JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 16

JB

Administrator
Staff member
அத்தியாயம் 16



இதோடு ஹர்ஷா பிரிந்து சென்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது.

இடையில் அகிலும் வந்து கனிகாவைக் கல்லூரியில் சேர்த்து விட்டு சென்று இருந்தான்.

ஹர்ஷாவின் பழைய அலைபேசி எண்ணை அவன் முடக்கி புது எண்ணை வாங்கியிருந்ததால் கனிகாவிற்கு அவனை அழைக்க முடியாமல் போனது.

அவ்வப்பொழுது அகிலிற்கு அழைத்து ஹர்ஷாவின் புது எண்ணை கண்டு பிடிக்கச் சொல்ல, அவனும் எத்தனையோ தடவை முயற்சித்துப் பார்த்துவிட்டான்.

ஹர்ஷாவின் நண்பன் ராஜேஷிடம் கூடத் தன் புது எண்ணை கொடுக்காமல், வேண்டும் என்றால் முகநூலில் தகவல் அனுப்ப சொல்லியிருந்தான் ஹர்ஷா.

கிட்டதட்ட அவன் இந்தியாவையே மறந்திருந்தான் என்றே சொல்ல வேண்டும் அல்லது மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தானோ.

நாட்கள் நகர, நகர ஹர்ஷா தன்னை அழைப்பான் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்து இருந்தது கனிகாவிற்கு.... அவன் இந்த அளவிற்கு அவளை வெறுப்பான் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை..

ஒரு வேளை அவர் ஆசைப்படி தான் இணங்கி இருக்க வேண்டுமோ என்று கூடத் தோன்றும், ஆனால் அப்பொழுதும் அவளது கண்ணியமான மனது அதற்கு ஒப்பவில்லை.

வாழ்க்கையில் வரைமுறை என்பது வேண்டும்..

எதற்காகவும் யாருக்காவும் தன் கற்பை இழந்துவிடக்கூடாது... என்ன தான் காதலானாக, எதிர்காலத்தில் தன் கணவனாக வரப் போகிறவனாக இருந்தாலும் கற்பு என்பது ஒரு பெண்ணிற்கு விலை மதிக்கப் பெற்றது... அதை இழந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள்.

ஆனால் நாளுக்கு நாள் ஹர்ஷாவின் நினைவு அவளைக் கொல்லாமல் கொன்றது.

அதன் விளைவாக அகிலிடம் கூடப் பேசுவதைக் குறைத்து இருந்தாள்.

ஒரு நாள் காலை வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் தன் அருகில் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தவள் அங்கு அகிலை கண்டதும் ஆச்சரியத்தில்,

"அத்தான் என்ன இது? இவ்வளவு வெல்லன வந்திருக்கீங்க..." என்று விழி விறிய கூற,

"கனிகா.... ஏன் ஃபோன் கூடப் பண்றதில்லை? எத்தனையோ தடவை கூப்பிட்டும் எடுக்கலை.... சுந்தரம் மாமாவிடம் பேசி தான் நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சுக்க வேண்டியதாக இருக்கு.." என்றான்.

"அப்படி எல்லாம் இல்லை அத்தான்....சரி...உள்ள வாங்க..."

"நீ எப்படி இருக்கக் கனிகா?"

"இருக்கேன் அத்தான்... இருங்க காபி போட்டு தரேன்..."

அவள் தன் முகத்தைப் பார்த்து கூடப் பேச தயங்குகிறாள் என்று புரிந்துக் கொண்டவன்,

"கனிகா, அம்மாவுக்கும், நிகிலாவிற்கும் உன் நினைப்பா இருக்காம்.... உன்னை ஒரு இரண்டு நாளைக்குச் சென்னைக்குக் கூட்டி வரச் சொன்னார்கள்.... ஏற்கனவே சுந்தரம் மாமாவிடம் பேசிவிட்டேன்.... அதனால் நீ இன்னக்கே என் கூடச் சென்னை வர.." என்றான்.

சுந்தரத்திற்குத் தன் மகள் சென்னையில் இருந்து வந்ததில் இருந்து எப்பொழுதும் ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கண்ணீர் வடிப்பதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.

முதலில் தன் அன்னையை நினைத்து அழுகிறாள் என்று நினைத்தவர் நாள் ஆக ஆக அவளின் நிலை மோசம் ஆகியதே தவிரச் சரியாகவில்லை என்பதைப் புரிந்து அகிலிற்கு அழைக்க, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொய்கள் சொல்லி அவரைச் சமாளித்தவன் தப்பித் தவறிக்கூட ஹர்ஷாவை பற்றிச் சொல்லவில்லை.

சென்னைக்குச் செல்ல கொஞ்சம் கூட இஷ்டம் இல்லாவிட்டாலும் தன்னை மகளைப் போல் பார்த்துக் கொண்ட மாலதியையும், தோழியைப் போல் பழகியிருந்த நிகிலாவையும் பார்க்க கனிகாவிற்கும் ஆசை இருந்ததால் அகிலுடன் சென்னைக்குப் புறப்பட்டாள்.

ஒரு வேளை சென்னைக்குச் செல்லாமல் கிராமத்திலேயே தங்கி இருந்திருந்தால் ஹர்ஷா அவளை வந்து சந்தித்து இருப்பானோ?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் விதியின் பங்கு பெரும் பங்காயிற்றே!


**********************************************


சென்னைக்கு வந்தவளுக்கு மாலதியையும் கணேசனையும், நிகிலாவையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும், மாடியில் தான் தங்கி இருந்த தன் அறைக்கு வந்தவளுக்கு ஹர்ஷாவின் நினைவு இதயத்தின் மேல் பெரிய கனமான கல்லை ஏற்றி வைத்தது போல் இருந்தது.

