JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 21 & 22

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 21


அங்கு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அர்ஜூனின் மனதில் மீண்டும் மீண்டும் திவ்யாவின் கடிதமே அலைஅலையாய் மோதிக் கொண்டிருந்தது.

காரில் அமர்ந்து இருந்தவன் தன்னிச்சையாக அவளின் கடிதத்தை எடுத்து பார்க்க, கடிதத்தில் அங்கிங்கு அவளின் கண்ணீர் துளிகள் பட்டுக் காய்ந்திருந்த இடம் அவளின் அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் பின்னால் மறைந்து கொண்டிருந்த ஆத்மார்த்தமான அன்பையும், அவளின் அதிர்ந்து மருண்ட விழிகளுக்குள் தன் மேல் துளிர்த்து ஒளிந்து கொண்டிருந்த காதலையும் உணர்த்தியது.

திருமணம் நடந்தேறி இரு நாட்களிலேயே தான் அவள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்பாமல் தூரம் தள்ளி போயிருந்த போதும், பின் அவளைத் தன்னவளாக முழுவதும் அடைய காத்திருந்த நாளில் தன்னை அவள் நிராகரித்துவிட்டாள் என்ற ஆவேசத்தில் வெளிநாடு போயிருந்த பொழுதும் தோன்றாத வலி இதயத்தில் இப்பொழுது ஆழமாகத் தோன்றி குத்தி கிழித்தது.

அவளை விட்டு தான் விரும்பி சென்ற பொழுது தன்னைத் தாக்காத மனப் பாரம், அவளைத் தவிக்க விட்டு அவள் விழிகளில் வழியும் நீரை பார்த்த வண்ணம் தான் பயணித்த பொழுது ஏற்படாத மனக்கிலேசம், அவள் தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்றவுடன் அவன் உள்ளத்தையே அடி வரை ஆழ அழுத்தி அவனின் இதயம் தன் துடிப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்வது போல் இருந்தது.

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் மஹாவை அழைத்து வர முடிவு செய்தவன் அலை பேசியில் அவளை அழைத்து.

"மஹா, ஐ ஆம் கமிங் டு பிக் யூ அப் இன் தேர்டி மினிட்ஸ். [Maha, I am coming to pick you up in thirty minutes]" என்று மட்டும் சொன்னவன் வேறு ஒன்றும் சொல்லவில்லை.

மற்ற அனைவரின் பார்வையிலும் அவன் ஏதோ ஒரு குற்றவாளிப் போலவும் எதிரியைப் போலவும் தென்படுவதில் அவன் மனமும் அடிபட்டுத் தான் போனது. தன்னையும் அறியாமல் முதல் முறை தன் தங்கையிடம் ஆறுதலைத் தேடிச் சென்றான்.

அங்கு வகுப்பறையில் அமர்ந்திருந்த மஹாவிற்கோ முதலில் அலை பேசியில் அர்ஜூனின் எண்ணை பார்த்ததுமே அடி வயிறு கலங்கியது.

ஏனெனில் வீட்டில் நேருக்குநேராகப் பேச நேரிடும் பொழுதே தன் தங்கையிடம் கூட வார்த்தைகளை அளந்து பேசுபவன்.

அப்பேற்பட்ட அர்ஜூன் அண்ணன் அழைக்கிறார் என்று திகைத்து போய் அழைப்பை எடுத்தவளின் அதிர்ச்சியைப் பன்மடங்கு அதிகரிப்பது போல் இன்னும் அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு வருகிறேன் என்று சொன்னால்!!!!!

"அர்ஜூன் அண்ணா நம்மைப் பிக்கப் செய்ய வருகிறார்களா? அதுவும் இந்த நேரத்திலா?" என்று வெலவெலத்து போனாள்.

குரல் தடுமாற. "என்னாச்சு அண்ணா? ஏதாவது பிரச்சனையா?" எனவும், "நத்திங் மஹா. யூ ஜஸ்ட் பி ரெடி [Nothing Maha. You just be ready]" என்றான்.

'எதற்கு வருகிறார்? அதுவும் காலேஜிற்கே. ஒரு வேளை அன்று மொட்டை மாடியில் வினோத் என்னிடம் நடந்து கொண்டதை யாராவது பார்த்து அண்ணனிடம் சொல்லி இருப்பார்களோ?' என்ற நினைப்பே அவளுக்குக் கதி கலங்கியது.

'ஐயோ! அர்ஜூன் அண்ணனுக்கு மட்டும் அந்த விஷயம் தெரிந்து இருந்தால் அவ்வளவு தான். அண்ணியின் அண்ணன் என்று கூடப் பார்க்க மாட்டாரே. இதில் ஏற்கனவே அண்ணியின் மேல் கோபமாக இருப்பவர். இப்பொழுது இது வேறு தெரிந்தால் வேறு வினையே வேண்டாம்' என்று கலங்கியவள் உலகில் உள்ள எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டு அர்ஜூனிற்காகக் கல்லூரியின் வாயிலில் வந்து காத்திருக்க.

இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று அவள் வகுப்பு நேரத்தில் கல்லூரியின் நுழை வாயிலில் யாருக்காகவோ காத்திருப்பது தன் தோழர்களின் மூலம் கோகுலின் செவிகளுக்குப் போக, 'அவள் யாருக்காகக் காத்திருக்கிறாள்? ஒரு வேளை அவளுடைய பாய் ஃப்ரெண்டா? அது எப்படி எனக்குத் தெரியாமல் அவளுக்குப் பாய் ஃப்ரெண்ட்' என்று மண்டைக்குள் குடைய, வேகமாகத் தன் வகுப்பறையை விட்டு வந்தவனுக்கு அங்கு அவள் தனித்துக் காத்திருப்பதைப் பார்த்ததும் கோபத்தில் முகம் விகாரமாக மாறியது.

'இத்தனை நாள் காத்திருந்தவனை விட்டு நேற்று வந்தவனைத் தேடுகிறாளோ?. அப்போ நான் என்ன இலவு காத்த கிளியா?' என்று உள்ளம் ஆத்திரத்தில் கொந்தளிக்க அவளுக்குத் தெரியாமல் மறைந்து நின்று கவனித்தான்.

அவள் வகுப்பறையை விட்டு திடீரென்று வெளியே சென்றதும் அவளைத் தொடர்ந்து வந்த தோழிகளும், "என்னடி, யாருக்காகடி வெயிட் பண்ற? எங்களுக்குச் சொல்லவேயில்லேயே?" என்று கிண்டல் செய்ய, அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல மஹா வாயைத் திறக்கும் முன்னே அதி வேகமாகக் காரை ஓட்டி வந்த அர்ஜூன் தன் தங்கைக்கு அருகில் வந்து நிறுத்தினான்.

அர்ஜூனின் காரைப் பார்த்ததுமே மஹாவின் கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

'நிச்சயம் இது வினோத் சம்மந்தப்பட்ட விஷயமாகத் தான் இருக்க வேண்டும். அவர் காரை ஓட்டி வந்த விதமும், சடாரென்று ப்ரேக் போட்டு என் அருகில் காரை நிறுத்திய வேகமுமே சொல்லியதே அவரின் கோபத்தை' என்று கதிகலங்கியவள் காரையே பார்த்திருக்க,
காரின் கருப்பு கண்ணாடியை இறக்கி விட்டவன் அவளைப் பார்த்தவாறே ஏறு என்பது போல் கதவை திறக்க, அது வரை அவளுடன் நின்றிருந்த அவளின் தோழிகள் ஸன் க்ளாஸ் போட்டு கம்பீரமாகவும் ஆணழகனாகவும் ஆளுமையுடனும் இருந்த அவனின் அழகை பார்த்து நிலைக்குலைந்தவர்கள் படபடப்புடன்.

"ஹே மஹா, யாருடி இந்த ஹேண்ட்ஸம்????" என்று அலறினார்கள்.

"டீ, அது என் அண்ணன் டீ.." என்று அவர்களிடம் கத்தியவள் காரில் ஏறப் போக அவளின் கையை இழுத்த அவளின் தோழிகளின் ஒருத்தி.

"ஏண்டி, இப்படி ஹீரோ மாதிரி ஒரு அண்ணன் இருப்பதா சொல்லவே இல்லைடி.. ஏன்? நாங்க சைட் அடிக்கக் கூடாதுன்னு மறைச்சிட்டியா????" எனவும், கிழிஞ்சது போ, இது மட்டும் அர்ஜூன் அண்ணா காதில் விழுந்ததோ தொலைந்தோம் என்று நினைத்தவள்.

"விடுங்கடி, நாளைக்குப் பேசுறேன். எங்க அண்ணனே காலேஜுக்கு வந்திருக்காங்கன்னா ஏதோ பெரிய பிரச்சனைன்னு அர்த்தம்.. ப்ளீஸ் நாளைக்குப் பார்க்கலாம்" என்றவள் காரில் ஏறினாள்.

அர்ஜூனைப் பார்த்ததும் அவளுடைய பாய் ஃப்ரெண்டாகத் தான் இருக்கும் என்று நினைத்த கோகுலுக்கு அவனின் அழகும் கம்பீரமும் நிச்சயம் தனக்கு இல்லை என்று உரைக்க,

"அவன் எப்படி இருந்தால் என்னடி, நீ எனக்குத் தான்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தவன், மஹா தன் தோழிகளிடம் "அர்ஜூன் என் அண்ணா" என்று சொன்னதுமே ஒரு பக்கம் நிம்மதி அடைந்தாலும், அர்ஜூன் வந்த வேகமும், அவனின் கம்பீர தோரணையும் அவன் மனதில் கிலி உண்டாக்க தவறவில்லை.

மறைந்து நின்றவன் அர்ஜுனின் கண்களில் படாதவாறு மேலும் தன்னை மறைத்துக் கொண்டான்..

காரில் ஏறியதில் இருந்து அர்ஜூன் ஏதாவது பேசுவான் என்று அவன் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு மஹா வர, ஆனால் அவன் வாய்த் திறப்பதாகத் தெரியவில்லை.

அதற்கு மேல் பொறுக்க மாட்டாது ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"என்னாச்சு அண்ணா? ஏன் திடீர்னு, என்னன்னு சொல்லுங்கண்ணா.. எனக்கு என்னமோ நீங்க அமைதியா வரதப் பார்த்தா பயமா இருக்கு" எனவும், "ஒன்னும் இல்ல.. பேசாம வா" என்றான்.

மீண்டும் நிசப்தம்.

அச்சத்தில் படப்படப்பு வர, இதயம் வேறு அதற்கு ஏற்றார் போல் தன் துடிப்பை பல மடங்கு அதிகரிக்கச் சிறிது நேரம் அமைதியாக வந்தவளால் அதற்கு மேல் மௌனமாக இருக்க இயலவில்லை..

காரினுள் குடிக்கொண்டிருந்த அமைதியை கிழிக்கத் திவ்யாவை பற்றிப் பேசத் துவங்கினாள்.

அர்ஜூன் எதிர்பார்த்ததும் அது தானே.

ஒற்றை விரல் அசைவில் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கர்ஜிக்கும் சிங்கம் இன்று சிறு பிள்ளை போல் தன் சின்னத் தங்கையிடம் ஆறுதலை தேடி வந்திருக்கிறது..

ஆனால் அவனின் இயற்கையான குணம் தன் மனதில் இருப்பதை வாய் திறந்து வெளிப்படையாகச் சொல்ல விடவில்லை..

"ஏன் அண்ணா, நேத்து அப்படி நடந்துக்கிட்டீங்க. பாவம் அண்ணா திவ்யா அண்ணி.. ஏற்கனவே ரொம்பப் பயந்த சுபாவம் அவங்க. இதுல நீங்க நடந்து கொண்ட விதத்தில் பாவம் ரொம்ப மனசு கஷ்டப்பட்டுட்டாங்க. நேத்து ராத்திரி முழுதும் தூங்கவே இல்லை. அழுதுகிட்டே இருந்தாங்க தெரியுமா? நீங்களும் ஒன்னு புரிஞ்சுக்கனும்.. அவங்களுக்குப் பத்தொன்பது வயது தான் ஆகுது.. நம்ம எல்லாத்தையும் விட ரொம்பச் சின்னப் பெண்தான்னு.. ஆனால் எனக்கு நல்லா தெரியும் உங்களுக்கு அவங்கள எவ்வளவு பிடிக்கும்னு. இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க. இது யாருக்கு, ஏன் திவ்யா அண்ணிக்கே தெரியுமோ தெரியாதோ தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்" என்று கூற அவளைத் திரும்பி பார்த்தவன் ஒன்றும் பேசாமல் காரை ஓட்டுவதிலேயே கவனம் ஆக இருக்க,

இதற்கு மேல் ஒரு அண்ணனிடம் ஒரு தங்கை எப்படி விளக்குவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

அருணோடு கூட அவள் கொஞ்சம் மனம் விட்டு பேசி விடுவாள்... ஆனால் அர்ஜுனிடம் இவ்வளவு பேசியதே அதிசயம்.

வாழ்க்கையில் இரண்டாவது முறையாக அதுவும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை, திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாள்..

