JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episodes 10, 11 &12

JLine

Moderator
Staff member

அத்தியாயம் 10

வேறு ஏதாவது காரணம் சொல்லுவான் என்று எதிர்பார்த்திருந்த அகிலிற்கு ஹர்ஷாவின் இந்தப் பதில் பேரதிர்ச்சியைக் கொடுத்து சப்த நாடியையும் ஒடுக்கக் கனிகா தன்னை விட்டு வெகு தூரம் போனது போல் இருந்தது...

ஆனாலும் அவளை அத்தனை சுலபத்தில் இழக்க விரும்பாதவனாக வெகுண்டெழுந்தவன் "வாட்?" என்றான்.

"யெஸ், ஐ லவ் கனி, இஸ் தேர் எனி ப்ராப்ளம்? [Yes, I love Kani...Is there any problem?] " என்று கொஞ்சம் கூட அசராமல் மீண்டும் சொன்ன ஹர்ஷாவைப் பார்த்த அகிலிற்கு மூளையே குழம்பிப் போனது.


"உ....உங்களுக்கு எப்படிக் கனியை தெரியும்......" என்று தடுமாறியவாறே அகில் கேட்க,


அவன் தடுமாற்றத்தை கவனித்தவன்,


"நான் அவளோட காலேஜில் தான் படிக்கிறேன்" என்றான்...


"காலேஜில் என்றால், அவள் க்ளாஸ் மேட்டா?"


"என்னைப் பார்த்தால் அவ்வளவு சின்னவனாகவா தெரியுது..... ஐ ஆம் டூயிங் ஃபைனல் இயர் MCA " என்றான் சிரித்த முகத்துடன்.


"கிட்டதட்ட தன் வயதுடையவன் தான்.... ஆனால் இவனுக்கும் கனிகாவிற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே....இவனைப் பார்த்தால் கோடீஸ்வர வீட்டு பிள்ளைப் போல் தெரிகிறது...கனிகாவின் நிலைமை நமக்கு நன்றாகத் தெரியும்... இது எப்படிச் சாத்தியம்? " என்று குழம்ப,


அவன் குழம்பிய முகத்தைப் பார்த்த ஹர்ஷா "அகில், நீங்க ஆச்சரியப்படுறது எனக்குப் புரிகிறது.... பட் ஐ ஆம் இன் லவ் வித் ஹெர்... [But I am in love with her]" என்றான்.


"எப்படி.... உங்களுக்கும் கனிகாவிற்கும் ஒத்து வருமா?" என்று அகில் கலக்கத்துடன் கேட்க ஆனால் மனம் இன்னும் கனிகாவை விட்டுக் கொடுக்க முடியாமல் தடுமாற ....


"ஒய் நாட்? [why not?] " என்றான் திமிராக.....


இதென்ன கேள்விக்குக் கேள்வியே பதிலாக என்று சலித்துக் கொண்ட அகில் "இல்லை உங்களைப் பார்த்தால் ரொம்ப வசதியானவர் போல் தெரிகிறது...... ஆனால் கனிகா அப்படி இல்லை..... பாவம் ஏற்கனவே வாழ்க்கையில் இந்தச் சின்ன வயதிலேயே ரொம்ப அடிபட்டுவிட்டாள்..... இதில் நீங்கள் வேறு அவளிடம் ஆசையைக் காட்டி ஏமாற்றி விடாதீர்கள்...." என்று கூற,


கோபத்தில் முகம் செந்தணலாகச் சிவக்க, இருந்தாலும் அடக்கிக் கொண்டு,


"எதை வச்சு நான் கனியை ஏமாற்றிவிடுவேன் என்று சொல்றீங்க......" என்றான்.


"உங்களுக்கே தெரியும், உங்களை மாதிரி பணக்கார பசங்களுக்கு எத்தனையோ பணக்கார பெண்கள் கிடைப்பார்கள், கனிகா நிச்சயம் உங்களுக்கு ஒத்து வரமாட்டாள்..." என்று பிடிவாதமாகக் கூற,


அவனையே உற்றுப் பார்த்திருந்த ஹர்ஷா சட்டென்று அந்தக் கேள்வியைக் கேட்டான்..


"அகில், ஆர் யூ இன் லவ் வித் கனி? [Akil are you in love with kani?] "


திடுக்கிட்ட அகில், சட்டென்று தன் பார்வையைத் திருப்பித் தன் திடுக்கிடலை மறைக்க..... அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தைக் குறித்துக் கொண்டது ஹர்ஷாவின் மனம்...... ஆக இவன் கனியை விரும்புகிறான்.... ஆனால் அது தெரியாமல் அவள் அத்தான் அத்தான் என்று உருகுகிறாள் என்று மனதிற்குள் கனிகாவை திட்டியவன் அகிலையே பார்க்க,


"இல்லை, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை" என்றான் அகில்..


தொண்டையைச் செருமிக் கொண்ட ஹர்ஷா,


"அகில் என் லைஃபில் நிறையப் பெண்கள் க்ராஸ் பண்ணியிருக்காங்க..மும்பையில் நான் ஸ்கூல் படிக்கும் பொழுதும் சரி.... இங்குச் சென்னையிலும் சரி.... ஈவன் இன் அவர் ஃபேமிலி டூ, பட் [Even in our family too], என் டாட் எப்பவும் ஒன்று சொல்வார்... சில பெண்களைப் பார்க்கும் பொழுது சிநேகமாகச் சிரிக்கணும் என்று தோன்றும்.. சில பெண்களைப் பார்க்கும் பொழுது திரும்பி பார்க்கணும் என்று தோன்றும்.. சில பெண்களைப் பார்க்கும் பொழுது கண்ணடிக்கணும் என்று தோன்றும்....' என்று சிரித்துக் கொண்டவன்,


"சில பெண்களைப் பார்க்கும் பொழுது ஏனோ அருவருப்பாகத் தோன்றும்....அது அவர்களின் உடையோ அல்லது செயல்களோ.. ஆனால் வெகு சில பெண்களைப் பார்க்கும் பொழுது மட்டும் தான் அவர்களை வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்... அவர்கள் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று தோன்றும்.. அப்படி ஒரு பெண்ணை நாம் பார்த்து, அதே எண்ணம் அவளுக்கும் நம் மேல் இருந்தது என்றால், அவளைத் தவற விட்டுவிடவே கூடாதென்று சொல்வார்.....அது போல் தான் எனக்குக் கனி....... முதன் முதலாகக் காலேஜிற்கு அவள் வந்த அன்றே என் எதிரில் தோன்றினாள்.. என்னை எந்தப் பெண் பார்த்தாலும் என்னிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார்கள்.."


"ஆனால் கனி அதில் ரொம்ப வித்தியாசமானவள்... கீழே விழுந்திருந்த அவளைத் தூக்கி விட நான் கை நீட்டினாலும், என் கை தன் மேல் படக் கூடாதென்று என்னிடம் இருந்து ஒதுங்கி சென்றவள்.. ஒரு நாள் கோவிலில் நான் கொடுத்த குங்குமத்தை வாங்க கூடாதென்று பிடிவாதமாக மறுக்க, நானாக அவள் நெற்றியில் வைக்க வேண்டியதாக இருந்தது.. அவளிடம் நான் தனியாகப் பேச வேண்டும் என்று கூறியும், அவளுக்காகக் காத்திருப்பேன் என்று தெரிந்தும் என்னை அவாய்ட் பண்ணியவள்.... எப்படி இவளைப் போன்று ஒரு நல்ல பெண்ணை நான் நழுவ விட முடியும்... என்று அவளை முதன் முதலில் பார்த்தேனோ, அன்றே முடிவெடுத்துவிட்டேன்... இவள் எனக்குத் தான்.. எனக்கு மட்டும் தான்.."


"மட்டும்" என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்,


"அதனால் ப்ளீஸ், நீங்கள் அவளைத் தொந்தரவு செய்யாதீர்கள்.. லீவ் அஸ் அலோன் [please leave us alone]" என்றான்.


இப்படிக் கூட இவன் பேசுவானா என்று ஆச்சரியத்தில் உறைந்திருந்த அகில், "உங்க பேரண்ட்ஸ்" என்று இழுக்க,


"இப்பொழுதுதானே சொன்னேன், என் டாட் பெண்களைப் பற்றி என்ன சொன்னார் என்று...எப்படி அவர் கனியை வேண்டாம் என்று சொல்லுவார்... என் டாட் மட்டும் இல்லை.. என் மாம்மும் என் டாட் மாதிரி தான்.. ஸோ, கனிக்கு ஒரு நல்ல லைஃபை என்னால கொடுக்க முடியும்.....அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன்" என்றவன் பெருமிதத்தோடு பார்க்க,


ஆனால் அகிலின் மனமோ இன்னும் ஆறவில்லை..."சரி, அடுத்த ப்ளான் என்ன?" என்க,


நம் லைஃபை பற்றி இவனுக்கென்ன கவலை.. கனியைப் பற்றிச் சொல்லி ஆகிவிட்டது... இதற்கு மேலும் என்ன கேள்வி வேண்டியிருக்கு? என்று ஹர்ஷா எரிச்சல் அடைந்தவன்,

"அடுத்த வருஷம் யூ எஸ் போகிறேன்....பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் படிக்கறதுக்கு.." என்றான்.


"இப்பொழுது தான் கனிகா ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறாள்....அதற்குள் லவ் எல்லாம் ரொம்ப அதிகம்.... அவள் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும்... அது மட்டும் இல்லாமல் நீங்கள் வேறு அடுத்த வருடம் யூ எஸ் போகிறேன் என்று சொல்கிறீர்கள்" என்று தயங்க,


"ஏன்? நான் அவளை மறந்து விடுவேன் என்று நினைக்கிறீர்களா?" என்று கடுப்புடன் கேட்டான்...


"இல்லை...." என்று அகில் இழுக்க,


இதற்கு மேல் விளக்க ஒன்றும் இல்லை என்பது போல் பார்த்திருந்தவனிடம் என்ன பேசுவது என்று அகிலிற்கும் புரியவில்லை...முள்ளில் மேல் புடவை விழுந்தது போல் ஆகிவிட்டது....இனி யோசித்துத் தான் செயல் பட வேண்டும்....என்று முடிவெடுத்துக் கொண்ட அகில்,


"சரி ஹர்ஷா... நான் கிளம்புகிறேன்... கனிகாவிடம் சொல்லி விட்டு தான் வந்தேன்.... உங்களைச் சந்திக்கப் போவதை.... என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பாள்....." என்றவன் விடைபெற்று செல்ல,

அவனுக்குத் தன் மேல் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்று உணர்ந்த ஹர்ஷா, ஸோ வாட்...அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் இட்ஸ் நாட் மை ப்ராப்ளம்..' என்று தோளைக் குலுக்கியவன் கனிகாவிற்கு அழைத்தான்.


அதுவரை என்ன நடந்ததோ!! அகில் அத்தான் அவரைப் பார்த்தார்களா!! என்ன பேசினார்களோ? என்று தவித்துக் கொண்டிருந்தவளின் அலைபேசி அழைக்க அழைப்பது ஹர்ஷா என்றவுடன் பதற்றத்துடன்..."ஹலோ" என்றாள்....


"கனி, இனி நீ உன் அத்தான்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு.." என்று பட்டென்று சொல்ல,


"என்னங்க.... என்னாச்சு... உங்கள் ரெண்டு பேருக்கும் ஒத்து வரலையா?"


"சொன்னதைச் செய்...இனி அத்தான் பொத்தான் என்று அவனுடன் பேசினாலோ அல்லது அவனுடன் உன்னை எங்கேயாவது பார்த்தேனோ அவ்வளவு தான்" என்றவன் டக்கென்று அலைபேசியைத் துண்டிக்கச் செய்ய,


"என்னாச்சு... ஏன் இப்படிக் கோபப்படுகிறார்கள்? அகில் அத்தான் ஏதும் சொல்லிவிட்டார்களா?" என்று பதைபதைத்தவள் அகிலுக்காகக் காத்திருந்தாள்..


ஹர்ஷாவிடம் பேசி விட்டு வெளியில் வந்த அகிலிற்கு மனமெல்லாம் பாரமாக இருப்பது போல் இருந்தது... வீட்டிற்குப் போகப் பிடிக்காமல் கடற்கரைக்கு வந்தவன் பைக்கை நிறுத்திவிட்டு கடலை நோக்கி நடந்தான்......

