JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episodes 18, 19 & 20

JB

Administrator
Staff member
அத்தியாயம் 18


அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வர குளியல் அறைக்குள் சென்றவள் நெஞ்சைப் பிளந்து வெடித்து வெளியேறிய கதறலுடன்,

"நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சிருந்தாலும் பரவாயில்லைங்க.... ஆனால் உங்களுக்கு நான் கொடுத்த வாக்கை மீற முடியாது.... உங்களைத் தவிர என் வாழ்க்கையில் எந்த ஆம்பளைக்கும் இடம் இல்லை... அப்படியே நடக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் நான் தீக்குளிச்சிருவேன்னு சொன்னேன்..... என்னால இப்போ இருக்கும் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியும்னு தோணலை... அந்த ஓநாய் நிச்சயம் என்னை வேட்டையாடிடுவான்.... அவன் கிட்ட இருந்து இன்னைக்குத் தப்பிச்சுட்டேன்... ஆனால் எப்பவும் முடியுமான்னு தெரியலை.... அதுக்கு இது ஒண்ணு தான் வழி.." என்று கூறியவள் பூச்சி மருந்தை தன் வாயில் ஊற்றினாள்

மற்ற பெண்களைப் போல் தைரியமானவளாக இருந்திருந்தால் ஒரு வேளை அவளால் இதைப் போன்ற சூழ் நிலைகளில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்க முடியும்... ஆனால் இயற்கையிலேயே மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முடிவே சிறந்ததாகத் தோன்றியது.

மற்றவர்களுக்கு முட்டாள்தனமாக, கோழைத் தனமாகத் தெரியும் இந்த முடிவு, தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்குச் சரியான முடிவாகத் தெரிவது தான் கொடுமையே!!!!

குடித்து முடித்தவள் மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து தன் அன்னையின் புகைப்படத்தின் அருகில் வந்தவள் அதன் கீழ் அப்படியே முழங்காலை மடித்து அமர்ந்து தலை சாய்த்தவளின் எண்ணம் முழுவதும் "ஹர்ஷா! ஹர்ஷா! ஹர்ஷாவே தான்!!!!"



***************************************************


அன்று காலையில் இருந்தே மனம் ஏனோ படபடப்பாக இருக்க, கல்லூரியிலும் ஹர்ஷாவின் மனதிற்கு எதுவோ சரியில்லாதது போல் தோன்றியது.... இதயம் வேகமாக அடித்துக் கொள்வது போல் இருக்க, ஏதோ கெட்ட விஷயம் நடக்கப் போவது போல் திகிலாக இருந்தது.

அதற்கு மேல் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் தன் அறைக்கு வந்தவன் தன் அன்னையை அழைக்க, அவன் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு கலக்கம் அடைந்தவர், "என்ன ஹர்ஷா? இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட்?" என்றார்.

"யெஸ் மாம்...ஹவ் ஆர் யூ அன்ட் டாட்? [Yes, mom.. How are you and dad?] " என்றான்... அவன் குரல் சரியில்லாதைப் போல் தோன்ற 'நாங்க நல்லா இருக்கோம் ஹர்ஷா.... ஏன்பா இந்த நேரத்தில் கூப்புடுற....எதுனா பிரச்சனையா?"

"நோ மாம்...பிரச்சனை ஒண்ணும் இல்லை...சும்மா உங்க குரலைக் கேட்கணும்னு தோனுச்சு, அதான்.."

"ஹர்ஷா...ஐ டோன்ட் நோ வாட்ஸ் ஹாப்பனிங் டு யூ [ Harsha, I don't know what's happening to you]....முன்ன மாதிரி நீ எங்க கூடப் பேசறது கூட இல்லை... ரொம்பத் தூரம் தள்ளி போய்ட்டப்பா... கொஞ்சம் யோசிச்சு பாரு, எனக்கும் உன் டாடுக்கும் உன்னை விட்டால் வேறு யாரு இருக்கா... சொல்லு.... சீக்கிரம் திரும்பி வாப்பா... என்ன பிரச்சனையா இருந்தாலும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சரி பண்ணுவோம்... இப்படி எங்களைக் கஷ்டப்படுத்தாதப்பா..."

அவரின் குரலில் தெரிந்த ஏக்கமும் வருத்தமும் அவனையும் தாக்க, இதற்கு மேல் பேசினால் உடைந்து விடுவோம் என்று உணர்ந்தவன், "ஓகே மாம்...ஐ வில் கால் யூ லேட்டர்..." என்று அழைப்பை துண்டித்தான்..

ஆனால் அவனுக்கு இன்னும் மனதில் தெளிவில்லை.... என்ன இது?? மனசு இவ்வளவு பாரமாக இருக்கு என்று தலையை அழுந்த கோதியவாறே போர்ட்டிக்கோவில் வந்து அமர்ந்தவனுக்குத் தெரியவில்லை அந்த உணர்வு, தன் உணர்வுகளில் கலந்துவிட்ட தன் உயிரான தன்னவளின் இறுதி கதறல் என்று.

சிறு கேவலுடன் முழங்காலில் முகம் புதைத்திருந்தவளுக்கு மருந்தின் வீரியம் தாங்க இயலாமல் போக, தரையில் சாய்ந்தவள் கண்கள் சொருக ஆரம்பிக்க, தன்னை அறியாமல் மெதுவாக "அம்மா" என்று அழைத்தாள்.

அந்தச் சிறு முனகலில் விழித்த சுந்தரம் தன் அருகில் தாயின் படத்திற்குக் கீழ் தரையில் படுத்திருந்த மகளைப் பார்த்தவர் பதறி எழுந்தவரின் இதயம் ஒரு நிமிடம் உறைந்து போனது...

"கண்ணம்மா" என்று கதறியவர் அவளைப் பற்றி நிமிர்த்த, கண்கள் சொருகி கிடந்தவளிடம் இருந்து வந்த வாடை சொல்லியது அவள் பூச்சி மருந்தை அருந்தியிருக்கிறாள் என்று.

"பாவி மகளே!!!" என்று கதறியவர் வெளியே ஓடி வந்து சாலையில் பித்துப் பிடித்தவர் போல் ஓட, எதிர்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் விளக்கம் சொல்லி அதே ஆட்டோவில் கனிகாவை தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.

மருத்துவர்கள் அவளின் நிலை அறிந்து ஐ.சியூ.வில் சேர்க்க, வேறு வழியில்லாமல் அகிலுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, கேட்டவனுக்கு இந்தப் பூ உலகமே இருண்டது போல் இருந்தது....

'அடிப்பாவி, கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாயே!!!' என்று உள்ளுக்குள் குமுறியவன் தன் பெற்றோரிடம் சொல்ல, அனைவரையும் சுமந்து கொண்டு அவர்களின் கார் கிராமத்தை நோக்கி விரைந்தது....

பெரு முயற்சி செய்து மருத்துவப் படை அவளின் உயிரை மீட்க போராட, ஐ.சி.யுவின் வாயிலில் நின்றிருந்த அகிலுக்கும் சுந்தரத்திற்கும் மற்ற அனைவருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது....

ஒரு வழியாக ஐ.சி.யுவில் இருந்து வெளியில் வந்த மருத்துவர் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் வரை எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்று கூற, காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை....

ஆனால் அகிலின் மனதில் மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது, இந்த விஷயத்தை எப்படியும் ஹர்ஷாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று...

ஏனெனில் இவளின் இன்றைய நிலைமைக்குக் காரணம் அவனே... அவனுக்குத் தெரிய வேண்டும் அவனுடைய முட்டாள் தனத்தின் விளைவு, கோபத்தின் விளைவு எப்படி ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக ஆக்கியுள்ளது என்று....

அன்னையின் மரணத்திற்குப் பிறகு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று தன் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்தவளை தன் பிடிவாதமான காதலால் தன் பிடிக்குள் வைத்து, பின் அவளை ஒரே நாளில் ஒதுக்கி தள்ளியதும் இல்லாமல் அவளுக்கு அருவருப்பான நம்பிக்கை துரோக பட்டத்தையும் கட்டி, இதோ இப்பொழுது வாழ்வுக்கும் சாவிற்கும் இடையில் போராட வைத்தது முதல் அத்தனைக்கும் காரணகர்த்தா அவனே....

அவனுக்குக் கனிகாவின் நிலை தெரிய வேண்டும்... முடிவெடுத்தவன் சென்னைக்கு மீண்டும் பயணமானான்..

இந்த நிலைமையில் அவன் கனிகாவை விட்டுத் தூரம் செல்வது அவன் பெற்றோருக்கு மட்டும் அல்ல சுந்தரத்திற்கும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது...

ஆனால் அவனால் ஒரு தக்க காரணத்தை அவர்களுக்குச் சொல்ல முடியவில்லை....

"மாமா, நான் இங்க இருந்து ஒண்ணும் பண்ணப் போறதில்லை....ஆனால் எனக்குச் சென்னையில் கனிகா சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய வேலை இருக்கு... அத நான் இப்போ செய்யலைன்னா என்னால என்னையவே மன்னிக்க முடியாது.... அதனால் ஏன், எங்க போறேன்னு கேட்காதீங்க, பட் நான் அப்பப்போ உங்களுக்கு ஃபோன் பண்ணி கனிகாவை பத்தி தெரிஞ்சுக்கிறேன்.... அது வரை அம்மாவும் அப்பாவும் நிகிலாவும் உங்க கூடவே இருப்பாங்க.." என்றவன் அவர்களின் பதிலுக்குக் காத்திராமல் சென்னைக்கு விரைந்தான்.....

ஹர்ஷாவின் தந்தை இந்தியாவிலேயே பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர், அவருக்குச் சென்னையில் பல இடங்களில் பல தொழில்களின் அலுவலகங்களும் கிளைகளும் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்....

அதில் தலைமை கிளைக்குச் சென்று முதலில் அவருடைய வீட்டின் விலாசத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தவனுக்கு அது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை....

தான் இதே செயலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே செய்திருந்தால் ஒரு வேளை கனிகா இன்று நல்ல படியாக இருந்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு வர எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் ஹர்ஷாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் ஒரு வழியாகச் சிதம்பரத்தின் வீட்டை அடைந்தான்....

வாசலில் நின்ற காவலாளியிடம் தான் ஹர்ஷாவின் உடன் படித்த தோழன் என்றும் ஹர்ஷாவின் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூற, அவர் அவனை வீட்டின் காம்பௌண்டிற்குள் உள்ளே கூட விடவில்லை....

நேரம் ஆக ஆகக் கனிகாவின் நினைவுகள் அழுத்த, தலையைக் கோதியவாறே ஒன்றும் செய்ய இயலாமல் வாசலிலேயே காத்திருந்தவனுக்கு தெய்வம் போல் காட்சி தந்தார் சங்கீதா....

வெளியில் சென்று இருந்தவர் வீட்டிற்குத் திரும்ப, வாசலில் காத்திருந்த அகிலை பார்த்தவர் என்ன என்று கேட்க, தான் ஹர்ஷாவின் கல்லூரி தோழன் என்றும் அவனுடன் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஆனால் இப்பொழுது அவனிடம் பேசிய ஆக வேண்டும் என்று கூறினான்....

வீட்டிற்குள் அழைத்தவர் அவனின் கலங்கிய தோற்றத்தை பார்த்து "என்னப்பா எதுவும் பிரச்சனையா? என்க,

"இல்லைம்மா, உடனே நான் அவன் கிட்ட பேசனும்..." என்று அவன் கூற அவனின் அம்மா என்ற சொல் சங்கீதாவின் மனதை ஈர்த்தது... இவனும் கிட்டதட்ட ஹர்ஷாவின் வயதை ஒத்தவன் போல் இருக்கிறான் என்று நினைத்தவர்,

"ஹர்ஷா இப்போல்லாம் முன்ன மாதிரி இல்லைப்பா... யாரிடமும் சரியாகப் பேச மாட்டேங்கிறான்.... எத்தனையோ தடவை இந்தியா திரும்பச் சொல்லியும் அவனுக்கு வர இஷ்டம் இல்லங்கிறான்....என்ன நடந்தது ஏன் இப்படி மாறினான்னு தெரியலை...அவனோட ஃப்ரெண்ட்ஸ் எத்தனையோ பேர் அவன் நம்பரை எங்களிடம் கேட்கிறார்கள்...ஆனால் யாருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கான்.... ஆனால் உன்னைப் பார்த்தால் ஏதோ பிரச்னையில் இருக்கிற மாதிரி இருக்கு... அதனால் அவன் நம்பரை கொடுக்கிறேன்...நீயாவது முடிந்தால் அவனைத் திரும்பி இந்தியா வரச் சொல்லுப்பா.." என்று கெஞ்சினார்....

