JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episodes 25 & 26

JB

Administrator
Staff member
அத்தியாயம் 25


வந்தவன் வேலை ஆட்களை அழைத்துத் தன் காரில் இருந்தவைகளை எடுத்து வரச் சொன்னவனின் விழிகள் தன்னிச்சையாகத் தன் மனையாளைத் தேட, அவள் சமையல் அறையில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டவன் அவளைத் தேடிச் சென்றான்.


அங்குத் தன் அன்னையுடன் சேர்ந்து பாங்காக அவள் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு இத்தனை நாள் காத்திருந்த பலன் கிட்டியதாகவே பட்டது.


அவள் அருகில் வந்தவன் அவளுக்கு மட்டும் கேட்குமாறு குனிந்து, "நிறைய ட்ரெஸ் வாங்கி வந்திருக்கேன், நம் ரூமில் தான் வச்சிருக்கேன்.... அதில் ஸ்பெஷலா பர்ப்பிள் கலர்ல ஸில்க் ஸாரி இருக்கு.... போய் அதைக் கட்டிட்டு ரெடியாகு..." என்றான்.


அவன் தன் பின்னால் வந்து நின்றதே தெரியாமல் அவள் சமையலில் ஈடுப்பட்டிருக்க அவன் தீடீரென்று கிசுகிசுத்ததும் தூக்கிவாரிப் போட்டது என்றால் அவன் சொன்ன செய்தியில் நெஞ்சு படபடக்க அவனை நிமிர்ந்து கெஞ்சுதலாகப் பார்த்தவளைக் கண்டவனுக்கு இந்த உலகமே தன் காலடியில் வந்து விழுந்ததைப் போன்ற பிரமிப்பு வந்தது.


அவன் பார்வையின் வீரியத்தைத் தாங்காமல் சடக்கென்று தலையைத் திருப்பியவள் சங்கீதாவைப் பார்க்க அவர் இவர்கள் இருவரையும் கண்டும் காணாதது போல் மும்முரமாக வேலையில் இருந்தார்.


"சீக்கிரம் வா.." என்று சொல்லி திரும்பியவனைச் சங்கீதாவின் குரல் அழைத்தது.


"ஹர்ஷா டின்னர் ரெடிப்பா.... ஒரேடியா சாப்பிட்டுட்டு போ..."
"ஒகே மாம்.." என்றவன் டைனிங் டேபிளில் அமர கனிகா உணவு பறிமாற உள்ளம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க வழக்கத்தை விடச் சிறிது அதிகமாகவே சாப்பிட்ட மகனை கண்ட சிதம்பரத்திற்கும் சங்கீதாவிற்கும் மகனின் மனதில் இத்தனை நாள் இருந்த பாரத்தின் அளவு புரிந்தது.


சாப்பிட்டவன் 'மேலே வா' என்பது போல் தலை அசைத்துக் கனிகாவிடம் சைகை செய்து மாடி ஏற இன்றைக்கு இவரிடம் இருந்து எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று குழம்பியவளாக ஸ்தம்பித்து நின்றாள்.


மாமியாரும் மாமனாரும் உணவு உண்ட பின் தானும் ஏனோ தானோ என்று கொறித்தவள் சமையல் அறைக்குள்ளே கதி என்று கிடக்க, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவள் இன்னும் கீழேயே இருப்பதைக் கண்டவன் சலிப்புடன் கீழே இறங்கி வர, சமையல் அறையில் அவளைக் கண்டவன் அருகில் நெருங்கி,
"இன்னும் இங்க என்ன பண்ணுற?" என்றான்.


ஏற்கனவே அரண்டு போய் இருந்தவள் திடுக்கிடலுடன் அவனைத் திரும்பி பார்க்க அவள் கரம் பற்றி இழுத்தவன் தன் அறைக்குச் செல்ல, சங்கீதாவும் சிதம்பரமும் தங்களையே பார்த்திருப்பதைப் பார்த்தவளுக்குக் கூச்சமாக இருக்க, குனிந்த தலை நிமிராமலே அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.


தங்கள் அறையை அடைந்ததும் அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தியவன் புடவையைக் கொடுத்து கட்ட சொல்ல,


இப்போ எதுக்கு வேற புடவை, கட்டியிருக்கிறதே நல்லா தான் இருக்கு, ஆனால் சொன்னால் கேட்கிற ஆளா இவர் என்று குழம்பியவள் வேறு வழியின்றி,


"புடவை எங்க மாத்துறது??" என்றாள் தயங்கியவாறே.


அவளுக்கே தான் கேட்கும் கேள்வியில் எவ்வளவு முட்டாள் தனம் தெரிகிறது என்று புரிந்தது.


"ஏன்? இங்க மாத்திறதுக்கு என்ன?" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.


மௌனமாகத் தலை கவிழ்ந்தவாறே இருந்தவளை கண்டவனுக்குச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர மூச்சுக் காத்துப் படும் அளவிற்கு அவள் அருகில் நெருங்கி நின்றவன், "இங்கேயே ட்ரெஸ் பண்ணு..." என்றான்.


மெதுவாக நிமிர்ந்தவள் திரும்பி குளியல் அறையைப் பார்க்க,


"இல்லை பரவாயில்லை, இங்கேயே மாத்து..." என்றான் விடாப்பிடியாக.


"இங்கேயா?" என்று வாய் விட்டு கூறியவளை நக்கல் சிரிப்புடன் பார்த்தவன் அவள் முகம் நோக்கி குனிந்து,


"ஓ.... நான் இருக்கிறேன் என்று வெட்கமோ.... ஏன்? நான் உன்னை அப்படிப் பார்த்ததே இல்லையா?" என்றான் வார்த்தைகளில் இள நகை ஓட.


அதிர்ந்தவள் உள்ளும் புறமும் நடுக்கம் எடுக்க, ஒவ்வொரு வார்த்தையாக,


"நீங்க கொஞ்சம் வெளியில் இருங்கீங்களா?" என்றாள் தயங்கியவாறே.


குறும்பு சிரிப்பு சிரித்தவன் தலை முடியை அழுந்த கோதிவிட்டுத் தோள்களைக் குலுக்கியவன் பால்கனிக்கு செல்ல அவன் எங்கு வந்துவிடுவானோ என்று அச்சத்தில் புடவையை அவசரம் அவசரமாக அணிந்தவள், இனி என்ன செய்வது என்று குழப்பத்துடன் கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள்.


ஒவ்வொரு விநாடியும் படபடப்புடன் செல்ல, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பயத்தில் வியர்க்க ஆரம்பித்து இருந்தது.


அவன் அன்று தன்னிடம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட விதம் கண் முன் தோன்ற நாக்கு உலர நடுங்கும் விரல்களை இறுக்கப் பிடித்துக் கொண்டவள் அவன் வரவிற்காகத் திகிலுடன் காத்திருந்தாள்.


திகில் படம் பார்க்கும் பொழுது ஒரு சின்னச் சத்தம் கேட்டால் கூட உடல் முழுவதும் தூக்கிப் போட செய்யுமே... அப்படித் தூக்கிப் போட்டது அவன் உள்ளே வரும் பொழுது அவன் திறந்த கதவின் சத்தம்.


விருட்டென்று எழுந்து நின்றவள் தலை தரையில் பதிந்துவிடும் அளவிற்குக் குனிந்து நிற்க அவளின் அச்சம் கண்டவன்,


"ஏன்டி, இன்னுமா உனக்கு இந்தப் பயம் போகலை??" என்று சொன்னாலும் அவளின் பயந்த சுபாவமே அவனை அவளிடம் இழுத்துச் சென்றது.


அருகில் வந்தவனை நிமிர்ந்து பார்க்காமல், "நான் கீழே படுத்துக்கிறேன்.." என்றவள் நகரப் போக,


சட்டென்று அவளை நெருங்கியவன்,

"கீழப் படுக்கிறேன் என்றால்?" என்று திருப்பி அவளையே கேட்க,

"இல்லை, நான் இங்க கீழேயே படுத்துக் கொள்கிறேன்.." என்று தரையைக் காட்டவும்,


"இன்னும் எத்தனை முறை இப்படி வலிக்க வலிக்க அடிப்படி.." என்றான்.


அவனை நிமிர்ந்து பார்த்திருந்தால் அவன் மனதில் பட்ட வலி கண்களில் தெரிவது அவளுக்கும் தெரிந்திருக்கும்.


தலை கவிழ்ந்தவாறே அவள் மீண்டும் நகரப் போகப் பின்னால் இரண்டு அடி வைத்தவள் தடுக்கி விழப் போகச் சட்டென்று அவள் இடையை வளைத்து பிடித்தவன் அருகில் இழுக்கச் சூடான அவன் மூச்சு காத்து பழைய நினைவுகளைக் கண் முன் நிறுத்தியது.


கலங்கிய முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,


"கனி, நான் உன் ஹர்ஷா டி.... எப்படி டி இப்படி மாறின??" என்றான் வார்த்தைகளில் அத்தனை சோகத்தையும் தாங்கி.


"எனக்குத் தெரியும் நீ மாறினதுக்கு முழுக் காரணமும் நான் தான், நான் மட்டும் தான்.... அதுக்குக் காரணம் என்னோட பிடிவாதம், திமிரு, கர்வம், ஈகோ எல்லாம்... உன்னை இரண்டு வருஷம் தவிக்க விட்டுவிட்டேன்... எனக்குத் தெரியும்... ஆனால் ஒரு நாள் கூட உன்னை நான் நினைக்காம இருந்தது இல்லை டி.. ஒவ்வொரு நாளும் நான் உன்னை முதன் முதலா காலேஜில் பார்த்தது, உன்னைக் கோவிலில் சந்திச்சு உனக்குக் குங்குமம் வச்சுவிட்டது, உனக்கு ஸாரி [Saree] எடுத்துக் கொடுத்தது, உன்னிடம் நம்ம காலேஜ் ஆடிட்டோரியத்துல வச்சு என் லவ்வ ப்ரொப்போஸ் பண்ணினது, ஒவ்வொண்ணையும் நினைச்சு நினைச்சு எப்படித் தவிச்சிருக்கேன் தெரியுமா...."


