JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 19 & 20

JB

Administrator
Staff member
அத்தியாயம் -19

வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோரையும், மற்றும் அருண், மஹாவைப் பார்த்தவன் அவர்களுடன் பேசாமல் மாடிக்கு ஏற, அவனின் கலைந்த தோற்றத்தையும் களைத்த முகத்தையும் பார்த்த பாலா தான் அவனை அழைத்தார்....

"அர்ஜூன், இங்க வந்து கொஞ்சம் உட்காருப்பா..... உன்னுடன் கொஞ்சம் பேசனும்"

தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏறிக் கொண்டிருந்தவன் அவரின் அழைப்பில் திரும்பி பார்த்து....

"டாட்.... ஐ ஆம் வெரி டயர்ட் டுடே... ஷேல் வி டாக் லேட்டர் [I am very today, shall we talk later?] " என்ற மகனை வாஞ்சையுடன் பார்த்த ஸ்ரீ,

"கொஞ்சம் நேரம் இங்க உட்கார் அர்ஜூன்" என்றார்.....

ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் நடக்க இருக்கும் களேபரம் தெரியாமல்.....

தன் அன்னை சொன்னதும் மறுக்க முடியாமல் மெதுவே கீழ் இறங்கி வந்தவன் தொப்பென்று ஸோஃபாவில் சாய்ந்து அமர, அவன் அமர்ந்த விதத்திலேயே ஸ்ரீக்கு தெரிந்து போனது தங்கள் மகனின் களைப்பும், அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளும்.....

அமர்ந்தவன் எதுவும் பேசாமல் தலையைப் பிடித்தவாறே ஸோஃபாவில் சாய்ந்து இருக்க, ஒரு அன்னையாக மகனின் மன சஞ்சலத்தையும், வேதனையும் அறிந்தவருக்கு உள்ளம் கலங்கி போனது....

அவருக்குத் தெரியும் அர்ஜூனின் இப்பொழுதைய நிலைமை அவனின் தொழிற்களினால் வந்தது இல்லை என்று....

அவனை அறியாமலேயே அவன் மனமும் புத்தியும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அடிப்பட்டுத் தோற்றுவிட்டதாகப் போட்டிப் போட்டுக் கொண்டு அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதனை அவரும் ஆழ்ந்து உணர்ந்திருந்தார்...

பின் இந்த உலகத்திலேயே அர்ஜூனை நன்கு புரிந்துக் கொண்டவர், அவனின் ஒவ்வொரு செயல்களுக்கும், பார்வைக்கும், சொல்லிற்கும் முழுமையான, உண்மையான அர்த்தங்களை உணர்ந்து இருப்பவர் அவர் ஒருவரே அல்லவா!!!!

அவருக்குத் தெரியாதா இந்த நிமிடத்தில் அவனின் அடி மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் என்னெவென்பது....

அவனின் கஷ்டத்தை உணர்ந்த ஸ்ரீ சமையல் அறையின் பக்கம் திரும்பி...

"அல்லி, கொஞ்சம் டீ போட்டுக் கொண்டு வாம்மா" என்றார்....

திவ்யா சமையல் அறைக்குள் அல்லியோடு தான் இருந்தாள்...

ஆனால் அர்ஜூன் இருக்கும் இந்த நிலைமையில், விவாகரத்து பற்றி வேறு அவன் பேசி இருக்கும் இந்த நாளில் திவ்யா அவன் முன் வந்தால் நிச்சயம் ஏற்கனவே வெம்பி போய் வேதனையில் இருக்கும் அந்தச் சின்னப் பெண்ணை ஈட்டி போன்ற வார்த்தைகளில் குத்தி கிழித்துவிடுவான் என்று தான் அவர் திவ்யாவை அழைக்காமல் அல்லியை அழைத்திருந்தார்.....

ஆனால் விதியுடன் போட்டியிட்டு யாரால் ஜெயிக்க முடியும்?? விதி முழுப் பலத்துடன் திவ்யாவின் வாழ்க்கையில் அவளுடன்
போராடத் துவங்கியிருந்தது....

ஸ்ரீ அழைக்கும் பொழுது அல்லி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்ததால், திவ்யாவைத் திரும்பி பார்க்க....

"நீ வேலையைப் பாரு அல்லி.... நான் கொண்டு போறேன்" என்றவள் தன் மாமியார் தன் கணவனுக்குத் தான் தேநீர் போட சொல்கிறார் என்று தெரியாமல் "இந்நேரத்தில், இராத்திரி சாப்பிடற நேரத்தில் எதற்கு டீ?" என்று யோசித்தவள் காலையில் இருந்து ஸ்ரீயின் முகம் சரியில்லாததால் அவருக்காகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தேநீர் போட துவங்கினாள்...

முதலில் தன் மாமியாருக்கு மட்டும் போட ஆரம்பித்தவள் பின்னர் எதற்கும் இருக்கட்டுமே என்று மாமனாருக்கும், கொழுந்தனாருக்கும் சேர்த்து தேநீர் தயாரித்தவள் ஒரு தட்டில் தேநீர் கோப்பைகளை வைத்து எடுத்து வர அப்பொழுது தான் கவனித்தாள் தன் கணவன் அங்கு அமர்ந்திருப்பதை...

கடந்த சில வாரங்களாகத் திவ்யாவின் பெயரைக் கேட்டாலே மகிழ்ச்சியில் தத்தளித்த அவனது காதல் மனது, திவ்யாவின் கொலுசுகளின் கீர்த்தனைகளைக் கேட்டாலே அதன் இசையில் கட்டவிழ்த்து சிலிர்த்து எழுந்த உணர்வுகள், அவளின் எழில் முகத்தைக் கண்டதும் விழிகளிலும் இதயத்திலும் புரண்டு எழுந்திருந்த பரவசம்....

அத்தனையும் இன்று அவளைத் தேநீர் கோப்பைகளுடன் கண்டப் பொழுது சென்ற இடம் தெரியாமல் காணாமல் போனது....

அவளைப் பார்த்த அந்த விநாடி கோபத்தில் உடல் சிலிர்க்க, எந்நேரமும் வெடிக்கும் அக்கினி மலையின் நிலையில் இருந்த மனதை தன்னால் முடிந்த மட்டும் கட்டுக்குள் வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.....

இத்தனைக்கும் அவள் அப்படி ஒன்றும் தவறு செய்துவிடவில்லை....

ஆனால் அர்ஜுனின் சூழ்நிலை, அவனுக்கு இன்றும் நேற்றும் அலுவலகத்தில் நடந்திருந்த தடங்கல்கள், எப்பொழுதுமே ஒரு அளவோடு பார்ட்டி போன்ற நேரங்களில் மது அருந்தி பழகியிருந்தவன் நேற்று விடிய விடிய அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததால் தலையே வெடித்துவிடும் அளவிற்கு இருந்த வலி....

இதில் தன் மனைவியின் ஒதுக்கமும் அவமதிப்பும் போட்டிப்போட்டிக் கொண்டு அவனை உலுக்கி எடுக்கச் சீற்றம் அவன் கண்களை மறைத்து இருந்தது.....

அர்ஜூனின் மன நிலை இவ்வாறு இருந்தது என்றால் திவ்யாவின் நிலைமையோ சொற்களுக்கு அப்பாற்பட்டு இருந்தது...

மாமியார், மாமனார் மற்றும் கொழுந்தனாரை மட்டும் எதிர்பார்த்திருந்தவளுக்குத் தன் கணவனையும் அங்குக் கண்டதும் சொல்லி வைத்தார் போல உடல் முழுவதும் உதறலெடுக்க ஆரம்பித்தது...

இதில் அவன் தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் தெரிந்த மாற்றமும், ருத்ரமும் அவளின் கால்களை மரத்துப் போகச் செய்யச் சில விநாடிகள் நின்ற இடத்திலேயே நிற்க அவளின் தடுமாற்றத்தைக் கண்டவன் "ம்ப்ச்" என்று சலித்துக் கொண்டு தன் இடது கையை ஸோஃபாவின் கைப்பிடியில் ஊன்றியிருந்தவாறே மேலும் தலையை அழுத்தி பிடித்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டான்...

கணவனின் இந்தச் செய்கையில் அவன் மனதில் குடியிருந்த வெறுப்பின் உயரம் தெரிய பரிதாபமாக ஸ்ரீயைத் திரும்பி பார்க்க அவளின் நிலையை உணர்ந்தவர் "வா" என்பது போல் தலை அசைத்தார்....

"வேறு வழியில்லை.... கொண்டு வந்த டீயை அவர்களுக்குக் கொடுத்து தான் ஆக வேண்டும்... ஆனால் கால்கள் மரத்துப் போய், கைகள் வேறு இந்த நடுங்கு நடுங்குகிறதே... இதில் கீழே போடாமல் டீயை அவரிடம் கொடுக்க வேண்டுமே" என்ற எண்ணம் வர, அந்த எண்ணமே அவள் கைகளின் நடுக்கத்தை மேலும் அதிகரித்தது....

மனதில் இருந்த கலக்கத்தையும் மீறி கால்களின் தடுமாற்றத்தை சிரமத்துடன் மறைக்க முயற்சி செய்தவாறே மெல்ல நடந்து வந்தவள் அர்ஜூனின் அருகில் வரும் பொழுது விதி தன் கரத்தை அழுத்தமாக அவளின் மேல் பதித்தது போல் சரியாக அவளின் புடவை தடுக்க, அப்படியே வைத்திருந்த தேநீர் தட்டை அவன் மீது தவற விட்டாள் இந்த நிமிடத்தில் அவன் மனதில் வெறுப்பை மட்டுமே கிளறியிருந்த அவன் மனைவி....

ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளம், சமாதானமற்ற புத்தி, உள்ளே எழுந்த உணர்ச்சிகளின் விளைவாக உள்ளூர அவமானத்தால் குன்றிக் கொண்டிருந்த மனம் இதில் சூடான தேநீர் வேறு ஊற்றியதால் இகழ்ச்சியும் ஆத்திரமும் கலந்த பார்வையை ஒரு விநாடி அவள் மீது வீசியவன் தன் பொறுமையை இழந்து தன்னிலை மறந்தான்....

திவ்யா தேநீரை அவன் மீது தவறவிட்ட அந்த விநாடியே ஸ்ரீயும் மற்றவர்களும் ஸோஃபாவில் இருந்து எழுந்திருக்க, அதற்குள் "பளார்" என்ற சத்தம் மட்டும் கேட்டது....

இடி இறங்கியது போல் அர்ஜூனின் கை திவ்யாவின் கன்னத்தைப் பதம் பார்க்க, விழுந்த அறையில் தளிர் மேனியவள் நிலைத் தடுமாறி கன்னத்தைப் பிடித்துக் கொண்டே தொப்பென்று அருகில் இருந்த ஸோஃபாவில் விழுந்தாள்.

சத்தத்தில் அல்லியும் சமையல் அறையில் இருந்து வெளிவந்து எட்டிப் பார்க்க, அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் திவ்யா உட்பட நடந்து முடிந்த சம்பவம் புரிய ஒரு சில விநாடிகள் பிடித்தது...

புரிந்ததும் அவனின் வலுவான கரத்தின் பலத்தால் கன்னம் விண்விண்ணென்று வலிக்க, தன் மாமனார், கொழுந்தனார் முன் தன் கணவன் தன்னை அறைந்ததைத் தாங்க இயலாதவளாக விழிகளில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க, மேனி நடுங்க தலை குனிந்து அமர்ந்திருந்தவளுக்கு, தன் பாதத்தின் அடியில் இருந்த பூமி அப்படியே தன்னை உள்ளிழுத்துக் கொள்ளாதா என்றிருந்தது.....