ஆக இவர் சொல்லுவதைப் பார்த்தால் ஹர்ஷாவும் சந்தோஷமாக இல்லை... எங்கேயோ இடிக்கிறதே என்று யோசிக்க ஆரம்பித்தவன் அதற்கு இது நேரம் இல்லை என்று அவரிடம் நம்பரை வாங்கியவன் அவர் காபி அருந்த சொல்லியும் இன்னொரு நாள் வருவதாகக் கூறி அதி வேகமாக விரைந்தான்.



****************************************

கல்லூரியில் இருந்து வந்ததில் இருந்து தன் அறையில் அடைந்து கிடந்த ஹர்ஷாவிற்கு இன்னமும் அந்தப் படபடப்பும் திகிலும் குறைந்தபாடில்லை....

நெருஞ்சி முள் போல் எதுவோ நெஞ்சில் குத்திக் கொண்டே இருக்க நிச்சயம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க இருக்கிறது என்று உள் மனது சொல்ல கலங்கியவன் அவனுக்கு நெருங்கியவர்கள் என்றால் அது அவனுடைய பெற்றோர் மட்டும் தான் ஆனால் அவர்களும் தங்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்களே... அப்படியானால் யாருக்கு என்ன நடக்கப் போகிறது என்று யோசித்தவாறே படுத்திருந்தான்....

உச்சத்தைப் பார்த்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்குச் சுரீரென்று கனிகாவின் முகம் வந்து போனது... அப்படியானால் அவளுக்குத் தான் என்னவோ நடந்திருக்க வேண்டும், ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்று உள்ளுணர்வு கூற நெஞ்சு பிசைவது போல் இருக்கத் தன்னை அறியாமல் "கனிஈஈஈஈஈஈ" என்று அலறியவன் நெஞ்சை பிடித்தவாறே எழுந்து அமர்ந்தான்....

காதலிப்பவளிடம் அவன் காதல் வார்த்தைகள் பேசவில்லை, அவளின் நலம் அறிய முயற்சிக்கவில்லை, ஆனால் அவளைத் தன் உயிராகச் சுமந்திருந்தவன் தூர தேசத்திலும் அவளின் வலியை மட்டும் உணர்ந்தான்...

ஒரு வேளை இந்நேரம் அவள் அகிலை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் அல்லது திருமணம் செய்ய முடிவு செய்திருக்கலாம் ஆனால் அவளின் உயிருக்கு மட்டும் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று மனதார எண்ணியவன், "கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது" என்று வேண்டினான்....

நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் நல்ல விதமாக இருக்க வேண்டும் என்று உளமாற நினைப்பது தானே தூய அன்புக்கு அஸ்திவாரம்.... என்ன தான் அவன் தன்னுடைய கர்வத்திற்கும் ஆணவத்திற்கும் எப்பொழுதும் முதலிடம் கொடுத்திருந்தாலும், அவனின் காதல் உண்மை தானே.... கலக்கத்துடன் அமர்ந்திருந்தவனுக்குத் திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது அவனின் அலைபேசிக்கு வந்த அழைப்புச் சத்தத்தில்....

கலங்கிய முகத்துடன் அலைபேசியைப் பார்த்தவனுக்கு அழைப்பை எடுக்கவே அச்சமாக இருந்தது... நெஞ்சு முழுமையும் பயம் கவ்வி கொள்ளச் சிறிது நேரம் வரை காத்திருந்தவன் மீண்டும் அலை பேசி அழைக்கச் சற்று தயங்கியவாறே அழைப்பை எடுக்க அங்கு "ஹர்ஷா, நான் அகில் பேசுறேன்...கனிகாவின் மாமா பையன்" என்றவுடனே சேர்த்து வைத்திருந்த ஒட்டு மொத்த தைரியமும் அவனை விட்டு அகன்றது....

"அகில், கனிக்கு என்னாச்சு?" என்று படபடப்புடன் கேட்ட ஹர்ஷாவின் கேள்வியில் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான் அகில்...

'முட்டாள்கள்!!!! ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் இந்த அளவிற்குக் காதலிக்கிறார்கள்...... அவள் என்னடா என்றால் இவன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பது போல் தற்கொலை வரை போயிருக்கிறாள்.... இவன் என்னடா என்றால் இத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தும் அவளுக்கு நடந்த விபரீதத்தை உணர்ந்து ஃபோனை எடுத்தவுடனே கனிகாவிற்கு என்னாச்சு என்கிறான்.... இவனுக்கு எப்படித் தெரியும் கனிகாவின் நிலைமை... அப்படி என்றால் இவன் உள்ளுணர்வு எதனையோ இவனுக்கு உணர்த்தியிருக்கு, அடி முட்டாள்கள்!!' என்று நினைத்தவன்,

"ஹர்ஷா....கனிகா பாய்ஸன் சாப்பிட்டுட்டா...." என்று கூறியது மட்டும் தான் ஹர்ஷாவின் காதில் விழுந்தது....

அலைபேசி கையில் இருந்து நழுவி தரையில் விழ கட்டிலில் பொத்தென்று விழுந்தவனின் இதயம் வெடித்துச் சிதறியது போல் இருந்தது....

அப்படி என்றால் என் உள்ளுணர்வு உணர்த்தியது சரி.... சட்டென்று சுயநினைவிற்கு வந்தவன் தரையில் கிடந்த அலைபேசியை எடுக்க, அதில் அகில் "ஹர்ஷா" என்று கத்திக் கொண்டிருந்தான்....

"அகில், அவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படிப் பண்ணினா? இப்போ எப்படி இருக்கா?" என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க,

"ஹர்ஷா அவள் பாய்ஸன் சாப்பிட்டுட்டான்னு மாமா சொன்னதும் நாங்க எல்லாரும் வேப்பங்குடிக்கு போய்ட்டோம்.. அங்குப் பக்கத்திலேயே ஒரு ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்காங்க... இன்னும் ஐ.சி.யுவில் தான் இருக்கா.... இருபத்தி நாலு மணி நேரம் சென்று தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்னு டாக்டர் சொன்னவுடனேயே நான் சென்னைக்குக் கிளம்பிட்டேன்... நான் எப்படியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிடணும் தான் திரும்பச் சென்னை வந்து எப்படியோ உங்க கம்பெனி மூலமா உங்க வீட்டிற்குப் போய் உங்க அம்மாக்கிட்ட உங்க காண்டாக்ட் நம்பர் வாங்கினேன்.."

ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா,

"அகில், நான் இப்போவே இண்டியா கிளம்பறேன்....எனக்கு என் கனிய பார்க்கணும்.." என்றவன் அகிலின் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்துத் தன் நண்பனை அழைத்து இந்தியா செல்ல டிக்கட் எடுக்கச் சொன்னவன் "ஐ ஹாவ் டு லீவ் அஸ் ஏர்லி அஸ் பாஸிபில் [I have to leave as early as possible] " என்று கத்தியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருந்தான்....

விமானம் கிளம்பியதில் இருந்து ஒவ்வொரு விநாடியும் மூச்சு விடக் கூட முடியாமல் தவிப்பது போல் தவித்தவனை விமானப் பணிப்பெண்ணின், "டு யூ வாண்ட் எனி திங் டு ட்ரிங் ஸார்? [Do you want anything to drink sir?"] " என்ற அழைப்பு சுய நினைவுக்குக் கொண்டு வந்தது..

அவனின் கலங்கிய கண்களைப் பார்த்தவள் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பது புரிய, அவன் முகம் நோக்கி குனிந்தவள் மெதுவாக "இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட் ஸார்?" என்றாள்...

"யெஸ்" என்றவன் தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்குமாறு அவளுடன் பணி செய்யும் அனைவரிடமும் சொல்ல சொன்னான்.....

"ஷ்யூர் ஸார்.." என்றவள் அதன் பிறகு அவன் அருகில் யாரும் நெருங்காமல் பார்த்துக் கொண்டாள்... இடையில் அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தவன் தன் தந்தைக்கு அழைத்தான்....

"டாட் இன்னும் ஆறு மணி நேரத்தில் நான் சென்னை ஏர்போர்ட் வந்து இறங்கிவிடுவேன்....என்னோட காரை ஏர்போர்ட்டிற்கு அனுப்பி வைங்க..." என்றான்.

சிதம்பரத்திற்கு அவன் திடீரென்று இந்திய திரும்புவது குழப்பத்தைக் கொடுத்தது.

"ஹர்ஷா என்ன ஆச்சு? எதுவும் ப்ராப்ளமா? எங்க கிட்ட ஏன் நீ வரதைப் பத்தி முன்னமே சொல்லலை.."

"டாட், ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க... காரை மட்டும் அனுப்பி வைங்க.. நீங்களோ, மாம்மோ வர வேண்டாம்..." என்றவன் அவர் பதில் சொல்லும் முன் அழைப்பை துண்டித்தான்....

அவன் குரலில் இருந்து தொய்வு, கலக்கம் அனைத்தையும் உணர்ந்தவருக்குத் தன் மகன் தங்களிடம் இருந்து எதனையோ மறைக்கிறான், அது மட்டும் இல்லாமல் அவன் கலங்கி போய் இருப்பது போல் தெரிகிறது என்று நினைத்தவர் அவன் சொல்லியும் கேளாமல் தானே விமான நிலையத்திற்குச் செல்ல காரை கிளப்பினார்...

அவரின் பதட்டம் தன்னையும் தொற்றிக்கொள்ளப் பிடிவாதமாகச் சங்கீதாவும் இணைந்து கொண்டார்.... விமான நிலையத்தைச் சென்றடைந்த அவர்கள் ஹர்ஷாவிற்காகப் பதட்டத்தோடு காத்திருக்க அடுத்தச் சில மணி நேரங்களில் ஹர்ஷா விமானம் நிலையத்தை விட்டு வெளியில் வந்தான்...

இரண்டு வருடங்கள் தங்கள் ஒரே மகனை பிரிந்து இருந்தவர்களுக்கு இன்று அவன் திரும்பி வருவது மகிழ்ச்சியாக இருந்த அதே சமயம், அவன் இந்த இரண்டு வருடங்களில் எந்நேரமும் எதனையோ இழந்தது போல் இருந்ததும், இப்பொழுது பதற்றத்துடன் பேசியதும் கலக்கத்தைக் கொடுத்தது....

விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தவன் தன் தந்தைக்கு அழைக்க அதற்குள் அவனை எதிர்பார்த்து விமான நிலையத்தின் வாயிலில் காத்திருந்தவர் ஓட்டமும் நடையுமாக அவன் இருந்த இடத்திற்குச் சென்றார்....

கார் டிரைவரை எதிர்பார்த்திருந்தவன் தந்தையைக் கண்டதும் ஒன்றும் பேசாமல் அவர் அருகில் செல்ல, அவனின் முகத்தில் இருந்த கலவரத்தை பார்த்தவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்...

"டாட், கிவ் மி தி கி [Dad, give me the key]" என்றவன் காரின் சாவியை வாங்க கை நீட்ட,

"ஹர்ஷா, நீ எங்க வேண்டுமானாலும் போ... ஆனால் நாங்களும் உன் கூட வருவோம்..." என்றார்...

நாங்களும் என்றால் என்று யோசித்தவனுக்குத் தந்தையைத் தொடர்ந்து வந்திருந்த தன் அன்னையைக் கண்டதும் தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை....

ஆனால் நின்று அழுது கரைவதற்கு இது நேரமில்லை என்று உணர்ந்தவன் தன் உணர்வுகளை வலுக்கட்டாயமாகக் கட்டுப்பட்டுத்திக் கொண்டு அவரிடம் இருந்து காரின் சாவியை வாங்கியவன் தன் காரைப் புயல் வேகத்தில் கிளப்பினான்.....

கார் ஜெட் வேகத்தில் வேப்பங்குடி நோக்கி பறக்க அகில் சொன்ன இருபத்திநாலு மணி நேரம் எப்பொழுதோ கடந்திருந்தது...