அவனும் இத்தனை நேரம் அவள் பேசியதற்குக் கோபப்படாமல் அமைதியாக இருந்ததே அவனின் குணத்திற்கு மாறு பட்டது என்று நினைத்தவள் தானும் மௌனமாகி விட, அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் காரை மருத்துவமனை வாயிலில் நிறுத்தினான் அர்ஜூன்..

தன்னை மறந்து யோசனையில் வந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவன் காரை நிறுத்தி இருப்பது மருத்துவமனையில் என்று.

அது வரை வினோத்தை மட்டுமே நினைத்து பயந்து கொண்டு வந்தவளை வேறு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்ற திகில் கவ்வி கொள்ள, ஒரு வேளை நேற்று அண்ணா அப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் அண்ணிக்கு தான் ஏதோ ஆகிவிட்டதோ என்று நினைத்தவள் அர்ஜூனின் கையைப் பற்ற, அவளின் கையை அழுத்திக் கொடுத்தவன் "இறங்கு" என்றான்.

"அண்ணா, எனக்குப் பயமா இருக்கு, யாருக்கு? என்னாச்சு?"

பிடித்திருந்த அவள் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டியவன்.. "வா' என்று மட்டும் சொல்லி முன்னால் நடக்க.

ஒன்றும் புரியாமல் மனக் கலக்கத்துடன் விறுவிறுவென்று அவன் பின்னேயே வேகமாக நடந்தவள், அவசர சிகிச்சை பிரிவின் அருகில் அமர்ந்திருந்த அருணையும் தந்தையையும் பார்த்து ஓடிச் சென்று என்ன என்று விசாரிக்க,

"ஒன்னும் இல்லடா, மாம்க்கு மைல்ட் அட்டாக். பட் கரெக்டான நேரத்தில ஹாஸ்பிட்டலில் சேர்த்ததால இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று சொன்னார் பாலா.

அதிர்ந்தவள் ஓடிச் சென்று ஐ.சி.யுவின் கதவின் வழியே தன் அன்னையைப் பார்த்தவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது..

அவளை இறுக்கி அணைத்து பாலாவும் அருணும் ஆறுதல் சொல்ல சிறிது நேரத்தில் கண் விழித்த ஸ்ரீ மஹா வந்திருப்பதை அறிந்தவர் அவளுடன் உரையாடிவிட்டு அர்ஜூனை தேட, ஆனால் அதற்குள் அவன் மருத்துவமனையை விட்டுச் சென்றிருந்தான்.

மஹாவிடம் திவ்யாவின் கடிதத்தைப் பற்றியும் அவள் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதையும் ஸ்ரீ மூச்சு வாங்க எடுத்துரைக்க..

அர்ஜூனிற்குத் தன் மனைவியின் மீது அரும்பியிருந்த காதலையும், அதனை அவன் வெளிப்படுத்துவதில் ஏற்பட்டிருந்த தடுமாற்றத்தையும் முதல் முறை தன் அன்னைக்குத் தெளிவுபடுத்தினாள் மஹா.

கடினமான பாறையில் இருந்து கூட நீர் எடுத்துவிடலாம் ஆனால் தன் மகனின் இதயத்தில் இருந்து காதலா? தன் காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை.

அவன் தன் மனைவியை ரசிப்பதை அவரும் தான் கண்டிருந்தார். அவன் கண்கள் அவளை அதீத ஆர்வத்துடன் தேடுவதை அவரும் கண்கூடாகப் பார்த்திருந்தார்..

ஆனால் நேற்று அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட விதம், திவ்யாவின் மெல்லிய இதயத்தைக் குத்தி கிழித்த அவனின் கூரிய ஈட்டி போன்ற வார்த்தைகள், அவள் வீட்டை விட்டுச் சென்றுவிட்டது தெரிந்தும் பதறாமல் நிதானமாக இருக்கும் அவனின் நிலை என்று அவரின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகச் சிதற அடித்திருந்தான் அர்ஜூன்.

"மாம், அர்ஜூன் அண்ணனைப் பத்தி எனக்கு மட்டும் தான் மாம் தெரியும்.. அவங்க எந்த அளவுக்கு அண்ணிய லவ் பண்ணுறாங்கன்னு" என்று மஹா தொடர, ஸ்ரீயால் நம்ப முடியவில்லை..

"அப்படி அவளை லவ் பண்றவன் ஏன் அந்த மாதிரி நடந்து கொண்டான்? என்று வேதனையுடன் கேள்வி எழுப்ப, "அது தான் எனக்கும் புரியலை மாம். ஆனால் எனக்கு நல்லா தெரியும். அண்ணா எப்பவோ திவ்யா அண்ணிய வைஃப்பா ஏத்துக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு. ஹி இஸ் இன் லவ் வித் ஹெர் [He is in love with her] " என்றாள் உறுதியாக.

ஸ்ரீக்கும் புரிந்தது. ஆனால் சிக்கலை உருவாக்கிய அவனே அதனைத் தீர்க்கவும் வேண்டும்.. அதற்கு அவன் தன் மனைவியைத் தானே தேடி செல்ல வேண்டும்.

அது வரை நாம் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும் என்று முடி வெடுத்தார்.

அன்று இரவு வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டவன் மறுநாள் மாலை வரை மருத்துவமனையில் தன் அன்னையுடன் கழித்துவிட்டு இரவு நெருங்கவும் வீட்டிற்குக் கிளம்பக் காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் மனதில் மஹா சொன்ன வார்த்தைகளே திரும்பத் திரும்ப ஒலித்தது.

வரும் வழியெல்லாம் தன்னவளின் நினைவுகளே அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்க, சுனாமியாய் ஆர்ப்பரிக்கும் தன் மனதை அடக்கவும் தெரியாமல், கொந்தளித்துக் கொண்டு இருக்கும் தன் உள்ளத்தை ஒருவரிடமும் வெளிப்படுத்தவும் முடியாமல், வீட்டிற்குப் போகவும் விருப்பம் இல்லாமல் காரிலேயே சுற்றியவன் வெகு நேரம் கழித்தே வீட்டிற்குச் சென்றான்.

காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் முன் அவன் கண்களில் முதலில் பட்டது திவ்யா நேற்று காலையில் வீட்டை விட்டுச் செல்வதற்கு முன் வாசலில் போட்டிருந்த அழகிய கோலம்.

மனமுழுவதும் கவலைகளையும் வேதனைகளையும் சுமந்திருந்தாலும் இதுவே தான் கடைசியாக இந்த வீட்டின் வாயிலில் போடும் கோலம் என்று ஏற்கனவே அவளாக முடிவெடுத்திருந்தாலும் சிறிதும் கசங்கி சிதறாத பிரமிக்கதக்க வகையில் அவள் போட்டிருந்த கோலம் அர்ஜூனிற்கு அவன் மனையாளின் பொறுமையையும் மென்மையான மனதையுமே உணர்த்தியது.

அன்று ஒரு நாள் அவள் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது தான் எதேச்சையாக வந்து விட, அவனைக் கவனிக்காதவள் புடவையை நன்கு இழுத்து சொறுகி கோலம் போடுவதில் கவனமாக இருக்க,

தன் இதயத்தைக் கலங்கடித்த அவளின் எழில் தோற்றமும், கணவனாகக் கர்வத்துடன் தான் ரசித்த அவளின் மார்பில் தவழ்ந்து ஊசலாடிக் கொண்டிருந்த தாலிக் கயிறும், வாழைத் தண்டு போல் பளபளத்த கால்களும், அதில் அவள் அணிந்திருந்த மெல்லிய வெள்ளி கொலுசுகளும் கண்களின் முன் தோன்ற, பிரமை தட்டிய நிலையில் சில நிமிடங்கள் வாயிலிலேயே நின்றவன் பின் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்..

வீட்டிற்குள் நுழைத்தவனின் கண்கள் தன்னையும் அறியாமல் டைனிங் டேபிளுக்கும் சமையல் அறைக்கும் பயணிக்க, சிறு பெண் போல் வீட்டில் வளைய வந்த தன் மனையாளின் அழகிய தோற்றமும், குழந்தைத்தனத்துடன் அவள் கலகலத்து சிரிக்கும் பொழுது ஆழ விழும் கன்னக்குழிகளும் இன்று நிழலாய் தோன்ற,

நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமை மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே

என்று அவளின் நிஜத்தைத் தேடி மனம் கனத்துப் போய்ப் பிசைய, தன்னிச்சையாக அவனின் கால்கள் அவனைச் சமையல் அறைக்குள் இட்டுச் சென்றது.

அங்கு மலரினும் மெல்லிய அவளின் மென்மையான இடையைத் தழுவியதும், அதனால் அவள் ஸ்தம்பித்துப் போய்க் கண்களை இறுக்க மூடி நின்றதும் அவளின் மென்மையான உடல் அவன் மீது தவழ்ந்து ஏற்பட்ட உணர்ச்சிகளும் கிளர்ச்சியைக் கிளப்பி அவன் சித்தத்தைத் தடுமாறச் செய்தது..

அவளின் மென்மையான ஸ்பரிசமும், எப்பொழுதும் மல்லிகை சூடியிருப்பதால் அதன் நறுமணம் கலந்த அவளின் பிரத்யேக வாசமும் வேட்கையைத் தூண்ட, தடுமாறிய மனமே உணர்த்தியது அவளின் மேல் உள்ள அளவுக் கடந்த காதலையும் தன் மனைவியின் அருகாமையைத் தேடும் தன் இதயத்தின் தவிப்பையும்.

அவளின் களங்கம் இல்லாத வெகுளித்தனமான உள்ளமும், தன்னைக் கண்ட ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் தலை கவிழ்ந்த நிமிடங்களும், தான் அகன்றதும் தன் முதுகையே ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்திருந்த அவளின் விழிகளும் அர்ஜூனிற்கு நிமிடத்திற்கு ஒரு தரம் அவளில்லாத நிதர்சனத்தை உணர்த்தியது.

தன் அறைக்கு வந்தவன் மனதை இறுக்கி பிடித்துத் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு ஆழ்ந்த பெரு மூச்சைவிட்டவன் அப்படியே கட்டிலில் சாய்ந்தான்..

இதுவே நிதர்சனம். இதுவே யதார்த்தம்..

தன் குடும்பத்தாருடன் விவரம் தெரிந்த நாள் முதலே தள்ளி இருந்தவன். ஒருவரிடமும் மனம் விட்டு பேசியிராதவன்.. உள்ளம் திறந்து யாரிடமும் வெளிப்படையாகக் கலந்திராதவன்..

தன்னை சுற்றி ஒரு இரும்பு கோட்டைச் சுவரைக் கட்டி அதனை அனைத்து பக்கங்களிலும் இறுக்கப் பூட்டி தன் உள்ளத்தைத் தனக்குள்ளே சிறை வைத்து இருபத்தி ஏழு வயது வரை கடினமான இருதயத்துடனும், தொழிற்கள் மட்டுமே தன் உலகம் என்ற வெறியுடனும் வாழ பழகியிருந்தவன்.

அப்படிப் பட்ட அர்ஜூனின் இதயத்தில், புத்தியில், உணர்வில் நுழைந்து கலந்தவள் அவனை முதன் முதலில் கவர்ந்த திவ்யா..

இரும்பாகி இருந்த உள்ளத்தில் ஆத்மாவையே ஊடுருவிப் பிரவாகம் செய்து முளைத்தெழுந்த காதலை மலரச் செய்து அவனின் இதயத்தைத் தன் வசமாக்கியவள்.

மனையாளின் நினைவுகள் கலங்கடிக்கத் திணறிக் கொண்டிருந்தவன் பீரோவை திறந்து வெளியில் எடுத்தான் அவளுக்கு முதன் முதலாகத் தான் வாங்கிய பரிசினை.

அது வைரகற்களும் ரூபிக்களும் பதித்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரு நகை செட்.

தங்க சங்கிலியில் ஐந்து ரோஜாப் பூக்கள் கொத்தாக இருப்பது போல் உள்ள ஒரு கழுத்துப் பதக்கம் (பெண்டெண்ட்).. ரோஜாப் பூக்கள் ரூபியிலும் ஆங்கங்கே வைரக்கற்களும் பதிக்கப் பட்டிருந்தது பார்ப்பவர்களின் கண்களை அத்தனை கவர்வதாக இருந்தது.

அதே டிசைனில் தோடுகளும், ஒற்றை ரோஜா உள்ள மோதிரமும், அழகாக வரிசையாக ரோஜா பூக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போல் டிசைன் செய்யப்பட்ட வளையல்களும் அவனின் முதல் பார்வையிலே கொள்ளை கொள்வதாக இருக்க, அமெரிக்காவில் இருந்து கிளம்பும் நேரம் தன்னவளுக்காகவே என்று வாங்கி வந்திருந்தான்.

கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் சாய்ந்தவாறு படுத்தவன் நகைகளைக் கையில் தடவிப் பார்த்தவனின் மனது அவளையே வண்ணத்துப்பூச்சியாய் சுற்றி சுற்றி வர மனம் கரைந்து காதலில் உருகத்தான் செய்தது..