கூறியவன் ஒரு நீண்ட பெரு மூச்சுவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவாறே தொடர்ந்தான்.


"ஆனால் என்னோட இயற்கையான ஆணவம் உன் கிட்ட என்னைப் பேசவிடலை... ஆனால் உன்னை விட்டு பிரிஞ்ச சில மாதங்களிலேயே உன்னோடு மறுபடியும் பேசனும்னு ஆசை வந்திருச்சு... அப்போ தான் என் தலையில் இடியை தூக்கி போட்ட மாதிரி அந்த ஃபோட்டோஸ் வந்தது.... என்ன தான் என் மனசு காதலிச்சவனையே தொடவிடாதவ வேற ஒருத்தனையா தொடவிட்டுடுவான்னு சொன்னாலும், என்னோட ஓவர் பொஸஸிவ்னெஸ் என் மனசில சந்தேகம்ங்கிற தீயை ஏற்றிவிட்டது..... ஆனால் என்னையும் அறியாமல் என்னோட ஆழ் மனசில நீ தப்பானவ இல்லைன்னு பதிஞ்சுருக்கணும்.... அதனால் தான் நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சன்னு அகில் ஃபோன் பண்ணினவுடன் என் உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு உன்கிட்ட வந்து சேர்ந்தேன்....."


"எப்படி டி என்னைய விட்டு போக மனசு வந்துச்சு? உன் கூடக் கிட்டதட்ட எட்டு மாசம் சுத்தி இருக்கிறேன்... தனித்தனியா இருந்தாலும், பிரிஞ்சு இருந்தாலும், ஹர்ஷா நம்மளை கைவிட மாட்டான் என்கிற நம்பிக்கையை நான் உனக்குக் கொடுக்கவே இல்லையா?" எனும் பொழுது அவன் இதயம் வலியில் துடித்ததை அவளும் உணர்ந்ததாலோ கண்கள் கலங்க விழி நீர் வழிய அவனையே பார்த்திருந்தாள்.


"ஆனால் நானும் தப்புப் பண்ணிட்டேன்... உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும், உன் மனச யாராலும் மாத்த முடியாதுன்னு தெரிஞ்சும் முட்டாள் தனமா தப்புப் பண்ணிட்டேன்... ஐ ஆம் சோ ஸாரி ஃபார் தட்... ப்ளீஸ் டோண்ட் பனிஷ் மி மோர் கனி... [I am so sorry for that... please dont punish me more Kani]... என்னால தாங்க முடியலைடி.... ரொம்பக் கஷ்டமா இருக்கு... பழைய மாதிரி, நம்ம காலேஜ் டேஸ்-ல இருந்த மாதிரி மாறணும் போல் இருக்குடி.." என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அவனது ஸ்பரிஸம் அவளின் உயிர் வரை சென்று சிலிர்க்க வைத்தாலும் கட்டைப் போல் நின்றிருந்தவளைக் கண்டவன் விரக்தியில் அவளை மெல்ல விடுவித்தான்.


தன்னுடைய அணைப்பு அவளின் இறுக்கத்தைக் கூட்டவே செய்ததை உணர்ந்தவன் மனம் ஒடிந்து போனான்.


சில நொடிகள் தயங்கியவன் பின் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன்னைத் தெளிவு படுத்திவிடும் விதமாக,


"கனி, நான் அமெரிக்கா போகும் முன் நீ எனக்கு வேணும்னு எதிர்பார்த்தது எங்க நீ என்னை விட்டு போய்டுவியோ என்ற பயத்தில் தான்.... நம்ம மேரேஜிற்கு அப்புறம் கூட என்னால் இன்னைக்குச் செய்தது போல் உன்னைத் தூக்கி வந்திருக்க முடியும்.... ஆனால் நீயாகத் தான் மனசு மாறி என்னைத் தேடி வரணும்னு வெயிட் பண்ணினேன்...."


"பட் எங்க வீட்டில் நான் உனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்த ஜ்வெல்ஸை பார்த்ததும் நீ என்னை முழுசும் வெறுத்திட்டியோன்னு நெஞ்சில் ஒரு பயம் வந்தது... நான் எதுக்காகவும் யாருக்காகவும் அப்படிக் கலங்கியது இல்லை, ஆனால் முதல்முறையா நிஜமாவே உன்னை இழந்திடுவேனோன்னு பயம் வந்தது... அதோடு உன்னோட நிரகாரிப்பு எனக்கு அவமானமாகவும் இருந்து... அதனால் உன்னைப் பார்த்து இங்க கூட்டிட்டு வரணும்னு தான் உன் வீடு தேடி வந்தேன்... ஆனால் நீ என்னை வெளியே போகச் சொல்லவும் தான் நான் அப்படி முரட்டுத் தனமாக நடந்துக்கிட்டேன்...."


"நிச்சயமா நம் மேரேஜிற்கு முன்னோ, அல்லது அன்று நான் அப்படி நடந்ததுக்குக் காரணம் செக்ஸ் இல்லை... அஃப்கோர்ஸ், உன் மேல எனக்கு நெஞ்சு நிறைய ஆசை இருக்கு... ஆனால் உன்னை அப்படி அடாவடித்தனமா அடைய வச்சது என்னோட பயமும் கோபமும்தான்... ஆனால் இப்போ நீ என் கிட்ட வந்திட்ட, இனி எனக்குப் பயமில்லை.... அதனால உனக்கு எப்போ பிடிக்குதோ, உனக்கு எப்போ நான் வேணும்னு தோணுதோ அப்போ உன்னைத் தொடுறேன்... ஆனால் சத்தியமா அது நீயா விரும்பினா மட்டும் தான்..."


"மட்டும்" என்ற வார்த்தையில் மிக மிக அழுத்தம் கொடுத்தவன் தொடர்ந்து,


"நானா இனி உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்.." என்று அழுத்தமான குரலில் கூறி அவளை விட்டு கட்டிலின் மறுபுறம் வந்து படுத்தான்.


அவள் அப்பொழுதும் அதே இடத்தில் அசையாது சிலைப் போல் நிற்கவும் அவளுக்கு இன்னும் தன் மேல் நம்பிக்கை வரவில்லை என்பதை உணர்ந்தவன் கனிவுடன்,


"நீ கீழ படுக்கணும்னு அவசியம் இல்லை... இங்கே என்னோட பெட்லயே படுக்கலாம்... என்னால உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது..." என்று மீண்டும் சொன்னவன் அவளுக்கு முதுகு காட்டி படுக்க, ஏக்கத்துடன் அவன் முதுகையே வெறித்துப் பார்த்திருந்தவளுக்குத் தன் மனம் என்ன எதிர்ப்பார்க்கின்றது என்றே புரிபடவில்லை.


இத்தனை நாட்கள் ஒவ்வொரு இரவும் தன் மனம் கவர்ந்தவளை நினைத்து உறங்காமல் கலங்கி விழித்து இருந்ததாலோ என்னவோ இன்று தன்னவளை தன்னுடன் போராடி அழைத்து வந்த மகிழ்ச்சியினாலோ என்னவோ அவன் சடுதியில் நித்திரையில் ஆழ்ந்தான்.


ஆனால் கனிகாவிற்குத் தான் தூக்கம் தூரம் போயிருந்தது.


உறக்கம் வராமல் படுத்திருந்தவள் மூச்சு முட்டுவது போல் இருக்க மெல்ல எழுந்து பால்கனிக்கு சென்றவள் அதன் அழகை பார்த்து மதி மயங்கி போனாள்.


சுற்றிலும் அழகான ரோஜாப் பூக்கள் வெவ்வேறு நிறத்தில் தொட்டியில் வைக்கப்பட்டிருக்க அதனைச் சுற்றிலும் அழகுக்காக வளர்க்கப்படும் தோட்டச் செடிகள் சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு வண்ணம் என்று கண்களைக் கவர அதன் நடுவில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அதன் கம்பியில் சாய்ந்தவளின் மனம் ஏனோ ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் கரையை அடைந்ததும் தவிப்பு அடங்கி மௌனமாகத் திரும்பி கடலை நோக்கி செல்வது போல் அத்தனை அமைதியாக இருந்தது.


அப்படியே கண்கள் சொருக ஊஞ்சலில் தலை சாய்த்தவள் உறங்கியும் போனாள்.


உள்ளே தன் மனம் கவர்ந்தவளை தன்னுடன், தன்னுடைய அறையில் பார்த்திருந்த நிம்மதியில் உறங்கி கொண்டு இருந்தவன் நடு இரவில் தன் கைகளால் துழாவ தன் கைகளுக்கு அவள் அகப்படாமல் போகவே பதறி எழுந்தான்.


அவள் சற்று நேரத்திற்கு முன் தன்னைக் கலங்கிய முகத்துடனும் கவலையைத் தேக்கி வைத்த விழிகளுடனும் பார்த்திருந்த தோற்றம் கண் முன்னே தோன்றியது.