இது வரை அகிலிற்கு அழைக்க மனதில் தைரியமும், உடலில் சக்தியும் இல்லாமல் தளர்ந்திருந்தவன், இனியும் தாமதிப்பதில் பயனில்லை என்று உணர்ந்து ஒரு கையில் காரை செலுத்தியவாறே நடுங்கும் விரல்களோடு அகில் அழைத்திருந்த எண்ணுக்கு அழைத்தான்....

அவனின் பொறுமையைச் சோதிப்பது போல் அகில் அவன் அழைப்பை எடுக்கவில்லை.... உடலில் பதற்றம் வந்து தொற்றிக் கொள்ள, இதயம் வெளியில் வந்து விழுந்துவிடுவது போல் துடிதுடிக்க, உயிரை கைகளில் தேக்கி வைத்துக் கொண்டு மீண்டும் அகிலுக்கு அழைத்தான்...

நீண்ட நேரம் சென்று அகில் அழைப்பை எடுக்க எகிறி துடிக்கும் இதயத்துடன், "அகில்... ஹர்ஷா பேசுறேன்... கனி எப்படி இருக்கா?" என்றான்...

அகில் சொல்லும் ஒற்றை வார்த்தையில் தன் உயிரை தேக்கி வைத்திருந்தவனிடம், "ஆபத்தான கட்டத்தில் இருந்து தாண்டிட்டா ஹர்ஷா... பட் ஸ்டில் ஐ. சி. யுவில் தான் இருக்கா..." என்ற வார்த்தையில் ஆகாயத்தை நோக்கி தன்னிடம் இருந்து விடைப் பெற்று சென்று கொண்டிருந்த உயிரை மீண்டும் இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது போல் இருந்தது....

அகிலின் பதிலில் சட்டென்று காரின் வேகத்தைக் குறைத்தவன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுக் கார் ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்தவனின் உடல் குலுங்க, அதிருந்தார்கள் சிதம்பரமும் சங்கீதாவும்...

ஏனெனில் சின்ன வயதில் இருந்து ஹர்ஷா எதற்காகவும் அழுதது இல்லை, எது வேண்டும் என்றாலும் முரட்டுத் தனமாக ஆர்ப்பாட்டம் செய்து தனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள்வானே ஒழிய அவள் கண்களில் நீர் என்பது சிந்தியதில்லை...

அப்பேற்பட்ட மகன் இன்று உடல் குலுங்க மனம் வெதும்ப அழுது கொண்டிருக்கிறான் என்றால் என்ன நடந்திருக்கும்? அவனை எது இந்த அளவிற்குப் பாதித்திருக்கும்? என்று கலங்கிய சங்கீதா பதற்றத்துடன் பின் சீட்டிலிருந்து எக்கி அவன் முதுகை தொட, அதற்குள் சிதம்பரம் திரும்பி அவரைப் பார்த்து 'அவனைத் தொந்தரவு செய்யாதே' என்பது போல் சைகை செய்தார்....

கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு முன் ஹர்ஷா தங்களிடம் ஒரு முறை தங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டதை நினைத்தவர், ஒன்றன் பின் ஒன்றாகக் கோர்த்துப் பார்த்தவர், அவன் வெளிநாடு சென்றதில் இருந்து அவன் இருந்த விதமும், இதோ இன்று அரண்டு அடித்து இந்தியா வந்ததும், இப்பொழுது "எப்படி இருக்கா கனி?" என்று தன் உயிரை தேக்கி வைத்து கேட்ட விதமும் அவருக்கு நன்கு உணர்த்தியது...

தன் மகனுக்குக் கனி என்ற பெண்ணிடம் உள்ள காதலை.... தன்னைச் சமன்படுத்தியவன் காரைக் கிளப்ப, அகிலுக்கு அழைத்து மருத்துவமனை விலாசத்தைத் தன் அலைபேசிக்கு அனுப்ப சொன்னான்... கிட்டதட்ட 2 மணி நேர பயணத்திற்குப் பிறகு மருத்துவமனையை அடைந்தவன் காரை நிறுத்திய நொடியே ஐ.சி.யூவை நோக்கி ஓடினான்...

அவன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய விதத்திலும், அவனின் பதற்றமும், தவிப்பும், அழுகையும் சொல்லாமல் சொல்லியது தஙகள் மகனின் இதயத்தில் புதைந்து இருக்கும் காதலின் ஆழத்தை... அவனைப் பின் தொடர்ந்து ஓடிய சிதம்பரத்திற்கும் சங்கீதாவுக்கும் தன் மகன் விரும்பும் பெண்ணிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இருந்தது....

நேரே ஐ.சி.யுவை அடைந்தவன் ஐ.சி.யுவின் வாயிலில் இருந்த சேரில் அகில் அமர்ந்திருக்க, அவனை நோக்கி ஒடியவன் மூச்சு வாங்க "அகில்" என்று அழைத்தான்...

நிமிர்ந்து பார்த்த அகிலுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது ஹர்ஷாவைப் பார்த்த பொழுது...

தான் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன் ஹோட்டலில் சந்தித்த ஹர்ஷாவா இது என்று.... அவன் எத்தனை கம்பீரத்துடனும் ஆளுமையுடனும் வசீகரத்துடனும் இருந்தான்... ஆனால் இந்த ஹர்ஷா களைத்து போன தோற்றத்துடன் தாடியை கூடச் சவரம் செய்யாமல் கலைந்த முகத்துடன் இளைத்துப் பரிதாபமாக இருந்தான்...

"கனி எங்க அகில்?"

நடுங்கும் குரலில் ஹர்ஷா கேட்க, அவனைப் பரிதாபமாகப் பார்த்தவன், "உள்ளே தான் இருக்கா ஹர்ஷா... இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெகுலர் ரூமிற்குள் மாத்திவிடுறதா டாக்டர் சொல்லியிருக்காங்க..." என்றான்.

அவன் கை காட்டிய திசையைப் பார்த்தவன் அங்கு அறையின் கதவில் கண்ணாடி துவாரம் போல் இருக்க, அதன் வழியாக உள்ளே பார்த்தவன் விருட்டென்று தன்னிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தான்....

ஏனெனில் அங்குப் படுத்திருந்த கனிகா அவன் கனிகா போல் அல்ல...

தொடரும்..
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் 19


உருக்குலைந்து, இளைத்து, கறுத்து, ஒடிந்த வேர் போல் படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு அந்த நிமிடம் ஏற்பட்ட வலியை அவனால் தாங்க இயலவில்லை.


இது வரை மனதிற்குள் அடைத்து வைத்து இருந்த துக்கம் வெளியேற அருகில் இருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தவன் இரு கைகளாலும் தன் தலையைப் பிடித்துக் குனிந்தவன் அழுது கரைந்தான்.


ஹர்ஷாவைப் பார்க்கும் வரை அவன் மேல் வெறுப்பின் உச்சிக்கே சென்றிருந்த அகிலின் மனதைக் கூட அவன் கதறி அழுதது கரைக்க ஆரம்பித்தது.


அவனுக்கு இடது புறத்தில் சிதம்பரமும், சங்கீதாவும் அமர வலப்புறத்தில் அமர்ந்த அகில், ஹர்ஷாவின் தோளைத் தொட்டவன் அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல தடுமாற, ஆனால் ஹர்ஷா தெளிவது போல் தெரியவில்லை.


ஒரு வழியாகத் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த ஹர்ஷா அகிலைத் திரும்பிப் பார்க்க, தன் மனதில் இருந்ததைக் கொட்ட ஆரம்பித்தான் அகில்.


"வாழ்க்கை ரொம்பக் குறுகியது ஹர்ஷா, அதற்குள் ஏன் இந்த ஈகோ, ப்ரைட் [pride]... காலேஜ் படிக்கும் போதே உங்ககிட்ட கேட்டேன்... அவ சின்னப் பொண்ணு... வாழ்க்கையில் நிறையக் கஷ்டங்கள் பட்டுட்டா.... இதற்கு மேலும் பிரச்சனைகளைத் தாங்கிக்கிற சக்தி அவள் உடலிலேயும் இல்லை உள்ளத்திலேயும் இல்லை... அதனால உங்க காதல் உறுதியானது தானான்னு.... அன்னைக்கு நான் கேட்டப்போ உங்களுக்குக் கோபம் வந்துச்சு.... ஆனால் இப்போ நிலைமை பார்த்தீங்களா? இந்த நிலைமையில் நான் இப்படிப் பேசுறது தப்பு தான்... ஆனால் இரண்டு வருஷமா என் மனச அரிச்சுக்கிட்டு இருக்கிற விஷயம் இது..." என்றான் கலங்கிய முகத்துடன்..


அகிலின் ஒவ்வொரு வார்த்தையும் தன்னை வலிக்க வலிக்க அடிப்பதைப் போல் உணர்ந்தவன் கண்களில் அதே வலியோடு அகிலை நிமிர்ந்து பார்த்தான்...


அகிலே மேற்கொண்டு தொடர, ஒன்றும் பேசாமல் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தனர் சிதம்பரமும், சங்கீதாவும்....


"அவளை எப்பவும் கைவிட மாட்டேன்னு சொன்னீங்க... பட் அப்புறம் என்னாச்சு? நீங்க அமெரிக்கா போகும் முதல் நாள் உங்களுக்குள்ள பிரச்சனை... என்னைத் தான் கூப்பிட்டாள் பிக்கப் செய்ய.... கலங்கி போய் நின்றிருந்தவளின் தோற்றம் இன்னைக்கும் என் கண் முன் தெரியுது... அதற்குப் பின் நீங்க கூப்புடுவீங்கன்னு ரொம்பப் பாவமா எதிர்பார்த்திட்டு இருந்தா.... ஆனால் நீங்க அவளைக் கூப்பிடவில்லை.... நீங்க இல்லாத ஊரில இனி நான் இருக்க முடியாது.... அவரு இல்லாத காலேஜிற்கு இனி நான் போக முடியாதுன்னு ரொம்பப் பிடிவாதமா இருந்ததால நான் வேறு வழியில்லாமல் இங்கேயே அவளுடைய காலேஜில் சேர்த்துவிட்டேன்..."


அகில் பேசப்பேச ஹர்ஷாவிற்குக் குற்ற உணர்வு அதிகமாகியது....


"எப்பவாவது நேரம் கிடைக்கும் போது அவளை வந்து பார்த்துவிட்டு போவேன்.... கிட்டத்தட்ட பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்த அவளை எப்படிச் சமாதானப் படுத்துவதுன்னே தெரியலை.... அப்படி இருக்கும் போது தான் அவளை ஒரு ஆறு மாசத்திற்குப் பின் சென்னைக்குக் கூட்டி போனேன்... ஜஸ்ட் ஒரு த்ரீ டேஸ் இருக்கறதுக்கு.... அப்போ தான் உங்க ஃபோன் இடி மாதிரி வந்து இந்தச் சின்னப் பெண்ண சிதைச்சுட்டு போயிருச்சு..." என்றவன் சில விநாடிகள் தயங்கி மேலும் தொடர்ந்தான்..


"எங்க இரண்டு பேரு மேலயும் உங்களுக்கு எப்படிச் சந்தேகம் வந்திருச்சு?? கனிகாவைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு ரொம்ப நாள் பழகணும்னு அவசியம் இல்லை... அவளோட அமைதியான குணமும், வெள்ளை மனசும் தெரிஞ்ச யாரும் அவளுக்கு மனசால கூடத் துரோகம் செய்ய நினைக்க மாட்டாங்க... அதுவும் உங்களுக்கு அவளை நல்லா தெரியும்.... அப்புறம் எப்படி அவள் மேல் உங்களுக்குச் சந்தேகம் வந்துச்சு??" இத்தனை மாதங்களாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டேவிட்டான்....


ஒரு அடிபட்ட பார்வை பார்த்த ஹர்ஷா மௌனமாகத் தன் அலைபேசியில் ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்னமும் அழிக்காமல் வைத்திருந்த அந்தப் புகைப்படங்களை அகிலுக்குக் காட்ட, அதிர்ந்த அகிலுக்கு மூளேயே வெடித்துச் சிதறவிடும் போல் இருந்தது...