கடல் நீரில் கால் நனைக்கக் குளிர்ந்த நீர் தன் மனதையும் குளிர்விக்காதா என்று ஏக்கமாக இருந்தது....


எப்படி நடந்தது? சென்னை வந்து ஒரு சில மாதங்களே இருக்க எப்படி ஹர்ஷாவின் மனதில் இந்தளவிற்கு இடம் பிடித்தாள்? அப்படி என்றால் என்னைப் பற்றி அவளுக்கு எந்த அபிப்பிராயமும் இல்லையா? நாம் தான் அத்தை மகள் என்ற உரிமையில் காதலிக்க ஆரம்பித்தோமா..... மனம் கலங்க நேரம் சென்றதே தெரியாமல் நின்றிருந்தவன் இரவு வெகு நேரம் சென்றே வீட்டிற்குத் திரும்பினான்.


வீட்டிற்கு வந்தவன் கனிகாவை பார்த்தும் பார்க்காதது போல் இரவு உணவு அருந்த டைனிங் டேபிளில் அமர அவனுக்கு உணவு எடுத்து வைக்கும் சாக்கில் அவன் அருகில் வந்தவள்,

"அத்தான்....என்னாச்சு அத்தான்.... அவரைப் பார்த்தீர்களா?" என்றாள் படபடப்புடன்...


அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் பேசாமல் தட்டை எடுத்து தானே உணவு பறிமாறப் போக அவன் கையைப் பிடித்துத் தடுத்தவள் இட்லியை அவன் தட்டில் வைத்து சட்னியையும் ஊற்றியவள் அவன் முகத்தையே பார்க்க அவள் தன்னைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தும் அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.....


கண்கள் கலங்க உதடு கடித்துத் தன் கலக்கத்தை மறைத்தவள், அவன் உண்டு முடிக்கும் வரை கூட இருந்தவள், அவன் மாடிக்கு செல்லவும் பின்னையே செல்ல, திரும்பி பார்த்தவன்,

"எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு... தூங்கணும்... நாம் காலையில் பேசிக் கொள்ளலாம்.." என்றான்.....


ஏனெனில் அவனுக்குத் தெரியும், இப்பொழுது இருக்கும் மன நிலையில் அவளிடம் பேசினால் தன்னையும் அறியாமல் தன் மனதில் உள்ள தன் காதல் வெளிப்பட்டுவிடுமே என்று...


சரி என்று தலை அசைத்தவள் வேறு வழியில்லாமல் தன் அறைக்குச் செல்ல, அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்த அகிலிற்கு மனம் பாரமாக இருக்க வேகமாகத் தன் அறைக்குச் சென்றவனுக்கு மனம் முழுக்கக் கேள்விகள்.....


இது சரிப்பட்டு வருமா? இதனால் பின்னால் கனிகாவின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது... ஹர்ஷாவின் பெற்றோர் எவ்வாறு இத்திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள்? இப்பொழுது தான் முதலாம் வருடம் படிக்கிறாள்... இன்னும் அவர்கள் இருவரும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.... அது வரை ஹர்ஷாவின் மனம் மாறாமல் இருக்குமா? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கணைகளைத் தனக்குள் தொடுத்துக் கொண்டவன் சட்டென்று நிமிர்ந்தான்.....


ஹர்ஷாவைப் பற்றிய நினைப்பில் இதை எப்படி மறந்தேன்.... கனிகாவை யார் கடத்தி இருப்பார்கள்? சினிமாவில் நடப்பது போல் இருக்கிறதே.... ஹர்ஷா பேசுவதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் வேலை இல்லை.,... அப்படி என்றால் யாராக இருக்கும்? மூளை சூடாகும் வரை யோசித்தவனுக்கு எங்குத் திரும்பினாலும் பதில் தான் கிடைக்கவில்லை....






**********************************
அதிகாலையில் எழுந்தவள் எப்படியும் இன்று அகில் அத்தானிடம் பேசி விடவேண்டும் என்று முடிவெடுத்து குளித்து முடித்துக் கீழே இறங்கி வர, அங்கு ஏற்கனவே கிளம்பி அவளுக்காகக் காத்திருந்தான் அகில்.....


"அத்தான், உங்க கூடக் கொஞ்சம் பேசணும்..."


"நீ போய் முதல்ல சாப்பிடு. நானே உன்னைக் காலேஜில் ட்ராப் பண்ணுகிறேன்.."


இனி உன் அகில் அத்தானுடன் பேசுவதையோ இல்லை உங்கள் இருவரையும் சேர்த்து வைத்தோ எங்கேயாவது பார்த்தேனோ அவ்வளவு தான் என்று ஹர்ஷா நேற்று இரவு எச்சரித்து இருந்தது ஞாபகம் வர பதற்றத்துடன்,


"அத்தான், எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்.... நானே வழக்கம் போல் போகிறேன்..." என்று கூற,


அவளின் பதற்றத்தை கவனித்தவன் அவளை முறைத்தவாறே அவள் அருகில் வந்தவன் "இன்னும் பத்து நிமிஷத்தில் என் கூட வர" என்றவன் தானும் உணவு அருந்த டைனிங் டேபிளுக்குச் செல்ல வேறு வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தவள் "இன்று ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது" என்பதை உணர்ந்தாள்....


விறுவிறுவென்று அவனுடன் பேசும் ஆர்வத்தில் கொஞ்சமாக உணவை கொறித்து விட்டு கிளம்பியவள் அவன் பைக்கில் ஏற, கல்லூரி வரை அவன் வாயைத் திறக்கவில்லை....


"அத்தான், என் கிட்ட பேச மாட்டீங்களா?" என்று எத்தனையோ முறை கேட்டும் அவன் எதுவும் சொன்னானில்லை....


வேறு வழியில்லாமல் அமைதியாக வந்தவள் கல்லூரியில் இறங்கியதும் அவன் முகத்தைப் பார்க்க,


"கனிகா, நீ சென்னைக்கு வந்தே நாலைந்து மாசங்கள் தான் ஆகுது...ஆனால் அதற்குள் உன்னைக் கடத்தும் அளவிற்கு யார் போய் இருப்பார்கள்?" என்று கேட்க,


"தெரியலை அத்தான்.." என்றவளின் மனம் எல்லாம் ஹர்ஷா தங்களைப் பார்த்து விடுவானோ என்பதிலேயே இருந்தது.....

அவளின் கண்கள் ஹர்ஷாவை தேடுவதைக் கண்டு கொண்டவன் இவளிடம் இதற்கு மேல் பேசுவது பலன் இல்லை...நாமாகத் தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான்.....


அங்குக் கனிகாவை எதிர்பார்த்து கல்லூரியின் நுழைவாயிலில் காத்து இருந்த ஹர்ஷாவின் கண்களில் கனிகா அகிலுடன் பைக்கில் வந்து இறங்கியது பட, கண்கள் சிவக்க அவளையே பார்த்து இருந்தவன் வேகமாகக் கல்லூரிக்குள் நுழைந்து கூட்டத்தில் மறைந்து போனான்.....


அவனைக் காணாமல் கண்கள் பனிக்க வகுப்பறைக்குள் நுழைந்தவளின் அலைபேசி குறுந்தகவல் வந்திருப்பதை அறிவிக்க,


அதில் ஹர்ஷா, "நேற்று அத்தனை சொல்லியும் இருவரும் கேட்காதது போல் இருக்கிறது...அப்ப என் பேச்சிற்கு உன்னிடம் இவ்வளவு தான் மதிப்போ..." என்று எழுதியிருக்கப் படித்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.....


"இல்லை... அகில் அத்தானிடம் நேற்று முன் தினம் நடந்ததைத் தெரிவித்து விட்டேன்...அதனால் யார் இப்படிச் செய்து இருப்பார்கள் என்று தெரியும் வரை அவர் என்னைக் கல்லூரியில் விடுவதாகச் சொல்லியிருக்கிறார்" என்று பதில் அனுப்ப...


அவளின் பதிலில் சிறிது ஆறுதல் அடைந்தவன் "இன்றைக்குக் கல்லூரி முடிந்ததும் நான் உன்னைக் கூட்டி செல்கிறேன்... அவனை வர வேண்டாம் என்று சொல்லிவிடு" எனவும்,


இருவர் நடுவிலும் மாட்டிக் கொண்டு திணறிவளுக்குத் தன் நிலைமையை நினைத்துக் கழிவிரக்கம் தோன்றியது..


"சரி" என்று மட்டும் பதில் அனுப்பியவள் ஹர்ஷா தன்னைக் கூட்டி வருவதைச் சொல்லாமல், தானே தனியாக வீட்டிற்கு வருவதாக அகிலுக்குத் தகவல் அனுப்ப அவனிடம் இருந்து அன்று மாலை வரை பதில் வரவில்லை....


அவள் வகுப்பறைக்குள் நுழைந்ததில் இருந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதையும், முகம் மிகவும் கலங்கி இருப்பதையும் பார்த்த ஆஷாவிற்கும் இளாவிற்கும் எதுவோ சரியில்லை என்று தோன்ற,


"கனிகா, எதுவும் பிரச்சனையா?" என்று கேட்ட இளாவை சட்டென்று திரும்பி பார்த்தவள் "இல்லை" என்பது போல் தலை அசைக்க,


"ஏன்டி, இப்படி எல்லாவற்றையும் எங்களிடம் இருந்து மறைக்கிற... உன் முகமே காட்டிக் கொடுக்கிறது... ஏதோ சரியில்லை என்று... அப்படி இருந்தும் ஏன் எங்களிடம் எதுவும் ஷேர் பண்ண மாட்டேங்கிற?" எனவும்.


அகிலும் ஹர்ஷாவும் சந்தித்ததை மட்டும் சொன்னவள் தான் கடத்தப்பட்ட சம்பவதை மறைத்துவிட்டாள்...


"என்னது ஹர்ஷா உன் அத்தானை மீட் பண்ணினாரா... என்னடி அதற்குள் எப்படி உங்கள் வீட்டிற்கு விஷயம் தெரிந்தது?"


"இளா, ஸ்ட்ரைக் அன்று நான் அகில் அத்தானோடு வீட்டிற்குப் போகவில்லை, அவர் தான் என்னை ட்ராப் பண்ணினார்.."


"அடியே நீ என்ன பைத்தியமாடி...மூளை ஏதும் குழம்பிருச்சா?" என்று இளா அலற...தன் நிலைமையை நினைத்து நொந்து கொண்டவள்,


"அவர்கள் ரெண்டு பேரும் என்ன பேசினார்கள் என்றே தெரியவில்லை டி, ஆனால் அவர், நான் அகில் அத்தானோடு பேசவோ பழகவோ கூடாதுன்னு சொல்றார்...அது எப்படி முடியும்...நான் அவங்க வீட்டில் தான் தங்கி இருக்கிறேன்...இதில் அவரோட பேசாமல் இருந்தால் அத்தைக்கும் மாமாவிற்கும் சந்தேகம் வராதா... இதை எப்படி அவருக்குப் புரியவைப்பது" என்று கூறியவள் அதற்கு மேல் ஒன்றம் பேசாமல் அமைதியாக இருக்க,


"நன்றாக மாட்டிக் கொண்டாள், இது தேவையா... ஆனால் இது இவள் விருப்பம் அல்லவே... இதற்கெல்லாம் காரணம் ஹர்ஷா ஆயிற்றே...ஆனால் அவனை எதிர்க்க யாரால் முடியும்?" என்று நினைத்துக் கொண்ட தோழிகள் இருவரும் அதற்கு மேல் கேள்விகள் கேட்டு அவளைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை....


மாலை கல்லூரி விட்டதும் ஹர்ஷாவைக் காண ஆவலுடன் கிளம்பியவளுக்குக் கிலிபிடிக்க வைத்தது அகிலின் அலைபேசி அழைப்பு...


"கனி, நான் உன் காலேஜ் வாசலில் தான் நின்று கொண்டு இருக்கிறேன்...சீக்கிரம் வா.."


"அத்தான்....நானே வந்துவிடுகிறேன் என்று சொன்னேனே"


"சீக்கிரம் வா... உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிவிட்டு நான் வெளியில் போக வேண்டும்... எனக்கு வேறு வேலை இருக்கிறது" என்று கூற..