இத்தனை காதல் எனக்கு இருக்கும் பொழுது உனக்கு மட்டும் ஏண்டி என் மேல் ஆசை இல்லாமல் போனது. உன் உள்ளம் சொல்லவில்லையா நான் உன்னை விரும்ப ஆரம்பித்து இருக்கிறேன் என்று.

பின் ஏன் நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகம் செவ்வானமாய்ச் சிவந்தது..

என் பார்வையின் அர்த்தம் புரியாதவளுக்கு உன் வெட்கத்தின் அர்த்தம் கூடவா புரியவில்லை?

இத்தனை நாட்கள் பொறுத்திருந்தவளுக்கு நான் அழைத்த அன்று மட்டும் என் அறைக்கு வந்திருந்தால் என் மனதின் ஆசையை வெளிப்படுத்தி இருப்பேனே.

இது வரை தன் மன உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்தாமல் தனக்குள் அடக்கப் பழகியவனுக்கு முதல் முறை காதல் என்று மெல்லிய சுகமான உணர்வு தோன்றியும் வெளிப்படுத்தத் தெரியாமல் தவிக்கிறேனே...

எந்த பெண்ணிடமும் நெருங்கி பழகியிராதவனுக்குக் காதலை சொல்வது அத்தனை எளிதல்ல என்று விளக்கியிருப்பேனே..

ஏன் இப்படி என்னை விட்டு சென்றாய்? என்னிடம் வந்து விடுடி.. என்று உள்ளுக்குள் புலம்பியவனுக்கு அவன் உடலின் வேர் வரை ஊடுருவி அலை அலையாக அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த உணர்வு அவனுக்குப் புதிது.

இதுவரை அனுபவித்திராத அந்த உணர்வும் ஒரு வித உவகையே தர கம்பீரமான, எதற்கும் அசையாத அந்த ஆண்மகனையே அது அசைத்து தான் பார்த்தது..

அலைப் போல் பாய்ந்த தன் உள்ளத்தினை ஒரு முகப்படுத்தி எந்த ஒரு பெண்ணிடமும் சிக்காத தன் மனதை எப்படி இப்படி ஆட்டி படைக்கிறாள் தன் மனைவி என்று ஆராய்ந்தவன் அந்த நிமிடமே தன்னிடம் அவள் வரமாட்டாளா என்று ஏங்க ஆரம்பித்தான்..

அருகில் இல்லாத பொழுதும் அவன் கல் மனதை சுழல்காற்று போல் சுழற்றி அடித்த பூங்காற்றானவள் தன் கணவனின் உடலும் உள்ளமும் தன் இதயத்தை, தன் காதலை, தன் அருகாமையை, தன் அணைப்பை தேட செய்தாள்.

பணிவன்பு உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.. அவர்கள் உணர்ச்சிகள் மேம்படும் போது அவற்றின் வேகத்திற்கு இடம் கொடுக்காது சற்றே நிதானித்துத் தன் சுவாதீனத்தை இழக்காமல் தக்க வைத்துக் கொள்கிறார்கள்..

தங்களின் உணர்வுகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.

இதுவரை தன் மனைவியுடனான தன் இல்லற வாழ்க்கையில் தன் பண்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருந்தவன் "நான் பண்புள்ளவனா? பண்பில்லாதவனா? என் மனைவியை நான் எடுத்துக் கொள்ளப் பண்பு ஏதும் தேவை இருப்பதாகத் தெரியவில்லையே..”

“அவள் வரவில்லை என்றால் என்ன? அவளை என்னிடம் இழுத்து வருவதற்குக் கூட எனக்கு முழு உரிமை இருக்கிறது” என்று நினைத்தவன் நாளையே அவளை அழைக்கச் செல்வது என்று முடிவெடுத்தான்..

அவளாக வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும் அவளைத் தூக்கி வருவது என்று நினைத்தவனின் முகத்தில் இளமுறுவல் தோன்ற, அதன் பின்னரே உறக்கமும் அவனை ஆரத்தழுவியது.

மறு நாள் விடிந்தும் விடியாமலும் வழக்கத்தை விடச் சீக்கிரமாக அலுவலகத்திற்குச் சென்றவன் அன்று செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் அதி விரைவாக முடித்தவன் கதிரை அழைத்தான்.

"கதிர், இன்னைக்கு வெளியில் போக வேண்டும். எப்படியும் திரும்ப வருவதற்கு நைட் ஆகிடும்.. அதனால இன்றைக்கு ஏதாவது முக்கிய மீட்டிங்ஸ் இல்லன்னா காண்டிராக்ட்ஸ் ஏதாவது சைன் பண்ணனும்மான்னு சீக்கிரம் செக் பண்ணி சொல்லுங்க.."

"யெஸ் சார், இதோ செக் பண்ணிடுறேன், சார். ஸ்ரீ மேடம் இப்போ எப்படி இருக்காங்க?"

"ஷீ இஸ் கெட்டிங் பெட்டர் [She is getting better] " என்றவன் மற்ற அலுவல்களைப் பற்றிச் சிறிது நேரம் விவாதித்தவன் கதிரை செல்ல அனுமதிக்க.

அதுவரை வேலைகளிலும், தான் செய்ய வேண்டிய அன்றைய அலுவல்களைப் பற்றி விவரிப்பதிலும் மூழ்கியிருந்த தன் MD யின் முகத்தில் சட்டென்று தோன்றிய பரவசத்தைப் பார்த்த கதிருக்கு ஏனோ அர்ஜூனின் முகத்தில் திடீரென்று புலப்பட்ட இந்த மகிழ்ச்சி ஆச்சரியத்தைக் கொடுத்ததே..

ஒரு வேளை ஸ்ரீ மேடத்தின் உடல் நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொன்னதினால் வந்த சந்தோஷமா அல்லது நமக்குத் தெரியாத அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு எதுவும் அவரைப் பரவசப்படுத்தியதால் வந்த மனமகிழ்ச்சியா?

இல்லை நமக்குத் தெரியாமல் ஏதாவது மிகப் பெரிய க்ளையண்ட்ஸோ அல்லது யாருக்குமே எளிதில் கிடைக்காத ப்ராஜக்ட் சக்ஸஸோ கிடைத்ததினால் வந்த உவகையோ.

மூளையே சூடாகும் வரை யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அர்ஜூனின் முகத்தில் தெரிந்த மாறுதல்களுக்கு எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கேட்டால் சத்தம் போடுவார். கேட்காமலும் இருக்கமுடியவில்லை.. தன்னை அடக்க முடியாமல் மனதில் தோன்றியதைக் கேட்டும் விட்டான்.

"Anything special today sir?"

கணினியில் கண்களைப் பதித்திருந்த அர்ஜூன் அவனை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டியவன் மறுபடியும் கணினியில் கண்களைப் பதித்தான்.

"அதானே, இவராவது அவர் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதாவது" என்று எண்ணிய கதிர் அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு வழியில்லாமல், அப்படியே நின்றாலும் அதற்கும் இவரிடம் இருந்து ஒரு முறைப்பே பரிசாகக் கிடைக்கும் என்று யோசித்தவாறே அறையை விட்டு வெளியேற.

அவன் சென்றதும் அவனை நிமிர்ந்து பார்த்த அர்ஜூனின் இதழ்களில் இள நகை விரிந்தது..

எத்தனை தான் அர்ஜூன் தனக்கு முன் மலைப் போல் குவிந்திருந்த அலுவல்களை விரைவாக முடிக்க முயற்சித்தாலும் அன்று மதியம் வரை வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள அவன் எதிர்பார்த்தது போல் உடனடியாகத் திவ்யாவின் ஊருக்கு கிளம்ப இயலவில்லை.

ஒரு வழியாக மதியத்திற்கு மேல் கிளம்பியவன் தன் தந்தையை அழைத்துத் தான் நேரம் சென்றே இன்று மருத்துவமனைக்கு வரமுடியும் என்றான். ஆனால் தான் திவ்யாவின் ஊருக்கு செல்வதையோ அல்லது அவளை அழைத்து வரப் போவதையோ பாலாவிடம் சொல்லாமல் வேண்டுமென்றே மறைத்து விட்டான்..

ஏனெனில் அருண் திவ்யா கடலூருக்கு சென்றிருக்கிறாள் என்று சொன்னதை வைத்து அவள் அங்குத் தான் இருப்பாள் என்று தெரியும் ஆனால் திவ்யாவின் நிலைமை அவனுக்கு இன்னும் புலப்படவில்லை..

அவளுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவளுடன் தான் இன்று சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்று உள்ளூர உறுதி எடுத்துக் கொண்டாலும் அவளை அழைத்து வரும் வரை ஒருவரிடமும் சொல்லாமல் செல்வதே சிறந்தது என்று முடிவெடுத்திருந்தான்.

காரைக் கிளப்பியவனின் உள்ளத்திலும் உடம்பிலும் புதுத் தெம்பு ஊற, மனம் பாரம் குறைந்து இலகுவாக உணர, தன் மனையாளை சந்திக்கும் ஆர்வத்துடன் இதயம் முழுவதும் நிரம்பி ததும்பி வழியும் காதலை சுமந்திருந்தவன் மூன்றாவது முறையாகத் தன்னிலை தாழ்ந்து தன்னவளின் தஞ்சம் தேடி சென்று கொண்டிருந்தான்.

முதல் முறை தன் பார்வையால், தன் விழிகளில் வழியும் காதலால் தன் தேடலை தன் மனம் கவர்ந்தவளுக்கு உணர்த்தியிருந்தான்..

இரண்டாம் முறை தன் மனம் திறந்து, தன் ஸ்பரிசத்தால், தன் அணைப்பால், தன் வாய் திறந்து அவளின் அருகாமையை இறைஞ்சியிருந்தான்.

இதோ மூன்றாம் முறை அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள, அவளை முழுவதுமாகத் தன் வசப்படுத்த, தன் கர்வம், ஆளுமை, அதிகாரம், அந்தஸ்து அனைத்தையும் அவளிடம் சமர்ப்பித்து அவளைத் தன்னுடன் அழைத்து வர நேரில் சென்று கொண்டிருக்கிறான்..

தன் கணவனின் மனதை, அவன் இதயத்தில் ஆர்ப்பரிக்கும் திரை கடலெனத் திரண்டிருந்த காதலை புரிந்து அவன் மனையாள் அவனுடன் இணைந்து வாழ வருவாளா??

இரண்டு முறை தன் கணவனின் அருகாமைக்கு அஞ்சி அவனின் ஆழ்ந்த நம்பிக்கையைக் குலைத்தவள், தன் அச்சத்தினாலும் கலக்கத்தினாலும் அவனை நிராகரித்தவள் இந்த முறை அவனின் கனவை நிறைவேற்றுவாளா?

ஆனால் இன்று தன் கணவன் தன்னுடனான இல்லற வாழ்க்கைக்கு, தங்களின் தாம்பத்தியத்திற்கு அச்சாரம் போடாமல் விடப்போவதில்லை என்ற முடிவோடு வந்து கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லை அந்தப் பேதை.

தொடரும்..
 

JB

Administrator
Staff member

அத்தியாயம் - 22

தன் மனைவியை அழைத்து வர வேண்டும்.. இன்றே அவளுடனான தன்னுடைய இல்லற வாழ்க்கையைத் துவங்கி விட வேண்டும் என்ற உறுதியோடு அதி வேகமாகக் காரை செலுத்தியவன் வழக்கத்தை விட விரைவாகக் கடலூரை அடைந்தவன் திவ்யாவின் வீட்டு விலாசத்தைக் கேட்க வினோத்திற்கு அழைத்தான்.

வினோத்தின் அலை பேசியில் அர்ஜூனின் எண் ஒளிர்வதைப் பார்த்த வினோத்திற்கு ஒரு பக்கம் "மஹாவைப் பற்றிப் பேச அழைத்திருப்பாரோ அத்தான்??" என்ற எண்ணம் அவனின் மனதில் அதிகப்பட்ச திகிலை உருவாக்கினாலும், "ஒரு வேளை அது திவ்யா சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்து அவளைத் தன்னுடன் அவர் அழைத்துச் செல்வதற்கான அழைப்பாக இருந்தால் எத்தனை சந்தோஷம்" என்ற நிம்மதி உணர்வும் படரவே செய்தது.

அழைப்பை எடுத்தவனுக்கு அவன் எதிர்பார்த்தது போல் பூரிப்பு ஏற்படுத்தும் விதத்தில் அர்ஜூன் தான் கடலூருக்கு வந்திருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்கு வரப் போவதாகவும் தெரிவித்தவன், அவர்களின் வீட்டிற்கு வழியைக் கேட்க, அது வரை அவர்களை எப்படிச் சேர்த்து வைப்பது என்று குழப்பத்தில் இருந்து வந்த வினோத்திற்கு மனம் தணிந்து ஏதோ சுமை இறங்கியது போன்று இருந்தது.

அர்ஜூன் திவ்யாவை தேடி வந்திருப்பதை அறிந்ததும்.