அதிர்ச்சியுடன் அகில், "ரொம்ப ஆச்சரியமா இருக்கு ஹர்ஷா... அப்படியே தத்ரூபமாக இருக்கு... எப்ப, எங்க, எப்படி இந்த ஃபோட்டோஸை எடுத்திருப்பாங்க..." என்றவன் சிறிது யோசனைக்குப் பிறகு,


"நீங்க ஸ்டேட்ஸுக்கு போன கொஞ்ச நாளிலேயே கனிகாவை வேப்பங்குடிக்கு கூட்டி வந்து விட்டுவிட்டேன்.... ஆனால் இந்த ஃபோட்டோஸ் சென்னையில் எடுத்த மாதிரி இருக்கு... நல்லா யோசிச்சு பார்க்கும் போது நான் சொன்னேனே நீங்க அமெரிக்கா போன பின் நான் கனிகாவை சென்னைக்கு அழைத்து வந்தேன்னு... அப்ப தான் நீங்க என்னை ஃபோனில் கூப்பிட்டீங்க... அப்ப இந்த ஃபோட்டோஸ் அப்போ தான் எடுக்கப்பட்டிருக்கணும்..." என்று குழம்பியவனுக்குச் சடேரென்று மின்னல் வெட்டியது போல் தோன்றியது அன்று நடந்த சம்பவம்....


விலுக்கென்று நிமிர்ந்தவன்,


"ஹர்ஷா, இது நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.... கனிகா உங்க நினைப்பிலே ரொம்பக் கறைஞ்சிட்டு எங்கேயும் வெளியே கூடப் போகாம இருந்தா.... அப்ப நானும், என் தங்கை நிகிலாவும் அவள் மனசுக்குக் கொஞ்சம் மாற்றமாக இருக்குமேன்னு அவளைச் சென்னையில் ஷாப்பிங் மாலிற்குக் கூட்டிட்டு போனோம்.... அங்க எஸ்கலேட்டரில் ஏறும் போது கனிகா புடவை தடுக்கி கீழே விழப் போனாள்.... அவள் நேர் பின்னால நின்னுட்டு இருந்த நான் அவள் கீழே விழாமல் இருக்க அவளைப் பிடித்தேன்.... அப்போ யாரோ இந்த ஃபோட்டோஸை எடுத்துருக்காங்க.... ரொம்பத் தெளிவா கனிகாவும் நானும் மட்டும் இருக்கிற மாதிரி... என் பின்னாடி இருந்த என் தங்கையையோ இல்லை நாங்க நின்னுட்டு இருந்த எஸ்கலேட்டரையோ போட்டோவில் ஃபோக்கஸ் ஆகாமல் எடுத்திருக்காங்க... பட் யாரா இருக்கும்? இதில் அவங்களுக்கு என்ன லாபம்?" என்று திகைக்க அதே சமயம் சிதம்பரம் ஹர்ஷாவின் தோளைத் தொட்டார்...


இப்பொழுது தன் பெற்றோருக்கு நடந்ததை விவரிக்க வேண்டியது அவன் கடமை...


தான் கனிகாவை சந்தித்த நாளில் இருந்து இன்று வரை நடந்ததைச் சொன்னவன் அவளுக்கும், அவனுக்கும் இடையில் நடந்த பிரச்சனைகளை வெளிப்படையாகக் கூறினான்...


"டாட், மாம், உங்களுக்கே தெரியும் என் லைஃப்ல நான் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து கூடப் பார்த்தது இல்லை.... அப்படி இருக்க என் மனசில நுழைஞ்ச ஒரே பெண் கனி தான்... அவளைப் பார்த்த முதல் நாளே முடிவெடுத்துட்டேன் அவள் தான் என்னோட லைஃப்ன்னு... அவள் எனக்குத் தான், எனக்கு மட்டும் தான் மனசில அழுத்தமா பதிஞ்சிருச்சு.... அதனால் தான் இதோ அவளுடைய கஸின் அகிலோடு கூட அவள் பழகுறது எனக்குப் பிடிக்கலை.... யு.எஸ் போகும் முன்.." என்று தயங்க,


அவன் கரத்தை மென்மையாகப் பிடித்த சங்கீதா சொல்லு என்பது போல் கண் மூடி திறக்க இதற்கு மேல் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் தொடர்ந்தான்...


"அவளை என்னோடவளா ஆக்கிக்கணும்னு அவள் கிட்ட முறை தவறி நடந்துக்கப் பார்த்தேன்... ஆனால் அவள் விடலை... அதனால வந்த கோபத்தில் அவகிட்ட பேசாம கிட்டத்தட்ட ஸிக்ஸ் மன்த்ஸ் இருந்தேன்... கொஞ்ச நாளில் என்னோட தப்ப நான் புரிஞ்சுக்கிட்டு அவ கிட்ட மன்னிப்பு கேட்கலாம்னு இருந்த சமயத்தில் தான் இடி மாதிரி இந்த ஃபோட்டோஸ் வந்தது.... அதில் என்னோட கோபம் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு... அதுல அவளையும், அகிலையும் நான் ரொம்பத் தப்பா பேசிட்டேன் மாம்..."


"என்னோட உள் மனசில அவ நிச்சயம் என்னை விட்டுட்டு வேற யாரையும் லவ பண்ணமாட்டான்னு தெரியும், பட் ஸ்டில் இந்த ஃபோட்டோஸ் என் நம்பிக்கையைக் கலைச்சுடுச்சு.... ஆனாலும் என்ன தான் நான் அவளை வெறுத்துட்டாலும் அவளை என்னால மறக்க முடியலை... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அவள் என் மனசிலயும் எண்ணத்திலயும் கலந்திருந்தா.... அவளைத் தவிர என் வாழ்க்கையில் வேறு ஒரு பெண்ணுக்கு நிச்சயமா இடமில்லைன்னு நான் டிஸைட் பண்ணி ரொம்ப நாளாச்சு.... உண்மையில் அவ அகிலை மேரேஜ் பண்ணியிருப்பான்னு தான் நினைச்சிருந்தேன்..... பட் இப்படிப் பண்ணுவான்னு கனவுல கூட நினைக்கலை..." என்றவனின் விழிகளில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது....


சங்கீதாவிற்கும் சிதம்பரத்திற்கும் ஹர்ஷா அழுவதைப் பார்க்க பரிதாபமாகவும் அதே சமயம் வியப்பாகவும் இருந்தது.... ஐந்து வருடங்கள் காத்திருந்து அவர்கள் பெற்ற செல்ல மகன் அவன்... ஒரே வாரிசு....


அவன் தந்தை வழி தாத்தா பாட்டிக்கு அவன் உயிர் என்றால், அவன் அன்னை வழி பாட்டிக்கு சகலமும் அவன் தான் என்று இருந்தான்....


அதனாலேயே மிகவும் செல்லமாக ஒரு வார்த்தை கூட யாரும் கடிந்து பேசாமல் வளர்க்கப் பட்டான்....


அதனால் வந்தது தான் இந்தப் பிடிவாதமும் அழுத்தமும் திமிருமான குணங்கள்....வளர்ந்த பிறகு அவன் எதற்கும் அடம் பிடித்தது கூடக் கிடையாது... தன்னுடைய ஒற்றைப் பார்வையிலேயே தனக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டவன்....அதனால் தான் கனிகாவை தன்னவள் என்று திருமணத்திற்கு முன்னரே உரிமை கொண்டாட விழைந்திருக்கிறான் என்று புரிந்தது அவர்களுக்கு...


ஆனால் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நல்ல பெண், என்ன தான் காதலனாக இருந்தாலும் திருமணத்திற்கு முன் தன் கற்பை அவனிடம் ஒப்படைக்க விரும்பவில்லை... அதனால் தன் மகனின் வெறுப்பைச் சம்பாதித்து இருக்கிறாள்....


நிச்சயம் இவள் தான் என் மருமகள்... எங்கள் ஹர்ஷாவிற்கு ஏற்ற மனைவி என்று அந்த விநாடியே முடிவு செய்தார்கள்....


ஹர்ஷாவின் காதலை உணர்ந்த அகிலுக்குப் பிரமிப்பாக இருந்தது.... எப்பேற்பட்ட கோடீஸ்வரன், அதுவும் வெளிநாட்டில் இருந்தும் கனிகாவைத் தவிரத் தன் வாழ்க்கையில் வேறு பெண் இல்லை என்கிறானே என்று மலைத்தவன்,


"ஹர்ஷா, ரொம்ப ஆச்சரியமாக இருக்கு... அவள் உங்களை மறந்துவிட்டாள் என்று முடிவு செய்தாலும் இன்னும் அவளையே காதலித்துக் கொண்டிருக்கிறீர்கள்.... இவள் என்னடாவென்றால் வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டிவரும் எனும் போதே தன் உயிரையும் விடத் துணிந்துவிட்டாள்.... நிச்சயம் இது போல் காதலை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்.... ஒரு வார்த்தை கூடப் பேசிக்கவில்லை ஆனால் உங்கள் காதலில் எவ்வளவு உறுதியாக இருந்து இருக்கிறீர்கள்.... அது தான் கனிகாவின் உயிரை காப்பாத்திருக்குன்னு நினைக்கிறேன்... நிச்சயம் உங்கள் காதல் வெற்றி பெறும்... அவள் கண்ணு முழிச்சதும் ரொம்பச் சந்தோஷப் படப்போகிறாள்" என்க, அவன் கூறியதில் ஒன்றை கேட்டவுடன் ஹர்ஷாவிற்குத் திடுக்கென்று இருந்தது.


"அகில், என்ன சொன்னீங்க? கனி வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டி வந்ததால் சூஸைட் அட்டெம்ப்ட் பண்ணினாளா?" என்று பதறினான்...


ஏனெனில் இது வரை ஹர்ஷா ஏன் கனிகா தற்கொலை முடிவெடுத்தாள் என்று அகிலிடம் கேட்டிருக்கவில்லை....


"யெஸ் ஹர்ஷா... கனிகா எங்க மாமா வேலை பாக்கிற ஃபேக்டரியில் தான் வேலைக்குப் போறாள்.... அங்கு அவளோட மேனேஜர் அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டதா மாமா என்னிடம் சொன்னார்... இவ எத்தனையோ முறை மறுத்தும் மாமா கேட்கலை..... அவளால உங்களை மறக்க முடியலை... அத மாமாவிடம் சொல்லும் தைரியமும் அவளுக்கு இல்லை... நான் சொல்றேன்னு சொன்னேன்...பட் அவ தடுத்துட்டா.... உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்காளாம்... வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் தான் தீக்குளிச்சுடுவேன்னு... படுபாவி அவளால் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாம தான் பாய்ஸன் சாப்பிட்டு இருக்கா..." சொல்லும் போதே அவன் தொண்டை அடைத்தது....


ஹர்ஷாவிற்குக் கனிகாவின் தூய்மையான காதல் புரிந்தது....


வலிக்க வலிக்க உணர்ந்து கொண்டிருந்தான் இது வரை உணராத அவளின் மென்மையான மெய்யான காதலை...


கையில் இருக்கும் வரை நமக்குத் தெரியாது எதனுடைய அருமையும் பெருமையும்..... கையை விட்டு போவது போல் உணர்ந்து கொண்டிருக்கும் போது தான் தெரியும் பிரிந்ததினால் ஏற்படும் வலி!!!


அவளை இப்பொழுதே கட்டி அணைக்க வேண்டும் போல் இருக்க ஆவலால் எழுந்து மீண்டும் ஐ.சி.யுவின் உள்ளே பார்க்க, சரியாக வெளியே வந்த மருத்துவர், "கனிகாவை இப்போ வேறு ரூமிற்கு மாற்றப் போகிறோம்..." என்றார்...



சில நிமிடங்களில் அவளை வெளியே கொண்டு வர, குற்ற உணர்வில் அவளின் முகத்தைப் பார்க்க முடியாமல் தவித்தவன் சட்டென்று வெளியே சென்றான்... அவனின் நோக்கம் புரிந்த அகில் அவனைத் தடுக்காமல் கனிகாவை புது அறைக்கு மாற்ற உதவி செய்தவன் அப்பொழுது தான் கவனித்தான்...


சுந்தரத்தை அங்குக் காணவில்லை... ஹர்ஷாவை பார்த்த பதற்றத்தில் அவன் சுந்தரத்தை தேடவில்லை... அவர் வந்தவுடன் முதலில் ஹர்ஷாவை அவருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.. கனிகாவின் கண்ணீருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்...


