ வாஷ் பேசினின் அருகில் செல்ல அப்பொழுது தான் கவனித்தாள் அவன் சமையல் அறைக்குள் இருப்பதை....

காலையில் அவன் தாலியில் மஞ்சள் குங்குமம் வைக்கத் தன் மார்பில் அழுந்த கை ஊன்றியதில் இருந்து, அத்தனை சுற்றமும் தங்கள் இருவரை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் தன்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதில் இருந்து மனமெல்லாம் அச்சமா, அச்சத்தினால் விளைந்த கலக்கமா, இல்லை வயதுக்கே உரிய தாபமா என்று குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவளை மேலும் மேலும் திகிலில் தள்ளிக் கொண்டிருந்தான் அவள் கணவன்....

கை கழுவி முடிந்ததும் அவளைத் திரும்பி நோக்க, அவன் விழிகள் போன இடங்களைக் கண்டு கலங்கியவள் விருட்டென்று வெளியெ செல்ல எத்தனிக்க, இரண்டே எட்டில் அவளின் அருகில் வந்தவன் மிக அருகில் தன் உடல் அவளின் உடலின் மீது உரசுமாறு நின்று சொன்ன வார்த்தைகளில் அவளின் இதயம் நின்றுவிடும் போல் இருந்தது....

"இன்னையில் இருந்து என் ரூமில் வந்து படுத்துக்கோ…" என்றான் மனம் எல்லாம் ஆசையில், உள்ளம் முழுவதும் காதலில்....

அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து, அவன் எதற்குத் தன்னைத் தன் அறைக்கு வரச் சொல்கிறான் என்று உணர்ந்து 'ஙே' என்று விழித்தவளின் வெற்றிடையில் தன்னுடைய வலது கையை வைத்துத் தன்னருகில் இழுத்தவன், இடது கையை அவளின் கன்னத்தில் வைத்து வருட நிலைகுலைந்து போனாள் அவன் மனையாள்.....

தன் தொடுகையில் அவள் செயலிழந்து வெளிறி போய் நிற்க, அவள் கன்னத்தில் இருந்த விரல்களை மெல்ல கீழ் இறக்கி அவளின் கழுத்தில் முடிகளுக்கு இடையில் நுழைக்க, இந்த எதிர்பாராத தாக்குதலில் தளிர் மேனி நடுங்க தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் அந்த இளம் பேதை.....

தன் மனைவியின் செந்தனலாய் மாறியிருந்த முகமும், வெட்கத்தில் கண்களை மூடியிருந்த விதமும், உதடுகள் துடிக்க உடல் நடுங்க துவன்று நின்றிருந்த தோற்றமும் அவனின் ஆண்மையைத் தட்டி எழுப்ப அவளின் முகம் நோக்கி குனிந்தான் அர்ஜூன்....

அவனின் மூச்சுக் காற்றை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்தவளுக்கு அவன் அடுத்துச் செய்யப் போவது புரிய, இதயம் தாறுமாறாகத் துடிக்க, கண்களை மேலும் இறுக்க மூடிக்கொண்டவளின் காதிற்கருகில் குனிந்து கரகரத்த குரலில்....

"இப்போ புரியுதா? எதுக்கு என் ரூமிற்கு வரச் சொல்றேன் என்று…" என்று கிசுகிசுத்தவன் அவளை விட்டு விலக,

அவனின் விலகலை உணர்ந்து மெதுவே கண்களைத் திறந்தவளுக்கு அவன் விழிகளின் வழிந்த காமமும், மோகப் புன்னகையில் தெரிந்த குறும்பும், முகத்தில் தெரிந்த வேட்கையின் வேகமும், தாபத்தை வரவழைப்பதற்குப் பதிலாக எல்லையில்லா அச்சத்தை விளைவிக்க அவனை எதிர் கொள்ளத் தைரியமில்லாமல் வெளியே ஓடி வர, அவளின் பின்னரே சிரித்த முகமாக அவன் வர, சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரியவர்களின் கண்களில் இந்தக் காட்சி படத் தவறவில்லை.

அவர்களின் எத்தனை நாள் ஆசை, கனவு, எதிர்பார்ப்பு இந்தச் சின்னஞ் சிறுசுகள் இரண்டும் இப்படிச் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று...

எதிர்பாராதவிதமாகத் திருமணம் நடந்துவிட்டாலும் அர்ஜூனின் மகிழ்ச்சி ததும்பும் சிரிப்பும், காலையில் திவ்யாவுடன் அவனின் நெருக்கமும், அதற்கு அவளின் வெட்கப் புன்னகையும் பெற்றோர்களுக்கு அத்தனை பூரிப்பை தந்தது...