ஆனால் திவ்யாவின் நேரம் அவள் தன் வீட்டில் இல்லாமல் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அவர்களின் அத்தை வீட்டில் இருக்கிறாள் என்றும் வினோத் கூற, "ஏன்? எதற்கு அங்கு இருக்கிறாள்?" என்று கேள்விகள் அர்ஜூனின் மனதில் குடைய,
"ஏன் வினோத்? உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சனையா??" என்றான் குழப்பத்துடன்.

ஒவ்வொரு முறை தான் வெளியூருக்குச் செல்லும் பொழுது வாயிலில் நின்றவாறே தன் கார் அவளின் கண்களில் இருந்து மறையும் வரையிலும் விழிகளில் நீர் கோர்த்திருக்க, உதிர்க்க விரும்பிய வார்த்தைகளை உதிர்க்காமலே மனதிற்குள் பூட்டி வைத்து, குமுறிக் கொண்டிருந்த இதயத்தை மௌனமான அலறலுடன் அடக்கி வைத்து, தன் கணவன் தன்னிடம் திரும்பி வந்துவிட மாட்டானா என்று அமைதியற்று அவனுடன் செல்ல துடிக்கும் கால்களைக் கட்டுப்படுத்தி அவள் நின்று இருக்கும் விதமே அர்ஜூனிற்கு உணர்த்தியிருந்தது தன்னவளுக்குத் தன்னைப் பிரியும் வலியை..

தற்காலிக பிரிவையே தாங்க முடியாமல் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்து ஊமையாக அழும் தன் மனைவி, தான் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாகக் கூறியதும் அழுத விழிகளுடனே கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு வந்தவள் ஒரு வேளை மனதை அழுத்தியிருந்த உளைச்சல் தாங்காமல் வேறு ஏதேனும் முடிவு எடுக்க முயன்றிருந்தால்?

அதனால் தான் அவளை அவர்கள் வீட்டில் தங்க வைக்காமல் வேறு எங்கேயோ வைத்திருக்கிறார்களோ என்று அந்தச் சில நிமிடங்களிலேயே அர்ஜூனின் மனதில் ஆயிரம் கலவரங்கள்.

ஆனால் அவன் உள்ளத்தின் கலவரங்களை அடக்கி, அதற்குப்பதில் மனம் முழுவதும் உஷ்ணத்தையே கிளப்பியது அர்ஜூனின் கேள்விக்கு வினோத் சொன்ன பதில்..

"இல்லை அத்தான். எங்க அத்தை வீட்டில் இன்று ஒரு சின்ன விஷேஷம். அதனால் திவ்யா அம்மாவோட அங்க போயிருக்கா"

'அவள் வீட்டை விட்டு வெளியே சென்றதில் இருந்து வீட்டில் எத்தனை பிரச்சனைகள். அவள் லெட்டரைப் படிச்சுட்டு ஹார்ட் அட்டாக் வந்து மாம் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிருக்காங்க. நான் அப்படி அநாகரிகமாக நடந்துக்கிட்டதனால, கடுமையான வார்த்தைகளைப் பேசி அவளைக் காயப்படுத்தி இருந்ததனால வேறு ஏதாவது தப்பான முடிவுக்குப் போயிருவாளோன்னு எனக்கு எவ்வளவு கலக்கம். அவளை ஒரு நாள் கூடப் பிரிஞ்சிருக்க முடியாமல் எல்லா வேலைகளையும் விட்டுட்டு வாழ்க்கையில் முதல் முறையா ஒரு பெண்ணைத் தேடி வந்திருக்கேன்.. ஆனால் இவ என்னன்னா விஷேஷத்திற்குப் போயிருக்காளாமே?' என்று மனம் கொந்தளிக்க,

'ஒரு வேளை நான் அவசரப்பட்டு அவளைக் கூப்பிட வந்துட்டேனோ? எனக்கு இருப்பது போல் அவளுக்கு அப்படி ஒன்னும் என்னைப் பிரிஞ்சிருக்கிற கவலை இல்லையோ?' என்று நினைத்தவனுக்குப் பேசாமல் சென்னைக்குத் திரும்பி விடுவோமா என்ற எண்ணம் கூட வந்தது.

அர்ஜூனின் மௌனம் வினோத்திற்கு எதனையோ உணர்த்த சட்டென்று சுதாரித்தவன்..

"அத்தான் நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நானே அங்க வருகிறேன்.. நீங்க என்னை ஃபாலோ பண்ணி இங்க வீட்டுக்கு வரலாம்" எனவும், "சரி" என்றவன் தான் இருக்கும் இடத்தைச் சொல்லி வினோத்திற்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் திவ்யாவின் மேல் சீற்றத்தையும் மனதில் கடுமையுமே கிளறிக் கொண்டிருந்தது.

தன் அன்னை இவ்வாறு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் பொழுது மனைவியைத் தேடி தான் இவ்வளவு தூரம் வந்திருப்பது என்னவோ அந்த நிமிடம் மனதிற்கு உறுத்தலாக இருக்க, மானசீகமாகத் தன்னைத் திட்டிக் கொண்டவனின் கண்களில் அவன் காருக்கு அருகிலே இருந்த ஒளி பிரதி கடை தென்பட்டது.

சில நிமிடங்கள் எதனையோ யோசித்தவன் முகத்தில் இள முறுவலுடன் சட்டென்று காரில் இருந்து இறங்கி கடையில் உள்ளே சென்றவன் எதனையோ அச்சடிக்கச் சொல்லி முடித்தவுடன் அதனைத் தன் சட்டையின் உள்ளே சொருகியபடி காரில் வந்து அமர்ந்தவனின் முகத்தில் அத்தனை பரிகாசம்.

அதற்குள் அர்ஜூனின் காரை கண்டுப்பிடித்த வினோ தன் வண்டியை காருக்கு அருகில் நிறுத்தி அவனின் நலன் விசாரித்த பிறகு தன்னைப் பின் தொடர சொல்ல, வினோத்தின் வாகனத்தைப் பார்த்த அர்ஜூன்,

"வினோத், நீங்க வேண்டுமானால் என்னோட கார்ல வாங்களேன்.. பிறகு நீங்க உங்க வண்டிய எடுத்துக்கங்க" என்றான்.

ஏனெனில் வினோத்தின் வண்டி அப்படி ஒரு பழைய வண்டி. அர்ஜூனுக்கு எப்படி அந்த வண்டியை தொடர்ந்து, அதுவும் இந்தக் குறுகலான தெருக்களில் செல்வது என்று இருந்தது.

அது வரை அர்ஜூனின் மாசராட்டி க்வாட்ரெபோர்ட் காரை வெளியில் இருந்தே பார்த்து ஏங்கியிருந்த வினோத்திற்கு அர்ஜூன் தன்னைத் தன் காரில் வரச் சொன்னதும் மனம் குதூகலிக்க உடனே சரி என்றவன், காரில் ஏறி அமர, காரின் உள் பக்கத்தைப் பார்த்தவன் அந்த நொடியே காதலில் விழுந்துவிட்டான் அந்தக் காரின் மேல்.

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் இருந்த வினோத்தைப் பார்த்த அர்ஜுன் "ஷேல் வி கோ?" எனவும்,

அப்பொழுது தான் அர்ஜுனை கவனித்தான் வினோத்..

வெளிர் நீல நிற முழுக்கை சட்டை அணிந்து. ஏதோ மீட்டிங்கில் இருந்து நேரே வந்திருப்பார் போல. கட்டியிருந்த டையை லூசாக இறக்கி விட்டிருந்தவன் சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு, முழுக்கை சட்டையைக் கை முட்டி வரை மேலேற்றிக் கம்பீரமாக இருந்தவனின் இடது கையில் ரோலக்ஸ் கைக் கடிகாரம், வலது கையில் ப்ளாட்டின ப்ரேஸ்லட், Gucci ப்ராண்ட் ஸன் க்ளாஸ் என்று ஆளை அசத்த, அந்தச் சூழ்நிலையிலும் தன் தங்கையை நினைத்து வினோத்திற்குப் பெருமையாகவே இருந்தது..

'அப்பா முருகா, எப்படியாவது திவ்யாவிற்கும் அத்தானுக்கும் இடையில் உள்ள பிரச்சனையைத் தீர்த்து வச்சு அவர்களை ஒன்னு சேர்த்து வைப்பா' என்று மனது உருக தன் அன்பு தங்கைக்காக வேண்டிக் கொண்டான்.

காரை கிளப்பி வினோத் சொல்லும் பாதையில் பயணிக்க, அர்ஜூனிற்குச் சில நிமிடங்களுக்கு ஒரு முறை அலை பேசியில் அழைப்பு வந்து கொண்டிருந்தது.

அவற்றை எல்லாம் காரின் டேஷ்போர்டில் ஒளிர்ந்த எண்களில் இருந்து யாரென்று கணித்து அழைப்புகளை எடுக்காமல் வந்த அர்ஜூன், ஒரே ஒரு அழைப்பை மட்டும் எடுத்தான்...

மறு முனையில் சொன்ன தகவலைக் கேட்டுக் கோபம் தலைக்கு ஏற, வேறு ஒரு எண்ணிற்கு அழைத்தவன்.

"என்ன மிஸ்டர் மாதவன்? இந்த வருஷம் காண்ட்ராக்ட அந்தப் பார்டிக்கிட்ட க்ளோஸ் பண்ணியிருக்கீங்க போல?? அதுவும் வெறும் பதினெட்டு கோடி வித்தியாசத்தில? என்ன பத்தி நல்லா தெரியும். இதனால உங்களுக்கு என்ன இழப்பு நேரிடும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் திரும்பத் திரும்ப ஏன் என் பாதையில் க்ராஸ் பண்ணுறீங்க? நான் எப்போதும் போல ஒரே மாதிரி இருக்க மாட்டேன் மிஸ்டர் மாதவன்.. எலெக்க்ஷன் நேரம் வேற நெருங்குது. அப்புறம் இது வேண்டும் அது வேண்டும்னு என்னோட ஆபிஸில் வந்து நின்னீங்கன்னா மினிஸ்டர்னு கூடப் பார்க்க மாட்டேன். பின்னாடி வருத்த படாதீங்க" என்று மென்மையாக ஆனால் அதே சமயம் அழுத்தமான குரலில் எச்சரிப்பதைப் போல் கூற,

அர்ஜூனின் குரலில் தெரிந்த மென்மையும், அவனின் இதழ்களில் நெளிந்த இகழ்ச்சி புன்னகையும், ஆனால் அவனின் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தையும் கண்ட வினோத் அரண்டுவிட்டான்.

ஒருவர் முகத்தில் ஒரே நேரத்தில் இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா?

"அதுவும் ஒரு மினிஸ்டரையே இந்த அளவுக்கு மிரட்டுகிறார் என்றால் இவர் எவ்வளவு பெரிய ஆள்??" என்று நினைத்தவனுக்குச் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கியது..

மீண்டும் தன் ப்ரோக்கரை அழைத்த அர்ஜூன்.

"மணி, அவன் நூற்றியென்பது கோடிக்கு காண்ட்ராக்ட முடிக்கிறான் அப்படின்னா நீங்க இருநூறு கோடிக்கு ஏற்றி முடிக்க வேண்டியது தானே? இதற்குத் தான் உங்களுக்கு இவ்வளவு கமிஷன் கொடுக்கறது" என்று அலட்சியமாய்ச் சொன்ன அர்ஜூனின் வசதியும் அந்தஸ்தும் வினோத்திற்கு ஒரு உண்மையை மண்டையில் அடித்துப் புரிய வைத்தது.

அது மஹாவிற்கும் தனக்குமான தூரம் எத்தனை என்பதனை..

திவ்யாவின் வீட்டிற்குச் சென்ற பொழுதெல்லாம், அவர்களின் வசதியை பார்த்த பொழுதெல்லாம் வராத ஞானம், அர்ஜுனின் அருகில், அவனின் மிரட்டலில், அதுவும் கோடிகளை வெகு சாதாரணமாகப் பேசும் அவனின் பேச்சில் வந்தது.

மஹாவைத் தான் இழந்துவிடுவோமோ? என்ற எண்ணம் வேறு வர, அவனுடைய கவனம் அங்கில்லை என்று உணர்ந்த அர்ஜூன் தன்னுடைய பேச்சு அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்று உணர்ந்து பேச்சை மாற்றினான்..

"என்ன வினோத், பயந்துட்டீங்களா? வேற வழியில்லை வினோத்.. பிஸினஸில் இப்படி இருந்தால் தான் பிழைக்க முடியும். எந்த நிமிடமும் எச்சரிக்கையாவே இருக்கனும்.. இரண்டு நாளா கொஞ்சம் கேர்லஸா இருந்ததால வந்த பிரச்சனை. வாய்ஸ ரெய்ஸ் பண்ணலைன்னாலோ, நாம யாருன்னு அப்பப்போ காட்டாம இருந்தாலோ இவனுங்களுக்கெல்லாம் துளிர் விட்டுப் போய்விடும். அப்புறம் நம்மை ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பாங்க" என்றான் சிரிப்புடன். தன்னைக் கண்டு திகிலடைந்து இருந்த வினோத்தின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தை மாற்ற...