ஹர்ஷாவைப் பின் தொடர்ந்த சிதம்பரமும், சங்கீதாவும் அவன் மருத்துவமனைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர்கள் அவன் அருகில் வர, அவர்களின் நிழலைக் கண்டவன் தலை நிமிர, சங்கீதாவிற்குத் தன் மகன் இருந்த நிலையைப் பார்க்க தாங்கவில்லை.....


அவன் அகிலின் அழைப்பு வந்ததில் இருந்து ஒரு வாய் உண்ணவில்லை...


கிட்டதட்ட இரண்டு நாட்கள் அண்ண ஆகாரம் இல்லாமல் இருந்தவன், சவரம் செய்யப் படாத முகம், கலைந்த தலை என்று உருக்குலைந்து போயிருந்தவனை ஒரு அன்னையாகப் பார்த்தவர் அவனின் தலையைக் கோதியவாறே,


"ஹர்ஷா, உன்னோட மனசு எங்களுக்கு நல்லா புரியுது.... அதான் கனிகா பிழைச்சுட்டாள் இல்லையா? இனி எல்லாமே நல்லது தான் நடக்கும்... உனக்கு எங்களோட முழுச் சப்போர்ட் இருக்கு.... எப்படியாவது அவள் உடம்பு குணமானவுடனேயே உங்க மேரேஜை ஃபிக்ஸ் பண்றோம்... போப்பா, போய் அவளைப் பாரு... நிச்சயம் உன்னைப் பார்த்து ரொம்பச் சந்தோஷப் படுவா..." என்றார்.



ஆனால் அவர்களுக்கோ, அல்லது ஹர்ஷாவிற்கோ தெரியாது கனிகா எப்பொழுதோ ஹர்ஷாவை வெறுத்துவிட்டாள் என்று.... தான் அவன் மீது வைத்த காதலை காப்பாற்ற தான் அவள் தற்கொலை வரை போனதே ஒழிய அவனை மீண்டும் சந்திப்போம், அவனைத் திருமணம் செய்து கொள்வோம் என்ற ஆசையிலோ அல்லது நம்பிக்கையிலோ அல்ல....



எப்பொழுது கிட்டதட்ட அவளின் நடத்தையில் சந்தேகப்பட்டானோ அப்பொழுதே அவள் மனதளவில் செத்துவிட்டாள்....



"ஓகே மாம்" என்றவன் அவளின் அறை நோக்கி நடக்க, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்கப் போவதை நினைத்து மனம் படபடவென அடித்துக் கொள்ள, கால்கள் தடுமாற ஆரம்பித்தது...



ஒரு வழியாக இழந்திருந்த மன உறுதியை எல்லாம் ஒன்று சேர திரட்டி அவளின் அறையை அடைந்தவன் கட்டிலில் படுத்திருந்த அவளைக் காண இரண்டு வருடங்களில் இளைத்து, நிறம் கூடக் கொஞ்சம் கறுத்து, ஆனால் முகத்தில் இருந்த அந்தக் களை, இலட்சணம் மட்டும் இன்னும் போகாமல் இருந்தவளைப் பார்த்தவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது...


'எப்படி இந்தக் குழந்தை முகத்தை இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்தோம்?? நம்மையே தொட விடாதவள் அகிலுடன் காதல் கொண்டிருப்பாள் என்று எப்படி நம்பினோம்?? இவள் என் தேவதை அல்லவா? எப்படி இவளைச் சந்தேகித்தேன்?' என்று மனம் கலங்க குற்ற உணர்வில் உள்ளம் துடித்தவாறே அறைக்குள் நுழைந்தான்....


கண்களை மூடிப் படுத்திருந்தவள் அவன் வந்திருப்பதை உணர்ந்தாளோ என்னவோ அவளின் மூடிய விழிகளுக்குள் கரு விழிகள் உருண்டோட அவளின் அருகில் அமர்ந்தவன் அவளின் கரம் பற்றினான்....


தன்னை அறியாமல் அவன் விரல்களை இறுக்கி பிடித்துக் கொண்டவள் கண்களைத் திறவாமலே அறிந்துக் கொண்டாள் தன்னவனின் வருகையை... அவனின் பிரத்யேக வாசனை, அவனின் ஸ்பரிசம் அனைத்தும் அவளின் உயிரிலும் அல்லவா கலந்திருக்கிறது....


மூடிய விழிகளில் இருந்து வற்றாத நீரூற்று போல் கண்ணீர் வழிந்தபடியே இருக்க, "ஏன்டி இப்படிப் பண்ணிட்ட?" என்றான்..


அவனின் வார்த்தையில் அவள் உடல் தூக்கிவாரிப் போட்டது...


இனி ஒரு நொடிக்கூட அவளைப் பிரிய கூடாது என்பது போல் விரல்களைப் பிடித்திருந்த பிடியில் இறுக்கத்தைக் கூட்டியவன் அவள் மேனியில் நடுக்கம் பரவுவதை உணர்ந்து அவளின் உணர்வுகள் புரிந்தவனாய்,


"கனி, நான் ஹர்ஷா வந்திருக்கேன்... நான் வந்திருக்கிறது உனக்குத் தெரியுதுன்னு தெரியுது... ப்ளீஸ்டி... கண்ணைத் திறந்து என்னைப் பாரு..." என்றவன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்...


தன் கரத்தில் தன்னவன் முகம் புதைத்து அமர்ந்திருப்பதை உணர்ந்தவளுக்கு அவனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது...


ஆனால் அவன் அன்று சொன்ன வார்த்தைகள் காதில் சத்தமாக எதிரொலிக்க, மீண்டும் இறுக்கக் கண்களை மூடிக் கொண்டவள்,


"நா.. நான் அகில் அத்தானைப் பார்க்க வேண்டும்..." என்று மெல்லிய குரலில் கூற அதிர்ந்த நிமிர்ந்த ஹர்ஷா,


"கனி என்னைப் பாருடி..." என்றான்.


கண்களைத் திறவாமல் "அப்பா" என்க,


அவளுக்கு அருகில் சென்ற அகில், "கனி, உன்னோட ஹர்ஷா வந்திருக்கிறாரு. ப்ளீஸ் கண்ணைத் திற..." என்றான்...



"அத்தான் ப்ளீஸ், நான் என் அப்பாவை பார்க்கணும், உங்களைப் பார்க்கணும்... ப்ளீஸ் இவங்களை வெளியில் போகச் சொல்லுங்க..." என்றாள்..


"வேண்டாம், போதும்டி... என்னைக் கொல்லாதே... அப்போ எனக்கு உன் காதல் புரியலை, உன்னை நம்பலை, இப்போ நம்பறேன்டி உன்னை..."


அவனின் கதறல் அவளைச் சித்ரவதை செய்தது, இருந்தும் தன் மேல் நம்பிக்கையில்லாதவனை அவள் நம்பத் தயாராக இல்லை... இனி ஒரு தடவை தீக்குளிக்க அவள் தயாராக இல்லை...



அவளின் மனநிலை புரிந்தவன் அகிலை திரும்பி நோக்க, அவன் கையை இறுக பற்றிய அகில், "நான் பார்த்துக்கிறேன் ஹர்ஷா... நீங்க வெயிட் பண்ணுங்க..." என்றவன் அவளை எப்படிச் சமாதானப் படுத்துவது என்ற குழப்பத்துடன் அவள் கையைப் பற்றினான்..



அகில் "கனிகா" என்றழைக்கக் கண்களைத் திறந்து பார்த்தவளின் கண்கள் ஹர்ஷாவையே தேடியது.. அகிலின் பின்னால் நின்று கொண்டிருந்த ஹர்ஷாவை கண்டதும் மின்னல் வெட்டியது போல் அவள் கண்களில் தெரிந்து மறைந்த காதலை நொடி நேரத்தில் கண்டு கொண்டவனின் மனதில் சில்லென்று காற்று வீச, இதழ்கள் சிறு கீற்று போல் விரிந்தது....


'உன்னை நான் கண்டு கொண்டேனடி.... மனசுக்குள்ள இத்தனை காதலை வச்சுக்கிட்டு ஏன் இந்த நாடகம்? என் மேல் தப்பு இருக்கு...நான் இல்லைன்னு சொல்லவில்லை... ஆனால் இனியும் பேசாமல் ஒருத்தரைவிட்டு ஒருவர் தள்ளி இருப்பது ஏன்? உன்னை எப்படி வழிக்குக் கொண்டு வருவதுன்னு எனக்குத் தெரியும்..' என்று நினைத்தவன்,


"அகில், நாங்க கிளம்பறோம்.... ஐ வில் கால் யூ..." என்றவன் விருட்டென்று வெளியேறினான்...


வெளியில் வந்தவன் தன் அன்னையிடம் நாம் போகலாம் என்க, அதற்குள் அவள் திக்கித் திணறி அகிலிடம் பேசியது காதில் கேட்டது...


"என்னால முடியாது அத்தான்... அவங்களுக்கு வேணும்னா அப்படிப் பேசியது தப்பா தெரியாமல் இருந்திருக்கலாம்... ஆனால் என்னோட காதல் உண்மையானது தானே... என்னால எப்படி அவங்க வார்த்தைகளை மறக்க முடியும்... அவங்க பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் என் காதில் நெருப்பா கேட்டுட்டு இருக்கு.... கண்ணு முழிச்சவுடனே ஏன்டா பிழைச்சோமுன்னு நினைச்சேன்... இப்போ அவரைப் பார்த்தவுடன் மறுபடியும் எப்போ சாவோம்னு நினைக்கிறேன்... என்னால இதற்கு மேல் தாங்க முடியலை அத்தான்..." என்று கதறியவள் தொடர்ந்தாள்...


"அவங்களை மறந்துட்டு நான் வாழ்ந்துடுவேன்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்க... அவங்க தூரம் போய்ட்டவுடனே நான் அவங்களை மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைச்சிக்கிட்டாங்க... அதனால் தான் இத்தனை நாளா என்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசலை... அவங்க அப்படியே நினைச்சுக்கட்டும்.... அவங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கட்டும்.... நான் இப்படியே இருந்துட்டு போயிடறேன்...." என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் மூச்சு வாங்கியவள் கண்களை மீண்டும் மூடினாள்...



பெரிய ஆபத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்திருக்கிறாள்... இதற்கு மேல் அவளைத் தொந்தரவு பண்ணுவது அவள் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நினைத்த அகில் வெளியில் வந்தவன் ஹர்ஷா அவள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டான் என்று தெரிந்ததும் கலங்கினான்....


"அகில், அவள் நிலைமை எனக்குப் புரியுது... இப்போ அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம்... ஆனால் அவளிடம் சொல்லுங்க... நான் திரும்பி வருவேன்.... அவளோட கழுத்தில் என் தாலி ஏறுவது நிச்சயம்ன்னு சொல்லிடுங்க..." என்றவன் தன் பெற்றோருக்கு வாங்க என்பது போல் சைகை செய்து மருத்துவமனையை விட்டு வெளியேறினான்....


அவர்கள் வெளியே வரவும் சுந்தரம் மருத்துவமனைக்கு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது... ஹர்ஷாவைக் கவனிக்காமல் அவனை மோதியவர், "மன்னிச்சுடுங்க... அவசரத்தில் உங்களைக் கவனிக்கலை..." என்றவர் ஹர்ஷாவை நிமிர்ந்து பார்க்க, கலைந்த அந்தத் தோரணையிலும் அவன் அவரை வசீகரித்தான்...


வெளியே வந்தவன் காரின் சாவியைத் தன் தந்தையிடம் கொடுத்துவிட்டுப் பின் சீட்டில் அமர, அவன் அருகில் சங்கீதா அமர, தன் அன்னையின் மடியில் தலை சாய்த்தவனுக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது.....


இரண்டு நாட்களாகக் காட்டாற்று வெள்ளமாக அடித்துக் கொண்டிருந்த, சுனாமியாகச் சுழன்று கொண்டிருந்த தன் வாழ்க்கையை நினைத்தவன் இப்போது புயலுக்குப் பின் வந்த அமைதியை உணர்ந்து இரு கண்களையும் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தான்....


தன் மகனின் தலையைக் கோதிவிட்டவர் சிறிது நேரத்திலேயே அவன் உறங்கிவிட்டதை அறிந்தவர் மெல்ல குனிந்து அவனை எழுப்பாது அவன் தலையில் மென்மையாக முத்தமிட்டார்....