அகிலை தேடி வெளியில் வந்தவளின் கண்ணில் காரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்த ஹர்ஷா பட்டான்... அவனை நோக்கி செல்ல காலடி எடுத்து வைக்க....சொல்லி வைத்தார் போல் அவள் அருகில் வந்த அகில் "வா" என்றான்...


யார் பக்கம் செல்வது என்று புரியாமல் குழம்பி நின்றவளின் கரத்தைப் பற்றியவன் தன் பைக்கை நோக்கி கூட்டி செல்ல... அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த ஹர்ஷாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது...


இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் விருட்டென்று காரில் ஏற.... கனிகா அகிலின் பைக்கில் ஏறி அமர்ந்தவள் ஹர்ஷாவும் தன் காரில் ஏறியதைப் பார்த்தவளுக்குத் தெரிந்து போனது... அவன் சும்மா இருக்கப் போவதில்லை என்று....


காரை அதி வேகமாக ஓட்டியவன் ஒரு குறுக்குச் சந்தில் செல்லும் பொழுது அகிலின் பைக்கை முந்தி சென்று நடுவில் வழி மறிப்பது போல் காரை நிறுத்த தடுமாறிய அகில் கீழே விழாமல் சாமாளித்து நின்றவன் கனிகாவை திரும்பி பார்த்து "இறங்காதே" என்றான்...


காரை விட்டு இறங்கி வந்த ஹர்ஷா கனிகாவின் கரம் பற்றி "வா" என்க, நடு ரோட்டில் என்ன இது இத்தனை பேர் பார்க்க என்று தயங்கிய கனிகா அகிலைப் பார்க்க, "வான்னு சொன்னேன்" என்று பற்களைக் கடித்துக் கொண்டு கூறிய ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தைக் கண்டு நடுங்கியவள் ஒன்று பேசாமல் அமைதியாக அவனுடன் சென்று காரில் ஏறினாள்....


விருட்டென்று காரை கிளப்பியவன் தன் கோபம் முழுவதையும் காரின் வேகத்தில் காட்ட, "என்னங்க.... கொஞ்சம் மெதுவாகப் போங்க... ரொம்பப் பயமா இருக்கு..." என்றாள்...


சிறிது தூரத்தில் யாரும் அற்ற ஒரு இடத்தில் காரை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப... அங்கு ஏற்கனவே அவன் நடந்து கொண்ட விதத்தில் அரண்டு போய் அமர்ந்திருந்தவள் மலங்க கண்களை விரித்து அவனையே பார்த்திருக்க,


"நான் ஏற்கனவே உனக்குச் சொல்லி இருக்கிறேன்...நான் சொல்வது மட்டும் தான் நீ கேட்க வேண்டும்.. வேறு யார் சொல்வதையும் கேட்க கூடாதென்று... சொல்லி இருக்கேனா? இல்லையா?" என்று குரலில் சத்தத்தைத் திடீரென்று ஏற்ற, திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டது கனிகாவிற்கு....


அவள் உடம்பு தூக்கி போட்டதைப் பார்த்தவனுக்கு அவளின் நிலை உணர்ந்து கனிவு வந்தது....


"கனி.. எனக்கு உன் மாமன் மகன் அகிலை பார்த்தாலே பிடிக்கவில்லை... நீ அவனோட பேசுவது பழகுவது எதுவும் பிடிக்கவில்லை.."


"நான் அவங்க வீட்டில் தான் இருக்கிறேன்... அவங்க தான் என்னைய பார்த்துக் கொள்கிறார்கள். அவங்க வீட்டில் இருந்து கொண்டே எப்படி அவருடன் பேசாமல் இருப்பது?" என்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் பயந்தவாறே கேட்க,


அவளின் நிலைமை நன்கு புரிந்தவனுக்கு அகில் அவளை விரும்புவதைச் சொல்வதா வேண்டாமா என்று இருந்தது...


ஆனால் இப்பொழுது தான் என் காதலை ஏற்றிருக்கிறாள். இந்தச் சமயத்தில் அகிலும் உன்னைக் காதலிக்கிறான் என்று சொன்னால் ஒரு வேளை தன்னை விட்டு அவனுடன் போய் விட்டால் என்று தப்பு தப்பாக அவளை எடை போட்டவன் சொல்லாமல் இருப்பதே மேல் என்று முடிவு செய்தான்..


ஒரு வேளை சொல்லியிருந்தால் பின்னால் வரவிருந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாமோ???


"சரி, ஆனால் அவனுடன் நீ பைக்கில் ஒன்றாக அமர்ந்து வருவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை..." என்றான் வெறுப்புடன்...


"அன்று நடந்ததற்கு யார் காரணம் என்று கண்டு பிடிக்கும் வரை அவர் கூடத் தான் நான் வரவேண்டுமாம்" எனவும்,

அவளை உறுத்து பார்த்தவன்,

"அதற்குக் காரணம் யார் என்று நான் கண்டு பிடித்துவிட்டேன் என்று அவனிடம் சொல்லு..." என்றான்.



அதிர்ந்தவள் "யார்?" என்று வினவ,

"ம்ப்ச்..அது உனக்குத் தெரிய வேண்டாம்...இனி நீ போகும் பொழுதும் வரும் பொழுதும் உன்னைப் பார்த்துக் கொள்ள அங்கங்கு ஆட்களைச் செட் பண்ணியிருக்கேன்...நீ பயப்படாமல் இரு..உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்..." என்று சொல்லும் பொழுது அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் அவளே சற்று பயந்து தான் போனாள்.


காரைக் கிளப்பியவன்,

"அந்தப் பஸ்டாப்பில் இறக்கி விடுகிறேன்... நீ பஸ் பிடிச்சு போ... நான் பஸ் பின்னாலேயே வருகிறேன்" எனவும்,

இந்தக் கஷ்டம் இவருக்கு எதற்கு... நான் அகில் அத்தானோடே போய்க் கொள்வேனே.... புரிந்துக் கொள்ளவே மாட்டாரா?' என்று மனதிற்குள் புலம்பியவள் அவனிடம் சொல்லும் தைரியம் இல்லாமல் சரி என்று தலை அசைத்தாள்.


அவளைப் பேருந்து நிலையத்தில் இறக்கியவன் அவள் கீழே இறங்கும் நேரம் கரத்தைப் பற்றியவன்,

"கனி நான் திரும்பவும் சொல்கிறேன்....நீ எனக்கு மட்டும் தான்.....உனக்கு எதுவும் வர நான் விட மாட்டேன்.." என்று கூறியவன் அவள் விரல்களை இறுக பற்றி மென்மையாக முத்தமிட மயற்கால்கள் கூச்செரிய விழிகளைத் தாழ்த்தியவாறே "வருகிறேன்" என்று தலை அசைத்து விடை பெற்றாள்.


வீட்டிற்கு வந்தவளுக்கு எப்படியும் இன்று அகில் அத்தானோடு பேசி விட வேண்டும் என்று இருந்தது... இன்று நடந்தது போல் தினமும் நடக்கக் கூடாது என்று நினைத்தவள் அவனுக்காகக் காத்திருக்க ஏதோ சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் செல்ல, அவன் பின் சென்றவள் அவனுடன் அவன் அறைக்குள் நுழைந்தாள்.


திரும்பி பார்த்தவன்,

"இன்னும் பேசுவதற்கு எதுவும் இருக்கிறதா... என்ன?" என்று வார்தைகளை உச்சரித்ததிலேயே தன் கடுப்பை வெளிப்படுத்த,

"ப்ளீஸ் அத்தான் கொஞ்சம் நான் பேசுவதை நீங்களாவது கேளுங்க?" என்றாள்.


"ஏன் அவன் கேட்கவில்லையோ?"


"அத்தான் ப்ளீஸ்" என்று கெஞ்ச, "சரி சொல்லு, என்ன பேசணும்?" என்றான்.


"அத்தான் அன்று நடந்த அசம்பாவிதற்கு யார் காரணம் என்று அவர் கண்டு பிடித்துவிட்டாராம்" என்றவள் தயங்க,

அவளை உறுத்து பார்த்தவன் "யாராம்?" என்றான்.


"அதை அவர் சொல்லவில்லை அத்தான்...ஆனால் எனக்கு எதுவும் நடந்து விடாம இருக்க அவர் அங்கங்கு ஆளுங்களைச் செட் பண்ணியிருக்கிறேன்னு சொன்னார்" என்று சொல்லும் பொழுதே அவள் முகத்தில் ஹர்ஷாவை நினைத்துப் பெருமை வழிந்தது.


அதை எரிச்சலுடன் பார்த்திருந்த அகில்,


"அதனால், இனி நீ என்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டானா?" எனவும்,


ஆம் என்பது போல் தலை அசைத்தவளை ஒரு நிமிடம் உறுத்து பார்த்தவன் அவள் அருகில் வந்து,

"கனிகா, நீ ரொம்பச் சின்னப் பெண். உனக்கு இதற்கு இன்னும் வயது வரவில்லை... ஆனால் நான் சொல்றதை நீ கேட்கிறாயோ இல்லையோ, அவன் நிச்சயம் உன்னைக் கேட்க விடமாட்டான்... எனக்குப் பயம் எல்லாம் அவனால் உனக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது... நீ ஒழுங்கா படிச்சு முடிக்க வேண்டும்... இது மட்டும் தான் என்னோட விருப்பம்" என்று அவள் தலையைத் தடவியவன்,

"ஹர்ஷா மட்டும் இல்லை, வேற யாராலும் உனக்கு எதுவும் நடக்க நான் விட மாட்டேன்.." என்று அழுத்தி சொல்லியவன், "சரி, நீ போய்த் தூங்கு" என்றான்.

ஒரு வழியாக அவனைச் சமாதானப்படுத்திய நிம்மதியில் அவளும் உறங்க போனாள்.

ஆனால் உறக்கம் அத்தனை சீக்கிரத்தில் அவளைத் தழுவவில்லை...

ஹர்ஷாவிற்கும் அகிலிற்கும் எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை வருமோ, அகில் அத்தான் மாமாவிடமோ அல்லது அத்தையிடமோ தங்களைப் பற்றிச் சொன்னால் என்ன ஆகுமோ? என்று கலக்கத்துடன் படுத்திருந்தவளுக்குத் தன்னைக் கடத்தியது யார் என்று கண்டு பிடித்துவிட்டதாகச் சொன்னாரே, யாராக இருக்கும் என்ற யோசனையும் வராமல் இல்லை....

ஆனால் அவளுக்கு எப்படித் தெரியும்.... கடத்தியது ரியா என்றும்... கடத்தப்பட்ட மறு நாளே ஹர்ஷா ரியாவை சந்தித்து மிரட்டியதும்....


தொடரும்
 

JLine

Moderator
Staff member
அத்தியாயம் 11


ரியாவிற்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று உள்ளமெல்லாம் ஆத்திரத்தில் எரிந்து கொண்டு இருக்க அதற்கான சந்தர்ப்பம் அடுத்த நாளே ஹர்ஷாவிற்குக் கிடைத்தது..

தொழில் தொடர்பான ஒரு பார்ட்டிக்குச் சிதம்பரம் செல்ல வேண்டியிருந்ததால் அவசரமாகக் கிளம்பியவருக்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது சங்கீதாவை அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல வாக்கு கொடுத்து இருந்தது...

தனக்குப் பதில் பார்ட்டிக்கு ஹர்ஷாவை போகச் சொல்ல, வழக்கமாக அவன் அது போன்ற தொழில் சம்பந்தமான பார்ட்டிகளுக்குப் போக விரும்புவதில்லை என்றாலும், தன் அன்னைக்காக ஒத்துக் கொண்டு சென்றான்....

அங்குத் தான் சந்தித்தான் ரியாவையும் அவளின் தந்தை மார்த்தாண்டத்தையும்... மார்த்தாண்டம் சென்னையில் உள்ள பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் அவரின் பூர்வீகம் ஒரு கிராமம்... விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்....

நாளாவட்டத்தில் மழையின்மை காரணமாக விவசாயம் பட்டுப் போகப் பூர்வீக நிலங்களை விற்றுத் தொழில் செய்வதற்காகத் தன் மனைவி மகளுடன் சென்னைக்குக் குடி பெயர்ந்தவர்...

தனது கடுமையான உழைப்பால் இன்று ஒரு நல்ல இடத்தை அடைந்திருந்தாலும் அவருடைய இயல்பான நல்ல குணமும் நேர்மையும் அவரை விட்டு அகலவில்லை... அதற்கு அவருடைய துணைவியாரும் ஒரு காரணம்...

