JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 17 & 18

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 17

விடியும் வரை பெருமளவு குழப்பத்திலும், மலை அளவு அவமானத்திலும், கட்டுக்கடங்காத கோபத்திலும் உள்ளம் உலையாகக் கொதித்துக் கொண்டு இருந்ததால் உறக்கம் என்பதே இல்லாது சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜூன் விடிந்ததும் எழுந்தவன் குளியல் அறைக்குள் சென்றான்...

மனதில் மண்டியிருந்த உஷ்ணம் உடல் முழுவதும் கனலாக வீசியதோ குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் நின்றிருந்தவனின் மனமும் குளிரவில்லை, உடலின் சூடும் தணியவில்லை....

இரு முறை தன் மனைவியை எதிர்பார்த்து அடைந்த ஏமாற்றம் அவனின் உள்ளத்தில் மனக்கசப்பை ஏற்படுத்த அதனால் விளைந்த வெறுப்புணர்ச்சியினால் சினம் துளிர்த்து இரவு முழுவதும் நெஞ்சத்தில் தகிப்பும் சீற்றமும் கொண்டு உறங்காது இருந்த கணவனைத் திவ்யா அறிந்திருந்தால், அவனின் கோபத்தைக் கண்கூடாகக் கண்டிருந்தால் நிச்சயம் வெலவெலத்து போயிருப்பாள்....

தன் பெற்றோரும் தமையனும் ஊருக்கு கிளம்ப உதவி செய்தவளின் பார்வை நொடிக்கொரு தரம் மாடியில் இருக்கும் தன் கணவனின் அறைக் கதவையே நோக்கியிருக்க எந்த அரவமும் இல்லாது இருந்த அறையின் நிசப்தம் மனதில் திக்திக்கென்ற உணர்வைத் தர, அவன் கதவு திறக்கப்படவும் இல்லை, அவன் கீழே இறங்கி வருவதாயும் தெரியவில்லை....

கணவனை நெருங்கவும் தைரியம் இல்லாமல் அவனின் கோபத்தையும் தாங்க சக்தி இல்லாமல் பரிதவித்துப் போய் இருந்தாள் அந்தச் சின்னத் தளிர்.....

பெற்றோருடன் கிளம்பிய வினோத்தின் கண்களும் தன் தங்கையைப் போலவே வீட்டை விட்டு கிளம்பும் வரையிலும் தன்னவளையே தேடி அலைமோத, எந்தச் சந்தடியும் இல்லாமல் தன் அறைக்குள்ளே அடைந்து இருந்தவள் அவன் ஊருக்கு கிளம்புவது தெரிந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறந்தும் வெளியில் தலைக் காட்டவில்லை....

அண்ணனும் தங்கையும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கு ஏற்ப தங்கள் துணையை நினைத்து விடியும் வரையில் இதயம் கனத்து உள்ளம் புகைந்து மன ஆற்றாமையுடன் தூங்காமல் இருந்து தங்களின் மனம் கவர்ந்தவர்களின் மனதை அறுக்கும் அளவிற்குச் சித்திரவதை செய்து கொண்டு இருந்தனர்...

செல்வதற்கு முன் மஹாவின் அழகிய முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா, தான் கிளம்பும் பொழுது சென்ற முறை செய்தது போல் தலையை மட்டுமாவது அசைத்து தன் கோபத்தை மறந்து தனக்கு விடைத் தர மாட்டாளா? என்று ஏங்கியவாறே வினோத் காத்திருக்க....

அவள் வெளியே வரும் சுவடே இல்லாததால் வேறு வழியில்லாமல் டாக்ஸியில் ஏறியவன் மீண்டும் ஒரு முறை ஏக்கத்துடன் வீட்டை திரும்பி பார்க்க, ஒரு வேளை நேற்று போல் மொட்டை மாடியில் இருப்பாளோ? என்ற ஆசையில் மொட்டை மாடியையும் பார்க்க அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.....

அவனின் அழகிய ராட்ஷசி, செல்ல ரௌடி உள்ளம் முழுவதும் காதலை சுமந்திருந்தாலும் அவனின் அடாவடிச் செயலில் மனம் கலங்கி தன் இதயத்தைக் கடினமாக மாற்றிக் கொண்டு அறைக்குள்ளே அடைந்துக் கிடந்தாள்....


ஒரு வழியாகக் கலாவின் குடும்பத்தினரின் டாக்ஸி சென்றவுடன் உள்ளே வந்த ஸ்ரீக்கு இன்று என்ன நடக்குமோ? அர்ஜூனின் கோபம் எந்த எல்லையைத் தாண்டப் போகிறதோ என்று வயிற்றில் புளியை கரைக்க, மருமகளைத் திரும்பி பார்த்தவருக்கு அவளின் கலங்கிய முகமே பறைசாற்றியது அவளின் மனதில் சூழ்ந்திருந்த அச்சத்தை....

அவனைப் பெற்றவள் எனக்கே சில நேரங்களில் அவனைக் கண்டால் உதறல் எடுக்கிறது...

அவன் தந்தையாகட்டும் அல்லது நானாகட்டும் அவனுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்தால் எங்களிடம் அவன் சீறும் விதத்தில் நாங்கள் இருவருமே நடுநடுங்கி போய்க் கலங்கியிருப்போம்....

இதில் அருணைப் பற்றியோ மஹாவைப் பற்றியோ சொல்லவும் வேண்டாம்....

அவன் முன் சாதாரணமாக நின்று பேசுவதற்கே பயந்து உடல் வெடவெடக்க நிற்பார்கள்....

அதிலும் அவர்கள் அவனுக்கு எதிராக எதையாவது செய்துவிட்டுப் பின் அவனிடம் மன்னிப்பு இறைஞ்சும் பொழுதும் கூட அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் அவன் முன் தலை கவிழ்ந்து நிற்கும் போது ஸ்ரீக்கே பாவமாக இருக்கும்....

அந்த அளவிற்கு அவன் தன் குடும்பத்தையும், தொழிற்களையும் தன் தாத்தாவைப் போல் தன் உள்ளங்கைக்குள் வைத்து இருந்தான்...

அப்படி இருக்கப் பத்தொன்பது வயதே ஆன சின்னப் பெண் இவள், என்ன செய்வாள்? பாவம்!!!

அவனைக் கண்டாலே பயந்து நடுங்கி ஓடி ஒளிகிறவள்...

அவன் அவளை ஒவ்வொரு முறை திரும்பி பார்க்கும் பொழுதும் அவனுடைய கூர்மையான விழிகளை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒடுங்குகிறவள்...

அவன் இன்று என்ன ருத்ர தாண்டவம் ஆடப் போகிறானோ?

இவள் அவனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாளோ?.....

என்று திவ்யாவின் பரிதாப நிலையை நினைத்துப் பார்த்தவருக்கு அவளின் மேல் இரக்கமே வர அவளுடன் சேர்ந்து அவரும் தன் மகனின் வருகைக்காக அச்சத்துடன் காத்திருக்க ஆரம்பித்தார்...

ஆனால் கலா குடும்பம் சென்றும் அவன் கீழ் இறங்கி வருவதாயில்லை...

சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தால் நாம் நமக்குப் பிரியமான ஒருவரின் கோபத்திற்கு ஆளாகியிருப்போம்.... அவர்களின் சீற்றம், கோபம் வெளி வரும் நொடிகளை எண்ணிக் காத்திருப்போம்....

அந்த நேரங்களில், ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் ஒரு கலக்கத்தைக் கொண்டு வரும்... ஒவ்வொரு விநாடியும் பல யுகங்கள் போல் தோன்றும்...

அந்தக் கலக்கத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவர்களின் கோபம் கூடப் பெரிய அளவில் நம்மைப் பாதிக்காது.... ஆனால் அந்த நிமிடங்கள் நம்மைக் கதிகலங்க வைக்கும்...

அதே போன்ற ஒரு மனநிலையில் இருந்தனர் ஸ்ரீயும், திவ்யாவும்....

நேரம் ஆக ஆக அடி வயிற்றுக்குள் ஒரு உருளை உருளுவது போல் மனம் திகைத்துப் போய்ச் செயலற்று இருக்க, அவர்களின் அதிர்ச்சியை மேலும் கூட்டுமாறு சிறிது நேரத்தில் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தவன் ஒன்றும் பேசாமல் ஷூவைப் போட, அவனின் அமைதி சூறாவளிக்கு முன்னர் வரும் மயான அமைதியைப் போன்று கொடியதாக இருந்தது அவனின் மனையாளுக்கும், அவன் அன்னைக்கும்....

அவனின் அசாதாரணமான மௌனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் எண்ணங்களையும் அறியும் பொருட்டு அவன் அருகில் தயங்கிவாறே வந்தார் ஸ்ரீ.....

"என்ன அர்ஜூன், அதற்குள் கிளம்பிட்ட... சாப்பிடலையா?"

அவரின் கேள்வியில் ஷூவைப் போட்டுக் கொண்டு இருந்தவன் அவரை நிமிர்ந்தும் பார்க்காமல்....

"ஒரு அர்ஜென்ட் விஷயமா கதிர் கால் பண்ணியிருக்கான்.... உடனே கிளம்பனும்" என்றவன் மறந்தும் தன் மனைவியைத் தேடவில்லை...

அது போல் கதிரும் அவனை அழைத்திருக்கவில்லை.... அவனுக்குத் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பின் பிடியில் இருப்பது போலவே இருந்தது....

இரவு முழுவதும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு எழுந்தவுடன் வந்த நினைவே....

"தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் நடக்கும் இந்தப் பிரச்சனையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினால் தன் தரம் தான் தாழ்ந்து போகும்.... மனைவியிடம் வாய்விட்டு அவளிடம் தாம்பத்தியத்தை யாசித்தானா அர்ஜூன் என்று அசிங்கமாகும்.... போயும் போயும் ஒரு பெண்ணுக்காகக் காத்திருந்தான் என்ற கேவலமான பேச்சு வரும்" என்று தப்புத் தப்பாக நினைத்தவன் அடங்காத கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே சென்றவன்,

காரை புயல் போல் சீறிக் கிளப்பிக் கொண்டு சென்ற வேகத்திலேயே தெரிந்தது அவனின் சினத்தின் ஆழம்....

தன் மகன் தன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் பதில் கூறிவிட்டுப் போனதில் ஸ்ரீயின் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது.....

அவனுக்குத் தன் மனம் விட்டு தன் காதலைச் சொல்ல தெரியாது....

தன் இதயத்தைத் திறந்து தன் ஆசையை, மனதில் ஆடும் எண்ணங்களைத் தெளிவு படுத்த இயலாது....

ஏனெனில் அவன் மற்ற ஆண்களைப் போல் அல்ல....

தன் குடும்பத்தார் மீது அளவுக் கடந்த பாசமும் அன்பும் அவன் வைத்திருந்தாலும் அதனை என்றுமே அவன் வெளிக்காட்டியதில்லை...

இது அவர்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.... இது நிச்சயம் திவ்யாவிற்கும் தெரிந்து தான் இருக்க வேண்டும்....

இத்தனை மாதங்கள் அவனோடு ஒரே இல்லத்தில், அவன் குடும்பத்தாரோடு இருந்திருக்கிறாள்....

இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?

ஸ்ரீயின் மனதில் தோன்றிய எண்ணங்களே இவை....

இந்தப் பிரச்சனையை இனியும் இப்படியே விட்டு விடக்கூடாது என்று எண்ணியவராகத் திவ்யாவைப் பார்க்க, தன் கணவன் வீட்டில் இருந்து வெளி சென்றும் இன்னும் அவன் சென்ற வழியின் மேலே விழி வைத்துக் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தவளை நெருங்கியவர்....

"திவ்யா, உன் கூடக் கொஞ்சம் பேசனும்டா.... என் கூட வா" என்றார்...

நேற்று தன் கணவன் ஆசையுடன் தன்னை அணைத்து தன் விருப்பத்தை எடுத்து சொல்லியும் தான் அவரின் அறைக்குச் செல்லாதது நிச்சயம் அதீத கோபத்தில் அவரைத் தள்ளியிருக்கும்...

தன் வீட்டார் ஊருக்கு கிளம்பும் வரை வேண்டுமானால் பொறுமையோடு இருப்பார்.... அதற்குப் பின் தான் தெரியும் அவரின் கோபத்தின் அளவு....

காலையிலேயே வெடித்துத் தன்னை வேரோடு சாய்க்க போகிறார் என்று அஞ்சிக் கொண்டு இருந்தவளுக்கு அவன் ஒன்றும் பேசாமல் தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அலுவலகத்திற்குச் சென்றது திகிலை அடி வயிற்றில் உறையச் செய்தது...

மயிற்கூச்செரியும் அளவிற்கு உடலில் உதறல் எடுத்திருக்க, அமைதி கலந்த ஒரு வித கிலி சூழ்ந்திருக்கத் தன் இதயம் இரண்டாக வெட்டப்பட்டுப் பிளந்தது போல் வலியெடுக்கச் செய்தது அவனின் பாராமுகத்தால்....

ஆனால் அந்த நிமிடம் அவன் அமைதியாகச் சென்று இருந்தாலும் அவன் மனம் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையைப் போல் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது என்பதனை இந்தச் சின்னப் பேதை அறியவில்லை...

மாமியார் தன்னை அழைக்கவும் சுயநினைவிற்கு வந்தவள் அவரின் பின்னரே செல்ல, அவளைக் கீழே இருக்கும் விருந்தினர்கள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று கதவை சாத்திவிட்டு அவளைக் கட்டிலில் அமரச் செய்த ஸ்ரீ அவளின் தலையை மென்மையாகக் கோதிவிட்டுக் கொண்டே...

"திவ்யா.... நேத்து நைட் எல்லோரும் சாப்பிட்டுட்டு இருக்கும் போது அர்ஜூன் கிட்சனில் உன்னிடம் ஏதாவது சொன்னானா?" என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்....
"ஐயோ! அது எப்படி இவருக்குத் தெரியும்?" என்று யோசித்தவள் கலக்கத்துடன் அவரைப் பார்க்க,

சட்டென்று மாறிய அவள் முகமும், நிற்காமல் வழிந்தோடும் கண்ணீரும் அவரின் கேள்விக்குப் பதிலை சொல்லாமல் சொல்லியது....

அவளின் முக மாற்றத்தை வைத்தே நடந்ததை யூகித்தவர்....

"திவ்யா... நானும் உன்னை மாதிரி ஒரு வீட்டிற்குப் புதுப் பொண்ணா போயிருக்கேன்.... மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன்... அதனால் எனக்கு எப்படி இது தெரியும்ன்னு நினைக்காத" என்றார் கனிவாக.....

அதே சமயம் அவரின் குரலில் அழுத்தமும் இருந்தது...

அமைதியான முகத்தோடு சன்னமான குரலில் அவர் பேசினாலும் அவரின் வார்த்தைகளில் சிறிது கடுமையும் சேர்ந்திருப்பதாகவே திவ்யாவிற்குத் தோன்றியது...

அதை உணர்ந்த நொடி அவளின் கண்களில் மேலும் கண்ணீர் பெருக, அவளின் நிலை உணர்ந்தவர் முடியை கோதிவிட்டவாறே...

"சொல்லுடா, என்ன சொன்னான் அர்ஜூன்?" என்றார்.

என்னதான் பெண்ணாக இருந்தாலும் தன் மாமியாரிடம் எப்படித் தன் கணவன் தன்னை அணைத்ததை, தன் அறைக்குத் தன்னை அழைத்ததைச் சொல்வது என்று சில விநாடிகள் தயங்கியவள் தன் மாமியாரின் விழிகள் தன்னையே கூர்ந்து பார்த்திருப்பதை உணர்ந்து வேறு வழியின்றிப் பாதியை மறைத்து....

"அத்தை... என்ன நேத்து அவங்க ரூமிற்கு வரச் சொன்னாங்க…" என்றாள்...

அதை ஏற்கனவே யூகித்திருந்த ஸ்ரீ,

"சரி, அப்போ ஏன் நேத்து உன் அம்மா கூடத் தூங்கின?" என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று திவ்யாவின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது....

என்ன தான் ஸ்ரீ ஒரு நல்ல மாமியாராகவும், தன் அன்னையின் நெருங்கிய தோழியாகவும் இருந்தாலும் இது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் அந்தரங்கம்...

"அதுவும் தன்னுடன் தாம்பத்ய உறவை தன் கணவன் எதிர்பார்க்கிறார் என்றும், அவரை பார்த்தாலே நடுங்கும் தான் எப்படி அவருடன்.....????" என்றும் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க ஆனால் ஸ்ரீ விடுவதாக இல்லை....

"திவ்யா... உன்னைத் தாண்டா கேட்கிறேன்.... சொல்லு... அவன் கூப்பிட்டும் நீ ஏன் அவன் ரூமிற்குப் போகலை?" எனவும்....

தயக்கத்துடனும், கலக்கத்துடனும் ஒவ்வொரு வார்த்தையாக....

"இல்லத்த.... எனக்கு அ.... அவங்கள பார்த்தாலே பயத்தில வெட வெடங்குது.... இதுல அவங்கக்கூட அவங்க ரூமுல எ... எப்படித்த?" என்றவள் அதற்கு மேல் பேசாமல் தலை குனிய,

"திவ்யா... ரிஷப்ஷன் அன்னைக்கு நைட் அவனோட அவனுடைய ரூமில் தான படுத்திருந்த.... அப்ப அவன் உன்னை எதுவும் செஞ்சானா? இல்ல உன்னை எதுவும் கஷ்டப்படுத்திற மாதிரி பேசினானா? அப்படி எதுவும் நடந்த மாதிரி எனக்குத் தெரியலையே....." என்றவர் சில விநாடிகள் தயங்கி பின் தொடர்ந்தார்.....

"திவ்யா.... எனக்கு நீ வேற, மஹா வேற இல்லை.... உன் இடத்தில் மஹா இருந்திருந்தாலும் நான் இப்படித் தான் பேசியிருப்பேன்... பொண்ணா பிறந்தா இதெல்லாம் ஏத்துகிட்டு தான் ஆகனும்... கல்யாணம்னு ஒன்னு ஆனா புருஷனுடன் இப்படி எல்லாம் இருக்கனும்னு உனக்குச் சொல்லி தெரிய வேண்டியதில்லையே..... இதெல்லாம் தெரிஞ்சு தான நீ அந்தப் பையன கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச?" எனவும், இதை எதிர்பார்க்காத திவ்யா அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்க்க.....