தன் மீது என்ன தான் தவறு இருந்தாலும் அதற்காக இப்படியா? அதுவும் இத்தனை பேருக்கு முன்னா? என்று ஸ்தம்பித்துச் சிலையென அமர்ந்திருந்தவள் அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் தன் அறைக்குப் போக எத்தனிக்க....

"எங்கடி போற?" என்று சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அவளின் கால்களை இறுக்கக் கட்டி வைத்தது போல் அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்க விடவில்லை.....

அதிர்ச்சியான இந்த நிகழ்வு நடந்து சில நிமிடங்கள் ஆன நிலையில் நிலைமையின் விபரீதம் புரிந்த ஸ்ரீ...

"அர்ஜூன், என்ன இது? மிருகத்தனமா நடந்துக்கிற!!!" என்று கத்த....

அர்ஜூனின் வாயில் இருந்த வந்த அந்த அதிர்ச்சிகரமான சொற்கள் திவ்யாவை மூர்ச்சையுற்று மயங்கிப் போகும் நிலைக்குக் கொண்டு சென்றது....

"மாம்.... இதெல்லாம் உங்களால வந்தது..... உங்க ஃப்ரெண்ட் பொண்ணுன்ன உடனே என் வாழ்க்கை பாழானாலும் பரவாயில்லை என்று இதோ, இவளுக்கு வாழ்க்கை கொடுக்கனும்னு யோசிச்சீங்களே..... கொஞ்சமாவது என்னைப் பத்தி யோசிச்சீங்களா? இவள கட்டிக்கிற அளவுக்கு அப்படி என்ன என் ஸ்டேட்டஸ் தாழ்ந்து போயிடுச்சு..... இவளுக்கும் கோடிஸ்வர மாப்பிள்ளைக் கிடைச்சதும் தாலி கட்ட வந்தவன் விட்டுட்டு போன வருத்தம் கூட இல்லாமல் உடனே என்னைய கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சுட்டா... இதுவே ஒரு வேளை நான் இவ்வளவு வசதியா இல்லாமல் இருந்தா என் கையால தாலி வாங்க சம்மதிச்சு இருப்பாளா?" என்று ஏதோ எரிமலைக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பும் அக்கினித் துண்டுகளைப் போலவே வெளிவந்தன அவன் உதிர்த்த ஒவ்வொரு சொற்களும்....

நெஞ்சை பிளக்கும் வார்த்தைகளை அவன் உதிர்த்த பொழுது உடல் ஒரு முறை உணர்ச்சியால் நடுங்க, அதிர்ச்சி தரும் அவனின் வார்த்தைகள் சத்தமில்லாத மின்னல் போன்று மௌனமாக அவளின் மெல்லிய உள்ளத்தில் குத்தி இறங்க, அவன் கன்னத்தில் அறைந்ததே தெறித்து வலித்துக் கொண்டிருக்க, இப்பொழுது வார்த்தைகளால் மலரினும் மெல்லியவளின் பூப் போன்ற இதயத்தை ரணமாக்கிக் கொண்டிருந்தான் அவளின் காதல் கணவன்....

சரமாரியாய் தாக்கிய அவனின் வார்த்தை தாக்குதலில் உள்ளமும் உடலும் அடிப்பட்ட புழுவைப் போல் துடித்தவளின் கண்களில் மட்டும் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது....

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழியைப் போல் பிடித்தமில்லாமலேயே தாலியில் மூன்றாவது முடிச்சையும் தானே போட்டு தன் வாழ்க்கையைச் சரி பாதியாகப் பிரித்துக் கொடுத்த அவள் கணவன் தன் இதயத் துடிப்பே தன் மனையாள் தான் என்று இந்த நிமிடம் உணராமல் அவளைத் துடிக்க வைத்தான் மேலும் அவன் கக்கிய அனலைப் போன்ற வார்த்தைகளால்....

"வேலைக்காரியா வச்சுக்க வேண்டியவள எனக்குச் சமமா நினைச்சு மருமகளா கொண்டு வந்தீங்க... என்னோட தகுதிக்கு உங்களால இவளத் தான் என்னோட மனைவியா கொண்டு வர முடிஞ்சுதா? அப்படி நான் என்ன தரம் தாழ்ந்து போய்ட்டேன்..... எத்தனை தடவை சொன்னேன்... இந்தக் கல்யாணம் வேண்டாம் வீட்டுக்கு போயிடலாம்னு... கேட்டீங்களா? இவள் இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சதிலிருந்து என்னோட நிம்மதி பறிப்போயிடுச்சு.... இனியும் இவ இங்க இருந்தான்னா அப்புறம் நீங்க என்னைய மறந்து விட வேண்டியது தான்.... அருண் உங்க எல்லாப் பிஸினஸையும் பார்த்துக்கட்டும்.... என்னைய ஆள விட்டுருங்க" என்றவன் திரும்பியும் பார்க்காமல் மாடிப்படியின் அருகில் நின்றிருந்தவளின் மீது எங்குத் தன் உடல் உரச நேரிடுமோ என்பது போல் ஒதுங்கி படிகளில் ஏறியவன் அந்த வீடே அதிரும்படி படாரென்று தன் அறைக் கதவை சாத்தினான்.

அவன் சென்று விட்டான்... ஆனால் அவனின் கொடிய பாம்பின் விஷம் போன்ற வார்த்தைகள் இன்னும் அங்கு எதிரொலித்துக் கொண்டே இருப்பது போல் இருந்தது திவ்யாவிற்கு......

உணர்ச்சி அற்ற கல்லாகச் சிறிது நேரம் படிகளின் அருகில் நின்றிருந்தவளுக்கு மூச்சு அடைத்து மயங்கி விழுந்துவிடுவது போல் இருக்க, எதுவும் சொல்லாமல் தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏற...

"திவ்யா, ப்ளீஸ் டா... கொஞ்சம் இரு.... போகாத..." என்று தடுத்த ஸ்ரீயின் வார்த்தைகளில் அவள் நடை நின்றது...

அவளின் அருகே வந்தவர்....

"திவ்யா..... அவன் ஏதோ கோபத்தில பேசிட்டான்... அவனுக்கு உன் மேல கோபம் இல்லைடா... இரண்டு நாளா ஆஃபிஸில் அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனை... அதத் தான் இப்படி உன் கிட்ட காட்டிட்டு போய்ட்டான்" என்று அவர் சொன்ன வார்த்தைகளில் எதுவுமே அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.....

அவரைத் திரும்பி பார்த்தவளின் கண்களில் வலிக்க வலிக்கத் தன் கணவன் வார்த்தைகளால் தன் இதயத்தில் அடித்த வலியே தெரிந்தது... அத்தனை துக்கத்திலும் ஒரு விரக்தி புன்னகை மட்டுமே சிந்தியவள் மெதுவே படிகளில் ஏறி தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்....

ஸ்ரீக்கும் தெரியும் அவளின் புன்சிரிப்பு அவள் புறத்தில் பட்ட வலியினால் வந்த வேதனையால் அல்ல, அவளது இதயத்தின் பட்ட வலியினால் வந்தது என்று....

அவளின் கலங்கிய முகமும் நீர் நிறைந்த பார்வையும் தன்னை ஏதோ குற்றம் சாட்டுவது போல் உணர்த்த முதன் முறையாகத் தான் செய்தது தவறோ என்று ஸ்ரீ துடித்து உணர்ந்த அந்த நொடி அவரின் நெஞ்சில் நெருஞ்சி முள் போல் எதுவோ சுருக்கென்று குத்தியது...

இந்தத் திருமணம் எதிர்பாராத விதமாக நடந்திருந்தாலும் எப்படியும் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் வரும்... இருவரும் மகிழ்ச்சியாக வாழப் போகிறார்கள் என்று அவர் கட்டியிருந்த கனவுக் கோட்டை தன் கண்முன்னே தரை மட்டமாகி கொண்டு இருப்பதைக் கண்டவரின் இதயத்தில் தாங்கமுடியாத ஒரு வலி தோன்றியது....

ஏற்கனவே அர்ஜூனின் அராஜகத்தாலும் கொடிய வார்த்தைகளாலும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அருணும், பாலாவும், மஹாவும் அதுவரை எதற்கும் கலங்காத, சாமான்யமாக எந்த விஷயத்திற்கும் மனம் நெகிழாதவரான ஸ்ரீயின் கண்களிலும் நீரித்துளிகள் பளபளத்ததைக் கண்டு கலங்கி போயினர்...

ஒருவருக்கும் இரவு உணவு அருந்த கூடத் தோன்றாமல் அவரவர்களின் அறைக்குச் செல்ல, தன் அறைக்கு வந்த ஸ்ரீ தன் கணவரிடம் கூடப் பேசாமல் அமைதியாக இருந்தவர் தலை சாய்ந்து தலையணையில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்...

மனைவியின் இந்த அமைதி பாலாவிற்கு அச்சத்தையே கிளறியது....

ஸ்ரீயின் அருகில் அமர்ந்தவர்,

"என்னம்மா.... என்னாச்சு?" எனவும்,

கண்களைத் திறந்துப் பார்த்தவர்,

"நான் தப்பு பண்ணிட்டேங்க.... இரண்டு சின்னச் சிறுசுங்க வாழ்க்கைய வீணாக்கிட்டேன்…" என்றார் கலங்கிய கண்களுடன்...

அவரைத் தன் தோளில் சாய்த்துக் கொண்ட பாலா,

"இல்லம்மா, நீ ஒன்னும் தப்பு பண்ணலை.... நீ திவ்யாவிடம் சொன்ன மாதிரி இரண்டு நாளா அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்... அவன் பிஸினஸில் எத்தனையோ பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணியிருக்கான்... அத கொஞ்சம் கூடப் பயமோ தயக்கமோ இல்லாமல் தனியாளா நின்னு சரி பண்ணியிருக்கான்.... ஆனால் அந்த மாதிரி நேரங்களில் அவன் சில சமயம் வீட்டிற்கே கூட வராமல் இருந்திருக்கான்.... அது உனக்கே தெரியும்... அப்படியே வந்தாலும் அவன் தனிமையில் தானே இருப்பான்.... பிரச்சனைகளை யார்கிட்டேயும் ஷேர் பண்ணாம தானே தீர்க்கப் பார்ப்பான்... அது தானே நம்ம அர்ஜூன்? இன்னைக்கு ஏதோ மனைவிங்கிற உரிமையில திவ்யாவிடம் தன் கோபத்தைக் காட்டிட்டான்... நான் நாளைக்கு அவனிடம் பேசிறேன்... அவன் எல்லாவற்றையும் தன் தோளில் தானே சுமக்கனும்னு அவசியம் இல்லை.... நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்.... நீ மனச போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் படுத்து தூங்கு…" என்று சொன்னவர்,

தன் மனைவியின் தலையைக் கோதி விட, கண்களை மூடியிருந்த ஸ்ரீயின் நினைவில் அதிர்ந்த முகத்துடனும், சொல்லொண்ணா வலியுடனும், ஊற்றாகப் பெருக்கெடுத்த நீருடனும் திவ்யா அவரைப் பார்த்திருந்த காட்சியே அலை போல் வந்து கொண்டிருந்தது.

அங்குத் தன் அறைக்கு வந்த திவ்யாவிற்கோ தன் கணவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பேரொலியாகச் செவிகளில் கேட்டு அவளின் மென்மையான இதயத்தை நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கி கொண்டிருந்தது...

அவனின் தேள் கொட்டிய வார்த்தைகளில்....

