JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 17

JB

Administrator
Staff member

அத்தியாயம் 17

நாட்கள் அதன் போக்கில் நகர ஹர்ஷா அமெரிக்கா சென்று இதோடு இரு வருடங்கள் முடிந்திருந்தது.

கனிகாவிடம் ஒன்றரை வருடங்களுக்கு முன் பேசியவன் தான்... அதன் பின் அவளை அழைக்கவில்லை.

ஆனால் மனம் மட்டும் இன்னமும் அவளிடமே இருந்து வந்தது..

அவளை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளியாகத் தவித்தவன் எத்தனையோ முறை சங்கீதாவும், சிதம்பரமும் அழைத்தும் இந்தியா திரும்ப மறுத்துவிட்டான்.

இடையில் சங்கீதா மட்டும் அமெரிக்கா சென்று அவனுடன் சில நாட்கள் தங்கிவிட்டு வந்தார்..

மகனின் போக்கில் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாறுதல்களைக் கண்டவர் ஆயிரம் தடவைக் கேட்டும் அவன் உண்மையைக் கூறவில்லை....

ஆனால் முன்பு இருந்ததை விட அழுத்தமும், பிடிவாதமும், கோபமுமாக அவன் ஒரு புது ஹர்ஷாவாக மாறியிருந்தான்...

அவனின் ஒவ்வொரு செயலிலும் திமிரும் அரக்கத்தனமும் தெரிந்தது....

தன் அன்னை தன்னுடன் இருந்தும் அவன் மது அருந்த போவதை நிறுத்தவில்லை....

கேட்டதற்கு, "ஐ நோ மை லிமிட் மாம்" என்று முடித்துவிட்டான்...

அவன் ஏதோ ஒரு பிரச்சனையில் சுழன்று கொண்டு இருக்கிறான் என்று புரிந்தும் சங்கீதாவால் அவனிடம் இருந்துஒரு வார்த்தை பிடுங்க முடியவில்லை...

மன பாரத்துடன் இந்தியா திரும்பி வந்தவர் சிதம்பரத்திடம் சொல்லி அவனைத் திரும்ப அழைத்துக் கொள்ள எத்தனையோ முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது...

சிதம்பரமும் ஒரு முறை தான் அவனைச் சந்திக்க அமெரிக்கா வருவதாகச் சொல்ல, அவர் வந்தால் தான் நிச்சயம் அவரைச் சந்திக்க மாட்டேன் என்றும், அது மட்டும் இல்லாமல் எங்கேயாவது கண்காணாத இடத்திற்குச் சென்றுவிடுவேன் என்று மிரட்டவும் அவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை...

கனிகா தன்னை ஏமாற்றிவிட்டதாகவே நினைத்திருந்தவன் அவளிடம் பேசாவிட்டாலும் வேறு எந்தப் பெண்ணையும்ஏறெடுத்து பார்க்கவில்லை...

அந்த விஷயத்தில் அவன் எப்பொழுதும் போல் ஸ்ரீராமனாகவே இருந்தான்...

அவள் என்னை ஏமாற்றிவிட்டால் என்ன?? என் காதல் உண்மை தானே?? என்று கனிகா நினைத்ததைப் போலவே தானும் நினைத்திருந்தான்...

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த போதும்... ஒரு வார்த்தை கூடப் பேசாத பொழுதும்... இரு உள்ளங்களும் ஒரே சிந்தனையில், தங்கள் காதலில் நம்பிக்கை வைத்து இறுதி வரை வாழ முடிவு செய்திருந்தது...

இந்த இரண்டு வருடங்களில் ஹர்ஷாவின் பாதையில் எத்தனையோ இளம் பெண்கள் கடந்திருந்தாலும் மனதில் கல்வெட்டு போல் செதுக்கி வைத்திருந்த காதலை மறக்கவோ, மறுக்கவோ அவன் எள்ளளவும் முயற்சி செய்யவில்லை....

தான் கனிகாவைச் சந்தித்த நாளில் இருந்து அவளுக்குக் குங்குமம் வைத்தது, ரியா கொடுத்த கடிதத்தைக் கிழித்துக் கனிகாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியது, கடத்தபட்ட அன்று தாவணி இல்லாமல் அவனுடன் தனித்து இருந்தது, கல்லூரி ஆண்டு விழா அன்று அவளை முதல் முறையாக முத்தமிட்டது என்று அவளுடன் தான் கழித்த ஒவ்வொரு நொடியையும் தன் நினைவுகளில் மாலையாகக் கோர்த்து வைத்து இருந்தவன், தான் கிளம்பிய முதல் நாள் தன் ஆசைக்கு இணங்காமல் தன்னைத் தள்ளிவிட்டதையும், பின் அகிலுடன் இணைந்து இருந்த புகைப்படத்தையும் நினைக்கும் போதும் மட்டும் தன் ஆத்திரம் அடங்கும் வரை குடித்துவிட்டுப் போதையில் வீடு திரும்புவான்.....

மறு நாள் கண் விழித்துப் பார்க்கும் பொழுது தான் தெரியும் முதல் நாள் போதையில் அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் கண்மண் தெரியாமல் போட்டு உடைத்திருப்பதை....