ஆனால் மகிழ்ச்சியில் உள்ளம் நிறைந்து நிம்மதி பெரு மூச்சுவிட்டவர்களுக்குத் தெரியவில்லை இந்தச் சந்தோஷத்தின் ஆயுள் கொஞ்சமே என்று...

ஒரு வழியாக அனைவரும் உணவு அருந்தியவுடன் அவரவர் அறைக்குச் சென்றுவிட மறு நாள் காலையில் கிளம்புவதற்குக் கலா பெட்டியை அடுக்க உள்ளே வந்த திவ்யா தயங்கியவாறே...

"அம்மா... நாளைக்கே ஊருக்கு போகனுமா? இன்னும் இரண்டு நாள் இருந்திட்டுப் போகலாம் இல்ல?"

"இல்ல திவ்யா.... உன்னோட கல்யாணத்திற்கு லீவு, உன்னைய இங்க வந்து பார்க்கறதுக்கு லீவு, அப்புறம் ரிஷப்ஷன், இப்போ தாலி பெருக்கிக்கட்டிறதுக்கு என்று நானும் அப்பாவும், வினோத்தும் இந்த நாலு அஞ்சு மாசத்தில ஏகப்பட்ட லீவு எடுத்திட்டோம்... நானே நாளைக்கு வீட்டுக்கு போனவுடனே வேலைக்குப் போயாகனும்..... இன்னும் ஒரு நாள்னா ரொம்பக் கஷ்டம்மா"....

"ஏம்மா.... இன்னும் எவ்வளவு நாள் தான் நீங்களும் வேலைக்குப் போவீங்க? கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் இல்ல?"

"திவ்யா... உன்னோட கல்யாணத்திற்கு வாங்கிய கடனை அடைக்கனும்.... அது மட்டும் இல்லாம இந்த வருஷம் வினோத்தும் காலேஜ் முடிக்கிறான்.... அது வரைக்கும் அவனுக்கு அப்பப்போ பணம் தேவைப்படுது..... என்ன தான் உதவி வெளியில் இருந்து வந்தாலும் ஐஞ்சுக்கும் பத்துக்கும் நாம அவங்க கையை எதிர்பார்க்க வேண்டாமில்ல…"

தன் அன்னையின் பேச்சில் மனதிற்குள் உடைந்து போனாள் திவ்யா....

அவள் என்றுமே தனக்கு அமைந்திருக்கும் இந்த வசதியான வாழ்க்கையை நினைத்துக் கர்வம் கொண்டதில்லை..... பெருமை பட்டதில்லை..

மாறாகத் தான் இத்தனை வசதியாக இருக்கும் பொழுது தன் குடும்பத்தார் பொருளாதாரத்திற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே என்று தான் ஏக்கமாக இருந்தது...

அதை உணர்ந்த கலா....

"திவ்யா... நீ இதை எல்லாம் மனசில போட்டு குழப்பிக்காத...... எல்லாம் வினோத் வேலைக்குப் போற வரைக்கும் தான்... அதற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும்..... நீ போய்த் தூங்கு... மாப்பிள்ளை காத்திட்டு இருப்பார்" என்றார்...

அது வரையில் அன்னையின் கவலையில் உழன்று கொண்டு இருந்தவளுக்கு, அவரின் இல்லாமையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவளுக்குச் சற்று நேரத்திற்கு முன் அர்ஜூன் சொன்னது மறந்து போயிருந்தது....

அவள் அன்னை தன் கணவனைப் பற்றிப் பேசவும் தான் அவன் அவளிடம் சமையல் அறையில் சொன்னது ஞாபகம் வர தன்னையும் அறியாமல் அவளின் அடி மனதில் படர்ந்திருந்த கிலி மேல் எழும்பி வர ஆரம்பித்தது.....

அவளுக்கு அவள் கணவனை நினைக்கும் பொழுது ஒரு விதத்தில் காதலும் ஆசையும் வந்தாலும், மறு பக்கம் இருந்து அவனின் பிம்பம் அச்சத்தைப் போட்டி போட்டுக் கொண்டு அவளின் உள்ளத்திற்குள் கொதிக்கச் செய்ய, இதயத்தில் சுமந்திருந்த காதலுக்கும், உள்ளத்தில் சூழ்ந்திருந்த அச்சத்திற்கும் இடையில் அவள் மனம் ஊசலாடிக் கொண்டு இருந்தது....