"நான் வசதியாக இருந்ததால் தான் என்னைத் திருமணம் செய்துகொண்டாயோ?" என்ற கேள்வியும்,

"வீட்டில் வேலைக்காரியாக இருக்க வேண்டியவள்.... என் தகுதிக்குக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாதவள்" என்ற வார்த்தைகளும் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, மஹா அறைக்குள் நுழையவும் சட்டென்று குளியல் அறைக்குள் சென்றவள் வாயை இறுக்க மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.....

திவ்யாவின் நிலைமையை நன்கு புரிந்து கொண்ட மஹாவும் அவளைத் தொந்தரவு செய்யாமல் அவளின் வரவிற்காகக் காத்திருக்க நீண்ட நேரம் சென்று குளியல் அறையில் இருந்து வெளியே வந்த அண்ணியைப் பரிதாபமாகப் பார்த்தவள் அவளிடம் கேள்வி எதுவும் கேட்காமல், பேச்சும் கொடுக்காமல் படுத்துக் கொண்டாள்..

தன் அருகே தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த திவ்யாவின் உடல் அழுகையால் குலுங்கியதைக் கண்டவளுக்கு இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது...

ஏனெனில் திவ்யா அந்த வீட்டிற்கு வந்திருந்த இந்த ஐந்து ஆறு மாதங்களில் அத்தனை பேருடைய மனதையும் தன் அன்பாலும், அமைதியான குணத்தாலும் அவ்வளவு கவர்ந்திருந்தாள்....

அது நாள் வரை பெண் வாசமே என்ன என்று அறியாதிருந்த, முழுவதும் கல்லைப் போல் இரும்பாயிருந்த அவளின் கணவனின் இதயத்தை உட்பட....

இரவு முழுவதும் உறங்காமல் மௌனமான அழுகையில் கரைந்துக் கொண்டிருந்தவள் விடிந்ததும் வழக்கம் போல் எழுந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வாசலில் கோலம் போட்டு முடித்து, காலை உணவு செய்யச் சமையல் அறைக்குள் நுழைந்தவள் அதற்குப் பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரவில்லை...

காலை உணவை உண்ண அர்ஜூனைத் தவிர மற்ற அனைவரும் டைனிங் டேபிளுக்கு வந்த பிறகும் கூட அனைத்தையும் ஸ்ரீயிடம் கொடுத்துவிட்டாளே தவிர அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் வெளியில் வர மறுத்துவிட்டாள்...

ஒரு வழியாக அருணும் மஹாவும் கல்லூரிக்கு கிளம்பிச் செல்ல அர்ஜூன் வேகமாகக் கீழே இறங்கி வந்தவன் ஒருவர் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் காலை உணவும் அருந்தாமல் விறுவிறுவென்று வெளியில் சென்றவன் தன் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான்....

இரவு நடந்திருந்த களேபரத்திற்குப் பிறகு வெகு நேரம் வரை உறங்காமல் விழித்திருந்த பாலா காலை அர்ஜூனிடம் எப்படியும் இதனைப் பற்றிப் பேசிவிட வேண்டும், திவ்யா அர்ஜூன் பிரச்சனைக்கு ஒரு தந்தையாக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று காத்திருந்தவருக்கு அவன் அதிவேகமாகக் கீழே வந்த வேகத்திலேயே தன் காரில் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் மனம் கசந்தது.....

ஸ்ரீயோ அல்லது தானோ இதில் நிச்சயம் தலையிட வேண்டும்... பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவருக்கு அவன் சொல்லாமல் சென்று விட்டது வருத்தத்தையே தர, அவர் ஸ்ரீயிடம் அர்ஜூனை அவனுடைய அலுவலகத்திலேயே போய்ச் சந்திப்பதாகக் கூறினார்....

ஒரு வழியாகத் தன் மாமியாரைத் தவிர வீட்டினர் அனைவரும் வெளியே சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட திவ்யா தன் அறைக்கு வந்தவள் பாரமான இதயத்துடனும், தளர்ந்த மனதுடனும் இனி தன் திருமண வாழ்க்கைக்கு விமோச்சனமில்லை என்று தீர்மானித்து அந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தாள்.


பிரியுமுள்ள அத்தைக்குத் திவ்யா எழுதிக் கொள்வது.


இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முதலில் நீங்கள் என்னை மன்னிக்கவும்.... என் அம்மா ஸ்தானத்தில் இருக்கும் உங்களிடம் நான் சொல்லிவிட்டு சென்று இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்... ஆனால் நான் சொல்லியிருந்தால் நிச்சயம் நீங்கள் என்னைப் போகவிட்டு இருக்க மாட்டீர்கள்.... அதனால் வேறு வழியில்லாமல் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நேற்று நடந்ததற்காக நான் இந்த வீட்டையோ, அல்லது உங்களையோ விட்டு செல்லவில்லை.... என் கணவருக்கு என்னிடம் கோபப்பட முழு உரிமை இருக்கிறது... ஆனால் அவருக்கு மனைவியாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதா? என்ற கேள்வியே என்னை வெளியே செல்ல தூண்டியது.

அவர் சொன்னது போல் அவருக்கு வேலைக்காரியாக இருக்கக் கூடத் தகுதியில்லாதவள் மனைவியாக இருக்க ஆசைப்படலாமா? அவருக்கும் ஒரு வேலைக்காரி கழுத்தில் தாலி கட்டிவிட்டோமே என்ற எண்ணமே அவரின் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும்.... நான் எந்த ஜென்மத்தில் யாருக்கு செய்த பாவமோ, மணமேடை வரை வந்தவர் தாலி கட்டாமல் விட்டுச் சென்றார்.

இனி தெரிந்தும் நான் பாவம் செய்ய விரும்பவில்லை.... என்னால் இனி உங்கள் மகனுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது.... நான் அவரின் பாதையை விட்டு விலகி செல்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் அவருக்குப் புரிய வைக்க விரும்புகிறேன்... வாழ்க்கையில் அன்று தான் உங்கள் மகனை முதல் முதலில் பார்த்தேன்.... ஏற்கனவே திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் தற்கொலை வரை போனவளுக்கு அவர் வசதியானவரா? அவருக்கு நான் தகுதியானவளா? என்று பார்க்க தெளிவான மனநிலையோ சிந்தனையோ இல்லை.

என் அம்மாவின் முகத்தில், நான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பே இருந்தது.... அதுவே தான் என்னை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவும் வைத்தது.

ஆனால் அப்பொழுது உங்கள் மகனைப் பற்றிய எண்ணமோ, அவரது அந்தஸ்தோ, இல்லை அவர் எப்படிப் பட்டவர், நான் அவருக்குத் தகுதியானவளா என்று எண்ணங்களோ எனக்கு இல்லை.... ஒரு வேளை நான் அவருடைய இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்திருந்தால், நிச்சயம் இந்தத் திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவித்து இருக்க மாட்டேன்.

ஒரு நல்ல பெற்றோருக்கு தன் பெண் வசதியான வீட்டில் வாழ்க்கைப் பட வேண்டும் என்ற ஆசையை விட அவள் தன் புகுந்த வீட்டில் எல்லோருடனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமே இருக்கும்.

அதுவும் உங்கள் தோழியைப் பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.... நான் கலா வளர்த்த பெண்.... ஏழை தான், படிக்காத கிராமத்துப் பெண் தான், ஆனால் என்றுமே பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவள் கிடையாது.

எந்த நிமிடத்தில் என் கழுத்தில் அவர் தாலி கட்டினாரோ அன்றே இது என் குடும்பம், அவர் என் கணவர் என்று தான் நினைத்திருந்தேன்.... ஆனால் அன்றே அவர் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை.

இனி ஒரே வீட்டில் அவருடன் இருந்து அவரின் நிம்மதியை நான் மேலும் கெடுக்க விரும்பவில்லை.... அதே போல் அவருடைய வாழ்க்கையில் இருந்து நான் விலகுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்யட்டும்.

அவர் சொன்னது போல் விவாகரத்திற்கு நான் முழுமனதுடன் சம்மதிக்கிறேன்... எங்கு, எப்பொழுது கையெழுத்து போட வேண்டுமோ அங்கு நான் கையெழுத்துப் போடுகிறேன்.

நிச்சயம் அவருக்குப் பிடித்தது போல் அவருடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றார் போல் அவருக்குப் பெண் கிடைத்து அவர் சந்தோஷமாக வாழ வேண்டும்.


இப்படிக்கு உங்களைப் பிரிய மனமில்லாமல் பிரியும்,

உங்கள் மகள் திவ்யா.

நடுங்கும் விரல்களுடன் கடிதத்தை எழுதி முடித்தவள் ஆறாகப் பெருக்கெடுத்த விழி நீரை துடைத்துக் கொண்டு முடிந்த அளவு பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்...

"நான் வெளியே செல்வது என் கணவரைத் தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கும்.... சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியதினால் என் மீது வெறுப்பு கூட வரும்... ஆனால் அதற்காக இனியும் அவருக்கு நான் தொல்லை கொடுக்க விரும்பவில்லை.... அதிலும் அம்மாவிற்கு நான் அத்தையிடம் சொல்லாமல் வந்துவிட்டேன் என்று தெரிந்தால் நிச்சயம் பேரதிர்ச்சியாகவும் கோபமாகவும் இருக்கும்"

என்று மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் பின்னோக்கி சென்று தன் திருமண நாளில் வந்து நின்றது...

"என்னுடைய வாழ்க்கையில் ஏன் அப்படி ஒரு நாள் வந்தது? நான் என் அம்மா, அப்பா, அண்ணா என்று இருந்திருக்கக் கூடாதா? ஏன் என் கண்முன்னே அவரைக் கொண்டு வந்தது விதி? ஏன் என் கழுத்தில் தாலி கட்ட வைத்தது? இப்பொழுது என் மீது ஏன் இந்த அளவிற்கு வெறுப்பு வந்தது?" என்று நெஞ்சு உடைந்துவிடும் அளவிற்குச் சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு எவ்வளவு முயன்றும் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை...

விம்மி அழுதவள் முடிவில் உணர்ச்சி மிகுதியால் மூர்ச்சித்து விழும் அளவிற்கு மூச்சை அடைக்க ஆரம்பிக்க இனி ஒரு நொடி நேரம் கூட இங்கு இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தவள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு முகத்தைக் கழுவி வேறு புடவை அணிந்து கீழே எட்டிப் பார்க்க, அங்கு ஒருவரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டவள் மெதுவே இறங்கி வந்தாள்...

ஸ்ரீ அவர் அறையில் படுத்திருக்க, அல்லியும் தெய்வானையும் சமையல் அறையினுள் இருக்க, வீட்டில் நிலவிய நிசப்தமான சூழ்நிலை வேறு அவளின் திகிலை அதிகப்படுத்த கையில் இருந்த கடிதத்தை ஹாலில் போடப்பட்டிருந்த மேஜையில் வைத்தவள் வெளியே ட்ரைவர் முருகனோ அல்லது தோட்டக்காரர்களோ யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு விடுவிடுவென்று சத்தம் இல்லாமல் வெளியேறினாள்...

வாயிலைத் தாண்டவும் அவளின் அழகிய கோலம் அவளைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பது போல் தோன்றியது....

அங்குத் தானே அன்று தான் புடைவையைத் தூக்கி சொறுகி கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது தன் கணவன் தன்னை அத்தனை ஆர்வத்துடன் பார்த்திருந்தான்....

அந்த நினைவே இதயத்தைக் கலங்கடிக்கப் பெருமூச்செறிந்தவாறே ஒரு முறை திரும்பி வீட்டைப் பார்த்தவளுக்குத் தன் திருமண நாள் அன்று தன் கணவன் ஆரத்தி தட்டை தட்டிவிட்டுச் சென்றது ஞாபகம் வர, விழி நீரால் பார்வை மறைத்தது...

ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க மூச்சு திணறுவது போல் இருக்க, ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் சாலைக்கு வந்தவள் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையத்திற்குப் போகச் சொன்னாள்...

பள்ளி வாழ்க்கை முடிந்தவுடன் கல்லூரிக்கு கூடச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாது இருந்தவளுக்கு இன்று இவ்வளவு பெரிய சென்னையில் தனியே பேருந்து நிலையம் வரை போவது மிகுந்த அச்சத்தைக் கொடுக்க, ஆனால் இனி ஒரு நிமிடம் அந்த வீட்டில் இருந்தால் கூட நிச்சயம் மூச்சு விடமுடியாமல் செத்துவிடுவோம் என்று நினைத்தவளுக்கு...

"போதும்பா முருகா.... இந்த அதிர்ச்சிகள் போதும்... இதுக்கு மேல் எதுவும் தாங்கிக்கிற சக்தி இல்லை…" என்று வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.

தன் வாழ்க்கை அர்ஜூனோடு துவங்கிய அன்று வேண்டிய அதே வார்த்தைகள்...

மத்திய பேருந்தில் கடலூர் செல்லும் பேருந்தைக் கண்டுப்பிடித்து ஏறி அமர்ந்தவளுக்கு எத்தனை முயன்றும் தன் கணவனின் நினைவை தவிர்க்க முடியவில்லை...

"சில நாட்களாக அவரின் நடவடிக்கைகளும், பார்வையும் அவருக்கு என் மேல் இருந்த காதலைத் தானே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.... ஒரு வேளை அது காதல் இல்லையோ? வெறும் ஆசையோ? ஆனால் காதல் இல்லாமல் என் மேல் எப்படி ஆசை மட்டும் வரும்?" என்று குழம்பியவளுக்கு விடை ஒன்றும் புரிபடவில்லை..

இத்தனை நாள் என்னை வெறுத்த கணவன் இப்பொழுது தானே என்னை விரும்ப ஆரம்பித்து இருந்தார்... ஒரு வேளை நான் அவர் அழைத்த அன்று அவரின் அறைக்குப் போயிருந்தால் அவருக்கு என் மேல் இத்தனை வெறுப்பு வந்திருக்காதோ? ஆனால் எத்தனை தான் வெறுப்பு இருந்தாலும் அவரின் மனதில் உள்ள எண்ணங்கள் தானே வார்த்தைகளாக நேற்று வெடித்து இருக்கிறது...

அப்படி என்றால் என்ன தான் அவர் என்னை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்தாலும் நான் அவருக்குத் தகுதி அற்றவள் என்ற நினைப்பு அவரின் ஆழ் மனதில் பதிந்து இருந்திருக்கிறது என்று தானே அர்த்தம்... இனி அவரின் வாழ்க்கையில் நான் எக்காரணம் கொண்டும் தலை இடக்கூடாது...

இத்தனை பெரிய பிஸினஸ் பண்ணுகிறவர், பெரிய கோடீஸ்வரர், இத்தனை நாள் என்னை அவர் வீட்டில் விட்டு வைத்திருந்ததே பெரிது என எண்ணியவள் வழிந்த கண்ணீரை யாரும் பார்க்காதவாறு துடைத்துக் கொண்டு தன் அன்னையைச் சமாளிக்கத் தயாரானாள்...

ஆனால் பாவம் தன் கணவனின் கோபத்திற்குத் தன் மேல் உள்ள அதிகக் காதலே காரணம் என்று அறியவில்லை அந்தப் பேதை...

ஒரு வேளை அவள் அன்று அவனின் அறைக்குப் போயிருந்தால் தான் வாங்கி வந்திருந்த பரிசினை அவளுக்குக் கொடுத்துவிட்டு காதலை சொல்லியிருப்பானோ!!

அது தான் அவனின் திட்டமும் கூட, ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை அவள் அவனுக்குக் கொடுக்கவே இல்லையே... யாரை குறை சொல்வது என்று விதியே குழம்பி நின்றது.

காலையில் திவ்யாவை சந்தித்த பிறகு விடிய விடிய அழுததினால் வீங்கி வாடிப்போயிருந்த அவளின் முகத்தைப் பார்த்ததில் இருந்து அதே நினைவில் தன் அறைக்கு வந்து படுத்த ஸ்ரீக்கு இன்னமும் அதே வலி நெஞ்சில் குறையாமல் இருந்தது...

தன் நெஞ்சை அழுத்தி தேய்த்துக் கொண்டவருக்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் போல் தோன்ற, இருந்தும் திவ்யாவை நினைத்துத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு "பாவம் சின்னப் பெண் ரொம்ப நொந்துப் போயிருக்கிறாள், நாமும் அவளுடன் அருகில் இல்லை என்றால் சரி இல்லை…" என்று நினைத்தவர் கீழே இறங்கி வந்தார்...

சமையல் அறைக்குள் வந்தவர் அங்குத் தெய்வானையும் அல்லியும் மட்டும் இருக்கவே திவ்யா எங்கே என்று கேட்க, அவர்கள் அவள் தன் அறைக்குச் செல்வதாகக் கூறியதை சொன்னதும் அல்லியிடம் அவளின் அறையில் போய்ப் பார்க்க சொன்னார்...

திவ்யா அறையில் இல்லை என்பதை உறுதி செய்த அல்லி...

"அம்மா, திவ்யாம்மா ரூமில இல்ல.... இருங்க தோட்டத்தில் இருக்காங்களான்னு பார்த்துட்டு வர்றேன்" என்றவள் தோட்டத்திலேயும் அவள் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டு ட்ரைவர் முருகனிடமும் தோட்டக்காரர்களிடமும் விசாரித்தாள்...

யாரும் அவளைப் பார்க்கவில்லை என்று உறுதியாகக் கூறியதும் அவளைப் பயம் தழுவ வேகமாக ஸ்ரீயிடம் ஓடி வந்தவள் திவ்யா எங்கும் இல்லை என்று கூற, ஸ்ரீக்கு மீண்டும் சுளீரென்று நெஞ்சில் வலி எடுத்தது...

ஹாலில் வந்து அமர்ந்தவர் காலையில் உணவு உண்டவுடன் அவளைத் தனியாக விட்ட தன் மடத்தனத்தை மனதிற்குள் திட்டியவர் அப்பொழுது தான் கவனித்தார் அந்தக் கடிதத்தை...

கடிதத்தைக் கண்டவுடனே அவரின் மனம் பதற ஆரம்பித்தது....

பிரித்துப் படிக்க ஆரம்பித்தவர் கடிதத்தின் வரிகளுக்கிடையே நீர் துளிகளைப் பார்த்ததுமே தெரிந்து போனது திவ்யா விழிகளில் நீரோடு இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறாள் என்று....

மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஒவ்வொரு வரியாகப் படித்தவர், படித்து முடிக்கும் முன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தார்...

தொடரும்..

 

JB

Administrator
Staff member

அத்தியாயம் - 20

அவரின் அருகிலேயே இருந்த அல்லி கடிதத்தை அவர் படிக்கும் பொழுதே அவரின் முக மாற்றத்தை கவனித்தவள் நேற்று நடந்த பிரச்சனையால் தான் திவ்யாம்மா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றிருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தவள் ஸ்ரீ நெஞ்சை பிடித்துக் கொண்டு விழவும்,

அம்மா என்று அலறியவள் தெய்வானையை அழைத்துக் கதற, அவர்களின் இருவருடைய சத்தத்தைக் கேட்ட முருகனும் மற்ற வேலைக்காரர்களும் ஓடி வர வீடே கதிகலங்கிப் போனது...

சட்டென்று பாலாவிற்கு அழைத்த முருகன் நிலைமையைச் சொல்ல, சென்னையில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான தன் நண்பனை அழைத்த பாலா ஆம்புலன்ஸை அனுப்ப சொல்லிவிட்டு தன் காருக்கு ஓடினார்...

வழியெல்லாம் பதற்றத்துடன் நடுங்கும் விரல்களுடன் அர்ஜூனின் அலை பேசிக்கு அழைக்க அங்கு உள்ளம் முழுவதும் இன்னும் தீராத சீற்றத்திலும் ஆங்காரத்திலும் இருந்தவன் அலை பேசியில் தன் தந்தையின் எண் ஒளிர்வதைப் பார்த்து, நேற்று நடந்த விஷயத்தைப் பற்றித் தான் பேச அழைக்கிறார் என்று நினைத்து அவரின் அழைப்பை எடுக்காமல் இருக்க, அருணை அழைத்தவர் தழுதழுத்த குரலில் தொண்டை அடைக்க நிலைமையை விளக்கி சொல்லி மருத்துவமனைக்கு வரச் சொன்னார்...

விஷயம் கேள்விப்பட்ட அருண் கிட்டத்தட்ட அதிர்ச்சியில் மயக்க நிலையை அடைந்தான்...

ஏனெனில் நேற்றில் இருந்து அவன் தன் அன்னையைப் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்... தான் கேட்டும் அவர் ஒன்றும் இல்லை என்று மறுத்துவிட்டாரே....

புயல் போல் காருக்கு ஓடியவன் அதனை விட வேகமாக மருத்துவமனைக்குக் காரை செலுத்த, அங்கு அதற்குள் பாலா தங்கள் வீட்டை அடைவதற்கு முன்னரே ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்திருந்தது...

அலறி அடித்துக் கொண்டு ஸ்ரீயின் அருகில் ஓடியவர் அங்குத் துவண்டு போய்ச் சுய நினைவு இல்லாமல் படுத்து இருந்த தன் மனைவியின் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்க ஸ்ரீயை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் அருண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தான்.

பின்னையே பாலாவும் வர அவரை நோக்கி ஓடியவன்....

"என்னாச்சு டாட்? எப்படி இருக்காங்க மாம்?" எனவும் அவனைக் கலங்கிய கண்களுடன் அமைதியாக ஒன்றும் பேசாமல் பார்த்திருந்த பாலா "ஸ்ட்ரெச்சரில்" தன் மனைவியை ஏற்றுவதைப் பார்த்து தன் மனைவிக்கு அருகில் ஓடினார்...

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், பாலாவின் நெருங்கிய தோழர்களில் ஒருவருமான சுந்தர், பாலாவின் அருகில் வந்தவர்,

"வி வில் டே கேர் ஆஃப் ஹெர் பாலா... யூ டோன்ட் ஒர்ரி [We will take care of her Bala, you don't worry] " என்றவர் ஸ்ரீக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாகத் துவங்க உத்தரவிட்டார்...

ஸ்ரீயை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்து செல்ல அவரின் பின்னேயே ஓடிய பாலாவையும் அருணையும் வாயிலில் நிற்க சொன்ன மருத்துவக் குழுவினர் அவசரமாகச் சிகிச்சையைத் துவங்க
ஐ.சி.யுவின் கதவிற்கருகில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்த பாலா மௌனமாகக் கதற ஆரம்பித்தார்...

பின் இருபத்தி எட்டு வருடங்கள் இல்லற வாழ்க்கையாயிற்றே....

கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து செல்வச் செழிப்போடு வளர்ந்திருந்தாலும் ஏழை குடும்பத்தில் பிறந்த பாலாவை திருமணம் செய்த ஸ்ரீ ஒரு நாள் கூடப் பாலாவின் ஏழ்மையைப் பற்றியோ அந்தஸ்தைப் பற்றிக் குறைக் கூறியதில்லை...

ஸ்ரீயின் தந்தை ருத்ரமூர்த்தி இறக்கும் வரை பாலாவுடன் மும்பையில் சாதாரண ஒண்டுக் கட்டிடத்தில் வாழ்ந்த போதும் மனம் முழுக்க மகிழ்ச்சியும், இதயம் முழுக்கக் காதலுமே மட்டும் சுமந்து தன் கணவருடன் செம்மையான இல்லற வாழ்க்கை வாழ்ந்திருந்தவர்....