ஆனால் இவர்கள் இருவரின் குணத்திற்கும் திருஷ்டி வைப்பது போல் பிறந்தவள் தான் ரியா...

தன் அன்னையைப் போன்று அழகுடையவளாயிருந்தாலும், பணக்கார திமிர் அதிகப்படியாகவே இருந்தது....

எத்தனையோ முறை தாயும் தந்தையும் கண்டித்தும் அவளை அவர்களால் திருத்த முடியவில்லை... அப்பொழுதே மார்த்தாண்டம் ஒரு முடிவெடுத்திருந்தார்....

அந்த முடிவு தெரிய வரும்பொழுது ரியாவின் நிலைமை?

பார்ட்டியில் ரியாவை அவள் தந்தையுடன் எதிர்பாராதவிதமாகப் பார்த்த ஹர்ஷாவிற்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்றே தோன்றியது...

பார்ட்டி என்றால் ரியாவிற்கு அத்தனை விருப்பம், அது என்ன விதமான பார்ட்டி என்றாலும் சரி என்று நினைத்து இளக்காரமாகச் சிரித்தவன் அவர்களின் அருகில் சென்றவன்,

"என்ன ரியா? நீ நினைச்சது போல் ஒன்றும் நடக்கவில்லை போல் இருக்கிறேதே...சோ ஸேட் [so sad]" என்க,

அவனை எதிர்பாராதவிதாமாகப் பார்ட்டியில் கண்டதற்கே திகைத்தவள், அவன் தன் தந்தை அருகில் இருக்கும் பொழுது இவ்வாறு கூறியது அச்சத்தைக் கொடுக்க, "ஹர்ஷா, மீட் மை டாட் [Harsha, meet my dad]" என்றவள், "கம் லெட்ஸ் கோ அவுட் அன்ட் டாக் [come, lets go out and talk] என்றாள்....

நழுவப் பார்க்கும் அவளைக் கூர்ந்து நோக்கியவன் அவள் தன்னையும் தன் தந்தையையும் அச்சத்துடன் மாறி மாறி பார்ப்பதிலேயே தெரிந்தது அவள் தந்தைக்குப் பயப்படுகிறாள் என்று...

அவளைத் தவிர்த்து அவள் தந்தையின் பக்கம் திரும்பியவன்,

"ஹலோ அங்கிள்.,...ஐ ஆம் ஹர்ஷா....C S க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் சிதம்பரத்தின் ஒன்லி சன்...அன்ட்....ரியாவின் காலேஜ் மேட்" என்றான்...

சிதம்பரத்தின் தொழில்களும், தொழிற் சாலைகளும், அவரின் செல்வாக்கும் சென்னையிலும், மும்பையிலும் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மற்ற தொழிலதிபர்கள் மத்தியிலும் பிரபலமானதால் அவனைச் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டவர் அவன் அழகிலும் கம்பீரத்திலும் அதிசயித்துக் கரம் குலுக்க வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,

"என்ன அங்கிள், உங்களுக்கு இருக்கிற வசதிக்கு ரியாவிற்கு நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க மாட்டீர்களா? என்ன? அதற்குள் ரியாவிற்கு என்ன அவசரம்?" என்றான் நக்கலான குரலில்...

புரியாமல் அவனையே கூர்ந்து பார்த்திருந்த மார்த்தாண்டத்திற்கு நிச்சயம் தன் மகள் ஏதோ தவறு செய்திருக்கிறாள் என்று புரிய, "எனக்குப் புரியலை தம்பி....விளக்கமாகச் சொல்லுங்களேன்..." என்றார்.

அவர் அருகில் வந்தவன் நடந்த அனைத்தையும் கூறியவன் அவர் முகம் ஆத்திரத்தில் கடுமையாக மாறுவதைக் கூர்ந்து பார்த்தவாறே,

"அங்கிள்.... ஐ டோண்ட் லவ் ரியா....இத நான் அவகிட்ட பல முறை எடுத்துச் சொல்லியிருக்கேன்... ஆனால் அதைப் புரிஞ்சிக்காமல் நான் விரும்பும் பெண்ணைக் கடத்துவது, அவள் கற்புக்குப் பங்கம் விளைவிக்க முயற்சி செய்வது என்று உங்கள் பெண் எவ்வளவு கீழ்த்தரமானவள் என்பதை நிருபித்துக் கொண்டு இருக்கிறாள்... போலீசிற்குப் போயிருக்கலாம், ஆனால் இதனால் என் கனிக்கு எதுவும் கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை.... அதனால் இவளுக்கு என் வழியில் பாடம் கற்பிக்க நினைத்தேன்... பட் அதற்குள் உங்களை இங்குச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு அமைஞ்சிடுச்சு...ஐ ஹோப் யூ வில் டே கேர் ஆஃப் திஸ் [ I hope you will take care of this] " என்று முடிக்க,

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் ஜீரணிக்க முடியாமல் ஆத்திரத்தில் தத்தளித்தவர் ஒன்றும் பேசாமல் ரியாவின் கரத்தை இறுக்கி பிடித்தவர் விறுவிறுவென்று வெளியே இழுத்து சென்றார்...

வீட்டில் என்ன நடந்ததோ, மார்த்தாண்டம் என்ன செய்தாரோ...அதற்குப் பின் ரியா ஹர்ஷாவை எதிர்பாராதவிதமாகக் கல்லூரியில் பார்த்தாலும் ஒரு எரிக்கும் பார்வையை வீசியவள், ஆனால் ஒன்றும் பேசாமல் விலகியிருந்தாள்...

ஆனால் என்னவோ ஹர்ஷாவிற்கு ஓநாய் பதுங்குவது போலவே தோன்றியது ரியாவை பார்க்கும் பொழுதெல்லாம்...

******************************

நாட்கள் அதன் போக்கில் நகர, எத்தனை எச்சரித்தும் கனிகாவின் முகத்தில் ஹர்ஷாவைப் பற்றிப் பேசும் போது தெரிந்த பெருமையில், காதலில் கனிகா நிச்சயம் தன் பேச்சை கேட்கப் போவதில்லை, ஹர்ஷாவும் இவளை விடப் போவதில்லை என்று புரிய கனிகாவிடம் பேசிய நாள் முதல் கனிகாவின் விஷயத்தில் அகில் தலையிடவில்லை.

கனிகாவின் மேல் ஹர்ஷாவின் ஆளுமை அவனுக்கு உள்ளுக்குள் அச்சத்தைக் கிளப்பி இருந்தாலும், இத்தனை பெண்கள் அவன் வாழ்க்கையில் வந்திருந்தும் கனிகாவை மட்டும் அவன் விரும்புவதில் இருந்து நிச்சயம் அவன் கனிகாவை காயப்படுத்தமாட்டான் என்றே தோன்றியது.....

அதற்குச் சான்று இந்த ஒரு மாதத்தில் கனிகாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி...

ஆம், அவன் ஹர்ஷாவை சந்தித்துக் கிட்ட தட்ட ஒரு மாதம் ஆகிறது.

கல்லூரியில் ஆண்டு விழா தயாரிப்புகள் களைகட்ட மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரமெடுக்க ஹர்ஷாவும் கல்லூரி பிரெஸிடெண்ட் என்று முறையில் நிகழ்ச்சிகள் தயாரிப்பு, சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு, கல்லூரி அலங்கரிப்பு, மேடை அமைப்பு என்று மிகவும் பிஸியாக இருந்தான்.....

கனிகாவின் வகுப்பினர் அனைவரும் விழா அன்று பட்டுப் புடவையில் வருவது என்று ஒன்று கூடி முடிவெடுக்க அன்று மாலையே சென்னையில் இருந்த அந்தப் பெரிய துணிக் கடையில் புடவை எடுப்பது என்று முடிவானது.....

மாலை கடைசி வகுப்பு முடிந்ததும் எல்லோரும் ஒன்றாகக் கிளம்ப, தயங்கிய கனிகா, "ஆஷா, இளா, நான் வரவில்லை டி, நீங்க போங்க..." என்றாள்.

"ஏண்டி? என்னாச்சு? ஏன் வரலைன்னு சொல்ற?"

"ஆஷா உங்களுக்கே தெரியும் என் நிலைமை... நான் ஏற்கனவே என் மாமா குடும்பத்திற்குப் பாரமாக இருக்கிறோமோ என்று கவலையில் இருக்கிறேன்.... இதில் இப்ப பட்டுப் புடவை எல்லாம் ரொம்ப அதிகம்.... அதனால் ப்ளீஸ், நீங்க போய் எடுத்திட்டு வாங்க.."

"ஏன்டி, நாங்க உனக்கு எடுத்துக் கொடுக்க மாட்டோமா... எங்களை வேற ஆள் மாதிரி ட்ரீட் பண்றியே..."

"சே சே, இல்லடி, அப்படி எல்லாம் இல்லை.... என்னிடம் ஏற்கனவே கட்டாத பட்டுப் புடவை ஒண்ணு இருக்கு... அத நான் கட்டிக்கிறேன்..." என்றாள்.

ஆனால் உன்மையில் அவளிடம் மொத்தமே இரண்டு பட்டுப் புடவைகள் தான் இருந்தது...அதுவும் ஏற்கனவே கட்டியது தான்.... இருந்தாலும் என்ன, ஒரு நாள் தானே.... என்று நினைத்தவள் அவர்கள் சென்ற பின் தனியாக நடந்து வர, கடந்த சில நாட்களாக வெகு பிஸியாக இருந்ததினால் கனிகாவை சந்திக்க முடியாமல் இருந்த ஹர்ஷாவிற்கு ஏனோ அன்று அவளைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது.

அவளுக்காகக் காத்திருந்தவன் ஆஷாவும், இளாவும் தோழிகளுடன் செல்ல, கனிகாவைக் காணாமல் தேடியவன் சிறிது நேரம் சென்று கனிகா தனியாக வருவதைப் பார்க்க, அதே சமயம் அவளும் அவனைப் பார்க்க, "வா" என்பது போல் தலை அசைத்தான்.....

முடிந்தவரை கல்லூரியில் அவனிடம் பேசுவதை அவள் தவிர்த்திருந்தாள்....

முதலில் ஏற்க மறுத்தவன் பின் அவளின் நிலைமை உணர்ந்து அவனும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை......

ஆனால் அலைபேசியில் அவளிடம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பேசாமல் இருக்க முடியவில்லை...

அவன் "வா" என்று சொல்லியும் போகாமல் "இல்லை" என்பது போல் தலை அசைக்க, முறைத்தவன் மீண்டும் "வா" என்பது போல் தலை அசைக்க இனியும் போகாமல் இருந்தால் கோபத்தில் ஏதாவது செய்துவிடுவான் என்று பயந்தவள் அவனிடம் செல்ல...

"ஏன்? நீ மட்டும் தனியா வர, அவர்களுடன் போகவில்லையா?" என்றான்...

இல்லை என்பது போல் தலை அசைக்க அருகில் வந்தவன்,

"ஏன்டி இனிமேயாவது வாய் திறந்து பேசமாட்டீயா? ஃபோனிலும் நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கிறேன்..." எனவும். புன்னகைத்தவள், தலை கவிழ, அவள் கரத்தைப் பற்றியவன், வா என்று காரில் ஏற்ற முயற்சித்தான்.

அவன் செயலில் தடுமாறியவள் அவனைச் சுற்றி நின்றிருந்த நண்பர்களைப் பார்க்க, அவர்களும் இவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்திருக்க, அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது..

"வேண்டாங்க..... எல்லோரும் பார்க்கிறாங்க..." என்று தயங்கியவளை கண்டு கொள்ளாமல் காரில் அமரச் செய்து பின் தன் இருக்கைக்கு வந்து காரை கிளப்பினான்....

எப்பொழுது இவர் அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டிருக்கிறார், இன்று தான் சொல்வதைக் கேட்பதற்கு என்று நினைத்து அமைதியாக வர.... சிறிது தூரம் சென்றதும்

"சொல்லு, ஏன் தனியா வர்ற? ஏதாவது எக்ஸ்ட்ரா வொர்க் இருந்ததா?" எனவும், இவரிடம் எப்படிச் சொல்வது ஆனால் சொல்லாமலும் விட மாட்டார் என்று நினைத்தவள்,

"அவங்க எல்லோரும் ஆண்டு விழா வருது இல்லையா? அதுக்குப் புடவை எடுக்கப் போறாங்க.." என்றாள் தயங்கித்தயங்கி.