"என்னாடா, திடீர்னு அத்தை பழைய கதையெல்லாம் பேசுறேன்னு நினைக்காதடா..... நான் அவன பத்தி பேசலை.... என் பையனப் பத்தி தான் பேச போறேன்.... எனக்குப் புரியுது.... உங்கள் கல்யாணம் ஏற்கனவே நாங்க எல்லாம் பார்த்து பேசி நடந்ததில்லைன்னு... ஆனால் அதே சமயம் அர்ஜூனோட நீ இத்தனை நாள் ஒரே வீட்டில் இருந்திருக்க.... அவனோட மனமாற்றத்தை பத்தி நான் சொல்ல வேண்டியதில்ல...." என்றவரின் கண்கள் ஒரு அன்னையாகத் தன் மகனை நினைத்து கலங்கியிருந்ததோ....

இது வரை தன் தோழியின் மகளாக, தன் மருமகளாகத் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்தவர், இப்பொழுது முதன் முறையாகத் தன் மகனுக்காகவும் பேச துவங்கினார்.....

"அர்ஜூன் கொஞ்சம் கடுமையானவன் தான் திவ்யா..... அவன் மத்தவங்க போல் இல்லை.... ரொம்பவே முரட்டுக் குணம் உள்ளவன் தான்.... நான் இல்லைன்னு மறுக்கலை.... ஆனால் அதே சமயம் அவனும் மனுஷன் தான் திவ்யா..... உங்க கல்யாணம் அவனுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சின்னு உன்னை விடப் பெத்தவ எனக்குத் தான் தெரியும்.... இப்போ கூட அவன் எப்படி உங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சான்?? எப்படி எதுவும் பேசாம அமைதியா உன் கழுத்தில் தாலி கட்டினான்னு ஒவ்வொரு நாளும் நான் நினைச்சுப் பார்த்திருக்கேன்.... ஆனால் அவனே இவ்வளவு சீக்கிரம் மனசு மாறுவான்னு நான் எதிர்பார்க்கலை..... கல்யாணத்தன்னைக்கே டிவோர்ஸ் பத்தி பேசினவன் அவன்..... ஒரு முறை முடிவெடுத்தா அந்தக் கடவுளே வந்து சொன்னாலும் தன் முடிவ மாத்திக்க மாட்டாண்டா...."

"ஆனால் இப்போ அவனே உன்னைத் தேடுறானா அவனோட மனச புரிஞ்சுக்கத் திவ்யா.... இதுக்கு மேல உன் வாழ்க்கைய சிக்கல் ஆக்கிக்காத...... அவனோட கோபம் இப்போ அளவிட முடியாத அளவுள்ள இருக்குங்கிறது காலையில் அவன் முகத்தைப் பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன்......அவன் என் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கலை... இது வரைக்கும் அவன் என்ன எதிர்த்து எதுவும் பண்ணினதில்ல.... ஆனா உன் விஷயத்தில என் பேச்சுக் கூடக் கேட்க மாட்டானோன்னு பயமா இருக்குது திவ்யா....."

"என்னடா திடீர்னு அத்தை நிஜ மாமியார் போல் ஆகீட்டாங்கன்னு நினைக்காதடா..... எனக்கு அர்ஜூன் என்னை எதிர்க்கிறத பத்தி கவலை இல்லை... ஆனால் எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்... நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்.... நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்" என்றவர்,

அதற்கு மேல் ஒன்றும் பேசுவதிற்கில்லை என்பது போல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவர் அறையை விட்டு செல்ல,

"இத்தனை நாளாய் தன் கணவனிடத்தில் எதிர்பார்த்திருந்த காதல் இப்பொழுது கிடைத்தும் கோட்டை விட்டு விட்டோமோ? இனி அவர் என்னை விட்டு தூரப் போய்விடுவாரா? எனக்கு அவர் கிடைக்கவேமாட்டாரா?" என்று திவ்யாவின் ஊமை மனது கிடந்து அலறி அரற்றியது.....

ஆனால் காலம் கடந்து!!!!!!

தன் மாமியார் அறையை விட்டு சென்றும் ஒன்றும் செய்வதறியாது சிலைப் போல் கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள் மலரினும் மெல்லிய திவ்யா....



அதிகாலையில் அலுவலகத்திற்கு வந்த அர்ஜூனிற்கு அங்கு இன்னமும் ஊழியர்கள் ஒருவரும் வராதிருக்கவே தன்னுடைய கோபத்தைச் சமன் படுத்த வேலையில் கவனம் செலுத்துவதே சரியான வழி என்று எண்ணி கதிருக்கு அழைத்தான்...

மறு முனையில் அலை பேசியை யாரும் எடுக்காததால் ஆத்திரத்தில் அலை பேசியைத் தூக்கி மேஜையில் எரிந்தவன் தன் சேரில் தலை சாய்த்து இரு கரங்களையும் தன் தலைக்குப் பின் வைத்து யோசிக்கத் துவங்கியவனுக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது அவமானத்தில்....

தன் மனைவியின் இகழ்ச்சியில், அவமதிப்பில், புறக்கணிப்பில்.....

எதுவும் செய்யத் தோன்றாமல் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு கணினியை உயிர்பூட்டி வேலையில் மூழ்க ஆரம்பிக்கக் கதிரிடமிருந்து அழைப்பு வந்தது.....

அர்ஜூன் அழைப்பு எந்த நிமிடம் வந்தாலும் கதிர் அவனின் அழைப்பை எடுத்துவிடுவான்.... அது நள்ளிரவாக இருந்தாலும் சரி...

ஆனால் இன்று தன் MD அழைக்கும் பொழுது அலை பேசியை வீட்டின் ஹாலில் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றிருந்ததால் அலை பேசியின் அழைப்பு அவனது செவிகளுக்கு எட்டவில்லை...

குளித்து முடித்து வந்தவன் அர்ஜூனின் அழைப்பை கண்டவுடன்....

"ஐயோ! போச்சு!! காலங்காத்தாலே கூப்பிட்டு இருக்காரு... என்ன அவசரமோ? தொலைஞ்சோம்" என்று பதறியவன் அர்ஜூனிற்கு அழைத்து.....

"சார்... சாரி சார்.... நீங்க போன் பண்ணிய போது குளிச்சிட்டு இருந்தேன்.... அதான் உங்கள் கால அட்டெண்ட் பண்ண முடியலை..... என்ன சார்? இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க... எனி ப்ராப்ளம்?" என்றான்...

"கதிர்... ஐ நீட் யூ ஹியர்.... [I need you here] உடனே ஆஃபிஸிற்கு வாங்க?" என்ற M D யிடம் அதற்கு மேல் கேள்வி கேட்டுப் பழக்கம் இல்லாததால் சட்டென்று சரி என்றவன் சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்தான்..

அலை பேசியில் அர்ஜூனின் குரலில் தெரிந்த அடக்கப்பட்ட கோபமும், அளவுக்கதிகமான அமைதியும் கதிருக்கு ஏதோ பெரிய விபரீதம் நடக்க இருக்கிறது என்பதை உணர்த்த விரைவாக அவன் அறைக்கு வந்தவன் கதவை மெதுவாகத் தட்டி விட்டு அர்ஜூனின் கட்டளையை எதிர்பார்த்து காத்து இருந்தான்...

உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வராமல் போகவும் மீண்டும் கொஞ்சம் சத்தமாகத் தட்ட,

"கம் இன்" என்ற குரல் கேட்டவுடன் உள்ளே சென்றவனுக்குத் தன் M D யின் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தில் இருந்து எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை...

இது தான் அர்ஜூன்....

அவனின் உணர்வுகள், உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவன் நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தன்னை, தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவான்......

இல்லை என்றால் அவனுடைய முகத்தில் இருந்து அவனின் மனநிலையை, அவன் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை ஒருவராலும் கண்டறிய முடியாது.....

அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி, இல்லை இப்பொழுது போல் கட்டுக்கடங்காத கோபமாக இருந்தாலும் சரி.....

தன் தந்தை ருத்ரமூர்த்தியிடம் இருந்து தன் மகனுக்கு வந்த பல குணங்களில் இதுவும் ஒன்று என்று ஸ்ரீ அடிக்கடி சொல்லுவது உண்டு.....

ஆனால் இதே குணம் அர்ஜூனின் தொழில் சாம்ராஜ்யத்தில் அவனுக்குப் பல நேரங்களில் உதவி இருக்கிறது....

இதைத் தான் ஆங்கிலத்தில "இமோஷனல் இன்டெலிஜன்ஸ்" [Emotional Intelligence] என்பார்கள்...

தன்னுடைய உணர்வுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்களின் உணர்வுகளை நன்றாகக் கண்டறியும் சாமர்த்தியமும் பெற்றவர்கள் இவர்கள்...

எந்த அளவிற்குத் தங்கள் சொந்த உணர்ச்சிகளைத் தங்களின் கைகளுக்குள் அடக்கி வைத்திருக்கிறார்களோ அதே அளவிற்குத் தன் எதிராளிகளின் உணர்ச்சிகளையும் அடையாளம் கண்டு அவர்களின் உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நிர்வகிக்கும் திறன் பெற்றவர்கள் இவர்கள்...

இது பல நேரங்களில் ஒருவராலும் தீர்க்க முடியாத பலவித சிக்கல்களையும் தீர்க்க உதவும் ஒரு உணர்வுசார் நுண்ணறிவு....

இவர்களைப் போன்றவர்களை வெல்வது என்பது மிக மிகக் கடினம்!!!

அர்ஜூனின் முகத்தில் இருந்து எந்த உணர்வையும் கண்டு அறிய முடியாவிட்டாலும், கதிரின் மனதில் எதுவோ உணர்த்த...