முடிந்தளவு தன் மனதின் வேதனையை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் தான் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொள்ள, அவள் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்த அகில் அவளைத் தன்னுடன் வெளியே செல்ல அழைத்தான்.

முதலில் மறுத்தவள் பின் நெஞ்சுக்குள் இருக்கும் இந்த இறுக்கம் தாளாமல் அதுவே வெடிக்கும் நிலைக்கு வந்துவிடுவது போல் இருக்க, தனக்கும் ஒரு மாற்றம் வேண்டும் என்று முடிவு செய்தவள் சரி என்று அவனுடன் புறப்பட்டாள்.

அகிலுடன் எங்கும் வெளியில் செல்லக்கூடாது என்று ஹர்ஷா எச்சரித்து இருந்ததை மறந்து!

வெளியே வந்தவர்கள் நேரே சென்றது அதே ஷாப்பிங் மாலிற்கு.... எங்கு ஹர்ஷா தன்னை அகிலுடன் பார்த்து கோபப்பட்டு, அதன் விளைவாகத் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்து, அதுவே அவர்களின் பிரிவுக்குக் காரணமாக இருந்ததோ அதே மால்.

"அகில் அத்தான்.... ஏன் இங்க வந்தோம்? இதை விட நல்ல மால் இல்லையா?"

"ஓ ஸாரி கனிகா... நான் சுத்தமா மறந்துட்டேன்.... வேணும்னா சொல்லு, வேறு எங்காவது போகலாம்.."

"பரவாயில்லை அத்தான்... வந்ததும் வந்துட்டோம்... இதுக்கே போவோம்..." என்றவள் அவனுடன் மாலிற்குள் நுழைய விதியும் மகிழ்ச்சியுடன் அவள் பின்னாலே நுழைந்தது அந்த உருவத்தின் மூலம்.

ஒவ்வொரு கடைக்குள்ளும் அவர்கள் நுழைய அந்த உருவமும் அவர்களின் பின்னாலேயே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.... ஏற்கனவே ஹர்ஷாவின் நினைவு வாள் கொண்டு தன் இதயத்தை அறுத்துக் கொண்டு இருக்க அகிலிடம் பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாலும் அவளின் ஒவ்வொரு அணுவும் 'ஹர்ஷா ஹர்ஷா' என்றே புலம்பிக் கொண்டு இருந்தது..

கிட்டதட்ட ஒரு மணி நேரம் சுற்றியவர்கள் மாலில் மேல் தளத்தில் இருந்த ஃபுட் கோர்ட்டில் உணவு அருந்தலாம் என்று முடிவு செய்து எஸ்கலேட்டரில் (நகரும் படிகட்டில்) ஏறப் போக, ஹர்ஷாவின் நினைவுகளிலேயே உழண்டு கொண்டு இருந்தவள் சரியாகக் கவனிக்காமல் படியில் கால் வைக்க, தடுமாறி விழப்போனாள்..

எதிர் பாராதவிதமாக நிலை குலைந்து பின்னால் சரிய, அவள் பின்னால் மிக அருகில் நின்று கொண்டிருந்த அகில் தன்னிச்சையாக அவளை விழாமல் இருப்பதற்காகத் தன் இருகரங்களாலேயும் பின்னால் இருந்து அவளைச் சுற்றி பிடிக்க, அந்தக் காட்சியைக் கனகச்சிதமாகத் தனக்குள் சேமித்துக் கொண்டது அந்த உருவத்தின் கைகளில் இருந்த அலைபேசி.

அந்தக் குறுகிய நேரத்தில் எவ்வளவு முடியுமோ அத்தனை புகைப் படங்களை எடுத்த அந்த உருவம் திருப்தியுடன் மாலில் இருந்து வெளியேறியது.

வெளியேறிய உருவம் தன் அலைபேசியில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துத் திருப்தியாகப் புன்னகைத்தது.

இந்தப் புகைப்படங்கள் இரு ஜீவன்களின் வாழ்கையில் விளையாடப் போகும் விளையாட்டை நினைத்து.


*****************************************


ஹர்ஷாவிற்கு ஒரு கான்ஃபரன்சுக்கு போக வேண்டியிருந்ததால் காலையில் சீக்கிரம் எழுந்தவன் ப்ரெட்டில் ஜாம் தடவியவாறே தன் மடி கணினியை உயிர்ப்பிக்க, முக நூலில் சென்னையில் தன்னுடைய கல்லூரியில் படித்த ஒரு தோழனிடம் இருந்து நண்பனின் வேண்டுகோள் (Friend request) வந்திருந்தது.

வேண்டுகோளை ஏற்றவன் மற்ற இணையத் தளங்களைப் பார்க்க ஆரம்பிக்க, அவனின் முக நூலிற்கு ஒரு தகவல் வந்தது.

அது இப்பொழுது வேண்டுகோள் (Friend request) விடுத்திருந்த தோழனிடம் இருந்து வந்திருக்கிறது என்பதைக் கண்டவன் அதற்குள் என்ன தகவல் என்று யோசித்தவன் பிரித்துப் பார்க்க.

உடல் முழுவதும் அமிலம் ஊற்றியது போல் உணர்ந்தவன் அசுர வேகத்தில் எழ அவன் அமர்ந்திருந்த நாற்காலி தூர போய் விழுந்தது.

தன் கையில் இருந்த ப்ரெட்டை தூக்கி எறிந்தவன் கணினியை மீண்டும் பார்க்க, அங்கு அவன் மனம் கவர்ந்தவள், கிட்டதட்ட அகிலைக் கட்டி பிடித்தபடி காட்சி கொடுத்து கொண்டிருந்தாள் புகைப்படத்தில்.