ஆனால் தன் காதலியின் கடந்த காலக் காதலையும், தன் மனதில் இன்னும் அழியாமல் வாழும் தன் காதலையும் ஒருவரிடமும் அவன் வெளிப்படுத்தி இருக்கவில்லை...

படிப்பு விஷயத்தில் ஆகட்டும், தன் நண்பர்கள் வட்டாரத்தில் ஆகட்டும் தன் மன உளைச்சலால் அவன் எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக் கொண்டான்...

*******************************************************

அங்குக் கிராமத்திற்குக் கனிகா தன்னைச் சந்திக்க வர வேண்டாம் என்று சொல்லியும் அகில் வருவதை மட்டும் நிறுத்தவில்லை... கனிகாவிற்கும் அவன் ஒருவனே ஆறுதல்....

இரு வருடங்கள் கடந்தும் ஹர்ஷாவை மறக்க முடியாமல் தவிக்கும் கனிகாவை பார்த்து ஒரு பக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் வியப்பாகவும் இருந்தது...

என்ன காதல் இது? இப்படி ஒரு பெண்ணை இழிவாகப் பேசி அவளை உயிரோடு கொன்றுவிட்டவனை நினைத்து இவள் நடைப்பிணமாக வாழ்வதைப் பார்த்தவனுக்கு இதற்கு ஒரு விடிவு காலம் வராதா? என்று ஏக்கமாக இருந்தது....

அதனோடு கனிகாவின் கல்லூரி படிப்பும் முடிய, குடிப்பழக்கத்தால் தன் உடம்பும் அதிகப் பாதிப்படைய, சுந்தரத்திற்குத் தன் மகளை ஒருவன் கையில் ஒப்படைத்து விட வேண்டும் என்று தோன்றியது....

அவளுக்குத் தெரியாமல் வரன் பார்க்க ஆரம்பித்தவருக்குக் கனிகாவின் அமைதியான குணத்திற்கும் அடக்கமான அழகிற்கும் ஏற்ற வரன்கள் வர ஆரம்பிக்க மகளிடம் மெதுவாகத் தன் விருப்பத்தைக் கூற ஆரம்பித்தார்....

"கண்ணம்மா... காலேஜும் முடிஞ்சிருச்சு... எனக்கும் வர வர உடம்பு அடிக்கடி முடியாம போகுது... அதனால நம்ம பக்கத்தில் ஏதாவது தோதான வரன் இருக்கான்னு பார்க்கட்டுமா?" எனவும்,

தன் தந்தையைக் கரிசனத்துடன் பார்த்தவள், "அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்பா... நான் ஏதாவது வேலைக்குபோலாம்னு இருக்கேன்..." என்றாள்.

என் வாழ்க்கையில் இனி திருமணமா??

ஹர்ஷாவின் பிம்பத்தை என் மனதில் இருந்து அகற்றி விட முடியுமா? என்ற மிகப்பெரிய கேள்வியில் இருந்து தன் மனதை மீட்க இயலாதவள் போல் தந்தையையே பார்த்திருக்க,

"ஏன்டா, இந்த ஊர்ல உன் படிப்புக்கு எங்க வேலை கிடைக்கும்.... இதுவே வானம் பார்த்த பூமியா இருக்கு, விவசாயத்திலயும் வருமானம் இல்லாமல் ஏற்கனவே இருக்கிறவங்க எல்லோரும் ஊர விட்டு வெளியூருக்கு போய்ட்டு இருக்காங்க... இதில் உனக்கு எங்கடா வேலை கிடைக்கும்?" என்றார்.

"அப்பா, எனக்கு உங்க ஃபேக்டரியிலேயே ஏதாவது வேலை வாங்கித் தரமுடியுமா?" என்ற அவள் கண்களில் தெரிந்ததவிப்பையும், எப்பொழுதும் எதையோ இழந்ததைப் போல் இருக்கும் பரிதாபத்தையும், பார்த்தவரின் தலை தன்னிச்சையாகச் சரி என்பது போல் ஆடியது....

தான் காதலித்து மணந்த மனைவி காமாட்சியைத் தான் அவள் மரணம் வரை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை.....

இந்தச் சின்னத் தளிராவது அது நினைத்தது போல் வாழட்டும் என்று முடிவெடுத்தவர் அவள் விரும்பியது போல் ஒரே மாதத்தில் தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் க்ளார்க் வேலை வாங்கித் தந்தார்....

ஆரம்பத்தில் தன் குடிப்பழக்கத்தால் ஏகப்பட்ட கெட்ட பெயர் வாங்கியிருந்தாலும், கனிகா சென்னையில் இருந்து திரும்பி வந்ததற்குப் பிறகு, அவள் முகத்தில் மகிழ்ச்சி என்பதே பார்க்க முடியாத பொழுது, இன்னும் அவள் தன் அன்னையை இழந்து தவிக்கிறாள் என்று எண்ணி அவளுக்குத் தந்தையாக, ஒரு நல்ல துணையாக இருக்க முடிவு செய்தவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் குடிப்பழக்கத்தையும் குறைத்து இருந்தார்...