"ஏன் நீ போகலையா?"

"என் கிட்ட ஏற்கனவே பட்டுப் புடவை இருக்கு..."

என்று அவள் சட்டென்று பதில் சொன்ன விதத்திலே தெரிந்து போனது, அவள் ஏன் அவர்களுடன் செல்லவில்லை என்று....

"சரி எந்த ஸ்டோருக்கு போயிருக்காங்க?" என்று கேட்க, ஏன் கேட்கிறார் என்று விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள் அவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் தலை கவிழ்க்க,

"எந்தக் கடைக்குப் போயிருக்கிறார்கள் என்று கேட்டேன்.." என்றான்..

கடையின் பெயரைச் சொன்னவள், "என்னிடம் ஏற்கனவே பட்டு புடவை இருக்கு.." என்று மீண்டும் அதே பல்லவியைப் பாட, அவன் கேட்டால் தானே...

நேரே அந்தக் கடைக்குக் காரை திருப்ப அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரிந்து போனது....

"இல்லைங்க வேண்டாங்க...ப்ளீஸ்" எனவும், அவன் நேரே கொண்டு சென்று நிறுத்தியது அந்தக் கடையின் கார் நிறுத்துமிடத்தில்...

"வேண்டாங்க...ப்ளீஸ்....புரிஞ்சுக்கங்க...இப்ப நீங்க புடவை எடுத்துக் கொடுத்தீங்கன்னா அது வீட்டிலும் சரி காலேஜிலும் சரி பெரிய பிரச்சனையாகிவிடும்..." என்று கெஞ்சினாள்....

ஆனால் அவள் கெஞ்சலுக்கெல்லாம் படியாதவனாய் "இறங்கு" என்று அதிகாரமாகக் கூற, என்ன செய்வது என்று குழம்பியவள் இறங்காமல் அவன் முகம் பார்த்தவாறே அமர்ந்திருக்க, எதுவும் பேசாமல் காரை கிளப்பியவன் அவளை அவளின் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விருட்டென்று சென்றுவிட்டான்.

'ஏன் என்னைப் புரிந்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறார்? நான் எப்படி இவர் எடுக்கும் புடவையை உடுத்துவது? அத்தை ஏதாவது கேட்டால் நான் என்னவென்று சொல்வேன்?' என்று வருந்தியவள் அவனைச் சமாதானப்படுத்த அவன் அலைபேசிக்கு அழைக்க அவன் எடுத்தால் தானே.

மறு நாள், இன்று என்ன சொல்ல போகிறாரோ என்று பயந்தவாறே கல்லூரிக்கு கிளம்ப, காலையில் அவனைக் காண முடியவில்லை. மாலையில் அவளின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தான், "கல்லூரி முடிந்தவுடன் தன்னைச் சந்திக்க வருமாறு.... "

மாலை அவன் வழக்கமாகக் கார் நிறுத்தியிருக்கும் இடத்திற்குச் சென்றவள் அவனைக் காணாமல் தேட, தான் அவளுக்காக அருகில் உள்ள காஃபி ஷாப்பில் காத்திருப்பதாகக் குறுந்தகவலை அனுப்பியிருந்தான்...

ஏனெனில் காலையில் சொல்லியிருந்தால் நிச்சயம் அவள் வர மறுத்திருப்பாள்.

இப்பொழுது வேறு வழியில்லாமல் அவனைத் தேடிச் சென்றவள் அங்குக் கம்பீரமாக அமர்ந்திருந்தவனைப் பார்க்க, தன்னை மறந்தாள் சில நிமிடங்கள். அவள் அசையாமல் தன்னையே பார்த்து நின்று இருப்பதைப் பார்த்தவன் வா என்று தலை அசைக்க, அவனருகே சென்றவள் அவன் எதிரில் இருந்த சேரில் அமர, அவள் கரம் பற்றி இழுத்தவன் தன் அருகில் அமர வைத்தான்.

'போச்சு, இது எங்க போய் முடியும் என்று தெரியவில்லை... கொஞ்சம் கூட இவருக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை.... அவர் வீட்டிற்கோ, இல்லை தன் வீட்டிற்கோ தங்களைப் பற்றிய விஷயம் தெரிந்தால் என்ன ஆவது... இவற்றைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் இதென்ன இப்படித் தைரியமாகச் செய்கிறார்' என்று கவலை கொள்ள, அவன் அருகில் அமராமல் தள்ளியே அமர்ந்திருந்தாள்...

அவளையே பார்திருந்தவன், "ஏன் என்னாச்சு?" என்க,

தன் அருகில் அமர பயப்படுகிறாள் என்று தெரிந்து இருந்தும் அவன் அந்தக் கேள்வியைக் கேட்க "ஒன்றும் இல்லை" என்பது போல் தலையசைத்தாள்.

"கனி, எதுக்கு இந்தப் பயம்?"

"இல்லைங்க, வீட்டில் தெரிந்தால் ரொம்பப் பிரச்சனையாகிவிடும், அதான் பயமா இருக்கு"

"ஏன், உன் அகில் அத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு நம்மைப் பற்றிச் சொல்லிவிடுவான்னு நினைக்கிறியா?"

"அத்தான் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்... ஆனால் இப்படி நாம் இரண்டு பேரும் வெளியில் வந்தால், அதுவும் இப்படி உட்கார்ந்து இருந்தால் என்ன ஆகும்னு பயமா இருக்கு"

"ஏன்? எதிரெதிரில் உட்கார்ந்து இருந்தா பிரச்சனை வராதா?"

'இப்படி எது சொன்னாலும் எடக்கு மடக்கா பதில் சொன்னால் என்ன செய்வது?' என்று நினைத்தவள் ஒன்றும் பேசாமல் தலை கவிழ, அவளின் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்த்தவன்,

"கனி, நான் எதற்கும் எப்பவும் என் வாழ்க்கையில் பயந்தது இல்லை... எனக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது... ஆனால் வாழ்நாளில் நான் முதல் தடவை பயந்தேன் என்றால் அது அன்று உன்னைக் கடத்தினார்களே அன்று தான்... என்னவோ அதில் இருந்து உன்னை எப்பவும் என் கூடவே வச்சுக்கணும்னு தோணுது...அஃப் கோர்ஸ்... தட்ஸ் நாட் பாஸிபில் அன்டில் மேரேஜ்...பட் அட் லீஸ்ட் நீ என் கூட இருக்கும் பொழுதாவது என் அருகில் இரு..." என்றான்.

தன் மேல் அவனுக்கு உள்ள அளவு கடந்த காதலினாலும் அக்கரையினாலும் பெருமிதம் கொண்டவள் இருந்தும் அவன் ஸ்பரிசத்தால் சிலிர்த்து தன் கரத்தை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முயற்சிக்க,

"ஏன்டி, இப்பத்தானே சொன்னேன், திரும்பியும் ஏன் என்னை விட்டு விலகிப் போறதுலேயே இருக்க?" என்றான்.

'இவரை விட்டு தான் விலகிப் போவதா?' என்ற நினைப்பே இதயத்தில் சுளீரென்று வலி கிளப்ப, அவன் விரல்களை இறுக்கிப் பிடித்தவள் கண்கள் விழிநீர் கோர்க்க அவனைப் பார்க்க,

"ம்ப்ச், இப்ப என்ன சொல்லிவிட்டேன்...ஏன் இந்தக் கலக்கம்?" என்றவன், பேச்சை மாற்றுவது போல் தன் அருகில் இருந்த பையைக் கொடுத்தான்.

என்ன என்பது போல் அவள் பார்க்க,

"உனக்குத் தான்...வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போ.." என்றான்.

என்ன என்பது போல் பையைப் பிரித்துப் பார்க்க, அங்கு ஒரு அழகான அட்டைப் பெட்டியில் அதை விட அழகான பட்டுப் புடவை இருந்தது.

"ஐயோ, என்னங்க, நான் அவ்வளவு சொல்லியும் எதற்கு வாங்கினீர்கள்?" என்று தயங்க,

"கனி, எப்படி என்று தெரியாது.. ஆனால் நீ இதை ஆனுவல் டேய் அன்று கட்டிக்கிட்டு வர.." அவனின் பிடிவாதம் தெரிந்தவள் எவ்வாறு வீட்டிற்குத் தெரியாமல் இதைக் கட்டுவது என்று யோசிக்க, அவளின் சுபாவம் புரிந்தவன் மிகவும் பயந்திருக்கிறாள் என்று உணர்ந்து,

"சரி இதை இன்று என்னுடன் எடுத்துக் கொண்டு போகிறேன், நாளைக்கு ஆஷாவிடம் கொடுத்து விடு.... ஆனுவல் டே அன்று ஆஷாவின் வீட்டிற்குச் சென்று அங்கு இருந்து கட்டிக் கொண்டு வா..." என்றான்..

யோசனை நல்லதாக இருந்தாலும் இதெல்லாம் தேவையா என்று இருந்தது கனிகாவிற்கு... இருந்தும் சரி என்றாள்....


தொடரும்.
 

JLine

Moderator
Staff member



அத்தியாயம் 12

விழா அன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் விழித்தவள் ஏதோ ஒரு புடவையைக் கட்டிக் கொண்டு பேருந்தில் ஏற, அச்சத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

நாலைந்து மாதங்களில் எத்தனை பொய்கள்!

எத்தனை திருட்டுத்தனங்கள் காதலிக்க ஆரம்பித்து என்று பயந்தவள் ஆஷாவின் வீட்டை அடைய, அங்கு அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஆஷா, "சீக்கிரம் புடவையை மாத்துக் கனிகா, கிளம்பலாம்.." என்றாள்.

"சரி" என்றவள் அப்பொழுது தான் அந்தப் பட்டுப் புடவையை முதன் முறையாகப் பிரித்துப் பார்த்தாள்...

அடர்ந்த தக்காளிப் பழ நிறத்தில் இரு பக்கமும் தங்க சரிகை கரைப் போட்டு இருக்க, முந்தியில் தங்க சரிகையில் பெரிய மயில், தோகை விரித்து ஆடுவது போல் நெய்யப் பட்டிருக்க, பட்டு புடவையின் அழகு கண்களைப் பறித்தது.

"இது என்ன கல்யாணப் புடவைப் போல் இருக்கிறது..... இதை எப்படிச் சாதாரணக் கல்லூரி விழாவிற்குக் கட்டுவது?" என்று கனிகா மருங்க, அவள் புடவையை அட்டை பெட்டியிலிருந்து எடுத்ததில் இருந்து அதனின் அழகில் தன் மனதை பறிக் கொடுத்திருந்த ஆஷா பார்வையை இன்னும் அதன் மீது இருந்து விலக்க முடியாமல் தவித்து இருக்க, "ஆஷா, இதை எப்படிக் கட்டுவது டீ?" என்று அவளைச் சுய நினைவிற்கு அழைத்து வந்தாள் கனிகா..

"கனிகா...என்னடி இது....ஸாரி இவ்வளவு அழகா இருக்குடி....சே நீ ரொம்பக் கொடுத்து வச்சவடி.." என்று அங்கலாய்க்க,

"ஏன்டி, இப்ப அதுவா முக்கியம்....நான் இதைக் கட்டிக் கொண்டு காலேஜிற்கு வந்தால் என்னா ஆகும்? நான் மட்டும் தனியா தெரியணுமா என்ன?"

"கனிகா. இத மட்டும் நீ இப்பொழுது கட்டவில்லை என்றால் ஹர்ஷா உன்னைத் தொலைத்து விடுவார்... அதனால் சீக்கிரம் கட்டிக் கொண்டு வா.." என்றவள் கீழ் இறங்கி செல்ல, வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கனிகா புடவையைக் கட்ட ஆரம்பித்தாள்.

புடவைக்கு ஏற்றவாறு டிசைனர் ப்ளவுசை வாங்கியிருந்தவனை மெச்சியபடியே ப்ளவுசை அணிய, அவளுக்கென்றே தைத்தாற்போன்று இருந்தது ப்ளவுசின் அளவு.