அவள் தன்னை விட்டு சென்று விட்டாளோ என்று அரண்டவன் அவளைக் காணாமல் தேடி பால்கனிக்கு வந்தவன் அங்குப் பூக்களின் நடுவே அன்று மலர்ந்த பூவாக உறங்கிக் கொண்டு இருந்த தன் மனையாளைப் பார்த்தவனுக்கு உலகத்தையே வென்று விட்ட உவகைத் தோன்றியது.


அவள் அருகில் வந்தவன் அவளை அசையாமல் மெல்ல தூக்கி கட்டிலில் கிடத்தியவன் அவளையே சற்று நேரம் உற்றுப் பார்க்க, அவளின் வாசம் நாசியில் புகுந்து மனதையும் உடலையும் சிலிர்ப்பில் ஆழ்த்தியது.


அவளின் தலையைக் கோதிவிட்டவன் மென்மையாக நெற்றியில் முத்தமிட, தூக்கத்திலும் அவனை உணர்ந்தவள் போல் அவனின் கரங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டு தூங்கிப் போனாள்.


அவளையே கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை இறுக்கி அணைத்தபடியே அவனும் உறங்கிப் போனான்.


கிட்டதட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அமைதியான உறக்கம்... இருவருக்குமே.


***************************************************




மறு நாள் வழக்கம் போல் அதிகாலையில் விழித்தவள் தான் கதகதப்பான அணைப்பில் படுத்திருப்பதை உணர மெல்ல தலையை நிமிர்த்திப் பார்த்தவள் தான் ஒருக்களித்துப் படுத்திருப்பதும் அவளைப் பின்னாலில் இருந்து கட்டி அணைத்தவாறே ஹர்ஷா படுத்திருப்பதையும் கண்டவளுக்கு அத்தனை ஆச்சரியம்.. தான் எப்படி ஊஞ்சலில் இருந்து இங்குப் படுக்கைக்கு வந்தோம் என்று.


தன் கணவன் தான் தன்னை இங்குத் தூக்கி வந்திருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அத்தனை சிலிர்ப்பாக இருந்தது.


வழித் தவறிப் போன கோழிக் குஞ்சு தன் தாயைக் கண்டதும் பேரமைதி கொண்டு தாயின் சிறகுகளுக்குள் ஓடி அணைவாக அடங்கிக் கொள்ளுமே, அது போல் கணவனை விட்டு பிரிய மனமில்லாமல் சற்றுப் பின்னால் உடலை நகர்த்தி அவன் மார்பினுக்குள் பாந்தமாக அடங்கியவள் கண்களை மூடி படுக்க, அவளின் அசைவில் விழித்தவன் அவளின் செயலைக் கண்டும் காணாதது போல் இதழில் விரிந்த புன்முறுவலுடன் அமைதியாகப் படுத்திருக்க எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியவில்லை.


கணவன் வீட்டிற்கு வந்த முதல் நாளே இத்தனை தாமதமாகக் கீழே செல்வதா என்று யோசித்தவள் அவன் விழித்திருப்பதை அறியாமல் மெதுவாகத் தன் இடையை அணைத்திருந்த அவன் கரத்தை விலக்கியவள் அறையை விட்டு செல்ல, அவள் சென்றதை அறிந்ததும் கண் விழித்தவனுக்கு அத்தனை பூரிப்பாக இருந்தது அவளின் மனமாற்றம்.


அவள் மற்றவர்களுக்கு, குறிப்பாக அவனுக்குத் தெரியக் கூடாது என்று ஆழ்மனதில் மறைத்து வைத்திருந்த இன்னும் மாறாத காதலைக் கண்டு கொண்டவனின் இதயம் மகிழ்ச்சியில் துள்ள இள நகையுடன் குளியல் அறைக்குள் சென்றான்.


கீழே வந்ததும் எங்குக் குளிப்பது என்று புரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும் மருமகளைப் பார்த்த சங்கீதாவிற்குச் சிரிப்பு வந்தது.


"ஏன்டா, இவ்வளவு சீக்கிரம் முழிச்சுட்ட... இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாமில்ல?"


"இல்லத்த, நான் எங்க வீட்டில் நாலரை மணிக்கெல்லாம் முழிச்சுத் தான் பழக்கம்... இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா ஆச்சு" என்றவளுக்கு அவரின் புன்சிரிப்பு அவர் தான் சொன்னதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டார் என்பதை உணர்த்த கூச்சத்தில் முகம் சிவந்தாள்.


"அத்தை நான் குளிக்கணும், அவங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்க, நான் அங்க குளிச்சா தொந்தரவா இருக்கும்.... வேற ஏதாவது பாத்ரூம் இருக்கா?”


"என் கூட வா..." என்று அவளை ஹர்ஷாவின் அறைக்கு அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றவர் அவன் வாங்கி வந்திருந்த புத்தம் புது உடைகளைக் கொடுத்து.


"கனிகா... இது உன் வீடு, ஹர்ஷாவோட ரூம் தான் உன் ரூம்... நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் அவன் ரூமிலேயே வச்சுக்க..." என்றவர் வெளியேறினார்.


சிறிது நேரத்திற்குள் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தவள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பூஜை புனஸ்காரங்களை முடித்துச் சமையல் அறைக்குள் புக, அவளின் வரவை எதிர்பார்த்திருந்த வேலையாட்களுக்குத் தங்கள் இளைய எஜமானியைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


காலை உணவு செய்து முடிக்கவும் ஹர்ஷாவும் சிதம்பரமும் கீழே இறங்கி வரவும் நேரம் சரியாக இருக்க, டைனிங் டேபிளில் பதார்த்தங்களை வைத்தவள் பறிமாறும் முன் கணவனை நோக்க, அவன் அவளைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.


மனதை என்னவோ பிசைய அவனுக்குப் பார்த்துப் பார்த்து பறிமாறியவள் அவன் உண்டதும் அவன் பின் செல்ல துடித்த கால்களைக் கட்டுபடுத்தி அடக்கியவள் விழிகளில் நீர் தேங்கி நிற்க அவனையே பார்த்திருந்தாள்.


அவளின் பார்வை தன் மீது தான் படிந்திருக்கிறது என்று உணர்ந்து வெற்றிப் புன்னகை சிந்தியவன் திரும்பியும் பாராமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைக்க அவளுக்குத் தான் அத்தனை ஏமாற்றமாக இருந்தது.


அந்த நொடி அவளது மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க இயலாது... அந்தக் கணம் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை அவள் உணர்ந்தாள்.


தன் கணவனின் புறக்கணிப்பு வெகு அழுத்தமாய் இதயத்தில் ஆழ இறங்க செய்வதறியாது சிறிது நேரம் நின்றவள் சங்கீதாவும் சிதம்பரமும் தன்னையே உற்று பார்த்திருப்பதை உணர்ந்து விழி நீரை அவர்களுக்குத் தெரியாமல் கண்மூடி உள்ளிழுத்துக் கொண்டவள் தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.


சிறிது நேரத்திலேயே கீழே இறங்கி வந்தவன் தான் அலுவலகத்திற்குப் போவதாகத் தன் அன்னையிடம் மட்டும் தெரிவித்துவிட்டு சட்டென்று வெளியேறினான்.


கணவனைப் பின் தொடர்ந்து செல்வதா? வேண்டாமா? என்று குழம்பி நிற்க அவளருகில் வந்து அவள் தோளைத் தொட்டு,


"என்னடா, உங்களுக்குள்ள மறுபடியும் ஏதாவது பிரச்சனையா?" என்றார் சங்கீதா.


"இல்லை அத்தை, அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்றவள் மிகுந்த சிரமப்பட்டுக் கண்களுக்கு எட்டாது புன்னகைக்க,


"எல்லாம் சரியாகிடும்டா..." என்றவருக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.



*******************************


ஹர்ஷா கனிகாவை தன்னுடன் அழைத்து வந்து இதனோடு இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது.


ஒவ்வொரு நாளும் வெகு நேரம் கழித்தே இரவு வீடு திரும்புபவன் அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் சென்றுவிடுவான்.


அவனின் புறக்கணிப்பு அணு அணுவாய் சித்திரவதை செய்யத் தவித்தவளுக்கு அவனிடம் கேள்வி கேட்கும் தைரியம் மட்டும் வரவே இல்லை.


அவனைக் கண்ட முதல் நாளில் இருந்து இதோ இன்று அவன் மனைவியாக அவனருகே இருந்தும் அதே அச்சம் இன்னும் மனதில்.


அடுத்து கழிந்த நாட்களெல்லாம் முழுதாகத் தவிப்பில் கரைய ஒவ்வொரு நாளும் அவன் அருகில் படுத்ததும் அவளின் பூ மேனி உணர்ச்சி வேகத்தில் நடுங்கும்.


அவனோ அதைக் கண்டு கொள்ளாதது போல் தூங்க, நெருப்பில் இருப்பதைப் போல் தத்தளித்தவளின் தூக்கம் அவளைத் தாண்டி வெகு தூரப் போயிருக்கும்.


ஆனால் அவனுக்கோ நினைத்த மாத்திரத்தில் கனிகா என்றுமே அவன் மனதில் குளுமையைக் கொண்டு வருபவள்.


தூர இருக்கும் பொழுதே அவளைத் தேடி தவியாய்த் தவித்தவன் இப்பொழுது தன் அருகில், அதுவும் தன்னுடன் ஒரே படுக்கையில் இருந்தும் அவளைத் தொடாமல் தள்ளி இருப்பதற்கு அவன் படும் பாடு அவனுக்கு மட்டுமே தெரியும்.


தன்னுடைய உணர்வுகளைப் பணயம் வைத்து அவளைத் தள்ளி வைத்திருந்தான் அவள் தானாகத் தன்னைத் தேடி வர வேண்டும் என்பதற்காக.