அர்ஜூனின் முகத்தைத் திரும்பி பார்த்த வினோத்திற்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் அந்த இடத்தில் இருந்து மாயமாய் மறைந்துப் போயிருப்பான். அந்த அளவிற்கு அர்ஜூனின் ஆளுமையும், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவனின் முகப் பாவனையும், அவனின் அதிகாரமும் வினோத்தின் நெஞ்சை கலங்க செய்திருந்தது..

ஒரு மனிதனால் இந்தளவிற்கு உள்ளத்தில் கோபமும் ஆனால் அதனை வெளிகாட்டாது முகத்தில் மென்மையையும் காட்ட முடியுமா. ஒரு வேளை இதில் தான் திவ்யா தவறிவிட்டாளோ. அவரின் உள்ளத்தில் இருப்பதை அவர் வெளிக்காட்டாமல் இவரின் கோபத்தையும் ஆளுமையையும் பார்த்து பயந்திருப்பாளோ.

தன் அத்தானிற்கும் திவ்யாவிற்கும் இடையில் இருக்கும் குழப்பமும் அதனால் விளைந்து கொண்டிருக்கும் சிக்கல்களும் அவனுக்குப் புரிவது போல் இருந்தது.

ஆனால் இதற்கான தீர்வு தான் என்ன என்பது அவனுக்குப் புலப்படவில்லை.

அர்ஜூன் பேசவும் அவனைத் திரும்பி பார்த்தவனின் முகத்தில் தோன்றியிருந்த கலக்கம் மறையாது ஒரு புன் சிரிப்பை மட்டுமே உதிர்த்தவன் அதற்குப் பின் வழி மட்டும் சொல்லிக் கொண்டு வர, சிறிது தூரத்திலேயே அர்ஜூனின் கண்களில் பட்டது தனக்கும் திவ்யாவிற்கும் திருமணம் நடந்த மண்டபம்.

தன்னையும் அறியாமல் காரை சடாரென்று ப்ரேக் போட்டு நிறுத்தியவன் வினோத்திடம் திரும்பி.

"வினோத். இது தானே எனக்கும் திவ்யாவுக்கும் மேரேஜ் நடந்த மண்டபம்?" எனவும்.

தன்னுடைய ரௌத்திரத்தினாலும், இகழ்ச்சியான புன்னகையாலும், மினிஸ்டரையே அதிகாரம் செய்கிற தன்னுடைய ஆளுமையான பேச்சினாலும், வினோத்தை கதி கலங்க செய்திருந்த அர்ஜூன், தனக்குப் பிடித்தம் இல்லாத திருமணம் ஆக இருந்தாலும் இன்றும் தன்னுடைய திருமணம் நடந்தேறிய மண்டபத்தை நியாபகத்தில் வைத்துச் சரியாக வினோத்திடம் கேட்கவும், தன் அத்தானிற்குத் தன் தங்கையின் மேல் இருந்த பற்றை நினைத்து மனம் இலகுவானது வினோத்திற்கு..

இவர் நிச்சயம் திவ்யாவை கண்கலங்க விடமாட்டார் என்று தோன்ற அர்ஜூனின் மேல் இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது..

மண்டபத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த அர்ஜூனின் மனதிலோ திருமணம் அன்று திவ்யா தன் காரில் ஏற தடுமாறி நின்றதும், தன் அன்னை அவளைத் தனக்கு அருகில் அமரச் சொல்லவும் அவள் நடுநடுங்கி போய்த் தன் அன்னையின் அருகில் அமர்ந்ததும் நியாபகம் வந்தது..

ஏனெனில் அன்று எந்த இடத்தில் தன் காரை நிறுத்தி இருந்தானோ இன்றும், இந்த நிமிடமும் அவனின் கார் அதே இடத்தில் தான் நின்றிருந்தது.

ஆனால் அவனின் அன்றைய மனநிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் எத்தனை வித்தியாசங்கள்.

இதற்கு மேல் தன்னவளை சந்திப்பதற்கு ஒரு நிமிடம் கூடத் தாமதிக்கக் கூடாது என்று இதயம் துள்ள வினோத்திடம் மேற்கொண்டு வழியைச் சொல்ல சொன்னவன் அடுத்த முக்கால் மணி நேர பயணத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்திற்குள் நுழைய, பல குறுகிய சந்துகளைத் தாண்டி ஒரு வழியாகத் திவ்யாவின் அத்தை வீட்டை அடைந்தார்கள்.

இரண்டு மாடிகள் கொண்ட வீடு அது. கிட்டத்தட்ட அக் கிராமத்தில் இருந்த பெரிய வீடு அதுவாகத் தான் இருக்கும்..

அர்ஜூன் காரை வாசலில் நிறுத்த, காரில் இருந்து இறங்கிய வினோத் வீட்டிற்குள் அவசரமாகச் சென்றவன் அர்ஜூனின் வரவை தன் தந்தையிடம் சொல்ல, வேகமாக வெளியே வந்த சிவசுப்ரமணியத்திற்கு அர்ஜூனைப் பார்த்தவுடன் மகிழ்ச்சிக்கு பதிலாகக் கிலியே வந்தது...

"மாப்பிள்ளையே நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்றால் பிரச்சனை பெரிது போல்" என்று நினைத்தவருக்கு மகளை மேலும் மேலும் வருத்தப்படுத்தக் கூடாது என்று அங்கு நடந்த பிரச்சனைகளைப் பற்றிக் கேட்காமல் விட்டது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று தோன்றியது..

அர்ஜூனை வரவேற்றவர் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல முற்பட, அதற்குள் அவன் வந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவ, வீட்டில் விஷேஷத்திற்காகக் கூடி இருந்த ஏகப்பட்ட சொந்த பந்தங்கள் வாசலுக்கே வந்துவிட்டார்கள் அவனை வரவேற்க..

பிறந்தது முதல் நகரத்திலேயே வாழ்ந்து வந்தவனுக்கு அவர்களின் நடவடிக்கை, வீட்டின் வாசலுக்கே வந்து விருந்தினரை வரவேற்பது, அவர்களின் அன்னியோன்யம் அனைத்தும் வித்தியாசமாகப் பட, சங்கோஜப்பட்டவனின் கண்கள் ஆர்வத்துடனும் ஏக்கத்துடனும் அவனவளை தேட ஆரம்பித்தது..

வீட்டிற்குள் அவனை அழைத்துச் சென்றவர்கள் ஹாலில் போடப்பட்டிருந்த சேரில் அமர சொல்ல, வழக்கம் போல் கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாக அமர்ந்தவன் வினோத்தைப் பார்க்க, அவனின் பார்வையை உணர்ந்தவன்,

"இதோ அத்தான், திவ்யாவை கூப்பிட்டுட்டு வரேன்" என்றவன் அவளைத் தேடி மாடி செல்ல,

அங்குத் திவ்யா அன்று தான் சடங்கு செய்து முடித்திருந்த தன் அத்தை மகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.. கலகலப்பு குரலிலும், சிரிப்பு வெறும் உதடுகளிலும் மட்டுமே இருந்தது..

தன் கணவனின் பிரிவைப் பற்றிய சிந்தனை மனம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்ததால் முகத்தில் பிரம்மையும், உள்ளம் ஏமாற்றத்தாலும் வேதனையினாலும் சிதைக்கப்பட்டிருந்ததால் கண்களில் சோகமும்,
தன்னவனின் பிளவினால் இதயத்தில் விளைந்த காயமும் நிறைந்து இருந்தவளின் சிரிப்பில் வலியை தவிர வேறு எதுவும் இல்லை.

வேகமாக மாடி ஏறிய வினோத் அங்குப் பேசிக் கொண்டிருந்த திவ்யாவைப் பார்த்தவன்,

"என்ன திவ்யா, அத்தான் வந்திருக்காங்க. கீழே வீடே அல்லோல கல்லோல பட்டுட்டு இருக்கு. நீ என்னடான்னா இங்கு உட்கார்ந்து பேசிட்டு இருக்க?" என்று சொல்ல,

அவனின் வார்த்தைகளைக் கேட்டு சில நொடிகள் திகைத்த திவ்யா ஒரு வேளை என் காதில் தான் தவறாக விழுந்துவிட்டதோ என்று கலக்கத்துடன் வினோத்தை ஏக்கமாகப் பார்க்க.

அர்ஜூன் தன்னை அழைத்ததை அவனே நம்ப முடியாமல் சில விநாடிகள் திகைத்து இருந்தது வினோத்தின் நியாபகத்திற்கு வர, இவளோ அடிப்பட்டு மனம் சிதைந்துப் போய் வந்திருக்கிறாள். அவளிடம் திடீரென்று உன் கணவன் வந்திருக்கிறார் என்றால்?

அவளின் உள்ளுணர்வுகளைப் புரிந்துக் கொண்டவன் கனிவுடன் மென்மையாகச் சிரித்து .

"என்ன திவ்யா இப்படி நம்பாம பார்க்கிற? அத்தான் உன்னைய பார்க்கத் தான் வந்திருக்காங்க. சீக்கிரம் வா, கீழே உட்கார்ந்து இருக்காங்க" என்றவன் அவளைக் கைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

அவள் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வந்து இன்றோடு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.. நான் எங்கு இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்று ஒரு வார்த்தைக் கூட இதுவரை அவர் கேட்கவில்லை.

அப்படியே நான் கடலூர் வந்துவிட்டது தெரிந்திருந்தாலும் சொல்லாமல் வீட்டை விட்டு வந்துவிட்டதில் நிச்சயம் என் மீது இருக்கும் வெறுப்பும் கோபமும் இன்னும் அதிகரித்துத் தான் இருக்குமே தவிரக் குறைந்திருக்க வாய்ப்பில்ல. அப்படி இருக்க அவர் என்னைத் தேடி வருவதா?

உலகமே இரண்டு பட்டாலும், யார் எக்கேடு கெட்டாலும் அவர் தன்னிடத்தில் இருந்து இறங்கி வரவே மாட்டார் என்று தன் மனதில் ஆழ பதிந்து இருந்ததால், அர்ஜூன் அவளைத் தேடி வந்திருப்பதை இன்னமும் நம்பாமல் திருதிருவென்று முழித்தவளின் கைப் பற்றி வினோத் அழைத்துச் செல்ல,

அவன் பின்னயே குழப்பத்துடனும் கலக்கத்துடனும் சென்றவள் அங்குக் கம்பீரமாக நடு நாயகமாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்தவளின் மனதில் அந்த நொடி தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க ஒருவராலும் இயலாது..

ஆண் என்ற நினைவில் திமிராய், கர்வமாய், சிம்ம சொப்பனமாய் வலம் வந்த அர்ஜூனை தனது மென்மையான காதலில் கட்டி போட்ட பெருமை இந்தப் புள்ளி மானிற்கே சேரும் என்று உணராதவளாய் அவனை அதே அச்சத்துடனும் நடுக்கத்துடனும் பார்த்திருந்தாள் அந்தப் பேதை..

கனவிலும் நினையாதவிதமாய்த் தன்னைத் தானாகத் தேடி வந்திருக்கும் கணவனை அங்கு எதிர்பாராமல் சந்திக்க, இரு கண்களிலும் கண்ணீர் துளிகள் ததும்பி பளபளக்க அவனை ஏறெடுத்து நோக்கியவளின் நிலையையும், தன்னைக் கண்டதும் துடிக்கும் அவளின் இதயத்தைப் படம் பிடித்துக் காட்டும் விழிகளின் ஏக்கத்தையும் கண்ட அர்ஜூனின் கண்கள் ஒரு நொடி சுருங்கி விரிந்தது.

தன்னவளைத் தேடி மனதிற்குள் மலையைப் போன்ற காதலை சுமந்து கிளம்பியவனுக்கு, அவள் தன்னைப் போல் தவித்து இருக்கவில்லை என்று உணர்ந்த விநாடி, இழக்க கூடாததை இழந்ததைப் போல் துடிதுடித்துப் போனவனுக்கு, அவளின் இந்த முகமும் ஏக்கம் நிறைந்த கண்களும் பறைசாற்றியது அவனவளின் தவிப்பையும் காதலையும்.

அவளை அந்த விநாடியே அதிரடியாகத் தூக்கி சென்று விட மாட்டோமா என்று தோன்ற கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டு அலையும் மனதை அடக்க வழி தெரியாமல் அமர்ந்திருந்தவன் அவளை உற்று நோக்க, அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வழக்கம் போல் தன் நீர் ததும்பிய விழிகளை நிலத்தில் தாழ்த்த, தன் முகத்தில் இன்ப ரேகையைப் படரவிட்டு சட்டென்று எழுந்தவன்.

"அப்போ நாங்க கிளம்புகிறோம்" என்றான்..

அவனின் அந்த அதிரடி செயலில் விலுக்கென்று தலை நிமிர்ந்து பார்த்தவள் புரியாமல் அவனையே பார்த்திருக்க, கலா இடையில் புகுந்தார்..

"மாப்பிள்ளை இப்பதான் வந்திருக்கீங்க.. சாப்பிட்டுட்டுப் போகலாம் இருங்க" கலக்கத்துடன் கலா கூற..