நெஞ்சில் ஆழமாய்ப் புதைந்திருந்தவனை வலுக்கட்டாயமாக மறக்க நினைத்தும் முடியாமல் தடுமாறி தத்தளித்து இருந்தவளுக்குத் தான் கேட்ட ஒரு மாதத்திலேயே தந்தை வேலை வாங்கித் தந்ததை நினைத்து நிம்மதியாக இருந்தது....

நிச்சயம் இந்த வேலை புண்பட்ட தன் மனதிற்கு ஒரு ஆறுதலை தரும் என்று எண்ணி வேலைக்குக் கிளம்ப, ஆனால்அவளின் விதியோ இன்னும் உன் வாழ்க்கையில் என் ஆட்டம் முடியவில்லை என்பது போல் அங்கும் அவளுக்கு ஒரு பேரிடியை வைத்துக்காத்திருந்தது....

தெரிந்திருந்தால் அவள் வேலைக்கே போகாமல் இருந்திருப்பாளோ!!!



************************************************


காலையில் எழுந்தவள் குளித்து முடித்துத் தன் அன்னையின் புகைப்படத்திற்குக் கீழ் நின்று விழிகளில் நீரோடு மனதுருக வேண்டியவள் திருநீறை நெற்றியில் கீற்று போல் வைத்து முதல் நாள் வேலைக்குக் கிளம்பினாள்...

தன் தந்தையுடனே வண்டியில் சென்றவளை அவள் வேலை செய்யும் துறை அலுவலகத்தில் விட்டவன் மதிய சாப்பாட்டைக் கேன்டினில் சாப்பிட்டுக் கொள்வதாகக் கூறி தான் மாலை வந்துகூட்டி செல்வதாகச் சொன்னான்....

முதல் நாள் வேலைக்குப் போவதால் மனமெல்லாம் படபடப்பாக இருக்க, அங்கு இருந்த ரிஷப்ஷனிஸ்டிடம் தன்னுடைய வேலை பற்றிக் கூற, அவள் அந்தத் துறையின் மேளாலர் அறைக்கு அழைத்துச் சென்றாள்....

அறைக்கதவு தட்டி காத்திருந்தவர்கள் "கம் இன்" என்ற குரல் வந்தவுடன் உள்ளே செல்ல, அங்கு மேளாலராக அமர்ந்திருந்தவன் கணினியில் இருந்து நிமிர்ந்து பார்க்க, எதிரில் சிலை போல் எழிலுடன் நின்றிருந்த கனிகாவை பார்த்தவனின் மனம் தடுமாறஆரம்பித்தது....

கண் சிமிட்டாமல் சிலை போல் அவளையே பார்த்திருக்க, கனிகாவிற்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது....

நீ போகலாம் என்பது போல் ரிஷப்ஷனிஸ்டிற்குச் சைகை செய்தவன் "யெஸ்" என்க, தான் வந்த காரணத்தைக் கூறியவள் பணி கடிதத்தை நீட்டினாள்....

"உன் தந்தை இங்க தான் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள்... உன் படிப்புக்கு இது சாதாரண வேலை தான்.... அதனால் தான் இன்டெர்வியூ கூட வைக்காமல் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.... உனக்கு இந்த வேலை செய்வதற்கு ஆட்சேபணை இல்லையே??" என்று விழி விரிய கேட்டான்...

"இல்லை சார்..." என்றவள் அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் தலை குனிந்தவளுக்கு அவன் எப்பொழுது தன்னைபோகச் சொல்வான் என்று இருந்தது...

தன் மேஜையின் மேல் இருந்த தொலைபேசியைக் கையில் எடுத்தவன் "தீபிகா..இங்க என் ரூமிற்குக் கொஞ்சம் வாங்க" என்றவன் கனிகாவை பார்த்து, "தீபிகா உங்களுக்கு என்ன வேலை என்பதை எடுத்து சொல்லுவார்கள்..." என்றான்...

அதற்குள் தீபிகா என்ற அந்த இளம் பெண் வரவும் அவளுடன் போகச் சொன்னவன் அவள் பின்னழகை பார்த்திருந்தவன் அவள் சென்றதும் அடக்கி வைத்திருந்த மூச்சை விட்டான்....

'இந்தக் கிராமத்தில் இப்படி ஒரு அழகா??' என்று பொருமியவன் அவளைத் தன்னவள் ஆக்கிக்கொள்வதற்கு என்ன செய்வது என்று அவளைப் பார்த்த அந்த நாளே திட்டம் போட ஆரம்பித்தான்....

கனிகா அமர வேண்டிய இடத்தைக் காண்பித்த தீபிகா அவள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி எடுத்துரைத்தாள்.....

மதியம் வரை நேரம் போவதே தெரியாமல் வேலைகளைக் கற்றுக் கொண்டிருந்தவள் தீபிகாவுடன் கேன்டினுக்குச் செல்ல அமைதியாகச் சாப்பிட அமர்ந்தவளைப் பரிதாபமாகப் பார்த்த தீபிகா…

"ஏன் கனிகா? உனக்கு வேறு இடத்தில் வேலை கிடைக்கலையா?" என்றாள்....