என்ன தான் முயன்றும் அவளுக்கு அவள் கணவனின் காதல் புரிவதை விட அவன் சரசமான வார்த்தைகளிலும் நெருக்கமான தொடுகையிலும் அவனின் வேட்கையே புரிய, கதிகலங்க மனதில் மீண்டும் தாம்பத்தியத்தைப் பற்றிய அச்சம் சூழ, மீண்டும் மீண்டும் தன் கணவனின் கோபத்திற்கு ஆளாகப் போவதை உணராமல் இன்றும் அவனை விட்டு தள்ளி இருக்க முடிவு செய்தாள்....

விதியை யார் வெல்ல முடியும்????

கலா அவளை அர்ஜூனின் அறைக்குப் போகச் சொல்ல வெடவெடத்தவள்.....

"அச்சச்சோ.... இத எப்படி மறந்தேன்..... அப்பா முருகா.... இன்று மட்டும் என்னைய காப்பாத்திவிடுப்பா..... நாளைக்கு அம்மா அப்பா ஊருக்கு போன பிறகு நான் வழக்கம் போல் மஹா அண்ணி ரூமில்யே படுத்துக்கிறேன்" என்று வேண்ட,

முருகனோ.....

"உனக்கு இன்னும் உன் புருஷன பத்தி முழுசா தெரியலையா திவ்யா? அவன் தன்னிலை விட்டு கீழிறங்கி வந்ததை வச்சு அவனைச் சாதாரணமாக எடைப் போடுற..... அவன் வேண்டியத இது வரை வாய்விட்டு கேட்டதில்லை.... கேட்காமலே அடையறது தான் அவன் வழக்கமே.... அவன்கிட்ட இல்லை என்ற பதிலை யாரும் இது வரை சொன்னதில்லை.... ஆனால் முதல் முறையா இன்னைக்கு அவன் வாய் திறந்து உன்னிடம் கேட்டிருக்கான்.... அது கிடைக்கலைன்னா அவன் எப்படி மாறுவான்னு எனக்கே தெரியாது" என்றார்.

முருகனிடம் தன்னைக் காக்கும் படி வேண்டியவள் ஒன்றை மட்டும் மறந்தே போனாள்.... அது அவள் கணவன் அவளை இன்று மட்டும் தன் அறைக்கு அழைக்கவில்லை.....

"இன்னையில் இருந்து என் ரூமில் வந்து படுத்துக்கோ" என்று அவள் எப்போழுதும் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று கூறினான்...

அவனின் அருகாமை தந்த பதட்டத்திலும், அவன் ஆண்மை தந்த மயக்கத்திலும், அவனின் தொடுகை கொடுத்த நடுக்கத்திலும் அவளுக்குத் தான் அவன் சொன்னது சரியாக விளங்கவில்லையோ??

சில நேரங்களில் மனசாட்சி நம் தலையில் தட்டி கூறும் அறிவுரைகளை நாம் வேண்டுமென்றே கேட்க விரும்புவதில்லை.... இல்லையென்றால் விதி தன் விளையாட்டை நடத்துவது எப்படி????

"அம்மா... இன்னைக்கு உங்க கூடப் படுத்துக்கிறேன்மா..... எத்தனை நாள் ஆச்சு நான் உங்களைக் கட்டிப்பிடிச்சு தூங்கி...."

"திவ்யா, உன் புருஷனை கட்டி பிடிச்சு தூங்கறத விட்டு என்னைய கட்டி பிடிச்சுக்கிறேன் சொல்றீயே..... உன் புருஷன் கேட்டாருன்னா என்ன தான் திட்டு வாரு" என்று வாய் விட்டு சிரித்தவர்,

"போம்மா.... போய்த் தூங்கு" என்றார்....

எப்படித் தன் அன்னையைச் சரி கட்டுவது என்று தெரியாமல் திருதிருவென்று முழித்திருக்கச் சரியான நேரம் பார்த்து ஸ்ரீ அங்கு வந்தார்...

"போச்சுடா!!!! அம்மாவ சம்மதிக்க வைக்கிறதே கஷ்டம்.... இதுல அத்தை வேறையா?" என்று எண்ணியவளுக்கு எப்படியும் இன்று தன் கணவனின் அறைக்குப் போவதை தடுப்பதே முதல் குறிக்கோளாக இருந்தது...

"என்ன? அம்மாவும், மகளும் சிரிச்சு பேசிட்டு இருக்கும் போது கரடி மாதிரி வந்துட்டேனா???"