"இல்லை.. திடீர்னு கிளம்பியதால் நிறைய வேலைகள் பெண்டிங்க்ல இருக்கு... இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்" என்றான் விடாமல்.

"மாப்பிள்ளை கல்யாணம் ஆனதில் இருந்து இப்போ தான் முதன் முறை வந்திருக்கீங்க.. கொஞ்சம் காபியாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்" என்று கலா மீண்டும் கூற...

மறுக்க இயலாமல் திவ்யாவை திரும்பி பார்த்தவன் அவளின் பார்வையில் என்ன கண்டானோ அமைதியாக அமர,

கலாவிற்கு மருமகன் தன் பேச்சை கேட்டதில் ஏதோ இனம் புரியாத நிம்மதி படர்ந்தது..

அதே தோரணையில் அவன் மீண்டும் கம்பீரமாக அமர்ந்திருக்க, அவனின் அமைதியும் பணிவும் திவ்யாவிற்குக் கலக்கத்தையே அதிகரிக்கச் செய்ய, தன் கணவனைக் கண் இமைக்காமல் பார்த்திருந்தவளின் மேல் தன் ஆழ்ந்த பார்வையை வீசியவன் அவளை அங்குலம் அங்குலமாக விழுங்கிவிடுவது போல் ரசிக்க. அவனின் பார்வையின் வீரியத்தைத் தாங்காத திவ்யா கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஐயோ! இத்தனை பேர் இருக்கும் போது இது என்ன இப்படி ஒரு பார்வை? இவருக்குக் கொஞ்சம் கூடப் பயம் என்பதே இல்லையா?" என்று நினைக்க அவனுக்கும் பயத்திற்கும் எவ்வளவு தூரம் என்பது நமக்குத் தானே தெரியும்.

காஃபி வந்தவுடன் அதனைப் பருகியவன் கிளம்ப நினைக்க அப்பொழுது தான் வந்தார் திவ்யா, வினோத்தின் மாமா. "மலேஷியா மாமா" என்று அனைவராலும் செல்லமாக (எரிச்சலாகவும்) அழைக்கப்படுபவர்.

அவர் மலேஷியாவில் பதினைந்து வருடங்களாக வேலைப் பார்ப்பவர். அந்தக் கிராமத்திலேயே கொஞ்சம் வசதியானவர் வேறு.

விடுமுறைக்கு வந்தவருக்குத் திவ்யாவின் திருமணம் பற்றித் தெரிய வர, அவளின் கணவனைச் சந்திக்க ஆர்வமாக இருந்தவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு எதிர்பாராமல் வந்தது சந்தோஷமாக இருந்தது..

தன்னை விட அந்தக் கிராமத்தில் யாரும் வசதியாக இருக்கக் கூடாது என்று நினைப்பவர்.. ஆனால் பாவம் அர்ஜூனைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்...

அர்ஜூன் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்தவர்,

"வாங்க தம்பி. நீங்க வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.. அதான் நேர்ல ஒரு தடவை உங்களைப் பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்.. ஏனா அடிக்கடி மலேஷியாவில் இருந்து வர முடியாது பாருங்க" என்றார் வாயெல்லாம் பல்லாகப் பெரிய சிரிப்புடன்..

அவர் மலேஷியாவில் இருக்கிறார் என்று தெரிய வேண்டுமாம்.

அவரைக் கண்டதுமே திவ்யாவிற்கும் வினோத்திற்கும் ஐய்யோ! என்றிருந்தது என்றால் இப்பொழுது அர்ஜூனிடம் அவர் பேச்சுக் கொடுப்பது திக்கென்று இருந்தது. .

ஏனெனில் "நான் வீட்டை விட்டு வந்ததே அவரது ரௌத்திரத்தினால் தான்.. இதில் அவர் இத்தனை நேரம் அமைதியாக அமர்ந்திருப்பதே பெரிய விஷயம்.. இதில் இவர் வேறா?" என்று தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவள் வினோத்தை திரும்பி பார்க்க.

அவனுக்கோ முகமே வெளிறிப் போயிருந்தது. ஏனெனில் அவனும் இப்பொழுது தானே சில நிமிடங்களுக்கு முன் அர்ஜூனின் ஆங்காரத்தைப் பார்த்திருந்தான்.

இந்த நேரத்தில் இந்த மாமா வேற. ஏதாவது கேட்டு அவரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறார் என்று நினைக்க,

அவர்கள் நினைத்தது போல் அவனின் எதிரில் கால் மேல் கால் போட்டுச் சட்டமாக அமர்ந்தவர் அவனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

"நீங்க ஏதோ பிஸினஸ் பண்றீங்கன்னு கேள்விப்பட்டேன். என்ன பிஸினஸ் தம்பி? ஏன்னா திவ்யா கல்யாணம் எப்படி நடந்தது என்று கேள்விப்பட்டேன். கலாவும் சிவாவும் ரொம்ப வெள்ளந்தியானவர்கள். எதையும் தீர விசாரிக்க மாட்டார்கள். அதனால் தான் அந்தப் பையன சரியாக விசாரிக்காமல் அவ்வளவு குழப்பம் வந்திருக்கு. அதனால் தான் கேட்கிறேன்.. என்ன பிஸினஸ் பண்றீங்க? எவ்வளவு ஆண்டு வருமானம் வரும்?" என்று அடுக்கடுக்காக நேர்முகத்தேர்வு போல் கேள்விகள் கேட்க,

வினோத்திற்கு அப்படியே அவரை அலேக்காகச் சேரோடு தூக்கி சென்று தூர எறிந்து விட வேண்டும் போல் இருந்தது என்றால், திவ்யாவிற்கு எங்காவது சுவற்றில் போய் முட்டிக்கொள்ளலாமா என்று இருந்தது.

அர்ஜூனின் உணர்ச்சியெதுவும் தோன்றாத முகத்தைப் பார்த்த சிவசுப்ரமணியம் இந்தப் பேச்சை இப்படியே வளர்க்க விடக்கூடாது என்று நினைத்து இடையில் புகுந்தார்.

"மச்சான், எதுக்கு இந்தப் பேச்சு? கலா, மச்சானுக்குச் சாப்பிட ஏதாவது எடுத்து வை. நீங்க வாங்க மச்சான், நாம கிட்ச்சன்ல போய்ச் சாப்பிடலாம்"

"அட இருங்க சிவா, இப்பத் தான் தம்பிய பார்க்கிறேன். இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாதான நம்ம பொண்ணு சௌகர்யமாக இருக்கிறாளா என்று பார்க்க முடியும்"

அவர் தன் பிடியில் விடாமல் இருக்கச் சிவ சுப்ரமணியத்திற்கு மாமாவின் பேச்சு நல்ல விதமாக முடியும் என்று தோன்றவில்லை.

வலது கையைச் சேரின் கைப்படியில் ஊன்றி, முட்டியை தன் முகவாயில் கொடுத்து அமர்ந்திருந்த அர்ஜூன் எதுவும் பேசாமல் கண்களை மட்டும் உயர்த்தித் திவ்யாவைப் பார்க்க, அவனின் பார்வையை எதிர் கொண்டவளின் விழிகள் "ப்ளீஸ் எனக்காக" என்று கெஞ்சுவது போல் இருந்தது..

தன்னவளுக்காக, அவளின் முகத்தில் படர்ந்திருந்த கலக்கத்திற்கு ஆறுதலாகத் தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தவனின் பொறுமையை மேலும் சோதித்தார் மலேஷியா மாமா.

"என்ன தம்பி கேட்டுட்டே இருக்கிறேன்.. சொல்லிக்கிற மாதிரி வருமானம் இருந்தா சட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே"

அர்ஜூனின் அமைதியால் அவரின் குரலில் எரிச்சல் தெரிந்தததோ.

"ஐயோ! தூங்கும் சிங்கத்தைத் தட்டி எழுப்பறாரே இந்த மாமா" என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்ட வினோத் திவ்யாவைப் பார்க்க,

இதற்கு மேல் இதனை விட்டால் பெரிய பிரச்சனையில் முடியும் என்பது போல் திவ்யா வினோத்தைப் பார்க்க, சட்டென்று.

"உங்களுக்கு எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பத்தி தெரியுமா மாமா?" என்றான் வினோத்.

"ஹான் தெரியுமே. ஃபார்ட்சூன் 500 கம்பெனிஸ் லிஸ்ட்ல அதுவும் ஒரு கம்பெனியாச்சே.. அவங்களுக்கு ஏகப்பட்ட பிஸினஸ்ப்பா.. அதுல அவங்க வச்சிருக்கிற கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியில தான் என் மருமகனோட தம்பி பெரிய பதவியில இருக்கான்.. தம்பி, நீங்க அவங்களோட கம்பெனியில எதுலயாவது வேலைப் பார்க்கிறீங்களா? என்று மீண்டும் அர்ஜூனிடமே தன்னுடைய கேள்விக் கணைகளைத் தொடுத்தவரிடம்.

அவரின் நொய்நொய்யென்ற கேள்வியில் கடுப்பாகிப் போன வினோத் இவரை இத்துடன் விடக்கூடாது என்று.

"அவங்க கம்பெனியோட டேர்ன் ஓவர் தெரியுமா மாமா?" என்றான்...

"அது எப்படியும் ஆயிரம் கோடி பெறும்" என்று அவர் கூற அது வரை வாய்த் திறக்காமல் அமர்ந்து இருந்த அர்ஜூன்..

"டு தௌஸண்ட் நைன் ஹண்ட்ரெட் அண்ட் ஃபார்டி க்ரோர்ஸ்" என்று மட்டும் சொன்னான்.

"அவங்க கம்பெனி டேர்ன் ஓவர் பத்தி இப்ப என்ன?" என்பது போல் மாமா அர்ஜூனை பார்க்க, வினோத்.

"மாமா எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸோட MD அர்ஜூன் கிருஷ்ணா இவர் தான் மாமா" என்றானே பார்க்கலாம்,

அடித்துப் பிடித்து அவர் எழுந்த விதத்தில் அந்த வீடே அலறியது..

"சார்.. உங்க கிட்ட போய் என்ன பிஸினஸ் பண்றீங்கன்னு கேட்டேனே. தெரியாம கேட்டுட்டேன் சார்.. என்ன மன்னிச்சுக்கங்க சார்'" என்று அர்ஜீனின் காலில் விழாத குறையாக அவர் கேட்க,

எதுவும் பேசாமல் எழுந்தவன் கண்களாலேயே போலாமா என்று திவ்யாவிடம் கேட்க வெடவெடத்துப் போனாள் அவனின் மனைவி..

அவளின் அச்சத்தை அவளின் விழிகள் அழகாகப் படம்பிடித்துக் காட்ட மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் நகர எத்தனிக்க.

"மாப்பிள்ளை வந்தது தான் வந்தீங்க. ஒரு தடவை நம்ம வீட்டிற்குப் போய்ட்டுப் போலாம்.. வாங்க" என்ற கலா திவ்யாவைப் பார்த்து,

"மாப்பிள்ளையை வீட்டிற்குக் கூட்டிட்டு போ திவ்யா.. நாங்க கொஞ்ச நேரத்தில் வந்திருவோம்" என்றார்.

ஏனெனில் அவருக்குத் தெரியும். தன் மகளுக்கும் மருமகனிற்கும் இடையில் இருக்கும் பிரச்சனையில் திவ்யா நிச்சயம் அவர் அழைத்தவுடன் போக மாட்டாள் என்று.

அதே சமயம் இத்தனை தூரம் தன் மகளைத் தானாகத் தேடி வந்திருக்கும் தன் மருமகனின் குணமும் புரியும்..

ஆதலால் அவள் எதுவும் சொல்லும் முன் அவரே முந்திக் கொள்ள அர்ஜூனிற்குமே தன் மனைவியிடம் மனம் விட்டு பேச ஒரு இடம் கிடைத்ததே என்றிருந்தது..

ஆனால் திவ்யாவிற்குத் தான் பெரிதும் சங்கடமாகிப் போனது.. ஏனெனில் அர்ஜூன் இதற்கு முன் திவ்யாவின் வீட்டிற்கு வந்ததில்லை.

ஏற்கனவே தன்னை வேலைக்காரியாக இருக்கத் தான் தகுதியுள்ளவள் என்று ஏசியிருப்பவர். இப்பொழுது தன்னுடைய குடும்பத்தினுடைய, தன் பெற்றோருடைய ஏழ்மை நிலைமையைக் கண்டால் இன்னும் என்னைப் பற்றிக் கேவலமாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று குழம்பியவாறே நிற்க.

விழிகளில் கலக்கமும், முகத்தில் பரிதாபமும், உடலில் நடுக்கமும் என்று பலவித உணர்ச்சிகளைக் கலவையாக வெளிப்படுத்திக் கவலைப் படர்ந்து மலைத்து தயங்கி நின்ற தன்னவளை திரும்பி பார்த்தவனின் மனம் பாகாய் மருகி தேனாய் உருகியது.