"இஸ் எவிரித்திங் ஆல்ரைட் சார்? [Is everything alright sir?] " என்றான் தயங்கியவாறே....

"கதிர்... இன்று என்னோட ஷெடியூல்ஸ் என்ன?"

தன்னுடைய டேப்லட்டில் இருந்து அன்றைய நாளுக்கான வாடிக்கையாளர் பிரதிநிதிகளுடன் சந்திக்கும் மீட்டிங்ஸ், அலுவலக ஊழியர்களுடன் கூட்டங்கள், மற்ற அலுவல்களுக்கான அட்டவணை அனைத்தையும் சொன்னவன்,

"சார், உங்களுக்கு வேண்டும் என்றால் நான் எல்லாத்தையும் ரீ ஷெடியூல் பண்றேன்" என்றான்...

"உங்களிடம் நான் சொன்னேனா? ரீ ஷெடியூல் பண்ண சொல்லி..." என்று புருவங்களைச் சுருக்கி கதிரைக் கூர்ந்து பார்த்து அர்ஜூன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,

அர்ஜூனின் கோபத்தில் சகலமும் அடங்கிப் போன கதிர்...

"சாரி, சார்" என்றவன் அதற்கு மேல் ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை.

நேரம் செல்ல செல்ல மற்ற ஊழியர்களும் வர துவங்க, வேலையிலும் மீட்டிங்குகளிலும் தன் நேரத்தை அர்ஜூன் செலவிட அப்பொழுது தான் அவனுக்கு அந்தத் தொலை பேசி அழைப்பு வந்தது தன்னுடைய "இன்ஃபார்மர்" இடமிருந்து...

"சார்... இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு இன்கம்டாக்ஸ் ரைட் வராங்க சார்"

தொழில் சம்பந்தப்பட்ட எந்தச் சூழ்நிலைகளிலும் அதிர்ச்சியோ பதற்றமோ ஆகாத அர்ஜூன் நிதானமாக ஆனால் யோசனையுடன்....

"என்ன திடீர்னு?" என்று கேட்க,

"சார், எனக்கு வந்த தகவலின் படி ராம் இன்டஸ்ட்ரீஸிலிருந்து தான் ஏதோ ஹிண்ட் போயிருக்கும்னு தோனுது சார்…" என்றான் இன்ஃபார்மர்....

"ஓகே.... ஐ வில் டேக் கேர் ஆஃப் இட் [Ok i will take care of it] " என்றவன் கதிரை நோக்கி...

"உடனே நம்ம லாயர்ஸையும், ஆடிட்டர் கரனையும் வரச் சொல்லுங்க" எனவும்,

கதிருக்கு புரிந்து போனது இன்று என்ன நடக்கப் போகிறது என்று.

மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் என்பது போல் விடுவிடுவென ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்து எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் வருமான வரி சோதனைக்குத் தயாராகவும், வருமான வரித் துறையில் இருந்து அதிகாரிகள் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது....

அவர்களிடம் இருந்து அவர்களின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த அர்ஜூன் சோதனைக்கான உத்தரவையும் கவனமாகப் படித்தவன் வக்கீலிடம் கொடுக்க அவரும் படித்துவிட்டு சோதனைக்குச் சம்மதம் தெரிவித்தார்.

அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகவும் கவனமாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தவனின் மனதில்....

"எதற்காக இந்த ரைடு? ராம் இன்டஸ்ட்ரீஸில் இருந்து என்ன ஹிண்ட் போயிருக்கும்?" என்ற எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட இரவு வரை நீடித்த சோதனையில் ஊழியர்கள் ஒருவரையும் வெளியே விடாது அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்திருக்க அனைவருக்கும் ஒரு வித பயமும் அசதியுமே இருந்தது...

இறுதியாக அனைத்து ஆவணங்களையும் பார்த்தவர்கள் ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியாமல்....

"சாரி ஃபார் தி ட்ரபிள் மிஸ்டர் அர்ஜூன் கிருஷ்ணா [ Sorry for the trouble Mr Arjun Krishna] " என்றவர்கள் ஒரு வழியாக வெளியே செல்ல,

அர்ஜூன் உழன்று கொண்டிருந்த தன் நினைவுகளில் இருந்து இன்னமும் வெளியில் வரவில்லை.

சில நிமிடங்கள் அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தவன் சட்டென்று கதிரை ஆழ்ந்து நோக்கி ...

"கதிர்... எனக்கு உடனே ராம் இன்டஸ்ட்ரீஸின் கரெண்ட் அண்ட் ஃப்யூச்சர் ப்ராஜட்ஸ் எல்லாவற்றைப் பற்றியும் கம்ப்ளீட் டீடெய்ல்ஸ் வேண்டும்... அவர்கள் என்ன மாதிரியான விளைவுகளை இந்த ரைடில் எதிர்பார்த்தாங்கன்னும் தெரியுனும்... யார் நம்ம கம்பெனி பற்றி, என்ன மாதிரியான தகவல்களை இன்கம் டாக்ஸ் ஆஃபிஸிற்குச் சொன்னார்கள் என்றும் தெரியனும்... இந்த எல்லா டீடெய்ல்ஸும் எனக்கு நாளைக்குள்ள என் டேபிளில் இருக்கனும்" என்றவன் புயல் வேகத்தில் வேகமாக வெளியேற,

கதிரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது....

அது அர்ஜூனை பற்றியோ அல்லது தன்னைப் பற்றியோ பயத்தினாலோ இல்லை...

"ஐயோ! ராமா! புலி வால பிடிச்சிட்டியே.... இனி கடவுள் கூட உன்னைய காப்பாற்ற முடியாது" என்று ராம் இன்டஸ்ட்ரீஸின் M D ராமச்சந்திரனை நினைத்து தான்.

ஏனெனில் அர்ஜுனின் கோப வட்டத்திற்குள் விழுந்தவர்களை அது எந்த எல்லை வரை கொண்டு போகும் என்பதை ஸ்ரீக்கு பிறகு நன்கு தெரிந்தவன் இவன் ஒருவனே...

பல நேரங்களில் அதைத் திகிலோடு கண் கூடாகப் பார்க்க நேர்ந்ததும் உண்டு....

ஆனால் அப்பொழுதெல்லாம் அர்ஜூனின் அதிரடியான ஆட்டங்களைப் பார்த்து பயந்து போனாலும் தன் MD -ஐ எதிர்த்து முன்னாள் சேர்மனான அவரின் அன்னையோ அல்லது இன்னாள் சேர்மனான அவரின் தந்தையோ கூட எதிர்த்து பேசாதது கண்டு வாய் மூடி ஆச்சரியப்பட்டு இருக்கிறான்....

மனதிற்குள் "என்ன தில்லுப்பா இவருக்கு... அதுவும் இந்தச் சின்ன வயசிலேயே" என்று ஒருவித திகிலான நிலையில் இருந்திருக்கிறான்...

ஆனால் தொழிலிலேயே அப்படிப்பட்டவன் அர்ஜூன் என்றால் அவனின் கோபத்திற்குப் புதிதாக ஆளான திவ்யாவின் நிலைமை என்னவோ?

தொடரும்..
 

JB

Administrator
Staff member






அத்தியாயம் - 18

ஏற்கனவே மனம் சமாதனமற்று, மிகவும் குழம்பிய நிலையில் சித்தம் தடுமாறியிருந்தவனுக்கு இன்று எதிர்பாராமல் நடந்தேறிய வருமான வரித்துறையின் சோதனை வேறு உள்ளத்தைச் சளைக்கச் செய்ய உடலும் உணர்வும் துவண்டு போக, மனம் உணர்ச்சிகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக ஆரம்பித்தது...

இது போன்ற சோதனைகளை அவன் தன் பெற்றோருடன் இணைந்து தொழிலில் இறங்கிய காலத்திலிருந்தே சந்தித்து இருக்கிறான்.... அது போன்ற சூழ்நிலைகளில் தன்னந்தனியாளாக நின்று வென்றும் இருக்கிறான்....

ஆனால் என்று காதல் என்ற ஒரு மெல்லிய நுண்ணுணர்வு அவன் உள்ளத்தில் அடி எடுத்து வைத்திருந்ததோ, எந்த நிமிடம் அவன் மனைவியின் மீது தன் கண்களை அளவிலடங்கா காதலுடன் நிலைநாட்டியிருந்தானோ அன்றிலிருந்து அவனையும் அறியாமல் அவன் இதயத்தின் ஒரு பக்கம் மென்மையாக மாறிவிட்டிருந்தது...

அதன் வெளிப்பாடே தன்னவளின் சிகையில் இருந்து விழுந்த மலர்களைக் கூட நசுக்க விரும்பாமல் அவன் தன் பாதங்களைத் தள்ளி வைத்தது...

ஆனால் இன்று தன் மனதினை அவள் கசக்கி எறிந்துவிட்டதாகவே அவன் உள்ளம் புழுங்க ஆரம்பித்து இருந்தது....

அதற்கு ஒரே காரணம் இதுவரை அவன் வாழ்க்கையில் அவனை ஒருவரும் தோற்கடித்ததில்லை.... அல்ல... யாரும் அவனைத் தோற்கடிக்க அவன் விட்டதில்லை....

ஒருவரும் அவனைப் புறந்தள்ளியது இல்லை.... உதாசீனப் படுத்தியதில்லை....

ஆனால் தன் மனைவி தன்னை மனமாற ஒதுக்கி வைத்து இகழ்ந்துவிட்டாள் என்று அவனாகவே தனக்குள் ஒரு தப்புக் கணக்கு போட்டுக் கொண்டான்...