'எப்படி இதெல்லாம் தெரியும்?' என்று நினைத்தவளுக்குத் தான் கடத்தப்பட்டு அன்று தாவணி இல்லாமல் வெறும் ப்ளவுஸ் மற்றும் பாவாடையுடன் இருந்தது ஞாபகம் வர, நாணத்தில் முகம் சிவந்தவள் புடவையைக் கட்ட ஆரம்பித்தாள்.

உடல் முழுவதும் மென்மையாகப் புத்தம் புதுப் பட்டுப் புடவை சுற்றியிருக்க, அதன் விலை எவ்வளவு இருக்கும் என்று யோசித்தவள் விலைக் குறிப்பை தேட அது அங்கிருந்தால் தானே? அதன் விலையைப் பார்த்தால் நிச்சயம் அதைத் தன்னிடம் இருந்து வாங்க மாட்டாள் என்று யோசித்தவன் விலைக் குறிப்பை கிழித்திருந்தான்..

எப்படியும் மிகவும் விலை உயர்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு இன்னமும் தயக்கமாக இருந்தது இத்தனை விலை உயர்ந்த புடவையைக் கட்டுவதா என்று...

ஹர்ஷாவிற்காகக் கட்டியவள் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள முதன் முறையாகத் தான் அழகாக இருப்பதாக நினைத்தவள் அதே பூரிப்புடன் கீழே இறங்கி வந்தாள்.

கனிகாவை எப்பொழுதும் சாதாரணப் புடவை, பாவாடை தாவணியில் பார்த்திருந்த ஆஷா வாயைப் பிளந்து கொண்டு பார்த்தவள்,

"கனிகா, சான்ஸே இல்லை டி, இப்பொழுது புரிகிறது, ஏன் இத்தனை பெண்களைப் பார்த்திருந்த ஹர்ஷாவிற்கு உன்னை மட்டும் பிடித்திருக்கிறது என்று.... தேவதை மாதிரி இருக்கேடி.." என்றாள் புன்முறுவலுடன்...

"ஆமாம், உங்கள் ஊரில் தேவதை இப்படித் தான் இருக்குமா?"

"ஏன்டி! உனக்கு என்ன குறைச்சல்? செம்ம சூப்பராக இருக்க...சாமி சிலை மாதிரி... இப்ப மட்டும் ஹர்ஷா பார்த்தார் அவ்வளவு தான்.." என்று ஆஷா கூற, வெட்கப்பட்டு முகம் சிவந்தவள், விட்டால் பேசிக்கிட்டே இருப்ப, வா போகலாம் என்று கிளம்பியவளுக்கு என்னவோ மனமெல்லாம் ஆஷா சொன்னதிலேயே இருந்தது.

பேருந்தில் இருந்து இறங்கியவளின் கண்கள் ஹர்ஷாவைத் தேட, தன்னவளின் வரவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஹர்ஷாவிற்கு விழாவின் ஏற்பாட்டைக் கவனிக்க அவன் அங்கும் இங்கும் அலைய வேண்டி இருந்ததால் எப்பொழுதும் அவளைப் பார்க்கும் இடத்தில் நிற்க அன்று நேரம் இல்லை.

அவனைக் காணாமல் தவித்தவள் வகுப்பிற்குச் செல்ல, எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்திருந்த பட்டு புடவையில் வந்திருந்த மாணவிகள் அனைவரும் கனிகாவை கண்டதும் விழி அகல ஆச்சரியத்தில் "வாவ்.." என்று ஒரே குரலில் கத்தினார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் கனிகா எவ்வாறு தினமும் கல்லூரிக்கு வருவாள் என்று தெரியும்...

ஆகையால் இன்று தேவதை மாதிரி பட்டு புடவையில் வந்திருந்தவளைப் பார்த்தவர்களுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கனிகாவை பார்த்திருந்த மாணவர்களின் கண்களுக்கு அவள் அன்று விருந்தாக, அவளையே பார்த்திருந்தவர்கள் தங்களுக்குள் திரும்பி பேசிக் கொள்ள, அதனால் கூச்சமடைந்தவள் வேகமாகத் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்..

அதுவரை விழி மூடாமல் கனிகாவை பார்த்திருந்த இளா,

"கனிகா செம்மையாக இருக்குடி... ஹர்ஷாவின் செலக்க்ஷன் சூப்பர்" எனவும், திடுக்கிட்டு அவள் அருகில் குனிந்தவள்,

"இளா...மெதுவாடி. யார் காதிலாயாவது விழுந்துவிடப் போகுது.." என்றாள் படபடப்புடன்.

"கனிகா, இதுக்கே இவ்வளவு சூப்பரா ஸாரி எடுத்துக் கொடுக்கிறவர் வெட்டிங் அப்போ எவ்வளவு சூப்பரா எடுத்துக் கொடுப்பார்" என்க,

திருமணம் என்று நினைத்தவுடனேயே ஹர்ஷாவை உடனே பார்க்க வேண்டும் போல் இருக்க, இருவர் மனமும் ஒரே திசையில் பயணிப்பதாலேயோ என்னவோ அதே நேரம் ஹர்ஷாவும் அவளுக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தான்,

"ஐ மிஸ் யூ ஆல்ரெடி [I miss you already] ...எங்கடி இருக்க?" என்று.

வகுப்பறையில் இருப்பதாகத் தெரிவித்தவள், "நீங்க எங்கிருக்கீங்க?" என்று பதில் கேள்வி அனுப்ப, தான் கொஞ்ச நேரம் ஃப்ரீ என்று தெரிவித்தவன் தன்னைச் சந்திக்க வரச் சொல்ல, சரி என்றவள் ஆஷாவிடமும் இளாவிடமும்,

"அவர் வர சொல்கிறார் டி, க்ளாஸ் ஆரம்பிப்பதற்குள் வந்துவிடுவேன்..." என்றவள் வேகமாக வெளியேற, அவளையே ஏக்கத்துடன் பார்த்திருந்தார்கள் மாணவர்கள்.

ஹர்ஷாவைச் சந்திக்க வேகமாக நடந்தவள் அவன் இல்லாததைப் பார்த்து இங்குத் தானே வரச் சொல்லியிருந்தார், எங்கே போனார் என்று தேட, தொலைவிலேயே அவளைப் பார்த்துவிட்டவன் அவளை ஒவ்வொரு அங்குலமாக ரசித்தபடியே நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவனைச் சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்தவள் அவனைக் காணாமல் தடுமாற, பின்னால் அவள் வெகு அருகில் வந்து நின்றவன் அவளின் காதிற்கருகில் குனிந்து கிறக்கமான குரலில், "மயக்கிட்டடி என்னை..." என்றான்.

அத்தனை நெருக்கத்தில் காதோரமாக அவனின் கிறக்கமான குரலைக் கேட்டவளுக்குத் திடுக்கென்று தூக்கிப் போட்டது.

சட்டென்று பின்னால் நகர்ந்தவள் அவனைத் திரும்பி பார்க்க, அவனின் ரசனையான பார்வை, தன்னை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை ஊடுருவதைப் பார்த்தவளின் சித்தம் தடுமாற, தன்னை அறியாமல் தன் மனதில் எழுந்த தாபத்தை வலுக்கட்டாயமாக அடக்கியவளின் முகம் சூரியனைப் போன்று செவ்வானமாய்ச் சிவக்க, அவளின் முக மாறுதலை கண்டவன் அவள் உள்ளத்தின் மாறுதலையும் உணர்ந்து ஆனால் ஒன்றும் புரியாதவன் போல் இன்னும் அருகில் வந்து "என்னாச்சு?" என்றான்...

"ம்ம்ம்ம்.." என்று மட்டும் சொன்னவள் அவனின் பார்வையின் தாக்கத்தைத் தாங்க இயலாதவளாய் தலை கவிழ,

"ரொம்ப அழகா இருக்கக் கனி... எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா?? இப்பவே உன்னை யாரும் இல்லாத இடத்திற்குத் தூக்கிட்டு போய் என்னுடையவளா ஆக்கிக்கொள்ள மாட்டோமான்னு இருக்கு.." என்று சொன்னவனின் பார்வை போன இடத்தைப் பார்த்தவளுக்கு அப்பொழுது தான் அவன் சொன்னதன் அர்த்தமும் புரிய,

இனி இங்கு இருந்தோம், அவ்வளவு தான் என்று உணர்ந்து நகரப் போக, சட்டென்று அவள் கரம் பிடித்தவன்,

"இன்னைக்கு எனக்கு நேரம் கிடைச்சதே ரொம்பப் பெரிசு, அதற்குள் எங்க போற... ப்ளீஸ் கொஞ்ச நேரமாவது என் கூட இரு.." என்றான்.

தயங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க விழா என்பதால் வகுப்புகள் அவ்வளவாக நடை பெறாததால் மாணவர்களும், மாணவிகளும் நடந்து கொண்டும், கூட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தனர்.

"சரி, ஆனா கையை மட்டும் விடுங்க, யாராவது பார்த்தால் தப்பாகத் தெரியும்.. ப்ளீஸ்.." என்க, அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவள் கரத்தை விட்டவன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,

"சரி, நீ கிளாஸிற்குப் போ, உன்னை ஃபங்ஷனுக்கு அப்புறம் பார்க்கிறேன். எதுக்கும் அப்பப்போ மெசேஜ் செக் பண்ணிக்கிட்டே இரு..." என்றவன் விலகி போனான்.


********************************

அன்று மாலை விழா களைகட்டியது...

விளையாட்டு மைதானத்தில் போடப்பட்டிருந்த பந்தலின் அடியில் அமர்ந்த மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரமிட்டுக் கொண்டு இருக்க, விழா மதியம் 3:00 மணி அளவில் கடவுள் வாழ்த்துடன் தொடர்ந்து வரவேற்புடன் துவங்கியது.

சிறப்பு விருந்தினராகப் பிரபல இன்டஸ்ட்ரியலிஸ்ட் கார்த்திகேயன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

செயலாளரும், கல்லூரி பிரின்சிபலும் தொழில் அதிபர் கார்திகேயனையும், மாணவர்களையும், பேராசிரியர்களையும் வரவேற்று, கல்வியாண்டின் செயல்பாடுகளைத் துவக்கி வைத்தார்... பேராசிரியர்கள் வாழ்த்துக் கூற பல வித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கல்வியில் சாதித்தவர்களுக்கும் பரிசுகளும் பட்டயங்களும் வழங்கப்பட்டது.

கலாசார நடனங்களும், ஆங்கிலத்திலும் தமிழிலும் நாடகங்களும் எனக் கலை நிகழ்ச்சிகள் ஆரவாரமாக ஆரம்பித்தது..

இறுதியாக விழா நிறைவுபெறும் முன் கல்லூரியின் பிரசிடெண்ட் என்ற முறையில் மேடை ஏறிய ஹர்ஷாவைப் பார்த்து எப்பொழுதும் போல் பெண்களின் இடையில் கூச்சல்கள் கிளம்ப, வழக்கம் போல் ஸ்டைலாகத் தலை முடியை கோதிவிட்டு சிரித்தவன் தன் பேச்சை துவங்கினான்.

ஹர்ஷாவின் கல்லூரிப் படிப்பு இந்த ஆண்டோடு நிறைவு பெறுகிறது, மாணவிகள் மத்தியில் அவனை விட நல்ல கம்பீரமான பேரழகன் தங்களுக்குப் பிரசிடெண்டாகக் கிடைக்க முடியுமா என்ற ஒரு அதிமுக்கியமான சந்தேகம் வந்தது என்றால், பேராசிரியர்களுக்கும் அவனை விட ஒரு தகுதியான மாணவனைப் பிரசிடெண்டாகத் தேர்ந்தெடுக்க முடியுமா என்று இருந்தது.