அது கனிகா (நகரும் படிகட்டில்) எஸ்கலேட்டரில் நிலை தடுமாறி விழ போகும் போது அகில் பின்னால் இருந்து அவளை அணைத்த வாக்கில் பிடித்திருந்த காட்சி.

காமாலைக்காரன் கண்ணிற்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்ற பழமொழி போலக் கனிகாவும் அகிலும் நின்றிருந்த காட்சியானது அவர்கள் அன்னியோன்மாக இருப்பதைப் போலத் தெரிய, கட்டுக்கடங்காத கோபம் தலை தூக்க தன் அருகில் இருந்த மேஜையைக் கணினியோடு ஆங்காரமாகத் தள்ளியவன் தன் அறை முழுவதும் இருந்த பொருட்களை உடைத்தும் அவன் கோபமும் ஆத்திரமும் தீரவில்லை.

வெளிநாட்டிற்கு வந்து இந்த ஆறு மாதங்களில் அவன் கனிகாவை ஒரு முறை கூட அழைத்துப் பேசவில்லை, அவளை ஒரு முறை கூட எவ்வழியிலும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.

ஆனால் அவள் மீது அவன் வைத்து இருந்த கடலளவு நம்பிக்கையில் ஒரு சிறு துளி கூடக் குறையவில்லை.

எக்காரணம் கொண்டும் அவள் தன்னை விட்டு இன்னொருவனை மனதால் கூட நினைக்க மாட்டாள் என்று அத்தனை உறுதியுடன் நம்பியிருந்தான்.

அந்த நம்பிக்கை தான், அந்த உறுதி தான், அவளை விட்டு நாடுகள் கடந்து இருந்தும், அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்தும், இன்னும் அதிகமாக அவளைக் காதலிக்க வைத்து இருந்தது.

அதற்கு அவளின் ஒழுக்கமான நடத்தையே காரணம்.

தன் மீது மனம் முழுக்க அத்தனை காதல் இருந்தும், அவனில்லாமல் இவ்வுலகத்தில் உயிர் பிழைத்திருக்க வழியில்லை என்று தெரிந்து இருந்தும், அவனைத் தன்னிடம் முறை தவறி நடக்கவிடவில்லை..

அவன் தன்னைத் திருமணம் புரியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் திருமணத்திற்கு முன் தன் உயிர் காதலனாக இருந்தாலும் தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள அவனையும் ஒதுக்கி தள்ள தயாராக இருந்தவள்.

அவனில்லாமல் வேறு ஒருவன் கை பட்டாலும் தான் தீக்குளிக்கப் போவதாகக் கதறியவள், நிச்சயம் தன்னை அதற்குள் மறந்திருக்க மாட்டாள்.

இது உண்மை இல்லை என்று இதயம் கதறினாலும் தன் கண் முன் இருக்கும் காட்சி உண்மை தானே என்று புரிய, தான் தூக்கி போட்டு உடைத்ததில் கணினி சுக்கு நூறாகச் சிதறி இருக்க, தன் அலைபேசியை எடுத்தவன் அதில் முக நூலில் லாகின் செய்து பார்க்க அதே புகைப்படங்கள்.

பல்வேறு கோணத்தில் ஆனால் வெகு கவனமாகக் கனிகா விழுந்ததினால் அகில் பிடித்திருப்பது போல் தெரியக் கூடாது என்பதற்காக வெகு சிரத்தையாகப் புகைப் படம் எடுக்கப் பட்டிருந்தது.

எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் கனிகாவின் இடையை அகில் இறுக்கப் பிடித்திருப்பது போல் தோன்றும் அளவிற்கு உருவாக்கம் செய்யப்பட்டிருக்க, மனம் முழுவதும் சினத்தினால் ஆட்கொள்ளப் பட்டிருந்தவனால் தெளிவாகச் சிந்திக்க முடியாமல் போனது கனிகாவின் துரதிஷ்டமே அல்லாமல் வேறு என்ன..

வழக்கம் போல் கனிகா வாசல் தெளித்துக் கோலம் போட்டு சமையல் அறைக்குள் நுழைய மாலதி,

"கனிகா... நாங்க எல்லோரும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினோம் டா....உனக்கு இந்த ஊர் பிடிக்கலைன்னு தெரியும்.... ஆனால் எப்படியும் போகப் போகப் உனக்குப் பழகியிரும்னு நினைச்சோம்... ஆனால் அது நடக்கலை.... என்னமோ.... ஆனால் நீ சந்தோஷமா இருந்தால் சரி.." என்றார்.

மெலிதான புன்னைகை உதிர்த்தவள் அவருக்குச் சமையலுக்கு உதவி புரிய ஆரம்பிக்க, அந்த நாள் அமைதியாகக் கழிந்தது.

இரவு மாடியில் அமர்ந்து அகிலுடன் பேசிக் கொண்டு இருக்க, நீண்ட நேரம் ஆகியிருந்ததால் நிகிலா தனக்குத் தூக்கம் வருகிறது என்று உறங்க சென்றுவிட்டாள்.

அப்பொழுது அகிலின் அலைபேசியில் அழைப்பு வர, ஏதோ புது எண்ணாக இருந்தாலும் அது வெளி நாட்டில் இருந்து வரும் அழைப்பு போல் இருக்கச் சட்டென்று கனிகாவை நிமிர்ந்து பார்த்தவன் "ஹர்ஷாவா இருக்குமோ?" என்றான்.