மனம் அடிபட்டுப் போனதில், சித்தம் சிந்திக்கும் சக்தியை அறவே அழிக்க "இவளுங்க எல்லாம் கெஞ்சினால் மிஞ்சுவாளுங்க, மிஞ்சினால் கெஞ்சுவாளுங்க" என்று வாய்விட்டு சொல்லி கொதித்தவன் தன் இதயத்தை இரும்பாக்கி கொள்ள முடிவு செய்தான்....

உள்ளே எழுந்த உணர்ச்சிகளின் விளைவாக உள்ளூர அவமானத்தால் குன்றிக் கொண்டிருந்ததால் மனம் முழுவதும் வெறுப்புடன் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவன் அன்று இரவு போகத் தேர்ந்தெடுத்த இடம் ஒரு நட்சத்திர ஹோட்டலினுள்ளே இருக்கும் பார்....

அகமும் புறமும் கோபக் கனலில் கொதித்திருக்க இன்று நடந்த சோதனை வேறு அவனின் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினது போல் இருக்க, பாருக்குள் நுழைந்தவன் மனதின் அழுத்தத்தைப் போக்க மது அருந்த ஆரம்பித்தான்...

இந்தியா முழுவதும் தொழிற்களில் கொடிக்கட்டி பறக்கும் வெற்றிகரமான இளம் தொழிலதிபன்.....

தன் எதிரிகளைச் சாமான்யமாகத் துவம்சம் செய்து வெற்றிக் கொள்பவன்....

இன்று தன் மனதினை அடக்கத் தெரியாமல் மது அருந்த துவங்கியவன் நடு நிசியாகும் வரை குடிப்பதை நிறுத்தவில்லை....

ஆனால் அங்குத் திவ்யாவிற்கோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் துடித்துத் தவித்து இருந்தது....

அதிகாலையில் கோபமாகச் சென்ற கணவன் தன் அன்னையிடம் கூட முகம் கொடுத்துப் பேசாமல் சென்றவன் இரவு வெகு நேரம் சென்றும் வீட்டிற்கு வராதது மேலும் அச்சத்தைக் கொடுக்கக் கலக்கத்துடன் தன் மாமியாரின் அறைக் கதவை தட்டினாள்..

அந்த நேரத்தில் கதவு தட்டப்படவும் குழம்பிய ஸ்ரீ யோசனையுடன் அறையை விட்டு வெளியே வர....

"அத்த மணி மூனு ஆகுது.... இன்னமும் அவங்க வீட்டிற்கு வரலை..... காலையில் ரொம்பக் கோபமாக வேற போனாங்கல்ல.... இப்போ எனக்கு என்னமோ பயமா இருக்கு அத்தை" என்று கண்களில் நீர் திரண்டு இருக்கக் கலக்கத்துடன் கூறுபவளை பார்த்த ஸ்ரீக்கே ஒரு மாதிரியாக இருந்தது...

ஆனால் ஏற்கனவே கதிரின் மூலம் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனையைப் பற்றி அறிந்திருந்தவர் அர்ஜூனின் மன நிலையை உணர்ந்தவராக அதனைப் பற்றிச் சொல்லி திவ்யாவையும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று எண்ணியவர்....

"நீ போய்த் தூங்கு திவ்யா.... அவன் வந்திடுவான்" என்று மட்டும் சொன்னார்...

தொழிற்களில் இது போன்ற சம்பவங்கள் சகஜம் என்றாலும் அவன் இன்று இருந்த மனநிலையை நன்கு அறிந்தவர்களாகத் தன் மகனின் வரவிற்காக அவரும் பாலாவும் உறங்காமல் காத்துக் கொண்டு தான் இருந்தார்கள்...

ஆனால் அதனைப் பற்றித் திவ்யாவிடம் சொல்லி அவளையும் வருத்தப்படுத்த அவர் விரும்பவில்லை...

கலக்கத்தோடு கீழே இறங்கப் போனவள் தயங்கிவளாக ஸ்ரீயை நோக்கி திரும்பி பார்க்க "என்ன திவ்யா? என்றார்...

"அத்த நான் வேணும்னா இன்னையில இருந்து அவரின் ரூமில் படுத்துக்கவா?" என்ற தவிப்புடன் கேட்ட மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தவர் ஒன்றும் பேசாமல் "இது கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனை, அவர்களே தான் அதனைச் சரி செய்து கொள்ள வேண்டும்" என்று நினைத்தவர்,

மெல்லிய புன்னகையுடன் "சரிடா" என்றார்...

என்ன தான் ஸ்ரீ சொல்லிவிட்டாலும் தன் கணவனின் அறைக்கு அவன் இல்லாத பொழுது செல்ல அச்சமாக இருக்கத் தன் மாமியார் அவர் அறைக்குள் செல்லும் வரை காத்திருந்தவள் கீழே ஹாலிலேயே அவன் வரும் வரை காத்திருப்பது என்று முடிவு செய்து அங்கிருந்த சோபாவில் படுத்தாள்.

கிட்டத்தட்ட நான்கு மணி வரை விழித்திருந்தவள் அதன் பிறகு தன்னையும் அறியாமல் சிறிதே கண்ணசர விடியற்காலையில் சட்டென்று விழித்தவள் "அவர் வந்துவிட்டாரோ? நாம் கவனியாமல் தூங்கி விட்டோமோ"? என்று பதறியவள் வெளியில் சென்று அவனின் காரை தேட அது அங்கிருந்தால் தானே...

அவன் இன்னும் வரவில்லை என்றது புரிந்ததும் பகீரென்று இருக்க, மனம் பதற, என்ன செய்வது என்று வாசலிலேயே கையைப் பிசைந்து கொண்டு நின்றவளின் அச்சத்தைப் போக்குவது போல வந்து சேர்ந்தான் அர்ஜூன்...

விடியும் வரை பாரிலேயே இருந்தவன் சற்று போதை தெளிந்ததும் காரை கிளப்பியவன் நேரே வீட்டிற்கு வர, வாசலில் நின்று கொண்டிருந்த மனைவியைப் பார்த்தவன் அவளைச் சுட்டு பொசுக்காதது ஒன்றே குறையாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு உள்ளே சென்றான்...

அவனைக் கூர்ந்துப் பார்த்தவளுக்கு அவனின் நடையின் தளர்ச்சியில் இருந்தே தெரிந்தது அவன் குடித்து இருக்கிறான் என்று....

முதல் முறை தன் கணவனின் மதுப் பழக்கத்தைக் கண்டவளுக்கு அவனின் இந்தப் பழக்கம் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால், ஒருவேளை என் மேல் உள்ள கோபத்தால் தான் என்றும் இல்லாமல் இன்று குடித்திருப்பாரோ? என்ற நினைப்பு இதயத்தில் சுருக்கென்ற தாங்க முடியாத வலியைக் கொடுத்தது....

அவன் பின்னாலேயே அவளும் போக, சற்று தடுமாறி மாடி படிகளில் ஏறியவன் தன் அறைக்குள் செல்லும் முன் திரும்பி கீழே பார்க்க அவளின் அதிர்ந்த, கலங்கிய முகமும், நீர் தேங்கியிருக்கும் விழிகளும் அவனின் அடிப்பட்ட மனதிற்கு ஒரு குரூர மகிழ்ச்சியையே கொடுத்தது...

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் என்பது போல் எய்தவன் ஒருவன் இருக்க அம்பை தன் மனைவியின் மேல் எய்ய விரும்பியவன் அவளை எந்த விதத்தில் வலிக்கச் செய்வது என்று ஒரு நொடி யோசித்துப் பின் ஒரு நக்கல் சிரிப்புடன் மேலிருந்தவாறே...

"டிவோர்ஸுக்கு அப்பளை பண்ணப் போறேன்.... பேப்பர்ஸ் வரும் போது கையெழுத்து போட ரெடியா இரு…" என்று சொல்ல...

மீண்டும் இத்தனை நாட்களுக்குப் பிறகு "டிவோர்ஸ்" என்ற வார்த்தையைக் கணவனின் வாயில் இருந்து அதுவும் நேரிடையாகத் தன்னை நோக்கி அவன் சொன்னதைக் கேட்டதும் அமிலத்தைத் தன் உடல் முழுவதும் சொட்டு சொட்டாக ஊற்றியது போல் துடிதுடித்துப் போனாள் அந்தப் பாவை...

அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைச் சிறு புன்னகையுடன் ரசித்துப் பார்த்தவன் தன் அறைக்குள் சென்று படீரென்று கதவை சாத்த, அந்த ஒலி திவ்யாவை தூக்கி வாரிப் போட செய்தது என்றால் அவன் கதவை சாத்திய விதம் இனி என் அறையில், என் மனதில் உனக்கு இடம் இல்லை என்பதை உணர்த்துவது போல இருக்க, இதயம் உறைந்து போய் நின்றாள்....

பொழுது புலர்ந்துவிட்டதால் விழித்த ஸ்ரீ, தன் அறையில் இருந்து வெளி வரவும் அர்ஜூன் திவ்யாவை பார்த்து விவாகரத்திற்குத் தயாராக இரு என்று சொல்லவும் சரியாக இருந்தது....

அவனின் கொடிய வார்த்தைகளில் அதிர்ந்தவர் கீழே திவ்யாவை நோக்கி பார்க்க, மருமகளின் அதிர்ந்த முகம் தான் வருவதற்கு முன்பு கிட்டதட்ட அங்கு என்ன நடந்திருக்கும் என்பதனை உணர்த்தவும் வேகமாகக் கீழே இறங்கி வந்தவர் கலக்கத்துடன்...