தன்னுடைய பிறந்த வீட்டின் செல்வத்தைப் பற்றியோ வசதிகளைப் பற்றியோ தன்னுடைய கணவனுடன் வசதி இல்லாமல் வாழ்ந்த நாட்களில் அவர் தப்பித் தவறிக்கூட ஒரு நாளும் ஒப்பிட்டு பார்த்து பேசியதில்லை....

ருத்ரமூர்த்தி இறக்கும் தருவாயில் தான் தன் தந்தையைச் சந்திக்கச் சென்றவர் பாலாவின் அனுமதியுடன் தங்கள் தொழில் ஸ்தாபனங்களின் சேர்மனாகப் பொறுப்பேற்று அதி விரைவில் அத்தனை தொழிற்களையும், பார்க்கும் அனைவரும் அதிசயிக்கும் வகையில் செம்மையாக நடத்தியவர்....

ஆனால் இன்று தனக்குப் பிறந்த மகன் அந்தஸ்து, வசதி, பணம் என்று பார்த்து ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்க்கையை அதளப் பாதாளத்தில் தள்ளிவிட்டானே என்ற வேதனையே அவரின் இந்த நிலைக்குக் காரணமாயிற்று....

கதறி அழும் தந்தைக்கு ஆறுதல் சொன்ன அருண், அர்ஜூனின் அலை பேசிக்கு மீண்டும் மீண்டும் அழைத்து அலுத்து போய் இறுதியில் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினான்.

"மாம் நாட் ஃபீலிங் வெல்... அட் த ஹாஸ்பிட்டல் நௌ [Mom not feeling well... At the hospital now]" என்று அனுப்பியவன் மருத்துவமனையின் பெயரையும் குறிப்பிட ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்த அர்ஜூன் செய்தியை படிக்கவில்லை.

சிறிது நேரத்தில் ஐ.சி.யுவில் இருந்து வெளிவந்த சுந்தர் பாலாவின் அருகில் வர, அவரைப் பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு எழுந்திருந்த பாலாவைப் பார்த்தவர் ஆறுதலாக அவரின் தோளில் கை வைத்து ஸ்ரீக்கு லேசான மாரடைப்பு [மைல்ட் அட்டாக்] என்று கூற பாலாவிற்கு உலகமே இருண்டது போல் இருந்தது...

திருமணம் ஆன நாளில் இருந்து அவர் ஒரு நாள் கூடத் தன் மனைவி இல்லாமல் இருந்தது இல்லை..

அலுவல் விஷயமாகவோ, இல்லை தொழில் விஷயமாகவோ வெளி ஊர்களுக்குப் போக வேண்டியது என்று வந்தாலும் ஸ்ரீயும் அவரும் இணைந்து செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தனர் இருவரும்...

பிள்ளைகளைக் கூடத் தன் அன்னையிடம் விட்டு விட்டு செல்வார்... ஆனால் தன் மனைவி இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார்.

ஆனால் இப்பொழுது ஸ்ரீயின் நிலைமை அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது... அருண் தான் அவரை மிகவும் பாடுபட்டு தேற்ற வேண்டியதாகிருந்தது.

இந்தக் களேபரத்தில் பாலாவோ அருணோ தங்களுடன் திவ்யா இல்லாததைக் கவனிக்கத் தவறினார்கள்....

நேரம் ஆக ஆக அர்ஜூனும் திரும்பி அழைக்காதது வேறு அருணிற்குக் கவலை அளிக்க,

"அப்படி என்ன தான் பிஸியாக இருந்தாலும் அண்ணா நிச்சயம் மெசேஜ் பார்க்காமல் இருக்க மாட்டாரே... ஒரு வேளை நேற்று நடந்ததயே இன்னும் நினைத்துக் கொண்டு போனைக் கூடக் கவனிக்கவில்லையோ" என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அப்பொழுது தான் கவனித்தான் அங்குத் திவ்யா இல்லாததை....

கண்டவனுக்குப் பகீரென்று இருந்தது....

"ஏனெனில் மாமிற்கு ஒன்று என்றால் நிச்சயம் துடிதுடித்துப் போவார் அண்ணி... அப்படி இருக்கு அவர் ஏன் ஹாஸ்பிட்டல் வரவில்லை? கண்டிப்பாக மாமை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு வீட்டில் இருக்க அவரால் முடியாது... டாடோடு [Dad] நிச்சயம் அவரும் வந்திருக்க வேண்டும்... ஆனால் இங்கு அவர் இல்லை என்றால் எங்கே அவர்? எதுவோ சரியில்லை" என்று உணர்ந்தவன் திவ்யாவின் அலை பேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது...

ஏதோ தவறு நடந்திருக்கிறது? என்று கலங்கியவன் வீட்டிற்கு அழைத்து அல்லியிடம் விசாரிக்க, பதறியவாறே அல்லி....

"திவ்யாம்மாவ எங்குத் தேடியும் காணோம்... அவங்க ஒரு லெட்டர் மட்டும் எழுதி வச்சிட்டு போயிட்டாங்க... அத படிச்சதும் தான் அம்மா அப்படியே மயங்கி சரிந்து விழுந்திட்டாங்கய்யா…" எனவும்...

அல்லியின் கூற்றில் அதிர்ந்து போனான் அருண்...

"அந்த லெட்டர் எங்க?"

"இங்க தான் இருக்குய்யா"

"சரி... அத உடனே முருகனிடம் கொடுத்து விடுங்க…" என்றவன் அப்படியே தன் அன்னைக்குத் தேவையான சில பொருட்களையும் கொடுத்து அனுப்ப சொன்னவனுக்கு மனதிற்குள் திவ்யாவை நினைத்துத் திகில் சூழ துவங்கியது....

ஒரு பக்கம் தன் அன்னையின் உடல் நிலையை நினைத்து கலங்கி போயிருந்தான்...

மறுபக்கம் திவ்யா வீட்டை விட்டுச் சென்றுவிட்டது நினைத்து வேதனையில் உழன்று இருக்க, ஆனால் இது எதுவுமே தெரியாமல் அனைத்துக்கும் காரணகர்த்தாவான அர்ஜூனின் ஆங்காரமும், இன்று தங்களுடைய அலை பேசி அழைப்புகளின் நிராகரிப்பும் அவனை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருந்தது...

மீண்டும் அர்ஜூனை அழைப்போமா என்று எண்ணிய வேளையில் இரண்டு மணி நேரமாக நடந்த மீட்டிங் ஒரு வழியாக முடிந்தவுடன் அலை பேசியில் கிட்டதட்ட பத்து முறைக்கும் மேலே தன் தந்தை அழைத்திருந்ததைப் பார்த்த அர்ஜுனிற்கு, அவர் நேற்று நடந்ததைப் பற்றிப் பேசத் தான் இத்தனை முறை அழைத்திருக்கிறாரோ என்று எண்ணி எரிச்சலாக வர, அப்பொழுது தான் அருணின் குறுஞ்செய்தியைப் பார்த்தான்.

பார்த்தவனுக்கு அண்டமே சுற்றியது போல் இருந்தது.

"கதிர்…" என்று கத்தியவன் நிலைமையைச் சொல்லிவிட்டுப் புயலெனப் பாய்ந்தான் தன் காரை நோக்கி...

வழியெல்லாம் ஒரு வேளை இதற்குத் தான் தன் தந்தை இத்தனை முறை தன்னை அழைத்திருப்பாரோ... அது தெரியாமல் அவருடைய அழைப்புகளை நிராகரித்துவிட்டேனே என்று தன் மீதே கோபம் கொண்டவன் சூறாவளியெனக் காரை செலுத்தி அடுத்த முப்பதே நிமிடங்களில் மருத்துவமனையை அடைய அங்கு அப்பொழுது தான் ட்ரைவர் முருகன் கொண்டு வந்து கொடுத்திருந்த திவ்யாவின் கடிதத்தைக் குழப்பத்துடன் படித்துக் கொண்டிருந்தான் அருண்...

மருத்துவமனைக்குள் வேகமாக நுழைந்த அர்ஜூன், அதி வேகமாக அருணை அடைந்தவன் அவன் கரம் பற்றி,

"அருண்... வாட் ஹாப்பெண்ட்? என்னாச்சு மாம்க்கு? ஸாரி, நான் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தேன்.... ஐ மிஸ்ட் டாட்' ஸ் கால்ஸ் [I missed dad's calls] " என்று பதற....

அவனிடம் ஸ்ரீயின் நிலைமையையும் சிகிச்சையும் பற்றிப் படபடப்புடன் விவரித்தான் அருண்...

ஒரு வேளை தான் திவ்யாவிடம் நேற்று நடந்து கொண்ட முறை தான் தன் அன்னையை இந்த நிலைமைக்குக் கொண்டு சென்று இருக்குமோ? என்று எண்ணிய அர்ஜூன் தன் இரண்டு கைகளாலும் தன் தலையைப் பிடித்துக் கொண்டு ஐ.சி.யுவிற்கு அருகில் போடப்பட்டிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தவன் தலை நிமிர்ந்து தன் தந்தையைப் பார்க்கவில்லை...

ஏனெனில் தான் அவருடைய அழைப்பை தவிர்த்ததால் அவருக்குத் தன் மேல் எந்த அளவிற்கு வெறுப்பு இருக்கும் என்று அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது....

தவித்தவன் தனக்குள்ளே புலம்ப ஆரம்பித்தான்....

"எப்படி நான் இப்படி மாறிப்போனேன்?? எத்தனையோ பிரச்சனைகளைத் துச்சமெனச் சந்திச்சவனுக்கு இப்பொழுது என்னானது? யார் மேல் உள்ள கோபத்தை யார் மேல் காட்டுவது என்று கூடத் தெரியாமல் அவள் மேல் இருந்த கோபத்தில் டாடின் [dad] அழைப்பை நிராகரித்து இருக்கிறேனே... என்ன ஒரு மடையன் நான்…" என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் தன் அன்னை இருந்த ஐ.சி.யு-வின் அறையைப் பார்க்க...

அர்ஜூனின் மனம் தன் அன்னையை நினைத்து மௌனமாகக் கதறியது....

"ஸாரி மாம்.... ப்ளீஸ் ஃபர்கிவ் மீ, ப்ளீஸ் கம் பேக் [Sorry mom, please forgive me, please come back] " என்று உள்ளுக்குள்ளே அழுதவன் ஒவ்வொரு விநாடியும் தன் அன்னை எப்பொழுது கண் விழிப்பார் என்று ஏங்க அப்பொழுது தான் கவனித்தான் அங்குத் தன் தந்தையும் அருணும் மட்டும் இருப்பதை....

திவ்யா எங்கே?

கவனித்தவனின் மனதில் சுருக்கென்று தைத்தது போல் இருந்தது...

"என்ன தான் என் மேல் கோபமாக இருந்தாலும், நான் அவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டிருந்ததால் கலங்கிப் போய் இருந்தாலும் மாமிற்கு ஏதேனும் ஒன்று என்றால் திவ்யா நிச்சயம் கூட வராது இருக்க மாட்டாள்... ஒரு வேளை மஹாவோடு வீட்டிலேயே இருக்கிறாளோ? மஹா காலேஜுக்கு போகவில்லையா? மஹாவிற்குத் தெரியுமா?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் தோன்ற அருணிடம் வந்தவன்...

"மஹா எங்கே அருண்?" என்றான்...