தன் மனதிற்குச் சாதகமாக எதாவது கிடைக்காதா என்று அழுது களைத்து இருந்தவளுக்கு ஹர்ஷா என்ற வார்த்தையைக் கேட்டதும் படபடத்தவள் தவிப்புடன் ஹர்ஷாவாகத் தான் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன்,

"எடுங்க அத்தான்.. கட் பண்ணிறப் போறாங்க... ஸ்பீக்கரில் போடுறீங்களா? நானும் கேட்கிறேன்" என்க,

சரி என்றவன் அழைப்பை எடுத்த அந்த விநாடியே கர்ஜிக்க ஆரம்பித்தான் ஹர்ஷா.

"நான் எப்ப அவள விட்டு கிளம்புவேன்.. நீ எப்போ அவள உன் வசப்படுத்தலாம் என்று நினைச்சிட்டு இருந்தியோ? பரவாயில்லை... நீ நினைச்சதை சாதிச்சுட்ட.... ஐ ஆம் வெரி ப்ரௌட் ஆஃப் யூ [I am very proud of you]... உன்னை விட அவ ஒரு படி மேல போய்ட்டா போல இருக்கு.... நான் இத்தனை நாள் அவகிட்ட பேசாமல் இருந்ததும் என்னை நினைச்சு ரொம்பக் கஷடப்பட்டுட்டு இருப்பான்னு நினைச்சேன்... பட் பரவாயில்லை... அவளும் உன் கைகளில் புரளுவதற்குக் காத்திட்டு இருந்த மாதிரி ரொம்பச் சந்தோஷமா இருக்கா..." என்று ஒவ்வொரு வார்த்தையிலும் அமிலத்தைக் கரைத்து தன் உடல் முழுவதும் சொட்டு சொட்டாக ஊற்றுவது போல் அவள் மேல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டு இருந்தான் ஹர்ஷா.

கனிகாவால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை பேசுவது ஹர்ஷாவா என்று.

எத்தனை நாட்கள் இந்தக் குரலை கேட்பதற்குத் தவியாய் தவித்து இருக்கிறேன்.

என்னை ஒரு வேளை மறந்துவிட்டாரோ?? வேறு ஏதாவது பெண் அவர் வாழ்க்கையில் வந்து இருப்பாளோ?? என்று ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பிழைக்க, இத்தனை நாட்கள் கழித்து அதுவும் தன்னை அழைக்காமல் அகிலை அழைத்து என்ன இது கூரிய விஷம் தடவிய வார்த்தைகள்.

இருந்தும் அவனுடன் பேசும் ஆர்வத்தில் அகிலிடம் இருந்து அலைபேசியைப் பறித்துத் தன் ஒட்டு மொத்த காதலையும் பரிதவிப்பையும் வெளிப்படுத்திவிடும் எண்ணத்துடன்,

"என்னங்க....எப்படி இருக்கீங்க? ஏன் இத்தனை நாள் என் கிட்ட பேசலை? என் மேல் இன்னும் கோபம் போகலையா?" என்று பதற,

அவளின் பதற்றமும் கலக்கமும் அகிலின் மனதை பிசைய, தன்னை அறியாமல் அவன் கண்களிலும் நீர் கோர்த்தது.

'இந்தச் சின்னப் பெண் இத்தனை நாள் எப்படி இவ்வளவு சோகத்தை மறைத்து வைத்து இருந்தாள்... ஹர்ஷா பேசிய கொடிய வார்த்தைகளைக் கேட்டும் அதனை மறந்து தன்னை அறியாமல் அவளின் சோகமும் காதலும் இப்படி வெளிப்படுகிறதே..' என்று மனம் பதற அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

"என்னடி கனிகா... இந்நேரத்தில் கூட அவன் கூடத் தான் இருக்கப் போல... போதும் உன் நடிப்பு..... உன்னை விட்டு ரொம்பத் தூரத்தில் தான் இருக்கேன்..... அதனால் அங்க நடக்கிறது எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா? உன் காதல் நாடகம் எல்லாம் எனக்குத் தெரியும்..." என்று வார்த்தைகளில் நெருப்பை அள்ளிக் கொட்ட,

"எ...என்னங்க? நீங்க என்ன பேசுறீங்கன்னே புரியலை..." என்று தடுமாறினாள்.

ஆத்திரம் அவன் கண்களை மறைக்க,

"கனிகா... இனி மேலும் உன் நடிப்பில் நான் ஏமாறமாட்டேன் டி.." என்றான்.

அப்பொழுது தான் கனிகா ஒன்றை கவனித்தாள்... அவன் எப்பொழுதும் தன் பெயரை "கனி" என்று சுருக்கி தான் அழைப்பான்.

கனிகாவிற்குத் தன்னை ஒருவரும் அப்படி அழைப்பது பிடிக்காது.... கிராமத்தில் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அவளைக் கனின்னா?...பழம்....மாம்பழமா? கொய்யாபழமா? என்று கிண்டல் செய்ததால் யாரும் தன் பெயரை சுருக்கி அழைக்கக்கூடாது என்று கூறியிருந்தாள்... கனிகாவின் பெற்றோர் கூட அவளைக் கண்ணம்மா என்று தான் அழைப்பார்கள்.

ஆனால் அதே பெயரை ஹர்ஷா அழைத்த பொழுது மதி மயங்கியிருந்தாள்...

"நீ என்னவள்...எனக்கு மட்டுமே சொந்தமானவள்... வேறு யாரும் உன்னை இப்படி அழைக்கக் கூடாது.." என்பான் காதல் ஒழுக... ஆனால் இப்பொழுது அவன் முழுப்பெயரை சொல்லி அழைக்கும் பொழுது அவன் தன்னை விட்டு தூரப் போய்விட்டது போல் தெரிந்தது.