மருத்துவமனை உள்ளே வந்த சுந்தரத்திடம் அகில் நடந்த அனைத்தையும் சொல்ல வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தவருக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது சற்று முன் ஹர்ஷாவின் மேல் தான் மோதியது...


"இப்போ வெளியில் போனாரே அந்தப் பையனா" என்று ஆச்சரியப்பட்டவர், "பார்த்தா ரொம்பப் பெரிய இடத்து பையன் மாதிரி இருக்காரேப்பா?" என்க,


அகில் ஹர்ஷாவின் குடும்பத்தையும் அவர்களின் வசதியைப் பற்றியும் விளக்கமாகச் சொல்ல அவரின் திறந்த வாய் மூடவில்லை....

**************************************************


ஒரு வாரம் வரை அவளை மருத்துவமனையில் வைத்திருந்தவர்கள் பின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அவளிடம் இனி இது போன்ற முட்டாள்தனத்தைச் செய்வதில்லை என்று மாலதியும் கணேசனும் சத்தியம் வாங்கிக் கொண்டு சென்னை திரும்பினர்...


ஹர்ஷாவைப் பார்த்ததாலோ என்னவே கனிகாவின் உடலிலும் நடவடிக்கைகளிலும் நல்ல மாற்றம் வந்திருந்ததைச் சுந்தரம் கவனித்துத் தான் இருந்தார்.... எப்பொழுதும் எதையோ பறிக்கொடுத்தது போல் இருந்த மகளின் முகம் இப்பொழுது தெளிவாக இருந்தது...


அவள் என்னதான் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவளின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சி தன் மகளின் காதலை அவருக்கு உணர்த்தியது....


ஒரு நாள் எதேச்சையாக அவள் மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்ள ஹர்ஷாவை பற்றிப் பேச்செடுத்தார்....


"உன்னை ஹாஸ்பிட்டலில் வந்து பார்த்தாரேம்மா அவர் உன் கூடக் காலேஜில் படித்தவரா?"


அவருக்கு நேரிடையாக அவளின் காதலை பற்றிக் கேட்க ஏனோ விருப்பமில்லை....


திடீரென்று தந்தை கேட்டதும் விழித்தவள் அவர் ஹர்ஷாவைத் தான் கேட்கிறார் என்று புரிந்து கொண்டு ஆம் என்பது போல் தலை அசைக்க, அகில் ஹர்ஷாவை பற்றுச் சொல்லிவிட்டாலும் தன் மகளின் வாயில் இருந்து கேட்க வேண்டும் என்று, "ரொம்பப் பெரிய இடத்து பையன் மாதிரி தெரிந்ததுமா... உன் கிட்ட அவருக்கு எப்படிப் பழக்கம்??" என்று வினவினார்.


கண்களில் வலியுடன் தந்தையை ஏறெடுத்துப் பார்த்தவள், "அப்பா, அவரைப் பற்றி இப்போ எதுக்குப் பேச்சு... ப்ளீஸ் பா, அவரைப் பத்தி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க..." என்று முடித்துக் கொண்டாள்.


இந்த அளவிற்கு மகள் உயிர் பிழைத்து தேறி வந்ததே பெரிது என்று அவரும் அத்துடன் ஹர்ஷாவைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டார்...


அவள் உடல் நலம் தேறும் வரை அவளைத் தொந்தரவு செய்வதில்லை என்று முடிவு செய்த ஹர்ஷா கிட்டதட்ட ஒரு மாதம் வரை பொறுத்திருந்தவன் அகிலிடம் கனிகாவின் விலாசம் பெற்று தன் பெற்றோரை அழைத்தான் அவளைப் பெண் கேட்க, அகில் சுந்தரத்தை அழைத்து ஹர்ஷா பெண் கேட்க வருவதாகவும் ஆனால் கனிகாவிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்தான்...


*********************************************


அந்த நாளும் வந்தது....


மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து அவள் வேலையைப் பற்றியும் பேசவில்லை திவாகரை பற்றியும் பேசவில்லை.... ஆனால் தினம் கோவிலுக்கு மட்டும் சென்று வந்தாள்...


அதே போல் அன்றும் கோவிலுக்குக் கிளம்பியவள் சாதாரணப் பருத்தி புடவை அணிந்து வெளியில் வர ஒரு தந்தையாக அவளைக் கண்ட சுந்தரத்திற்குத் தன் மகளின் அழகு பிரமிப்பூட்டியது...


களை இழந்து காணப்பட்ட மகள் இன்று சிலை போல் தன் கண்ணெதிரில் நிற்பதைப் பார்த்தவரின் விழிகளில் நீர்ப்படலம் தென்பட, 'காமாட்சி, நம்ம பொண்ணு எப்படி வளர்ந்துட்டா பாரு...தேவதை மாதிரி இருக்கா...' என்று மனதிற்குள் உருகியவர் ஹர்ஷாவோடு தன் மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்க்கையில் முதன் முறையாகக் கடவுளை வேண்டினார்...


கோவிலுக்குச் சென்றவளுக்குப் புத்தி ஹர்ஷாவை வெறுக்கச் சொன்னாலும், மனம் அவனை விட்டு விலக முடியாமல் தவிக்க, இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் மனதை அடக்கத் தெரியாமல் கண்கள் மூடி பிராத்தனை செய்தவளின் விழிகளில் இருந்து நிற்காமல் அணையைத் திறந்துவிட்டது போல் நீர் பெருக, அவளின் அருகில் வந்த கோவில் குருக்கள், "கனிகா, திருநீறும், குங்குமமும் எடுத்தக்கம்மா" என்றார்..


கண்களைத் திறந்து பார்த்தவளுக்குக் குங்குமம் ஹர்ஷாவின் முகத்தைத் தன் கண் முன் மீண்டும் கொண்டு வர, அழுத விழிகளைத் துடைக்காமல் கூட இருந்தவளைப் பார்த்த குருக்களுக்குப் பரிதாபமாக இருந்தது.


அவள் தற்கொலைக்கு முயன்றது அந்தக் கிராமத்தில் அரசல் புரசலாகப் பரவியிருக்க அவளின் அருகில் வந்தவர் தலையை மென்மையாகக் கோதிவிட்டவர்,


"உன் கவலை எல்லாத்தையும் அம்பாள் பாத்துக்குவாம்மா... இனி உன் வாழ்நாளில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் தான் என்று என் மனசில் தோன்றுகிறது..." என்று கூறவும் கனிகாவைத் தேடி ஒரு சிறுவன் வரவும் சரியாக இருந்தது...


"அக்கா, உங்களைச் சுந்தரம் மாமா உடனே வரச் சொன்னார்" என்றவன் "உடனே... இப்பவே..." என்று அழுத்தி சொல்லிவிட்டு பறந்துவிட்டான்...


'அப்படி என்ன அவசரம்? சாதாரணமாகக் கோவிலுக்குச் செல்கிறேன் என்றால் என்னைத் தொந்தரவு செய்யமாட்டாரே..' என்று எண்ணியவாறே குருக்களிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...


வீட்டை நெருங்க நெருங்க மனம் தன்னையும் அறியாமல் இலகுவாக உணர, வேகமாக அடியெடுத்து வைத்தவளின் நடை வீட்டை அடைந்ததும் அப்படியே நின்றது... வெளியில் பெரிய வெளி நாட்டுக் கார் நிற்க இதயம் தடதடக்க ஆர்மபித்தது... ஒரு வேளை அவர் வந்திருப்பாரோ? ஏன்?


உடலில் சிறு நடுக்கம் படர மெதுவே அப்படியே திருப்பி எங்காவது போய்விடலாமா என்று தோன்றிய அந்த விநாடி சுந்தரம் வெளியில் வந்தார்...



தொடரும்..
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் 20


"கண்ணம்மா, வா... உன்னைத் தான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்..." என்றவர் உள்ளே செல்ல, கால்கள் தடதடக்க மெல்ல அடியெடுத்து வைத்தவளுக்குப் பயம் அப்பிக் கொண்டது.


அவள் எதிர்பார்த்தார் போல் அந்த ஓட்டு வீட்டிலும் கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாக அமர்ந்திருந்தான் ஹர்ஷா.


இரண்டு வருடங்களுக்குப் பிறகு கனிகாவை பார்த்ததாலோ அல்லது அவளை அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்ற மகிழ்ச்சியினாலோ என்னவோ இந்த ஒரு மாதத்தில் அவன் தன் பழைய வசீகரத்தையும் கம்பீரத்தையும் திரும்பப் பெற்றிருந்தான்.


அவன் வலப்புறம் சங்கீதாவும் இடப்புறம் சிதம்பரமும் அமர்ந்திருக்க ஹர்ஷாவை மட்டும் எதிர்பார்த்திருந்தவளுக்கு அவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே இருந்த கலக்கம் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது.


நிச்சயம் அவர்கள் அவரின் பெற்றோராகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள் கைகளைக் கூப்பிக் கும்பிட்டவள் "வாங்க" என்றாள்.


ஆனால் அவள் மறந்தும் ஹர்ஷாவை நிமிர்ந்து பார்க்கவில்லை.... அவளின் பதற்றம் உணர்ந்தவன் எழுந்து வந்து அவள் தோள் பற்றி,

"கனி, இவங்க என் மாம் அண்ட் டாட்.... உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்காங்க..." என்றான்.


அவன் பெற்றோருக்கு முன்னும், தன் தந்தையின் முன்னும், அவன் தன் தோள் பற்றியது கூச்சமாக இருக்க, அவனிடம் இருந்து அகன்றவள் சுந்தரத்தின் அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.


கனிகா நுழைந்ததில் இருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த சங்கீதாவிற்கு அவளின் அடக்கமும் அழகும் மனதிற்குள் இனிமையான உணர்வுகளைத் தந்தது என்றால், ஹர்ஷா தோள் பற்றியதும் அவனை விலக்கி தந்தையிடம் சென்றது அவள் மேல் மதிப்பை கொடுத்தது.


ஹர்ஷா போல் பேரழகனை, அதுவும் இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் பெண்களின் மனம் அலைப்புறும்.


ஆனால் அவனைக் காதலித்தும் கண்ணியம் காத்தவள், அவனை மறக்க முடியாமல் தற்கொலை வரை போனாலும் அவன் சொன்ன வார்த்தைகளுக்காக அவனிடம் இருந்து இதோ இந்த நாள் வரை ஒதுங்கி இருப்பவள்... அந்த நிமிடமே முடிவு செய்தார் எப்பாடுப்பட்டாவது அவளின் மனதை மாற்றித் தன் மகனுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்று.


அவள் தன்னை இன்னும் நிமிர்ந்தும் பார்க்காததால் அவளுக்குத் தன் மேல் கோபம் குறையவில்லை என்று தெரிந்திருந்தாலும் எப்படியாவது திருமணத் தேதியைக் குறித்துவிட்டே இங்கிருந்து செல்வது என்று முடிவு செய்த ஹர்ஷா.


"அங்கிள், அகில் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்று சொன்னார்.... என் மேல் உங்க எல்லாருக்கும் நிறைய வருத்தம் இருக்கும் என்று தெரியும்... அதுக்கு நான் உங்க ரெண்டு பேரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.... தப்பு எல்லாம் என் மேல் தான்.... நான் கனியை முழுசா நம்பாமல் சந்தேகப்பட்டது என் தவறு தான்...." என்றவன் கனிகாவின் அருகில் சென்று அவள் கையைத் தன் கரங்களுக்குள் வைத்து அவள் கண்களை ஆழ்ந்து பார்க்க, இத்தனை நடந்ததற்குப் பிறகும் அவன் கழுகுப் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தவாறே அவள் இருக்க,


"ஸாரி கனி... அன்னைகே ஹாஸ்பிட்டலில் உன்கிட்ட ஸாரி கேட்கணும்னு நினைச்சேன்.. பட்..." என்று இழுத்தவன் அவள் தன்னைப் பார்க்க கூட விருப்பம் இல்லாமல் வெளியே போகச் சொன்னதை நினைத்து ஒரு பெருமூச்சை விட்டவன் தொடர்ந்தான்.


"கனி, ஐ வாண்ட் டு மேரி யூ... நம்ம கல்யாணத்தைப் பற்றிப் பேசத் தான் மாம்மும் டாடும் வந்திருக்காங்க..." என்றான்.


மெதுவாக அவன் கரங்களில் இருந்து தன் கையை வெளியே எடுத்தவள்,

"வேண்டாம்.. நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கங்க..." என்றாள் அச்சத்தைத் தேக்கி வைத்த சன்னமான குரலில்.