"இல்லைண்ணா... இன்னும் அவளுக்குச் சொல்லவில்லை... காலேஜில் தான் இருக்கிறாள்" என்று அருண் கூற அப்பொழுது திவ்யா எங்கே என்ற கேள்வி அவன் மண்டையைக் குடைய, இருந்தும் அவனால் வெளிப்படையாக அவளைப் பற்றி விசாரிக்க அவனுக்கு மனம் இல்லை....

அது திவ்யாவிடம் தான் நடந்து கொண்ட விதத்தினால் வந்த குற்ற உணர்வினாலோ அல்லது இன்னும் அவளின் மீது உள்ள வெறுப்பினாலோ.... அது அவனுக்கு மட்டுமே தெரியும்...

சிகிச்சை முடிந்து வெளியே வந்த நிர்வாக இயக்குனரும் மருத்துவருமான சுந்தர், ஸ்ரீ அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் அதிர்ச்சியினால் வந்த மாரடைப்பே இது என்றும், அதனால் மேற்கொண்டு அதிர்ச்சி தரக் கூடிய எந்த விஷயத்தையும் சொல்லாமலும், அப்படி எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் சொன்னவர் மருந்துக்களைப் பற்றி விரிவாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அவர் அகன்றதும் ஐ.சி.யுவின் கண்ணாடி வழியே ஸ்ரீயைப் பார்த்த அர்ஜூனின் இதயம் நொறுங்க ஆரம்பித்தது...

எப்பேற்பட்ட இரும்பு போன்ற மனதுடையவர் அவனின் அன்னை...

அவனுக்கு அன்னையாக மட்டும் இல்லாமல் குருவாகவும் வழித் துணையாகவும் இருந்து அவனுக்குத் தொழில் கற்றுக்கொடுத்து அவனின் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டியாகவும் ஒரு நல்ல ஆசானாகவும் இருந்து வந்தவர்...

அவரின் இன்றைய நிலைமைக்குக் காரணம் நான் தானே என்று எதற்கும் கலங்காத இரும்பை ஒத்த மனதுடையவனின் உள்ளம் ஊமையாக அழுது கரைந்தது....

ஸ்ரீ கண் விழிக்கும் வரை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாகக் கரைய, அருண் மட்டும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவன் "திவ்யா அண்ணி எங்கப் போயிருப்பார்? ஒரு வேளை கடலூருக்கே போயிருப்பாரோ?" என்று குழம்பியவன் "திவ்யா அண்ணியின் அம்மாவிற்கு அழைக்கலாமா?" என்று யோசித்தான்...

"ஆனால் திவ்யா அண்ணியின் அம்மாவை அழைத்தால் இங்கு நடந்தது அனைத்தையும் சொல்ல வேண்டியிருக்கும்... அது வேறு புதுப் பிரச்சனைகளைக் கிளப்பும்.." என்று நினைத்தவன் அந்த யோசனையைக் கைவிட்டுத் தன்னருகில் நின்றிருந்த ட்ரைவர் முருகனிடம்....

"முருகா, திவ்யா அண்ணி எங்க போனாங்கன்னு தெரியுமா?"

"இல்லை தம்பி... நான் பின்னாடி காரை கழுவிட்டு இருந்தேன்... அதனால் கவனிக்கவில்லை தம்பி"

"வீட்டில் இருப்பவர்கள் எப்படி வெளியே போறாங்கன்னு கூடப் பார்க்காம என்ன வெறும் காரை துடைச்சிட்டு இருந்தீங்களா? இத்தனை பேர் இருந்தும் எப்படி யார் கண்ணிலும் படாமல் அண்ணியால் வீட்டை விட்டு போக முடியும்??" என்று கத்தியவன் இதற்கு மேல அவரைத் திட்டி ஒன்றும் பிரயோஜனமில்லை என்று எண்ணி..

"சரி, நீங்க இப்பவே கிளம்பி வீட்டுக்குப் போங்க.... அங்க வெளியே யாராவது அண்ணிய பார்த்தாங்களான்னு விசாரிக்க முடியுமான்னு கொஞ்சம் பாருங்க" என்றான்...

ஒரு மணி நேரம் சென்று அவனை அழைத்த முருகன்..

"தம்பி, சின்னம்மா அங்க ஸ்டாண்டில் இருந்த ஆட்டோவில் ஏறி தான் மெயின் பஸ்டாண்டிற்குப் போயிருக்காங்க... அந்த ஆட்டோ ட்ரைவரிடமே கடலூர் பஸ் எங்க நிற்கும்னு கேட்டுட்டு போய் இருக்காங்க.... அம்மா அவங்க வீட்டிற்குத் தான் போயிட்டு இருப்பாங்க…" என்றார்...

சரி என்றவன் மீண்டும் திவ்யாவிற்கு அழைக்க அவள் அலை பேசி இன்னும் அணைக்கப்பட்டிருக்க "என்ன அண்ணி? என்ன பிரச்சனையா இருந்தாலும் இப்படியா வீட்டை விட்டுப் போறது? அதுவும் யார்கிட்டேயும் எதுவும் சொல்லாம..." என்று வருந்தியவன் இதற்கு மேலும் இதனைப் பற்றி மறைப்பது நல்லதல்ல என்று எண்ணி தன் தந்தையிடம் சென்று முருகன் சொன்னதைச் சொன்னான்...

அது வரை ஸ்ரீயைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த பாலாவிற்கு அருண் திவ்யாவைப் பற்றிச் சொன்னதும் சுரீரென்று இருந்தது...

"எப்படி நான் திவ்யாவை கவனிக்கத் தவறினேன்.... ஸ்ரீயை ஆம்புலன்ஸில் ஏற்றும் பொழுது கூடத் திவ்யா அவளுடன் இல்லையே... எப்படி அவளை நான் மறந்தேன்?" என்று கலங்கியவர் அருணிடம் கலாவிற்கு அழைக்கச் சொல்ல, வேண்டாம் என்று மறுத்த அருணிற்கும் மனம் தவித்துப் போனது.....

ஏனெனில் தவறு எல்லாம் தங்கள் குடும்பத்தின் மேல் இருக்கிறது.... பாவம் ஒரு சின்னப் பெண்ணைத் திருமணம் என்ற பேரில் அழைத்து வந்து அவரை இந்த அளவிற்கு அவமானப்படுத்தி இப்பொழுது அவர் வீட்டை விட்டுச் செல்லும் அளவிற்குத் தள்ளிவிட்டுப் பின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் அம்மாவிற்கு அழைப்பது.... அழைத்து என்ன சொல்வது?? உங்கள் பெண்ணை என் அண்ணன் அவமானப் படுத்திவிட்டார்... அதனால் அவர் வீட்டை விட்டு சென்று விட்டார் என்றா?

அவன் வயதுக்கேற்றார் போல் அவனும் குழம்பி தவித்தான்....

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டும் தன்னை மீண்டும் மீண்டும் திரும்பி பார்ப்பதை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் யோசனையுடன் அவர்களின் அருகே செல்ல, அப்பொழுது தான் நர்ஸ் வந்து ஸ்ரீ கண் விழித்துவிட்டதாகச் சொன்னார்...

ஆவலுடன் அதி விரைவாக அறைக்குள் நுழைந்தவர்கள் அங்கு ஸ்ரீயை அந்த நிலைமையில் காண, பாலாவின் கண்களிலும் அருணின் கண்களிலும் நீர் பெருக்கெடுத்து வர, அவர்களின் பதைபதைப்பும் அழுகையும் ஸ்ரீயின் மனதை அசைக்கத் தனக்கு இருந்த சிரமத்தையும் மீறி கை நீட்டி அவர்களை அழைத்தார்...

அவர் அருகில் வந்தமர்ந்த அருணின் தலையில் கை வைத்தவர், மிகுந்த சிரமத்திற்கிடையே....

"எனக்கு ஒன்னும் இல்ல அருண்... பயப்படாத... உங்களை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேன்" என்று திணறித் திணறி பேசியவர் பிள்ளையின் முகத்திலும், தன் கணவரின் முகத்திலும் தெரிந்த திகிலை விலக்க சிரமப்பட்டுச் சிரிக்க முயல, அடக்க முடியாமல் தன் அன்னையைக் கட்டிக்கொண்டு அழுத அருண்....

"மாம், நீங்க நேத்தே சரியில்லைன்னு சொன்னேனே, கேட்டீங்களா? அப்பொழுதே ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கலாம் இல்லையா?" என்றான்.

தன்னை நினைத்து, தன் உடல் நிலையை நினைத்து மனதிற்குள் கலங்கி போயிருந்தாலும், தன் கலக்கத்தை முகத்திலோ, கண்களிலோ காட்டாமல் தன் அருகில் நின்று கொண்டிருந்த அர்ஜூனை பார்த்த ஸ்ரீ அதன் பிறகு மீண்டும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை...

ஆனாலும் அவருக்கு நன்றாகத் தெரியும் தன் மூத்த மகன்... தன் மேல் உயிரையே வைத்திருப்பவன்... உள்ளுக்குள் எத்தனை கலங்கி இருக்கிறான் என்று....

ஆனால் எத்தனை பெரிய பேரிடியைப் போன்ற சோதனைகள் வந்தாலும், எவ்வளவு அசகாயச் சூழ்நிலைகள் வந்தாலும், எதற்கும் கண் கலங்காதவன் தன் உணர்வுகளை வெளியே காட்டாமல் நின்று கொண்டிருக்கிறான்....

இருந்தும் அவன் திவ்யாவிடம் நடந்து கொண்ட முறை தானே அந்தச் சின்னப் பெண்ணை வீட்டை விட்டு வெளியே துரத்தியது என்றெண்ணியவர் சட்டென்று பாலாவிடம் "திவ்யா?" என்றார்.

இதற்கு மேலும் மறைக்க முடியாமல் பாலாவும் அருணும் திரும்பி அர்ஜூனைப் பார்த்தவர்கள் மேற் கொண்டு ஒன்றும் பேசாமல் இருக்க, ஸ்ரீயின் முகத்தில் தோன்றிய கலக்கத்தைக் கண்ட அருணிற்கு மருத்துவர் சொன்னது நியாபகத்தில் வந்தது....

"எந்த அதிர்ச்சியும் தாங்கும் சக்தி அவருக்கு இப்பொழுது இல்லை" என்று....

ஆனால் வேறு வழியும் இல்லை....

திவ்யா அண்ணியின் லெட்டரைப் பார்த்து தான் அவருக்கு இந்த மாரடைப்பே வந்திருக்கிறது... அப்படி இருக்கத் திவ்யா அண்ணியைப் பற்றி அவர் விசாரிக்காமல் விடப் போவதில்லை என்று உணர்ந்தவன் முருகன் சொன்ன விவரத்தை அப்படியே ஸ்ரீயிடம் கூறாமல்...

"நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க மாம்.... நான் இப்போ தான் அண்ணியிடம் பேசினேன்.... ஆனால் உங்க உடம்பை பத்தி அண்ணியிடம் ஒன்னும் சொல்லலை... அவங்களைச் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கேன்... ஆனால் நாமும் அவங்களுக்குக் கொஞ்சம் டைம் குடுக்கனும் மாம்.... இத்தனை நடந்ததற்குப் பிறகு சட்டுன்னு எல்லாத்தையும் மறந்திருங்கன்னு சொன்னா, எப்படி மாம்? பட், ஷி வில் கம் பேக் ஸூன் [But she will come back soon]" என்றான்..

அருணின் கூற்றில் அவன் தன்னைப் பார்த்தவாறே பேசிய விதத்தில் அர்ஜூனிற்குப் புரிந்து போனது...

அங்கு ஏதோ விபரீதமாக நடந்து இருக்கிறது....