"என்னங்க... நான் நேற்று தான் கிராமத்தில் இருந்து வந்தேங்க... நீங்க ஊருக்குப் போனதும் என்னால நீங்க இல்லாத இந்த ஊரில இருக்க முடியலை... அதனால அகில் அத்தான் என்னோட பழைய காலேஜிலேயே சேர்த்துவிட்டாங்க.." என்று ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவன் தன் காதலை புரிந்து கொள்ள மாட்டானா என்ற தவிப்புடன் கூற,

அகிலிற்கோ 'இப்படி ஒன்றும் புரியாத சின்னப் பெண்ணாக இருக்கிறாளே? ஹர்ஷா என்னுடன் அவளைச் சேர்த்து வைத்துச் சந்தேகப் படுகிறான் என்று கூடப் புரிஞ்சுக்க முடியாமல் இன்னும் அகில் அத்தான் என்னைய கிராமத்திற்குக் கூட்டிட்டு போய்ட்டாங்கன்னு சொல்றாளே..' என்று பதற,

அவளின் அகில் அத்தான் என்ற வார்த்தைகளில் ஹர்ஷா தன்னை எரியும் உலைக்குள் தூக்கி எறிந்தது போல் உணர்ந்தான்... ஆத்திரம் அவன் கண்களை மறைக்கக் கோபத்தின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தவன் வார்த்தைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டினான்.

"என்னடி, மறுபடியும் அகில் அத்தான், அகில் அத்தானுட்டே இருக்க... உன்னை நான் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு தெரியும்... உன்னைத் தொட எனக்கு மட்டுமே உரிமை இருக்குன்னும் தெரியும்... தெரிஞ்சிருந்தும் ஊருக்கு வரதுக்கு முன்னாடி எவ்வளவோ கெஞ்சினேன்... ஆனால் என்னையைத் தொட விடலை.. இப்போ அவனோட இந்த அளவிற்கு அதுவும் பப்ளிக்காகச் சுத்துற... அவன் இப்படி உன்னைய பப்ளிக்கில் கட்டி பிடிச்சுட்டு இருக்கான், அதில் ரொம்பச் சுகமா நனைஞ்சுகிட்டு இருக்கப் போல.." என்று அவளின் மென்மையான மனதையும், அழகான காதலையும் கூறு போட்டுக் கொண்டிருந்தான் தன் விஷம் தடவிய வார்த்தைகளால்.

அவனின் வார்த்தைகளின் வீரியம் இதயத்தில் அதிர்வை தந்தது என்றால் நான் வேசித்தனம் பண்ணுகிறேன் என்று சொல்லாமல் சொல்லியது அவள் மூளையை உறைய செய்தது.

அவள் ஏழை தான், கிராமத்துப் பெண் தான், ஆனால் இழிவானவள் இல்லையே... உடல், உயிர், ஆவி என்று அனைத்தையும் கொண்ட உயிருள்ள ஜீவன் அல்லவா?

தான் வாழ் நாளில் புரிந்த மிகப் பெரிய தவறு அவன் தன் காதலை சொன்னதும் மறுக்க இயலாமல் ஏற்றுக் கொண்டது தான்... அதற்கு இத்தனை பெரிய தண்டனையா??

தன்னைக் காதலிப்பவனாக இருந்தாலும், எதிர்காலத்தில் தன்னை மணக்க போகிறவனாக இருந்தாலும் கூட அவனையே தன்னைத் தொடாமல் தள்ளி வைத்து இருந்தவள் எப்படி வேறு ஒருவனைத் தன்னைத் தொட அனுமதிக்க முடியும்.

ஆனால் தான் அத்தானோடு கட்டி அணைத்திருந்தேன் என்று எப்படி உறுதியாகக் கூறுகிறார்??

வலிக்க வலிக்க அவன் பேசியதில் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு... அவனின் பார்வை, தொடுகை, புன்னகை, சிரிப்பு, முத்தம், செல்லக் கோபம் ஆக அனைத்தையும் மாலையாகக் கோர்த்து மனதில் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்திருக்க, அவனின் அமிலம் கலந்த வார்த்தைகள் அந்த மாலையை அறுத்து எறிந்தது போல் உணர்ந்தாள்.

அவளின் நிலையைப் பார்த்த அகிலிற்கு அவளுக்கு ஆறுதல் சொல்லுவதா அல்லது ஹர்ஷாவிற்குத் தங்கள் உறவை நியாயப்படுத்துவதா என்று தெரியவில்லை... குழம்பியவன் ஹர்ஷா இருக்கும் நிலையில் அவனுக்கு என்ன எடுத்து சொன்னாலும் புரியாது என்று நினைத்தவன் ஹர்ஷாவின் அழைப்பை துண்டித்தான்.

ஏற்கனவே அங்கு எரிமலையாக வெடித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்தவன் கனிகா தான் தன் அழைப்பை துண்டித்தாள் என்று நினைத்துக் கொண்டு அவள் மேல் தீராத ஆத்திரத்தில் தன் அலைபேசியைத் தரையில் ஓங்கி அடித்தவன் அது சுக்கு நூறாக உடைந்து போனதை பார்த்து அசையாமல் ஒரு சில நிமிடங்கள் நின்றவன் தன்னிலைக்கு வந்து படாரென்று தன் அறைக் கதவை சாத்திவிட்டு வெளியேறினான்.