அவளின் மறுப்பில் தங்கள் மகனின் முகம் மாறுவதைக் கண்ட சங்கீதாவிற்கு மனதிற்குள் திகிலாக, நிச்சயம் இன்று ஹர்ஷா அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தெரிந்தது.


அதே சமயம் கனிகாவை சமாளிப்பதும் பெரும் பாடு என்று புரிந்துக் கொண்டவர் எழுந்து அவள் அருகில் வந்தவர் அவள் தலையை வருடி,


"கனிகா... ஹர்ஷா எல்லாத்தையும் எங்கக்கிட்ட சொல்லிட்டான்... அவன் பண்ணினது மன்னிக்க முடியாத தப்புதாண்டா.... ஒரு பொண்ணா உன் மனசு எவ்வளவு அடிபட்டு போயிருக்கும்னு என்னால உணர முடியுது.... நிச்சயம் அவனோட ஸாரிங்கிற ஒரு வார்த்தையால காயம் பட்ட உன் மனசை ஆற்றி விட முடியாதுங்கறது நல்லா தெரியும்.... ஆனால் இந்த ரெண்டு வருஷமும் அவன் மனசுக்குள் எவ்வளவு சித்திரவதை அனுபவிச்சான்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..." என்றவர் ஹர்ஷாவின் முகத்தை ஒரு விநாடி திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் கனிகாவிடம் தொடர்ந்தார்.


"வெளியில் சொல்லாமல் உன்னை மறக்கவும் முடியாமல் அவன் தன்னைத் தானே தண்டிச்சுக்கிட்டு ஒரு நரகத்தில் வாழ்ந்த மாதிரி தான் வாழ்ந்தான்... அவனோட முகத்தில் ஒரு தெளிவை, ஒரு சந்தோஷத்தை இரண்டு வருஷத்திற்குப் பிறகு இப்ப தான் பார்க்கிறோம்... தயவு செஞ்சு அவனை மன்னிச்சு ஏத்துக்கடா..." என்று கெஞ்ச,


சுந்தரத்திற்கு இவ்வளவு பெரிய பணக்காரர்கள் வலிய வந்து தன் பெண்ணிடம் இவ்வாறு கெஞ்சுவது வியப்பாகவும் அதற்குத் தன் மகள் படியாதது கண்டு வருத்தமாகவும் இருந்தது.


கனிகாவின் அருகில் வந்தவர்,

"கண்ணம்மா, அதான் இவ்வளவு எடுத்துச் சொல்றாங்க இல்லையா... இன்னும் என்னம்மா தயக்கம்?'' என்க,


"அப்பா ப்ளீஸ் பா... நீங்களாவது என்னைப் புரிஞ்சுக்கங்கப்பா... எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்பா...." என்று கண்களில் நீர் திரையிட்டிருக்கக் கூறியவளை பார்த்த ஹர்ஷா தன் கோபத்தை அடக்கப் பெரும்பாடு பட்டான்.


அவனின் கர்வம் மீண்டும் தலை தூக்க முயற்சித்தது... ஆனால் அன்றைய கர்வத்தில் வெறி இருந்தது, ஆணவம் இருந்தது... இன்றைய கர்வத்தில் தன் காதலை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு மட்டுமே இருந்தது.


தன்னுடைய ஆணவத்தினால், கோபத்தினால், முட்டாள்தனத்தினால் தான் இழந்த அழகான காதலுடன் கூடியிருக்க வேண்டிய இரண்டு வருடங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற தாகம் இருந்தது.


தன்னை விட்டு, கிட்டதட்ட இந்த உலகத்தை விட்டே சென்று விட்டு மீண்டு வந்த அவளைத் தன்னுடனே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கனவு இருந்தது... ஆனால் அவளின் மறுப்பு அவனின் உள்ளத்தைத் தடுமாறச் செய்தது.... எங்கே மீண்டும் அவளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தை வரவழைத்தது.


அவனுக்குத் தன் அன்னை கெஞ்சும் பொழுதே வருத்தமாகவும் இருக்க இத்தனை பேர் சொல்லியும் இதென்ன பிடிவாதம் என்று கோபம் வந்தது.


தன்னுடைய தவறுகள் தான் அவள் மனதை இரும்பாக உருமாற்றி இருக்கிறது என்பதனை உணர்ந்திருந்தாலும், மீண்டும் அவளை இழக்க அவன் தயாராக இல்லை.... அவளைப் பிரிந்து வாழும் இதயமும் அவனுக்கு இனி இல்லை.


அவளின் மறுப்பைக் கேட்ட சிதம்பரம் எழுந்து பேச ஆரம்பிப்பதற்குள் தன் கரத்தை அவர் முன் பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்தவன் அவளின் வெகு அருகில் வந்து,

"கல்யாணம் வேண்டாம்னா அப்புறம் ஏண்டி தற்கொலை வரை போனே?" என்றான் பற்களைக் கடித்தவாறே ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தத்துடன்.


அவனின் கோபம் உள்ளுக்குள் குளிரெடுக்க வைத்தாலும் அவனின் சந்தேகம் தன்னை வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொன்று கொண்டே இருக்கும் என்று நினைத்தவள், முதன் முறையாக ஒட்டு மொத்த தைரியத்தையும் வர வழைத்து அவனை எதிர்த்து அவன் கண்களை நோக்கி பேச ஆரம்பித்தாள்.


"என்னால வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது... அதனால் தான் தற்கொலை பண்ணிக்க முடிவு செய்தேன்.... அதுக்காக உங்களையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது... ரெண்டு வருஷமா நான் எப்படி இருக்கேன்... உங்க வார்த்தைகளைக் கேட்டும் உயிரோடு இருக்கேனா, இல்லை செத்துட்டேனான்னு கூடக் கண்டுக்காம இருந்துட்டு இப்ப வந்து, வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னால் எப்படி???? ஒரு வேளை நான் செத்திருந்தால்?" என்று கேட்க,


நொடி நேரம் கூடத் தாமதிக்காது "நானும் செத்திருப்பேண்டி" என்றான் வார்த்தைகளிலும் கண்களிலும் வலியைத் தாங்கி.


அதிர்ந்த சிதம்பரமும், சங்கீதாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, கனிகாவிற்கு அவனின் பதில் ஈட்டியைக் கொண்டு இதயத்தைக் கிழித்தது போல் இருந்தும், மனம் மாறாமல் மீண்டும் தலை கவிழ்ந்தவாறே அவனை எதிர் நோக்க தைரியமில்லாமல்,


"நிச்சயம் உங்களுக்கு நல்ல பெண் கிடைப்பாங்க... ப்ளீஸ் நீங்க வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கங்க..." என்று சொன்னதையே சொல்ல,


அவள் என்னவோ மெதுவாகத் தான் அந்த வார்த்தைகளைக் கூறினாள், ஆனால் "வேறு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கங்க..." என்ற வார்த்தைகளால் வெகுண்டெழுந்தவன் அவள் கரத்தை பற்றி இழுக்க, அவன் மார்பில் மேல் வந்து விழுந்தவளை விடாமல் இறுக்கி பற்றியவன்,

"எனக்கு நீ தான் வேண்டும்... நீ மட்டும் தான்..." என்றான்.


அவனின் கர்ஜனையில் அந்தச் சிறிய ஓட்டு வீடு எதிரொலித்தது.


அவனின் முரட்டுத் தனமான செயலில் திகைத்த சங்கீதா,

"ஹர்ஷா, என்னப்பா இது? கொஞ்சம் பொறுமையா இருப்பா... நாங்க தான் பேசிக்கிட்டு இருக்கோமில்லையா?" என்று பதற,


"மாம், இவகிட்ட இதுக்கு மேல் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை" என்றவன் சுந்தரத்தை பார்த்து "அங்கிள், உங்க பொண்ணு கழுத்துல நான் கட்டுற தாலி மட்டும் தான் ஏறும்... அவள் விருப்பத்தோடேயோ அல்லது விருப்பம் இல்லாமலோ அதுவும் கூடிய சீக்கிரம்..." என்றவன் அவளைச் சட்டென்று விட்டு வெளியேறினான்.


அவனின் வார்த்தைகளில் அதிர்ந்தாலும் தன் மனதின் இறுக்கத்தை அவளால் அத்தனை இலகுவாகத் தளர்த்த இயலவில்லை... கண்களில் வலியோடு விழிநீர் பெருகியிருக்க அவனையே வெறித்துப் பார்த்தவள் அவன் சென்றதும் சங்கீதாவையும் சிதம்பரத்தையும் திரும்பி பார்த்து,


"என் மேல் உங்களுக்கும் வருத்தம் இருக்கும்னு தெரியும்... வயசில் பெரியவங்க நீங்க, நீங்களே வலிய என் வீடு வரைக்கும் தேடி வந்து என் கிட்ட மன்னிப்புக் கேட்கறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.... ஆனால் அதே சமயம் என் மனசில் இப்ப எந்த ஆசையும் எதிர்பார்ப்பும் இல்லை..." என்றவள் சிறிதே தயங்கி, எங்கே வெளியே சென்றவனின் காதில் விழுந்து விடப் போகிறதோ என்ற அச்சத்தில் மெல்லிய குரலில்.


"எப்படி இத்தனை நாள் அவர் இல்லாமல், ஆனால் அவரோடு நினைவுகளைச் சுமந்துக்கிட்டு வாழ்ந்தேனோ அதே போல் இனியும் வாழ்ந்திடுறேன்... தயவு செஞ்சு என்னைத் தப்பா நினைக்காதீங்க... அவருக்கு என்னை விட நல்ல பெண் கிடைக்கும்... உங்க மனசுக்கு ஏற்றது போல நல்ல மருமகள் கிடைப்பாங்க... அவர் மனச மாற்றி எப்படியாவது அதுக்குச் சம்மதிக்க வைங்க..." என்றவள் அதற்கு மேல் ஆற்றமாட்டாமல் கதற, சங்கீதாவிற்கு மனது வலித்தது.


ஹர்ஷாவின் மேல் தீராத காதல் இருக்கிறது இந்தச் சின்னப் பெண்ணிற்கு, எங்கே தன் தந்தை தன்னை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி தான் தற்கொலை வரை சென்று இருக்கிறாள்... இப்பொழுது அவளின் ஆழ்ந்த காதல் தெரிந்த அவள் தந்தை நிச்சயம் அவளை இனி தொந்தரவு செய்யமாட்டார் என்று அவளுக்குப் புரிகிறது.


இனி இப்பொழுது இருப்பது போல் என்றும் இருந்து விட முடியும் என்று தவறாகக் கணித்து இருக்கிறாள்.


ஆனால் தங்கள் மகனின் குணத்தை ஆதியில் இருந்து கண்டறிந்தவர்கள் அல்லவா இவர்கள்... அவன் நிச்சயம் கனிகாவை திருமணம் முடிக்காமல் விட மாட்டான் என்று தோன்ற அவர்களுக்கு யார் பக்கம் பேசுவது என்று தெரியவில்லை.


மௌனமாகப் போய் வருகிறோம் என்று தலையை மட்டும் அசைத்து வெளியேறினார்கள்.


***************************************************


அங்குக் காரில் கண்களில் வலியோடும் முகத்தில் வேதனையோடும் தன் பெற்றோருக்காகக் காத்திருந்த மகனை பார்த்தவர்களுக்கு மனம் பாரமானது... ஒன்றும் பேசாமல் ஒரு முறை கனிகாவின் வீட்டை திரும்பிப் பார்த்துவிட்டுக் காரில் ஏறினார்கள்.


காரில் நிலைத்திருந்த அமைதி சங்கீதாவின் மனதிற்கு அச்சத்தையே கொடுக்க, இதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் ஹர்ஷாவின் புறம் திரும்பியவர்,


"ஹர்ஷா, கொஞ்சம் பொறுமையா இருப்பா... உன்னோட கோபத்தினால் என்னென்ன நடந்திருக்கு, அது எங்க போய் முடிஞ்சிருக்குன்னு உனக்கு நாங்க சொல்லி தெரிய வேண்டியது இல்லை, உங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் கிட்டத்தட்ட நரகமாகவே இருந்திருக்கு... இனியும் ஏன் இந்த அவசரம், பிடிவாதம்? கனிகாவோட மனம் மாறும் வரை நாம் வெய்ட் பண்ணி தான் ஆகனும்பா.."