நிகழ்ச்சியில் அவன் பேச ஆரம்பிக்கவும் மாணவிகளிடம் இருந்து விசில் சத்தமும் "ஓஓஓஓஒகோ...." என்ற சத்தமும் வர, சிரித்தவன் மேடையில் அமர்ந்திருந்த கல்லூரி நிர்வாகிகளையும் சிறப்பு விருந்தினர்களையும் திரும்பி பார்க்க, பிரின்சிபல்,

"ஹர்ஷா நிச்சயம் அவங்க உன்னைப் பேச விடமாட்டாங்க, இப்பவே அவங்களுக்கு நீ அடுத்த வருஷம் காலேஜில் இருக்க மாட்ட என்கிற கவலை வந்துவிட்டது..." என்று சிரித்தவர் சிறப்பு விருந்தினர்களிடம் திரும்பி,

"ஹர்ஷா இஸ் தி கிராண்ட் சன் ஆஃ பிஸ்னஸ் சாம்ராட் சாம்பசிவம், அன்ட் சன் ஆஃப் தி க்ரேட் இண்டிஸ்ரியலிஸ்ட் சிதம்பரம் [Harsha is the grand son of business samrat Sambasivam and son of the great industrialist Chithambaram] " என்றவர் அவர்களிடம் குனிந்து கண் சிமிட்டி,

"அன்ட் தி ஹாட் கய் இன் தி காலேஜ் ஸின்ஸ் ஹி ஸ்டார்டட் ஹியர் [And the hot guy in the college since he started here]" என்று கூறி சிரிக்க, அவர்களும் அவருடன் இணைந்து சிரித்தனர்.

அவர் கூறியது ஹர்ஷாவின் காதுகளிலும் விழ முறுவலித்தவன் தன் கம்பீரமான குரலில்,

"மை டியர் ஃப்ரெண்ட்ஸ்..." என்று ஆரம்பிக்க, மறுபடியும் மாணவ, மாணவிகளிடமிருந்து ஆனந்த கூச்சல் கிளம்பியது.

தன் கரத்தை உயர்த்தி அவர்களை அமைதிப் படுத்தியவன் ஒரு வழியாகத் தன் உரையை முடிக்கப் போகும் முன், பெண்கள் மத்தியில் இருந்து,

"ஹர்ஷா வீ வாண்ட் டு ஆஸ்க் யூ சம்திங் [Harsha, we want to ask you something]" என்று குரல் வந்தது.

அது வரை விழா ஆரம்பித்தது முதல் கூட்டத்திற்கு இடையில் அமர்ந்திருந்தாலும், கனிகாவின் கண்கள் என்னவோ ஹர்ஷாவிடமே பதிந்து இருந்தது... அவன் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்தது...

அவன் மேடையில் பேச ஏறிய பொழுதும்... பெண்கள் அவனைக் கண்டு கூச்சலிட்ட பொழுதும், அதற்கு அவன் அழகாக இதழ் விரித்து மென்னகை புரிந்த பொழுதும், அவன் கரம் உயர்த்திப் பெண்களைச் சாந்தப்படுத்திய பொழுதும், என்று ஒவ்வொரு விநாடியும் தன்னவனைக் காதலுடனும் கர்வத்துடனும் பார்த்திருந்தவள் சக மாணவி ஒருத்தி அவனிடம் கேள்விக் கேட்க, என்னவாக இருக்கும் என்று சத்தம் வந்த திசையைத் திரும்பி பார்க்க, பால் வண்ண நிறத்தில் அழாகாக இருந்த அந்த மாணவி.

"ஹர்ஷா, ஒவ்வொரு வருஷமும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறோம்... நீங்கள் தான் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்..." என்று ஆங்கிலத்தில் கூற ஆங்கிலம் இன்னும் சரியாக வராததால் அவள் என்ன கேட்கிறாள் என்று கனிகாவிற்குப் புரியவில்லை.

ஆஷாவிடம் குனிந்து அவள் என்ன கேட்கிறாள் என்று விசாரிக்க, ஆஷா அவளுக்கு மொழி பெயர்த்தவள்,

"கொஞ்சம் இரு, என்ன தான் கேட்கிறாள் என்று பார்ப்போம்" என்றாள்.

ஏனெனில் அங்கு இருந்தவர்களில் முதல் வருட மாணவர்களுக்கு மட்டும் தான் அந்தக் கேள்வி தெரியாது. மற்ற அனைவருக்கும் தெரியும்...

"ஹேவ் யூ ஃபௌண்ட் யுவர் ஸோல் மேட்? [Have you found your soul mate?] இல்லை இன்னும் உங்கள் மனதை கவரும்படி யாரும் இல்லையா?" என்று கேட்க,

வெட்கப் புன்னகை சிந்தியவன், அவ்வளவு பெரிய கூட்டத்திலும் ஏற்கனவே கனிகா அமர்ந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்திருந்தவன், தூரத்தில் மேடையில் இருந்தே கனிகா இருந்த திசையை நோக்கி,

"யெஸ் ஐ ஃபௌண்ட் ஹர், என்னவளை கண்டு பிடித்துவிட்டேன்..." என்று கனிகாவிற்கும் புரியும் வகையில் தமிழிலும் கூறினான்.

மாணவிகளின் மத்தியில் இருந்து "ஓஓஓஒஹோஹோஹோஹோ" என்று மீண்டும் சத்தம் வர, மாணவர்கள் மத்தியில் ஒரு வித நிம்மதி பெருமூச்சு வந்தது..... அவர்களும் தங்களின் மகிழ்ச்சியைக் கரகோஷம் மூலம் வெளிப்படுத்தினர்....

கல்லூரியில் படிக்கும் முதல் வருட மாணவிகள் முதல், இறுதி ஆண்டு மாணவிகள் வரை ஹர்ஷாவை நினைத்துக் கனவு காண்பதால் அவர்களுக்குக் காதலிகள் கிடைக்காமல் போக, ஹர்ஷாவை வில்லன் ரேஞ்சிற்குப் பார்த்திருந்தார்கள் இந்த விஷயத்தில்...

அத்தனை தூரத்தில் இருந்தும் அவன் தன்னையே பார்த்திருப்பதைப் புரிந்து கொண்டவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.. எப்படி இவ்வளவு கூட்டத்தில் இவர் என்னைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டார் என்று...

அவளுக்கு எங்குத் தெரியப் போகிறது?

அன்று அவள் ரியாவால் கடத்தப்பட்டதில் இருந்து அவன் கனிகாவை நேரடியாகவோ அல்லது யார் மூலமாகவோ கண்காணித்துக் கொண்டே இருக்கிறான் என்று... அவள் கல்லூரியின் வளாகத்திற்குள் மட்டும் அல்ல, வெளியிலும், வீட்டிலிருந்து கல்லூரிக்கு வரும் பொழுதும், திரும்பி போகும் பொழுதும்...

அது மட்டும் அல்ல விடுமுறை நாட்களில் அவள் தன் அத்தை குடும்பத்துடன் கோவிலுக்கோ அல்லது வேறு வெளியிடங்களுக்குச் சென்றாலோ கூட அவனுக்கு விஷயம் வந்து விடும்....

பணம் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பது போல் அவன் அங்கெங்கு தன் ஆட்களை நிறுத்தியிருந்தான் அவளுக்கே தெரியாமல் அவளைப் பாதுகாக்க...அப்படி இருக்கக் கல்லூரி வளாகத்திற்குள் எல்லோரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது அவளைக் கண்டு பிடிக்காமலா இருப்பான்.....

அவன் தான் அமர்ந்திருந்த திசையைப் பார்த்து "தன்னவளை கண்டு பிடித்துவிட்டேன்..." என்று கூறிய அந்த விநாடி வாழ்க்கையில் மறக்க முடியாத விநாடியானது போல் தோன்றியது..

இத்தனை பேருக்கு முன்னால் சொல்கிறார் என்றால் என் மீது எத்தனை காதல் இருக்கும் என்று கர்வம் கொண்டாலும் எங்கே அவன் தன் பெயரையும் சொல்லிவிடப் போகிறோனோ என்று பயந்தவள் அவன் மேற்கொண்டு என்ன சொல்ல போகிறான் என்று அவனையே பார்த்திருக்க,

அவள் எதிர்பார்த்தது போல் மாணவிகளில் ஒருத்தி,

"ஹர்ஷா, யார் அந்த லக்கி கேர்ள்? இந்தக் காலேஜா இல்லை வேற காலேஜா?" என்றாள்.

ஒரு விநாடி அமைதியாக இருந்தவன்,

"நம்ம காலேஜ் தான், பட் பெயர் எல்லாம் வேண்டாமே. அது அவளுக்குப் பிடிக்காது..." என்றவன் சட்டென்று மறுபடியும் இவளின் திசையை நோக்க, மாணவிகள் மத்தியில் ஒரே சலசலப்பு..

யாராக இருக்கும் அந்த அதிர்ஷடசாலி என்று... ஆனால் அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாத ஹர்ஷா,

"இதற்கு மேல் இதைப் பற்றிக் கேள்விகள் வேண்டாமே..." என்றவன் தன் பேச்சை முடித்துவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கினான்.

விழா இனிதே முடிய, மாணவ மாணவிகளின் கூட்டம் கலைய ஆரம்பிக்க, கனிகாவின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தான் தான் வழக்கமாகக் காரை நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வருமாறு.

தகவலை படித்தவள் இவ்வளவு கூட்டத்தில் தான் அவருடன் போனால் யார் கண்ணிலாவது நிச்சயம் பட வாய்ப்பிருக்கிறது... அது மட்டும் அல்லாமல் வீட்டிற்கு வேறு செல்ல வேண்டும்... தாமதமாகப் போனால் பஸ் கிடைப்பது கடினம் என்று நினைத்தவள், "நான் சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும்" என்று பதில் தகவல் அனுப்ப, அவன் விருப்பத்திற்கு மாறாக எதை அவன் அனுமதித்து இருக்கிறான் இதை அனுமதிப்பதற்கு...

அவனிடன் இருந்து பதில் எதுவும் வரவில்லை...

நிச்சயம் தன் மேல் கோபமாகத் தான் இருப்பார் என்று எண்ணி கலங்க, சிறிது நேரத்தில் கூட்டத்தின் இடையில் விறுவிறுவென்று வந்தவன் அவள் பின்புறம் வந்து, "கூப்பிட்டால் வரமாட்டியா?" என்றான்.

திடீரென்று அவன் குரல் தன் அருகில் கேட்க திடுக்கிட்ட கனிகா திரும்பி பார்க்க, அவள் நிதானிக்கும் முன் கரத்தை இறுக்கப் பற்றியவன் அவளின் அனுமதி பெறாமலேயே அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்..

இது அங்குக் கூடியிருந்த மாணவர்களின் கண்களில் படத் தவறவில்லை.

யாரையும் பார்க்க இயலாது தயக்கத்துடன் அவனுடன் சென்றவளை காரில் ஏற்றி விட்டு மறு பக்கம் வந்து அமர்ந்தவன் காரை சீறிக் கிளப்பினான்.

அவன் எங்குப் போகிறான் என்று கூடக் கேட்க துணிவு இல்லாமல் அமைதியாக வந்தவளுக்கு அவன் ஏதோ ஒரு புது வழியில் போவது போலவும், தன் வீட்டிற்கு நேரெதிராகச் செல்வது போலவும் தோன்ற,

"நான் சீக்கிரம் வீட்டிற்குப் போகணும்..." என்றாள் அச்சத்துடன் அவனைப் பார்த்தவாறு..

"அதைத் தான் மெஸேஜில் சொல்லிவிட்டாயே... திரும்பி என்ன சின்னப் பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிட்டு.." என்றான்.

அவன் பேசிய விதத்தில் அத்தனை கோபம் தெரிந்தது.

இதற்கு மேல் பேசினால் இன்னும் கோபப்படுவார் என்று நினைத்தவள் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக வர, அவர்களின் கார் நின்றது ஒரு ட்ரைவ் இன் ரெஸ்டாரண்டில்.

ஒரு பெரு மூச்சுவிட்டவன் அவள் புறம் திரும்ப, அங்கு அவன் எடுத்துத் தந்திருந்த பட்டு புடவையில் தேவதையென அமர்ந்திருந்தாள் அவனவள்.....

வெளியில் இருந்து வந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் தலை முடி லேசாகக் கலைந்து அழகுற தெரிய... கழுத்தின் இறுபுறம் வழியாக மார்பு வரை நீண்ட மல்லிகை சரங்கள் தொங்க, கண்களை அகல விரித்து அவனை மருண்ட பார்வை பார்த்திருந்தாள்.

மாலை விழாவிற்கு முன் ஆஷாவின் தொல்லையால் இதழில் பூசிய உதட்டுச் சாயத்தில் செவ்விதழ்கள் பளபளக்க, தன் அருகே அமர்ந்து இருந்த தன்னவளைப் பார்த்தவனின் சித்தம் தடுமாற ஆரம்பித்தது.