அவள் திடீரென்று இவ்வாறு கேட்டதும் ஏன் என்பது போல் குழம்பி பார்த்தவளை,

"கனிகா, உனக்கு ஒண்ணு தெரியுமா? இந்த வாரம் தான் நான் கடைசியா இங்க வேலை பார்க்கிறது.... என்னோட வேலையும்சேர்த்து தான் நீ செய்யப் போற... வேலை ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை.... ஆனால் இந்த மேனேஜரிடம் வேலை பார்ப்பதற்கு வேலைக்கே போகாமல் இருக்கலாம்.." என்று ஒரு குண்டை தூக்கி போட்டாள்...

மனம் முழுக்க ஹர்ஷாவின் ஞாபகம் அவளை உயிரோடு கொன்று கொண்டு இருக்க, ஏதாவது வேலைக்குச் சென்றாலாவது மனம் சிறிது நிம்மதி அடையும் என்று வந்தவளுக்கு "கொடுமை, கொடுமை என்று கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒரு கொடுமை காத்திருந்ததாம்" என்பது போல் இருந்தது....

"ஏன்? என்ன பிரச்சனை?"

"கனிகா, அவன் ஒரு சரியான பொம்பளை பொறுக்கி... ஃபேக்டரி ஓனருக்கு ஏதோ ஒரு வகையில் அவன் சொந்தமாம்...அதனாலதான் அவனை இன்னும் இங்க வச்சிருக்காங்க.... அவன் செய்ற அலம்பலை எல்லாம் வெளிய தெரியாம பார்த்திக்கிறதுல அவன் ஒருஜெகஜ்ஜால கில்லாடி... அவன் தொல்லை தாங்க முடியாமல் தான் நானே வேலையை விட்டே போகிறேன்..."

பேரிடியாக இருந்தது கனிகாவிற்கு....

தன் வாழ்க்கையைப் பந்தாடுவதில் இந்த விதிக்கு தான் எத்தனை மகிழ்ச்சி, இன்பம்...

தீபிகாவின் வார்த்தைகளில் அரண்டவள் "எப்படி இங்கு வேலை செய்வது... அதுவும் ஒரு பொறுக்கிக்குக் கீழ்" என்று யோசித்தவள் ஒரு வாரம் பொறுப்போம்....அவன் தன்னைத் தொந்தரவு செய்தாலோ அல்லது எல்லை மீறீனாலோ வேலையை விட்டுவிடுவது தான் என்று முடிவு செய்தவள் தீபிகாவிடமும் தன் முடிவை சொல்ல,

"சரி கனிகா.... எனக்கு என்னமோ நீ இங்க ஒரு வாரம் வேலை பார்ப்பதே ஆபத்துன்னு தான் தோணுது.... உன்னைபார்த்தவுடனே அந்த நாய் பார்த்த பார்வை எனக்கு உள்ளுக்குள் குளிரெடுக்க வச்சிடுச்சு... உன்கிட்ட அரை நாள் தான் பழகியிருக்கேன்... அதற்குள் எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிட்டது.... அதனால் தான் மனசில வச்சுக்காம சொல்லிட்டேன்... எதற்கும் ரொம்ப ஜாக்கிரதையா இரு...." என்று எச்சரித்தவள் கனிகாவின் கலங்கிய முகத்தைப் பார்த்து தானும் கலங்கி போனாள்....

நிச்சயம் தன் தந்தைக்கு இவனின் குணம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... இல்லை எனில் இந்த வேலையைத் தனக்கு வாங்கித் தந்திருக்க மாட்டார் என்று எண்ணியவள் இப்பொழுதைக்குத் தந்தையிடம் இதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று முடிவு எடுத்தாள்...

வேலைக்குச் சேர்ந்து கிட்டதட்ட ஒரு வாரம் ஆகியிருந்தும் அவனால் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை... அவன்தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது போலவே பட்டது கனிகாவிற்கு...

அவ்வப்பொழுது வேலை விஷயமாகக் கனிகாவை தன் அறைக்கு அழைப்பவன் வேலை முடிந்தவுடன் அவளை அனுப்பிவிடுவான்....

ஒரு வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்று முடிவெடுத்தவளுக்கு அவன் தன்னைத் தொந்தரவு செய்யவில்லை என்பதைக் கண்ட பொழுது ஒரு வேளை தீபிகா தவறாகப் புரிந்து இருப்பாளோ என்று தோன்றியது....

எத்தனை அடிபட்டும் இன்னும் அவளின் வெள்ளை மணமும், யாரையும் எளிதில் நம்பிவிடும் குணமும் மாறவில்லை....

ஆனால் தீபிகா வேலை விட்டு சென்றவுடன் தான் அவன் தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்தான்....

ஏனெனில் அவனுக்கு நிச்சயம் தீபிகா தன்னைப் பற்றிக் கனிகாவிடம் சொல்லியிருப்பாள் என்று தெரியும்... அது வரை தன்னை மறைத்திருந்த ஓநாய் தன் குணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது....

தேவை இல்லாமல் தன் அறைக்கு அவளை அழைத்தவன் தன் எதிரில் நின்ற அவளை அங்குலம் அங்குலமா ரசிக்க, அவன் பார்வையில் தெரிந்த விரசத்தை உணர்ந்தவள்….