சரமாரியாக அவன் தாக்கிய வார்த்தை தாக்குதல்களில் எழக்கூட முடியாமல் உடலும் உள்ளமும் தளர்ந்து போய் அசையாது அப்படியே தரையில் அமர்ந்து இருந்தவளைப் பார்த்த அகிலிற்கு... 'இதுக்குத் தான் தலையால அடிச்சுக்கிட்டேன்...இந்த பணக்கார தொடர்பே வேண்டாம் என்று.... அவனுக்கும் இவளுக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது... அப்புறம் எதற்கு இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம்?' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவனுக்கு அப்பொழுது தான் மூளையில் ஒன்று எட்டியது.

'ஹர்ஷாவிற்கு எப்பொழுதுமே தான் கனிகாவை எப்படியும் அவனிடம் இருந்து பிரித்து விடுவேன் என்று பயம் இருந்திருக்கிறது... அதனால் தான் தன் மேல் இத்தனை கோபம்... ஆனால் ஏன் இப்படி ஒரு சந்தேகம்?? எங்குப் பார்த்தான் நான் கனிகாவை கட்டி பிடித்திருப்பதை??' என்று குழம்பியவன் கனிகாவை பார்க்க, அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்து இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அவளின் தோள் பற்றி உலுக்கியவன், "கனிகா...கனிகா.." என்று அழைக்க, அவள் இந்த உலகத்திற்கு வருவது போல் தெரியவில்லை... இந்த நிலைமையில் இன்னும் சிறிது நேரம் அவள் இங்கு இருந்தாள் என்றால் அது ஆபத்து என்று உணர்ந்தவன் ஒரு வழியாக அவளைத் தன் நிலைக்கு வரச் செய்து கீழே கூட்டி வந்தான்.

தன் அறைக்குள் வந்தவளுக்கு,
"எத்தனை காதல் வைத்திருந்தேன் அவர் மீது... யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம் எனக்குக் கிடைத்திருக்கிறதே என்று எப்படி மனதுக்குள் பொத்தி வைத்திருந்தேன்... அத்தனையும் ஒரே நாளில் கலைத்துவிட்டாரே!" என்று மருங்கியவளுக்கு உறக்கம் எட்ட முடியாத தூரத்திற்குச் சென்று இருந்தது.

காலை வரை அழுதவள் அதற்கு மேல் சென்னையில் அதுவும் அகிலுடன் ஒரே வீட்டில் இருக்க விரும்பாமல் அகிலும் மாதவியும் எத்தனை சொல்லியும் தன் கிராமத்திற்குக் கிளம்பினாள்.


**************************************


அங்குக் கனிகா தன் அழைப்பை துண்டித்துவிட்டாள் என்று நினைத்தவன் அலைபேசியையும் உடைத்துவிட்டுக் காரில் கிளம்ப, கார் புயல் வேகத்தில் சீறிக் கொண்டு செல்ல, தன் மனதை சமன் படுத்த அவன் தேர்ந்தெடுத்த இடம் பார் [Bar]

மதுவை நாடி சென்றவன் மனதில் இருக்கும் கனிகாவின் நினைவுகளைக் குடித்து அழிக்க முயற்சி செய்ய, அழியக் கூடியதா அவள் நினைவுகள்.. அவன் உயிர் அல்லவா அவள்??

தன் இயற்கையான, அழுத்தமான பிடிவாத குணத்தால்தான் அவன் அவளிடம் இந்த ஆறு மாத காலமாகப் பேசாமல் இருந்தது.... ஆனால் அவளைப் பிரிந்த அன்றில் இருந்து இன்று வரை அவன் அவளை நினைக்காத நிமிடங்கள் இல்லை.

அவளின் அருகாமை, ஸ்பரிசம், குழந்தை முகம், அச்சத்தால் அகல விரித்துத் தன்னைப் பார்க்கும் பார்வை, தன் அருகில் இருக்கும் பொழுது நாணத்தால் சிவந்து தலை கவிழும் தோரணை, இதழ் பிரியாமல் சிரிக்கும் புன்சிரிப்பு என்று அவனின் ஒவ்வொரு அணுவும் அவள் வேண்டும் என்று மூளைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தது.

விடாமல் குடித்துக் கொண்டே இருக்க, பாரில் நுழைந்ததில் இருந்து அவனைக் கண்காணித்துக் கொண்டே இருந்த ஒரு இளம் பெண் அவனின் அழகிலும், அவன் ஓட்டி வந்த விலை உயர்ந்த ஆஸ்டன் மார்ட்டின் காரிலும், வாலட்டில் இருந்த பணத்தையும் பார்த்து மயங்கியவள் அவனை நெருங்கி வந்து அமர்ந்தாள்.

ஆனால் அத்தனை அழகான இளம்பெண் தன் அருகில் வந்து அமர்ந்தும் அவன் சற்றும் அவளைத் திரும்பி பார்ப்பதாய் தெரியவில்லை.

"ஹாய்...ஐ ஆம் மிஷல் [Hi, I am Michelle].." என்று தானே வலிய தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவள் அவனை நோக்கி கரத்தை நீட்ட, அவளைத் திரும்பிப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் மீண்டும் மதுவை குடிக்க ஆரம்பித்தான்.

சிலை போல் பேரழகியாக இருந்த அந்த வெள்ளைக்கார இளம் பெண்ணிற்குத் தன்னைப் பார்த்து முதன் முதலாக ஒரு ஆண் ஒதுக்கியதைக் கண்டு வியப்பாக இருந்தது..

அவன் அருகில் இன்னும் நெருங்கி அவன் தோளை உரசுவது போல் அமர, திரும்பிப் பார்த்தவனின் கண்களில் அத்தனை போதையிலும் பெண் மோகம் தெரியவில்லை.