தன் வயதிற்கே உரிய தாபமும் மோகமும் போட்டி போட்டிக் கொண்டு உடலில் காட்டாற்று வெள்ளமாகப் பாய, மனதை அடக்கத் தெரியாமல் தவித்தவன் "கனி...." என்று கிறக்கமான குரலில் அழைத்தவாறு அவளை நெருங்கி அமர்ந்தான்.

அவள் இளம் தேகம் தடதடக்க, உடல் முழுவதும் ஒரு மெல்லிய நடுக்கம் பாய, பின்னால் சாய்ந்தவளின் மனம் முழுவதும் நாணமும், நாணத்தால் வந்த அச்சமும், ஆனால் அவனது அருகாமையால் வந்த வேட்கையும், என்று உணர்வுகள் பின்னிப் பிணைந்திருக்க அவனின் மோகம் வழிந்த பார்வையைத் தாங்க இயலாதவளாய் தலை குனிந்தாள்...

அவள் நெற்றியில் விழுந்திருந்த முடிகளை மெல்ல ஒதுக்கியவன், தன் விரலை சிறிதே கீழிறக்கி அவள் மெல்லிதழ்களைத் தடவ, சடுதியில் தன் உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்தவள் அவனின் மார்பில் சாய்ந்தாள்.

அவனை விட்டு விலகாமல் அவள் தன் மீது சாய்ந்ததால் தன்னவள் என்ற உரிமை உணர்வு மேலிட அவளைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அவன் மனமும் உடலும் பரபரத்தது.

சூடியிருந்த மல்லிகையின் சுகந்தமான வாசத்தை ஆழ்ந்து ஒரு முறை சுவாசித்தவன் அவளின் முகத்தைத் தன் மார்பில் இருந்து நிமிர்த்தி முன் நெற்றியில் மென்மையாகத் தன் முதல் முத்தத்தைப் பதித்தான்.

அவனின் தொடுகையில் தன்னை மறந்து இருந்தவளை அவன் முதல் முத்தம் எங்கோ கொண்டு செல்ல, கண் மூடி உதடு நடுங்க அமர்ந்திருந்தவளை கண்களில் காதல் வழிய பார்த்திருந்தவன் அவள் இதழ் நோக்கி குனிய... சட்டென்று விழித்துக் கொண்டது அவளின் பெண்மை.

வெடுக்கென்று அவனை விட்டு விலகியவளின் இதயம் தாறுமாறாய் துடிக்க,

"வேண்டாங்க... ப்ளீஸ்... கல்யாணத்திற்கு முன்னாடி இதெல்லாம் தப்பு.." என்று தயங்க, தடுமாறி தத்தளித்து அவள் இருந்த கோலம் அவன் உணர்ச்சிகளை மேலும் தூண்டினாலும், அவளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட அந்த இளம் காதலன், கன்னத்தைத் தட்டி,

"சரி, பயப்படாத நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்..." என்றவன் மனதை படாதபாடு பட்டு அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

பெண்ணவளின் தேகம் பட்டும் படாமல் தன் மேல் உரசிக் கொண்டு இருந்ததில் அவனது மனதில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது... அவன் சித்தத்தில் வேட்கை இருந்தது...

ஆனாலும் தன்னவளின் அச்சமும் நாணமும் அவளின் ஒழுக்கத்தைப் பறைசாற்ற அதற்கு மதிப்புக் கொடுத்து அவளை விட்டு விலகியவன், "கனி...நீ எனக்காகவே பிறந்தவள்... என்னுடையவள்.. அதனால் நிச்சயம் நான் உன் உணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் மதிப்புக் கொடுப்பேன்...ஐ வில் வெய்ட்..." என்றான்

ஆனால் அவன் தன் வாக்கை காப்பாற்ற போவதில்லை என்றும், அதனால விளையும் விபரீதங்களுக்குத் தான் கொடுக்கப் போகும் விலையும் மிக அதிகம் என்றும் அவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை....

தன்னுணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவன் தள்ளி அமர்ந்ததில் மனம் சிலிர்த்து போனவள் மென்மையாகச் சிரிக்க, அதற்கு மேல் அங்கு இருந்தால் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்ந்தவன் காரைக் கிளப்பினான்.

வழி நெடுக இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக வர, காரில் இருந்த மியூஸிக் ஸிஸ்டத்தை ஆன் செய்தவன் அதில் ஒலித்த பாடலை கேட்டு ஆடிப் போனான்..


கூத காத்து கூத காத்து கொல்லுதடி
கூற சேலத்தாடி
இல்ல கூந்தல் மட்டும் தாடி...

தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையி
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே…
விளக்க தூங்க சொல்லு

நீ வெட்கப்பட்டு ஓரத்தில் தவிக்க
உன் வெட்கத்த என் நாவினில் துடைக்க
நீ கட்டுப்பட்டுத் தொட்டுக்கிட்டுக் கட்டிக்கொள்ளக் கூடாதா
என் பூவுக்குள் தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுக்குள்ள தாகங்கள் இனிக்க
என் அச்சம் விட்டும் போகும் வரை விட்டு வைக்கக்கூடாதா

அடியே நானும் மனுஷன் தானே ஆடவாடி செந்தேனே
ஒரு போர்வையோடு தேகம் ரெண்டும் வேர்வை சிந்தும் தானே

நான் குத்த வைச்சு மானத்தை மறைக்க
உன் கொள்ளி கண்ணு சேலையை உரிக்க
உன் எக்கச்சக்கம் வாவென்று அழைக்க
என் பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ பொத்தி வச்ச அத்தனையும் சுத்தமாகப் பாத்தாச்சு...

கூத காத்து கூத காத்து கொல்லுதடி
கூற சேலத்தாடி
இல்ல கூந்தல் மட்டும் தாடி...

இருவருக்குள்ளும் மனதை அடியோடு தடம்புரளச் செய்யும் தாபமும் வேட்கையும் இருந்தும், நாணத்தாலும் அச்சத்தாலும் அவள் விலகியிருக்க, அவளின் உணர்வுகளை மதித்து அவன் விலகியிருக்க, மௌனமான பயணத்தில் இதமாக ஒலித்த கூடலைப் பற்றிய பாடல் மீண்டும் வேட்கையைக் கூட்டியது...

தன் காரின் வேகத்தை அதிகரித்தவன் வழக்கத்தை விட அதி வேகமாகச் செலுத்தி அவளின் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.

அவன் கண்களைப் பார்க்கும் சக்தி இல்லாமல் தலை கவிழ்ந்தவாறே காரை விட்டு இறங்கியவள் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க,

"கனி, வெயிட்..." என்றவன் தானும் கூட நடந்து வர, சிறிது நேரத்திலேயே அவள் செல்ல வேண்டிய பேருந்தும் வந்தது.

தலையை மட்டும் அசைத்துப் பேருந்தில் ஏறியவளின் மன முழுக்கத் தன்னவனே நிறைந்து இருந்தான்....

பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவளின் கண்கள் ஹர்ஷாவைக் காணாமல் தேட, அவள் தன்னை விட்டு அகன்ற அந்த நொடியே அவளைப் பிரிய மனமில்லாமல் இதயம் கனக்க அவளைத் தொடர்ந்து தானும் பேருந்தில் ஏறினான்.

அவள் அமர்ந்திருந்த இருக்கையைத் தேடியவன், அவள் தன்னை வெளியில் தேடுவதைப் பார்த்து புன்னகைத்தவன், அவள் அருகில் அமர்ந்து,
"கொஞ்ச நேரம் கூட என்னை விட்டுட்டு இருக்க முடியலை போலிருக்கு..." என்று கூற, திரும்பியவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள் தன்னை அவன் கண்டு கொண்டானே என்று.

பேருந்து கிளம்பப் பதறினாள்...

"ஐயோ! பஸ் கிளம்புது... நீங்க இறங்கலை..."

"இல்லை இன்னைக்கு உன் கூட வருகிறேன்.."

"எதுக்குங்க? உங்களுக்குப் பஸ்ஸில் போய்ப் பழக்கம் இருக்காது.... கொஞ்ச நேரத்தில் ரொம்பக் கூட்டம் வந்துவிடும்.."

"ஹே, இட்ஸ் ஓகே... உன் கூட வரணும்... அதனால் தான் ஏறினேன்... உன் வீடு வரைக்கும் வரப் போகிறேன்..."

நிச்சயம் இன்றைக்குத் தனக்கு இருக்கிறது வேட்டு என்று நினைத்தவள் அவனுக்கும் சேர்த்துப் பயணச் சீட்டு எடுக்க முயற்சிக்க, தன் வாலட்டில் இருந்து பணத்தை எடுத்தவன் அவளுக்கும் சேர்த்து சீட்டு வாங்கினான்.

அவனின் தன் மேலான உரிமையில் மனம் குளிர, அவன் தன் அருகில் அமர்ந்து பேருந்தில் செய்த பயணம் என்று மறக்க முடியாத பயணமாக இருக்கும் என்பதில் அவளுக்கு எள்ளளவும் ஐயமில்லை.

அவள் எதிர்பார்த்தது போல் சிறிது தூரத்திலேயே கூட்டம் அதிகமாக, அவர்கள் இறங்கும் நிறுத்தம் வருவதற்கு முன்னரே எழுந்தவள் கூட்டத்தில் புக... அவளின் கரம் இறுக பற்றியவன்,

"கனி, இதில் எப்படிப் போறது?" என்றான்.

புன்னகைத்தவள்,

"வேறு வழியில்லை, இப்படித் தான் இருக்கும்... அதான் சொன்னேன் உங்களுக்குப் பஸ் ஒத்து வராது என்று..." என்றாள்.

அவன் வாழ் நாளில் ஒரு முறை கூடப் பேருந்தில் பயணம் செய்தது கிடையாது...ஆனால் அவனுக்கோ அத்தகைய கூட்டத்தில் தான் எப்படி நுழைந்து போவது என்பது பற்றிய கவலை இல்லை....தன்னவளைத் தானே தொட தயங்கும் பொழுது இதென்ன யாரேன்றே தெரியாது இத்தனை ஆண்கள் மத்தியில் அவள் செல்வதா என்று இருந்தது..

"சரி வா..." என்றவன் அவளைக் கவசம் போல் பாதுகாத்து முடிந்தவரை யாரும் இடித்து விடாமல் கூட்டிச் செல்ல, உருகியவள் இவரை நான் அடைவதற்கு என்ன புண்ணியம் செய்திருக்கிறோமோ என்று கண் கலங்கினாள்.

ஒரு வழியாக அவள் இறங்கும் நிறுத்தம் வர,

"இதுக்கு மேல் நீங்க வர வேண்டாங்க... யாராவது பார்த்து விடப் போகிறார்கள்.." என்றாள், இதற்கும் ஏதாவது சொல்ல போகிறானோ என்று அச்சத்துடனே.

அவள் எதிர்பார்த்தது போலவே கோபப்பட்டவன்,

"நீ ஏன் இவ்வளவு பயப்படுறியோ தெரியலை... பேசாமல் நான் என்னோட பேரண்ட்ஸ கூட்டி வந்து உன்ன நிச்சயம் பண்ணப் போகிறேன்... மேரேஜ் வேணா லேட்டா பண்ணிக்கலாம்..." என்க,

ஐயோ இதென்ன வம்பா போச்சு என்று நினைத்தவள்,

"சரி நான் இப்போ போகிறேன்... நாளைக்குப் பார்க்கலாம்.." என்றவள் அவனிடம் திரும்பி, "உங்களுக்குப் பஸ் பிடிச்சுப் போகத் தெரியுமா?" என்க, சிரித்தவன்,

"இல்லை, டாக்ஸி பிடித்துப் போய்க் கொள்கிறேன்... நீ பத்திரமா மொதல்ல வீட்டிற்குப் போ.." என்றான்.

சரி என்பது போல் தலை அசைத்தவள் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க, ஆனால் ஒன்று மட்டும் அவள் மறந்து போனாள்...

தான் இன்னும் அவன் கொடுத்த புடவையை மாற்றவில்லை என்பதை...

வீட்டிற்குள் பூனை போல் நுழைந்தவள், "கனிகா" என்ற குரலில் மேலே மாடியைப் பார்த்தாள்..

தொடரும்..
 

Wasee

New member
Yennada saree mathina mathiri scene yethuvum varala yae nu ninaichean..

Kadaisila partha kani avan mela iruntha mayakathula mandai la ulla kondai ya maranthutta...
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top