"எதுக்குக் கூப்பிட்டீங்க ஸார்?" என்று பயத்தை மறைத்துக் கொண்டு கேட்க, ஒன்றும் பேசாமல் அவளையே உறுத்து பார்த்திருந்தவன்,

"நெவர் மைண்ட்...நீ போகலாம்..." என்றான்...

'எதற்கு வரச் சொன்னான்?' என்று குழம்பியவள் தன் இருக்கைக்கு வந்து அமர அவளைத் தன் அறையில் இருந்த கண்ணாடி வழியே இரசித்துப் பார்த்தவன் ஏற்கனவே தன் திட்டத்தை வகுத்திருந்தான்....

வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருக்க ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கோவிலுக்குச் செல்வது என்று முடிவு செய்தவள் கோவிலை நோக்கி நடக்க, அவளையே பின் தொடர்ந்து வந்தவன் அவள் வீட்டிற்குப் போகாததைப் பார்த்துச் சுந்தரத்தை தனியே சந்திக்க அவள் வீட்டிற்குச் சென்றான்...

"வாங்க ஸார்...நீங்க எதுக்கு இவ்வளவு தூரம், சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே.." என்ற சுந்தரம் அவனை வீட்டிற்குள் அழைக்க, வீட்டின் உள்ளே நுழைந்தவனுக்குக் கனிகாவின் ஏழ்மையை அப்பட்டமாகப் பறைசாற்றுவது போல் இருந்தது அவளது வீட்டின் தோற்றம்....

"உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஸார்....அதுக்காகத் தான் நானே நேரில் வந்தேன்.."

"ஏன் ஸார்... கண்ணம்மா வேலையில் ஏதாவது தப்பு பண்ணிடுச்சா?"

புருவத்தைச் சுருக்கி யோசித்தவன் ஓ கனிகாவைத் தான் கண்ணம்மா என்கிறாரோ' என்று புரிந்துக் கொண்டவன்,

"இல்லை இல்லை... உங்க பொண்ணு வேலையில் ரொம்பக் கெட்டி...ஆனால் நான் வந்த விஷயம் அது இல்லை... நான் கனிகாவை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப் படறேன்... அத பத்தி பேசத்தான் வந்தேன்..." என்று போட்டு உடைத்தான் தன் விருப்பத்தை....

இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை சுந்தரம்...

"ஸார்... நீங்க நெஜமாகவே சொல்றீங்களா?"

"நிஜமாத் தான் சொல்றேன்...உங்க விருப்பத்தைக் கேட்டுட்டு அப்புறம் எங்க வீட்டில் பேசலாம் என்று முடிவெடுத்திருக்கேன்....உங்க விருப்பம் என்ன ஸார்??"

சுந்தரத்திற்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை....

அவன் சின்ன வயது.... நல்ல வசதியானவன் போல் தெரிந்தான்... தான் வேலை பார்க்கும் ஃபேக்டரி ஓனருக்கு வேறு சொந்தக்காரன் என்று கேள்வி, இவர் எப்படி? என்று யோசனையில் ஆழ,

"என்ன ஸார் யோசிக்கிறீங்க?? என்ன பத்தி நான் ரொம்பச் சொல்ல வேண்டியது இல்லை...எங்க அப்பா அம்மாவிற்கு நாங்க இரண்டு பிள்ளைகள்... அக்கா ஏற்கனவே கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டாங்க... எனக்கு வீட்டில் பெண் பார்த்துட்டு இருக்காங்க... உங்க பொண்ணு கனிகாவை பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன் அவ தான் எனக்குப் பொருத்தமான பொண்ணுன்னு... அவளோட அமைதியான குணம் தான் என்னை அசத்திடுச்சு... நீங்க உங்க முடிவ சொன்னவுடன் நான் எங்க வீட்டில் பேசுகிறேன்..." என்றான்.

"நான் சொல்றதுக்கு என்ன ஸார் இருக்கு? ஆனால் உங்க வசதிக்கு நிச்சயமா என்னால் ஒண்ணும் செய்ய முடியாது" என்று சுந்தரம் தயங்க அவர் இந்த அளவிற்கு ஒத்துக் கொண்டதே பெரிது என்று நினைத்தவன் இனி அவரை வீழ்த்துவது ஒன்றும் கடினமில்லை என்று முடிவெடுத்து மேலும் தன் பாணங்களை வீச ஆரம்பித்தான்..

"தயவு செய்து வரதட்சனை அது இதுன்னு பேச வேண்டாம்... எனக்கு உங்க பொண்ணு மட்டும் போதும்… எங்க வீட்டிலும் அதபத்தி பேச மாட்டாங்க... அது மட்டும் இல்லை கல்யாணத்திற்கு அப்புறமும் கனிகா வேலைக்குப் போகணும்னு நினைச்சா எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை... எப்பவும் கனிகா கூட இருப்பதற்குக் கசக்குமா என்ன?" என்று இளித்தான்....

இது போதாதா தன் மகளை எப்படிக் கரை சேர்ப்பது என்று ஏங்கி கொண்டிருக்கும் ஒரு ஏழைத் தந்தைக்கு... வரதட்சனை வேண்டாம் என்கிற வசதியான நல்ல படித்த வேலையில் இருக்கும் மாப்பிள்ளை, அது மட்டும் இல்லாமல் கனிகாவும் அவள் விருப்பப்படி தன் வேலையைத் தொடரலாம்...