அவள் தன்னைப் பார்க்காத பொழுது அவளை உரிமையாக மேய்ந்தன அவன் கண்கள்.


இரவில் பூங்கொடியாய் தன் அருகில் படுத்திருந்தவளை கண்டு அவன் உணர்வுகள் கட்டவிழ்க்க,


"உன் மேல எந்தளவுக்கு ஆசை வச்சிருக்கேன்னு காட்டணும்னு ஆசையா இருக்குடி, உன்னை முத்தத்தாலும் அணைப்பாலும் குளிப்பாட்டணும் அத்தனை வெறியா இருக்குடி...." என்று தனக்குள்ளே புலம்பிக் கொள்பவன் அவள் அறியாத வண்ணம் அவள் அருகில் நெருங்கி படுத்து, ஓடிக் களைத்துப் பின் தன் இணையைச் சேர்ந்த நிம்மதியில் உறங்கி போவான்.


அன்றும் அதே போலவே வெகு சீக்கிரம் அலுவலகத்திற்குக் கிளம்பியவன் காலை உணவை முடித்துக் கை கழுவ தன் அருகில் நின்றுக் கொண்டிருந்தவளிடம் சன்னமான குரலில்,


"இன்னக்கு மாம் அன்ட் டாடோட வெட்டிங் டே.... வழக்கமாக நாங்க மூணு பேரும் ஏதாவது ரெஸ்டாரண்ட் போவோம்... நீயும் கிளம்பி ரெடியாக இரு... நான் வந்து உங்களை அழைச்சுட்டு போறேன்..." என்றான்.


அவன் அவளிடம் பேசியே வெகு நாட்கள் ஆகியிருந்தது.... எப்படி அவரால் இப்படி இருக்க முடிகிறது? என்று அவளைத் தன் மௌனத்தாலும் பாரா முகத்தாலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தான்.


இப்படி இருக்க அவனாகத் திடீரென்று தன்னுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்தவள் அதே சந்தோஷ முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,


"மாம் கிட்டேயும் டாட் கிட்டேயும் ப்லெஸ்ஸிங்ஸ் வாங்கணும்... வா..." என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் நடக்க,


அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னால் ஓடியவள் அவனுடன் சேர்ந்து மாமியார் மாமனாரை வாழ்த்தப் போனாள்.


வேகமாக நடந்தவனின் பின்னால் கிட்ட தட்ட ஓடியவள் அவன் சட்டென்று நின்றதும் அவன் மீது மோதி தடுமாறி நிற்க அவளின் நிலைமையை உணர்ந்தவன் அவள் தோள் பற்றி நிற்க வைத்தான்.


இத்தனை நாட்களுக்குப் பிறகு தன் கணவனின் தொடுகை உள்ளத்தில் பூப்பூக்கச் செய்ய நாணத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவள் பார்ப்பது தெரிந்ததும் சட்டென்று திரும்பி மாடி ஏறினான்.... பாகாக உருகிய அவளின் மனம் ஒரு நொடியில் சருகாகக் கருகி வாடிப் போனது.


பெரியவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்கள் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற சங்கீதாவிற்கும் சிதம்பரத்திற்கும் ஏனோ அந்தத் திருமண நாள் அத்தனை மகிழ்ச்சியைத் தந்தது.


"அடுத்த வருஷம் எங்களோட வெட்டிங் டேவை எங்க பேரப்பிள்ளையோட சேர்ந்து கொண்டாடணும்..." என்று அவர்கள் கூற நாணத்துடன் கணவனை மீண்டும் திரும்பி பார்த்தவளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தாத அவன் முகத்தில் இருந்து அவன் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.


தன் முகத்தையும் பார்க்காது தன் அன்னை தந்தையிடம் மட்டும் விடைபெற்று அவன் அமைதியாகச் செல்ல, குழம்பிப் போய் நின்றாள்.


வழக்கமாகத் தங்கள் திருமண நாள் அன்று மூவரும் ஏதாவது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட செல்வது வழக்கம்... கனிகாவிற்கும் தெரியப்படுத்தி இருந்தார் சங்கீதா.


மதியம் ஹர்ஷா கொடுத்ததாக ஒரு பையை அலுவலகத்தில் பணிபுரிபவர் கொண்டு வந்து கொடுக்கப் பிரித்துப் பார்த்தவள் மலைத்து போனாள்.


சிகப்பு நிறத்தில் மணிகளும், கற்களும் பதித்த டிசைனர் புடவை கண்களைப் பறித்தது... அதற்கு ஏற்றார் போன்று அவளுக்கென்றே அளவெடுத்தது போல் தைத்த ப்ளவுஸ்.


மாலை புடவையை அணிந்து அவனுக்காகக் காத்திருக்க, வீட்டிற்குள் நுழைந்தவனின் கண்கள் அவளைக் கண்டதும் ஒரு விநாடி அவளிடம் நிலைத்து நின்றது.


பின் தோள்களைக் குலுக்கியவன் வேகமாக மாடி ஏற, தன் கணவனின் பார்வைக்காக வெகு நேரம் காத்திருந்தவளுக்குப் பெருத்த அடியாக இருந்தது அவனின் கண்டு கொள்ளாமை.


'ஏன் இந்தப் புறக்கணிப்பு? என்ன எதிர்பார்க்கிறார் என்னிடம்? அவர் விரும்பியது போல இப்பொழுது அவருடனே இருக்கிறேனே... இன்னும் என்ன வேண்டும்? தள்ளி இருந்த பொழுதெல்லாம் என்னைத் தேடி வந்தவர் இப்பொழுது தொடும் தூரத்தில் இருந்தும் ஏன் இந்த ஒதுக்குதல்?'
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.


அவளின் ஒரு பார்வைக்காகக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தவம் கிடந்தவன், இடையில் விதி வசத்தாலும், தன்னுடைய கூடப் பிறந்த திமிர் தனத்தாலும், பிடிவாதத்தாலும், அவளின் வாழ்க்கையைச் சூனியமாக்கியிருந்தாலும் தவறை உணர்ந்த அந்த நிமிடமே அவளைத் தேடி ஓடோடி வந்தவன்.


தன் கணவன் தன்னைப் பழி வாங்குவதாக எண்ணினாளே தவிர அவளாகத் தன்னை அவனிடம் ஒப்புக் கொடுக்க முன் வரவில்லை..... அவள் தானாக அவனிடம் வர வேண்டும், அது வரை அவளைத் தொடமாட்டேன் என்று முதல் நாள் இரவு சொன்னதை அவள் மறந்து போனாளோ?


ஆனால் அவனது எண்ணங்களோ வேறாக இருந்தது.


ஒரு ஆண்மகன், அதுவும் செயல், பேச்சு, நினைவுகள் எல்லாவற்றிலும் கர்வம் குடிக் கொண்டிருந்தவன்..... இதற்கு மேல் இறங்கி வருவதற்கு என்ன இருக்கிறது? இருந்தும் அவள் வீடு வரை சென்று அவளைத் தூக்கி வந்தேன், அப்பொழுதும் என்னை மன்னிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ அவள் தயாராக இல்லை.... அதனாலேயே ஒவ்வொரு விநாடியும் அவள் வேண்டும், வேண்டும் என்று இதயம் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கும் போதெல்லாம் என் மனதை அடக்கி அவளை என் வழிக்கு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... இது அவனது விவாதம்.


அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவை முடித்தவர்கள் வீட்டிற்குத் திரும்ப மாலை வெளியில் கிளம்பியதில் இருந்து இதோ வீடு வரும் வரை அவன் தன் அன்னை தந்தையிடம் மட்டுமே பேசியவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.


அவன் தன்னைத் தேடி வந்த பொழுதெல்லாம் ஒதுங்கியவள், அவனுக்குப் பாராமுகம் காட்டியவள், இன்று அவன் அதையே திருப்பிச் செய்யும் பொழுது பழி வாங்குகிறான் என்றே எண்ணியவள் அவனின் மனதை புரிந்து கொள்ளவில்லை.


ஆக இரு உள்ளங்களும் காதலில் தளும்பி தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தங்கள் இடத்தில் தங்களை மட்டுமே வைத்துப் பார்த்தார்களே ஒழிய தங்கள் இணையைத் தங்கள் இடத்தில் வைத்து பார்க்க தவறிவிட்டார்கள்.


காதலில் கூடாதது கர்வமே... இது எப்பொழுது புரியுமோ இந்த இரு இளம் தம்பதியினருக்கு!!!!!

தொடரும்..
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் 26

வீட்டிற்கு வந்தவர்கள் ஹாலில் அமர்ந்து ஓய்வாகப் பேசிக் கொண்டு இருக்கப் புடவை மாற்ற மேலே தங்கள் அறைக்குள் போனவளின் இதயத்தை ஹர்ஷாவின் பாராமுகம் வாள் கொண்டு அறுக்க அதே சிந்தனையில் கதவைத் தாழிட மறந்தவள் புடவையை மாற்ற ஆரம்பித்தாள்.


"ஓகே மாம், டாட்.... நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்.... ஒன்ஸ் அகெய்ன் வெரி வெரி வெரி ஹாப்பி மாரீட் லைஃப்.... ஸ்வீட் கிஸ்ஸஸ் [ok mam, dad, very very very happy married life... sweet kisses].."


"தாங்கஸ் ஹர்ஷா... இன்னைக்கு நாங்க ரொம்பச் சந்தோஷமா இருக்கோம்பா.... உன்னையும் கனிகாவையும் ஒண்ணா பார்க்கறதுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு.... நீ பழைய ஹர்ஷாவா இப்போ தான் தெரியற.... வீ ஆர் வெரி ஹாப்பி...[We are very happy]."