ஒன்றும் பேசாமல் எழுந்தவனை ஆச்சர்யத்துடன் பார்த்தவள் அவன் பின்னால் செல்ல, அவன் தன் காரில் ஏறும் முன் அவன் கரத்தைப் பற்றியவள் "ஐ ஆம் ஃப்ரீ டுநைட்...ஐ கேன் கிவ் யூ அக் கம்பெனி [I am free tonight, I can give you a company]... " என்றாள்.

அவள் கரத்தை தன் கரத்தில் இருந்து மென்மையாக விடுவித்தவன்.... "ஸாரி, ஐ ஆம் ஆல்ரெடி என்கேஜ்ட் [Sorry, I am already engaged]..." என்று கூறிவிட்டு அவளைத் திரும்பியும் பாராமல் தன் காரில் ஏறிக் கிளம்பினான்.

இங்குத் தன் காதலே பொய்த்துப் போய்விட்டது... எவளை தன் உயிராக நினைத்திருந்தேனோ அவளை இன்னொருவனுடன் அத்தனை நெருக்கமாகப் பார்த்தும் ஏன் என்னால் அவளை மறக்க முடியவில்லை.... ஆல்ரெடி என்கேஜ்ட் என்றால் அவளைத் தவிர இனி வாழ்நாளில் நான் வேறு பெண்ணைத் திரும்பி பார்க்க போவதில்லையா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டவனுக்குக் கனிகாவை தவிர வேறு ஒரு பெண்ணை இனி வாழ்நாளில் நினைக்க முடியும் என்றே தோன்றவில்லை.

தன் அறைக்கு வந்தவன் போதையினால் வந்த தூக்கத்தில் தன்னை மறந்து ஆழ்ந்தான்.

கிராமத்தில் தன் வீட்டை அடைந்தவளுக்கு இன்னும் ஹர்ஷா சொன்ன வார்த்தைகளே காதுகளில் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

எப்பேற்பட்ட கொடிய வார்த்தைகள்!

நீங்க தான் என்னோட உயிர்.. நீங்க இல்லைன்னா நான் இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா... அப்பேர்ப்பட்ட உங்களையே கல்யாணத்திற்கு முன்னாடி என்னைத் தொட அனுமதிக்கலைன்னா நான் எப்படி வேறு ஒருவரை அனுமதிப்பேன்.

அப்போ என் மேல் நீங்க வச்ச நம்பிக்கை இவ்வளவு தானா?

இதுக்குக் காரணம் நீங்க இல்லை, நீங்க என்னை நம்புற அளவிற்கு நான் உங்க மனசில் நம்பிக்கையை வளர்க்கவில்லை போல என்று மிகவும் நைந்த குரலில் தனக்குத் தானே பேசிக்கொண்டவள் தன் தலைவிதியை நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டு அழுது கரைந்தாள்.


******************************************


ஹர்ஷா பேசி இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிறது.

ஆனால் இன்னும் கனிகாவின் மனதில் தெளிவில்லை.

ஏதோ உயிர் உள்ள ஒரு ஜடம் போல் காலையில் எழுந்ததும் தந்தைக்கு என்று சமைத்து வைப்பவள் கல்லூரிக்கு சென்று படிப்பிலும் மனதை செலுத்த முடியாமல் தவித்துப் பின் வீடு வந்து சேர்பவள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

சுந்தரத்திற்கும் தன் மகள் ஏன் இவ்வாறு இருக்கிறாள் என்று புரிபடவில்லை.

அவ்வப்பொழுது அகில் வந்து பார்த்துவிட்டு போவான்... இத்தனை நாட்களில் அவன் அவளுக்கு ஒரு நல்ல தோழனாகவே மாறி இருந்தான்...அகிலின் வரவு ஒரு விதத்தில் மனதிற்கு இதமாக இருந்தாலும் ஹர்ஷா தன்னை அகிலுடன் இணைத்துப் பேசியது அவ்வப்பொழுது ஈட்டி போல் இதயத்தைக் குத்தி கிழிக்கும்.

எவ்வளவு முயன்றும் அவளால் தன்னை அகிலிடம் இருந்து மறைக்க இயலவில்லை... எப்பொழுதும் வருவது போல் அன்றும் வந்திருந்தவன் அவள் இருந்த தோரணையைப் பார்த்து மனம் வெதும்பி போனான்.

உடல் இளைத்து களை இழந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தவளைக் கண்டவனுக்கு ஹர்ஷாவின் மேல் அதீத கோபம் வந்தது..

அவனுக்கு உணவு பரிமாறியவள் அமைதியாக அமர்ந்திருக்க, "இப்படி எத்தனை காலம் இருக்கறதா முடிவு பண்ணிருக்க?" என்றான்.

ஏற்கனவே மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவள், தன் அன்னை இறந்த அதிர்ச்சியில் மேலும் துவண்டு போயிருந்தவள் இப்பொழுது ஹர்ஷாவினால் அரண்டு போயிருந்தாள்... அமைதியான சூழ்நிலையில் சட்டென்று அவன் இவ்வாறு கேட்கவும் திடுக்கென்று தூக்கி வாரி போட்டது அவளுக்கு.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் திருதிருவென முழிக்க அவள் கரத்தை பற்றியவன்,

"கனிகா... இன்னும் ஹர்ஷாவை பற்றியே நினைச்சுக்கிட்டு இருக்கிறது சுத்த முட்டாள்தனம்... நீ ஊருக்கு வந்த பிறகு ஹர்ஷா என்னை அழைத்த நம்பரிலேயே பல தடவை முயற்சி செஞ்சேன்... என்ன நடந்தது? எதனால் நம் மேல் இப்படி ஒரு சந்தேகம் வந்தது?... எங்க நம்பளை அந்த மாதிரி பார்த்தார்? அப்படின்னு கேட்டுத் தெளிவு படித்திக்கலாம்னு பார்த்தேன்..." என்றவன் சில விநாடிகள் தயங்கி,

"ஆனால் அவர் ஃபோனை எடுக்கவே இல்லை.... அப்புறம் அவர் நம்பர் மாத்திவிட்டார் போலருக்கு... என்னால அவரை ரீச் பண்ண முடியலை..." என்றவனுக்கு நன்கு தெரியும் அவன் நினைத்திருந்தால், கொஞ்சம் போராடி இருந்தால் எப்படியாவது ஹர்ஷாவின் நம்பரை கண்டு பிடித்திருக்கலாம் என்று.