இருந்தும் கனிகாவிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்று தோன்ற,

"சரி ஸார், என் பொண்ணு இன்னைக்கு வந்தவுடனே அவளிடம் பேசிவிட்டு உங்களுக்கு எங்க முடிவ சொல்றேன்..." என்றார்.

கனிகாவை சமாளிப்பது பெரிதல்ல என்று கற்பனைக் கண்டவனுக்குத் தெரியவில்லை அவள் மனம் எப்படிக் கடினப்பட்டிருக்கிறது என்று...

கோவிலில் கண்களை மூடி மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தவளின் எண்ணம் முழுவதும் ஹர்ஷாவே ஆட்கொண்டிருந்தான்...

மூடிய விழிகளில் இருந்து நீர் கொட்ட, அவளைக் கண்ட குருக்கள்,

"கனிகா, எப்ப கோவிலுக்கு வந்தாலும் உன் கண்களில் இருந்து வர தண்ணீர் மட்டும் நிற்கவே மாட்டேங்குது... நானும் இரண்டு வருஷமா பார்த்துக்கிட்டு இருக்கேன்... உன் மனதில் என்னவோ உன்னைப் பாரமா அழுத்திக்கிட்டு இருக்கு... எனக்கு என்னன்னு தெரியலை.... ஆனால் நிச்சயம் அம்பாள் உன்னைக் கைவிட மாட்டாமா" என்று அன்பொழுகக் கூற கண்களில் நீரோடு அவரைப் பார்த்து முறுவலித்தவள் தன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

அவளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சுந்தரம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்...

"கண்ணம்மா, உன்னோட மேனேஜர் திவாகர் ஸார் வந்தாரம்மா..." என்க,

அவர் எதற்குத் தன் வீட்டிற்கு வந்தார் என்று யோசித்தவள் புருவதைச் சுருக்கி தந்தையை நோக்க, அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியதை சொன்னவர்….

"உன் பதிலை எதிர்பார்த்திட்டு இருக்காருமா.... என்ன சொல்ற?"

அதிர்ந்தவள் ஒரு வேளை இதற்குத் தான் அந்த நரி பதுங்கியதோ என்று தோன்றியது....

ஏனெனில் தீபிகா சொன்னது போல் அவன் ஆரம்பத்தில் அவளைத் தொந்தரவு செய்யவில்லை...

ஆனால் தீபிகா கிளம்பியதும் அவளுக்கே தெரியாமல் அவளைப் பார்ப்பதும், அவள் பார்த்ததும், தன் பார்வையை வேறு இடத்திற்குத் திருப்பிக் கொள்வதுமாகத் தான் இருந்தான்....

ஆனால் அவளைப் பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை... அவனின் பார்வையின் அர்த்தம் இப்பொழுது புரிவதாக,

"அப்பா, ப்ளீஸ்ப்பா, இப்போ தான் வேலைக்குப் போக ஆரம்பிச்சு இருக்கேன்.... எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்பா..." என்று சொல்லும் போதே தொண்டை அடைக்க விழிகளில் நீர் கோர்க்க, சுந்தரத்திற்கு எதுவோ புரிவது போல் இருந்தது...

"ஏன்மா கல்யாணம் வேண்டாங்கிற?" என்று ஏக்கமாகக் கேட்க,

"இல்லைப்பா எனக்குக் கல்யாணம் வேண்டாம்பா..." என்று பாடிய பல்லவியே மீண்டும் பாட, "ஏன்னு முதல்ல சொல்லு..." என்றார் அழுத்தமாக...

அவரிடம் எப்படி என்ன சொல்வது என்று குழம்பியவள் "இல்லைப்பா எனக்கு வேலைக்குப் போகனும்" என்று சொல்ல,

"மாப்பிள்ளை நீ கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்குப் போறதுன்னா போகலாம் என்று சொல்லிவிட்டாரம்மா..."

மாப்பிள்ளையா? அதற்குள்ளாகவே முடிவு செய்துவிட்டாரா? என்று திகைத்தவள் இரவு வெகு நேரம் வரை தந்தையைச் சமாதானப் படுத்தியும் அவர் மனதை மாற்ற இயலவில்லை.... இரவு உணவு பரிமாறியவள் வெளியில் திண்ணையில் அமர்ந்து யோசிக்கலானாள்.....

'நிச்சயம் ஹர்ஷாவை காதலித்த மனதில் வேறு யாருக்கும் இடமில்லை....தன் வாழ்நாளில் திருமணம் என்ற பேச்சிற்கும் இனி இடமில்லை....அப்பாவை சமாளிப்பதை விட அந்த மேனேஜரை சமாளிக்கலாம் போல், ஆனால் அவர் கேட்பாரா?' என்று வெகு நேரம் குழம்பியவளுக்குத் தூக்கம் இருந்த இடம் தெரியாமல் பறந்திருந்தது....

காலையில் முதல் வேலையாக அவனைச் சந்திக்கப் போக அவளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவன் அவளை வழிந்து கொண்டு வரவேற்க அவளுக்குத் தான் அருவருப்பாக இருந்தது அவன் இளித்துக் கொண்டு நின்றிருந்த விதம்... அவனுடன் தனிமையில் அதிக நேரம் செலவழிக்க விரும்பாதவள் நேராக விஷயத்திற்கு வந்தாள்....