"என்னடி கரடி, அது இதுன்னுட்டு.... உன் மருமகள் அவ புருஷன விட்டு என்ன கட்டிப் பிடிச்சுட்டுத் தூங்கனுமாம்.... நீயே என்னன்னு கேளு" எனவும்,

அவ்வளவு தான் ஸ்ரீக்கு மயக்கமே வந்தது..

"என்ன இது இந்தப் பெண் தெரிந்து தான் செய்கிறாளா? இல்ல தெரியாமல் செய்கிறாளா? ஏற்கனவே நடந்த பிரச்சனை போதாதா? இப்போ தான் இரண்டு மாசம் கழித்துத் திரும்பி வந்திருக்கிறான்.... திருப்பியும் அவனைத் துரத்தி விடுவாள் போலிருக்குதே...... ஆனால் இப்போ நிச்சயம் அவன் எங்கேயும் போக மாட்டான்.... ஐயோ! இவளத் தான் போகச் சொல்லுவான்" என்று உள்ளுக்குள் கலங்கி போனவர்...

"திவ்யா... அர்ஜூன் உனக்காகக் காத்திட்டு இருப்பான்..... போ?" என்றதோடு அவ்வளவு தான் பேச்சு என்பது போல் முடித்துக் கொண்டார்.

தன் அத்தையிடம் தன் பேச்சு எடுபடாது என்று புரிந்துக் கொண்டவள் தன் அன்னையை ஐஸ் வைக்க ஆரம்பித்தாள்...

"அம்மா, ப்ளீஸ் மா.... எனக்கு என்னமோ உங்க கூடப் படுத்துக்கனும் போல இருக்கு.... நிறையப் பேசனும் போல இருக்கும்மா.... இன்னைக்கு ஒரு நாள் தானே....." என்று கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச...

அதற்கு மேல் விதி விட்ட வழி என்று நினைத்த ஸ்ரீ அங்கிருந்து நகர, திவ்யாவிற்கு "அப்பாடி" என்று இருந்தது....

இதனால் விளையப் போகும் எதிர் வினைகளை அறியாமல்.....

இரவு வெகு நேரம் வரை தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் "அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பார்?? என்னுடைய வரவை எதிர்பார்த்திருப்பாரா?? நான் வராததால் கோபத்தில் இருப்பாரா" என்ற எண்ணங்களே மனதில் ஓடிக் கொண்டிருந்தது...

உள்ளம் முழுவதும் திகில் படர்ந்திருந்ததாலோ என்னவோ தூக்கமும் அவள் கண்களைத் தழுவ மறுக்க,

அங்குத் தன் அறையில் அவளின் வரவை ஆவலுடனும், அடங்காத தாபத்துடனும் எதிர்பார்த்து இரண்டாவது முறையாக ஏமாந்து அவமானத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தன் கணவனின் உணர்வுகளை எதிர்கொள்ள நேரும் பொழுது, புயலில் சிக்கிய படகாகத் தான் மாற வேண்டியிருக்கும் என்பதை அறியாதவளாக விழித்துக் கொண்டிருந்தாள்.....

வீட்டினர் அனைவரும் உறக்கத்தைத் தழுவ இந்த நான்கு இள உள்ளங்கள் மட்டும் தூங்காமல் விழித்திருந்தது.....

மாலை மொட்டை மாடியில் எதிர்பாராமல் நடந்த அதிரடி தழுவலிலும், முதல் முத்தத்திலுமே நிலைத்திருந்த மனதை இன்னமும் வெளியே கொண்டு வர முடியாமல் அதிர்ந்து போய் மஹா தவிக்க,

தன் அவசரத்தாலும் வேட்கையினாலும் இரு உள்ளங்களுக்குள் அரும்பு போல் மலர வேண்டிய காதலை மொட்டிலியே கசக்கி எறிந்து, தன் மனம் கவர்ந்தவள் தன் காதலை காமமாக நினைக்க வைத்த தன் முட்டாள் தனத்தை நினைத்து வினோத் கலங்கியிருக்க,

அங்கு இத்தனை நாட்கள் காத்திருந்து, தன்னவளிடம் மனம் திறந்து இதயத்தில் சுமந்திருந்த தன் காதலை சொல்ல இன்றைய இரவை தேர்ந்தெடுத்து, மனைவியின் வருகையை ஆசையுடன் எதிர்பார்த்திருந்த அர்ஜூனின் நிலமையோ சொல்ல முடியாத அளவு இருந்தது.