அவளைக் கூர்ந்து பார்த்தவன் "வா" என்பது போல் தலை அசைத்துச் சைகை செய்து முன்னால் நடக்க, வேறு வழியில்லாது அவனைப் பின் தொடர்ந்தவளுக்குப் பயத்தில் இதயம் தன் துடிப்பை அதிகரித்து இறுதியில் தாங்காமல் வெடித்துச் சிதறிவிடுமோ என்று இருந்தது.

வெளியே வந்த அர்ஜூன் காரை நோக்கி செல்ல, அவன் பின்னையே வந்த மலேஷிய மாமா,

"அடடா முன் வாசல் வழியாக வந்திருந்தால், இந்தக் காரைப் பார்த்திருந்தேனால், அவரிடம் இப்படிப் பேசியிருக்க மாட்டேனே!! இப்போ மருமகனோட தம்பி வேலை காலி" என்று மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தார்.

காரின் அருகில் வந்தவன் திவ்யாவிற்காகக் காரின் முன் பக்க கதவை திறந்து அவள் ஏறும் வரை காத்திருந்து பின் அவள் ஏறியதும் கதவை சாத்த முற்பட, திவ்யாவின் புடவை முந்தானை காருக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தவன் முந்தானையைக் குனிந்து எடுத்து அவளின் மடியில் போட்டுவிட்டுப் பின் தன் இருக்கைக்கு வந்து அமர, கலாவிற்கும், சிவ சுப்ரமணியத்திற்கும், வினோத்திற்கும் தங்கள் வீட்டு பெண்ணின் பிரச்சனை எப்படியும் சுமூகமாக முடியும் என்று தோன்றி ஒரு பெருத்த நிம்மதி பெருமூச்சை விட வைத்தது.

"வீட்டிற்கு அவரை எப்படி அழைத்துச் செல்வது? ஏற்கனவே என் மீது வெறுப்புடன் இருந்தவர். இப்பொழுது அங்கு வீட்டில் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ?" என்று மூளைக் குழம்பும் அளவிற்குச் சிந்தனையில் இருந்தவளுக்குத் தன் கணவன் காரின் கதவைத் தனக்காகத் திறந்து வைத்துக் காத்திருக்கிறான் என்பதும், வெளியில் தொங்கிய தன் புடவையை எடுத்து தன் மடி மீது போட்டுவிட்டு கதவை சாத்துகிறான் என்ற சுய உணர்வுக் கூட இல்லை..

காரில் ஏறியதில் இருந்து அவள் எதுவும் பேசாமல் மௌனமாக வர, அவளின் முகத்தைத் திரும்பி பார்த்தவன் அவள் இன்னும் தன்னைச் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும் சிந்தனையில் இருந்து வெளிவரவில்லை என்பதை அறிந்து, அவளின் குழப்பத்திற்குக் காரணமும் தான் அவளை எதுவும் செய்துவிடுவோமோ என்ற அச்சமே என்பதினால் தான், தான் அவளைத் திரும்பி பார்ப்பது கூடத் தெரியாமல் மலைத்து அமர்ந்திருக்கிறாள் என்பது புரிய அவனையும் அறியாமல் புன் முறுவல் இதழில் படர வழக்கம் போல் தலைக் குனிந்து தன் சிரிப்பை அடக்கியவன் சட்டென்று..

"இப்படிப் பேசாம அமைதியா வந்தா எனக்கு எப்படி வழி தெரியும்?" என்றான்..

அதுவரை இந்த உலகத்திலேயே இல்லாதவள் அவனின் திடீர் பேச்சில் திக்கென்று இருக்கத் தூக்கிவாரிப்போட்டு அவனைத் திரும்பி பார்க்க, சட்டென்று தன் உணர்ச்சிகளை மறைத்தவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் சாலையில் கண்களைப் பதிக்க.

உணர்ச்சிகள் வெளிப்படுத்தாத அவன் முகத்தில் இருந்து எதனையும் கண்டு பிடிக்க முடியாமல் தவித்தவள் தன் வீட்டிற்கு வழி சொல்ல.

சில நிமிடங்கள் அமைதிக்கு பிறகு தயங்கியவாறே அவன் முகத்தைப் பார்த்து மெல்லிய குரலில்.

"எங்க வீடு ரொம்பச் சின்னது" என்றாள்.

அவளைத் திரும்பி பார்த்தவன் மீண்டும் சாலையில் கண் பதிக்க, நேரடியாக அவன் விழிகளை நோக்கினாலே அவளால் அவன் பார்வையின் அர்த்தங்களைக் கண்டு பிடிக்க முடியாது.

இதில் இன்று அவன் ஸன்க்ளாஸ் வேறு அணிந்து இருக்கும் பொழுது கருப்பு கண்ணாடிக்குள் அவனின் பார்வையின் பொருளை எங்கனம் அறியப் போகிறாள்?

சிறிது தூரத்திலேயே அவர்களின் வீடு வர, இப்போது அவளுக்கு ஏண்டா அவரை இங்குக் கூட்டி வந்தோம் என்று இருந்தது..

ஆனால் அவனுக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை போலும்.

அவன் மனமெல்லாம் உண்மையில் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது அவளுக்கு எப்படித் தெரியும்?

தன் குடும்பத்தினர் அனைவருக்கு முன் அவளின் கன்னத்தில் அறைந்து, அவளை வேலைக்காரி என்று கேவலமாகப் பேசி, விவாகரத்து பண்ணப் போவதாகச் சொல்லி அவளைக் கலங்கடித்து, அவள் வீட்டை விட்டு வெளியே வர தூண்டியவன்.

ஆனால் இதுவரை தான் செய்த செயல்கள் ஒன்றுக்கும் அவன் விளக்கம் கொடுக்கவோ அல்லது மன்னிப்போ கேட்கவோ இல்லை. (அப்படியே அவன் கேட்டுட்டாலும்!!!!!)

அப்படி இருக்க, இதயத்தில் அத்தனை வேதனைகளைச் சுமந்து கொண்டு ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தன் தாய் வீட்டிற்கு அனாதைப் போன்று வந்தவளிடம் அவன் இந்த அளவு பொறுமையை எதிர் பார்க்கவில்லை.

ஆனால் அது தானே திவ்யா..

ஒரு வழியாக வீட்டை அடைய, அந்தக் குறுகிய சந்தில் தன் காரை எங்கு நிறுத்துவது என்று அவன் சுற்றிமுற்றிப் பார்க்க, அவர்களின் தெரு முனையில் இருந்த காலி இடத்தைக் காட்டியவள்.

"அங்க நிறுத்தலாம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டாங்க" எனவும்.

சரி என்றவன் அவளை இறக்கிவிட்டு காரையும் நிறுத்திவிட்டு திரும்பி வீட்டை நோக்கி நடக்க, தன் கணவனை நிமிர்ந்துப் பார்த்தவள் மிதமிஞ்சிய மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

அசாத்தியமான உயரம், உயரத்திற்கு ஏற்றவாறு படர்ந்து விரிந்த விசாலமான மார்புடன் முறுக்கேறிய உடல், கரங்களில் நரம்புகள் புடைத்திருக்க, முன்னுச்சியில் படர்ந்திருந்த கத்தை முடிகளை ஒதுக்கிக் கொண்டே ஸ்டையிலாக அவன் நடந்து வந்துக் கொண்டிருந்த விதத்தில் அவளின் பூமனம் அவன் மேல் படரத் துடித்த அதே நொடி,

“இன்னும் சில நிமிடங்களில் உனக்கு இருக்கு திவ்யா” என்று உள்ளுணர்வு உறுத்தியதில் சடக்கென்று தன் முகப் பாவத்தை மாற்றியவள் அவன் தன் அருகில் வந்ததும் வீட்டின் கதவை திறந்து.

"தலையைக் குனிஞ்சு வாங்க" என்றாள்..

ஏனெனில் அவனின் நெடு நெடு உயரத்திற்கு அவள் வீட்டின் நிலை மிகச் சிறியது.

அவள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்ததையும் பார்த்தவனுக்கு, தான் அவளை நெருங்கியதும் வெடுக்கென்று தலைக் கவிழ்ந்து தன் உணர்வுகளை மறைத்ததையும் பார்த்தவனுக்கு அவளை அப்படியே அலேக்காகப் படுக்கைக்குத் தூக்கி செல்லமாட்டோமா என்று இருந்தது..

"எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தாண்டி. அப்புறம் என்ன பண்ணுவன்னு பார்ப்போம்" என்று நினைத்துக் கொண்டவன் மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைய அது மூன்று சிறு அறைகள், சமையல் அறை, குளியல் அறை மற்றும் ஒரு ஹால் உள்ள சிறிய வீடு.

அவன் வீட்டை சுற்றிப் பார்க்கவும், உள்ளம் குமுற, உணர்ச்சி ததும்ப, முகத்தில் வேறு அளவிற்கடங்கா அச்சத்தைத் தேக்கி வைத்து மிகவும் சன்னமான குரலில்.

"வாங்க.. உட்காருங்க" என்றாள்.

சில விநாடிகள் தயங்கியவன் தொண்டையைச் செறுமிக் கொண்டு.

"உனக்குன்னு ரூம் எதுவும் இருக்கா??" எனவும்.

"இருக்கு" என்றவளை உறுத்து பார்த்தவன்.

"அப்போ அங்க போ" என்றானே பார்க்கலாம்..

அவன் "உனக்குன்னு ரூம் எதுவும் இருக்கா?" என்று கேட்ட பொழுதே பக்கென்றதில் இதயம் தாறுமாறாகத் துடித்து வெளியே வந்து விழுந்துவிடுவது போல் ஒரு உணர்வுத் தோன்ற, இதில் இப்பொழுது "அங்குப் போ" என்று அவன் கூறியதும் பயத்தில் தடதடக்க உச்சி முதல் கால்வரை உதறல் எடுக்க.

"எ. எ. எதுக்கு?" என்று தடுமாறினாள் அர்ஜூனின் மனையாள்.

மீண்டும் "போ" என்று மட்டும் சொன்னவன் அவளையே பார்த்திருக்க,

"நாம் தொலைஞ்சோம். திவ்யா. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்ததுக்கு நிச்சயம் உனக்கு இருக்குடி. அத்தனை பேருக்கு முன்னாடியே அவ்வளவு கோபமாகப் பேசினவர்.. இப்போ இங்க ஒருத்தரும் இல்லை. செத்த நீ" என்று தனக்குள்ளே புலம்பியவள் மெதுவாக அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடக்க.

மனதிற்குள் கிளம்பிய சிரிப்பை அடக்கி கொண்டு அவளைப் பின் தொடர்ந்தவன், அவளின் அறையில் அவள் நுழைந்தவுடன் தானும் உள்ளே சென்று கதவை தாளிட்டான்.

அவன் கதவை சாத்திய சத்தத்தில் திடுக்கென்று இருக்கத் திரும்பி பார்த்தவளுக்கு மனம் முழுவதும் கிலி படர தன் மனதை ஊடுருவி விழுங்கிவிட்டிருந்தவளை தன்னை மறந்து ரசித்துத் தன் பார்வையால் விழுங்கியவன் கதவை தாளிட்டு சட்டையின் உள்ளே வைத்திருந்த அந்தக் காகிதங்களை அவளிடம் நீட்டி..

"கையெழுத்து போடு" என்றான்.

அவன் நீட்டிய காகிதங்களையே சில நொடிகள் பார்த்தவள் அது என்னவென்று புரியாமல் விழிக்க,

"நீ தானே சொன்ன. எப்ப சொன்னாலும் டிவோர்ஸ் பேப்பர்ஸில் கையெழுத்துப் போடுறேன்னு. அதான் பேப்பர்ஸை நானே கொண்டு வந்துட்டேன்... சீக்கிரம் போடு, நான் கிளம்பனும்" என்றான்.

ஏற்கனவே அச்சத்தின் பிடியில் சுழன்று சிக்குண்டிருந்தவளுக்கு, மனமும் உடலும் அவனின் வெறுப்பினால் துவண்டு போயிருந்தவளுக்கு, மிதமிஞ்சிய திகிலினால் இதயம் தடதடக்க நின்றிருந்தவளுக்கு அவன் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தைகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது..

சில விநாடிகள் அவளையே பார்த்திருந்தவன் அவன் கொடுத்த அதிர்ச்சியில் அவள் இன்னமும் உறைந்திருக்க அவளின் முகம் முன் சொடக்கு போட்டவன்,

"என்ன போடுறியா?" என்றான்.

ஆக இதற்குத் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்.. மாமா எத்தனை பேசியும் பொறுமையாக இருந்ததற்குக் காரணம் எப்படியாவது என்னிடம் கையெழுத்து வாங்கி விட வேண்டும் என்றுதான் என்று எண்ணியவள் விழிகளில் நீர் கோர்க்க அசையாது கலங்கிப் போய் நிற்க,

சுற்று முற்றும் பார்த்தவன் அங்கு அருகில் இருந்த டேபிளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் பேனாவை எடுத்தவன்.

"ம்ம், போடு" என்றான்.

வாழ்க்கையில் இதற்கு முன் எந்தப் பத்திரங்களையும் பார்த்திராத சின்னப் பெண். விவாகரத்துப் பத்திரம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாதவள். அவன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தவள் அதில் விவாகரத்துப் பத்திரம் என்று பெரிதாக எழுதப்பட்டிருக்க நீர் திரண்டு ததும்பி நிற்கும் விழிகளுடன் அவனை ஏறெடுத்து நோக்கினாள்.