"திவ்யா, என்ன நடந்தது?" என்றார்...

ஆனால் திவ்யாவோ தன் கணவன் மது அருந்தியிருப்பதையும், அவன் இத்தனை நேரம் கழித்து இப்பொழுது தான் வீட்டிற்கு அதுவும் தள்ளாடியபடியே நடந்து வந்ததையும் சொல்லாமல்.....

"அத்த... அவரு என்னைய விவாகரத்துக்குக் கையெழுத்துப் போடனும்னு சொல்றாரு அத்த.." என்றவள் பரிதவிக்கும் கண்களுடன் அவரை ஏறெடுத்து பார்க்க,

இது போன்று எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று ஏற்கனவே யூகித்து இருந்த ஸ்ரீ அவளைப் பார்த்தவாறே வேகமாக அவளை நோக்கி வர திவ்யா உதடுகள் நடுங்க மேலும்....

"அத்த நான் தப்புப் பண்ணிட்டேன் அத்த.... ஆனால் அதுக்கு இது ரொம்பப் பெரிய தண்டனை இல்லையா?" என்று பரிதாமாக வினவ,

ஸ்ரீயின் மனம் கனத்துப் போனது....

திருமண மண்டபம் வரை வந்த மணமகன் திடிரென்று மணமேடையில் இருந்து எழுந்து திருமணத்தை நிறுத்தியதுமே அவனைப் பற்றி முழுவதும் அறியாத பட்சத்திலேயே, அவனுடன் ஒரு நிமிடம் கூட வாழாத நிலையிலேயே வாழப் பிடிக்காமல் தூக்கில் தொங்க ஓடியவள் இந்தச் சின்னப் பெண்.....

பிறப்பு முதலே அந்தஸ்து, வசதி, ஆணவம், ஆளுமை, அதிகாரம் என்ற விஷயங்களுக்கு முதன்மை கொடுத்து வந்த மகனை இவை எதற்கும் சற்றும் ஒத்து வராத திவ்யாவின் கழுத்தில் தாலிக் கட்ட சொல்லி எத்தனை பெரிய கேட்டை அவளுக்குச் செய்திருக்கிறோம் என்று ஸ்ரீ உணர்ந்த இந்த நிமிடம் அவரின் உள்ளம் நடுங்கி மனம் சிதற துவங்கியது.....

அறியாத ஒருவனின் அவமதிப்பால் தன் உயிரை மாய்க்க துணிந்த இவள் இன்று மனதார கணவனாக அர்ஜூனை நினைத்து உள்ளத்தில் வாழ துவங்கியிருப்பவள் அவனின் இந்த முடிவை, உதாசீனத்தை, வெறுப்பை எங்கனம் தாங்குவாள்....

நினைக்கும் பொழுதே ஸ்ரீயின் இதயத்தில் யாரோ தூக்க முடியாத அளவிற்கு ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்து அழுத்துவது போல் மனம் அத்தனை பாரமாக இருக்க, மெல்ல திவ்யாவின் அருகில் நெருங்கி வந்தவர் அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு...

"திவ்யா.... அர்ஜூன் சொன்னதைப் பெரிசா எடுத்துக்காதடா... அவன் வேற ஒரு டென்ஷனில் இருக்கான்.... அது அவனுடைய பிஸினஸினால் வந்தது..... நீ எதையும் மனசில வச்சிக்காத.... போ, போய்க் குளித்து விட்டுக் கோலம் போடு" என்றவர் அவளின் முகத்தைக் கனிவோடு நோக்கிவிட்டு தன் அறைக்குச் சென்றார்....

மாமியாரின் ஆறுதலான வார்த்தைகள் திவ்யாவின் புண்ணாகிப் போயிருந்த மனதிற்கு மருந்தாகவில்லை....

தன் கணவன் விடியும் வரை வீடு திரும்பாமல் பின் மது அருந்திவிட்டு தளர்ந்து தள்ளாடி நடந்து வந்ததைப் பார்த்த அந்த வினாடியே உடல் ஒரு முறை உணர்ச்சி மிகுதியால் நடுங்கியது...

அவளைக் கண்டவுடன் புருவங்களை ஒரு முறை சுளித்துக் குற்றம் சாட்டும் பார்வையுடன் நெருப்பைக் கக்குவது போல் அவளை ஒரு சில நொடிகள் உறுத்து விழித்தவன் அவளிடமிருந்து ஒதுங்கி அகன்று படிகளில் ஏறிய அந்த நிமிடம் அவளின் இதயத்தைக் குறிப்பார்த்து ஏதோ கூர்மையாகப் பாய்ந்தது போல் வலித்தது...

ஆனால் இருந்தும் அவனின் கோபத்தின் அளவு புரியாத பேதைப் போல் அவனைப் பின் தொடர முனைய, தன் அறையின் வாயிலை அடைந்தவன் அவளை மேலும் வலிக்கச் செய்யும் நோக்கத்துடன் அவளின் முகம் நோக்கி "விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட தயாராக இரு" என்று சொன்னது நெஞ்சை பிளக்கும் சத்தத்துடன் இடி இறங்கியது போல் இருந்தது....

மாடிப் படிகளின் கைப்பிடியை நடுங்கும் கரத்துடன் இறுக்கி பற்றி மெல்ல படி ஏறியவள் இன்னும் மஹா தன் அறையில் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து மௌனமாகக் குளியல் அறைக்குள் நுழைந்தவள் சில நிமிடங்கள் தன் கணவனின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியின் விளைவாக அழும் சக்தியை இழந்து உணர்ச்சியற்ற கல்லாகச் சமைந்து நின்றிருந்தாள்..

குளியல் அறையின் கதவில் சாய்ந்திருந்தவள் மெல்ல நடந்து தண்ணீர் குழாயை திறக்க, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குழாயை இறுக்கி பிடித்துக் கொண்டவளின் இதயத்தில் இடி போல் உணர்ச்சிகள் தாக்கியதால், உதடுகள் துடிக்க மனதில் இருந்த துக்கம் அழுகையாக வெளி வரத் துவங்க வெடித்து அழத் துவங்கினாள்....

ஜாதகம் பார்த்துப் பொருத்தம் பார்த்து பெற்றோர்களின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் விதியின் வசத்தால் நடக்கவில்லை...

அதே விதி எங்கிருந்தோ முன் பின் அறியாத, தன் குடும்பத்தை, தன் தொழில் உலகத்தைத் தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த அதிகாரமிக்க ஒருவனைத் தன் காலடிக்கு அழைத்து வந்து, தன் வாழ்க்கைப் பயணத்தில் சரிபாதியாகப் பங்கு கொள்ளப் போகும் துணைவனாகத் தன் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்ட வைத்தது...

ஆனால் இன்றோ கொலுக்கொம்பில் இறுக்கி படர துடித்துக் காத்திருக்கும் தளிர் கொடியை எதிர்பாராத புயல் காற்று ஒன்று விசிறியடித்துச் சிதைக்கச் செய்ததைப் போல் இந்தத் திருமணமும் நிலைக்காதென்றே தோன்றியது....

கடவுள் இணைத்ததை மனிதன் (அர்ஜூன்) பிரிக்காதிருக்கட்டும்!!!!

விதி...... மனிதன் நிச்சயிக்கும் நிமிடங்களையும் அது மாற்றிவிடுகிறது....

அது உருவாக்கும் சம்பவங்களின் முடிவுகளையும் அதுவே நிர்ணயிக்கிறது....

விதியின் வழிகளை மனிதன் அறிய முடிவதில்லை.... மனிதன் வகுக்கும் எந்தத் திட்டங்களையும் அது மாற்றிவிடுகிறது...

அதனால் உண்டாகும் விபரீதங்களும் பல...

பாரமான மனதுடன் குளியல் அறைக்குள் சென்றவள் தன்னிலை நினைத்து மௌனமாக அழுது கரைந்தாள்...

காலை ஒன்பது மணி அளவில் அலுவலகம் செல்வதற்கு என்று கிளம்பி கீழே இறங்கியவன் அவனுக்காக அந்நேரம் வரை ஹாலில் இருந்த ஸோஃபாவில் அமர்ந்து காத்திருந்த தந்தையைப் பார்த்ததும் தெரிந்து போனது அவர் என்ன கேட்கப் போகிறார் என்று...

"டாட், எனக்கு இன்னைக்கு நிறையக் கமிட்மெண்ட்ஸ் இருக்கு.... நான் அப்புறம் உங்ககிட்ட பேசுறேன்"

"இன்கம் டாக்ஸ் ரைடு பற்றி ஒன்னுமே பேசலையே அர்ஜூன்"

"டாட்... பிஸினஸ்மேனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா? இதுல பேச ஒன்னும் இல்லை டாட்.... ஐ டுக் கேர் ஆஃப் இட் [I took care of it] "ஸீ யூ டாட் [See you dad] " என்று சொல்லி விட்டு அவரின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் காரை வேகமாகக் கிளப்பிச் சென்றுவிட்டான்...

சமையல் அறையில் இருந்த திவ்யாவிற்குத் தன் கணவனின் குரல் கேட்க வேகமாக வெளியே ஓடி வந்தவள் அவன் அதை விட வேகமாகச் சென்று விட,

நெஞ்சை பிளந்து கொண்டு வெளியேறிய விம்மலின் சத்தம் தன் மாமனாருக்கு கேட்டு விடாமல் வாயைப் பொத்திக்கொண்டு ஓசையற்று அழுதவள் யாரும் தன்னைக் கண்டு கொள்ளாமல் இருக்க மீண்டும் சமையல் அறைக்குள் புகுந்தாள்.