"ஸாரி மாம், ஐ கேண்ட் வெயிட் தட் லாங் [Sorry mom, i can't wait that long] " என்றவன் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று முடித்துக் கொண்டான்.


கனிகாவின் மனதை மாற்ற சுந்தரமும் அகிலும் எவ்வளவோ முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது... நாட்கள் அதன் போக்கில் நகர ஒரு மாதம் வரை பொறுத்திருந்து பார்த்த ஹர்ஷாவிற்கு இனியும் அவள் மனம் மாறும் வரை காத்திருப்பதில் பயனில்லை என்று தோன்ற அவளின் விருப்பம் இல்லாமலே அவளை மணக்க முடிவு செய்தான்.


தன் மனதில் வகுத்துக் கொண்ட திட்டத்தின் படி அகிலை அழைக்க,

"அவ பிடிக்கொடுத்தே பேச மாட்டேங்கிறா ஹர்ஷா, இதுக்கு மேல என்னைய வற்புறுத்தினீங்கன்னா, நான் நிச்சயம் மறுபடியும் ஏதாவது பண்ணிக்குவேன், இல்லைன்னா வீட்டை விட்டு ஓடிடுவேன்னு சொல்றா.... மாமாவிற்கும் என்ன பண்ணுவதுன்னே தெரியலை..." என்றான் அகில்.


"அகில், எனக்கு ஒரு ஹெல் பண்ணுங்க ப்ளீஸ், வர ட்வெண்டி எய்ட்த் (Twenty eighth) எனக்குப் பேர்த் டே... சென்னை வந்ததில் இருந்து எவ்ரி இயர் நாங்க ஃபேமிலியா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்குப் போவோம்... நீங்க எப்படியாவது கனிகாவை ஏதாவது அவ நம்புற மாதிரி காரணம் சொல்லி அங்க கூட்டிட்டு வாங்க..."


"எதுக்கு ஹர்ஷா? எதுனாவது ப்ளான் பண்றீங்களா?"


"அகில், இன்னும் டூ டேஸ்ல நான் உங்களுக்கு மறுபடியும் கால் பண்றேன்... அப்ப எல்லா டீடெய்ல்ஸும் சொல்றேன்... நீங்க அவளை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வாங்க.."


"ஓகே ஹர்ஷா.... பட் அவ ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்காள்... நீங்க பொண்ணு பார்க்க போன அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சுந்தரம் மாமா சொன்னாரு.... பார்த்து நடந்துக்கங்க... திரும்பவும் அவள் வேறு எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது..."


"நோ அகில்.... ஷி இஸ் மைன் [She is mine]... இனி அவளுக்கு எந்தக் கஷ்டமும் வர விடமாட்டேன்... அவள் மனம் வருந்தும்படியா நானும் நடந்துக்க மாட்டேன்...ஐ ப்ராமிஸ்" என்றவன் தன் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தான்.



************************************


எப்படியும் அகில் கனிகாவை அழைத்து வந்துவிடுவான் என்று எண்ணி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்தவன் தன் அன்னையிடமும் தந்தையிடமும் சொல்ல அதிர்ந்தார்கள்.


"ஹர்ஷா, நீ நல்லா யோசிச்சு தான் இத செய்யறியா?? கனிகாவ எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி அவளை மேரேஜிற்குச் சம்மதிக்க வைக்க முடியாதா?? ஏதாவது பிரச்சனையா ஆகிடப் போகுதுப்பா!!!"


"நோ, மாம்... இதைத் தவிர வேறு வழி தெரியலை... அவளப் பத்தி எனக்குத் தான் நல்லா தெரியும்... அவள் எதை வேனா மறப்பா, ஆனால் நான் அவளைச் சந்தேகப்பட்டுப் பேசிய பேச்சை மட்டும் மறக்கவே மாட்டாள்... அத மறக்குற வரைக்கும் என்னை மேரேஜ் பண்ணிக்கவும் மாட்டாள்... ஆனால் எனக்கு அவ மனசு மாற வரைக்கும் காத்திருக்கும் பொறுமை இல்லை... போதும்.. ஏற்கனவே அவ இல்லாமல் ரெண்டு வருஷம் நான் பட்ட கஷ்டம் போதும்... எனக்கு அவ வேணும், அதுவும் உடனே... அதுக்கு இது ஒண்ணு தான் வழி..."


மகனின் பிடிவாதம் தெரியும் ஆதலால் மறுக்க முடியாமல் "ஒரு வேளை அவள் வரவில்லை என்றால்? இல்ல வந்ததற்குப் பிறகு கல்யாணத்திற்குச் சம்மதிக்கலைன்னா?" என்று தயங்க,


"மாம், அகில் எப்படியும் அவளை அழைத்து வருவான்... எனக்கு அப்புறம் கனியின் மேல் ரொம்ப அக்கறையுள்ளவன் அவன் மட்டும் தான்... அதனால் நிச்சயம் அவன் சொன்னால் கனியும் வருவாள்.... வந்ததற்குப் பிறகு அவளை மேரேஜிற்குச் சம்மதிக்க வைக்கிறது என்னோட வேலை" என்றவன் அதற்கான ஏற்பாட்டைக் கவனிக்க ஆரம்பிக்க,


சங்கீதாவிற்கும், சிதம்பரத்திற்கும் தன் மகன் செய்யப் போகிற காரியத்தில் உடன்பாடில்லை என்றாலும் அவனின் அழுத்தமும், பிடிவாதமும் தெரிந்து இருந்ததால் எல்லாம் நல்ல விதமாக முடிய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அவன் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார்கள்.


திருமண ஏற்பாட்டை முடித்தவன் அகிலுக்கு விஷயத்தைச் சொல்ல, அதிர்ந்த அகிலிடம் தன் பெற்றோரிடம் சொன்னதையே சொன்னவன்,

"அகில், எனக்கு இது தவிர வேறு வழி தெரியவில்லை... இதுக்கு மேல் என்னால அவளை விட்டுட்டு இருக்க முடியலை... போதும் நாங்க ரெண்டு பேரும் பட்ட கஷ்டம்... ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க... நிச்சயம் கனி என்கிட்ட வந்ததுக்கு அப்புறம் சந்தோஷமா இருப்பா..." என்றான்.


வேறு வழி தெரியாமல் ஒத்துக் கொண்ட அகில், சுந்தரத்தையும் கனிகாவையும் அழைத்துத் தாங்கள் குடும்பத்தோடு திருவண்ணாமலைக்குச் செல்வதாகவும் அவர்களும் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூற, முதலில் மறுத்த கனிகா பின் அகிலின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தாள்.


பின்னர் ஒரு நாள் சுந்தரத்தை அழைத்த ஹர்ஷா தன்னோட திட்டத்தைச் சொல்ல ஹர்ஷாவிற்கு அவரைச் சம்மதிக்க வைப்பது அத்தனை கடினமாக இல்லை.


ஒரு வழியாக மற்ற ஏற்பாடுகளையும் முடித்தவன் தன் பெற்றோருடன் கோவிலுக்குப் பிரயாணமானான்.


தன் தந்தையுடன் சென்னை வந்த கனிகாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபகத்தில் வந்தது... மனம் முழுவதுடன் பாரத்துடன் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்த அகில்,


"கனிகா, இன்னும் நடந்ததையே நினைச்சிட்டு இருந்தீன்னா, மனசு எப்பவும் அலைமோதிட்டு தான் இருக்கும்... மன நிம்மதிக்கு தான் கோவிலுக்கே போறது... சீக்கிரம் கிளம்பு..." என்றவன் ஒரு வழியாக அவள் மனதை மாற்றிக் கிளம்ப வைத்தான்.


அவனுக்கு எங்கு வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிடுமோ என்று அச்சம்.


அகிலின் வார்த்தைகளுக்கு எப்பொழுதுமே கனிகாவிடம் ஒரு மதிப்பு இருக்கும் ஆதாலால் தனக்காக இல்லை என்றாலும் அகிலிற்காகக் கிளம்பியவள் பயணம் முழுவதும் அமைதியாகவே வந்தாள்.


வழக்கமாகக் கோவில் என்றாலே மனம் அமைதியுறும், ஒரு நிம்மதி படரும்... ஆனால் அன்று ஏனோ சொல்லொண்ணா ஒரு படபடப்பு வந்தது... இதயம் தாறுமாறாகத் துடிப்பது அவள் காதுகளுக்கே கேட்பது போல் இருந்தது.


ஒரு பக்கம் ஏதோ நடக்கப் போவது போல் திகிலாகவும் அதே சமயம் அது நல்ல காரியமாகவும் இருக்கலாம் என்ற உள்ளுணர்வும் கலந்து சொல்ல, இரு வேறு உணர்வுகளின் தாக்கத்தால் மனதில் சொல்ல முடியா அலைப்புறுதல்.


மௌனமாக வந்தவள் அனைவருடனும் சேர்ந்து சாமி தரிசனம் செய்ய, யாரையோ தேடுவது போல் அகில் சுற்றுமுற்றும் பார்த்தவாறே இருக்க, அவன் அருகில் வந்தவள்,

"யாரை தேடுறீங்க அத்தான்.... யாரையும் எதிர்பார்க்கிறீங்களா என்ன?" என்றாள்.


அவளுக்குச் சந்தேகம் வருவது போல் நடந்து கொண்ட தன் புத்தியை மானசீகமாக அடித்துக் கொண்டவன் "இல்லை" என்று மழுப்பினான்.


இருந்தும் அவனின் பதிலில் சமாதானம் அடையாமல் இருந்தவள் தானும் சுற்றுமுற்றும் பார்க்க, அகிலிற்கு அலை பேசியில் அழைப்பு வந்தது... அவன் முடிந்தவரை குரலை அடக்கி பேசியதிலேயே அவளின் சந்தேகம் மேலும் வலுக்க, அவனையே பார்த்தவாறே நின்றிருந்தாள்.


ஒரு சில நிமிடங்களில் பேசி முடித்தவன் தன் அன்னையிடம் வந்து "அம்மா, இப்போ தான் என்னோட ஃப்ரெண்டு ஃபோன் பண்ணினான்... என் கூடப் படிச்சவன் ஒருத்தனுக்கு இங்க இன்னைக்குக் கல்யாணமாம்... இப்ப தான் நாம கோவிலுக்குள் நுழையும் போது பார்த்திருக்கான்... என்னைக் கூப்பிடறான்... வருகிறீர்களா? எல்லோரும் கொஞ்ச நேரம் அங்க போயிட்டு வந்துடுவோம்" என்றான்.


"அகில், உன் ஃப்ரெண்டுன்னு சொல்ற, கல்யாணத்திற்குக் கூப்பிடாமல் எப்படிப்பா போறது?"


"அம்மா, இது லவ் மேரேஜ் போல, ப்ளீஸ் வாங்கம்மா, ஒரு நிமிஷம் போய்ட்டு வந்துடுவோம்...."


"அகில், நீ மட்டும் வேணா போய்ட்டு வா... நாங்க இப்படியே இங்க உட்கார்ந்திருக்கோம்..."


"அம்மா, லவ் மேரேஜ் அப்படிங்கறதால பெரியவங்க யாரும் வரலையாம்... பெரியவங்க நீங்க எல்லாரும் வந்தால் அவனுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு சொல்றாம்மா... ஒரு நிமிஷம் வரதில் என்னம்மா தப்பு, ப்ளீஸ் வாங்க.."


அவனின் பிடிவாதத்தில் சலித்தவர் கணவரிடம் சொல்ல, அவரை எளிதில் சம்மதிக்க வைத்தவனால் கனிகாவை சம்மதிக்க வைக்க முடியவில்லை.


நிகிலாவும்,

"வா கனிகா, வந்ததும் வந்துட்டோம், ஒரு கல்யாணத்தைப் பார்த்துட்டு போவோம்" என்க, நல்ல வேளை சுந்தரத்திற்கு ஏற்கனவே தங்களுடைய திட்டத்தைச் சொல்லியிருந்ததால் அவரும் அவளைச் சமாளித்தவர் ஒருவழியாகத் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்ல,


அங்குப் பளிச்சென்று பட்டு வேஷ்டி சட்டையில் அழகான புன்னகையுடன் பாந்தமாக நின்றிருந்தான் ஹர்ஷா..


தொடரும்....
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top