ஆனால் அவள் தன்னை விட்டு வந்ததினால் இருந்த கோபமும், தன் ஒட்டுமொத்த குடும்பமும் அங்கு மருத்துவமனையில் கதி கலங்க இருக்க இங்கு இவள் எதுவுமே நடக்காதது போல் விஷேஷத்திற்குப் போனதினால் வருத்தமும் வர, அவளைச் சீண்டுவதற்காகவே அதை ஸெராக்ஸ் கடையில் சாதாரணக் காகிதத்தில் அங்கிருந்தவனை விட்டுக் கணினியில் டைப் பண்ணி அதனை அச்சடித்து எடுத்து வந்திருக்கிறான் என்று அவளுக்கு எப்படித் தெரியும்.

"என்ன பார்க்கிற? டிவோர்ஸுக்கு "முழுச் சம்மதம்" தெரிவிக்கிறேன்னு தான லெட்டர்ல எழுதியிருந்த? அப்புறம் என்ன தயக்கம்?" என்று "முழுச் சம்மதம்" என்ற வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி சொல்ல,

மீண்டும் அந்தக் காகிதங்களைப் பார்த்தவளுக்கு இதயமே சுக்கு நூறாக உடைந்தது போல் இருந்தது.

"சொல்லுடி.. இதுக்கு உனக்குச் சம்மதம் தானே?" என்று மீண்டும் கேட்டவனின் உள்ளம் உள்ளுக்குள் உருகி மருகி துடித்துக் கொண்டிருந்தது "எங்கே அவள் சம்மதம்" என்று சொல்லி விடுவாளோ என்று..

கேள்வியைக் கேட்டவனே ஆராய்ச்சி பார்வையை அவள் மீது செலுத்தியவாறே அவளின் பதிலையும் ஏக்கத்துடனும், ஆவலுடனும் எதிர்பார்த்து அவளின் முகத்தையே பார்த்திருக்க,

அவன் மனமுழுவதும் ஆசையையும், இதயம் முழுவதும் காதலையும், உள்ளம் முழுவதும் தாபத்தையும் பூக்கச் செய்திருந்த அவனின் மனையாள் தன் கணவனின் நெஞ்சம் குளிரும் வகையில் தலை கவிழ்ந்தவாறே "இல்லை" என்று தலை அசைத்தாள்.

மனதிற்குள் சாதித்துவிட்ட பெருமை பொங்க இருந்தாலும் உடனே அவளை ஏற்றுக் கொண்டால் அவன் அர்ஜூன் இல்லையே.. அதனால்,

"உனக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ. எனக்கு இனி மேல் பொறுமை இல்லை. முதல்ல கையெழுத்து போடு" என்று கூற.

வேறு வழியில்லாமல் அவனிடம் இருந்து பேனாவை வாங்கியவள் ஒவ்வொரு எழுத்தையும் எழுதும் பொழுது அப்படியே அந்த விநாடியே பூமியைப் பிளந்து உள்ளுக்குள் போய் விட மாட்டோமா என்று துடித்து, கலங்கிய மனதுடன் நடுங்கும் விரல்களுடன் அவன் நீட்டிய காகிதகங்களில் தன் கையெழுத்தைப் போட்டாள்.

சற்று முன் தன் கணவன் அவனாகத் தன்னைத் தேடி வந்திருக்கிறானே என்று எண்ணி ஆர்ப்பரித்த மனமும், சொர்க்கமாக இருந்த நிலையும், இப்பொழுது தனலாக மாறி விட, நெஞ்சுக்குள் இருக்கும் இந்த இறுக்கம் தாளாமல் வெடித்துக் கொண்டு வந்த அழுகையைத் தொண்டையிலே அடக்கி வைத்தவள் கையெழுத்திட்டு நிமிர்ந்து பார்க்க,

அது வரையிலும் குனிந்து கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தவளை அடங்கா காதலுடனும், அவளுடன் இணையத் துடித்துக் கொண்டு தறிக்கெட்டு அலையும் மனதுடனும், மோகமும் காமமும் போட்டிப் போட்டுக்கொண்டு திரையிட்டிருந்த கண்களுடனும் பார்த்திருந்தவன் அவள் நிமிர்ந்து பார்ப்பதை அறிந்ததும் சட்டென்று தன் முகபாவத்தை மாற்றினான்.

அவளிடம் இருந்த காகிதங்களை வாங்கியவன் அவளைக் கூர்ந்து பார்த்தவாறே.

"சரி, கிளம்பு" என்றான்.

கிளம்புவதா? கையெழுத்து தானே வாங்க வந்ததாகச் சொன்னார். இப்பொழுது எங்குக் கிளம்பச் சொல்கிறார் என்று குழம்பியவள் அவனை ஏறெடுத்து பார்க்க,

"டிவோர்ஸ் கிடைக்க எப்படியும் கொஞ்ச நாள் ஆகும். அது வரைக்கும் பேசாம எனக்கு வைஃப்பா இருந்துட்டு போயிடு.. என்ன?" என்றான் அவளின் கலங்கிய விழிகளில் தன் விஷம விழிகளைப் படரவிட்டவாறே.

புரிய ஒரு சில விநாடிகள் ஆனாலும் புரிந்த அந்த விநாடி இடியென அவன் சொன்னதின் அர்த்தம் அவளின் உணர்வில் இறங்க அதிர்ந்தவளின் இதயம் பெரு வேகத்தில் அடித்துக் கொள்ள, தன்னையும் அறியாமல் சட்டென்று பின்னால் நகர்ந்தாள்.

அவள் பின்னால் நகரவும் அவன் அவளை நோக்கி முன்னால் நகர, இரண்டு அடி எடுத்து வைத்தவள் சுவற்றில் இடித்து நிற்க,

அவளின் தோள்களை உரசியபடி இரண்டு பக்கங்களிலும் சுவற்றில் கைகளை ஊன்றியவன்,

"என்ன ரெடியா?" என்றான்.

உள்ளத்தில் கடல் அலைப் போல் ஆர்ப்பரித்த தன் மனையாளின் மேல் உள்ள காதலை அவளிடம் சொல்லாமல், தன்னை இத்தனை நாட்கள் புறந்தள்ளியதற்கு, இத்தனை இரவுகள் தவிக்க வைத்ததற்கு, இரண்டு முறை தன்னை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியதற்கு முதலில் அவளைக் கொஞ்ச நேரம் சீண்டிவிட்டுப் பின் தன் பாணியில் அவளிடம் தன் காதலைச் சொல்லலாம் என்று அவன் இருக்க,

சில நிமிடங்களுக்கு முன் அவன் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதில் மனம் சிதைந்து சுழற்றி அடிக்கப் பட்டிருந்தாலும், வீட்டை விட்டு தான் வெளியேறியதற்கு அவனின் கரத்தினால் பட்ட அடியை விடக் கொடிய வார்த்தைகளினால் பட்ட அடியின் வலியே காரணம் என்று மனம் உணர்ந்திருந்தாலும், அவளுடன் தனிமையில் இருக்கும் இந்த நிமிடங்கள் கூடத் தனது அராஜகச் செயல்களுக்கு அவன் மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பதனை புத்தி எடுத்துரைத்திருந்தாலும் திவ்யாவின் ஆழ் மனதில் அவன் மேல் இருந்த ஆழமான தூய காதல் அவளைத் தடுமாறச் செய்தது..

திருமண நாளில் இருந்து தன் கணவன் வாய் திறந்து தன் மனதில் குடியிருந்த காதலை வெளிப்படுத்தி இருக்கவில்லை.. பார்வையில் வீசிய காதலையும், தொடுகையில் உணர்த்திய தாபத்தையும், அன்று மழை நாளில் தன்னை இறுக்கி அணைத்து கொடுத்த பாதுகாப்பையும் மட்டுமே உணர்ந்திருந்தாளே தவிர உள்ளத்தில் இருந்த காதலை அவனாக அவளுக்குச் சொல்லியிருக்கவில்லை..

தன் இதயத்தை அமிலம் போன்ற வார்த்தைகளால் அவன் சிதைத்து சின்னாபின்னமாக்கின போது கணவனின் பார்வையை, தொடுகையை, அணைப்பை காதலென்று ஏற்றுக்கொள்ள மறுத்த மனது, இன்று விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பொழுது துடித்துக் குமுறி வெடித்த இதயம் இந்த நிமிடம் அவனின் நெருக்கத்தில் சகல வேதனைகளையும் மறந்து தன் உள்ளத்தில் பொதிந்து இருக்கும், தன் மனதில் உறைந்து இருக்கும், தனது உன்னதமான காதலை திரண்டெழுந்து வெளிக்கொணற தன் கணவனின் நெருக்கத்தில், ஸ்பரிசத்தில், தொடுகையில் முதல் முறை ஒரு மனைவியாய் உருகி கசிந்து நின்றாள்.

இரண்டாவது தடவையாகத் தன் கணவனை இத்தனை நெருக்கமாக உணரவும் உடலில் இன்ப அலைகள் படர்ந்து உடல் முழுவதும் பாய்ந்து, உணர்ச்சிகளின் பிரவாகத்தால் இதயம் படபடத்து வேகமாகத் துடித்ததில் முகம் செந்தனலாய் மாற, இருந்தும் வழக்கமாக வரும் அச்சத்தினாலும் கலக்கத்தினாலும் அவன் முகம் பார்க்க முடியாமல் அவள் தலை கவிழ.

அவளின் சிவந்த முகத்தையும், தன் உடல் உரசியதும் அவளின் பூவுடல் நடுங்கியதையும், தன் விரசம் வழியும் கண்களைச் சந்தித்த அவளின் அச்சம் படர்ந்திருந்த விழிகளில் தன் பார்வையின் தாக்கத்தைத் தாங்காமல் நிலத்தை நோக்கி தாழ்த்தியதையும் கண்டவன் அந்த நிமிடமே தன் இதயத்தில் ஆழ புதைத்திருந்த தன்னவளின் மேல் பூத்திருந்த தன் உன்னதமான காதலை சொல்ல விரும்பினான்.

ஆனால் ஏனோ சொல்லாமல் அவளின் முகத்தைத் தன் இரு கரங்களால் ஏந்தியவன்.

"திவ்யா. என்ன பாரு" என்று கரகரத்த குரலில் கிசுகிசுப்பாகக் கூற.

அவன் குரலில் இருந்த ஏக்கமோ அல்லது மோகமோ அவள் அவன் முகம் நோக்கி நிமிர்ந்து பார்க்க அவளின் அபாரமான அழகு விழிகளில் தன் வேட்கை விழிகளைப் படரவிட்டவன் அவளின் நெற்றியில் தன் முதல் முத்த முத்திரையைப் பதித்தான்.

அவன் முகத்தின் ஸ்பரிசத்தைத் தன் முகத்தில் உணர்ந்தவள் அவனின் மூச்சுக் காத்து தன் மீது பட்டுத் தன்னைத் தகிக்க வைத்தாலும் அச்சமும் கலக்கமும் போட்டி போட.

"வேண்டாங்க" என்றாள் தனக்கே கேட்காத மெல்லிய குரலில்.

"என்ன வேண்டாம்?" என்று வார்த்தைகளை மெல்ல உதிர்த்தவன் அவளின் இரு கண்களிலும் தனது இரண்டாவது மூன்றாவது இதழ் முத்திரைகளைப் பதிக்க..

"அம்மா வந்துருவாங்க இப்போ" என்றாள்..

"வந்தா வரட்டும்" என்றவன் மென்மையாக அவளின் பட்டுக் கன்னங்களில் தனது நான்காவது ஐந்தாவது முத்திரைகளைப் பதிக்க.

"பயமா இருக்குங்க" என்றாள்.

"எதுக்கு?" என்றவன் ஒற்றைக் கல்லானாலும் பளபளத்து ஜொலிக்கும் அவளின் மூக்குத்தியில் மிருதுவாகத் தன் ஆறாவது முத்திரையைப் பதிக்க.

அதற்கு மேலும் தாங்காதவளாய் தளிர் மேனியவளின் உணர்ச்சிகள் கிளர்ந்து உடல் முழுவதும் பாய்ந்ததால் வெட்க அலைகளில் அகப்பட்டுத் தத்தளித்தவளின் செந்நிற உதடுகள் லேசாகப் பிரிந்து துடிக்க,

"ப்ளீஸ் வேண்.." என்று அவள் முடிக்கவில்லை..

அவள் உதடுகளை உரசும் அளவிற்கு வெகு அருகில் தன் உதடுகளைக் கொண்டு சென்றவன் ஒரு நொடி அவள் உதடுகளின் துடிப்பை ரசித்துப் பின் தாங்கமாட்டாதவனாய் மலரினும் மெல்லியவளின் மென்மையான இதழை தன் முரட்டு இதழால் சிறை செய்தான்..

ஏழாவது முத்திரை.

ஆனால் நீண்ட ஆழமான அழுத்தமான முத்திரை..

தொடரும்..

 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top