ஹர்ஷா சாதாரண ஆள் இல்லை.... C S க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் அவர்களின் ஒரே வாரிசு எத்தனை பிரபலம் என்று தெரியும்... எப்படியாவது அவர்களின் கம்பெனியில் ஒன்றையாவது நாடியிருந்தால் ஏதோ ஒரு வழியில் அவன் ஹர்ஷாவை தொடர்பு கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்த இரண்டு மாதங்களில் ஹர்ஷா கனிகாவை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.... இனி தொடர்பு கொள்வானா என்றும் தெரியவில்லை... இந்தப் பிரச்னையை இதோடு விட்டுவிட்டால் ஒரு வேளை கனிகாவின் மனதும் மாற வழியிருக்கிறது.... அவள் வேறு யாரையாவது ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழட்டும் என்று அவனே முடிவெடுத்திருந்தான்..

தொடர்ந்தவன்,

"அதனால் சொல்றேன்... ப்ளீஸ்... ஹர்ஷாவை மறக்கிற வழிய பாரு... அத்தை ஆசைப் பட்டது போல் நல்லா படி...உனக்குப் படிப்பு எவ்வளவு முக்கியம்னு நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை... தயவு செஞ்சு நடந்ததெல்லாம் மறந்துவிடு..." என்றான்.

ஹர்ஷாவை மறப்பதா?... ஊனும் உயிருமாக உள்ளத்தில் கலந்திருப்பவனை மனதில் இருந்து அகற்றுவது அத்தனை எளிதா?.

"என்னால முடியாது அத்தான்... அவங்களுக்கு வேணும்னா அது ஈஸியா இருந்திருக்கலாம்... ஆனால் என்னோட காதல் உண்மையானது தானே... என்னால எப்படி அவங்களை மறந்துட்டு வாழ முடியும்?? ஆனால் அதுக்காக அவங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லலை.... இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் அவங்களே மனசு மாறி வந்தால் கூட என்னால அவங்க பேசிய வார்த்தைகளை மறக்க முடியாது.... எப்போ சந்தேகம்னு ஒண்ணு வந்திடுச்சோ அது எப்பொழுதும் மனசை அரிச்சுக்கிட்டே இருக்கும்... மறுபடியும் மறுபடியும் வந்துக்கிட்டே இருக்கும்... ஏற்கனவே ஒரு தடவை நெருப்பில் குளிச்சது போல இருக்கு... என்னால மீண்டும் அப்படி ஒரு சோதனைய தாங்கிக் கொள்ள முடியாது... நான் இப்படியே இருந்துட்டு போயிடறேன்... இதுக்கு மேல அவரைப் பத்தி பேச வேணாம்.." என்றவள் தயங்கியவாறே சன்னமான குரலில் "ப்ளீஸ் நீங்களும் இங்க இனிமேல் வராதீங்க..." என்றாள்.

இவளை என்ன செய்வது என்பது போல் பார்த்த அகில்,

"கனிகா... ஹர்ஷா நம்மைப் பத்தி என்ன நினைக்கிறார் அப்படிங்கறத பத்தி எனக்குக் கவலை இல்லை. அவர் என்ன வேண்டுமானாலும் நினைச்சுக்கட்டும்.. .நம்ம இரண்டு பேரு மனசும் சுத்தம்... அதனால் நான் இங்க வருவதை நிறுத்த போறதில்லை..." என்று அழுத்தமாகக் கூறியவன் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் உணவு அருந்திவிட்டுக் கிளம்பினான்.

அவன் உருவம் மறையும் வரை வாசலில் நின்று அவன் போவதை பார்த்திருந்தவளுக்கு அழுகை மட்டும் நிற்கவில்லை.

'எப்படி இவர் மேல் சந்தேகப்படத் தோன்றியது?? எது எங்கள் இருவரையும் இணைத்து பார்க்க தூண்டியது?? கிட்டதட்ட அவர் காதல் சொல்லிய நாளில் இருந்து ஏழு மாதங்கள் என்னுடன் பழகி இருக்கிறார்.... என்னைப் பற்றி என்னை விட அவருக்குத் தான் நன்கு தெரியும்... அவரையே என்னைத் தொட அனுமதிக்காத போது எப்படி இன்னொருவரை அனுமதித்து இருப்பேன்??' என்ற கேள்விகள் மனதை அரிக்க, ஹர்ஷாவால் மட்டும் தான் தன் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும் என்று தெரியும்.

ஆனால் இனி தன் வாழ்க்கையில் அவனுக்கு இடம் தர முடியுமா? தன் மனதில் அவன் அள்ளிய வீசிய நெருப்புத் துண்டங்களைப் போன்ற வார்த்தைகளைத் தன் மனதில் இருந்து அகற்ற முடியுமா??? என்று பெருமூச்சொறிந்தவள் உள்ளே சென்றாள்.

தொடரும்
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top