இன்று அதிகாலை அர்ஜூன் திவ்யாவிடம் அவர்களின் விவாகரத்து பற்றிப் பேசியதை ஸ்ரீ மூலம் ஏற்கனவே அறிந்திருந்தார் பாலா..

அதே சமயம் அர்ஜூனின் சொந்த விஷயத்தில், அதுவும் அவனின் திருமண வாழ்க்கை விஷயத்தில் தலையிட அவருக்கும் துணிவில்லை....

ஆனால் மனதில் எங்கோ ஒரு மூலையில் தன் மகன் தன் மனைவியை விவாகரத்து செய்யும் அளவிற்கு அவ்வளவு தரம் தாழ்ந்து போக மாட்டான் என்ற சிறு நம்பிக்கையும் இருந்தது அவருக்கு....



தன் மனதில் மூண்டிருந்த கோபம் முழுவதையும் அதி வேகமாகக் காரை செலுத்துவதில் காட்டிய அர்ஜூன் அலுவலகத்திற்குள் நுழைய, அவனின் அக்கினி கக்கும் விழிகளையும் கோபம் சூழ்ந்திருக்கும் முகத்தையும் கண்ட ஊழியர்களுக்கு யாரும் அவனை நெருங்காமல் இருப்பதே சாலச் சிறந்தது என்று தோன்றியது...

தன் அறைக்குள் நுழைந்தவன் மனதை இறுக்கிப் பிடித்துத் தன் ஆத்திரத்தையும் ஆங்காரத்தையும் சிறிதே ஒதுக்கி வைத்தவன் வேலைகளுக்குள் மூழ்க, ஆனால் காலையில் எழுந்ததில் இருந்தே மேலும் ஏதோ அசம்பாவிதங்கள் நடக்கப் போவது போல் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.....

விதி இன்னும் தன் கரங்களை அவனின் வாழ்க்கையில் இருந்து இழுத்துக் கொள்ளவில்லை என்பதைச் சிறிது நேரத்திலேயே அர்ஜூன் புரிந்து கொண்டான்....

ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளிடையே இன்னும் என்ன பிரச்சனை என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே கதிர் அர்ஜூனின் அறைக் கதவை தட்டாமலே, அனுமதிக் கேட்காமலே வேகமாக உள்ளே வந்தான்....

அவனின் அவசரத்தையும் படபடப்பையும் பார்த்த அர்ஜூன் ஒன்றும் பேசாமல் அவனே விஷயத்தைச் சொல்லட்டும் என்பது போல் அவனை உற்று நோக்க,

"சார், யு எஸ்ஸில் இருந்து வந்த ஷிப்மெண்ட்டில் ப்ராப்ளம் சார்" என்றவன் பிரச்சனைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கத் துவங்கினான்....

அர்ஜூன் எப்பொழுதும் தன் தனிப்பட்ட பிரச்சனைகளைக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளைத் தொழிலோடு சம்பந்தப்படுத்தமாட்டான்...

தன் தனிப்பட்ட வாழ்க்கை வேறு தொழில் வேறு என்று இருப்பவன்.... ஆனால் இப்பொழுது அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த இந்தச் சஞ்சலமும் சலனமும் தான் அவனைச் சிறிதே அசைத்துப் பார்த்திருந்தது...

இன்று அதனையும் ஒதுக்கி வைக்க முடிவு செய்தவன் நிதானமாக....

"ஓகே கதிர்... நீங்க கஸ்டம்ஸ் ஆஃபிஸுக்கு நேரிலேயே போய் என்ன பிரச்சனைன்னு பாருங்க…" என்றவன் யோசனையுடன் சுங்க வரித் துறையில் பெரிய பதவி வகிக்கும் தன் நண்பனின் அலை பேசிக்கு அழைத்தான்....

அர்ஜூனின் எண் அலை பேசியில் ஒளிர்ந்த அடுத்த விநாடியே அவன் அழைப்பை மறுமுனையில் எடுக்க...

"ஹாய் அஷோக்... இன்னைக்கு நம்ம ஷிப்மெண்ட் ஒன்னு
யு.எஸ்ஸில் இருந்து வந்திருக்கு.... அதில பிரச்சனைன்னு கஸ்டம்ஸில பிடிச்சி வச்சிருக்காங்கலாம்.... லைசன்ஸ், சர்டிபிக்கேட்ஸ் எல்லாம் கரெக்டா தான் இருக்கும்.... ப்ளஸ் இது ஒன்னும் என்னோட ஃபர்ஸ்ட் ஷிப்மெண்ட் இல்லையே? கொஞ்சம் என்ன என்று விசாரி" என்றான்..

"அர்ஜூன், நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.... யூ டோண்ட் வொர்ரி [You don't worry]"

"வெரி எக்ஸ்பென்ஸீவ் பார்ட்ஸ் அஷோக்... பல கோடிகள் மதிப்புள்ள பொருட்கள் அதில் இருக்கு... ஒரு நாள் என்னோட ஷிப்மெண்ட் யார்ட்ல [Yard] இருந்தா கூட எனக்கு லட்சக்கணக்குல செலவு.... அது மட்டும் இல்லாமல் கஸ்டம்ஸ் போட்டு தீட்டிறப் போறாங்க... ப்ளீஸ் டே கேர் ஆஃப் இட் [Please take care of it]" என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு தன்னுடைய செயலாளரை அழைத்து அன்றைய வேலைகளின் பட்டியல்களைத் தெரிவித்தான்....

பின் சேரில் இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்தவனின் நினைவுகள் என்னதான் நேற்று நடந்த வருமான வரி துறையின் சோதனையிலும், ராம் இண்டஸ்ட்ரீஸ் மேலும், இதோ இப்பொழுது புதுப் பிரச்சனையாக வந்திருக்கும் சுங்க துறை பிரச்சனைகள் மேலும் இருந்தாலும்,

இன்று விடியற்காலை தான் தன் அறைக்குள் போகும் முன் கீழே அதிர்ச்சியுடனும், கலங்கிய கண்களுடனும், அச்சத்தினால் நடுங்கும் உடலுடனும் திவ்யா அவனைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியே மீண்டும் மீண்டும் அவனின் கண்களின் முன் வலம் வந்து கொண்டிருந்தது.....

இருபத்து மூன்று வயதிலேயே தன் தாத்தாவின் தொழிற்களைக் கையில் எடுத்தவன்....

இது போன்ற எத்தனையோ இன்னல்களையும் எதிர்ப்புகளையும், தன் புத்தி கூர்மையாலும், அசாதாரணத் தைரியத்தாலும் துச்சமெனச் சமாளித்தவன்....

தொழிலில் தன்னுடன் போட்டி போடுபவர்களையும் தன்னை எதிர்த்து நிற்பவர்களையும் அதிரடியாக அவன் அடக்கும் போது எமகாதகன் என்று பெயர் எடுத்திருந்தவன்.....

ஆதலால் இப்பொழுது நடக்கும் சிக்கல்களைப் பற்றி அவன் துளி அளவும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் வாழ்க்கையில் பெண்களையே அண்டாதவன்.... எப்பொழுதும் எந்தப் பெண்ணாலும் கவரப் படாதவன்....

அது எப்பேற்ப்பட்ட பேரழகியானாலும் சரி.... எப்படிப்பட்ட கோடிஸ்வரியானாலும் சரி...

அவன் இதயத்தில் இது வரை எந்தப் பெண்களாலும் சாரல் வீசியதில்லை...

ஆனால் முதன் முதலாக ஒரு சிறு பெண்ணிடம் தன் மனதை இழந்ததை நம்ப முடியாமல், அதுவும் தன் அந்தஸ்துக்கு மாறாக அவளிடம் இறங்கி வந்து அவளை வலிய அழைத்ததை நினைத்து உள்ளுக்குள் புகைந்து தன் சிந்தனைகளைச் சிதைத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்....

"எனக்கு வேண்டும் எனும் பொழுது என்னிடம் வராதவள் இனி அவளே என்னைத் தேடி வந்தாலும் எனக்கு வேண்டாம்.... நான் அழைத்தும் என்னை ஒதுக்கியவள் இனி என் காலடியில் வீழ்ந்துக் கெஞ்சினாலும் எனக்கு அவள் தேவை இல்லை…"

என்று உறுதியாக முடிவெடுத்தவன் மிகவும் சிரமப்பட்டே அவளின் நினைவுகளில் இருந்து தன் மனதை வலுகட்டாயமாகப் பிடுங்கி வேலையில் திருப்பினான்.

அங்கு வீட்டிலோ நேற்று திவ்யாவிற்கும் அர்ஜூனிற்கும் இடையில் நடந்த பிரச்சனையாலும், இன்று காலை அர்ஜூனின் விவாகரத்து பற்றிய பேச்சினாலும் மனம் அமைதியில்லாமல் இருந்த ஸ்ரீ மன அசதியில் சோபாவில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்க,

கல்லூரியில் இருந்து வந்த அருண் தன் அன்னையின் நிலையைப் பார்த்தவன் அருகில் வந்து மெதுவாக அவரை அழைத்தான்...