"மீ டூ மாம் [me too mom]" என்றவன் மாடி ஏற, திரும்பச் சிதம்பரம் மகனை அழைத்தவர்,


"ஹர்ஷா, உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்.... கனிகா ரொம்பப் பயந்த சுபாவம் போலத் தெரியுது... இப்போ உன்னை நம்பி இங்க வந்துருச்சு அந்தப் பொண்ணு... இன்னும் உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனை சரியா தீர்ந்த மாதிரி தெரியலை.... நீ கொஞ்சம் இறங்கி வாப்பா... ஒருத்தருக்கு ஒருத்தர் மன்னிக்கவும் விட்டுக் கொடுக்கவும் கத்துக்கணும்... அது தான் ஒரு நல்லா குடும்ப வாழ்க்கைக்கு அர்த்தம்.. உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.." என்க,


"யெஸ் டாட்..." என்றவன் அவர்கள் இருவரையும் கட்டி அணைத்து விட்டு மாடி ஏறினான்.


சிதம்பரம் ஹர்ஷாவின் விஷயத்தில் எப்பொழுதுமே தலையிடமாட்டார்... ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும் தன் மனைவியின் மூலமாகவே விஷயத்தைப் பகிர்வார்.


ஆனால் அவரே இன்று இவ்வாறு சொன்னதும், அதனையே நினைத்துக் கொண்டு படியேறியவன் கதவை தட்டாமல் திறக்க, அங்கு அவன் கண்ட காட்சியால் இத்தனை நாட்கள் தன்னைச் சுற்றிக் கட்டியிருந்த கட்டுகள் தகர்ந்து பொடி பொடியாகி போவது போல் இருந்தது.


அவனுக்கு முதுகு காட்டி புடவையைக் கழட்டிக் கொண்டு இருந்தவள் தன் கணவனின் ஒதுக்குதலையும் நெருங்காமையையும் பற்றிய உணர்ச்சிகள் பல வகையில் சிதறிக் கிடந்ததால் சிந்தித்துக் கொண்டு இருந்தவளுக்குத் தன் கணவன் மௌனமாகத் தன் பின்னால் நின்று கொண்டு இருப்பது தெரியாமல் போனது.


பளபளத்த முதுகும், மலரினும் மென்மையான கையும், குறுகி இறங்கிய இடையும், பின்னழகும் அவனைப் பெரும் சஞ்சலத்துக்கு ஆளாக்கின.


ஹர்ஷாவின் கண்கள் தன் மனையாளின் அழகிய உருவம் பூராவிலும் சஞ்சரித்தது.... அவள் இடையின் வளைவை ஆசையுடன் பார்த்திருந்தன.


முதுகுப் பகுதியும், இடையும், கணுக்காலும் அதற்குக் கீழுள்ள பகுதியுமே துணி மறைக்காத இடங்களென்றாலும் அவற்றை விட ஆடை மறைத்த இடங்களைப் பற்றிய நினைவுகளே அவனுக்கு இன்ப கற்பனைகளையும் வேட்கையையும் தூண்டி விட்டது.


அந்த வழவழத்த சருமத்தில் தன் விரல்களால் வருட துடித்த மனதை அடக்கத் தெரியாமல் தவித்தான் அந்த இளம் கணவன்.


ஒவ்வொரு விநாடியும் தன் மனையாளின் கிராமத்து வீட்டில் தான் அவளிடம் கூடியது நிழலாகக் கண்முன் தெரிய,


முதன் முதலாகத் தன்னவளின் மேனியில் அது வரை தொட்டிராத இடங்களில் தன் கரங்கள் அத்துமீறியதை நினைத்துப் பார்த்தான்.


ஆனால் ஹர்ஷாவின் இதயத்தை அந்தச் சமயத்திலும் ஒரு வித அச்சம் சூழ்ந்து கொண்டது... அவள் மனம் தன்னிடம் இலயித்து இருப்பதை உணர்ந்திருந்தாலும் இந்த நிமிடம் தனக்குக் கிடைத்ததற்கரிய வாய்ப்பை அளித்திருந்தாலும், கிட்டக்கிடந்த அந்த மலர் தொட்டவுடன் நன்றாக மலர்ந்து விடக் காத்திருந்தாலும் ஏதோ விவரிக்கத் தெரியா இயலாத பயம் அவனைக் கல்வி கொண்டது.


அவளின் அபரிதமான அழகும் அங்கங்களும் அவன் மனதைச் சிதறடிக்க, அப்பொழுதும் அவன் அவளை வெறித்துப் பார்த்திருந்தானே ஒழிய அவளை நெருங்கவில்லை.


இன்னமும் அவன் தன் பின்னால் நிற்பதை உணராதவள் மெல்ல கட்டிலில் வைத்து இருந்த மாற்று ப்ளவுசை எட்டி எடுக்க, அடுத்து அவள் செய்யப் போவதை சட்டென்று உள்ளுணர்வு உணர்த்தி அவனது நிதானத்தை, கட்டுப்பாட்டை அடியோடு தகர்த்துவிட்டது.


அதற்கு மேலும் பொங்கிக் கொண்டு இருக்கும் தாபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தவன் மெல்ல நெருங்கி அவளின் தோள்களை இறுக பற்ற, திக்கென்றது கனிகாவிற்கு.


அவனின் வருகையை அறிந்திராததால் தன்னை அறியாமல், "ஆஆஆ" என்று அலறியவளை கண்டு திடுக்கிட்டவன் அவளின் வாய் மீது கை வைத்து மூடி,


"ஏன்டி இப்படிக் கத்துற? மாமும் டாடும் என் பின்னாடி தான் வந்திட்டு இருந்தாங்க... இப்படி அலறுனா என்ன நினைப்பாங்க...." என்றான்.


அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே அவள் முகத்தைப் பார்க்க அவன் வாய் மூடியிருந்ததால் ஒன்று பேச முடியாமல் கண்களை அகல விரித்து அதிர்ந்த பார்வை பார்த்து நின்றவளை கண்டவனின் இதயம் தன் துடிப்பை ஆயிரம் மடங்காக அதிகரித்தது.


அகன்ற கண்கள், சின்னஞ் சிறு கத்தையாக முடிகள் முகத்தில் விழுந்திருக்க அவன் கையைப் பிடித்திருந்தவளின் கரத்தில் தெரிந்த நடுக்கம் அவனை முன்னேறத் தூண்ட தடுமாறியவன் அவள் வாயில் இருந்து மெதுவாகக் கையை எடுத்தவன் இடையைப் பற்றினான்.


அதிர்ச்சியிலும் கூச்சத்திலும் பேச்சு வராமல் நடுங்கியவள் கைகளைக் கொண்டு தன் மானத்தை மறைக்க, தன் அருகாமையில் சித்தம் தடுமாறியிருக்கிறாள் என்று உணர்ந்துக் கொண்டவன் அவள் முகம் நோக்கி குனிய, ஏற்கனவே அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்திருந்தவளின் உணர்வுகள் அடுத்து நடக்கவிருப்பதை அறிந்து முதன் முறையாகத் தன் கணவனைத் தன்னுள் இணைத்துக் கொள்ள விரும்பியது.


முகம் நோக்கி குனிந்தவனின் மூச்சுக் காற்று முகத்தில் பட, இடையை இறுக்கி பற்றியிருந்த அவனின் வலுவான கரம் உடலைத் துவள செய்ய, அதிகாலை சூரியனைப் போல் செம்மையுற்றவளின் கண்கள் நாணத்தில் தானாக மூடிக் கொண்டது.


அவளின் தாபத்தையும் வெட்கத்தையும் புரிந்துக் கொண்டவன் அவளின் இதழுக்கு வெகு அருகில் தொட்டுவிடும் தூரத்தில் தன் இதழைக் கொண்டு சென்றவன் முத்தம் இடாமல் அவளையே பார்த்திருக்க, மதி மயங்கி நின்றிருந்தவள் அவன் எதுவும் செய்யாமல் இருப்பதை உணர்ந்து விழிகள் திறக்க அங்கு அவன் புன்சிரிப்புடன் தன்னையே ஆழ்ந்து பார்த்திருப்பதைக் கண்டவளுக்கு முகம் செந்தணலாய் மாறியது.


வரைந்து வைத்தது போன்ற உதடுகள், அகன்ற மருண்ட விழிகள், செவ்வானமாய்ச் சிவந்திருந்த முகம்.... அத்தனையும் அவன் வேட்கையை எரிமலையாய் வெடிக்கச் செய்தது.


ஆனால் தன்னிலையை இழுத்து பிடித்து வைத்தவன் கண்கள் சிமிட்டாமல் அவளையே பார்க்க அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் வெட்கத்தைவிட்டு தானாக ஏதாவது செய்துவிடுவோம் என்று நினைத்தவள் அவனைத் தள்ளிவிட்டு ஓட நினைக்க அவளால் ஒரு இஞ்ச் கூட நகர முடியாதபடி அவளை இறுக்கப் பிடித்திருந்தான் அந்தக் கள்வன்.


கண்கள், இதழ், கழுத்து என்று பார்த்தவனின் பார்வை கழுத்துக்குக் கீழ் இறங்க, கணவனின் கூறு போட்டுக் கொண்டிருந்த பார்வையைக் கண்டதும் மனம் படபடவென அடித்துக் கொள்ள, "ப்ளவுஸ் பெர்ஃபெக்டா [perfect] இருக்கு..." என்றானே பார்க்கலாம்.