"திவ்யாவை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறானா? அப்படி என்றால் திவ்யா எங்குச் சென்று இருக்கிறாள்?" என்று திகைத்தவன் அருணையே பார்த்திருக்க,

ஆனால் இத்தனை விஷயங்கள் நடந்ததற்குப் பிறகும் வாய் திறந்து தன் மனைவியைப் பற்றி விசாரிக்காத தன் அண்ணனின் பிடிவாதத்தையும் கோபத்தையும் எண்ணி வருத்தமடைந்த அருண் தன் கையில் இருந்த கடிதத்தை நீட்டினான்...

முகத்தில் குழப்ப ரேகையுடன் கடிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்த அர்ஜூனின் முகம் கோபமும், வெறுப்பும், யோசனையும், கலக்கமும் என்று பலவித உணர்ச்சிகளின் கலவையாக மாற மாற அருணுக்கு மிதமிஞ்சிய பதற்றம் ஏற்படத் துவங்கியது...

"இது வரை நடந்தது போதாமல் மேற்கொண்டு எதுவும் செய்துவிடுவாரோ அண்ணன்" என்று...

ஆனால் அர்ஜூனின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை, மனதில் பிரவாகித்துக் கொண்டிருந்த உணர்வுகளை, அவனின் அடி மனதில் ஏற்பட்டிருந்த காதல் என்ற நுண்ணுணர்வை அறிந்திருந்தவர் ஒருவரும் இல்லையே...

தன் உணர்ச்சிகளில் கலந்துவிட்ட, தன் மனதை விழுங்கிவிட்டிருந்த தன் மனையாளின் மீது என்றோ உதயமாகியிருந்த, மலர்ந்து விரிந்திருந்த தன் கடினமான மனதைக் கூட ஊடுருவி விட்ட உன்னதமான காதலை அவன் இது வரை ஒருவரிடமும் வெளிப்படுத்தி இருக்கவில்லை....

அவன் மனைவியிடம் கூட... ஆனால் மஹாவைத் தவிர...

கடிதத்தைப் படித்தவன் "ஷிட்" என்று கத்தியவனின் கண்களில் கலந்து தெரிந்த வெறுப்பும் வேதனையும் அங்கு இருந்த அனைவருடைய மனதிலும் மீண்டும் அச்சத்தையும் அதிர்ச்சியையுமே கொண்டு வர...

அதே பார்வையுடன் தன் அன்னையை நோக்கியவன்,

"மாம்.... வாட் இஸ் திஸ் மாம்?.... [Mom... What is this mom?] இந்த லெட்டர படிச்சதனால தான் உங்களுக்கு இப்படி ஆனதா? அப்படி என்ன உங்களுக்கு உங்க சொந்த பிள்ளைகளை விட அவ முக்கியமா போய்ட்டா? இந்த அளவிற்கு உடம்பு முடியாம போறதுக்கு" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன் ஆனால் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவாறே....

"அர்ஜூன், நீ கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?" என்று பாலா கூற திரும்பி தன் தந்தையைப் பார்த்தவன் அதற்கு மேலும் தன் அன்னையைத் தன் வார்த்தைகளால் வேதனை படுத்திவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக ஒன்றும் பேசாமல் வெளியே சென்றவன் நேரே நிர்வாக இயக்குனர் சுந்தரின் அறையை அடைந்தான்...

ஆனால் அவன் தன் கையோடு தன் மனைவியின் கடிதத்தைக் கொண்டு சென்றதை அங்கு இருந்த சூழ்நிலையில் ஒருவரும் கவனிக்கவில்லை....

மீண்டும் விளக்கமாக தன் அன்னையின் உடல் நிலையைப் பற்றிப் பேசியவன் சிகிச்சையையும் பற்றிக் கலந்து ஆலோசித்துவிட்டு, மருத்துவமனை முன் பணத்தைச் செலுத்தியவன் மஹாவிற்கு அழைத்துத் தான் அவளை அழைக்க அவளின் கல்லூரிக்கு வருவதாகச் சொன்னான்...

ஏனெனில் அவனுக்கு நன்கு தெரியும் தன் மனதை புரிந்துக் கொண்டவள் மஹா ஒருவளே என்று....

அவசர சிகிச்சை பிரிவில் அதற்கு மேல் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று நர்ஸ் கூற வெளியே வந்த அருணும் பாலாவும் அர்ஜூனைத் தேடி அவன் அலை பேசிக்கு அழைக்க, அவன் மஹாவை தான் கல்லூரியில் இருந்து அழைத்து வருவதாகச் சொன்னது இருவருக்குமே மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது..

ஏனெனில் அர்ஜூனைப் பொறுத்தவரை அவனுக்குத் தொழில் மட்டும் தான் வாழ்க்கை... தொழில் சம்பந்தமான மீட்டிங்ஸ், அது சம்பந்தமான பார்ட்டிகள் என்று தான் அவன் வெளியே போவானே தவிர, இது போன்ற வீட்டு வேலைகளை எல்லாம் செய்வது அருண் தான்...

அதுவும் என்ன காரணமாக இருந்தாலும் சரி, அவசரமாக இருந்தாலும் சரி, தன் தங்கையைக் கல்லூரியில் இருந்து அழைத்து வருவது எல்லாம் கனவிலும் நடக்காத ஒன்று....

ஆனால் இன்று அவனே கல்லூரிக்கு செல்வதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருவரும் திகைத்தாலும், மீண்டும் இருவரின் மனதையும் ஸ்ரீயின் உடல் நிலையே ஆக்கிரமித்துக் கொள்ள ஒன்றும் பேசாமல் ஐ.சி.யுவிற்கு அருகிலே போடப்பட்டிருந்த சேரில் மௌனமாக அமர....

அங்கு உள்ளிருந்த ஸ்ரீக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை....

இத்தனை நடந்தும் தன் கோபத்தையும், சீற்றத்தையும் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளாத தன் மகனை நினைத்து ஸ்ரீக்கும் மனம் சலசலத்து பாரமாகிப் போனது...

அர்ஜூனின் குணமும் ஆணவமும் கோபமும் நன்கு தெரிந்திருந்தாலும் அவரால் அவனின் செயல்களை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை...

மனைவியைக் கை நீட்டி அடித்தது மட்டும் இல்லாமல் என்ன மாதிரியான வார்த்தைகளை அவன் உதிர்த்துவிட்டான்...

என்ன தான் அவனுக்குப் பிரச்சனைகள் இருந்தாலும் அந்தச் சின்னப் பெண்ணை மனைவி என்று கூடப் பாராமால் வேலைக்காரி என்று அழைத்திருந்தவனை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...

அவனுடைய கோபத்திற்கும் வெறுப்பிற்கும் எது காரணமாக இருந்தாலும் அவனின் அடாவடிச் செயலை, அநாகரிகமான செய்கையை அவர் மன்னிக்கத் தயாராக இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்குத் திவ்யாவை நினைத்துப் பயம் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது....

எத்தனை வேதனையைச் சுமந்து அவள் வீட்டை விட்டு வெளியேறி இருப்பாள்? சின்னப் பெண் வேறு? சென்னையைப் பற்றி என்ன தெரியும்?" என்று கலங்கியவராக நர்ஸை தன் அருகே அழைத்தவர் தன் கணவனைத் தன்னிடம் அழைத்து வரச் சொல்ல, அவர்...

"இல்லம்மா நீங்க ரெஸ்ட் எடுக்கனும்.... ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணக்கூடாது.... இது எங்க MD யின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் கூட…" என்றார்..

"ஒரே ஒரு நிமிஷம் கூப்பிடம்மா, ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும்... ஒரு நிமிஷந்தான்" என்று மறுபடியும் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவர் பாலாவை அழைக்க, அவர் என்னவோ ஏதோ என்று பதறி போய் வந்தார்..

தன் மனைவியின் அருகே வந்தவரின் கையைப் பிடித்துக் கொண்ட ஸ்ரீ,

"என்னங்க, எனக்கு என்னமோ திவ்யாவை நினைச்சு பயமா இருக்குங்க... அவ ரொம்பச் சின்னப் பொண்ணு.... பயந்த சுபாவம் கூட.... ஏதாவது பண்ணிக்கிட்டான்னா?"

"ஏம்மா அப்படி எல்லாம் நினைக்கிற? அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது... நீ கலங்காம இரு.."

"இல்லைங்க, எனக்கு ரொம்பப் பயமா இருக்கு... முதல்ல கலாக்கிட்ட போன் போட்டு குடுங்க... நான் உடனே திவ்யாவை பத்தியும் இங்க நடந்தது பத்தியும் சொல்லனும்…"

அவரை உற்று நோக்கிய பாலா,

"ஸ்ரீம்மா, இதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்ளமாட்டோமா.... நீ ஏன் வீணா ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கிற.... உனக்கு இப்போ தேவை ரெஸ்ட் மட்டும் தான்... நானே சம்பந்தியிடம் பேசுறேன்.... நீ எதைப் பத்தியும் வொர்ரி பண்ணிக்காத.." என்றார் கனிவாக.

கணவரின் கூற்றில் சிறிது நிம்மதி அடைந்தாலும் திவ்யாவைப் பார்க்கும் வரை தனக்கு நிம்மதி இல்லை என்று நினைத்த ஸ்ரீ ஒருவழியாக மருந்துகளின் உதவியால் உறங்க துவங்க, வெளியில் வந்த பாலா சிவசுப்ரமணியத்தை அழைத்தார்...

சம்பந்தியிடம் நடந்தவற்றை மேலோட்டமாகச் சொன்னவர், தன் மகனுக்கும் மருமகளுக்கும் சிறிது பிரச்சனை, அதனால் திவ்யா கடலூருக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொன்னவர் ஸ்ரீயின் நிலைப் பற்றிச் சொல்வதைத் தவிர்த்துவிட்டார்....

ஆரம்பத்தில் பதட்டம் அடைந்த சிவ சுப்ரமணியத்தைச் சமாதானப் படுத்தியவர், தன் மகனின் பிஸினஸ் பிரச்சனைகளால் தான் கொஞ்சம் கோபம் அடைந்து அதனைத் திவ்யாவிடம் காண்பித்து விட்டான் என்றும், திவ்யா வந்தால் அவளைத் திரும்பவும் ஊருக்கு அழைத்து வரவும் கேட்டுக் கொண்டார்...

திவ்யாவை அழைத்த சிவ சுப்ரமணியத்திற்கு அவள் அலை பேசி அணைக்கப்பட்டிருந்ததை அறிந்த பொழுது தெரிந்து போனது இது நிச்சயம் சிறிய பிரச்சனை அல்ல என்று...

ஏனெனில் அலை பேசியை அணைத்திருக்கிறாள் என்றால் அவளுக்கு யாரிடமும் பேச விருப்பம் இல்லை என்று தானே அர்த்தம் என்று எண்ணியவர் தன் மனைவிக்கு அழைத்து அவரை வீட்டிற்கு வரச் சொன்னவர், அவர் வந்தவுடன் விரிவாக எடுத்துரைத்தார்..

திவ்யா வீட்டை விட்டு வந்துவிட்டாளா? அதுவும் ஸ்ரீயிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் தனியே கிளம்பி வந்து கொண்டிருக்கிறாளா? கடவுளே! என்ன தான் கணவனின் மீது கோபம் இருந்தாலும் அதற்காக இப்படிக் கோபித்துக் கொண்டு தனியாக வரலாமா? அவளின் கணவர் என்ன நினைப்பார்? அவர் ஏற்கனவே பெரிய கோபக்காரர்... மிகுந்த அந்தஸ்து பார்ப்பவர்... இப்பொழுது அவரும் இப்படி அவள் வெளியே வந்ததை அவமானமாக நினைக்க மாட்டாரா? அப்படி என்றால் இனி திவ்யாவின் வாழ்க்கை?

இவற்றை நினைக்க நினைக்க ஒரு அன்னையாகக் கலாவின் மனதிலும் கலக்கம் சூழ்ந்தது...

அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் திவ்யாவும் களைத்து போய் வீட்டிற்குள் நுழைந்தாள்....

வந்தவளுக்குத் தன் பெற்றோரின் முகம் பார்த்தவுடனே தெரிந்து போனது அவர்கள் தன் வரவைத் தான் எதிர்பார்த்திருந்தார்கள் என்று..

கலங்கிய விழிகளுடனும், களைத்த முகத்துடனும் வேதனை வழிய தன்னந்தனியாக வந்து நிற்கும் மகளைப் பார்த்த பெற்றவர்களின் மனம் துடித்தது....

அவள் அருகில் வந்த சிவ சுப்ரமணியம் தவித்து வந்திருக்கும் தங்கள் மகளின் தலையைக் கோதியவாறே...

"நீ எதுவுமே சொல்ல வேண்டாம்மா... இது உன் வீடு.... இங்க எப்பவும் உனக்கு இடம் இருக்கு…" எனவும், என்ன ஏது என்று கூடக் கேட்காது ஆறுதலாகக் கூறும் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தவள்,



ஓடிச் சென்று தன் அன்னையைக் கட்டிக் கொண்டு அழ, கதறும் மகளைப் பார்க்க கலாவிற்கும் மனது தாங்கவில்லை....

அவளை அதற்கு மேலும் எதுவும் கேட்டு அவளின் வேதனையை அதிகரிக்க விரும்பாதவர்...

"வா திவ்யா, குளிச்சிட்டு வா... சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றார்,

தன் அன்னையின் கரிசனத்தைப் பார்த்தவளுக்குத் தன் பிரச்சனைகளை எல்லாம் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது...

ஆனால் சின்ன வயதில் இருந்தே அவர்கள் தன்னையும் தன் அண்ணனையும் வளர்க்க எவ்வளவு பாடுப்பட்டார்கள் என்று பார்த்து பார்த்து வளர்ந்தவளுக்கு, இதற்கு மேல் அவர்களுக்குப் பாரமாக வந்துவிட்டோமே என்றே கழிவிரக்கம் வர...

"இல்லம்மா. எனக்குப் பசிக்கலை..... நான் கொஞ்ச நேரம் தூங்கனும்" என்றவள் தன் அறைக்குச் செல்ல, எதையோ யோசித்த கலா சட்டென்று....

"கதவை திறந்தே வச்சுட்டு தூங்கும்மா" என்றார்...

திரும்பி தன் அன்னையைப் பார்த்தவளுக்குத் தெரியும் அவர் எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று.....

வலி மிகுந்த ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்தவள் ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை தாழ் போடாமலே கட்டிலில் அமர்ந்தவளின் உள்ளத்தில் மின்னல் போல் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தோன்ற ஆரம்பித்தது....

என்ன தான் முயற்சித்தாலும் கணவனின் நினைவில் நிலைக்குலைந்த மனது, இடம், பொருள், ஏவல் பாராமல் சமையல் அறையில் அவன் தன்னை முரட்டுத்தனமாக இழுத்ததினால் எழுந்த கிளர்ச்சியையும், அவன் தன் இடைத் தொட்டதினால் குழைந்து போன தன் தளிர் மேனியின் நிலையையும், வலுவான அவன் கரங்களின் அழுத்தத்தின் விளைவால் தான் அதிர்ந்து இறுக்க விழிகளை மூடி நின்றிருந்த தோற்றத்தையும் மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்து ஏங்கியது...

அவரை ஒரு நொடி கூட இனி பிரியக்கூடாது என்று ஆழ்மனதில் புதைந்து இருந்த அவளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்த காதலும், இதயத்திலும் உணர்ச்சிகளிலும் ஒன்றிக் கலந்திருந்த கணவனின் முகமும் அவளை மௌனமாகக் கொல்ல, தடுமாறி தத்தளித்த தன் மனதினை அடக்கத் தெரியாமல் கண்களை இறுக்கி மூடித் திறந்தவள் ஆயாசத்துடன் மெதுவே கட்டிலில் சாய்ந்தாள்.

அவரின் மேல் இத்தனை காதல் இருக்கிறது... உடலின் ஒவ்வொரு அணுவும் அவர் வேண்டுமென்று கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது... இருந்தும் ஏன் நான் அவரைச் சந்திக்கச் செல்லவில்லை... அவர் வாய் திறந்து வெளிப்படையாக அழைத்தும் நான் செல்லாதது என் தவறு....

அதனால் வந்த விளைவே என் மீது அவருக்கு வந்த கோபமும் வெறுப்பும்... ஆனால் அதே சமயம் என் மீது உண்மையில் காதல் இருந்திருந்தால் விஷம் போன்ற கூரிய வார்த்தைகளை அவர் ஏன் சொல்ல வேண்டும்?? விவாகரத்திற்குத் தயாராக இருக்க ஏன் சொல்ல வேண்டும்??

யோசிக்க யோசிக்க அவள் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது...

அவள் வந்த சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த வினோத்திடம் திவ்யா அவளின் அறையில் இருப்பதைக் கலா சொல்ல, அவள் தனியே வந்திருப்பதை அறிந்தவன் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற மனநிலையில் இருந்தான்...

ஒரு வேளை தான் மஹாவிடம் நடந்து கொண்டதை யாராவது பார்த்து அத்தானிடம் சொல்லி அதனால் ஏதும் அவர்களுக்குள் பிரச்சனை வந்ததோ? அதனால் தான் திவ்யா தனியாக வந்திருக்கிறாளோ? என்று எண்ணியவன் அவளைக் காண அவளின் அறைக்குச் சென்றவன் அவள் கண்களை மூடியிருந்தாலும் விழி நீர் மட்டும் நிற்காமல் பெருகி கொண்டிருக்க, துன்பத்தின் உருவாய்ப் படுத்திருந்த தங்கையைக் கண்டவனுக்கு நெஞ்சு உடைந்துவிடும் போல் இருந்தது....

தன் அருகில் அசைவை உணர்ந்தவள் கண்களைத் திறக்க, தன் அண்ணனை கண்டவள் அமைதியாக எழுந்து அமர, அவள் கரத்தை மென்மையாகப் பற்றியவன் கனிவுடன்,,,

"என்ன திவ்யா? என்ன பிரச்சனை?" என்றான்...

ஐந்து வயது மூத்த தன் அண்ணனிடம் எப்பொழுதும் மனம் விட்டு பேசியே பழகியவள் திவ்யா...

தன் அன்னையிடமோ தந்தையிடமோ கூட வெளிப்படையாகப் பேசி பழக்கம் இல்லாதவள்... ஆனால் வினோத் என்றால் அவளுக்கு உயிர்.

கோவிலுக்குச் செல்லும் பொழுதோ இல்லை, பள்ளிக்கும் செல்லும் பொழுதோ யாரும் தன்னைக் கிண்டல் செய்தால் வினோத்திடம் தான் ஓடி வந்து சொல்வாள்...

எத்தனையோ முறை கலா கேட்டும், தன் அண்ணனிடம் எளிதாக விஷயங்களைப் பகிர முடிந்தவளால் அவள் அன்னையிடம் சொல்ல முடிந்தது இல்லை...

ஒரு வேளை தன் அன்னையிடம் அப்படிப் பழகியிருந்தால் தன் கணவனிடம் தனக்குள்ள பயத்தையும், அவன் தன்னை அத்தனை காதலுடன் எதிர்பார்த்தும் தான் அவனிடம் நெருங்க முடியாத நிலைமையையும் வெளிப்படையாக மனம்விட்டுச் சொல்லியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்த்து இருக்கலாமோ?

இன்றும் அதே போல் வீட்டிற்கு வந்ததில் இருந்து தாயிடமும் தந்தையிடமும் கூட எதனையும் சொல்லாது இருந்தவள், அவனைக் கண்டதும் கட்டிப்பிடித்து வெடித்துக் கதறிக் கொண்டு நடந்தவற்றைக் கூறினாள்...

"என்னை அவருக்குச் சுத்தமா பிடிக்கலைண்ணா.... அதனால வந்தது தான் இத்தனை பிரச்சனைகளும்.... அவர் என்னை அறைஞ்சது கூட எனக்கு வலிக்கலண்ணா..... ஆனால் அவர் என்னைச் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில் நெருப்ப அள்ளி ஊத்தின மாதிரி எதிரொலிச்சுக்கிட்டே இருக்கு" என்று சொற்களைக் கஷ்டப்பட்டு உதிர்த்து அழுதவளைக் கண்ட வினோத்தின் உள்ளத்தில் பலதரப்பட்ட உணர்ச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன...

அண்ணனின் அணைப்பில் இருந்த போதும் திவ்யாவின் உடலில் இருந்த நடுக்கம் குறையவில்லை... அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டவன் மெல்ல தன் மார்பில் இருந்து அவளின் முகத்தை நிமிர்த்தித் துயரம் நிரம்பிய அவளின் கண்களைப் பார்த்தவனின் கண்களிலும் நீர் திரண்டது...

ஆனால் அதே சமயம் திவ்யா சொன்ன அத்தனையும் கேட்டவனுக்கு அர்ஜூனின் மேல் இருந்த நம்பிக்கை மட்டும் உடையவில்லை... தன் அத்தானுக்குத் தன் தங்கையைப் பிடிக்கவில்லை என்பதை அவன் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது...

பின் அவளின் தாலி பெருக்கென்று அர்ஜூன் திவ்யாவை காதலோடு பார்த்திருந்ததை மஹாவோடு சேர்ந்து ரசித்துப் பார்த்தவனாயிற்றே...

வேறு எங்கோ பிரச்சனை நடந்திருக்கிறது என்பதை யூகித்தவன் தங்கையை ஆசுவாசப்படுத்திவிட்டு எதற்கும் கவலைப்படாதே என்று அவள் தலையைக் கோதிவிட்டவனுக்கு இதற்கு வழி எதுவும் புலப்படவில்லை....

ஏனெனில் அர்ஜூனின் அந்தஸ்தும், அவனின் ஆளுமையும் அதிகாரமும் வினோத்திற்குக் கலக்கத்தையும் தயக்கத்தையுமே கொடுத்தது...

அவர் எதிரில் நின்று பேசுவதற்கே அத்தனை அச்சமாக இருக்கிறது... இதில் அவரிடம் சென்று திவ்யாவிற்கும் அவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்பதா என்று கலங்கி போனான் வினோத்....

ஆக அர்ஜூனே மனம் மாறி வந்தால் தான் இவர்களின் பிரச்சனைகள் தீரும்... ஆனால் அவன் வருவானா?

கோபத்தில் சிக்குண்டிருந்த, தன் இதயத்தில் பூத்திருந்த ஆத்மார்த்தமான காதலை பகிர்ந்து கொள்ளாமல் உணர்ச்சிகள் முற்றிவிட்டதால் தன் சுயநிலையை இழந்து வார்த்தைகளால் நெருப்பைக் கக்கி தன் மனையாளை துடிக்கச் செய்திருந்த அர்ஜூன் தன்னவளை அழைத்துச் செல்ல வருவானா???

ஆனால் தொழில் சாம்ராஜ்யத்தில் அதிரடி அரசனாகத் திகழுபவன், தன் எதிராளிகள் அனைவரையும் ஆட்டிப் படைத்து அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குபவன், எந்த நிமிடம் காதலில், திருமண வாழ்க்கையில் அந்தஸ்தும் ஈகோவும் பார்த்தால் தாம்பத்யம் இனிக்காது என்பதை உணருகிறானோ அந்த நொடி நிச்சயம் மலரினும் மெல்லிய தன் மனையாளை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் வினோத்துடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்!!!!

தொடரும்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top