கண்களை மெல்ல திறந்து அருணைப் பார்த்த ஸ்ரீ,

"என்ன அருண், சீக்கிரம் வந்திட்ட?" எனவும்,

"எக்ஸாம்ஸ் நடக்குது மாம்.... காலையில் ஒரு எக்ஸாம் முடிஞ்சுது.... கொஞ்சம் ப்ரேக் வேணும்னு தோனிச்சு..... அதான் சீக்கிரம் கிளம்பி வந்து விட்டேன்"

"சரி.... இரு லஞ்ச் எடுத்து வைக்கிறேன்" என்று அவர் எழ,

"மாம்.... ஆர் யூ ஆல்ரைட்? யூ டோண்ட் லுக் குட் [[Mom, Are you alright? You don't look good]" என்றான் யோசனையுடன்.

"எனக்கு ஒன்னும் இல்ல அருண்..... கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருந்திச்சு.... அதான் வந்து படுத்துட்டேன்" எனவும்,

திடுக்கிட்ட அருண்...

"மாம், நீங்க எப்போதும் இது மாதிரி இருந்ததில்லையே..... நம்ம கம்பெனி ரைட் [Raid] பத்தி நினைச்சிட்டு இருந்தீங்களா? அண்ணா தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறாங்களே...... அவங்க இருக்கும் போது என்ன கவலை??"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அருண்.... நீ வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…" என்றவரை ஓய்வு எடுக்கச் சொன்னவன் திவ்யாவை அழைத்துத் தனக்கு உணவு எடுத்து வைக்கச் சொன்னவனின் எண்ணமெல்லாம் ஸ்ரீயின் முகவாட்டத்திலேயும், அவரின் மெலிந்த பேச்சிலேயுமே இருந்தது....

அங்கு அலுவலகத்தில் கதிரின் மூலம் ராம் இன்டஸ்ட்ரீஸில் இருந்து யார் தனக்குப் பிரச்சனை செய்வது என்று தெரிய வர, கதிரிடம் அவர்களின் கம்பெனி வாடிக்கையாளர் விவரங்களைக் கொடுத்து எவ்வாறு இதற்குத் தொழில் ரீதியாக அடிக் கொடுப்பது என்று ஆலோசனை செய்த அர்ஜூன் அதற்கான திட்டத்தையும் கொடுத்தவன்.....

"கதிர்.... நம்முடைய பெயரோ, கம்பெனியோட பெயரோ வெளியே வரக் கூடாது.... ஆனால் ராமசந்திரனுக்கு மட்டும் இது நாம் தான் செய்தோம் என்று தெரியனும்.... ஆனால் நம்மை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் அவனோட கையயும் காலையும் கட்டி இருக்கனும்..... எங்கும் லீக் ஆகாமல் பாத்துக்கங்க" என்றவன்,

அமெரிக்க ஏற்றுமதி பிரச்சனையைக் கையில் எடுக்க ஆரம்பித்தான்....

நேரம் போவதே தெரியாமல் சிக்கல்களை ஆராய்வதிலும், அதனைத் தீர்ப்பதிலேயுமே கவனத்தைச் செலுத்தி இருக்க, கூடவே தலை வலியும் சேர்ந்து வர அப்பொழுது தான் கவனித்தான் மணி எட்டு ஆகிவிட்டதை....

ஏற்கனவே நேற்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை...

இரவு முழுவதும் மது அருந்தியது வேறு காலையில் இருந்தே தலைப் பாரமாக இருப்பது போல் இருந்தது...

இப்பொழுது இந்தத் தலை வலி வேற என்று எரிச்சல் அடைந்தவன் கதிரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தானும் கிளம்பினான்.

வழியெல்லாம் தொழிற்களையும், சிக்கல்களையும், திவ்யாவையும் பற்றி மாற்றி மாற்றிச் சிந்தித்தவன் காரை செலுத்துவதில் கவனத்தைச் செலுத்தாமல் இருக்க, ஒரு திருப்பத்தில் எதிரில் வந்த லாரியை கவனியாமல் வேகமாகக் காரைத் திருப்பியவன் சட்டென்று சுதாரித்துக் காரை இடப் பக்கமாகத் திருப்ப, கார் எதிலோ இடித்ததும்...

"ஐயோ' என்ற அலறல் சத்தத்தைக் கேட்டு காரை சடாரென்று ப்ரேக் போட்டு நிறுத்தினான்......

அங்கு இருந்த சிறிய டீ கடையின் வாசலில் போட்டிருந்த பெஞ்சில் கார் இடித்து நிற்க,

அதில் உட்கார்ந்திருந்த ஒருவன் மேல் சிறிதே அடிப்பட்டாலும் தன் உயிரே போய்விட்டது போல் கத்தினான் அவன்.... அவன் அலறும் சத்தம் கார் அவனை இடிக்கும் போது வரவில்லை....

இடித்துச் சில நிமிடங்கள் கழித்தே அவன் கத்தினான்...

பின் கார் இடிக்கும் பொழுதோ அல்லது அடுத்தச் சில நிமிடங்களோ அவன் காரைப் பார்க்கவே இல்லையே....

ஆனால் பார்த்தவுடன் தான் தெரிந்தது தன்னை இடித்தது பல கோடிகள் பெறும் வெளி நாட்டுக் கார் என்று...

இது போன்ற சந்தர்ப்பம் அவனுக்கு இனி எப்பொழுது கிடைக்குமோ???

"குய்யோ! முய்யோ!" என்று அவன் கத்த, உலகத்தில் வேறு பிரச்சனைகளே இல்லை, இது தான் தங்களுக்கு ரொம்பவும் முக்கியம் என்பது போல் அது வரை வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த சின்ன வாகனங்களும், பொது மக்களும் வேடிக்கை பார்க்க கூட,

அர்ஜூனிற்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது....

இருக்கும் பிரச்சனைகளில் இது வேற தேவை இல்லாமல் என்று....

கடுங்கோபத்துடன் காரில் இருந்து புயல் போல் இறங்கியவன் அவன் இன்னும் கத்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் நெருங்கி....

"கத்துனது போதும்.... என் கூட வா... நானே பெரிய ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு போறேன்" என்றான்...

ஏனெனில் வண்டி ஓட்டுபவனுக்குத் தெரியாதா தான் எதன் மீது எந்த அளவிற்கு மோதினோம் என்று.... அதுவும் அர்ஜூனிற்கு நன்றாகத் தெரியும் அந்த ஆள் எதற்கு இந்த அளவிற்குக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறான் என்று.

கண்டிப்பாக இது பணத்திற்குத் தான்... ஆனால் உடனே பணத்தை எடுத்து நீட்டினால் இந்தப் பிரச்சனை இப்பொழுது முடியாது....

அதனால் எடுத்தவுடன் "நான் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு போறேன்" என்று சொன்னால் தன் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று நிச்சயம் அவன் உடனே இறங்கி வருவான் என்று நினைத்தவன் மருத்துவமனைக்கு அழைக்க,

சுதாரித்த அந்த ஆள்,

"அதெல்லாம் நீ ஒன்னும் கூட்டிட்டுப் போக வேண்டாம்.... நானே போய்க்கிறேன்" என்றான்...

சட்டென்று தன்னுடைய வாலட்டில் இருந்து அர்ஜூன் பணத்தை எடுத்து கொடுக்க, வாழ்நாளில் இவ்வளவு பணத்தை முதல் முறையாகப் பார்ப்பவன் போலும்..

வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு பணத்தை வாங்கியவன்,

"பாத்துப் போ சார்... வேற எங்காவது மறுபடியும் போய் இடிச்சிட போறே" என்று இலவசமாக ஒரு அறிவுரையும் கொடுத்துவிட்டே போனான்.

ஏற்கனவே தன் மனைவியின் மேல் இருந்த காதல் பலிக்காதது போல் தோன்றியதில் குறிப்பார்த்து ஈட்டியால் குத்தி கிழிக்கப்பட்ட இதயத்தைச் சமன்படுத்த முடியாமல் சுயநினைவை அடியோடு இழக்கும் நிலைக்கு உலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது அவன் உள்ளம்...

இதில் இந்த மோதலும் அதற்கு அந்த ஆளின் காட்டுக் கத்தலும் கபட நாடகமும் அர்ஜூனின் ஆத்திரத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தது...

மேற்கொண்டு அவனின் இளிப்பு வேறு எரிச்சலை கிளப்ப...

"இருந்த தலைவலியில் இப்ப இது வேற!" என்று நினைத்த அர்ஜூன் முன்பை விட விரைவாகக் காரை செலுத்த,

நேற்றைப் போல் இன்று இரவும் தன் கணவன் மது அருந்தி வருவானோ என்று நினைத்துக் கொண்டு திவ்யா கலங்கி இருக்கப் புயலென உக்கிரத்துடன் உள்ளே நுழைந்தான் அர்ஜூன்....

மனம் நாடிய பொருள் தன் கைகளுக்கு எட்டாமல் அதனை இழந்தவனின் மனம் பெரும் புயலாகிறது...

அந்தப் புயல் நால் திசைகளில் நிற்கும் திடமான அரண்களை உராய்ந்து செல்லும் பொழுதே அனைத்தையும் பெரும் இரைச்சலோடு மோதி அடித்து வேரோடு சாய்த்துவிடுகிறது....

வலிமை வாய்ந்தவைகளையே அது காணாமல் செய்கிற பொழுது அந்தச் சூறாவளியை எதிர்த்து நிற்பது சின்னஞ்சிறு பூங்கொடியில் அரும்பியிருந்த மலரை விட மென்மையான மனதுடையவளுக்கு அத்தனை சுலபமல்ல..

தொடரும்..




 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top