அவள் இன்னமும் அவன் மதியம் வாங்கிக் கொடுத்த சிகப்பு டிசைனர் ப்ளவுஸையே அணிந்திருந்தாள்.


கூச்சத்தில் சட்டென்று தலை கவிழ அவனுக்கோ கல்லூரியில் ரியாவின் ஆட்களால் கடத்தப்பட்ட அன்று தாவணி இல்லாமல் பாவாடையோடு அவள் இருந்தது ஞாபகம் வந்தது.


"ப்ளவுஸ் சரியா இருக்கா? உன்னை அன்னைக்கு ஒரு நாள் தாவணி இல்லாமல் பாவாடையோடு பார்த்ததை வச்சே ஆனுவல் டே அன்று ப்ளவுஸ் எடுத்து வந்தவன்... அப்படி இருக்கும் பொழுது உன்னை முழுவதுமாக அன்று உங்கள் வீட்டில் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படி உன் சைஸ் தெரியாமல் இருக்கும்..." என்று கரகரத்த குறலில் கூற அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முரண்டு பிடித்தாள்.


அவள் நாணத்தால் விலக முயற்சிக்க, ஆனால் தலை கவிழ்ந்தவாறே அவன் நெஞ்சை பிடித்து அவள் தள்ளியதால் அவள் முகத்தில் தெரிந்த வெட்கத்தைக் காணாது, அவனின் தொடுகையை விரும்பாதது போலவே அவன் ஒவ்வொரு முறை அவளைத் தழுவும் பொழுதும் அவள் அவனைத் தள்ளுவதில் குறியாக இருப்பது போல் அவனுக்குத் தோன்ற, இன்றும் அவளின் விலகல் அவனுக்கு அத்தனை சலிப்பை தந்தது.


அவன் செய்திருந்த சத்தியம் அவசரக் குடுக்கையாக அந்த நேரத்தில் அவன் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.


"நீயாக வராமால் நானாக உன்னைத் தொடமாட்டேன்..." என்று.


இத்தனை நாட்கள் காத்திருந்த தாபம் மடை திறந்த வெள்ளம் போல் சிதறி வழிய அவனின் வேட்கை எல்லையைத் தாண்ட நினைக்க ஆனால் இந்த நிலையிலும் அவளின் ஒதுக்குதல் அவனை வெறுப்பின் உச்சத்திற்கே கண்டு செல்ல அவளை இறுகப் பற்றியவன் ஆழ்ந்து நோக்கினான்.


அவனின் பார்வை மூலமாக அவனது உயிரின் ஒரு பகுதியே தன் உடலுக்குள் பாய்வது போன்ற பிரமை ஏற்படவே அதில் தெரிந்த வெறியின் வீரியம் தாங்காமல் ஒரு கணமே அவனை நோக்க முடிந்த அவளால் அவனைப் பார்க்க சக்தியற்றவளாய் முந்திய கூடலின் நினைவுகள் அவள் அச்சத்தை அதிகப்படுத்தியது.


அவள் அச்சத்தினால் கலங்கினாளா அல்லது இச்சையால் கலங்கினாளா என்று அவளுக்கே திட்டவட்டமாகப் புரியாத நிலையில் அவனுக்கு எப்படிப் புரியும் அவள் அச்சத்தின் காரணம்.


அவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தைச் சடுதியில் கவனித்தவன் அவளை வெறித்துப் பார்க்க, பார்த்த கண்கள் பார்த்த வண்ணமே இருந்ததே அன்றி, இடையைத் தழுவி நின்ற கையும் மரத்து நின்றுவிட்டது போல் உணர்ச்சியற்றே கிடந்தது.


அவனின் அமைதியும் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் தன்னை வெறித்துப் பார்ப்பதைக் கண்டவள் நிமிர்ந்து பார்க்க, அவன் கண்களில் வெறியும் ஆவலும் பளிச்சிட்டாலும், அத்தனை வெறிப் பார்வையிலும் ஏதோ ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருந்ததை அவள் உணர்ந்தாள்.


உணர்ச்சிகள் அலை அலையாக ஓடிக் கொண்டு இருந்தது இருவர் உடலிலும்... இரு இதயங்களும் காதலின் பிடியிலும் காமத்தின் பிடியிலும் சஞ்சரித்துத் தத்தளித்துக் கொண்டு இருந்தது.


ஆனால் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம்... அவளின் கலக்கம் அவனைத் தடுமாறச் செய்ய அவனின் நிதானம் அவளைத் தவிக்கச் செய்தது... இரவின் அந்தகாரத்தில் இதயத்தில் பொங்கி எழுந்த தாபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் தவித்தன இரு காதல் உள்ளங்கள்.


உணர்ச்சிகளின் வேகம், எதிர்பார்த்தது பூர்த்தியாகாதால் ஏற்படும் வேட்கை இவை உடலை துடிக்கச் செய்கின்றன... இதயத்தைக் கலங்க செய்கின்றன.... மூளையை மரத்து போகவும் செய்கின்றன.


ஒரு வேளை அவன் அவளைத் தூக்கி வந்த இந்த இரண்டு மாதங்களில் ஒரு முறையாவது அவளே வலிய சென்று அவனிடம் பேசியிருந்தாலோ அல்லது எந்த நேரமாவது தன் மனதினை அவன் உணரும் வரையில் புரிய வைத்திருந்தாலோ அவன் கரங்கள் அவளை நிச்சயம் ஆர்வமுடன் அள்ளியிருக்கும்.


ஆனால் இது வரை பார்வையில் அவனை ரசித்திருந்தாலும் அவனை விட்டு அவள் தள்ளி தான் இருந்தாள்... அவன் உறங்கும் பொழுது அவனை நெருங்கி இருந்தாலும் அவன் எதிர்பார்ப்பு அவளாக அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே.


"உன் மேல எந்தளவுக்கு ஆசை வச்சிருக்கேன்னு காட்டணும்னு ஆசையாக இருக்கு... அதே ஆசை என் மேல் உனக்கும் இருக்குன்னு தெரியுது..... ஆனால் இத்தனை ஆசையிருந்தும் இன்னும் உன்னால் என்னை விட்டு விலக முடியுதுல்ல?" என்று ஏக்கத்துடன் கேள்வி கேட்டவன் சட்டென்று அவளை விடுத்து அறையில் இருந்து வெளியேறினான்.


இயற்கையிலேயே மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவளுக்கோ தானாக வலியச் சென்று அவனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.


கர்வம், தன்னைத் தேடி காதல் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது... காதலோ தன் காதலை வெளிப்படுத்துவதில் இன்னும் கர்வத்திடம் தோற்றுப் போய்க் கொண்டே இருக்கிறது.


அவன் தன்னைச் சட்டென்று விடுவித்ததும் தடுமாறியவள் தன்னை நிலைப்படுத்தி நிற்பதற்குள் அவன் வெளியேறி இருக்க அதிர்ச்சியில் உறைந்தவள் தடுமாறி கட்டிலில் அமர்ந்தாள்.


தன் கணவனின் எதிர்பார்ப்பு அவளுக்குப் புரியவில்லை.


என் மனதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.... நான் அவரைத் தள்ளி வைத்த போதெல்லாம் என்னிடம் உரிமை கோரியிருக்கிறார்.... நான் விலகியிருந்த போதே என்னை ஆட் கொண்டிருக்கிறார்.


ஆனால் இப்பொழுது ஏன் இந்த ஒதுக்கம்?


பெண்களுக்கு உள்ள இயல்பான நாணமும், அவர் ஏற்கனவே ஒரு முறை என்னுடைய வலியைக் கூட உணர்ந்து கொள்ளாமல் நடந்து கொண்ட முறையினால் ஏற்பட்ட அச்சமும் தானே எனக்கு இருக்கிறது.


இதை ஒரு கணவனாக ஏன் அவர் புரிந்து கொள்ளவில்லை?" என்ற கழிவிரக்கம் பற்றிக் கொள்ள விழிகளில் இருந்து நீர் உடைப்பெடுத்தது.


வெகு நேரம் அழுது கரைந்தவள் புடவை மாற்றித் தலையணையில் தலை சாய்த்தவளின் நீண்ட நேர அழுகையால் சக்தி இழந்து உறங்கி போனாள்.


வீட்டை விட்டு வெளியில் வந்தவனுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை.... தான் என்ன எதிர்பார்க்கிறோம்... தன்னுடைய எதிர்பார்ப்பு அவளுக்குப் புரிகிறதா.. புரிந்தும் தன்னை ஒதுக்குகிறாளா என்று தெரியாமல் குழம்பி போனான்.


தன்னுடைய வாழ்க்கையில் தன்னை மட்டுமே எப்பொழுதும் முன்னிறுத்தி பார்த்திருந்தவனுக்கு இன்னமும் அவளின் நிலையைப் புரிந்து கொள்ள இயலவில்லை.


ஆனால் அவளோ அவனை அரவணைப்பதற்கு, அவனின் சிறகுகளில் அடங்குவதற்குத் தயாராகக் காத்திருக்கிறாள்.... ஆனால் அவளால் நிச்சயமாகத் தானாக அதைச் செய்ய முடியாது... அவனும் அதனை உணர்ந்து கொள்ளப் போவதில்லை.


நள்ளிரவில் வீட்டிற்குத் திரும்பி வந்தவனுக்கு அவளின் அழுது வீங்கிய முகம் இதயத்தைக் கிழிக்க அவள் அருகில் நெருங்கி படுத்தவன் முகத்தை மென்மையாக வருட அவள் உடலில் சிறு அசைவு தெரிந்தது.