"ஸார் நேற்று நீங்க எங்க வீட்டிற்கு வந்ததா அப்பா சொன்னாங்க....என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டதாகச் சொன்னார்கள்" என்று இழுக்க,

"ம்ம்ம், உன் சம்மதத்தைக் கேட்டுட்டு மேற்கொண்டு எங்க வீட்டில் பேசலாம்னு இருக்கேன்.." என்றான்.

"ஸாரி ஸார், எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் செய்து கொள்கிற எண்ணம் இல்லை.." என்று அவள் பட்டென்று சொல்ல,

அவளையே பார்த்திருந்தவனின் முகம் அடிபட்ட புலி போல் மாறியதை தலை குனிந்திருந்தவள் கவனிக்கவில்லை....

"இப்போதைக்குன்னா அப்புறம் எப்போ கல்யாணம் செய்திக்கிறதா உத்தேசம்?" என்று அவனின் கிண்டலான கேள்வியில் தலை நிமிர்ந்தவள்,

"அது என்னோட இஷ்டம் ஸார்...ப்ளீஸ் நீங்க இந்தக் கல்யாண விஷயத்தை இதோடு மறந்திருங்க" என்றவள் வெளியேற போகசட்டென்று அவளைக் கரம் பற்றி இழுத்தவன்,

"நான் இத்தனை நாளா அமைதியா இருந்ததே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கிற ஆசையில் தான்... இல்லைன்னா எப்பவோ என்னோட வேலையைக் காட்டியிருப்பேன்.... ஒழுங்கா இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்கற வழியப்பாரு... இல்லைன்னா உனக்குத் தான் ரொம்பக் கஷ்டம்.." என்று கர்ஜிக்க,

வெடவெடத்தவள் தன் கரத்தை விடுவிக்க அவனிடம் போராட ஆனால் இரும்பு பிடியாகப் பிடித்திருந்தவனின் கையில் இருந்த தன் கரத்தை விடுவிக்க அவளால் முடியவில்லை....

போராடி பார்த்தவள் கெஞ்ச ஆரம்பித்தாள்….

"ஸார், ப்ளீஸ் கையை விடுங்க... யாராவது பார்த்தால் தப்பாக நினைக்கப் போறாங்க.." என்றவளின் வார்த்தைகளில் பொறித்தட்ட….

"அப்படின்ன இவளை வழிக்குக் கொண்டு வருவதற்கு அது தான் சரியான வழி" என்றுமனதிற்குள் கணக்கு போட்டவன் அவளைச் சட்டென்று விடுவித்தான்..

"ஸாரி கனிகா….நான் ஏதோ ஒரு வேகத்தில் பண்ணிட்டேன்.... நீங்க உங்க கேபினுக்குப் போங்க.... கல்யாணத்தைப் பத்தி மறந்துடுங்க" என்க,

எப்படி அதற்குள் மனம் மாறினான் என்று குழப்பத்துடன் வெளியேறினாள்....

ஆனால் அதற்குப் பிறகு அவன் ஒரு வார்த்தை கூடத் திருமணத்தைப் பற்றிக் கேட்கவில்லை... சுந்தரம் மட்டும் தான் அவளைநச்சரித்துக் கொண்டே இருந்தார்....

அதற்குப் பயந்து அவள் தினமும் வேலை முடிந்தவுடன் வீட்டிற்குப் போகாமல் கோவிலுக்குச் சென்று நேரத்தை கடத்தியவள் வீட்டில் தந்தையுடன் போராடிக் கொண்டிருந்தாள் தன் திருமணத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பதற்கு....


**********************************************


நாட்கள் செல்ல ஒரு நாள் அலுவலகத்தில் ஸ்டோர் ரூமிற்குள் தனித்துச் சென்றவள் அங்கு இருக்கும் பொருட்களைக் கணக்கெடுக்கும் வேலையில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கியிருக்க, தனக்குப் பின்னால் ஓசை படாமல் வந்து நின்றவனை அவள் கவனிக்கவில்லை...

அவள் மட்டும் தனியாக அறைக்குள் நுழைவதை கவனித்து இருந்தவன் மற்ற அனைவரும் வீட்டிற்குச் செல்லும் வரைகாத்திருந்து குள்ள நரி போல் உள்ளே நுழைந்தான்....

மூச்சுக் காத்துப் படத் தன்னை நெருங்கி நின்றவனைக் கண்டவளுக்குத் தூக்கி வாரிப் போட சுதாரிப்பதற்குள் அவளை இறுக்கி கட்டி அணைத்திருந்தான்....

உடல் நடுங்க படபடத்தவள், "ஸார் ப்ளீஸ் ஸார்.... என்னை விடுங்க..." என்று கெஞ்ச அவன் விரசமான பார்வை தன் உடல் முழுவதும் படருவதைப் பார்த்தவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது... தன் பலம் முழுவதும் திரட்டி அவனை விலக்க நினைக்க ஏற்கனவே கவலையில் உடல் இளைத்து இருந்தவளுக்கு அவனின் வலுவான பிடியில் இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.... கத்த ஆரம்பித்தவளின் வாயைப் பொத்தியவன்..