அர்ஜூனின் உடல், உயிர், ஆன்மா அனைத்திலும் பிறந்த நாள் முதலே ஆணவமும், திமிரும், ஆளுமையும் கலந்திருந்தது.....

அவன் வாய் திறக்கும் முன்னரே அவனுக்கு வேண்டியதை அறிந்து அவன் முன் வரவழைக்க எத்தனையோ பேர் காத்திருந்தார்கள்....

தொழில் வட்டாரத்திலும், அரசியலிலும் அவன் ஒற்றைப் பார்வையை வைத்தே அவன் எதிர்பார்பை பூர்த்திச் செய்யத் துடித்திருந்தவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தார்கள்....

இது வரை தன் வாழ் நாளில் தான் ஆசைப்பட்டதை மிரட்டியோ வலுக்கட்டாயமாகவோ அடைந்தே பழகியிருந்தவன் அவன்..

ஆனால் இன்று தன்னிலையில் இருந்து கீழே இறங்கி வந்து, தான் வாய் விட்டு தன் விருப்பத்தைச் சொல்லியும் தன் அறைக்கு அவள் வரவில்லை என்றால் எனக்கு அடங்காத மனைவியா? என்று அவமானத்தில் முகம் கன்றிச் சிவக்க, வெடிக்கக் காத்திருக்கும் அக்கினி மலையைப் போன்ற தோற்றதில் இருந்தது அவனின் முகம்....

நான் அழைத்தும் வரவில்லை என்றால்? என் பேச்சை மதிக்கவில்லை என்றால்?

அங்கு ஆண்மகனான தனது தன்மானம் சீண்டப்பட்டதைப் போல் உணர்ந்தவன் தன் தலையை அழுந்த கோதி தன்னைச் சமன்படுத்திக் கொண்டு கட்டிலில் சாய்ந்தவன், இதற்கு மேலும் இறங்கி வந்து தன் காதலை அவளிடம் சொல்லப் போவதில்லை என்று முடிவெடுத்தான்....

அர்ஜூன் - திவ்யா: அழகிய இரவாக, காதலை சுமந்து சங்கமித்த முதலிரவாக மாறியிருக்க வேண்டிய இரவு இன்று மீண்டும் சீற்றத்தையும் திகிலையும் சுமந்து முடிந்தது அந்த இளம் தம்பதியினருக்கு....

தன்னவளின் வெட்கம் சொட்டும் விழிகளில் தெரிந்த நாணத்தையும், அவளின் பார்வையுடன் கலந்த தன் விழிகள் பாய்ந்து அவளின் இதயத்தை ஆராய்ந்து பார்த்ததில் உணர்ந்து கொண்ட அவளின் காதலையும் அறிந்திருந்தவன் அவளிடம் தன் காதலை சொல்லும் அழகிய தருணம் வரை காத்திருக்கவில்லை....

மாறாக அவளின் பருவ உடலின் அழகுகள் தன்னை ஈர்க்க செய்ததை மட்டுமே அவளுக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்தி அவளின் உணர்வுகளைப் பரிதவிக்கச் செய்ய, அதனால் அந்தச் சின்னத் தளிரோ தன்னவனின் எதிர்பார்ப்பு வெறும் மோகம் கலந்த தாம்பத்தியம் மட்டுமே என்று அஞ்சிக் கலங்கியிருப்பதை அவனும் உணரவில்லை....

வினோத் - மஹா: விகசித்து மலர்ந்திருந்த மெல்லியவளின் பார்வையில் வசப்பட்டு, ஆத்மாவை ஊடுருவி முளைத்தெழுந்து மலர்ந்த காதலை வெளிக்கொணறும் முன்பே தன்னவளின் அபார அழகில் மயங்கி, கணத்துக்குக் கணம் உணர்ச்சிகள் பிரவாகித்ததில் திணறி, இதயத்தில் படர்ந்திருந்த காதலை விட உடலுணர்வில் கலந்திருந்த காமத்திற்கு முதலிடம் கொடுத்து இன்று தன் காதலையே ஊசலாட வைத்துவிட்டான் இந்த இளம் காதலன்.....

நான்கு உள்ளங்களும் அவரவரின் குணத்திற்கும் செயல்களுக்கும் ஏற்ப தன்னையும் வருத்தி, தன் இணையையும் வருத்தி தனித்துக் கழித்த இந்த இரவு நீண்ட இரவாக இருக்கப் போவதென்பதில் சந்தேகமே இல்லை....

தொடரும்

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top