அவள் தூங்குவதை உறுதிப் படுத்திக் கொண்டவன் அவள் விழிக்காதவண்ணம் கட்டி அணைத்தவன் அவள் பின் கழுத்தில் முகத்தைப் பதித்தவாறே தானும் தூங்கிப் போனான்.



******************************************


நாட்கள் அதன் போக்கில் நகர ஒரு நாள் தன் கணினியில் புதைந்து இருந்தவனைத் தன் தொண்டையைச் செருமி தன் புறம் திருப்பினாள்.


"எனக்கு ஆஷாவையும் இளாவையும் பார்க்கணும் போல் இருக்கு.... கூட்டிட்டு போறீங்களா?"


திருமணம் ஆகி இத்தனை மாதங்களில் அவளாக அவனிடம் பேசும் முதல் பேச்சு இது.


மனதிற்குள் கரைந்தவன், "ஈவ்னிங் போலாமா?" என்றான்.


அவனையே விழி விரியப் பார்த்திருந்தவள் சரி என்பது போல் தலை அசைக்க எழுந்து வந்தவன் அவள் அருகில் வந்ததும் அவளின் முகத்தில் விழுந்திருந்த முடியை தன் விரலால் மென்மையாக ஒதுக்கி காதின் பின் புறம் சொருகியவன்,

"நான் அன்னைக்குக் கட்ட சொன்னேனே அதே பர்ப்பிள் கலர் ஸாரியை கட்டுறியா?" என்றான்.


கண்களில் காதலோடு ஆவலாக அவன் கேட்ட விதம் அன்று ஆடிட்டோரியத்தில் அவன் தன் முடியை ஒதுக்கி தன் காதலை சொன்னதைக் கண் முன் நிறுத்தியது.


பழைய நினைவுகள் மனதிற்குள் இதமாக இறக்க "ம்" என்று மட்டும் சொன்னவள் அவன் பார்வையின் வீர்யம் தாங்க இயலாதவளாய் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் அறையை விட்டு ஓடினாள்.


அவன் சொன்னதைப் போல் அதே புடவையை மீண்டும் கட்டியவள் மாலை அவனுக்காகக் காத்திருக்க, சொன்ன நேரத்திற்கு வந்தவன் குளித்து முடித்துக் கருப்பு நிறத்தில் சட்டையும் வெளிர் சந்தன நிறத்தில் ஜீன்ஸும் அணிந்து கீழே இறங்கி வந்தான்.


அவன் வரவிற்காகக் காத்திருந்து சோஃபாவில் அமர்ந்து இருந்தவள் அவன் அழுத்தமான காலடி ஓசையைக் கேட்டு திரும்பி பார்க்க அங்கு நெடுநெடுவென்று உயரமாக அவளுக்குப் பிடித்த நிறத்தில் உடையணிந்து ஆண்களுக்கே உரிய கம்பீரத்துடன் பேரழகனாக வந்து கொண்டிருந்த கணவனைக் கண்டவள் கண் சிமிட்ட மறந்து போனாள்.


அவள் கண் சிமிட்டவும் மறந்து சிலையாக நின்று தன்னை இரசிப்பதைக் கண்டவனுக்கு மனம் மகிழ்ச்சியில் தத்தளித்தது.


"போலாமா? இல்லை இப்படியே நின்று கொண்டிருக்கப் போகிறாயா?"


அவன் கேள்வியில் தன் உணர்வுக்கு வந்தவளுக்கு வெட்கம் பீறிட்டு முகம் செவ்வானமாய்ச் சிவக்க அவள் தோளில் கைப்போட்டு அணைத்தவனாய் வெளியே நடந்தான்.


வழக்கமாகத் தன் தொடுகையை விரும்பாதவள் இன்று அவன் அணைத்ததும் அவனை இன்னும் நெருங்கி நடக்க அவனுக்குத் தன் மனைவி தானாகத் தன்னை வந்து சேரும் நாள் தூரத்தில் இல்லை என்றே தோன்றியது.


தன் தோழிகளை அவள் பார்க்க வேண்டும் என்று அவள் சொன்ன நிமிடமே தன் நண்பர்கள் மூலம் ஆஷாவையும் இளாவையும் பற்றி விசாரிக்க அவர்கள் அதே கல்லூரியில் மேற்படிப்பு படித்து வருவதாகத் தெரிந்துக் கொண்டவன் கல்லூரியை நோக்கி தன் காரை செலுத்தினான்.


"அவங்க எங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? எனக்கு ஆஷாவோட வீடு தெரியும்.... அங்க போனா அவ எங்க இருக்கான்னு சொல்லுவாங்க.."


"அவங்க இரண்டு பேர்கிட்டேயும் காலையிலேயே பேசிட்டேன்... அவங்க இப்போ உன்னையை எதிர்பார்த்துட்டு தான் இருக்காங்க.."


தன்னுடைய விருப்பம் தெரிந்ததும் அவன் அத்தனை விரைவாக அவர்களைக் கண்டுப்பிடித்துத் தாங்கள் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்ததை நினைத்தவளுக்குத் தன் மேல் உள்ள தன் கணவனின் காதல் அத்தனை இதமாக இருந்தது.


இவரைப் போய்த் தள்ளி வைத்திருக்கேனே என்று மானசீகமாகத் தன்னைத் திட்டிக் கொண்டவள் அவனையே வெறித்துப் பார்க்க அவளைத் திரும்பி பார்த்தவன் புன்முறுவலுடன் புருவம் உயர்த்தி இறக்க அவளுக்குத் தான் கூச்சமாகி போனது.


'சே, சாயந்தரத்தில் இருந்து என்ன இது? அவரை இப்படி வெறிச்சு பார்த்துட்டே இருக்கேன்... அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்' என்று மானசீகமாகத் தன் தலையில் குட்டியவள் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்து வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


அவனை விட்டுத் தள்ளி இருந்த பொழுதெல்லாம் அவனை விலகுவதிலேயே குறியாக இருந்தவள்... அவன் தன்னை இழிவு படுத்திய சம்பவங்களை நினைத்து நினைத்து அவன் மேல் அத்தனை வெறுப்பை உருவாக்கிக் கொண்டவள்.


அவன் தன் பிடிவாதத்தை விட்டும், கர்வத்தை விட்டும் தன்னைத் தானாகத் தேடி வந்த பொழுதெல்லாம் இதயம் அவனை ஏற்றுக் கொண்டாலும் மூளை அவனை விடாப்படியாக ஏற்க மறுத்தது.


ஒரு கணம் அவனுக்காக அவள் இதயம் துடிக்கும்... மறு கணம் அவனின் சந்தேகம் உயிர் வரை சென்று கொல்லும்.


சில நாட்கள் அவனின் அருகாமையை ஸ்பரிசத்தை அவளின் பெண்மை தேடும், சில நேரங்கள் சொர்க்கமாக இருந்த நினைவுகள் தணலாக மாறி சுட்டெறிக்கும்.


வெவ்வேறு உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருந்தவளுக்கு இந்தச் சில மாதங்களாகத் தன் கணவனின், தன் மனம் கவர்ந்த காதலனின் அருகில் இருப்பதும், அவன் உள்ளம் முழுவதும் தன் மேல் காதல் இருந்தாலும் தன்னை அணுகாமல் தன்னை விட்டு விலகி இருப்பதும் அவளின் இரும்பு மனதைச் சிறிது சிறிதாகக் கரைக்க ஆரம்பித்து இருந்தது.


அவளின் மன உணர்வுகள் அவனுக்கும் நன்றாகவே புரிந்து இருந்தது.... அவளை அவன் அழைத்து வந்த சில நாட்களிலேயே அவனைத் தேட ஆரம்பித்துவிட்டாள், ஆனால் தன் மனதைத் திறந்து அவனிடம் சொல்வதற்கு அவளுக்கு இயலவில்லை.


அவள் நிலை தெரிந்தும் அவன் தன் பிடியில் இருந்து நகரவில்லை..... எத்தனை முறை என்னை ஒதுக்கி இருக்கிறாள்.... அவளாக வராமல் நானாக அவளை நெருங்கினேன் என்றால் மீண்டும் அவள் தன் பழைய நிலைக்குப் போவதற்கும் தயங்க மாட்டாள் என்று தன் நிலையில் தெளிவாகவும் பிடிவாதமாகவும் இருந்தான்.


இரு இதயங்கள் அருகருகில் இருந்தது, மனம் முழுவதும் காதலில் நிரம்பி வழிந்தது.... தன் துணையை அடைய நினைத்து தளும்பிக் கொண்டு இருந்தது.... ஆனால் அவளின் இயற்கையான பயந்த சுபாவமும், அவன் மனதில் இருந்த கர்வமும் அவர்கள் தன் நிலைவிட்டு இறங்கி வருவதற்குத் தடையாக இருந்தது.


கல்லூரிக்குள் கார் நுழைய ஆச்சரியத்துடன் அவனைத் திரும்பி பார்த்தவளை கண்டு சிரித்தவன், "அவங்க இன்னும் இங்க தான் படிச்சிட்டு இருக்காங்க... போஸ்ட் கிராஜுவேட்..." என்றான்.


இருவர் மனதிற்குள்ளும் தங்கள் கல்லூரி நாட்களின் நினைவுகள் சுகமாய் இறங்க மனமும் மேனியும் சிலிர்க்க கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளை ரசித்துப் பார்த்தவன் காரை நிறுத்தி "இறங்கு" என்றான்.


விழிகள் தன் தோழிகளைத் தேட "கனிகா" என்று கத்தியவாறே அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டார்கள் ஆஷாவும் இளாவும்.


கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு தோழிகளைப் பார்த்ததில் விழிகளில் நீர் கோர்க்க அவர்களை இறுக அணைத்துக் கொண்டவள் திரும்பி ஹர்ஷாவை பார்க்க அவன் புன்சிரிப்புடன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.


அவனின் பார்வையைக் கண்டதும் வெட்கத்துடன் தோழிகளை விடுவிக்க,

"ஏன் கனிகா, எங்களை எல்லாம் சுத்தமாக மறந்திட்டியா? உன் மேரேஜிற்குக் கூட எங்களைக் கூப்பிடணும்னு தோணலையா?" என்றாள் இளா ஏக்கத்துடன்.


சட்டென்று திரும்பி தன் கணவனைப் பார்த்தவள், "ஆமாம், எனக்கே தெரியாது என் கல்யாணத்தைப் பத்தி, இதோ இவர்கிட்ட தான் நீங்க கேட்கணும்" என்றாள்.


"ஸாரி, எங்க மேரேஜ் ப்ளான் பண்ணி நடக்கலை, திடீரென்று நடந்திடுச்சு..." என்று தயங்கியவன்,


"கனிக்கே தெரியாது, நான் மேரேஜ் அரேஞ்ச் பண்ணினது.... உங்கக்கிட்ட சொல்லியிருந்தேன்னா ஒரு வேளை அது கனியின் காதிற்குப் போய்விட்டால்... அப்புறம் இவ மேரேஜிற்குச் சம்மதிக்க மாட்டாள்னு தான் நான் யார்கிட்டேயும் சொல்லவில்லை.." என்றவன் கனிகாவை விழுங்கி விடுவது போல் பார்த்தான்.


கண்களின் வழியாகவே தன்னை உள்ளிழுத்துக் கொள்வதைப் போல் அவன் பார்த்ததைப் பார்வையைக் கண்டவள் தோழிகளுக்கு முன் வெட்கப்பட்டுப் பேச்சை மாற்றி,


"சரி அதை விடுங்க, நீங்க எப்படி இருக்கீங்க?" என்று திரும்பியவளின் கண்கள் ஒரு இடத்தில் திடீரென்று அச்சத்தில் உறைந்து நின்றது.


அங்குச் சற்றுத் தூரத்தில் இவர்களைக் கொலை வெறியோடு வைத்த கண்கள் வாங்காமல் பார்த்திருந்தாள் ரியா.


ஆம்... அவளும் அங்குத் தான் மேற்படிப்பை தொடர்ந்திருந்தாள்..... எதிர்பாராமல் ஹர்ஷாவையும் கனிகாவையும் பார்த்தவள் மூளை உறைந்து சிலையாக நிற்க அவள் இதயம் எரிமலையாக வெடிக்கும் நிலையில் இருந்தது.


அவளின் கோபம் தெறிக்கும் பார்வையைக் கண்ட கனிகாவிற்குத் தண்டுவடம் சில்லிட்டது.

தன்னையும் அறியாமல் மெதுவாக நகர்ந்தவள் ஹர்ஷாவின் அருகில் ஒட்டி நிற்க மனைவியின் திடீர் நெருக்கத்தில் திரும்பியவன்,


"என்ன கனி? என்ன ஆச்சு?” என்றான்.


"இல்லைங்க.... ஒண்ணும் இல்லை..."


அவள் ஒன்றும் இல்லை என்றாலும் அவள் எதனையோ வெறித்துப் பார்த்திருப்பதைக் கண்டவன் அவள் பார்வை போன இடத்தைப் பார்க்க அங்கு ரியாவைக் கண்டவன் கொதித்தெழுந்தான்.


சட்டென்று கனிகாவின் தோளை பற்றியவன் அவளைத் தன் தோள் வளைவுக்குள் கொண்டு வந்து இறுக்கமாக அணைத்துக் கொள்ள ஆஷாவும், இளாவும் அவர்களைப் பார்த்து முறுவலிக்க, தோழிகளின் சிரிப்பில் ரியாவை மறந்து கணவனின் அணைப்பில் நாணம் அடைந்தவள் அவன் கையைத் தன் தோளில் இருந்து விலக்க முயற்சித்தவாறே, "என்னங்க இப்படிப் பிடிக்கிறீங்க? எல்லோரும் பார்க்கிறாங்க..." என்றாள்.


"பார்த்தா பார்க்கட்டும், நீ என்னோட வைஃப் தான... அது மட்டும் இல்லாமல் உன்னை எப்ப வேணாலும் பிடிப்பேன்... நான் உன்னைப் பிடிக்கிறதுக்கு நேரம் காலம் இருக்கா என்ன?" என்றான் அழகான சிரிப்புடன்.


"பின்ன இல்லையா" என்று வெட்கத்துடன் தலை கவிழ்ந்து சொல்ல,


"உன்னை எப்ப வேணாலும்.... எப்படி வேணாலும்" என்று கூறியவன் ஆஷாவையும் இளாவையும் பார்த்துக் கண் சிமிட்டி, கனிகாவின் முகம் நோக்கி குனிந்தவன், "எங்க வேணாலும் பிடிப்பேன்.." என்றான்.


அவன் வார்த்தையில் பொதிந்து இருந்த அர்த்தத்தை உணர்ந்தவள், "ஐயோ! என்ன இது, என்ன பேச்சு இது?" என்க,


"பேச்சு மட்டும் தானா? செயலும் கூட.." என்றவன் சட்டென்று குனிந்து அவளின் கன்னத்தில் மென்மையாக இதழ் பதிக்க, முகம் செந்தணலாய் சிவக்க ஆஷாவையும் இளாவையும் வெட்கக் கண்கள் கொண்டு பார்த்தவள்.


"இத்தனை பேர் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது இது என்ன? நீங்க முதல்ல கிளம்புங்க, நான் ஆஷாவுடனும் இளாவுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வருகிறேன்" என்றாள்.


இவர்களின் அன்னியோன்யத்தை வயிறு எரிச்சலுடன் உள்ளத்தில் புகைச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த ரியாவைப் பார்த்தவன், "கனி, அவ இன்னும் நம்மளை தான் பார்த்துக்கிட்டு இருக்கா... இப்போ நான் உன்னைத் தனியா விட்டு போவது நல்லது இல்ல..." என்றவன் ஆஷாவையும் இளாவையும் நோக்கி,


"பேசாமல் நீங்க ரெண்டு பேரும் எங்க கூட வாங்க, ஏதாவது ஒரு ரெஸ்டாரண்டு போய்ப் பேசலாம்.." என்றான்.


சொன்னவன் ரியா அவர்களைத் தொடராமல் இருக்க, அவர்களை அவசரப்படுத்தியவன், வேகமாகக் கிளம்ப, ரியா சுதாரித்துத் தன் கார் நிற்கும் இடத்திற்கு வருவதற்குள் ஹர்ஷாவின் கார் பறந்திருந்தது.


"எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது.... அதுவும் இந்தப் பட்டிக்காட்டிற்கா?"


மனதிற்குள் கர்ஜித்துக் கொண்டிருந்தவள் தன் அலை பேசியில் அழைத்து அந்தப் பயங்கரமான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தாள்.


கல்லூரியில் இருந்து கிளம்பியவர்கள் கனிகா ஆஷாவோடும், இளாவோடும் கல்லூரி நாட்களில் வழக்கமாக வரும் காஃபி ஷாப்பிற்குச் சென்றாகள்.


தன் அருகே அமர்ந்திருக்கும் கணவனைப் பெருமையோடு பார்த்தவாறே,


"நாங்க மூணு பேரும் காலேஜில் படிக்கும்போது அடிக்கடி இங்க வருவோம்..." என்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன்.


அவள் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டவனையும் சந்தோஷம் தொற்றிக் கொள்ள, "எனக்குத் தெரியாத விஷயம் ஏதாவது இருந்தா சொல்லுங்க மேடம்..." என்றான்.


"அதான, நான் காலேஜுல் சேர்ந்ததில் இருந்தே தான் என்னைக் கவனிச்சிக்கிட்டு இருந்திருக்கீங்க, அத மறந்துட்டு பேசுறேனே..." என்று தலையில் கை வைத்தவளை ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார்கள் ஆஷாவும் இளாவும்.


ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்த கனிகா ஹர்ஷாவை கண்டால் பயத்தில் நடுங்குபவள், கூச்சத்தில் தலை நிமிராமல் இருப்பவள்.... பார்ப்பதற்குச் சந்தோஷமாகவே இருந்தது அவர்களுக்குள் இருந்து அன்னியோன்யம்.


ஒரு வழியாகப் பழைய கதைகளைப் பேசியவர்கள் தோழிகளிடம் விடை பெற்று காரை கிளப்பிக் கொண்டு வீடு நோக்கி பயணித்தார்கள்.


கணவன் மனைவியின் மனம் சந்தோஷத்திலும், நிம்மதியிலும் நிறைந்து இருந்தது.


மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஹர்ஷா தன் மனைவியின் தோளைப் பற்றியவன் அவளைத் தன் அருகில் இழுத்து அமர வைத்துக் கொண்டவன் அவளின் கரத்தை எடுத்து அதில் மென்மையாக முத்தம் பதித்தான்.


அவன் முத்தம் இடும் போதெல்லாம் அலறி அடித்து ஓடியவள் இன்று அவனின் மென்மையான முத்தத்தில் மெய் மறந்தவளாய் அவன் கண்களை இமைக்காது பார்த்திருக்க அவளின் கண்களில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வழிந்த காதலை கண்டவன் எதிரில் வந்த லாரியை கவனிக்க மறந்தான்.


தொடரும்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top