"இங்க யாரும் இல்லை... எல்லாரும் வீட்டிற்குப் போய்ட்டாங்க... அப்படியே யார் காதிலும் விழுந்தாலும் அதுவும் எனக்கு லாபம் தான்.... ஏன்னா வேறு வழியில்லாம நீ எனக்குக் கழுத்த நீட்ட வேண்டும்" என்க,

இதற்குத் தான் இந்த நாய் பதுங்கி இருந்ததா என்று பதறியவள் "அம்மா, எப்படியாவது என்னை இந்த ஓநாயிடம் இருந்தகாப்பாற்று" என்று மனதிற்குள் கதற அதற்குள் அவன் முன்னேறி இருந்தான்....

தன்னை இறுக்கி பிடித்திருந்த அந்த வல்லூறை பார்த்தவளுக்கு ஹர்ஷாவின் நினைவு வந்தது.... அவன் வெளி நாடு செல்வதற்கு முதல் நாள் தன்னை ஆட்கொள்ள முயற்சி செய்யும் பொழுதே காதலித்த அவனையே தள்ள முடிந்த நம்மால் இவனைத் தள்ள முடியாதா என்று நினைத்தவள் ஹர்ஷாவின் நினைவோ என்னவோ எங்கிருந்து தான் அத்தனை வலு வந்ததோ என்று தெரியவில்லை...

உடலில் உள்ள வலுவெல்லாம் திரட்டி அவனைத் தன்னிடம் இருந்து பிரித்துத் தள்ளியவள் கதவை நோக்கி ஓட, இந்தச் சின்னப் பெண்ணிற்கு எப்படி இவ்வளவு தெம்பு வந்தது என்று அதிர்ந்தவன் அவளைப் பின் தொடர, அதற்குள் அவள் கதவை திறந்து வெளியில் வந்திருந்தாள்....

தன் கேபினுக்குக் கூடச் செல்லாமல் அதி வேகமாக அலுவலகத்தை விட்டு வந்தவள் நின்ற இடம் அவள் வழக்கமாகசெல்லும் கோவில் தான்... கண்களில் ஆறாகப் பெருக்கெடுத்த நீருடன் ஒரு ஓரமாக அமர்ந்தவள் தன் வாழ்க்கையில் நடக்கும் விபரீதங்களை எண்ணியவளின் மன உறுதி கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்து இருந்தது....

ஹர்ஷாவின் பிரிவு நிரந்தரம்.... ஹர்ஷாவுடன் கழித்த அந்த இனிமையான நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்களில் தெரிய, அவனைக் கடைசியாகப் பார்த்த காட்சியும் மனதில் தோன்றி சித்ரவதை செய்ய, மனதின் வேதனை முகத்தில் தெரிய அமர்ந்திருந்தவளுக்கு அத்தனை நேரம் எழாத துக்கம் ஒட்டு மொத்தமாய் எழுந்து சுனாமியாய்த் தாக்கியது....

துக்கம் தொண்டையை அடைக்கச் சத்தம் இல்லாமல் அழுது கரைந்தவளுக்கு அந்தக் கணம் துல்லியமாகப் புரிந்தது இனி தன்னால் தனித்து நிம்மதியாக இருக்க முடியாது என்று....

பயமும், மிரட்சியுமாகத் தன் நிலைமையை உணர்ந்தவளுக்குத் திவாகரின் பார்வையும் தொடுகையும் அருவருப்பு தர, மிகவும் உடைந்த குரலில் தனக்குத் தானே பேசியவள் "அம்மா என்னால முடியலைம்மா, நானும் உங்க கூட வந்திடுறேன் அம்மா... என்னையும் உங்க கூடக் கூட்டிட்டு போங்க அம்மா" என்றவள் ஒரு முடிவோடு தன் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...

வழக்கம் போல் இன்றும் சுந்தரம் தன் திருமணத்தைப் பற்ற பேச, ஒரு தந்தையிடம் நடந்ததை எப்படிக் கூற முடியும் என்றுநினைத்தவள் அவன் உறங்கும் வரை காத்திருந்து அந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தாள்....

அன்புள்ள அகில் அத்தான்,

இந்தக் கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது என் உயிர் என் அம்மாவை சேர்ந்து அடைந்திருக்கும்..... ஒரு பெண்ணிற்குத் தன் தாயின் அரவணைப்பும் ஆதரவும் எவ்வளவு தேவை என்று அவர் மறைந்த அன்றே உணர்ந்திருந்த நான் இத்தனை நாள் வரை அவர் இல்லாமல் இந்த உலகத்தில் இருந்ததே தவறு.... அதை இன்று முழுமையாக உணர்ந்து கொண்டேன்.... என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை... நான் மட்டுமே காரணம்...

இப்படிக்கு
கனிகா

என்று மட்டும் எழுதி வைத்தவள் வீட்டின் பின் கட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுக்க, ஹர்ஷாவின் புன்னகை முகம் மனக் கண்ணில் தோன்றி "வேண்டாம் கனி, ப்ளீஸ்டி" என்பது போல் கெஞ்சியது...

தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top